Jeyamohan's Blog, page 800
April 6, 2022
வெண்முரசில் மரவுரி- கடிதங்கள்
அன்புள்ள ஐயா,
பேராசிரியர் லோகமாதேவி எழுதிய வெண்முரசின் மரவுரி ஆடைகள் கட்டுரை அருமையாக இருந்தது. வெண்முரசு வாசகர்கள் தாங்கள் வாசித்தவற்றை மீள ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்ள மிகவும் பயன்படும். ஒவ்வொரு பத்திக்கும் மனம் அந்தந்த அத்தியாயங்களை வாசித்த காலங்களில் சென்று நிறுத்தின. மரவுரி பற்றி யோசிக்கும் போது, மன்னர்களும் அரசிகளும் இளவரசுகளும் பொன்னாலும் வைரத்தாலும் இழைத்த ஆடைகள் அணிந்து வந்திருக்கும் அவையில், எந்த அணியும் செய்து கொள்ளாமல் பீஷ்மரோ, பலராமரோ, துரோணரோ, பால்கிகரோ, பீமனோ மிக மரவுரி மட்டும் அணிந்திருக்கும் காட்சி பல இடங்களில் வந்து கொண்டேயிருக்கும். மற்ற பாத்திரங்கள் அணிந்த ஆடைகளை ஆபரணங்களை விரிவாக விவரித்து விட்டு இவர்கள் வெறும் மரவுரி மட்டும் அணிந்தனர் என்று கூறும் போது அந்த காட்சியில் உருவாக்கும் contrast நன்றாக இருக்கும். ஒரு வேளை எளிமை தான் அழகு என்று தோன்ற வைக்கும் அந்தக் காட்சிகள்.
பீமன் மரவுரி அணிந்து கொண்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு சமையலறையில் இருக்கும் காட்சியும், போருக்கு தயாராகையில் படைக்கலங்களை, உணவுப் பொருட்களை கப்பலில் ஏற்றி வைக்கும் வீரர்களுடன் இணைந்து நின்று வேலைசெய்து கொண்டிருக்கும் பீமனின் தோற்றம் தான் எப்போது பீமனை நினைத்தாலும் மனதில் எழும் காட்சிகள்.
நன்றி,
கே.கே.குமார்,
திருப்பூர்.
அன்புள்ள ஜெ
வெண்முரசில் மரவுரி ஆடைகள் கட்டுரை அற்புதமான ஒன்று. ஒரு சிறு பொருள் வழியாக உலகவரலாற்றின் ஒரு முழுப்பக்கத்தையே சுட்டிக்காட்டிவிட்டார். மரவுரிதான் மிகப்பழைய ஆடை. அதை உடுப்பது எதைக் குறிக்கிறது? நாகரீகத்தில் இருந்து விட்டுசெல்வதைத்தான். போதும் என்று பின்னால் செல்வதைத்தான். வெண்முரசில் மரவுரி வரும் இடத்தையெல்லாம் சுட்டிச்செல்லும்போது அந்த ஒரு முழுமைப்பார்வை வந்தது
ஆர்.கே.கிருஷ்ணராஜ்
April 5, 2022
மேடைப்பேச்சாளனாவது…
அன்புள்ள ஐயா,
திருநெல்வேலியில் உங்கள் உரையினை நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. நான் உங்கள் உரையினை நேரில் கேட்பதென்பது இதுவே முதன்முறை. மிகச்சிறப்பான உரையாக அமைந்தது. பலவகையான மக்களமைந்திருந்த கூட்டம் கேட்டார் பிணிக்கும் சொல் போல உங்கள் உரைகேட்டு ஆழ்ந்து அமைந்திருந்ததனை கண்டேன்.
நெல்லையில் சென்ற பல ஆண்டுகளில் நான் கேட்ட உரைகளில் முதன்மையான உரையிதுவே. எனக்கு அகவை அறுபத்தெட்டு. பல புகழ்பெற்ற பேச்சாளர்களின் உரைகளை கேட்டடவன், உங்கள் உரையில் ஒரு வார்த்தைகூட வீணானதாக அமையவில்லை. பேச்சு எங்கும் மடைதிரும்பவில்லை. சொல்லவந்த மையத்தினை ஆணித்தரமாகச் சொன்னீர்கள். தேவையற்ற கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஏனையவை இல்லை. தொடர்பற்ற மேற்கோள்கள், பழகிப்போன மேற்கோள் ஆகியவையும் இல்லை. இன்றைய பேச்சாளர்கள் பலர் பாதிக்குமேல் நகைச்சுவை துணுக்குகளையே பேசுகின்றார்கள்.
நான் குன்றக்குடி அடிகளாரின் உரையை கேட்டவன். நான் கேட்ட உரைகளில் அவருடைய உரையே தலைசிறந்தது என துணிவேன். புலவர் கீரன் உரை அங்கங்கே அலையுமெனினும் அவர் சரியானபடி இருந்தால் உரை அரிதான பலவற்றைச் சொல்லும்தகைமை கொண்டிருக்கும். இன்றைக்கு நமக்கு தேவை புதியவிஷயங்களை அழகுறச் சொல்லும் நல்ல பேச்சாளர்கள்தான். சைவம் குறித்தும் தமிழ்த்தொல்லிலக்கியங்கள் குறித்தும் பேச நல்ல பேச்சாளர் அருகியருகி வருகின்றனர்
நெல்லையில் நீங்கள் கட்டணம் வைத்து உரையாற்றியதாகச் சொல்லியறிந்தேன். நீங்கள் நம் மரபுச்செல்வங்கள் பற்றிய உரைகளை தொடர்ந்து ஆற்றவேண்டுமென விரும்புகிறேன். இன்று நல்ல உரைகளுக்கான தேவை மிகவும் உள்ளது.
இராம. சங்கரலிங்கம்
***
அன்புள்ள சங்கரலிங்கம் அவர்களுக்கு,
பாராட்டுகளுக்கு நன்றி, ஆனால் என் உரைகள் எவையும் எனக்கு நிறைவை அளிப்பதில்லை. ஏனென்றால் உண்மையில் மேடை சார்ந்த ‘உதறல்’ இன்னமும் கூட என்னிடமிருந்து விலகவில்லை. மேடையில் பேசவேண்டும் என்பதே பதற்றமூட்டும் ஒன்றாக உள்ளது. எத்தனை தயாரித்துக் கொண்டாலும் மேடையுரையில் சொற்குளறுபடிகளும், செய்திக் குளறுபடிகளும் அமைகின்றன. கொஞ்சம் உளறாமல் ஓர் உரையும் இதுவரை ஆற்றவில்லை. ஆகவே கூடுமானவரை மேடையுரைகளை தவிர்ப்பதே என் வழக்கம். இனியும் அப்படித்தான்.
உரையின் பதிவுகளை திரும்பக் கேட்கையில் பிழைகள், விடுபடல்கள் வந்து அறைகின்றன. திரும்பத்திரும்ப ஒரே உரையை ஆற்றும்போது இப்பிழைகள் நிகழ்வதில்லை. உரையை மேடையில் சிந்தித்து நிகழ்த்தும்போது அமைகிறது. முக்கியமாக மனம் உரையை விட முன்னால் செல்கிறது. உள்ளே ஒரு சொல் இருக்க இன்னொரு சொல் வெளியே வருகிறது. எண்ணியது அல்ல சொல்லில் இருப்பது.
இந்த உரையிலேயே மயிலை சீனி வெங்கடசாமி என நினைத்து ந.மு.வெங்கடசாமி நாட்டார் என்று சொல்லியிருக்கிறேன். மு.அருணாச்சலம் அவர்களின் தமிழிலக்கிய வரலாறு 16 ஆம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள் வரைத்தான். நான் 19 ஆம் நூற்றாண்டு வரை என சொல்லியிருக்கிறேன் (அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இலக்கிய வரலாறு எழுத எண்ணியிருந்தார், எழுதவில்லை.)
இன்னொரு பிழை என்பது பேசும்போது ஒரு புதிய எண்ணம் தோன்றுமென்றால் மிக முக்கியமான தொடர்ச்சியை விட்டுவிட்டு அதை தாவிப் பற்றிக் கொள்வது. பின்னர் உரையை கேட்டால் அந்த விடுபடல் காரணமாக கேட்கவே முடியாதபடி ஏமாற்றமும் எரிச்சலும் மிஞ்சுகிறது. உரையை திருத்தியமைக்க முடியாது. இந்த உரையிலேயே கயவாகு காலக்கணிப்பு முறையில் இருந்து மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கு வந்திருக்கவேண்டும். நெல்லையில் ஆற்றும் உரையில் அவர் விடுபடுவதென்பது பெரும் பிழை. பேசுவதற்கு முன்புகூட அவரைப் பற்றி எண்ணி குறித்து வைத்திருந்தேன். தாளிலேயே எஞ்சிவிட்டது.
ஆகவே சொற்பொழிவுக்கலை எனக்கு இன்னமும் அந்நியமானதுதான். நல்ல சொற்பொழிவாளர்கள் என் பெருமதிப்புக்குரியவர்கள்.
*
தமிழகத்தில் சொற்பொழிவு என்பது ஒரு மாபெரும் மக்களியக்கமாக கிட்டத்தட்ட நூறாண்டுகள் நடைபெற்றது. மக்கள் அதற்குப் பழகியிருக்கிறார்கள். ஆகவேதான் தமிழகத்தில் எந்த எழுத்தாளரை விடவும் சொற்பொழிவாளர்கள் பெரும்புகழ் பெற்றிருந்தார்கள். அவர்கள் பேசுவதற்குரிய மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் கிட்டத்தட்ட ஆயிரம் தமிழகத்தில் உள்ளன.
இவை பெரும்பாலும் 1900 முதல் 1950 வரையிலான தமிழ்மீட்பு அலையின்போது உருவானவை. சைவசித்தாந்த சபைகள், கம்பன் கழகங்கள், திருப்புகழ் மன்றங்கள், கந்தபுராண அரங்குகள், சைவத்திருமுறை அரங்குகள், திருவள்ளுவர் மன்றங்கள், இளங்கோ மன்றங்கள், வள்ளலார் மன்றங்கள், சேக்கிழார் மன்றங்கள் எனச் செயல்படும் வெவ்வேறு வகை அமைப்புகளின் இயல்புகளில் பொதுவானது தமிழ் மீட்புதான்.
1850 முதல் தொடர்ச்சியாக ஏடுகளில் இருந்து அச்சேறி பொதுவாசிப்புச் சூழலை வந்தடையத் தொடங்கிய தமிழ் மரபிலக்கியத்தை வாசிப்பதெப்படி என தமிழ்ப்பொதுப் பண்பாட்டுக்குக் கற்றுத்தந்தவை இந்த அமைப்புகள். இந்திய அளவில் இன்னொரு மொழியில் இத்தனை பிரம்மாண்டமான மரபிலக்கியம் ஒரேசமயம் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டதில்லை. இத்தனைபெரிய வாசிப்பியக்கம் நிகழ்ந்ததும் இல்லை. இந்த அமைப்புக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஞானியார் சுவாமிகள், மறைமலை அடிகள், வி.கனகசபைப் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், அ.சீனிவாசராகவன், ம.பொ.சிவஞானம், புலவர் கீரன், குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன் எனத் தொடங்கி பாரதி பாஸ்கர், மரபின் மைந்தன் முத்தையா வரை ஒரு பெரிய பேச்சாளர் வரிசை இந்த அமைப்புகளைச் சார்ந்து செயல்பட்டது. அவர்களின் பங்களிப்பு தமிழ் பண்பாட்டுக்கு மிக முக்கியமானது.
ஆனால் நம் மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் இன்று ஒரு சிக்கலில் உள்ளன. சட்டென்று மரபிலக்கியம் கல்விநிலையங்களில் இருந்து அனேகமாக மறைந்தது. வீடுகளில் திருமுறைகளையோ, கந்தபுராணத்தையோ, ஆழ்வார்பாடல்களையோ பிள்ளைகளுக்கு அளிப்பதும் நின்றது. படிப்பில் தமிழ் ஒரு சிறிய துணைப்பாடமே என ஆகியது. தமிழ் இன்று எதற்கும் தகுதிப்பாடம் அல்ல இன்று. கல்வியில் மையமொழி ஆங்கிலமே. விளைவாக தமிழ் அறிந்த, தமிழ்மேல் ஆர்வம் கொண்ட அரங்கினர் எந்த ஊரிலும் இன்று அமைவதில்லை. இளைய தலைமுறையினர் இவ்வரங்குகளில் மிகமிகக் குறைவு.
இப்படி தமிழார்வம் அற்ற அரங்கினர் அமைந்தபோது அவர்களுக்கு தீவிரமான தமிழார்வத்தை ஊட்டும்வகையில் தமிழமைப்புக்கள் செயல்பட்டிருக்கவேண்டும். தமிழ் மறைந்துவரும் சூழலுக்கு ஓர் எதிர்விசையாக நிலைகொண்டிருக்கவேண்டும். ஆனால் நேர்மாறாக அவை அந்த தமிழார்வம் அற்ற மக்கள்திரளை மகிழ்விக்கும் வகையில் சொற்பொழிவுகளை அமைக்கத் தொடங்கின. அவர்களுக்கு என்ன தெரியுமோ, எதில் ஆர்வமுண்டோ அதைப் பேசத் தொடங்கின.
இவ்வமைப்புகளை நடத்துபவர்களில் உண்மையான தமிழார்வம் கொண்ட சிலரை எனக்கு தெரியும். அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் காரணமும் நியாயமானது. அவர்கள் நன்கொடை வாங்கித்தான் நிகழ்ச்சிகளை அமைக்கவேண்டும். அந்நிகழ்ச்சிகளுக்கு பெருந்திரளாக மக்கள் வரவில்லை என்றால் நன்கொடை அளிப்பவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பணம் செலவிடப்படவில்லை என நினைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்கு ‘பிரபலங்கள்’ வரவில்லை எனில் பணம் கிடைக்காது. வெறும் நகைச்சுவைகளை பேசுபவர்களே பிரபலமாக இருக்கிறார்கள். ஆகவே வேறுவழியில்லை.
பட்டிமன்றத்துக்கு மட்டுமே இன்று மக்கள் வருகிறார்கள். சொற்பொழிவுகளுக்கு எவரும் வருவதில்லை. பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவானது எதற்கு என குன்றக்குடி அடிகளார் ஒரு நூலில் சொல்கிறார். சிலப்பதிகாரம் முதலிய செவ்விலக்கிய நூல்களைப் பற்றிய உரைகள் நடக்கும்போது ஓர் உரை முடிந்ததுமே மக்கள் கலையும் வழக்கம் இருந்தது. அத்தனை உரைகளையும் அவர்களை கேட்கவைக்கும் பொருட்டே பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவாகியது. ஓர் உரையை கேட்டவர் இறுதித் தீர்ப்புரையை கேட்காமல் கிளம்ப முடியாது.
நம் பட்டிமன்றங்களின் தலைப்புகள் இன்று எப்படி மாறியுள்ளன என்று பார்த்தால் இது தெரியும். ‘தலைவியரில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?’ என்று விவாதித்த காலம் மறைந்துவிட்டது. ‘கொடுமைப்படுத்துவது மாமனாரா மாமியாரார்?’ ‘தமிழ் சினிமாப்பாடல்களில் காதலா காமமா?’ இதெல்லாம்தான் இன்றைய பட்டிமன்றத் தலைப்புகள். இன்னும் ஒருபடி மேலே சென்று திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமிழ்ச் செவ்விலக்கியங்களை, தனித்தமிழை, தமிழியக்கத்தையே கேலியும் கிண்டலும் செய்வதே இன்று பட்டிமன்றங்களில் நடைபெறுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சைவ ஆலயத்தின் திருவிழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி. ஒரு பேச்சாளர் நகைச்சுவை என்ற பெயரில் அத்தனை நாயன்மார்களையும் கேலி செய்துகொண்டிருந்தார். திருமுறை பாடல்களை அபத்தமாக கேலிப்பாடலாக பாடிக்காட்டினார். பரோட்டாவுக்கு சால்னா கேட்பதை ‘பித்தா பிறைசூடி’ என்னும் பாணியில் சொல்லி காட்டினார். அரங்கு சிரித்துக்கொந்தளித்துக் கொண்டிருந்தது.
இச்சூழலின் விளைவாக மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் இலக்கியரசனைக்கு எதிரான மனநிலையை உருவாக்குவனவாக மாறிவிட்டிருக்கின்றன. அங்கே வந்தமரும் கூட்டம் ஒரு கேலிச்சிரிப்பு மனநிலையிலேயே இருக்கிறது. நாம் மேடையில் அனைத்தையும் கேலிசெய்யவேண்டும், நம்மைநாமே கேலி செய்யவேண்டும். அதை அவர்கள் ரசிப்பார்கள்.
அதைவிட அபாயமான ஒன்று உண்டு. அங்கே வருபவர்களில் பலர் ஏற்கனவே அவர்களுக்கு என்ன தெரியுமோ அதையே பேச்சாளர் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தமிழ்ப்பெருமிதம், சைவப்பெருமிதம், புளிக்கப்புளிக்க புகழ்மொழிகள், கூசக்கூச வரலாற்றுப் பொய்கள். எல்லாவற்றுக்கும் கைதட்டுவார்கள். பேசுபவர் எத்தகைய அறிஞர் என்றாலும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியாத, அவர்கள் முன்னரே ஏற்றுக்கொண்டிராத ஒன்றை சொல்லிவிட்டால் சிக்கல்தான். கொதித்து எழுந்துவிடுவார்கள்.
ஏனென்றால் மேடைப்பேச்சாளரை அவர்கள் தங்களுக்கு எதையாவது கற்பிப்பவர் என நினைக்கவில்லை. தங்களை மகிழ்விப்பவர் என நினைக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார் முன் அமர்ந்திருந்த கூட்டம் குருவின் முன் சீடர்கள் என உணர்ந்தது. இன்று முச்சந்தியில் வித்தை காட்டுபவன் முன் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்பவர்களாக உணர்கிறது. அவன் கம்பிக்குள் நிர்வாணமாக நுழையவேண்டும். சவுக்கால் தன்னைத்தானே அடித்துக் கொள்ளவேண்டும். இவர்கள் எதிர்பார்ப்பது அதையே.
உண்மையில் மேடையில் நின்றுபேசுபவர் ஓர் அறிஞர். இன்று மேடையில் பேசும் ஒருவர் மறைமலை அடிகளாரும் குன்றக்குடி அடிகளாரும் நின்ற அதே பீடத்தில் நிற்பவர். அவர் தன் மனைவி தன்னை செருப்பாலடிப்பாள் என்றும், பக்கத்து வீட்டுக்காரன் காறித்துப்புவான் என்றும் பேசும்போது தன்னை மட்டுமன்றி ஒரு மரபையே கீழிறக்குகிறார். ஆசிரியர், கற்பிப்பவர் என்னும் நிலையில் இருந்து மிகமிகக் கீழிறங்குகிறார்.
ஒரு மேடைப்பேச்சாளர் அவ்வாறு தன் தரம் விட்டுக் கீழிறங்கியபின் அவர் சொல்வதன் மேல் அந்த அரங்கினருக்கு எந்த மதிப்பும் உருவாவதில்லை. பலசமயம் அவர் தீவிரமாக ஏதாவது சொல்லும்போதும் அரங்கு சிரிக்கிறது. தொடர்ந்து அவர் கனமாக எதையாவது பேசினால் அப்படியே உளம் விலகிவிடுகிறது, அரங்கில் ஒரு சலசலப்பு உருவாகிவிடுகிறது.
பேச்சாளன் தன்னை கீழிறக்கி கொள்வதை எதன்பொருட்டு கூட்டம் ரசிக்கிறது? அதில் ஒரு திரள்சார் உளநிலை உள்ளது. பலமுறை அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். பெருந்திரளுக்கு பிரபலங்கள்மேல் வழிபாட்டுணர்வு உள்ளது. ஆனால் அதற்கும் ஆழத்தில் ஒரு வெறுப்பும் உள்ளது. அந்த வெறுப்பு சாமானியனின் காழ்ப்பு (Common man’s Grudge) எனப்படுகிறது. அது நடிகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆகவேதான் அவர்கள் மிகமிகமிகப் பணிவானவர்களாக மேடைகளில் தோன்றுகிறார்கள்.
எந்த சாமானியனும் தன் ஆழத்தில் தன்னை மிகப்பெரியவனாகவே நினைத்துக் கொள்கிறான். உலகமே தன்னைச்சுற்றித்தான் நிகழ்வதாகக் கற்பனை செய்துகொள்கிறான். ’நான் அரங்கில் இருக்கிறேன், இவன் மேடையில் இருக்கிறான், ஆனால் நான் இவனைவிட ஒரு படி மேல்’ இதுதான் சாமானியனின் மனநிலை. அந்த மனநிலையை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் கைதட்டல் வாங்கவே மேடைப்பேச்சாளர் தன்னை கீழிறக்குகிறார்.
இப்படியே நையாண்டியுரைகள் கேட்டுக்கேட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்ட அரங்கினரே எல்லா ஊர்களிலும் உள்ளனர். அவர்களுக்கு முன்னால் உரையாற்றுவது என்பது மிகமிகக் கடினம். அவர்கள் நம்மை கவனிக்க மாட்டார்கள். நாம் நம்மையே கோமாளியாக்கிக் கொண்டு நகைச்சுவையை பரிமாறுவோம் என எதிர்பார்ப்பார்கள்.
என்னை மரபிலக்கிய அமைப்புகள் தொடர்ந்து அழைப்பதுண்டு. கல்லூரிகளும் அழைப்பார்கள். முழுமையாகத் தவிர்ப்பதே என் வழக்கம். பாரதி பாஸ்கர் ஒரு முறை மிக வருந்தி அழைத்தார். அவர் என் மதிப்புக்குரியவர் என்றாலும் தவிர்த்துவிட்டேன்.
என்னால் பொது அரங்கினர் எதிர்பார்க்கும் உரையை நிகழ்த்த முடியாது. என் குரலும் உச்சரிப்பும் ஓங்கி ஒலிப்பவை அல்ல. என்னால் கத்த முடியாது. என் உச்சரிப்பில் ஒரு கன்யாகுமரித்தனம் உண்டு. (குறிப்பாக, விளவங்கோட்டுத்தனம்). தெரியாதவர்கள் அதை மலையாளம் என்பார்கள். குலசேகரம் உச்சரிப்பு என்பது என் அடையாளம். அதை நான் மறைக்கவோ அழிக்கவோ விரும்பவில்லை.
என்னால் ஒரு மையப்பொருள் சார்ந்தே பேசமுடியும். திசைதிரும்பி நகைச்சுவைகளைச் சொல்ல முடியாது.என் உரை தெளிவாகத் திட்டமிடப்பட்ட கட்டமைப்பு கொண்டிருக்கும். நினைத்து நினைத்து நான் பேசுவதில்லை. ஆகவே கேட்பவர் தன் நினைவில் இருந்து என் உரையை திரும்பச் சொல்லமுடியும். நான் எந்த உரையையும் முறையான தயாரிப்பு இன்றி பேசுவதில்லை. ஒருமுறை பேசியதை திரும்பப்பேசுவதே இல்லை.
தமிழ் மரபிலக்கியம் சார்ந்தும் பக்தியிலக்கியம் சார்ந்தும் நான் சில உரைகளை ஆற்ற முடியும். மற்றவர்கள் சொல்லாத சிலவற்றைச் சொல்லவும் முடியும். நான் சொல்பவற்றில் முக்கியமாக வாசகர் கொள்ளவேண்டியது அந்த ஒருங்கிணைப்பைத்தான். அதன் வழியாக ஒரு பார்வையை முன்வைக்கிறேன். அந்தப்பார்வையை கேட்பவர் பரிசீலிக்கலாம். அவர் அதை மறுக்கலாம், ஆனால் யோசித்து மறுத்தாரென்றால் உரை தன் இலக்கை எய்திவிட்டது என்றேபொருள்.
நான் எப்போதுமே சிந்தனையைச் சீண்டும் ஒரு பார்வையையே முன்வைக்க முயல்கிறேன். ஒருவகை Brain Teaser என சொல்லலாம். அதையொட்டி அரங்கு யோசிக்கலாம் என்றே எப்போதும் முடிப்பது வழக்கம். மரபான கருத்துக்களைச் சொல்வதில்லை. ஒரு புதிய வினா, புதிய பார்வை இல்லாமல் ஓர் உரையைக்கூட ஆற்றியதில்லை.
ஆனால் அது அந்த மேடையில் நிகழ்வது. ஆகவே சிலசமயம் மேடையிலேயே நான் குழம்பிவிடுகிறேன். சரியாகச் சொல்கிறோமா என்னும் குழப்பம் வருவதுண்டு. சட்டென்று புதிய ஓர் எண்ணம் வந்து அதைநோக்கி தாவி விடுவதுமுண்டு. என் உரைகள் முடிபுகளைச் சொல்பவை அல்ல. ஒருவகை சிந்தனைகள், என்னுடன் சிந்திக்க அரங்கை அழைக்கிறேன்.
மேலே சொன்ன நெல்லை உரையில் மரபிலக்கியம் -நவீன இலக்கியம் இரண்டுக்குமான முதன்மையான வேறுபாடென்ன என்பதை வரையறுக்க முயல்கிறேன். ஏன் அவை ஒன்றையொன்று எதிர்க்கின்றன, ஏன் அவை ஒன்றாகவே முடியாது, ஆனால் எவ்வண்ணம் அவை முரணியக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்று விளக்க முயல்கிறேன். கவனியுங்கள், விளக்கவில்லை. அது ஒரு முயற்சிதான்.
மயிலை சீனி வேங்கடசாமி அவிநயத்தை உருவாக்கியதை ஒரு நவீன நாவலாசிரியன் நாவலாக்கினால் நிகழ்வது என்ன என்பதே நான் முன்வைக்க விரும்பியது. அது ஒன்றை ஒன்று மறுத்து செயல்படும் இரு இயக்கங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் தருணம். அதன் சாத்தியங்கள் என்ன என்று சொல்ல முயல்கிறேன். அது புனைவிலக்கியம் மரபைச் சந்திப்பது. மரபிலக்கியம் புதிய புனைவால் மறுவரையறை செய்யப்படுவது. அது நிகழவேண்டும் என்று சொல்ல வந்தேன். சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
அந்த மையத்தை ஒட்டி நவீன இலக்கியம் – பண்டைய இலக்கியம் என்னும் முரணியக்கம் குறித்து மேலும் யோசிக்கும் ஒருவரை எண்ணியே பேசுகிறேன். அவர் என்னை மறுத்தாலும் அந்த மையம் சார்ந்து மேலும் சென்றாரென்றால் போதும். அதற்கு நான் பேசுவதை கவனிக்கும் அரங்கு வேண்டும். குரல்பயிற்சி இல்லாத, சீராக ஒழுகும் பேச்சுமுறை இல்லாத என்னைப்போன்ற பேச்சாளர்களைக் கேட்கவேண்டும் என்றால் கூர்ந்த கவனம் தேவை. அது நம் பொதுச்சூழலில் இல்லை.
அத்துடன் ஒன்றுண்டு, நான் அரங்கை மகிழ்விப்பவன் அல்ல, அரங்கின் ஆசிரியன். மேடையில் நின்றிருக்கும் நான் நித்யசைதன்ய யதியின், எம்.கோவிந்தனின், சுந்தர ராமசாமியின் மரபினன். ஓர் ஆசிரியன் என்றே என்னை என்னால் முன்வைக்க முடியும்.
இலக்கியம் குறித்தும், மெய்யியல் குறித்தும் அப்பாலுள்ள ஆன்மிகநிலைகள் சில குறித்தும் கற்பிக்கும் தகுதி கொண்டவன் என இன்று என் ஆசிரியர்களை நினைத்துக்கொண்டு என்னால் சொல்லமுடியும். அதை சற்றேனும் ஏற்காமல் எங்களிடம் விகடம் செய் என என்னிடம் கோரும் ஓர் அரங்கின் முன் பேசுவது என்னையும் என் மரபையும் நான் சிறுமைசெய்துகொள்வதாகும்.
ஆகவேதான் கட்டண உரைகள். அங்கே அந்த உறுதிப்பாட்டை அரங்கு எனக்கு அளிக்கிறது. பெரிய திறந்த அரங்கு எனக்கு அளிக்கும் பதற்றமும் இல்லாமலாகிறது. குறைவான கூட்டம், ஆனால் என்னை கேட்பதற்கென்றே வந்தவர்கள். நான் சொல்வதை ஒட்டி ஏற்றும் மறுத்தும் யோசிப்பவர்கள்.
நிறைய பேசுகிறேனோ என்றும் அவ்வப்போது தோன்றுகிறது. என் உரைகளை என்னுடைய நல்ல வெளிப்பாடுகள் என சொல்ல மாட்டேன். அவற்றினூடாக என்னை அறிவது சரியானதும் அல்ல.
ஜெ
***
லோத்தல், தமிழரின் கடற்பயணம் – கடிதம்
பெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்
ராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்
அன்புள்ள ஜெ
நீங்கள் கீழடியின் காலம் பற்றி எழுதியிருந்ததை ஒட்டி நடக்கும் குமுறல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்று ராஜா காலிஃபங்கன் பற்றி எழுதியிருந்ததையும் படித்தேன்.
யுடியூப் வரலாற்றாய்வுகளை குறை சொல்கிறீர்கள். இன்று தமிழ் இந்து நாளிதழில் இந்த செய்தியை பார்த்தேன்.திரைகடலோடிய தொல் தமிழர்கள் துணுக்குற்றேன். ஒரு தரமான இதழில் இந்தக் கட்டுரை எப்படி வரும் என்றே புரியவில்லை. இதை எழுதியவர் தொல்லியல்துறையில் பேராசிரியர்.
கீழடி இந்தியாவிலேயே பழமையான நாகரீகம் என்கிறார்கள். இல்லை, லோத்தல் அதைவிர குறைந்தது மூவாயிரமாண்டு பழமையானது என்றால் அது பொய் என்று சொல்லி கேவலமாகத் திட்டுகிறார்கள். அவர்களில் ஒருவரே லோத்தல் ஐந்தாயிரமாண்டு பழமையானது, ஆனால் அது தமிழர் நாகரீகம் என்றால் ஆமாம் என்கிறார்கள். இதுதான் இங்குள்ள சரித்திர ஆய்வு.
ஐந்தாயிரமாண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கடலோடினார்கள் என்று வாசித்தபோது நான் கீழே எழுதியவர் யார் என்று பார்த்தேன். தமிழ்ப்பண்பாடு சார்ந்து நமக்கு கீழடிக்கு முந்தைய சான்றுகள் என்றால் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற புதைகுழிகள்தானே. இவர் என்ன ஐந்தாயிரம் என்கிறார் என்று குழம்பினேன். ஆதாரங்களை வேறு படமாக அளிக்கிறார்.
ஆனால் எல்லாமே ராஜஸ்தானிலுள்ள லோத்தல் நாகரீகத்தின் சான்றுகள். கூடவே லோத்தல் தமிழர் நாகரீகம் என்கிறார். ஏனென்றால் ஹரப்பா தமிழர் நாகரீகமாம். ஹரப்பா ஏன் தமிழர் நாகரீகம் என்றால் அது ஆரியநாகரீகம் அல்ல என்று சொல்லப்படுகிறதாம்—இந்த வரலாற்றறிவுடன் இங்கே வரலாறு பேசப்படுகிறது.
அதன் கீழே ஒரு கமெண்ட்.”இந்தியாவிலேயே கடல்கடந்து வாணிபம் செய்தவனும், கடல்கடந்து வெற்றிகளை பெற்றவனும் தமிழன் மட்டுமே’. இந்த மாஸ்ஹிஸ்டீரியாவுக்கு எதிராக இங்கேயுள்ள ’பகுத்தறிவாளர்கள்’ ‘மார்க்ஸியர்கள்’ எதுவுமே சொல்ல மாட்டார்கள். அவர்களும் இந்த மாஸ்ஹிஸ்டீரியாவை பயன்படுத்திக்கொள்பவர்கள் மட்டுமே.
இதே மூச்சில் மெசபடோமியா, எகிப்து எல்லாமே தமிழர் நாகரீகம் என்று சொல்லலாம். ஏற்கனவே அப்படி பலபேர் சொல்லி புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ’உலகத்திலேயே தமிழர் நாகரீகம் பழமையானது – ஏனென்றால் உலகத்தில் எது பழமையான நாகரீகமோ அது தமிழ்நாகரீகம்’ இதுதான் இவர்களின் சூத்திரம்.
சிந்து மாகாணம் முதல் ராஜஸ்தான் கட்ச் வரை பரந்து கிடக்கும் லோத்தல்- ஹரப்பன் நாகரீகம் பற்றி இன்னமும் எந்த முடிவும் ஆய்வாளர் நடுவே இல்லை. பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த சித்திர எழுத்துக்களையோ அங்குள்ள சிற்பங்களையோ தங்கள் வசதிப்படி பொருள்கொண்டு அடையும் வரலாற்று ஊகமாகவே அவை உள்ளன.
தெற்கே தமிழ்நாட்டில் அவை திராவிட நாகரீகம் என்றும், திராவிட நாகரீகம் என்றாலே அது தமிழ்நாகரீகம் மட்டுமே என்றும் சொல்கிறார்கள். ஆனால் வடக்கே இன்னும் பெரிய எண்ணிக்கையில், இன்னும் அதிகமான அறிஞர்கள் அவை முழுக்க வேதகால நாகரீகத்தின் முற்காலம்தான் என்று சொல்ல இதேபோல அரும்பாடுபடுகிறார்கள்.
இவர்களுக்கு வரலாற்று ஊகத்துக்கும் வரலாற்று முடிவுக்கும் வேறுபாடு தெரியாது. ஒன்றை நம்பினால் அது உண்மை என்று சொல்கிறார்கள். அதை எவராவது சந்தேகப்பட்டால் எதிரி என்கிறார்கள். நான் டெல்லியில் இருக்கிறேன். இங்கே லோத்தல் நாகரீகம் வேதநாகரீகம் என்பதற்கு சான்றுகள் இல்லை என்றாலே அடிக்க வருகிறார்கள். “நீ இந்துதானே? நீ என்ன பாகிஸ்தானியா?”என்று ஓருவர் கேட்டார். என்னை மாதிரியே பட்டதாரி ஆசிரியர்.
சாதி, மதம் ,இனம், மொழி வெறி சார்ந்து வரலாற்றைப் பார்ப்பதன் விளைவு இதெல்லாம். எந்த வரலாற்று ஆய்வும் புறவயமான விவாதம் மூலம்தான் நடக்க முடியும். எந்த ஊகமும் வலுவாக மறுக்கப்படவேண்டும். அந்த மறுப்பாளர்களுக்கு வலுவான தொல்லியல் சான்றுகளும் விளக்கங்களும் அளிக்கப்படவேண்டும். ஆனால் இங்கே மறுப்பவன் மத எதிரி, மொழி எதிரி, பண்பாட்டு எதிரி.
கர்ஸன் பிரபு 1905 ல் கல்கத்தாவில் பேசும்போது இந்தியர்களால் புறவயமாக வரலாற்றை எழுதவே முடியாது என்று சொன்னார். அப்போது அதற்கு எதிராக கடுமையான விவாதம் எழுந்தது. இன்றைக்கு அது உண்மைதான் என்றே உணர்கிறேன்.
கொஞ்சபேராவது எல்லா பக்கமும் இருக்கும் இந்த கூட்ட ஹிஸ்டீரியாவுக்கு வெளியே சென்று வரலாறு என்றாலென்ன, அதன் முறைமைகள் என்ன என்று தெரிந்துகொண்டார்கள் என்றால் நல்லது என்னும் ஏக்கம் எழுந்தது. ஆனால் நம் இளைஞர்களுக்கு அறிவுபூர்வமாக இருப்பதில் திரில் இல்லை. ஆவேசமாக இருப்பதுதான் திரில் என நினைக்கிறார்கள். ஒருவன் எந்த அடிப்படையுமில்லாமல் அதீத உணர்ச்சிகரமாக பேசி கூச்சலிட்டால் அவன் அறிவுஜீவி என நினைக்கிறார்கள். அதுதான் சிக்கல்
எஸ்.சேதுமாதவன்
அன்புள்ள சேதுமாதவன்,
அந்த நகைச்சுவைக் கட்டுரையை நானும் வாசித்தேன். தமிழில் தொல்லியலாய்வுகள் செய்யப்படும் தரமென்ன என்பதற்கு எழுத்துவடிவச் சான்று. இந்த புகைமூட்டத்தில் இருந்து ஒரு நாலைந்து இளம் மண்டைகளையாவது மீட்க முடியுமா என்பதுதான் என் முயற்சி.
அந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் எஸ்.ஆர்.ராவ் தமிழர்கள் கடல்கடந்து சென்றனர் என்பதற்கு லோத்தலில் ஆதாரம் கண்டுபிடித்தார் என்று புரிந்துகொள்வார்கள். எஸ்.ஆர்.ராவ் புகழ்பெற்ற தொல்லியலாளர். லோத்தல் முதலிய ஹரப்பன் தொல்நகர்களை கண்டடைந்த பெருமைக்குரியவர். ஆனால் சிந்துசமவெளி பண்பாட்டை முன்வேதகால பண்பாடு என்று வாதிடுபவர்களில் ஒருவர். அவருக்கு சர்வதேச அளவில் ஓரளவு ஏற்பும் உள்ளது.
ராவ் சிந்து சமவெளி பண்பாடு அல்லது ஹரப்பன் நாகரீகத்தின் சித்திர எழுத்துக்களை அடையாளம் கண்டு வாசித்துவிட்டதாக விரிவான ஆய்வேடுகளை புகழ்பெற்ற சர்வதேச அரங்குகளில் முன்வைத்திருக்கிறார். அவற்றில் அவர் ஹரப்பன் (சிந்துசமவெளி) எழுத்துக்களின் வரைவடிவங்களுக்கும் சம்ஸ்கிருத எழுத்துக்களின் வரைவடிவங்களுக்கும் இடையேயான ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்.
அந்த ஆய்வின் சில கோணங்கள் பொதுவாக ஏற்கப்பட்டாலும் ராவ் அவற்றை வேதகால நாகரீகத்துடன் இணைப்பதை உலகளாவிய அறிஞர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஹரப்பன் நாகரீகமும், அந்த எழுத்துக்களும் இன்னமும் அறுதியாக எந்த பண்பாட்டுடனும் இணைக்கப்பட முடியாதவையாக, பொருள்கொள்ளப்படாதவையாகவே உலகளாவிய தொல்லியல் அறிஞர்களால் கருதப்படுகின்றன.
ஜெ
இலங்கைப் பொருளியல் நெருக்கடி-கடிதம்
அன்புள்ள ஜெ,
இலங்கைப் பொருளியல் நெருக்கடிகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். பல காரணங்களில் முக்கியமானது ஈஸ்டர் குண்டுவெடிப்பு. அது இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் மிகப்பெரிய அடியை விழச்செய்தது. சுற்றுலாத்துறையில் பணியாற்றுபவன், இலங்கையுடன் நெருக்கமானவன் என்ற முறையில் இது எவ்வளவுபெரிய இழப்பை உருவாக்கியது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இலங்கையில் மிக அதிகமானபேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில் சுற்றுலா. அதன் மேல் மரண அடி விழுந்தது.
இன்றைக்கு யோசிக்கும்போது அந்த குண்டுவெடிப்புக்கு மதவெறி காரணமல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது. மதவெறியனால்தான் அது செய்யப்பட்டது. ஆனால் அவன் பயன்படுத்தப்பட்டானோ என்ற சந்தேகம் வருகிறது. பெரிய பொருளியல் திட்டங்கள் அந்த குண்டுவெடிப்புக்குப் பின்னால் இருக்கலாம். இலங்கையை பொருளியல்ரீதியாக வீழ்த்தி அதை கைப்பற்றும் முயற்சி எடுக்கப்படலாம்.
நான் சொல்லவருவது எளிமையான சதிக்கோட்பாடு அல்ல. இந்தவகையான ஃபெனட்டிஸம்கள் ஆபத்தானவை. டைனமைட் போன்றவை. நாம் நம் வீட்டில் டைனமைட் வைத்திருப்பதுபோல. இவற்றை யார் வேண்டுமென்றாலும் கொளுத்திவிடலாம் என்றுதான்.
ஆனால் இங்கே பேசுபவர்கள் இந்த குண்டுவெடிப்பு உருவாக்கிய அழிவைப் பற்றி மட்டும் பேசுவதில்லை.
ஸ்ரீதர் சந்தோஷ்
***
அன்புள்ள ஸ்ரீதர்
அருஞ்சொல் இதழில் இக்கட்டுரையில் குண்டுவெடிப்பும் பேசப்படுகிறது. ஆனால் முதன்மையான குற்றச்சாட்டு ஐஎம்எஃப் மீதுதான். அதை புரிந்துகொள்ள முடிகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஐ.எம்.எஃப் அளித்த கடன்களின்போது ஏரிகளில் கருவைமுள் நடுவது (சமூகக்காடுகள்) போன்ற உருப்படாத திட்டங்களுக்கு பணம்செலவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம்.
ஜெ
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?அமெரிக்காவில் மரபின்மைந்தன்
அன்புள்ள திரு ஜெயமோகன்,
வணக்கம். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் அமெரிக்கா செல்கிறேன்.
ஏப்ரல் 21 முதல் 25 வரை டல்லாஸ்
ஏப்ரல் 26 முதல் 28 வரை சியாட்டில்
ஏப்ரல் இதில் 9 முதல் மே 2 வரை பே பகுதி
மே 3 முதல் 9 வரை சான் பிரான்சிஸ்கோ வாஷிங்டன் நியூஜெர்ஸி நியூயார்க் பகுதிகள் என்று பயணத்திட்டம் அமைந்துள்ளது
சில நிகழ்ச்சிகளும் உறுதியாகி உள்ளன. அங்கு இருக்கும் உங்கள் நண்பர்கள் சிலரை சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்.
நன்றி
அன்புடன்
மரபின் மைந்தன் முத்தையா
***
அன்புள்ள மரபின் மைந்தன்,
நானும் அமெரிக்கா செல்கிறேன். மே ஒன்று முதல் ஜூன் ஒன்று வரை. தேதிகள், நிகழ்ச்சிகள் ஏறத்தாழ முழுமையாக முடிவாகிவிட்டன. அருண்மொழியும் வருகிறாள்.
உங்கள் பயணத்திட்டத்தை என் இணையதளத்தில் அறிவிக்கிறேன். மரபிலக்கியம் மீது, பக்தியிலக்கியம் மீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றால் இனிய அனுபவமாக இருக்கும்.
உங்கள் மின்னஞ்சலை அளிக்கிறேன். தொடர்பு கொள்பவர்களை எனக்கு தெரிவியுங்கள். அவர்கள் என் நண்பர்கள்தானா என்று சொல்கிறேன்.
(marabinmaindan@gmail.com)
ஜெ
கண்மலர்தல் -கடிதம்
அருண்மொழி அம்மாவின் கண்மலர்தல் கட்டுரையை வாசித்த போதும் அதற்கான எதிர்வினைகள் அவரது தளத்தில் வந்த போதும் என்னுள் ஒரு மனநிலை உருவாகியது. ஒரு பாடல் அறிமுக கட்டுரை, ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் என்னும் பாடகரை தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். அந்த கட்டுரையை சிறு சுயக்குறிப்புடன் அளிக்கிறார்.
யோசித்துப் பார்த்தால் ஒரு இசை அறிமுக கட்டுரை அது ஏன் இத்தனை வாசகரிடத்தில் இத்தனை எண்ணப்பாய்ச்சல்களை நிகழ்த்த வேண்டும்? நான் இக்கட்டுரையை வாசித்த பின் இக்கட்டுரை என்னுள் ஒரு வித உளத் தொந்தரவை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அதனை ஒட்டி யோசித்துப் பார்க்கும் போது ஒன்று தோன்றியது. இக்கட்டுரை வெறும் பதின்பருவ நினைவு குறிப்பு அதனை ஒட்டி ஒருவரின் அறிமுகம் என நின்றுவிடவில்லை. அதற்கும் மேலே ஒரு நிலை சென்று முடிகிறது. அதனை அவர்களுக்கே உள்ள எளிமையான மொழியில் போகிற போக்கில் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.
எனக்கு அப்போது ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும், அம்மா ஊரான கடையம் சென்றிருந்தேன். எல்லோரும் நித்ய கல்யாணி அம்மன் கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது அக்கோவிலைப் பற்றி சித்தி, “இந்த கோவில் பொதிகை மலைத் தொடருக்கு நடுவுல இருக்கு” என்றாள். எனக்கு அன்று வரை மனதில் மலைத் தொடர் பற்றிய சித்திரம் உருவாகவில்லை. நான் திரும்பி, “மலைத் தொடர்னா என்ன சித்தி” எனக் கேட்டேன்.
அதற்கு சித்தி சொன்ன, “மலைத் தொடர்னா நெறய மலை ஒன்னு பக்கத்துல இன்னொன்னு இருக்கும் அத்தன மலைக்கு கீழ இந்த கல்யாணி அம்மன் கோவில் இருக்கு” என்ற படிமத்தை அன்று கோவிலுக்கு செல்லும் வரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அத்தனை மலை ஒரே இடத்தில் எப்படி சாத்தியம் அதற்கு நடுவில் ஒரு கோவில் இருப்பது எப்படி சாத்தியம் அன்று ஆட்டோவில் செல்லும் போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, தூரத்தில் சித்தி மலையைச் சுட்டிக் காட்டினார். அதனை முதல் முறை அந்த பிரம்மாண்டத்தை கண்டதும் நான் பேச்சிழந்துவிட்டேன். அன்று வீடு திரும்பும் வரை அழுதுக் கொண்டே வந்தேன்.
இப்போது போன மாதம் சிக்கிம், சில்லாங் சென்ற போதும் மலைத் தொடரில் நான் கண்டது அதே மன எழுச்சியை தான். அன்று நிகழ்ந்த அந்த எழுச்சியை தான் அதன் பின் ஒவ்வொரு முறை மனம் வேறு வேறு வடிவில் பாவனை செய்துக் கொள்கிறது. இங்கிருந்து தொட்டுணர்ந்து அந்த குழந்தைமை நோக்கி காலம் தன் கையை விரிக்கிறது.
அருவியிலிருந்து கீழே விழுந்து நதியாய் போன நீரின் நினைவில் நின்றிருப்பது அது முதல் துளியாய் அருவியின் ஊற்று முகத்தில் ஜெனித்த நொடி தான் என எனக்குத் தோன்றும். அதன் பின் அந்த நொடியை அந்த நீர் வேறு வேறு வடிவில் பாவனை செய்துக் கொள்கிறது. அதே போல தான் நம் இளமைப் பருவ நினைவுகளும் அந்த சிறுவனின் மனதில் பதிந்த முதல் காட்சி அதனை அவன் கற்பனையில் விரித்துக் கொண்டது அதை நோக்கியே மனம் மீண்டும் மீண்டும் திரும்புவது.
இதனை ஒரு ஆன்மீக தரிசனம் என்றே கொள்கிறேன். கண் மலர்தல் கட்டுரையிலும் அருண்மொழி என்னும் பள்ளிப் பருவத்தில் கண்டடைந்தது அந்த அகத் தரிசனத்தை தான் என என்னைக் கொண்டு நான் ஊகிக்கிறேன். அந்த முதல் தரிசனம் எத்தனை தூய்மையானது. இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் அருண்மொழி அடைவது ஒரு பக்தி மனநிலை அல்ல. அது பெரியவர்களுக்கு உரியது. குழந்தையின் கண்கள் அந்த பக்திக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஓர் ஆன்மீக தரிசனத்தை தொடுகிறது. அதன் பெரும் திகைப்பு அந்த வயது அருண்மொழியை அலைகளிக்கச் செய்கிறது. பிரபஞ்சத்தின் அந்த பெருவிரிவை அதன் பேரிருப்பை அன்று நான் சொல்லத் தெரியாமல் நாள் முழுவதும் அழுதேன். அருண்மொழி அம்மா அன்று முழுவதும் கண் நிறைந்து அந்த தரிசனத்தையே கண்டுக் கொண்டுவருகிறார்.
கட்டுரையில் கோபுரத்தை வர்ணிக்கும் இடமொன்று வருகிறது. அந்த ஒரு வரியில் அம்மா அவர்களின் கூர்மையான அவதானிப்பை சொல்லிச் செல்கிறார். ”கோவிலை நெருங்கினோம். ராஜ கோபுரத்தின் உச்சி விளக்கொளியில் எல்லா கோபுரங்களும் தனிமையில், ஒவ்வொரு மனநிலையில் தவம் செய்வதாக எனக்குத் தோன்றியது. இல்லை, அந்த அமைதி அப்படி தோன்றவைத்தது. கருநீல வானில் எக்கணமும் சாம்பல் ஒளி ஊடுருவும் போல் தோன்றியது.” இந்த காட்சியை ஒரு உணர்வோடு இணைத்துக் கொள்கிறார். குழந்தைகளுக்கே உரிய இயல்பது என நினைக்கிறேன். ஒரு குழந்தைக்கு ஒரு பொம்மைக் கூட உணர்வாக தான் கடத்தப்பட்டிருக்கும் அதே மனநிலையே இங்கே கோபுரத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.
இக்கட்டுரையில் அவர் திரும்பி வரும் போது ஒரு இடம் வரும் ரங்கபுரத்தை கொள்ளிடமும், காவிரியும் சேர்த்து எடுத்துச் செல்லும் காட்சியில் தொடங்கி ஸ்ரீரங்கத்தின் மொத்த நெல் வயலும் பச்சை மாமலைப்போல் மேனியாக மாறி அந்த குழந்தையின் கண் நிறைந்திருக்கும். அன்று போகிற போக்கில் கேட்ட அந்த பாடல் நினைவின் ஓரத்தில் இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் எப்படி அத்தருணத்தை ஒருவரால் மீட்டெடுக்க முடிகிறது. அந்த ஒரு வரி, “பச்சை மாமலை மேனி” என்ற வரி ஏன் ஒருவருக்கு இத்தனை தொந்தரவு செய்ய வேண்டும்?.
இத்தனை ஆண்டுகள் கழித்து அன்று கேட்ட கவிதை வரி இசையோடு சேரும் போது அம்மாவிற்கு புது அனுபவமாக மாறுகிறது. அதுவே மொழியின் உச்சமும், அருவ மொழியின் உச்சமும் இணையும் போது ஏற்படும் மாயம் என்று நினைக்கிறேன்.
அந்த குழந்தை ஸ்ரீரங்கம் கிளம்பிச் செல்லும் போது அங்கே செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே இருக்கிறது. இரவில் அங்கே உடனே செல்ல வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இருக்கிறது. காலையில் பேருந்தில் செல்லும் போதும் அதே மனநிலை தான் ஆனால் கோவிலினுள் சென்று காலை விஷ்ணு தரிசனம் கண்டவுடன் அந்த பச்சை மாமலை மேனியனைக் கண்டவுடன் அவரது மனதை பொங்கச் செய்துவிடுகிறது. உங்கள் திருமுகப்பில் கதையில் காளிசரண் கண்டது எதை பத்துவருடம் கழித்து அனந்தன் அந்த கருமேனியில் கண்டது எதை? அதையே அருண்மொழி கண்டு திரும்புகிறார்.
ஆனால் இக்கட்டுரையில் அவர்களுக்கே உரிய ஒரு துடுக்குத்தனத்துடன், தன்முனைப்புடன் அதனைக் கடந்து செல்கிறார். அந்த தரிசனத்தைப் பற்றியே பெரிய விவரணைகள் எதுவும் கட்டுரையில் இல்லை. ஆனால் கட்டுரையின் பிற்பாதி முழுவதும் அதனையே சுட்டி நிற்கிறது. அந்த மனநிலையே கட்டுரை முழுவதும் கடத்தப்படுகிறது. அதனாலே இச்சிறிய கட்டுரை வாசகருக்கு பெரிதாக தொந்தரவு செய்கிறது. அந்த குழந்தையின் தரிசனத்தை ஒரு துளிக் கண்டுவிட்டதால் ஏற்படும் பரவசம் என நான் நினைக்கிறேன்.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
April 4, 2022
திருப்பத்தூர் இலக்கிய விழா
திருப்பத்தூரில் புத்தகத் திருவிழா,நவீன இலக்கிய விழா என்பது உண்மையில் ஓர் அற்புதம். இத்தனைக்கும் இலக்கியம் இல்லாத ஊர் அல்ல. திருப்பத்தூர் வாணியம்பாடி,வேலூர் போன்ற ஊர்களில் மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் உண்டு.2002ல் வாணியம்பாடி தமிழ்ச்சங்கத்தில் நான் உரையாற்றியதுண்டு. வள்ளலார் மன்றங்கள் செயல்படுகின்றன.
ஆனால் நவீன இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகள் குறைவு. சில ஆண்டுகளுக்கு முன்பு நாவலாசிரியரும் ஆய்வாளருமான மு.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியராக இருக்கையில் இலக்கியவிழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அவை தொடரவில்லை.
இலக்கியவிழாவையும் புத்தக் கண்காட்சியையும் தொடங்கிவைக்க என்னை அழைத்திருந்தார்கள். கேரளத்தில் பல இலக்கியவிழாக்களையும் கருத்தரங்குகளையும் தொடங்கிவைத்திருக்கிறேன் எனினும் தமிழகத்தில் இதுவே முதல்முறை.
நாகர்கோயிலில் இருந்து ஒன்றாம் தேதி மாலை கிளம்பி 2 ஆம்தேதி தர்மபுரி சென்றேன். அங்கே நண்பர் இளம்பரிதி வந்து என்னை அழைத்துச்சென்றார். திருப்பத்தூரில் விடுதியில் தங்கினேன். (நண்பர் இளம்பரிதி பரிதி பதிப்பகம் என்னும் வெளியீட்டகத்தை நடத்தி வருபவர். நண்பர் மணா எழுதிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்)
விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கி.பார்த்திபராஜா நாடகக்கலைஞர். வீ.அரசுவின் மாணவராக முனைவ ர்பட்ட ஆய்வு செய்தவர். திருப்பத்தூரில் குறிப்பிடத்தக்க நாடகங்கள் நடத்தியிருக்கிறார். குறுகிய காலம் கா.சிவத்தம்பிக்கு உதவியாளராகச் செயலாற்றியிருக்கிறார். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ‘இராமாயண ஒயில் நாடகம்’ என்னும் ஆய்வு நூல் குறிப்பிடத்தக்கது என்று ஆய்வாளராகிய நண்பர் சொன்னார்.
பார்த்திபராஜா அவர் எழுதி இயக்கிய பாரியின் வீழ்ச்சி பற்றிய நாடகம் ஒன்றைப் பற்றிச் சொன்னார். மூவேந்தரால் வீழ்த்தப்பட்ட பாரியின் மகள்களும் சமகால சுரண்டல்களால் வீழ்த்தப்பட்டவர்களும் ஒரு காலாதீத இடத்தில் சந்தித்துக்கொள்வதை பற்றிய நாடகம் அது. சாமி என்ற பெயரில் சங்கரதாஸ் சாமிகள் பற்றிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
கைகட்டி நிற்பவர் இளம்பரிதிஎழுத்தாளர் நாராயணி கண்ணகி (சீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் அவருடைய வாதி நாவல் பரிசு பெற்றுள்ளது)யின் மகன் கோகிலன் அறைக்கு வந்திருந்தார். அவர் தேநீர் பதிப்பகம் நடத்துகிறார். அமிர்தம் சூரியாவின் உரைகளை தொகுத்து ஒலியின் பிரதிகள் என்னும் நூலை அவருடைய மனைவி தேவி கோகிலன் தொகுக்க அவர் வெளியிட்டிருக்கிறார்.
காலை ஒன்பது மணிமுதல் வெவ்வேறு நண்பர்கள் விடுதியறையில் வந்து சந்திக்க உரையாடல் நடந்துகொண்டே இருந்தது. திருப்பத்தூரில் இருந்து முத்தரசு, தர்மபுரியில் இருந்து ஜெயவேல், பெங்களூரில் இருந்து என பலர் வந்திருந்தனர். பன்னிரண்டு மணிக்கு ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் தலைமையில் ஒரு கும்பல் வந்துவிட்டது.
மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்பகாமதியம் இளம்பரிதி இல்லத்தில் இருந்து பிரியாணி வந்தது. சனிக்கிழமையாதலால் காளான் பிரியாணி. சூடாக சுவையாக இருந்தாலும் நான் உடனே சொற்பொழிவாற்றவேண்டியிருந்ததை எண்ணி சிறிதே சாப்பிட்டேன். பின் சிறு தூக்கம். தூங்கி விழிக்கையில்தான் உரையை மனதுக்குள் கோத்துக் கொண்டேன். எது நினைவில் வருகிறதோ அதுவே தேவையானது என்னும் அளவுகோலின்படி அதை அமைத்தேன். உரையின் மையம் என்பது நவீன இலக்கியத்தை வாசிக்கவேண்டிய முறை எப்படி என்பதுதான்.
விழா நடக்கும் அரங்குக்கு மாலை மூன்று மணிக்குச் சென்றேன். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்பகா கல்லூரி முதல்வர் மரிய அந்தோனி ஆகியோர் வாசலில் மலர் அளித்து வரவேற்றனர். விழா அரங்கை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தேன். உள்ளே அரங்குகளை ஒருமுறை பார்த்துவிட்டு விழாக்கூடத்திற்குச் சென்றேன்.
கி.பார்த்திபராஜாகுக்கூ நண்பர்கள் உட்பட என்னுடைய வாசகர்கள் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். அரங்கு நிறைந்திருந்தது. ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜு , ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.விஸ்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்ற ஏ.நல்லதம்பி, நகரச்செயலார் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர் அ.சூரியகுமார் என திருப்பத்தூர் மாவட்ட மக்கள்பிரதிநிதிகள் அனைவருமே அரங்கில் இருந்தனர். அவர்கள் மிகச்சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் பேசியபின் நான் அரைமணிநேரம் பேசினேன்.
வழக்கமாக என் உரையில் அந்த ஊரின் இலக்கியவாதிகளை நினைவுகூர்வதும் முன்னிறுத்துவதும் வழக்கம். சிலர் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். பலர் மறக்கப்பட்டிருப்பார்கள். அந்த உரையிலும் அப்படியே பேசினேன்.
விழாவில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. மருத்துவர் டி.ஆர்.செந்தில் ‘இறுதியாய் ஒரு வார்த்தை உங்களோடு’ . சூழியல் குறித்த சுருக்கமான உரைவீச்சுக்கள் அடங்கிய நூல். எல்லா பக்கங்களும் வண்ணப்படங்கள் கொண்ட நூல். சிறுவர்கள் கையிலெடுத்தால் விடாமல் படித்துவிடுவார்கள். சூழியலை பற்றிய ஒரு முறையீடு, ஓர் அறைகூவல்.
இன்னொரு நூல் மருத்துவர் விக்ரம் குமார் எழுதிய பழமிருக்க பயமேன். பழங்கள் சார்ந்த உணவுமுறையின் சிறப்பைச் சொல்லும் நூல். (சித்தமருத்துவர், நண்பரும் சித்தமருத்துவருமான கு.சிவராமனின் மாணவர்).இவ்வரங்கின் சிறப்பு என எனக்குப் பட்டது மக்கள் பிரதிநிதிகளின் இருப்புதான். அவர்களைப்போன்றவர்களாலேயே வாசிப்பை இயக்கமாக ஆக்க முடியும்.
ஐந்து மணிக்கு திறப்புவிழா அரங்கு முடிவுற்றது. அடுத்த அரங்கில் தேவேந்திரபூபதி,பெருமாள் முருகன், அழகியபெரியவன் ஆகியோர் பேசினார்கள்.
நான் வெளியே அரங்கில் என்னை சந்தித்தவர்களுடன் படம் எடுத்துக்கொண்டு, நூல்களில் கையெழுத்திட்டுக்கொண்டு ஒருமணிநேரம் இருந்தேன். எழுத்தாளர் நாராயணி கண்ணகியைச் சந்தித்தேன். மகனை விட இளமையாக இருக்கிறார். குக்கூ நண்பர்கள் வந்திருந்தனர். ஆறு மணிக்கு என் அறைக்குச் சென்றேன்.நண்பர்கள் வந்திருந்தனர். ஏழுமணி வரை பேசிக்கொண்டிருந்தேன்.
நண்பர்கள் ஏலகிரி மலைக்குச் செல்லலாம் என்று சொன்னார்கள். அமைப்பாளர் பாலாஜி ஏற்பாடுகள் செய்தார். எட்டரை மணிக்கு இரண்டு கார்களில் ஏலகிரி மலைக்கு சென்றோம். அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி உட்பட பன்னிரண்டுபேர். அங்கே ஏஜிகே விடுதியின் ஒரு வில்லாவில் தங்கினோம். மிகப்பிரம்மாண்டமான விடுதி. அறைகள் நட்சத்திர விடுதிகளுக்குரிய தரம். உணவும் மிகச்சிறப்பாக இருந்ததாக சொன்னார்கள் -நான் இரவுணவுக்கு பழங்கள்தான் சாப்பிட்டேன்.
மறுநாள் ஒரு நீண்ட நடை சென்று வந்தோம். பின்னர் ஏரிக்கரைக்குச் சென்று ஒரு சுற்று. மதிய உணவுக்குப்பின் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான்கு மணிக்கு கிளம்பி நேராக தர்மபுரி. அங்கிருந்து நாகர்கோயில்.
இத்தகைய விழாவை ஒருங்கிணைப்பது எவ்வளவு பெரிய பணி என்பது விழாக்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பவன் என்ற முறையில் எனக்கு நன்கு தெரியும். ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி ஒருங்கிணைக்கவேண்டும். செய்யச்செய்ய மனக்குறைகள் பெருகும், நமக்கும் பிறருக்கும்.
எழுத்தாளர் நாராயணி கண்ணகியுடன்விஷ்ணுபுரம் விழா உட்பட இத்தகைய விழாக்களின் முதன்மைச் சிக்கல் இவை சிற்றிதழ் சார்ந்த விழாக்கள் அல்ல, ஆனால் நவீன இலக்கியத்தை முன்வைப்பவை என்பதே. சிற்றிதழ் சார்ந்த விழாவில் ஏற்கனவே சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்துக்கு அறிமுகமுள்ள வாசகர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் பேசுவது வேறு. இத்தகைய விழாக்களில் பேசுவது பொதுவாசகர்களுக்குரிய பேச்சு.
இத்தகைய நிகழ்வுக்கு நானே கூட சரியான தேர்வு அல்ல. என் உச்சரிப்பும் குரலும் பொதுவாகச் சென்று சேர்வதில்லை. இலக்கியவாதிகள் பெரும்பாலானவர்களுக்குப் பேசத்தெரிந்திருக்காது. பலர் எழுதிவைத்து வாசிப்பார்கள். சிற்றிதழ் மொழியில் பேசுவார்கள் பலர். பலர் கூட்டத்தையே நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் உரையாடலைப்போல பேசுவார்கள்
பொதுவாசகர்களுக்கு நவீன இலக்கியத்தைக் கொண்டுசெல்லும் இத்தகைய விழாக்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சிற்றிதழ்ச்சூழலுக்கு அறிமுகமற்றவர்கள். அவர்களுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்யவேண்டும்– ஆனால் ஏற்கனவே மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் பிரபலப் பேச்சாளர்களை அழைக்கமுடியாது, அவர்கள் நவீன இலக்கியம் பற்றிப் பேசமாட்டார்கள், கதைகள் மற்றும் நகைச்சுவைகளுடன் வழக்கமான மேடைப்பேச்சை நிகழ்த்துவார்கள். நாம் முன்வைக்க விரும்புவது ஒரு மாற்றை.
ஆகவே நவீன இலக்கியமும் தெரிந்து மேடையிலும் பேசத்தெரிந்தவர்களை அழைக்கவேண்டும் அவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. எண்ணி எண்ணிப் பார்த்தாலும் சிலரே. இதுதான் இன்றைய பெருஞ்சிக்கல்
விஷ்ணுபுரம் முதல் விழாவில் இருந்து இச்சிக்கலைச் சந்திக்கிறோம். இப்போது கொஞ்சம் சமாளித்துக் கொண்டுவிட்டோம். திருப்பத்தூரின் எல்லா அரங்குகளுமே மிகக்கவனமாக அமைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டிருப்பவர்களில் எல்லாருமே சிறந்த எழுத்தாளர்கள் – கூடவே நல்ல பேச்சாளர்கள். யோசித்து, எண்ணித்தான் இந்த பட்டியலை போட்டிருக்க முடியும். அமைப்பாளர்களுக்கு அதன்பொருட்டு தனிப் பாராட்டுக்கள். ஆர்வமும் தீவிரமும் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றிகள்.
====================================================
கி.பார்த்திபராஜா பற்றி ஒரு கட்டுரை ஒலியின் பிரதிகள்- பனுவல் பழமிருக்க பயமேன் பனுவல் மருத்துவர் விக்ரம் குமார் இணையப்பக்கம்
பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்
எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம். புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
Ocean’s nearby
அமெரிக்க நண்பர் ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் என்னுடைய கதைகள் தொடர்ச்சியாக ஆங்கில இலக்கிய இதழ்களில் வெளியாகின்றன. சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இலக்கிய இதழ்களில் இக்கதைகள் தொடர்ச்சியாக வெளியாவது ஒன்றையே உணர்த்துகிறது, தமிழ்ச்சிறுகதைகளின் பொதுவான தரம் என்பதே சர்வதேச அளவில் மதிக்கப்படுவதுதான். ஆங்கில இலக்கியமொழியில் தேர்ச்சி கொண்ட நல்ல மொழியாக்கங்களில் நம் கதைகள் மிக எளிதாக உலக வாசகர்களைச் சென்றடைய முடியும்.
லின்கன், யுகேயிலிருந்து வெளிவரும் Impspried இலக்கிய இதழில் என்னுடைய அருகே கடல் என்னும் கதையின் மொழியாக்கம் Ocean’s Nearby என்ற தலைப்பில் அதன் இணையப் பதிப்பில் தற்போது வெளிவந்துள்ளது. இணைய இதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறையும், அச்சு இதழாக ஆண்டுக்கு மூன்று முறையும் வெளியிடப்படும் இவ்விதழின் அடுத்த அச்சுப்பதிப்பிலும் (மே இறுதியில்) இக்கதை இடம் பெறும்
ராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்
காலிஃபங்கன்
பெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்
அன்புள்ள ஜெ,
காலிபங்கன் அகழ்வாய்வு தளத்திற்கும் அதன் அருகிலேயே அமைந்திருக்கும் அருங்காட்சியகத்திற்கும் நான் 2018 ல் நேரில் சென்றிருக்கிறேன். காலிபங்கன் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமான்கர் மாவட்டத்தில் உள்ளது.
ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க காலம் மற்றும் முதிர்ந்த காலம் என இரு காலகட்டங்களைச் சேர்ந்த தொல்பொருட்கள் காலிபங்கனில் கிடைத்துள்ளன. அதாவது தொடக்க காலம் என்பது 3000-2700 BC. முதிர்ந்த காலம் 2600-1900 BC ஆகும்.
காலிபங்கன் புராதன சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்த நூற்றுக்கணக்கான ஊர்களில் ஒன்று. புராதன சரஸ்வதி கீழ் இமயமலைத் தொடரான சிவாலிக்கில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான் வழியாகச் சென்றது என்று சொல்லப்படுகிறது. சரஸ்வதியின் மூலம் இன்று ஆதி பத்ரி என்றழைக்கப்படும் ஊரில் உள்ளது. ஆதி பத்ரி ஹரியானாவின் யமுனா நகர் மாவட்டத்தில் அமைந்த ஊர்.
ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் நிலங்களில் விரிந்த ஒரு தொல் நாகரிகத்திற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்று காலிபங்கன். இதுதான் அதன் முதல் சிறப்பம்சம். மேலும் காலிபங்கனில் ’உழவுப்பட்ட’ வயலுக்கான தொல்லியல் சான்று கிடைத்திருக்கிறது. மற்றும் சக்கரத்தைக் கொண்டு சுமார் 600 டிகிரி வெப்பத்தில் மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.
2700 BC வாக்கில் உண்டான நில நடுக்கத்தில் தொடக்க கால நகரம் கைவிடப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மக்கள் குடியேறியதாக தொல்லியல் பலகை கூறுகிறது.
ரோபர், பனாவலி, ராக்கிகர்ரி, தோலவீரா, லோதல் என பல தொல்லியல் தளங்கள். நானே பல இடங்களுக்கு நேரில் சென்றிருக்கிறேன். சமீபத்தில் கூட ஹரியானாவில் உள்ள பிர்ரானா (Bhirrana) என்ற ஹரப்பா காலத்தைச் சேர்ந்த தொல்லியல் தளத்திற்கு சென்றுவிட்டு வந்தேன்.
இவை அனைத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்று இணையம் வழியாக எளிதில் தெரிந்துகொள்ளலாம். வாய்ப்பிருப்பின் நேரில் சென்றும் வரலாம். மறுப்பவர்கள் வேறு ஏதோ கலாச்சாரத்தில் வாழ்கிறார்கள்.
அன்புடன்,
ராஜா
டோலவீராஅன்புள்ள ராஜா,
ஓர் ‘அறிஞர்’ ஆவேசமாக எனக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார். ‘நீங்கள் சொல்லும் தொல்நகரங்கள் எல்லாம் ஏன் முன்னாலே சொல்லப்படவில்லை? கீழடி கண்டுபிடிக்கப்பட்டபிறகுதானே சொல்கிறீர்கள்?”. நான் பரிதாபமாக அந்நகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாயின, என்னென்ன ஆய்வுகள் நடந்துள்ளன என்றெல்லாம் எழுதினேன். ஆனால் அவர் எதையும் வாசிக்கவில்லை. உடனே அடுத்த மின்னஞ்சல். அதெல்லாம் தமிழர் நாகரீகம் என்று.
உண்மையில் சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே பண்பாடு, வரலாறு பற்றிப் பேசுபவர்கள் எவரும் இதைப்பற்றி பொதுவெளியில் உரையாடியதே இல்லை. அனைவரும் பொதுச்சூழலில் இருக்கும் மனநிலைக்கு உகந்தபடி போலிப்பெருமித வரலாற்றை மட்டுமே சொல்லிச் செல்கிறார்கள்.
2012ல் நண்பர்களுடன் சென்ற அருகர்களின் பாதை பயணத்தில் லோத்தல், டோலவீரா, காலிஃபங்கன் சென்றிருந்தோம். அங்கிருக்கும் அகழ்நகரங்களில் காலத்தால் முந்தையது லோத்தல். ஹரப்பாவையும் விட முந்தையது என்கிறார்கள். காலிஃபங்கன் அண்மையது. ஆனால் அதனருகே உள்ள தொன்மையான பெரிய குப்பைமேடு தொன்மையானது என்றனர்.
இவை எல்லாம் வரலாற்றில் ஆர்வமுள்ள, அதற்கு கொஞ்சம் மெனக்கெடுகிற, கொஞ்சம் பயணம் செய்கிறவர்களின் உலகம். இதை சாதி, மத, இன வெறியுடன் வரலாற்றை அணுகுபவர்களிடம் விவாதிக்க முடியாது. நான் விவாதிப்பதுமில்லை. ஆனால் இந்த பொதுச்சூழல் புகைமூட்டத்தில் திணறும் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் தொல்லியல் என்றாலென்ன, அதன் முறைமைகள் எத்தகையவை என்று சொல்லவேண்டியிருக்கிறது. மிகச்சிலருக்கு அதைச் சார்ந்து ஆர்வம் பிறக்கும். தீவிரப்பாவனைகள் வழியாகவே இளமையை கடந்துசெல்பவர்களுக்கு சென்று சேராது. ஆனால் அந்த மிகச்சிலர் முக்கியமானவர்கள்.
ஜெ
அருகர்களின் பாதை 18 – டோலாவீரா அருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

