Jeyamohan's Blog, page 787

April 29, 2022

கல்விக்கூடம், கடிதம்

 

நமது மாணவர்கள்

நமது கல்வி

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்

அன்புள்ள ஜெ

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துகளும் வாசித்த பின் என் அனுபவங்களை எழுதி பதிவு செய்ய வேண்டும் என தோன்றியதால் இக்கடிதம்.

எங்களூர் நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கையில் எட்டாம் வகுப்பில் நாற்பதுக்கும் மேல் இருந்தார்கள். ஆனால் பள்ளி முடித்து வெளியேறுகையில் வெறும் எட்டு என்றாகியிருந்தது எண்ணிக்கை.

இந்த பள்ளிகளிலும் இன்றும் இங்கே வட தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் ஒரளவு நன்றாகவே உள்ளன. இவை உயர்நிலைப் பள்ளிகளாகவும் மேல்நிலைப் பள்ளிகளாகவும் மாறும்போது தான் எல்லாம் குட்டிச்சுவராக மாறுகின்றன. இவர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள் ? முதலாவது, இம்மாணவர்களின் பின்தங்கிய பொருளாதார நிலை. இரண்டு, இவர்களின் தந்தையர்களில் அநேகர் குடிக்கு அடிமையானவர்கள் மட்டுமல்ல, குடித்துவிட்டு வந்து வீட்டில் அம்மாக்களை அடிப்பவர்கள். ரகளை செய்பவர்கள். இப்படிப்பட்ட சூழலில் வளர்கையில் மிக இளம் வயதிலேயே குடிக்கு பழகிவிடுகிறார்கள். அதன் பின் அத்தனை ஒழுங்கினங்களும் வந்து சேரும். என் வகுப்பிலேயே அவ்வகை நண்பர்கள் இருந்தார்கள்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, முன்பு நம் ஊராட்சிகள் பள்ளிகளில் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகித்தார்கள். என் சிறுவயது நினைவுகளில் வருடந்தோறும் நடக்கும் சுதந்திர தின விழா போட்டிகளின் ஊர் தலைவர் வந்திருந்து பங்கேற்று பரிசுகள் வழங்குவார். அது ஒரு தெளிவான அறிவிப்பு, நாங்கள் ஆசிரியர்கள் பக்கம் நிற்கிறோம் என்று. ஆனால் நான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறுகையில் எப்போதோ ஒருமுறை வருவார்கள். சடங்காக நிகழ்வதாக மாறிப்போனது.

அவர்களின் ஆதரவு குறைந்தது பலவீனம் என்றால் இவர்களில் ஒருசாரார் ஊர் என்பதை விட்டுவிட்டு வட்டார கட்சிகளுடன் தங்களை அடையாளம் கண்டுகொண்டு அடங்கா மாணவர்களை தூண்டி வளர்க்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற பக்கத்து ஊர் பள்ளியில் நடந்த சம்பவம். பள்ளியின் ஜன்னல் கதவை உடைத்து கம்பிகளை அறுத்து மடிக்கணிணிகளை திருடி சென்றிருக்கிறார்கள். வழக்கு படிந்து அம்மாணவர்களை அழைத்தால், ஊள்ளூர் கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் மடிக்கணிணிகள் திருப்பி தரப்பட்டன. ஆனால் அவர்களின் மேல் எந்தவித பள்ளி அளவிலான குற்ற நடவடிக்கை கூட மேற்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒழுங்கீன மாணவர்கள் வகுப்பிற்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுந்தான். இவர்கள் மற்ற அத்தனை பேரையும் படிக்கவிடாமல் கெடுப்பவர்கள். அப்படி பள்ளி படிப்பில் ஆர்வம் குறைந்து சக வகுப்பு தோழிகளை அறிவேன். இன்றைக்கு நீங்கள் சொல்வது போல நம் ஊராட்சிகள் பள்ளிகளில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். இப்படிப்பட்ட ஒழுங்கீன மாணவர்களை சீர்த்திருத்துவதில் ஆசிரியர்களுக்கு தோள் கொடுப்பது அவர்களின் கடமை.

சமூக ஊடகங்களில் பொய் கூச்சல்களை பார்த்தால் ஆத்திரம் தான் வருகிறது. இவர்களின் பிள்ளைகளை நல்ல தரமான பள்ளிகளில் போட்டுவிட்டு அரசுப்பள்ளிகள் தான் சிறந்தவை என தொடங்கி முறையற்ற ஆடையணிவது, பங்க் தலை வைத்துகொள்வது எல்லாம் அவரவர் சுதந்திரம் என வக்காளத்து வாங்குபவர்கள். அங்கே படிக்கும் ஏழை மாணவர்களின் நலன் சார்ந்து உங்களை போன்ற முக்கியமான ஒருவரின் குரல் ஒலிக்குமென்றால் கொக்கரிக்கிறார்கள். பலவித பழிப்பு பேசுகிறார்கள். மனச்சாட்சியே இல்லாதவர்கள். நீங்கள் சொல்வதே தான், உங்கள் குழந்தையை எங்கே படிக்க வைக்கிறீர்கள் என்ற கேள்வி, இவர்களின் முகத்திரைகளை கிழித்து வீசுவது.

இவர்கள் சொல்லும் சுதந்திரம் அவர்களை சீரழிக்கிறது. எங்கள் வகுப்பிலேயே இப்படித்தான் ஒருவன் கணக்கு வாத்தியார் மேல் கல்லெறிந்தான். தனக்கொரு நியாயம் ஊருக்கொன்று. இன்றைக்கு சமூக ஊடகங்கள் இருப்பது இந்த தறுதலைகளின் குரல் ஓங்கி ஒலிக்க ஏதுவாக உள்ளது.

உங்கள் தரப்பில் அரசுப்பள்ளியில் பயின்ற வாசகனாக அரசும் நம் ஊராட்சிகளும் நம் பள்ளிகளை சீர்த்திருத்துவதில் தம் பங்கை செவ்வனே ஆற்ற வேண்டும். அந்த மூடித்திருத்துவது போன்ற நிகழ்வுகள் நம் ஊர்கள் தோறும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நடந்தாலே வெகுவாக நம் பள்ளிகளின் நிலை உயரும்.

அன்புடன்
சக்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2022 11:33

April 28, 2022

ஏப்ரல் 22

பிறந்தநாள் அன்று ஏராளமான வாழ்த்துக்கள். சில ஆயிரம் என சுருக்கமாகச் சொல்கிறேன். அத்தனைபேருக்கும் ஒருவரியேனும் பதில் போடவேண்டும் என முயன்று முடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி. மூத்தவர்களுக்கு வணக்கம், இளையோருக்கு ஆசிகள்.

அறுபது என்பது ஒரு பழைய கணக்கு. இப்போது பழந்தமிழறிஞர்களின் வாழ்க்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிகப்பெரும்பாலானவர்கள் அறுபதை ஒட்டிய வயதுகளில் மறைந்திருக்கிறார்கள். படங்களில் அவர்கள் முதியவர்களாகவும் தென்படுகிறார்கள். ஐம்பது கடந்ததுமே அவர்கள் முதுமைக்கான மனநிலைக்கும் வந்தமைந்திருக்கிறார்கள். இன்றைய மருத்துவம், வாழ்க்கையின் வாய்ப்புகள் ஆயுளை நீட்டி அதற்கான உள அமைப்பையும் உருவாக்கிவிட்டிருக்கின்றன

ஆனாலும் ஐந்து வியாழவட்டக் காலம் என்னும் சோதிடக் கணிப்புக்கு முன்னோர் வேறேதாவது கணக்கு வைத்திருக்கலாம். அதை நான் கொண்டாடவேண்டியதில்லை, கொள்ளாமலிருக்கவும் வேண்டியதில்லை. அயலூர் நண்பர்களுக்கு வாழ்த்தை அனுப்பினேன். லக்ஷ்மி மணிவண்ணனை மட்டும் வீட்டுக்கு வரவழைத்து ஓர் ஆசி. ஆசி அளிக்க தகுதியை வயது அளித்திருக்குமென்றால் அதை ஏன் வீணடிக்கவேண்டும்?

பிறந்தநாள் மற்றுமொரு நாளே என முடிவுசெய்துவிட்டமையால் அன்று வழக்கம்போல வேலைசெய்தேன். திரைக்கதை விவாதம் இரண்டு மணிநேரம். ஒரு சந்திப்பு. எஞ்சிய பத்துமணிநேரம் முற்றிலும் உளம்குவிந்து வேலை. முழுநேரமும் செல்பேசியை ஓசையின்றி அமைத்து பெட்டிக்குள் போட்டிருந்தேன். 21 மாலை போட்ட செல்பேசியை 23 மாலைதான் எடுத்துப் பார்த்தேன்.

22 நள்ளிரவுக்குப்பின் தூங்கும்போது மிகப்பெரிய நிறைவை உணர்ந்தேன். இன்றும் என் யோகம் எதுவோ அதைச் செய்திருக்கிறேன். எதுவுமே என்னை அலைக்கழிக்கவில்லை. ஐந்து நிமிடம்கூட வீணாகவில்லை. பரவாயில்லை, என்னை நன்றாகவே நான் பயிற்றுவித்திருக்கிறேன். இவனுக்கு வேறேதும் தேவையில்லை, இச்செயலின் முழுமைகூடும் ஒன்றுதலே போதுமென்றிருக்கிறது.

ஏன் அந்த ஒதுக்கம் என நண்பர்கள் கேட்டனர். பலருக்கு விளக்கம் அளித்தேன். படைப்பாளியின் ஆணவம் என ஒன்று உண்டு. அதை உருவாக்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கியத்திலோ கலையிலோ செயல்படவே முடியாது. ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றோ  ‘மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ’ என்றோ ‘எந்நாளும் அழியாத மாகவிதை’ என்றோ ‘நான் காவியத்தாயின் இளைய மகன்’ என்றோ ‘எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்’ என்றோ எண்ணி எழச்செய்வது அந்தவிசை. புறக்கணிப்புகளை, அறியாதோரின் எள்ளல்களை, சூழலின் சிறுமைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை அளிப்பது.

ஆனால் அது வேறொருவருடைய நிமிர்வு. எழுதுபவனின் உள்ளம் அது. எழுதாதபோதிருப்பவனுக்கு அந்த ஆணவம் பெருஞ்சுமை. அதைச் சுமந்தலைந்தால் வெறும் கட்-அவுட் ஆகிவிடுவோம். அதற்கப்பால் நாம் நம் பலவீனங்களுடன் குழப்பங்களுடன் அன்றாடச் செயல்பாடுகளுடன் இருப்பதே இயல்பானது. வீட்டில் பாத்திரம் கழுவி தரைதுடைப்பவன் விஷ்ணுபுரத்தின் ஆசிரியன் அல்ல. தெருவில் சென்று ஒரு சிங்கிள் டீ அடித்துவிட்டு வருபவன் வெண்முரசு எழுதியவன் அல்ல. பக்கத்துவீட்டுக்காரரிடம் பேசுபவன் அவன் அல்ல.

பலசமயம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இந்தச் சாமானியனால் கைநீட்டி முந்திப்பெறப்பட்டு விடுகின்றன. அவனை பின்னுக்கிழுக்காமல் இருந்தால் நாம் நம்மை வீங்கச் செய்துவிடுவோம். அது அளிக்கும் பாவனைகள் நம்மை இயல்பாக எழுதமுடியாதவனாக ஆக்கிவிடும். பெரும்பாலும் பாராட்டுரைகளை நான் செவிகொடுத்து கேட்பதில்லை. ஒருவகை ‘சம்மலுடன்’ மங்கலாகச் சிரித்து கடந்துவிடுவேன். ஒரு பாராட்டுரை அச்சில் வரும்போது அச்சிக்கல் இல்லை. அது அந்த எழுத்தாளனுக்கு அளிக்கப்படுவது.

மேலும் இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மறுபக்கமும் உண்டு. இவற்றை இலக்கியம் வாசிக்காத, என்னவென்றே தெரியாத, சாமானியன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சில்லறை அரசியலையும் வம்புகளையும் மட்டும் அறிந்தவன், ஆனால் தான் ஒன்றும் சாமானியனல்ல என நம்புகிறவன். அவனுக்குள் ஆணவம் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது அவன் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வான். ஆனால் அவனுள் இருந்து அந்தக் குரோதம் வெளிப்படும். அதற்கு வெளியே இருந்து ஏதாவது ஓர் எளிய சந்தர்ப்பம் அமையவேண்டும், அவ்வளவுதான்.

அப்போது அந்தக் குரோதம் என்மீதல்ல, இந்நாவல்களை எழுதிய அவன்மீது என நான் உணரவேண்டும். அதுவே அப்போது என்னை நிலைநிறுத்தும் புரிதலாக இருக்கவேண்டும். தமிழ்ச்சூழலில் எப்போதும் எல்லாவகை அறிவுச்செயல்பாடுகளுக்கும் எதிரான ஒரு வலுவான குரல் உண்டு. சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் உட்பட எல்லா முன்னோடிகளுக்கும் வாழ்வின் கடைசியில் அந்த வெறுப்பின் நஞ்சு ஒரு துளி ஊட்டப்பட்டது என்பது வரலாறு. ஊட்டியவர்கள் இன்றும் அப்படியேதான் இருக்கிறார்கள், செய்தது பிழையென அவர்கள் உணரமுடியாது. அவர்களின் அமரத்துவம் இவர்களுக்கு இல்லை என்று எங்கோ இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இத்தனை காழ்ப்பும் எழுவது அந்த சிறுமையுணர்விலிருந்து.

பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கடந்துவிட்டேன். சியமந்தகம் என்னும் தளத்தில் என்னைப் பற்றி என் நண்பர்கள் எழுதிய நல்ல கட்டுரைகள் வெளியாகின்றன. ஒவ்வொருவரும் என் அன்புக்குரியவர்கள். அவர்களின் சொற்களை நான் இப்போது வாசிக்கக்கூடாது. மெல்லமெல்ல வாசிக்கலாம். எப்போதாவது கொஞ்சம் உளச்சோர்வு வந்தால் வாசிக்கலாம். இப்போதைக்கு மண்டையை கொஞ்சம் எடையில்லாமலேயே வைத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

நான் எழுதும் இச்சொற்கள் ஒரு பாவனையான தன்னடக்கம் என்றெல்லாம் சிலருக்கு தோன்றும் என நான் அறிவேன். ஆனால் இதை வாசிப்பவர்களில் இளம் எழுத்தாளர்கள் இருந்தால் அவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் சந்திக்கப்போகும் சிக்கல் இது என சொல்ல விரும்புகிறேன். இந்த இருபாற் பிளவே அச்சிக்கலை எதிர்கொள்வதற்கான சரியான வழி.

சியமந்தகம் – இணையப்பக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2022 11:35

இணையநூல்கள்

இனிய ஜெயம்

தமிழ் எண்ம நூலகத்தில் இரண்டு முக்கியமான தத்துவ நூல்கள் பதிவேற்றம் கண்டிருக்கிறது.

முதலாவது, தேவிப்ரஸாத் சட்டோபாத்யாய எழுதிய கரிச்சான் குஞ்சு மொழியாக்கம் செய்த  _ இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் _ எனும் நூல்.

பொதுவாக கட்சி சார் மார்க்சியம் பேசும் பொருள் முதல் கருத்து முதல் எனும் இருமை மிக மிக எளிமையானது. இந்து  தத்துவ மரபை இந்த எளிய வாய்ப்பாட்டின் படி குறுக்கி அணுகுவது என்றுமே கட்சி சார் மார்க்சியத்தில் உள்ள சீர் செய்ய இயலா கோணல். இவை போக மானுடத்தை ஆட்டிவைக்கும் காம க்ரோத மோகம், இந்து மெய்யியல் கொண்ட அடிப்படை தவிப்பான ‘மானுட துக்கம்’ இவை குறித்தெல்லாம் மார்க்சியத்துக்கு அன்றும் இன்றும் எதுவும் தெரியாது.

இத்தகு போதாமைகளுக்கு வெளியே தேவி பிரஸாத் அவர்களின் முக்கியமான பங்களிப்பு என்பது 17 ஆம் நூற்றாண்டு துவங்கி பின்னோக்கி பொருள்முதல்வாத தரப்புகள் வழியே வேதகாலம் வரை சென்று, பண்டைய இந்தியாவின் பொருள்முதல் வாத தரப்பின் தோற்றுவாய் என்னவாக இருந்தது என்பது குறித்து மார்க்சிய முறையில் அவர் நிகழ்த்திய ஆய்வு. ( அவ்வாய்வு உலகாயதம் எனும் தலைப்பில் ncbh இல் வாசிக்க கிடைக்கிறது) .

இந்த ஆய்வில் நமக்கு கிடைத்த முக்கியமான விஷயம் ஒன்று மிக சுவாரஸ்யமானது. பல்வேறு பொருள்முதல்வாத தரப்புகள் எல்லாம் ( அவற்றின் மூல நூல் காலத்தால் மறைந்து போய்விட) அவை எவற்றுடன் விவாதித்தனவோ அந்த எதிர் தரப்பு அதன் சுப பர பக்க விவாத முறைமையில் இந்த அழிந்து போன பொருள்முதல்வாத தரப்புகள் மொத்தத்தையும் கொண்டிருந்தன.

அப்படி கருத்துமுதல் தரப்பின் வழியாக மீட்டுருவாக்கம் கண்ட பொருள்முதல்வாதம் உள்ளிட்ட இந்தியத் தத்துவப் பாரம்பரியம் குறித்த நூலே மேற்கண்ட நூல்.

இரண்டாவது, இல. மகாதேவன் அவர்கள் எழுதிய இந்திய தத்துவ ஞான மரபில் ஆயுர்வேதம் குறித்த _ பத்தார்த்த விஞ்ஞானம் _ எனும் நூல்.

ஆயுர்வேதம் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான பாட நூல். இந்திய தத்துவ மரபினை விரிவாக அதன் வாத கதியுடன் அறிமுகம் செய்து, அதன் ஒரு பகுதியாக ஆயுர்வேதம் எனும் ‘முழுமை நோக்கை’ கற்பிக்கும் நூல். ஆயர்வேதம் எனும் தரிசனத்துக்கும் ‘வீடு பேறு’ என்பதே இலக்கு என்று முன்னுரையில் கூறுகிறார் நூலாசிரியர். ஆயுர்வேதம் இலக்காகும் ஆரோக்கியம் என்பது உடல் தெளிவு உள்ளத் தெளிவு அதன் பயனான ஆத்மீகத் தெளிவு என்று கூறுகிறார். ஸ்வஸ்தா எனில் மெய்மையை அறிந்து அதில் நிலைத்திருக்கும் நிலை என்கிறார் நூலாசிரியர். விஷ்ணுபுரம் நாவலுககான பல பத்து துணை நூல்களுள் ஒன்றாக, பவதத்தர் .மரணத்தை தனது மாணவர்களுக்குகு முன்னறிவிக்கும் ஆயுர்வேத ஞானி கணநாதர் தரப்பு என்றும் இந்த நூலை வாசிக்கலாம். இந்த வகைமையில் இதுவே தமிழில் ஒரே நூல் என்று எண்ணுகிறேன்.

பின்குறிப்பு:

தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் நூலக தளம் உட்படுவதால் நூல் தேவைப்படும் வாசகர்கள் உடனடியாக தரவிறக்கி கொள்ளவும்

கடலூர் சீனு.

அன்புள்ள சீனு,

இந்த ‘தளம் மேம்படுத்தல்’ வேலைகளை கடந்த பத்துப்பதினைந்தாண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூகிள் புக்ஸ் இருபதாண்டுகளாக ஒரே சுட்டிகளுடன் இயங்குகிறது. இங்குள்ள தளங்கள் நாலைந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு சிறு தொழில்நுட்ப மேம்படுத்தலுக்காக மொத்தமாகவே மாற்றிவிடுகிறார்கள். அந்த இணைய நூலகத்துக்கு பல்லாயிரம் இணைப்புகள் அளிக்கப்பட்டிருக்கும். அத்தனையும் தொடர்பறுந்துவிடும். தமிழ் விக்கியை பாருங்கள் , 90 சத இணைப்புகள் பயனற்றவை.

மிகச்சிறிய தொழில்நுட்ப கவனமிருந்தால் அந்த இணைப்புகள், சுட்டிகள் அப்படியே இருக்க தளத்தை மேம்படுத்த முடியும். ஆனால் நம் கணிப்பொறி ஆசாமிகளில் வாசிப்பு, சிந்தனை ஆகியவற்றுடன் மிகமிகமிக மேலோட்டமான அறிமுகம் கொண்டவர்கள், உலகில் புத்தகம் என சிலவற்றை சிலர் படிக்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் லட்சத்தில் ஓரிருவர்.

என் தளத்தை அப்படி சற்று மேம்படுத்த வேண்டியிருந்தபோது இணைப்புகள் போய்விடுமா என்று கேட்டேன். நான் கேட்டதே அந்த கணிப்பொறி ஆளுக்கு புரியவில்லை. விழித்தார். விளக்கியபோது அதெல்லாம் போயிடும் என்றார். போடா என்றுவிட்டேன். நாம் ஒருவகை பண்பாட்டுத் தற்குறிகள். நமக்கு அடிப்படைகளைப் புரியவைக்க ஓரிரு தலைமுறை ஆகலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2022 11:34

சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்

நேற்று கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ கையில் கிடைத்தது. தொகுப்பைக் கையில் பெற்றவுடன் முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள முன்னுரையை வாசித்தேன். தொகுப்புக்குள் முழுவதும் எளிதாகச் சென்றுவிட அந்த சின்ன முன்னுரை ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்று தோன்றியது. பொதுவாகக் கவிதைத் தொகுப்பு ஒன்றைக் கையில் எடுத்தால் அதிலிருக்கும் அனைத்து கவிதைகளையும் முதல் வாசிப்பில் வாசிப்பது கிடையாது. ஒவ்வொரு பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் முதலில் சிறிய கவிதைகளை வாசிப்பேன். நீள் கவிதைகள் முதல் வாசிப்புக்கு அவ்வளவு எளிதாக எனக்குப் பழகிவிடுவதில்லை. அவை பெரும்பாலும் இரண்டாவது வாசிப்புக்குத் தான் நெருக்கமாக மனதிற்குள் வந்து நிற்கிறது. இது என் வாசிப்பு பழக்கம் மற்றவர்களுக்கு அவர்களின் வழி ஒன்று ஏதேனும் இருக்கலாம்.

இப்படித்தான் இந்த கவிதைத் தொகுப்பிலிருக்கும் சிறிய கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் நேரத்தில் தொகுப்பிலிருக்கும் அத்தனை கவிதைகளையும் ஓரளவுக்கு வாசித்து முடித்துவிட்டேன். கொஞ்சம் நேரம் புத்தகத்தின் வடிவமைப்பு மீது கவனம் போயிற்று இருந்தாலும் மனம் மட்டும் வாசித்த கவிதைகளை மீண்டும் என் நினைவிற்குக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தது. அதன்பிறகு தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகங்களின் தகவல்கள் அவற்றின் மீதான பார்வைகள் என்று மனம் சற்று மாறிப் போனது. அதன்பிறகு பணி முடிந்துவந்த களைப்பு சற்று உறக்கம் தேடியது. புத்தகத்தை அப்படியே பக்கத்தில் வைத்துவிட்டு உறங்கி விட்டேன். உடல் உறங்கிப் போனாலும் மனம் சற்று உறங்காமல் அலை பாய்வது சரியாக உணர முடிந்தது. இவை பெரும்பாலும் நிறைய நேரத்தில் நடக்கும் என்பதால் அப்படி இப்படி என்று அதை அமைதிப்படுத்திட முயற்சி செய்த போதுதான் தொகுப்பில் இரண்டு, மூன்று முறையேனும் வாசித்த ஒரு கவிதை மீண்டும் முழுவதும் மனதில் வந்து நின்றது.

அக்கவிதை

குழந்தை

குழந்தை
எப்போதும்
என் குழந்தை?

ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை

வளர்ந்த குழந்தையை
அணைக்கும் போதெல்லாம்
என் குழந்தை

விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை

ஏன் இந்தக் கவிதை மட்டும் சட்டென்று மனதில் வந்து நின்றது என்று தெரியவில்லை. உடனடியாக என் மகள்களைத் தேடினேன் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் ஒரு வித மகிழ்ச்சியை அளித்ததுடன் எழுந்து உட்கார்ந்து விட்டேன். மீண்டும் உறக்கம் கலைந்து தொகுப்பை முழுவதும் இன்னொரு முறை வாசித்தேன். தொகுப்பை முன்வைத்து இரண்டு விஷயங்கள் பேசலாம் ஒன்று தொகுப்பு முழுவதும் நிரம்பி இருக்கும் எளிமை இன்னொன்று என்றும் மகிழ்ச்சியை மட்டும் காண முற்படும் குழந்தைத்தன்மை பொதிந்திருக்கும் நிறைய கவிதைகள்.

அதனால் தான் ஆனந்த் குமாரால் ஒரு கவிதையில் இப்படிச் சொல்ல முடிகிறது.

மலையிறங்குகையில்
கொஞ்சம் பிடிச்சுக்கோ என
அதனிடம் சொல்ல முடிகிறது.”

இப்படி கவிதைகளின் இடையே ஆனந்த் குமார் தனக்குள் இன்னும் இருக்கும் குழந்தைத்தன்மையின் பார்வையை அல்லது அவரின் மகன்களின் பார்வையைக் கடன் வாங்கி சில எளிய கவிதைகளை அற்புதமான கவிதைகளாக மாற்றியுள்ளார்.

இன்னொரு கவிதை இதற்கு உதாரணம்

மலர் கொய்தல்

ஊதி அணைக்கக்
கூடாதென்றிருந்தாள் அன்னை
கடவுளர்முன்
ஒரு குழந்தையைப் போல
வீற்றிருக்கிறது தீபம்
எப்படி இதை எண்ணையில்
ஆழ்ந்துவது
பார்த்தால் சுடும்போல்
தெரியவில்லை
மலரைக் கொய்வதுபோல்
விரல்களால் பிடித்தேன்
சுடவில்லை
எரிகிறது
சொல்லென மாறாத
சுடர்

ஆமாம் சுடர் தான் தொகுப்பு முழுவதும் நிறைய கவிதைகள் இப்படிச் சுடரென எரிந்து நம் அகத்துக்குள் அவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.

படிமம், குறியீடுகள், இருத்தலியம், வார்த்தை விளையாட்டு என்றெல்லாம் எவ்விதமான பரீட்சார்த்த முயற்சிகளையும் ஆனந்த்குமார் இந்த தொகுப்பில் முயலவில்லை. அவர் தான் கண்ட புறக்காட்சிகளையும் அகக்காட்சிகளையும் நம்முன்னே ஒருவித பரவசத்துடன் அதே நேரத்தில் குழந்தைத்தன்மையுடன் தனது கவிதைகளாக மாற்றி நம் முன்வைக்கிறார். அதனால் தான் தொகுப்பு முழுவதும் அனைத்து கவிதைகளும் சுடராக நமக்குக் காட்சி தருகிறது. இச் சுடர் சில நேரங்களில் திரியைத் தாண்டி பற்றியெரிகிறது, சில நேரங்களில் காற்றில் அலை மோதுகிறது. ஆனால் எச் சுடரும் அணையாமல் இருக்கிறது அதனாலேயே வாசித்த அனைத்து சுடரும் எனக்கு மகிழ்ச்சியை இத் தொகுப்பில் அளித்தது.

சுடுகாட்டுக்கு எப்படி
வழி கேட்பதெனத் தயங்கி
ஒளிரும் மஞ்சள் பூக்களை
பின்தொடர்ந்தேன்.”

நானும் உங்களை இக்கவிதைகளின் வழியாகப் பின் தொடர்வேன் என்று நம்புகிறேன். உங்கள் கவிதைகளில் பொதிந்திருக்கும் எளிமையும், குழந்தைத்தன்மையை மட்டும் என்றும் விட்டு விடாதீர்கள் இனி எக்காலத்திலும் அவை நமக்கு அதிகம் தேவை.

நன்றி.

( கவிஞர் ஆனந்த் குமார் மற்றும் புத்தகத்தைச் சிறப்பாக வெளியிட்டுள்ள தன்னறம் மற்றும் சிவராஜ் அவர்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சியும் அன்பும் உரித்தாகட்டும்.)

 ‘கனலி’ விக்னேஷ்வரன்

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2022 11:32

கல்வி, கடிதம்

நமது மாணவர்கள்

நமது கல்வி

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்

அன்புள்ள ஜெ

சரியாக இரண்டு மாதம் முன்பு ஒரு வாசகி அரசுப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு உதவியாக சென்று அங்கே கட்டுக்கடங்காத மாணவர்களின் நடத்தை பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தார். நீங்கள் அதற்கு அந்த கட்டுக்கடங்காத மாணவர்களால் படித்து முன்னேற விரும்பும் ஏழை மாணவர்களின் வாழ்க்கை அழிந்துவிடக்கூடாது என்றும், அவர்களுக்கு மட்டும் தனியாகப் பாடம் எடுங்கள் என்றும் சொன்னீர்கள்.

அந்த கட்டுரையை இணையத்தில் எப்படியெல்லாம் திரித்தார்கள் என்று பார்த்தால் திகைப்பாக இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் ‘அத்தனைபேரும்’ ரவுடிகள் என நீங்கள் சொல்வதாக சொன்னார்கள். தனியார்பள்ளிக்காக பேசுவதாகச் சொன்னார்கள். அரசுப்பள்லி மாணவர்களை இழிவுசெய்துவிட்டார் என்றும், இவர்மேல் வழக்குதொடுக்கவேண்டும் என்றும், சிறையிலடைக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். எவ்வளவு கூச்சல், எவ்வளவு வெறி. நினைக்கவே பயமாக இருந்தது.

இன்றைக்கு விடீயோ மேல் வீடியோவாக வந்துகொண்டிருக்கிறது. அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் தாக்கப்படுகிறார்கள். வகுப்பில் குடிக்கிறார்கள். சாலையில் குடிக்கிறார்கள். வகுப்பறையில் நடனம் ஆடுகிறார்கள். இப்போது கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே இந்த மாணவர்கள் மேல் அரசு அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆணையிட்டுவிட்டார்.

என்ன ஆயிற்று என்றால் கொரோனாவுக்குப்பின் செல்போன் கட்டுப்பாடு போய்விட்டது. ஆகவே இவ்வளவு வீடியோ வந்துவிட்டன. இல்லாவிட்டால் இதெல்லாம் வெளியே பேசவே படாது. நீங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை இழிவுசெய்வதாக கொதித்த பல திமுக இணைய அல்லக்கைகள் அன்பில் மகேஷின் ஆணை வந்ததும் நல்ல முடிவு, கடுமையாக இருக்கவேண்டும் என்று கூசாமல் எழுதுகிறார்கள். இரண்டுமாதம் முன்புதானேடா வேறுமாதிரி சொன்னீர்கள் என்று கத்தினால் ‘அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா’ ஸ்டைலில் ஒரு சிரிப்பான்.

நான் ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் நடப்பவை உண்மை, முதல்முறையாக அரசு கவலை கொண்டிருக்கிறது, நடவடிக்கை எடுக்க ஆணையிட்டிருக்கிறது என்கிறார்கள். அரசு வரை இந்த பிரச்சினையை கொண்டுசென்றதில் உங்கள் இணையதளத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

இவர்கள் கொந்தளிப்பதற்குக் காரணம் அரசு இந்த இணையதளம் போல ஊடகங்களை கவனிக்கிறது என்பதுதான். அரசுக் கண்காணிப்பு பள்ளிகளுக்குமேல் வந்துவிட்டால் பல ஓட்டைகள் ஊழல்கள் வெளியே தெரியும் என நினைக்கும் ஆசிரியர்சங்க ஆட்கள்தான் கலவரம் அடைந்து முகநூலில் அறச்சீற்ற ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இவர்கள்தான் வீடுதேடிக் கல்வி திட்டத்தையும் இதேபோல எதிர்த்தவர்கள். அரசு அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அரசு மிக வெற்றிகரமாக அதை நடைமுறைப்படுத்தி நல்லபேரும் ஈட்டியிருக்கிறது. இவர்களில் ஒருசாராரின் பிரச்சினை இவர்களின் வண்டவாளங்கள் வெளித்தெரியும் என்பது. இவர்கள் யாருடைய பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படிப்பவர்கள் அல்ல. எந்த ஆசிரியரின் பிள்ளையும் அரசுப்பள்ளியில் படிப்பதில்லை. இன்னொரு சாரார் வசதியாக தங்கள் பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் படிக்கவைத்துவிட்டு முற்போக்குப் பொங்கலுக்காக முகநூலில் கும்மியடிக்கும் போலிகள்.

அர்விந்த்குமார்

அன்புள்ள அர்விந்த்குமார்,

ஓர் எழுத்தாளனின் வேலை என்பது இடித்துரைத்தல், சுட்டிகாட்டுதல். நயந்துரைத்தலும், கூட்டத்துடன் சேர்ந்து கூவுதலும் அல்ல. நான் சுட்டிக்காட்டியது கண்முன் உள்ள சமூகப்பிரச்சினை. அது உரிய கண்களுக்குச் சென்றதில் மகிழ்ச்சி.

ஆனால் ஓர் எல்லையில் இதெல்லாம் சலிப்பூட்டுகிறது. இனி இவ்வகையான எந்த விவாதத்திலும் ஈடுபடுவதாக இல்லை.

ஜெ 

***

அன்புள்ள ஜெ

டிவிட்டரில் இதைப் பார்த்தேன். உங்கள் கவனத்துக்காக

ஆர்.கே

அரசுப் பள்ளி மற்றும் மாணவர்கள் பற்றிய இவ்விரு கட்டுரைகளுக்காக ஜெ சில மாதங்களுக்கு முன் கடும் வசைகளைச் சந்தித்தார்

https://jeyamohan.in/159344/, https://jeyamohan.in/159912/ அச்சமயத்தில் யாரெல்லாம் அவரைத் திட்டினார்களோ அவர்களேதான் இப்போது அரசுப் பள்ளி மாணவர்களைத் திட்டுகிறார்கள்.

*

அன்புள்ள ஆர்கே

ஆனால் சமூகவலைத்தளங்களுக்கு கடந்தகாலம் என்பதே இல்லை. ஆகவே எதற்கும் எவரும் விளக்கம் அளிக்கவேண்டியதில்லை.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2022 11:31

காயாம்பூ

அன்பு ஜெ,

வணக்கம். நலம் விழைகிறேன்.

டிப் டிப் டிப் கவிதைத் தொகுப்பை பற்றிய என்னுடைய வாசிப்பனுவ பதிவை உங்கள் தளத்தில் பார்ப்பது இன்றைய நாளை இனிமையாக்குகிறது. இந்தப்பதிவை உங்கள் வரை கொண்டுவந்து சேர்த்த  உள்ளத்திற்கு அன்பும் நன்றியும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களிடம் ஒன்றை பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் ‘காயாம்பூ’ நாவலை அண்மையில் வாசித்தேன். முதல் சில பக்கங்களில் மூடி வைத்து விட்டேன். வாசிக்கவென்று எடுத்துவிட்ட புத்தகங்களை முட்டி மோதி திறந்து விடும் நமக்கு இதில் என்ன சிக்கல்? என்று யோசித்தேன். இது குழந்தையின்மை பற்றிய நாவல். ‘நாம் தான் பேச்சுலர் ஆச்சே …நமக்கெதுக்கு இந்த வம்பு’ என்ற நினைப்பு. [பீஷ்மர் போன்ற பிரம்மச்சாரிகள் பெண்கள் என்றால் எப்படி குறிப்பிடுவது என்று தெரியவில்லை]

ஆனால் உண்மை என்ன என்றால்?  மேல்நிலை வகுப்புகளிலும்,கல்லூரியிலும் உயிர்அறிவியல் எடுத்து படித்ததனால் அப்படியொன்றும் உடலியல் பற்றிய அறிமுகமே இல்லாத ஆள் இல்லை. பின்பு மீண்டும் எடுத்து வாசித்தேன். நூறுபக்கங்களுக்கு மேல் நிதானமாக வாசிக்கமுடிந்தது. அண்மையில் மனதை தொந்தரவு செய்த நாவல். புறமாக குழந்தையின்மைக்கான மருத்துவமுறைகள் பற்றியும், அகத்தில் அது ஏற்படுத்தும் தொந்தரவுகள் மற்றும் மருந்துகள் ஏற்படுத்தும் மனநிலை தடுமாற்றங்கள் என நாவல் குழந்தையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகளை,சமூகத்தின் நிர்பந்தங்களை அல்லது தன் மனமே தனக்கு இடும் நிர்பந்தங்களை நாவல் நன்றாகவே கையாள்வதாகவே நினைக்கிறேன். இது இவரின் முதல் நாவல். நாவல் வாசிப்பில் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டி வாசிக்க வேண்டிய நாவல். பேசுபொருளை அணுகியிருக்கும் விதம் சார்ந்து இது தான் தமிழில் முதல் நாவல் என்று நினைக்கிறேன். Invitro fertilization,Intra unine insemination,Embiro implant,Azoospermia,Hormnal imbalance,HSG test போன்ற விஷயங்களை பேசிய இன்னொருநாவல் உண்டா என்று தெரியவில்லை.

அதனால் எனக்கிருந்த Hesitation ன்களை தாண்டி இந்த நாவலை மட்டும் மையப்படுத்தி ஒரு நேர்காணல் செய்தேன். அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

நேர்காணலிற்கான இணைப்பு:

http://www.vasagasalai.com/lavanya-sundararajan-interview-kaayampoo-novel/

கமலதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2022 11:30

April 27, 2022

ஆழம் நிறைவது

அன்பு ஜெ,

ஆழத்தைப் பற்றிய கொற்றவை நாவலின் வரிகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன்…

“ஆழத்தின் புலன்வடிவச் சித்திரம் நீர். தண்மையின் அலை, சுவையின்மையின் நீலம். பெருவெளியின் அகமே ஆழம். நீர்வடிவில் ஆழம் உடலில் தாவரங்களில் மண்ணில் நிரம்பியிருந்தது. இருண்ட ஊற்றுக்களுக்குள் அது கண் மின்னப் புன்னகை புரிந்தது. உடலுக்குள் இருந்து எப்போதும் ஆழம் ஆழம் என ஏதோ ஒன்று தவிப்பதைக் கண்டார்கள் சான்றோர். தன் அகம் என்று அதைக் கண்டு அதற்கு தாகம் என்று சொல் கொண்டனர். நீரை உண்டு உண்டு அது தன்னை நிரப்பிக் கொண்டது. சில தருணங்களில் வெறுமை விரிந்த வானையே மொண்டு மொண்டு பருகித் தாகம் தீர்த்தது. ஒருபோதும் நிரம்பாமலிருந்தது. நிரம்பாமை என்பதே ஆழம்”

நிறைவின்மை ஆழத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கிறேன். எதைக் கண்டெல்லாம் என் அகம் கொந்தளிக்கிறதோ அவையெல்லாம் ஆழமாகத்தான் இருக்கிறது. கடலும், வானும் எப்போதும் எனக்கு பிரமிப்பையே அளிக்கிறது. இரவின் கடலும், வானும் மேலும் மேலும் என்னை தீவிரமாக்கிவிடுகிறது. எனக்கு அதனிடமும் அதற்கு என்னிடமும் எப்போதும் சொல்ல இருந்து கொண்டே இருப்பது போல உளமயக்கு என்னிடம் உண்டு. “அடியும் முடியும் அறிய முடியார்” என்று பாரதி பாடும் போது ஒரு சிலிர்ப்பு வருகிறது. கடவுள் என்று நாம் பெயர் வைத்திருப்பது கூட அந்த அறியமுடியாமை தான் என்று நினைக்கிறேன். அறியமுடியாமை பற்றிய போதம் இல்லாதவர்களே அதை மறுக்கமுடியும் என்று நினைக்கிறேன்.

விரிந்தவை மட்டுமல்ல சிறியவைகளின் ஆழமும் திகைக்க வைக்கிறது. நம்மால் காணமுடியாதவைகளின் ஆழம் அது. எங்கும் ஆழமே நிறைந்திருப்பதாய் எண்ணங்கள் அழுத்துகிறது. ஒளியின் ஆழம், இருளின் ஆழம், நீரின் ஆழம், கடலின் ஆழம், காட்டின் ஆழம், தீயின் ஆழம், கருங்காட்டின் ஆழம், புல்லின் ஆழம், மண்ணின் ஆழம், பெருவெளியின் ஆழம் என எங்கும் அறியமுடியாமை ஒன்று இருப்பதாய் நீட்டிக் கொண்டிருந்தேன். எங்கும் அடியும் முடியுமற்றவையே என்னைச் சூழ்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.

பருவடிவற்ற அகத்தின் ஆழத்தையும், உணர்வுகளின் ஆழத்தையும் கூட நினைத்துக் கொண்டிருந்தேன். எத்தனை அன்பு, எத்தனை காதல், எத்தனை காமம், எத்தனை மகிழ்வு, எத்தனை புகழ், எத்தனை கருணை, எத்தனை செல்வம் கொடுக்கப்பட்டாலும் நிறைவடையாது மனம் பரிதவித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் மேலும் என நாம் நிறைவின்மையைக் கை கொள்வது அதன் ஆழத்தைக் காண்பதற்குத்தானா? மொண்டு மொண்டு பருகி நாம் அணைத்துக் கொள்ள முற்படுவது தீராத தாகத்தைத் தானா? ஒன்றின் நிறைவின்மையை கண்டவர்கள் அல்லது புரிந்து கொள்பவர்கள் மட்டுமே இதன் தேடலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது ஜெ.

இந்நேரத்தில் நான் வெண்முரசின் மாலினியையும், பார்த்தனையும் நினைத்துக் கொள்கிறேன் ஜெ.

மாலினி எடுக்கும் முடிவு  ஒருவித நிறைவின்மையின் ஆழத்தை முற்றுணர்தல் தான். சென்று கொண்டே இருக்கும் பார்த்தன் அடைவதும் அதே நிறைவின்மையின் ஆழம் தானே.

அப்படியானால் முழுமை என்ற ஒன்று இல்லையா ஜெ. முழுமை என்பதே நிறவின்மையின் ஆழம் தானா? அதனால் தான் “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்றீர்களா.

மேலோட்டமான உறவு, நட்பு, காதல், வாழ்க்கை, காமம், பேச்சு என மேலோட்டமாகவே வாழ்ந்து மடியும் புற்றீசல் வாழ்க்கை வாழும் மனிதர்களின் பொருள் தான் என்ன? சில சமயம் இந்த மேலோட்டமான வாழ்க்கை வாழும் மனிதர்கள் கூட அடைவது நிறைவின்மை தானே என்று தோன்றுகிறது. கடலைப் பார்த்து பிரமித்து அதன் கரைகளில் நின்று ஆழம்! என்று சொல்லிவிட்டு நகர்ந்து பொருள் வாழ்க்கையில் வாழ்ந்து மடிபவர்களுக்கும், கடலுக்குள் இறங்கி ஆழம் காண முற்பட்டு அடையமுடியாது நிறைவின்மையை எய்துபவர்களுக்கும் வித்தியாசம் தான் என்ன? அனுபவங்கள் வேறு வேறு ஆனாலும் அதன் பொருள் தான் என்ன? வெறுமே அதில் கிடைக்கும் பயணத்தின் பாதை மட்டும் தானா?

இந்தப் பயணமெல்லாம்

“…மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் “

என்று சொல்லிச் செல்வதற்குத்தானா? ”யுகங்களுக்கு ஒருமுறை விண்ணோக்கி உதிரும் கனி”  ஆழத்தை அளந்து நிறைவின்மையின் உச்சிப் புள்ளியை அடைவதன் பொருள் தான் என்ன?

மேலோட்டமாகவே எல்லாவற்றிலும் வாழ்ந்து கிடைக்கும் சலிப்பின் நிறைவின்மைக்கும், மாலினி போன்று ஒன்றில் கரைந்து நிறைவை அடைந்து அதில் நிறைவினமையை உணர்ந்து ஆன்று அடங்குவதற்கும், செயல் செயல் என மனம் அலைக்கழிந்து கொண்டே கேள்விகளோடும் நிறைவின்மை நிறைவின்மை என கடந்து முன் செல்லும் பார்த்தனின் நிறைவின்மைக்கும், ஒட்டுமொத்த இந்த ஆடலின் நிறைவின்மையை முற்றுணர்ந்து, அறியமுடியாமைகளையும் கடந்து ஆணைகளை மட்டுமே பிறப்பித்து இவ்வுலகத்தில் செயலை புன்னகையோடு நிகழ்த்திச் செல்லும் இளைய யாதவனின் நிறைவின்மைக்கும் வேறுபாடு தான் என்ன?எந்த நிறைவின்மையை ஒருவன் தன் வாழ் நாளில் கைக்கொள்ளப்போகிறான் என்பது எதைப் பொறுத்தது ஜெ. ”ஊழ்” மட்டும் தானா?

பல்வேறு கிளை பரப்பி பயணம் செய்து அடைய வேண்டியது நிறைவின்மை தான் எனும் பட்சத்தில் சலிப்பின் நிறைவின்மைக்கும், ஆழத்தைக் கண்டடைய முற்பட்டு கிடைக்கும் நிறைவின்மைக்கும் வித்தியாசம் என்ன ஜெ? பகிர்ந்து கொள்ள இயலுமா?

பிரேமையுடன்

-ரம்யா

அன்புள்ள ரம்யா

ஆழம் என்பது என்ன என்பது ஒரு அடிப்படையான கேள்வி. அது ஒரு சொல். ஒரு படிமம் வெவ்வேறு வகைகளில் அதைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

தத்துவ விவாதங்களில் படிமங்களுக்கும் உருவகங்களுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அவை இல்லாமல் தத்துவ விவாதமே இயல்வதல்ல. ஆனால் அவற்றின் மிகப்பெரிய இடர் என்னவென்றால், அவை நம்மை நம் போக்கில் கற்பனை செய்யவைக்கின்றன. நாமே நமக்கான அர்த்தங்களை அளித்துக்கொள்ள வைக்கின்றன. விளைவாக தத்துவரீதியான அர்த்தங்களை நாம் மிக எளிதாக நமக்காக வளைக்க தொடங்கிவிடுகிறோம். ஒரே புள்ளி சார்ந்து விவாதிக்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் கொள்வது இலக்கியத்துக்கு நன்று. தத்துவத்தில் அது பிழை.

ஆகவே தத்துவத்தில் ஒரு படிமத்தை பயன்படுத்தும்போது அதை அந்த விவாதக்களத்தில் அறுதியாக வரையறை செய்துகொள்ளவேண்டும். அதன்பின் அவ்வரையறையை ஒட்டி நின்றே விவாதிக்கவேண்டும். நம்முடைய எல்லா விவாதங்களிலும் ஒரு சொல்லை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துவதே உகந்தநிலை- அதற்காக கூடுமானவரை முயலவேண்டும்.

ஆழம் என்னும் சொல்லை நாம் அறியப்பட்ட மேல்தளத்துக்கு அடியில் இருக்கும் தளம் என்னும் பொருளில் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். அந்த அறியப்படாத தளம் அப்படி ஒன்று இருப்பதை நமக்கு உணர்த்துகிறது, ஆனால் அது எத்தகையது என நமக்குத் தெரிவதில்லை. அறியப்படாதவை எல்லாமே முடிவில்லாதவை. ஆகவே ஆழம் என்பது முடிவிலியாகத் தோன்றுகிறது. அறியப்படாதது அறிவதற்கான முடிவிலா வாய்ப்பு. ஆகவே தீராத ஈர்ப்புள்ளதாக உள்ளது.

ஆழம் என்பதை நான் இவ்வாறு வகுத்துக் கொள்கிறேன். நாம் அறிந்தவற்றுக்கு அடியில், நாம் முழுக்க அறிந்துவிட முடியாதபடி விரிந்து கிடக்கும் ஒன்று. நாம் அறிபவற்றைக் கொண்டு அதை ஊகித்து தொகுத்து ஓர் உருவகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதையே ஆழம் என்று சொல்கிறோம்

எப்போதும் நாம் ஆழம் எனச் சொல்வது நம்முடைய இந்த உருவகத்தைத்தானே ஒழிய, அங்கே உண்மையாகவே ’இருக்கும்’ ஒன்றை அல்ல. அங்கு என்ன இருக்கிறது, எவ்வண்ணம் இருக்கிறது என நமக்குத் தெரியாது. நாம் சொல்வது நம் அறிதலைத்தான்.

இருவகை ஆழங்களை நாம் உணர்கிறோம். ஒன்று, அகத்தே நாம் உணரும் ஆழம். இன்னொன்று வெளியே உணரும் இயற்கையின், பிரபஞ்சத்தின் ஆழம். நம் ஆழத்தால் இயற்கையின் ஆழத்தை உணர்கிறோம். இயற்கையில் நம் ஆழத்தை கண்டுகொள்கிறோம்.

நாம் நம்முள் உணரும் ஆழம் என்பது என்ன என்பதை நாமே புரிந்துகொண்டு, வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதன்பின்னரே ஆழம் என்னும் சொல்லை நாம் நம்மைப்பற்றிய விவாதங்களில் கையாள முடியும்.

பல ஆயிரமாண்டுகளாக மானுடர் அதை உணர்ந்து, ஆராய்ந்து, வகுத்துள்ளனர். அந்த அறிதல்களை முழுக்கவே விட்டுவிட்டு ‘புதியதாகச்’ சிந்திக்க முயல்வதும், அந்த தொடர்ச்சியான அறிதல்களை ‘பழைய சிந்தனைகள்’ என்றோ ‘மதச் சிந்தனைகள்’ என்றோ உதறிவிடுவதும் இன்று நிகழ்கிறது. குறிப்பாக மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், தத்துவச் சொற்பொழிவுகளிலும் ’புதியதாக’ எதையாவது சொல்லியாகவேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது.

அவ்வாறு சொல்லப்படும் எவையும் புதியவை அல்ல. அறிவில் முன்னறிவு (சுருதி) என ஒன்று உண்டு. a priori இல்லாமல் சிந்திக்கவே மானுட உள்ளத்தால் முடியாது. ஆகவே நான் முன்னர் சிந்தித்தவர்களின் தொடர்ச்சியாகவே மேலே பேசுகிறேன்.

நாம் நம்முள் நாமறியாதவற்றுக்காக கூர்ந்து பார்க்கும்போது காண்பது விழிப்புநிலையை. (ஜாக்ரத்). விழிப்புநிலை விழிப்புநிலையை கூர்ந்து பார்க்கிறது. அந்த ஆழத்தில் நாம் முதலில் காண்பது காமம், குரோதம், மோகம் என்னும் மூன்றையே. விழைவு, அதை அடையும்பொருட்டான வஞ்சம், மேலும் என எழும் அடங்காமை என மூன்று.பெரும்பாலான நவீனத்துவப் படைப்புகளில் ‘ஆழம்’ என வெளிப்படுவது இவையே. நம் சினிமாக்கள், கதைகள் எல்லாமே காமகுரோதமோகங்கள் நிறைந்த ஆழத்தை காட்டி நின்றுவிடுவனதான்.

அப்பாலும் இன்னொரு ஆழம் உள்ளது. அது கனவுநிலை ஆழம். அது மயங்குநிலை.விழிப்புநிலையில் நாம் நம்மை உணரும் ஒரு தன்னிலை உள்ளது. (subjectivity) அது சற்று மயங்கின நிலையே ஸ்வப்னம் எனப்படுகிறது.எப்போதுமே தூக்கி வைத்திருக்கும் நான் என்னும் தன்னிலையை அப்போது கொஞ்சம் இறக்கி வைத்துவிடுவதனால்தான் அந்நிலை நமக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லா தீவிர அனுபவங்களும் தானழிந்த நிலை கொண்டவை. எல்லா தானழிந்த நிலைகளும் தீவிரமானவை. நாம் அதனால்தான் கனவுகளை கொண்டாடுகிறோம்.

அந்த மயக்கநிலையில் நாம் நம்மை வேறொருவராக உணர்கிறோம். அது காமகுரோதமோகங்களுக்கும் அடியிலுள்ள ஆழ்நிலை. அதை உன்னதம் (sublime) என்னும் சொல்லால் நவீன இலக்கிய விமர்சனம் சொல்கிறது.அந்நிலையில் நாம் நம் அடையாளமென அமைந்துள்ள எல்லைகளை கலைத்துக்கொண்டு பிறருடன்,பிறவற்றுடன் கரைகிறோம்.

அதற்கும் அப்பாலுள்ளது முற்றிலும் தன்னிலையே அற்ற நிலை. ஒரு நீர்த்துளி கடலுடன் கலப்பதுபோல நாம் இங்குள்ள எல்லாவற்றிலும் கலந்துள்ள நிலை. துரிய நிலை.வேதாந்த மரபைப் பொறுத்தவரை அது ‘தியானம் செய்து’ சென்றடையவேண்டிய ஒரு நிலை அல்ல.அது எல்லாருக்கும் சற்றேனும் அனுபவப்பட்டிருக்கும். அது எவ்வண்ணம் அனுபவப்பட்டது என நிதானமாக கூர்ந்து கவனித்துக்கொள்வதே தியானம். அன்றாடத்திலும் அது கொஞ்சம் நிகழுமென்றால்தான் அது விடுதலை.

நிறைவற்றிருக்கிறது, அலைகொள்கிறது என நீங்கள் உணரும் ஆழம் எந்த நிலை என்பதே கேள்வி. பெரும்பாலும் அது முதல்நிலை.தன்னிலை ஓங்கிய களம். ‘நான் நிறைவற்றிருக்கிறேன்’ என்னும் சொற்றொடரில் ‘நான்’ என்பதே முக்கியமான சொல். நிறைவின்மை அதில்தான். காமகுரோதமோகங்கள் நிறைவின்மையை அளிக்கின்றன. விழைவும், அதன் விளைவான ஏக்கமும், வென்றால் அதன் ச்லிப்பும், தோற்றால் அதன் விளைவான சோர்வும், மீண்டும் விழைவும் என ஓயாத அலைக்கழிப்பு.

அந்த ஆழத்துக்கு அடியில் மயங்குநிலையின் ஆழம் அவ்வண்ணம் நிறைவற்றிருக்கிறதா என்ன? ஒரு நல்ல கனவில் நீங்கள் நிறைவற்றிருக்கிறீர்களா? அங்கே நீங்கள் நிறைந்து ததும்பவில்லையா? இயற்கையின் பெருந்தரிசனம் அமைந்தால் உங்களுக்குள் முழுநிறைவு ஒருகணமேனும் அமையவில்லையா?

அப்படியென்றால் ஆழம் என உணர்வதன் மேல்நிலைதான் நிறைவின்மை கொள்கிறது. ஆழத்தில் செல்லச்செல்ல நிறைவு இயல்வதாகிறது. அது யோகியருக்கும் பரமஹம்சர்களுக்கும் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் சாத்தியமான நிறைவுதான். அதை கொஞ்சமேனும் உணராத எவரும் இருக்க மாட்டார்கள். கலைகளில், இலக்கியத்தில், இயற்கையில், ஊழ்கத்தில்.வலியில் உடல் துடிக்கும் நோயாளி கூட கனவில் சட்டென்று விடுதலையை நிறைவை உணர்வது அதனால்தான்.

அந்த ஆழத்தை நாம் அடையும்தோறும் வெளியே நாமறியும் இயற்கையும் ஒத்திசைவும் அழகும் கொள்கிறது. அதன் ஆழம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. அது நிறைவும் முழுமையும் கொண்டதாக நம்மைச் சூழ்கிறது. அகமும் புறமும் ஒன்றையொன்று சரியாக நிரப்பிக்கொள்ளும்போது, ஒன்றில் இன்னொன்று வெளிப்படும்போது நிறைவு அமைகிறது.

அதற்கு எங்கும் செல்லவேண்டியதில்லை. எதையும் செய்யவேண்டும் என்பதுமில்லை. நம் நாக்கு நல்ல சுவையை தேடித்தேடி உண்கிறது. அதைபோல உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பவை என்னென்ன என்று தேடித்தேடி கூடுமானவரை அவற்றைச் செய்துகொண்டே இருந்தால் மட்டுமே போதும். காமகுரோதமோகங்களின் நிறைவு உண்மையான மகிழ்ச்சி அல்ல. அதற்கப்பாலுள்ள கனவுநிலையும், மெய்நிலையும் மகிழ்வடைவதே மெய்யான மகிழ்ச்சி. அதை உணர்ந்துகொண்டு, அம்மகிழ்ச்சியை அளிப்பவற்றை செய்தாலே போதும்.

அந்த உண்மையான மகிழ்ச்சி அளிப்பவற்றைச் செய்ய தடையாக இருப்பவை நம் ஆசைகள், நம் போட்டிகள், நம் வஞ்சங்கள். அவற்றை தவிர்த்தாலே போதும். சுருக்கமாகச் சொன்னால், இன்னொருவரை கருத்தில் கொள்ளமால் முழுக்கமுழுக்க நமக்கே என நாம் செய்துகொள்பவை மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை அளிப்பவை.

அச்செயல் இரண்டு வகையில் ஆற்றப்படவேண்டியது.ஒன்று அன்றாடத்தை நிறைக்கும் செயல்பாடு. நம் அன்றாடம் சிதறிக்கொண்டே இருக்கிறது. சூழல் நம்மை நான்கு திசையிலும் இழுத்துச் சிதறடிக்கிறது. நாமே நம்மை எட்டுதிசைக்கும் வீசியடிக்கிறோம். அதிலிருந்து தப்ப சிறந்த வழி செயல். நம்மை நாமே குவித்துக்கொள்ளும் செயல்.

berthe-morisot-young-woman-knitting-1883

டால்ஸ்டாய் ஒரு கட்டுரையில் பழங்காலப் பெண்கள் நூல்பின்னல் வேலை வழியாக அடைந்த ஆன்மிக நிலை பற்றிச் சொல்கிறார். அது அவர்களின் அன்றாடத்தை ஒருங்குகுவியச் செய்கிறது. கூர்ந்து, தன் அழகுணர்வையும் கைத்திறனையும் இணைத்து, அவர்கள் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மூளையை, உள்ளத்தை, உடலை ஒத்திசையச் செய்து ஆற்றும் எளிய செயல் ஓர் அன்றாடயோகம்.

எனக்கு அத்தகைய செயல் என்பது எழுதுவது. ஒரு தத்துவநூலை எடுத்து என் மொழியில் சுருக்கி எழுதுவேன். ஆயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ்ச்சொற்களை எழுதி அடுக்கி வைப்பேன். கம்பராமாயணத்திற்கு என் மொழியில் நாலைந்து விளக்கங்கள் எழுதி வைப்பேன். நாலைந்து மணிநேரம்கூட அதைச் செய்ய என்னால் முடியும். என் அகம் ஒருங்கிணைந்து அமைதியை அடையும். அப்படி உங்களுக்கு என்ன என்பதை நீங்கள் கண்டடையவேண்டும். எதுவானாலும் சரி. கூடை முடைவதனாலும் கட்டுரை எழுதுவதனாலும்.

அடுத்த செயல் என்பது உங்கள் ஆழம்நோக்கிச் செல்லும் தீவிரச்செயல். அதை அந்தர்யோகம் எனலாம். அது எச்செயலாக இருப்பினும் ஊழ்கம் என அதைச் சொல்லலாம். ஆழம்நோக்கிச் செல்லும் எல்லாமே ஊழ்கம்தான். ஜாக்ரத்தை கடந்து, கனவுகளை அடைந்து, துரியநிலையை தீண்டுவதே இலக்கு. இசை ஊழ்கமாகலாம். கலை ஊழ்கமாகலாம். பயணத்தையும் சேவையையும் ஊழ்கமென கொண்டவர்கள் உண்டு. எனக்கு அது புனைவும் சிந்தனையும். மொழியே என் ஊழ்கத்தின் கருவி.

அதனூடாக நான் அந்த முழுமையை சென்று தொட்டு மீள்கிறேன். அப்போது நான் அடையும் அகநிறைவுதான் நான் முழுமையை தொட்டிருக்கிறேன் என்பதற்கான சான்று. அவ்வளவுதான் நான் செய்யக்கூடுவது, செய்யவேண்டியது. அது உங்களுக்கு என்ன என்று கண்டுபிடியுங்கள். புனைவு, கலை, செயல், ஊழ்கம் – எதுவானாலும். அதில் இன்னொருவருக்கு இடமில்லை. நீங்களே அறிந்து நீங்களே உங்களுக்குச் சான்றளித்துக்கொள்ளும் ஒரு தளம் அது.

அந்த முழுமையை தொட்டால் நாம் அறிவது ஒன்றுண்டு, அந்நிலையில் ‘இதெல்லாம் எதற்கு?’ ’இதற்கெல்லாம் என்ன பொருள்?’  ‘என் இருப்பின் சாராம்சம் என்ன?’ என்பதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பொருளே இல்லை. அந்தக்கேள்விகளுக்கு பதில் கிடைக்காது, அக்கேள்விகள் உருவான களம் பொருளற்றதாகி மறைந்துவிடும். நாம் இங்கு வந்தோம், நமக்குரிய ஒன்றை செய்தோம், இப்பெரும்பெருக்கில் ஒரு துளியைச் சேர்த்தோம், நம் பணி முடித்து மீள்வோம், அவ்வளவுதான் என உணர்வோம். அதுவே நிறைவு, அதுவே முழுமை.

ஒரு தேனீயின் வாழ்க்கை சராசரியாக ஒருமாத காலம். ஒருநாளில் சாதாரணமாக ஐந்து சொட்டு தேன். நூற்றைம்பது சொட்டு தேனை கூடுசேர்ப்பதே அதன் பணி. அதன் வாழ்க்கையின் ’மதிப்பு’ என்பது ஒரு தேக்கரண்டி தேன். இப்பிறவியில் அதற்கப்பால் அது செய்வதற்கொன்றும் இல்லை. அதன் விளைவென்ன என அறியும் வழியும் அதற்கு இல்லை. அதை செய்துவிட்டு அது செல்வதுபோல நாமும் என இயல்பாகவும் அறுதியாகவும் உணர்வதொன்றே நிறைவுநிலை. ரம்யா இங்கு வந்து, இங்கு ஆற்றக்கூடியதொன்றை கண்டு, அதை ஆற்றிவிட்டீர்கள் என்றால் அந்நிறைவு கைகூடிவிடும். அதுவே ஆழத்தின் நிறைவு.

ஒருபோதும் சென்றடையவில்லை என்னும் நிறைவின்மையை அடைக என்னும் சொல்லின் பொருள் இங்கே எதிலும் நிறைவடையாதிருக்கவேண்டும் என்பதே. விழைவின் நிறைவு, ஆணவநிறைவு நிறைவல்ல என்பதே. நிறைவு தானே அமையும் வரை நிறைவுகொள்ளாதிருக்கவேண்டும் என்பதே. ஊரில் சில புதுப்பணக்காரர்கள் செல்வத்தின் நிறைவில் ததும்பிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஒரு தன்னம்பிக்கைச் சிரிப்பு, தன்னை முன்னிறுத்தும் ஒரு தோரணை அவர்களிடமிருக்கும். ஆபாசமான ஒரு நிறைவு அது. எந்த உலகியல் விஷயத்தில் நிறைவடைந்தாலும் அந்த ஆபாசத்தன்மையே நம்மிடம் எஞ்சும்.

பார்த்தனின் நிறைவின்மை கீதையை அறிந்தது முதல் கீதையை உணர்ந்தது வரைக்குமான இடைவெளியில் மெல்லமெல்ல இல்லாமலாகிறது. தன் செயல் என்பதுஓர் எறும்பின் ஈயின் செயல் அளவுக்கே என்று உணருமிடத்தில் அவன் நிறைவு உள்ளது. அதை முன்னரே உணர்ந்த புன்னகை இளைய யாதவனிடம் உள்ளது.

நான் நூல்களில் இருந்து எழுதவில்லை.வெண்முரசையும் சரி இக்கட்டுரையையும் சரி என் அனுபவம், என் அறிதல், என் தெளிவு ஆகியவற்றிலிருந்தே எழுதுகிறேன். ’ஆகவே செயல்புரிக. செயலின் விளைவென்ன என்று கணிக்க நம்மால் உண்மையில் இயலாதென்று உணர்க. செயலே செயலுக்கு அப்பாற்பட்ட நிறைவொன்றை நோக்கிச் செல்லும் வழி’ என்றே சொல்வேன் . செயல் வழியாக மூழ்கிச் செல்லச்செல்ல நம்முள் எஞ்சாது, குறையாது நிறைவுகொண்டு நின்றிருக்கும் ஆழமொன்றை உணரமுடியும். அதுவே வெளியிலுமென்று அறியமுடியும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2022 11:35

பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

ஆனந்த் குமார் இணையப்பக்கம் https://anandhkumarpoems.wordpress.com/

அம்மாவின் அம்மாவை பார்க்க எனது மகனை முதல் முறையாக கூட்டி போயிருந்தேன், சம்பிரதாயமாக அவ்வாவின் காலில் கவினை விழவைத்து  ஆசி எல்லாம் வாங்கியாயிற்று. கோவிட் காலத்தில் நேரடியாக கவினை ஊருக்கு அழைத்துவர முடியவில்லை, அவ்வாவும்  எண்பத்தைந்தை கடந்திருந்தாள். அம்மா எனது செல்போனில் உள்ள  அவனது போட்டோக்களை அவ்வாவுக்கு வரிசையாக காட்ட சொன்னாள்,  அவன் தவழும் குழந்தையாக கண்களை உருட்டும் போட்டோக்களில் ஆழ்ந்த கிழவி அந்தப்புகைப்படத்தை கொஞ்ச ஆரம்பித்தாள், முழியைப்பாரு, உம், கண்ண நொண்டிப்புடுவேன் என்று சிரித்துக்கொண்டே அதிலிருந்த குழந்தையை நிஜக்குழந்தையாகவே பாவித்துக் கொண்டாள்,  நேரில் ஓடி விளையாடும் கவினை அப்போது அவள் பொருட்படுத்தவும் இல்லை.

கவிஞர் ஆனந்தகுமார்  இரு குழந்தைகளுக்கு அப்பாவும் கூட என நினைக்கிறேன். தனது பேனாவை அவர் எடுக்கும் தோறும் பிறந்த குழந்தையை இரு கைகளிலும் அதிகவனத்துடன் ஏந்திக் கொள்ளும் தந்தை ஒருவர்  எழுந்துவருகிறார். வளர்ந்து பெரியவர்களாகி விடப்போகும்  குழந்தைகளை, அவர்கள் உதறிவிடப்போகும் குழந்தைமையை எப்போதும் தன்கைகளில் வைத்திருக்கத் துடிக்கும் ஒரு தகப்பன்.

அவரது குழந்தை என்னும் கவிதை நண்பர்களுக்கிடையே அதிகம் பகிரப்பட்டது.

குழந்தை
 எப்போது
 என் குழந்தை?

ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை  

வளர்ந்த குழந்தையை
அணைக்கும்போதெல்லாம்
என் குழந்தை

விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை”

அதே உணர்வு, கையில் தன் குழந்தைக்கான பரிசுடன் தாமதமாக வீடு திரும்பும் ஒருவன் நினைக்கும் கவிதையொன்றில்  வேறு நிறத்தில் எழுந்து வருகிறது. அவன் மானசீகமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை நிஜத்தில் வேறொன்றாகியிருக்கும்  கவலை ..

“சரியாய் சொன்னால்
கிடைக்கும் பரிசு
இதோ காத்திருக்கிறது
என் மடியில்
வீடு போய் சேர்க்கையில்
உறங்கும் குழந்தை
கொஞ்சம் வளர்ந்திருப்பான்.”

நோஞ்சான் குழந்தையை தன் பெருங்கைகளால் அள்ளிக்கொள்ளும் கவிதை ஒன்று

“….இடையில்,
யாரும் அறியாமல்
தன் சுவாரஸ்யத்தை
குறைத்துக்கொண்ட
விளையாட்டு
குழந்தையை மெல்ல
சேர்த்துக்கொண்டது”

இவ்வுணர்விலிருந்து கவிதையாக மேலெழும் கவிதை ஒன்றுண்டு, தூளியில் ஆடும் குழந்தை, நதியில் ஆடும் கூழாங்கல்லாக மாறிவிடும் இனிமை.. இந்தப்புள்ளியிலிருந்து நவீன கவிமனத்தின் பெருகும் கவிதைகளாக உயரம், பரிசு முதலிய கவிதைகளும் சேர்கிறது.

இங்கிருந்து ஆனந்தின் கவிதைகள் தன்னைச் சூழ்ந்திருந்த அனைத்துக்கும் கொஞ்சம் குழந்தைமையை அள்ளித் தெளிக்கின்றன, சுவரைத்தீண்டும் தொட்டிச்செடியையும், பக்கத்துவீடு செல்லும் பலாச்சுளையும் கூட குழந்தையாக்கி பார்க்கின்றன. கட்டாயம் ஆண் ஒருவன்  குழந்தையை தீண்டுகையில் கட்டவிழும் இறுக்கங்கள் அற்புதமான ஒன்று,அவனது நுண்ணுணர்வை எழுப்பும் தருணமும் கூட.
அனாயசமாக குழந்தையை கையாளும் பெண்களுக்கு இது உணர்வதற்கரிது.  தனது பிரதியை அதன் சிறு சிறு அசைவுகளை வெறிகொண்டு கொண்டாடும் ஆசையை வெளிக்காட்டும் ஒருவரது மொழி வளர்ந்து சென்று , ஒரு ஏரியை மண்ணில் கை அளைந்து விளையாடும் பிள்ளையாக பார்க்கும் வரை போகிறது.

இந்த உணர்வு காலாதீதமானது, குடிக்கும் கூழில் கைவிட்டு ஒளப்பும் பிள்ளையை மெச்சும் வள்ளுவர் முதலாக.

குழந்தை பெயர் சொல்லி பாடிய பல பிள்ளைத்தமிழ்களை விட, சில பெரியாழ்வார் பாடல்களில் மொழியின் இலக்கணத் தேவை, தலைவனை மெச்சுதல் தாண்டி நிஜமாகவே ஒரு குழந்தை தவழ்ந்து போகிறது.

“தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்…”

“பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ…”

இந்தக்கவிமரபின் நீட்சியாகவும், ஒரு தரிசனத்திற்கு இணையாக கண்டுகொண்ட இந்த பேரினிமையை ஒருமின்மினியை கைக்குள் பிடித்து ஒற்றைக்கண்ணை கொண்டு பொத்திய கைகளுக்குள் எட்டிப்பார்க்கும் ஒருவனின் புன்னகையாகவும் உள்ள கவிதைகள்  ஆனந்த குமாருடையது.

இந்த வகைமையைத்தாண்டி இதன் எதிர் எல்லையாகிய முதுமை எய்தி உடல் சுருங்கிக் கொண்டிருக்கும் தாயின் தோற்றத்தை காட்டும் கவிதைகள். மேலும் பல நல்ல கவிதைகள்.

என் தெரிவு இந்தத் தொகுப்பில் உள்ள  இரு கவிதைகள்,

அருகாமைப் பேரலை போல ஒரு காட்சியை  காட்டி கணத்தில் முழுதாக பார்த்து விடாத அதை பதறித்   தேடச் செய்யும் இந்தக் கவிதை.

“ஊர்
மெதுவாக நடக்கிறது
அது குளத்தை
கையிலேந்தியிருக்கிறது
தளும்பும் குளத்தின்மேல்
ஒரு நீர்ப்பூச்சி
ஒரு கால்வைத்ததும்
குளமாட
பயந்து
மறுகால் தூக்கியபடி
நின்றுவிட்டது”

இறுதியாக இது. அரிதாகவே ஒரு கலை இன்னொன்றை ஆரத்தழுவிக் கொள்கிறது, உண்டு உமிழ்கிறது, பிணைந்து பெண்ணொருபாகனாக மாறுகிறது, ஆனந்த குமாரின் தெய்வம் என்னும் இந்தக் கவிதை ஆடும் ஒருத்தியை மிகச்சரியாகக் கண்டுவிட்டது.

“வலது கையில்
அவளந்த
மலரை மலர்த்தியபோது
இடது காலை
அங்குகொண்டு
சரியாக வைத்துவிட்டது
நடனம் ” 

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி

பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்

வடுக்களும் தளிர்களும்

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2022 11:32

நேரு ஒரு புகைப்பட நூல்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

“இந்தியா சுதந்திரம் கிடைக்கும்போது பஞ்சப்பராரி நாடாக இருந்தது நண்பர்களே. 1943ல் தென்னகத்தில் வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் செத்தார்கள். மீண்டும் 1950களில் வடக்கே வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் தெருவுக்கு வந்தார்கள். ஆனால் அப்போது நேரு தலைமை தாங்கிய அரசாங்கம் இருந்தது. உலகம் முழுக்க கையேந்தி பிச்சை எடுத்து நம் தேசத்து மக்களைக் காப்பாற்றினார் நேரு.

நம் நாடு எப்படி முன்னேறியது? முதல் இருபது வருடம் உலகம் முழுக்க சென்று சமாதானக்கொடியை பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார் நேரு. கையிருப்பின் எல்லா செல்வத்தையும் செலவழித்து அணைகள் கட்டினார். இந்திய விளைநிலத்தின் அளவை நாற்பது சதவீதம் பெருக்கினார். அதன் விளைவாக பஞ்சம் அழிந்தது. இந்தியா உணவை உபரியாக உற்பத்தி செய்தது. பொதுத்துறையை நிறுவி மெல்ல மெல்ல இந்திய தொழில்களை உருவாக்கி வளர்த்தார்.”

மூதாதையர் குரல் எனும் கட்டுரையில் நேருவைப் பற்றி நீங்கள் நெகிழ்ந்து குறிப்பிடும் இந்த  மனச்சித்திரம் என்றுமே எங்கள் நினைவெஞ்சுவது. பஞ்சத்தில் பலியாகிக் கொண்டிருந்த இந்திய தேசத்தை மீட்பதற்காக, உலகின் பிற தேசங்களிடம் கையேந்திக் கையேந்திக் காப்பாற்றியவர் நேரு. ‘என் தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என அவர் எழுதிய கடிதங்களை சில நாடுகளின் அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் நிகழ்ந்த ‘தன்மீட்சி’ சந்திப்பில் நேரு குறித்து பேசுகையில் நீங்கள் கண்கலங்குவதைக் கண்டிருக்கிறோம்.

நேரு என்கிற தலைமைத்துவ மனிதரைக் குறித்து நாம் அறியநேர்கிற ஒவ்வொரு மெய்த்தகவலும் வரலாற்று ரீதியாக அவருடைய பெரும்பங்களிப்பு எத்தகையது என்பதைத் தெளிவாக்குகிறது. இந்தியா என்கிற தேசத்தைக் கட்டமைக்கையில், காந்தியச் சித்தாந்தத்தின் ஒருசிலக் கூறுகளை செயல்வடிவில் நடைமுறைப்படுத்தக் கூட அவர் எதிர்கொண்ட நிர்வாகத்தடைகள் ஏராளம். இறுதிவரை தனது ஆசிரியராக காந்தியை ஏந்தி, ஒருங்கிணைந்த ஒன்றியங்களின் நிலமாக இத்தேசத்தை கட்டியெழுப்பக் காரணமாகயிருந்த ஆளுமைகளுள் முதன்மையானவர் நேரு.

நேருவின் முழுமையான சுயசரிதப் புத்தகம் அண்மையில் ஆங்கில மொழியில் வெளியாகியுள்ளது. திரு. கோபண்ணா அவர்கள் இந்நூலைத் தொகுத்து பிரசுரித்துள்ளார். நேருவுடைய வரலாற்று வாழ்வின் ஒப்பற்ற பல தருணங்கள் கருப்பு-வெள்ளை ஒளிப்படங்களாக இந்நூலில் அச்சிடப்பட்டுள்ளன. நேருவின் வாழ்வு எத்தகைய படிநிலைகளால் கட்டமைந்தது என்ற உளச்சித்திரத்தை இப்படங்கள் நமக்களிக்கின்றன.

உண்மையில் மிகப்பெரும் உழைப்பு இது. மிக அற்புதமான வரலாற்று ஆவணத்தை நவ-இந்தியா பதிப்பகம் மிகத்தேர்ந்த பைண்டிங் தரத்தில் அச்சாக்கியுள்ளனர். அவ்வகையில், இந்நூலை சர்வதேச தரத்திலான உருவாக்கம் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். ரூ 3000 மதிப்புள்ள இந்நூலை ரூ 2000க்கு விற்பனை செய்கிறார்கள்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் என நம்முடைய புத்தகத் தொகுப்புகளில் நிச்சயம் இந்த நூலும் இடங்கொள்வது அவசியமென மனதிற்குப்படுகிறது. ஓர் ஜனநாயக தேசமாக இந்தியா எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பதை நேருவின் சுயசரிதம் நமக்குத் தெளிவுற எடுத்துரைக்கிறது. பெருமுழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புத்தகத்தைக் கையேந்தும் ஒவ்வொருவராலும் உணர முடியும். நிறைய மனங்களுக்குச் சென்றடைய வேண்டிய சலுகை விலையிலும் தருகிறார்கள்.

இப்புத்தகத்தின் ஒரு பிரதியை உங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். உங்கள் தளத்தில் இப்புத்தகம் குறித்த தகவல் வெளியாகையில் நிச்சயம் அது பல வாசக மனங்களுக்கு உதவக்கூடும். ஆகவே, வாய்ப்புள்ள நண்பர்கள் இந்நூலை வாங்கிக்கொள்ள வேண்டுகிறோம். நேருவைப் பற்றி அறிவதினூடாக இத்தேசத்தின் வரலாறு குறித்து முழுமையான புரிதலை நாம் ஓரளவு உள்வாங்கிக் கொள்ள இயலும். நேரு கண்ட கனவுகள் அனைத்தும் பெருங்கனவுகள். செய்துமுடித்த செயல்கள் அனைத்தும் பெருஞ்செயல்கள். இப்புத்தகம் அந்த வரலாற்றுத்தடத்தை வெளிச்சப்படுத்தும் ஓர் அச்சு ஆவணம்.

நன்றிகளுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2022 11:31

பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்

பெண்கள்,காதல்,கற்பனைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நான் பதின்மவயதிலேயே காதல் என்பது வலி, வேதனையைத் தருவது என்ற  ஞானத்தைப் பெற்றிருந்தேன். அது சில அக்காக்கள், அண்ணன்களின் காதல்கள், கல்யாணங்கள், தோல்விகளை பார்த்ததால் கிடைத்த அவதானிப்பாக இருக்கலாம்.   நான் முதன் முதலில் அருண்மொழியை அறிந்துகொண்டது உங்கள் நூல்களை வாசிப்பதன் மூலமே. சங்கச் சித்திரங்களில் ‘கள் மணக்கும் மலர்’ கட்டுரையில், ‘பேசிக்கொண்டே நடக்கையில் அருண்மொழி சற்றுத்தாவி கையில் இருந்த புத்தகத்தால், பூத்துக் குலுங்கிய கொன்றை மரக்கிளையை அடித்தாள். மஞ்சள் நிற இதழ்கள் கொட்டின. அவளுடைய தலையில் பொன்னிற இதழ் ஒன்று வெகு நேரம் இருந்தது.” அந்த அருண்மொழியையும், செட்டிலாகிவிட்ட உங்களையும் பிற்காலத்தில் அறிந்தவனாக ஜெயித்த காதலர்களாக நான் பார்த்தேன்.

உங்களுக்கு கடிதம் எல்லாம் எழுதி அறிமுகமாகாத ஒரு காலத்தில், காதலர் தினம் ஒன்றில், ஜெயித்த காதலர்கள் என்று  நண்பர்களுக்கு, உங்களையும் மற்றும் மூன்று காதல் ஜோடிகள் பற்றியும் குறிப்பிட்டு கட்டுரை எழுதினேன். அருண்மொழியின் இந்தக் கட்டுரைகளை அப்படித்தான், இனிமையாக நான் பார்க்கிறேன். முதல் கட்டுரை வந்த நாளில், வாசித்துவிட்டு, அன்று முழுக்க நானும் ராதாவும் முழு இனிமையில் இருந்தோம்.

நாங்கள் கல்யாணத்திற்குப் பின் காதலித்தவர்கள். ராதாவை முன்னரே பார்த்திருக்கலாம் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு. திண்டுக்கல்லிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் எத்தனையோ முறை , இடையில் உடுமலைப்பேட்டையில் இறங்கி டீ/காபி குடித்திருக்கிறேன். அந்த பஸ் நிறுத்தத்திலிருந்து, இரண்டு கி.மீ. தொலைவில் எனக்காகப் பிறந்தவள் வீடு இருக்கிறது என்பதுகூட தெரியாமல் இருந்திருக்கிறேன். நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் இடையில் இருந்த மூன்று மாதங்களில் மூன்றே கடிதங்கள் போட்டுக்கொண்ட எங்களுக்கு, நாளொரு கடிதம் எழுதியவர்களைப் பார்த்தால், எப்படி இருக்கும்?

‘லைலா மஜ்னு,’ ‘அமராவதி அம்பிகாபதி’ என்று சோகமாகவே காதல் கதைகள் கேட்டு சலித்துபோய்விட்டது. அருண்மொழியின் கட்டுரைகள் இனிமை. பாரதியையும் செல்லம்மாவையும் நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் காலத்தில் வாழும் அருண்மொழி,  ஜெயமோகன் காதலை பார்ப்பதில் கேட்பதில் எங்களுக்கு சந்தோஷம். எதுவும் மிகைப்படுத்தாமல் அவர் எழுதியிருப்பது, வாழ்வின்மேல்  நம்பிக்கையை வரவழைக்கிறது.

நான், என் சகோதரியின் காதலைக் கேட்டறிந்து வீட்டுப் பெரியவர்களிடம் பேசி, கல்யாணம் செய்து வைத்தவன். எனக்கு அப்பொழுது வயது 23. அருண்மொழியின் இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்பொழுது, ஜெயித்த ஜெயமோகனாக பார்க்காமல், என் சகோதரி, யாரோ ஒருவரை காதலிக்கிறார். சகோதரனாக கவலைப்பட்டுக்கொண்டு வாசித்தேன். அவரின் பார்வையில் அவருடன் இருப்பவராக என்னை மாற்றியதில் இருக்கிறது அவரது எழுத்தின் வலிமை. அவர் தம்பியை பற்றி எழுத ஆரம்பிக்கும் பத்தியிலேயே நான் சொல்லிக்கொண்டேன், “அக்காக்கள் தம்பியிடம் காதலை மறைக்கமுடியாது” என்று.

அருண்மொழி வடக்கில் கல்லூரி சுற்றுலா வந்த சமயம் நான் டில்லியில்தான் இருந்தேன். அப்பொழுது உங்களுக்கு என்னை தெரிந்திருந்தால், ‘என்னோட ஆளு வரா, பாத்துக்கோ சௌந்தர்னு’ சொல்லியிருப்பீர்கள் என நினைக்கிறேன். கரோல் பாக்கில் ஹிந்தியில் பேசி பொருட்கள் வாங்கிகொடுத்திருப்பேன்.

காதலர்கள் என்றால், கொஞ்சலும் முத்தங்களும் மட்டுமல்ல. அவர்கள் உரையாடலில் வாசிப்பு , இலக்கியம், அரசியல், குடும்ப சோகங்கள் பரிமாற்றம் என எல்லாமும் இருக்கும். காதல் என்பது யதார்த்தமன்றி வேறில்லை. முதலில் சுந்தரராமசாமியின் கட்டுரையைத்தான் முதலில் வாசித்தேன் என்று சொல்லிவிட்டு, ட்ரெய்ன் ஏறும் சமயம், ‘மன்னிக்காதே நெல்லி, ரொம்ப நல்லாயிருக்கு, போகட்டா’ என்று உங்களை பிரகாசிக்க வைத்தது, ஒரு இனிமையான காட்சி.

அருண்மொழிக்குவந்த கடிதங்களில் ஒரு கடிதம் கூட திருமணமாகாத பெண் இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். முதல் கட்டுரையை வாசித்துவிட்டு,  எங்கள் உறவினர் பெண் (இளம்பெண்) எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. அவரது சம்மதத்துடன், ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் கொடுக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டிய கட்டுரை. என்னுடன் இருக்கும் நண்பர்களின் காதலையும், பிறகு தோல்விகளையும் பார்க்கும்பொழுது கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் இதை வாசிக்கவேண்டும். அவர்களுக்கு உண்மையான காதலை பற்றி தெரியும்.

எனது வயதுடையவர்கள், பணத்தையும் நிறத்தையும்தான் பார்க்கிறார்கள். இந்தக் கட்டுரையில் காணும் காதலில், அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. தோல்வியடைந்த காதலை பார்க்கும் எனக்கு ஒரு ஜெயித்த காதலை பார்க்கமுடிகிறது. காதலையும் தாண்டி அங்கே ஒரு அழகிய நட்பு இருக்கிறது. இப்பொழுது காதலிக்கும்பொழுதே, அதிலிருந்து விடுவித்துக்கொள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்தக் காதலில் தொடர்வோம் என்ற ஒரு உறுதி இருக்கிறது.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.