Jeyamohan's Blog, page 794
April 17, 2022
ஒளிமாசு- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள், தங்கப்பதக்கம் வாங்கியவர்கள், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள், எனினும் இந்த சந்தேகத்தை ஒருவர் கூடக் கேட்டதில்லை.
பிற துறைகளை காட்டிலும் தாவரவியல் துறையில் இயற்கையோடு நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனினும் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதையும் அவைகளையும் சக உயிரினங்களாக பார்க்க வேண்டும் என்பதையும் உணரும் தாவரவியலாளர்களை நான் சந்தித்ததில்லை. விதிவிலக்காக பனைப்பாதிரி காட்சன் மட்டும் இருக்கிறார் எனக்கு தெரிந்து. தாவரங்களை அப்படி சக உயிராக பாவித்து தான் சக்திவேல் என்னிடம் அந்த சந்தேகத்தை கேட்டார்.
தன் வீட்டு மனோரஞ்சித செடி இரவு முழுக்க விளக்கு ஒளியில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “ஒளிச்சேர்க்கைக்கு தாவரங்களுக்கு ஒளி அவசியம் ஆனால் இப்படி இரவிலும் அவற்றின் மீது இப்படி செயற்கை ஒளி விழுந்துகொண்டே இருந்தால், அவற்றிற்கு எந்த பாதிப்பும் இருக்காதா? நாம் உறங்க வேண்டிய இரவில் இப்படி வெளிச்சம் இருந்து கொண்டிருந்தால் எரிச்சலடைகிறோமே அப்படி அவற்றிற்கும் இருக்குமா” என்று சக்திவேல் கேட்டார். இந்த கேள்வியை கேட்கவும் அப்படி அவற்றின் கஷ்டங்களையும் நினைத்து பார்க்கவும் மனதில் கனிவு வேண்டும்.
பலருக்கு இல்லாத இதுதான் ’தாவரக் குருடு’, plant blindness எனப்படுகிறது. சாலை விபத்துகளின்போது அடிபட்டவர்களுக்கு உதவ, அவர்களுக்கு வருத்தப்பட, ஆம்புலன்ஸை அழைக்க, அவர்கள் குறித்து பேச என்று அநேகமாக பலர் இருக்கிறார்கள். ஒருமுறை இருசக்கர வாகன விபத்தொன்றில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டுவிட்டது. ஒரு இளைஞர் கடைசிக்கணத்தில் இருந்த அந்த நாய்க்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மரம் வெட்டப்படுகையில் அதை ஒரு பொருட்டாகக் கூட நினைப்பதில்லை. கோவை பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தின் போது நூற்றுக்கணக்கான பெருமரங்கள் வெட்டப்பட்டன. அவறைவெட்டி அகற்றும் பொருட்டு பேருந்துகள் சற்று நேரம் நிறுத்தப்படுகையில் பலரும் வாழைப்பழம் போல அவை அறுக்கப்படுவதை வியப்புடன் வேடிக்கை பார்த்தார்கள். பலர் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாவதற்கு சலித்துகொண்டர்கள். வெகு சிலரே “இருக்கற மரத்தையும் வெட்டிட்டா இனி எப்படி மழை வருமெ”ன்று பேசிக்கொண்டார்கள், அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு படுகொலை என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் தாவரங்கள் அலறுவதில்லை, ரத்தம் சிந்தவில்லை. எனவே அவற்றை மக்கள் கண்டுகொள்ளவில்லை
சமீபத்தில் நான் ஒரு கல்லூரியில் உரையாற்றுகையில் ஒரு அடர் காட்டில் இரண்டு டைனோசர்கள் இருக்கும் புகைப்படத்தை காட்டி ’என்ன தெரிகிறது’? என்று கேட்டேன். பார்வையாளர்கள் பலர் டைனோசர் என்று கூறினார்கள். ஒருவர் கூட அந்த காட்டில் பச்சை பசேலென்று டைனோசர்களை சுற்றி இருந்த மரங்கள், புதர்கள் சிறு செடிகளை பார்க்கவும், கவனிக்கவும், சொல்லவும் இல்லை. நகருதல் இல்லாமல் ஓரிடத்தில் இருப்பதால் தாவரங்களை அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கிறார்கள்.
அவையும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன என்பதையெல்லாம் நம்மில் பலர் அறிவதில்லை
சக்திவேலின் சந்தேகத்துக்கு அப்போதே மகிழ்வுடன் பதில்களை அனுப்பி வைத்தேன்
இப்படியான மிகை ஒளி, காலம் தப்பிய ஒளி தாவரங்களின் மீது பொழிந்து கொண்டே இருப்பது ஒளிமாசு எனப்படுகின்றது
தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகள் உண்டு.இது photoperiodism எனப்படும் ஒவ்வொரு தாவரங்களுக்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை long day plants என்றும் குறைந்த நாட்டமுடையவை short day plants என்றும் இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை day neutral plants என்றும் வகைப்படுத்தப்படுகின்றன
இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழபத்துக்குள்ளாகின்றன.
விஷ்ணுபுரம் குழுமத்தில் ஒரு மருத்துவர் இந்த non 24 வகை பிரச்சனை உள்ளவர். உயிரி கடிகார கணக்கு பிறழ்ந்துவிட்டிருப்பதால் உறங்குவதில் அவருக்கிருக்கும் பிரச்சனை குறித்து உங்களுக்கு அவர் கோவிட் தொற்று காலத்துக்கு முன்பு கடிதங்கள் எழுதி இருக்கிறார்
அவருக்கிருப்பதைபோலவே பிரச்சனைகள் தாவரங்களுக்கும் உண்டாகின்றன.
ஒளியின் அலைநீளம், அளவு மற்றும் ஒளி விழும் கால அளவு ஆகியவை தாவரங்களுக்கு நேரடியான பாதிப்பை உண்டாக்கும். ஒளிநாட்ட கணக்குகள் நிறமிகள் உருவாக்கம், இலை உதிர்தல், இலைத்துளை திறந்து மூடுதல்,இலை மொட்டுக்கள் உருவாதல், மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் மற்றும் விதை உறக்கம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் மிகை ஒளி இவை அனைத்தையும் பதிக்கும்.
இரவில் மலரும் நிஷாகந்தி போன்ற மலர்களும், அவற்றை மென்னொளியில் மகரந்த சேர்க்ககை செய்யவரும் இரவடிகளான பூச்சிகளும் இதனால் பாதிப்படைகின்றன
ஒவ்வொரு உயிருக்கும் , ஒரு செல் நுண்ணுயிரியாகட்டும், தாவரங்கள் மனிதர்கள் என அனைத்து உயிர்களுக்குமே இரவு பகலால் அமையும் அன்றாட, பருவகால மற்றும் சூரிய சந்திர சுழற்சிகளுக்கு ஏற்ப உடலியக்கம் மற்றும் பிற செயல்பாடுகள் நிகழ்கின்றன. தாவரங்களுக்கு ஒளி, வெப்பம் மழை ஆகியவை சமிக்ஞைகள். அவற்றைக்கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல். ஆகியவற்றைக் காலக்கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.
பகலில் ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் அவற்றிற்கு இரவில் சுவாசிக்க வேண்டி இருக்கிறது.
காலை எழுந்து நாளை துவங்க அலாரம் வைத்துக்கொள்பவர்களும் அலாரம் ஒலி கேட்காமல் தூங்குபவர்களும் நம்மில் பலர் இருக்கையில், மாலை நான்கு மணிக்கே இலைகள் கூம்பி உறங்கும் தூங்கு வாகையை, மிகச்சரியாக மாலை 4 மணிக்கு மலரும் அந்தி மந்தாரையை, பெண் மலர்கள் கருவுற்றதை அறிந்து, மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் தென்னையின் ஆண் மலர்கள், இனி அவை இருந்தால் கனி உருவக்கத்துக்கு செல்வாகும் ஆற்றல் தங்களுக்கும் பகிரப்பட்டு வீணாகும் என்று அனைத்தும் ஒரே சமயத்தில் உதிர்ந்து விடுவதையெல்லாம், கவனித்திருக்கும் சிலருக்கு மட்டுமாவது கொஞ்சம் தெரிந்திருக்கும் மிகை ஒளி மாசினால் தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறித்து.
தாவரவியலில் Plant Biological Rhythms என்னும் மிக முக்கியமான உயிரியல் நிகழ்வில் மிகை ஒளியால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கவில்லை எனினும் கவனிப்புக்குள்ளாகி இருக்கிறது இந்த விஷயம்.
நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று மெல்ல மெல்ல இந்த விஷயம் தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.
தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்.
சக்திவேல் கேட்ட சந்தேகத்தை சொல்லி மாணவர்களை மெல்லக் கடிந்து கொண்டேன். தாவரக் குருடுகளாயிருந்து கொண்டு. தங்கப்பதக்கம் வாங்குவதன் பொருளின்மையை அன்றைய வகுப்பில் பேசினேன்.
சக்திவேலின் கனிந்த மனதிற்கு என் அன்பும் நன்றியும்,
அன்புடன்
லோகமாதேவி
***
ஓர் உரையாடல்
அன்புள்ள ஜெ
பர்வீன் சுல்தானா உரையாடலின் எதிரொலிகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு பெண்ணிடம் உரையாடல். அவர் இதுபற்றிய ஏகப்பட்ட மீம்கள், எதிர்வினைகளை ஷேர் செய்தவர்.
கதிர்வேல்
*
அவர் :பல்லவர் காலத்துலதான் சங்க இலக்கியம் எழுதப்பட்டதுன்னு ஜெமோ சொல்றார். சங்க இலக்கியமே இல்லேன்னு சொல்றார். அட்ரோஷியஸ்!
நான்: நேர் தலைகீழால்ல சொல்லியிருக்கார். 1971 வரை வெள்ளைக்கார ஆய்வாளர்கள் பலர் அப்டிச் சொல்லிட்டிருந்தாங்க. தொல்லியல் தரவுகளை வைச்சு அப்டி இல்லேன்னு நிருபிச்சோம்னுதானே சொல்றார்?
அவர்: நீங்கதான் திரிக்கறீங்க. கீழடி தொன்மையான ஊரே கெடையாதுன்னு சொல்றார்
நான் :இல்லியே, அது 2100 வருசம் தொன்மையானதுன்னு சர்க்கார் சொல்றதை அப்டியே ஏத்துக்கிட்டுதானே பேசறார்? அது சங்ககாலத்துக்கான சான்றுன்னுதானே சொல்றார்?
அவர்: இதெல்லாம் சப்பைக்கட்டு. அவர் தனித்தமிழிலே பேசுறத கொச்சைப்படுத்தறார்
நான்:இல்லியே. அந்தப்பேட்டியிலேயே அவர் தமிழியக்கத்த பயங்கரமா ஆதரிச்சுதானே பேசுறார்? நவீன இலக்கியத்திலே அவர்தான் தனித்தமிழ்லே நாவல்களை எழுதினவர்னுதானே சொல்றார்
அவர்: அவர் தமிழறிஞர்களை அவமானப்படுத்தறார்
நான்: இல்லியே அவர் தமிழறிஞர்களை போற்றி புகழ்ந்துதானே பேசியிருக்கார்
அவர்: ஜெயமோகனுக்கு எதுக்கு தமிழ்நாட்டு பேச்சு? அவரு மலையாளி
நான்: மலையாளிக்கும் கீழடியும் மத்த ஊர்களும் பொதுதானே? அவருக்கும் பழந்தமிழ் நாகரீகம்தானே கடந்தகாலம்? அதை அவர் பலதடவை எழுதியிருக்கார். பேட்டியிலேயே கொற்றவை பற்றி பேசுறப்ப அதைத்தானே சொல்றார்?
அவர்: அவரு ஏன் பேசணும்? அவரு என்ன தொல்லியல் அறிஞரா?
நான் :இல்லியே, அவர் தொல்லியல் ஆய்வு செஞ்சு எதையும் கண்டுபிடிச்சதா சொல்லலியே? புக்ல இருக்கிறத சொல்றார்
அவர்: நாகசாமி ,ஐராவதம்லாம் தமிழ் துரோகிகள்…
நான் :அப்ப நாகசாமி அதியமான் கல்வெட்டையும் புகளூர் கல்வெட்டையும் வைச்சு சங்ககாலத்தை நிரூபிச்சது தப்பா? ஐராவதம் கண்டுபிடிச்ச சங்ககால கல்வெட்டெல்லாம் தப்பா? சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு தமிழோட தொடர்பு இருக்கலாம்னு ஐராவதம் மகாதேவன் சொல்றது தப்பா?
அவர்: அவங்க கண்டுபிடிக்கலேன்னா தமிழன் கண்டுபிடிச்சிருப்பான்… ஜெயமோகனுக்கு தமிழ் சோறுபோடுது. அங்க மலையாளத்திலே அவரை சீண்டுறதே இல்லை..
நான்: ஜெயமோகன உங்களுக்கு முன்னாடி தெரியுமா?
அவர்: நான் எதுக்கு தெரிஞ்சுகிடணும்
நான் : அங்க மலையாளத்திலே ஆண்டுக்கு மூணுநாலுவாட்டி லீடிங் பத்திரிகைகளிலே அட்டையிலே அவர் வர்ரார்… அவரோட புக்ஸ் லட்சம் காப்பி விக்குது. இத்தனைக்கும் மலையாளத்திலே நாலஞ்சு புக்ஸ்தான் எழுதியிருக்கார்.
அவர் :ஜெயமோகனுக்கு என்ன தமிழ் தெரியும்? அவர் ஏன் தமிழ்ல எழுதணும்?
நான்: நான் ஜெயமோகனோட ஒரு புக் தர்ரேன். ஒரே ஒருபக்கம் படிச்சு அர்த்தம் என்னன்னு சொல்ல முடியுமா?
அவர்:நான் எதுக்கு படிக்கணும்? யூடியூபிலே அந்தாளை தோலுரிச்சு தொங்கவிடுறாங்க…
நான் :உங்கள மாதிரி ஆளுங்க, இல்ல?
அவர்: (மகிழ்ச்சியாக) ஆமா
நான் :செய்ங்க… (கைகூப்பல்)
*
இலக்கிய ஒலி இணையதளம்
பலனை பற்றி நினைக்காமல் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்யும் போது அது தன் இடத்தை தானே அடையும் என்று உங்கள் எழுத்து வழியாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் கதைகளை தொடர்ந்து இலக்கியஒலி youtube channel லில் ஒலி வடிவில் பதிவு செய்து வருகிறேன். அதன் அடுத்தகட்டமாக ஒரு வலைத்தளத்தையும் உருவாக்கி இருக்கிறேன். ilakiyaoli.com. இலக்கியத்தில் உள் நுழைய இதுவும் ஒரு வாயிலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இலக்கிய ஒலி இணையதளம்நன்றி
சே. சிவக்குமார்
***
ஒரு கதைமுயற்சி,ஒரு வழிகாட்டல்
எழுதும் கலை, வாங்க
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா, வணக்கம்!
என் பெயர் ஸ்ரீராம். நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இதுவரையில் வெகுசில புத்தகங்களே படித்துள்ளேன். அவற்றில் தங்களது ‘அறம்’, ‘புறப்பாடு’ மற்றும் ‘இரவு’ நூல்களும் அடக்கம்.
ஒரு சிறு முயற்சியாக சமீபத்தில் ‘ஒரு சந்திப்பு’ என்ற சிறுகதை எழுதியுள்ளேன். அது எந்தளவு ஒரு சிறுகதையாய் வந்திருக்கிறது என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அதனை படித்து பார்த்து கருத்து சொல்லும் அளவுக்கு என்னை சுற்றி படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் யாருமில்லை.
உங்களது எழுத்துகளை பார்த்து நான் வியந்துள்ளேன். எனவே, நான் எழுதியுள்ள இந்த சிறுகதையை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். முடிந்தால் படித்து பார்த்து தங்களது கருத்தினை கூறவும்.
தங்களிடமிருந்து வரும் பதில் என்னை மேலும் படிக்க, எழுத ஊக்கப் படுத்தும். நன்றி.
‘ஒரு சந்திப்பு’ சிறுகதைக்கான லிங்க்:
https://dayofadaydreamer.wordpress.com/2022/03/09/oru-sandhippu/
– ஸ்ரீராம்.
***
அன்புள்ள ஸ்ரீராம்,
பொதுவாக நான் இந்தவகையான அமெச்சூர் எழுத்துக்களை வாசிக்க நேரம் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு இப்படி புதியவர்களின் கதைகள் அனுப்பப்படுகின்றன. அவற்றை வாசித்தால் என் பொழுது வீணாகும். நான் மிகப்பெரிய பணிகளில், பயணங்களில், சினிமா வேலைகளில் இருந்துகொண்டிருப்பவன். பணமாகப் பார்த்தால் கூட என் பொழுதுகள் இங்குள்ள ஓர் உயர்நிலை நிர்வாகியின் நேரத்துக்கு இணையானவை.
இந்தக்கதையை வாசித்தேன், இது சிறிது என்பதனால்.
அந்த முதியவரின் எதிரில் அமர்ந்து, சைடிஷ்ஷை பிரித்து பின் மது பாட்டிலை ஓப்பன் செய்தான் அந்த இளைஞன். யார் வந்திருப்பது என தனது மதுக் கோப்பையிலிருந்து சற்று நிமிர்ந்துப் பார்த்தார் அந்த முதியவர். எங்கோ பார்த்த முகம்…
எத்தனை முறை அந்த வந்திருக்கிறது என்று பாருங்கள். ஏனென்றால் நடை உருவாகவில்லை. நடை எங்கிருந்து உருவாகும்? உங்கள் கடிதத்திலேயே அதற்கான பதில் உள்ளது. நீங்கள் எதையும் வாசிக்கவில்லை. நீங்கள் எதையும் வாசிக்க மாட்டீர்கள், ஆனால் உங்களை மற்றவர்கள் வாசிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள், இல்லையா?
இசையோ, ஓவியமோ வேறெந்த கலையிலாவது எந்தப் பயிற்சியுமில்லாமல் ஒருவர் திடீரென்று இறங்கிவிட முடியுமா? இலக்கியத்தில் மட்டும் இறங்கலாமென எப்படி முடிவெடுத்தீர்கள்?
முதலில் தமிழின் தலைசிறந்த சிறுகதைகளை படியுங்கள். குறைந்தது 500 சிறுகதைகள். குறைந்தது 100 நாவல்களை படியுங்கள். அதன்பின் எழுதலாமா என முடிவெடுக்கலாம். மொத்தமாகவே இரண்டு ஆண்டுகள் தீவிர வாசிப்பு போதும் அதற்கு. இரண்டு ஆண்டுகளில் கற்றுக்கொள்ளக்கூடிய வேறெந்த கலையும் இல்லை.
அப்படி வாசித்தால் என்னென்ன இதுவரை எழுதப்பட்டுள்ளது என்று தெரியும். இனிமேல் என்ன எழுதலாம் என்ற தெளிவும் வரும்.
எழுதுவது வாசிப்பது பற்றி நான் பல நூல்களை எழுதியிருக்கிறேன். ஆர்வமிருந்தால் அங்கிருந்தே தொடங்கலாம்
ஜெ
April 16, 2022
அரசியின் விழா
இந்தமுறை மதுரை மீனாட்சி திருமணத்துக்குச் சென்றாகவேண்டும் என்னும் முடிவில் இருந்தேன். நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி பரவி கடைசியில் பதினெட்டுபேர் உடன் வருவதாக ஆகிவிட்டது. ஆனால் இறுதியில் ஓர் இக்கட்டு. 17 ஆம் தேதி கன்யாகுமரியில் நான் பேசவேண்டும், கவிதைப்பட்டறை நிறைவுரையாக. 16 ஆம் தேதி அழகர் ஆற்றிலிறங்குவதை கண்டுவிட்டு திரும்பலாம். ஆனால் கொஞ்சமேனும் இளைப்பாறவேண்டும். ஆகவே அடுத்த முறை அழகரை காணலாமென முடிவுசெய்துவிட்டு மீனாட்சி கல்யாணத்துக்குச் செல்ல முடிவெடுத்தோம்
மதுரையின் வெயில் பற்றிய கடுமையான தொன்மங்கள் மிரட்டின. கொஞ்சம் கொஞ்சமாக நான் வெயில்தாள முடியாதவனாக ஆகிவிட்டிருக்கிறேன். ஏஸியிலேயே பெரும்பாலான பொழுதுகள் கழிகின்றன. உடல் அதற்கு பதப்பட்டிருக்கிறது.
13 ஆம் தேதி மாலை கிளம்பி இரவு மதுரை சென்றேன். நண்பர்கள் வந்து ரயில்நிலையத்தில் காத்திருந்தார்கள். ராஜா லாட்ஜ் என்னும் சிறிய விடுதிக்குச் சென்றோம். மீனாட்சி கோயில் வாசலிலேயே அறைபோடவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். எவராவது நண்பர்களின் வீடு அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் விடுதிக்கு திருச்செந்தாழை வந்திருந்தார். நண்பர்களுடன் இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தேன்.
காலையில் எழுது மீனாட்சி கோயிலுக்குச் சென்றோம். மொத்த மதுரையுமே இன்னொன்றாக தெரிந்தது. மதுரைக்கு எப்போதுமே ஒரு திருவிழா நெரிசல் உண்டு. இது உபரி நெரிசல். எங்குபார்த்தாலும் மலர்சூடிய பெண்கள். பதினாறு பதினேழு வயது பையன்கள்கூட உற்சாகமாக பீப்பீ ஊதினார்கள். ஒன்று வாங்கி ஊதலாம் என நினைத்து அடக்கிக்கொண்டேன்.
ஆச்சரியமாக 14 அன்று மதுரையில் வெயில் மிகக்குறைவு. வானம் மூட்டமிட்டிருந்தது. அபாரமான வானவில்லை மாலையில் காணமுடிந்தது. எங்கு பார்த்தாலும் புதிய மஞ்சள்கயிறு தரித்த பெண்கள். ஆனால் அத்தனைபேருக்கும் வெயில் பழகிவிட்டிருந்தது. மதுரையில் பெண்கள் எல்லாருமே வெயிலுகந்த அம்மன்கள்தான்போல.
மதுரையில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. திருவிழாவில் பெரும்பாலானவர்கள் எங்கோ உணவருந்துகிறார்கள் என்று தோன்றியது. நாங்கள் திரும்பத் திரும்ப ஒரே ஓட்டலில்தான் சாப்பிட்டோம். ஆனால் ஒருமுறைகூட சுவை குறைவான உணவைச் சாப்பிடவில்லை. சைவ உணவிலும் உறுதியான சுவையை மதுரையில் எதிர்பார்க்கலாமென தெரிந்தது. அசைவ உணவில் மதுரை மெஸ்களை நெருங்குவதைப் பற்றி தமிழகம் இன்னும் கற்பனைகூட செய்யமுடியாது.
மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருள்வதைப் பார்க்கச் சென்று நின்றிருந்தோம். நெரிசல் மிகுந்து மேலும் நெரிசல். தலைகள். மேலே மிதந்தபடி மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் செல்வதை தொலைவிலிருந்து கண்டோம். பெருவாயிலில் இருந்து ஒளியுடன் சப்பரம் தோன்ற, பல்லாயிரம் தொண்டைகளில் இருந்து வாழ்த்தொலிகள் எழும் தருணம் காலாதீதமானது. பாண்டியர்செல்வி, நாயக்கர்களின் அரசி. என்றுமுள தென்னகத்திறைவி.
என்னென்னமோ விற்றுக்கொண்டிருந்தார்கள். இத்தனை கடைகள் வந்தபின்னரும் தேர்த்திருவிழாக்களில்தான் இரும்பு வாணலியும், இடிகல்லும் குழவியும் வாங்குகிறார்கள். ஊதா, ரத்தச்சிவப்பு வண்ணங்களில் சீனிமிட்டாயும் சவ்வு மிட்டாயும் வாங்கி தின்றோம். கிருஷ்ணனுக்கு சவ்வுமிட்டாயில் வாட்ச் வாங்கி தரவா என்று கேட்டேன். கொஞ்சம் சபலப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு மறுத்துவிட்டார்.
என்ன இல்லாமலாகியிருக்கிறது? சவுரிமுடி! அதை எங்குமே காணவில்லை. மரிக்கொழுந்துக்கு இது சீசன் இல்லையா? எங்குமே காணவில்லை. ஆனால் எங்குபார்த்தாலும் ‘மதுரைமல்லி’. தோவாளையில் கிலோ மூவாயிரம் ரூபாய்க்கு போகிறது. மதுரையில் பாதிப்பெண்கள் அரைக்கிலோ சூடியிருந்தனர். அரசு மானியம் ஏதாவது கொடுக்கப்படுகிறதா என விசாரிக்கவேண்டும்.
சாப்பிட்டுவிட்டு கிளம்பி அழகர்கோயில் சாலைக்குச் சென்றோம். அங்கே மண்டகப்படிகளை ஏற்றுக்கொண்டு வந்துகொண்டிருந்த அழகரை வழியில் சென்று சந்தித்தோம். களிவெறிதான் எங்கும் நிறைந்திருந்தது. அழகரின் பல்லக்கு அசைந்து எழுந்தபோது கல்தூண்கள்கூட வாழ்த்தொலியுடன் அதிர்வதாகத் தோன்றியது.
திரும்பி வந்து படுத்தபோது பின்னிரவு மூன்று மணி. காலையில் எழுந்து குளித்து ஓடிச்செல்வதற்குள் மீனாட்சியின் தேர் கிளம்பிவிட்டிருந்தது. நகரின் சந்துகளில் சுற்றிச்சுற்றி சென்று முனைகளில் கூடிய கூட்டத்தில அலைக்கழிந்தபடி நின்று தேர் நகர்வதைப் பார்த்தோம். ஒரு மாபெரும் ஆலயக்கோபுரம் உயிர்கொண்டு வீதியில் இறங்குவதுபோல. அதிர்வுகளும் குலுக்கங்களுமாக பூத்த மலர்க்குன்று ஒன்று ஊர்ந்து செல்வதுபோல. குரல்களின் விசையே அவற்றை இழுத்துச் செல்கிறதென்று தோன்றியது.
வெயில் எரித்து எரித்து உடலையே உருகச்செய்வதுபோலிருந்தது. ஒரு தொப்பி போட்டிருக்கலாம். என் வழுக்கைத் தலை பொசுங்கி கருமையாகிவிட்டது. ஆனால் எங்களூர் வழக்கப்படி தெய்வத்தின் முன் தலையில் ஏதும் அணிந்திருக்கக்கூடாது.
வயலில் வெந்த கரிய முகங்களில் வழியும் வியர்வையின் ஆவி. மண்ணில் இருந்து எழுந்து மண்ணால் ஆனவர்கள் போன்ற மக்கள். வெயிலில் திளைக்கும் கைக்குழந்தைகளை இங்குதான் காண்கிறேன். இந்த மக்களுடன் இருக்கையில்தான் நான் என் இடத்தில் மிச்சமில்லாமல் பொருந்தியிருக்கிறேன் என்றும், விராடரூபன் என்றும், அழிவற்றவன் என்றும் உணர்கிறேன்.
இரண்டுநாட்கள் அலைந்துகொண்டே இருந்தோம். சிரித்துக்கொண்டு, கூச்சலிட்டுக்கொண்டு. சுற்றிலும் எல்லா முகங்களிலும் சிரிப்பு. யாரோ யாரையோ அழைக்கிறார்கள். எல்லாரும் எல்லாரையும் ’ஏண்ணே’ என்கிறார்கள். தோள்களாலேயே முட்டி முட்டி மனிதர்களை உணர்ந்துகொண்டே இருந்தோம்.
திரும்பி வந்தபின் கிருஷ்ணனிடம் சொன்னேன். “இரண்டுநாட்கள் கொண்டாட்டமாக இருந்தோம். அப்படி பல இடங்களில் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறோம். ஆனால் மற்ற எல்லா இடங்களிலும் அறிந்துகொள்ளுதல் என்று ஒன்று நடந்தது. மூளை விழித்திருந்தது. இங்கே எந்த அறிதலும் இல்லை. மூளையென ஒன்றே இல்லை. உடலென்று மட்டுமே இருந்தோம். நீண்டநாளைக்கு பின் இரண்டுநாட்கள் மூளைக்கு முழு ஓய்வு அளித்திருக்கிறோம்”
மாலை நான்கரை மணிக்கு குருவாயூர் ரயிலில் ஏறிப்படுத்தேன். ஏஸியின் குளிரில் ஐந்தரை மணிநேரம் அசைவில்லாமல் தூங்கினேன். ஒன்பதரைக்கு நாகர்கோயில். பத்து மணிக்கு வீடு. பத்தரைக்கு படுத்து மறுநாள் ஏழரைக்கு எழுந்தேன். காலையுணவுக்குப்பின் மீண்டும் படுத்து மதிய உணவுக்கு எழுந்தேன். கண் எரிந்துகொண்டிருந்தது. நல்லெண்ணை தேய்த்துவிட்டு குளிக்க அமர்ந்திருக்கிறேன்.
வெயிலில் எரிவதும் கொண்டாட்டமே. பெருந்திரளில் எஞ்சாமல் கரைந்தாடும் களியாட்டு. திருவிழாக்களினூடாக நான் என்னை மீண்டும் மீண்டும் கண்டடைகிறேன்.
இந்தச் சமகாலம் எனக்குச் சலிப்பூட்டுகிறது. இந்த அரசியல், இந்தச் சில்லறைச் சழக்குகள், இந்த நுகர்வுவணிகம். எனக்கு வேண்டியவை இன்றுள்ளவை அல்ல, என்றுமுள்ளவை. அவை இத்தனை பிரம்மாண்டமாக பரிமாறப்படுகையில் நான் ஏன் என் நிகழ்காலத்தின் வெட்டவெளியில் நின்றிருக்கவேண்டும்?
எழுதுக, விலையில்லா நூல் பெற!
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
எங்கள் வாழ்நாளுக்கான ஆசிரியத் துணையாக உங்களை அகமேற்றுப் பயணிக்கும் இச்சமகாலத்திற்கு எல்லாவகையிலும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். தனிவாழ்வு சார்ந்தும், செயல்வழி சார்ந்தும் குக்கூ நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் உங்கள் படைப்புகளின் அர்த்தச்சொற்கள் பேராதாரமாய் உள்ளிருக்கின்றன. நீங்கள் காட்டித்தந்த நேர்மறைப் பாதைகளும், தத்துவார்த்த சிந்தனைத் தெளிவுகளும், உடனிருந்து உறுதுணையளிக்கும் நட்புறவுகளும்தான் எங்களை இயக்கி முன்செலுத்தும் நற்பெருவிசை.
கருப்பட்டிக் கடலைமிட்டாய் தயாரித்து தொழிற்படுத்தும் ஸ்டாலின் பாலுச்சாமியின் மதர்வே, கைத்தறி நெசவு மீட்பில் முழுமூச்சாக இயங்கும் சிவகுருநாதனின் நூற்பு, வாழ்வனுபவக் கல்வி குறித்து ஆளுமைகளின் நேர்காணலைப் பதிவுசெய்யும் பாரதி கோபாலின் சுயகல்வியைத் தேடி ஆவணப்பயணம், கழிவு மேலாண்மை சார்ந்து களமியங்கும் விஷ்ணுப்ரியாவின் மீள் இயக்கம், கிராமத்துக் கிணறுகளைத் தூர்வாரி மீட்கும் மதுமஞ்சரியின் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம், பிறந்த குழந்தைகளுக்கான பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யும் அருண்குமாரின் அம்பரம், துணிசார்ந்த பொம்மைகள் மற்றும் பொருட்கள் தயாரிக்கும் பொன்மணியின் துவம், மைவிழி செல்வியின் வீதிநூலகம், குழந்தைகளுக்கான மாத இதழான தும்பி, தேர்ந்த அச்சுத்தரத்தில் புத்தகங்களை உருவாக்கும் தன்னறம் நூல்வெளி… என இம்முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுக்கும் இளையவர்களுக்கு நீங்களளித்த நம்பிக்கைச் சொற்களே செயற்தீவிரம் அளிக்கின்றன.
நாங்கள் பெற்றடைந்த இதே உளத்தீவிரத்தையும் நேர்மறை எதிர்கொள்ளலையும் இச்சமூகத்தின் பிற இளையவர்களுக்கும் நாங்கள் அகமளிப்பதை நிச்சயம் செய்தாகவேண்டிய அகக்கடமை. காரணம், இன்றைய இளையோர்கள் சந்திக்கும் வாழ்வுச்சூழலில் இருண்மையும் வெறுப்பும் அவர்களுடைய அகச்சமநிலையை சமன்குலைப்பதாக உள்ளது. குக்கூ காட்டுப்பள்ளியின் நியதி கூடுகையில் பங்குகொள்ளும் இளையோர்கள் பலர் அத்தகைய சலனங்களை கடந்துவருவதைத் தங்களது அனுபவங்களாகப் பகிர்கிறார்கள். நேர்மறையான லட்சியவாத உணர்வு என்பது எக்காலத்தும் எவர்மீதும் காழ்ப்பையோ வெறுப்பையோ உமிழாதது.
இதேபோலொரு மனநிலையில்தான் முதன்முதலில் ‘தன்மீட்சி’ நூலினை எண்ணற்ற இளையவர்களுக்கு விலையில்லா பிரதிகளாக அனுப்பினோம். அந்நூல் உருவாக்கிய நேர்மறையான விளைவை இப்பொழுதுவரை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் படைப்பு எவ்வாறு ஆத்மத்துணையாக நிலைகொள்ள முடியும் என்பதற்கான சமகால புத்தகச்சாட்சிகளில் முதன்மையானது தன்மீட்சி.
ஏதோவொரு துயர்மனம் தற்கொலை எண்ணத்தைக் கைவிடக் காரணமாகவும், கனவையும் நடைமுறை வாழ்வையும் ஒருசேர விரும்பி வழிநடத்தத் துணைசெய்வதாகவும், அகச்சோர்வுகளை மீட்டெடுத்து செயல்தீவிரம் தரும் அகவூக்கியாகவும் இப்புத்தகம் பொதுவெளியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தும்பி பிரெய்ல் அச்சுப் புத்தகங்களைப் பெறுவதற்காக தேசிய பிரெய்ல் அச்சகம் சென்றிருந்தோம். அங்கு பார்வையற்ற ஓர் பேராசிரியர் ‘தன்மீட்சி’ நூலை ஆடியோ வடிவில் கேட்பதாகச் சொல்லி மிகுந்த மனவெழுச்சியுடன் உரையாடினார். தன்மீட்சி வாயிலாக தன்னறத்திற்கு நிகழ்ந்த நல்விளைவுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
அதேபோல, கடந்த வருடம் நீங்கள் பிரசுர அனுமதியளித்த ‘எழுதுக’ எனும் நூலினை, தன்னறம் நூல்வெளிக்கு நிகழ்ந்திட்ட ஓர் நல்லூழ் என்றே கருதுகிறோம். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி புதிதாக எழுதவரும் இளம் மனங்களுக்கு விளக்கிச்சொல்லும் வகையில் நீங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் எழுத்துலகத்தில் நுழைபவர்களுக்கான ஓர் சிறந்த வாசல். அவ்வகையில், எழுத்தை வாழ்வுப்பாதையாக ஏற்கத் துணியும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. கடித விவாதங்களின் வழியாக நிகழ்ந்த இந்த அறிவுச்சேகரம் இளையோர்களுக்கு படைப்புலகு சார்ந்த ஒரு புதிய திறப்பை நல்கும்.
அறுபது வயதைத் தொடுகிற உங்கள் வாழ்க்கைக்கும், நீங்கள் சாத்தியமாக்கிய படைப்புலகிற்கும் நன்றிசெலுத்த நாங்கள் ஓர் முன்னெடுப்பை உத்தேசிக்கிறோம். ஆகவே, புதிதாக எழுதவரும் இளையோர்களுக்காக நீங்கள் எழுதிய ‘எழுதுக’ புத்தகத்தை விலையில்லா பிரதிகளாக 500 இளையோர்களுக்கு அனுப்பும் ஓர் செயலசைவை உங்களிடம் முதலறிவுப்பு செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம். படைப்பாளுமையின் அறுபதாண்டுகால வாழ்வின் நல்லசைவுகளில் ஒன்றாக தன்னறத்தின் இம்முன்னெடுப்பு தன்மைகொள்ளட்டும். மேலும், உங்களது பிறந்தநாளுக்கு எங்களால் இயன்ற கூட்டுப் பிரார்த்தனையாகவும் இதைக் கருதுகிறோம். சமகாலத்தில் தாக்கமுண்டாக்கும் நிறைய படைப்பாளிகளுக்கு உங்கள் வழிகாட்டல் பெருந்துணையாக அமைவதால், எழுத்துலகு மீதான நம்பிக்கையை இளையோர்களிடம் மீண்டும் துலங்கச்செய்யும் இம்முயற்சிக்கு விஷ்ணுபுரம் நண்பர்களின் ஆசியையும் நாங்கள் வேண்டுகிறோம்.
“எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது” குரு நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள் இக்கணம் தன்னிச்சையாக அகமெழுகின்றன. நீங்களிளக்கும் சொற்களே எங்களுக்கான உள்ளொளி. படைப்புச்சூழலிலும், பலரது தனிவாழ்விலும் இதுவரை நிகழாத நிறைய திறப்புகளை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். எக்காலத்தும் எங்களுக்கு செயற்துணையாக உடன்வரும் உங்கள் ஆசிரியமனதை வணங்கி அருகமர்கிறோம்.
‘எழுதுக’ விலையில்லா பிரதிகள் பெறுவதற்கான இணைப்பு: https://forms.gle/nUN8U3kYy9gybZ9g9
***
நன்றிகளுடன்,
சிவராஜ்
தன்னறம் நூல்வெளி
கணிக்கொன்றை
வடகரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணதாஸ் மேமுண்டா தன் குடும்பத்துடன் பாடியது. ஐயப்ப பணிக்கரின் கணிக்கொன்றை என்னும் கவிதையின் முதல்பாதி. இரண்டாம் பாதியில் இன்று கொன்றை பூக்கும் காடுகள் மறைந்துவிட்டிருப்பதை கவிஞர் கூறுகிறார். முதல்பகுதியை மட்டும் பாடி ஒரு விஷூ கொண்டாட்ட வாழ்த்தாக மாற்றியிருக்கிறார் கிருஷ்ணதாஸ்.
எனிக்காவதில்லே பூக்காதிரிக்கான்
எனிக்காவதில்லே கணிக்கொந்நயல்லே
விஷுக்காலமல்லே பூக்காதிரிக்கான்
எனிக்காவதில்லே
விஷுக்காலம் எத்திக் கழிஞ்ஞால் உறக்கத்தில்
ஞான் ஞெட்டி ஞெட்டித்தரிக்கும்
இருள்தொப்பி பொக்கி
பதுக்கே பிரபாதம் சிரிக்கான் ஸ்ரமிக்கும்
புலர்ச்சக்குளிர்காற்று வீசிப்பறக்கும்
வியல்பக்ஷி ஸ்ரத்திச்சு நோக்கும்
ஞரம்பின்றே உள்ளில் திரக்காணு
அலுக்கிட்ட மேனிப்புளப்பின்னு பூவொக்கே
எத்திச்சு ஒருக்கி கொடுக்கான் திடுக்கம் திடுக்கம்.
உணங்கி கரிஞ்ஞெந்நு தோந்நிச்ச கொம்பின்
முனம்பில் திளங்ஙுந்ந பொன்னின் பதக்கங்ஙள்
என் தாலி நின் தாலி பூத்தாலியாடி
களிக்குந்ந கொம்பத்து ஸம்பத்து கொண்டாடி
நில்க்கும் கணிக்கொந்நயல்லே பூக்காதிரிக்கான்
எனிக்காவதில்லே.
(தமிழ்)
என்னால் முடியாது, பூக்காமலிருக்க
என்னால் முடியாது நான் சரக்கொன்றையல்லவா?
விஷுக்காலமல்லவா பூக்காமலிருக்க
என்னால் முடியாது
விஷுக்காலம் வந்தால் தூக்கத்தில்
நான் திடுக்கிட்டு திடுக்கிட்டு விழிப்பேன்
இருளின் தொப்பியை மெலே தூக்கி
சிரிக்க முயலும் புலர்காலை.
விடியகுளிர்காற்று வீசிப்பறக்கும்
கரிச்சான் கூர்ந்து நோக்கும்
என் நரம்புகளுக்குள் பரபரப்பு
குருத்து எழுந்த மேனியின் புல்லரிப்புக்கு
மலர்கொண்டு கொடுக்கும் பதற்றம் பதற்றம்
காய்ந்து போயிற்றென்று தோன்றிய கிளையின்
முனையில் சுடர்கின்றன பொன் பதக்கங்கள்
என் தாலி உன் தாலி பூத்தாலியாடி
விளையாடும் கிளைகளில் செல்வம் கொண்டாடி
நிற்கும் சரக்கொன்றையல்லவா
பூக்காதிருக்க என்னால் முடியாது
அளவை, இதழ்
நண்பர்களே,
அளவை இணைய பத்திரிக்கையின் நான்காவது இதழ் (15.4.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன.
இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளன. சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ் ஹரிஹரன் என்பவரின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. அத்துடன், ஐநா சபை மனித உரிமை பிரகடனம்.
முந்தைய இதழை படிக்க அறிமுகம் பகுதியின் இறுதியில் இணைப்பு உள்ளது.
A.S. Krishnan, advocate, Erode. https://alavaimagazine.blogspot.com/?m=1வாசிப்புப் போட்டி பரிசு
சமீபத்தில் இணையதளம் வழியே பல்வேறு வாசிப்பு போட்டிகள் நடைபெறுகின்றன. Books&readers குழு நடத்திய வாசிப்பு போட்டியில் கலந்து கொண்டு நானும் பரிசு பெற்றேன். இயக்குநர் திரு.ஞான ராஜசேகரன் IAS அவர்களிடமிருந்து பரிசு பெற்றது கூடுதல் சிறப்பு. உங்கள் தீவிர வாசகன் என்கிற முறையில் வாசிப்பின் அதீத ஈடுபாட்டால் பெற்ற பரிசு என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நமது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் இது போன்ற வாசிப்பு போட்டி நடத்தி, பரிசை விஷ்ணுபுரம் விழாவில் நீங்கள் வழங்கினால், இன்னும் நிறைய வாசகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்களே! இதை நீங்கள் பரிசீலிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
மாறா அன்புடன்,
செல்வா
திசையெட்டும்தமிழ்
பட்டுக்கோட்டை
அன்புள்ள செல்வா
நல்ல எண்ணம்தான். இன்று வாசிக்கத் தொடங்குவதுதான் கடினம். நம் சூழலில் வாசிப்புக்கு எதிரான மனநிலைகள் நிறைந்துள்ளன. வாசிப்பது வீண், வாசிக்காமலேயே அறிவு வரும், இப்போதெல்லாம் யாரும் வாசிப்பதில்லை, சீரியல்களை பார்த்தாலும் அறிவு பெருகும், டெக்னாலஜி வந்தபின் வாசிப்பே தேவையில்லை — இன்னபிற பிலாக்காணங்கள் இங்கே பெருகியிருக்கின்றன. ‘நானெல்லாம் வாசிக்கிறதே இல்லை’ என்பதையே ஒரு பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களை வேறெங்கும் பார்க்கமுடியாது.
இது வாசிக்க நினைப்பவர்களை பின்னடையச் செய்கிறது. தங்களால் வாசிக்க முடியாது என எண்ணச் செய்கிறது. அத்துடன் பலவகையான திசைதிரும்பல்கள். ஐந்து நிமிடத்துக்கு ஒரு குறுஞ்செய்தி. அரைமணிநேரத்துக்கு ஓர் அழைப்பு. ஓயாமல் எவராவது அழைத்து எதையாவது சொல்ல்க்கொண்டிருப்பதை எங்களூரில் நொச்சு பண்ணுவது என்போம். எங்கள் இளமையில் நொச்சு பண்ணும் ஆட்களைக் கண்டு ஓடி ஒளிவோம். இன்று நொச்சு பண்ணிக்கொண்டே இருக்கும் கருவியை கையிலேயே வைத்திருக்கிறோம்
இதேபோல ஏதேனும் போட்டியில் கலந்துகொண்டு படிக்க ஆரம்பிப்பவர்கள் தங்களால் மிக எளிதாக படிக்க முடியும் என, அதில் அவ்வளவு தீவிரமாக ஈடுபட முடியும் என கண்டுகொள்கிறார்கள். அதன்பின் அச்சுவை அவர்களை ஆட்கொள்கிறது. அப்படி வாசிக்க ஆரம்பித்த பலரை நான் அறிவேன்.
ஜெ
April 15, 2022
உரைத்தல்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன்.இது உங்களுக்கு என்னுடைய முதல் கடிதம்.
உங்களுடைய மேடைப்பேச்சாளனாவது (https://www.jeyamohan.in/164036/) பதிவை வாசித்தேன். அதைப் படிக்கும்போது, நான் சமீபத்தில் படித்த Tim Urban என்ற பதிவர் (ப்ளாகர்) உடைய மேடைப்பேச்சு பற்றிய பதிவு நினைவுக்கு வந்தது. Tim Urban வுடைய “Inside the mind of a master procrastinator” TED கருத்தரங்க உரை மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்கு தயாரனதைப் பற்றிய அவருடைய பதிவு இது – Doing a TED Talk: The Full Story. இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கக்கூடும். எனக்கு இது நினைவுக்கு வந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
இதில் பல்வேறு விதமாக உரைக்குத் தயாரவதைப் பற்றியும், அவற்றின் சாதக பாதகங்களையும் Tim அவருக்குரிய நகைச்சுவையுடனும் படங்களுடனும் விளக்கியிருப்பார்.
இந்தப் பதிவு, உங்களின் கட்டுரை பொன்றவற்றை வாசிக்கும்போது மேடைப்பேச்சுக்கு முன்தயாரிப்பு (preparation) எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. உங்களது உரைகள் மிகவம் கச்சிதமானவை மற்றும் தெளிவானவை. இன்று பலர் எந்தவித தாயரிப்பும் இல்லாமல் மேடைகளில் பேசுகிறார்கள். அது பார்வையாளர்களை அவமதிப்பதாக இருக்கிறது.
மேடை உரை என்று மட்டும் அல்ல, எந்தவொரு செயலையும் அக்கறையுடன் கூடிய தயாரிப்புடன் (Professional ஆக) எப்படிச் செய்வது என்பதை உங்களின் பதிவுகளில் இருந்து கற்றுக் கொள்ள முடிகிறது. மிக்க நன்றி !
*
என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள,
நான் சென்னையில் மென்பொருள் துறையில் 17 வருடங்களாக பணிபுரிகிறேன். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி. திருநெல்வேலி அரசினர் பொறியியற் கல்லூரியில் 2004 ம் ஆண்டு B.E (Electronics and Communication) முடித்தேன்.
உங்களுடைய கன்னி நிலம், உலோகம், ஏழாம் உலகம் நாவல்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு, தன்மீட்சி போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தவை. விஷ்ணுபுரம் நாவலையும் முக்கால் வாசி படித்தேன். அதை முழுமையாக உள்வாங்கும் அளவுக்கு எனக்கு இன்னும் இலக்கிய / வாசிப்பு பயிற்சி இல்லை.
சிறு வயதிலிருந்தே நிறைய தமிழ் புத்தகம் வாசிக்கும் பழக்கும் இருந்தாலும் (12 வது வரை தமிழ் மீடியம்), தீவிர இலக்கிய வாசிப்புக்கு நான் மிகவும் புதியவன். சுஜாதா கதைகளை பதின்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், முப்பது வயதுக்குப் பிறகுதான் பாலகுமாரன் கதைகளை வாசித்தேன் (தற்போது வயது 38). பிறகு, சமீப ஆண்டுகளில் (2 அல்லது 3 ஆண்டு இருக்கலாம்), உங்களுடைய சில நாவல்கள், பா. ராகவன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரின் சில படைப்புகளை வாசித்திருக்கிறேன். இன்னும் நிறைய தொடர்ந்து வாசித்த பிறகு விஷ்ணுபுரம், வெண்முரசு போன்றவற்றை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
உங்களுடைய தளத்தில் வெளியாகும் உங்களுடைய கட்டுரைகளையும், அதைத் தொடர்ந்த விவாதங்களையும் தொடர்ந்து வாசிக்கிறேன். எந்த ஒரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களில் இருந்து விரிவாக அணூகி சிந்த்திக்க கற்றுத்தருபவையாக அவை அமைந்திருக்கின்றன. மீண்டும் ஒருமுறை – மிக்க நன்றி !
குறிப்பு: தமிழில் அதிகம் தட்டச்சு செய்யும் வாய்ப்பு இல்லாததால், தவறுகள் இருக்காலாம். மன்னிக்கவும்.
உங்கள்
சதீஷ்
அன்புள்ள சதீஷ்,
ஓர் உரை சிறப்பாக அமைய சிறந்த வழி அந்த உரையை பலமுறை திரும்பத்திரும்ப ஆற்றுவதுதான். பல பேச்சாளர்களின் முறை அதுவே. இங்கல்ல, உலகம் முழுக்க.
நண்பர் கே.பி.வினோத் ஒரு நிகழ்வைச் சொன்னார். விலயன்னூர் ராமச்சந்திரனின் ஓர் உரைக்கு அவர் சென்றிருந்தார். விலயன்னூர் ராமச்சந்திரன் பார்வையாளர்களை நோக்கி சில புதிர்களை போட்டார். உடனுக்குடன் கே.பி.வினோத் பதில் சொன்னார். ராமச்சந்திரன் திரும்பி “நீ என் பழைய உரைகளை கேட்டிருக்கிறாயா?” என்றார். “ஆமாம்” என்றார் வினோத். “அதே உரைதான் இதுவும்” என்று விலயன்னூர் ராமச்சந்திரன் சிரித்தார். அமெரிக்காவில் நிபுணர்கள் உரைவழியாகவே அதிகம் பொருளீட்டுகிறார்கள். ஓர் உரை எப்படியும் இருநூறுமுறை மேடையேறிவிடும். மேடைக்கொரு உரை சாத்தியமும் அல்ல.
திரும்பத்திரும்ப பேசும்போது உரையின் அமைப்பு, சொற்றொடர்கள் எல்லாமே அமைந்துவிடுகின்றன. சரளமாக ஒலிக்கின்றன. நாமே சிலமுறை பதிவுசெய்தவற்றைக் கேட்டு நம் குரலை, பாவனைகளை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. வணிகச்சொற்பொழிவுகளில் இது இன்றியமையாததும்கூட. எல்லா நல்ல வெளிப்பாடுகளும் எதிர்வினைகள் வழியாக மேம்படுத்திக் கொள்ளப்படுபவைதான். பலபடிகளாக தொடர்ந்து செம்மையாக்கப்பட்டவையே மிகச்சிறந்த தொழில்முறை உரைகள்.
தொழில்முறை உரைகளின் சவால் என்னவென்றால் ‘கவனிக்கவைக்கும் பொறுப்பு’ ‘புரிந்துகொள்ளவைக்கும் பொறுப்பு’ இரண்டையும் பேச்சாளனே ஏற்றுக்கொள்கிறான். மறுபக்கம் இருப்பது பெரும்பாலும் ’அக்கறை அற்ற’ ’பயிற்சி அற்ற’ கேட்பவர் தரப்பு. பலவகையான மக்கள் அவர்கள். அவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை முழுக்க கேட்கவைத்து, அவர்களின் நினைவிலும் நீடிக்கவேண்டும். அது சாதாரண வேலை அல்ல.
மெல்லமெல்ல நம் உலகத்தில் உரைகளுக்கு மிகமிக முக்கியமான இடம் உருவாகிவிட்டிருக்கிறது. இன்று தொழில், வணிகம், நிர்வாகம் எல்லாவற்றிலும் உரையாற்றும் திறன் அவசியமானது. கூரிய, செறிவான, சுவாரசியமான உரைகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. அதற்கு முறையான பயிற்சி இன்றியமையாதது.
ஆனால், சிந்தனை சார்ந்த உரைகளில் அத்தகைய பயிற்சியின் பயன் என்ன என்பதைப் பற்றி எனக்கு ஐயமாகவே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு வெளிப்பாட்டு முறையும் பழகும்போது வெளிப்படும் விஷயத்தை தீர்மானிக்கும் ஆற்றல் பெறுகிறது. எழுத்திலும் அப்படித்தான். ஒரே வகையான சிறுகதை, கவிதை வடிவை எழுதுபவர்களின் சிந்தனை காலப்போக்கில் அதற்கேற்ப கட்டமைகிறது. ஆகவேதான் நான் என் எழுத்து வடிவங்களையும், மொழிநடையையும் ஒவ்வொரு முறையும் அடைந்ததுமே கைவிட்டு முன்னகர்கிறேன்.
மேடைப்பேச்சுக்கு என பழகிய, திறன்மிக்க வெளிப்பாட்டு முறை சிந்தனையை அதற்கேற்ப கட்டுப்படுத்துகிறது. திறன்மிக்க மேடைப்பேச்சாளர்களின் உரைநடை மேடைப்பேச்சுத்தன்மை கொண்டுவிடுகிறது. மிகப்பெரும்பாலும் அவர்கள் குறிப்பிடத்தக்க அசல்சிந்தனைகளை உருவாக்குபவர்களாக ஆக முடிவதில்லை. தமிழகத்தின் மாபெரும் மேடைப்பேச்சாளர்கள் எவருமே நூலாசிரியர்களாக, சிந்தனையாளர்களாக முக்கியமானவர்கள் அல்ல. அதற்கு அவர்களின் மேடைப்பேச்சுமுறையின் பழக்கமே காரணம்.
(மறைமலையடிகள், சூளை சோமசுந்தர நாயகர், திரு.வி.க, ரா.பி.சேதுப்பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம், அ.ஸ்ரீனிவாசராகவன், நாவலர் சோமசுந்தர பாரதியார், சி.என்.அண்ணாத்துரை என ஒரு பெரிய பட்டியலே போடலாம்)
சுந்தர ராமசாமி இளமைநாளிலேயே என்னிடம் இதைச் சொன்னார். சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். ஜெயகாந்தனின் நடையில் பின்னாளில் மேடைத்தன்மை ஓங்கி கலையழகு போயிற்று என்பார். அது ஓரளவு உண்மையும்கூட.
ஆகவே நான் முடிந்தவரை குறைவாக உரையாற்றவேண்டும் என்பதை ஓர் நெறியாக கொண்டிருக்கிறேன். எனக்கென நான் கொண்டுள்ள நிபந்தனைகள்.
தொழில்முறை உரைகள் ஆற்றுவதில்லை. கலவையான பொதுவான வாசகர்கள் கொண்ட அரங்குகளில் உரையாற்றுவதில்லை. என் தலைப்புகளை நானே தெரிவுசெய்தே உரையாற்றுவேன்.இந்த முறை திருப்பூர் உரையில் முற்றிலும் இதுவரை கடைப்பிடிக்காத ஒரு முறையை கடைப்பிடித்தேன். அதனால் உரையில் முன்பிருந்த சில இல்லாமலாயின. உரையின் சமவீதத் தன்மை மறைந்தது. என் உரைகள் மிகச்சரியாக நேரம் கொண்டிருக்கும். திருப்பூர் உரை அரை மணிநேரம் கூடுதலாகியது. பேசிப்பேசிச் சென்று ஆங்காங்கே ஓர் எல்லையில் முட்டி நின்று கொஞ்சம் பின்வாங்கி மீண்டும் முன் ஓடியது. உதாரணமாகச் சொல்ல வந்த சில விஷயங்களை வரலாறு, அழகியல் சார்ந்து கொஞ்சம் கூடுதலாகவே விளக்க நேர்ந்தது.
ஆனால் எதிர்பாராதபடி ஒன்று நிகழ்ந்தது, கூடுதலான கவித்துவப் படிமங்கள் உரையில் இருந்தன. அவை நானே எதிர்பாராதவை. இறுதியில் இருபது நிமிடத்தில் ஆன்மிகக் களம் சார்ந்து பேசியவை அங்கே உருவாகி வந்தவை.இந்தப் புதிய விஷயங்கள் பேசும் கட்டமைப்பை மாற்றியதனால் உருவானவை. ஆனால் முன்பு பேசி ஈட்டிக்கொண்ட பயிற்சியை உதறாமல் இதை அடையமுடியவில்லை.
இந்த நான்கு கட்டண உரைகளுமே பண்பாடு சார்ந்தவை. பண்பாடு சார்ந்த பேச்சு அங்கே முடிந்து அடுத்து தொடங்கிவிட்டதென அப்போது உணர்ந்தேன். ஆகவே வழக்கம்போல பேசி முடித்தபின் தொகுப்பதை செய்யவில்லை. இறுதியில் நான் சொன்னவை இன்னொரு உரைவரிசையால் விரிவாக்கப்படவேண்டியவை.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers



