Jeyamohan's Blog, page 811
March 16, 2022
யானை டாக்டர் நாடகம்– ஈரோடு
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
கூட்டுறவு மருத்துவமனைகளை தமிழகத்தில் பரவல்படுத்தி சேவையளித்தவரும், இந்தியச் சூழலியல் முன்னோடிகளுள் ஒருவருமான மருத்துவர் ஜீவா அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் எக்காலத்தும் வணங்கத்தக்கது. பலநூறு பசுமை இயக்கங்களைத் தோற்றுவித்த ஜீவா அவர்களின் மனதுக்கு மிக அணுக்கமான கதைகளில் ஒன்று ‘யானை டாக்டர்’. ‘ஆவணப்படங்களைவிட அதிக தாக்கம்தரவல்ல ஒரு எழுத்துப்படைப்பு தமிழில் நிகழ்ந்திருக்கிறது’ என அவர் அடிக்கடி அக்கதையைப்பற்றி குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. அதனாலேயே, அக்கதையை பல்லாயிரம் பிரதிகள் அச்சிட்டு விலையில்லா பிரதிகளாக தோழர்களுக்கும் பொதுசனங்களுக்கும் கிடைக்கச் செய்தார்.
காந்தியக்கம்யூனிஸ்ட்டாக தனது வாழ்நாள் இறுதிவரை சேவைசார்ந்த வைராக்கியத்தோடு செயலாற்றிய பேராளுமை மருத்துவர் ஜீவா அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஈரோட்டில் நிகழவுள்ளது. வருகிற 19.03.2022 அன்று சித்தார்த்தா பள்ளியில் நிகழும் இந்த நினைவேந்தல் கூடுகையில், உங்களுடைய ‘யானை டாக்டர்’ சிறுகதையானது நாடகவடிவில் நிகழ்த்தப்படுகிறது. நாடகக்கலைஞர் ராம்ராஜின் இயக்கத்தில் அவருடைய நாடகக்குழு மாணவர்களால் இந்த நிகழ்த்துவடிவம் நிகழ்கிறது.
ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது தங்கையான ஜெயபாரதி அம்மா வெவ்வேறு விதமான அறப்பணிகளை முன்னெடுத்து வருகிறார். ஜீவா விட்டுச்சென்ற பணிகளின் நீட்சிப்படுத்த வேண்டி நிறைய நல்மனிதர்களை ஒருங்கிணைத்து ‘மருத்துவர் ஜீவா அறக்கட்டளை’ துவங்கப்பட்டுள்ளது. தன்னகத்தில் சுடர்ந்தெரிந்த ஜீவாவின் அணையா ஜோதியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்லும் பெரும்பொறுப்பை கையிலெடுத்துப் பணியாற்றுகிறார் ஜெயபாரதி அம்மா. அவருடைய விழைவின் காரணமாகவே இந்நாடக நிகழ்வும் இந்நினைவேந்தலில் இடங்கொள்கிறது.
அறத்தின் பெருமாந்தர்களாக இம்மண்ணில் நிலையுயரா்ந்த வரலாற்றுவரிசையில், யானை மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய வாழ்வுப்பங்களிப்பு என்பது இந்தியச்சமூகம் வணங்கிப் பின்பற்றத்தக்கது. அவரைப்பற்றிய மிகச்சிறந்த ஆக்கமென தமிழில் நெடுங்காலம் நிலைநிற்கும் இக்கதையை மீண்டும் இச்சமகாலத்தில் இன்னொரு கலைவடிவில் நிகழ்த்துவதை அவருக்கான நினைவஞ்சலி என மனங்கொள்கிறோம். படைப்பாசிரியர் உங்களுக்கும் நண்பர்களுக்கும் இதற்குரியத் தகவலைப் பகிரந்துகொள்வதில் மனதார நிறைவுறுகிறோம். வாய்ப்புள்ள தோழமைகள் இந்த நினைவேந்தல் கூடுகையில் பங்குபெற வேண்டுகிறோம்.
மருத்துவர்கள் ஜீவா மற்றும் கிருஷ்ணமூர்த்தி போன்ற மூத்த ஆளுமைகளின் செயற்தடம் தொடர்வதற்கான சிற்றசைவுகளில் ஒன்றாக இத்தகைய நிகழ்வுகள் குணங்கொள்ள பேரியற்கையைத் தொழுகிறோம்.
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
கவிதைகள் -இதழ்
இம்மாத கவிதைகள் இணைய இதழ், ஐந்து கவிஞர்களின் சிறப்பிதழாக வெளிவருகிறது. பெருந்தேவி, இசை, இளங்கோ கிருஷ்ணன், சபரிநாதன், வேணு தயாநிதி ஆகியோரின் கவிதை தொகுப்பிலிருந்து கவிதைகளை தேர்வு செய்து நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இக்கவிதை இதழ் இரண்டாயிரம் தொடக்கம் அதற்கு பின்பான காலக்கட்டத்தில் எழுத வந்த கவிஞர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், விக்னேஷ் ஹரிஹரன், பாலாஜி ராஜூ, கவிஞர் ஆனந்த், எழுத்தாளர் விஜய் குமார் இவ்விதழுக்கு பங்களித்துள்ளனர்.
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
ஆனந்த் குமார் கவிதைகள் இதழ்ஈரோடு வாசகர் சந்திப்பு கடிதம்
அன்புள்ள ஜெ,
கோவை வாசகர் சந்திப்பில் இடம் கிடைக்காமல் ஈரோட்டில் தான் கிடைத்தது. கோவையிலிருந்து காலை 7 மணிக்கு நண்பர் விஜியுடன் காரில், நானும் டாக்டர்.கோவிந்தராஜும் இணைந்து கொண்டோம். மணவாளன், 10 மணியளவில் சந்திப்பு தொடங்கும் எனக் கூறியிருந்தார். நாங்கள் வந்து சேர்ந்தபோது சமயம் 9.15. உங்களைச் சுற்றி கூட்டம். சந்திப்பு தொடங்கி விட்டிருந்தது. ஜெயகாந்தன் தன் சபையைப் பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது.
விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருக்கும், அது கோவை, ஈரோடு, ஊட்டி எங்கிருந்தாலும். சென்னை நிகழ்வுகளில் மட்டும் நான் கலந்து கொண்டதில்லை. காலை உணவு முடித்து, மாடியில் கூடினோம்.
ஒரு விவாதத்தில் பேசுவதில், கேட்பதில் உள்ள Dos and Don’ts ஐ முதலில் விளக்கினீர்கள்.
பேசுவதில்,
1/ முதலிலேயே மையக் கருத்தைச் சொல்லி, பிறகு அதற்கான logical points ஐ விளக்கி அதை நிறுவ வேண்டும்.
2/ பொய்ப்பித்தலுக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
3/ எதிர்தரப்பின் கருத்துக்களை தொகுத்து சொல்லி அவர் ஒப்புதல் பெற்ற பிறகே அதை மறுத்து நம் கருத்தைச் சொல்ல வேண்டும்.
கேட்டலில்,
1/ எதிர்தரப்பை முழுவதுமாகத் தன் கருத்தை நிறுவ அனுமதிப்பது.
2/ Association Fallacy – தனக்குள் எதிர்வினை ஆற்றிக்கொண்டோ அல்லது வேறு வேறு சம்பவங்களுடன் தொடர்புறுத்திக் கொண்டே கேட்பது கூடாது.
3/ எதிர்தரப்பின் தர்க்க முறையைக் கவனித்து அதே தர்க்கத்தின் அடிப்படையில் விவாதித்தல்.
பிறகு, செய்திகளுக்குப் போலி அறச்சீற்றம் கொள்பவர்களோ, திரிபு வரலாற்றை உண்மைத்தேடல் இல்லாமல், போலி பெருமிதத்தைப் பரப்புகிறவர்களோ அறிவார்ந்த தன்மை அற்றவர்கள் என்றும், மைய அறிவார்ந்த தேடல் கொண்டவர்களுக்கும் விளிம்பு நிலை சராசரிகளுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னது உணரும்படி இருந்தது.
Creativity இல்லாத இன்றைய கல்விமுறை மீதும், முற்றிலும் லௌகீகமான குடும்ப சூழலில் வளர்ந்து பொறுப்பின்மையும், மூளைசோம்பலும் கொண்ட இளைய தலைமுறைமீதான உங்கள் விமர்சனத்தையும் பதிவு செய்தீர்கள்.
முதல்நாள் மதியத்திற்குப் பின் தொடங்கிய, புதிய வாசகர்களின் கதைகள், கவிதைகள் கலந்துரையாடலில், கதைகளின் குறைகளையும், அதன் வெவ்வேறு புதிய சாத்தியங்களையும் கூறி, ஒவ்வொரு Genre க்கும் இரண்டு, மூன்று உதாரண சிறுகதைகளைச் சொல்லி நீங்கள் விளக்கியதில், சிறுகதை பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட அனுபவம் கிடைத்தது.
இரவு உணவின்போது, உங்கள் விமர்சனங்களை அவர்கள் சவாலாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக எழுத முயல வேண்டும் என்றும் புண்பட்டுப் பின்னகரக் கூடாது எனக் கூறி தோளில் கை வைத்துப் பேசும்போது அவர்கள் கொஞ்சம் நெகிழக் கண்டேன்.
பிறகு, க. நா. சு, சுந்தர ராமசாமி மற்றும் சில எழுத்தாளர்களுடனான உங்கள் அனுபவங்கள், நகைச்சுவைக் கதைகள்.என் இயல்புப்படி எல்லாரிடமும் பேசவில்லை. விஜி, கோவிந்தராஜ் இருவரிடம் மட்டும் தான் பேசினேன். விஜியை சொல்முகம் மாதாந்திரக் கூடுகைக்கு அழைத்தேன். இந்த மாதம் முதல் வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள், என்ன பலன் இருக்கும் உங்களுக்கென்று யோசிக்கும்போது, பெரும் லட்சியவாதமும், இலக்கிய இயக்கத்தின் மீதான அர்ப்பணிப்புமே கண் முன் மலையென நின்றிருக்கிறது.
இத்தனை சுவாரசியமாக, நகைச்சுவையுடன், நிறைய கதைகளைச் சொல்லி இலக்கியத்தில் புத்துணர்ச்சி நீடிக்கச் செய்யும் இரண்டு நாட்களைத் தந்தமைக்கு நன்றி ஜெ.
அமைப்பாளர்களான மணவாளன், பாரி, பிரபு, ஈரோடு கிருஷ்ணன், வழக்கறிஞர் செந்தில் அனைவருக்கும் நன்றி.
ரதீஷ்
ஆசிரியர்கள் -கடிதம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
பின்னிரவில் தூக்கம் கலைந்து எழுந்து, இரண்டு மணிக்கு உங்கள் தளத்தைத் திறக்கையில், ‘எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு’ முதல் பதிவாய் நின்றிருந்தது. அதன் துவக்ககாலகட்டம் பற்றி ஓரளவுக்குத் தெரியுமென்பதால் அப்பதிவை வாசிக்கத் தொடங்கினேன். ‘என் மரபுப்படி என் தலை உங்கள் பாதங்களில் பட நிலம்படிய வணங்குகிறேன். மன்னித்துவிடுங்கள்.’ என்கிற வரியை வாசித்து முடித்தபின், அந்த இரவைக் காட்டிலும் அடர்வுகூடிய ஏதோவொரு மனச்சூழலுக்குள் நான் அமிழ்ந்திருந்தேன். கடக்கவே முடியாதபடி நினைவுகள் ஊடுபாவென பின்னிச் சுழன்றன. காரணம், உங்கள் மீதான அவ்வழக்கின் தொடக்க காலத்திலேயே, எனது வெவ்வேறு நண்பர்களிடம் அதுசார்ந்த பல உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்தன. ஒரு அறிவுச்சமூகம் எத்தகைய எதிர்வினைகளால் தன்னை முன்செலுத்துகிறது என்பதற்கான கூர்ந்த அவதானிப்பை நான் அவ்வழக்கின் விவாதநீட்சிகளில் கண்டடைந்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் ஜீவா அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் அப்பொழுதான் எஸ்.வி.ராஜதுரை அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பியிருந்தார். இவ்வழக்குபற்றி பேச்சு எழுகையில் என்னிடம், “உலகம் முழுக்க இருக்க எல்லா தத்துவங்களையும், இசங்களையும், இலக்கியங்களையும் எல்லா தரவுகளோடும் தர்க்கங்களோடும் உரையாடல் தளத்தில் முன்னெடுத்து வைக்கிற அவர்களால், தங்களைப்பற்றி சின்னதான விமர்சனங்களைத் தாங்குமளவுக்குக்கூட மனம் அமையவில்லை. தான் எப்பொழுதுமே மிகச்சரியாக இருக்கிறோமென்ற அதீத நம்புதலுக்குள் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த சுயநம்பிக்கையை உரசும் எதையும் அவர்கள் தூற்றுகிறார்கள். நாளடைவில், இளகுத்தன்மை இல்லாமல் இறுக்கமுடையவர்களாக ஆகிப்போகிறார்கள். இந்த வழக்கில், எஸ்.வி.ராஜதுரை அவர்கள் அனுப்பிய அந்த வழக்கறிஞர் கடிதத்தின் தொனி கீழ்மையானது. ஒரு முன்னோடி அறிவியக்கவாதி அப்படி வெளிப்படக்கூடாது. அந்தச் சூழலை அவர் தடுத்திருக்க வேண்டும். இன்னொருபுறம், ஜெயமோகனிடமிருந்து எதிர்வினையாக வருகிற ஒவ்வொரு பதிலும், மனம்திறந்த உரையாடலுக்கு எப்பொழுதும் அவர் தயாராக இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.” என்றார் மருத்துவர் ஜீவா.
எஸ்.வி.ராஜதுரை அவர்களால் இவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் மருத்துவர் ஜீவாவின் வார்த்தைகள்தான் என் நினைவுக்குள் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. உங்கள் பதிவை வாசித்ததிலிருந்து மீளமீள எனக்குள் ஒரு எண்ணம் மட்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. இவ்வழக்கு உங்களுக்குச் சாதகமானதாகவே நிறைவுற்றிருக்கிறது. கிட்டத்தட்ட உங்கள் தரப்பு அதற்கு நியாயம் செய்திருக்கிறது. ஆனால், எந்நிலையிலும் நீங்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களை ஆசிரிய நிலையிலிருந்து சிறிதும் விட்டுக்கொடுக்கவில்லை. எல்லா அறிவுத்தளத்திலும் அதை நீங்கள் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறீர்கள்.
எழுத்தாளர் தேவிபாரதிக்கான தன்னறம் விருதளிப்பு விழாவில் நீங்கள் ஆற்றிய உரையில், ஆங்கிலேயே நாவலாசிரியர் வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் மேற்கோள் குறித்து நித்ய சைதன்ய யதி அவர்கள் சொன்ன அனுபவம் ஒன்றைப் பகிர்ந்தீர்கள். அடிப்படையில் தாக்கரே மானுட வெறுப்பாளர். மனிதனென்பவன் ஓர் கீழ்மகன் என்ற எண்ணத்திலிருந்து அவர் சொன்ன, ‘நான் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறேன். அதில் ஒரே ஒரு தோட்டா ஏற்றிவைத்திருக்கிறேன். இனி தாளமுடியாது என எப்பொழுது இந்த மனிதனைப்பற்றி தோன்றுகிறதோ, அந்தக்கணம் அதை வாயில் வைத்து ட்ரிகரை அழுத்துவேன்” என்ற மேற்கோள்.
அம்மேற்கோளின் தொடர்ச்சியாக யதி, “அத்தகைய துப்பாக்கியை வைத்திருப்பதற்கான லைசென்ஸ் தஸ்தாயேவ்ஸ்கியிடம் மட்டும்தான் உண்டு. ஆனால், அவர் கடைசிவரைக்கும் தன் பையில் ஒரு ரோஜா மலரைத்தான் வைத்திருந்தார்” என்று சொன்னதாகக் குறிப்பிட்டீர்கள். அந்த ஞாபகநினைவு தந்த தாக்கத்திலிருந்து நாங்கள் எவரும் இன்னும் மீளவில்லை. தோட்டாக்களை செலுத்த ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தும், இம்மானுடத்திடம் மனமுவந்து ஓர் மலரை நீட்டுகிற அகம் எத்துணை உன்னதவுச்சம். உண்மையில், யதியுடைய அந்த வாக்கின் சாட்சியநீட்சி என்றே இவ்வழக்கும் முடிந்திருக்கிறது. அவதூறின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஓர் அரவணைப்பு வென்றிருக்கிறது.
இக்கணத்தில் என் மனது நம்பும் உண்மையில் நின்று இதை ஓங்கிச் சொல்வதற்கு எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை, ‘நீங்கள் என் ஆசிரியர். உங்கள் ஆசிரியமனம் கைதொழத்தக்கது!’. ஏனென்றால், தனக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிற தரப்பிலுள்ள ஆசிரிய மனதின்மீது கூட எவ்வகையிலும் காழ்ப்பையோ கசப்பையோ வளர்க்காத, அந்த உளநிலையையே தன்னைப் பின்தொடர்பவர்களுக்கும் சிந்தனைத் தொடர்ச்சியாய் வழங்குகிற உங்கள் ஆசிரியத்துவம் என்றும் எங்களுக்கான பெருவிளக்கு. காந்திக்கு நேர்ந்திருந்தாலும்கூட அவர் அணுகியிருக்கக்கூடிய வரலாற்று ரீதியான அறவழிமுறை இதுவாகத்தான் இருக்கும்.
‘ஒரு மனிதரை நிகழ்கால சலனங்களைக் கொண்டு அடையாளப்படுத்தாமல், அவருடைய கடந்தகால செயல்கள், சிந்தனைப்போக்கு மற்றும் செயல்திட்டங்களை நினைத்து அவர்முன் பணிதலே நம் மரபு’ என்ற கருத்தியலைத்தான் நாங்கள் இப்பொழுதும் எப்பொழுதும் பற்றிக்கொள்ள நினைக்கிறோம். தன்னறத்தின் வழிகாட்டி மனிதரான பழனியப்பன் அண்ணா ‘உரையாடும் காந்தி’ புத்தகத்தை பார்த்துவிட்டு, “சமர்ப்பணம் அ.மார்க்ஸ்க்குன்னு போட்டப்பவே ஜெ வேறொரு தளத்துல இருக்காருன்னு தெரிஞ்சுக்கிட்டேன். காந்திய உரையாடல் அந்தப் பக்கத்தில இருந்தே துவங்கிடுது. அதுதான் சமகாலத்துக்குத் தேவையான சமூகப்பார்வை’ என்றார்.
இப்படிப்பட்ட ஓர் அறிவியக்கச்சூழலை எங்களுக்குப் பயிற்றுவித்து அழைத்துச்செல்லும் உங்கள் கனிவுமனத்திற்கு என்றென்றைக்குமான நன்றிகள். இவ்வழக்கினை உங்கள் தரப்பு அணுகிய கோணத்திலிருந்து நாங்கள் நிறையக் கற்றடைகிறோம். இதைப் பொதுவெளியில் அகப்பூர்வமாக வெளிப்படுத்தியதற்கு வணக்கங்கள். முன்விசை மனிதர்களென சிலர் இங்கு நின்றமைவதற்கு அவர்களின் உள்ளெழுகிற ‘நிபந்தனையற்ற பணிதல்’ முக்கியக் காரணியாகிறது. மானுடப்பிரவாகம் தன் ஆழத்திற்குள் காப்பாற்றிவைத்திருக்கும் ஞானத்தை, ஏதோவொரு ஆசிரியமனம் காலத்தால் வெளிப்படுத்துகையில், அருகமர்ந்து அதை கற்றுணர்ந்திடும் அறிவுக்கு நிகரில்லை. தரப்புகள், தர்க்கங்கள் பேதமேதுமின்றி எல்லா ஆசிரியர்களையும் இக்கணம் கரங்குவித்துப் பணிகிறோம்.
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
March 15, 2022
ஊடகங்கள், அரசியல், விவாதங்கள்
சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் நீங்கள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்? உங்கள் கருத்துக்களை ஏன் எழுதுவதில்லை?
பொதுவாக ஊடகச் செய்திகளை நம்பி அரசியல் சமூகப்பிரச்சினைகளை அலசுவதில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை கிடையாது, ஏன் என்றால் எனக்கு ஊடகவியலாளர்களிடம் நெருக்கமான தொடர்புகள் பலவருடங்களாக உண்டு. அவர்கள் எப்படிச் செய்திசேகரிக்கிறார்கள், எப்படிச் செய்திகளை உண்டு பண்ணுகிறார்கள், எந்தெந்தச் சூழல்களில் செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று நான் நன்றாகவே அறிவேன். ஊடகம் எதுவானாலும் அவற்றின் நம்பகத்தன்மை கால்பங்குதான்.
ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் என்பவை பல்வேறு சக்திகளால் இயக்கப்படும் ஒரு பெரும் கருத்துத்தரப்பு என்று சொல்லலாம். ஊடகங்களின் கருத்துநிலையை உருவாக்கும் நான்கு சக்திகள் இவை.
அ. அரசியல்.
ஊடகங்கள் பல்வேறு அரசியல்கட்சிகளின் சார்புநிலைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நம் அறிவோம். இவற்றில் இரண்டுவகை உண்டு . அதிகாரபூர்வமான கட்சி ஊடகங்கள். தற்காலிகமாகவும் மறைமுகமாகவும் கட்சிகளை ஆதரிக்கும் ஊடகங்கள். சன் டிவியும் ஜெயா டிவியும் முதல்வகைக்கு உதாரணம் என்றால் ராஜ் டிவி இரண்டாம் வகைக்கு உதாரணம். இவை செய்திகளை தங்கள் அரசியல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றன
ஆ. உரிமையாளர் நலன்
ஊடகங்களின் கருத்துக்களைத் தீர்மானிப்பதில் அவ்வூடகங்களின் உரிமையாளர்களின் தனிப்பட்ட நலன்கள் வகிக்கும் பங்கும் மிக முக்கியமானது.பெரும்பாலான ஊடகமுதலாளிகள் வேறு பல தொழில்களில் பெரும் முதலீடுசெய்திருப்பவர்கள். அவர்களுக்கு அங்கே போட்டியாளர்களும் எதிரிகளும் உண்டு. அரசாங்கத்தில் அவர்களுக்கு ‘லாபி’ கள் உண்டு. ஆகவே அந்த நலன்களுக்குச் சாதகமாகவே அவர்கள் செய்திகளை உருவாக்குகிறார்கள்.
இ. ஊடகவியலாளர்களின் நோக்கு
ஊடகங்களில் செயல்படுபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களும் வெறுப்புகளும் நோக்கங்களும் செய்திகளை பெருமளவில் பாதிக்கின்றன ஊடகவியலாளர்களின் நிலைபாடுகளைத் தீர்மானிக்கும் அம்சங்கள் பல. அவர்களின் இயல்பான அரசியல் நிலைபாடு முதல்வகையானது. ஆனால் அத்தகைய உறுதியான நிலைபாடு கொண்ட ஊடகவியலாளர்கள் மிக மிகக் குறைவே.
இரண்டாவதாகச் சொல்லப்பட வேண்டியது , அரசியல் சரிநிலை என்பதாகும்.[ பொலிடிகல் கரெக்ட்நெஸ்] ஒரு காலகட்டத்தில் ஒரு ‘ஜனநாயக, முற்போக்கு,மனிதாபிமான’ அரசியல் நிலைபாடு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு பொதுவான புரிதல் அறிவுச்சூழலில் உருவாகி நிலைபெற்றிருக்கும். அதுவே அரசியல்சரிநிலை என்று சொல்லப்படுகிறது. அது நெடுங்காலம் படிப்படியான அரசியல் பிரச்சாரம் மூலம் உருவாகி வருவதாகும். ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்களின் கண்ணோட்டங்களை தீர்மானிக்கும் அரசியல்சக்தி என்பது இதுவே. அரசியல்சரிகளை அப்படியே சொல்லிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம்
மூன்றாவதாகச் சொல்லப்படவேண்டியது, வெளிப்பாதிப்புகள். ஊடகவியலாளர்களை பல்வேறுவகையில் பல அமைப்புகள் தங்களுடைய குரல்களை ஒலிக்கவைக்க பயன்படுத்திக் கொள்கின்றன. இந்திய ஊடகவியலாளர்களின் ஊதியம் ஒப்புநோக்க மிகவும் குறைவு. ஒரு வெளிநாட்டுப்பயணமோ சில லட்சம் ரூபாயோ அவர்களை கவர்ந்துவிடும். அதன்பின் மெல்ல மெல்ல அவர்கள் அவர்கள் இன்னதன்றே அறியாத மறைமுகச் சக்திகளின் குரல்களாக ஆகிவிடுவார்கள்.
சமீபகாலமாக இந்தப்போக்கு ஊடகத்துறையில் மிக அதிகமாக உள்ளது. பல ஊடகவியலாளர்கள் பெரும் செல்வம் ஈட்டுகிறார்கள் என்ற புலம்பல் ஊடகவியலாளர் நடுவே கேட்கிறது. அவர்கள் தங்களைத்தாங்களே காட்டிக்கொடுக்க விரும்பாத காரணத்தால்தான் அவை வெளிவரவில்லை. ஆனால் வரும் காலங்களில் சிலர் அவற்றை துணிந்து எழுதக்கூடும்.
பிராந்திய மொழிகளில் உள்ள ஊடகவியலாளர்கள் ஆங்கில ஊடகவியலாளர்கள் பெறும் சம்பளத்தில் பத்தில் ஒருபங்கு ஊதியம் பெறுபவர்கள். வருமானத்துக்காக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைப்படத்துறையினரின் இனாம்களை நம்பி வாழ்பவர்கள். ஆகவே தன்னம்பிக்கை இல்லாதவர்கள். இவர்களில் படிக்கும்பழக்கமுள்ளவர்கள் மிக மிகக் குறைவே. பெரும்பாலானவர்கள் பாமரர்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் ஆங்கில ஊடகவியலாளர்களை நம்பி அவர்களை பிரதிஎடுப்பதையே தங்கள் செயல்பாடாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஈ. வாசகர்களின் எதிர்பார்ப்பு
ஊடகங்கள் தங்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செய்திகளை விரிவுபடுத்துகிறார்கள். ஒருசெய்தி வெளியாகும்போது வாசகர்களின் மனநிலையை கூர்ந்து அவதானித்து அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அச்செய்திகளை மேலே கொண்டுசெல்கிறார்கள். உதாரணமாக சமீபத்திய மும்பைக் குண்டுவெடிப்பு முடிந்து இரண்டுநாட்கள் கழிந்ததும் பெரும்பாலான ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரமான குரல்களை கொட்ட ஆரம்பித்தன. சென்ற காலங்களில் தீவிரவாதிகளுக்குச் சப்பைக்கட்டு கட்டிய ஊடகங்களும் இதில் அடக்கம்.
*
இந்த நான்குவகை திரிபுகளுக்கும் உள்ளாகி வெளிவரும் செய்திகளை முழுக்க நம்பி அவற்றைக்கொண்டு அரசியல் ஆய்வுகளைச் செய்வதில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் சாதாரணமாக நாம் செய்வது அதைத்தான். இந்தியாவில் விவாதங்கள் அதிகமாக நிகழ்வது இதன்பொருட்டே. இத்தகைய விவாதங்களினால் ஒரு ஜனநாயகத்துக்கு பயன் இருக்கும் என்றே எண்ணுகிறேன். ஏனெனில் சமகால அக்கறை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை விசை. அரசியல் நோக்கர்கள் அதைப்பற்றி பேசுவது இயல்பே.
ஆனால் என்னைப்போன்ற படைப்பிலக்கியவாதிக்கு அது மிகபெரிய நேர விரயம். நம் மக்கள் சினிமா,அரசியல் இரண்டைப்பற்றியும்தான் பேச விரும்புகிறார்கள். அந்த தளம் சார்ந்து எது சொன்னாலும் அதைப்பற்றி மாற்றுக்கருத்துக்கள் உணர்ச்சிபூர்வமாகவும் நுண்ணலசல்களாகவும் வந்து குவியும். மேலும் தமிழ்நாட்டில் எதுவும் உச்சகட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. எந்தநிலை எடுத்தாலும் வசை உறுதி. இந்நிலையில் இதில் ஈடுபடும் எழுத்தாளன் தன் இலக்கியத்தை மொத்தமாக இழக்க வேண்டியதுதான்.
மேலும் செய்திகள் சூடாக இருக்கும்போது அதைச்சார்ந்த அனைத்து எழுத்துக்களையும் படித்து , அத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உட்கார்ந்து பார்ப்பதென்பது ஒரு படைப்பிலக்கியவாதி தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். அவற்றை அல்லும்பகலும் நுணுகி ஆராய்ந்து விவாதிக்கும் ஒருவருடன் படைப்பிலக்கியவாதி எளிதில் விவாதிக்கவும் முடியாது. அவன் செய்திநிபுணன் அல்ல. அவனுக்குச் சொல்ல இருக்கும் சில தளங்கள் உண்டு, அந்த எல்லையை அவன் தாண்டக்கூடாது.
ஒருசெய்தி ‘ஆறிப்போன’பின்பு செய்தியாளர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளுடனும் சாதாரணமாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தால் அச்செய்தியின் உண்மையான அகம் தெளிவாகும். எந்தெந்த சக்திகளால் அந்தச்செய்திகள் உருமாற்றப்பட்டிருந்தன என்று தெரியவரும். அது மேல்தளச் சித்திரத்துக்கு முற்றிலும் வேறானதாக இருக்கும். உடனடி ஊடகச்செய்திகளைச் சார்ந்து எழுதிக்குவித்தவர்களை எண்ணும்போது பரிதாபமாகவும் இருக்கும்.
ஒருசெய்தியின் வீரியம் குறைந்தபின் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக ஒரு எளிய பயணம் மேற்கொண்டால்கூட உண்மைச்சித்திரம் நமக்குக் கிடைக்கும். நான் பெரும்பாலும் அப்படி நேரில்செல்ல முயல்வதுண்டு
ஆகவே நான் செய்திகள் மீது உடனடியாகக் கருத்துச் சொல்வதில்லை என்ற நிலைபாட்டை கடந்த 20 வருடங்களாகவே மேற்கொண்டிருக்கிறேன். சில அபூர்வ தருணங்களில் மட்டுமே எனக்குச் சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறது, சொல்கிறேன். மற்ற தருணங்களில் என் காலகட்டத்தைப் புரிந்துகொள்ள நான் அறிவனவற்றைப் பயன்படுத்துகிறேன், அவ்வளவுதான்.
மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Jan 3, 2009
பத்துலட்சம் காலடிகள், வாசிப்பு
மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப இங்கே கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், நியதிகளும், விதிகளும், அமைப்புகளும், மதங்களும், சாதிகளும், எல்லைகளும் என அனைத்துமே சிறு சிறு தளர்வுகளும் அல்லது சிறு சிறு இறுக்கங்களுமாக தொடர்ந்து வந்திருக்கின்றனவேயொழிய, அவை ஒரு பொழுதும் இல்லாமல் இருந்ததில்லை. இனி, அப்படி இருக்கப் போவதுமில்லை. ஏனெனில், மனிதன் தன் வாழ்விற்கான அனைத்து பற்றுகளையும் பிடிப்புகளையும் இவைகளிடமிருந்தே உருவாக்கிக் கொள்கிறான். அது நேர்மறை, எதிர்மறை என இரு நிலைகளிலும் அவனை வழிநடத்திச் செல்கிறது.
அப்படியொரு எதிர்மறையான மனநிலையில் நின்று அனைத்தையும் பகடி செய்யும், நிராகரிக்கும், எதிர்க்கும், சிலாகிக்கும், அலட்சியப்படுத்தும் ஒரு மையக் கதாபாத்திரம் தான் ஔசேப்பச்சன். அவன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது பார்வையின் வழி கதை செல்கிறது.
ஔசேப்பச்சன் அவனது நண்பர்களுடன் இணைந்து மதுவின் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில், உருவாகும் உரையாடலின் வழியாகக் காட்சிப்படுத்தப்படுகிறது கதை.
மதுவின் மேன்மையில் ஆரம்பிக்கும் உரையாடல், சாதி, மதங்களின் வரலாற்று பண்பாடுகளைத் தொட்டு, பத்தேமாரி கப்பலின் அமைப்பில் வியந்து, அதன் கட்டுமானக் கலையில் திளைத்து, பெருமண் இரயில் விபத்தில் பயணித்து, ஒரு கொலையில் மையம் கொள்கிறது.
பின், அக்கொலையின் வழி, விரிந்து செல்லும் கதையில், வெளிப்படுவது முழக்க முழுக்க ஔசேப்பச்சனின் ஆளுமையே என்றால், அது மிகையில்லை. அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பால் அவனது மதிப்புகள், அவனது சந்தேகங்கள், அதைத் தொடர்ந்த அவனது செயல்பாடுகள் என அனைத்திலும் அவன் தான் பிரதானமாக நிற்கிறான்.
எதிர்மறை மனநிலை கொண்டவனாக இருந்தாலும் ஔசேப்பச்சன், அடிப்படையில் ஒரு நேர்மையாளன். அதனால் தான், இராதாமணியின் மரபு மீறிய நேர்மையைக் கண்டதில், அவன் திகைத்து நின்று, “சில சமயங்களில் மனித மனதை நேருக்கு நேராகப் பார்த்து நாம் நடுங்கி விடுகிறோம்.” என்கிறான். அப்துல்லா சாகிப்பின் சட்டம் மீறிய நேர்மையை அறிந்ததில், “அவன் ஒரு குழந்தை… என்ன இருந்தாலும்…” என்று பதைபதைக்கிறான்.
சிறந்த இரசனையாளனும் கூட. அழகின் அளவுகோலுக்கான மம்மூட்டியின் உவமையில், சிறு கீற்றுப் புன்னகையாவது, நம்முள் எழாமல் இருக்காது. மேலும், அதே அழகின் தன்மையைப் பற்றிய அவனது விவரணையின் போது, சாதிப்படிநிலைகளின் கலப்புகளைக் குறித்த, அவனது கூற்று, இரசனையின் ஆழமேயானாலும் கூட, அவனை ஒரு யதார்த்தவாதியாகவும் அதுவே சித்தரிக்கிறது.
இதில் குற்றவாளியைப் பிடிக்கும் உத்திகள் மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது. மையவலை, சுற்றுவலை, மடிவலை. அது போலவே தான், இக்கதையும் செல்கிறது. ஆனால், முதலில் மடிவலை, சுற்றுவலை, மையவலை என்று குவிந்து, பின் மையவலை, சுற்றுவலை, மடிவலை என்று விரிந்து செல்லும் கதை, ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்கிறது.
மொழி ஆளுமை மிக்க ஜெயமோகன், அவர்களின் எழுத்தின் வன்மையில் மிளிர்ந்த “பத்துலட்சம் காலடிகள்” முழுவதும் ஔசேப்பச்சனே நிறைந்து நிற்கிறான்.
சரளா முருகையன்
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
எஸ்.வி.ராஜதுரை வழக்கு- கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
பணிவான வணக்கங்கள்.
‘எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு’ – படித்தேன். அதன் இறுதி பத்தி என்னை உலுக்கிற்று
முரண் கொண்ட நிலையில், வீட்டில் பெரியவர்கள் உணர்ச்சி மேலீட்டில் சச்சரவு செய்துகொள்ளும் போது, மனதில் உயர்ந்தவரும், தன் அரண் என நினைத்தவருமாகிய ஒருவர், மனம் நெகிழ்ந்து இதயத்தின் ஆழத்திலிருந்து ஒன்றைக் கூறி நிறைவு செய்கையில் அங்கு ஒரு அமைதி தங்கும். அது ஆனந்தமற்ற ஒரு அமைதி. அதில், சச்சரவின் சாரம் அறியா, அவ்வீட்டின் குழந்தை அலமலந்து அலறும். அதைப்போல் ஆனேன்.
வழக்கு நிறைவுற்றது எனும் செய்தி நிறைவு தந்தது. கால மற்றும் பொருள் விரயம் இனி இல்லை.
தங்கள் மீதான அnபும், மரியாதையும் இன்னும் பல மடங்கு உயர்ந்தது.
கணநாதன்
திரு ஜெமோ,
உங்களுக்கும் எஸ்.வி.ராஜதுரைக்குமான நட்போ பகையோ எனக்கு முக்கியம் அல்ல. நீங்கள் கேட்ட ஒரு கேள்வி. அதைத்தான் பழையகால நேர்மையான இடதுசாரி எம்.எல் காரர்களும் கேட்டார்கள். ‘பெரியார் பற்றிய ஆய்வுக்கு WAC என்ற சர்வதேச கிறிஸ்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதி எதற்கு?” அதற்கு மட்டும் பதில் இல்லை. மற்ற எல்லா விஷயங்களும் பேசப்பட்டுவிட்டது
அர்விந்த் நாராயணன்
அன்பு ஜெயமோகன்,
எஸ்.வி.ராஜதுரை அவர்களுடனான வழக்குப்பிணக்கு முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. மார்க்சியத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்தான் என்றாலும், அதன் ‘அரசியல் வடிவ அதிகாரத்துவத்தையும்’, ‘சித்தாந்தக் குளறுபடிகளையும்’ பொதுச்சமூகத்துக்கு சான்றுகளோடு எடுத்துச் சொன்னவரும் அவர்தான். கோட்பாட்டைத் தலையில் சுமந்து கொண்டு ஒரே இடத்தில் நின்றுவிடாமல் இன்றுவரை தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் எழுதியும் வருபவர். நான் பெரிதும் மதிக்கும் அறிவியக்கவாதிகளில் முதன்மையானவர்.
எஸ்.வி.ராஜதுரையின் அந்நியமாதல் நூல் மிக முக்கியமானது. மார்க்ஸ் 1844-இல் எழுதிய குறிப்புகளைக் கொண்டு மார்க்சியத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்தி இருப்பார் அவர். ஒரு புனைவை வாசிக்கும் ஆர்வத்துடன் அந்நூலின் கட்டுரைகளைப் பலமுறை வாசித்திருக்கிறேன். அடிப்படையில் மார்க்சியர் என்பதால் எங்கு சென்றாலும் அவர் திரும்பவும் மார்க்சிடமே வந்துவிடுவார். ஆனாலும், மார்க்சே உலகின் ஒரே ஒரு தீர்க்கதரிசி என்பதாகப் பிலாக்கிணம் செய்பவரல்ல என்பதே அவரின் சிறப்பு. வாசகர்கள் வாய்ப்பு அமைத்து அந்நியமாதலை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜார்ஜ் தாம்சனின் மூன்று முக்கியமான நூல்களைத் தமிழுக்கு அளித்த பெருமை எஸ்.வி.ஆரையே சாரும். மனித சாரம், முதலாளித்துவமும் அதன் பிறகும், மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை எனும் மூன்று நூல்களும் முக்கியமானவை. மார்க்சியத்தை வரலாற்றுப் பின்னணியோடும், பல்வேறு சித்தாந்தங்களின் ஊடாகவும் பயில விரும்புபவர்கள் கட்டாயம் வாசித்தாக வேண்டும். மொழிபெயர்ப்பில் புலப்படும் எளிமைத்தன்மை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய விளக்க நூல் ஒன்றை எஸ்.வி.ஆர் மொழிபெயர்த்து இருக்கிறார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு. அவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலைச்சொற்களை வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளக்குவதோடு அக்கால உலகச்சூழலையும் தெளிவாகச் சித்திரப்படுத்தி இருப்பார். மார்க்ஸ்-க்கு முன் பின்னான காலச்சூழலை உற்றுநோக்கி எழுதப்பட்டிருக்கும் அவ்விளக்க நூலை ஒரு மார்க்சியன் கட்டாயம் வாசிக்க வேண்டும்(உலக வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் வாசிக்கலாம்). இதுவரை வாசித்திராத தோழர்கள் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் காலப்பின்புலம் பற்றிய மேலதிகத் தெளிவு கிட்டும்.
பெரியார் மீது எனக்கு மதிப்புண்டு. அரசியல் பெரியாரியத்தின் மீது இல்லை. ஏனென்றால், பெரியார் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பரிசீலித்துக் கொண்டே இருந்தவர். ஒரேயடியாகத் தனது தரப்பு இதுதான் என அவர் முன்வைத்ததில்லை. காந்தியும் அப்படியாகவே இருந்தார். இருவரும் தங்களின் கருத்துக்களைத் தவறு என ஒப்புக்கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ தயங்கியதே இல்லை. பெரியாரியவாதிகளோ அப்படி இல்லை. ஒரே பிடியில் வம்படியாய் நிற்பவர்கள்(விதிவிலக்குகளைத் தவிர்த்து விடலாம்). மத அடிப்படைவாதிகள் ‘இந்துமதத்தை’க் கொச்சைப்படுத்தி இருப்பது போன்றே, பெரியாரிய அடிப்படைவாதிகள் ‘பெரியாரின் சிந்தனைகளை’ச் சீரழித்து இருக்கின்றனர்.
பெரியாரியத்தைத் தமிழ்அறிவுச் சமூகத்தில் நிலைநிறுத்தியதில் எஸ்.வி.ராஜதுரையின் பங்கு மகத்தானது. அவரின் பெரியாரியமும், தற்கால அரசியல் பெரியாரியமும் ஒன்றன்று. அதற்காக அவர் மேற்கொண்ட அறிவுழைப்பு மதிக்கத்தக்கது. பெரியார் : சுயமரியாதை சமதர்மம் எனும் நூலின் வழியாக பெரியாரை ஆய்வுவாசிப்புக்கு உட்படுத்தியவர் அவர். அந்நூலை எங்கள் ஊருக்கு அருகே உள்ள கிராமநூலகம் ஒன்றில் அமர்ந்து முழுமையாய் வாசித்திருக்கிறேன். பெரியாரின் செயல்பாடுகளை மார்க்சியப் பார்வையில் அணுகி இருக்கும் எஸ்.வி.ஆரின் கட்டுரைகளை இன்றைக்குப் பெரியாரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. பெரியாரின் சிந்தனைகளை மறுவிசாரணை செய்வதற்கான வாயில்களைத் திறந்து விட்டதாகவே அம்முயற்சியைக் கருதுகிறேன்.
பெரியாரியம் தொடர்பான அவர் கட்டுரைகளை விமர்சிக்கும் சூழலை மேலதிகமாய் நாம் வளர்த்தெடுக்கவில்லை அல்லது தவறவிட்டு விட்டோம். அதை ஒரு அறிவுக்குழு செய்திருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்த்தேசிய ஆய்வுக்களத்தில் இருப்பவர்கள் அப்படியான ஆய்வை முன்னெடுத்துச் சென்றிருந்தால், ஒரு ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்திருக்கும். அதன்வழி பெரியார் ஒரு தமிழ்த்தேசிய விரோதியாகக் கருதப்படும் அபத்தமாவது களையப்பட்டிருக்கும்.
எஸ்.வி.ராஜதுரையின் சொல்லில் நனையும் காலம் கட்டுரைத் தொகுப்பைச் சமீபமாய் வாசித்தேன்(அடையாளம் 2003). மார்க்சியப் பார்வையிலான கலை இலக்கியம் தொடர்பான கட்டுரைகள். அத்தொகுப்பில் பல கட்டுரைகள் முக்கியமானவை. எனக்கு இருகட்டுரைகள் பிடித்திருந்தது. ஒன்று, தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய கட்டுரை(தஸ்தாயேவ்ஸ்கி:பலகுரல் தன்மை). மற்றொன்று, கோ.கேசவனின் வறட்டு மார்க்சியத்தைத் கட்டுடைப்பது(ஸ்தானோவிசமும் தமிழக எதிரொலிகளும்).
கடந்த இரு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மார்க்சியர்களை, பெரியாரியர்களைச் சந்தித்திருப்பேன். அச்சமயம் அவர்களிடம் நான் தவறாது ஒரு கேள்வி கேட்பேன், “எஸ்.வி.ஆரைத் தெரியுமா?”. ஒருசிலரைத் தவிர பலருக்கு அவர் யார் என்பதே தெரியவில்லை. இதுதான் நம் அறிவுச்சூழல். பல வறட்டு மார்க்சியர்களுக்கு கோ.கேசவனையே தெரியவில்லை. சங்கிகளோடு மல்லுக்கட்டுவதையே புரட்சி என நம்பும் தலைமுறையை வேகமாக உருவாகி வருகிறது. இப்படியான சூழலில், எஸ்.வி.ஆர் போன்றோரை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும் அவசியம்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.
ஈரோடு வாசகர் சந்திப்பு- கடிதம்
அன்புள்ள ஜெமோ,
கடந்த பத்து வருடமாக உங்கள் வாசகனாக இருந்தும், உங்களை பல விழாக்களில் கூட்டத்தில் ஒருவனாக சந்தித்து இருந்தாலும், உங்களை தனியே சந்தித்து பேச வேண்டும் என்ற ஆவலும் பேச முடியும் என்ற நம்பிக்கையும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் வந்தது. பெருந்தொற்று காலத்தில் zoom வழி சந்திப்பில் உங்களிடம் தனியே அரை மணிநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. வெண்முரசு கதாபாத்திரங்கள் குறித்தும் ,குறிப்பாக பூரிசிரவஸ் ,மற்றும் வெண்முரசில் வரும் உணவு,மற்றும் நிலங்கள் குறித்து ,மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் உங்களுடன் பேசியது மிகவும் இனிமையான நினைவு. ஆனால் அந்த சந்திப்பு முடிந்த பிறகே ,என் பதட்டத்தாலும் , மிகை உற்சாகத்தாலும் ,அந்த சந்திப்பின் பெரும்பாலான நேரம் நானே பேசியிருப்பது எனக்கே புரிந்தது. அடுத்த வாசகர் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொண்டு உங்கள பேச்சை கேட்க வேண்டும் என்று அன்றே முடிவுசெய்து விட்டேன். அதன் படி கடந்த பிப்ரவரி 19,20 வாசகர் சந்திப்பிற்கு விண்ணப்பித்தேன் .சற்று தாமதமாக விண்பித்ததால் மார்ச் 5,6 நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
சந்திப்பின் இரண்டு நாட்கள் முழுவதும் நீங்கள் பேசி கொண்டே இருந்தீர்கள். நிற்கையில் ,நடக்கையில்,அமர்வில்,உணவு இடைவேளையில்,தூங்குவதுற்கு முன்,பின். இனிப்பை சுற்றி வரும் எறும்புகள் போல உங்களை சுற்றி கொண்டிருந்தோம் .பல தலைப்புகள்,குறித்து நீங்கள் பேசி கொண்டிருந்தாலும் முறையான அமர்வில் பேசிய முக்கியமான இரண்டு விஷயம் ,ஒரு கருத்தை எப்படி விவாதிப்பது மற்றும் சிறுகதைக்கான அடிப்படை கூறுகள்.என் புரிதலுக்கேற்ப அவையிரண்டையும் கீழ்கண்டவாறு தொகுத்து கொண்டேன்.பிழை இருந்தால் மன்னிக்கவும் .
ஒரு கருத்தை பொதுவெளியில் முன்வைக்கும் பொழுது முதலில் நாம் சொல்ல வேண்டியது நம் கருத்தின் முடிவு,சாராம்சம் அல்லது நம் thesisஇன் conclusionஐ .அதன் பிறகே இந்த முடிவை நாம் ஏன் அடைந்தோம் என்பதற்கான காரணங்களை சொல்லவேண்டும் .நாம் கருத்தை முன்வைக்கும் பொழுது மற்றவர் அந்த கருத்தை மறுப்பதற்கான வழிகளுடனே ஒரு கருத்து முன்வைக்க படவேண்டும். Subjective ஆக முன்வைக்க படும் கருத்துகள் மேல் எந்த விவாதமும் நடத்த முடியாது.அது ஒரு வகை நம்பிக்கை மட்டுமே.நம் கருத்து ஒரு தரப்பின் கருத்தையோ விவாதத்தையோ மறுத்து வைக்க படும் பொழுது , நாம் மறுக்கும் தரப்பின் கருத்தை சுருக்கமாக கூறி[பரபக்கம் ] அதை உறுதி செய்தபின்னே,அதற்க்கு மேல் நம் கருத்தை முன்வைக்க வேண்டும்.
ஒரு கருத்தை ஒருவர் சொல்லும் பொழுது எக்காரணம் கொண்டும் அதை இடை மறித்து, ஐயங்களையோ மாற்று கருத்துக்களையோ சொல்ல கூடாது. சொல்பவர் தன் கருத்தை முழுவதுவாக சொல்லி முடித்த பின்தான் நாம் பேச வேண்டும்.ஒரு கருத்தை நாம் கேட்கும் பொழுது நம் மனதிற்குள் அதற்கு எதிர் விவாதங்களை செய்யாமல் சொல்லப்படும் கருத்தை முழுவதும் முழு மனதோடும் பெற்று கொள்ள வேண்டும் .அதன் பிறகே அது குறித்தான தர்க்கங்களை கேள்விகளை மனதிற்குள் எழுப்ப வேண்டும்.ஒருவர் ஒரு கருத்தையோ அதன் காரணங்களையோ எந்த முறையில் முன்வைக்கிறாரோ அதே முறையில் தான் அந்த காரணங்களையோ கருத்தையோ நிராகரிக்க வேண்டும். Association fallacy போன்றவற்றை விவாதங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
இவற்றின் அடிப்படையில் ஒருவர் இன்றைய சூழலில் எவ்வாறு வரலாறு,அரசியல் கருத்துக்கள்,பொய்கள் ஆகிய வற்றை எதிர் கொள்ளவேண்டும், அதற்கான சமூக தேவை என்ன என்று தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.உங்கள் மொழியில் “மண்டைக்குள்ள காத்தோட்டம் இருக்க ஆளுங்க கொஞ்சம் பேராவது இருக்கனும்ல “…
இன்றுவரை எனக்கு எழுதும் எண்ணம் தோன்றியதில்லை. அதே போல் ஒரு வாசிப்பை என்னளவில் பிடித்திருக்கிறது இல்லை என்பதற்கு மேல் எதுவும் சொல்ல தெரியாது .ஆனால் அங்கு வந்த நண்பர்கள் எழுதிய கதையின் மீது நடந்த விவாதங்களை கொண்டு என்னால் இனி ஒரு சிறுகதை குறித்த தேவையான பின்னூட்டங்களை அளிக்க முடியும் என்று நம்புகிறேன் .மேலும் என்றேனும் எழுத தோன்றினால் இந்த விவாதங்களை கொண்டு ஒரு நல்ல சிறுகதையை எழுத முடியும் என்று நம்புகிறேன்..
ஒரு சிறுகதை முடிவில் தான் தொடங்குகிறது அல்லது வேறொன்று ஆகிறது ….அங்கு அது ஒரு புது உணர்வின் உச்சத்தையோ அல்லது கவித்துவ உச்சத்தையோ அடைய வேண்டும்..ஒரு சிறுகதை அதன் முடிவின் மிக அருகில் தொடங்குவது நல்லது..சிறுகதையின் தொடக்கம் மிக முக்கியமானது.தன் மைய கருவில் தொடங்கி மைய கருவின் ஊடே அது பயணிக்க வேண்டும்… தேவையற்ற வர்ணனைகள் உரையாடல்கள் தவிர்க்க பட வேண்டும்..வாசகன் தன்னளவில் கண்டடைவதற்கான விஷயங்கள் இருக்க வேண்டும் .
இந்த இரண்டு நாட்களில் எங்களுக்கு, O.Henryயில் ஆரம்பித்து ஜெயகாந்தன் ,அசோகமித்திரன் என பல சிறுகதைகளை கூறி அவற்றின் நுட்பங்களை உணரவைத்தீர்கள் . மேலும் எழுதுவதற்கு எந்தனை தளங்கள் உள்ளது,வரும் காலகட்டம் எத்தனை புதிய மனித உணர்வுகளை ,உருவாக்க இருக்கிறது என்பதை wachowski sisters மற்றும் பல தனிப்பட்ட அனுபவங்கள்,உதாரணங்கள் மூலம் விளக்கினீர்கள்.
அமர்வுகளை தவிர்த்து வள்ளலார், தேவதாசி ஒழிப்பு,போலி வரலாறுகள், கல்வி ,திரைப்பட அனுபவங்கள்,ஆளுமைகள் என பல தளங்களை உரையாடல் தொட்டு சென்றது.நானும் சீராவும் இரவு உங்களுடன் கிளம்பியதால் உங்களுடன் தனியாக சில மணி நேரம் செலவிட கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. அந்நேரத்தில் நீங்கள் உங்கள் பால்ய கால நினைவுகள் ,பயண நினைவுகள் ஆகியவற்றை மிகவும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டீர்கள் .
இரவு மாடியில் உள்ள குடிலில் ,நண்பர்களுடன் , மிதமான குளிரில் ,பறவைகளின் ஒளியுடன் ,இயற்கை சூழலில் நிறைவாக தூங்கினேன் .அதிகாலையில் பின்தொடரும் பிரம்மதின் குரல்கள் கேட்டு கண் விழித்தது ஒரு பிரகாசமான நட்சத்திரத்தில் .அது என்ன நட்சத்திரம்,என்ன திசை என்றெல்லாம் தெரியவில்லை . ஆனால் “துருவன்” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் என் தூக்கத்தில் நிலை கொண்டேன்.இது ஒரு புகைப்படம் போல என்றும் என் நினைவில் இருக்கும் . நீச்சல் தெரியாததால் கிணற்றில் குளிக்க முடியவில்லை என்பது தான் ஒரே வருத்தம்.
தற்பொழுது “எழுதழல்” படித்து கொண்டிருக்கிறேன் .அதில் ஆசிரியரின் “அருகமைதல்” குறித்து அழகான விளக்கங்கள் உண்டு. இந்த சந்திப்பிற்கு நான் வர முடிவாகிய நாளில் இருந்து எனக்குள் ஓடிய ஒரு வார்த்தை “அருகமைதல்”. இந்த இரண்டு நாட்களில் முடிந்தவரை உங்கள் “அருகமைந்தேன்”. விடை பெருகையில் புகை படம் எடுத்து கொண்ட பிறகு உங்களை தழுவி விடைகொடுக்க ஆசை என்றாலும், ஏனோ முடியாததால், அரை குறையாக ஒரு கையால் தழுவி நன்றி என்று கூறி விடை பெற்றேன் . அனைத்திற்கும் நன்றி ஜெமோ.
நிகழ்வு நடந்த இடம்,பயண திட்டம் ,ஈரோடு வந்து இறங்கியது முதல் திரும்பி செல்வது வரை அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியாக செய்ய பட்டிருந்தது . இந்நிகழ்வை மிக சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பின்குறிப்பு: நிகழ்வின் ஒரே குறை என்றால் உணவு. மூன்று வேலையும் இவ்வளவு சுவையான உணவு வழங்கி அமர்வில் உட்காரவைப்பது, சிறந்த வாசகனை கண்டுபிடிக்க வைக்கும் சோதனை என்றே நம்புகிறேன் . முதல் நாள் இரவு முழுவதும் பேருந்தில் தூங்காமல் பயணம் செய்து வந்து காலை சுவையான பொங்கலும் ,வெங்காய ஊதப்பமும் உண்டுவிட்டு உங்கள் அருகமையை முடியாமல், முதல் அமர்வில் நின்று கொண்டே இருக்க வேண்டியதாயிற்று . என்னை போல் உணவே பிரம்மம் என்று நம்பும் சிலரும், நின்று கொண்டே முதல் அமர்வை கேட்டது சிறு ஆறுதல். சுதாரித்து கொண்டு அடுத்த வேலையில் இருந்து உணவை குறைத்து அருகமைந்தேன்.
அனைத்திற்கும் நன்றி,
பிரதீப்
அளவை- சட்ட இதழ்
அளவை இணைய பத்திரிக்கையின் மூன்றாவது இதழ் (15.3.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன.
இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஈரோட்டிின் சிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவரான திரு. T. செந்தில் குமார் அவர்களின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. இதுபோக நெல்சன் மண்டேலாவின் வாக்குமூலம். முதல் 4 பகுதிகள் ஒரு சேர திரையில் தெரியும். More posts இணைப்பை சொடுக்கினால் பிற 3 தலைப்புகள் திறக்கும்..
முந்தைய இதழை படிக்க அறிமுகம் பகுதியின் இறுதியில் இணைப்பு உள்ளது.
A.S. Krishnan, advocate, Erode.
March 14, 2022
குமரித்துறைவியின் திருவிழா,ஆரல்வாய்மொழி
இன்று நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். நண்பர் ஒருவர் அழைத்து ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பங்குனி திருவிழாவுக்குச் அவரும் வருவதாகச் சொன்னார். ஆகவே சேர்ந்தே போகலாம் என ஒரு திட்டம் போட்டேன். மார்ச் 19,20 இருநாட்களிலும் விழா நடைபெறுகிறது.
20ஆம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்திலும் அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது .இரவு 7 மணிக்கு அன்னதானமும் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில்பவனி வருதலும் நடைபெறுகிறது.
ஒரு திட்டம். 19 ஆம்தேதி மாலை நான் ஆரல்வாய்மொழியில் ஏதாவது விடுதியில் அறைபோடுகிறேன். வரவிரும்பும் நண்பர்கள் வரலாம். மறுநாள் அதிகாலையிலும் வரலாம். காலை முதல் இரவு வரை விழாவில் பங்கெடுத்தபின் இரவில் பிரியலாம். வரவிரும்பும் நண்பர்கள் மின்னஞ்சல் செய்யவும்
ஜெ
jeyamohan.writerpoet@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers




