Jeyamohan's Blog, page 803

March 31, 2022

பனிமனிதன் மதிப்புரை- மகிழ்நிலா

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் அற்புதப்படைப்புகளில் ஒன்றான பனிமனிதன் நாவலை இணையம் வழியாக படித்து மகிழ்ந்தேன். தர்மஸ்தலத்திற்கு சென்று திரும்பிய பின் கிம்முக்குள்ளும் பாண்டியனுக்குள்ளும் டாக்டர் திவாகருக்குள்ளும் ஒரு அற்புதமான மாற்றம் நிகழ்ந்தது போல் இந்த நாவலைப் படித்த பின் என்னுள்ளும் ஓர் மாற்றம் நிகழ்ந்ததை உணர்ந்தேன்.

பௌத்த மதத்தின் கொள்கைகளை மிகவும் நுட்பமாக தங்களின் எழுத்துக்களின் மூலம் என்னால் அறிய முடிந்தது. என்னுள்ளும் ஓர் இறையாற்றல் இருப்பதை உணர முடிந்தது. என்னுள் இருக்கும் அந்த இறையாற்றல் எல்லோரிடத்திலும் எல்லாவற்றிலும் கலந்து இருப்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது

நாகரீகத்தின் பெயர் கூறி உண்மையான மகிழ்ச்சியையும் நம்முள் இருந்த புனிதமான குழந்தை மனதையும் அத்துடன் இயற்கை வளத்தையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தங்களின் நாவல் எனக்கு மேலும் புரிய வைத்தது. அக்கருத்தை என்னுள் ஆழமாக பதிய வைத்தது.

பாண்டியன் தனது பூதாகர பிம்பத்தைக் கண்டு மெய்மறந்து மயங்குவதும். கீழே வந்த பிறகு அவர் கூறும் வார்த்தைகளும், ஒரு மனிதன் எந்த அளவிற்கு “நான்” என்ற சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை தெளிவாக வாசகர்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

புத்தகங்களை வாசிப்பதால் மட்டுமே பிறப்பது ஞானம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் புத்தகங்கள் வெறும் வழிகாட்டிகளே, ஞானத்தை அடைய நாம் வாசித்ததைச் சரியான முறையில் நன்கு புரிந்து கொள்ளுதலும் அவ்வாறு புரிந்து கொண்ட கருத்துக்களை வாழ்வில் பின்பற்றுதலும் அவசியம் என்பதை எனக்கு அழகாக புரிய வைத்தது.

இந்தப்புத்தகம் அந்த வகையில் என்னுள் ஒரு ஒளிச்சுடரை ஏற்றி வைத்துள்ளதாக நான் உணர்கிறேன். இந்த ஒளிச்சுடர் ஓர் ஒளிப்பிழம்பாக மாறும் என்று நம்புகிறேன். இத்தகைய ஓர் அருமையான புத்தகத்தை என் போன்ற வாசகர்களுக்கு தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
மீ. அ. மகிழ்நிலா
எட்டாம் வகுப்பு
ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
கூத்தூர்
திருச்சி -621216

***

அன்புள்ள மகிழ்நிலா

சிறப்பான மதிப்புரை. தமிழ்நடை மிகநேர்த்தியாக உள்ளது. நினைத்ததை சொல்லிவிட முடிகிறது. இந்த வயதில் இது ஓர் அபூர்வமான திறன். இளமையிலேயே மொழிநடை கைகூடுபவர்களே பின்னாளில் எழுத்தாளர்களாக மலர்கிறார்கள். எதிர்காலத் தமிழின் முக்கியமான ஓர் எழுத்தாளரை அடையாளம் கண்டுகொள்கிறேன்.

தொடர்ந்து எழுது, எழுதுவது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக மட்டும் அல்ல, நம்மைநாமே தொகுத்துக் கொள்வதற்காகவும்தான். எழுதும்போது எப்போதுமே எல்லாரும் சொல்லும் சொற்றொடர்கள், பாடப்புத்தகச் சொற்றொடர்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும். நாமே யோசிக்க ஆரம்பித்துவிடுவோம் (இந்தக்கடிதத்தில் அப்படி எந்த வழக்கமான வரிகளும் இல்லை என்பது மிக ஆச்சரியமானது)

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2022 11:31

சோர்பா – முத்து

வால்டேராகத் தோன்றும் கதைசொல்லியின் பார்வையில், சோர்பா நிலத்தில் ஊறும் பாம்பாக தெரிந்தாலும், காலால் மட்டுமே பூமியுடன் தொடர்பு கொள்ளும் தன்னைவிட இப்பூமியைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்பதையும் உணர்ந்தவராக இருக்கிறார். ரூஸோவாகத் தோன்றும் சோர்பாவின் பார்வையில், கதைசொல்லி ஒரு புத்தகப் புழுவாகத் தெரிந்தாலும், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நவீன சமூகம் நிர்பந்தித்த சில ஒழுக்கங்களை அவர் போல் நானும் ஏற்றிருந்தால் தன் வாழ்க்கை ஒரு ஒழுங்குக்குள் இருந்திருக்கும் என்றும் எண்ணுகிறார். இப்படி, இருவரும் ஒருவரையொருவர் மிக இயல்பாக நிரவிக் கொள்கிறார்கள்.

சோர்பா என்ற கிரேக்கன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2022 11:30

வெண்முரசில் மரவுரி- லோகமாதேவி

மரப்பட்டை சேகரிக்கும் பகுண்டாக்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்தில் யானைப்பலா மரங்களை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். பலகை வேர்களை கொண்டிருக்கும் மரங்களை தேடத் துவங்கித்தான் யானைப்பலாவிற்கு வந்திருந்தேன். யானைப்பலாவின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மரவுரியை இந்தோனேசிய மூரத் மற்றும் டயாக் பழங்குடியினர் வெகுவாக உபயோகப்படுத்துவதை வாசித்தபோது, பலகை வேர்களிலிருந்து விலகி மரவுரிக்குத் தேடல் சென்றுவிட்டது. Artocarpus Tamaran என்னும் இந்த யானைப்பலா மட்டுமல்லாது பலாவின் பல வகைகளில் இருந்தும் மரவுரி எடுக்கப்படுகிறது.

பிறகு பழங்குடியினரின் மரவுரி பயன்பாட்டைக்குறித்து விரிவாக வாசித்தேன். உகாண்டா பழங்குடியினரின் மரவுரிகளுக்கு 2005ல் யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான காணொளிகளையும் பார்க்கையில் வெண்முரசில் மரவுரி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. பண்டைய இந்தியாவில் பட்டு, கம்பளி, பருத்தி, மற்றும் லினன் துணிகள் பயன்பாட்டில் இருந்தன. மரவுரியும் அவற்றிற்கிணையாகவே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை வெண்முரசை மீள வாசிக்கையில் அறிய முடிந்தது.

வெண்முரசு வாசிப்புக்கு முன்பு வரை மரவுரி என்பது மரப்பட்டையின் நிறத்தில் உடுத்துக்கொள்ளும் ஆடை மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஆடையாகவும், போர்வையாகவும், பாயாகவும் இன்னும் பலவிதங்களிலும் மரவுரி பயன்பட்டதும் அவை பலவண்ணங்களில் சாயமேற்றப்பட்டிருந்ததையும் வெண்முரசின் இந்த மீள் வாசிப்பின் போதுதான் அறிந்துகொண்டேன்.

ஆடைகளுக்கென்றும், குதிரைகளின் உடலை உருவிவிடவென்றும், உடல் துவட்டிக்கொள்ளவும், போர்த்திக்கொள்ளவும், பாயாக, மெத்தையாக படுத்துக்கொள்ளவும், சிகிச்சையளிக்கையில் பஞ்சைப்போலவும், திரைச்சீலைகளாகவும் என பல மரவுரி பயன்பாடுகள் இருந்திருக்கின்றன.

மரவுரி உடை. பகுண்டாக்கள்

மரவுரி குவியல்களுக்கடியிலிருந்து விரைந்து மறைகிறது நாகமொன்று, வெய்யோன் மகனை கருவிலேயே அழிக்க வந்தவளை மரவுரிக்குள் மறைந்திருந்து தீண்டுகிறது மற்றுமொரு அரசநாகம், மரவுரிப்பொதிகள் வண்டிகளில் வருகின்றன, விடுதிகளில் பயணிகளுக்களிக்கவென்று மரவுரிப்பாய்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. அரசவாழ்வை துறந்து கானேகுகையிலும், நாடு நீங்குகையிலும் மரவுரியாடை அணிந்து கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தைகள் மரவுரியில் சுற்றிக் கொண்டு வரப்படுகின்றன. வெண்முரசில் பற்பல இடங்களில் பலவித மரவுரி பயன்பாடுகள் உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருக்கின்றது.

முதற்கனலில் புஷ்கரவனத்தில் இருந்து மரவுரியாடை அணிந்து புறப்படும் ஆஸ்திகன், ஜனமேஜயனின் வேளிவிச்சாலையில் வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள் அமர்ந்திருப்பதை காண்பதிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மரவுரி, இறுதியில் முதலா விண்ணில் இளவரசர் ப்ரீஷித் நீர்க்கலமொன்றில் எடுத்து வரப்படுவதை சொல்லும் அஸ்தினபுரியின் பெருவணிகன் மிருத்திகன் குளித்து விட்டு மரவுரியால் தலை துவட்டி கொள்ளுவது வரை வெண்முரசின் அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

அரச ஆடைகளை துறந்து மரவுரி அணிந்து நாடுவிட்டு செல்லும் உணர்வுபூர்வமான காட்சிகள் வெண்முரசில் பல இருக்கின்றன.

பிரயாகையில் கோசலத்தை இளையோனாகவே அரியணை அமர்ந்து ஆண்ட இக்ஷ்வாகு குலத்து மன்னன் பகீரதன், தந்தை இறந்து குரல்கள் கேட்க துவங்கிய பின்னர் ஒருநாள் காலை தன் அரசைத் துறந்து, தனது இளையோனை அரசனாக்கிவிட்டு மரவுரி அணிந்து தன்னந்தனியனாக காடேகுகிறான்

நீர்க்கோலத்தில் சூதுக்களத்திற்கு பின்னர் நகர் நீங்குகையில் அணிகள் களையபட்டு அரச உடைகளும் நீக்கபட்டு இறுதிச் சிற்றாடையுடன் நிற்கும் புஷ்கரனுக்கு ஒரு முதியவரிடமிருந்து மரவுரியை வாங்கி அளிக்கிறான் சுதீரன்.

பல முக்கிய ஆளுமைகள் நாடு நீங்குகையில் மரவுரி அணிந்தே செல்கின்றனர். க்ருத்ஸமதர் தன் இரு துணைவியரையும் சென்னிசூடி வணங்கிவிட்டு. மரவுரி அணிந்து, இரந்துண்டு, நாட்டை நடந்து நீங்குகிறார். அம்மரவுரியையும் களைந்துவிட்டு காட்டுக்குள் நுழைகிறார்.

பிருஹத்ரதனும் அரசுப்பொறுப்பை தலைமை அமைச்சர் பத்மரிடம் அளித்துவிட்டு மரவுரி அணிந்து வெறும்கோல் ஒன்றை கைக்கொண்டு நகர்நீங்குகிறார்.

நீர்க்கோலத்தில் அரங்கு நீங்குகையில் தமயந்திக்கும் அவல் மகலுக்கும் மாலினி மரவுரியடையை அளிக்க உத்தரவிடுகிறாள். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வரும் தமயந்திக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருப்பாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருக்கும்.

புஷ்கரனும் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” எனும்போது. கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கி ஒரு வீரனிடம் கொடுத்து நளனுக்கு அளிக்கச் சொல்கிறார். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொள்கிறான்.

உத்தாலகரிடம் இறுதிக்கணத்தில் இருக்கும் அயோததௌம்யர் ’இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் அவருக்கு தூய காயத்ரியையும் மரவுரியையும் அளித்ததை சொல்லி தான் அதுவரை ஆடையென்றும் அணியென்றும் கொண்ட அப்போது எஞ்சியிருக்கும் அதையும் அகற்ற சொல்லுகிறார். அதன்பின்னரே விழிமூடி மறைகிறார். தேவாபி துறவு பூண்டு வனம் செல்கையில் மரவுரியை அணிந்துகொண்ட பின்பே புறப்படுகிறான்.

அரிஷ்டநேமி அர்ஜுனனுடன் புறப்படுகையில் கையில் வைத்திருக்கும் சிறிய மரவுரி மூட்டையை திருப்பி குகைக்குள் வீசிவிட்டு அவனிடம் திரும்பி புன்னகையுடன் “எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்பார்

காண்டீபத்தில் மாலினி மரவுரிச் சுருள் ஒன்றைச் சுருட்டி கைகளில் எடுத்துக்கொண்டு காத்திருக்கும் ஊர்தியில் ஏறி நகர் நீங்குகிறாள்.வெண்முரசில் முதியவர்களும் முனிவர்களும் ஆடையென பெரும்பாலும் மரவுரியைத்தான் அணிந்திருக்கின்றனர்.

வெய்யோனில் கர்ணன் திருதிராஷ்டிரரின் இசைக்கூடத்தில் இசை கேட்டுக்கொண்டிருக்கும் இளைய கெளரவர்களை காணச்செல்லுகையில் வழியில் இடையில் செம்மரவுரி அணிந்த முனிவர் நின்றிருப்பார். அக்காட்சியில் அந்தியின் செவ்வொளி விழுந்து பொன்னுருகி நிறைந்த கலமென மாறியிருக்கும் திருதிராஷ்டிரரின் நீள்வட்ட இசைகூடத்தின் நடுவே இருந்த தடித்த மரவுரிமெத்தை.வெய்யொன் கர்ணனின் கனவிலும் மரவுரி உடுத்த கொழுத்த உடலுடன் ஒரு பார்வையற்ற முதியவர் வருவார்.

பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கும் பீமனுக்குமான போர் இடைவேளையில் நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பீடங்களில் அமரச்செய்து இன்னீர் அளித்து அவர்களின் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றுகிறார்கள். இப்படி மரவுரித்துணி துண்டுபோல உடல் துடைக்கவும் வியர்வை ஒற்றவும் பயன்படுவது வெண்முரசில் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

துரோணரும் இன்னும் பலரும் நீராடி முடித்து மரவுரியால் துவட்டிக்கொள்ளுகின்றனர். கிராதத்தில் சண்டனும் ஜைமினியும், சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் மரவுரி ஆடைகளை நனைத்து பிழிந்து காய வைக்கிறார்கள். திரௌபதி மரவுரியை முகத்தின்மேல் போட்டுக்கொண்டு துயில்கிறாள், இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கி குளிக்கிறாள்

நீர் கோலத்தில் பீமன் கரிய கம்பளி ஆடையால் உடலை மூடி மரவுரியை தலையில் சுற்றி கட்டி ஊர்களுக்குள் நுழைந்து கொடை அளிக்கும் படி கேட்கிறான்

இன்னும் சில அரிய நிகழ்வுகளின் போதும் மரவுரி இருக்கிறது மழைப்பாடலில் குழந்தை துரியனுக்கு காந்தாரி அளித்த முலைப்பால் பெருகி குளம்போல தரையில் தேங்கிக்கிடக்கையில் சுஸ்ரவையின் கண்ணில் படாமல் மறைக்க அதில் மரவுரி போட்டு மூடுகிறாள் சத்யசேனை.

களத்தில் பீஷ்மரின் அனைத்து மாணவர்களும் இறந்த பின்னர் அவருக்கு தேரோட்டும் பொருட்டு வரும் துண்டிகன் அவரை காண செல்லுகையில் பீஷ்மர் மரவுரியால் தன் உடலை துடைத்துக்கொண்டு மரப்பெட்டியில் இருந்து புதிய மரவுரியை உடுத்திக்கொள்கிறார். அதுவே அவரின் கடைசி மரவுரியாடை.

பிருதைக்கு கருக்கலைக்க வரும் கிழவி மரவுரிக்குள்ளிருந்த நாகத்தால் தீண்டப்படுகிறாள். வண்ணக்கடலில் பிருதையிடம் விடைபெறும் நாளில் துர்வாசர் “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்கிறார். அதன் பிறகே பிருதைக்கு அந்த வரம் கிடைக்கிறது களிற்றியானை நிறையில் ராஜசூய வேள்விக்கான திசைக்குதிரைகளின் கொட்டிலை சுதமன் பார்வையிடச் செல்லுகையில் மரவுரி குவையினடியில் இருந்து சீறி எழுந்து படமெடுக்கிறது அரச நாகம்

பாரத்வாஜர் குருநிலையில் மரவுரியால் துரோணன் கண்களைக் கட்டிய பின்னரே அவனிடம் தர்ப்பை பீடத்திலிருந்து ஏதேனும் ஒரு தர்ப்பையை எடுக்கும்படி சொல்லப்படுகிறது.

அஸ்வத அருமணியை காணாது தேடுகையில் சித்தம் தடுமாறி இருக்கும் விதுரர், கையிலிருந்து அகல் சுடர் சரிந்து தரையில் பற்றிய நெருப்பின் மீது மரவுரியை எடுத்துப் போடுகிறார், அனல் அம்மரவுரியை உண்டு புகை எழுப்பும்.

அஸ்வத்தாமன் பிறந்த போது இன்கிழங்கு போல சிவந்த சிற்றுடல் கொண்டிருந்த குழந்தையை மரவுரியில் சுற்றி எடுத்துவந்து துரோணரிடம் காட்டுவார்கள்

மழைப்பாடலில் மாத்ரி மணம் புரிந்து வந்த முதல் நாளில் குஹ்யமானஸத்துக்கு செல்லுகையில் சத்யவதி கந்தர்வனின் சிலைப்பதிட்டை முன்னால் விரிக்கப்பட்டிருந்த மரவுரி இருக்கையில் அமர்கிறாள்.

வண்ணக்கடலில் ஓரிரவில் கிருதகட்டத்தின் முன்றிலில் மரவுரி போர்வைகளை போர்த்தியபடி கூடிய நிஷாதர்கள் நடுவே அமர்ந்து தன் குறுமுழவை இரு விரல்களால் மீட்டி மிருண்மயர் பாட்டுடன் கதை சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில் தான் மரவுரி தயாரிப்பும் வணிகமும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. நிஷாத நாடு முழுக்க பெருந்தொழிலாக இருப்பது மரவுரியாடை அமைத்தலே. சர்மாவதியின் இருகரைகளிலும் நூற்றுக்கணக்கான சிற்றூர்களின் படித்துறைகளில் இருந்து படகுகள் மரவுரிப் பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன என்கிறார் மிருண்மயர்

பன்னிருபடைக்களத்தின் சூதுக்களத்தின் நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட வட்ட வடிவ ஆடுகளத்தின் மீதும் செந்நிற மரவுரி விரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்களும் மரவுரி காலணி அணிந்து மட்டுமே நுழைய வேண்டும் என்றும் வகுக்கப்பட்டிருந்தது.

சூதுக்கு முந்தைய நாள் துயில் நீத்திருந்த தருமர் ‘மரப்பட்டை கூரை குடிலும், நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரி பாய் ஒன்று. ஒரு மாற்றாடை உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை’ என்று நினைக்கிறார்..

நிஷதகுடியின் மூத்த இளவரசர் நளனுக்கும் அவர் இளவலும் அரசருமாகிய புஷ்கரனுக்கும் நடக்கும் நாற்களமாடலும் மரவுரி விரித்த மேடையில் போடப்பட்ட நாற்களப் பலகையில்தான் நடக்கிறது.

பல அரசவை கூடங்களில் அவைகளில் அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும், மயிலணையும், அணியணைகளும் போடப்பட்டு இருக்கும். செந்நிற மரவுரித் திரைச்சீலைகள் பல கூடங்களில் அசைந்து கொண்டிருந்தன.

மழைப்பாடலில் கௌந்தவனத்தின் முகவாயிலை வசுதேவன் கடக்கையில் அங்கிருந்த காவலர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரி போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருக்கின்றனர். ஈர உடைகளை உதறியபடி குடிலுக்குள் நுழைந்த வசுதேவனுக்கு பிருதை உலர்ந்த மரவுரியாடை எடுத்துவந்து பீடத்தில் வைக்கிறாள்

நீர்க்கோலத்தில் விராடபுரியின் அரண்மணியில் தனக்கான தனியறைக்குள் நுழைந்ததும் பாஞ்சாலி பிரீதையிடம் அவளுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே என்று கேட்கையில் சேடிப்பெண் ஒருத்தி அவற்றைக் கொண்டு வந்து சீராக விரித்து அமைக்கிறாள்

பயணவழியில் ஆளில்லா விடுதியொன்றில் இருந்த மூங்கில் பெட்டிகளிலிருந்து பீமன். மரவுரிகள் மற்றும் ஈச்சைப்பாய்களையும் எடுத்து தருமன் அமர விரிக்கிறான்.

பயணங்களில் விடுதிகளில் பலர் மரவுரி ஆடையணிந்தும் மரவுரி போர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர். அர்ஜுனனுக்கு வணிகனொருவன் வெள்ளியை வாங்கிக்கொண்டு அளித்த மரவுரியை சருகுகள் மீது விரித்து, வணிகர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் வெளியே மழை பெய்வதையும் கேட்டுக்கொண்டே அர்ஜுனன் படுத்துக்கொள்ளுகிறான். கர்ணன் சம்பாபுரிக்கு வந்த புதிதில் அவனைக்குறித்து குடிகள் பேசிக்கொள்வதை கேட்க ஒரு விடுதியில் கரிய மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பான்.

காயங்களுக்கான சிகிச்சையில் இப்போது பயனாகும் பருத்திப்பஞ்சைபோல அப்போது மரவுரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கார்கடலில் போர்க்களத்தில் காயம்பட்ட திருஷ்டத்துய்மனனின் காயங்கள் தேன் மெழுகிலும் கந்தக கலந்த நீரிலும் முக்கி எடுக்கப்பட்ட மரவுரியால் துடைத்து சுத்தம் செய்யப்படுகின்றன.

சிகிச்சையின் போது கவசங்கள் தசைகள் மீது வலுவுடன் அறையாமலிருக்கும் பொருட்டு உள்ளே அழுத்தப்பட்டு தகடுகளாக மாறிய மரவுரி சுருள்களை உரிய இடங்களில் வைத்து இறுக்கப்படுகின்றது.

பிரயாகையில் திரௌபதியும் மாயையும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்து அன்னைபூசனைக்கு செல்கிறார்கள். செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய திரௌபதி இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுகின்றன.

செந்நா வேங்கையில் மரவுரி மேலாடைகளும், கயிற்றுக்கட்டிலில் மரவுரியும் நார்த் தலையணையும் சொல்லப்பட்டிருக்கும்

பிரேமை மரவுரி மேலாடையை அணிந்திருப்பாள். சரத்வான் மரவுரி அணிந்து புலித்தோல் மேலாடை அணிந்திருப்பார். முதிய குலத்தலைவர்கள் மரவுரித் தலைப்பாகைகளுடன் இடையில் மரவுரி ஆடை மட்டும் சுற்றி நின்றிருப்பார்கள். இடையில் கைக்குழந்தை ஏந்திய மூதாய்ச்சியர் மரவுரியால் தோள்போர்த்து வந்தமர்ந்திருப்பார்கள்.

துரோணரும் கிருபியும் மணமான புதிதில் பயணிக்கையில் கிருபி தன் மரவுரியில் இருந்து மெல்லிய நூலை பிரித்தெடுத்து அதை ஒன்றுடனொன்று சேர்த்து முடிந்து நீளமாக்கி நாணலின் நுனியில் கட்டி அதில் இருவரும் தேன் சேகரிப்பார்கள்.

குருதிச்சாரலிலும் இப்படி ஓரிடம் வருகிறது. சகுனி விழிகளைத் தாழ்த்தி தாடியை நீவி கொண்டிருக்க கணிகர் தான் அமர்ந்திருந்த சேக்கையிலிருந்த மரவுரியின் ஒரு நூலை மெல்ல பிரித்து எடுத்துக் கொண்டிருப்பார்

பாஞ்சால இளவரசியின் மணத்தன்னேற்புக்கு மரவுரி ஆடையுடன் இருக்கும் நம்மை உள்ளே விடமாட்டார்கள் என்று இளையவர்கள் சொல்லுவார்கள். மணத்தன்னேற்பரங்கிலும் மரவுரி விரிக்கப்பட்ட பீடங்கள் போடப்பட்டிருக்கும். நிகழ்வைக் காண வந்தவர்கள் இப்போது பேருந்தில் இடம்பிடிக்க ஜன்னல் வழியே துண்டு போடுவதுபோல இருக்கைகளில் மரவுரி போட்டு இடம்பிடித்து அமர்கிறார்கள். மண முற்றத்திலும் செந்நிறத்தில் மரவுரிக் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும்

அன்னைவிழியில் காலபைரவியின் கருவறைக்குள் கருங்கல் பீடத்தில் மரத்தாலத்தில் மரவுரியில் வண்ணமிட்டு ஐந்து புரிகளாக பின்னப்பட்டிருக்கும் கேசம் இருக்கும். மரவுரிகளால் ஆன சேலைகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மரவுரி படுக்கையில் மரவுரி அணையில் தலை வைத்து இளைய யாதவர் மல்லாந்து துயின்றுகொண்டிருக்கிறார்.

தரையில் போடப்பட்ட மஞ்சப்பலகையில் மரவுரி விரித்து அதன்மேல் படுத்திருக்கும் துரோணரின் காலடியில் அமர்ந்து அஸ்வத்தாமன் காலடியில் அமர்ந்து அவர் கால்களை பிடித்துக் கொண்டிருப்பான்.

பூரிசிரவஸ் குதிரை மேல் இருந்த மூங்கில் படுக்கை கூடைக்குள் உடலை ஒடுக்கிச் சுருண்டு உறங்கும் பால்ஹிக பிதாமகரை பார்க்கையில் கருவறைத் தசைபோலவே இருந்த செந்நிறமான மரவுரி மெத்தையில் கருக்குழந்தை போல அவர் துயின்று கொண்டிருப்பதாக நினைக்கிறான்.

பாண்டவர்களும் திரெளபதியும் காத்யாயனர் குடிலில் அமர்ந்திருக்கையில் மாணவர்கள் ஒவ்வொருவராக மரவுரி அசையும் ஒலி மட்டும் கேட்க மெல்ல வந்து அவர்களுக்குரிய புல்லிருக்கைகளில் அமர்கின்றனர். மாணவர்களுக்குரியது மரவுரி என்பது பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கும். இப்போது பள்ளிச்சீருடை போல் அப்போதெல்லாம் எளிமையான மரவுரி இருந்திருக்கிறது.

பீதர் நாட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு பளிங்குப் பாளத்திற்கு மேலும் கீழும் மரவுரி மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன.

குருஷேத்திர போரில் மரவுரியின் பயன்பாடு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. கெளரவப்படைகளின் காவல் மாடத்தில் சிறுத்தையின் சிறுநீரில் நனைக்கப்பட்ட மரவுரிகள் தொங்குகின்றன. போர்க்களத்தில் மருத்துவ நிலைகளில் அனைத்துப் பலகைகளும் நிரம்ப, வெளியே திறந்தவெளியில் நிலத்தில் மரவுரிப்பாய்களை விரித்து புண்பட்டவர்கள் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.

போர் ஓய்ந்து களம் அடங்கிக் கொண்டிருந்த ஒரு அந்திப்பொழுதில் சிகண்டியின் இரு மைந்தர்களுடன் சதானீகன் வருகையில் பாண்டவப்படைகளில் ஒருவன் யுதிஷ்டிரரைப் போல மரவுரி சூடி, தோளில் மரவுரியை சால்வையாக அணிந்து, உடைந்த வேலொன்றை தொடைகளால் கவ்வி அதை அசைத்து நடனமிடுகிறான்

மரவுரியை ஐந்து புரிக்கூந்தலாக தலையில் கட்டியிருந்த பிறிதொருவன் திரௌபதி போல இடை ஒசித்து கையில் மரவுரி சால்வை ஒன்றை மாலையாக கொண்டு வந்து, அதை அந்த வேலுக்கு அணிவித்து தொழுகிறான். வெடிச்சிரிப்புடன் பலர் கவசங்களையும் மரவுரிகளையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிடுகின்றனர்.

அந்தக் களத்தில் எவருமே புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன.

மருத்துவ நிலைகளை நோக்கித் தொடர்ந்து வண்டிகளில் தேன்மெழுகும் அரக்கும் மரவுரியும் சென்றுகொண்டிருந்தன. போரில் உயிரிழந்த வீரர்களை மரவுரி விரிப்பில் புரட்டிப் போட்டு தூக்கிச் செல்கின்றனர்.

கர்ணன் களம்பட்ட பின்னர் மரவுரி விரித்து அதன்மேல் கர்ணனின் உடலை சரித்து படுக்க வைக்கின்றனர்.

பல பழங்குடியினத்தவர்கள் இறப்பு சடங்குகளில் மரவுரி ஆடைகள் இடம்பெற்றிருக்கும். பல ஆண்டுகள் உடலை மரவுரி பாதுகாக்கும் என்பதால் புதைக்கப்படும் சவங்கள் மரவுரியால் சுற்றப்படும். எகிப்திலும் மம்மிகள் லினன் துணியால் பலமுறை சுற்றப்பட்டிருக்கின்றன. அத்துணிகள் இப்போதும் பெரிய சேதமில்லாமல் கிடைத்திருக்கின்றன.

ஃபல்குனை சித்ராங்கதனுக்கு சிகிச்சை அளிக்கையில் புதிய மரவுரி துணி நான்கு சுருள்கள் கேட்கிறாள். சிறுநீரில் நனைத்த அம்மரவுரியில் உருகும் மெழுகு விழுதை தோய்த்து காயத்துக்கு சிகிச்சை அளிக்கிறாள்

மேலும் பல இடங்களில் காயமடைந்தவர்களுக்கு புண் வாயில் கந்தகமும் மெழுகும் கலந்து அழுத்தி மரவுரியால் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சொல்வளர்காட்டில் அனைவரும் மரவுரியின் நிறத்திலேயே அமைந்த பருத்தியாடை அணிந்திருப்பது சொல்லப்பட்டிருக்கும். இப்போது பருத்தியில் தடிமனாக மரவுரியைபோல ஆடைகளை செய்கிறார்கள்.

1960களிலிருந்து பருத்தி மரவுரி எனும் பெயரில் மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட பருத்தி துணிகள் (cotton bark cloth) பயன்பாட்டில் இருக்கின்றன. இவைகள் மேசை மற்றும் படுக்கை விரிப்பிற்கும், திரைச்சீலைகளாவும் பயன்படுகிறது.

குடி மக்களும் அரசகுடியினரும் மரவுரி சேக்கையில் அமர்கிறார்கள் சேற்றுக் கலங்கல் மரவுரியில் வடிகட்டி அருந்தப்படுகிறது.

காவலர்கள் மரவுரி மூட்டையை பரண் வீடுகளில் அடுக்கி வைக்கின்றனர். காவலரண்களின் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகை சூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடுகின்றனர்.

துச்சாதனன் கையில் ஒரு மரவுரிப்பை வைத்திருக்கிறான். போர் முடிந்து மைந்தர்களை இழந்து சவம் போலிருக்கும் தேவிகையை பூர்ணை கைபற்றி அழைத்துச் சென்று மரவுரியை குடில் சுவரிலிருந்து இழுத்துக்கட்டி சிறிய மறைப்பை உருவாக்கி சிறிய மூங்கில் பீடத்தில் அமர செய்வாள்.

குருதிச்சாரலில் கலங்கள் மரவுரிகளால் உறையிடப்படுகின்றன. செந்நிறமும் நீலநிறமும் ஏற்றப்பட்ட மரவுரிநார்கள் சொல்லப்படுகின்றன.

மாத்ரி நகர் நுழையும் காட்சியில் மரவுரி விரிப்பது கொங்கு திருமணங்களில் நடைபெறும் ஒரு சடங்கை நினைவூட்டியது. மணமக்கள் நடக்கும் வழியெங்கும் உபயோகப்படுத்திய ஆடைகளை ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் விரித்து போட்டுக்கொண்டே வருவார்கள், மணமக்கள் மிதித்து கடந்த துணிகளை மீண்டும் எடுத்து முன்னே விரிப்பார்கள்.

பத்து மங்கலங்களை ஏந்தியபடி மூன்று சேடியர் சென்றனர். சேடிகள் தரையில் விரித்த மரவுரிமேல் கால்களைத் தூக்கி வைத்து மாத்ரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் இரு சேடியர் அந்த மரவுரியை எடுத்து மீண்டும் விரித்தனர்

களிற்றியானை நிரையில் படகுகளில் நடப்பட்டிருந்த. மூங்கில்களில் முடையப்பட்ட மரவுரிப்பாய்கள் கட்டப்பட்டிருந்தன. மாவுரியின் இந்த பயன்பாடு மிகுந்த வியப்பளித்தது. முன்பு லினன் துணிகளில் இப்படி பாய்மரக் கப்பல்களின் பாய்கள் செய்யப்பட்டன.

குளிக்கவைக்கபட்ட புரவிகளின் தோல் பளபளப்பாக ஆனபின்னர் மரவுரியை நீரில் தோய்த்து ஒருமுறை நீவித்துடைத்துவிட்டு மீண்டும் நாய்த்தோலால் நீவப்படுகிறது.

வெண்முரசில் மரவுரிகள் சில இடங்களில் உவமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இளைய யாதவர் நக்னஜித்தையை மணக்கும் பொருட்டு களிறுகளை வெல்லும் கள நிகழ்வின் போது வாடிவாசலில் இருந்து களம் புகுந்த முதல் காளையின் கழுத்துச் சதை மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென உலைகிறது.

யுயுத்ஸுவின் புரவி சிறு இடைவெளிகளில் புகுந்து, வழி உருவாக்கி ஊடுருவி முன் செல்வதை மரவுரிக்குள் நுழைந்து செல்லும் ஊசிபோல ஊடுருவுவதாக அவன் எண்ணுகிரான்.

ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரி சரடென ஊடுருவிச் சென்றது என இமைக்கணத்திலும் இப்படி ஒரு விவரிப்பு வருகிறது.

’மரவுரியில் ஓடிய தையல் நூல் என புதர்களை ஊடுருவிச் சென்ற சிறு பாதையின் ஓரம் நின்றிருந்த மரத்தின் பட்டையில் ஒரு செதுக்கடையாளத்தைக் காண்பது’ என்னும் மற்றொரு உவமையும் மிக அழகாக இருக்கும்.

உறங்குகையில் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திகொண்டது என்னும் ஒரு வரி உறங்குபவருக்கு அந்த உறக்கம் அப்போது எத்தனை தேவை, எத்தனை பாதுகாப்பை அது அளிக்கிறது என்பதை உணரச்செய்யும். அதைப்போலவே ‘இங்கு அரியணை அமர்ந்திருக்கிறேன். ஆனால் என் உள்ளம் குளிர்ந்து நீரிலூறிய மரவுரியென கிடக்கிறது’ என்னும் இன்னோரு வரியும் நீரிலூறிய மரவுரி அளிப்பது போன்ற பாதுகாப்புணர்வைச் சொல்லும்

பிரபாச க்ஷேத்திரத்தின் பெருநாணலின் நாரிலிருந்தும் மக்கள் மரவுரி ஆடைகளை நெய்து அணிகின்றனர்.

கிராதத்தில் தொல்வேதம் அசுரர்களிடமிருந்து வந்ததை சொல்லுகையில் ஜைமினி //மரப்பட்டை நூறாயிரம் முறை அறைவாங்கி நூறுநாள் நீரிலூறி சக்கை களைந்து ஒளிகொண்ட சரடென மட்டுமே எஞ்சும்போதுதான் அது மரவுரியாகிறது. வேள்விக்கு இனிய தேன் தேனீக்களின் மிச்சிலே. ஆனால் அது மலர்களில் ஊறியதென்பதே மெய்.// என்கிறான்.

மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை என்னும் குறிப்பும் வெண்முரசில் வருகிறது

மனிதர்கள் முதன்முதலில் உருவாக்கிய இயற்கை இழை மரவுரிதான். ஆப்பிரிக்காவில் இவை முதன்முதலில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட வகை மரங்களின் உள்மரப்பட்டையை நீளமாக உரித்தெடுத்து, கொதிநீரில் இட்டு, கட்டைகளால் அடித்து மென்மையாக்கி, பின்னர் ஆடை நெய்ய அவை பயன்படுத்தபட்டது. ஆப்பிரிக்க பழங்குடியினர் மரவுரிகளை திரைச்சீலைகள், இடையாடை, உள்ளாடை, மற்றும் சுவர் மறைப்புக்களாக பயன்படுத்தினர். கெட்டியான மரவுரிகள் படுக்கைகளாக பயன்பட்டன.

பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் மரவுரிகள் முக்கியமான இடம்பெற்றிருந்தன போர்னியோ தீவு கூட்டங்களின் பழங்குடியினர் ஒரு துண்டு மரவுரியை துக்க காரியங்களின் போது கைகளில் வைத்திருப்பார்கள். கொங்குப்பகுதி துக்க நிகழ்வுகளிலும் இம்முறை நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. துக்க வீடுகளில் கைகளில் ஒரு துண்டு வைத்திருப்பார்கள், அந்த துண்டைக் கைகளில் தொட்டுக்கொண்டு வணங்குவதே துக்க விசாரிப்பு இங்கெல்லாம். தொல்குடி சடங்குகளின் நீட்சிகளாகத்தான் பல சடங்குகள் இன்னும் நம்மிடையே நீடித்திருக்கின்றன.

தென்கிழக்காசியாவின் பழங்குடியினத்தவரகளின் பெண் குழந்தைகளுக்கான முதலுடையாக மரவுரி ஆடையே அணிவிக்கப்படும். உகாண்டாவின் பெரும்பாலான பழங்குடியினரின் இறப்பு சடங்குகளில் மரவுரி மிக முக்கியமான பொருளாக இருக்கிறது. அங்கு முதுவா எனப்படும் அத்தி வகை மரத்தின் பட்டைகளிலிருந்தே மரவுரி பெறப்படுகிறது (Mutuba -Ficus Natalensis). லத்தீன் மொழியில் நட்டாலன்ஸிஸ் என்றால் ‘அந்த பகுதிக்கு சொந்தமான’ என்று பொருள். இவற்றுடன் மரவுரிகள் அளிக்கும் ஏராளமான பிற மரங்களும் இருக்கின்றன. சாய அத்தி எனப்படும் Ficus Tinctoria, (தாவரவியலில் டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரைக்கொண்ட அனைத்துமே சாயம் அளிப்பவை) காகித முசுக்கொட்டை மரமான (Paper Mulberry) Broussonetia Papyrifera ஆகியவற்றின் மரப்பட்டைகளும் மரவுரி நார்கள் அளிக்கின்றன. நியூசிலாந்தில் மாவோரி (Māori) பழங்குடியினரும் காகித முசுக்கொட்டை மரப்பட்டையிலிருந்தே மரவுரியை எடுக்கின்றனர்.

துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல பலாவின் பலவகைகளும் (Artocarpus Altilis, Artocarpus Tamaran Artocarpus Mariannensis) மரவுரியை அளிக்கின்றன. பெரும்பாலான மரவுரி மரங்கள் மல்பெரி குடும்பமான மோரேசியை சேர்ந்தவை.

மரவுரிகள் டாபா, இங்கட்டு, ஆட்டே, உஹா மற்றும் ஹிபோ என்னும் பெயர்களில் அவை உருவாகும் மரங்களின் பெயருடன் இணைத்து அழைக்கப்படுகின்றன(Tapa, Ngatu, Aute, Uha, Hiapo). ஹிபோ என்பது காகித முசுக்கொட்டை மரங்களின் பெயர். மரவுரியை பொதுவாக ஒலுபுகோ என்கிறர்கள் (olubugo)

டாபா என்பது பட்டையான ஆடை என்னும் பொருள் கொண்ட சொல். (border or strip) அகலமான துணிகளை பட்டைகளை தைத்தும் ஒட்டியும் உருவாக்க தெரிந்து கொள்வதற்கு முன்பு நீளமான பட்டைகளாகவே மரவுரி துணிகள் உருவாக்கப்பட்டன அப்போது வழங்கிய பெயரே டாபா. தென்கிழக்கு சீனா மற்றும் வியட்நாமில் மரவுரி ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது

ஹவாய் தீவில் மரவுரியாடைகள் காபா (kaapa) எனவும் ஃப்யூஜி தீவில் மாஸி எனவும் அழைக்கப்டுகின்றன (masi) டாபாவை அடித்து அகலமும் மிருதுவும் ஆக்கிய பின்னர் அவற்றை புகையிட்டு சாயமேற்றி அலங்கரிக்கப்படுகின்றது. மர அச்சுக்கள் மூலம் பல இயற்கை வடிவங்கள் அதில் தீட்டப்படுகின்றன. வடிவங்களில் அதிகமாக மரங்களும் மீன்களும் இருக்கும்.

அனைத்து இயற்கை வண்ணங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது என்றாலும் மிக அதிகமாக கருப்பும் மண் நிறமும் இருக்கும்.

இப்போது பழங்குடியினர் வசிக்கும் பல தீவுகளில் பருத்தியாடைகளும் கிடைக்கிறதென்றாலும் விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் சமயச்சடங்குகளின் போதும் புல்லாடைகளும் மரவுரியாடைகளுமே பழங்குடியினரால் அணியப்படுகிறது. பலவிதமான முகமூடிகளை உருவாக்கவும் காகிதங்களாகவும், புனித பொருட்களை சுற்றிவைக்கவும் மரவுரி பயன்படுத்தப்படுகின்றது

பட்டையான டாபா துணிகளை தலையில் பழங்குடியினர்கள் வழக்கமாக கட்டிக்கொள்ளுகிறார்கள். திருமணமாகாத பெண்களும் துறவிகளும் அரசகுடியினருக்கும் தனித்தனியே பட்டைகள் இருக்கின்றன. பட்டைத்துணியின் குறுக்கே ஒரு வண்ணக்கோடு இருந்தால் அது மணமான பெண்களையும் வண்ணக்கோடு இல்லாத நெற்றி பட்டைகள் திருமணமாகாத பெண்களையும் குறிக்கும். விளையாட்டு வீரர்கள் மரவுரி துணிப்பட்டைகளை மார்பின் குறுக்கில் அணிந்துகொள்கிறார்கள்.

உகாண்டாவின் பகாண்டா பழங்குடியினர் (Baganda) உருவாக்கும் மரவுரியாடை மனிதகுலத்தின் மிகப்பழைய மரவுரியாக கருதப்படுகிறது. பல பண்டைய நாகரிகங்களில் பயன்பாட்டில் இருந்த மரவுரிகள் இப்போது தடயமின்றி அழிந்துவிட்டன. உகாண்டாவில் 18, 19 நூற்றாண்டுகளில் சரிந்திருந்த மரவுரித்தொழில் இப்போது கலாச்சார அந்தஸ்து அளிககப்டபின்னர் மிகவும் வேகமெடுத்திருக்கிறது

மழைக்காலங்களில் நனைந்திருக்கும் முதுபா மரங்களின்(Ficus Natalensis) பட்டைகள் உரித்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2022 11:30

March 30, 2022

நெல்லை புத்தகக் கண்காட்சியில் ஒருநாள்

நெல்லை புத்தகக் கண்காட்சிக்கு அழைப்பு வந்தபோது ஒரு சின்ன தயக்கம் இருந்தது. என்னால் திறந்த அரங்குகளில் பேச முடியாது. மக்கள் வந்து அமர்வார்கள், எழுந்து செல்வார்கள், பொரி சாப்பிடுவார்கள். நடுவே விஐபிக்கள் வந்தமர எழுந்துசெல்ல என இருப்பார்கள். சின்னப்பிள்ளைகள் ஊடாக ஓடும். எனக்கு கவனமாக கேட்கும் முன்வரிசையாவது தேவை. ஈரோட்டில் நடந்த அனுபவத்திற்குப்பின் திறந்த அரங்கென்றால் ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் நண்பர் ராயகிரி சங்கர் அழைத்தார். சமாளிப்போம் என ஒரு தைரியத்தில் ஒத்துக் கொண்டேன். நெல்லைக்கு ஒரு சின்ன பயணமாகச் சென்றுவரலாம் என்று அருண்மொழியும் சொன்னாள். யுவன் சந்திரசேகர் வருவதனால் அவள் வர விரும்பினாள்.

25 ஆம் தேதி காலையிலேயே கிளம்பி நெல்லை சென்றோம். நண்பர் ஷாகுல் ஹமீது காரை ஓட்டினார். என் நண்பரும் வாசகருமான சிவமீனாட்சி செல்லையாவின் டிவிகே ரீஜன்ஸி என்னும் விடுதியில் நான் எப்போது நெல்லை சென்றாலும் தங்க ஓர் அறை அளிப்பார்கள். அங்கே சென்றபின்னர்தான் தெரிந்தது அங்குதான் அனைவருக்குமே தங்க இடம் பதிவுசெய்திருந்தார்கள் என்று. ஏற்கனவே யுவன் வந்து அங்கே தங்கியிருந்தான்.

ஈரோடு, திருப்பூர் நாமக்கல் வட்டாரத்திலிருந்து 18 நண்பர்கள் காரில் கிளம்பி சங்கரன் கோயில் அருகே ஏதோ குடைவரைக்கோயிலை எல்லாம் பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். யுவனிடம் ஒரு வெடிச்சிரிப்பு உரையாடல். விடுதி உரிமையாளர் சிவமீனாட்சி செல்லையாவும், செல்லையாவும் வந்தனர். நெல்லையின் முதன்மையான கேக் தயாரிப்பாளர்கள். என்னை வரவேற்று ஒரு கேக் கொண்டுவந்திருந்தனர். அதை வெட்டினேன்.

அங்கேயே நல்ல ஓட்டல் இருந்தது. சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டேன், இருபது நிமிடம். அது தொண்டையைச் சீரமைத்து தந்துவிடும். நான்கரை மணிக்கு புத்தகக் கண்காட்சி சென்றேன். நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் திடீரென்று நெல்லை கண்ணன் பேசுவதாக அறிவித்து அவசரப் போஸ்டர் ஒட்டி அவரை மேடையேற்றிவிட்டனர். ஆகவே எங்கள் நிகழ்ச்சி ஏழரைக்குத்தான் ஆரம்பம் ஆகியது. பல நண்பர்கள் என்னிடம் “சாரி, நான் வந்தப்ப உங்க நிகழ்ச்சி முடிஞ்சிருச்சு. பேச்ச கேக்க முடியல்லை” என்றார்கள். நிகழ்வதை விளக்கினேன். நாலைந்துபேர் ஏழரைக்கு திரும்பிச் சென்றுவிட்டதாக மின்னஞ்சல் செய்திருந்தார்கள்.

கார்த்திக் புகழேந்தி

அரங்கிலும் சூழலிலும் பல நண்பர்களைப் பார்த்தேன். கார்த்திக் புகழேந்தி அவருடைய சிறுகதைத் தொகுதியை அளித்தார். கால சுப்ரமணியம், தேவதேவன், உளவியல் டாக்டரும் புல்லாங்குழல்கலைஞருமான டாக்டர் ராமானுஜம், எழுத்தாளர் ருஃபினா ராஜ்குமார், என் பழைய பி.எஸ்.என்.எல் தோழர்கள், கவிஞர் மதார், எழுத்தாளர் பிகு என பலரைச் சந்தித்தேன். நெல்லையின் அடையாளம் என்றே சொல்லப்படும் எழுத்தாளரும் நெல்லைவரலாற்றாளருமான நாறும்பூநாதனையும் சந்தித்தேன்.

நான், யுவன், போகன் சங்கர், மு.முருகேஷ் ஆகியோர் பேசினோம். போகன் நேர்ப்பேச்சில் வாய்க்குள் முனகுவார். ஆனால் மேடையில் நல்ல உச்சரிப்புடன் தெளிவாகப் பேசினார். பலநூறு மருத்துவ முகாம்களில் பேசிய அனுபவம். மு.முருகேஷ் அரசியல்பின்புலம் கொண்ட, அறியப்பட்ட பேச்சாளர்.

டாக்டர் ராமானுஜம்

மு.முருகேஷ் குழந்தையிலக்கியம் ஏன் தேவை என்று பேசினார். இன்று குழந்தைகளை போட்டிக்காகவே தயாரிக்கிறோம், அவர்களின் உள்ளே அமைந்த தனித்திறன்கள் வெளிவராமலேயே ஆகிவிடுகின்றன. கதை அவற்றை வெளியே கொண்டுவருகிறது என்றார்.

போகனின் உரை அறிவியல் தகவல்களை சொல்லி அவற்றிலிருந்து ஒரு மெல்லிய கவித்துவத் தாவலை நிகழ்த்துவதாக இருந்தது. மனிதப்பரிணாமத்தில் மூளைசார்ந்த இருப்பாக அவன் அடையாளப்படுத்தப்படும் ஒரு நிலையே இறுதியானது என விளக்கி வாசிப்பின் படிநிலைகளைச் சொல்லி அதன் சிறந்த நிலை என்பது ஆசிரியனுடனான உரையாடலாக வாசிப்பை ஆரம்பிப்பது என்றார்.

நாறும்பூநாதன்

யுவன் உரையில் அவன் எழுதவந்த பாதையைச் சொன்னான். அவனுக்கு ஊக்கமாக அமைந்தவர்கள் என அவன் சொன்ன மூவருமே இலக்கியவாதிகள் அல்ல. ராபர்ட் ஃபிர்சிக் (ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்) கார்லோஸ் கஸ்டநாடா (டான் யுவானின் கற்பித்தல்கள்) இயற்பியலாளர் ரோஜர் பென்ரோஸ். புதியவகை எழுத்துமுறைகள், இலக்கியக்கோட்பாடுகள், அரசியல் சித்தாந்தங்கள், சமூகவியல் ஆய்வுகள் ஆகியவற்றால் தூண்டப்பட்டு எழுதவருபவர்களே மிகுதி. தன் வாழ்க்கையனுபவங்களில் இருந்து தனக்குரிய கேள்விகளை உருவாக்கித் கொண்டு அதற்குரிய ஆசிரியர்கள் வழியாக வந்த ஒரு பயணம் யுவன் சொன்னது.

நான் தமிழில் தமிழியக்கமும் நவீன இலக்கிய இயக்கமும் இரண்டு தனிப்போக்குகளாக ஒன்றையொன்று மறுத்தபடி, பெரும்பாலும் ஒன்றையொன்று அறியாமல் எப்படி இதுகாறும் வந்தடைந்துள்ளன என்று பேசினேன். அதன் விளைவான இழப்புகளைப் பற்றி.

சென்றநாட்களில் நாஞ்சில்நாடன், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் பேசியபோது சுருதிடிவி பதிவுசெய்து வலையேற்றியது. நாங்கள் பேசியநாளில் அவர்கள் வேறெங்கோ சென்றுவிட்டனர். ஆகவே உரைகள் பதிவாகவில்லை என தெரிகிறது. பொதுவான ஒரு விழாப்பதிவும் நேரடி ஒளிபரப்பும் இருந்தது. அதன் தரம் சரியில்லை, எந்தப்பேச்சுமே கேட்டுப்புரிந்துகொள்ளும்படி இருக்கவில்லை என்றனர்.

அன்று இரவு இரண்டு மணி ஆகியது படுக்க. மறுநாள் காலை எழுந்தபோது எட்டரை மணி. கீழே வந்தபோது யுவன் கிளம்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். தேவதச்சனைப் பார்க்கப்போவதாகச் சொன்னான். ஒன்பது மணிக்கு கிளம்பி திரும்ப நாகர்கோயில்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2022 11:35

மௌனகுருவின் மாணவர்கள்

இலங்கைப் பேராசிரியர் மௌனகுரு கூத்துக்காக தன் வாழ்க்கையை அளித்தவர். மிகமிக எதிர்மறையான சூழல்களிலும் விடாப்பிடியாக அக்கலையை வாழச்செய்தவர். கூத்துஆய்வாளர், கூத்து எழுத்தாளர், கூத்தரங்க நடிகர் என முழுமையாகவே அதில் வாழ்பவர்.

அண்மையில் மௌனகுரு தன் மாணவர்கள் பற்றி ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்.

இவர்களின்றிச்   சாத்தியமில்லை

கூத்தை  அறிதல்,  பயில்தல்,  ஆக்கல்  எனும் நோக்கை  அடிப்படையாகக் கொண்டு  நோர்வே நுண்கலைக்கழகம் கூத்துக்  கருத்தரங்கம்,  கூத்துப்பயிற்சி  எனத்  தனது நோக்கின்  மிக முக்கிய  இரு  பகுதியினை வெற்றிகரமாக  முடித்துள்ளது அப்பயிற்சி  நெறி   51  ஆவது  வாரத்தைத் தாண்டி   அடுத்தவாரம் 52 ஆவது  வாரத்தை முடித்து  ஒரு  வருட   நிறைவு  காண்கிறது.

இதுவும் ஓர் நெடும் பயணமே உணர்ச்சிகரமாக அன்றி அறிவு பூர்வமாகவும் வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு  ரீதியாகவும் சமூகவியல்  மானிடவியல்  ரீதியாகவும் அழகியல்  ரீதியாகவும் பிற நாட்டின்  கூத்துக்களுடன் ஒப்பிட்டும் விமர்சன  ரீதியாகவும் கூத்தின் ஆழ  அகலங்கள் மாணவர்க்குக்  கற்பிக்கப்பட்டன உரையாடப்பட்டன இருவழிப்பாதையில்  இவை நடந்தேறின

இதில் வேலை செய்துகொண்டிருப்போர்கள் கூத்து  ஆய்வறிஞர்கள் உரை அரங்கிற்கு  அழைக்கவும் பட்டார்கள் அவர் உரைகளை  மாணவர்  செவிமடுத்தனர் அவர்களுடன்  உரையாடினர் இன்னும்  சிலரை  அழைத்து அவர்களின் கருத்துகளையும்  மாணவர் அறியும்    வாய்ப்பை ஏற்படுத்தவும் நினைத்திருந்தோம், நினைத்தை எல்லாம்  செய்ய முடியுமா? இன்னொரு போது  அவர்களை அழைத்து  அவர்களுடனும்  மாணவரை  ஊடாட விடுவோம் அது நடைபெறும்

இந்த 50 வாரமும்  எம்மோடு உடன் ஓடி வந்து  இந்நிகழ்வு  வெற்றி பெறக்காலாக  இருந்தோர்  பலர் முக்கியமானவர்கள்  எமது  வளவாளர்கள்தான் அவர்கள்  ஏற்கனவே  பயிற்சி  பெற்றிருந்தவர்கள் தாம் பெற்ற பயிற்சிகளை மீட்கவும் பயிலவும் மீண்டும்   பயிற்சி  பண்ணிப் பார்க்கவும் இது   அவர்கட்கு    உதவியாக  இருந்திருக்கும்’ பின் வருவோர்  வள வாளராக  அமைந்து   மாணாக்கருக்குப் பயிற்சி  தந்தனர்

இவர்கள் இக்கூத்துபயிற்சியினை  அரங்க  ஆய்வு கூடத்தில்  மாத்திரமல்ல தம் தேடலினாலும் கல்வி பயிலலினாலும் வேறு இடங்களிலும்   கற்றுக்கொண்டவர்கள் சிலர் தொடர்ந்தும்  கூத்தில்  இயங்குபவர்கள் இவர்களின்  பணி இரு வகையானது

பிரதான  உரை நிகழ்த்தியமை

பயிற்சியளித்தமை

வசந்தன் கூத்து, ஜப்பானிய  நொஹ்  கபுகி மலையகத்தின்  அருச்சுனன் தபசு காமன்  கூத்து ,பொன்னர்  சங்கர் பற்றியெல்லாம்  இவர்கள்  உரை நிகழ்த்தினர் அவர்களின்புலமையினை  மாணவரும் ஏனையோரும்  இதனால்  அறிந்தனர் புதிய  புதிய  முறைகளைக் கண்டு  பிடித்துப்  புதிய  புதிய  உத்திகளோடு  பயிற்சிகளும் அளித்தனர் இன்னொரு விதமான  தலைமுறைக்கு  இக் கூத்தைக் கடத்தினர்

இணைய  வழியில் அவர்களுக்கென  பயிற்சி   அளிக்க   ஒதுக்கப் பட்டிருந்த அறைகளுக்கு  நானும் வாசுகியும் சென்று  பயிற்சியில்  அவர்களுக்கு  உதவினோம் ஒரு விதமான  இணைய  வழி  யாத்திரை  இது இவர்களோடு  எம்முடன்  இடையிடையே  இணைந்து  பயிற்சி  தந்தோரும் உள்ளனர் அவர்கள் பற்றியும் அடுத்துப்  பதிவேன்

இதனை  ஒழுங்கமைத்து  நடத்திய  வாசுகி மிக மிக முக்கியமானவர் அழைத்ததும்  உடனே  வந்து  உதவிய  ஏனை வளவாளர்கள்  முக்கியமானவர்கள் அனைவர் பற்றியும்  கலையுலகம்  அறிய வேண்டும்

முதலில்    இந்த    அர்ப்பணிப்பு  மிகுந்த வளவாளர்கட்கு  எனது  நன்றிகள் இவர்கள்  அனைவரும்  இன்றி  இந்த   ஒரு வருடப்பயிற்சி  சாத்தியமில்லை கற்பிக்கும் போதுதான்  ஆசிரியரும்  கற்றுகொள்கின்றார்

மௌனகுரு

 

துஜ்யந்தி

கிழக்குப்பல்கலைக்கழக  விரிவுரை யாளர்  நடனமும் கூத்தும்    பயின்றவர்   கிழக்கிசை, லயம், இராவ ணேசன்  கூத்தின் அழகியல், இன்னிய  அணி  முதலான  நாம் தயாரித்த  நிகழ்வுகளில் பங்குகொண்டவர்அரங்க ஆய்வு  கூடத்திலும்  கிழக்குப் பபல்கலைக் கத்திலும் கூத்துப்  பயிற்சி  பெற்றவர்,     அரங்க ஆய்வுகூடத் தின் உறுப்பினர்

துஜன்

நாடகமும்  அரங்கியலிலும்  சிறப்புபட்டம் பெற்றவர்   வவுனியாவில்  இன்று அரச  உத்தியோகஸ்தர். இராவணேசன்,அப்பா முதலான  மேடை  நிகழ்வுகளில்  பங்கு  கொண்டவர். அரங்க  ஆய்வு கூடத்தில்  கூத்துப்  பயிற்சி  பெற்றவர்  அரங்க  ஆய்வுகூட உறுப்பினர்

சுதர்சன்

நாடகமும்  அரங்கியலிலும்  சிறப்புப்பட்டம் பெற்றவர்  இன்று  நாடக  அரங்கியல்  ஆசிரியர்   இராவணேசன் காண்டவதகனம்  ஆகிய  மேடை  நிகழ்வுகளில்  பங்கு கொண்டவர்.  அரங்க  ஆய்வு கூடத்தில்  கூத்துப் பயிற்சி பெற்றவர். அரங்க  ஆய்வுகூடத்தின்  உறுப்பினர்

கேதீஸ்வரன்

நாடகமும்  அரங்கியலும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  இன்று  யாழ்பாணத்தில்  அரச  உத்தியோகஸ்தர் வானவில்லின் வர்ணங்கள், மண்ணோக்கிய  வேர்களும்  விண்ணோக்கிய  கிளைகளும்  காண்டவ தகனம்  முதலாம்  ஆற்றுகைகளில்  பங்குகொண்டவர்.அரங்க  ஆய்வு கூடத்தில்  கூத்துபயிற்சி பெற்றவர் அரங்க  ஆய்வுகூடத்தின்  உறுப்பினர்

ஞானசேகரன்

நாடகமும்  அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர், இன்று  நாடக அரங்கியல்  ஆசிரியராகப்  ப்ணி புரிகிறார்.  இராவணேசன் காண்டவதகனம், மண்ணோக்கிய  வேர்களும்  விண்ணோக்கிய  கிளைகளும், ஆகிய  ஆற்றுகைகளில்  பங்கு கொண்டவர்  அரங்க   அய்வு கூடத்தில்  கூத்துப்பயிற்சி  பெற்றவர்  அரங்க  ஆய்வுகூட  உறுப்பினர்

விஜயகுமார்

நாடகமும்  அரங்கியலிலும்  சிறப்புப் பட்டம் பெற்றவர்  இன்று  அரச உத்தியோகஸ்தராக  ப்ணிபுரிகிறார். அருளக  நிறுவகத்தில்  மாணவர்க்கு கூத்து  பழக்கி  அரங்கேற்றுகிறார்   அரங்க  ஆய்வு கூட உறுப்பினர்  அங்கு  கூத்துபயிற்சி  பெற்றவர்.

அமல்ராஜ்

நாடகமும்  அரங்கியலிலும்  சிறப்புப்   பட்டம் பெற்றவர். இன்று  அரச உத்தியோகஸ்தராகப்  பணி புரிகிறார்  மண்ணோக்கிய  வேர்களும்  விண்ணோக்கிய  களைகளும், காண்டவதகனம்    வானவில்லின்  வர்ணங்கள்  ஆகிய  ஆற்றுகைகளில் பங்கு  கொண்டவர், இராவணேசன் காண்டவதகனம்  மேடை  முகாமையாளர்.அரங்க ஆய்வுகூடத்தில் கூத்துப்பயிறசி  பெற்றவர்.

சஜீவன்

நாடகமும்  அரங்கியலிலும்  சிறப்புப்   பட்டம் பெற்றவர். இன்று    ஆசிரியராகப்  பணி புரிகிறார்  மண்ணோ க்கிய  வேர்களும்  விண்ணோக்கிய  கிளைகளும்.  ,     வானவில்லின்  வர்ணங்கள்   இராவணேசன்  ஆகிய  ஆற்றுகைகளில் பங்கு  கொண்டவர், .அரங்க  ஆய்வுகூடத்தில்  கூத்துபயிற்சி  பெற்றவர்.

ரமேஸ் அரவிந்தன்

நாடகமும்  அரங்கியல் படிப்பை  மேற்கொண்டிருக்கிறார்.  வயதில் அனைவரிலும்   இளையர்.  இன்று ஆசிரியராகப்  பணி புரிகிறார்  புதியதொரு  வீடு, இராவணேசன்  ஆகிய  ஆற்றுகைகளில் பங்கு  கொண்டவர், .அரங்க  ஆய்வுகூடத்தில்  கூத்துபயிற்சி  பெற்றவர்

ரஜீவ் 

நாடகமும்  அரங்கியலிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர், இன்று  நாடக அரங்கியல்  ஆசிரியராகப்  பணி புரிகிறார்.  இராவணேசன் காண்டவதகனம், மண்ணோக்கிய  வேர்களும்  விண்ணோக்கிய  கிளைகளும், ஆகிய  ஆற்றுகைகளில்  பங்கு கொண்டவர்  அரங்க  ஆய்வுகூட  உறுப்பினர் அரங்க ஆய்வு கூடத்தில் கூத்துப்பயிற்சி  பெற்றவர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2022 11:34

இந்திரா பார்த்தசாரதி-கடிதங்கள்

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்

அன்புள்ள ஜெ,

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் வழங்கும் செய்தியை உங்கள் இணையதளத்தில் பார்த்தேன்.இ.பா எனக்குப் பிடித்த படைப்பாளி. இலக்கியத்தில் பலவகை உண்டு. ஒரு எல்லை வானிலே பறக்கிறது. உதாரணம் லா.ச.ரா. இன்னொரு பக்கம் தரையில் ஊன்றியிருக்கிறது. உதாரணம் ஆதவன், இந்திரா பார்த்தசாரதி. எந்த மனமயக்கமும், எந்த உணர்ச்சிகரமும் இல்லாத மேட்டர் ஆஃப் பேக்ட் எழுத்து என்று சொல்லலாம். இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை உண்மையிலே என்ன மிச்சம் என்று பார்க்கும் கதைகள் அவை. மயிர்சுட்டுக் கரியாவதில்லை என்பது போல ஒன்றும் மிஞ்சுவதில்லை என்பது உண்மை. ஆனால் என்ன மிஞ்சுகிறது என்று பார்ப்பதற்கும் ஒரு எழுத்து தேவைதானே?

செல்வராஜ் ஆறுமுகம்

அன்புள்ள ஜெ,

இந்திரா பார்த்தசாரதிக்குச் சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் வழங்கும் நிகழ்வை பார்த்தேன். இவ்வாண்டாவது அவருக்கு ஞானபீடம் கிடைக்கும் என்றால் தமிழ் அதைப்பற்றி பெருமிதம் அடைய முடியும். இன்று நம்மிடையே இருக்கும் பெரிய படைப்பாளி. மூத்த படைப்பாளி அவர். நம்முடைய கனவுகளை காற்று பிடுங்கிவிடும் எழுத்துக்கள் அவருடையவை. முழுக்கமுழுக்க அர்பன் எழுத்து. அவர் வேர்ப்பற்று என்ற பேரில் கிராமப்பின்னணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலான எழுத்துக்களை தூய அர்பன் எழுத்து என்று சொல்லிவிடலாம். நூறாண்டு நெருங்கும் இபாவுக்கு வணக்கம்.

ஆ. ரங்கநாதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2022 11:32

அழகியல் விமர்சனமும் பிறரும் – கடிதம்

விமர்சனங்களின் வழி

அன்புள்ள ஜெ,

விமர்சனங்களின் வழி வாசித்தபோதுதான் உண்மையிலேயே ஒரு திகைப்பு உருவானது. நான் இந்தக் கோணத்தில் யோசித்ததே இல்லை. பாரதிதாசன் முதல் கு.சின்னப்பபாரதி, சு.சமுத்திரம் உட்பட திராவிட இயக்க எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் பலரை நவீன இலக்கிய விமர்சனம் ஏற்றுக்கொண்டு பேசியிருக்கிறது. கூர்மையான ஆய்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் மறுபக்கம் திராவிட இயக்கத்தின் தரப்பிலிருந்தும், மார்க்ஸிய இயக்கத்தின் தரப்பில் இருந்தும் நவீன இலக்கியவாதிகள்மேல் வசைகளும் அவதூறுகளும் மட்டுமே வந்திருக்கின்றன. ஒரே ஒருவருக்குக்கூட ஒருவகை அங்கீகாரமும் வந்ததில்லை.

நவீன எழுத்தாளர்கள் வறுமையில் வாடியபோது கல்வித்துறையோ அரசோ ஆதரவு அளித்ததில்லை. நியாயப்படி நவீன இலக்கியத்திற்காக அவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய விருதுகள் திராவிட இயக்கத்தவர்களாலும் முற்போக்கு முகாமாலும் கொண்டுசெல்லப்பட்டன. அவர்கள் செத்தபோது ஓர் அஞ்சலி வரிகூட திராவிட இயக்கத்தவரோ முற்போக்கினரோ சொன்னதில்லை. இலக்கியத்தரப்பில் இருந்து அடையாளம் பெற்று அதன்பின் அங்கே போய் சரணடைந்து கும்பிட்டவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு அந்த எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆனால் அவர்களைக்கூட ஓரமாக உட்காரவே வைத்தார்கள். ஒரு மேதைக்குக்கூட எளிமையான அங்கீகாரம்கூட கிடைத்ததில்லை.

புதுமைப்பித்தனை நச்சிலக்கியவாதி என்று வசைபாடினர் இடதுசாரிகள். மௌனியை, கு,ப.ராஜகோபாலனை ஆபாச எழுத்தாளர்கள் என்றார்கள். திராவிடத்தரப்பினர் பார்ப்பன எழுத்தாளர் என ஒரே வரியில் அத்தனை இலக்கியமேதைகளையும் புறக்கணித்தனர். அத்தனை விருதுகளும், கல்வித்துறைப் பதவிகளும், அரசாங்க அங்கீகாரங்களும் அவர்களுக்கே அளிக்கப்பட்டன. முற்போக்கு முகாமினர் சுந்தர ராமசாமி மேல் வன்கொடுமைச் சட்டப்படி வழக்கு தொடுப்பதாக மிரட்டினார்கள். கி.ராஜநாராயணனை வழக்கு தொடுத்து அலைக்கழித்தார்கள். சுந்தர ராமசாமி மறைந்தபோது செலுத்தப்பட்ட அஞ்சலிகளை கண்டித்து அவர்கள் கட்டுரைகள் எழுதினார். நகுலன் மறைவின்போது சவண்டிபிராமணன் என்று, செத்தபிணம் என்றும் எழுதியது அவர்களின் இதழ்,

ஆனாலும் நவீன இலக்கியத் தரப்பு அவர்களை கரிசனத்துடன்தான் பார்த்தது. கந்தர்வன் முதல் சு.வெங்கடேசன் வரை அவர்களில் எவரெல்லாம் நன்றாக எழுதினார்களோ அவர்களை உடனே அங்கீகரித்தது. நவீன இலக்கியவிமர்சனத் தரப்பில் இருந்து அவர்களை பற்றி அவமரியாதையாகவோ அவதூறாகவோ ஒரு வார்த்தை நான் கண்டதில்லை. இன்றைக்கும் சின்னப்ப பாரதி பற்றியோ கந்தர்வன் பற்றியோ ஒரு நல்ல கட்டுரை இருக்கிறதென்றால் அது நவீன எழுத்தாளர்கள் எழுதியதுதான்.

இவ்வளவுக்கும் பிறகு திராவிட எழுத்தாளர்களும் முற்போக்கு முகாமினரும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக நினைத்துக்கொண்டு கண்ணீர் விடுகிறார்கள். ஐயய்யோ எங்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூச்சலிடுகிறார்கள். இலக்கியபீடம், இலக்கிய மடம் என்றெல்லாம் பிலாக்காணம் வைக்கிறார்கள். இடைவிடாத இந்த பிலாக்காணம் வழியாகவே இவர்கள் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது போல என்று சாமானிய வாசகனை நம்பவைத்துவிட்டிருக்கிறார்கள். உண்மை என்ன என்று உங்களைப் போன்றவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

நீங்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரையும் வாசித்து, மதிப்பிட்டு, வரிசைப்படுத்தி முறையான விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். அதை வன்மத்தை கக்குதல் என்கிறார்கள். என்ன வன்மம் என்று கேட்டால் சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு மிச்சபேரை புறக்கணிக்கிறீர்களாம். இவர்கள் அத்தனைபேரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்.

ஜெயமோகன் கலைஞர் மேல் வன்மத்தை கக்குகிறார் என்றார் ஒருவர். என்ன சொன்னார் என்று கேட்டேன். நவீன இலக்கியவாதி அல்ல, பிரச்சார எழுத்து என்று சொல்லிவிட்டார், அது வன்மம் என்றார்கள். ’சரி, பார்ப்பான் என்றும் வசைபாடுவதும், அத்தனை இடங்களிலும் புறக்கணிப்பதும் செத்தால் ஒருவரி அஞ்சலிகூட செலுத்தாமலிருப்பதும், செத்தவர்களை ஏளனம் செய்து கீழ்த்தரமாக வசைபாடுவதும் வன்மம் இல்லை, ஜனநாயகம் இல்லையா?’ என்று கேட்டேன். அது வன்மம் இல்லையாம். அரசியல்தேவையாம்.

உண்மையாகவே அப்படி நம்பிச் சொல்கிறார். திராவிட இயக்க எழுத்தாளர் எவர்மீதும் எந்த எதிர்மறை விமர்சனம் வந்தாலும் அது வன்மத்தாக்குதலாம். எப்படி மென்மையாக, அறிவுபூர்வமாகச் சொன்னாலும் வன்மம்தான். அறிவுபூர்வமாக மென்மையாகச் சொன்னால் அது ‘பூடகமான வன்மம். அவாள் அப்படித்தான் சொல்லுவார்கள்’ என்கிறார். கலைஞரும் மாபெரும் எழுத்தாளர். சென்பாலனும் இலக்கியப்பிதாமகர். அதை ஏற்காதவர் எல்லாம் வன்மக்குடோன்களாம். இந்த மனச்சிக்கலுக்கு என்ன மருந்து?

ஆனால் இவர்கள் முன்னோடிகளான மேதைகள் முதல் அத்தனை நவீன எழுத்தாளர்களையும் அவமரியாதையுடன் பேசி, இழிவுபடுத்துவது கருத்துச்செயல்பாடு என்கிறார்கள். உங்களை கீழ்த்தரமாகப் பேசி அவதூறுசெய்துகொண்டே இருப்பதும், ஒரு ரவுடி உங்களை தாக்கியபோது மகிழ்ந்து கொண்டாடியதும் வன்மம் அல்ல, பரந்துபட்ட ஜனநாயகப் பார்வை என்கிறார்கள். ஆச்சரியமான மூர்க்கம். இதை ஒருவகையான மனச்சிக்கல் என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது.

சங்கர் மாரிமுத்து

அன்புள்ள ஜெ,

மனுஷ்யபுத்திரன் உங்களைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். உங்கள் விரிவான பதில்களையும் வாசித்தேன். ஒன்று மட்டும் சொல்லத்தோன்றியது. அவர் ஒரு தந்திரம் செய்கிறார். ஒரு காழ்ப்பு நிறைந்த பதிவை போடுகிறார். அதன்கீழே அவருடைய அல்லைகள் வந்து மிகமிக கீழ்த்தரமான வசைகளை உங்கள்மேல் எழுதும்போது அதை வரவேற்று ரசிக்கிறார். கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் ஒரு கவிஞன் இந்தக் கீழ்நிலைக்கு இறங்கவே கூடாது.

நான் இன்றும் அவர் கவிதைகளின் ரசிகன். அவருடைய இந்தக் கீழ்மை எனக்கு அளிக்கும் கூச்சமும் துக்கமும் கொஞ்சம் அல்ல. ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பு போலவே உணர்கிறேன். அந்த அல்லக்கைகள் அவருக்கு இன்று தேவைப்படலாம். ஆனால் அவரை இன்னமும் கவிஞர் என்று நம்பும் கொஞ்சபேர் இருக்கிறோம். மனுஷ் கீழிறங்குவதற்கும் ஒர் எல்லை உண்டு. வெற்றிகொண்டானும் தீப்பொரியும் உங்கள் ஆதர்சங்கள் ஆகக்கூடாது.

ராஜ்கண்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2022 11:31

திருப்பத்தூர் இலக்கிய விழாவில் நான்

திருப்பத்தூர் இலக்கிய விழா வரும் ஏப்ரல் 2 அன்று தொடங்குகிறது. அனேகமாக தமிழகத்தில் நிகழும் மிகப்பெரிய இலக்கியவிழா இது என நினைக்கிறேன். 32 இலக்கிய ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரண்டாம்நிலை நகர் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே வார இதழ்கள் ஏஜென்ஸி எடுத்திருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார். அந்நகரில் ஒட்டுமொத்தமாக தமிழ் வார இதழ்கள் விற்பனையாவதே சிலநூறுகளுக்குள்தான் என. இதழ்களின் விற்பனையில் 90 சதவீதமும் நான்கு பெருநகர்களுக்குள் முடிந்துவிடுகிறது என்றார்.

சிறுநகரங்கள் தமிழகத்தில் பொருளியலில் பெருத்து வருகின்றன. பல நகர்களை பத்தாண்டுகள் கழித்துச் சென்று பார்த்தால் அடையாளமே தெரியவில்லை. ஆனால் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகள் அவ்வண்ணம் வளரவில்லை. அதற்கு இந்த வகையான முன்னெடுப்புகள் மிகப்பெரிய அளவில் உதவக்கூடும்.

திருப்பத்தூர் இலக்கியவிழாவை 2- ஏப்ரல்-2022 அன்று நான் தொடங்கிவைத்து உரையாற்றுகிறேன்.

திருப்பத்தூர் 1991ல் நான் எட்டு மாதம் குடியிருந்த ஊர். அருண்மொழிக்கு முதன்முதலாக அங்கே தபால்நிலையத்தில் பணி கிடைத்தது. நான் ஒவ்வொரு நாளும் தர்மபுரிக்கு பேருந்தில் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். தமிழக இடதுசாரி தீவிர அமைப்புகளின் பல நண்பர்கள் அறிமுகமானது அப்போதுதான். திருப்பத்தூரில் நண்பர் குலசேகரன் (சிறுகதை எழுத்தாளர்) அன்று அணுக்கமானவராக இருந்தார். அன்றைய முகங்கள் அங்குதான் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2022 11:30

முதற்கனலில் தொடங்குதல்

செம்மணிக்கவசம்

அன்பு ஜெ சார்.

எரிமலரும் செம்மணிக் கவசமும் (சிறிய கையேட்டு வடிவங்கள்) படித்து விட்டேன். திருதராஷ்டின் கதை பாக்கி.

அறங்கள் பற்றிய ஆர்வமும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் இழுக்கப் படும் குணமும் இழிவுபடுத்தப் படுவோர் மேல் மிகுந்த பச்சாதாபமும் கொண்டவன்.

முதற்கனல் போக இப்போதைக்கு வேறு எந்தப் பகுதிகள் நான் வாங்க பரிந்துரைப்பீர்கள்? போர்ப் பகுதிகளும் விண்ணேறுதல் பகுதிகளும் வாங்க ஆர்வம்.

கோவையில் உங்கள் பதிப்பகத்திலிருந்த இரண்டு கிமீ தொலைவில், ஒரு உறவினர் வீட்டில் இன்னும் நான்கைந்து நாட்கள் இருப்பேன். உங்கள் நிறுவனத்திலேயே வாங்க விருப்பம்.

அன்புடன்

ரகுநாதன்.

அன்புள்ள ரகுநாதன்

வெண்முரசை வாசிப்பதற்கான தூண்டுதலை அளிப்பவை என்றவகையில் எரிமலர், செம்மணிக்கவசம் போன்ற சிறு நூல்கள் உதவியானவை. ஆனால் தொடங்குவதற்குரியது முதற்கனலேதான். வெண்முரசு நாவல்களில் எளியது, நேரடியானது, உடனடியாக ஈர்ப்பதும் முதற்கனலே. வெண்முரசு நாவல்தொடரின் அமைப்பென்ன என்று அது காட்டிவிடும். அதன் விரிவாக்கங்களே மற்றநாவல்கள்.

வெண்முரசு நாவல்களை தனித்தனியாகவும் படிக்கலாம். நீலம், இந்திரநீலம் ஆகியவை தனிநாவல்களுக்குரிய கதைக்கட்டமைப்பும் கொண்டவை. இமைக்கணம், சொல்வளர் காடு ஆகியவை தனிநாவல்களுக்குரிய தத்துவக்கட்டமைப்பு கொண்டவை.

ஆனால் அடிப்படையான குறியீடுகள் வளர்ந்து வரும் தன்மை, தத்துவதரிசனத்தின் மலர்வு ஆகியவற்றை உணர முதற்கனலில் இருந்து தொடராக வாசிப்பதே சரியான வழி.

மேலும் தொடக்கம் முதல் வாசிக்கையில் மெல்ல நாவலின் மொழிநடை பழகிவிடுகிறது. தொடர்ந்து வாசிப்பவர்கள் இரண்டு நாவல்களுக்குப்பின் அதுவரையிலான வாசிப்பினாலேயே பயிற்சிபெற்றவர்களாக முழுமையாக வாசிப்பதை கண்டிருக்கிறேன்

26000 பக்கங்கள் கொண்ட வெண்முரசின் இரண்டாவது வாசிப்பை முழுமைசெய்த இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் என் அறிதலிலேயே இருக்கிறார்கள்.

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2022 11:30

March 29, 2022

திருப்பூரில் பேசுவது…

திருப்பூர் கட்டண உரை 

திருப்பூர் கட்டண உரைக்கான பதிவுச்சீட்டுகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. உரை எதைப்பற்றி என்று மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருந்தன. பேரழகு மிக்க கல்தூணுக்கும் உயிருள்ள மரத்துக்குமான வேறுபாட்டை பற்றி என்று விளக்கமாகச் சொன்னபிறகும் மின்னஞ்சல்கள்…

திருப்பூர் கட்டண உரை- அறிவிப்பு 

நண்பர்களே,

ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற  10-4-2022 ஞாயிறு மாலை 6  முதல் 8.15 வரை திருப்பூரில் ஜெயமோகன் ஒரு கட்டண உரை நிகழ்த்துகிறார். இது அவர் நிகழ்த்தும் நான்காவது கட்டண உரை.

தேநீர் இடைவேளையுடன் இரு பகுதிகளாக இந்த உரை நிகழும். ‘கல்தூணும் கனிமரமும் – பண்பாட்டையும் மதத்தையும் பெற்றுக்கொள்ளுதல்’ என்கிற தலைப்பில்  வேறெங்கும்  நிகழ்த்தாத  உரையை ஜெயமோகன் இங்கு நிகழ்த்துகிறார். இதன் காணொளியை யு டியூபில் உடனே காண இயலாது. இது சுமார் 250 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கு.  அவரைத் தவிர வேறு யாரும் மேடையில் அமர மாட்டார்கள்.

முன் பதிவில்லாமல் வரும் நபர்கள் இடமிருக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்தி உரையை கேட்கலாம்.

இக்கூட்டத்திற்கு வர விரும்புவோர்  கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்

பெயர்:

தற்போதைய ஊர் :

தொலைபேசி :

மின்னஞ்சல் :

ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல்  இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 20 நிமிடம் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலோ தேதி மாறினாலோ கட்டணம் திரும்ப செலுத்தப் படும்.

நாள், நேரம் : 10.4.22, ஞாயிறு, 5.30 மணி

இடம்:  காயத்திரி ஹோட்டல் a/c ஹால், காங்கேயம் சாலை, திருப்பூர்.

வங்கிக் கணக்கு :

Account number :- 168401504235

Bank Name :- ICICI BANK

Account Type :- Savings

Account holder’s name :- PARI ANBAZHAGAN

IFSC Code :- ICIC0001684

VPA :- 9500384307@icici

இப்படிக்கு,

பாரி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

மின்னஞ்சல் : mailmemechatron@gmail.com

பேச : 9500384307

திருப்பூரில் தொடர்புகொள்ள :

ராஜமாணிக்கம்

பேச :  7200855666

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2022 11:42

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.