திரள், கடிதங்கள்

திரள்

அன்புள்ள ஜெ

திரள் கட்டுரை வாசித்தேன். சரியான ஒரு தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது தமிழகம் முழுக்கவே திருவிழாக்கள்தான். நான் 2019 வரை என்னால் ஒரு நகரத்தில்தான் வாழமுடியும் என நினைத்திருந்தேன். ஆனால் கொரோனா காலத்தில் ஊரில் வாழ்ந்தபோதுதான் தெரிந்தது என்னால் கிராமத்தில்தான் நிறைவுடன் வாழமுடியும் என்று. ஒரு கணம் சலிப்பில்லை. அப்படி ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை.

அதேபோல கிராமவிழாக்கள் எதிலும் கலந்துகொண்டதில்லை. என்னால் முடியாது என்றே நினைத்தேன். திரள் கட்டுரை வாசித்தபிறகு ஊர்த்திருவிழாவில் கலந்துகொண்டேன். இரண்டுநாட்கள் ஒரு பெரும் களியாட்டம். நீங்கள் கட்டுரையில் சொல்வதுபோல ஒரு நாவலுக்குள்சென்று வாழ்ந்து திரும்பிய அனுபவம்.

சாத்தியம் என நினைக்கவேண்டும். தடையாக இருகும் ஈகோவை கொஞ்சம் களையவேண்டும். அவ்வளவுதான் தேவை.

அர்விந்த்

***

அன்புள்ள ஜெ

திருவிழா என்பவை எப்போதும் உற்சாகம் ,கொண்டாட்டம் தான். ஆமாம் இந்த பல வருடங்களாக குடியும், வண்ண ஃப்ளெக்ஸ்களும், பெரும் வணிகவியல் விளம்பரங்களும், மெதுவாக அரசியலும் கலந்து விட்டன. ஆனாலும் அந்த திரள் அனுபவத்தில் இதுவும் ஒரு பகுதி என ஒதுக்கி விட்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

திரள் பற்றி ஒரு  கடிதம் வராதது பற்றி யோசித்து கொண்டேன். மிக சாதாரணமாக, இயல்பாக ஒரு ஊரின் விழாவில் செல்ல முடியாமல், கலந்து குதூகளிக்க முடியாமல் செய்வது எது? தன்னின்  பிம்பங்கள் தான் அல்லவா?

தை முதல் கிட்டதட்ட நான்கு மாதங்கள் விழாக்கள் எல்லா ஊரிலும் உள்ளன. சென்னையில் 63 நாயன்மார்கள், மதுரை சித்திரை விழா, பழனி காவடி, பல ஊர்களில் தேர் திருவிழா என ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விசேடம் நடந்தபடி செல்கிறது. பெரும் விழா இல்லாவிட்டாலும் இந்த கோடைகளில் அனுபவிக்க எதேனும் எட்டும் தொலைவில் உண்டு.

எங்கள் ஊரில் இப்போது முடிந்த மாரியம்மன நோம்பு சாட்டல் எனும் திருவிழா இங்கே வருடாவருடம் ஒரு 10 நாள் கொண்டாட்டம்.கோவிட் பிறகு இவ்வருடம். அப்படியே இருப்பது போல தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் அதே அல்ல

விழா ஆரம்பிக்கும் அன்று, கம்பதூண் எனும் ஒரு மரத்தின் பகுதி, கல் தூண் அருகே வைத்து விட, தினமும் கூட்டம் நீர் விட கலசங்களில் வேப்பிலை வைத்து ,பின் மாலைகளில் வந்து அந்த  கம்பத்தில் விடுவர். குளிர் மரம் என அந்த வேம்பு கொம்பும் கல் தூணும் நீரில் நனைந்து ஊறி வேப்ப தலை வாசனையுடன் நெஞ்சில் ஏறும்

பூவோடு எடுத்தல் முதலில் பூசாரி தொடங்கி வைக்க, ஊரில் இருந்து கூட்டம் சரம் என வரும். இரவுகளில்  அக்னி ஊர்வலம் ஒரு தரிசனம். எப்போது தொடங்கி இருக்கும்??

தீகொழுந்து மண் சட்டியில் அடங்கி எரியும் இந்த வேண்டுதல் எத்தனை வருட தொடர்ச்சி. தெரு மக்கள்,  கூறிப்பிட்ட ஜாதியினர் என பல அணி அணியாக தீ வலம் வரும். ஊரின் முக்கிய தெருக்களிலும் சென்றபடி இந்த பூவோடு ஊர்வலம், செம்மை படர பெண்கள் முகங்கள் எல்லாம் ஒன்றென ஆகி ஜொலித்து செல்லும். வெண்கல பூவோடு பொன் என தளதளப்பில் செல்லும்.சங்கிலி பூவோடு என்று முதுகில் சங்கிலி தொடர என பல வகை பூவோடு. மறுநாள் நோன்பில் கூட்டம் நெரிக்க அடி விழுந்து கும்பிடும் பெண்கள், பழம், தேங்காய் என சூரை விடுதல்( வான் நோக்கி வீச, சிறுவர் கூட்டம் அள்ள குதிக்க …இவையெல்லாம் ஒரு எளிய ஆனால் ஆழமான தொடர்ச்சி என நினைத்து கொண்டேன்… எதற்கு அக்னியை சுமந்து வருவதும், நீர் கொண்டு ஊர் கம்பத்தில் ஒரு கோடை காலத்தில் ஊற்றி பெருக்குவது? அறிய வேண்டியதில்லை ஆனால் மறந்து அனுபவிக்கலாம்.

சிறுவர்களுக்கு ராட்டினம், சருக்கு  என பல விளையாட்டு ஏரியா. பல வகை பொம்மை கடைகள். தீராத அலசல்கள் அவர்களின் கண்களில். பிளாஸ்டிக் இல்லை எனில் இந்த சிறுவர்களுக்கு முக்கால்வாசி இழப்புகள். தின்பதற்கு இருப்பவை ஒரு தனி அகராதி. அல்வா பெரு மலை என இருக்க , அதை அறுத்து வியாபாரம் ஆவதை நீண்ட நாள் கழித்து பார்த்தேன்.  ஊற்று பார்க்க ஒவ்வொன்றும் பெரிதாக விரிந்தபடி.

இதோ அடுத்து மாகாளியம்மன் கோவில் விழா. இதில் ஒரு இரவு அண்ணமார் கதை உடுக்கு பாட்டும் , படுகளம் விழுதல் நிகழ் என உண்டு. .

லிங்கராஜ்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.