Jeyamohan's Blog, page 808
March 22, 2022
குமரித்துறைவியின் சொற்கள்
பொதுவாக நான் இந்த சடங்குகள் திருவிழாக்கள் போன்றவற்றின் மேல் பெரிய ஆர்வமுடையவன் அல்ல. ஆனால் இக்கதையில் வெளிப்படும் மானுட நாடகத்திற்கும் மனஎழுச்சிகளுக்கும் முன்னால் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு முழுதாக திளைக்க முடிந்தது. கலையின் நோக்கமே இதுதானோ? எத்தனை விழிகளை திறக்கிறது, எத்தனை திரைகளை விலக்குகிறது, எத்தனை சுவைகளை அளிக்கிறது.. ஒரு சிறு வாழ்விற்குள் பல பெரு வாழ்வுகளை திணித்து நம்மை விரிவடைய செய்து, விராட ரூபனாக்குகிறது.
குமரித்துறைவி -வாசிப்பு -கிஷோர்குமார்தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
வெண்முரசு நிறைவுக்குப்பின்…
அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று வெண்முரசு நாவலை இரண்டாம் முறையாக முழுவதும் படித்து முடித்தேன். முதலா விண் நாவலின் இறுதி அத்தியாயத்தில் வரும் பிள்ளைத் தமிழ் வரிகளை வாசித்த போது நீலம் வாசித்தபோது ஏற்பட்ட அதே உணர்வு நிலையில் இருந்தேன்.
வெண்முரசு உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று. சந்தேகமின்றி தமிழின் முதன்மையான நாவல். இந்நாவல் தமிழுக்கு அளித்த கொடைகள் பல. வரும் தலைமுறைகள் கொண்டாடப்போகும் பெரும் படைப்பு.
இந்த பெரு நாவலை முடித்த கணம் தங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? நிறைவாக இருந்ததாக சில கட்டுரைகளில் எழுதியிருந்தீர்கள். நான் கேட்பது அந்த கணத்தில் தோன்றிய உணர்வு.
இம்மாதிரி பெரும் படைப்புகளை முடிக்கும் போது படைப்பாளிகளின் மன நிலை குறித்த பதிவுகள் அதிகம் இல்லை.
திருவாசகம் சிம்பொனி வெளியீட்டு விழாவில் மேடையில் அமர்ந்திருந்த இளையராஜா பக்கத்தில் அமர்ந்து இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொன்னாராம் “என்னை விட்டா இன்னும் நூறு இடத்தில் correction பண்ணுவேன்”. இதை ரஹ்மான் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
கல்கி தனது வரலாற்று நாவல்களை முடித்ததை தனது பாணியில் பதிவு செய்து இருக்கிறார். கடற்கரையில் அமர்ந்து இருந்ததாகவும் தனது கதாபாத்திரங்கள் விடை பெற்று சென்றதாகவும் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். Hallucination ஏற்பட்டிருக்கலாம்.
பாலகுமாரன் தனது உடையார் நாவலை முடித்த விதத்தை பதிவு செய்து இருக்கிறார். ராஜ ராஜ சோழனை நினைத்து கதறி அழுததாக எழுதி இருக்கிறார். ஒரு சுமாரான நாவலுக்கு இவ்வளவு பில்ட்அப்பா என்று தோன்றியது. கம்பன், வால்மீகி, வியாசருக்கு என்ன தோன்றியிருக்கும்? டால்ஸ்டாய் போரும் அமைதியும் நாவலை பல முறை திருத்தி எழுதி பிறகே நிறைவு செய்ததாக படித்திருக்கிறேன்.
இப்போது திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அல்லது இந்த உணர்வுகள் படைப்பாளிக்கும் படைப்புக்குமான தனிப்பட்ட உணர்வா? இவற்றை வாசகன் அறியலாகாதா?
அன்புடன்
தண்டபாணி.
***
அன்புள்ள தண்டபாணி,
இத்தகைய உணர்வுகளை எளிதில் வரையறை செய்து கூறிவிட முடியாது. வெண்முரசு நிறைவை சட்டென்று அடையவில்லை. உண்மையில் போர் முடிந்ததுமே நாவல் நிறைவுற்ற உணர்வு வந்தது. அதன்பின் நீர்ச்சுடர் முடிவில் நீர்க்கடன்கள் செய்து முடிக்கப்படுகையில் இன்னொருவகையில் நாவல் முடிந்த உணர்வு. மீண்டும் களிற்றியானைநிரையில் நாவல் எழுந்தது. மீண்டும் கல்பொருசிறுநுரையில் முடிவின் உணர்வு.
மீண்டும் ஒரு நிறைவு இறுதி நாவல் முதலாவிண். அதிலேயே மூன்று முடிவுகள் உண்டு. பாண்டவர்கள் விண்புகுதல் ஒரு முடிவு. வியாசன் பாடி முடித்தலும் தென்குமரியின் சித்திரமும் இன்னொரு முடிவு. மீண்டும் ஒரு முடிவு, கண்ணன் பிள்ளைத்தமிழ்.
ஒவ்வொரு முடிவும் ஒரு குட்டிச் சாவுபோல. ஆனால் மேலைச் சிம்பனியில் கொந்தளிக்கும் இசை முடிந்து ஆழ்ந்த அமைதியில் ஒரு கித்தார் சுண்டப்படும் ஒலியுடன் மீண்டும் இசை தொடங்குவது போல அடுத்தது எழும்போது விசை கூடிவிடும்.
நாவல் முடிய முடிய ஆழ்ந்த தனிமையும் அகக்கொந்தளிப்பும் கொண்டவன் ஆனேன். ஏனென்றால் நான் கட்டி உருவாக்கி, நான் முழுமையாக வாழ்ந்த ஓர் உலகம் என்னைவிட்டு விலகிச் செல்கிறது. அதை இழக்கிறேன். ஒரு கனவிலிருந்து விழித்தெழுகிறேன்.
அப்போது நானறிந்த ஒரு பெரியவர் மகாபாரதத்தை மீண்டும் கிருஷ்ணனில் கொண்டுவந்து மங்கலமாக முடிக்கும்படிச் சொன்னார். அவ்வண்ணம் கண்ணன் பிள்ளைத்தமிழில் முடித்தேன். எல்லா கொந்தளிப்பும் அகன்றது. இழப்புணர்வு இல்லை. அதைவிட முக்கியம் சாதனையுணர்வும் அறவே இல்லை. நான் அதில் இருந்து ஒரு மலர்வை மட்டுமே பெற்றுக்கொண்டேன். ஒரு மலரை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த காட்டில் இருந்து திரும்பி வந்தேன்.
அது என்னிடம் இல்லை, மானசீகமாக எந்த சாதனையுணர்வும் இல்லை, நிறைவேற்றிய தன்னுணர்வு கூட இல்லை என்றால் இலக்கியவாதிகள் நம்ப மாட்டார்கள். ஆன்மிகத்தில் சற்றேனும் சென்றவர்களுக்கு நான் சொல்வதென்ன என்று புரியும்.
ஜெ
March 21, 2022
குமரித்துறைவியின் விழா
ஆரல்வாய்மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிழாவுக்குச் செல்லவேண்டும் என்று குமரித்துறைவி எழுதியதுமே முடிவெடுத்திருந்தேன். அங்குசெல்ல ஓரிரு நண்பர்களை மட்டும் அழைத்துச் செல்லலாம் என தோன்றியது. அதன்பின் வரவிரும்பும் நண்பர்கள் வரட்டுமே என முடிவுசெய்து இணையத்தில் அறிவித்தேன்.ஏற்கனவே வருவதாகச் சொன்ன நண்பர்கள் தவிர புதியதாக நான்குபேர் வருவதாகச் சொன்னார்கள்.
அரவிந்தன் இராஜபாளையம், ராஜேஷ் கண்ணன்,முருகேசன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அவர் மனைவி கிருபா, நிகிதா, இளம்பரிதி, திருப்பூர் அழகுவேல், திருவனந்தபுரத்திலிருந்து கே.பி.வினோத் ஆகியோருடன் நானும் ஷாகுலும் என பதினொருவர். நிகிதாவுக்கும் கிருபாவுக்கும் தோவாளையில் ஓட்டலில் அறைபோடுகிறோம் என்று சொல்லியும் மறுத்துவிட்டு எங்களுடனேயே தங்கினர்.
ஆரல்வாய்மொழியில் ஏதாவது விடுதியில் தங்கலாமென நினைத்திருந்தேன், அங்கே விடுதிகள் ஏதுமில்லை. ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கல்லூரி ஆய்வகத்தில் பணியாற்றும் செந்தில் என்னும் நண்பர் வழியாக சக்தி என்னும் நண்பரின் இல்லம் ஏற்பாடு செய்யப்பட்டது.சக்தி அருகிலேயே டீக்கடை வைத்திருக்கிறார். அது அவருடைய அம்மா தங்கியிருந்த வீடு. அம்மா மறைந்தபின் வீட்டை அப்படியே வைத்திருக்கிறார். ( வீட்டுக்குப் பெயர் தாயகம்) சனிக்கிழமை மதியசாப்பாட்டுக்குப் பின் அங்கே சென்றோம்.
பனங்கை உத்தரம் மீது செங்கல் அடுக்கி டெரெஸ் போட்டு கட்டப்பட்ட அறுபதாண்டுகள் பழைய வீடு. அங்கு வாழ்ந்த அன்னையின் தடங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்கள் வழிபட்ட சாமிகள், அவர்களின் பிள்ளைகளின் படங்கள். இரண்டு சிறிய அறைகள். பழங்கால புகைப்படங்கள் மங்கலடைந்திருந்தன, ஐம்பதாண்டுகள் பழைய சிவகாசி காலண்டர்கள் மேல் புகைமூட்டம்போல ஒன்று. அடிப்படை வண்ணங்களில் ஒன்று மறைந்துபோய்விட்டிருக்கிறது. எளிதில் மறையும் அந்த வண்ணம் எது?
சட்டென்று ஓர் அயலூருக்கு வந்து அந்த வாழ்க்கையில் கலந்துவிட்ட உணர்வை அந்த வீடு அளித்தது. நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். மாலை நான்கு மணிக்கு எழுந்து வெயில் முறுகி சிவந்து நின்ற நேரத்தில் ஆரல்வாய்மொழியைச் சுற்றிவந்தோம். ஊர் அப்போதுதான் தூங்கி எழத்தொடங்கியிருந்தது. வெயில் ஓய்ந்ததும் தெருநிறைத்து கடைபோட்டிருந்தவர்கள் பொருட்களை பரப்ப ஆரம்பித்தனர். வாணலிகளில் ஜீரா கொதிக்க இனிப்புசேவுகள் பிழியப்பட்டன.
அது ஒன்பதாம்திருவிழா நாள். பெண்கள் எழுந்து முற்றங்களில் நீர்தெளித்து கோலம்போடத் தொடங்கியிருந்தனர். ஊர் முழுக்க தெளிக்கப்படும் நீர் எழுப்பும் நனைந்தபுழுதியின் வாசம், நீராவி காதில் வந்து தொட்டது. பெண்கள் குளித்து ஈரத்தலைமுடியுடன் இருந்தனர். இன்னமும் பழைய வீடுகளில் கருங்கல் திண்ணைகள் இருக்கின்றன. அங்கே அமர்ந்து சும்மா சாலையை பார்த்துக்கொண்டிருக்கலாம்
ஆரல்வாய்மொழி வழியாக விரைவாக ரயிலில் அல்லது பேருந்தில் கடந்துசெல்வதே என் வழக்கமாக இருந்தது. நான் கடைசியாகப் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்திற்கு வந்தது 1983ல்,நாற்பதாண்டுகள் ஆகப்போகின்றன. அன்று பெரும்பாலான வீடுகள் ஓலைக்கூரை கொண்டவை. இன்று ஊர் மிகச்செறிவாக சந்துகள், தெருக்கள் என பிரிந்து சென்றுகொண்டே இருந்தது. நாகர்கோயிலின் ஒரு நெரிசலான பகுதிபோல இருந்தது.
ஆரல்வாய்மொழியை சுற்றித்தான் ஆசியாவிலேயே அதிகமான மின்னுற்பத்தி விசிறிகள் உள்ளன. அவற்றுக்கான பணியாளர்களுக்காக அங்கே வீடுகள் ஏராளமாக வாடகைக்குச் செல்கின்றன. ஆகவே ஊர் செறிவாகிவிட்டது. இந்த ஊரை வடக்கூர் என்கிறார்கள். இது புதியதாக உருவாகி வந்த இடம். நூறாண்டுகளுக்கு முன்பு ஊர் கோயிலுக்கு தெற்காக மலையடிவாரத்தில் இருந்தது. அங்கே இப்போது காற்றாடிகள் சுழன்றுகொண்டிருந்தன. ஒவ்வொன்றும் வானில் இருக்கும் ஒரு வீடு அளவு பெரியது, ஒரு குடும்பம் தங்கலாம் என்று சக்தி சொன்னார்
காரில் ஏறி ஒரு கிலோமீட்டர் அப்பால் ஓடும் பேச்சிப்பாறை கால்வாய்க்குச் சென்று குளித்து வந்தோம். தெளிந்த நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது. மிக அருகே, தொட்டுவிடலாமென்பதுபோல மலைகள். கால்வாய் அதுவரை எந்த நகரம் வழியாகவும் வரவில்லை என்பதனால் நல்ல தூய நீர். நீண்டநாட்களுக்கு பின்னர் நீந்தித் துழாவி குளித்தேன்.
திரும்பிவந்து வேட்டி சட்டை மாற்றிக்கொண்டு கோயிலுக்குச் சென்றபோது சட்டென்று ஊரே பூத்துவிட்டதுபோல தெருக்களெங்கும் நூற்றுக்கணக்கான கோலங்கள். அண்மையில் கோலப்புத்தகங்கள் வழியாக கோலம் என்னும் கலைவடிவமே பலமடங்கு விரிந்துவிட்டது. விதவிதமான வடிவங்கள். கோலத்தின் தனித்தன்மை என்பது சமச்சீர் வடிவம்தான். எந்த திசையிலும் ஒரேபோல இருப்பது. ஆனால் அதையெல்லாம் இன்றைய கோலங்கள் உதறிவிட்டன. கோலத்திலேயே செவ்வியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம் இருக்கும்போல.
பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயம் பின்பக்கம் அமைந்த வேளிமலையின் செங்குத்தான சிகரங்களுக்கு கீழே அமைந்துள்ளது. அங்கே உண்மையில் சாஸ்தாவாக இருந்தவை இரண்டு இயற்கையான சிறுபாறைகள். அவை சுயம்புவாக தோன்றிய சாஸ்தா என தொன்மம். சாஸ்தாவின் இரு துணைவியரும் அருகே உள்ளனர்.
சாஸ்தாவின் கருவறை சிறியது. பின்னர் ஒவ்வொரு தெய்வமாக வந்துசேர்ந்தனர். மீனாட்சிக்கு தனி கருவறை. பக்கவாட்டில் சுந்தரேஸ்வரரின் கருவறை. சுற்றுப்பிராகாரத்தில் பிள்ளையாருக்கும், பெருமாளுக்கும், முருகனுக்கும், காலபைரவனுக்கும்,சனீஸ்வரனுக்கும் எல்லாம் சிறு சன்னிதிகள். மதுரை மீனாட்சிக்கு மதுரை தவிர இங்குமட்டுமே ஆலயம் உள்ளது என்று சொல்லப்படுகிறது
இது ஒரு நடுத்தர ஆலயம்.இதேபோல பல கருவறைகள் கொண்ட நடுத்தர ஆலயங்கள் குமரிமாவட்டத்தில் பல ஊர்களில் உள்ளன. லக்ஷ்மி மணிவண்ணனின் தந்தைக்கான மோட்சதீபம் சடங்குக்காக தெங்கம்புதூரில் இருந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இதேபோன்ற ஆலயம் அது. அங்கே பேசிக்கொண்டிருந்தபோது இந்த ஆலயத்தின் நினைவு வந்தது.
அன்று குமரித்துறைவிக்கு அடிப்படையான தொன்மம் பற்றி ஜி.எஸ்.எஸ்.வி நவீன், அஜிதன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதுவரை எண்ணிய எல்லாமே அலையலையாக எழுந்து வந்தன. அப்போதுகூட அதை எழுதுவேன் என நினைக்கவில்லை. மறுநாள் தோன்றிய அகஎழுச்சியில் மறுநாளே குமரித்துறைவியை எழுதிவிட்டேன்.
கிட்டத்தட்ட ஒரு மாபெரும் திருமணம் போலவே நிகழ்கிறது இவ்விழா. ஒவ்வொருநாளும் ஐந்தாயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். பின்பக்கம் சமையலறையில் இட்லி வேகவைத்து கொட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஊட்டுபுரையில் முந்நூறு பேர் அமரலாம். வெளியே ஐநூறுபேர் அமரும்படி நாற்காலிகளும் மேஜையும் போட்டிருந்தார்கள்.
தெப்பக்குளம் ,சுற்றிவரும் முற்றம் என விரிவான ஆலய வளாகம். முகமண்டபத்தில் குதிரை வாகனம் அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. அங்கே சித்திரைத் திருநாள் பாலராமவர்மாவுக்கு அண்மைக்காலச் சிற்பம் ஒன்று தூணில் உள்ளது. மலர் அலங்காரத்தில் ஊர்க்காரர்களே ஊக்கத்துடன் ஈடுபட்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள். இரவுபகலாக ஓடியாடி, வெயிலில் அலைந்து கருமையும் மெலிவும் கொண்ட உடல்கள். எலிக்குஞ்சுகளின் தீவிரம். செவிதுளைக்கும் கீச்சுக்குரல்கள்.
இத்தகைய சிறிய ஊர்களில்தான் ஊரே கூடி திருவிழா கொண்டாடுவது நிகழ்கிறது. சின்னப்பயல்களும் எல்லா வயதுப் பெண்களும்தான் மொத்தமாகவே உற்சாக நிலையில் காணப்பட்டனர். இளவயது பையன்கள் அதிகபட்சம் பிளஸ்டூ படிப்பு வயது வரை. அதன்பின் பெரும்பாலானவர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அங்கே பெருமாள் பிள்ளை என்பவரி மகன் கலிஃபோர்னியாவில் இருக்கிறார். அவரிடம் ஸூமில் பேசினேன். இன்னொருவர் குவைத்தில். அவரிடமும் பேசினேன். அவர் பழைய தொழிற்சங்கக்காரர். மனைவியுடன் ஆரல்வாய்மொழியிலேயே இருக்கிறார்.
இன்னொருவர் என்னைப்பார்க்க வந்தார். திரவியம், சுந்தர ராமசாமியின் கடையில் கடைப்பையனாக வேலைபார்த்திருக்கிறார். எழுபதுகளில் இருந்த இலக்கியச்சூழலில் அறிமுகம் ஏற்பட்டபின் வேளாண்மைத்துறையில் வேலைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் தொடர்ந்து இலக்கியம் வாசிக்கிறார், எழுதுகிறார். சித்தர்களின் ஆன்மிகம், இந்திய விடுதலைப்போரில் வ.உ.சி. என்னும் இரு நூல்களை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.நாஞ்சில்நாடன் முயற்சி எடுத்து அவை வெளிவந்துள்ளன. நல்ல நூல்கள் என காலையில் படித்தபோது உணர்ந்தேன்
சாயங்காலம் கோயிலில் தீபாராதனை தொழுதுவிட்டு வந்தோம். ஆரல்வாய்மொழி தேர்வுநிலை பேருராட்சி தலைவர் முத்துக்குமார் உற்சாகமான இளைஞர். அப்பகுதி எங்கும் எல்லா வேலைகளிலும் அவர் முகம்தான். சப்பரம் தூக்குதல், தம்புரான் விளையாட்டு எல்லாவற்றிலும் அவர் ஈடுபடுவதை கண்டேன். ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டவர் (அதிமுக ஆதரவாளர் என நினைக்கிறேன். தளவாய் சுந்தரத்துடன் பல போஸ்டர்களில் தென்பட்டார்). அவர் என்னை மேடையேற்றி ஒரு பொன்னாடையை போர்த்தி என் வரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஏழுமணிக்கு அருகிலிருக்கும் ஒரு வீட்டின் மொட்டைமாடியில் ஏறி நின்றுகொண்டோம். எட்டு மணிவரை நாதஸ்வரக் கச்சேரி. கன்யாகுமரி மாவட்டத்தில் பொதுவாக அபூர்வமான நல்ல நாதஸ்வர இசை. அதன்பின் தேவாரப் பண்ணிசை.
ஒன்பது மணிக்கு தம்புரான் விளையாட்டு என்னும் அனுஷ்டான கலை. அது ஒரு பெரிய சப்பரம். மூன்று தாங்குதடிகள் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஒரு பக்கத்திற்கு ஆறுபேர் வீதம் முப்பத்தாறுபேர் சேர்ந்து தூக்கவேண்டும். அத்தனைபேர் தூக்கினால்தான் அதை மேலேற்ற முடியும். ஒரு டன் எடை இருக்கலாம்.சப்பரத்தின் மேல் ஒரு மரக்குதிரை. அது தாவுவதுபோல முன்னும் பின்னும் அசையும். அப்போது அதன்மேல் ஆரோகணித்திருக்கும் தெய்வம் அசையாது. அந்த குதிரையை அப்படியே பிடித்துச் சுழற்ற முடியும். அப்போது குதிரையுடன் மேலிருக்கும் சாமியும் சேர்ந்து பம்பரம்போல சுழலும்.
அந்தச் சப்பரத்தை தூக்கி முன்னும்பின்னும் ஓடி சுழன்று சுழன்று வரும் ஒருவகை நடனம்தான் தம்புரான் விளையாட்டு. அதில் எழுந்தருள்பவர் சாஸ்தா. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பாதுகாவலரான அவர் தீயசக்திகளை துரத்தும்பொருட்டு நிகழ்த்தும் வீரவிளையாட்டு நிகழ்ச்சி அது.
இரண்டு மணிநேரம் செண்டையின் தாளத்துடன் அது நிகழ்ந்தது.முப்பத்தாறுபேர் எந்த கட்டளையும் இல்லாமல் உடல்வழியாக வந்தடையும் அசைவுகளையே தொடர்பாகக் கொண்டு ஒரே உள்ளமாக ஆகி அதை ஆடவேண்டும். கைதளர்ந்து ஒருவர் விலகினால் உடனே இன்னொருவர் செல்லவேண்டும். சிலர் விழுந்தார்கள், உடனே தூக்கி அப்பால் அகற்ற ஆளிருந்தது. உச்சகட்ட உடலாற்றலும் உளவிசையும் வெளிப்படும் ஒரு நிகழ்கலை.
பழங்காலத்து திருவிழாக்கள் எல்லாமே போரின் இன்னொரு வடிவங்கள்தான். திருவிழாக்கலைகள் எல்லாமே போர்க்கலைகளின் அணிவெளிப்பாடுகள். இதுவே போரில் சப்பரம் என்றும் மேடை என்றும் அரங்கு என்றும் சொல்லப்படும் ஒரு போர்முறைதான். குதிரைகள் குறைவான கேரளத்தின் பழைய சண்டைமுறைகளில் ஒன்று. மூங்கிலால் ஆன ஒரு மேடையை பலர் தூக்கிச் செல்வார்கள். அதன்மேல் முழு இரும்புக் கவசம் அணிந்த ஒருவரோ இருவரோ நால்வரோ இருப்பார்கள். அவர்கள் அங்கிருந்துகொண்டு அம்பு செலுத்தியோ அல்லது நீண்ட ஈட்டிகளாலோ எதிரிகளை தாக்குவார்கள். எதிரிகளிடமிருந்து அவர்களை இரும்புக் கவசம் காப்பாற்றும். அவர்கள் உயரத்தில் இருப்பதனால் அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருக்கும்.
இரும்புக்கவசம் அணிந்த வீரன் அந்த எடையுடன் நடக்க முடியாது என்பதனால் சப்பரத்தில் ஏறிச்சென்றான். குதிரை வந்தபின் குதிரையில் கவசத்துடனும் நீண்ட வாளுடனும் செல்ல ஆரம்பித்தான்.
பத்தரை மணிக்கு தம்புரான் விளையாட்டு முடிந்ததும் பின்பக்கம் சென்று இட்லி சாப்பிட்டோம்.அறைக்கு வந்து ஆடை மாற்றிவிட்டு மீண்டும் கோயிலுக்குச் சென்றபோது தம்புரான் ஊரை ஒருசுற்று சுற்றிவந்து வெளியே ஒரு முற்றத்தில் நின்றிருந்தார். அங்கே மாபெரும் வாணவேடிக்கை. அதன்பின் ஓட்டம், ஊசலாட்டம் ஏதுமில்லாமல் மெல்ல கோயிலுக்குச் சென்றார். அவருக்கு ஆடிய களைப்பு தீர விசிறி விட்டுக்கொண்டிருந்தனர்.
இரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்தோம். மேலும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரண்டு மணிக்கு தூங்கினோம். காலையில் நான்கு மணிக்கு எழுந்து கோயிலுக்கு செல்லலாம் என்று திட்டம். ஆனால் எழுந்தபோது ஏழு மணி. ஆகவே சக்தி கடையில் டீ குடித்துவிட்டு கால்வாய்க்குச் சென்று நீராடிவந்தோம். திருக்கணங்குடியில் இருந்து ஸ்ரீனிவாசன், சுதா வந்திருந்தார்கள். டாக்டர் தங்கவேலும் உடன் வந்தார்.
காலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் காளை வாகனங்களில் ஊரைச்சுற்றிவந்தனர். கூட்டமில்லை. ஊரே தூங்கி வழிந்து கிடந்தது. பெண்கள் மட்டும் வாசலில் நின்று சாமியை கும்பிட்டனர். ஆனால் எல்லா வீடுகளிலும் புதிய கோலங்கள் இருந்தன. விடியற்காலையில் எழுந்து கோலம்போட்டபின் மறுபடி தூங்கிவிடுவார்கள் போல.
மதியம் வரை பேசிக்கொண்டிருந்தோம். அதன்பின் ஒரு குட்டித்தூக்கம். ஐந்து மணிக்கு அருகே உள்ள அகலிகை ஊற்று என்னும் இடத்திற்குச் சென்றோம். அது திருவாவடுதுறைக்கு சொந்தமான ஒரு துணைமடம். அகஸ்தியலிங்கம் என்பவர் 1956ல் அதை எடுத்து கட்டியிருக்கிறார். அருகே என் நினைவேக்கங்களை கிளர்த்தும் பழைய கட்டிடம்.
அதில் உள்ளூர்சிறுவர்களின் இசைமேளங்கள் வந்து சேர்ந்திருந்தன. முரசு, முழவு, குழல்,நாகரா, கொட்டு, கொம்புகள் எல்லாம். அருகே உள்ள தெப்பக்குளம்தான் அகலிகை ஊற்று. அதைச்சுற்றி படிக்கட்டுகளும் சுற்றுமண்டபமும். அதில் மறைந்த சித்தர் ஒருவரின் சமாதி கோயிலாக இருக்கிறது. அகத்தியர், முருகன், பிள்ளையார், காலபைரவன் என தெய்வங்களுக்குச் சிறு சன்னிதிகள்.
வடக்கூரில் இருந்து விலகி தனியாக ஓர் ஏரிக்கரையில் அமைந்திருக்கிறது இந்த இடம். இதைச்சுற்றித்தான் பழைய ஆரல்வாய்மொழி அமைந்திருந்தது. அது நகர்ந்து வடக்கூராக ஆகிவிட்டது. இப்போது இந்த இடம் பழைய ஏதோ காலத்தில் பிரமைபிடித்ததுபோல இருக்கிறது.
அங்கே காளைவாகனத்தில் இரு சப்பரங்களில் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கும் முருகனுக்கும் அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர். பூவாலேயே மொத்த சப்பரமும் அலங்காரம் செய்யப்பட்டது. அதற்கென்றே தோவாளையில் இருந்து ஒரு கோஷ்டி வந்திருந்தது. உள்ளே பூசைகள் முடித்து வந்ததும் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் இருந்து மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் ஊர்க்கோலம் கிளம்பினார்கள். அவர்கள் ஆலயம்புகும்போது பத்துநாள் திருவிழா நிறைவுறும். பன்னிரண்டு மணிக்குள் கொடி இறங்கும்.
ஒன்பது மணிக்கு சக்தி வீட்டுக்குச் சென்று அவர் அளித்த டீயை அருந்தி நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம். ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். நான் பத்து மணிக்கு வீட்டுக்கு திரும்பினேன். வீட்டில் அருண்மொழி, சைதன்யா, அஜி மூவரும் திருவனந்தபுரம் திரைவிழா சென்றிருந்தனர். எனக்கு அதைவிட இதுவே முக்கியம் என தோன்றியது.
திருவிழா என்பதைப்பற்றி தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்பவர்கள் அந்தப் பத்துநாளும் இருக்கும் நிலை என்பது ஓர் அரிய விடுதலைநிலை. அப்படி ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’ , நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம்.
உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன. இத்தகைய களியாட்டுகளை எழுபதுகளின் ‘இருத்தலியல்’ அலையால் தவறவிட்டுவிட்ட ஐரோப்பா ஒவ்வொரு ஊரிலும் இவற்றை மீண்டும் நிகழ்த்திக்கொண்டிருப்பதை, சொல்லப்போனால் அவற்றை செயற்கையாக மீண்டும் நடிக்க முயல்வதை, நேரில்கண்டு எழுதியிருக்கிறேன். அவை மீண்டும் இயல்பான களியாட்டுகளாக ஆக ஓரிரு தலைமுறை ஆகும்.
நாம் பல ஊர்களில் இவற்றை இழந்துகொண்டிருக்கிறோம்.நகர்மயமாதல் ஒரு காரணம், நகரங்களில் வாழ்பவர்களுக்கு இவையெல்லாம் கிராமியத்தனமானவை, பிற்பட்டவை என்னும் எண்ணம் உள்ளது. பழைய ஊர்க்கட்டுப்பாடுகள் அழிந்துவிட்ட இடங்களில் திருவிழா என்றாலே குடிகாரர்களின் சலம்பல் என்றாகி மக்கள் விலகிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மிதமிஞ்சிய வணிகமயமாக்கம் இன்னொரு அழிவு. இறுதியாக இந்தவகையான கொண்டாட்டங்களை அரசியலாக்குவது மிகப்பெரிய அழிவு. இவை ஒற்றுமைக்கானவை, அரசியல் பிளவுகளையும் சண்டைகளையுமே கொண்டுவரும். பல ஊர்களில் விழாக்கள் அரசியல் காரணமாக அடிதடியில் முடிந்து நின்றுவிட்டிருக்கின்றன.
இரண்டுநாட்கள் ஒரு தீவிரமான சிறு வாழ்க்கை. உச்சங்கள், கொண்டாட்டங்கள் மட்டுமே கொண்ட வாழ்க்கை. இதே மனநிலையில் மதுரை மீனாட்சி கல்யாண நிகழ்வுக்கும் செல்லவேண்டும். அங்கே அருகிலுள்ள இல்லங்களில் தங்கி அந்த மையத்தில் ஒருநாள் இருக்கவேண்டும் என திட்டம்.
ஈரோடு சந்திப்பு – பதிவுகள்
சந்திப்பிற்கான அழைப்பு வந்ததிலிருந்தே இனம்புரியாத பரவசம் அடிவயிற்றில் எழும்பியது, ஜெமோவுடன் இரண்டு நாள் இருக்கப்போகிறோம் என்பதை யாரிடம் நான் பகிர்வது எனக்குள்ள பெரும்பான்மை நண்பர் கூட்டம் இலக்கியத்தை அறியாத எளியர்களல்லவா, ஆனாலும் பகிர்வதற்கு ஜெமோவின் அறமுண்ட சில வாசகர்களின் வாட்ஸப் எண் கைவசமிருந்தது என்னதிர்ஷ்டம். முதல் நாள் சந்திப்பிற்கு முன்பு இரண்டு நண்பர்களின் திருமண விழாவில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது, விழாவும் விருந்தும் மதுவருந்திய நண்பர்களுடனான இரவும் எனக்கு துளிகூட நினைவில்லை மனமெங்கும் எப்போது ஜெமோவை சந்திப்போம் எனும் எண்ணமே நிறைந்திருந்தது.
நாள் முழுவதும் மூன்று பேருந்துகளில் பயணம் செய்து கூடலூரிலிருந்து தேனி, திண்டுக்கல் வழியாக ஈரோட்டிற்கு வந்திறங்கினேன். இரவு துவங்கி நள்ளிரவிற்குள் புகுந்த தருணம் பரோட்டாக்கடைகள் பாதிமூடிய கதவுகளுக்கு பின்னிருந்து தங்கள் இருப்பை அறிவித்துக்கொண்டிருந்தன, இரண்டு பரோட்டாவை தின்றுவிட்டு ஈரோடு பேருந்து நிலையத்தை நான்கு முறை சுற்றிச்சுற்றி கால்களை அழைத்துச்சென்றேன், கண்கள் எரிச்சலை உணரத்துவங்கியவுடன் மூடிய டீக்கடையின் மரப்பெட்டிகளின் மீது எப்போது கைவசமிருக்கும் ந்யூஸ்பேப்பரை விரித்துபடுத்துக்கொண்டேன். வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு இரவை எந்த அடிப்படை வசதியுமில்லாத ஓரிடத்தில் கழிப்பதை எண்ணி சிலிர்த்துக்கொண்டேன், நேரம் சரியாக ஒன்றரையிருக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் நீலத்தின் பாலாழி பகுதியை வாசித்துக்கொண்டே உறங்கிவிட்டேன், இடைக்கிடையே நாய்களின் குரைப்பொலி கேட்டுக்கொண்டிருந்தது ஆனாலும் உறக்கம் கண்களிலிருந்து கசிந்தபடியிருந்தது. நான்கரை மணிக்கு உறக்கம் தொடர்ச்சியான தும்மல்களால் கலைந்துவிட்டபின் கண்களை கழுவிக்கொண்டு நண்பர்கள் யாரேனும் அருகிவிட்டார்களா என்று காத்திருக்கத்துவங்கினேன். விடிகையில் பூவன்னாவின் குறுஞ்செய்தியை கண்டு அவருடன் இணைந்துகொண்டேன்,
ஆறரை மணியளவில் சீரா, ஸ்ரீராம், பூவன்னா என சந்திப்பிற்கு வந்த நண்பர்களுடன் பண்ணைவீட்டிற்கு வந்துவிட்டோம். கண்கள் உங்களைத்தேடிக்கொண்டிருந்தது, சரியாக ஆறே முக்காலளவில் கண்களில் கண்ணாடியணியாமல் நீங்கள் வெளியே புன்முறுவலுடன் எங்களை எதிர்கொண்டகணங்களை பிரமிப்புடன் நினைவிலிருந்து எழுப்பிக்கொள்கிறேன், ஏனென்றே தெரியாமல் சட்டென விஷ்ணுபுர பிங்கலனும் வயோதிகத்தால் மெலிந்த வியாசரும் நினைவிலிருந்து வெளிப்பட்டார்கள். லாப்ரடார் நாயைக்கொஞ்சியபடி நீங்கள் அதன் மூன்றுலட்சம் ந்யூரான்களைப்பற்றி பேசத்துவங்கியதிலிருந்து மறுநாள் மரபுக்கவிதைக்கும் நவீனக்கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி நீங்கள் பேசியதுவரை எதுவும் நான் இதுவரை அறிந்திராத புதுவிடயங்களே, நான் சந்திக்க வந்தது மனிதனை அல்ல யட்சனை என்று நினைத்துகொண்டேன்.
எழுத்தினால் ஆட்கொள்ளப்பட்ட ஒவ்வொரு வாசகனும் தன்னை பாதிக்கும் எழுத்தாளர்களுடன் அந்தரங்கமான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான், ஆட்கொண்ட எழுத்து வாசகனின் வாழ்வையே வடிவமைக்கிறது. வாசகர் சந்திப்பில் நீங்கள் உதிர்த்த ஒவ்வொரு சொல்லையும் ஆயிரம் முறை அகத்தினுள் ஓட்டிப்பார்த்துக்கொள்கிறேன், ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விதையாக எனக்குள் விழுந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். இரண்டு நாட்களும் ஒரு சொல்கூட வீணாக நீங்கள் வெளியிடவில்லை என்பதும் (வாழ்வில் துளிகூட கவனச்சிதறல் இல்லாத மனிதனை அன்று தான் முதன்முதலில் பார்க்கிறேன்), கூறிய ஒவ்வொரு விடயத்திற்கு பின்னும் உங்களுடைய பல வருட ஆராய்ச்சியும் உழைப்பும் இருப்பது வியப்பளிக்கிறது. ஜெவுடைய காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதும் ஜெவுக்கருகில் அமர்ந்து பாடம் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதும் எனது நல்லூழ் ஆகும்.
புதிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் /சிறுகதைகள் எழுதுவது எப்படி?, கதைக்கட்டுமானம் எவ்வாறு அமையவேண்டும்?, நவீன, பின்நவீன சிறுகதையுலகம் உருவாகிவந்தது எப்படி? மரபுக்கவிதை, புதுக்கவிதையின் தளங்கள்?, எழுத்தாளனுக்கும் அறிவுஜீவிக்கும் உள்ள வேறுபாடு? இலட்சியவாதம் அளிக்கும் ஐயங்கள்?, விவாதத்திற்கான நெறிமுறைகள், வாசகன் அவசியம் கொண்டிருக்கவேண்டிய ஒழுக்க விதிகள் என தங்களால் எடுக்கப்பட்ட இந்த இரண்டு நாள் வகுப்புகள் எனது இலக்கிய ஆர்வத்தை புதிய திசைகளுக்கு அழைத்துச்சென்றுள்ளது என்பது மறுக்கவியலாதது.
இலக்கியத்தனிமை என்பது ஒரு வாசகனுக்கு மிகுந்த மனச்சோர்வையளிக்கும், தன்னுடைய வாசிப்பை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையில்லையே என தன்னைச்சுற்றியுள்ள வெற்று மனிதர்களை பார்த்து அவன் ஏங்கிக்கொண்டிருக்கிறான். இத்தகைய இலக்கியச்சந்திப்புகளில் பங்குகொள்வதன்மூலம் அவனுக்கு தன்னையொத்த வேட்கைகொண்ட வாசகர்களின் அணுக்கம் கிடைப்பதென்பது தன்னைத்தானே கண்டு புன்னகைப்பது போல மகிழ்வூட்டும். இரண்டு நாட்கள் தங்கி உரையாடி உண்டு பகிர்ந்து சிரித்து விடைபெறும்பொழுது தொலைபேசி எண்ணை பெற்றும் பிரிவதென்பது ஒரு வகையான கனவாகவே காட்சியளிக்கிறது.
நான் கட்டுரையும் கதையும் எழுத முயன்றுகொண்டிருப்பவன்தான் ஆனால் நான் குறிப்பிடும்படியான எதையும் இயற்றாமலே போகலாம், எனக்கென்று ஓரிடம் இலக்கியத்தில் அமையாமல் போகலாம், அருண்மொழிநங்கையவர்கள் குறிப்பிட்டதைப்போல ”நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்”, இத்தகைய சந்திப்பால் என்னுடைய இலக்கிய ரசனையும் வாசிப்பும் புதிய தளத்தினுள் நுழைந்துள்ளதை உணர்கிறேன். இதுவரை வாசித்துவந்த முறைமைகளை அழித்துவிட்டு புதிய முறைமையை இந்த கூடுகை எனக்களித்துள்ளது. இத்தகைய கூடுகையை நிகழ்த்திய விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் தங்களுக்கும் நன்றி என்ற சொல் போதாதது, எனது அன்பு.
இப்படிக்கு,
சூர்யப்ரகாஷ் பிச்சுமணி
மதுரை.
OVER THE FIRE
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல். Shadow Crow (நிழல் காகம்) வெளியிட்ட spillwords இலக்கியப் பத்திரிகை , இப்பொழுது உங்களின் கதையான அனலுக்கு மேல், ஜெகதீஷ் குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய Over the Fire என வெளிவந்துள்ளது. Shadow Crow இந்தப் பத்திரிகையில் வந்தபொழுது, அடிக்கடி இந்தியத் துணைக்கண்டத்துக்குப் பயணம் செய்யும் மேற்கத்திய நாட்டவர் ஒருவர், இந்தக் கதையை ஆசிரியர் சிறு சிறு பகுதிகளாக எழுதியிருக்கலாம் என்று சொல்லிவிட்டு, நான் யார் உலகத்தின் நீளமான நாவலை எழுதியவருக்கு அறிவுரை சொல்ல என்று பின்னூட்டம் செய்திருந்தார்.
அனலுக்குமேல் கதை, இலக்கியம் அதிகம் வாசிப்பவர்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களையும், நம்பிக்கைகளையும், கார்கோ கல்ட் போன்ற விஷயங்களையும் எடுத்து வைத்து, அது உருவாக்கும் படிமங்களை வாசகனை யோசிக்க வைக்கிறது. நான் எப்பொழுதும் போல் தமிழ் வடிவத்தை ஒரு பக்கமும், ஆங்கிலத்தில் வந்ததை ஒரு பக்கமும் வைத்து வாசித்துப் பார்த்தேன். ஜெகதீஷ் , ஒவ்வொரு இடத்தையும், பெயர்களையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள்! என் ஆவல் அந்த மேற்சொன்ன மேற்கத்திய நாட்டு வாசகன் என்ன சொல்வார் என்பதுதான்.
அனலுக்கு மேல் கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
இலக்கியம் ஆய்வல்ல
https://www.vishnupurampublications.com/
அன்பு ஜெயமோகன்,
பத்து லட்சம் காலடிகள் சிறுகதை சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுவதை ஒரு நல்ல சகுனமாகவே பார்க்கிறேன். ஆனாலும், அது அதன் ‘இலக்கியத் தரத்தை’க் கொண்டு விமர்சிக்கப்படுவதில்லை. ஒரு ‘அரசியல் தரப்பை’ நிறுவுவதற்கான காரணிகளில் ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. ”பார்த்தீர்களா, ஜெ., பிராமணர்களைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்” என அக்கதையின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு உங்களைக் காலி செய்யும் நோக்கமே அவர்களின் ‘வாசிப்புக்கான’ நோக்கம்.
ஒரு இலக்கியப் பிரதியில் அரசியல் தொழிற்படுகிறதா எனக் கவனிப்பதை நான் வரவேற்கிறேன். அது நல்வாசிப்புக்கு அவசியமானது. ஆனால், அப்பிரதியே ’அரசியலுக்கானது’ என்பதான மிகைகற்பனையைக் கண்டுதான் நான் மிரள்கிறேன். ஒரு மார்க்சியரான சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், ஒரு நல்ல இலக்கியப் பிரதி. அவர் மார்க்சியர் என்பதற்காக அதை ‘மார்க்சியப்பிரதி’ எனக்குறுக்கி அவரை நிலைகுலைய வைத்துவிடலாமா? அவரின் வேள்பாரி நாவலை பலர் கொண்டாடுகின்றனர். எனக்கு அது உவப்பாய் இல்லை. ஏனென்றால், அது முழுக்க முழுக்க முன்முடிவோடான அரசியல் சரித்தன்மையில் இருந்து எழுதப்பட்டது. குறுநில மன்னர்கள் எதிர் பேரரசர்கள் என்பதான இருமையில் முழுக்க குறுநிலமன்னர்களின் மீதான சார்பு கொண்ட பிரதி. மேற்கொண்டு, அதில் வாசிக்க என்ன இருக்கிறது, அதற்காக அப்பிரதியை மட்டும் குறிப்பிட்டு சு.வெங்கடேசனை முழுக்க நிராகரித்து விடுவது அறிவார்ந்த செயலா?
இன்றைக்கு அரசியல் தளத்திற்குப் பல எழுத்தாளர்கள் வந்து விட்டதால் எழுத்தாளர்கள் என்றாலே அரசியல்சார்பு கொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதாய் பொதுப்புத்தி நம்புகிறது. அத்தரப்பே இலக்கியப் பிரதியை வாசிக்கும் ஒருவனையும் அதிகம் தொந்தரவு செய்கிறது.
இப்படி வைத்துக் கொள்ளலாம். அச்சிறுகதையில் பிராமணர்களை நீங்கள் மோசமானவராகச் சித்திரித்திருந்தால்.. அதைச் சுட்டி உங்களின் படைப்பை சமூக வலைதளங்களில் விமர்சித்திருப்பார்களா? நிச்சயம் செய்யமாட்டார்கள். நீங்கள் எத்தகையவர் என்பதைப் பற்றி ஆராய்ந்து தெளிவதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களின் நோக்கம், உங்களை வலதுசாரி என்று முத்திரை குத்தி நிலைநிறுத்துவது. இத்தனைக்கும் கட்சி அரசியல் ஆர்வம் கொண்டவரும் அல்ல நீங்கள். பிறகேன் பயப்படுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
இலக்கியத்தைச் செயற்கையாய் உருவாக்கி அளிக்கும் ‘தயாரிப்புப்பணியாய்’ நம்புபவர்களோடு உரையாடுவது சாத்தியம் அற்றது. இன்று படைப்பு என்பது பிரச்சாரம்தான். கதையில் ஒரு நல்ல பிராமணர் வந்தால் வலதுசாரி. மோசமான பிராமணர் வந்தால் இடதுசாரி. நல்ல முதலாளி வந்தால் ஆதிக்கவாதி. கெட்ட முதலாளி வந்தால் புரட்சிக்காரர். நல்ல தலித் வந்தால் சீர்திருத்தவாதி. மோசமான தலித் வந்தால் பழமைவாதி. சமூகவலைதளச் சூழலில் அகப்பட்டுக் கொண்டு இலக்கியமும் வாசிப்பும் படும் பாட்டைச் சகிக்க முடியவில்லை.
நம் வாசகர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஒரு நல்ல இலக்கியம் என்பது, வாழ்வின் சகல விதமான அறியாத இடுக்குகளின் முன்னேயும் நம்மை நிற்க வைப்பது. இடுக்குகளுக்குப் பின்னிருக்கும் சமூகச்சூழலை ஆராய்வது ஆய்வாளனின் வேலையே தவிர, இலக்கிய ஆசிரியனுடையது அன்று. தயவு செய்து, இலக்கிய ஆசிரியனை ஆய்வாளனாகப் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
பிரயாகையின் பெண்
திகட்டத்திகட்ட சூழ்ச்சிகளும், வன்மங்களும், வஞ்சினங்களும் கொண்டு ஒரு நதி இருக்குமானால், ஊற்றெடுக்குமானால் அந்நதியே வெண்முரசின் “பிரயாகை”. எளிய வைதிகர் முதல் இளையயாதவன் ஈறாக கிட்டத்தட்ட பிரயாகையில் நீந்தும் அனைவரும் நாங்கள் யாரும், யாருக்கும் சளைத்தவர்களல்லர் என சூழ்ச்சிகள் மூலம் நிறுவிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குள் உச்சம் தொடுபவன் இளையயாதவன். “நீலம்” நூல், பிரயாகைக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு விட்டதால் மற்றோர் செய்யும் மதிசூழ்கைகள் சூழ்ச்சியாகவும், இளையயாதவன் செய்கையில் அது மாயமாகவும் ஆகிறது.
விளக்கமுடியாத விருப்புகளாலும், புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை என ஊற்றெடுக்கத் தொடங்கும் “பிரயாகை”யின் “பெருநிலை” அக்கூற்றினை நூல் நெடுக பறைசாற்றிக் கொண்டே செல்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்குண்டான ருசியையும், நீதியையும் எப்படி அணுக விளைகிறார்கள் என நமக்குச் சொல்கிறது துருவசரிதை.
அர்ஜுனன் மனதில் இருக்கும் துரோணரின் பிம்பம், பாண்டவர்களிடமும், கௌவுரவர்களிடமும் துரோணர் குருதட்சணையாக துருபதனின் முடியை கேட்கும்போதும், அத்தட்சணையை பெறும் போதும் படிப்படியாக வீழ்ந்து, தேர்க்காலில் கட்டி இழுக்கப்பட்ட துருபதன், குருதி தோய்ந்த உடலுடன், விழி தாழ்த்தி துரோணரை “நான் உங்களுக்கு செய்த தவறை, நீங்கள்உங்களுள் தேக்கி அதையே எனக்கும் செய்வீர்களானால், எனக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?” என கேட்கும் கேள்வியில் மண்ணாகிறது. அனுதினமும் தனது பார்வையில் குருவும், குருவின் பார்வையில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணிச் சிரவணம் செய்யும் அர்ஜுனன் அந்நிகழ்வுக்குப்பின் துரோணரை நோக்குவதே இல்லை.
பெருஞ்செல்வத்துடன் நகரதிர அஸ்தினாபுரிக்குள் நுழையும் சகுனி குந்தியின் மதிசூழ்கையால் வீழ்த்தப்பட்டு, பின்னிரவில் யாருக்கும் தெரியாமல், பல்லக்குக்கூட இல்லாமல் குதிரை மீதேறி நகர் நீங்கி காந்தாரத்திற்கு பயணமாகிறார். நூலாசிரியரின் வலிமைகளுள் ஒன்றான கொடுந்தெய்வ விவரணைகளுள் “ஆயிரம் ஆடிகள்” பகுதியில் வரும் ஜடரையும், அவள் சகுனியுடன் செய்யும் உரையாடல்களும் ஓர் உச்சம் எனலாம். சகுனியின் உடலிலும், சிந்தையிலும் ஜடரை குடி கொள்கிறாள். அதன் பின்னர் அவன் எந்தச் சிறுவழி மூலமும் தன் இரை அடையும் கணக்கு கொண்ட ஓநாய் ஆகி அஸ்தினாபுரிக்கு மீள்கிறான்.
உத்திர பாஞ்சாலத்தினை கடக்க அனுமதி கேட்கும் போது துருபதன் உடலைக் கண்டு திகைக்கும் அஸ்வத்தாமன், துரோணரின் பாவத்திற்க்காக கண்ணர் மல்குகிறான். தேவப்பிரயாகையில் நீராடும் போது, வெம்மைகொண்ட பாகீரதியிடமிருந்து இருந்து அளகநந்தையின் ஆழத்திற்கு சென்றடைய முடியாமல், அனல் கொண்ட தன் அகத்தினைக்கண்டு தான் செய்ய வேண்டியவன என்ன என அறிந்து கொண்டு, புது மனிதனாக மீண்டு தீநடம் புரிகிறான். ராகவராமனால் கடக்க முடிந்ததை துருபதனை கடக்க முடியாமல் தோற்று, பின்னர் திரௌபதியை மகளாக வெல்கிறான்.
சூழ்ச்சிகள் ஏதுமின்றி நம்மை வருடிச்செல்லும் தென்றல் “இனியன்” அத்தியாயம் மட்டுமே. பீமனும், இடும்பியும் கடோத்கஜனும் நம்மை அவர்கள் தோளிலேற்றி பறக்கிறார்கள். இப்படியும் சூழ்ச்சி செய்யும் சிறுமை மனிதனுக்கு உள்ளதா? என சூழ்ச்சிகளால் களைப்படையும் நமக்கு பரவசம் கூட்டுகிறார்கள் எளிய மனிதர்களான இடும்பர்கள். பீமனும், பானைமண்டையனும் உருவத்தில் யானையாக இருந்தாலும், உள்ளத்துள் மடிமீதமர்ந்து கொஞ்சும் செல்லப்பிராணி போலவே உணரச்செய்கிறார்கள்.
பிரயாகையில் இருக்கும் மற்றொரு ஈர்க்கக்கூடிய அம்சம் முரண்கள். வண்ணக்கடலில் அக்னிவேசரின் குருகுலத்தினை விட்டு விலகும் போது தன நாட்டையே தரத்துணியும் யக்னசேனன், துருபதனான பின்னர் பசுவைக்கூட ஈக மறுக்கிறான். ஒரு புல் போதும் என வாழும் எளிய துரோணர், உத்திர பாஞ்சாலத்தையே எடுத்துக்கொள்கிறார். குருவின் திருவடி போதும் என்றிருக்கும் அர்ஜுனன், அவரை முற்றிலுமாக தவிர்க்கும் முடிவை எடுக்கிறான். சூதனாக இருக்கும் போது இகழப்படும் கர்ணன், சத்ரியனான பின்னரும் சபிக்கப்படுகிறான். அனைத்தையும் விழையும் சாத்ர குணம் கொண்டாட துரியன், ஒவ்வொரு முறை அரியணை அவனை விட்டு நழுவும் போதும் தந்தைக்காக மட்டுமல்லாமல், உண்மையாகவே அவர் முடிவை தன் முடிவாக ஏற்கிறான். பிரயாகை நெடுக மனித மனத்தின் குரூரங்கள் முரண்பாடுகளாலேயே சமன் செய்யப்படுகின்றன.
ஒரு மனநிகழ்வில், ஆண்களுக்கும் பேரரசுகளுக்கும் என்னெனவோ கணக்குகள் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் திருமணத்தில் விழைவது என்ன என்பதை பலகோணங்கள் கொண்டு நம்மை நோக்குகிறது “அன்னைவிழி” அத்தியாயம். எவையெல்லாம் ஒரு தனிமனிதனின் உச்சமோ அது அனைத்தையும் ஒருசேர துய்க்கத் துடிக்கிறாள் திரௌபதி. பீமன் திரௌபதியின் மகிழ்வுக்காக செய்பவை அனைத்தும் அவனே பெருங்காதலன் என சொல்கிறது.
இதனை சூழ்ச்சிகள் நிரம்பிய மனித நிரையில் துளி சிறுமையும் இல்லாதவர்கள் தார்த்தாஷ்டிரரான துரியோதனனும், திருதிராஷ்டிரரும் மட்டுமே. கர்ணனின் கண்கண்டு திரௌபதியை விட்டுக்கொடுப்பதிலும், மணத்தன்னேர்ப்பு விழாவில் தோற்கும் கர்ணனை ஆரத்தழுவும் போதிலும், பாண்டவர்கள் இறக்க வில்லை என அறியும் போது நெகிழ்வதிலும் சரி துரியன் உச்சம் தொடுகிறான். இளையயாதவன், கணிகர், சகுனி, குந்தி, விதுரர், கௌரவர்கள், பண்டவர்கள் என சூழ்ச்சிமிகு மாந்தரிடையே உணர்ச்சிகளால் எளிதில் அடித்துச்செல்லப்படும் திருதிராஷ்டிரர் வானளாவ உயர்ந்து நிற்கின்றார்.
பி.கு: நேரமிருந்தால் பதிலளிக்கவும். வெண்முரசு தொடர்பாக இது எனது நான்காம் கடிதம். முதல் ஐந்து நூல்களுள், நீலத்தின் வடிவம் மட்டுமே தொக்கி நிற்பது அல்லது ஒழுங்கற்றது (நேர்மறையான தொனியில்) எனலாம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மற்றும் பிரயாகை ஆகிய மற்ற நான்கு நூல்களும் திட்டவட்டமான வடிவு கொண்டவை. வெண்முரசு தொகைநூல்களுள் மிகச்சிறிய நூலான நீலம் மட்டும் என்னால், எனது வாசிப்பு மூலம் திரட்டித் தொகுக்க முடியவில்லை. காரணம் அதிலுள்ள கவித்தன்மையா? அதன் சுவை அத்தன்மையில்தான் உள்ளதா? நீலம் மட்டும் ஏன் ஒழுங்கற்ற வடிவம் கொண்டுள்ளது? அல்லது அந்த ஒழுங்கற்ற வடிவமும் திட்டமிடப்பட்ட ஒன்றா?
லெட்சுமிநாராயணன்
கீழநத்தம், திருநெல்வேலி.
***
திருப்பூர் கட்டண உரை- அறிவிப்பு
நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கட்டண உரைகள் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அந்த உரையில் ஒரு தீவிரத்தன்மை இருக்கிறது என நினைக்கிறார். கேட்பவர்களும் பேசுபவரும் அதை முக்கியமான நிகழ்வென முன்னரே முடிவுசெய்துவிடுகிறார்கள். அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டுவது இதுவரை எந்தக் கட்டண உரைக்கும் எவரும் பிந்தி வந்ததே இல்லை.
கொரோனா முடிந்ததுமே கட்டண உரை பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். நான் பலவகை அலைச்சல்களில் ஒத்திப்போட்டுக் கொண்டிருந்தேன். இந்த உரையை சட்டென்று முடிவுசெய்துவிட்டோம். அதிக நாட்கள் இல்லை. ஆனால் பார்ப்போம்.
இதற்கு முன் ஆற்றிய உரைகள் பண்பாடு பற்றியவை. இதுவும் அப்படியே. பண்பாடு, மதம் ஆகியவற்றின் இரண்டு நிலைகள் பற்றி பேசுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் வரலாம்.
திருப்பூர் கட்டண உரை- அறிவிப்புநண்பர்களே,
ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற 10-4-2022 ஞாயிறு மாலை 6 முதல் 8.15 வரை திருப்பூரில் ஜெயமோகன் ஒரு கட்டண உரை நிகழ்த்துகிறார். இது அவர் நிகழ்த்தும் நான்காவது கட்டண உரை.
தேநீர் இடைவேளையுடன் இரு பகுதிகளாக இந்த உரை நிகழும். ‘கல்தூணும் கனிமரமும் – பண்பாட்டையும் மதத்தையும் பெற்றுக்கொள்ளுதல்’ என்கிற தலைப்பில் வேறெங்கும் நிகழ்த்தாத உரையை ஜெயமோகன் இங்கு நிகழ்த்துகிறார். இதன் காணொளியை யு டியூபில் உடனே காண இயலாது. இது சுமார் 250 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கு. அவரைத் தவிர வேறு யாரும் மேடையில் அமர மாட்டார்கள்.
முன் பதிவில்லாமல் வரும் நபர்கள் இடமிருக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்தி உரையை கேட்கலாம்.
இக்கூட்டத்திற்கு வர விரும்புவோர் கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்
பெயர்:
தற்போதைய ஊர் :
தொலைபேசி :
மின்னஞ்சல் :
ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 20 நிமிடம் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலோ தேதி மாறினாலோ கட்டணம் திரும்ப செலுத்தப் படும்.
நாள், நேரம் : 10.4.22, ஞாயிறு, 5.30 மணி
இடம்: காயத்திரி ஹோட்டல் a/c ஹால், காங்கேயம் சாலை, திருப்பூர்.
வங்கிக் கணக்கு :
Account number :- 168401504235
Bank Name :- ICICI BANK
Account Type :- Savings
Account holder’s name :- PARI ANBAZHAGAN
IFSC Code :- ICIC0001684
VPA :- 9500384307@icici
இப்படிக்கு,
பாரி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
மின்னஞ்சல் : mailmemechatron@gmail.com
பேச : 9500384307
திருப்பூரில் தொடர்புகொள்ள :
ராஜமாணிக்கம்
பேச : 7200855666
March 20, 2022
ஹிஜாபும் கல்வியும்
அன்புள்ள ஜெ,
ஹிஜாப் தடையை சட்டபூர்வமானது என ஆதரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த விவாதம் ஒரு செய்திப்பரபரப்பாக இருந்தபோது ஆவேசமாக டிரெண்ட் செய்தவர்கள் அதைத்தான் பேசியாயிற்றே என அடுத்தடுத்த விஷயங்களில் பிஸி ஆகிவிட்டார்கள். உங்கள் வழக்கப்படி ‘சூடு’ ஆறிவிட்டதனால் இப்போது உங்கள் கருத்தைச் சொல்லலாமே.
ரவிக்குமார்
***
அன்புள்ள ரவி,
வழக்கம்போல என் பார்வை இரண்டுபக்கமும் பார்ப்பது. 1990 கள் வரை இந்திய இஸ்லாமியர்களில் மிகச்சிலர், பெரும்பாலும் உயர்குடிகள், மட்டுமே ஹிஜாப் அல்லது புர்க்கா அணிந்தனர். எஞ்சியவர்கள் அணிந்ததில்லை. இன்றும் காஷ்மீரில் மிக அரிதாகவே புர்க்கா கண்ணுக்குப்படும். சுடிதார் முதல் ஜீன்ஸ் வரை இஸ்லாமியப் பெண்கள் அணிந்து சுற்றிவருவதைக் காணலாம்
கேரளத்தில் தலையில் போடப்படும் ஒரு துணி (தட்டம்) மட்டுமே இஸ்லாமியப் பெண்களின் ஆடைகளில் கூடுதலாக இருந்தது. குமரிமாவட்டத்தில் அதுவும் இருந்ததில்லை. இந்திய இஸ்லாமியர் பெருவாரியாக வாழும் உத்தரப்பிரதேச கிராமங்களிலும் ஹிஜாப் அல்லது புர்க்கா நடைமுறையில் இல்லை. ஒரு சுற்று பயணம் சென்று வந்த எவருக்கும் இது தெரியும்.
உலகளவில் இஸ்லாமியர் பெரும்பாலும் வாழும் பலநாடுகளுக்குச் சென்றுள்ளேன். மலேசியா, இந்தோனேசியா, ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பாலும் புர்க்கா முறை இல்லை. அவர்களெல்லாம் கடுமையான இஸ்லாமிய ஆசாரவாதிகள்.
புர்க்கா முறை இந்தியாவில் 1985ல் ஷா-பானு வழக்கை ஒட்டி உருவான ஷரி-அத் பாதுகாப்புக் கிளர்ச்சியில்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வலியுறுத்தப்பட தொடங்கியது. 1992ல் ராமஜன்மபூமி -பாப்ரி மஸ்ஜித் பூசலை ஒட்டி இஸ்லாமியர் நடுவே உருவான பாதுகாப்பின்மையை இஸ்லாமிய அடிப்படைவாதம் பயன்படுத்திக் கொண்டபோது அது பரவலாகியது. இன்று இஸ்லாமியர் தங்கள் அடையாளத்தை முன்வைத்து தொகுத்துக் கொள்கையில் ஒரு அரசியல் நடவடிக்கையாக ஆகியுள்ளது
இந்த ஹிஜாப் கிளர்ச்சிக்கு பின்னால் மங்களூர் பகுதியில் வலுவாக வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் உள்ளன என்பதும், மிகச்சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட இஸ்லாமியச் சிறுமிகளைக்கொண்டு இது முன்னெடுக்கப்படுகிறது என்பதும் எவரும் அறியாதது அல்ல.
இன்று மூர்க்கமான இருமுனைப்படுத்தல் நடந்துகொண்டிருக்கிறது. தன் பெண்குழந்தைகளுக்கு புர்க்கா போட்டு ‘முற்போக்கு’ இந்துக்கள் புகைப்படம் பகிர்ந்தார்கள். அறிவுஜீவிகள் புர்க்காவை புகழ ஆரம்பித்தனர். அதை ஓர் எதிர்ப்புவடிவமாக ஊடகங்களில் காட்டினர். தங்கள் குடும்பங்களில் புர்க்காவுக்கு எதிராக ஓரிரு சொற்கள் பேசத்துணிந்த இஸ்லாமியப் பெண்கள் மேல் அச்சொற்களை பெரும் பாறாங்கற்களாக ஏற்றி வைத்து புதைத்தனர்.
இச்சூழலில் நடைமுறை யதார்த்தத்தைப் பேசுவதற்கே இடமில்லை. ஆயினும் கூறவேண்டியவற்றை சிலராவது கூறியாகவேண்டும்.
ஹிஜாப் புர்க்கா அல்ல என்றுதான் போராட்டக்காரர்கள் கூறினர். ஆனால் அப்பேச்சுகளில் புகைப்படங்களில் முன்னிறுத்தப்பட்டது முழுக்கமுழுக்க புர்க்காதான். ஹிஜாப் மிக எளிதாக புர்க்கா நோக்கிச் செல்கிறது என்பதை எவரும் உணரமுடியும். ஒருவர் எங்கும் தன் மத அடையாளத்துடன் செல்வது என்பதே சரியானது அல்ல என்பது என் எண்ணம். சென்றேயாகவேண்டும் என்பது வன்முறை.
புர்க்கா இஸ்லாமியப் பெண்களின் நடமாட்ட உரிமையையும் பொதுவெளி உரிமையையும் பறிக்கிறது, அதன்வழியாக அவர்களின் பொருளியல் உரிமையையும் பறிக்கிறது. அவர்கள் ஆண்களை நம்பி வாழவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. இன்றைய சூழலில் அதை உணரவேண்டியவர்கள் இஸ்லாமியப் பெண்களே.
*
உண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உருவாக்கிய சூழலை பாரதியஜனதா தனக்காக பயன்படுத்திக் கொண்டது. அது விரித்த வலையில் ‘லிபரல்கள்’ எளிதில் விழுந்தனர். பாரதிய ஜனதாவின் இன்றைய பணி என்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஆதரிக்கும் மிதவாத இந்துக்களில் ஒருபகுதியை தன்பக்கம் இழுப்பதே. தீவிரப்போக்குள்ளவர்கள் ஏற்கனவே அங்குதான் உள்ளனர். அதை இந்த ஹிஜாப் சர்ச்சை வழியாக சாதித்துவிட்டனர்.
மிதவாத இந்துக்களிலும் பெரும்பான்மையினரை, குறிப்பாக பெண்களை, தங்களை நோக்கி இழுக்க பாரதியஜனதாவால் இயன்றுள்ளது என்பதே உண்மை. அவர்களால் லிபரல்கள் புர்க்காவை ஆதரிப்பதை ஏற்கவே முடியவில்லை. பாரதிய ஜனதாவை கடுமையாக கண்டித்துவிட்டு புர்க்கா ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சொன்ன லிபரல்களைக்கூட தீவிரலிபரல் வேடமிட்ட மதவாதிகளும், லிபரல்நடிகர்களும் துவம்சம் செய்தனர். அதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. தங்கள் பிம்பங்களை மட்டுமே அவர்கள் கருத்தில்கொண்டனர்.
அது உருவாக்கிய விளைவுகள் பாரதிய ஜனதா மகிழக்கூடியவையாகவே இருந்தன. இந்துக்களில் காங்கிரஸ் ஆதரவாளர்களான மிதப்போக்கு கொண்டவர்களில் பலர் அவர்களை ஆதரித்தனர். இஸ்லாமியப் பெண்களிலேயே பாரதிய ஜனதாவுக்கு ரகசிய வாக்குகள் விழும் என்கிறார்கள். அந்த விளைவை கண்டபின்னர்தான் லிபரல்கள் அடக்கிவாசிக்கின்றனர்.
*
மறுபக்கம் ஒன்றுண்டு. நான் முன்வைக்க விரும்புவது ஜேம்ஸ் எம்லின் (J. Emlyn) என்னும் ஆளுமையை. 1838 ஏப்ரல் 7 ல் இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் கார்டிகான்ஷயர் என்னும் ஊரில் பிறந்த எம்லின் வெஸ்டெர்ன் ஹைகேட் கல்லூரியில் இறையியல் படித்தார். கிராவன் சர்ச்சில் 9 ஜூன் 1867ல் குரு பட்டம் பெற்றார்
லண்டன் மிஷனரி சொசைட்டி (London Missionary Society -LMS ) மதப்பரப்புநராக 11 செப்டெம்பர் 1867ல் எம்லின் இந்தியா வந்தார். 11 ஜூன் 1868 ல் நாகர்கோயிலை வந்தடைந்தார். அன்றைய திருவிதாங்கூரின் பாறசாலை மிஷன் மாவட்டத்தின் பொறுப்பை ஏற்று 1892 வரை பணியாற்றினார்.
1850 களில் குழித்துறை கோயில் மையமாக்கிய ஓர் ஊராக இருந்தது. அதனருகே இருந்த குன்று தொடுவட்டி என அழைக்கப்பட்டது. அக்குன்றின்மேல் ஒரு சந்தை இருந்தது. திருவட்டார் பகுதியில் இருந்தும் கருங்கல் பகுதியில் இருந்தும் வந்த ஒற்றையடிப்பாதைகள் அங்கே இணைந்தன. (திருவனந்தபுரம் நாகர்கோயில் பாதை கடலோரமாக அமைந்திருந்தது) குன்றின்மேல் ஏற படிகள் வெட்டப்பட்டிருந்தமையால் தொடி (படி) வெட்டி என்னும் பெயரில் அந்த ஊர் அழைக்கப்பட்டது.
எம்லின் அந்த இடத்தை மகாராஜாவிடமிருந்து கொடையாகப் பெற்றார். அருகிருந்த இடங்களை விலைகொடுத்து வாங்கினார். அங்கே மிஷன் ஆஸ்பத்திரி, மிஷன் தலைமையகம், பள்ளிகள் மற்றும் ஒர் ஆலயம் ஆகியவை அமைந்தன. இல்லங்கள் உருவாயின. இன்றைய மார்த்தாண்டம் எம்லின் அவர்களால் உருவாக்கப்பட்டது
1882ல் இங்கு பள்ளிகள் உருவாக்கப்பட்டன. 1898ல் பெண்களுக்கான தனிப் பள்ளிகள் உருவாயின. எம்லின் எழுதிய குறிப்புகள் வழியாக நாம் காண்பது அன்றைய கல்வியின் சித்திரத்தை. ஒன்று, அன்றைய நாயர் மற்றும் வேளாளப்பெண்கள் பிற குடியினருடன் சேர்ந்து அமர்ந்து படிப்பதை அவர்களின் குடும்பத்தினர் விரும்பவில்லை. பிறர் தொட்டு சமைக்கும் உணவையோ நீரையோ அருந்த அனுமதிக்கவில்லை.
பல நாயர்குடும்பங்களில் மட்டுமல்ல செல்வந்தர்களாகிய நாடார் குடும்பங்களிலும் இற்செறிப்பு முறை இருந்தது. கிட்டத்தட்ட கோஷா முறை. பெண்களை அவர்கள் மூன்றாம்நபர் பார்க்க அனுமதிப்பதில்லை. அதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை உயர்குடிப் பெண்ணை தாழ்ந்தகுடியினன் கண்ணால் பார்த்து ‘பார்த்தேன்’ என அறிவித்தால் அவளை அவனுடனேயே அனுப்பிவிடும் மண்ணாப்பேடி புலைப்பேடி என்னும் கொடிய முறை இருந்தது. அதை ராணி கௌரி பார்வதிபாய் நிறுத்தினார். அந்த உளநிலைகளும் அச்சங்களும் நீடித்தன.
அனைத்துக்கும் மேலாக பெண்கள் மதம் மாறிவிடுவார்கள், கல்வியில் பைபிள் கற்பிக்கப்படும் என குடும்பத்தவர் அஞ்சினர். ஆகவே பெண்கள் பள்ளிக்கு வரவில்லை. தொடக்கத்தில் வெறும் ஏழு மாணவிகளே வந்தனர், அவர்களும் மிக வறிய குடும்பத்தில் இருந்து கைவிடப்பட்ட குழந்தைகள்.
எம்லின் நாயர்கள், வேளாளர்கள், உயர்குடி நாடார்கள் அனைவருக்கும் வாக்குறுதிகள் அளித்தார்- வகுப்பில் ஒரு வார்த்தைகூட கிறிஸ்தவ மதம் கற்பிக்கப்படாது. ஜெபம் செய்யவேண்டியதில்லை. மாறாக திருவாசகம் எழுத்தச்ச ராமாயணம் உள்ளிட்ட இந்துநூல்கள் கற்பிக்கப்படும்.
பெண்கள் வந்துசெல்ல கோஷா வண்டிகளை ஏற்பாடு செய்தார். வகுப்பில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. சாதிக்கட்டுப்பாடுகள் கொண்ட பெண்கள் அச்சாதி ஆசாரங்களை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்தார். பள்ளி முழுக்க ஒரு ஆண்கூட இருக்கமாட்டார்கள் என்று வாக்களித்தார். அவர் உருவாக்கிய தங்கிப்பயிலும் இடங்களில் சமையல் முழுக்க பிராமணர்கள், பணியாட்கள் நாயர்ப்பெண்கள்.
எல்லாம் எப்படியாவது அவர்கள் கல்விக்குள் வரவேண்டும் என்னும் விழைவால் அவர் செய்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமரசங்கள் அவை. மறுபக்கம் குமரிமாவட்ட தலித் மக்களின் வாழ்க்கையில் பெரும் வெளிச்சமாக திகழ்ந்தவரும் அவரே.
ஓய்வுக்கு பின் மார்த்தாண்டம் அயனிவிளை வடக்குத்தெருவில் ஓலைவேய்ந்த ஒரு இல்லத்தில் முனிவரைப்போல எம்லின் வாழ்ந்தார். எம்லினின் மனைவி எமிலி செய்மோர் (Emily Seymeir) 5 நவம்பர் 1882 ல் திருவனந்தபுரத்தில் ஒரு பெண்குழந்தையை பெற்றுவிட்டு இறந்தார். அவர் பாறசாலை கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ஐந்து வயதில் அந்த பெண்குழந்தை சின்னம்மை நோயில் மறைந்தது. காஞ்சிரகோடு என்னும் ஊரில் அது அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் பாறசாலை கல்லறைத்தோட்டத்துக்கு அதன் எச்சங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
எம்லின் 26 ஜூன் 1917ல் தன் 79 வயதில் மறைந்தார். அவரை இறுதிக்காலத்தில் பார்த்துக்கொண்டவருக்கு அவருடைய இல்லம் வழங்கப்பட்டது அவர் உடல் பாறசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் மனைவியின் கல்லறைக்கு அருகே அடக்கப்பட்டது. அருகே அவர்களின் மகளின் சிறிய கல்லறையும் உள்ளது
எம்லின் விலைக்கு வாங்கிய நிலத்தில் 1964ல் மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரி உருவாகியது. இப்போது நேசமணி கிறிஸ்தவக் கல்லூரியாக உள்ளது. எம்லின் நினைவாக மார்த்தாண்டத்தில் ஒரு சிறிய தனியார் சாலை உள்ளது. மற்றபடி ஒரு நல்ல புகைப்படம்கூட இல்லை.
எம்லின் கொள்கைவெறியுடன் இருந்திருந்தால் என்னுடைய பாட்டிகள், அன்னையர் வெளிவந்திருக்க மாட்டார்கள். உயர்பதவிகளில் அமர்ந்திருக்க மாட்டார்கள். எம்லின் முன்வைத்த விழுமியத்தையே நான் உயர்வென நினைப்பேன். ஹிஜாபோ புர்க்காவோ எதுவானாலும் கல்வி, தடையற்ற குறைவற்ற கல்வி என்பதே ஓர் அரசின் நிலைபாடாக இருக்கவேண்டும். கல்விச்சாலையில் ஒரு பெண்குழந்தை வெளியே நிறுத்தப்படுவதென்பது அரசியல்பிழை மட்டுமல்ல அறப்பிழை மட்டுமல்ல நம் மூதாதையருக்கு எதிரான பாவமும் கூட.
ஆகவே பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தில் நிகழ்த்திய ஹிஜாப் அரசியல் கீழ்மையானது, நம் தலைமுறைகள் எண்ணி நாணவேண்டியது என்றுதான் சொல்வேன்.
ஈரோடு சந்திப்பு -கடிதங்கள்
இயல்பான உங்களது ஆரம்ப உரையாடலான “அறிவு சார்ந்து தன்னை மேம்படுத்துதல்” எண்ணங்களையும் மனிதர்களையும் சுமக்கும் ஒட்டகங்களிருந்து விதைகளை சிதறடிக்கும் யானைகளாக்க பயிற்சி கொடுக்கும் முகாம் என தெளிவாக புலப்பட்டது.
(கொரோனா) காலத்தில் பவா மூலமாக உங்களை அடைந்து கோவை விஷ்ணுபுரம் விழாவில் இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டு 5ம் தேதி சனி காலை 7 மணி அளவில் ஈரோடு பண்ணை வீட்டிற்குள் செல்ல இருந்த எங்களை ஏர்போர்ட்டில் இருக்கும் செக்யூரிட்டி போல அங்கிருந்த லாப்ரடார் (Labrador Retriever) பரிசோதனை செய்தது. பிறகு தெரிந்தது அது அனுமதி இல்லாமல் வந்த வாசகர் என்று ஆனாலும் ஆசான் சொற்களால் லாப்ரடார் வகைகளின் திறமை, கனடாவில் அது பிறந்த மாகாணம் கேட்டு பெருமிதம் அடைந்து வெளியேறியது.
முகாமில் மிகையாக சித்தரிக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளையும், புனைவாக உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திகள் உருவாக்கும் பிம்பங்களை உடைக்கும் கருவிகள் உங்களால் அடையாளப்படுத்தப்பட்டது. உங்களின் பயண அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள் மற்றும் திரைப்பட அலுவல்கள் மூலம் சமகால மனிதர்களிடம் நீங்கள் காணும் கற்பனை திறனற்ற அனுபவங்களும், புதினங்களை உருவாக்குவதில் உள்ள தொய்வு குறித்த பகிர்தலும் வேதனையளித்தது.
பூவண்ணா சந்திரசேகர், சீரா மற்றும் இளம் வாசகர்களின் கதைகள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. தொன்மையான படைப்புகளில் நவீனத்துவத்தை கையாளும் முறை, சிறுகதையின் முடிவு வாசகனுக்கு உண்டாக்கும் எல்லையில்லா கற்பனைத்திறன் மற்றும் ஐரோப்பிய நடை மொழியில் மாற்றங்கள் இல்லாமல் தமிழில் எழுதுவதால் வாசகர்கள் அடையும் தடைகள் இளம் வாசகர்களுக்கு தெளிவாக உலக புகழ் பெற்ற (சிறுகதைகள்) மூலம் விளக்கமளித்தீர்கள். கதைகளை உங்கள் எழுத்துக்கள் மூலம் பயின்ற எங்களுக்கு சொற்கள் மூலம் வந்தடைந்து புதிய அனுபவமாக இருந்தது.
வாழ்க்கையில் செட்டில் (settle) ஆவது குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம், எங்களுடன் இருந்த 22 மணி நேரத்தில் ஒரு முறை கூட செல்பேசியை உபயோகிக்காமல் இருந்தது புதிய சம கால தலைமுறை பின்பற்ற சிறந்த உதாரணங்களாகும்.
மஞ்சள் மனம் சூழ்ந்த மாலை நேர நடை பயிற்சி, நானும் இந்த சந்திப்பில் உள்ளேன் என பல உத்திகள் மூலம் உணர்த்திய காற்றும், உறுதியான ஈரோடு கிருஷ்ணன், அன்பான மணவாளன், பிரபு, அந்தியூர் மணி மற்றும் நண்பர்களின் ஒருங்கிணைப்பு நிறைவானதொரு நிகழ்வை கொடுத்தது.
இரவு வீடு திரும்பும் போது அகமெங்கும் நிறைந்திருந்திர்கள். என் புத்தக அலமாரி முழுக்க நிரம்பியிருக்கும் உங்கள் நூல்களில் பல ஆசான்கள் பேரூரவமாகி கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஒரு சீடனாக தயாராகி விட்டேன் எனும் உணர்வின் பேருவகையுடன்
அதியமான்
சென்னை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers



