Jeyamohan's Blog, page 798
April 9, 2022
புதுமைப்பித்தனின் பெண்கள்
நலம்தானே? சிறிது காலமாக தொடர்ந்து புதுமைப்பித்தனை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் ஒரு பொதுப் பண்பாக இருப்பது அவருடைய பெண்கள் சார்ந்த சித்தரிப்புகள். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் பெண்கள் பெரும்பாலும் அன்றைய சமூகத்தால் வரையறுக்கப்பட்ட “குடும்பப் பாங்கான அடக்க ஒடுக்கமான பெண்கள்” எனும் வகை மாதிரியிலேயே சித்தரிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன் sir (செல்லம்மாள், கோபாலய்யங்காரின் மனைவி, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒரு நாள் கழிந்தது போன்ற கதைகள்). அவர்களுக்கு பெரும்பாலும் agency என்ற ஒன்று இருப்பதில்லை. அவர்கள் பேதைகளாக, குடும்பத்திற்கு அப்பால் வேறு ஒன்றும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இல்லாத பெண்கள் சிறிது எதிர்மறையாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் (காஞ்சனை, மாய வலை, புதிய கூண்டு போன்ற கதைகள்). அகல்யை, சாப விமோசனம், பொன்னகரம் போன்ற கதைகளில் கற்பு, பெண்களுக்கான நீதி போன்றவை நேரடியாகவே கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் சித்தரிப்புகள் என்ற வகையில் அக்கதைகளிலும் பெண்கள் காலத்தின், சூழ்நிலைகளின் கைப்பாவைகளாகவே இருக்கிறார்கள்.
இது புதுமைப்பித்தன் காலத்து பெண்களின் நிலையைப் பற்றிய கச்சிதமான சித்தரிப்பாகவே இருக்கிறது. ஆனால் புதுமைப்பித்தன் அன்றைய சமூகத்தின் பல்வேறு குறைகள் மீதான மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். அவரிடம் இருந்த மேற்கத்திய தாக்கத்தாலும், அறச் சீற்றத்தாலும் அன்றைய சமூகத்தால் ஏற்கப்பட்ட பல பழமைகளை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். ஆனால் பெண்கள் சார்ந்த சித்தரிப்புகளை மட்டும் அப்படியே அவர் ஏற்றுக்கொள்வது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கான காரணங்களை அவர் தனிவாழ்க்கையிலிருந்து பெறுவது சரியா என்று தெரியவில்லை sir. இத்தகைய கேள்விகளைக் கொண்டு ஒரு படைப்பாளியை அணுகுவது சரியா sir? இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை அறிவதற்கு சரியான அணுகுமுறை எது sir?
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
***
அன்புள்ள விக்னேஷ்
புதுமைப்பித்தனின் பெண்கள் பற்றி ஏறத்தாழ என் கோணத்திலேயே இந்த வினா அமைந்திருக்கிறது.
இந்திய மொழிச்சூழலில் நவீன இலக்கியம் எழுதப்பட்டபோது முதலில் நிகழ்ந்த கருத்தியல் முயற்சி என்பது பெண்ணை மறுவரைவு செய்வது தான். பாரதியின் புதுமைப்பெண் எனும் உருவகம் உதாரணம். ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே நவீன இலக்கிய முன்னோடிகள் ஒரு ’புதிய பெண்’ணுக்கான முன் வரைவை உருவாக்க முயன்றார்கள்.
குமாரனாசான் மலையாளத்தில் சிந்தாவிஷ்டாயாய சீதா எனும் கவிதையில் மொத்த ராமாயணத்தையே, அதன் அடிப்படை ஒழுக்கவியலையே எதிர்த்து கேள்வி கேட்கும் சீற்றம் மிகுந்த சீதையை உருவகிக்கிறார். பொறுமையின் வடிவமாக உருவாக்கப்பட்ட புவிமகள் சீதை அவருடைய கவிதையில் பொறுமையற்ற புதிய பெண்ணாகக் காட்டப்படுகிறார்.
அந்த மரபு இன்றும் நவீன இலக்கியத்தில் தொடர்கிறது. இதுவரை நவீன எழுத்துக்களில் சீதையும் திரௌபதியும் மற்றும் புராண பெண் கதாபாத்திரங்கள் எங்ஙனம் மறுபுனைவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்தப் புதியபெண் எனும் உருவகம் எப்படி தொடர்ந்து வலுவான ஒரு கருத்துநிலையாக எழுந்து வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அன்று இருவகையான புனைவுமரபுகள் இருந்தன. மரபிலிருக்கும் பெண்ணை புதிய சூழலுக்கேற்ப மறுபுனைவாக்குவது ஒரு வகை. குமாரனாசான் சீதையை செய்தது போல. அதை புதுமைப்பித்தனும் செய்திருக்கிறார். சாபவிமோசனம் கதையில் வரும் அகலிகை புதியபெண் ”அவன் சொன்னானா?” என்று கேட்கையில் அவளில் எழும் அந்த சீற்றத்தை வியாசன் உருவகித்திருக்க முடியாது. அப்போக்கின் தொடர்ச்சியாகத்தான் எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி வருகிறது.
இன்னொன்று பழைய உலகிலிருந்து தன் அறிவால் நுண்ணுணர்வால் மீறி எழுந்து வரும் புதியபெண். முன்னுதாரணம் அற்றவள், அல்லது ஐரோப்பிய முன்னுதாரணம் கொண்டவள். பாலியல் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் மீறுபவள். அல்லது தன்னுடைய அகம் கூறும் ஆன்மிகத்தை தேடுபவள் என அவர்களை இருவகைப்படுத்தலாம்.
தி.ஜானகிராமனின் பெண்கள் எவருக்கும் ஆன்மிகமான எந்த உசாவலும் இல்லை. தங்கள் ஆளுமையைப் பற்றிய தெளிவு கூட இல்லை. அறிவார்ந்த எந்த பயணமும் அவர்களுக்கில்லை. அவர்கள் அழகிகள், காதலிக்கப்படுபவர்கள், காதலிப்பவர்கள் மட்டுமே. அவர்கள் நாடுவது பாலியல் விடுதலையை. யமுனாவோ பாலியோ நாடுவது அவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள பழைய பாலியல் நெறிகளிலிருந்து எழுந்து பிறிதொன்றை சென்றடைவ்து மட்டுமே.
ஆனால் ஜெயகாந்தனின் கதாநாயகியர் அறிவார்ந்த ஒரு விடுதலையை நாடுகிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்களில் கங்கா, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணி போன்றவர்கள் எளிய பாலியல் விடுதலையை அல்லது குடும்பத்திலிருந்து வெளியே செல்வதை மட்டும் எண்ணுபவர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்கான ஆளுமையைத் தேடுகிறார்கள். தங்களுக்கான அடையாளம், தங்களுக்கான அறிவார்ந்த தனித்தன்மை ஆகியவற்றை அடைய முயல்கிறார்கள். அடைகிறார்கள் அல்லது அதில் தோற்று, ஆனால் தோல்வியை ஏற்காமல் நிமிர்ந்து நிற்கிறார்கள்.
இவ்வண்ணம் நம் தமிழ் இலக்கியத்தில் எப்படியெல்லாம் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கையில் பல வண்ண அடுக்குகள் நமக்கு வருகின்றன. ஓர் எல்லையில் பாரதியின் புதுமைப்பெண் போல அதீத கற்பனை வீச்சுடன் புனையப்பட்ட பெண். ராஜம் கிருஷ்ணனின் கதைகளில் அத்தகைய பெண்ணை பார்க்கலாம். பல முற்போக்கு நாவல்களில் அத்தகைய எரிந்தெழும் பெண்ணை நவயுகப் பெண்ணைப் பார்க்கலாம். அவள் ஆளுமை அல்ல, கதாபாத்திரம் கூட அல்ல. ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. அந்தப்போக்கின் உச்சம் என்பது வ.ரா எழுதிய கோதைத் தீவு எனும் நாவல்.
மறு எல்லையில் அனைத்து சமூக நெறிகளையும் கட்டிக்காத்து குடும்பம் மதம் சமூகம் என அனைத்திற்கும் தானே பொறுப்பேற்று கரை கடக்காது வாழும் மரபான லட்சியப்பெண்ணின் உருவகம். தமிழின் பிரபல ஊடகப்புனைகதைகள் அனைத்திலும் இந்த ஊடகமே முன்வைக்கப்பட்டது. லக்ஷ்மி எழுதிய நாவல்கள், கல்கியின் நாவல்கள் இந்த எல்லையைச் சார்ந்தவை. இவ்விரண்டுக்கும் இடையே பல நுண்ணிய வண்ண வேறுபாடுகள்
திராவிட இயக்க நாவல்களில் பெண்கள் சித்தரிக்க்கப்பட்டிருக்கும் விதம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.ஆண்கள் எதிர்ப்பவர்களாக, மீறுபவர்களாக, அடங்காதவர்களாக அமைகையில் அந்த ஆண்களுக்கு அடங்கி அவர்களுக்கு கை கொடுத்து நின்றிருக்கும் கற்புள்ள மரபான பெண்ணாகவே சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு, மு.கருணாநிதி ஆகியோர் படைப்புகளில் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திராவிட இயக்க எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்று நான் நினைக்கும் விந்தனின் படைப்புகளில் கூட பெண்கள் அப்படிப்பட்டவர்கள் தான். இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் கண்ணகி- மாதவி என இருமையைக்கட்டமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். நாகரீகப்பெண்ணை மாதவியாகவும் தமிழர் பண்பாட்டை பேணும் மரபார்ந்த பெண்ணை கண்ணகியாகவும் முன் நிறுத்தினார்கள். திராவிட இயக்கம் தன் முழு இலக்கிய இயக்கத்திலும் முன் வைத்த பெண் கண்ணகியின் இன்னொரு வடிவம் தான். கண்ணகி சீதையின் இன்னொரு வடிவம்.
இந்த அடுக்கில் புதுமைப்பித்தன் எங்கிருக்கிறார்? புதுமைப்பித்தன் புரிந்துகொண்ட இந்த வினாவை நாம் வகுக்க முடியும். புதுமைப்பித்தன் முழுக்கவே கற்பனாவாதத்திற்கு எதிரானவர். யதார்த்தத்தை முன்வைப்பவர். தமிழிலக்கியத்தில் அவருடைய பங்களிப்பென்பதே யதார்த்தம் தான். இங்கே யதார்த்தவாத அழகியலை நான் சொல்லவில்லை. வாழ்க்கைப்பாதையிலுள்ள நடைமுறை யதார்த்தத்தை நான் சொல்கிறேன். ஆகவே கனவுகள், லட்சியங்கள், அறவிழுமியங்கள், ஆன்மிகப் பெருநிலைகள் அனைத்தையுமே ஐயப்படக்கூடிய, எள்ளி நகையாடக்கூடிய ஆசிரியனாகத்தான் புதுமைப்பித்தன் நிலைகொள்கிறார்.
லட்சியவாதம் உச்சத்தில் ஓங்கி நின்ற ஒரு காலத்தில் எழுதிய எழுத்தாளன் இவ்வண்ணம் அமைந்ததென்பது ஒரு ஆர்வமூட்டும் விஷயம்தான். அவருடைய காசநோய் அதற்குக்காரணம் என்று ஒருவர் சொன்னால் அதை முழுமையாக மறுத்துவிடமுடியாது. கசப்பும் ஐயமும் கொண்டவராகவே புதுமைப்பித்தன் கதைகளில் வெளிப்படுகிறார்.
சுதந்திரப்போராட்டத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்?. கேலியும் கிண்டலுமாகத்தான் அதை எழுதியிருக்கிறார். அது ஒருவகையான மிகைலட்சியவாதம் அல்லது ஒரு பாவனை என்று மட்டுமே அவரால் சித்தரிக்க முடிகிறது.
சமூக சீர்திருத்தம் அவர் பார்வையில் நாசகாரகும்பலின் காலடியில் விழுந்து நொறுங்கும் எளிய கிளர்ச்சியாகவே தென்படுகிறது, அல்லது கோபால அய்யங்காரின் மனைவி போல கேலிக்கூத்தாக முடிகிறது. பிரம்ம சமாஜத்தில் கோபால அய்யங்காருக்கு ஒரு லட்சிய திருமணத்தை பாரதி நடத்தி வைக்க அதை அபத்தத்தின் உச்சத்திற்கு புதுமைப்பித்தன் திருப்பிக்கொண்டு போவதை சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார். இரு எல்லைகள் அவை.
ஆகவே அன்றைய ஒட்டு மொத்த சமூகமும் முன்வைத்த கற்பனாவாதப் பெண் புதுமைப்பித்தனுக்கு எவ்வகையிலும் ஏற்புடையவளாக இருக்கமாட்டாள். கு.ப.ராஜகோபாலன் புனைந்து முன்வைத்த மெல்லுணர்வுகள் கொண்ட ,உயர் பண்புகள் கொண்ட, ஆணின் காமத்தால் எழுதப்பட்ட அழகிய பெண்ணை கு.ப.ராவின் பகற்கனவென்றே எண்ணியிருப்பார். வசீகர மர்மம் கொண்ட மௌனியின் பெண்ணோ, அம்பாள் கருவறையில் கொலு வீற்றிருப்பது போல் இல்லத்தில் வீற்றிருக்கும் லா.ச.ராவின் பெண்ணோ புதுமைப்பித்தனுக்கு கேலிச்சித்திரங்களாகத்தான் தோன்றியிருக்கும்.
எவ்வகையிலும் பெண்ணை புனைந்துரைக்க முயலாத ஒரு எழுத்தாளராக அவரை நாம் பார்க்கலாம்.அவரிடம் நாம் காண்பது அவர் கண்டறிந்த பெண்களை .யதார்த்தமான பெண்களை. சர்வசாதாரணமாக நெல்லை ஆச்சிகள்தான் கதையில் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் அன்று பழமையை பற்றிக்கொண்டிருந்தார்கள். நெறிகளுக்குள் நிற்பதே உயர்வென நினைத்திருந்தார்கள். எவ்வகையான மீறல்களுக்கும் அவர்கள் சித்தமாக இருக்கவில்லை. பாலியல் மீறலை விரும்பினாலும் சமூக மீறலை விரும்பவில்லை (கல்யாணி) அறிவார்ந்த தேடலோ ,ஆன்மிகமான உசாவல்களோ அவர்களிடம் இருக்கவில்லை. குடும்பத்துக்குள் நின்று குடும்பத்துக்கு அப்பால் இருக்கும் எதையும் அறிந்துகொள்ளாமல் வாழ்ந்து முடிந்தனர்.
புதுமைப்பித்தன் அவர்களை உன்னதப்படுத்தவில்லை. ஏனெனில் அவர் எதையுமே உன்னதப்படுத்தவில்லை. அவர்களை சித்தரிக்கிறார். அது அவர்களை முன்வைக்கவில்லை. அவர்கள் அவர் கதையில் வருகிறார்கள். ஏனெனில் அன்று அவர்கள் அவ்வண்ணம் இருக்கிறார்கள்.
அவர் காட்டுவது அவருடைய உருவகத்தை அல்ல, அன்றிருந்த மெய்மையை. ஆனால் அவர் பெண்ணை உருவகப்படுத்தி கதை சொல்லும்போது அந்தப்பெண் புதுமைப்பெண்ணாகவே இருக்கிறாள். சாபவிமோசனத்தின் அகலிகை போல. அதாவது சீற்றம் கொண்டவளாக, அடிப்படை வினாக்களை உசாவுபவளாக, தனக்கான அறத்தை முன் வைப்பவளாக இருக்கிறாள்.
அதே போல அவருடைய புனைகதைகளில் யதார்த்தத்துக்குள் ஆழுள்ளம் எழுதப்படும்போது பெண்ணின் அடங்காத விடுதலை வேட்கையும் சீற்றமும் வெளிப்படுகிறது. செல்லம்மாள் ஒரு உதாரணம். செல்லம்மாள் விழிப்பு நிலையில் தன் கணவனைப் புரிந்துகொண்டவளாக, இல்லத்திற்குள் அடங்கியவளாக, ஒரு எளிய ஆச்சியாக மட்டுமே இருக்கிறாள். ஆனால் சாவின் நுனியில் தன்னிலை மயங்கும்போது அவள் உளறும் சொற்களின் வழியாக வெளிப்படும் செல்லம்மாள் பிறிதொருத்தியாக இருக்கிறாள். அடங்கி வைக்கப்பட்ட ஒன்று அங்கே எரிந்தெழுந்து திமிறுவதைப் பார்க்க முடிகிறது.
உளமயக்குகளை எழுதாமல் உள்ளதை எழுதியதனால் புதுமைப்பித்தன் கலைஞன். உள்ளவற்றுக்கு அடியில் இருக்கும் அறிய முடியாமைகள் அவனை மீறி கலையில் நிகழ்ந்தமையால் அவன் மாபெரும் கலைஞன்.
ஜெ
கண்ணகியும் மாதவியும்உரை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
உங்கள் உரைகளை யூடியூபில் கேட்டுக்கேட்டு பழகிவிட்டிருக்கிறேன். ஆகவே உங்கள் பிரச்சினைகள் எனக்கு பெரிய சிக்கலாகத் தோன்றவில்லை. ஆனால் தொடர்ந்து சொற்களை நீங்கள் முடிக்காமல் விழுங்குவது நான் உங்கள் உரைகளைப் பரிந்துரை செய்த அனைவருக்குமே சிக்கலாகத்தான் இருந்தது. இந்த வயதுக்குமேல் இனிமேல் பயிற்சி எடுத்துக்கொண்டு மாறுவதெல்லாம் சாத்தியமே அல்ல. அதோடு பேச்சு உங்கள் துறையும் அல்ல. உங்களைக் கேட்க வருபவர்கள் ஆவேசமான பேச்சை கேட்க வரவில்லை. நீங்கள் சொல்வதுபோல ஒரு மூளைச்சீண்டலுக்காக, சொந்தமாக யோசிக்க ஒரு தொடக்கத்துக்காகத்தான் வருகிறார்கள். விவாதிக்கத்தான் வருகிறார்கள். ஆகவே இந்த உரைகளே முக்கியமானவை என நினைக்கிறேன்.
ஜெயகர் ஜான்
அன்புள்ள ஜெ
நான் உங்கள் உரைகளை கேட்கும்போது எனக்கு சுவாரசியமாக இருப்பதே உங்கள் தாவிச்செல்லும் போக்குதான். விஸ்தாரமாக ஆலாபனை செய்யலாம். ஆனால் என்போன்றவர்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். எனக்கு ஏன் மேடைப்பேச்சுகள் சலிப்பூட்டுகின்றன என்றால் அவை மிகமிக மெல்ல நகர்கின்றன. பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கையிலேயே நான் அவர் சொல்லவந்ததை ஊகித்து மேலே சென்றுவிடுவேன். ஆகவே அரைக்கவனமாகவே இருப்பேன்
அதோடு ஓர் உரை உரத்த குரலில் ஆணித்தரமாக காதில் விழுந்தால் உண்மையில் நம் கவனம் கம்மியாகிவிடுகிறது. உரையாடல் மாதிரி இருந்தால்தான் கூர்ந்து கவனிக்க முடிகிறது. உங்கள் உரையை நான் அப்படித்தான் பார்க்கிறேன். நீங்கள் சொல்ல வருவதென்ன என்று புரியவேண்டும் என்றால் ஒரு வரி விடாமல் கேட்கவேண்டும். நீங்கள் சொல்லிச் சொல்லி உருவாக்கும் ஸ்ட்ரக்சர் புரியவேண்டும். அது எழுந்து வரும்போது நம் மண்டைக்குள் நிறைந்திருக்கும். நாம் சிந்திப்பதையெல்லாம் அப்படியே கலைத்துவிடும். நாம் யோசித்து யோசித்து அதை ஒன்றாக்கவேண்டும்
நெல்லை உரையில் ஒன்று சொல்கிறீர்கள். நம் மரபிலக்கியம் என்பதேகூட பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்து, தொகுத்து உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான் என்று. என்னை திகைக்கவைத்த பார்வை அது. ஒரு மாபெரும் கலெக்டிவ் ஃபிக்ஷன் அது என நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது. யோசிக்க யோசிக்க ஆச்சரியமாக விரிகிறது
ஜெயக்குமார் எம்
மேடைப்பேச்சாளனாவது…சைதன்யாவின் சிந்தனை மரபு- கடிதம்
ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க
அன்புள்ள ஜெ
குழந்தை தன் பிரியத்தால் இந்த உலகை அறிந்து கொள்கிறது. விருப்பமென்று வளரும் அன்பு ஒவ்வொன்றாய் அறிந்து இணைத்து கொள்ளும் செயல் அது. அந்த அன்பெனும் அறிவை, அறிவெனும் அன்பை தன் குழந்தையின் மீதான பெருங்காதல் வழியாக காணும் எழுத்தாளனின் கண்களே ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு. தந்தையெனும் மகன் அன்னையை கண்டுகொள்வதில் தொடங்கி அன்னையெனும் மகள் மகனை பெறுவதில் நிறைவு கொள்கிறது.
ஒரு புன்னகையுடன் வாசிக்க தொடங்கும் நூல், சித்திரமென அதை நம் முகத்தில் தங்க செய்தபடி நிறைவு கொள்கிறது. இது ஜெ.சைதன்யா என்ற குழந்தையின் லீலைகளை சொல்லும் காவியமே. அவளுக்கு ஆயிரம் நாமங்கள். உண்மையில் ஆயிரமாயிரம் சைதன்யாக்களை பாடும் காவியம் இது, “ஆனால் கூர்ந்து பார்த்தபோது மலையின் கரையாத துணுக்குகள் சில காணக்கிடைக்கவே ஜெ.சைதன்யா அவர்கள் ”அப்பா, அழுவாதே மலய ஒண்ணுமே தூக்கிட்டு போவலை. மல பொகயா ஆயிட்டுது” என்றார்.” என்ற வரிகளை வாசிக்கையில் “மலை என விழி துயில்வளரும் மாமுகில்” என்னும் கம்பனின் வரிகள் நினைவிலாடின. விழிப்புறக்கம் கொண்டிருக்கும் விண்ணளந்தோனின் விழி மலையான முகிலாக காட்சி தருகிறது. இந்த கற்பனை ஜெ.சைதன்யாவின் சொல்லில் திகழ்கையில் சிலிர்ப்படைய செய்கிறது. குழந்தை என்பது காலமின்மையா என்ன! காலத்தை கடந்து செல்பவை பேரிலக்கியம். அது நிகழ்ந்துள்ளது.
எண்ணிலா சேஷ்டைகள் அடங்கியது குழந்தையின் உலகம். சைதன்யாவின் உலகம் வியப்புகளாலும் வினோதங்களாலும் நிரம்பியது. எல்லா நாளும் ஓரே போல் இருக்கையில் ஏன் பெயர்கள் மாறுகின்றன ? பிள்ளையார் அண்ணாவுடன் கிரிக்கெட் ஆடுவார். பந்துபிடிக்க தும்பிக்கை வசதியானது. டைல்ஸ் தரை என்பது ஆயி போவதற்காகவே. அது பிள்ளையானாலும் பிள்ளையாரானாலும். சொற்கள் என்பவை நம் இஷ்டம் போல் வளைப்பதற்குரியவை. ட்ரேஸ் டெஜ் ஆக, சைக்கிள் ஜவிக்கிளாக என ஒவ்வொன்றும் அவரது அந்தந்த தருணங்களின் உணர்வுகளுக்கேற்ப உருமாறும். இதே போல் இன்னொரு விதி, எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே போல் எல்லா பொருளும் உண்ணப்பட வேண்டியவையே என்பதே அது. அதற்காக அவர் தன் தேயா பற்களில் ஒவ்வொன்றயையும் கரம்பி பார்ப்பதுண்டு. அப்புறம் அவருக்கு அவர் என்பது தன் வயிறென்பது நன்றாக தெரியும்.
எல்லாவற்றையும் தானாக்கி கொள்ள உண்ணும் குழந்தையை தான் வேளி மலை வெட்டப்படும்போது வருந்தும் குழந்தையிலும் காண முடிகிறது. எல்லாவற்றையும் தனக்குள்ளாக்க விரும்பி எல்லாமும் தானே உணர்ந்து கொள்ளும் ஒரு ஞானம். ஆகப்பெரிய அத்தனை ஞானங்களும் பூவிதழ்களில் தோன்றி மறைகின்றன. “உன் வீட்டில் ஒரு குரு பிறந்திருக்கிறார், பெற்றுக் கொள்ள நீ திறந்திருக்க வேண்டும்” என்ற நித்யாவின் சொற்களை அனுபவமாக்கிய எழுத்தாளன் காலத்தில் நிறுத்திவிட்டும் செல்லும் ஞானமிது. ஞானம் ஒரு மலர்; குழந்தையெனும் பேராவல் பெருங்கதிரோன் எழுகையில் மலர்வது.
தீராக்குழந்தை
எப்படிப்
படைத்தாலும் குழந்தைகள்
வளர்ந்துவிடுகின்றன என்று
கடவுள் நினைத்திருக்க வேண்டும்
வளராத குழந்தைகளையே
ஒரு சமூகமாகப் படைத்தாலென்ன
என்ற விபரீத ஆசைக்கு
அதுவன்றி வேறேது காரணம் ?
நாமும் கண்டுகொண்டோம்
நமது குழந்தைகளையும்
அவரது குழந்தைகளையும்
ஒன்றாக்கும் ஒரு கதையுலகு
தேவதேவன்
அன்புடன்
சக்திவேல்
பனிமனிதன் வாசிப்பு
கால ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதில் அறிவியலும் ஆய்வுகளும் அதை விட மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதில் இறந்த காலத்தைப் பற்றி அறியவும் எதிர்காலத்தைப் பற்றி அறியவும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் நாம் தற்போது வாழும் காலத்திற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பரிணாம வளர்ச்சிகளை அறிய அவ்வப்போது ஆவல் கொள்வதும் உண்டு….
இந்தப் புத்தகத்தைத் திறந்தவுடன் ஏதாவது ஸ்பை த்ரில்லர் அல்லது சூப்பர் மேன் கதை போன்று இருக்கும் என நினைத்து தொடங்கினேன். புத்தகத்தின் சாராம்சம் நான் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இருந்தது. ஒரு கதையாக படிக்கலாம் என நினைத்து ஆரம்பித்தது பல தகவல்களை தரும் பெட்டகமாக அமைந்தது இந்த புத்தகம்.
லடாக் எல்லைப்பகுதியில் இமயமலை சாரல்களில் ஒரு பெரிய காலடி தடம் தென்படுகிறது.அதைப் பற்றி ஆர்வம் கொண்டு அதை ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்காக ராணுவ அதிகாரியான மேஜர் பாண்டியன் முயல்கிறான். மானுடவியல் மற்றும் மனித பரிணாம வளர்ச்சிகளை ஆய்வு செய்யும் ஆர்வம் கொண்ட டாக்டர் திவாகரும் இணைகிறார். இந்த திவாகர் என்ற பெயர் ஒரே இடத்தில் மட்டும் தான் வருகிறது. மீத புத்தகம் முழுவதும் டாக்டர் என்றே குறிப்பிடப்படுகிறார். இவர்கள் இருவருடனும் அப்பகுதி மலைக்கிராம சிறுவனான கிம் இணைகிறான்.
மூவரும் இணைந்து பனி மனிதன் எனப்படும் பாதி பரிணாம வளர்ச்சிபெற்ற, ஒரு மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத, ஓர் உயிரினத்தை தேடிச் செல்கின்றனர். அப்படி செல்லும் வழியில் அவர்களுக்கு பல பல தகவல்கள் அனுபவங்கள் கிடைக்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு தகவல் பெட்டகம் தந்திருக்கிறார் ஆசிரியர்.
பயணம் செல்லும் வழியில் பனி சூழ்ந்த மலைகளின் இயற்கை அமைப்பையும் அவற்றின் தன்மைகளையும் டாக்டர் விளக்க விளக்க பாண்டியன் அறிந்து கொள்கிறான். கிம் ஒரு பௌத்த மடாலயத்தில் முறையாக பயிற்சி பெற்று புத்த மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாகவும் இருப்பதை அறிகிறான். செல்லும் வழியில் கிடைத்த மிகப்பெரிய நீலக்கல் வைரத்தை வேதியல் வெடி வைத்து தகர்த்து கொண்டு செல்ல திட்டமிட்டு பிறகு அது முடியாமல் தனது நோக்கம் சிதறிவிடும் என தவிர்த்து விடுகிறார்கள். இங்கேயும் ஒரு தகவல் பெட்டகத்தை தந்திருக்கிறார் ஆசிரியர். செல்லும் வழியில் பல பல அனுபவங்கள் பெறுகின்றனர் மூவரும்.
ஒளி மற்றும் ஒலி, பூமி காற்று பனி வெப்பம் மற்றும் இயற்கை பேரழிவுகள், மனிதன் தோன்றிய விதம் அவனது உடல் அமைப்பு பல லட்சம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல தகவமைத்த விதம், குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய வளர்ச்சிப் பாதை, அதனூடே தோன்றிய நாகரிகம், பாறைகள், பனி மூடும் சூழ்நிலைகள், பாரிசில் பூமியின் ஆழத்தில் புதைக்கப்பட்ட வெப்பநிலைமானி போன்ற பல தகவல்களை வரிசை வரிசையாக ஆசிரியர் டாக்டர் எனும் கதாபாத்திரம் மூலம் தந்து கொண்டே இருக்கிறார்.
இந்த மூவர் குழு வழியில் புத்த பிக்குகளை சந்திக்கிறது. அவர்கள் தங்களின் அடுத்த தலைமை புத்த பிக்குவை காண முயல்கின்றனர். இறுதியில் அந்த தலைமை புத்த பிக்கு அந்தச் சிறுவன் கிம் தான் என தெரிய வருகிறது. இவர்கள் தேடிப்போன அந்தப் பனி மனிதன் தன்னை காண இந்த மூவரையும் அங்கு வரவழைத்த நிகழ்வும் புரிய வருகிறது.
மனித இனத்தின் கூறுகளை பகுதி பகுதியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு செய்தியாக கோரி ஒரு நிறைவான நூலை தந்திருக்கிறார் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள். இதில் புரிந்து கொள்ளும் படி கதை வடிவில் ஒரு பயணம் செல்வது போல நாம் பயணிக்க முடிகிறது.
சேதுராமன்
குமரித்துறைவியை கண்டடைதல்
செயல் தீவிரம் தந்த புத்தகங்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். படித்த புத்தகங்கள்.பல நூறெல்லாம் கிடையாது. பாடமாக படித்ததே போதுமானதாகவோ,இன்னும் பயன்படுத்தாகவோ தான் இருக்கின்றன. 2021_2022 ஆண்டு பல மாச்சரியங்களை எனக்கு நானே நிகழ்த்திக்கொள்ளும் ஒர் மனநிலையை வழங்கிய புத்தகம். குமரித்துறைவி.
அதை தூரம் நான் இந்த வார்த்தைகளை உதிர்த்தே விட்டேன்..மதுரையின் ,அதன் பண்பாட்டின், இயங்குதலின்,வரலாற்றின் ,தொன்மத்தின் மேல் பொறாமை கொண்ட எழுத்தனின் எழுத்து. குமரித்துறைவி,இருப்பினும் நான் பரிந்துரைக்கிறேன்.மகள்களை பெற்ற அப்பன்களும்,தொன்மம் துலக்கி ஆகி கொள்பவர்களும் வாசித்து மகிழ்க. குமரித்துறைவி.
இனியவள் ,வெண்பா சார்பாக 12 குமரித்துறைவி நூல்கள் பெண் தொண்டர்களுக்கு வழங்கபட்டன.
குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்பிய விஷ்ணுபுரம் மீனாம்பிகைக்கும், எண்ணங்களை வண்ணங்களாக்கும் இளவரசிக்கும் நன்றி.
பொறாமை நல்லது.
மீனாட்சி திருகல்யாணம் முன்னாளில் புத்தகம் வாசித்து மறுநாள் பூப்பல்லக்கு நகர்வலம் பார்ப்பதாக திட்டம் தருகிறான் அருண்.
புத்தகம் வாசித்து கெட முடியுமா என்ன?குமரித்துறைவி வாசிப்புக்கு பின் என்பதாக இவ்வாண்டு முடிந்திருக்கிறது.
” நான் இப்போதெல்லாம் தனிமையிலிருக்கையில் எல்லாம் எண்ணி எண்ணி புன்னகைத்து கொண்டிருக்கிறேன். சிற்றாடை கட்டிய எந்த சிறுமியை கண்டாலும் மெய்ப்பு கொண்டு உள்ளத்தால் வணங்குகிறேன். கற்பனையால் முத்தமிட்டு முத்தமிட்டு பித்து கொள்கிறேன். பெண்ணழகென்று அல்லாமல் இங்கே பிரபஞ்ச சாரம் எப்படி வெளிப்பட முடியும் என்று எண்ணி நெஞ்சில் கை வைத்து விம்மி கண்ணீர் விடுகிறேன்”. (குமரித்துறைவி. பக்கம் 174)
கார்த்திக் பாரதி
அன்புள்ள ஜெ
நான் என்னை இப்படி அறிமுகம் செய்து கொள்கிறேன். உங்களை தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரி, நீங்கள் மலையாளி என்று என்னிடம் பலர் சொன்னார்கள்.சத்தியமாக, நானும் கடுமையான காழ்ப்புடன் இருந்தேன். இணையத்தில் வாய்ப்பிருக்கும்போதெல்லாம் வசைபாடுவேன். பெரும்பாலும் எல்லா பதிவுகளிலும் வசை பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் என்னை தமிழன் என்றும் தமிழ்ப்பெருமிதம் கொண்டவன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். நான் உங்களுடைய ஒரு சில கட்டுரைகள்,அதுவரை சில உரைப்பகுதிகள் வழியாகவே அறிமுகம் செய்துகொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். என்னை அறியாமலேயே என் மொழிநடை மாறியது. என் எழுத்தும் மாறியது.
இரண்டுநாட்களுக்கு முன் குமரித்துறைவி வாசித்தேன். அதுதான் பிரேக்கிங் பாயிண்ட். என் நண்பர்களிடம் சொன்னேன், தமிழ்ப்பண்பாட்டில் கனிந்த படைப்பு இது. இதை எழுதும் ஒரு படைப்பாளியை எப்படி தமிழ்விரோதி என்கிறீர்கள்? நீங்கள் தமிழ்ப்பெருமிதம் பேசுபவர்களாக கொண்டாடுபவர்களுக்கு தமிழ்ப்பண்பாடு பற்றி அடிப்படையறிவே இல்லை என்று சொன்னேன். ஆனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் மலையாளி என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். நானும் விட்டுவிட்டேன். அவரவர் தருணங்களில் கண்டுகொள்ளவேண்டியதுதான்.
குமரித்துறைவிக்கு நன்றி
அருள் முருகானந்தம்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
April 8, 2022
மனுஷு,சமசு,அரசு
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் கவனித்த ஒரு விவாதம். அதை அனுப்புகிறேன். இது ஒரு வெறும் வம்பு அல்ல. இதில் இதழியல் சம்பந்தமான ஒரு அடிப்படையான கேள்வி இருக்கிறது. அது இன்றையச் சூழலில் முக்கியமானது. அதைப்பற்றி பேசவேண்டும், அந்த விவாதம் நிரந்தரமாகப் பதிவாகவேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் முகநூல் மிகவும் peripheral ஆனது. ஆகவே இதை எழுதுகிறேன்
பத்திரிகையாளர் சமஸ் ஓரு பதிவை வெளியிட்டிருந்தார். ஓர் காணொளியிலும் பேசியிருந்தார். இவற்றில் அரசுக்கும் அவருக்குமான உறவைப்பற்றி சொல்லியிருந்தார். அதற்கு மனுஷ்யபுத்திரன் அளித்த பதில் இது
பத்திரிகையாளர் சமஸின் அதீத ஆர்வம்
மனுஷ்யபுத்திரன்
சில தினங்களுக்கு முன்பு ‘ தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு அழைப்பு ‘ என சமஸ் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். என்னமோ ஏதோ என்று போய் படித்தால் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு சமஸின் இணைய தளத்தில் வெளி வந்த ஒரு கட்டுரை பற்றிய தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டிருந்திருக்கிறார். அவ்வளவுதான். அது சமஸிற்கு கொடுத்த பேட்டி அல்ல. எந்த அடிப்படையில் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளை தன் பத்திரிகைக்கு விளம்பரமாக பயன்படுத்துகிறார் என்று புரியவில்லை.
பொதுவாக அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் பல கருத்துகளை தனிப்பட்ட முறையில் உரையாடுவார்கள். மன ஓட்டங்களை பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் அவர்கள் அவை மேற்கோள் காட்டப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எனது நீண்டகாலமாக ஊடகம், எழுத்து, அரசியல் சார்ந்த எத்தனையோ உயர்மட்ட உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை தனிப்பட்ட பேச்சுகளில்கூட நான் மேற்கோள் காட்டியதில்லை. எனக்குத் தெரிந்து பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அப்படித்தான். ஆனால் சமஸ், இறையன்பு அரசின் கொள்கைத்திட்டங்கள் பற்றி தன்னிடம் உரையாடி தன் பத்திரிகைக் கட்டுரையின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்துவதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார். இது தலைமைச் செயலாளருக்கு சங்கடங்களை உருவாக்கக்கூடியது.
அடுத்ததாக பொது நூலகங்களுக்கு இதழ்கள் வாங்ககுவது தொடர்பாக அந்த தேர்வுக் கமிட்டியில் இடம்பெற்றிருந்த சமஸ் அது தொடர்பாக சர்ச்சைகளுக்கு ஒரு ஆவேசமான பேட்டி அளித்திருக்கிறார். அந்தக் கமிட்டியே அவர் தலைமையில் இயங்குவதுபோன்ற பாவனையில் பேசுகிறார். தான் அந்தக் கமிட்டியில் இடம்பெற்றால் எங்கே தன் பெயர் கெட்டுவிடுமோ என்று அஞ்சியதாகவும் பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் தன்னை வற்புறுத்தி கன்வின்ஸ் செய்து இடம்பெறச் செய்ததுபோன்றும் பேசுகிறார். அப்படியொரு உரையாடல் நடந்ததா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும், அதை ஏன் பொது வெளியில் சொல்கிறார்? அரசின் பலகுழுக்களில் வேலை செய்பவன் என்ற முறையில் சொல்கிறேன், ஒரு அரசுக் கமிட்டியின் செயல்பாடுகள் சிக்கலானவை, பல்வேறு நுட்பங்கள் சார்ந்தவை. உடனடியாக வெளிப்படுத்தக்கூடாதவை. அதை எல்லாம் அக்குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன் இஷ்டத்திற்கு பொதுவெளியில் பேசமுடியாது. ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு பொறுப்பான அதிகாரிகளோ அமைச்சர்களோ விளக்கமளிப்பார்கள்.
அரசை பாராட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தன்னை முன்னிறுத்துவதற்காக மிகச்சிறந்த அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்த சமஸ் முனைகிறார். தமிழக அரசில் எத்தனையோ குழுக்கள் செயல்படுகின்றன. எந்த உறுப்பினரும் சமஸைபோல ஏதோ அரசாங்கமே தன் வழிகாட்டுதலில் நடப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது கிடையாது. ஏ.கே ராஜனோ ஜெயரஞ்சனோகூட இப்படி பேசிக்கேட்டதில்லை.
தன் முனைப்புக்கு ஒரு எல்லை வேண்டாமா? சமஸ் தன் எல்லைகளையும் இடத்தையும் பரிந்துகொள்வது நல்லது.
அதற்கு சமஸ் அளித்த பதில்.
பத்திரிகாதிபர் மனுஷ்யபுத்திரனின் மனச்சங்கடம்
ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள் – பத்திரிகையாளர்கள் இடையிலான சந்திப்புகள் சகஜம். மக்களோடு புழங்குபவர்கள் என்ற வகையில், பத்திரிகையாளர்களிடமிருந்து அபிப்ராயங்களையோ, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையோ அவர்கள் கேட்டுக்கொள்வதும் அப்படித்தான்.
சில நாட்களுக்கு முன் ‘தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு’ என்று இங்கே நான் பகிர்ந்த செய்தியானது, ஏதோ இந்த அரசைப் பாராட்டி நான் எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்துவிட்டு, தலைமைச் செயலர் தனிப்பட்ட வகையில் பகிர்ந்துகொண்ட பாராட்டை என் சுயபெருமைக்காக வெளிப்படுத்தியது அல்ல. மாறாக, அரசை விமர்சிக்கும் ஒரு கட்டுரை அது; இன்னும் சொல்லப்போனால், மாநிலத்தில் பிராந்தியரீதியாக நிலவும் ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையானது நெடுநாள் விவகாரம்; முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும் சேர்த்து இன்றைய ஆட்சியாளர்களைப் பரிகாரம் தேடச்சொல்லும் கட்டுரை.
அப்படி ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு, ஆக்கபூர்வமாக அந்த விமர்சனத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதோடு, அன்றைய தினமே மேல்மட்ட அளவில் விவாதித்து, அடுத்தகட்டமாக அனைத்துத் துறைச் செயலர்கள் கூட்டத்திலும் அந்த விஷயத்தை மையப்படுத்தி விவாதித்து, இது தொடர்பில் ஒரு கொள்கை முடிவை எடுக்க ஒரு அரசாங்கம் தீர்மானிப்பது என்பது மிக முக்கியமான, ஆக்கபூர்வமான செயல்பாடு.
இந்த விஷயங்களையெல்லாம் அழைத்து ஒரு தலைமைச் செயலர் பகிர்ந்துகொள்வதும், கூடவே, ‘முதல்வர் பிராந்தியரீதியிலான சமநிலையைக் கொண்டுவரும் இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்’ என்று சொல்வதும் மிக முக்கியமான விஷயங்கள் மட்டும் இல்லை; அது மக்களிடம் அரசு பகிர்ந்துகொள்ள விரும்பும் செய்திகளும்கூட. அப்படிச் சொல்லப்பட்ட தகவலையே நான் பகிர்ந்தேன்.
இதில் என் பத்திரிகைக்கான பெருமை என்பதெல்லாம் மூன்றாவது பட்சம். விமர்சனங்களை இன்றைய முதல்வரும், அரசும் எப்படி ஆக்கபூர்வமாக அணுகுகிறார்கள் என்பதுகூட இரண்டாவது பட்சம்தான். ஒரு நெடுநாள் பிரச்சினை மீது இந்த அரசு கவனம் குவித்திருக்கிறது என்பதே முதல் பட்சம். மக்களிடம் இதில் ஒளித்து மறைக்க என்ன இருக்கிறது? மேலும், மக்களுக்காகப் பேசும் பத்திரிகையாளர்களுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?
தன்முனைப்பிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு, எல்லாமே தன்முனைப்பாகத்தான் தெரியும்.
ஒரு வெகுஜன பத்திரிகையில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவனுக்கு எந்தெந்த உரையாடல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டும்; கூடாது என்று யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை. அதேபோல, எது பொதுவெளியில் பகிரப்பட வேண்டும், எது பகிரப்படக் கூடாது என்ற குறிப்புணர்த்தலை வெளிப்படுத்த ஆட்சியாளர்கள் – அதிகாரிகளுக்கும் யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன்.
பத்திரிகாதிபர் மனுஷ்யபுத்திரனுடைய உண்மையான ஆற்றாமையும், கோபமும் என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதையெல்லாம் பொதுவெளியில் பகிர நான் கற்ற பத்திரிகாதர்மம் தடுப்பதோடு, அவரைச் சங்கடத்துக்குள்ளாவதையும் தவிர்க்க விழைகிறேன். நல்லிரவு!
*
ஒரு விவாதத்திற்காக கேட்கிறேன். இதில் எந்தப்பக்கம் சரி இருக்கிறது? எனக்கு இரண்டுமே முதலில் படித்தபோது சரி என்றே தோன்றியது.
ஆனந்த்ராஜ்
அன்புள்ள ஆனந்த்,
இது தி.மு.க ஆதரவாளர்களான இரு ஊடகர்களுக்கு இடையே கட்சியில் அவர்களின் முக்கியத்துவம், அரசில் அவர்களின் இடம் பற்றிய பூசல். வெளிப்படையாகவே எவருக்கு இடம் மிகுதி எவர் புழுங்குகிறார் என தெரிகிறது. சமஸ் சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.
சமஸ் சொல்வதே சரி. தலைமைச்செயலாளர் போன்ற ஓர் அரசதிகாரி ஒன்றும் தெரியாமல் சும்மா அந்த நாற்காலியை அடையமுடியாது. பலவகையான அமிலச்சோதனைகள் அவருக்கு நடந்திருக்கும். அதில் முதன்மையானது வாயை எங்கே திறக்கவேண்டும், எங்கே மூடவேண்டும் என்னும் பயிற்சிதான். அவர்கள் இயல்பிலேயே ராஜதந்திரிகளாகவே இருப்பார்கள்.
சமஸ் ஒன்றை எழுதக்கூடாது என்று தலைமைச்செயலர் எண்ணினால் அதைச் சொல்லாமல் ஓர் உரையாடலை முடிக்கவே மாட்டார். என்னிடமும் உயர் அரசதிகாரிகள், உயர்தர அரசியல்வாதிகள் பேசியதுண்டு. பலவற்றை பகிர்ந்துகொண்டதுமுண்டு. அவர்களும் பேச்சு தனிப்பட்டது என்றால் ஒரு வார்த்தை சொல்வார்கள். சிலவற்றை பெயர் சொல்லாமல் எழுதும்படிச் சொல்வார்கள். சிலவற்றை எழுத அவர்கள் விரும்புவது தெரியும்.
தலைமைச்செயலர் சமஸிடம் சொன்னவை அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளிப்படுத்த விரும்புபவை என்பது வெளிப்படை. அவை இந்த அரசுக்கு நற்பெயர் ஈட்டி அளிப்பவை. அவர் எதிர்பார்த்தது ஸ்டாலின் அரசுக்கு ஒரு பாராட்டைத்தான். சமஸ் அதை அளிக்கிறார். அவ்வாறல்ல எனில் சமஸுக்கு அது உடனே தெரியும். அந்த எழுதப்படா ஒப்பந்தம் மீறவே படாது. அதை ஒரு முறை மீறிவிட்டால் அதன்பின் சமஸின் நம்பகத்தன்மை குறையும், அவருடைய தொழிலே பாதிக்கப்படும்.
மனுஷ்யபுத்திரன் சிற்றிதழாளர், செய்தியிதழின் நெறிகள் அவரறிந்தவை அல்ல. அவர் கட்சிக்காரர். அவர்களுக்கான நெறிகள் முற்றிலும் வேறானவை.
ஆனால் சமஸ் திமுக அரசு அளித்த பொறுப்பில் இருப்பது என் பார்வையில் உகந்தது அல்ல. அது இதழாளராக அவருடைய நம்பகத்தன்மையை குறைக்கும். எல்லா வகையிலும் இதழ் என்பது எதிர்க்கட்சிதான். அது ஒரு கண்காணிக்கும் தரப்புதான்.
அருஞ்சொல்லில் வரும் அரசியல் கட்டுரைகள் பலவும் மிக ஓரம்சாய்ந்தவையாக உள்ளன என்னும் எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. Scroll போன்று ஓர் அரசியல்தரப்பைப் பிரச்சாரம் செய்யும் இதழாகவே அருஞ்சொல் தன்னை முன்வைக்கிறது. அருஞ்சொல்லில் வரும் பல பொருளியல் கட்டுரைகளை, கட்சிக்காரர்கள் கொஞ்சம் கலைச்சொல் சேர்த்து எழுதும் பிரசங்கங்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன்.
பிகு. விரைவிலேயே சமஸ் “ஓண்ணுமே உருப்படாது. நாசமாப் போயிடும். கட்டமண்ணா போயிடும். அப்டியே போயிச் செத்துடுங்கோ” என்னும் அரிய பொருளியலாசனையை பற்பல ஆண்டுகளாக தினமும் காலையில் தோன்றி கனிவுடன் வழங்கும் ஆனந்த சீனிவாசனின் தொடர் ஒன்றை வெளியிடலாம். சுவாரசியமான பகுதியாக இருக்கும்.
ஜெ
நாளை திருப்பூர் உரை
நாளை திருப்பூரில் உரையாற்றுகிறேன். வழக்கம்போல நிறைய நண்பர்கள் முன்பதிவுசெய்திருக்கிறார்கள். பலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள். எனக்கு உரையாற்றுவதன் பதற்றம் உருவாகிவிட்டது.
திருப்பூர் உரைநிகழ்வின்போது விஷ்ணுபுரம் நூல்கள் அரங்கில் கிடைக்கும்.
சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர், அருண்மொழி வரவில்லையா என்று. அருண்மொழிக்கு இன்று (9-4-2022)ல் சென்னையில் அவள் நூல் பற்றிய விமர்சனக் கூட்டம். இது முற்றிலும் வேறு குழுவினரால் அமைக்கப்படுகிறது. கிளம்பிச் சென்றிருக்கிறாள். நண்பர்களிடம் சொன்னேன், நண்பர்களே இரண்டு பாம்புகள் சேர்ந்து இரைதேடுவதில்லை (தேடினால் ஒன்றையொன்று விழுங்கிவிடும்)
இன்னொரு நண்பர் கேட்டார், வழக்கமான கேள்விதான். “எப்படி ஓர் உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியும்?” எங்கள் வீடு வாளுறை அல்ல, வாள்கள் வைக்கப்படும் பக்கெட் என்று அதற்குப் பதில் சொன்னேன்.
உரையை தயாரித்தாகவேண்டும். ஆனால் ரொம்பவும் தயாரித்தால் ஒப்புவித்தலாக ஆகிவிடும். சட்டென்று உரையாற்றுவது பற்றிய பதற்றம் ஏற்பட்டு தேவையில்லையோ என்னும் மனநிலை. ஆனால் டிக்கெட் போட்டு ஜனங்கள் வாங்கிவிட்டார்கள். வேறுவழியில்லை. உரையாற்றியே ஆகவேண்டும்.
என் உரைகளை திரும்ப ஆங்காங்கே பார்த்தேன். ஏன் இப்படி கடைசி வார்த்தைகளை விழுங்குகிறேன், ஏன் குரல் இப்படி உடைந்திருக்கிறது, ஏன் முக்கியமான சொற்களைக்கூட குளறுபடியாக உச்சரிக்கிறேன்? திருத்திக்கொள்ளலாம் என நினைத்தேன். பிறகு கி.ராஜநாராயணன் கதை நினைவு வந்தது
பெரிய நாயக்கர் கோடீஸ்வரர், ஆனால் எப்போதும் அழுக்கு அரைத்துண்டுதான் ஆடை. கேட்டால் “தம்பி நம்மூரிலே நம்ம ஐவேஜு என்னன்னு எல்லாருக்கும் தெரியும். எதுக்கு வெள்ளவேட்டி?”என்பார். ஆனால் வெளியூரில் பார்த்தால் அப்போதும் அதே அழுக்குத்துண்டு. அதற்கு பதில் சொன்னார். “தம்பி, இந்தூர்ல நம்மள யாருக்கு தெரியும்?”
அதேதான். என்னால் நன்றாக எல்லாம் பேசமுடியாது. இந்தப்பேச்சுக்கு பழகியவர்கள் கொஞ்சபேர் உண்டு. அவர்களுக்கு என் ஐவேஜு தெரியும். தெரியாத கொஞ்சபேர் வந்து திகைத்து அமர்ந்திருப்பார்கள். அவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?
திருப்பூரில் பேசுவது…வான்நெசவு- வாசிப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
வெகு தொலைவில் இருக்கும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகள் தொலைத்தொடர்பு எனப்படுகின்றது. இந்த தொலைத்தொடர்பு ஆரம்ப காலகட்டங்களில் கடிதம் வழியாக நடைபெற்று வந்தது. அனலாக் தொலைபேசி முறையை கிரகாம்பெல் அவர்கள் கண்டுபிடித்த பின்பு ஒலி அலைகள் மின் அலைகளாக மாற்றி மின் கம்பிகள் வழியாக கடத்தி பிறகு மின் அலைகளை ஒலி அலைகளாக மாற்றி தகவல் பரிமாறப்பட்டு வந்தது. இது தொலைபேசி வாயிலாக சாத்தியமாகியது. இன்று ஊடகம் எதுவும் இன்றியே தொழில்நுட்பம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் அளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
அனலாக் தொலைபேசி இருந்த காலகட்டத்தில் கம்பி வழியாக மின் அலைகள் கடத்தப்பட்டு தகவல் பரிமாறி வந்த நிகழ்வுகளின்போது தொலைத்தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் எவ்வகையில் அங்கே பணியாற்றினார்கள். அங்கே என்னென்ன சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும் என்பது யாரும் அறியாதவையாக உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அப்பணியில் இருந்து விடுபட்டு வந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தொலைதொடர்பு என்ற சூழலை பின்னணியாகக் கொண்டு கதைகள் எழுதியுள்ளார்கள்.
வானில் உள்ள மின் அலைகளை பின்னிப்பின்னி நெசவு செய்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதை கொண்டும் தொலைத்தொடர்புத் துறையை பின்புலமாக கொண்டும் எழுதப்பட்டுள்ள கதைகள் என்பதனால் இந்த தொகுப்பிற்கு வான் நெசவு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது இத்தொகுப்பில் வரும் கதைகளை வாசிக்கையில் அறிகின்றோம்.
இந்த தொகுப்பில் உள்ள 10 கதைகளிலும் தொலைத்தொடர்பு என்ற சூழலில் நிகழும் சம்பங்களே கதையாக விரிக்கின்றது. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பரிவு, கருணை, நகைப்பு, அழுகை, காதல், தேடல், உழைப்பு, அரசியல், கோபம், இயலாமை, நேர்மை இன்னும் எண்ணற்ற மனித செயல்பாடுகள் மற்றும் உணர்வுகளை காட்டுகின்றன.
இக்கதைகள் அனைத்தும் நூலின் ஆசிரியர் அவர்கள் சொல்வதைப் போல இப்பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன.
#அன்னம் சிறுகதையில் தொலைத்தொடர்பு ஊழியராக வருகின்ற கிருஷ்ண பட் குற்றம் ஒன்றிற்காக விசாரணை செய்யப்படுகின்றார். அதில் ஹாஜி என்பவரின் கருணை மற்றும் அவருக்காக செய்யப்படுகின்ற உதவி இவை அனைத்தையும் கிருஷ்ண பட் கூறிக்கொண்டே வரும்பொழுது சட்டம் என்பது சில மனித நேயங்களுக்காக வளைக்கப்படலாம் என்பதை விசாரணை அலுவலரும் அறிந்து கொள்கிறார். இக் கதையை வாசிக்கும் பொழுது கிருஷ்ண பட் கதாபாத்திரத்தின் இடத்தில் வாசகனாக என்னை பொருத்தி பார்க்கும் பொழுது அவர் சொன்ன அதே வாசகத்தை நானும் முன்மொழிகின்றேன் ‘அதனாலென்ன’
#குருவி என்ற சிறுகதையில் தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரியும், குடித்துவிட்டு பணியில் சிரத்தை இல்லாமல் திரியும், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாடன் பிள்ளையை அந்தத் துறையே தேடுகிறது. நேர்த்தியாக பணிபுரியக்கூடிய அவனது பணியானது அவர்களுக்கு தேவையாக உள்ளது. அவனை தேடிக்கண்டறிந்து அவனிடம் இருந்து பெறப்படும் உரையாடல்கள் அனைத்தும் அவனது அகம் மற்றும் பணி இவற்றை யாரும் புரிந்து கொள்ளாது புறம் தள்ளிவிட்ட நிலையில் உள்ளதை வெளிக்காட்டுகிறது. சில பணிகளை தன்னால் மட்டுமே செய்ய முடியும் என்பதில் அவன் உறுதியாகவே இருக்கின்றான். அப்போது ஒயரில் செய்யப்பட்ட தூக்கணாங் குருவிக்கூடு ஒன்றை பார்த்து வியப்பும் ஆச்சரியமும் அடைகிறான். அதுவரையில் அந்த பணியை செய்யலாமா வேண்டாமா என்றும், பல கண்டிசன்களும் செய்து கொண்டிருந்தவன். யாரும் எதும் செய்ய வேண்டாம் தானே வேலையை செய்வதாக ஒப்பு கொள்கிறான்.
ஒரு தூக்கணாங்குருவி தனது கூட்டினை எவ்வளவு நேர்த்தியாக செய்திடுமோ அந்த அளவிற்கு நேர்த்தியாக தன் பணியை செய்யக்கூடிய ஊழியன் கிட்டதட்ட நீயும் ஒரு குருவி தான் என்று அவனது பணியை பற்றி கூறும் பொழுது அவன் அக்கணமே கண்ணீர் மல்கி புன்னகைப்பது, அவன் மீதும் அவன் பணியின் மீதும் அவர்கள் கொண்ட நம்பிக்கையே. மாடன் பிள்ளை எதிர்நோக்குவதும் அதையே.
#வானில்_அழைக்கின்றன_குரல்கள் என்ற சிறுகதையில் தொலைதொடர்பு துறையில் பணியாற்றி இறந்த தன் மனைவி சாந்தி என்பவரின் குரல் பதிவை தேடிவரும் நபருக்காக அவள் குரலை அந்த அலுவலகத்தில் எந்த பயனும் அற்றவராக கருதப்படும் சீனியர் ஊழியரான தோட்டான் என்பவரை கொண்டு தேட வைப்பதும், சாந்தியின் குரல் கிடைத்த பிறகும் தோட்டான் என்பவர் தொடர்ந்து குரல் தேடலில் இருப்பதும், குரல் கிடைத்த பின்பும் ஏன் தேடுகிறீர்கள் என்று ஊழியர்கள் கேட்கும் பொழுது ‘ரோஸியின் குரலை தேடுகிறேன்’ என்று தோட்டான் பதில் கூறுவதை கேட்டு மனம் நெகிழ்ந்தது இக்கதை கதாபாத்திரங்கள் மட்டுமல்ல வாசகனான நானும் தான்.
கலை கார்ல்மார்க்ஸ்
ஆயிரம் காந்திகள் விமர்சனம்- ராதாகிருஷ்ணன்
பாபா ஆம்தே பற்றிய சுனீலின் கட்டுரையில் இரண்டு முக்கியமான குறிப்புகள் இருந்தன. ஒன்று பாபா ஆம்தேவை காந்தி பனை வெல்லத்தை பிரபலபடுத்தி மக்களிடம் கொண்டு செல்லுமாறு சொல்கிறார், அதில் அவரை முழுமையாக ஈடுபாடுத்தி கொள்ள சொல்கிறார், ஆனால் ஆம்தே அதில் ஈடுபட வில்லை, ஆனால் பின்னாளில் அதற்காக வருந்துகிறார், ஈடுபட்டிருந்தால் சர்க்கரைக்கு மாற்றாக உருவாக்கி எடுத்திருக்கலாம், கிராம மக்களுக்கு பெரிய தொழில்வாய்ப்ப்பாக அமைந்திருக்கும், சர்க்கரை லாபி இருந்திருக்காது, நிலத்தடி நீர் மட்டம் இறங்கி இருக்காது என்றெல்லாம் ஆம்தே அங்கலாய்க்கிறார்! இதில் எனக்கு காந்தியின் தொலைநோக்கு பார்வை, கிராம மக்களுக்கு எது சரியான விதத்தில் பயன்தரும், எது இயற்கையை கெடுக்காது என்பது சார்ந்த புரிதல்கள், முன்னுணர்தல்கள் எல்லாம் பிரமிப்பை தருகிறது.
ஆயிரம் காந்திகள் – நூல் வாசிப்பனுபவம் – பாகம் 1 ஆயிரம் காந்திகள் – நூல் வாசிப்பனுபவம் – பாகம் 2ஒரு போராட்டத்தின் போஸ்ட்மார்ட்டம்-சத்தியமூர்த்தி
நான் விடுதலைப் புலிகளை முதன் முதலில் நேரில் சந்தித்த போது இளம் ஆசிரியராக இருந்தேன். எங்கள் பள்ளிக்கு சில விடுதலைப் புலிகள் படம் காட்டும் கருவிகளோடு வந்தார்கள். மாணவர்களுக்கு ஈழப் பிரச்னை தொடர்பான படங்களைப் போட்டு காட்டினார்கள். பள்ளியிலேயே தங்கி பக்கத்து பள்ளிகளுக்கு ஆதரவு திரட்ட சென்று வந்தனர். அப்போது அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு போராட்டத்தின் போஸ்ட்மார்ட்டம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


