Jeyamohan's Blog, page 802
April 2, 2022
பின்தொடரும் நிழலின் குரல் –கடிதம்
பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியனின் குரல்
அன்புள்ள ஜெ,
பின் தொடரும் நிழலின் குரல் – வாசகர் கடிதங்கள் கண்டேன் இங்கே, குமரப்பாவின் வாதத்தை மீண்டும் முன்வைக்கிறேன். `முதலாளித்துவத் தொழில் முறைக்கும், சோஷலிசத் தொழில்முறைக்கும் பெரிதான வேறுபாடுகள் இல்லை. இரண்டுமே, உற்பத்தியை இயந்திர மயமாக்கி, மூலதனத்தைக் குவிக்கும் முறைகளே. இதில் சோசலிச முறை உடைந்தால், அது உடனே, முதலாளித்துவமாகத் தான் உருமாறும் என்றார் குமரப்பா`. 1992 ல் சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்தது இதுதான். கம்யூனிசம் என்னும் பெயரில் நிகழ்ந்த வன்முறையும், ஹிப்போக்ரைசியும் விமரிசிக்கத் தக்கதுதான். அதை, ஒரு இலக்கிய ஆக்கமாக ஆக்கி முன்வைக்கிறது உங்கள் நாவல்.
அதே போல, பல உரையாடல்களில், உலகில் கம்யூனிச ஏதேச்சதிகாரங்கள் நிகழ்த்திய வ்ன்முறையைப் பட்டியிலிடுகிறீர்கள். ideal and ideology பற்றிய உரையிலும், சோவியத், கம்போடியா, வட கொரியா போன்ற உதாரணங்களை முன் வைத்தீர்கள்.
கம்யூனிசம், முதலாளித்துவம் என்னும் இருமை தாண்டி, காந்தியப் பொருளியல் நோக்கி என்னும் உருப்பெருக்கியில் பார்க்கையில், இந்த தோல்விகளுக்கும், விளைவுகளுக்கும் இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். முதலாளித்துவ வழியில் சென்ற ஜெர்மனி ஏற்படுத்திய அழிவை (வலது சாரி, தேசிய வாதம்) நாம் பேசுவதில்லை. அது ஏற்படுத்திய பேரழிவு சோவியத் யூனியன் கம்யூனிசம் என்னும் பெயரில் ஏற்படுத்திய அழிவிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.
அதேபோல, 2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நிகழ்ந்த நிதித் துறை மோசடி, சோவியத்தில் உருவான பொருளாதார அழிவை விட மிக அதிகம். ஐஸ்லாந்த், க்ரீஸ் நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்தன. லட்சக்கணக்கான மக்களின் ஓய்வூதிய நிதிகள் திவாலாகின. நிலைமையச் சீராக்க 800 பில்லியன் டாலர் பணம் கொட்டப்பட்டது. அதில் கூட, திவாலான பல நிறுவனங்களின் இயக்குநர்கள் டெர்மினேஷன் போனஸ் எனப் பணத்தை எடுத்துக் கொண்டார்கள் என்னும் குற்றச்ச்சாட்டு எழுந்தது. உலகப் பொருளாதார நஷ்டம் கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் டாலர்கள். அன்றைய இந்தியாவின் பொருளாதாரம் 1.2 ட்ரில்லியன் டாலர். இது தவிர உலக அமைதிக்காக அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படுத்தும் போர்கள் தனி.
இந்த வாதம் சோவியத் ரஷ்யாவின் தோல்விக்கு சப்பைக் கட்டு கட்டுவதல்ல. மையப்படுத்தப்படும், தொழில் மய உற்பத்திப் பொருளாதார மாதிரிகள், கம்யூனிச மாதிரிகளில், அதீத அதிகாரக் குவிப்பினாலும், முதலாளித்துவ மாதிரிகளில் பேராசையினாலும் தோல்வியுறுகின்றன. சோவியத் தன் தோல்வியைச் சமாளிக்கத் தெரியாமல் உடைந்து சிதறியது. அமெரிக்கா, தன் தோல்விக்கான செலவை தன் மக்கள் மற்றும் உலக நாடுகள் மீது சுமத்திவிட்டு சாமர்த்தியமாக விலகி விட்டது.
பின் தொடரும் நிழலைப் படிக்கும் வாசகர்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஒட்டு மொத்த நோக்கில், மேற்கு நாடுகள் முன்னிறுத்தும் பொருளாதார மாதிரிகளின் எல்லைகளைச் சுட்ட இதை எழுதினேன்.
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ?
இனிய ஜெயம்
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ (அ.கா. பெருமாள். Ncbh வெளியீடு) எனும் தலைப்பை நான் முதன் முதலாக வாசிக்க நேர்ந்தது, ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலை நிறைவு செய்து அருண் மொழி நங்கை அக்கா அளித்திருந்த வாசிப்பு நூல் பட்டியலில்தான். அதற்கும் முன்பு எங்கோ என் ஆழுள்ளத்தில் இந்த சொற்றொடர் விழுந்திருக்கிறது. பட்டியலில் இந்த தலைப்பை கண்ட கணம் முதல் மனதில் இந்த சொற்றொடர் எழுந்து ஓசை நயத்துடன் அறம் பாடி சபிக்க ஒலித்த பாடல் ஒன்றின் வரிகள் போல உள்ளே மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டு இருந்தது. நூலைத் தேடி வாசிக்கும் எண்ணம் ஏதும் இன்றி மீறி மீறி இந்த சொற்றொடர் ஓர் நாளில் ஏதோ ஒரு பொழுதில் எழுந்து உள்ளே மீண்டும் மீண்டும் ஓடத் துவங்கி விடும் கிறக்கத்தில் இருப்பேன்.
இவ்வருட புத்தக சந்தையில் அலைகயில் என் உடன் வந்த நண்பர் சார் உங்காளு எழுதிருகார் என்று இந்த நூலை எடுத்துக்காட்ட உடனே வாங்கி விட்டேன். தலைப்பை பேராசிரியர் கடலூர் பக்கம் திரௌபதியம்மன் கோயில் சடங்கில் பாடப்படும் வாய்மொழி பாரத கதைப்பாடலில் இருந்து எடுத்து வைத்திருக்கிறார்.
வெவ்வேறு அரங்குகளில் பேராசிரியர் அ.கா. பெருமாள் அவர்கள் முன்வைத்த 12 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பேராசிரியரே குறிப்பிட்டது போல இதில் உத்தேசமாக முதல் நான்கு கட்டுரைகளை பொதுவான நாட்டாரியல் வழக்காறுகளை பேசும் கட்டுரைகள் என்றும், அடுத்த நான்கை நாட்டார் தெய்வங்கள் சடங்குகள் குறித்த ஆய்வுகள் என்றும், இறுதி நான்கை நாட்டார் கலைகள் குறித்தவை என்றும் வகைப்படுத்த இயலும்.
முதல் நான்கில் மானபங்கம் செய்யப்பட்டு அதனால் எரிபுகுந்த பெண்கள் தெய்வமாவது துவங்கி, கெளரவக் கொலை செய்யப்படும் யுவன் யுவதிகள், நரபலி கொடுக்கப்படும் கன்னிப்பெண்கள், நிறைசூலிகள், ஆற்றில் குளத்தில் விழுந்து உயிர் துறப்பவர்கள், மன்னனுக்காக நவகண்டம் செய்து கொள்பவர்கள், மோட்சம் தேடி தேர் காலில் விழுந்து மறிப்பவர்கள், சதி ஏறுபவர்கள், நீதி கேட்டு கோபுரம் மீது ஏறி விழுபவர்கள், வடக்கிருந்து உயிர் துறப்பவர்கள் என்று இத்தகு விஷயங்ளின் இலக்கிய கல்வெட்டு சான்று தொட்டு வரலாற்று காலம் நெடுக்க இவை போல நிகழ்ந்தவை குறித்த நாட்டார் சொல் மரபை இணைத்து விவரிக்கிறார் அ.கா.பெருமாள்.
கொலை செய்யப்பட்ட பெண்களும் ஆண்களும் எவ்வாறு தெய்வங்கள் ஆகிறார்கள், அந்த தெய்வ கதைகள் முன்பே இங்கு இருக்கும் தொன்மை மரபுடன் இணைந்து எவ்வாறு அதன் சடங்குகள் தோற்றம் கொள்கிறது எனும் வகைமை குறித்தெல்லாம் பேசும் இக்கட்டுரைகள் சில புதிய பார்வைகளை திறக்கிறது. குறிப்பாக பெண் கொலை செய்த நன்னன் கதையை உதாரணம் சொல்லலாம். பொதுவாக நமக்கு தெரிந்தது பாதி கதை மட்டுமே. நாட்டார் மரபில் வாழும் மீதி கதை இன்னும் சுவாரஸ்யம். நன்னனால் கொலை செய்யப்பட்ட பெண் கோசர் எனும் குலத்தை சேர்ந்தவள். இந்த கொலைக்கு கோசர் குலம் நன்னனை பழி வாங்குகிறது. இந்த செயலில் நன்னன் எந்த பெண் கொலை பழியை ஈட்டிக் கொள்கிறானோ அதே பழியை கோசர் குலமும் ஈட்டிக் கொள்கிறது. இப்படிப் பல சுவாரஸ்யங்கள் இந்த நூலில் உண்டு.
நீதி வேண்டி கோபுரம் ஏறி விழுந்து மரணிப்போர் துயரக் கதையோ சுசீந்திரம், திருவரங்கம், சிதம்பரம் என பேராலயம் தோறும் வரலாறு நெடுக நிகழ்கிறது. மதுவுக்கு எதிராக தொலைபேசி கோபுரம் ஏறி மாய்ந்த சசி பெருமாள் வரை.
சதி குறித்த கட்டுரை இன்னும் சுவாரஸ்யம். மபாரத காலம் தொட்டு நாயக்க மன்னர் காலம் வரை, சதி எவ்வாறெல்லாம் பரிணமித்து வளர்ந்தது என்று விவரிக்கும் கட்டுரை பல திடுக்கிடும் உண்மைகளை பேசுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் மதுராவில் ஒரு மன்னர் இறந்தபோது, அவரது 700 மனைவிகளும் அவருடன் உடன்கட்டை ஏறி இருக்கிறார்கள். பல உடன் கட்டைகள் கைம்பெண் வாழ்வு எனும் நித்திய நெருப்புக்கு சதியே மேல் எனும் நிலையில் நிகழ்ந்தவையே. பொதுவாக சதிக்கு எதிரான முதல் குரலாக ராஜாராம் மோகன்ராய் அறியப்பட்டாலும் உண்மை அதுவல்ல, அவர்க்கு முன்பே சட்டம் இயற்றி இதை தடுக்க முனைந்த மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லீம் மன்னர்கள். ராஜா ராம் மோகன் ராய் கதைக்கு வரும்போது ராஜா ராம் உடன் இணைத்து பேசப்பட வேண்டிய பெயர் வில்லியம் பெண்டிங் பிரபு. இவரது உதவி கொண்டே ராஜாராம் மோகன்ராயால் சதிக்கு எதிரான சட்டங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட சதியின் வரலாறு 2008 வரை தொடர்ந்திருக்கிரது என்று சொல்கிறது இந்த நூல்.
அகத்தியர் தொன்மம் குறித்த கட்டுரையும் மிகுந்த சுவாரசியம் கொண்டது. அகத்தியர் காவிரியை கொண்டுவந்த கதையை வாசிக்கையில், பகீரதன் கங்கையை கொண்டு வந்த கதையை இணைத்து யோசித்தேன். கேரள நிலத்தை அதன் கதையை பரசுராமருடன் இணைத்து துவங்குவது போல, தமிழ் நிலத்தின் கதையை அகத்தியர் முதலாக துவங்க முடியும். அத்தனை வலுவாக உள்ளது நூல் ஆய்வு செய்யும் அகத்தியர் கதைகள்.
கண்ணகி குறித்த கட்டுரை, ஜெயமோகன் மொழியாக்கம் செய்த சந்திரன் அவர்களின் கொடுங்கோளூர் கண்ணகி நூலுடன் இணைத்து கொற்றவைக்கு துணை நூலாக வாசிக்க ஏற்றது. கட்டுரையில் என்னை துனுக்குற வைத்தது 16 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமணன் இக் கண்ணகி கோயிலை, அது சமண கோயில் என்று அந்த பகுதி பக்கமே வராமல் சுற்றி போகிறான் எனும் குறிப்பு. கண்ணகியை சமண மரபில் வைத்து யோசிக்கவே முடியவில்லை.
மேல்நிலையாக்கம் கண்ட தெய்வங்களின் இலக்கணத்தை விளக்கி, அதிலிருந்து வேறுபட்டு திகழும் நாட்டார் தெய்வங்களை விவரிக்கும் கட்டுரையில் என்னை திடுக்கிடட வைத்தது. பெருமாள் சாமி. எனும் நாட்டுப்புற தெய்வம். அமர்ந்த கோலம் கொண்ட அந்த பெருமாள் சாட்சாத் பெருந்தெய்வ பெருமாளேதான். ஒரே வித்யாசம் வருட திருவிழாவில் இந்த பெருமாளுக்கு விசேஷம் என்பது, கிடா வெட்டு.
நாட்டார் கலைகள் குறித்து வேலன் வெறியாட்டு துவங்கி, குறவைக் கூத்து முதல் கரகம் வில்லுப்பாட்டு தோல்பாவை கூத்து வரை, பண்டைய காலம் தொட்டு இன்றுவரை அதன் மாற்றங்களை கலைஞர்கள் நிலையை பேசுகிறது இந்நூல்.
நூலின் இறுதிக் கட்டுரை கன்யாகுமரி மாவட்டம், அகதீஸ்வரம் அருகே தெற்கு புதூர் கிராமத்தில் உள்ள நாடார் வகையராவுக்கு சொந்தமான பெருமாள் கோயில் குறித்தும் அங்கே புழங்கும் குருமக்கள் கதை எனும் மகாபாரத கதை குறித்தும் பேசுகிறது. ( இந்த கதையை பின்னர் அ. கா பெருமாள் அச்சுக்கு கொண்டு வந்து விட்டார்) அந்த கிராம வர்ணனையும், அதில் அமைந்த கோயிலும், அதற்கு உள்ளே சுவர் முழுக்க ஓவியங்களாக அமைந்த குருமக்கள் கதையும் என அந்த நிலத்தையும் கோயிலையும் உடனே காண வேண்டி ஆவல் எழுகிறது.
அந்த குருமக்கள் கதை பேசும் பாரத கதையின் முக்கிய பாத்திரம் ஒன்று அண்ணன் தங்கைக்கு இடையே பிறக்கிறது. அந்த பாரதத்தில் பீமனே நாயகன். காந்தாரி வில்லி. முற்றிலும் வியாச பாரதத்துக்கு நேர் எதிர் கதை கட்டுமானம்.
அ.கா பெருமாள் அவர்கள் பணியின் தனித்தன்மை என்று நாக்கினை சொல்வேன்.
மரபார்ந்த தமிழக வரலாற்று வரைவை, அதனுடன்மாவட்ட வரலாறு கொண்டு இணைத்து அதனை விரிவும் ஆழமும் கொள்ளச் செய்தது.மாவட்ட வரலாற்றை மைய வரலாற்று வாதத்திலிருந்து விலகி, நாட்டார் வரலாற்றியல் வழியே நிலை நிறுத்தியது.அந்த நாட்டாரியல் ஆய்வினை மேலை முறைமை விடுத்து நமதே ஆன முறைமை வழியே அணுகியமை.இதன் வழியே ஒருங்கு கூடிய மைய வரலாற்று ஊடுக்கு இணையாக பன்மைத்தன்மை கொண்ட வரலாற்று பாவினை நெய்தது.இந்த தனிதன்மைகள் அனைத்தும் தொழிற்படும் பேராசிரியர் அ கா பெருமாள் அவர்களின் மற்றொரு முக்கிய நூலே இந்த – பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ – நூல்.
கடலூர் சீனு
அம்பை- கடிதங்கள்
ஓவியம்: ஷண்முகவேல்[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சில தினங்களுக்கு முன் நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன், என் நண்பனின் சகோதரி நல்ல இலக்கிய வாசகி, நாங்கள் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும்போது புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். அப்பொழுதுதான் என் வெண்முரசு பற்றியும் வெண்முரசின் கதைமாந்தர்களின் விவரிப்பை பற்றியும் சொன்னேன்.
அம்பை கதாபாத்திரத்தை பாரதத்தில் மிகவும் விரும்புவதாக என்னிடம் சொன்னார்கள் நான் முதற்கனலின் சிறு பகுதியான எரிமலர் புத்தகத்தை வாசிக்க பரிந்துரைத்தேன். சில தினங்களுக்கு பிறகு அவர் என்னை தொலைபேசியில் அழைத்து அம்பையின் விவரிப்புகள் பற்றி கதாபாத்திரத்தின் அழகியலை, வலிமையை அவள் மீதான நியாயங்களை , தான் ரசித்தவற்றை பகிர்ந்துகொண்டார்
உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு அம்பை பிடித்தவளாய் இருக்கிறார். வெண்முரசின் என்பது நமது வாழ்வின் வெளிப்பாடு, அங்கு நாம் பார்க்கும் கதாபாத்திரங்கள் தன் சுயதரிசனம். பெண்மையின் மனவலிமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் தான் அம்பை பாரதத்தின் தொடக்கம் அவளின் மனதில் இருந்தே தொடங்குகிறது எந்த நிலையிலும் அவள் தன்னை தாழ்த்திக் கொள்ளவே இல்லை,
சால்வனிடம் “நான் தொண்டு மகள் அல்ல”… இளவரசி…….. என்ற வார்த்தைகள் அவள் மீது அவள் கொண்ட உயர் எண்ணத்தை வெளிக்காட்டுகிறது. “ஒரு தெய்வம் இறங்கிச் சென்று பெரியதொரு தெய்வம் வந்து படகில் ஏறியது போல நிருதன் உணர்ந்தான்” என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை அம்பை கதாபாத்திரத்தின் ஆழத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அவள் சால்வன் இடமும் பீஷ்மரிடமும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடவில்லை என்ற அம்சமே அவளின் சிறப்பை காட்டுகிறது. “நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழ முடியும். உனக்கு மணிமுடியும் செங்கோலும் மட்டும் இருக்காது.” என்று சால்வன் கூறும்போது அம்பையின் “சீ கீழ்மகனே” என்ற கோபாவேச பதிலுரை அவளின் மேன்மையை நமக்கு பறைசாற்றுகிறது.
வெண்முரசில் அம்பையின் வலிமையும், தன்னைத் கீழ்மை படுத்திக் கொள்ளாத நோக்கும், பெண்களுக்கு அவளை பரிச்சயமானவளாகவும், நெருக்கமானவர்களாகவும், மாற்றுகிறது என்று நினைக்கிறேன். பெண்களில் பெரும்பாலோனோர் அம்பையை போல மன வலிவு கொள்ள விரும்புகிறா்கள், அதனாலேதான் எல்லா காலகட்டத்திலும் எல்லாத் தரப்பிலும் அம்பை விரும்பப்பட்டு கொண்டே இருக்கிறாள்.
தமிழ்க்குமரன் துரை
*
அன்புள்ள ஜெ
எழுபத்தாறு வயதான என் அம்மா வெண்முரசு வெய்யோன் வரை வாசித்துவிட்டார்கள். நாள்தோறும் காலையில் எழுந்து மதியம் வரை பொறுமையாக வாசிக்கிறார்கள். ஒரு தாளில் கதாபாத்திரங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு வாசிக்கிறார்கள். வாசிப்பு அவர்களிடமிருந்த சோர்வு, நோய் பற்றிய பயம் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிவிட்டது. அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்கிவிட்டது.
அம்மா வாசிக்க ஆரம்பிக்கக் காரணம் அம்பைதான். அம்பை மட்டுமே வரும் எரிமலர்தான் வாசித்தார்கள். அப்படியே முதற்கனலில் இருந்து தொடங்கிவிட்டார்கள்.
எம்.சாந்தி
April 1, 2022
காஞ்சிப்பட்டின் ஒளி
”எவ்வளவு சனம் பாத்தியளே, இதுக்காலை எப்டி போறது?” என்று நல்லம்மா தன் கணவன் செல்லையாவை பற்றிக்கொள்கிறாள். தன் தோளில் கிடந்த சால்வையை இடுப்பில் சுற்றிக்கொண்டு “பயப்படாமல் என்னோடை வா” என்று செல்லையா அவளை அழைத்துச் செல்கிறான். வல்லிபுர கோயில் கடைசிநாள் திருவிழா. உற்சாகத்தில் ஐந்து வயதுச் சிறுமியைப்போல சேலையை முழங்காலுக்குமேல் மடித்துவிட்டுக்கொண்டு ஒரு கெந்தல் போடவேண்டும் என்று நல்லம்மாவுக்கு தோன்றியது. செல்லையா அவளுடைய உற்சாகத்தை ரசித்தபடி உடன் சென்றுகொண்டிருந்தான்.
இப்படித் தொடங்குகிறது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் இலங்கையர்கோன் 1942ல் எழுதிய சிறுகதையான வெள்ளிப்பாதசரம். ஒரு புதுமணத் தம்பதிகள் திருவிழாவுக்குச் செல்வது என்பது ஒரு முக்கியமான குறியீட்டு நிகழ்வு. அந்த விழா வெளியுலகமேதான். அந்த மானுடக்கொப்பளிப்பில் கரைந்தும், கரையாமல் தங்களுக்குள் ஒதுங்கிக்கொண்டும் அவர்கள் குதூகலிக்கிறார்கள். அவள் அஞ்சுவதுபோல நடித்து அவனை பாதுகாவலனாக்குகிறாள், அங்கு விற்கும் அனைத்தையும் வாங்கும் விழைவு கொள்கிறாள். அவனுடைய பணப்பையோ சிறியது.
பேரம்பேசி முப்பது ரூபாய்க்கு ஒரு வெள்ளிக்கொலுசை வாங்கிவிடுகிறார்கள். அதை அவள் விழாவிலேயே தொலைத்துவிடுகிறாள். அவனுடைய கடைசிப்பைசாவையும் கொடுத்து வாங்கியது. ஒருவாய் தேத்தண்ணி குடிக்க கையில் காசு மிச்சமில்லை. அவன் எரிந்துவிழுகிறான். சட்டென்று சுடுசொல் வந்துவிடுகிறது. “ஊதாரி நாய்” என்கிறான். முதல் வசை, முதல் பிணக்கு.
அவள் சீற்றம் கொண்டு வீடு திரும்புவோம் என்கிறாள். அவர்கள் இறுக்கமாக திரும்பிச் செல்கிறார்கள். அவள் தன் கணவனின் பசியை உணர்ந்து மனம் வருந்தினாலும் பேசாமல் வருகிறாள். வழியில் இருளில் ஒரு கொள்ளிவாய் பிசாசு. அவன் அதைநோக்கி துப்புகிறான். அது அப்பால் ஏரியில் விளக்கு கொளுத்தி மீன்பிடிப்பவர்களின் ஒளி என தெரிகிறது. அவர்கள் மனம் இணைகிறார்கள்.
வெள்ளிப்பாதசரம் தொகுதி 1962ல் இலங்கையர்கோன் மறைந்து ஓராண்டு நிறைவுக்குப்பின் அவர் மனைவி செல்லம்மா முயற்சியால் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதன் முன்னுரையுடன் வெளிவந்தது. அதிலுள்ள எல்லா கதைகளுமே நுட்பமானவை, கிட்டத்தட்ட எழுபத்தைந்தாண்டுகளுக்கு பின்னரும் அழகு இழக்காதவை. சொல்லப்போனால் இத்தனை கால இடைவெளிக்குப் பின் தேறும் ஈழச்சிறுகதைகள் மிகமிக அரியவையே. இலங்கையர்கோன் ஈழச்சிறுகதைகளில் ஒரு சாதனையாளர்
இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த.சிவஞானசுந்தரம் தன் பதினெட்டாவது வயதிலேயே மொழியாக்கங்கள் செய்யத்தொடங்கினார். முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நவீனச் சிறுகதைகளை மொழியாக்கம் செய்தார். அது சிறுகதை வடிவம் பற்றிய பயிற்சியை அவருக்கு அளித்தது. இலங்கையர்கோன் எழுதிய முதல் கதை மரியா மக்தலேனா 1938 ல் கி.வா.ஜகன்னாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து ஈழகேசரி போன்ற இதழ்களில் எழுதினார்.
இலங்கையர்கோன் கு.ப. ராஜகோபாலன் எழுத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரைப்போலவே ஆண்பெண் உறவின் நுட்பங்களை எழுதியவர். உரையாடல்கள் வழியாக கதைகளை கொண்டுசெல்லும் பாணி கொண்டவர். கதைகள் உள்ளடங்கிய அமைதி கொண்டவை.
தமிழகத்தில் வ.ராமசாமி ஐயங்கார், க.நா.சுப்ரமணியம் போன்ற விமர்சகர்கள் அவரை ஓர் அரிய படைப்பாளியாக எண்ணினர். மணிக்கொடி, சூறாவளி, சரஸ்வதி,சக்தி போன்ற இலக்கிய இதழ்கள் அவர் கதைகளை வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் தீவிர நவீன இலக்கியம் வாசிக்கப்பட்ட சிறுசூழலிலேயே அவர் கவனிக்கப்பட்டார். இலங்கைச்சூழலில் அவரை பெரும்பாலும் எவரும் கவனித்து முதன்மைப்படுத்தவில்லை.
ஆகவே ஒரு கட்டத்தில் இலங்கையர்கோன் நாடகங்கள் எழுதுவதில் ஈடுபட்டார். அவர் எழுதிய பச்சோந்தி, லண்டன் கந்தையா முதலிய நாடகங்கள் மேடையேறி வரவேற்பு பெற்றன. ஆனால் அவை அவருடைய கதைகள் போல இலக்கியத்தரம் கொண்டவையாக இருக்கவில்லை. தன் நாற்பத்தாறாம் வயதில் 1961ல் மறைந்தார்.
இலங்கையின் முன்னோடி எழுத்தாளர்கள் என பலர் இருந்தாலும் இன்று அவர்கள் அன்றிருந்த ஒரு சூழலை, எழுத்துவடிவை காட்டுபவர்கள் என்ற அளவிலேயே முக்கியமானவர்கள். அவர்களின் ஆக்கங்கள் ஆய்படுபொருட்கள் மட்டுமே. மாறாக உயர்ந்த காஞ்சிப்பட்டு போல நுட்பமும் அழகும் மங்காமலிருக்கும் கதைகள் இலங்கையர்கோன் எழுதியவை. ஏனென்றால் முழுக்கமுழுக்க நுண்மையான அகஉணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்துபவை, கவித்துவத்தை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டவை.
அவருடைய மிக இளம் வயதில் எழுதப்பட்ட கதையான வெள்ளிப்பாதசரம் ஓர் உதாரணம். அந்த கொள்ளிவாய் பிசாசு என்ன என்பதை வாசகரிகளின் கற்பனைக்கே விட்டு எழுதப்பட்டுள்ளது. உள்ளத்தில் தோன்றி பேருருவாக எழுந்து உதறப்பட்டதும் சட்டென்று அவிந்தணையும் அந்த அனல் போன்ற ஒரு படிமம் உலக அளவில் அன்று எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளிலேயே மிக அரிதானது.
ஈழத்து இலக்கியச் சூழல் மிக விரைவிலேயே அங்கிருந்த அரசியல்சிக்கல்கள், சமூகச்சிக்கல்களால் ஆட்கொள்ளப்பட்டது. நேரடியாக அரசியல்-சமூகக் கருத்துக்களை பேசும் படைப்புகள் வாசகர்களால் கவனிக்கப்பட்டன, விமர்சகர்களால் போற்றப்பட்டன. நேரடியான கருத்துரைப்பு என்னும் இயல்பிலிருந்து ஈழத்து இலக்கிய போக்கு விலக இயலாமலேயே ஆகிவிட்டமையால் இலங்கையர்கோன் பின்னாளிலும்கூட கவனிக்கப்படவோ பின்பற்றப்படவோ இல்லை. இலங்கையர்கோன் நிறைய எழுதி, அவை ஈழத்துச் சூழலில் வாசக ஏற்பும் விமர்சனக் கவனமும் பெற்றிருந்தால் தமிழகத்தில் மணிக்கொடி இதழ் உருவாக்கிய சிறுகதை மறுமலர்ச்சி இலங்கைச்சூழலிலும் நிகழ்ந்திருக்கும்
இணையநூலகம் வெள்ளிப்பாதசரம்
அத்தனை மேலே அத்தனை கீழே
’’நான் மன நலம் பாதிக்கப்படுமளவு நோயுற்றேன். என்னால் சரியாக மூச்சுவிட முடியாத அளவு என் நெஞ்சில் எடை ஏறியிருந்தது. தேவதைக் கதைகளை நம்பும் குழந்தைபோல அன்பு சாஸ்வதமானது என்று நினைக்கிறோம். அதன்மீது அடி விழும்போது எல்லாம் விளங்கிவிடுகிறது. ஆண்கள் உணர்ச்சியால் வீழ்வதில்லை. அவர்கள் பிடித்து நிற்கிறார்கள். பெண்கள் உணர்ச்சியால் அடித்துசெல்லப் படுகிறார்கள்” என்று எழுதினார் பேட்டி.
புனைவுலகில் ஜெயமோகன் – ஒரு நூல்
‘வெண்முரசு’ உலகின் மிகப் பெரிய நாவல்.மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஜெயமோகன் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். இவரைப் பற்றிய அவதூறான விமர்சனங்கள் தமிழில் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவரின் படைப்புகளைப் பற்றிய கறாரான மதிப்பீடுகள் மலையாளத்தில்தான் எழுதப்பட்டுள்ளன.
ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவல் பற்றி விரிவாகக் கட்டுரைகளை எழுதியவர் ‘எழுத்துலகத்தேனீ’ டாக்டர் ப. சரவணன். இவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் வெண்முரசு பற்றித் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புனைவுலகில் ஜெயமோகன் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ‘வெண்முரசு’ ஓவியர் ஷண்முகவேல் ஓவியங்களை வரைந்துள்ளார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ந. பிரியா சபாபதி, கமலதேவி, விமர்சகர்கள் சுபஸ்ரீ, இரம்யா ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
இந்த நூல் டாக்டர். ப. சரவணன் ‘ வெண்முரசு ’ நாவலுக்கு உருவாக்கிய வரைபடம். ஒட்டுமொத்தமாக ‘ வெண்முரசு ’ நாவலைத் தொகுத்துக் கொள்ள , அதன் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன உள்ளது என்று விரித்துக்கொள்ள உதவும் நூல் இது. ‘ கூகிள் எர்த் ’ வரைபடம்போல. அதைப் பார்க்கும்போது சலிக்காமல் நாம் செய்வது சுருக்கி சுருக்கி ஓர் உருளையாக ஆக்குவதும் பின்னர் விரித்து விரித்து நம் வீட்டை அடையாளம் காணமுயல்வதும்தான். – ஜெயமோகன் , எழுத்தாளர்.
அயல்நிதி-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். எஸ்.வி.ராஜதுரை வழக்கு முடிவுக்கு வந்தது படித்து மகிழ்ச்சியடைந்தேன்.
இதில் நீங்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில், எனது கருத்தைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
முதலில் நீங்கள் குறிப்பிட்ட வரிகள்:
“நான் சொல்லவந்தது நாம் சிந்திக்கவேண்டிய வகை, வழி எல்லாம் வெளியே இருந்து வரும் நிதியால் வடிவமைக்கப் படுகின்றன என்பது மட்டும்தான். பொதுசூழலில் புழங்கும் பல அடிப்படை சிந்தனைப்போக்குகள் இப்படி உருவானவை. அவற்றை எதிர்த்து நிற்பது கடினம்”. எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு
”ஏனென்றால் ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் பற்றிய நூலில் நிதிக்கொடை பற்றிய நன்றிக் குறிப்பு இருந்தது.”.
இந்த இடத்தில், கேன்வாஸை இன்னும் கொஞ்சம் விரிவாக வைத்து யோசிக்கலாம் எனக் கருதுகிறேன்.
இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதம் மிகக் குறைவு 15-16% .
நமது விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய பல தலைவ்ர்களும் வெளிநாட்டுக் கல்வி முறையில், ஐரோப்பியச் சிந்தனையின் பாதிப்பில் உருவானவர்களே. அதன் வெளிப்பாடே விடுதலைக்குப் பின்னர் நாம் உருவாக்கிக் கொண்ட ஜனநாயகக் குடியரசு.
நமது அரசியல் சட்ட உருவாக்கத்தில், உலகின் பல ஜனநாயக அரசுகளின் அரசியலமைப்புச் சட்டங்களின் சுவடுகள் உள்ளன.
உலகின் மிகச் சிறந்த நவீனச் சிந்தனைகளை உள்வாங்கி, அதை நம் அரசியலமைப்புச் சட்டக் குழுவின் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, நாம் உருவாக்கிக் கொண்ட முறை.
இந்தியப் பொருளியல் அணுகுமுறையில் மேற்கத்திய தொழில்நுட்ப, மேலாண் வழிகள், திட்டமிடுதல் போன்றவை உள்ளே வந்தன. இந்தத் தளத்தில், தனித்துவமாகச் சிந்தனை செய்தவர்கள் காந்தியும், குமரப்பாவும். முதலாளித்துவத் தொழில் முறைக்கும், சோஷலிசத் தொழில்முறைக்கும் பெரிதான வேறுபாடுகள் இல்லை. இரண்டுமே, உற்பத்தியை இயந்திர மயமாக்கி, மூலதனத்தைக் குவிக்கும் முறைகளே. இதில் சோசலிச முறை உடைந்தால், அது உடனே, முதலாளித்துவமாகத் தான் உருமாறும் என்றார் குமரப்பா. ஆனால், அன்று பொருளாதார நிர்வாகிகளும், அரசியல் தலைவர்களும் அதைக் கேட்கவில்லை (இந்தப் புள்ளியை கடிதத்தின் இன்னொரு பகுதியில் மீண்டும் எழுதுகிறேன்)
இந்திய அரசியல் முறையில், வயது வந்தோருக்கான வாக்குரிமை என்னும் மிகப் பெரும் சமத்துவ நிலைச் சிந்தனையை நாம், ஐரோப்பாவில் இருந்தே கடன் வாங்கினோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இருந்த நம்மிடம் உள்ளாட்சி அமைப்புகள் இருந்தாலும், அவை ஒருவகையான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டவைகளாக இருந்தன.
நேருவும், அம்பேட்கரும் முன்னெடுத்த இந்து சீர்திருத்தச் சட்டங்கள். பெண்களுக்கான சம உரிமை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், விவாகரத்து போன்ற சட்ட உருவாக்கத்தில் உலகின் சிந்தனைகளையும், நமக்கே நமக்கான புத்தாக்கம் வழியாகவும் உருவாக்கிக் கொண்டோம்.
விடுதலை பெற்ற காலத்தில், நம் நாட்டின் முக்கிய நோக்கங்களான உணவுத் தன்னிறைவு, தொழில்நுட்பம், மேலாண்மைபோன்ற துறைகளில் பல்வேறு நிதி மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் வழியே முன்னெடுத்தோம். உணவுத் தன்னிறைவில் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஆற்றிய பங்களிப்பும் பால் துறையில் யுன்செஃப், உணவு மற்றும் வேளாண் கழகம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் பங்களிப்பும், இந்தியா என்னும் நாடு, பொருளாதாரத் தன்னிறைவை அடைய செய்தன அந்த உதவிகள் மகத்தானவை.
எனவே இந்தியா என்னும் நாடு, நவீன அரசியல் சட்டம், சமூகச் சீர்திருத்தச் சட்டம், அரசியல் சமத்துவம், பொருளாதாரத் தன்னிறைவு போன்ற தளங்களில் நிகழ்த்திய பாய்ச்சல்களில் பின்ணணியில், உலக சிந்தனைகளின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். விடுதலை பெற்ற காலத்தில் இது போன்ற முற்போக்குச் சிந்தனைகளின் மேலாதிக்கம் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா பிற்போக்கான நாடுகளில் ஒன்றாகத்தான் மாறியிருக்கும்.
90 களுக்குப் பிறகு, இந்தியா உலகுடன் திறந்த பொருளாதாரமாகவும், தகவ்ல் தொழில்நுட்பம் வழியாக, தனி மனிதரின் அந்தரங்கம் உலகின் எந்த மூலையில் இருந்து பார்க்கவும் முடியும் ஒரு சாத்தியம் தொடங்கிய பிறகு, இன்று நிதி உதவி வழியேதான் சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை.
எனவே, நாம் நம்முடைய சிந்தனை மரபுகளில், கலாச்சார விஷயங்களில் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்தி, உலகச் சிந்தனைகளினூடே உரையாடல்களை உருவாக்குவதே முன் செல்லும் வழி.
உங்கள் கட்டுரையில் நீங்கள் எழுதியுள்ளது போல, இதன் விளைவுகள் நுட்பமானவை. எளிமைப் படுத்துதல் குறைபட்ட வாதமாகப் போய் விடும். துரதிருஷ்டவசமாக, உங்கள் வாசகர்களில் பலரும் உங்களது கட்டுரைகளில் உள்ள அறிவார்ந்த வாதங்களை அப்படியே பொது வெளியில், பேசுகையில் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களும் உண்டு. என் நண்பர்கள் நடத்தி வந்த ஒரு சமூக முன்னேற்றத் தன்னார்வல நிறுவனம் ஒன்றைப் பற்றிப் பேசுகையில், `அதெல்லாம் அந்நிய நிதி வாங்கும் கைக்கூலி நிறுவனங்கள்`, என்னும் வகையில் எதிர்வினைகள் வந்தன.
இதில் நீங்கள் முன்வைக்கும் ஒரு விதி ஒன்றும் இது போன்ற வாதங்களுக்குத் துணையாக இருக்கிறது. ` சுதந்திரசிந்தனைக்கு இந்த கவனிப்பு அவசியமானது. இதை இன்றைய சூழலில் முற்றிலும் சுதந்திரமாக, முழுக்கமுழுக்க வாசகர் பலத்தால் நின்றிருக்கும் என்னைப்போன்ற ஒருவனே சொல்லமுடியும்`. இது ஒரு வகையான வரட்டுத்தனமாக தூய்மை வாதம். நீங்கள் ஒருவர் இத்தளத்தில் இயங்குவதை, மொத்த இந்தியாவுக்கும் பொதுமைப் படுத்தி, அப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. அந்த அலகில் பார்த்தால், நீங்கள் கூட தமிழ் வணிகச் சினிமாவை ஓரளவுக்கு மேலே விமரிசிக்க முடியாது
என்னைப் பொருத்தவரையில் இது தவறான அணுகுமுறை. இந்தியாவின் மிகப் பெரும் சமூக மேம்பாட்டுத்திட்டங்கள், சோனம் வாங்சுக்கின் லடாக் திட்டம், ராஜேந்திர்ச் சிங்கின் நீர் மேலாண்மைத் திட்டங்கள் என பல மேம்பாட்டுத்திட்டங்களுக்கு, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் பெருமளவு உதவியுள்ளன. இந்திய வணிக நிறுவனங்களில், அசீம் ப்ரேம்ஜி தான் இன்று இதை முழுமனதுடன் செய்கிறார். டாட்டா நிறுவனங்கள் கூட, தங்கள் நிதி உதவிகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டு விட்டன. பெரிய உதவிகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை.
பாலசுப்ரமணியம் முத்துசாமி
அன்புள்ள பாலா
நான் சொன்னது மிக எளிமையான ஒரு வேறுபாட்டை. ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு, சமூகமுன்னேற்றத்திற்கு வரும் அயல்நிதிக்கும் அந்த மக்களின் பண்பாட்டுப்பார்வையையும் அரசியலையும் மாற்றியமைக்கும்பொருட்டு வரும் அயல்நிதிக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. அப்பட்டமான வேறுபாடு அது. அதைப்பற்றிய குறைந்தபட்ச எச்சரிக்கையாவது ஒரு சூழலில் இருந்தாகவேண்டும் என்பதே என் எண்ணம்.
ஜெ அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும் அன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]வெய்யோனின் கர்ணன்
கட்டற்ற தன்மை கொண்ட கணிக்க இயலாத அனைத்திலும் புலன் அறியாத ஒற்றை மையம் இருக்கவே செய்கிறது.மகாபாரதத்தின் மையம் என்று நாம் எதை சொல்லலாம்.??அதன் மானுடர்களா?இல்லை அவர்களின் விழைவுகள் மீது காலம் நின்றாடும் நிகழ்வுகளா??கணிக்கயியலாத வாழ்வின் ஆட்டம் அல்லவா அது.
பாரதம் நீர் போல் எவரது வாழ்வின் பெரும் பாத்திரத்தில் விட்டு நிறைத்தாலும் அதில் பொருந்தி நிறைந்து ஒரு வடிவங்கொண்டு விடும்.பாரதத்தை ஒற்றை கதையென முழுதுணர முடியாது. நம் நம் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் மானுடர்களை நாம் செதுக்கிக் கொள்கிறோம். ஒவ்வொருவர் நினைவிலும் பாரதம் வெவ்வேறு வடிவில் எழுந்தமைகிறது.
வெண்முரசு பாரத கதைகளை கோர்த்து செய்யப்பட்ட மற்றோரு முத்தாரம்.அதில் வெய்யோன் கர்ணனுக்கான பகுதி. மானுடரில் சிறந்தவனின் உருவகமாக பாரதத்தில் முன்னிறுத்தப்படுபவன் கர்ணன்.அத்தகையவர்களுக்கு என்று ஒரு சாபம் உண்டு. அவர்கள் எத்தனை சிறப்பானவர்கள் என்று ஒரு சாரரால் ண்டாடப்படுகிறார்களோ அதற்கு இணையாக அவர்களின் நல்லியில்புகளுக்காகவே மற்றொரு சாரரால் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள்.மானுடருக்குள் மையம் கொண்டிருக்கும் நன்மை தீமையின் பகடையாட்டம் அது.
வெய்யோன் கர்ணனின் ஆழ்மன உணர்ச்சிகளின் தொகுப்பு. தாழொலிக்கதவு என்னும் அதன் இரண்டாம் பகுதி நாம் அதிகம் அறியாத கர்ணனின் மண வாழ்வின் நிகழ்வுகளை தொட்டுச் செல்வது. இங்கு கர்ணன் மாவீரனாக மன்னனாக நண்பனாக முன் வைக்கப்படுவதை விடுத்து இரு பெண்களின் அன்பிற்கும் அவர்களின் சுயநலத்திற்கும் இடையே ஊசலாடும் ஒரு கணவனாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறான்.
தன் நலம் விடுத்து பிறர் நலம் விரும்பும் அன்பு நிறைந்த பாசாங்கற்ற எளியவனாக வருகிறான்.கர்ணன் தன் தந்தை அதிரதன் விருப்பப்படி தன் குலத்து பெண்ணான விருஷாலியை முதல் மணம் புரிகிறான். கர்ணனின் பேரழகும் பெருவீரமும் அவளை கவர்ந்து பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்ள வைப்பதற்கு மாறாக அவளை அச்சப்படும்படி செய்கிறது. தன் நிலைக்கு சற்றும் பொருத்தமில்லாத கணவன் அவன் என்று அவனை கண்ட கணம் உணரும் அவள் அதன் வழி பெருகும் மனச் சஞ்சலங்களோடும் சிறுமைகளோடும் அவற்றை வெல்ல முயன்று தன் உரிமைகளை தக்கவைத்துக் கொள்ளும் தவிப்பு நிறைந்த பெண்ணாக வருகிறாள்.
மாறாக கர்ணனின் இரண்டாம் மனைவியாகவும் குல உயர்வு காரணமாக பட்டத்தரசியாகவும் உள்ள சுப்ரியை அவன் குல சிறுமை காரணமாக கசப்பான மனதுடனே அவனை அணுகுகிறாள். அவனின் வீரமும் ஆண்மையும் கருணையும் அவளை கவரவில்லை. மாறாக அதைக் கொண்டு பிறப்பால் உயர்குடி சார்ந்த தன்னை வென்றெடுத்த அவன் செயலை அவள் மன்னிக்கவேயில்லை. அந்த கசப்பு அவள் சார்ந்த அனைவரிடமும் கர்ணன் மீதான அவமதிப்பாய் வெளிப்படுகிறது.
மீண்டும் மீண்டும் தன்னை இழிவு நிலைகளுக்கு இட்டுச்செல்லும் பிறரது முடிவுகள் முன் அவன் மவுனித்து மட்டுமே இருக்கிறான். தான் சரி என்று கூறிச் செல்லும் ஒவ்வொரு சொல்லும் தன்னை எவ்விடம் கொண்டு செல்லும் என்பதை தெளிதென அறிந்திருந்தாலும் அவன் பிறருக்காக அப்பாரத்தினை ஏந்திக் கொள்கிறான். இரு மனைவிகளிடையையும் மிக பணிந்து செல்லும் கர்ணனிடம் அவன் அமைச்சர் தாங்கள் மிகவும் கீழிறங்குகிறீர்கள் அரசே என்பார். அதற்கு கர்ணன் கூறும் பதில் தான் அவன் உண்மையில் எத்தகையவன் என்பதற்கான பதில்
“உண்மை. களத்தில் அன்றி பிற இடங்களில் அனைத்தும் இறங்கிச் செல்வதே என் வழக்கம். எப்போதும் என் தரப்பு நியாயங்களைவிட அவர்களின் உணர்வுகளே எனக்கு முதன்மையாக தெரிகின்றன”
இதுவே இந்த பகுதியின் மையம்.
பிறருக்காக தன் கம்பீர நிலையிலிருந்து இறங்கிச் செல்லும் மனதுடையவர்களே அதிக மன சஞ்சலங்களுக்கு ஆட்படுகிறார்கள்.அவர்கள் உள்மனம் தங்கள் மேன்மையை அறிந்திருக்கும். ஆனால் அவர்களின் ஆழ்மனம் பிறரின் உணர்வுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கும். இறுதியாக அவர்கள் ஆழ்மன வழிகாட்டுதல்படி பிறர் நலனையை தம்மை விடுத்து முன் வைக்கிறார்கள். அப்படி அவர்கள் எளிதாக அணுகக்கூடியவர்கள் ஆகும் நொடி எதிராளி அவர்களின் நல்லியில்புகளின் பெருமிதத்தை தன் சிறுமைப்படுத்துதலால் சுக்கு நூறாக்குகிறார்கள். தொடர்ந்த அவமதிப்புகளால் அவர்களை தங்கள் மேலேயே ஐயம் கொள்ளும்படி செய்கிறார்கள். இப்போது எளிய மனதுடைய கொடையாளி தன்னை தன் நல்லெண்ணத்தை நிரூபிப்பதற்கு ஒரேயொரு சந்தர்பத்திற்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த ஏக்கத்தின் ஊற்றை அடைத்து பெருகும் எதிராளியின் வஞ்சம். இந்த வேட்டையில் வெளித்தெரியா ஆழ்ந்த காயத்துடன் வெளியேறி விடுவான் நல்மனதுடைய எளியவன்.
கர்ணன் தொடர்ந்து இவ்விதமே புண்பட்டு வீழ்கிறான்.வீழ்ந்து வீழ்ந்து மீள்வதே அவன் விதியென்றாகிறது. இப்படி அவன் அகம் அறிந்த உணர்வினை நாம் அறியும் வண்ணம் செய்ததாலே இந்நூல் சிறப்புடையதாகிறது. இங்கு வரும் கர்ணன் நம் அன்றாடங்களில் நம்மை கடந்து செல்லும் ஒரு அரிய ஆனால் பிறர் அக்கறைகள் சென்று தீண்டாத ஒரு கவனிக்கப்படாத சகோதரன் போல. உவமைகளையும் புகழுரைகளையும் விடுத்து உணர்ச்சிகளில் அடித்துச் செல்லப்படும் எளியவன். இப்படி அணுகக்கூடியவனாக அவனை அறிவதாலே வெய்யோனில் அவன் நம் கர்ணணாக ஆகிறான்.
திவ்யா சுகுமார்
March 31, 2022
சந்தையில் சுவிசேஷம்
உங்களுக்கு ஆலோசனை சொல்ல நான் யாருமல்ல, இருந்தாலும் இதைச் சொல்லியாகவேண்டும். இங்கே உங்கள் மேல் பெரும் ஈடுபாடு கொண்ட வாசகர்கள் பலர் இருக்கிறோம். உங்களிடமிருந்து கற்றுக்கொள்பவர்கள் நாங்கள். தொடர்ந்து உங்களுடன் ஒரு மானசீகமான உரையாடலில் இருக்கிறோம். ஆகவே உங்களை மிக நெருக்கமாக உணர்கிறோம்.
இந்நிலையில் நீங்கள் இந்த ஆனந்த விகடன் – பர்வீன் சுல்தானா பேட்டி போன்றவற்றை இங்கே பகிர்வது மிகுந்த சங்கடத்தை உருவாக்குகிறது. அந்த பேட்டியே முறையாக எடுக்கப்படவில்லை. நீங்கள் எதையுமே முழுமையாக ஒரு ஃப்ரேம்வொர்க்குடன் பேசுபவர். அவர் எதையுமே முழுமையாகச் சொல்ல விடவில்லை. உடனே அடுத்ததுக்குச் செல்கிறார். அந்தப் பேட்டியின் கேள்விகளெல்லாமே இங்கே உள்ள ஒன்றும் தெரியாதவர்கள் உங்கள்மேல் கேட்பது. விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களின் பட்டியலை பார்த்தவர்கள் எவருமே அந்த விருது விஷ்ணுபுரம் வட்டத்தினருக்கு அளிக்கப்படுகிறது என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்கிறீர்கள்.
மிக அடிப்படையான கேள்விகளுக்குக் கூட நிதானமாக பதில் சொல்கிறீர்கள். இங்கே பலருக்கு இலக்கியவிமர்சனம் என்னும் அறிவுத்துறை இருக்கும் சமாச்சாரமே தெரியாது. கூசக்கூச ஒருவர் மற்றொருவரைப் பாராட்டுவதையே இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள். விமர்சனம் என்றால் அது அரகியலோ அழகியலோ ஏதோ ஓர் அளவுகோலின்படி இருக்கும் என்றும், அதில் சிலர் தேறினால் பலர் தேறமாட்டார்கள் என்றும் தெரியாது. ஏன் சிலரை மறுக்கவேண்டும், ஏன் எல்லாரையும் பாராட்டக்கூடாது, கருத்து சொல்ல இவர் யார் என்றுதான் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்
ஆனால் அங்கே உள்ள மிகப்பெரிய சிக்கலென்பது அங்கே கீழே பின்னூட்டங்களில் வரும் வசைகளும் அவதூறுகளும்தான். மிரட்டல்வரை எழுதுகிறார்கள். நான் கொஞ்சம் அறிஞர் என நினைத்த பேராசிரியர் ஒருவர் எட்டாம்கிளாஸ் பாடப்புத்தகத் தகவல் உங்களுக்கு தெரியவில்லை என எழுதுகிறார். ஒரு இயற்கை வேளாண்மைக்காரர் அந்தப்பேட்டியில் நீங்கள் சொல்லாததை தானே கற்பனையால் கேட்டு எழுதுகிறார். பெரும்பாலானவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. கீழடி ஆய்வுகள் பற்றி அரசு வெளியீட்டில் இருக்கும் காலக்கணிப்பையே நீங்கள் சொல்கிறீர்கள். அது உங்கள் கணிப்பு என்று கொப்பளிக்கிறார்கள்.
உங்கள் வாசகர்களுக்கு அவை மிகுந்த கசப்பையும் சோர்வையும் அளிக்கின்றன. இவர்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்துவதில்லை. அவை வந்தால் ஹிட் கூடும் என நினைக்கிறார்கள். அதாவது உங்களை வசைபாடச் செய்து தங்கள் ஹிட் அளவை கூட்டிக்கொண்டு லாபம் பார்க்கிறார்கள். உலகம் முழுக்கவே எல்லா பின்னூட்டங்களிலும் அநாகரீகமான பின்னூட்டங்கள் தவிர்க்கப்படும் என்றும் அறிவிப்பு இருக்கும். கறாராகவே அதையெல்லாம் நடைமுறைப்படுத்துவார்கள். இவர்கள் எதையுமே செய்வதில்லை.
உங்கள் வாசகர்கள் இந்த எலிமெண்டரி பேட்டிகளில் இருந்து தெரிந்துகொள்ள ஏதுமில்லை. இந்த வசைகளை கேட்டு மனக்கசப்படைய வேண்டியதில்லை. ஆகவே இந்தவகையான பேட்டிகளை ஒப்புக்கொள்ளவேண்டாம். குறைந்தபட்சம் அவற்றை இந்தத் தளத்தில் பகிர்வதையாவது நிறுத்தலாம்.
அர்விந்த் குமார்
***
அன்புள்ள அர்விந்த்,
என் வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கிறார்கள். புதியவாசகர் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்கள் இன்று 25 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள். விஷ்ணுபுரம் நிகழ்வுகளில் முக்கால்வாசிப்பேர் 25 நிறையாதவர்கள். இவர்களில் பெரும்பகுதியினர் இந்த வசைகள் வழியாக என்னைப்பற்றி அறிபவர்கள். அவற்றை கவனிப்பவர்கள் என் பதிலை கவனிக்கிறார்கள். நான் சொல்லும் விஷயங்களுக்கும் வசைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை பார்க்கிறார்கள். இயல்பான நுண்ணுணர்வு கொண்ட எவரும் அந்த வசைபாடும் தரப்புடன் ஓர் அருவருப்புணர்வை அடைவார்கள். அவர்களே என் வாசகர்கள். ஒருசாரார் உற்சாகமாக அங்கே போய் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் என்னுடைய வாசகர்களாக எந்நிலையிலும் மாறுபவர்கள் அல்ல, அதற்கான அறிவுத்தகுதியோ நுண்ணுணர்வோ அற்றவர்கள்.
அந்தக் களத்தை நான் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அதுவே பொதுத்தளம். பிரம்மாண்டமான ஊடகவல்லமையுடன் ஒவ்வொரு இளம்வாசகனையும் அதுவே சென்றடைகிறது. அது ஒரு பொதுமாயையை கட்டமைக்கிறது. அதன்மேல் அரசியலதிகாரம் அமைக்கப்படுகிறது. அதில் பத்தாயிரத்தில் ஒருவர் ஒவ்வாமை கொள்கிறார். அவர்தான் இலக்கியவாசகர். அறிவியக்கவாதி. அவருக்காக அங்கே சென்று பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நவீன இலக்கியத்தின் விமர்சனத்தன்மையை, அதிகாரத்தையும் கட்டமைப்புகளையும் சீண்டும் அதன் அடிப்படை சுதந்திரத்தன்மையைச் சொல்லவேண்டும். நவீன இலக்கிய முன்னோடிகளை முதன்மைப்படுத்தியாகவேண்டும். மார்ட்டின் லூதர் சொன்னார், சுவிசேஷம் சந்தையில்தான் சொல்லப்படவேண்டும் என்று. அங்கே கேட்பவர்கள் குறைவுதான், ஆனால் அங்குதான் அதற்கான தேவை உள்ளது.
உண்மையில் அது தனிப்பட்ட முறையில் இழப்பு. வசைகள் வந்து குவியும். அவதூறுகளாலும் திரிபுகளாலும் என் எழுத்துக்கள் மறைக்கப்படும். அவற்றை விலக்கி என்னை வாசிக்க அபாரமான ஒரு தேடலும் நுண்ணுணர்வும் தேவை. ஆனாலும் தலைமுறைக்கு ஒருவராவது தீவிர இலக்கியத் தளத்தில் இருந்து இதைச் செய்துதான் ஆகவேண்டும். புதுமைப்பித்தனும், க.நா.சுவும் செல்லப்பாவும் சுந்தர ராமசாமியும் செய்ததுதான். இன்று இன்னொருவர் அதைச் செய்வதை நான் காணவில்லை. உண்மையில் நான் சலிப்புற்றிருக்கிறேன். இன்னொருவர் இன்று இதைச் செய்வாரென்றால் நான் ஒதுங்கிக்கொள்வேன்.
ஜெ
திருப்பத்தூரில் நான்…கடிதம்
ஏப்ரல் 2
மாலை 3 மணி முதல்
கரேஞோ அரங்கம் தூயநெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர்
அன்பின் ஜெ! வணக்கம்…
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நிகழ இருக்கும் விழாவை தொடங்கி வைக்க 2-ந்தேதி தாங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தீவிர தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத நிலம் தமிழக வட எல்லை மாவட்டங்கள் என்று மிகச் சரியாக தாங்கள் வேறு பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிச் செல்லும் போது குறிப்பிட்டிருப்பீர்கள்.
குறிப்பாக பழைய வட / தென்னாற்காடு மாவட்டங்களைப் பற்றி கடந்த இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடு என்பது மொத்தமே எட்டு, பத்துப் பேர்களாக அருகி நிற்கின்றனர். எடுத்துக்காட்டாக இந்த மாவட்டம் முழுக்க ஒவ்வொரு ஊரிலும் தமிழ் மன்றங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக பெரியளவில் நடந்து வருகிறது. முதல்வர்களுடன், அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்த மூத்த தமிழ்ப் பேராசிரியர் வழிநடத்திய அமைப்புகளின் இயல்பே இந்த வகையானதாகத்தான் இருந்திருக்கிறது.
இங்குள்ள தீவிர சிற்றிதழ் சூழலில் இயங்கக் கூடிய, தமிழக அளவில் கவனம் பெற்றவர்களை அழைத்து விழா மேடையில் மரியாதை செய்ய வேண்டும், ஒரு துண்டோ, மாலையோ அணிவிக்க வேண்டும். வெறும் பேச்சாளர்களை அழைத்து பெரும் பொருட் செலவில் நடத்தப்படும் இந்த விழாவின் பயன் மதிப்பு என்னவென்று தெரியவில்லை. அசட்டுத்தனமான பேச்சுக்கு எழும் கரவொலி, சிரிப்பலை, கூடிக் கலையும் சம்பிரதாயம், அவ்வளவே.
இங்கு தாங்கள் குலசேகரன் அவர்களை விசார்த்திருக்கிறீர்கள், அவர் இன்னமும் அதே வாணியம்பாடியில்தான் இருக்கிறார், அவ்வப்போது தன்னால் முடிந்தளவு தீவிர தளத்தில் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவரை, ஸ்ரீநேசனை, கவிப்பித்தனை, அழகியபெரியவனை, யாழன் ஆதியை, ஜி.குப்புசாமியை, சுகிர்தராணியை, அ.வெண்ணிலாவை, இணைய இதழ் கனலியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் உட்பட எவர் ஒருவரையும், தமிழின் முதன்மை வாசகர் வேலூர் லிங்கம் அவர்கள் யாரென்பதும், அவர்களின் பங்களிப்பு என்னவென்பது இங்குள்ள பொதுப் போக்கு / போலிகளுக்கு தெரிவதே இல்லை. இத்தனைக்கும் இவர்களில் சிலர் தமிழின் மிக உயரிய விருதுகளை இந்திய அளவில், பன்னாட்டளவில் பெற்றவர்கள். இத்தனை சிறப்புக்குரிய ஆளுமைகளை உள்ளூரில் வெறும் வாத்தியார், முனிசிபாலிட்டியில் வேலை செய்யும் கிளார்க் என்றளவில்தான் புரிந்து வைத்திருக்கின்றனர்.
பொதுவாக பேராசிரியர்களும், தமிழாசிரியர்களும் இன்னமும் அரசர்கள் வாழ்ந்த காலத்தின் utopia மனநிலை கொண்டிருக்கின்றனர், நவீன இலக்கியம், அதன் செல்திசை, அச்சும், மின்னிதழ் தொழில்நுட்ப யுகத்தில் அரதப் பழைய, வழக்கொழிந்து போன, காலாவதியானவைகளை மறுபடியும் தூக்கிச் சுமக்கச் சொல்கின்றனர். இந்த நிலையில்திருப்பத்தூர் குறித்த தங்களின் மலரும் நினைவுகளுடன் விழா நேரத்தில் பழைய வட / தென்னாற்காட்டு இலக்கியவாதிகள் அனைவரையும் ஒருசேர பார்ப்பது மகிழ்ச்சி.
கொள்ளு நதீம்
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


