Jeyamohan's Blog, page 790
April 22, 2022
எழுத்தாளனும் குற்றவாளியும்
எஸ்ரா பவுட்ண்ட் மூன்று முகங்கள்
என் குறைபாடுகள்
ஒரு கடிதத்தில் இலக்கியவாதியை திருடர்கள் கொலைக்காரர்கள் போன்ற ‘சமூக விரோதி’களுடன் ஒப்பிட்டிருந்தேன். இயல்பாக அமைந்த அந்த ஒப்பீடு மேலும் யோசிக்கச் செய்தது.
திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் அடிப்படை உணர்ச்சியாகத் தன்னலம் மட்டுமே கொண்டவர்கள். தங்கள் மகிழ்ச்சிக்காகவும் நுகர்வுக்காகவும் ஆணவநிறைவுக்காகவும் வெறுமே வன்முறைத் தினவை தீர்ப்பதற்காகவும் அவர்கள் பிறரை அழிக்கிறார்கள். பிறருடைய இருப்புக்கன உரிமையைக்கூட கருத்தில் கொள்வதில்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த நலன்களை எண்ணுவதே இல்லை. அந்த தன்னலத்தைன் தண்டனை என சமூகம் எதிர்கொள்கிறது. முரண்படுபவனை முழு வீச்சாலும் அழிக்கிறது.
திரும்பத் திரும்ப குற்றவாளிகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்த குற்றவாளி என்பவன் மிகமிக அரிதானவன். தன்னுடைய இயல்பான குற்றத்தன்மையால் அவன் குற்றங்களில் ஈடுபடுகிறான். அது ஒரு அடிப்படைக் குணாதிசயமாக அவனில் இருக்கிறது. அவனால் வேறொன்றைச் செய்ய இயலாது என்பதனால்தான் அவன் குற்றவாளியாக இருக்கிறான். நான் ஏன் எழுத்தாளனாக இருக்கிறேனோ அதைப்போல.
உழைப்பதும் சேமிப்பதும் குற்றவாளியின் இயல்பில் இருக்காது. ஏனென்றால் அதில் அவனுக்கு இன்பம் இல்லை. ஆ.மாதவனின் ஒரு கதையில் உழைத்துக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை விட ஏமாற்றி கிடைக்கும் நூறு ரூபாயில் மகிழும் குற்றவாளியின் மனநிலை பதிவாகியிருக்கும். எவருக்காயினும் தன் தனித்திறன் வெளிப்படும்போதே மகிழ்வு உருவாகிறது. ஏனென்றால் அந்த புள்ளியில்தான் அவன் முழுமையாகக் குவிகிறான். குற்றவாளிகள் குற்றங்களில் திளைக்கிறார்கள். செய்த குற்றங்களைச் சொல்லிச் சொல்லி பெருக்கிக் கொள்கிறார்கள். செய்யாத குற்றங்களை கற்பனைசெய்துகொள்கிறார்கள். வேறு எதைப்பற்றியும் அவர்கள் பேசுவதில்லை.
பெரும்பாலான குற்றவாளிகளுக்கு ‘நாளை’ இல்லை. ஆகவே கையில் கிடைத்தவற்றை உடனடியாகச் செலவுசெய்துவிடுகிறார்கள். தனக்கான இன்பத்துடன் வாழ்தல், அதன் பொருட்டு சூழலிலிருந்து முடிந்தவரை அனைத்தையும் எடுத்துக்கொள்ளுதல் என்பதே அவர்களின் இயல்பாக இருக்கிறது. அது அவர்களின் உறவுகள் அனைத்தையும் வன்முறை கொண்டதாக ஆக்குகிறது. அவர்கள் எப்போதும் எந்நிலையிலும் கொள்ளையடிப்பவர்கள், சூறையாடுபவர்கள். மனைவியையும் குழந்தைகளையும்கூட கொள்ளையடிக்க தயங்க மாட்டார்கள்.
குடும்பத்தைப் பேணிய, குழந்தைகளுக்காக வாழ்ந்த குற்றவாளியை பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னார். அவர்கள் வேண்டுமென்றால் அவனுடன் ஒட்டிக்கொண்டு வாழலாம், அவ்வளவுதான். அது இயல்பு என நான் சொன்னேன். ஏனென்றால் அவன் அடிப்படையில் தன்னலம் மட்டுமே கொண்டவன். அவனை செயல்படச்செய்யும் இசை அது.
குற்றவாளி தன் தனித்திறனாலோ கூர்மையாலோ தற்காலிகமாக சமூகத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால் சமூகம் மிக மிக பிரமாண்டமானது. அது ஒருபோதும் அவனை வாழ விடுவதில்லை.அது அவனைச் சூழ்ந்து இறூக்கிக்கொண்டே இருக்க்கும். மெல்லமெல்ல, பிடிவாதமாக, அவன் இடத்தைக் குறுக்கும். அவனை சமூகவெளிக்குள் ஒரு கண்காணாச் சிறைக்குள் அடைக்கும். அவனை அழுத்தி நெரித்து உடைக்கும். அவன் சிதைந்து அழிகிறான்.
குற்றவாளிக்கு மிகத் தற்காலிகமான ஒரு கொண்டாட்டம் மட்டுமே உள்ளது என்பது கண்கூடு. இருந்தும் குற்றவாளிகளை சமூகம் உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. இரு காரணங்கள்.
ஒன்று, தன்னலம் என்பது ஒரு இயற்கையான உந்துதல். ஒவ்வொரு மனிதனிடம் தன்னலமும் சமூகத்தன்மையும் இணையாக உள்ளன. சமூகத்தன்மை ஓங்கி தன்னலத்தை அதன் ஒரு பகுதியாக அமைத்துக்கொள்பவன் வென்று செல்கையில் சமூகத்தன்மையை முற்றாக இழந்துவிடுபவன் குற்றவாளியாகி அழிகிறான்.
இரண்டு, இயற்கைக்கு குற்றவாளி எவ்வகையிலோ தேவைப்படுகிறான். அந்த தொடர்ச்சி அறுபடாதிருக்கவேண்டும் என அது எண்ணுகிறது. குற்றம் என்பது சாகசத்தன்மைதான். சமூகத்துக்கு ஒவ்வாத சாகசமே குற்றமெனப்படுகிறது. திருட்டு கொலை எல்லாமே ஏற்கப்பட்ட களங்களில் நிகழும்போது வீரமென்று கொண்டாடப்படுகின்றன.எல்லா வீரயுகப் பாடல்களும் திருட்டையும் கொலையையும் கொண்டாடுபவைதான் – அந்த திருட்டும் கொலையும் அச்சமூகத்திற்கு வெளியே உள்ளவர்கள்மேல் நிகழ்த்தப்படுகின்றன, அவ்வளவுதான். மிகத்தொன்மையான போர்க்குடிகள் போரே இல்லாத சூழலில் கொடிய குற்றவாளிகளாக ஆகி தங்கள் சமூகத்தை கொள்ளையிடுவதை வரலாறு காட்டுகிறது -உதாரணம் தக்கர்கள்.
குற்றவாளிகளை ஓர் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு செல்கள் என்று சொல்லலாம். அன்னியர்களை அழிக்கும் வீரம் அவற்றின் இயல்பு. அவை அந்த உடலையே அழிக்க ஆரம்பிக்கையில் நோயை உருவாக்குகின்றன. உடல் அவற்றை அழிக்கவேண்டியிருக்கிறது.
இக்காரணத்தால்தான் இயற்கை குற்றவாளிகள் என்னும் தன்னலவாதிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அவர்களில் காமம் நுரைப்பதும் அவர்களை நோக்கி பெண்கள் திரண்டு செல்வதும் அதனால்தான். அவர்கள் தங்கள் மரபணுக்களை தீவிரமாக நிலைநிறுத்திவிட்டே செல்கிறார்கள். அவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறார்கள்.
எழுத்தாளன், கலைஞன் குற்றவாளிக்கு மிக அணுக்கமாக இருக்கிறான். ஆகவேதான் இலக்கியங்களில் எப்போதுமே குற்றவாளிகள் கனிவுடன் பார்க்கப்படுகிறார்கள். பெரும்பாலான படைப்புகளில் குற்றவாளிகளின் தரப்பு மிக அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது. குற்றவாளிகளே பெரும் படைப்பாளிகளாக இருப்பதும் அரிதாக நிகழத்தான் செய்கிறது- ழீன் ழெனே போல. குற்றவாளி படைப்பாளியாக ஆவதும் வரலாறெங்கும் பதிவாகியுள்ளது- வான்மீகி போல
ஏனென்றால் குற்றவாளியிடம் இருக்கும் அதே முழுத்தன்னலம் என்பது படைப்பாளியிடமும் இருக்கிறது. வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் இச்சைக்கு பிற அனைத்தையுமே இரையாகக் கொடுப்பவனாக அவன் இருக்கிறான். தனது குடும்பத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்கிறான். தனது புரவலர்களை தயக்கமில்லாமல் அதன் பொருட்டு உறிஞ்சுகிறான். தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தின் நலன், அதன் பொதுஉணர்வுகளைப்பற்றி அக்கறையே படாமல் இருக்கிறான்.
மிகக்கொடிய சூழல்களில் கூட எழுதும்பொருட்டு தன்னை தகவமைத்துக் கொள்பவனாக எழுத்தாளன் இருக்கிறான். புகழ் பெற்ற சோவியத் கதையொன்றில் ஓவியக்கலைஞன் வதைமுகாமில் அடைக்கப்படுகிறன். ஓவியம் வரையும் பொழுதை ஈட்டிக்கொள்வதற்காக தன்னுடைய சிறிய அறைக்குள் இன்னொருவனை பேசிப்பேசிக் கரைத்து மனம் மாறச் செய்து அவனை தன் வேலையைச் சேர்த்து செய்ய வைத்த்பின் இவன் வரைந்துகொண்டே இருக்கிறான். கரியால் சுவர்களில், பழைய காகிதங்களில் அவன் வரையும் ஓவியங்களும் அழிந்துவிடுகின்றன. ஒரு கட்டத்தில் குளிரிலும் கடும்உழைப்பாலும் அந்த உதவி செய்தவன் செத்துவிடுகிறான். ஓவியன் அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து இன்னொரு இரையை பிடிப்பதில் தான் அவன் முயல்கிறான். குரூரமான கதையாயினும் அது பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது.
தனிவாழ்க்கைகளைப் பார்க்கையில் பெரும் கலைஞர்களின் வாழ்க்கை குற்றவாளிகளின் வாழ்க்கைக்கு மிக அணுக்கமானதாகவே தெரிகிறது. எட்கார் ஆலன் போ போன்றவர்கள் ஏறத்தாழ குற்றவாளிகளின் வாழ்க்கையையே வாழ்ந்தனர். தன் எழுத்துவாழ்க்கைக்கு குழந்தை தடையாக ஆகும் என எண்ணிய எஸ்ரா பவுண்ட் தனக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும்படி எவரிடமேனும் அளித்துவிடவேண்டும் என்கிறார். மிகக்குறைவான ஊதியம் அளித்து குழந்தையை கையளிக்கும்படி அவற்றின் அன்னையிடம் சொல்கிறார்.
இவ்வளவுக்கும் அவருடைய மனைவியல்லாத ஓல்கா(Olga Rudge) அவரால் கருவுற்று அவரைப் பின்தொடர்ந்து இத்தாலி வரைக்கும் செல்கிறார். ஓல்காவை பவுண்ட் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார். சார்த்ர் உட்பட ஐரோப்பிய இலக்கியமேதைகளின் தனிவாழ்க்கை திருடர்களுடைய வாழ்க்கைக்குச் சமனாமானதுதான் என தோன்றுகிறது. எழுத்து ஒன்றுதான் அவர்களை வேறுபடுத்துகிறது.
முதுமையில் ஆளுமை உடைந்து அரைக்கிறுக்கனாக அமெரிக்கா திரும்பும் எஸ்ரா பவுண்டின் படத்தை பார்க்கையில் குற்றவாளியின் வாழ்க்கையின் இயல்பான முடிவுதானே என்றும் தோன்றுகிறது
ஜெ
***
விளையாடும் ஏரி- கடிதங்கள்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ
டிப்டிப்டிப் தொகுப்பை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கினேன். ஓட்டல் சர்வர் டிப்ஸ் வாங்குவதற்கு அப்படி கேட்கிறான் என நினைத்து புன்னகைத்துக்கொண்டேன். என் வரையில் அந்த தொகுதியை டிப்ஸ் என்றுதான் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த தொகுதியின் முக்கியமான அம்சமே இந்த மென்மையான புன்னகை மொத்தத் தொகுப்பிலும் உள்ளது என்றுதான். நகர் நடுவே சிறைகட்டி நிறுத்தப்பட்டுள்ள ஏரி ஓர் ஓரமாக வெளியே விரலை நீட்டி விளையாடிக்கொண்டிருக்கும் கவிதை (மலையாளத்தில் ஏரி என்றாலே சிறை என்றுதான் பெயர் என்று நண்பர் சொன்னார்) ஓர் உதாரணம்.
பெரும்பாலான கவிதைகள் இந்தக் கொண்டாட்டம் கொண்டவையாக இருக்கின்றன. நான் முகுந்த் நாகராஜன், இசை, மதார் கவிதைகளுக்குப் பின்னால் சமீபத்தில் மிகவும் ரசித்த கவிதைகள் ஆனந்த்குமார் எழுதியவைதான். கவிதை தீவிரமாக இருக்கவேண்டும் என்பதற்காக சாதாரணமான அனுபவங்களை எல்லாம் கவிஞர்கள் தீவிரப்படுத்துகிறார்கள். சாமானியமான வாசகர்களும்கூட தங்களுடைய சாமானிய அனுபவங்களை செயற்கையாக தீவிரமாக ஆக்கிக்கொள்ளத்தான் கவிதைக்கு வருகிறார்கள். அதிலும் டீனேஜ் முதல் ஒரு பத்தாண்டுக்காலம். அவர்களுக்காகத்தான் கவிதைகள் எழுதப்படுகின்றன.
நல்ல கவிதைகள் அந்த எல்லையை கடந்து இருக்கும் என நான் நினைக்கிறேன். அவற்றில் உள்ள தீவிரம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டதாக இருக்காது. நாம் நம் கற்பனையிலே அந்தத் தீவிரத்தை உணரவேண்டும். அதுதான் நல்ல கவிதை. ஆனந்த்குமார் அப்படிப்பட்ட கவிஞர்.
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள ஜெ
குமரகுருபரன் விருது அளிக்கப்படும்போது சிலசமயம் கொஞ்சம் அவசரப்பட்டு அளிக்கப்படுகிறதோ என்று தோன்றும். ச.துரைக்கு அளிக்கப்பட்டபோது அப்படி நினைத்தேன். ஆனால் அவருடைய அடுத்த தொகுதியைப் பார்க்கையில் (சங்காயம்) ஓர் அற்புதமான கவிஞரை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்ட பரிசு என தெரிந்தது. மதாரும் அப்படித்தான். ஆனந்த்குமாரும் அப்படி விசுவரூபம் எடுப்பார் என நினைக்கிறேன். இந்தக்கவிதைகளிலுள்ள ஃப்ளோ மிகமிக அழகானது
ரவிக்குமார்.
***
ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு
நீதிமன்றம், நீதிபதிகள் -கடிதம்
https://alavaimagazine.blogspot.com/2022/04/2.html
அளவை இதழில் இளம் சட்டக்கல்லூரி மாணவர் விக்னேஷ் ஹரிஹரனின் பேட்டி அருமையாக இருந்தது. அவருடைய பேட்டியிலிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுசெய்யப்படும் விதமென்ன என்று தெரிந்துகொண்டேன். கொலிஜியம் என்னும் அமைப்பு ஜனநாயக விரோதமானது. அது இன்றளவும் போப் ஆண்டவர் தேர்விலே செயல்முறையிலுள்ளது. ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்படுபவர்கள் எப்படி தேர்வுசெய்யப்படுகிறார்கள்? சாதிக்கணக்குகள், அரசியல்கணக்குகள்தானே அதிலுள்ளன? பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனத்திலுள்ள அளவுகோல்களென்ன? அது வெளிப்படையாகவா நடைபெறுகிறது?
போப் தேர்வுசெய்யப்படுவது ஜனநாயக முறைப்படி அல்ல. ஆனால் சி.எஸ்.ஐ பிஷப் ஓட்டு போட்டு தேர்வுசெய்யப்படுகிறார். இங்கே தமிழ்நாட்டில் இன்றைக்கு என்ன நடக்கிறதென்று அனைவருக்குமே தெரியும் ஆண்டுக்காண்டு அடிதடிகள் செய்திகளில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்றால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது ஒரு மாயை. அது ஓர் ஒண்ணாங்கிளாஸ் பாடம். அந்தப்பாடத்தைச் சொன்னால் நாம் ஜனநாயகவாதிகள் என்ற பிம்பம் கிடைக்கும். ஆனால் அது உண்மையே அல்ல.
நீதிபதிகளை நியமிக்க ஜனநாயகமோ இன்னொரு லொட்டு லொசுக்கோ வந்தால் அதில் அரசியல்கட்சிகளும் அரசும் செல்வாக்கு செலுத்தும். அதில் சாதி உள்ளே வரும். இன்றைய சூழலில் ஒரு முஸ்லீம் நீதிபதி வரவே முடியாத நிலை உருவாகும். சமூகத்திலிருக்கும் எல்லா சண்டைசச்சரவுகளும் நீதிபதி நியமனத்திலுமிருக்கும். நீதிபதிகள் எம்.எல்ஏ ரேஞ்சுக்கு இருப்பார்கள். நம் சமூகத்தில் சரியான ரெப்ரசெண்டேட்டிவ்களாக இருப்பார்கள்.
ஆனால் நீதிமன்றம் சாமானியர்களை விட கொஞ்சம் மேலே இருக்கவேண்டும். சமூகத்துக்கும் மேலே இருக்கவேண்டும். இந்திய நீதிமன்றம் பெரும்பாலான தீர்ப்புகளை சமூக மனநிலைக்கு மிக மேலே நின்றுதான் அளித்திருக்கிறது. அது சமூகத்தை வழிகாட்டுகிறது. அதில் எலைட்டிசம் உண்டுதான். ஆனால் இங்கே இருக்கும் அமைப்புகள் எல்லாமே ஜனநாயகரீதியாகச் சீரழிந்துள்ளன. ஒர் அமைப்பாவது எலைட் அமைப்பாக்ல நீடிக்கட்டுமே. உச்சநீதிபதிகளால் நீதிபதிகள் தேர்வுசெய்யப்படுவதே சரியானது. அதை அரசியல்வாதிகள் சூறையாடாமல் தடுக்க வேறு வழியே இல்லை.
ஆர்.ராகவப்பெருமாள்
***
அளவையில் விக்னேஷ் பேட்டி சிறப்பு. திரைப்படங்களில் நீதிமன்றங்கள், சட்டம் யாருக்கானது, வக்கீல் தொழில் வருமானமற்றது போன்றவைகளுக்கான பதில்களும் அருமை. பாடத்திட்டத்தின் போதாமைகளை குறித்து ஒரு மாணவனின் கருத்தை முதன்முதலாக கேட்கிறேன். கேள்விகளும் மிக சிறப்பானவை முழு நேர்காணலுமே பிரமாதம்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
அளவை இதழில் சினிமாவில் நீதிமன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை உள்ளது உள்ளபடி காட்டவில்லை என்று விக்னேஷ் சொல்கிறார். அவர் இன்னும் நீதிமன்றம் செல்ல ஆரம்பிக்கவில்லை என நினைக்கிறேன். உள்ளது உள்ளபடி காட்டினால் கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் கேஸில் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். ஜனங்களுக்கு ஜெய்பீம் போன்ற படங்கள் காட்டும் அந்த பிரமை இருக்கும் வரைத்தான் வக்கீலுக்குக் காசு
ராஜ் முகுந்த்
மலிவுவிலை நூல்கள்- கடிதங்கள்
புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி
அன்புள்ள அய்யா,
அன்பர் பரிதி எழுதியதில் முற்பகுதி சரியே.மலிவு விலை பதிப்புகள பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு விற்கப் பட வேண்டும். ஆனால், அதற்கு சொந்தமாக அச்சகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியா என்று தெரியவில்லை. இதற்கு அச்சுத் தொழில் துறையில், சிவகாசி மாடல் உற்பத்தி, அல்லது சீனா நாட்டு உற்பத்தி முறைகள் தான் பொருத்தம் என்று நம்புகிறேன்.
அது மட்டுமல்ல, மலிவு விலை பதிப்புகளுக்கு பின் பொதுவாக புத்தக விற்பனை குறையும் என்பதும் சரியல்ல. வாசகர் வட்டம் பல்கிப் பெருகும். அதில், ரசனை, சுவை, கலை உணர்வு கொண்ட வாசகர்கள், (Connoisseurs) செம்பதிப்புகளுக்கு முன்னேறுவார்கள்.
தமிழ் நாட்டில் மட்டுமே, தமிழ் படிக்கத் தெரிந்த, வாய்ப்பும், வசதியும் தமிழ் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட அன்பர்கள் நிச்சயம் ஒரு கோடி பேர் இருப்பார்கள். பிற மாநிலங்களில், நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் குறைந்தது 10 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்களை சென்று அடைய மலிவு விலை பதிப்புகள், மாத நாவல் போல, தொடர்ந்து வெளிவரும் தேவை இருக்கிறது..
ராமசாமி தனசேகர்
***
அன்புள்ள ராமசாமி தனசேகர்,
உங்கள் எண்ணங்கள் நல்லவை, கணிப்புகள் ஆசை சார்ந்தவை. தமிழகத்தில் எதையேனும் வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் மிஞ்சிப்போனால் ஒரு லட்சம்பேர் இருக்கலாம். தினத்தந்தியே இங்கே பத்துலட்சம் பிரதிகள்தான் செல்கிறது. தமிழகத்தில் தினத்தந்தி உட்பட நாளிதழ்களை ஒருமுறையேனும் தொட்டுப்பார்த்து தலைப்புகளை வாசிப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே ஐம்பதுலட்சத்துக்குள்தான் என்பதே அதிகாரபூர்வமான கணக்கு. அதனடிப்படையில்தான் விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. தமிழக மக்கள்தொகை பத்துகோடி. ஐந்து சதவீதம் பேருக்குத்தான் ஏதேனும் ஒரு நாளிதழையே வாசிப்பவர்கள். அவர்களில் ஏதேனும் ஒரு நூலை வாசிப்பவர்கள் ஒருலட்சம் என்பதேகூட கூடுதல்கணக்குதான்.
நூல்களின் விலை வாசிப்புக்கு தடையல்ல. உண்மையில் வாசிப்புக்கு ஆர்வமிருந்து நூல்களின் விலைகள்தான் தடை என்றால் இலவசமாக நூல்கள் அளிக்கப்படும் நூலகங்களில் கூட்டம் நெரிபடவேண்டுமே. தமிழகத்தின் பெரும்பாலான நூலகங்களில் ஒருநாளில் ஒருவர்கூட வந்து நூல்களை எடுப்பதில்லை. இது ஒரு பண்பாட்டுப்பிரச்சினை. இதை நூல்களை அளித்து எவரும் சரிசெய்ய முடியாது. பெரிய பண்பாட்டியக்கங்கள் நிகழ்ந்து அதனூடாகவே மாற்றம் வரமுடியும்
சும்மா யோசித்துப் பாருங்கள், உங்கள் சுற்றுப்புறத்தில் ஏதேனும் ஒரு நூலை எப்போதேனும் வாசித்த எத்தனை பேரை சந்தித்திருக்கிறீர்கள்?
-ஜெ
ஒளிமாசு- கடிதம்
ஒளிமாசு- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
பேராசிரியர் லோகமாதேவி அவர்களின் கடிதம் படித்தேன், எனக்கு ஒரு ஐயம். ஓசூர் பகுதியில் LED ஒளி உபயோகித்து விவசாயிகள் மலர் சாகுபடி செய்கிறார்கள்.
1) https://www.youtube.com/watch?v=0pLh-GCSBFg
இதுவும் தாவரங்களை துன்புறுத்துவதா ? இதனால் தாவரங்களுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பிற உயிரிங்களுக்கும் தீமை நேருமா?
பேராசிரியர் லோகமாதேவி அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாததால் தங்களுக்கு இந்த மடலை அனுப்புகிறேன்.
தயவு செய்து பேராசிரியர் லோகமாதேவி அவர்களிடம் இதற்கு பதில் பெற்று உங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.
நன்றி
இப்படிக்கு
அன்புடன்
சந்தானம்
***
மரியாதைக்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
திருப்பூரில் இருந்து விஜி எழுதுவது,
சற்று முன் “ஒளிமாசு ” என்ற கட்டுரையை வாசித்தேன், பல புதிய கோணங்களில் பல புரிதல்களுக்கு தொடக்கமாக இருந்தது.. யோசனைகள்,சந்தேகங்களும் அதற்கான தேடல்கள் மட்டுமே புதிய ஆய்வுகளுக்கும் தீர்வுகளுக்கும் வழி வகுக்கும்,.அவ்வாறே சக்திவேலின் சந்தேகம் இந்த கட்டுரையை எங்களுக்கு கிடைக்க செய்திருக்கிறது. அவருக்கு நன்றி. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் புதிய விதிகளை நோக்கிய யோசனைகளுக்கு நம்மை கொண்டு வந்திருக்கிறது இந்த கட்டுரை…
முதலில், செயற்கை ஒளிக்கும் இயற்கை ஒளிக்கும் தாவர பாதிப்பு என்ன என்பதும் அறியப்பட வேண்டிய ஒன்று..மானிடக் குருடுகளுக்கு மத்தியில் தாவரக்ககுருடு என்பதே புதிய அறிமுகம்.
கோவிட்டுக்கு பிறகு ஞாயிறு என்பதே கிடையாது….எல்லா நாளும் அசைவம்தான்.ஆடு கோழி விருந்துக்கு வாங்கும் பொழுது, நூற்றுக் கணக்கான சக உயிர்கள் கொலையாவதை காணும் பிற உயிர்களை , மிகக்கூர்மையான அரிவாளால் ஒரே துண்டாக சிதைத்து நீல நிற பீப்பாயில் மூடி, உயிர் வெறி ஆட்த்டதினூடே தறிகெட்டு ஆடி அடங்குவதை அசையாமல் பார்த்தபின்னும் சப்புக்கொட்டி வெறியேறி திங்கும் நமக்கு தாவரத்தின் இரத்தம் வரா வெளிக்காட்டா வேதனைகள் வெறுமனே கடந்து போகத்தான்செய்யும்.. …உடல் ரீதியாக வலிக்காத எதுவும் நமக்கு உரைப்பதில்லை.. இனிமேல் சக உயிரை நான் பார்க்கும் விதமே வேறாக இருக்கலாம்
அசைவற்ற நிலையில் உள்ளதால் தாரங்ககள் நமக்கு ஆச்சர்யம் ஊட்டுவதில்லை… மழைக்காக, அழகுக்காக உணவுக்காக மற்றும் பிராண வாயுவுக்கு என்று மட்டுமே மரங்களை பார்த்த எனக்கு புதிய பக்கங்களை இந்த கட்டுரை திறந்து விட்டது.
இரவு வெளிச்சம் பற்றிய சிந்தனையில் எனக்கு மனிதர்கள் தற்போது கால் சென்டரில் மற்றூம் பல நிறுவனக்களில் இரவு வேலை செய்வது தான் ஞாபகம் வந்தது..”மென்னோளியில் மகரந்த சேர்க்கை” என்னும் வரியே கவிதை போல் இருந்தது
புவி தோன்றிய நாள் முதல் இயற்கை மாறா வண்ணமாக வைத்திருப்பது இனப்பெருக்கம் மட்டுமே. ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு கவர்ச்சி அதனூடே கலவி முயற்சி… ஒளி, வெப்பம், மழை என்பது “சமிக்ஞைகள்” என்ற புரிதல் மிகப்புதிது.
தாவரங்களை தனி ஒரு உயிராக நம்மிலும் மிக உயர்வான நிலையில் வைத்து…பல புதிய சிந்தனைகளுக்கு , ஆய்வுகளுக்கு முதல் சுழி போட்டிருக்கிறது இக்கட்டுரை
மரங்களை வெட்டுவது “படுகொலை” என்ற சுடுசொல், என்னை குற்றவாளியாக உணரவைக்கிறது..
இக்கட்டுரையை வெளியிட்டு, புதிய கோணங்களில் இயற்கையை, வாழ்கையை, சக உயிர்களை மதிக்கவும், போற்றவும், பாதுகாக்கவும் வழிகாட்டியதற்கு ..
என் பிரியமான வணக்கங்கள் மற்றும் நன்றிகள்
விஜி….
April 21, 2022
மேலும் ஒரு நாள்
இன்று இன்னொரு நாள். எனக்கு அறுபது வயது நிறைவடைகிறது.
அறுபது நிறைவை ஒட்டி சில சடங்குகள் செய்வது இந்துக்களின் வழக்கம். திருக்கடையூர் செல்வது பற்றி ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் அது பண்டைக்காலத்திற்குரியது. அன்றெல்லாம் அறுபது என்பது முதுமை. பிள்ளைகளுக்கே நாற்பதை ஒட்டிய வயதுகளும், பேரப்பிள்ளைகளுக்கு இருபதை ஒட்டியவயதுகளும் ஆகிவிட்டிருக்கும். அவர்கள் தங்கள் வாழும் மூதாதைக்குச் செய்யும் சடங்குகள் அவை. நமக்கு நாமே செய்துகொள்வன அல்ல.
கோயிலுக்குச் செல்லலாம் என்று அருண்மொழி சொன்னாள். எதற்கு என்று யோசித்துப்பார்த்தால் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக்கொள்ள. நானே கோயிலுக்குச் சென்று எனக்காக அப்படி வேண்டிக்கொள்வதில் ஒரு ‘சம்மல்’ தோன்றுகிறது. வேண்டிக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவற்றில் நீண்ட ஆயுள் எப்போதும் இருந்ததில்லை. ஆயுளை பொறுத்தவரை இதுவே ஒருமாதிரி நிறைவுதான். என் அப்பா 62 வயதில் மறைந்தார்.
இப்போதும் தீவிரமான பணிகளில் இருக்கிறேன். ஆனால் இன்று நான் செய்துகொண்டிருப்பவை நானே செய்து முடிக்கவேண்டியவை அல்ல. நானே எழுதியாக வேண்டியிருந்த வெண்முரசு எழுதும்போதுகூட அதை முடித்தேயாக வேண்டுமென எண்ணியதில்லை. இப்போது செய்துகொண்டிருப்பவை செயல்வழியாக வாழ்க்கையை நிறைப்பதற்கான செயல்கள் மட்டும்தான். பயணங்களைப்போல இவை அறிவார்ந்த திசைச்செலவுகள். இன்று, இருத்தலை முழுமையாக கொண்டாடுவதே என் இலக்கு. ஆகவே ஆயுளுக்கான வேண்டுதலை எப்போதும் செய்யப்போவதில்லை.
அந்நிலையில் இந்நாள் மேலதிகமான பொருள் ஏதும் கொண்டதல்ல. ஆகவே கொண்டாட்டம் என ஏதுமில்லை. மேலும் நான் ஊரிலும் இல்லை. ஏப்ரல் 21 வரை சென்னையில் இருந்தேன். 21 காலையில் நிகிதா- பரிதி திருமணம் முடிந்ததுமே கிளம்பி அடுத்த திரைப்படப் பணிகளுக்காக வந்துவிட்டேன். உக்கிரமான பேய்ப்படம். அமெரிக்கா போவதற்குள் ஏழுநாட்களில் முடித்தாகவேண்டும். எழுத்து, விவாதம், தனிமை. ஆகவே எவருடனும் தொலைபேசித் தொடர்பு இருக்காது. மின்னஞ்சல், வாடஸப் பார்ப்பதெல்லாம் ஏப்ரல் 24 க்குப்பின்னர்தான்.
ஆகவே, வாழ்த்துக்கள் சொல்ல ஃபோனில் அழைக்கும் நண்பர்கள் மன்னிக்கவேண்டும் என்று கோருகிறேன். என் வரையில் இந்நாள் இயல்பாக இன்னொரு நாளென கடந்துசெல்லவேண்டும், இது எனக்கு எந்த அழுத்தத்தையும் தரலாகாது என நினைக்கிறேன். அத்துடன் ஏன் மின்னஞ்சல், தொலைபேசிகளை எடுப்பதில்லை என்றால் அன்று வாழ்த்துக்களுக்குச் சமானமாகவே அதியுக்கிர வசைகளும் வரும். பெரும்பாலும் அர்த்தமற்ற மதக்காழ்ப்புகள், சாதிக்காழ்ப்புகள். பெரும்பாலும் என்னை செவிச்செய்தியாக எவரிடமிருந்தோ கேட்டு வைத்திருப்பவர்களிடமிருந்து. தேவையில்லாமல் அதில் பொழுதை வீணடிக்க வேண்டியிருக்கும்.
சில நண்பர்கள் வாழ்த்தி கடிதங்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னர் தனியாக பதில் போடுகிறேன். அவை தனிப்பட்ட கடிதங்கள். வாழ்த்து, பாராட்டு எதுவும் இத்தளத்தில் வெளிவராது.
சென்ற ஏப்ரல் 22ல் சென்னை சினிமா வேலைகளை முடித்துவிட்டு கிளம்பி கன்யாகுமரி சென்று அங்கே தனிமையில், இருந்தேன். 22 அன்றுதான் குமரித்துறைவி என் தளத்தில் வெளியாகியது. இன்று இனிய நினைவு என்பது அதுதான்.
ஜெ
என் குறைபாடுகள்
அன்பான ஆசானுக்கு.
தங்கள் இணைய தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். நான் பெரிய வாசகன் அல்ல, இருப்பினும் உங்கள் அனைத்து கருத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் சில நாவல்களையும், குறு நாவல்களையும் வெண்முரசு முழுவதையும் படித்து உள்ளேன். என் ஆதர்சமான ஆளுமை நீங்கள்.
சமீபத்தில் படித்த குமரித்துறைவி இப்பொழுது எப்போதும் மனதில் மகிழ்ச்சி தருகின்றது. நன்றி
சிறு ஐயம்:
மிகப்பெரிய ஆளுமைகளின் நிறைகளையும் குறைகளையும் துல்லியமாக வகுத்து அளிக்கும் நீங்கள், உங்களின் குறைகளாக என்னென்ன உள்ளன என்று உங்களை எவ்வாறு விமர்சனம் செய்வீர்கள்?
அவ்வாறு குறைகள் இருந்தால் நம்மையே நம்மால் (என்னையே என்னால்) அவ்வாறு அவதானிக்க முடியுமா? அல்லது அவ்வாறு எதிர்மறையாக சிந்திக்க கூடாதா? பெரிய ஆளுமைகள் தங்களைத் தாங்களே விமர்சனம் செய்து ஏதாவது புத்தகம் அல்லது கட்டுரைகள் எழுதியது உண்டா.
ஏதாவது தவறாக கேட்டிருப்பின் மன்னியுங்கள்.
நன்றி
விக்னேஷ் குமார்
அன்புள்ள விக்னேஷ்,
என்னுடைய குறைகள் என்ன என்று கேட்கும்போது எனக்குத்தெரிந்த என்னுடைய குறைகள் என்ன என்றுதான் அது பொருள்படுகிறது. தெரியாமல் இருக்கும் குறைகளை பிறர் தான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து பிறர் என்னைப்பற்றி சொல்வதிலிருந்து நானே எனக்கென உணர்ந்து வைத்திருக்கும் குறைகள் என்ன என்று வேண்டுமென்றால் இப்படிப் பட்டியலிடலாம்.
முதன்மையாக ஒருவகையான தன்னலம். The Selfish Gene என்று ரிச்சர்ட் டாக்கின்ஸின் நூலின் தலைப்பு ஒன்று உண்டு. ஒரு ஜீன் தன்னை பிறப்பிக்கவும், நிலைநிறுத்திக்கொள்ளவும், முடிந்தவரை பெருக்கிக்கொள்ளவும் இடைவிடாது முயன்றுகொண்டிருக்கிறது. அதனுடைய மொத்த இருப்பே அந்தத் தன்னலம் சார்ந்ததுதான். அதற்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மைக்கட்டளையை அது வாழ்ந்து நிறைவேற்றுகிறது.
அதுபோன்று எல்லாவிதமான படைப்பூக்க சக்திக்கும் ஆவேசமான ஒரு தன்னலம் உண்டு. தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் வெளிப்படுத்திக்கொள்ளவும் கொள்ளும் வெறி என்று அதைச் சொல்லலாம். அதன்பொருட்டு எந்தத் தடையையுயும் உடைக்கவும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த சக்தி முயல்கிறது.
கிட்டத்தட்ட அது தீ போலத்தான். தொடும் அனைத்தையுமே பற்றி இழுத்து உணவாக்கிக்கொண்டு தன்னைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறது. அருகிலுள்ள அனைத்தையும் நோக்கி எழுந்து தவித்தபடியே உள்ளது. உடலே நாவாக துள்ளுகிறது. அந்த விசையால் உருவாகும் அழிவுகள் அதற்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. பிறவற்றின் இருப்பு கூட பொருட்டாகத் தெரிவதில்லை.
எல்லா உயிர்களுக்கும் அந்த உயிர்விசை உண்டு. சிறுகுழந்தைகளில் நாம் காண்பது அதை மட்டுமே. ஆனால் சாதாரண உயிரிகளைப் பொறுத்தவரை ஒன்றின் இருப்பு என்பது அதனுடைய கூட்டு இருப்பின் ஒரு பகுதிதான். எறும்பாயினும் மனிதனாயினும் அத்திரளின் ஒரு பகுதியாகவே அதன் இருப்பு அடையாளமாகிறது. ஆகவே அதன் தனிவாழ்வு என்பது பொதுநலம் சார்ந்ததாக இருக்கிறது.
எளிய உயிர்களைப் பொறுத்தவரை திரளின் நெறிகளை, ஆணைகளை கடைப்பிடித்தாலொழிய அவற்றால் நிலைகொள்ளவும் பரவவும் இயலாதென்பதனால் அவற்றின் உயிர்வாழும் விசை தங்கள் திரளிலுள்ள உயிர்வாழும் விசைகளுடன் இணைந்து ஒற்றைப்பெருவிசையாக வெளிப்படுகிறது. எறும்புகள் முதல் மனிதர்கள் வரை கூட்டாக வெளிப்படும் போராடும் வெறி, வெல்லும் வேகம் அதன் விளைவே. தன்னியல்பாகவே உயிர்த்தியாகங்கள் அத்திரளில் நிகழ்கின்றன.
சமூகங்கள் தங்கள் திரள் அடையாளத்தை முன்னிறுத்துகின்றன. அதன்பொருட்டே நெறிகளை, ஒழுக்கங்களை, விழுமியங்களை கட்டமைத்து உணர்ச்சிகரமாக நிலைநிறுத்துகின்றன. தியாகம்தான் எந்த சமூகத்திலும் உச்சகட்ட விழுமியமாகச் சொல்லப்படுகிறது. ஒத்திசைதல் அடுத்தபடியாக. ‘என்பும் உரியர் பிறர்க்கு’ ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என இரண்டு விழுமியங்களையும் எல்லா மரபுகளும் வலியுறுத்துகின்றன.
இச்சொற்களத்தில் தன்னலம் என்று உத்தேசிக்கப்படுவது அந்த திரளிருப்புக்கு எதிராகத் தன்னை மட்டுமே கொண்டு செல்லும் தன்மை. அது சமூகநோக்கில் அழிவுத்தன்மை கொண்டது. எறும்பாயினும் மனிதனாயினும். அந்த எறும்புக்கும் அந்த மனிதனுக்கும் மட்டும் அல்ல, அந்த சமூகத்துக்கும் அது எதிரானது. அத்தகைய தன்னலத்தை அந்தச் சமூகம் கூட்டாக மறுக்கும், தன்னலம் கொண்டவனை அழிக்கும்.
எறும்புகள் தேனீக்கள் முரண்படுவனவற்றைக் கொன்று வெளியே வீசுவதைப் பார்க்கலாம். பழங்குடிகள் ஒவ்வாதவனை உடனே ஒழித்துவிடுகிறார்கள். நாகரிகச் சமூகங்களில் கூட அத்தகைய தன்னலம் கொண்டவர்கள் மீது மொத்த சமூகத்தின் முழுஎதிர்ப்பும் வந்தமைகிறது. குற்றவாளிகள், மிகைநடத்தை கொண்டவர்கள் (Eccentrics) தனியர்கள்.
எழுத்தாளனும் அவர்களில் ஒருவனே. அவனுடைய படைப்புசக்தி அவனை தன்னலம் கொண்டவனாக ஆக்குகிறது. தன்னலம் அவனை தனியனாக ஆக்குகிறது. தனியனாக அவன் மொத்தச் சமூகத்தையும் எதிர்கொள்கையில் ஒன்று ஆற்றல் மிக்கவனாக ஆகிறான், அல்லது சிதைவுகொண்டு கசப்பும் தன்னிரக்கமும் நிறைந்தவனாக எஞ்சுகிறான்.
எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் திரளில் ஒன்றென முழுதமையும் தன்மை இருப்பதில்லை. தன்னைநோக்கி திரும்பிக்கொண்ட தன்மையில் இருந்தே கலையும் இலக்கியமும் உருவாகிறது. அன்றுவரை வந்தடைந்த ஒன்றில் இருந்து அவன் ஓர் அடி முன்னெடுத்து வைத்தாகவேண்டும். அனைவரும் நம்புகிற, சொல்கிற தளத்தில் இருந்து சற்றேனும் வெளியேறியாக வேண்டும். ஆகவே அவன் தனித்தவனாகிறான். தனித்தவனை சமூகம் முரண்கொண்டவனாகப் பார்க்கிறது. அவன்மேல் எரிச்சலும் ஒவ்வாமையும் கொள்கிறது.
எழுத்தாளனாக நான் தன்னலம் கொண்டவனா என்று கேட்டால் ஆம் என்றுதான் நான் சொல்வேன். எந்நிலையிலும் எழுதுவது, வெளிப்படுவது மட்டுமே எனக்கு முதன்மையானது. அதில் மட்டுமே என் இன்பமும் இருத்தலின் பொருளும் உள்ளது. ஆகவே என் சூழலை முழுக்க முழுக்க எனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பயன்படாதவற்றின் மேல் அக்கறை அற்றிருக்கிறேன்.
படைப்பின்போது உச்சமும் அதன் இடைவெளிகளில் எழும் கொந்தளிப்பும் என் நடத்தையை தீர்மானிப்பவையாக இருந்துள்ளன. இடைவெளிகளில் உடல் தீப்பற்றி எரிபவன் போல முட்டி மோதி அலைக்கழிந்திருக்கிறேன். குடி போன்ற பழக்கம் இல்லாதவன் என்பதால் அந்த எரிதலின் முழு வலியையும் அனுபவித்தேன். ஆனால் குடி இல்லாததனால்தான் மீண்டும் படைப்பூக்கத்துடன் எழ முடிந்தது.
முடிந்தவரை என் தன்னலத்தை கட்டுப்படுத்தி, என் கொந்தளிப்புகளை எனக்குள் நிறுத்திக்கொண்டு, அவை பிறருடைய வாழ்க்கையை அழிக்காமலிருக்க முயல்கிறேன். அந்தத் தொடர்போராட்டம் என் வாழ்க்கையின் திசைகளை தீர்மானிக்கும் விசைகளில் ஒன்று.
இதுநாள் வரை பொருளியல் சார்ந்து பிறரை உறிஞ்சி என்னை படைப்பாளனாக நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் எனக்கு வரவில்லை. நான் நாடோடியாக அலைந்த காலத்திலும் என் மொழியறிவு எனக்கு கையில் பணம் குறையாமல் பார்த்துக்கொண்டது. அன்றுமின்றும் பணத்தை எண்ணாமல் அலைந்ததுண்டு. பணம் இல்லாத நிலையே இருந்ததில்லை.
எப்போதும் எனக்கு அடிப்படையான பொருளியல் வாய்ப்புகள் அமைந்தன. அதன்பொருட்டே தொலைபேசித் துறைக்கும், சினிமாவுக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன். இவை அமையாவிட்டால் நான் திருடியோ, கொள்ளையடித்தோ எழுதியிருப்பேன். கைநீட்டியிருப்பேன். எனக்கு எழுதுவதே முதன்மையானது, அதன்பொருட்டு செய்யப்படும் எதுவுமே சரிதான்.
பொருளியல் சார்ந்து எவரிடமும் பெற்றுக்கொண்டதில்லை. நேர் மாறாக என் இருபது வயது முதல் இன்றுவரை கொடுப்பவனாகவே இருந்து வந்துள்ளேன். எல்லா காலத்திலும் என் வருவாயில் ஒரு பெரும்பகுதி கொடையாகச் சென்றிருக்கிறது. ஆனால் இரக்கத்தால் கொடுக்கவில்லை, பெருமதிப்பால்தான் கொடுத்திருக்கிறேன். என்னைப்போலவே படைப்பூக்கம் கொண்டவர்கள் உலகை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் சூழலிலேயே கொடுத்திருக்கிறேன். அது ஒருவகை அடையாளம் காணுதல் மட்டுமே. இன்று அக்கொடை ஆண்டுதோறும் லட்சங்களை எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் நான் கண்ட ஒன்றுண்டு, கொடுக்கக் கொடுக்க என் கையில் பணம் பெருகியது.
என்னுடைய உணர்வுநிலை மாற்றங்கள் ஊகிக்க முடியாதவை. மிக விரைவிலேயே உச்ச நிலைகளுக்குப்போகும் விசை, வெகு விரைவாக பெரிய கற்பனைகளை உருவாக்கிக்கொண்டு உணர்வுகளை அதற்கேற்ப பெருக்கிக்கொள்ளும் தன்மை எனக்குண்டு. முதன்மையாக இவையே என் எதிர்மறைக் குணங்கள்.
இவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறேன். இந்த கிறுக்குகளை எல்லாம் கூடுமானவரை எழுத்துக்குள் வைத்துக் கொள்கிறேன். என்னை நான் கைவிட்டுவிடும் தருணங்கள், எல்லைமீறும் சொல்லோ செயலோ அமைந்தால் அகங்காரம் நோக்காது மன்னிப்புகோரி விடுகிறேன். அக்கணமே அதைக் கடந்து மேலே செல்ல அது மிக உதவுகிறது என கண்டடைந்துள்ளேன்.
இன்று எனக்கு அறுபதாண்டு நிறைவு. எண்ணிப்பார்க்கையில் இதுவரை இலக்கியச்சூழலில் எவரிடமும் தனிப்பட்ட முறையில் கடுமையான முறையில் நடந்துகொண்டதில்லை, கடுஞ்சொற்களைச் சொன்னதில்லை என்ற நிறைவு எஞ்சுகிறது. ஒரே ஒருமுறை கறாராக ஒருவரிடம் ஓர் அவையில் இருந்து அகலும்படிச் சொன்னேன். அது தவிர்க்கமுடியாதது என்று இப்போதும் உணர்கிறேன். அவர் அதை நிரூபிக்கும்படித்தான் மேலும் நடந்துகொண்டார்.
இலக்கியத்தில் கறாரான விமர்சனங்களை முன்வைத்ததுண்டு – அது ஓர் அறிவுச்செயல்பாடு என நினைக்கிறேன். பலமுறை சொல்மிஞ்சியதுண்டு. அது என் பெரும் குறைபாடு என்றே எண்ணுகிறேன். விமர்சனங்களில் கடுமை என்பது தேவையற்றது என்று இன்று தோன்றுகிறது. ஆயினும் அவ்வப்போது கடுமையாகக் கூறும்படியும் நேர்கிறது. அதை முற்றாக நிறுத்திவிட்டு கடக்கவேண்டும் என நினைக்கிறேன்.
நான் மிகையாக நடந்துகொண்டதெல்லாம் எனக்கு அணுக்கமான குடும்பத்தினரிடமும், குடும்பத்துக்கு வெளியே லக்ஷ்மி மணிவண்ணனிடமும் மட்டுமே. அவர்களுடன் என் உறவு வேறொரு தளத்தில் நிகழ்வது. அவர்களிடம் அதை அன்பால், கடமையால் ஈடுகட்டியிருக்கிறேன் என நினைக்கிறேன். அதை மீறியும் அவர்களிடம் என்மேல் கொஞ்சம் கசப்பு எஞ்சக்கூடும் என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
இந்த நிலையின்மை, கொந்தளிப்பு அனைத்துமே நான் இலக்கியவாதி என்பதுடன் இணைந்தவை. அவற்றை என்னால் முழுக்கச் சீர் செய்துவிட முடியாது. ஏனெனில் சீர் செய்ய வேண்டுமென்றால் எழுதுவதை நிறுத்த வேண்டும். நிறுத்தினால் மட்டும் போதாது, எழுத்தாளன் அல்லாமல் ஆகவேண்டும். அது இனிமேல் சாத்தியமில்லை. எழுத்தாளனாக நான் ‘ஆகவில்லை’ – அவ்வாறு பிறந்திருக்கிறேன். என்றுமே வேறொன்றாக இருந்ததில்லை. ஆகவே சாகும்வரை அவ்வாறுதான் இருக்க இயலுமென்று தோன்றுகிறது.
எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால் இயன்றவரை சமரசம் செய்துகொண்டிருக்கிறேன். என்னைப்போல இத்தனை நண்பர்கள் புடைசூழ இருக்கும் இன்னொரு எழுத்தாளன் தமிழில் இருந்திருக்க மாட்டான் என்றே சொல்வேன். எனக்கு முன் இவ்வாறு இருந்தவர் சுந்தர ராமசாமி.
எனக்கு ஊர் தோறும் நண்பர்கள் இருக்கிறார்கள், நலம் நாடுவோர் இருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் பெருந்திரளென என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், எனக்கு உகந்தவர்கள். என் ஒன்றாம் வகுப்பில் அருகிலிருந்த படித்த நண்பர்கள் இன்றும் நண்பர்களே. மறைந்தவர்கள் தவிர. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை இயல்பும் ஒவ்வொரு வாழ்க்கை முறையும் கொண்டவர்கள். அவர்களுடன் இணைந்து இது வரை வந்திருக்கிறேன். பல நட்புகள் அரைநூற்றாண்டை நெருங்கிவிட்டன. முப்பது நாற்பது ஆண்டுக்கால நட்புகள் இன்றும் அதே நெருக்கத்துடன் தொடர்கின்றன.
இத்தனை ஆண்டுகளில் நானே தேவையில்லை என்று விலக்கி வைத்த மிகச்சிலரே இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆறே ஆறுபேர். அணுக்கமானவர்கள் என்று சொல்லத்தக்க கிட்டத்தட்ட ஆயிரம் நட்புகளில் ஆறுபேர் என்பது ஒப்புநோக்க மிகக்குறைவு. அவ்வண்ணம் விலக்கும் முடிவை மிகமிக யோசித்து, மிகமிக வருந்திய பின்னரே எடுத்திருக்கிறேன்.
தங்களுடைய செயல்களால் ஏதோ ஒரு வகையில் என்னை ஆன்மிகமாக கீழிழுக்கிறார்கள் என உணர்ந்தவர்களை மட்டுமே அவ்வண்ணம் விலக்கியிருக்கிறேன். அதன் வழியாக என்னுடைய படைப்பியக்கத்திற்கு தொந்தரவாகிறார்கள் என்று நான் ஐயமற எண்ணியவர்களை மட்டுமே அவ்வண்ணம் விலக்கியிருக்கிறேன். எழுத்தாளனாக அதைச் செய்யாமலிருக்கவே முடியாது.
மற்றபடி பிறரது அத்தனை ஆளுமைக் குறைபாடுகளையும், பிழைகளையும் பிறரிடம் பொறுத்துக் கொள்ளவே முயல்கிறேன். அதன் பொருட்டு என்னுடனிருக்கும் நண்பர்கள் பலர் என்னைக் குறை சொல்வதும் உண்டு. நான் விலக்கியவர்களைப் பற்றி எண்ணுகையில் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வண்ணம் உள்ளுணர்வால் எடுத்த முடிவு எத்தனை சரியானது என அவர்கள் தொடர்ந்த செயல்பாடுகளால் நிரூபித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
அது இயற்கையின் விசைகளில் ஒன்று. படைப்புத்திறன் செயல்படும்போது அதற்கெதிரான அனைத்து ஆற்றல்களையும் இயற்கை கொண்டு வந்து எதிரே நிறுத்துகிறது. அத்தனை சபலங்களையும் கண்முன் காட்டுகிறது. சற்றே தோற்றுவிட்டால், ஏதாவது ஒன்றில் சற்று சமரசம் செய்து கொண்டால், ஒரு சிறு பலவீனம் வெளிப்பட்டால் அந்த படைப்பியக்கம் முற்றாக அழியும்.
ஏனென்றால் இது ஒரு போர். ஒரு படைப்புசக்தி அதற்கு எதிராக உள்ள நிலைத்த அமைப்புக்கள் அனைத்துடனும் தனித்து நின்று போரிடுகிறது. படைப்பு என்பது முன்னோக்கிய இயக்கம். அதில் தகுதியுடையது மட்டும் வெளிப்பட்டால் போதுமென இயற்கை எண்ணுகிறது. விந்துவில் ஒவ்வொரு உயிர்த்துளிக்கும் எதிராக இயற்கையின் பேருரு தடைச்சுவர் என நின்றிருக்கிறது. வென்று முன்செல்வதே உருவம் கொள்கிறது
தொடங்கிய படைப்புவிசைகளில் பலவகையிலும் தொடக்கநிலையிலேயே அழிந்துவிட்ட, நிகழாமல் போய்விட்ட பல்லாயிரத்தில் ஏதோ ஒன்றுதான் வென்று முன்சென்று படைப்பாகி வென்று நம்மை வந்தடைந்துள்ளது. ஆயிரம் சிலப்பதிகார முயற்சிகளில் ஒன்றுதான் சிலப்பதிகாரம். நம்மைச் சூழ்ந்து கிடப்பது இலக்கு எய்தாமல் முறிந்த கணைகளின் பெருங்குப்பை. அவற்றை எய்து இலக்குபிழைத்தவர்களின் ஆற்றாமையும், கோபமும், வஞ்சமும், புலம்பலும்.
ஆகவே என்னுடைய குறைபாடுகளென நான் உணரும் எதையுமே அவை என் படைப்பியக்கத்துடன் தொடர்புடையவை எனில் எனக்கு நானே மன்னித்துக்கொள்கிறேன். என்னைச் சூழ்ந்திருப்பவர்களிடம் எனது படைப்புகளைக்காட்டி இதன் பொருட்டு மன்னித்துவிடுங்கள் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கொண்டிருக்கிறேன்.
ஜெ
ஒருதுளி காடு- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஆனந்த் குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒருவாறு ஊகிக்கத்தக்கதாகவே இருந்தது. இந்த ஆண்டு முழுக்க நீங்கள் எந்தெந்த கவிஞர்களை கவனித்து அடையாளப்படுத்துகிறீர்கள் என்று பார்த்தாலே போதும். ஆனந்த்குமார், சதீஷ்குமார் சீனிவாசன், கல்பனா ஜெயகாந்த் மூவரில் ஒருவர் விருது பெறுவார் என்று நான் சொல்லியிருந்தேன். ஆனந்த் குமார் வயதில் மூத்தவர். அப்படியென்றால் கணிப்பு சரிதான்.
நீங்கள் விரும்பும், உங்கள் கவிதைவாசக நண்பர்களான கடலூர் சீனு, ஈரோடு கிருஷ்ணன் போன்றவர்கள் விரும்பும் கவிதை என்னவாக இருக்கும் என்றும் சொல்லிவிடமுடியும். அறிவுஜீவிப் பாசாங்கோ, கொள்கைப்பிரகடனமோ இருந்தால் அந்த கவிதையை நீங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனந்த் குமார் கவிதைகள் முகுந்த் நாகராஜன் கவிதைகளுக்குப் பின் அந்தவகையில் அமைந்தவை. குழந்தைகள், செடிகள், பறவைகளின் உலகம். ஆனால் அந்த உலகில் இங்கிருந்து செல்லும் எல்லா உணர்ச்சிகளும் அலையடிக்கின்றன. அண்மையில் வந்த முக்கியமான தொகுதி டிப்டிப்டிப்
செல்வக்குமார்
***
அன்புள்ள ஜெ
ஆனந்த் குமாரின் ஒரு கவிதையை நான் என் மேஜையில் கண்ணாடிக்கு அடியில் வைத்திருந்தேன்.
ஓடும் நீர்
துள்ளிப் பார்த்தது
ஒரு துளி காட்டை
எனக்கு என்னென்னவோ அர்த்தங்களை அளிப்பது இந்தக் கவிதை. என் வாழ்க்கையே இந்தக்கவிதைதான் என்று எனக்குத்தோன்றுவதுண்டு. மிகச்சாமானியமான ஒரு குடும்பத்தில் பிறந்து நான் அடைந்த வாழ்க்கை இந்த ஒரு துளியின் ததும்பல் மாதிரித்தான்
அத்துடன் அந்த ஒரு துளி என்கிற அழகு. ஒரு துளி நீர் என்பது ஒரு கண். முதலைக்கு கண் தனியாக இருப்பதுபோல அந்த ஓடைக்கு கண் கொஞ்சம் தனியாக மேலெழுந்துவிட்டது. இல்லாவிட்டால் அது எப்படி முழுக்காட்டையும் பார்க்கமுடியும்?
அதில் அந்தக்காடு முழுக்கவே தெரியும். பனித்துளியிலே பனை தெரிவதுபோல. இந்தக்கவிதையை இன்றைக்கு , காமிரா ஹைஸ்பீட் ஃப்ரேம் வந்தபிறகுதான் எழுதமுடியும். அற்புதமான ஒரு வரி
மேலும் இன்றைக்குக் கவிதைகளில் அழகு, நம்பிக்கை எல்லாம் அளிக்கும் கவிதை என்பது மிகக்குறைவானது. ஆகவே இந்தவரியை அப்படியே பொத்தி வைத்துக்கொண்டேன்
ஆனால் கவிதையை நான் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன்
ஓடும் நீர்
துள்ளிப் பார்த்தது
காட்டை
என்.ராஜ்
திரள், கடிதங்கள்
திரள்
அன்புள்ள ஜெ
திரள் கட்டுரை வாசித்தேன். சரியான ஒரு தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது தமிழகம் முழுக்கவே திருவிழாக்கள்தான். நான் 2019 வரை என்னால் ஒரு நகரத்தில்தான் வாழமுடியும் என நினைத்திருந்தேன். ஆனால் கொரோனா காலத்தில் ஊரில் வாழ்ந்தபோதுதான் தெரிந்தது என்னால் கிராமத்தில்தான் நிறைவுடன் வாழமுடியும் என்று. ஒரு கணம் சலிப்பில்லை. அப்படி ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை.
அதேபோல கிராமவிழாக்கள் எதிலும் கலந்துகொண்டதில்லை. என்னால் முடியாது என்றே நினைத்தேன். திரள் கட்டுரை வாசித்தபிறகு ஊர்த்திருவிழாவில் கலந்துகொண்டேன். இரண்டுநாட்கள் ஒரு பெரும் களியாட்டம். நீங்கள் கட்டுரையில் சொல்வதுபோல ஒரு நாவலுக்குள்சென்று வாழ்ந்து திரும்பிய அனுபவம்.
சாத்தியம் என நினைக்கவேண்டும். தடையாக இருகும் ஈகோவை கொஞ்சம் களையவேண்டும். அவ்வளவுதான் தேவை.
அர்விந்த்
***
அன்புள்ள ஜெ
திருவிழா என்பவை எப்போதும் உற்சாகம் ,கொண்டாட்டம் தான். ஆமாம் இந்த பல வருடங்களாக குடியும், வண்ண ஃப்ளெக்ஸ்களும், பெரும் வணிகவியல் விளம்பரங்களும், மெதுவாக அரசியலும் கலந்து விட்டன. ஆனாலும் அந்த திரள் அனுபவத்தில் இதுவும் ஒரு பகுதி என ஒதுக்கி விட்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
திரள் பற்றி ஒரு கடிதம் வராதது பற்றி யோசித்து கொண்டேன். மிக சாதாரணமாக, இயல்பாக ஒரு ஊரின் விழாவில் செல்ல முடியாமல், கலந்து குதூகளிக்க முடியாமல் செய்வது எது? தன்னின் பிம்பங்கள் தான் அல்லவா?
தை முதல் கிட்டதட்ட நான்கு மாதங்கள் விழாக்கள் எல்லா ஊரிலும் உள்ளன. சென்னையில் 63 நாயன்மார்கள், மதுரை சித்திரை விழா, பழனி காவடி, பல ஊர்களில் தேர் திருவிழா என ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விசேடம் நடந்தபடி செல்கிறது. பெரும் விழா இல்லாவிட்டாலும் இந்த கோடைகளில் அனுபவிக்க எதேனும் எட்டும் தொலைவில் உண்டு.
எங்கள் ஊரில் இப்போது முடிந்த மாரியம்மன நோம்பு சாட்டல் எனும் திருவிழா இங்கே வருடாவருடம் ஒரு 10 நாள் கொண்டாட்டம்.கோவிட் பிறகு இவ்வருடம். அப்படியே இருப்பது போல தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் அதே அல்ல
விழா ஆரம்பிக்கும் அன்று, கம்பதூண் எனும் ஒரு மரத்தின் பகுதி, கல் தூண் அருகே வைத்து விட, தினமும் கூட்டம் நீர் விட கலசங்களில் வேப்பிலை வைத்து ,பின் மாலைகளில் வந்து அந்த கம்பத்தில் விடுவர். குளிர் மரம் என அந்த வேம்பு கொம்பும் கல் தூணும் நீரில் நனைந்து ஊறி வேப்ப தலை வாசனையுடன் நெஞ்சில் ஏறும்
பூவோடு எடுத்தல் முதலில் பூசாரி தொடங்கி வைக்க, ஊரில் இருந்து கூட்டம் சரம் என வரும். இரவுகளில் அக்னி ஊர்வலம் ஒரு தரிசனம். எப்போது தொடங்கி இருக்கும்??
தீகொழுந்து மண் சட்டியில் அடங்கி எரியும் இந்த வேண்டுதல் எத்தனை வருட தொடர்ச்சி. தெரு மக்கள், கூறிப்பிட்ட ஜாதியினர் என பல அணி அணியாக தீ வலம் வரும். ஊரின் முக்கிய தெருக்களிலும் சென்றபடி இந்த பூவோடு ஊர்வலம், செம்மை படர பெண்கள் முகங்கள் எல்லாம் ஒன்றென ஆகி ஜொலித்து செல்லும். வெண்கல பூவோடு பொன் என தளதளப்பில் செல்லும்.சங்கிலி பூவோடு என்று முதுகில் சங்கிலி தொடர என பல வகை பூவோடு. மறுநாள் நோன்பில் கூட்டம் நெரிக்க அடி விழுந்து கும்பிடும் பெண்கள், பழம், தேங்காய் என சூரை விடுதல்( வான் நோக்கி வீச, சிறுவர் கூட்டம் அள்ள குதிக்க …இவையெல்லாம் ஒரு எளிய ஆனால் ஆழமான தொடர்ச்சி என நினைத்து கொண்டேன்… எதற்கு அக்னியை சுமந்து வருவதும், நீர் கொண்டு ஊர் கம்பத்தில் ஒரு கோடை காலத்தில் ஊற்றி பெருக்குவது? அறிய வேண்டியதில்லை ஆனால் மறந்து அனுபவிக்கலாம்.
சிறுவர்களுக்கு ராட்டினம், சருக்கு என பல விளையாட்டு ஏரியா. பல வகை பொம்மை கடைகள். தீராத அலசல்கள் அவர்களின் கண்களில். பிளாஸ்டிக் இல்லை எனில் இந்த சிறுவர்களுக்கு முக்கால்வாசி இழப்புகள். தின்பதற்கு இருப்பவை ஒரு தனி அகராதி. அல்வா பெரு மலை என இருக்க , அதை அறுத்து வியாபாரம் ஆவதை நீண்ட நாள் கழித்து பார்த்தேன். ஊற்று பார்க்க ஒவ்வொன்றும் பெரிதாக விரிந்தபடி.
இதோ அடுத்து மாகாளியம்மன் கோவில் விழா. இதில் ஒரு இரவு அண்ணமார் கதை உடுக்கு பாட்டும் , படுகளம் விழுதல் நிகழ் என உண்டு. .
லிங்கராஜ்
***
வெண்முரசு கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
எந்த ஒரு இந்திய வாசகனுக்கும் இருக்கும் பெரும் கனவு மகாபாரதத்தை அதன் முழு விரிவுடனும் ஆழமுடனும் இனிய மொழியில் வாசிப்பது. தமிழில் அது வெண்முரசு மூலம் அதை நீங்கள் வாசகர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வகையிலும் இது மகத்தான மாபெரும் சாதனை.
வெண்முரசு வெளிவந்த நாளிலிருந்து நாளும் பலமணி நேரம் அதை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். வெவ்வேறு விதங்களில் – வெவ்வேறு பகுதிகளை இணைத்து முன்னும் பின்னும் . ஒவ்வொரு கதாபாத்திரமாக வாழ்ந்தும். ஆனால் நான் அதில் அடைந்தது என்ன என்பதை வெளிப்படுத்த இயலவில்லை. அதற்கான ஆணை எனக்கில்லை என்றே அதை எடுத்துக் கொண்டு கடந்து செல்கிறேன்.
வாழ்த்துக்கள்
இ.ஆர்.சங்கரன்
***
அன்புள்ள ஜெ
இந்நாளில் நான் வெண்முரசுக்காக உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இலக்கியம் எனக்கு இருபது வயதிலிருந்து ஆரம்பம். ஆனால் எனக்கு தேவையானது வெறும் இலக்கியம் அல்ல. முழுமையாக என்னை மூழ்கடித்து வைத்திருக்கும் ஓர் உலகம். அது வெண்முரசால்தான் அமைந்தது. எட்டு ஆண்டுகளாக நான் அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். முதலில் தொடராக வாசிக்கையில் அதிலுள்ள நிகழ்ச்சிகளும் வர்ணனைகளும்தான் என்னை ஆட்கொண்டன. ஆனால் இன்றைக்கு அதை குறியீடுகளும் தத்துவங்களுமாக வாசிக்கிறேன்.
அர்ஜுனனின் பயணங்களைப் பற்றி வெண்முரசில் எழுதியிருந்ததைப் பற்றி அப்போது ஒருசிலர் அர்ஜுனன் அங்கெல்லாம் போயிருக்க முடியுமா, அங்கே போய் அப்படி எதைச் சாதித்தான் என்றெல்லாம் விவாதித்தார்கள். அப்போதே அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்று எனக்கு தோன்றியது. இப்போது வாசிக்கையில் வேதங்கள் தோன்றிய திசைகளை நோக்கித்தான் அர்ஜுனன் பயணம் செய்திருக்கிறான் என்பது புரிந்து ஒரு பெரிய திகைப்பு ஏற்படுகிறது. வேதங்களில் வாருணம் தோன்றிய பகுதி மேற்கே சாவுகடல் வரையும் ஐந்திரம் தோன்றிய பகுதி கிழக்கே பர்மா எல்லை வரையும் விரிந்திருக்கிறது. அந்த எல்லைகளை எல்லாம் சென்று தொட்டு நடுவே மையத்தில் அர்ஜுனன் பாசுபதத்தை கண்டுகொள்கிறான். வேதசாரமாக பாசுபதமே முன்வைக்கப்படுகிறது
ஒரு சைவனாக எனக்கு மயிர்க்கூச்செறியச் செய்த இடம் இது. அவ்வளவு பெரிய பயணத்தின் நடுவே கிராதனாக சிவன் உமையுடன் வந்து நிற்குமிடம். அதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும். நம் மரபிலுள்ள குறியீடுகள், நம் மரபில் பேசப்பட்ட தத்துவங்கள் பற்றிய ஒரு அறிமுகம் வேண்டும். குறைந்தபட்சம் கேட்டுத்தெரிந்துகொள்ளும் மனசாவது வேண்டும்.
வெண்முரசிலேயே எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. வணக்கம்
பிரபாகர் கிருஷ்ணா
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

