Jeyamohan's Blog, page 785
May 2, 2022
தமிழ் விக்கி -சில கேள்விகள்
அன்புள்ள ஜெயமோகன்,
இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி வேறுபடுகிறது என்பது முக்கியமாக வைக்கப்படும் கேள்வி. உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.
அன்புடன்
சௌந்தர்
***
அன்புள்ள சௌந்தர்
இக்கேள்விகளை ஏற்கனவே விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்துள்ளோம். உண்மையில் கலைக்களஞ்சியம் வெளியாகும்போது அதைப் பார்ப்பவர்களுக்கே பல கேள்விகளுக்கு விடை அமைந்துவிடும். உங்கள் கேள்விகளுக்கு என் விளக்கங்கள் இவை.
இவ்வளவு தரம் பார்த்து முன்னெடுத்து செய்யும் ஒரு தளத்தை ஏன் கலைக்களஞ்சியம் என்று அழைக்காமல் ‘தமிழ் விக்கி’ என்று அழைக்கிறோம். அதாவது தளத்தின் பெயரே கலைக்களஞ்சியம் என்று பொருள்பட இருக்கலாம் அல்லவா?
கலைக்களஞ்சியம் வேறு, விக்கி வேறு. விக்கி என்பது இணையத்தில் உருவான ஒரு தனித்த ஒரு போக்கு – முன்பு இல்லாதது, முன்பு இயலாதது.
கலைக்களஞ்சியம் என்பது ஓர் அறிஞர்குழுவால் உருவாக்கப்பட்டு முடிவுற்ற ஒரு நூல். விக்கி என்பது தொடர்ச்சியாக நிகழும் ஒரு கூட்டுச்செயல்பாடு. விக்கியின் பதிவுகள் வளர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அதில் எந்தப் பதிவும் அறுதியானது அல்ல. அந்த வேறுபாட்டைக் குறிக்கவே விக்கி என்னும் சொல்லை கையாள்கிறோம்.
இணையத்தில் என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா உள்ளது. அதற்கும் விக்கிக்கும் பெரிய வேறுபாடுண்டு. அண்மையில் விக்கி நிறுவனர் ஒரு பேட்டியில் விக்கி ஒரு செய்தியிதழாகவும் செயல்படுகிறது என எழுதியிருந்தார். அந்த ‘நிகழும்தன்மை’யை இப்பெயர் வழியாகச் சுட்ட விரும்புகிறோம்.
விக்கி என்ற பெயரை அந்த செயல்பாட்டுக்கு உரிய பொதுப்பெயராக, காப்புரிமை அற்ற முகச்சொல் (பிராண்ட்)ஆக அறிவித்தவர் அதன் நிறுவனரே.
பெரியசாமி தூரன் கலைக்களஞ்சியம் பற்றி நீங்களே தளத்தில் எழுதியிருக்கிறீர்கள். எப்படி வேறுபடுகிறது? அதுவும் இணையத்தில் கிடைக்கிறது.
ஏற்கனவே சொன்னதுதான். பெரியசாமித்தூரனுடையது முடிவுற்ற கலைக்களஞ்சியத் தொகுதி. மேலும் அது அச்சில் வெளிவந்தது. அச்சுக்கு பக்க எல்லை உண்டு. புகைப்படங்கள் அளிக்க வரையறை உண்டு. ஆகவே அதில் சுருக்கமான பதிவே உள்ளது. தமிழ் விக்கி இப்போது அதன் ஓராண்டுக்கால இலக்கில் மூன்றிலொன்றை எட்டியுள்ளது. அதாவது 90 நாட்களின் பணி. ஆனால் இப்போதே அதன் அளவு தூரனின் கலைக்களஞ்சியத்தை விட பெரியது. அதன் இலக்கு இதைவிட நூறுமடங்கு பெரிய தொகுப்பு
வேதசகாயகுமாரின் திறனாய்வுக்களஞ்சியத்திற்கும் இதற்குமான தொடர்பு, மதிப்பீடு, அதன் தகவல்கள்.
வேதசகாய குமாரின் கலைக்களஞ்சியம் திறனாய்வு சார்ந்தது. நா. மம்முதுவின் இசையியல் கலைக்களஞ்சியம் உள்ளது. அப்துற் ரஹீமின் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் உள்ளது. அப்படி பல கலைக்களஞ்சியங்கள் உள்ளன. அனைத்தில் இருந்தும் செய்திகளை எடுத்து இணையவெளியில் தொகுப்பதே விக்கி தமிழின் நோக்கம். ஒரு கலைக்களஞ்சியம் என்பது நூலகத்தின் சாறு என்பார்கள். உரிய உசாத்துணைகளுடன் அத்தனை செய்திகளும் தொகுக்கப்படவேண்டும்.
காங்கிரஸ் காலத்தில் கலைக்களஞ்சியம் தொகுக்கப்பட்டது. அது எங்கனம் வேறுபடுகிறது
காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியால், பெரியசாமித் தூரன் ஆசிரியத்துவத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவானது. அது தமிழில் நடந்த மாபெரும் அறிவுப்பணி. (அதற்கு இணையான பெரும்பணி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் நடந்த பேரகராதி.)
தூரனின் கலைக்களஞ்சியம் இதற்குள் குறைந்தது இருபது முறை திருத்தி விரிவாக்கப்பட்டு மறுபதிப்பாக வெளிவந்திருக்கவேண்டும். தமிழ் விக்கி ஓர் இணையதளம். இது அறிவியக்கம் அதுவே திரட்டிக்கொள்ளும் ஒரு பொதுமையம், அவ்வளவுதான்
இது தமிழ் பண்பாடு, வரலாறு, எழுத்தாளர்கள் , இலக்கியம் பற்றிய கலைக்களஞ்சியம் மட்டும்தானா ? பொறியியல் சார்ந்த சாதனம் பற்றிய விபரங்கள் இதில் இருக்காதுதானே?
இப்போதைக்கு பண்பாடு, இலக்கியம் மட்டுமே பேசுதளம். பின்னாளில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது அத்துறை சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர் குழுவில் அமைவார்கள். ஒரு பத்தாயிரம் பதிவுகளுக்குப்பின் வரலாற்றை உள்ளே கொண்டுவரலாமென நினைக்கிறேன்.அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து செல்லவேண்டும் என்றால் புதிய நிபுணர்குழு ஆசிரியர்களாக வரவேண்டும்.
இதற்கான பொருட்செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள்?
இப்போதைக்கு இது என் நண்பர்களின் கூட்டுமுயற்சி. அனைவருமே இலவச உழைப்புதான். ஒருநாளுக்கு சராசரியாக ஐந்து மணிநேரம் பணியாற்றுகிறார்கள்.
இதுவரை செலவு என்பது இந்த இணைய இடம் வாங்குவதற்கு ஒரு நண்பர் செலவு செய்த தொகை மட்டுமே.நான் சில ஆயிரம் ரூபாயிலேயே பெரிய செயல்களைச்ச் செய்யலாம் எனும் எண்ணம் கொண்டவன். குறைவான செலவு என்றால் மிகுதியான சுதந்திரம் என்பது என் புரிதல்.
இப்போதைக்கு இதற்கான செலவை நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒர் அறக்கட்டளை அமைத்து நிதி பெறலாம் என்னும் எண்ணம் உள்ளது. ஆனால் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் மிகமிகக் குறைவான நிதியில் நடைபெறுபவை. ஆகவே இதற்கும் பெரிய நிதி தேவைப்படாது. இப்போதைக்கு இலவச உழைப்புதான். நிதி சற்று கூடுதலாக வந்தால் ஆங்கிலம் பயிலும் மாணவர்களை பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என எண்ணம் உண்டு
ஆசிரியர்குழுவில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களா ? அவர்களில் மாற்றம் உண்டென்றால் யார் முடிவெடுப்பது ?
ஆசிரியர்குழு தொடரும். பிற துறைகள் சேரும்போது மேலும் ஆசிரியர்கள் வருவார்கள். புதிய ஆசிரியர்களை ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்கள் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தேர்வுசெய்வோம். புதிய ஆசிரியர்கள் வந்துகொண்டே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன்.
ஜெ
உசாவல்
நீங்கள் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, உசாவல் என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளீர்கள். இதன் அர்த்தம் என்ன சொல்லவும். தேடல், கேள்வி என்று புரிந்து கொண்டு உள்ளேன்.அன்புடன்,மணி, பெங்களூர்அன்புள்ள மணி,அறிவியக்கத்தின் அடிப்படைகளில் ஒன்று மூலநூல்களை பயன்படுத்துதல். அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் என்பவை மூலநூல்களிலும் அடிப்படையானவை.சொற்களை, கருத்துக்களை ‘நமக்கு தோன்றியபடி’ பொருள் கொள்ளக் கூடாது. பலசமயம் பல ஆண்டுக்காலம் பிழையான ஒரு பொருளை நாம் கொண்டிருப்போம். அது வரை நாம் வாசித்த எல்லாமே பிழையாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். எவ்வளவு பெரிய வீணடிப்பு.அகராதியில் பொருள் கொண்டபின் அச்சொல் அச்சூழலில் ஏதாவது மேலதிக அர்த்தம் உள்ளதா என யோசிக்கவேண்டும். அப்படி இருந்தால் அது கலைச்சொல். கலைச்சொற்களுக்கான அகராதியில் பார்க்கவேண்டும்.அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும் பெரும்பாலான சொற்களை நாம் சற்றே பிழையாகத்தான் புரிந்துகொண்டிருப்பொம்உசாவல் என்னும் சொல்லுக்கு அகராதிப்பொருள் இதுஉசாவுதல்https://ta.wiktionary.org/s/1kqஉசாவுதல்
உசாவல்.சிந்தித்தல்.கேட்டறிதல்.செவியுறுதல்.மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் – ucāvutal (ஒலிப்பு)
*
தமிழில் உள்ள பொதுவான பொருள் கேட்டறிதல், சிந்தித்து அறிதல். இலக்கியச் சூழலில் ஒன்றை தேடிச்சென்று ஆராய்தலைக் குறிக்கும் சொல். ஆகவே கலைச்சொல்.
quest என்னும் ஆங்கிலச் சொல்லுக்குச் சமானமாக பயன்படுத்தப்படுகிறது
ஜெ
ஜான் பால், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஜான் பால் பற்றிய கட்டுரை வழக்கம்போல ஆத்மார்த்தமானதாக, அந்த ஆளுமையை அப்படியே கண்ணிலே காட்டுவதாக இருந்தது. ஜான்பால் ஏராளமான சினிமா ஆளுமைகளுக்கு நினைவுகளும் நூல்களும் எழுதியவர். சினிமா அனுபவங்களை விரிவாகப் பதிவுசெய்தவர். அவரைப்பற்றியும் ஓர் அரிய கட்டுரை வருவதற்கு உரிய தகுதி அவருக்கு உண்டு. அந்த கடமையைச் செய்துவிட்டீர்கள்.
மகேஷ் ஆறுமுகம்
***
அன்புள்ள ஜெ
ஜான்பால் அவர்களின் பேட்டியை உங்கள் தளம் வழியாகப்போய் இணையத்தில் பார்த்தேன். அவருடைய ஆளுமையை நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதை படித்தபின் அவரை பார்த்து பேச்சைக்கேட்கும்போது உற்சாகமான ஒரு மனிதரை பார்க்க முடிந்தது. உலகமே மெலிந்துவிட்டது என கவலைப்படும் ஓர் அருமையான உள்ளம்.
செல்வக்குமார்
வேகமான வாசிப்பு -கடிதம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
“1992-ல் ஊட்டி குருகுலத்தில் பீட்டர் மொரேஸ் நடத்திய விரைவான வாசிப்புக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். சில அடிப்படை விதிகள், சில பழக்கங்கள் உள்ளன. எளிதில் பயிலக்கூடியவை.”
– என ‘அந்த இருபதாயிரம் நூல்கள்’ கட்டுரையில் தெரிவித்திருந்தீர்கள். அந்த பயிற்சியின் அடிப்படைகள் குறித்து கூற முடியுமா?
ஏனென்றால், நான் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 25-30 பக்கங்கள் மட்டுமே வாசிக்கிறேன். ஆனால், என் நண்பர்கள் பலர் சாதாரணமாக மணிநேரத்திற்கு 40-50 பக்கங்கள் வாசிப்பதாக கூறுகிறார்கள்.
நீங்களோ இன்னும் பல மடங்கு வேகத்தில் வாசிக்கிறீர்கள். ஆகவே, வேகமாக, அதே சமயத்தில் கருத்துகளை முழுவதும் உள்வாங்கி வாசிப்பது எப்படி என்று விளக்கினால் உபயோகமாக இருக்கும்.
நன்றி,
ஆனந்த குமார் தங்கவேல்
***
அன்புள்ள ஆனந்த குமார்
நான் அந்தக் குறிப்பிலேயே சொல்லியிருந்ததுபோல அது ஒரு பயிற்சி. குறைந்தது இரண்டு நாட்கள், ஆறு அமர்வுகளிலாக கற்பதற்குரியது. விதிகளாகச் சுருக்கி எழுதி வைக்கக்கூடியதோ, சுற்றில் விடக்கூடியதோ அல்ல.
பார்ப்போம். எப்போதாவது ஒரு முகாம் நடத்துவோம்
ஜெ
இருளில் இருந்து இருளுக்கு- கடலூர் சீனு
இங்கு எல்லாம் இருண்டுபோய்விட்டது, சில வார்த்தைகள் மற்றும் கடலோசையை தவிர… ச. துரை.
உலகளவில் ஒபேராவோ ஓவியமோ இலக்கியமோ எக்கலை எனினும் அதன் பரிணாம வளர்ச்சியில் மிகப் பொதுவாக நான்கு நிலைகளைக் காண இயலும். அக்கலைக்கான கச்சா அலகுகள் கூடி நிகழும் முதல் நிலை. எது கலை என்பதன் வரையறைகள் உருவாகி வந்து அதன் தொடர்ச்சியாக நிகழும் செவ்வியல் எனும் இரண்டாம் நிலை. மரபில் துவங்கி அங்கிருந்து புதிய புதிய திசை வழிகளை கலை தேறும் மறுமலர்ச்சி எனும் மூன்றாம் நிலை. இதுவரை கொண்டு வந்து சேர்த்த அனைத்தையும் ( சப்மரனை விண்ணிற்கு ஏவுவதை போல) கலைத்து அடுக்கிப் பார்க்கும் நான்காவது நிலை. இவை ஒவ்வொரு நிலைக்கும் கால தேச வர்த்தமானம் சார்ந்து தத்துவ, சமூக கலாச்சார பண்பாட்டு காரண பின்புலம் உண்டு.
தமிழ் இலக்கியத்திலும் இந்த நான்காம் நிலை உண்டு. தமிழ் இலக்கியத்தின் இந்த நான்காம் நிலை தமிழ் நிலத்தின் கலாச்சார சிக்கல்களிலிருந்தோ, படைப்பாளியின் உள்ளார்ந்த தத்துவத் தவிப்பிலிருந்தோ ‘முளைத்த’ ஒன்றல்ல. மேல் நாட்டிலிருந்து ‘வந்து விழுந்த’ ஒன்றாகவே அது இங்கே தோற்றம் கொண்டது. இந்த அடிப்படைப் பிழையின் காரணமாக இலக்கியக் கலையின் உயிரான, உண்மை உணர்வுத் தீவிரம், சாராம்சம் அனைத்தையும் இழந்த மொழிச் சடலங்களின் பெருக்கமாகவே நான்காம் நிலை தமிழ் இலக்கியப் பிரதிகள் அமைந்தன.
பின்நவீன பிரதிகள் பெருகி, 90 களில் எல்லாம் பழசு இதுதான் புதுசு எனும் முழக்கத்துடன் சாமியாடிக்கொண்டிருந்த சூழலில்தான் அச்சூழலை எதிர்த்து எழுந்து வந்தது 70 களில் எழுதப்பட்ட ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல். அன்றைய பின்நவீன பிரதிகள் பலவும் வாசிக்க எவரும் இன்றி பச்சை டப்பா வுக்குள் சென்று விழுந்துவிட, இன்றும் புத்தக சந்தைகளில் விற்பனையில் வாசிப்பில் உரையாடலில் முன்னணி வகிக்கிறார் ப. சிங்காரம். பின்நவீன அழகியல் கட்டமைப்பு கொண்ட நாவல் ஆனால் பின்நவீனம் தவறவிட்ட உண்மையும் உணர்வு தீவிரமும் கொண்ட நாவல். பின்நவீனம் பேசும் அ நேர்கோட்டு ஓட்டம் பித்துமொழித் தருணங்கள் அனைத்தும் கொண்ட நாவல். ஆனால் பின்நவீன பிரதிகள் ஒருபோதும் சென்று எய்தாத ஒழுங்கமைவு கொண்ட நாவல். பின்நவீனம் பேசிய கோட்பாட்டு பேத்தல்கள் கடந்து தமிழ் வாசிப்பு சூழலில் புடம் போட்டு வெளி வந்த பொன் என நின்ற நாவல்.
அன்றுபோலவே இன்றும் வெத்துடப்பா கவிதை தொகுப்புகள் எழுப்பும் புழுதிப் புயல் முன் புயலிலே ஒரு தோணி போல இப்போது உள்ளார்ந்த உண்மையும் உணர்வு தீவிரமும், புதிய புதிய படிமங்களும், வெளிப்பாட்டால் சிதைந்த வடிவமும், அனைத்தையும் கட்டி நிறுத்தும் ஒழுங்கமைவும் கொண்ட கவிதைகள் கொண்ட தொகுப்பாக எதிர் வெளியீடு வழியாக வெளியாகி இருக்கிறது கவி ச. துரை அவர்களின் இரண்டாம் தொகுப்பான சங்காயம் தொகுப்பு.
சங்காயம் எனில் தீவன உணவாக மாற மீன் சந்தை முடிந்ததும் கூட்டிப் பெருக்கி அள்ளினால் கிடைக்கும் மிச்சம் மீதி. நண்டு குஞ்சு முதல் இறால் ஓடு, மீன்களின் செதில்கள் வரை என்னென்னவோ அடங்கியது. இத்தொகுப்புக்கு சரியான தலைப்பு. ஏறுமுகமோ இறங்குமுகமோ இன்றி எல்லா அலகிலும் கவிஞரின் சென்ற மத்தி தொகுப்பின் தொடர்ச்சியாகவே நகரும் தொகுதி இந்த சங்காயம். இந்த தொகுப்பை தனியே வாசிக்கத் தேர்பவர்கள் இந்த தொகுப்பு உருவாக்கும் கற்பனை உலகில் நுழைந்து உலாவ சரியான வாசல் என்று 88 ஆம் பக்கத்தின் கவிதையை சொல்வேன்.
அதுவொரு மோசமான திடல்
அதன் மேல் சிலுவையொன்று
கால்கடுக்க நின்று கொண்டிருக்கும்
அன்று அவனுக்கு மதியத்தின் மேல் கருணை வந்தது. காலங்காலமாக மதியம் வெயிலின் மேல் நின்று தவிக்கிறது எனக் கலங்கினான் பிறகு
மதியத்தோடு பேசத் தொடங்கினான்
சிலுவைக்கு அடியில் அமர்ந்தபடி திடலின்
மணலை அள்ளி அதன் வெப்பத்தை விழுங்கினான்
தொண்டையெல்லாம் கரகரத்தது
நெஞ்சு வயிறு தோள் தொடையென மணலைப் பூசிக் கத்தினான்
திடலில் வீசிய காற்று அவனிடமிருந்து
முடிந்தளவு மணல்களைக் கடத்திக் காப்பாற்றியது
பிறகு
அந்நாளின் மாலை
கல்பாலம் செல்லவில்லை
அம்மா அடிக்கடி வந்து
மகனே வீடு கொதிக்கிறது என்பாள்
வீட்டிலே படுத்திருந்தான்.
அவன் கண்டுகொள்ளவில்லை
மாறாக தனது பூத உடலை சிலுப்புவதும்
இடம் மாற்றுவதுமாகவே இருந்தான்
மேல் கூரை குனிந்து அவனைப் பார்த்து மீண்டும் மேல் நோக்கிச் சென்றது
தன்னால் எதுவும் முடியாதென்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்
ஒரு நீர்குடுவை நிறைய முத்துக்கள் நிரம்பி வழிவதாக
முழித்தபடியே கனவு கண்டான்
மேற்கில் எங்கோ சட்டை உறிக்கிற பாம்பின் நெளிவு சப்தம்
அவனுக்கு தெளிவாக கேட்டது.
அப்போது மகனே! மகனே! என குரல் அலறியது
வெளியே எழுந்து போய் பார்த்தான்.
அம்மா அங்கும் இங்குமாக
நெருப்புக் குவியலை
மேனியில் அணிந்தபடி
மகனே வீடு கொதிக்கிறது
வீடு கொதிக்கிறது
எனக் கத்திக்கொண்டே ஓடினாள்
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை எப்படி அடக்குவதென்று புரியவில்லை
இறுதியில் அவளே முற்றத்தில் சரிந்து படுத்தாள்.
அவன் உள்ளே ஓடிப்போய் ஒரு தலையணை எடுத்து வந்து
அவள் தலைக்கு வைத்தபடி
அருகிலே உறங்கினான்.
இந்தத் தொகுதியின் உணர்வுநிலைகளை முன் வைக்கும் நோக்கு நிலை இந்த கவிதையில் வரும் மகனில் மையம் கொள்கிறது. இப்படிப்பட்ட மகனின் அடுத்த நிலை என்ன? சித்தம் பேதலித்தல் தானே.
பேதலித்தல் என்று எதனை சொல்கிறோம்? புறவையமான பௌதீக உலகத்திலிருந்து துவங்கி அகவயமான ஆத்மீக உலகத்துக்கு ஒரு நேர்கோடு இழுத்தால் அந்த கோட்டின் மையத்தில் இருப்பது நமது உடல். இயற்கை விதிகளில் இயங்கும் புற உலகம். கலாச்சார பண்பாட்டு ஆத்மீக வீதிகளில் இயங்கும் அக உலகம். இந்த இரண்டையும் கட்டி நேர்க்கோட்டில் வைப்பது ஐம்புலன்கள் எனும் கர்ம இந்திரியங்கள் வழியே கிரகித்து, அதை ‘மறு உருவாக்கம்’ செய்து அகத்தளத்தை கட்டமைக்கும் ஞான இந்திரியங்கள் எனும் ‘அமைப்பு’. இந்த அமைப்பு தகர்ந்து போகும் நிலையே பேதலிப்பு என்கிறோம்.
பேதலித்தலின் முதல் விதி, உங்கள் அகத்தின் பிம்பத்தையும் புறத்தின் பிம்பத்தையும் பேதம் செய்யும் கோடு அழிந்து அந்த போதம் இல்லாமல் போவது. அடுத்த விதி காலம் இடம் பொருட்கள் அதன் தன்மைகள் திரிபடைவது. நிகழ்வுகளின் காரண காரிய தொடர்பு அறுபடுவது. உதாரணமாக சித்த சுவாதீனம் கொண்ட மனிதன் பேரிரைச்சல் கொண்டு பொழியும் அருவியை ‘அவ்வாறே’ பார்ப்பான். சித்தம் கலங்கியவனுக்கு அவனது கண் காணும் அருவியை, காது கேட்க்கும் பேரோலத்தை இணைத்துக் கட்டி மறு அர்த்தம் அளிக்கும் ஞான இந்திரியம் சிதறி விட்டதால் அவை அவனுக்கு சித்த சுவாதீனம் கொண்ட மனிதன் அடைய இயலாத மீ யதார்த்த அர்தத்தையே அளிக்கும். இந்தகு நிலையின் அழகியல் கொண்டவை என ச.துரையின் கவிதைகளை சொல்லலாம்.
மேற்சொன்ன கவிதையை முதல் கவிதையாக்கி இந்த தொகுதிக்குள் நுழைந்தால், இந்த தொகுதியின் கவிதைகள் தனது கலைந்த வடிவம் வழியே புதிய புதிய படிமங்கள் கொண்டு பேசும் அப்பா மகன் இடையிலான கசந்த உறவு, பிரிவு, மரணம் என அனைத்தின் பித்து நிலையிலான வெளிப்பாடுகளையும் அதன் உணர்வு தீவிரத்தையும் அதன் கற்பனை சாத்தியங்களையும் இந்த சிதைவுகள் பின்னால் உள்ள துயறார்ந்த ஒழுங்கையும் வாசகரால் சென்று தொட முடியும்.
சிற்றலைப் பரப்பில் புதைந்து கிடப்பது தெரியாமல் திருக்கை மேல் பதிந்த பாதத்தின் நிலை அடுத்த நொடி எவ்வாறு இருக்கும். இத் தொகுப்பின் பல உணர்வு நிலைகள் இத்தகையது.
மணலில் பாதி புதைந்த கல்லிருக்கை மீதமர்ந்து கடல் பார்த்துக்கொண்டிருந்த
மனிதனை, மணலில் புதைத்து அவன் மேல் அமர்ந்து கல்லிருக்கை கடல் பார்க்கத் துவங்கினால் எப்படி இருக்கும்? அந்தக் கல்லிருக்கை கீழ் புதைந்து மூச்சுக்கு திணறும் அனுபவமே இந்த தொகுதி கொண்டிருக்கும் வாசிப்பின்பம்.
இந்த தொகுதியை முக்கியத்துவம் கொண்டதாக செய்யும் உண்மையையும் உணர்வுகளின் தீவிரத்தையும் கவி ச. துரை கைவிட்டு விடாது இனி வரும் தொகுப்புகளிலும் அவ்வாறே கைக்கொள்ளும் பட்சத்தில் இவ்வகை அழகியல் கொண்ட கவிதைகளின் முக்கிய ஆளுமையாக ச.துரை திகழ்வார். அவ்வாறே ஆகுக என்பதே இவ்வெளிய வாசகனின் வாழ்த்து.
தொகுப்பின் சில கவிதைகள்.
எல்லோருக்கும் முன் அவன்
நடக்கும்போது
பின்னே ஒரு கூட்டம் சரசரக்கிறது
எல்லோருக்கும் முன் அவன்
உறங்கச் செல்லும்போது
பின்னே ஒரு கூட்டம் விளக்குகளை எரிய வைக்கிறது
எல்லோருக்கும் முன் அவன்
கோப்பையை கவிழ்த்தும்போது
அவன் பின்னே ஒரு கூட்டம் நகைத்தது
எல்லோருக்கும் பின்
ஒரே ஒருநாள் மட்டும் விழித்தான்
அவனுக்கு மட்டும்
இரண்டாவது சூரியன் உதித்தது.
***
உலவு
சமயங்களில் இரவு நாய்குட்டியாகிவிடுகிறது.
பழுப்பு நிற கழுத்துப்பட்டை மிளிர வீதியில் இரவோடு உலாவுபவரை பார்த்தேன்
எங்கு கொண்டு போகிறீர்கள் இரவை
கட்டி போடுவதற்கு என்றார்
அது ஏதுமறியாத தனது சின்ன நாக்கால் நட்சத்திரங்களை நக்கிக்கொண்டிருந்தது.
***
கர்தோன்
இன்று முழுக்க ஏனோ காதோன் நினைவு
அவன் எனக்கு கொடுத்த சங்குமுள்ளை எங்கு வைத்தேன் என நினைவில்லை.
கர்தோன் ஒரு நாய்
கடைசியாக அவனைப் பார்த்தபோது நான் சரியாகமாட்டேன் என கண்களால் சொன்னான்
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை. கர்தோன் என நானும் சொன்னேன்
பிறகு தன் தலையை குப்புற கவிழ்த்தி தொண்டையிலிருந்து
இரத்தம் வடிய வடிய சங்குமுள்ளொன்றை துப்பி எனக்கு பரிசாகக் கொடுத்தான்.
May 1, 2022
தமிழ் விக்கி -அறிவிப்பு
வரும் மே 7 அன்று அமெரிக்காவில் ஆஷ்பர்ன் பிராம்பிள்டன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா நிகழ்கிறது. ஹார்வார்ட், கொலம்பியா, வாட்டர்லூ பல்கலைக் கழக பேராசிரியர்கள் கலந்துகொள்ளும் விழா. நண்பர்கள் அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொண்டு வருகைதரவேண்டும் என கோருகிறேன்.
விக்கிப்பீடியா என்பது ஒரு மானுடச்செல்வம். அதன்மேல் தொடக்க காலத்தில் இருந்த அறிவுலக தயக்கங்கள் இன்றில்லை. ஏனென்றால் ஆங்கில விக்கிப்பீடியா என்பது உலகு தழுவிய மாபெரும் அறிவுச்சேகரிப்பு. அதில் இல்லாததே இல்லை.இன்று அறிவுத்தளத்தில் செயல்படுபவர்களில் விக்கியை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தாதவர்கள் அரிதினும் அரிது. ஆய்வாளர்கள் கூட விக்கியை பயன்படுத்துகிறார்கள். நினைவுகளை சரிபார்க்க, மேலதிக தொடர்புநூல்களையும் இணையப்பக்கங்களையும் வாசிக்க. காவல்துறை, நிர்வாகத்துறைகூட இன்று விக்கியை நம்பியுள்ளது.
ஆங்கில விக்கி அதற்கான தரக்கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது பொதுவெளியால் உருவாக்கப்படுகிறது. ஆகவே பொதுவெளியின் பொதுவான அறிவுத்தகுதி அதில் வெளிப்படுகிறது. ஆங்கில விக்கியில் அங்குள்ள பல்கலைகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அங்குள்ள மாணவர்கள் அதன் கண்காணிப்பாளர்கள். ஆகவே அதன் தகவல்களுக்காக மட்டுமல்ல, நடைக்காகவே கூட அதை வாசிக்கலாம்.
அப்படி ஒரு விக்கிபீடியா தமிழில் உருவாக எல்லா வாய்ப்பும் இருந்தது. இருபதாண்டுகளுக்கு முன் அ.முத்துலிங்கம் அவர்கள் விக்கிக்கு பங்களிக்கும்படி என்னிடம் கோரினார். அதன்படி நான் பங்களிப்பாற்றினேன். பின்னர் தமிழ் விக்கியை ஒரு சிறுகூட்டம் கைப்பற்றியது. பழமைவாத மொழிக்கொள்கை மற்றும் எளிய அரசியல் காழ்ப்புகளால் அதன் பயனை அழித்தது. அது தமிழுக்கு ஒரு பெரும் இழப்பு.
கலைக்களஞ்சியம் என்பது ஏற்கனவே உருவாகி இருந்துகொண்டிருக்கும் அறிவை அட்டவணையிட்டு சேகரிப்பதே ஒழிய, அறிவை உருவாக்குவதோ கற்பிப்பதோ அல்ல. கலைக்களஞ்சியத்துக்கு எதையும் மாற்ற உரிமை இல்லை. அது எதையும் அறிவியக்கம் மேல் சுமத்த முடியாது. கலைக்களஞ்சியம் அதன் பயன்பாடு வழியாகவே வளரவேண்டும். அதற்கு மாறா இலக்கணம் இருக்க முடியாது. இதெல்லாம் உலக அளவில் கலைக்களஞ்சியங்களின் நெறிகள்.
உலகமெங்குமுள்ள கலைக்களஞ்சிய ஒழுக்கங்கள் சில உண்டு. ஒருவர் தன் பெயரை எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதுவதற்கும் சொல்வதற்கும்தான் பிறருக்கு உரிமை உள்ளது. இன்னொருவர் பெயரை நாம் மாற்றமுடியாது. அது அத்துமீறல். ஓர் ஆசிரியர் தன் பெயரை தன் நூலில் எப்படி எழுதினாரோ அப்படி எழுதுவதே அறிவுலக மரபு. மனிதர்களின், ஊர்களின் பெயர்களை மாற்றுவதென்பது அறிவின்மை. கலைக்களஞ்சியம் தனக்கென ஒரு மொழித்தரம் கொண்டிருக்கலாம் – அதுகூட மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கவேண்டும். ஆனால் பொதுவான அறிவுச்சூழலுக்கு அப்பால் ஒரு மொழிக்கொள்கை அதற்கு இருக்கலாகாது. அது ஒரு குறுங்குழுவின் மொழிக்கொள்கை என்றால் அதன்பின் அது பொதுவான கலைக்களஞ்சியமே அல்ல.
அத்துடன் தமிழ் விக்கிப்பீடியா பொதுவான வாசகர்களால் இயக்கப்படுவதனால் தமிழ்ச்சூழலில் உள்ள பொதுவான ரசனை, அறிவுமதிப்பீடுகளே அதில் அமைய முடியும். ஆனால் தமிழின் மெய்யான அறிவியக்கம் என்பது பெரும்பான்மையினருக்கு அப்பால், அரசு மற்றும் பெரிய கல்வியமைப்புகள் ஆகியவற்றின் உதவியில்லாமல் தனிநபர்களின் உழைப்பால்தான் சென்ற நூறாண்டுகளாக நடந்து வருகிறது. அறிவியக்கச் செயல்பாட்டில் இருப்பவர்கள் அமைப்புகளின் அதிகார விளையாட்டுகளில் ஆர்வமற்றிருப்பார்கள். அமைப்புகளின் தலைமையில் இருப்பவர்களுக்கு அறிவியக்கவாதிகள் மேல் மதிப்பு இருப்பதில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அரசும் கல்வியமைப்புகளும் ஒருபக்கமும் அறிவியக்கம் இன்னொரு பக்கமுமாகவே சென்ற நூறாண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆகவே சிற்றிதழ்கள் சார்ந்தே இங்கு நவீன இலக்கியமும் பழந்தமிழிலக்கிய ஆய்வும் நிகழ்ந்து வருகின்றன. இந்த சிறு அறிவுலகம் ‘புகழ்’ பெறாதது. ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அறிந்தது. இவ்வட்டத்துக்கு வெளியே மிகப்பொதுவான அறிவு மட்டுமே கொண்டவர்களுக்கு இச்செயல்பாடுகளின் முக்கியத்துவம் புரியாது. அவர்களால் இச்செயல்பாடுகளை மதிக்கவும் முடியாது. ஆகவே அவர்களின் ஆட்சி கொண்ட தமிழ் விக்கிபீடியா போன்ற தளங்களில் மெய்யான அறிவியக்கம் புறக்கணிக்கப்படுவது இயல்பு. இந்த மெய்யான அறிவியக்கம் தனக்கான தளங்களை தானே உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். அது எப்போதும் அப்படித்தான் செயல்பட்டு வந்துள்ளது.
தமிழ் அறிவியக்கத் தரப்பாக ஓர் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கவேண்டும் எனும் எண்ணம் சென்ற டிசம்பரில் உருவானது. விக்கி என்பது ஒரு சர்வதேச அறிவுப்பரப்பு. அது அளிக்கும் வசதிகள், அதன் முன்னுதாரணம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நண்பர்களிடம் சொன்னேன். உடனே ஒரு தளம் வாங்கி, அணுக்கமான நண்பர்களை இணைத்துக்கொண்டு சென்ற ஜனவரி இறுதியில் பணிகளை தொடங்கினோம். இதன் பொதுக்கொள்கைகள், செயல்விதிகள் ஆகியவற்றை விவாதித்து உருவாக்கினோம். இப்போதைக்கு இலக்கியம், கலை, பண்பாடு மட்டுமே. அரசியல், சினிமா, வரலாறு கிடையாது. பண்பாடு, இலக்கியம் சார்ந்து நிறைவுறும்படி பதிவுகள் வந்த பிறகு அப்படி நீட்டித்துக் கொள்வோம்.
பிப்ரவரியில் பதிவுகளை உருவாக்கத் தொடங்கினோம். பேசிப்பேசி பிழைகளை களைவதன் வழியாக இதன் செயல்முறைகளை பொதுவாக உருவாக்கிக் கொண்டோம். 90 நாட்களில் ஏறத்தாழ 2000 தமிழ்ப்பதிவுகளும் 200 ஆங்கிலப்பதிவுகளும் போட்டிருக்கிறோம். அவற்றில் முழுமைபெற்றவை வரும் மே ஏழாம் தேதி நடக்கும் தொடக்கவிழாவுக்குப் பின் வாசகர்களின் பார்வைக்கு வரும். தொடர்ந்து இவ்வாண்டுக்குள் 5000 பதிவுகள், பத்தாண்டுகளில் ஐம்பதாயிரம் பதிவுகள் என்பது திட்டம். என் வாழ்நாளில் லட்சம் பதிவுகளை கண்ணால் பார்க்கவேண்டும் என விழைகிறேன்.
இதன் செயல்முறை விக்கிக்கு உரியதுதான். அனைவரும் பங்களிக்கலாம். ஒரு சிறு வேறுபாடு, நிபுணர்கள் கொண்ட ஓர் ஆசிரியர் குழு உண்டு. எதிர்காலத்தில் வரலாறு , அரசியல் போன்றவை சேர்க்கப்படுமென்றால் அதற்குரிய ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆசிரியர்குழுவின் பார்வைக்குப் பின் புதிய பக்கங்களோ திருத்தங்களோ வலையேற்றம் செய்யப்படும். இது தகுதியுடைய அறிவியக்கவாதிகளின் ஒரு கூட்டுச்செயல்பாடாக முன்னகர வேண்டும் என்பது எங்கள் எண்ணம். வாசகர்கள் அறிஞர்கள் இரு சாராரும் சேர்ந்து செய்யும் ஒரு பெரும்பணி.
இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பக்கங்களின் நோக்கம் என்பது இதில் என்னென்ன வகை பதிவுகள் இடம்பெறலாம், அவை எப்படி அமையவேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்களை உருவாக்குவதுதான். இந்த நடை, இந்த கட்டுரைக் கட்டமைப்பு, இத்தனை விரிவு தேவை. இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நண்பர்கள் மேலும் பங்களிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
வெறும் தொண்ணூறு நாட்களில் நிகழ்ந்த இந்த பெரும்பணி அபாரமான நிறைவை அளிக்கிறது. இன்னும் அதிக நண்பர்களுடன் இன்னும் அதிக விசையுடன் பணியாற்ற முடியும் என்னும் நம்பிக்கை உருவாகிறது. பல புதிய நண்பர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். எங்களுக்குத் தேவை முதன்மைப் பதிவை எழுதுபவர்கள், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்பவர்கள். இன்னும் இளம்நண்பர்கள் வரவேண்டுமென விரும்புகிறேன். கல்லூரிகளை தொடர்புகொண்டு ஊதியம் அளித்து மொழியாக்கங்கள் செய்யவைக்க எண்ணமுண்டு. நன்கொடைகள் அளிக்கவும் நண்பர்கள் முன்வரவேண்டும்.
இந்தக் கலைக்களஞ்சியத்தில் அரசியல் இல்லை. இதன் மொழிக்கொள்கைகள் சர்வதேச அளவில் விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்கள் கடைப்பிடிப்பவை. ஆனால் ஒரு வேறுபாடுண்டு. விக்கியில் ஆசிரியர்குழு இல்லை. ஆகவே விக்கி மதிப்பீடுகளுக்கும் கருத்துக்களுக்கும் உசாத்துணை கோரும். இக்கலைக்களஞ்சியம் ஆசிரியர்குழு கொண்டது. இதற்கென பண்பாட்டு அளவுகோல்களும் அவற்றின் அடிப்படையிலான மதிப்பீடுகளும் உண்டு. அவை தமிழ் அறிவுச்சூழலில் நீண்ட விவாதங்களின் விளைவாக பொதுவாக ஏற்கப்பட்டவை.
தமிழ் விக்கி என இணையதளத்தின் பெயர். ஆகஸ்ட் மாதம் இதை இரண்டாயிரம் பதிவுகளுடன் வெளியிடுவதென இலக்கு வைத்திருந்தோம். நான் அமெரிக்கா செல்வதை ஒட்டி பணிகளை முடுக்கி மே மாதத்திலேயே இலக்கை எட்டினோம். இன்னும் விசையுடன் இணைந்து மேலே செல்வோம். அறிவியக்கம் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் அழைக்கிறேன்
அமெரிக்க நிரல்- கடிதம்
பெரும் மதிப்பிற்கும்,பேரன்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு,
கடந்த 13 ஆண்டுகளில் உங்களை நினைக்காமல் ஒரு நாள் கடந்தது இல்லை. வெண்முரசு படிக்காத ஒரு நாள் இல்லை. இரு குழந்தைகளும் பிறந்த ஈற்றறையில் , என் தந்தையின் இறுதி சடங்கிற்கு வரும்போது (ஜயரத்தன் தலை அவன் தந்தை மடியில் விழுந்த அத்தியாயம்) என ஒரு நாளும் தவற விட்டதில்லை. வெண்முரசு வெளியான ஏழு ஆண்டுகளில் , என் வாழ்வை அவற்றின் அத்தியாயம் கொண்டே நினைவு கொண்டு உள்ளேன். உள்ளே தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கும் குரல் உங்களுடையது. உங்களை 2015 , 2019 அமெரிக்கா பயணங்களில் சந்திக்க முடியாமல் போயிற்று. முதல் தடவை மகள் பிறக்கும் இறுதி வாரம். இரண்டாம் முறை என் தந்தை அப்போது தான் இறந்து இருந்தார்.
இந்த தடவை பயணம் பற்றி படித்ததில் இருந்து ஒரே பரபரப்பு. முறையான அறிவிப்பு தளத்தில் வருமா? வாசகர் சந்திப்பு இருக்கிறதா? நான் டல்லாஸ், டெக்சாசில் வசிக்கிறேன்.
அன்புடன்,
பிரதீப்.
***
அன்புள்ள பிரதீப்
என் நிகழ்ச்சிநிரலை அறிவித்துள்ளேன். இது முழுமையாகவே திட்டமிடப்பட்ட பயணம். என்னென்ன பொதுநிகழ்ச்சிகள் என இணையத்தில் அறிவிப்பேன். நீங்கள் தகவல்கள் தேவை என்றால் நண்பர் சௌந்தர் ராஜனை vishnupuramusa@gmail.com -க்கு, மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக்கொள்ளலாம்.
ஜெ
***
மாமங்கலை – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எனக்கு சிறுவயதிலிருந்தே மதுரையின் வன்முறை பக்கங்களுடன் அதிக தொடர்பிருந்திருக்கிறது. பள்ளி காலகட்டங்களில் அந்த தொடர்பு உருவாகி நெடுநாட்கள் அதன் தாக்கம் என்னுள் இருந்தது. கல்லூரி காலகட்டத்தில் நான் சந்தித்த நண்பன் வித்யா சங்கர். அவன் மதுரையுடன் கொண்டிருந்த உறவு எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. உலகின் எங்கு சென்றாலும் மதுரையே எனக்கு பிடித்தமான ஊராக இருக்கும் என்று சொல்வான். இந்த திருவிழாவிற்கு ஜெர்மனியிலிருந்து ஓடி வந்துவிட்டான். எனது கல்லூரி நாட்களில் மதுரையின் வன்முறை மீது ஒவ்வாமை உருவாகி எனக்கு பிடிக்காத ஊராக ஆகியது. அப்போது தான் சங்கர் எனக்கு மதுரையின் கோவில்கள், கொண்டாட்டங்கள், திருவிழாக்களை அடையாளம் காட்டினான். அதன் பண்பாட்டு தளங்களை அறிமுகம் செய்து வைத்தான். அதன்பின் மதுரை எந்த ஊரை விடவும் எனக்கு நெருக்கமாக ஆகியது. மீனாட்சியும், அவளது இருப்பிடமும் தரும் உணர்வை வேறு எங்கும் நான் அடைந்ததில்லை.
புதன்கிழமை இரவு கூகிள் மேப்பை பார்த்து ராஜா லாட்ஜுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் வழியில் மீனாட்சி சப்பரத்தில் அமர்ந்து வீதி உலா வர அவள் முன்னால் செங்கோல் ஏந்தியும், முரசு அறைந்தும், கல்யாண சீர் வரிசையுடன் பெண்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்தவுடனேயே குமரித்துறைவி தான் ஞாபகத்திற்கு வந்தது. அப்போதே கல்யாண கொண்டாட்ட மனநிலை ஊற்றெடுத்துவிட்டது. திருவிழா மனநிலையுடன் சேர்ந்து உங்களுடன் இரு நாட்களை கழிக்க போகிறேன் என்ற உணர்வு பேரின்பமாக இருந்தது. உங்களுடைய உரையாடல் அதிகமும் நகைச்சுவை சார்ந்து இருந்தது அந்த கொண்டாட்ட மனநிலையை மேலும் கொண்டாட்டமாக்கியது.
எங்கும் கூட்டம், நெரிசல், வியர்வை, சத்தம் அத்னுடன் கூடிய அழகு, வண்ணம், ஆர்வம், பரவசம் என பெருந்திருவிழாவின் தோற்றம் கண்களையும், மனதையும் நிறைத்தது. திருவிழா என்பதே பெண்களுக்கும், குழந்தைகளுக்குமானதாக தோன்றியது. எங்கும் பெண்களே நிரம்பி இருந்தனர். குழந்தைகள் தங்கள் தந்தையரின் தோளில் அமர்ந்துகொண்டு அனைத்தையும் விழியுருட்டி பிரம்மித்து பார்த்து கொண்டிருந்தனர். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைளை கூட அழைத்து வந்திருந்தனர். ஒருவர் கூட அழவில்லை, ஒரே வேடிக்கை தான். ஒரு சிறு துளியையும், இலையையும் பிரம்மாண்டமாக பெருக்கும் அவர்களுக்கு, இந்த மாபெரும் பிரமாண்டம் எதனை அளிக்கும் என்று வியந்து கொண்டேன். மீனாட்சி, கோவிலுக்குள்ளிருந்து வெளிவரும் போது எழுப்பப்பட்ட சத்தம் இன்னும் இன்னும் பெருக வேண்டுமென உளம் ஏங்கியது. கோவிலை சுற்றியிருந்த சிறு தெய்வங்கள் எல்லாம் புதுபொழிவுடன் இருந்தனர். அவர்களும் கூட்டத்திற்குள் நின்று கொண்டு “எக்கோவ் தள்ளி நில்லுக்கா, தலை மறைக்குதுல்லா” என்று சொல்லி முண்டியடித்து அவளது ஊர்வலத்தை பார்த்து கொண்டிருப்பதாக தோன்றியது.
இரண்டாம் நாள் தேர் பார்க்க சென்று கொண்டிருந்த போது ஒரு இளைஞர் கூட்டம் எதிரே வந்த இன்னொரு கூட்டத்திடம் தேர் எப்போ வரும் என்று கேட்க அதற்கு “ஆங் பஞ்சர் பார்த்திட்டு இருக்குறாய்ங்க, முடிஞ்சோன வந்திடும்” என்று கூற கூட்டத்தில் ஒரே சிரிப்பு. சிறிது நேரத்தில் தேரும், திரளும் ஒற்றை பெருக்காக குழுங்கி குழுங்கி உருண்டு வந்தது. மாடியிலிருந்து பூவை அள்ளி வீசினார்கள், தண்ணீர் பாட்டில்களை எறிந்தார்கள், வடமிழுத்த இளைஞர்கள் சுற்றினின்று ஒருவனை தூக்கி ஆகாயத்தில் வீசி எறிந்து பிடித்தார்கள். தேரின் இருபுறமிருந்தும் இளைஞர்கள் போலீசின் கால்களுக்குள்ளும், கைகளுக்குள்ளும் புகுந்து வடம் பிடிக்க ஓடினர். போலீஸ் அவர்களை பிடித்து பின்னால் இழுத்து விட்டனர். அங்கு ஒரு வெறியாட்டு மனநிலை நிலவியது. பெரும் தீவிரம் இருந்தது ஆனால் வன்முறை இல்லை. இளைஞர்கள் போலீஸ் சொல்வதை கேட்டு கொண்டார்கள். பல சமயம் மாறி மாறி கலாய்து கொண்டனர். ஏதோ ஒரு வகையில் அங்கு வன்முறை சமன் செய்யப்படுகிறது.
உங்களை நிறைய பேர் கூட்டத்தில் அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அழகரை பார்க்க சென்ற இடத்தில் உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட அக்கா என்னை பார்த்து சாருடன் எத்தனை ஸ்டூடண்ட் வந்துள்ளீர்கள் என்று கேட்டார். நான் பதினைந்து பேர் என்றேன். அருகிலிருந்த நண்பர் அவுங்க ஈரோடு கிருஷ்ணன் சார பார்த்தா ‘ஸ்டுடண்ட்ஸ்னு’ நினைக்க மாட்டாங்க என்று சொல்லி சிரித்தார். நீங்கள் புறப்பட்டு சென்றபின், நான்கு நண்பர்கள் மட்டும் கன்னியாகுமரி கவிதை முகாமுக்கு செல்ல இரவு 11:30 மணி டிரைனில் பதிவு செய்துவிட்டு மீனாட்சி திருக்கல்யாணத்தின் இறுதி நிகழ்ச்சியான மீனாட்சியும்-சுந்தரேஸ்வரரும் ஒரே சப்பரத்தில் தேர் தடம் பார்க்க வருவதை பார்க்க சென்றோம். மொத்த திருவிழாவிலும் இருவரும் இனைந்து வருவது இந்த ஒரு முறை மட்டுமே. யாரும் கூச்சலோ, சத்தமோ போடவில்லை. அனைவரும் புதுமண தம்பதியரை பூரிப்புடன் விழி நனைய பார்த்து கொண்டிருந்தனர். அதன்பின் அனைவரும் மொனமாக கலைந்து சென்றோம். சிறு தெய்வங்கள் எல்லாம் கூட்டத்தில் திசை தடுமாறி தங்கள் இருப்பிடங்களை தேடிகொண்டிருப்பர்.
நாங்கள் ரயிலில் ஏறி படுத்து கொண்டோம், மாமங்கலையாக அவள் ஆட்சி செய்யும் நதிக்கரையில் விழி மூடி, கன்னியாக அவள் ஒற்றை காலில் தவம் செய்து கொண்டிருக்கும் கடற்கரையில் நாளை துகிலெழ வேண்டும்.
வேலாயுதம் பெரியசாமி
ஒலிவடிவில் என் நூல்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
தங்களின் புத்தகங்களில் சில ஒலி வடிவில். இதற்கான அனுமதியை எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கியதற்கு மிக்க நன்றி.
மனோபாரதி விக்னேஷ்வர்
***
அன்புள்ள மனோபாரதி,
பவா செல்லத்துரையின் கதைசொல்லல், நீங்கள், பாத்திமா பாபு, இலக்கிய ஒலி சிவக்குமார் போன்றவர்களின் கதை வாசிப்பு இத்தனைபேரை கவர்வது வியப்பூட்டவில்லை. தமிழகத்தில் பள்ளி வரை மட்டுமே தமிழ்க்கல்வி. தமிழ்ப்பாடத்துக்கு போட்டிகளில் முக்கியத்துவம் இல்லை. தமிழ்பேசத்தெரிந்த, ஆனால் சரளமாக வாசிக்கமுடியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. இன்று 30 வயதுக்கு குறைவானவர்களில் இயல்பாக தமிழ் வாசிப்பவர்கள் பத்தில் ஒருவர்தான். அவர்களுக்கு பயன்படட்டும்
ஜெ
***
1.விஷ்ணுபுரம் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAAEEnNqF-6wL8ZkjIrqKNUj
2.இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAAnzL5aUp5byPHpeAHfSH21
3.இந்திய ஞானம் தேடல்கள், புரிதல்கள் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAAU8zngiKGjZlAejGgXMeA6
4.உரையாடும் காந்தி (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsABVcHcb_BtAhgnxpD6q0rF5
5.தன்மீட்சி (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAARrMV-5lHAaXY48rYij1ss
6.பனிமனிதன் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsABQkKnNDZlzw8Tur-Kwz7Oo
7.ஜெயமோகன் சிறுகதைகள் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsADFuGOgIuqBgNhCvkXhWE4y
8.வாழ்விலே ஒரு முறை:
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsABjPrLq5m1jsEzqbMukRJv2
9.அருகர்களின் பாதை
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsADj1MOUaWUqT1IejNe1ZZQ5
வெண்முரசு
1.முதற்கனல் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0
2.மழைப்பாடல் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsACId-UV2Fw21VaQoGQpjMjj
3.வண்ணக்கடல் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsADJBSkIhpaE9KoNHvy4nJ07
4.நீலம் (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAABN2t9jXKq892DLPXnNSg2
5.பிரயாகை (முழுமை)
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsACrLjKEciImlJ804EUDVKih
6.வெண்முகில் நகரம்
https://youtube.com/playlist?list=PLvWdiqurBsABU34SwoBQ3PZPisodrbvDI
நன்றி,
அன்புடன்,
மனோபாரதி விக்னேஷ்வர்.
தமிழ் விக்கி தொடக்கவிழா அழைப்பிதழ்
நண்பர்களே,
சென்ற டிசம்பரில் ஓர் எண்ணமாக தோன்றி, பிப்ரவரியில் தொடங்கிய தமிழ் விக்கி என்ற இலக்கியப் பண்பாட்டு இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெறுகிறது.
ஜானதன் ரிப்ளி (ஹார்வார்ட்) விஜய் ஜானகிராமன் (ஹார்வார்ட்) டைலர் ரிச்சர்ட் (கொலம்பியா)செ.இரா.செல்வகுமார் (வாட்டர்லூ) ஆகிய பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
நண்பர்கள் அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு அழைப்பிதழ் பெற்று விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா
தொடர்புக்கு : vishnupuramusa@gmail.com
வரவிருக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும் – https://www.signupgenius.com/go/10C0E4EAAAA29A7FBC70-tamil
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 839 followers

