சியமந்தகம் ,கடிதங்கள்

சியமந்தகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் விழைகிறேன்.

சியமந்தகம் தளத்தில் வெளிவரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழிலக்கியத்தில் இயங்கும் பலதரப்பட்ட ஆளுமைகள் குறித்து, அவர்களுடைய படைப்புலகம் சார்ந்து விரிவாகவும், சலிக்காமலும் எழுதிக்கொண்டிருப்பவர் நீங்கள். ஆனால் வாசகனாக உங்களுடைய படைப்புகள் வழியாகவும், தளம் வழியாகவும் நானறிந்த ஜெ தவிர – ஒரு காதலனாக, நண்பனாக, எழுத்தாளனாக, ஆசிரியனாக உங்களுடைய மற்ற பக்கங்களையும் அறியும் வாய்ப்பை இந்தத் தளம் எனக்கு வழங்குகிறது. நான் உங்கள் வாசகனாக பெருமிதமும், நெகிழ்வும், மிகுந்த உணர்வெழுச்சியும் அடைந்த பல தருணங்கள் தளத்தின் பதிவுகளில் உள்ளன.

தனிப்பட்ட வாழ்வில் உங்களுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் கடந்து, படைப்புகள் சார்ந்தும் மிக விரிவான பதிவுகளை இதில் வாசிப்பது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம். எழுத்தாளர், விமர்சகர் ந. முருகேச பாண்டியன் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் குறித்த (இரண்டு) விரிவான மதிப்புரைகள் நான் இதுவரை வாசித்திராதது, எம்.ஏ. சுசீலா அவர்கள் எழுதிய உங்களுடைய குறுநாவல்கள் சார்ந்த குறிப்பும் அத்தகையதே. கவிஞர் இசையின் பதிவு அவருக்கே உரிய பாணியில் அமைந்த ஒன்று, ‘Tongue in Cheek’ என்று சொல்லலாம்.

ஆஸ்டின் சௌந்தர் அண்ணன் ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலை வாசித்துவிட்டு உங்கள் படைப்புலகம் குறித்து இத்தகைய விரிவான பதிவுகள் இல்லாமல் இருப்பது துரதிஷ்டம் என்று வருத்தப்பட்டார், ‘சியமந்தகம்’ தளம் அதற்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இந்தத் தளத்தில் உள்ள பல பதிவுகள் தரமான ஆவணங்களாக எனக்குத் தோற்றமளிக்கின்றன, நாளை இவை புத்தக வடிவிலும் வெளிவரவேண்டும் என்று விருப்பமுறுகிறேன்.

இந்தத் தளத்தை நிறுவி, தொடர்ந்து பராமரித்து வரும் நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

***

அன்புள்ள ஜெ

சியமந்தகம் இணையப்பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு கோணத்தில் உங்களை அறிமுகம் செய்கின்றன. உங்கள் நூல்கள் மேல் வாசிப்புகள், உங்கள் ஆளுமை மீதான பார்வைகள் என்று விரிந்துகொண்டே இருக்கின்றன. தமிழில் ஓர் எழுத்தாளருக்கு இப்படி ஒரு முழுமையான பார்வைகளை முன்வைக்கும் இணையதளம் உருவானதில்லை. உங்களை தமிழ் அறிவுலகம் எப்படிப் பார்க்கிறது என்று காட்டும் தொகுப்பு அது

எஸ்.எம்.ராகவேந்தர்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.