Jeyamohan's Blog, page 805

March 27, 2022

ஒத்தைத் தறி முதலியார்

முதலியார் ஆண்டு கிடந்த அந்த வீட்டை இப்போது பார்ப்பதே பெரும் துக்கமாக இருந்தது. அவ்வளவாக பராமரிக்கப்படாத வாசலெங்கும் செடிகள் முளைத்து குப்பையடைந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்டிடமாகக் கிடந்தது. வெகுநாட்கள் திறக்கப்படாததின் வீச்சம் கதவைத் திறந்ததுமே முகத்தில் அடிக்கும். பெருச்சாளிகள் குபீரென்று வெளிப்பட்டு மூலையிலிருந்து தாவி ஓடும். கூரை முழுக்கச் சிலந்தி வலைகளும், ஒட்டடைகளும் பின்னிக் கிடக்கும். காங்கிரீட் ஒட்டுகள் பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகள் மடங்கித் தொங்கும். இந்தப் புரட்டாசி அமாவாசைக்கு மட்டும முன்கூட்டியே சுத்தம் செய்துவிடுவார்கள்.

ஒத்தைத் தறி முதலியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2022 11:31

பனிமனிதனும் குழந்தைகளும்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

நலமாக இருக்க விரும்புகிறேன்

நான் தினமும் இரண்டு அத்தியாயங்கள் என பனிமனிதனை என் ஐந்து வயது (ukg) செல்லும் என் மகளுக்கு வாசித்து காட்டுவேன். அதில் சில சிக்கல்கள்

அ. கதையை கூறும் போது நான் அவளுக்கு அந்த கதையில் பெரும்பாலான தகவலகள் இருப்பினும் அவள் பனிமனிதன் பெரிய உருவத்தையும் அவனுடைய சாகசங்களையுமே விரும்புவாள்.

ஆ. சில சமயம் நான் கதையை கூறுகையில் வேறேதும்  பேச்சை தொடங்குவாள். அந்த இடத்தில் இருந்து கதைக்கு கொண்டு வர பாடதபாடு படவேண்டும். எனக்கு சற்று எரிச்சலாக இவளுக்கு இதை சொல்லதான் வேண்டுமா என்றளவுக்கு இருக்கும். திடீரென திரும்பவும் கதைக்கு வருவாள். சில சமயம் கதைக்குள் கொண்டு வர சில கூகுள் இமேஜலாம் தேவை.

இ. பெரும்பாலும் கதை முடிவதற்குள் தூக்கம், எவ்வளவு தூரம் கேட்டாள் என்றாள் என்றும் தெரியாது.கதை கூறுகையில் எனக்கு பெரிதா நம்பிக்கை இல்லை கதை அவளை சென்றடைந்தாதா என்று.

நாங்கள் கடந்த வாரம் குடும்பமாக முதுமலை சென்றோம். அனேகமாக அனைத்து மரங்களும்  தன் மேலாடையை முழுமையாக அவிழ்த்து எந்தவித நானமும் இல்லாமல் நிர்வாண அழகுடன், கடும் சூரியனை தழுவி நின்றன. ஆம் சீசன் இல்லை, இலையுதிர் காலம் நல்ல வெயில். நிறைய குரங்குகள் மற்றும் யானைகள். சட்டேன்று என் மகள் “டாடி இந்த குரங்களாம் பருங்க இந்த மாதிரி வெயில் உள்ள இடத்தலதான் இருக்க முடியும் அதுக்கு முடி பாருங்க கம்மியா இருக்கு, பனி மனிதனும் இங்க இருக்க மாட்டான் அவனுக்கும் கஷ்டம் தான், ஐஸ் மாவுன்டன் போனும் டாடி அதுக்களாம்” என்றாள். நானும் என் மனைவியும்  திகைத்து நின்றோம்.

குழந்தைகள் எதை கவனித்தார்கள் எதில் நாட்டம் என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட அவர்களுக்கு நாம் எதாவது கனவுகளையும் சாகசங்களையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை என பட்டது. பனிமனிதன் அவள் கனவில் வளர்ந்து கொண்டே இருக்கிறான். பெரும்பாலான தகவல்களை இடத்திற்கு ஏற்றார் போல் அவளால் கூற முடிகிறது.It’s highly difficult to predict what they capable are at the present moment”

உங்களுக்கு மிகபெரிய நன்றி  எங்கள் குடும்பத்திற்கு அளித்த அடுத்த கொடைக்கு.

அன்புடன்,

விஜி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2022 11:31

மு.க -கடிதம்

அன்பு ஜெயமோகன்,

கருணாநிதி அவர்களைப் பற்றி ஒரு சுயவிளக்கம் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தாக வேண்டி இருக்கிறது, பாருங்கள். அதைத்தான் கலிகாலக்கொடுமை என்கிறேன். திராவிட அடிப்படைவாதிகளிடம் கூட பேசி மீண்டு விடலாம் போல் இருக்கிறது. ஆனால், வலைதள நவீன இலக்கியப் புலிகளிடம் தப்பவே முடியாது போல.

கருணாநிதி இலக்கியவாதியா, எழுத்தாளரா எனும் உரையாடலுக்குத் தகுதியானவன் இல்லை நான். அதில் கருத்து சொல்லும் அளவுக்குக் கருணாநிதியைக் கவனித்தவனும் இல்லை. அதனால் அச்சர்ச்சையில் மூக்கை நுழைக்காமல் நகர்கிறேன். பலமுறை அவரின் ஆக்கங்கள் எனச் சொல்லப்படுபவனவற்றைப் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். தமிழ்ப்பித்து தலைக்கேறிய இருந்த சமயம் அது. கருணாநிதி வேறு தொல்காப்பியப்பூங்காவை எழுதி இருந்தார். ம்ஹூம், அந்நூலுக்குள் நுழைய முயன்றதில் நெற்றி வீங்கியதுதான் மிச்சம்.

காலம் என்று ஒன்று இருக்கிறதே? அது அப்படியே விட்டுவிடுமா. அவரின் ஆக்கங்களில் இருந்து திரட்டி அளிக்கப்பட்ட சிந்தனைத்தொகுப்புகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தே விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். ஒரு நண்பரிடம் வேடிக்கையாக புறநானூறு, அகநானூறு போல கலைஞர் நானூறு என்றிருந்தால் எப்படி இருக்கும் எனச் சொன்னேன். அந்நண்பர் திராவிட ஆதரவாளராக இல்லாவிட்டாலும், கருணாநிதியைச் சந்திப்பதற்கு விருப்பம் கொண்டவர். அதனால் அதற்கு  இது உதவுமா என்று கேட்டார். உதவக்கூடும் என்றேன். தயவுசெய்து சிந்தனைகளைத் தொகுத்துத்தருமாறு கேட்டுக் கொண்டார்.

நண்பராயிற்றே, மறுக்க முடியவில்லை. துவக்கத்தில் கொஞ்சம் வெறுப்புடன்தான் கருணாநிதி அவர்களின் சிந்தனனகளை வாசிக்கப் புகுந்தேன். போகப்போக, என் செயலில் ஒரு மழலைத்தனம் வந்து உட்கார்ந்து கொண்டது. என்னை அறியாமல் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கவும் துவங்கி இருந்தேன். ”பதர் நின்று அழிந்தால் பயன் தருமோ வாழ”, “உடல் என்றால் மெய்யல்ல பொய்யே ஆகும்”, ”சொல்லிவிட்டுக் கடிக்காது பாம்பு, வாலை மிதித்தாலே போதும்” என்பன போன்ற வரிகளின் நயமும் பொருளும் அப்போது பிடித்திருந்தது. அதற்காக அவரைச் சிந்தனையாளர் எனப்புகழ்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

வழக்கமான வேலை போக, மீதி நேரங்களில் தொகுத்த சிந்தனைகள் நானூறை நெருங்கியதும் நண்பரை அழைத்துச் சொன்னேன். அவர் இதை யாரிடம் காட்டிக் கருணாநிதி அவர்களுக்குச் சொல்வது என்றார். நான் கல்வி அமைச்சர் அன்பழகன் அவர்களைப் பரிந்துரைத்தேன். புள்ளி வைத்தால் கோடு போட்டு விடுகிற நண்பர். விடுவாரா, கருணாநிதியின் சிந்தனைகளைச் சுமந்துகொண்டு அன்பழகனைச் சந்தித்தார். அவரின் முயற்சியை அன்பழகன் பாராட்டியதோடு, சிந்தனைகளைத் தன்னிடம் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்டிருக்கிறார். சிந்தனைகளில் எழுத்துப்பிழை, சொற்பிழை போன்றவை இருக்கிறதா என அன்றிரவு முழுவதும் பார்த்திருக்கிறார். தென்பட்ட பிழைகளைத் தன் கைப்பட எழுதி அடுத்த நாளே நண்பரை வரவழைத்துத் தந்திருக்கிறார். கூடவே, “பிழைகளைச் சரி செஞ்சுக்கங்க.. கலைஞர் இதப் பாத்தா சந்தோஷப்படுவார்.. இந்த வாரமே அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யறேன்!” எனச் சொல்லி இருக்கிறார்.

அதன்படியே, நண்பரை அவரே கூட்டிச் சென்று கருணாநிதி அவர்களிடம் அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். நண்பரைப் பற்றி விசாரித்த அவர், “நீங்க புத்தகமெல்லாம் படிப்பீங்களா?” என்று கேட்டிருக்கிறார். நண்பர் பதறிப்போய் விட்டார். வாசிப்புப்பழக்கம் சுத்தமாய் இல்லாதவர். “இல்லைங்க ஐயா.. இத எங்க நண்பர்கள் தொகுத்திருக்காங்க” என்றிருக்கிறார். “பரவாயில்ல.. இனியாவது நீங்க புத்தகங்கள படிங்க.. உங்களுக்கு எது படிக்கப் பிடிக்குதோ அதுல துவங்குங்க!” என்று சொல்லி இருக்கிறார். மேலும், “நான் படிச்ச புத்தகங்கள்ல இருந்து எனக்குக் கிடைச்ச அறிவுதான் இப்படி சிந்தனைகளா இருக்கு” என்றிருக்கிறார். நண்பர் ஆடிப் போய் விட்டார். என்றாலும், இன்றைக்கு வரை வாசிப்புக்கு இனிமேல்தான் வர வேண்டும் என்றுதான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு யார் செய்வினை வைத்து விட்டதாகவே நம்புகிறேன்.

கலைஞர் நானூறு நூலைக் கொண்டு வருவதற்கு பல அரசியல்வாதிகளை நண்பர் சந்தித்தார். அதனால் தங்களுக்கு என்ன அரசியல் லாபம் கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்திருக்கிறது. கலைஞரே ஒப்புதல் கொடுத்துட்டார் என்ற பதில்களில் எல்லாம் அவர்களுக்கு நிறைவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, கருணாநிதி என்பவர் கட்சித்தலைவர்; ஒருபோதும் அவர் எழுத்தாளர் அல்ல. பல அரசியல்வாதிகள் சிந்தனைகளைப் படித்துப்பார்த்து விட்டு கலைஞர் இப்படி எல்லாம் எழுதி இருக்கிறாரா என்று கேட்டிருக்கின்றனர். நண்பருக்கு வேர்த்து வடிந்திருக்கிறது. அச்சமயத்தில் அம்முயற்சி அப்படியே தேங்கிப்போனது. நண்பரும் கைவிட்டு விட்டார். கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு, வேறொருவருக்கு அம்முயற்சி கைமாறியது. ஒன்றும் நடந்தபாடில்லை. வருடங்கள் உருண்டு கொண்டே இருக்கின்றன. இந்த வருடம் எப்படியும் கொண்டு வந்து விடலாம் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்க, சமீபத்தில் நடந்த கூத்து ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். கலைஞர் நானூறு முயற்சியைக் கேள்விப்பட்ட ஒரு அரசியல்வாதி, “தம்பி, அந்தக் காலமெல்லாம் போயாச்சு.. தளபதி நானூறு இருந்தா கொண்டு வாங்க.. முயற்சி செய்யலாம்!” என்று பழைய நண்பரிடம் சொல்லி இருக்கிறார். அப்பாவி நண்பர், ”நண்பா.. தளபதியின் நானூறு சிந்தனைகளைத் தொகுத்துத் தர முடியுமா?” என என்னிடம் கேட்டார். “இப்ப நேரம் இல்ல நண்பா.!” என்று மட்டும்தான் அவரிடம் சொல்ல முடிந்தது.

யாரையும் இழிவுபடுத்தவோ உயர்வுபடுத்தவோ நான் இவ்வனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. சந்திக்கிற புதிய இளைஞர்களிடம் நூல்வாசிப்பு பற்றி இயன்ற அளவு கருணாநிதி பகிர்ந்து கொண்டிருக்கிறார். நம் சிந்தனைகளைப் பக்குவப்படுத்துவதற்கு வாசிப்பே உதவும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், அவரைச் சுற்றி இருப்பவர்களோ தொண்டர்களோ அதைப் பெரும்பாலும் புரிந்து கொள்ளவே இல்லை.

இறுதிக்காலத்தில் இராமனுஜம் தொலைக்காட்சித் தொடருக்கு வேலை பார்த்தபோது ஒளிபரப்பான அவரின் நேர்காணல் ஒன்றைக் கண்டேன். அவர் முகத்தில் அவ்வளவு கொண்டாட்டம். என் வகையில், வாசிப்பும் தொடர் செயல்பாடுகளுமே அவரை உற்சாகமாய் வைத்திருந்ததாகக் கருதுகிறேன். இன்றைக்குப் பொறுப்பேற்றிருக்கும் மு..ஸ்டாலின் கூட தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் புத்தகங்கள் வாங்கிவரச் சொல்கிறார். சால்வைகளுக்கும் பரிசுப்பொருட்களுக்கும் பதில் நூல்களை வழங்கச் சொல்கிறார். இருவரும் திராவிட பாரம்பரியத்தில் வந்ததனால் எந்நூல்களை வாசிப்பது எனப்பரிந்துரைப்பதில் இலக்கிய அக்கறை இல்லாதவர்களாகத் தெரியலாம். ஆனால், இருவரும் வாசிப்பு அக்கறை உள்ளவர்கள் அல்லது அப்படி நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களின் அரசியலில் நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இப்பண்பைப் போற்றியாக வேண்டும்.

இறுதியாகச் சொல்கிறேன். கருணாநிதி எழுத்தாளரா, இலக்கியவாதியா என்பதில் கருத்துமுரண்கள் இருக்கலாம். ஆனால், அவர் வாசிப்பை அதிகம் விரும்பியவர். அதில் சந்தேகமே வேண்டாம். அரசியல் களத்தில் செயல்பட்டதனால், அவரால் இலக்கியப்போக்குகளை உள்வாங்க இயலாமல் போயிருக்கும் என நினைக்கிறேன். இப்படிச் சொல்லலாம். கனிமொழி மனுஷ்யபுத்திரன் போன்றோர் இலக்கியக்களத்தில் இருந்து அரசியல்தளத்துக்கு நகர்ந்து இப்போதுஅரசியல்வாதிகளாகவேஆகிவிட்டனர். ஒருவேளை, கருணாநிதி அவர்களுக்கு நவீன இலக்கியம் குறித்த முறையான அறிமுகம் அவருக்குக் கிடைத்திருந்தால் ஒருவேளை அரசியல்தளத்தில் இருந்து நகர்ந்துநவீன இலக்கியக்களத்துக்குவந்திருக்கவும் கூடும்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம் .

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2022 11:30

இலங்கையும் பின்தொடரும் நிழலின் குரலும்

பின்தொடரும் நிழலின்குரல் பற்றி சிறில் அலெக்ஸ் ஒரு சிறு புகைப்படத்துண்டு அனுப்பியிருந்தார். அதைப்பற்றிய சிறு வியப்பையும் தெரிவித்திருந்தார்.

அந்நாவல் எழுதப்பட்ட 1997ல் அந்த வார்த்தைகள் மிகமிக தொலைவாக ஒலிப்பவை. அன்று இங்கே இனத்தேசியவெறியும் போர்வெறியும் கொப்பளித்துக் கொண்டிருந்தன. நாவலில் அவ்வரியைச் சொல்பவர்கள் இருவரும் நவீன இடதுசாரிகள். கதிர் புதிய மார்க்ஸியத்தின் பிரதிநிதியாக வருபவன். இனிமேல் மார்க்ஸியம் என்பது வன்முறைப்புரட்சி மூலம் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி பொருளியலின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றி உருவாக்குவதாக இருக்கவேண்டியதில்லை என்றும், உலகைக் கட்டமைக்கும் சிந்தனைகளில் ஊடுருவி அவற்றை மாற்றியமைப்பதன் வழியாகவே அது தன் பங்களிப்பை ஆற்றமுடியும் என்றும் வாதிடுபவன்.முழுக்கமுழுக்க தர்க்கபூர்வமானவன். உணர்வெழுச்சிகளுக்கு அப்பாற்பட்டவன். அவனை ஆதரிப்பவனாகிய சண்முகம் அவ்வரியைச் சொல்கிறான்.

அன்று அது ஒரு தொலைதூர ஊகம், ஆனால் வரலாற்றை அறிந்த எவருக்கும் அது எளிய ஊகம். உள்நாட்டுப்போர்களை விரைவில் முடிக்கமுடியாது. அதில் எவரும் வெல்வதில்லை. அவற்றில் வேறுநாடுகள் தலையிடுமென்றால் அவற்றை முடிக்க போரிடும் தரப்புகள் நினைத்தாலும் முடியாது. அப்போர் அறுதியாக பஞ்சத்தையும் பேரழிவையுமே உருவாக்கும். மிகச்சிறிய பொருளியல் காரணத்துக்காக உள்நாட்டுப்போரைத் தொடங்கிய நாடுகள் ஒட்டுமொத்தப் பொருளியலழிவுக்குச் செல்வதையே உலகவரலாறு காட்டுகிறது.

போர் நின்றால்கூட பஞ்சமும் பொருளியலழிவும் வரக்கூடும். பல காரணங்களில் முக்கியமானது போரின்போது உருவாக்கிய ராணுவத்தை எளிதில் கலைக்கமுடியாதென்பதும், அந்தச் செலவை அன்றாடப் பொருளியல் தாங்காது என்பதும்தான். போர்க்காலத்தில் ஆயுதங்கள் வாங்கச் செலவிட்ட பணத்தின் வட்டி ஏறி பெரும் கடன்சுமை பொருளியல்மேல் ஏறி அமர்ந்திருக்கும் என்பது அடுத்த காரணம்,

இலங்கை 2009ல் போருக்குப்பின் மேலெழும் அறிகுறிகளைக் காட்டியது. காரணம் அதற்கு வந்த நிதியுதவிகள். சீனாவின் நிதி இலங்கையை கடன்சுமையில் சிக்கவைத்து கைப்பற்றும் நோக்கம் கொண்டது. இந்தியாவிற்கு எதிரான சீனநடவடிக்கையின் ஒரு பகுதி அது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கும் மேல் இலங்கைப் பொருளியலைச் சுழலச் செய்தது.

இலங்கையின் இதழியல் நண்பர் ஒருவர், அங்குள்ள பொருளியலை தொடர்ந்து ஆராய்பவர் சொன்னவை இக்கருத்துக்கள். சீன நிதியை தன்னிச்சையாகச் செலவிட இலங்கைக்கு உரிமை இல்லைதான். ஆனால் அதைக்கொண்டு சமாளித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சிலவற்றைச் செய்திருக்கலாம். ராணுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைத்து அச்செலவுகளைக் குறைத்திருக்கலாம். அந்நிதியின் ஒரு பகுதியை உள்நாட்டுச் சிறுதொழிலுற்பத்திக்கு கொண்டுசென்றிருக்கலாம். குறிப்பாக ஆடைத்தொழிலில் வங்கதேசம் அளித்த சலுகைகளை தானும் அளித்திருந்தால் கணிசமான அளவு தொழில்களை உள்ளே இழுத்திருக்கலாம். அத்தொழில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடியது. வங்கதேசத்தை அது மீட்டது.

ஆனால் அதை எதையும் செய்யவில்லை. மாறாக உள்கட்டுமானப் பணிகளுக்கு அந்நிதி முழுமையாகச் செலவிடப்பட்டது. ஏனென்றால் அதில்தான் குத்தகை, மறுகுத்தகை என ‘மார்ஜின்’ அதிகம். கைவைத்தவர்கள் எல்லாம் அள்ள நிதி அப்படியே காணாமலாயிற்று. உள்கட்டுமானம் மேம்பட்டால் சுற்றுலா ஓங்கி அன்னியச்செலவாணி வந்து பொருளியல் மேம்படும் என சொல்லப்பட்டது. கொரோனா வந்து சுற்றுலாத்தொழில் வீழ்ச்சி அடைந்ததும் பொருளியல் வீழ்ச்சி அடைந்தது. அன்னியச்செலவாணி இல்லாமலானதும் எரிபொருள் இல்லாமலாகியது. எரிபொருள் இல்லாமலாக போக்குவரத்து, சிறுதொழில்கள் போன்ற பரவலான வேலைவாய்ப்புகள் அழிந்தன. இதுதான் நெருக்கடி.

அது உண்மை என்றே தோன்றுகிறது. சுற்றுலா மீண்டும் மேம்பட்டால் இலங்கை மேலெழக்கூடும். மற்றநாடுகள், குறிப்பாக இந்தியா, இலங்கையை திவாலாக விட்டுவிடாது. இந்திய முதலீடுகள் அங்கே மிக அதிகம். திவாலான நாடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். ஆகவே இந்தியா இலங்கைக்கு தாங்காக இருக்கும் என்று நினைக்கிறேன்

ஜெ

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

நெல்லை புத்தகக் கண்காட்சியில் வாங்கரிதம் புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் Rhytham Book Distributors

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2022 11:30

March 26, 2022

மு.க, தி.மு.க – இ.பா

மு.க -கூச்சல்களுக்கு அப்பால்

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் வலைத்தளத்தில் வெளியான “அந்த இருபதாயிரம் நூல்கள்” பதிவு தொடர்பாக மனுஷ்யபுத்திரன் நேற்று எழுதிய முகநூல் குறிப்பைப் படித்தீர்களா?

கட்டுரையில் கலைஞர் பற்றி  நீங்கள் குறிப்பிட்ட (அதுவும் சாதகமாகக் குறிப்பிட்ட) பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, திமுக ஆதரவாளர்கள் இவரைக் கொஞ்சம் ‘கவனிக்க’ வேண்டும் என்ற தொனியில் உசுப்பேற்றி எழுதியிருக்கிறார்:  “கலைஞர் ஒரு எழுத்தாளனே அல்ல என்று சொல்லி ஜெயமோகன் புழுதியைக்கிளப்பிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கலைஞர் தன்னை ஒரு எழுத்தாளர் என்று ஜெயமோகனிடம் நிரூபிக்க அவர் சாகவேண்டியிருக்கிறது. உடன் பிறப்புகள் கண்ணில் இந்தப் பாராட்டுரை பட்டுவிடக்கூடாது என மிகவும் கவலையாக உள்ளது. ”

கட்டுரையின் போக்கில் சொன்ன ஒன்றை இப்படி வன்மமாக எழுதுகிறாரே மனுஷ்யபுத்திரன் – இலக்கியம் தொடர்பாக எப்போதும் மாறாத கறாரான பார்வையைக் கொண்டவர்தானா இவர் என்று யோசித்துப் பார்த்தேன்.

‘போலியான குரல் பாவனைகளாலும் நடிப்புத் திறனாலும் பாரதி போல மகாகவியாகி விடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் வைரமுத்து’ என்று ‘எப்போதும் வாழும் கோடை’ நூலில் கடிந்தெழுதிய அதே மனுஷ்யபுத்திரன், பின்னதாக முக நூலில் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதும் ‘மிஸ் யூ’வை வைரமுத்து பாராட்டினார் என்று புளகித்து ஃபோட்டோ பகிர்ந்ததும் நினைவுக்கு வந்து புன்னகையை வரவழைத்துப் போனது.

அதே கட்டுரையில் ‘கரம், சிரம் புறம் நீட்டாதீர்’ என்று பொதுப்போக்குவரத்து வண்டிகளில் பொறிக்கப்படும் அடுக்குமொழி வசனங்களை – கலைஞர் முதலான திராவிட மரபின் தமிழ் எழுத்தாளர்கள் கொண்டாடிப் பேணிய அடுக்குமொழி நடையைக் – கேலி செய்து எழுதிய அதே மனுஷ்யபுத்திரன் தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளராகியிருக்கிறார்.

இந்தக் கால மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனது பிரச்சனை அதுவல்ல. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் கரிசனையோடு கவனிக்கிறார்; ஜனநாயகப் பண்புக்கு முக்கியத்துவம் தருகிறார் என்ற விதமான பிம்பம் ஒருபுறம் கட்டி எழுப்பப்படுகிறது.

மறுபுறம் மனுஷ்யபுத்திரன், கிசுகிசு எழுத்தாளர் யுவகிருஷ்ணா போன்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் சிறியதொரு விமர்சனத்தையும் தாங்க மாட்டாமல், “உடன்பிறப்புகளே, இவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று வெளிப்படையாகவே ஆதரவாளர்களை முகநூலில் தூண்டி விடுகிறார்கள். தலைமை கண்டும் காணாதது போல் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

அன்புடன்

வே.அன்பரசு

இனிய ஜெயம்

சமீபத்தில் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தமிழக அரசு அறிவித்திருந்த பட்ஜட் வகைமை குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார். பதிலுக்கு தமிழக முதல்வரும் தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்கு வந்த எதிர்வினைகளில் இரண்டு மும்கியமானது. ஒன்று தி மு க. கொ ப . எழுத்தாளர் மனுஷ்யபுத்ரனுடையது. அடுத்து தமிழக பி ஜெ பி கொ ப எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களுடையது.

இரண்டிலும் உள்ள ஒற்றுமை, தங்களது கட்சிக்காரர்களுக்கு தந்த எச்சரிக்கையான இ.பா வை நம்பாதீர்கள் என்பது. மனுஷ் கவிஞர் இல்லையா அதனால் அப்பதிவு குருதியும் தண்ணீரும் வேறு வேறு எனும் பன்ச் குத்துடன் முடிகிறது.  மனுஷ் தரப்பை எடுத்துக்கொண்டால், அவரால் வாழ்வில் என்றுமே புரிந்துக்கொள்ள முடியாத ஒன்று இது. இ.பா அரசைப் பாராட்டவில்லை. அவர் வழங்கியது ஒரு ஆசி. சரஸ்வதியின் பார்வை தமிழக முதல்வர் மேல் விழுந்திருக்கிறது. அதை தமிழக முதல்வரும் அவ்வாறே உணர்திருக்கிறார். அவரது நன்றி நவிலல் அந்த மாண்புக்கு சான்று. இத்தகு விஷயங்கள் புரியாவிட்டால் மனுஷ் அமைதியாக இருந்து விடுவதே சிறப்பு. எதற்காக பதற்றம்? நிச்சயம் தமிழக முதல்வர் இதன் பொருட்டெல்லாம் மனுஷ்க்கு தர முடிவு செய்திருக்கும் பதவியை இ.பா வுக்கு தந்து விடப் போவதில்லை. இவை போக குருதியில் உள்ள தண்ணீரை பிரித்து இரண்டையும் வேறு வேறு என்றாக்கிவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது என்பது மற்றொரு யதார்த்தம்.

அநீ தரப்பை எடுத்துக்கொண்டால் இந்தப் பின்புலத்தில் கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே பிரகடனம் செய்தது போல, வெ சா வுக்குப் பிறகு நேர்மை செத்துவிட்டது என்று பிரகடனம் செய்திருக்கிறார். ஒரு ரசிகன் கலையிலக்கிய விமர்சகராக எவரையும் ஏற்றுக் கொள்ள அவருடைய தனிப்பட்ட நேர்மை ஒரு அளவுகோல் எல்லாம் இல்லை. கலையிலக்கியம் குறித்த அவரது கூர் நோக்கு மட்டுமே அங்கே செல்லுபடி ஆகும். அந்த வகையில் வெ சா வுக்கு கலை இலக்கியத்தில் உள்ள இடம் ஐயத்துக்கு உரியது. காலமெல்லாம் அசோகமித்திரன் படைப்புகளை விமர்சித்துக்கொண்டே இருந்தார். ஏன் என்று யாருக்கும் தெரியாது. அவரது இறுதிக் காலத்தில் இலக்கியத்துக்கு தொடர்பே இல்லாத கமலதேவியோ யாரோ அவர்களை எல்லாம் மிகையாகப் பாராட்டிக் கொண்டிருந்தார்.அதுவும் ஏன் என்று யாருக்கும் தெரியாது.

விமர்சனக் கலையில் க நா சு உருவாக்கிய தாக்கம் இன்றும் தொடர்வது. அவர் பேசிப் பேசி முன்னெடுத்த பரிந்துரைத்த இந்திய- உலக படைப்புகள்தான் இன்றும் இலக்கியத்தில் நிலை ஆற்றல். ராஜ மார்த்தாண்டன் அவர்களை எடுத்துக்கொண்டால் அவர் தொகுத்த கொங்கு தேர் வாழ்க்கை தொகையை சொல்லலாம். இப்படி பலர் உருவாக்கிய பாதையில் வெ.சா அப்படி என்ன செய்து விட்டார்? அவரது ‘வாழ்நாள்’ பணி கலை இலக்கியத்தில் நிகழ்த்திய தாக்கம் என்ன?

அநீக்கு புரிந்த ஓட்டைக் காலணா காழ்ப்பரசியலின்படி இப்போது தி மு க வை பாராட்டி விட்டதால் இ பா நேர்மையற்றவர். நாளை பிஜேபியை இ பா பாராட்ட நேர்ந்தால் அப்போது அவர் அநீகு பச்சோந்தி, சந்தர்ப்பவாதியாகி இருப்பார்.

இரண்டு தரப்பாருமே அறிந்து கொள்ளாத உண்மை ஒன்று உண்டு. கட்சிக்குள் இருப்பவர் எழுத்தாளரே என்றாலும் முதலில் அவர் கட்சிக்காரர் மட்டுமே. அவரது குரலின் எல்லை மிக மிக குறுகியது. கட்சிக்கும் உள்ளும் புறமும் தாண்டி சமூக ஆழுள்ளம் தொட்டு அதிகார பீடம் வரை கருத்தியல் தாக்கம் செலுத்தும் திராணி ‘அராஜக’ எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்களுடையது மட்டுமே ‘வெல்லும் சொல்’. இது நேற்றல்ல இன்றல்ல நாளையல்ல, ‘என்றும்’ இது இவ்வாறே இருக்கும்.

கடலூர் சீனு

இளவேனில்

அன்புள்ள அன்பரசு, சீனு,

இன்று விசித்திரமான ஒரு சூழல் அமைந்துள்ளது. சமூகவலைத் தளங்களில் சுழன்றவர்கள் சிலர் அரசின் பகுதிகளாக உள்ளனர். சமூகவலைத்தளங்களில் சத்தம் போட்டே சிலர் அறிஞர்கள் என்றாகி அதிகாரத்தை நெருங்கியும் விட்டனர். ஆகவே அத்தனை சமூகவலையர்களுக்கும் நப்பாசைகள் பெருகிவிட்டன. எங்கோ எவரோ தங்களைக் கவனிக்கிறார்கள், ஏதோ பெரும்பரிசு எக்கணமும் தங்களை தேடிவரப்போகிறது என்னும் மீளாப் பதற்றத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். அது வரும் வழியில் நின்றுவிடுமா, வேறுபக்கம் திரும்பிவிடுமா என தூக்கமிழக்கிறார்கள். உண்மையில் ஏதாவது இவர்களுக்கு கிடைக்காமலும் இருக்காது. ஏனென்றால் நானறிந்தவரை இந்த அரசு ஆதரவாளர் அத்தனை பேருக்கும் ஏதாவது கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் வேடிக்கைகள் பல. சென்ற சில ஆண்டுகளில் சமூகவலைத்தளத்தில் திமுகவுக்கு ஆதரவாக ஒரு சில கட்டுரைகள் எழுதிய ஒரு சாதாரணமான எழுத்தாளர் திமுக அரசு அவருக்கு மிக முக்கியமான பதவி ஒன்றை அளிக்கக் காத்திருப்பதாகச் சொன்னதை என் நண்பர் சொன்னார். என்னிடம் ஓர் இளம் எழுத்தாளர் அப்படிச் சொன்னார். ‘நல்வாழ்த்துக்கள்’ என்று சொன்னேன், வேறென்ன சொல்ல? இந்த மிகையெதிர்பார்ப்புகளை திமுக என்றல்ல, எந்த அரசும் நிறைவேற்ற முடியாது.

இந்திரா பார்த்தசாரதியின் பாராட்டு பற்றிச் சொன்னீர்கள். இரண்டுவகையினர் இன்று திமுகவை பாராட்டுகிறார்கள். முதல் வகையினருக்கு மனுஷ்யபுத்திரன் உதாரணம்,

மனுஷ்யபுத்திரனின் உருவாக்கத்தில், புகழில் திராவிட இயக்கத்துக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. அவர் சுஜாதாவால் கண்டெடுக்கப்பட்டவர், சுந்தர ராமசாமியால் உருவாக்கப்பட்டவர். சுஜாதாவின் உதவியால் ஊடகவியலாளர் ஆனவர். திராவிட இயக்கம் முன்வைத்த அழகியலை, அரசியலை விமர்சனம் செய்து கவனம் பெற்றவர். திராவிட இயக்கத்திற்கு நேர் எதிரான அழகியலுடன் எழுதி கவிஞர் என அடையாளம் அடைந்தவர். இவ்வண்ணம் சேகரித்த ஒரு தகுதியை உரிய விலைகூவி திமுகவுக்கு விற்பவர்.

அப்படி விற்றவர்கள் பலர் முன்பும் உண்டு. அவர்கள் அன்றெல்லாம் இடதுசாரிக் கட்சிகளில் இருந்து திமுகவுக்குச் செல்வார்கள். இளவேனில், க.சுப்பு போல பல உதாரணங்கள். இடதுசாரிக்கட்சிகளில் அவர்களுக்கு ஓர் அடிப்படை சித்தாந்தப் பயிற்சி, தர்க்கப்பயிற்சி, எழுத்தாளர் கவிஞர் என்றெல்லாம் பரவலான அடையாளம் ஆகியவை கிடைக்கும். அதை திரட்டிக்கொண்டு திமுகவுக்குச் சென்றால் திமுகவில் நேரடியாகவே மேலே சென்று அமரமுடியும்.

உண்மையில் அது மு.கருணாநிதி அவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் இருந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொள்வதுதான். இவர்கள் ஒரே ஆண்டில் முகவின் அருகே சென்று அமர்வார்கள். திமுகவில் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் படிப்படியாக அந்த இடத்துக்கு வருவது மிகமிகக் கடினம். வட்டச்செயலாளரின் அடிப்பொடியாக இருந்து பம்மிப்பம்மி மேலெழவேண்டும். அதற்கு பற்பல ஆண்டுகளாகும். பல தடைகள் உண்டு.இந்தக்குறுக்குவழி ஏணி மிக உதவிகரமானது. அறிவுஜீவி பிம்பம் இருப்பதால் பொறாமையும் பொதுவாக உருவாகாது.இவர்கள் தனித்தகுதி கொண்டவர்கள், பெரியவரின் நேரடிப்பழக்கம் கொண்டவர்கள் என்று மற்றவர்கள் எண்ணுவார்கள். இது ஒரு ஹெலிகாப்டர் மலையேற்றம்.

ஆனால் ஓர் இடர் உண்டு. இவர்கள் முன்பு இருந்த இடம் மேலிடத்துக்கு நன்றாகவே தெரியும். இடதுசாரிக் களமோ, நவீன இலக்கியக் களமோ கூரிய விமர்சனம் கொண்டது. இவர்கள் அந்த விமர்சனத்தை உள்ளூர மறைத்துவிட்டு சுயநலத்துக்காக நடிக்கிறார்கள் என்றும் தெரியும். அத்தனை ஆண்டுகள் சொல்லிவந்ததை, அத்தனை ஆழமாக வேரூன்றி வளர்ந்த களத்தை அரைக்கணத்தில் தூக்கிவிசிவிட முடியாதென்றும் தெரியும். ஆகவே இவர்கள் மேல் மேலிடத்துக்கு ஐயம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே இவர்கள் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். கேள்விக்கு அப்பாற்பட்ட விசுவாசத்தை நிரூபிக்கவேண்டும். துரைமுருகனுக்கு இருக்கும் விமர்சன உரிமை க.சுப்புவுக்கு அளிக்க்கப்படாது.

இடதுதரப்பு அல்லது நவீன இலக்கியத்தரப்பில் தேற்றிய அடையாளத்தை கொண்டு வந்து திமுகவில் விற்பவர் மேலிடத்தின் முன் தன் நெஞ்சை திறந்து வைத்து அக்கால சினிமாவின் பத்தினிக் கதாபாத்திரங்கள் போல ’’என்னை நம்புங்கள் அத்தான் நம்புங்கள்!” என கதறிக்கொண்டே இருக்கவேண்டும். தன் முந்தைய களத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும். அங்கிருந்தபோது சொன்ன ஒவ்வொரு சொல்லையும் திரும்ப அள்ளி விழுங்கவேண்டும். கற்பித்த ஆசிரியர்களை, ஏற்றிவிட்டவர்களை நெஞ்சிலேயே எட்டி உதைக்கவேண்டும். அணுக்கமாக இருந்த நண்பர்களை வசைபாடவேண்டும். ஒரு துளி மிச்சம்வைக்கக்கூடாது. அதை திரும்பத் திரும்பச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

மு.கவிடம் இருந்த சிக்கல் என்னவென்றால் அவர் இரண்டு மனிதர். அரசியல் ரீதியாக இவர்களை அவர் பயன்படுத்திக் கொள்வார் , அவருக்குள் இருக்கும் எழுத்தாளர் இவர்களை அருவருப்பார். அதிகாரத்தின் துளிக்காக தன்னிடம் வந்து தன் கடந்தகாலத்தை, தன் ஆசிரியர்களை நிந்திப்பவனின் தரம் என்ன என அவர் உணர்ந்தே இருப்பார். ஆகவே அவர்களை அவர் முழுக்க ஏற்பதே இல்லை. ஐயத்துடன் இருப்பார், அளவோடு வைத்திருப்பார். இளவேனில், க.சுப்பு என அங்கே சென்ற அத்தனைபேரின் பட்டியலையும் பாருங்கள். அவர்கள் என்ன ஆனார்கள்? (இன்றைய கட்சியில் மு.க.இல்லை என்பது இவர்களுக்குச் சாதகமான விஷயம்)

ஒரு நிகழ்வு. இளவேனில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து திமுகவுக்குச் சென்றபின் முற்போக்கு எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக மிகமிகக் கீழ்மைப்படுத்தி பேசினார். முக இருந்த ஒரு மேடையில் அவ்வாறு பேசியபோது மு.க. கசப்பான சிரிப்புடன் சு.சமுத்திரத்திடம்  ‘நல்லா பேசுறார்’ என்றார். சு.சமுத்திரம் ‘இப்டி பேசக்கூடாது, நான் இதுக்குப் பதில் சொல்லப்போறேன்’ என்றார். ’சொல்லு, நான் பேசினாலே நீ பதில் சொல்லுவே. உனக்கு எந்த லாபக்கணக்கும் இல்லை’ என்றாராம்.இதை என்னிடம் சொன்ன சு.சமுத்திரம் ‘அவருக்கு எல்லாம் தெரியும். அதனாலே நான் ஒண்ணுமே கேட்டதில்லை. ஒண்ணுமே ஏற்றுக்கிட்டதில்லை’ என்றார்.

சு.சமுத்திரம்

மத்திய செய்தி ஒலிபரப்புத்துறையில் பணியாற்றிய சமுத்திரம் ஒரு குளறுபடியால் தூக்கியடிக்கப்பட்டார். வேலைமாறுதல் நடந்து எட்டு மாதம் கழித்து மு.க வை சு.சமுத்திரம் சந்தித்தார்.மாறுதலை அப்போதுதான் மு.க அறிந்தார். அதுவும் அவரே ’என்ன இப்பல்லாம் டிவியிலே பேர காணும்?’ என கேட்டபின் இவர் சொன்னபோது. ‘என்னய்யா சொல்ல மாட்டியா?” என்று மு.க சீறியபோது ‘சொல்லமாட்டேன் தலைவரே.எங்கபோனாலும் சம்பளம் குறையாதுல்ல, அப்றமென்ன?’ என்றார் சு.சமுத்திரம்.

சமுத்திரத்திற்கு மு.கவின் உள்ளத்தில் இருந்த இடம் குறையவே இல்லை. அத்தனை நெருக்கமாக இருந்தும் அவர் மு.கவுக்கு போற்றிப் பாட்டு பாடவில்லை. தொழுதுண்டு பின் செல்லவுமில்லை. ஆகவே அவர் எழுத்தாளனின் கம்பீரத்துடன் இருந்தார். மாறாக, தன் எதிர்பார்ப்புகள் பொய்த்தபோது இளவேனில் அதே வாயால் மு.க வை பின்னர் வசைபாடினார். ‘என்னை நன்றாய் கலைஞர் படைத்தார், தன்னை நன்றாய் தமிழ்செய்யுமாறே’ என மேஜைமேல் எழுதி வைத்திருந்த தமிழ்க்குடிமகன் சிறு ஏமாற்றம் வந்தபோது கட்சிமாறி மு.க வை வசைபாடினார். அரசியலதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதெல்லாமே தெரியும்.

சு.சமுத்திரம் கட்சிக்காரர் அல்ல, எழுத்தாளர். அப்படியே நிலைகொண்டமையால்தான் மு.க அவரை மதித்தார். அதுதான் நான் சொல்லவரும் அடுத்தநிலை. சு.சமுத்திரத்தை மனுஷ்யபுத்திரன் போன்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. எழுத்தாளர்கள் சொல்லும் எல்லா கருத்தும் தான் சொல்வதுபோல வணிகக்கணக்கு கொண்டது என்றும், தான் முண்டியடிப்பவற்றுக்காக தன்னுடன் போட்டிக்கு வருவது என்றும்தான் அவருக்கு தோன்றும்.

இந்திரா பார்த்தசாரதி எழுத்தாளர் என்னும் நிலையில் தன் கருத்தைச் சொல்கிறார். இன்று அவர் மிகமிக முதியவர், நூறாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார். உடல்நிலையும் மோசமாக இருக்கிறது. எவரிடமும் எதையும் எதிர்பார்க்கும் நிலையில் அவர் இல்லை. சொல்லப்போனால் எல்லாமே அவருக்கு அர்த்தமற்ற வேடிக்கையாகத் தோன்றுகிறது என்பதை அவருடன் பேசும்போதெல்லாம் உணர்கிறேன். கடந்த காலங்களில் அவருடைய எழுத்துக்களை கவனித்தவர்கள் அவர் எப்போதும் சுதந்திரமாக கருத்து சொல்பவராகவே இருந்தார் என்பதைக் காணலாம். அவர் எதற்கும் விசுவாசி அல்ல. தன்னிச்சையாக தனக்குத் தோன்றுவதைச் சொல்பவர்.

இந்திரா பார்த்தசாரதி இன்றைய இந்தியாவில் உருவெடுக்கும் இந்துத்துவ மதவெறி பற்றிய மெய்யான பதற்றம் கொண்டிருக்கிறார். ஓர் பேரழிவு நோக்கிச் செல்கிறோமா என அஞ்சுகிறார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மாணவராக கலந்துகொண்டவர். ஆகஸ்ட் 15ல் தேசியக்கொடி ஏறுவதை பெரும்பரவசத்துடன் கண்டவர். அவருடைய அந்தப்பதற்றத்தை எந்த நுண்ணுணர்வாளனும் புரிந்துகொள்ள முடியும்.

எந்த அரசுக்கும், எந்த அரசியல்வாதிக்கும் இந்திரா பார்த்தசாரதியின் கருத்தே முக்கியமானது. ஏனென்றால் அவருக்கு எந்த நோக்கமும் இல்லை, எந்தக் கணக்கும் இல்லை. அவரைப்போன்றவர்கள் வழியாகவே மெய்யான சமூக எதிர்வினை என்ன என்று அரசு அறிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக கட்சி ஆதரவாளர் அல்லாத ஒருவர், எதிர்மனநிலை கொண்ட ஒருவர், நேர்மையாக ஒரு திட்டத்தை பாராட்டுகிறார் எனில் என்ன பொருள்? அத்திட்டம் மறுக்கமுடியாதபடி முக்கியமானது, ஏற்புக்குரியது என்றுதான். ஓர் அமைப்புசார்ந்த மனிதரின் எண்ணத்தை விட தனிமனிதனின் எதிர்வினையே முக்கியமானது. எந்த அரசும் அந்த எதிர்வினையையே முதன்மையானதாக கருதும். எந்த கட்சிக்கும் அக்கட்சியின் மேடைப்பேச்சாளர்கள் மேடையில் பேசும் பேச்சுக்கள் முக்கியமல்ல. எந்த வணிகனும் தன் விளம்பரத்தை தானே நம்ப மாட்டான்.

இன்று பட்ஜெட்டை பாராட்டும் இந்திரா பார்த்தசாரதி நாளை அவருக்கு ஏற்பில்லாத ஒன்றை இந்த அரசு செய்தால் கண்டிப்பார். இன்று அவர் ஏதோ லாபம் கருதி வருவதாக நினைக்கும் கும்பல் உடனே அவரை துரோகி என வசைபாடும். அதற்கு மறுநாள் அவர் மீண்டும் வேறொன்றை பாராட்டும்போது பல்டியடிக்கிறார் என்று அவமதிக்கும். எழுத்தாளன் சாமானியனின், பொதுமக்களின் குரல். அவன் கட்சிக்காரன் அல்ல. அவனுக்கு மாறாத தரப்பு ஏதுமில்லை. எதையும் சுமக்கவேண்டிய பொறுப்பு இல்லை. தான் எண்ணுவதை அவன் சொல்கிறான். அந்தச் சொற்களே முக்கியமானவை.

வெள்ளநிவாரணப் பணிகள், அதற்குப் பிந்தைய பொருளியல் மீட்புப்பணிகளுக்காக நான் பிணராயி விஜயனை பாராட்டினேன். இன்றும் இந்திய அரசில் ஒரு சாதனைதான் அது. ஐயமிருப்பவர் பெருவெள்ளங்களில் கேரளம் எப்படி இருந்தது என்னும் படங்களைப் பாருங்கள், இன்று ஒரு சுற்று கேரளத்தில் பயணம் செய்து பாருங்கள். என் கருத்து நாளிதழ்களின் முதல்பக்கத்தில் வந்தது. என் பாராட்டின் பொருள் நான் இடதுசாரி என்பதல்ல. உடனே அவரைச் சென்று பார்த்து எதையும் கோரப்போவதுமில்லை. நாளை இன்னொரு விஷயத்துக்காக அதே பிணராயி விஜயன் அரசை கண்டிக்கவேண்டும் என்றால் எனக்கு அதற்கான சுதந்திரம் வேண்டும். நான் அதையே கருத்தில் கொள்வேன்.

அக்கருத்தை நான் சொன்னதனால் நான் இடதுசாரி அரசின் அடிப்பொடி என அங்கே எவரும் சொல்லவில்லை. காங்கிரஸ் நண்பர்களும் சொல்லவில்லை, இடதுசாரிகளும் கடிக்க வரவில்லை. அது ஓர் எழுத்தாளனின் ஒரு கருத்து, அதற்கு ஒரு பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உண்டு, அவ்வளவுதான். அங்கே எழுத்தாளனின் கருத்து எப்போதுமே முதன்மையானது.

திமுக அரசுக்கு அல்லது திமுக கட்சிக்கு எந்தவகையிலும் நான் ‘ஆதரவாளன்’ அல்ல. ஒருநாளும் அவர்களின் ஒரு மேடையிலும் தோன்றப் போவதுமில்லை. ஒருநாளும் அவர்களின் அரசிடமிருந்து ஒன்றையும் பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை. ஆனால் சென்ற  ஓராண்டில் சாத்தியமான சிறந்த ஆட்சியே நிகழ்கிறது என்றே கருதுகிறேன். இதைச்சொல்ல எனக்கு எந்தச் சார்பும் தடையாக இருக்கலாகாது என்பதே என் எண்ணம், அதுவே எழுத்தாளனின் சுதந்திரம்.

இதை நான் சொன்னதும் உடனே இங்குள்ள மாற்றுக்கட்சி கும்பல் விலைபோய்விட்டார் என்று என்னை இழிவு செய்யும். திமுக கும்பல் அவர்களிடம் கையேந்த வருகிறான் என்று கூவும். ஆனால் இதைச் சொல்வதென்பது தேவையானபோது விமர்சனங்களைச் சொல்வதற்கான உரிமையை ஈட்டிக்கொள்வதுதான்.

திமுக மேல் வரும் ஒவ்வொரு நல்ல கருத்துக்கும் பாய்ந்து கடித்து குதறவரும் இந்த சில்லறைக் கும்பலை திமுக தலைமை கவனிக்கிறதா? முதல்வரே நன்றி சொன்ன ஒரு மூத்த படைப்பாளியை இழிவு செய்யும் இவர்களை முதல்வர் கவனம் வரை எவரேனும் கொண்டுசெல்கிறார்களா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2022 11:35

ஒரு கூரிய வாள்-கடிதம்

அன்புள்ள ஜெ,

பின்தொடரும் நிழலின் குரல் நாவல் மறுபிரசுரம் பற்றிய செய்திகளை வாசித்தேன். அழகான தயாரிப்பு. பழைய சோவியத் நூல்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய பின்தொடரும் நிழலின்குரல் நாவல் தயாரிப்பில் ஒரு ரொமாண்டிக் தன்மை அதன் அட்டையால் உருவானது. இது கறாரான ஒரு நூலாக தோற்றமளிக்கிறது.

நான் 2003 ல் வாசித்த நாவல். அப்போதே மறந்துவிடத் துடித்த நாவல். ஏன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அரிவாள் போல நம்மை வெட்டும் ஒரு நாவல். அது நம் கண்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறது. நீ உண்மையிலேயே நீ சொல்லும் விசயங்களை நம்புகிறாயா? இல்லை என்றால் நீ யாரிடம் நடிக்கிறாய்? உனக்கு நீயே நடித்துக்கொண்டு நீ அடையும் லாபம் என்ன?

அகங்காரம், அதுதான் முக்கியமானது. நானெல்லாம் இன்னார் என்ற ஒரு நிமிர்வு. ஒருவகையான மிதப்பு. மற்றவர்களை ஏகத்தாளமாகப் பார்க்கவும் மற்றவர்களை விமர்சிக்கவும் அது நமக்கு ஒரு அதிகாரத்தை அளிக்கிறது. நான்லாம் மார்க்ஸியர் என்று பிரகடனம் செய்யாத மார்க்ஸியரே இருக்க மாட்டார்கள். அந்த அகங்காரத்தின் மேல் ஆழமாக குத்துகிறது பின்தொடரும் நிழலின் குரல். நீ உண்மையில் யார் என்று கேட்கிறது.

அந்தக்கேள்விக்கு முன்னால் எல்லா ஐடியாலஜியும் கூசிப்போகும். ஆனால் ஐடியலிசம் கூசாது. நான் இன்னார், இதன்பொருட்டு என அது சொல்லும். ஐடியாலஜி ஒரு ஏரி மாதிரி. ஐடியலிசம் ஓடும் நதி மாதிரி. அந்த வேறுபாட்டை ஓர் உரையில் சொல்கிறீர்கள். அதை நீங்கள் எழுதிக் கண்டுபிடித்த நாவல் என நினைக்கிறேன்.

குரல் வழியாக ஒரு பயணம் இருக்கிறது. அது முதலில் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. ஐடியாலஜியின் மூர்க்கமான ஆதிக்கம், அதிகாரப்போட்டியை முன்வைத்து ஐடியாலஜி இல்லாமல் ஐடியலிசம் நிற்க முடியுமா என்று கேட்கிறது. விவாதங்கள் வழியாக முன்னால் சென்றுகொண்டே இருக்கிறது. உணர்ச்சிமிக்க சம்பவங்கள், நாடகங்கள், பகடிகள் என்று நாவல் சென்று சென்று இரண்டு உச்சங்களை அடைகிறது.

சாத்தான் ஐடியாலஜியை பேசுகிறான். ஏசு ஐடியலிசத்தை பேசுகிறார். இரண்டு ஆப்ஷன்களையும் முன்வைத்துவிட்டு நாவல் நின்றுவிடுகிறது. அந்த உச்சத்துக்குப்பின் ஒரு மென்மையான வைண்டிங் அப்.

நாவலை வாசித்து கொந்தளித்து, மறக்க நினைத்து, மெல்லமெல்ல நினைவில் போட்டு மீட்டி அந்த நாவலை முழுசாக உள்வாங்க ஐந்தாண்டுகள ஆயின. வழக்கமான நாவல் அல்ல. வெறும் இலக்கியச் சோதனை முயற்சி அல்ல. ஆத்மார்த்தமான ஒரு தேடல் உள்ள நாவல். ஆகவே வாசகனையும் ஆத்மார்த்தமாக தொடுகிறது. இலக்கிய இன்பத்துக்காக வாசிக்கவேண்டிய நாவல் அல்ல. நாம் நம்மை எப்படியெல்லாம் சிந்தனையில் ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதை அறிய, நாம் நம்மை எப்படி மீட்கலாம் என்று அறிய வாசிக்கவேண்டிய நாவல்

மகேந்திரன் ஜி

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 

நெல்லை புத்தகக் கண்காட்சியில் வாங்கரிதம் புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் Rhytham Book Distributors

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2022 11:34

மலைக்காட்டுசாரம் நாறும் பூ

ஜெயமோகனின் மாநாவல்கள் கதை நிகழும் களத்தின் மொத்த வாழ்க்கையையும் அள்ள முயல்பவை. அதன் காரணமாகவே தமிழ் இலக்கியப் பரப்பு பொதுவாகத் தவிர்க்கும் சில கூறுகள் இயல்பாக அவரின் நாவல்களில் இடம் பெற்று விடுகின்றன ― அவற்றுள் ஒன்று தற்பாலீர்ப்பு.

மலைக்காட்டுசாரம் நாறும் பூ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2022 11:34

மு.க- கடிதம்

ஹாய் ஜெயமோகன்,

மு.க. பற்றிய உங்கள் கட்டுரை வாசித்தேன்.

ஒரு சிறிய உள்ளீடு. கலைஞர் மறைந்த போது அவருக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்தேன் (தமிழ் மின்னிதழில்). அதில் அரசியல் பற்றி ஏதும் பேசாமல் கலைஞரை ஓர் எழுத்தாளராக மட்டும் அணுகி அவரது பல்வேறு விதமான எழுத்துப் பங்களிப்புகளை முன்வைத்துப் பேசிய பன்முகக் கட்டுரைகளின் தொகுப்பாக அச்சிறப்பிதழ் அமைந்தது. அப்படி ஏதும் இது வரை எழுதப்படவில்லை என்ற பொருளில் நீங்கள் கட்டுரையில் குறித்திருந்ததால் இதைப் பகிர்கிறேன். (இதழ் வெளியான போது வழமை போல் உங்களுக்கு லிங்க் அனுப்பியிருந்தேன் என நினைவு.)

இந்த இணைப்பில் தரவிறக்கிப் படிக்கவேண்டும்

https://tamizmagazine.blogspot.com/2018/09/2018.html

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2022 11:34

எம்.வேதசகாய குமார் படத்திறப்பு

சற்றுத் தாமதமாகத்தான் எம்.வேதசகாயகுமார் படத்திறப்பு செய்தியை அறிந்துகொண்டேன். மாத்ருபூமி பாலக்காடு பதிப்பில் சிற்றூர் கல்லூரியில் வேதசகாயகுமார் நிகழ்வு செய்தி படங்களுடன் வந்திருந்தது. நாஞ்சில்நாடனின் உரை குறித்த செய்தியும். நிறைவாக இருந்தது.  வேதசகாயகுமார் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது. இனி அவர் அவருடைய மாணவர்கள் நினைவிலும், இலக்கிய விமர்சனங்களிலும் வாழ்வார்.

பொதுவான கல்லூரி ஆசிரியர் போன்றவரல்ல வேதசகாய குமார். தன் மாணவர்கள்மேல் பெரும் பற்று கொண்டவர். அவர்களுக்கு ஓயாமல் கற்பித்தவர். அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். அது அவர் அவருடைய ஆசிரியர் பேரா.ஜேசுதாசனுக்கு அளிக்கும் கடன்திருப்பல் என்று சொல்வார். அவருடைய மாணவர்கள் இன்று கேரளத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியிலிருக்கிறார்கள்.

(கேரளத்தில் இன்றும் அரசுக் கல்லூரிகளில் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலேயே ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. ஆகவே அவருடைய மாணவர்கள் எளிதில் பணி அடைய முடிகிறது.இங்கே என்றால் தனியார் கல்லூரிகளில் மிகக்குறைந்த கூலிக்கு அவதிப்பட்டிருப்பார்கள்)

அவருடைய மாணவர்கள் மனோகரன், உமா மகேஸ்வரி ஆகியோரின் பெயர்களை அழைப்பிதழில் கண்டேன். வேதசகாயகுமாரின் அரைநூற்றாண்டுக்கால நண்பர் நாஞ்சில்நாடன் அவருக்கு முதல் சிறப்புரை ஆற்றியது நன்று.

நான் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒன்று உண்டு. அறிஞர்கள், ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் மிகமிக விரைவில் அவர்களின் குடும்பத்தினரின் நினைவில் இருந்து அகன்றுவிடுவார்கள். குடும்பத்தினர் நினைவில் நீடிப்பவர்கள் பெரும்பாலும் தொழில்கள், வணிகங்களை நிறுவி அடுத்த தலைமுறையினருக்கு அளித்துச் செல்பவர்கள். ஆனால் அதுகூட மிஞ்சிப்போனால் இரண்டு தலைமுறைக்கு. காலத்தை கடந்துசெல்பவர்கள் அறிஞர்கள், ஆசிரியர்கள் எழுத்தாளர்கள்தான். தங்கள் மாணவர்கள் வாசகர்கள் வழியாக.

வேதசகாயகுமார் அவருடைய மாணவர்கள் நின்றிருக்க படமாக தோற்றமளிக்கும் காட்சி நெகிழ்வூட்டியது. அவர் மறையவில்லை என்னும் எண்ணத்தை உருவாக்கியது.

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை

அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்

வேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்

வேதசகாய குமார் நினைவில்…

வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி

வேதசகாயகுமார்- ஒரு நூல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2022 11:30

March 25, 2022

மு.க -கூச்சல்களுக்கு அப்பால்

சி.சரவணக் கார்த்திகேயன் முகநூலில் எழுதிய இக்குறிப்பை வாட்ஸப்பில் கண்டேன்.

இரண்டு முக்கியமான விழிப்புணர்வுகள்:

ஜெயமோகன் அன்று கலைஞரை வசை பாடவில்லை. கலைஞர் எழுதுவது இலக்கியம் அல்ல என்றுதான் சொன்னார். அதாவது கலைஞர் எழுத்தாளர், ஆனால் இலக்கியவாதி அல்ல என்றே அதற்குப் பொருள் வருகிறது.

ஜெயமோகன் இன்று கலைஞரைப் புகழ்ந்து பேசவில்லை. எழுத்தாளராக இருக்கும் ஒருவர் ஆட்சியில் இருப்பது என்ற காலம் மலையேறி விட்டது என்கிறார். அதாவது கலைஞரை எழுத்தாளர் என்று சொல்கிறார்; இலக்கிய அந்தஸ்து பெற்று விட்டதாக அல்ல.

ஆக, ஜெயமோகன் பேச்சில் எந்தப் பிறழ்வும் இல்லை. நாம்தான் சாதகம் பொறுத்து detailsக்கு முக்கியத்துவம் தர மறுக்கிறோம்.

சி.சரவணக் கார்த்திகேயன்

என் எதிர்வினை

சென்ற ஆண்டு ஒரு கோலார் வரை ஒரு பயணம் சென்றோம். அங்கே கொரோனாவால் இடங்கள் மூடப்பட்டிருந்தமையால் வேறுவழியில்லாமல் ஒரு விடுதியிலேயே இருக்கவேண்டியிருந்தது. சரி, ஓர் உரையாடலை நடத்துவோம் என்றார் ஈரோடு கிருஷ்ணன். தலைப்பு அவருடையது. ஈ.வெ.ரா அவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு. நான் ஒன்றரை மணிநேரம் ஓர் உரையாற்றினேன். மேலும் ஒன்றரை மணிநேரம் உரையாடல் நிகழ்ந்தது.

உரையில் நான் ஈ.வெ.ரா அவர்களின் சமூக சீர்திருத்தப் பங்களிப்பு, அறிவியக்கக் கொடை ஆகியவற்றை பற்றி ஒருமணிநேரம் பேசி அதன் பின் அவர்மீதான என் விமர்சனங்கள் பற்றி அரைமணிநேரம் பேசினேன். வந்திருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவுக்குப் புதியவர்கள். அவர்கள் அதிர்ச்சி அடைந்து ஈ.வெ.ரா பற்றி நான் இத்தனை மதிப்பு வைத்திருப்பது தெரியாது என்றார்கள். ஒருவர் ‘அப்டியே பிளேட்டை திருப்பிட்டீங்க’ என்றார். நல்லவேளை என் தொடர்நண்பர்கள் எவரும் அப்படி எண்ணவில்லை.

நான் என் அணுகுமுறையை விளக்கவேண்டியிருந்தது. அறிவியக்கத்திலுள்ள எதையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என் வழிமுறை அல்ல. எவரையும், எதையும். மிக அரிதாக அப்படிச் சில இருக்கலாம். உதாரணமாக கோட்ஸேக்கு ஒரு நியாயமான தரப்பு உண்டு என ஒருவர் சொன்னால் மேற்கொண்டு அவரை நேரில் பார்க்கவோ, ஒரு மரியாதைக்காக புன்னகைக்கவோ கூட விரும்ப மாட்டேன்.

மற்றபடி எந்த தரப்பிலும் என் ஏற்பு மறுப்பு இரண்டையும் முன்வைப்பேன். காந்தியிலும் ஈவெராவிலும் ஏற்பும் மறுப்பும் உண்டு. காந்தியில் ஏற்பு மிகுதி, மறுப்பு குறைவு. மறுப்புகளை விரிவாக எழுதியிருக்கிறேன். காந்தியின் மதம் சார்ந்த பார்வை, ஒழுக்கப்பார்வை, அழகியல்பார்வை போன்றவை என்னால் முழுக்க நிராகரிக்கப்படுபவை. ஈவெராவிடம் ஏற்பு உண்டு, அதைவிட மறுப்பு கூடுதல். என்னால் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான காழ்ப்பை உருவாக்குவதை, எதிர்மறையாகவே அனைத்தையும் பார்க்கும் கசப்புகொண்ட அணுகுமுறையை ஏற்க முடியாது. அதன் அடிப்படை எதுவாக இருப்பினும் அது ஒருவரை கசப்பானவராக, அழகுணர்வு ஆன்மிகம் எனும் இரு தளங்களிலும் மிகக்குன்றியவராக ஆக்கிவிடுமென எண்ணுகிறேன். இவ்வளவே வேறுபாடு.

இதே அணுகுமுறைதான் சுந்தர ராமசாமி, ஞானி ஆகியோரிடமும் எனக்கு இருந்தது. நித்யா? அது வேறுவகை உறவு. அங்கே கருத்தாடல் என்பதே இல்லை. ஆகவே விமர்சன அணுகுமுறையும் இல்லை. அங்கே அறிதலே இல்லை, அது முற்றிலும் வேறுவகை தொடர்பு.

நம் சூழலில் கருத்துச் செயல்பாடுகளுக்குப் பழகியவர்கள் மிக அரிது. பெரும்பாலானவர்கள் அறிந்தது கட்சியரசியல், சாதியரசியல், மத அரசியல் மட்டுமே. அதில் தரப்பெடுத்து முழுமையாக ஆதரிப்பது, எதிர்த்தரப்பு எனப்படுவதை முழுமையாக எதிர்ப்பது. அந்த எதிர்த்தரப்பு என்பதுகூட தன் தரப்பின் ஒட்டுமொத்தத்தால் எடுக்கப்பட்டதாக இருக்கும், தனிப்பட்டமுறையில் உருவாக்கிக்கொண்டதாக இருக்காது. இந்த வழிபாடு, வசைபாடலும் ஒருவகை கருத்துச்செயல்பாடு என அவர்களால் நம்பப்படுகிறது. அது கும்பல் மனநிலை மட்டுமே.

சென்ற பத்தாண்டுகளுக்கு முன் திமுகவினர் இடதுசாரிகளை எப்படி வசைபாடினர்,  இடதுசாரியான லீலாவதி எப்படி  கொல்லப்பட்டார் என்றெல்லாம் தெரிந்தால் இன்றைய திமுகவின் இடதுசாரி ஆதரவு ஆச்சரியமூட்டும். இடதுசாரிகள் லீலாவதியை மறந்தது மேலும் ஆச்சரியமூட்டும். ஆச்சரியப்படவேண்டியதில்லை, அதுதான் கும்பல் மனநிலை. நாளை அவர்கள் ஒருவரை ஒருவர் பல்லாலும் நகத்தாலும் கிழிக்கவும்கூடும்.

அவர்களுக்கு ஏற்பும் மறுப்புமான அறிவார்ந்த அணுகுமுறை புரிவதில்லை. ‘நீ எங்காளா, எதிரியா, சொல்லு’ என்கிறார்கள். இது அறிவியக்கத்தில் செயல்படும் எவருக்கும் பெரிய சிக்கல். இதை ஜே.ஜே.சில குறிப்புகளில் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். பொதுமக்களுக்கு உண்மையின் சிக்கல், அதை அறிவதன் வழிகள் புரிவதில்லை. ‘ஒன்றைச் சொல்லு’ என்கிறார்கள். ஒன்றை மட்டும் ஓங்கிச்சொல்பவர்களை ஏற்கிறார்கள் என்கிறார் சுந்தர ராமசாமி.

முப்பதாண்டுகளாக என் இலக்கியவிமர்சனமும் இப்படி ஏற்பு-மறுப்பு தர்க்கம் கொண்டதுதான். ஆகவே ஒருவரை நான் போற்றுகிறேனா தூற்றுகிறேனா என தெரியாமல் எளியவாசகர்கள் குழம்பி வசைபாடியதுண்டு. போற்றல் தூற்றல் என் வழி அல்ல, அறியமுயல்தலே என் வழி. பின்தொடரும் நிழலின் குரல் நாவல் வெளிவந்தபோது சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களே அந்நாவல் இடதுசாரி எதிர்ப்பு இடதுசாரி ஆதரவு இரண்டையும் சம அளவில் சொல்லி குழப்பிய படைப்பு என சொன்னார்கள்.

(பின்னாளில் எளிய அறிவுத்தளம் கொண்ட மார்க்சியச் சார்பாளர்கள் அதிலுள்ள மார்க்ஸிய ஆதரவுப் பேச்சுகளை அப்படியே விட்டுவிட்டு, ரஷ்ய மார்க்சியம் மீதான விமர்சனங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அதை மார்க்ஸிய எதிர்ப்பு நாவல் என வகுத்துக்கொண்டு நிம்மதி அடைந்து என்னை வசைபாடலாயினர். ‘நீ ஒன்றை மட்டும் சொல்லாவிட்டாலென்ன, நாங்கள் ஒன்றைத்தான் எடுத்துக்கொள்வோம்’ என்னும் நிலைபாடு. அதுதான் அவர்களால் முடியும்.)

மு.க. மறைந்தபோது நான் அஞ்சலிக் குறிப்பு எழுதவில்லை. மு.கவின் ஆதரவாளர்களும் என் நெருக்கமான நண்பர்களுமான பலர் அதைப்பற்றி கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கு மிக நெருக்கமான தமிழ்ப் பிரபலங்கள் பலர் மறைந்தபோது நான் அஞ்சலி எழுதவில்லை. ஏனென்றால் இங்கே நிகழும் அந்த ’அய்யோ அம்மா’ கூச்சல்கள் மேல் ஒவ்வாமை உண்டு எனக்கு. அந்த கூட்டு மிகையுணர்ச்சிகள் மீதான ஒவ்வாமையே என்னை எழுத்தாளனாக ஆக்குகிறது. அதில் சேராமலிருக்கும்வரைத்தான் இச்சமூகம் பற்றி என்னிடம் விமர்சனம் இருக்கும். அதுவே நவீன இலக்கியத்தின் அடிப்படை. ’எழுந்துவா தலைவா!’ எல்லாம் எனக்குச் சரிப்படாது. சம்பிரதாய அஞ்சலி என்பது எழுத்தாளன் செய்யக்கூடாதது. அது அவனை வெற்றுச்சொற்கள் சொல்பவனாக ஆக்கிவிடும்.

மு.க என் வரையில் ஓர் எழுத்தாளர். ஓர் எழுத்தாளருக்கான அஞ்சலி என்பது அவருடைய பங்களிப்பை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதே . அதுவே சுந்தர ராமசாமி, க.நா.சு, புதுமைப்பித்தன் என இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் அறிவியக்கத்தின் வழி. இது இங்கே மிகமிகச் சிறு வட்டத்தில் மட்டுமே அந்த நுண்ணுணர்வும் தர்க்கநோக்கும் உள்ளது. வெளியே பெருந்திரள் அதற்கு நேர் எதிரானது. ஆகவே அந்த அணுகுமுறை ஒவ்வொரு முறையும் சீற்றத்துடனேயே பொதுச்சூழலால் எதிர்கொள்ளப்படுகிறது. திருமதி பர்வீன் சுல்தானா பேட்டியில் கேள்வியே அதன் அடிப்படையில்தான் என்பதைக் காணலாம் ‘ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றுதான் திரும்பத் திரும்ப சாமானியன் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

இன்று சட்டென்று ஒரு புதுச்சூழல் உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான நவீன அறிவியக்கம் சந்திக்காதது அது. அவர்கள் தங்கள் தர்க்கபூர்வமான, மிகையுணர்ச்சி மறுப்பு கொண்ட அணுகுமுறையுடன் தங்கள் வாசகர்களின் வட்டத்திற்குள் மட்டும் செயல்பட்டனர். இன்று இணையம் சம்பந்தமே இல்லாத பெருந்திரள் நவீனஇலக்கியவாதிகளை ஓரிரு வரிகள் வழியாக மேலோட்டமாக அறிந்துகொள்ள வழிவகுக்கிறது. அரசியல்வாதிகள் எழுத்தாளர்களை பெயர் தெரிந்துவைக்க வாய்ப்பமைக்கிறது. அரசியல் காழ்ப்பாளர்கள் வசைபாட வாய்ப்பளிக்கிறது.

எழுத்தாளனைக் கவனிக்கும் இந்தத் மூர்க்கப்பெருந்திரளிடம் அறிவியக்கத்தின் அணுகுமுறையை நாம் கொண்டுசெல்ல முடியாது. ஏனென்றால் அந்த திரள் பற்றுகள், மிகையுணர்ச்சிகள், கும்பல் மனநிலை ஆகியவற்றால் இயக்கப்படுவது. அதிலிருந்து கடும் சீற்றம், எதிர்ப்பு ஆகியவையே எழுந்து வரும். வெறுப்புகளும் வன்முறைத் தாக்குதல்களும் வரும். எழுத்தாளன் தனிமனிதன், அவன் இந்த கூட்டத்தின் எதிர்ப்பை, அமைப்புசார்ந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாது.

கும்பல் அணுகுமுறை மூர்க்கமான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது. ’என்னைப்போல் நீயும் இரு, இல்லையேல் நீ என் எதிரி’ என அது சொல்கிறது. இல்லையேல் அழிக்க முயல்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. சிலரேனும் இதைச் சொல்லிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை நம்பி சொல்ல வேண்டியதுதான்.

இதன் இன்னொரு பக்கம் உள்ளது. அறிவியக்கத்தின் மேல் பெருந்திரளின், அமைப்புகளின் பார்வை விழுந்ததுமே இங்குள்ள சிலர் அதிலுள்ள லாபங்களை கணக்கிட்டுக்கொள்கிறார்கள். அதுவரை பேசிவந்த அனைத்தையும் அப்படியே உதறிவிட்டு , அதிகாரம் நோக்கிச் சென்று அப்படியே கரைந்துவிட முயல்கிறார்கள். அதன் நலன்களை அறுவடை செய்ய முயல்கிறார்கள். நேற்றுவரை அவர்கள் பேசிய நவீன இலக்கிய அணுகுமுறையை அப்படியே எந்த விளக்கமும் இல்லாமல் சட்டைபோல கழற்றிவீசிவிட்டு மேலே பாய்கிறார்கள். கும்பல் மனநிலையை கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கும்பலைவிட கும்பல்மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள். அதற்குரிய கொள்கைகள், கோட்பாடுகள், வரலாற்றுப்பார்வை எல்லாவற்றையும் சமைத்துக் கொள்கிறார்கள்

ஆகவே கும்பலின் பார்வையில் தங்கள் தரப்பை ஏற்ற ‘நல்ல’ அறிவுஜீவி – ஏற்காத ’கெட்ட’ அறிவுஜீவி என ஒரு இருமை உருவாகிவிடுகிறது. அந்த நல்ல அறிவுஜீவி அவனுடைய நலனுக்காக கும்பலுக்கு மற்ற அறிவியக்கத்தை திரிக்க, ஏளனம் செய்ய முன்மாதிரிகளையும் உருவாக்கி அளிக்கிறான். இந்த அறிவுஜீவிகள் செய்வது கும்பலைப்போல இயல்பான உணர்ச்சிகளால் அல்ல, திட்டமிட்டு தர்க்கபூர்வமாக தன்னலநோக்குடன். ஆகவே இவர்களின் போற்றிப்பாடல்களும் கும்பிடுகளும் உப்பைவிட உப்புக்கரிப்பவை.

ஆகவேதான் ’தெற்கிலிருந்து சூரியன்’, ’உலகத்துக்கோர் ஒளி’ என்றெல்லாம் எழும்  மிகையுணர்ச்சிகள், வழிபாட்டுப் பாடல்கள் அறிவியக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் ஒவ்வாதவையாக உள்ளன. மு.க பற்றி தமிழ் இந்து வெளியிட்ட நூலுக்கான என் ஒவ்வாமை என்பது எழுபதாண்டுகளுக்கு முன்பு ராஜாஜி பற்றி புதுமைப்பித்தன் வெளிப்படுத்தியதுதான். அதன் மரபு என்றுமிருக்கும்.

மு.க மறைந்தபோது நான் சொன்னேன். ‘இந்த டமாரக்கூச்சல்களில் எனக்கு ஆர்வமில்லை. ஓர் எழுத்தாளராக அவரை அணுகி விமர்சகனாக என் பார்வையை முன்வைத்து என்றாவது எழுதுகிறேன்’. அதன்பின் ஒரு நண்பர் கூடுகையில் அவரைப்பற்றிய என் மதிப்பீட்டின் ஒரு வரைகோட்டுச் சித்திரத்தை அளித்தேன். அதையே எழுதலாம் என்றனர். எழுதலாம். ஆனால் அது வரிக்கு வரி திரிக்கப்படும். அதையும் எண்ணியே எழுதவேண்டும்.

மு.க மீது மதிப்பில்லை என நான் என்றுமே சொன்னதில்லை. அவர் தரப்பு என்னை வசைபாடிய காலங்களிலும் சொன்னதில்லை. நான் அவரை அரசியல்ரீதியாக அவ்வளவு தீவிரமாக மதிப்பிடவில்லை. ஏனென்றால் எனக்கு அரசியல் அந்த அளவுக்கு முக்கியம் அல்ல. ஒருவரின் முழுப்பங்களிப்பையும் கருத்தில்கொண்டு மதிப்பீடுகளை உருவாக்குவதற்கு எனக்கு பொழுதுமில்லை, ஆர்வமும் இல்லை. அவ்வப்போது சில கசப்புகளும் கோபங்களும் வரும், மறைந்தும் போகும். ஏனென்றால் என்னுடையது பற்றுறுதியும் நிலைபாடும் கொண்ட அரசியல் அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் சார்ந்த சாமானியனின் அரசியலே என்னுடையது

நான் மு.கவின் அரசியலின் ஆதரவாளனாக என்றுமே இருந்ததில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. 2009ல் ஆஸ்திரேலியா சென்றபோது இலங்கை அரசியலின் உட்பக்கங்களை அறிந்தவர்களிடமிருந்து அவர் ஈழப்பேரழிவை முன்னுணர்ந்து அதை தடுக்க எடுத்த முயற்சிகளை அறிந்து மதிப்பு கொண்டேன். ஆனால் அதைச் சொன்னவர்களே அதை பொதுவில் பதிவுசெய்யாதபோது நான் சொல்வதற்கொன்றுமில்லை.

மு.க எழுத்தாளனே அல்ல என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் சொன்னவை வரிக்கு வரி பதிவாகி அப்படியே எவருக்கும் கிடைக்கும்படி உள்ளன. இருந்தும் திட்டமிட்ட திரிபுகள், ஆனால் அந்த அபத்தமும் ஆபாசமும் இங்கே அரசியல்சூழலில் என்றுமுள்ளதுதான். நான் மு.கவை நவீன இலக்கியவாதியாக ஏற்கவியலாது என்று மட்டுமே சொன்னேன். அன்று மேடையில் அவரை நவீன இலக்கியத்தின் தலைமகன் என்ற அளவில் போற்றிப்புகழ்ந்த (கலாப்ரியா, வண்ணதாசன், ஞானக்கூத்தன் போன்ற) சிலருக்கான பதிலாக அதைச் சொன்னேன். அவர்கள் சொன்னால் மட்டும் நவீன இலக்கியச் சூழல் தன் நீண்ட விமர்சன விவாதம் வழியாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த மதிப்பீடு மாறிவிடாது என்றேன்.

மனிதர்கள் மாறலாம், வழிவழியாக வாசகர்களும் விமர்சகர்களும் வந்துகொண்டிருப்பார்கள், மதிப்பீடுகள் வளர்ந்து சென்றுகொண்டுதான் இருக்கும் என்றேன். சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கிய மரபின் மதிப்பீட்டின் பிரதிநிதியாக நின்று என் கருத்தை அன்று முன்வைத்தேன். இன்றும் அதையே சொல்கிறேன். மு.க நவீன எழுத்தாளர் அல்ல, அவர் எழுத்துக்கள் நவீன இலக்கிய அளவுகோலில் இலக்கிய ஆக்கங்கள் அல்ல, அவை பிரச்சார எழுத்துக்கள் மட்டுமே. அன்று என்னை ஆதரித்த நவீன எழுத்தாளர்களே மிகுதி என்றாலும் வெளிப்படையாக என்னுடன் உறுதியாக நிலைகொண்டவர்கள் மனுஷ்யபுத்திரனும், எம்.வேதசகாயகுமாரும். அன்று மனுஷ்யபுத்திரன் மிகக்கடுமையான சொற்களால் மு.கவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.

மு.க வை பற்றி 2003ல் வைத்த விமர்சனம் என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இன்றுவரை அவர் எழுத்தைப்பற்றி பொதுவாக உள்ள மதிப்பீடுதான் அது. மேலோட்டமாக இலக்கிய உரையாடல்களை கவனிப்பவர்களுக்கே அது தெரியும். இன்றுவரை தமிழிலக்கிய விவாதங்களில் மு.க எங்கே எப்படி மேற்கோளாக்கப் பட்டிருக்கிறார்? கட்சிசார்ந்தவர்கள் அடிக்கும் மேளம் அன்றி அவரை எவர் இலக்கியவாதியாக முன்வைத்திருக்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் எந்த எழுத்தாளர் அவரை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார்? அவருடைய எந்த நூல் தொடர்வாசிப்பில் உள்ளது? கட்சிசார்புடன் கூச்சலிட்டால் அவரை நிலைநிறுத்திவிட முடியுமா என்ன? இருபதாண்டுகள் ஆகப்போகின்றன, அவருடைய இலக்கியம் பற்றி பொருட்படுத்தும்படி எந்த இலக்கிய விமர்சனமாவது எழுதப்பட்டுள்ளதா? அரசியல் பிழைப்பாத்மாக்கள் நாலுபேர் கூடி போற்றிப் பாமாலைகளை எழுதினால் மட்டும் அதற்கு மதிப்பு வந்துவிடுமா என்ன?

ஏனென்றால் அது பிரச்சார எழுத்து. எந்த பிரச்சார எழுத்தும் அதற்குரிய இலக்கு கொண்டது. அதற்குரிய பேசுதளம், அதற்குரிய காலம் கொண்டது. அதற்கு வெளியே அவ்வெழுத்து நிலைகொள்ளாது. என்றென்றுக்குமான வாழ்க்கைச்சிக்கல்களை, தத்துவக்கேள்விகளை, கவித்துவங்களை, மெய்நிலைகளைச் சுட்டும் எழுத்துக்களே இலக்கியங்கள். ஆகவே அவை காலம் கடந்து என்றும் புதியவை என நின்றுள்ளன.  புதுமைப்பித்தன் வாழ்கிறான், வ.ரா வெறுமே இலக்கியவரலாற்றில் நீடிக்கிறார். இதுவே வேறுபாடு. இது கண்முன் மலைபோல அப்பட்டமான உண்மை. இதை அறியாத எவருக்கும் இலக்கிய அடிப்படையே புரியவில்லை என்றுதான் பொருள். வார்த்தைக் கழைக்கூத்துக்களை நிகழ்த்தி இந்த உண்மையை நல்ல வாசகன் முன் மறைக்க முடியாது.

மு.க.வை நான் ஒரு நவீன இலக்கியவாதியாக எண்ணவில்லை. காந்திய இயக்கம் முதல் இடதுசாரி இயக்கம், திராவிட இயக்கம் வரை நீளும் பிரச்சார எழுத்தின் ஓர் ஆளுமையாகவே காண்கிறேன். தமிழ் சமூகஅரசியல் களத்தில் பிரச்சார எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. இதை மு.க பற்றி 2003ல் எழுந்த அந்த விவாதத்திலேயே சொல்லியிருக்கிறேன். அன்றும் அவரை வ.ராவுடன் ஒப்பிட்டே சொல்லியிருந்தேன். மு.கவும் ‘அக்ரஹாரத்து அதிசயப்பிறவி வ.ரா எழுதியது எப்படி இலக்கியமல்லாமலாகும்?’ என்றுதான் சீறியிருந்தார். (அக்காலகட்டத்தில் ‘வ.ராவை சொன்னதுதான் இவருக்கு கோபம்னு தோணுதே’ என்று சுந்தர ராமசாமி புன்னகைத்தது நினைவிலிருக்கிறது.)

பிரச்சார எழுத்து மரபில் வ.வே.சு. ஐயர், வ.ரா, கு.ராஜவேலு, நாரண துரைக்கண்ணன் என தேசிய- காந்தியவாதிகளின் ஒரு வரிசை உண்டு. தொ.மு.சி.ரகுநாதன், டி.செல்வராஜ், செ.கணேசலிங்கன், கு.சின்னப்ப பாரதி, கே.முத்தையா, கே.டானியல், மேலாண்மை பொன்னுச்சாமி என ஓர் இடதுசாரி வரிசை உண்டு. மறைமலையடிகள், பாரதிதாசன், மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார், சி.என்.அண்ணாத்துரை, மு.வரதராசனார் என இன்னொரு தமிழியக்க- திராவிட இயக்க வரிசை உண்டு. மூன்றாவது வரிசையைச் சேர்ந்தவர் மு.க. அவர் நம்பியதை பிரச்சாரம் செய்தவர். அவருடைய அரசியலை மட்டும் முன்வைத்தவர். அதன்பொருட்டு புனைவை உருவாக்கியவர். உலக அளவில் அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் அப்படித்தான்.

மு.கவின் எழுத்தின் காலகட்டங்கள் மூன்று. நாடகத்தின் அழகியல் கொண்ட கதைகளாலான முதற்காலகட்டம். உதாரணமான படைப்பு வெள்ளிக்கிழமை. விரிந்த தமிழ்த்தேசியப் பார்வை கொண்ட இரண்டாவது காலகட்டம். ரோமாபுரிப் பாண்டியன் உதாரணம். தமிழ்த்தேசியத்தின் உள்மரபுகளை கவனம் கொண்டது மூன்றாம் காலகட்டம், உதாரணம் பொன்னர் சங்கர். மூன்றாம் காலகட்டத்தின் இன்னொரு வடிவமே ராமானுஜர். ராமானுஜர் அவருடைய ‘சமரசம்’ அல்ல. தமிழ்ப்பண்பாடு என்பதன் உட்கூறுகள் எல்லாவற்றையும் இணைத்து ஒன்றாக்கிக் கொள்ளமுடியுமா என அவர் முயன்றதுதான்.

இந்தப் பகுப்புடன் அவருடைய ஒட்டுமொத்த ஆக்கங்களையும் கருத்தில்கொண்டு ‘அய்யய்யோ, அடாடா’ எல்லாம் இல்லாமல், சுயநலம் சார்ந்த நோக்கங்கள் இல்லாமல், இலக்கியப்பார்வையுடன் எழுதப்படும் இலக்கிய ஆய்வுகளே ஓர் எழுத்தாளராக மு.கவுக்கு செய்யப்படும் மெய்யான அஞ்சலி. ஆனால் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அப்படி ஒன்று எழுதப்படவில்லை. ஒரு சிறு குறிப்புகூட அவரை ஓர் எழுத்தாளராக அணுகி எழுதப்படவில்லை. அவர் எழுதியவற்றை அவரை கொண்டாடுபவர்கள் எவரேனும் படித்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகளே இல்லை. உண்மையில் வாழ்நாளெல்லாம் எழுத்தாளராக தன்னை முன்வைத்த ஒருவருக்கு இழைக்கப்படும் அநீதி, அவமதிப்பு என்பது இதுதான்.

எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. ஏனென்றால் நான் அவ்வளவையும் வாசித்திருக்கிறேன். நினைவிலும் வைத்திருக்கிறேன். தனியுரையாடல்களில் பேசிய முன்வரைவும் கையில் உள்ளது. அப்போது வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தமையால் எழுதவில்லை. இனி எழுதலாம். ஆனால் அதையும் படிக்காமல் ஒற்றைவரிகளை எடுத்துக்கொண்டு மூர்க்கமான கூச்சல்களால் சூழலை நிறைக்கும் கும்பல் ஒரு தயக்கத்தை உருவாக்குகிறது. அந்தக் கும்பல்தான் மு.கவின் தீயூழ். அவரைப் பற்றி எந்த பேச்சும் எழாமலாக்கிவிடுவார்கள். ஒப்புக்கு புகழ்மாலையுடன் அவரை அப்படியே மறக்கடிக்க வைத்துவிடுவார்கள்.

இன்று மனுஷ்யபுத்திரனின் அவதூறுக்கு கீழே வந்து கூச்சலிடும் கும்பலைப் பாருங்கள். அவர்களிடம் என்ன பேசுவது? ஒரு சிறுசாரார் அதிகார விழைவுகொண்ட மோசடிக்காரர்கள். எஞ்சியவர்கள் ஒன்றுமறியாத பிள்ளைகள். அவர்களுக்கு நான் ஆரம்பப்பாடம் தொடங்கவேண்டும். முதல்வகையினர் எனக்கு எந்தவகையிலும் பொருட்டல்ல, இரண்டாம் வகையினருக்குச் செலவழிக்க அதிக நேரமில்லை.

*

இப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தகாலத்தில் திமுகவை ஆதரித்து கோஷமிட்ட ‘டிராக் ரெக்கார்ட்’ ஐ கையில் வைத்துக்கொண்டு எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு பதற்றம் இருக்கிறது. மு.க. அல்லது திமுக பற்றி எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனே திருவிளையாடல் தருமி மாதிரி ஒரு பதற்றம், இவனும் பங்குக்கு வருகிறானா என்று. சந்தேகமே வேண்டாம் நண்பர்களே, இந்த அரசிடமிருந்தல்ல எந்த அரசிடமிருந்தும் எதையும், ஒரு குன்றிமணிகூட, பெற்றுக்கொள்ளப் போவதில்லை. நீங்களே முண்டியடிக்கலாம், சிந்தாமல் சிதறாமல் பெற்றுக்கொள்ளலாம்.

மு.க தரப்பின் நல்லெண்ணத்தைப் பெறுவது நோக்கமெனில் நான் அதை அவர் இருந்தபோதே செய்திருக்கலாம், அவரிடமே பெற்றிருக்கலாம். அதற்கு எத்தனை வாய்ப்புகள் வந்தன என அறிந்த பலர் இன்றும் உள்ளனர்.

என்னுடையது இலக்கிய அணுகுமுறைதான். நான் செயல்படும் அறிவுக்களத்தை எனக்குரிய அழகியல் சார்ந்த அளவுகோல்களுடன் தொடர்ந்து வகுத்துக்கொண்டே இருக்கிறேன். அது என் செயல்பாடுகளுக்கும் நான் உருவாக்க நினைக்கும் அறிவியக்கத் தொடர்ச்சிக்கும் இன்றியமையாதது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2022 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.