Jeyamohan's Blog, page 781

May 10, 2022

இரு அமெரிக்கக் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள ரிச்சர்ட் டைலர், ஜோனதன் ரிப்ளி,

சென்ற 7-5-2022-ல் வாஷிங்டன் நகரில் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னோடியான தமிழ் மானுடவியல் ஆராய்ச்சியாளர் பிரெண்டா பெக், திருக்குறளையும் ஔவையாரையும் மொழியாக்கம் செய்த தாமஸ் புரூய்க்ஸ்மா, தமிழ் அறிவியலெழுத்தாளரும் அறிவியலாளாருமான பேராசிரியர் வெங்கட்ரமணன், நூலகர் சங் லியு ஆகியோர் கலந்துகொண்டார்கள்.  ஹார்வார்ட் பல்கலை தமிழ் பீடத்தின் வருங்கால தலைவி மார்த்தா ஆன் செல்பி, அ.முத்துலிங்கம், கமல்ஹாசன், டேவிட் ஷூல்மான் போன்றவர்கள் வாழ்த்து அனுப்பியிருந்தார்கள்.

உங்களை எங்கள் தமிழ்விக்கி அமைப்பு சார்பில் இவ்விழாவுக்கு அழைத்திருந்தோம். இத்தகைய ஒரு முயற்சியில் கல்வித்துறையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்றும், எல்லா தரப்பும் வரவேண்டும் என்றும் விரும்பினோம். வருவதற்கு ஒத்துக்கொண்டபின் இறுதி நேரத்தில் வருவதாக இருந்த நான்குபேருமே ஒன்றாக வர மறுத்துவிட்டீர்கள். நீங்கள் உடல்நிலை சார்ந்த காரணத்தைச் சொன்னீர்கள். அது எங்கள் அமைப்புக்கு பெரிய நெருக்கடியை அளித்தது என்றாலும் முன்னிலும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம்.

தமிழ் விக்கி பக்கங்கள் உங்களுக்கு பார்வைக்கு அளிக்கப்பட்டன. அவை மிகச்சிறப்பாக உள்ளன என்று பாராட்டினீர்கள். அதன் அடிப்படையிலேயே வர ஒத்துக்கொண்டீர்கள். ஆனால் இங்குள்ள மிகச்சிறு அரசியல் சார்ந்த அதிகாரக்குழு ஒன்றின் கெஞ்சலுக்கோ மிரட்டலுக்கோ ஆட்பட்டு நிகழ்ச்சியை புறக்கணித்தீர்கள். அவர்கள் அதை இணையவெளியில் கொண்டாடினார்கள், அவர்கள் சொன்னவற்றில் இருந்தே இதை எழுதுகிறேன்.

நீங்கள் குறைந்தது இணையத்தில் நான் எவர் என்று தேடியிருக்கலாம். என் வாசகர்பரப்பும் நான் இளைஞர் நடுவே உருவாக்கும் செல்வாக்கும் என்ன என்று ஒரு சிறு புரிதலை அடைந்திருக்கலாம்.

உலகம் முழுக்க படைப்பிலக்கியவாதியின் இடம் என்பது கல்வித்துறையை விட ஒரு படி மேலானது. அதிலும் ஒரு மொழியில் ஒரு காலகட்டத்தின் முதன்மைப் படைப்பாளி என்பவன் அதன் வழிநடத்துநன். அதன் மதிப்பீடுகளை உருவாக்குபவன்.

படைப்பிலக்கியம் மீது அத்தகைய மதிப்பு இல்லாத கல்வித்துறையாளர்களை வெளியே நான் கண்டதில்லை. அந்த அறிதலை தமிழகக் கல்வித்துறையாளர்களிடம் பொதுவாக எதிர்பார்க்க முடியாது. அது இங்குள்ள ஒரு மாபெரும் வரலாற்றுரீதியான இடைவெளி. அது இருப்பதனால்தான் இங்கே இலக்கியம் மட்டுமல்ல, இலக்கிய ஆய்வும் எழுத்தாளர்களால் செய்யப்படுகிறது.

ஆகவே வரமறுத்த மற்ற இருவர் மேலும் எனக்கு எந்த மனக்குறையும் இல்லை, அவர்கள் இலக்கியத்தையோ இலக்கியவாதிகளையோ அறிந்திருந்தால்தான் வியப்படைந்திருப்பேன். கல்வித்துறை சமகால அறிவியக்கத்தை அறியாமல் புறக்கணிப்பதுபோல கல்வித்துறையை நாங்கள் புறக்கணிக்கலாகாது என்னும் ஒரே காரணத்திற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

இந்த வரலாற்று இடைவெளி இருக்கும் காரணத்தால்தான் தமிழ் விக்கி போன்ற ஒரு தளம் படைப்பிலக்கியத்தில் செயல்படும் எழுத்தாளர்களால் உருவாக்கப்படுகிறது. படைப்பிலக்கியம் மீது மதிப்பு கொண்ட ஒரே கல்வித்துறை ஆய்வாளர் மரபு எஸ்.வையாபுரிப் பிள்ளை உருவாக்கியது. அம்மரபின் இன்று வாழும் முதன்மை அறிஞர்கள் தலைமையில் உருவாகும் கலைக்களஞ்சியம் இது.

நான் அமெரிக்க அறிவியக்கம் மற்றும் அமெரிக்கக் கல்வித்துறை மேல் பெருமதிப்பு கொண்டவன். எப்போதும் அதை வெளிப்படுத்தி வருபவன். தமிழ் விக்கி அமெரிக்காவில் வெளியிடப்பட்டதே அதனால்தான். அந்த உரையிலும் அதை குறிப்பிட்டேன்.

அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பயின்ற ஒருவருக்கு படைப்பிலக்கியத்தின் முக்கியத்துவம் என்ன, படைப்பிலக்கியவாதி என்பவனின் இடம் என்ன என்று தெரிந்திருக்கும் என்று நம்பினேன். அறிவியக்கத்தில் அதிகாரம் மற்றும் அமைப்புகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு மாற்றாக செயல்படும் எழுத்தாளர் இயக்கங்களுக்கு உள்ள பங்களிப்பு என்ன என்று தெரிந்திருக்கும் என்றும் எண்ணினேன். ஏனென்றால் நானறிந்த அமெரிக்கக் கல்விமுறை என்பது இன்று தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம்போல அதிகாரத்திற்கு அப்பால் நிலைகொள்ளும் மாற்றுச்செயல்பாடுகளுக்கு மேலும் கவனம் அளிப்பதாகவே உள்ளது.

அனைத்துக்கும் மேலாக ஒரு கல்வியாளர் என்பவர் எல்லாத் தரப்புக்கும் பொதுவானவர், ஆகவே அறிவுச்செயல்பாட்டைக் கொண்டே அவர் கொள்ளும் மதிப்பீடுகள் அமையும் என கருதினேன்.

அந்நம்பிக்கைகளைக் குலைக்கும் செயலாக நீங்கள் வருவதை தவிர்த்தமை அமைந்தது என்று தெரிவிக்க விரும்புகிறேன். பிரெண்ட பெக் வருகையும்  வாழ்த்தும், மார்த்தா ஆன் செல்பியின் வாழ்த்தும் அமெரிக்கக் கல்விநிலையங்கள் பற்றிய என் நம்பிக்கையை தக்கவைக்க உதவின. அதற்காக அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இக்கடிதம் பொதுவெளியில் இருக்கும். என் எழுத்துக்களில் தொகுக்கப்படும். என் எழுத்துக்கள் எப்படியும் நூற்றாண்டுகளை கடந்து நிலைகொள்ளும். இக்கடிதமும் அந்த தொகுதிகளில் ஆவணமாக இடம்பெறவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நன்றி

ஜெயமோகன்

தமிழ் விக்கி பதிவுகள்

பிரெண்டா பெக் தாமஸ் புரூய்க்ஸ்மா மார்த்தா ஆன் செல்பி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2022 11:34

பொறுப்பேற்றல் – கடிதம்

சார் வணக்கம்,என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, பண்டசோழநல்லுர் கிராமம், புதுவை மாநிலம்

சார், ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு உங்களின் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தை படித்தேன். ஒரு அரசியல் கட்சியில் உள்ள சிக்கல்கள், இயக்கத்தை நடத்தி செல்ல என்னென்ன சமரசம் செய்துகொள்ளப் படுகிறது, மனிதன் தான் ஒரு இயக்கத்தையே கட்டமைக்கிறான், ஆனால் இயக்கத்தை காப்பாற்ற அதற்கு உழைத்த மனிதர்களையே அந்த இயக்கம் எப்படி விழுங்கிவிடுகிறது, ஒரு இயக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எத்தகைய சமரசங்களை மேற்கொள்கிறது, கமியூனிசத்தில், உள்ள சிக்கல்கள், அதனுடைய வீழ்ச்சி எதனால் ஏற்பட்டது போன்றவற்றை என்னால் ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிந்தது. அந்நாவலில் இறுதியில் வரும் நாடகம் நான் சிரித்தேனா, படித்தேனா என்று தெரியவில்லை, அது ஒரு நல்ல நகைச்சுவை நாடகம்.

அந்நாவலில் என்னைப் பாதித்த ஒரு சொற்றொடர் இருக்கிறது சார் அதுதான் தற்போது என்னை இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்ப உந்தியது “உலகத்தில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை” என்பது தான் அந்த சொற்றொடர். நான் மேற் சொன்ன அந்த வரி தான் நாவலை படித்துமுடித்த நான்கு மாதத்திற்கு பிறகும் ஒரு நிழலின் குரலாய் என்னைப் பின் தொடர்கிறது. முன்பெல்லாம் சமூகத்தில் ஒரு பிரச்சனை நடக்கும் போது நான் மனிதர்களின்மீது எரிச்சல் கொள்வேன், மன வேதனை படுவேன் அதையே சிந்தித்து சிந்தித்து துயர் அடைவேன். உலகில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை என்ற அந்த ஒரு வரி என்னுடைய மனத்துயருக்கு தீர்வாக அமைந்தது. அந்த வரியைப் படித்தவுடன் என் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன்.

கடந்த நான்கு மாதங்களில் சமூகத்திலும் சரி, என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பிரச்சனை நேரும் போதெல்லாம் உலகில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை என்ற இந்த ஒரு வரிதான் என் மூளைக்குள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரி என் மன அழுத்தத்தை குறைத்துவிட்டது. ரஷ்யா உக்ரைன் மீது முதல் நாள் போர் தொடுத்தபோது உலகில் அநியாயம் நிகழாத கணம் ஒன்று இல்லை என்ற அந்த வரிதான் என்னை அப்பிரச்சனையை கடந்துபோக வைத்தது. என்னால் ரஷ்ய போரை நிறுத்துவிட முடியுமா என்ன? இருந்தாலும் அந்த வரி என்னை உலக இயல்பை புரிந்துகொள்ள வைத்தது. மனிதர்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்துகொள்ள வைத்தது.

பல விஷயங்களில் எனக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து எனக்கு விடுதலை கொடுத்தது உங்களின் அந்த ஒரு வரிதான்.  ஒரு எழுத்தாளனிடமிருந்து வரும் ஒரு வார்த்தைகூட ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதற்கு அதை உணர்ந்த நானே சாட்சி. இதை உங்களிடன் ஒரு வாசகனாக பகிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இம் மின்னஞ்சலின் நோக்கம் அதுவே நன்றி சார்….

புஷ்பநாதன்

***

அன்புள்ள புஷ்பநாதன்,

பின்தொடரும் நிழலின் குரல் அறம் – கருத்தியல் பற்றிய ஒரு முழுமையான விவாதத்தை உள்ளடக்கியது. அதன் எல்லா பக்கங்களையும் உள்வாங்கி தொகுத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு வாசகனுக்கு உண்டு.

பொதுவாக நாம் உலகநிகழ்வுகளில் ‘பொறுப்பேற்றுக்’ கொள்கிறோம். அங்குதான் நம் உளம் அலைக்கழிகிறது. உளைச்சல் கொள்கிறது. காரணம் நம்மை நாம் மிகையாகக் கற்பனைசெய்துகொள்வதே. அத்தகையவர்கள் கொந்தளித்துக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளை கண்டடைவார்கள். வசைபாடுவார்கள். அதை ஒரு செயல் என எண்ணிக்கொள்வார்கள். வேறெந்த செயலும் செய்ய மாட்டார்கள்.

இங்கே நிகழும் வாழ்க்கையின் ஒரு சிறு துளியே நாம் என உணர்ந்தால் அந்த ஆணவமும் அதன் விளைவான உளைச்சலும் இல்லாமலாகும். ஆனால் நம் நிலையில், நம் தகுதிக்கு ஏற்ப நம் பங்களிப்பை ஆற்றவேண்டும் என்னும் பொறுப்பும் உருவாகும். அது ஆழத்தில் ஒரு நிதானத்தை உருவாக்கும். மெய்யாகவே பணியாற்றுபவர்கள் அந்த நிதானம் கொண்டவர்களே

ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2022 11:33

Prrasantu

அன்புள்ள ஜெ,

நலமே நாடுகிறேன்.

இப்பவும் உங்களது சிறுகதை பிறசண்டு Piker Press இலக்கிய இதழில் இன்று வெளியாகியுள்ளது.

What if mercy is more powerful than punishment?

என்று துவக்கத்தில் வருவதை இதழின் ஆசிரியர் போட்டிருக்கிறார். முகப்பில் உள்ள அந்தப் படமும் அற்புதமாக இருக்கிறது.

https://www.pikerpress.com/index.php (முகப்புப் படத்துடன்)

https://www.pikerpress.com/article.php?aID=9227 (படமின்றி)

நன்றி.

ஜெகதீஷ்குமார்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2022 11:31

சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம்

அன்புள்ள ஜெ

சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப் பற்றி வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் தமிழ்ச்சூழல் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதன் உண்மைப்பக்கத்தைக் காட்டுகின்றன. முகநூலில் ஊறிக்கிடப்பவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்பையே மொத்த தமிழகமும் கொண்டிருக்கிறது என நினைப்பார்கள். அவர்கள் சொல்வதே அவர்களுக்குத் திரும்ப வரும் அமைப்பு அது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இசை எழுதியதுதான். ஜெயமோகனைப் பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவர்கள் “எனக்கு உங்களை அறவே பிடிக்காது. ஆனால் ரொம்பப் பிடிக்கும்” என்று தனிமடல் வரைவதாக அறிய நேர்கையில் பிடிக்காத  ஒன்று பிடிக்காமலேயே  போய்விடுவது ஒரு வரம் என்பது நமக்கு விளங்கிவிடுகிறது மிகச்சரியான விளக்கம்.

***

அன்புள்ள ஜெ

சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப்பற்றி ஆய்வு நோக்கிலும் உணர்ச்சிகரமாகவும் ஏராளமான பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உயர்வானவை. இத்தனை அணுகுமுறைகளில் உங்களை தமிழ்ச்சமூகம் ஆராய்கிறது, இவ்வளவு நேசிக்கிறது என்பதே ஆச்சரியமானதுதான்

இரண்டு கட்டுரைகள் என் கண்களை கலங்கச் செய்தன. ஒன்று யுவன் சந்திரசேகர் எழுதியது. இன்னொன்று சாம்ராஜ் எழுதியது. யுவன் சந்திரசேகர் உங்கள் நீண்டநாள் நண்பர். அவர் என் வாழ்க்கையின் ஒவ்வொரு துக்கத்திலும் உடனிருந்திருக்கிறான் என்று உங்களைப் பற்றிச் சொல்வது ஒரு பக்கம். ஆனால் மிக இளையவரான சாம்ராஜ் அவருடன் நீங்கள் அன்பு ஒன்றால் உடனிருந்த தருணத்தை எழுதியதை வாசித்தபோது விம்மிவிட்டேன்.

உடனிருப்பது சாதாரண விஷயம் அல்ல. இன்னொருவருடன் உடனிருக்க மனம் விரிந்திருக்கவேண்டும். அவ்வளவு அன்பு வேண்டும். கறாரான விமர்சகனும் கட்டற்ற எழுத்தாளனுமான உங்களுக்குள் இருக்கும் அந்த கனிந்த மனிதன் என் பிரியத்துக்குரியவன்.

பாஸ்கர்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2022 11:31

May 9, 2022

ஆலமரத்து வேர்

ஓர் உரையில் நான் க.நா.சு பற்றி எட்டு முறை குறிப்பிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். “அவரை மறந்திரக்கூடாதுன்னு நீங்க முயற்சி பண்றதா தோணுது சார்” என்றார்

“இலக்கியம் என்பதே மறதிக்கு எதிரான மாபெரும் போர்தான்” என்று நான் பதில் சொன்னேன்.

ஆனால் வேர்களை நினைவுறுத்தவேண்டுமா என்ன? ஒவ்வொரு இலையும் வேரின் நினைவுச்சின்னம் அல்லவா? க.நா.சு ஆலமர வேர். நீண்டகாலம் முன்பு எங்கள் பழைய வீடு ஒன்றை இடித்தோம். அஸ்திவாரம் முழுக்க ஆலமரத்தின் வேர் பரவியிருந்தது. உண்மையில் அந்த வேர்ப்பின்னல் மீதுதான் வீடே அமைந்திருந்தது. ஆலமரம் முந்நூறடி அப்பால் ஆற்றங்கரைச் சரிவில் இருநூறாண்டுகளாக நின்றிருந்தது.

க.நா.சுப்ரமணியம் க.நா.சுப்ரமணியம் – தமிழ் விக்கி க.நா.சுப்ரமணியம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2022 11:35

ஹார்வார்ட் பல்கலையில் இருந்து

மார்த்தா ஆன் செல்பி- தமிழ் விக்கி

தமிழ் விக்கி பற்றி வந்த வாழ்த்துரைகளில் பேரா மார்த்தா ஆன் செல்பியின் வாழ்த்து மிக முக்கியமானது. அவருக்கு எங்கள் கலைக்களஞ்சியத்தின் இணைப்பை முன்னரே அனுப்பியிருந்தோம். அவர் அவற்றிலுள்ள பதிவுகளை பார்த்துவிட்டு நிறைவுற்று இதை அனுப்பியிருந்தார். முறைமைகள் பேணப்படும் ஒரு பெரிய கல்விநிறுவனத்தின் ஏற்பு இது. டெக்சாஸ் பல்கலையின் ஆசியவியல் துறையின் தலைவியான மார்த்தா விரைவில் ஹார்வார்ட் பல்கலையின் சங்க இலக்கிய இருக்கையின் தலைவியாக பொறுப்பேற்கவிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2022 11:34

மரபின்மைந்தன் முத்தையா சந்திப்பு

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி 

“அவர் பேர் சுப்பிரமணி,  திருக்கடையூர் கோயில் பரம்பரை பூசகர் குடும்பத்தில பிறந்தவர், அவரும் அதே வேலை தான் செஞ்சிட்டிருந்தார், ஆனா கொஞ்ச காலமாவே நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி, சரியா தூக்கம் இல்லை, எப்பவும் கண்ணு சிவந்திருக்கும், ஏதாவது கேட்டா  சரியா பதில் சொல்லறதில்ல, எந்த பொண்ண பாத்தாலும் அபிராமினு சொல்லி கும்பிடுறது..”

மரபின் மைந்தன் முத்தையா சொல்லச் சொல்ல அங்கே இருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

“ஏதிலயும் கவனமில்லை, ஏதோ ஸ்ரீவித்யா உபாசனை பண்றதா சொல்லிக்கிறது,  கோயில்ல இருக்கிற மத்த பூசகர்களுக்கு இவரோட நடவடிக்கை ஒண்ணும் புடிக்கல, அப்ப பாத்து சரபோஜி ராஜா அந்த கோவிலுக்கு வரார்

ராஜா கோவிலுக்கு வருகை தர்றது பெரிய விஷயமில்லையா? எல்லாரும் ரொம்ப பணிவா அவரை வரவேற்கறாங்க, எதையும் கவனிக்காம எங்கேயோ பாத்துட்டு உட்கார்ந்திருந்திட்டிருந்த இவரை காமிச்சு ‘ஆளு சரியில்ல மகாராஜா,  நாங்கெல்லாம் சொல்லிப் பாத்துட்டோம், ஒண்ணும் சரிவரலை, நீங்கதான் கேக்கணும்’ னு சொல்றாங்க.

ராஜா விசாரிக்கணும்ல,  கூப்பிட்டு கேக்கறார் ‘இன்னைக்கு என்ன திதி?, சொல்லு பாக்கலாம்’

‘இன்னிக்கு பௌர்ணமி’ னு சொல்லறார் இவரு , அன்னிக்கு அமாவாசை நாள்.

‘அப்படியா? அப்ப இன்னிக்கு நிலவு வரும், இல்லையா?’ன்னு கேட்கிறார் ராஜா

‘ஆமாம் நிலவு வரும்’ன்னு சொல்றார் இவரு

இன்னைக்கு நிலவு வரலைனா உனக்கு மரண தண்டனைனு சொல்லிட்டு போயிடறார் ராஜா

அவரைப்பதி புகார் சொன்னவங்களுக்கே ஆய்யோடான்னு  ஆயிடுச்சு, ராஜா ஏதோ நாலுநாள் சஸ்பெண்ட் பண்ணுவாருன்னு நினைச்சிட்டிருந்தாங்க.

ஆனா இவர் எந்த கவலையும் இல்லாம இருக்கார், இப்படி சொல்லிட்டேயேன்னு கேட்டா ‘சொன்னது நானில்லை, அவள்’ங்கறார்”

“ராஜாகிட்ட தண்டனை வாங்கி சாவறதுக்கு பதிலா, இங்கேயே உயிரை விட்டுடலாம்னு முடிவு பண்ணிடறார்.

கோயிலுக்குள்ளேயே  விறகெல்லாம் கொண்டுவந்து ஒரு சிதை தயார் பண்ணி அது மேல நூறு கயிறு கட்டி பரண் மாதிரி ஒண்ணை தொங்க விடறாங்க, அது மேல உக்காந்து பாட ஆரம்பிக்கிறார் சுப்பிரமணி, ஒவ்வொரு பாட்டு முடிஞ்சதும் ஒரு கயிறு அறுக்கணும்னு ஏற்ப்பாடு”

என்னால் அதற்குமேல் திரு.முத்தையா சொன்னவைகளை தொடர முடியவில்லை, மனம் அந்தத் தீவிரத்  தருணத்தில் சிக்கிக்கொண்டது,  கீழே தனக்கான சிதைத்தீ எரிய, விழாமல்  தாங்கும் கயிறுகள் ஒவ்வொன்றாக அறுபட, இலக்கண சுத்தமாக, சந்தம் திகழ அபிராமி அந்தாதி படைப்பு சுப்பிரமணி என்கிற உபாசகன் வழியே நிகழ்ந்த தருணம்.

நிலவு வந்தாலென்ன வராவிட்டால் தான் என்ன, அன்று வரவில்லை என்றால் வர வேண்டிய நாளில் வந்து விட்டுப் போகிறது, அனால் இந்த அற்புதம் எல்லா பவுர்ணமிக்கும் நிகழுமா? ஆன்மீகத்தை விட்டுவிடுவோம், வாழ்வில் கடைசி தருணத்தில் செயல்பட்ட அதி தீவிர தற்கொலை படைப்பு மனநிலை எத்தனை கோடி உயிர்களில் ஒன்றுக்கு நிகழும், அப்படிப்பட்ட படைப்பு மனநிலைக்காக தவமிருக்கும் கலைஞர்கள் தான் எத்தனை பேர்.

ஏதோ ஒரு உரையாடலின் நடுவே படைப்பு மனநிலை என்பதே தீவிரம் தானே என்றார் திரு.முத்தையா, அது உண்மை தான் என்று சொல்லிக்கொண்டேன், அவர் பெரும்பாலும்  ஒரு கவிதை படைக்கும் மனநிலையிலேயே இருக்கிறார், உள்ளம் மரபுக்கவிதை வரிகளை தருணங்களுக்கற்றபடி  எடுத்து சுற்றி இருப்பவர்களுக்காக அளித்துக் கொண்டே இருக்கிறது, எனக்கு கிடைத்த வரிகள் அனைத்துமே நான் முதல் முதலாக கேட்பவை அனால் ஏதோ ஒரு பிறவியில் கேட்டது போன்ற பரிச்சய உணர்வை உண்டாக்குபவை.

மரபின் மைந்தன் முத்தையா அவர்களிடம் விடைபெற்று வீடுதிரும்பும் போதுஇந்தத்தளம்(www.jeyamohan.in)  “உலகெங்கும் உள்ள தமிழ் மனங்களை இணைக்கிறது” என்று நினைத்துக்கொண்டேன். அப்படி சொல்வது ஒரு சோர்வூட்டும் தேய்வழக்கு தான, அனால் தேய்வழக்குகள் மறையாமலிருப்பதற்கு காரணம் அவற்றால் சுட்டப்படும் விஷயம் நேரடியாக  நிகழும்போது அவை தானாகவே மேலெழுந்து வருவது.

அவருடய பயண விவரங்கள் தளத்தில் வந்தவுடனே உள்ளம் ஒருகணம் மகிழ்ந்தது.  அவரை ஒரு நவீன இலக்கிய ஆளுமையாக, வெண்முரசு பற்றி மரபிலக்கிய பார்வையிலிருந்து முக்கியமான கட்டுரைகள் எழுதியவராக தெரியும், அவர் மொழியில் ஈஷா பதிப்பக புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.  அங்கே ஆங்கிலத்தில் நிகழும் உரைகளை அவர் ஒரு மாற்று குறையாமல் நேரலையில் மொழிபெயர்க்கும் அற்புதத்தை கண்டிருக்கிறேன். மயக்கும் மொழியாளுமை கொண்டவர் என்பது என் மனப்பதிவு.

சென்ற டிசம்பரில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழா தான் நான் முதல்முதலாக கலந்துகொண்ட இலக்கிய விழா, அங்கே நான் கண்டுகொண்ட உண்மை ஒன்றுண்டு, ஒரு படைப்பாளியின் ஆளுமையின் சிறு பகுதி மட்டுமே அச்சேறுகிறது, எழுதாத போதும் அவர்களின் படைப்பு மனநிலை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, ஆகவே அவர்களின் அருகாமை ஒரு களியாட்ட மனநிலையை உருவாக்குகிறது.

திரு முத்தையா வழியாக அந்த களிப்பின் ஒரு துளி இங்கே சியாட்டல் நகரிலும் நிகழ வேண்டும் என நினைத்துக் கொண்டேன், பெரும்பாலான வாசகர்களை போலவே நானும் ஒரு தனிமை விரும்பி, இதுவரை எந்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்ததில்லை, ஆனால் என் நகருக்கு வரும் ஒரு இலக்கிய ஆளுமையை அந்த நகரின் வாசகர்கள் சந்திக்க முடியாமல் போவது ஒரு பெரும் வீணடிப்பு என்று ஏனோ தோன்றியது,  ஆகவே முத்தையா அவர்களிடம் அனுமதி கேட்டு அதற்கான வேலைகளை துவங்கினேன்.

சியாட்டல் நகரில் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும் அனால் வாசகர் குழுமமோ சந்திப்புகளோ நடைபெறுகின்றனவா என உறுதியாக தெரியாது,  அனால் கலந்துரையாடல் நிகழ்வை அறிவித்தவுடனேயே இங்கே வாசகர் வட்டத்தை ஒருங்கிணைக்கும் குருபிரசாத் என்ற நண்பர் தொடர்புகொண்டு பங்குகொள்ளும் ஆவலை பதிவுசெய்தார்,  மேலும் பலரும்  விருப்பத்தை பதிவு செய்து கொண்டனர்.

நிகழ்வுக்கான அழைப்பில் அவரை அறிமுகப்படுத்துவதற்கான சரியான வரிகளை தளத்திலிருந்தே எடுத்துக்கொண்டேன்

“மரபிலக்கியங்களை வாசிப்பதில் நமக்கு இருக்கும் தடை இலக்கணம் அல்ல  நல்ல ஆசிரியர்கள் இல்லாதது தான். பேரிலக்கியங்கள் நின்றிருக்கும் உணர்வு வெளிக்கு நாமறிந்த இன்றைய அனுபவங்கள் வழியாக நம்மை அழைத்துச் செல்லும் ஆசிரியராக திரு முத்தையா அவர்கள் டி.கெ.சி செய்துவந்த பணியை செய்கிறார் என எழுத்தாளர் ஜெயமோகன் சொல்கிறார்..”

நாள் குறித்து இங்கே சமுதாயக்கூடத்தில் ஒரு பகுதியை முன்பதிவு செய்துகொண்டேன்,கணேஷ் என்கிற நண்பர் இல்லத்தில் அவர் தங்குவதாக திட்டம், அவரும் அவர் மனைவியும் ஈஷா அமைப்பில் பல வருடங்களாக செயலாற்றி வருபவர்கள், கணேஷ்  சிலம்ப வகுப்புகள் நடத்துகிறார், திரு முத்தையா ஒரு கட்டத்தில்  “நீங்களும் இவர் வகுப்புல சேந்து கம்பு சுத்த கத்துக்கோங்க” என்றார், நான் கேள்வியுடன் அவரை பார்த்தேன்  “ஜெயமோகன் நண்பர்னு சொல்லறீங்க, கண்டிப்பா  தேவைப்படும்” என்றார், நான் அந்த கூற்றில் இருந்த நியாத்தை ஒப்புக்கொண்டேன்,

பங்கேற்ப்பாளர்கள் மெல்ல மெல்ல பதிவு செய்துகொள்ளத் துவங்கினார்கள்,  அந்த நாளும் வந்தது. அவரை சந்தித்தவுடன் இயல்பாகவே இலக்கியம் பற்றிய உரையாடல் துவங்கியது, நான் நீலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன், அதன் மொழியழகில் திளைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை, அனால்  மரபுக்கவிதைகளில் உளம் தோய்ந்த, அதற்க்கு நிகரான மொழியழகு கொண்ட கவிதைகளை எழுதும் அவர் நீலத்தை எப்படி அணுகுவார் என்று கேட்டேன், அவருக்கு அதன் மொழியழகல்ல அதன் சாரமான ராதாபாவம், பக்தி யோகம் அந்த நூலில் நிகழ்ந்ததே அவருக்கு முக்கியம் என்றார், அது அப்படித்தான் இருக்க முடியும் என்று தோன்றியது, என்னை போன்ற சாதாரண வாசகர்களுக்கு சிலசமயம் அதன் மொழியழகே கூட படைப்பின் பக்தி பாவத்தை உள்வாங்க தடையாக கூட இருக்கலாம். அவரால் அதை எளிதில் கடக்க முடிகிறது. மரபின் கொடை.

ஆனால் இலக்கியத்தில் மட்டுமல்ல சில உலகியல் விஷயங்களிலும் பிடிவாதமாக மரபானவற்றை விடாமல் இருக்கிறார், சியாட்டல் நகர தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது  “இங்கே பழைய மாதிரி ஷேவிங்  பிளேடு எங்கே கிடைக்கும்” என்றார், எனக்கு புரியவில்லை பழைய 7’o clock வகை பிளேடுகளை கண்ணால் பார்த்தே பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும், அதை மறந்து விடுங்கள் எங்கேயாவது இருந்தால் வாங்கி கொண்டுவருகிறேன் என்றேன், நாங்கள் நகரிலிருந்து அருகே உள்ள தீவுக்கு வாகனங்களையும் ஆட்களையும் ஏற்றிச்செல்லும் படகு நிறுத்தத்துக்கு நடையை தொடர்ந்தோம்.

மரபில் வேரூன்றி  இருந்தாலும் மற்ற மரபு வாதிகள் போல் அல்லாமல் அனைத்து தரப்புகளையும் பொருட்படுத்தி கேட்டுக்கொள்கிறார், கருநீலப் பாளம் போலிருந்த  நீரப்பரப்பை நுரையலை எழ கிழித்தபடி போய்க்கொண்டிருந்தது படகு, மேலே தாய்ப்பசுவின் நிறைந்த மடி போல மேகங்கள் நிலை கொண்டிருந்தன,  தீவின் அழகான கடற்கரை தென்பட துவங்கியது.

அவருடன் வந்திருந்த தொழில் நண்பர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள், அவர் “கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு” என்ற வரியை உவகையுடன் பகிர்ந்துகொண்டார், நாம் ஒன்றும் செய்யத் தேவையற்ற, ஒன்றும் செய்ய முடியாத கவின் பெரு வனப்பு, இங்கே இந்த வனப்பில் களிப்பதை தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. அங்கிருந்து தொழில் மனநிலை அதனுடன் முரண்பட்டபடி உலகியலில் இருந்து விலகி நிற்கும் ஆன்மிக மனநிலை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார், நான் எதிர் தரப்பில் நின்று ரட்யார்ட் கிப்ளிங் எழுதிய Sons Of Martha என்ற கவிதையின் சாரத்தை சொன்னேன், அந்தக் கவிதை கனடாவில் ஒரு பல்கலை கழகத்தில் பொறியாளர் பட்டமளிக்கும் விழாவில் வாசிப்பதற்காக எழுதப்பட்டது, உலகை தன் கைகளால் உருவாக்க முனையும் செயல் மனநிலையை முன்வைக்கிறது. கவிதையை சொல்லி முடிக்கும் முன்னே அதை முழுக்க ஊகித்துக்கொண்டார், கருத்து சமநிலை நீடிக்க மறு தரப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் எடுத்து சொல்லிய வரி திருமுருகாற்றுப்படையில் வருகிறது, அதற்கும் பைன் மரங்கள் சூழ நிற்கும் இந்த அமெரிக்க நிலத்திற்கும் வெகுதொலைவு உண்டு,  அனால் மரபில் தோய்ந்த அவர் உள்ளம் அது போன்ற தொடர்பற்றவரிகளை தனிக்குறுங் கவிதைகளாக நேரடி வாழ்க்கை தருணங்களில்  நாள் முழுக்க வெளிப்படுத்திய படியே இருந்தது. இடைவெளி விட்டு  பெய்யும் சாரல் மழை போல என்று நினைத்துக்கொண்டேன். அருகே நிற்பவர் செய்ய வேண்டியதெல்லாம் குடையை மடக்கி வைத்துக்கொண்டு நனைய வேண்டியது தான்.

அனால் அன்று மாலை கலந்துரையாடல் நிகழ்வில் அவர் பேசத்துவங்கியதும் பெருமழை அடித்துப் பெய்தது, மரபிலக்கியத்துக்கான ரசனை இல்லாதவர்கள் என யாரும் இல்லை என்று முழங்கியபடி தன் பேச்சை துவங்கினார், நூல்களிலோ, உரையாடலிலோ அல்ல, சொற்பொழிவுகளில் தான் அவர் முழுமையாக நிகழ்கிறார், “சொற்பொழிவு” என்கிற தேய்வழக்கின் உண்மையான சுட்டுப்பொருளை அன்று மாலை கண்டுகொண்டேன்,

அங்கிருந்தவர்களில் பலரும் வாசிப்பின் பல நிலைகளில் இருப்பவர்கள், அனைவருக்கும் அந்த உரை பல திறப்புகளை அளித்ததை அறிய முடிந்தது. செறிவான கருத்துக்கள் வந்து விழுந்தபடியே இருந்தன. கருத்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும், எவ்வளவு தான் மறைத்தாலும் அயல் நிலத்தில் வாழும் தமிழ் மனங்களின் ஓரங்களில் நீருக்காக வான் நோக்கி நிற்கும் ஒரு  பாலைப் பகுதி உண்டு,  அன்று மாலை மரபின் பெருநதி முகிலாக வானேறி பெருமழையாய் பெய்து அந்த பாலைகளை நனைத்தது.

அவர் எழுதிய புத்தகங்கள் வெறும் நான்கே பிரதிகள் தான் கையிலிருந்தன, உரை  முடிந்ததும்  நண்பர்கள் விரைவாக புத்தகங்களை நோக்கி வந்தது மகிழ்ச்சி அளித்தது, விலை வைக்காவிட்டாலும் வற்புறுத்தி புத்தகத்தில் அச்சிடப்பட்ட விலையை அளித்தார்கள். அவரை தங்குமிடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, பழைய ரேசர் பிளேடுகள் வாங்க கிளம்பினேன், நான் முயன்ற முதல் அங்காடியிலேயே கிடைத்தது, புத்தகங்கள் விற்ற பணம் பிளேடுகள் வாங்க சரியாக இருந்தது. அந்த தற்செயலுக்கு பொருளேற்றம் எதுவும் செய்ய முயலாமல், பிளேடுகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றேன்.

ங்கர் பிரதாப்

தொடர்புடைய கட்டுரைகள் :

https://www.jeyamohan.in/110990/ – பெருநதியில் எஞ்சியது

https://www.jeyamohan.in/54448/ – அன்னை சூடிய மாலை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2022 11:34

எழுதுக, இலவசப் பிரதிகள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அறுபது வயதை நிறைவுசெய்யும் பொருட்டு, அவருடைய வாழ்வுக்கு நாங்கள் அளிக்கும் சிறுமரியாதையாக, அவருடைய ‘எழுதுக’ எனும் நூலை 500 இளையவர்களுக்கு விலையில்லா பிரதிகளாக அனுப்பும் திட்டத்தை அறிவித்திருந்தோம். இத்திட்டத்தில் இதுவரையில் எழுநூறுக்கும் அதிகமான முகவரிகள் பதிவாகியுள்ளன. ஆகவே, கடந்த ஒருவார காலமாக ‘எழுதுக’ புத்தகத்தை முகவரி பதிந்த இளையவர்களுக்கு அனுப்பி வருகிறோம். சில ஆண்டுகள் முன்பு, இதேபோலொரு முன்னெடுப்பின் வழியாக தன்மீட்சி நூலும் விலையில்லா பிரதிகளாக அனுப்பப்பட்டதும் இக்கணம் நினைவெழுகிறது. ‘எழுதுக’ புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட இளையவர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வழியாகவும் கடிதங்கள் வழியாகவும் அனுப்பிவருகிறார்கள். எழுதத் துவங்கும் இளையோர்களுக்கு இயல்பாக அகத்திலெழும் பல்வேறு முதற்கட்ட தயக்கங்களை வென்றுகடப்பதற்கான கட்டுரைகளை இந்நூல் கொண்டிருக்கிறது. சமகால வாசிப்புமனங்களில் நிச்சயம் இந்நூல் உரிய தாக்கத்தை உண்டாக்கும். கூடிய விரைவில் முன்பதிந்த முதல் ஐநூறு நண்பர்களுக்கும் புத்தகப்பிரதிகளை அனுப்பிவிடுவோம். இந்த நல்முயற்சியானது தன்னறம் வழியாக நிகழ்ந்ததில் மகிழ்வும் நிறைவும் அடைகிறோம்.தன்னறம்

தன்னறம் வெளியீடுகள்

www.thannaram.in  /  9843870059

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2022 11:31

ஜெயகாந்தனின் ரிஷிமூலம்

ரிஷிமூலம் குறுநாவல் வாசித்தேன்..

தங்களின் கவனப்படுத்தல் வழிதான் இந்த கதை ஜேகே எழுதியிருப்பதே எனக்கு தெரிய வந்தது. ரிஷிமூலத்திற்கு தாங்கள் எழுதிய வாசகர் கேள்வியொன்றுக்கான பதிலை இருமுறைகள் வாசித்தேன். ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரியைப் பற்றிய தங்கள் எழுத்தையும் வாசித்தேன். நல்ல படைப்பொன்று வாசிக்க வழி செய்தமைக்கு நன்றி.

இன்றும், வருங்காலமும் உரையாட வாசிக்க உள்ளடக்கம் கொண்ட கதை இது. ஜேகேயின் மெய்யியல் தேடல் இக்கதை. யாரும் செல்ல தயங்கும் தளங்களுக்குள் பாய்ந்து ஜேகே எழுதிப் பார்த்தது இதுவென ரிஷிமூலம் பற்றி தாங்கள் கூறியுள்ளீர்கள்.

தங்களது ஏதோ ஒரு பயண கட்டுரையில், ஒரு சிற்பத்தை எப்படி ரசிக்கணும். எவ்வளவு நெருக்கத்தில் நின்று உள்வாங்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிச் சென்று இப்படியாக அணுகும் போது அச்சிற்பம் நமது ஆழ்மனதில் அடைக்கலமாகும் என்பீர்கள் .அத்தகைய அதிர்ச்சியோடு, விழிப்போடு அம்பி தன் தாயின் முழு நிர்வாணத்தைக் காண்கிறான். அதனால்தான் அவனுக்குத் தொடர்ந்து உக்கிரமான தன் தாய் தொடர்பான அந்த கனவு வந்து கொண்டே இருக்கிறது. தனது தாய் இடத்தில் சாம்புவையரின் மனைவி. மாமி. இடம் பெறுவதெல்லாம் மனித மனதை அதன் அசுரப்பயணத்தைப் புரிந்து கொள்ள உதவும் இடங்கள்.

அவன் தன் தாயையும் ஒரு பெண்ணாகக் கண்டான். இப்போது எல்லா பெண்களையும் தன் தாயாகக் கருதுகிறான் என்பது அம்பி பெரிய பக்குவத்தை அடைந்ததை ஜேகே சொல்லும் பஞ்ச்.

அம்பி காவேரி கரையோரம் அமர்ந்து மசானத்து எரியும் பிணங்களில் தன்னையே காண்பது. ஓஷோ இப்படியொரு பயிற்சியைப் பரிந்துரை செய்திருப்பார். அதாவது தன் உடல் இறந்த பின் மயானத்தில் கிடத்தி எரிக்கப்படுவதை கற்பனையில் காண்பது.

நல்ல படைப்பொன்றை இனம் காட்டியமைக்கு நன்றி

முத்தரசு

வேதாரண்யம்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2022 11:31

May 8, 2022

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.