Jeyamohan's Blog, page 815
March 8, 2022
கனவில் கேட்டது…
கார்லேஅன்புள்ள ஜே,
நலம்தானே ? இன்று பல நாட்களுக்கு பிறகு ஒரு கிளாஸ் ஒயின் அருந்தி மதிய உறக்கம் . அதில் ஒரு கனவு . நீங்கள் சாரம் உடுத்தி லட்சுமி மணிவண்ணன் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் . உடன் சில வாசகர்கள். அவர்களில் ஒருவனாக நான். ஆனால் அது நாகர்கோவில் அல்ல . பனைமரங்கள் சூழ்ந்த செம்மண் படிந்த எங்கள் நெல்லை பூமி . உரையாடல் முடிந்த உடல் தாங்கள் பேருந்து பிடிக்க கிளம்புகிறீர்கள். வாசகர்கள் எல்லோரும் எழுகிறார்கள். நீங்கள் ஒருவர் போதும் என்கிறீர்கள். நான் குதித்துக்கொண்டு தங்களுடன் ஓடி வருகிறேன்.
தங்களுடன் கேட்கவேண்டும் என்று நான் மனதில் வைத்திருக்கும் கேள்விகளில் ஒன்றை கேட்கிறேன். பூர்வபவுத்தம் குறித்து தாங்கள் எழுதியது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமத கடவுள்களுக்கான சிலையோ அல்லது கோவில் இருந்ததற்கான தொல்லியல் தரவுகள் இருக்கின்றனவா என்ற கேள்வி உங்களிடம் கேட்டேன். உடனே உறக்கம் கலந்துவிட்டது . பதில் வராவிட்டாலும் நீங்கள் கனவில் வரும் நாள் எல்லாம் உற்சாகமான தினம்தான்.
அன்புடன்
கிஷோர்
கருடத்தூண் விதிஷாஅன்புள்ள கிஷோர்,
கனவுகளிலும் உரையாடல் தொடர்வது நல்ல விஷயம்தான். நான் என் ஆசிரியர்களுடனும் நண்பர்களுடனும் கனவில் நிறையவே உரையாடுவதுண்டு. (அதற்கு ஒயின் ஒரு குறுக்குவழி அல்ல)
உங்கள் கேள்விக்கான பதில். பெருந்தெய்வங்கள் என நீங்கள் உத்தேசிப்பவை எவை? சிவன்,விஷ்ணு, புத்தர், மகாவீரர்- இல்லையா?
எனில் நமக்கு பொமு 3 ஆம் நூற்றாண்டில், சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இருந்தே சிலைகளும் கோயில்களும் சைத்தியங்களும் கிடைக்கின்றன. விதிஷாவிலுள்ள கல்தூண் கொடிமரம் ஹிலியோடாரஸ் தூண் (Heliodorus pillar) என அழைக்கப்படுகிறது. இது பொமு 113 ஆம் ஆண்டைச் சேர்ந்தது (2013 ஆண்டுகள் தொன்மை) என கல்வெட்டுகள் வழியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் உச்சியில் கருடன் இருக்கிறான். விஷ்ணு ஆலயம் ஒன்றுக்கு அலக்ஸாண்டர் வழிவந்த கிரேக்க அரசப்பிரதிநிதி அளித்த கொடை அது. கல்வெட்டில் தெய்வங்களின் தெய்வமான வாசுதேவனின் ஆலயத்திற்கு அளிக்கப்பட்டது அந்த தூண் என பிராமி லிபியில் அமைந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதாவது நீங்கள் குறிப்பிடும் பெருந்தெய்வம்
இச்சான்று விஷ்ணு வழிபாடும் விஷ்ணுவுக்கான கோயில்களும் இரண்டாயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகச் செல்வாக்காக இருந்துள்ளன என்பதற்கான சான்று.
மகாராஷ்ட்ராவிலுள்ள கார்லே பௌத்த விகாரம் பொமு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதாவது 2300 ஆண்டுகள் தொன்மையானது. மிகமிக அழகாக முழுமையாகச் செதுக்கப்பட்ட குகைவிகாரம் அது. அருகே உள்ள குகைகளான ஃபாஜா போன்றவையும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தொன்மையான புத்தர் சிலைகள் உள்ளன.
குஜராத்தில் பாலிதானா சமணர்களின் வழிபாட்டு மையம். அங்கே 2500 ஆண்டுகளாக ஆலயங்கள் இருந்ததை அகழ்வுகள் காட்டுகின்றன. இந்தியாவெங்கும் ,தமிழகம் உட்ப்ட சமணர்கள் தங்கிய இயற்கைக் குகைகள் உள்ளன அங்கே புடைப்புச் சிற்பங்களாக உள்ள தீர்த்தங்காரர்கள் பலர்.
சிலப்பதிகாரம் பொயு 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டது. அதில் மணிவண்ணன் கோட்டம் போன்று பல பெருந்தெய்வக் கோயில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. திருவரங்கம், வேங்கடம் போன்ற கோயில்கள் பேசப்படுகின்றன.
நமக்கு இன்று கிடைக்கும் பெரும்பாலான சிற்பங்களும் ஆலயங்களும் கல்லால் ஆனவை. கல்லில் கட்டிடங்கள் செய்யத் தொடங்குவது பொயு ஒன்றாம் நூற்றாண்டில்தான். உண்டவில்லி குகைகள்தான் தென்னகத்தில் தோன்றிய தொன்மையான குடைவரைகள். பொயு ஏழாம் நூற்றாண்டில்தான் தென்னகத்தில் கல்லில் கட்டிடங்கள் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.
அதற்குமுன் மரம், மண்ணில் கட்டப்பட்ட ஆலயங்கள் போர்களிலும் காலத்திலும் அழிந்துவிட்டன. சோழர்காலத்தில் சுடுமண்செங்கல் கோயில்கள் பெரும்பாலானவை கற்கோயில்களாக ஆக்கப்பட்டன. செங்கற்றளியை கற்றளியாக்குதல் பல்லவர், சோழர், பாண்டியர்களின் திருப்பணியாக ஐநூறாண்டுக்காலம் இங்கே நடைபெற்றது. ஆகவே அதற்கு முந்தைய ஆலயங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
ஜெ
பின்தொடரும் நிழலின் குரலும் ரெஜி சிரிவர்த்தனேயும்
ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ புதினத்திற்கான புதிய பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இதற்கான முன்னுரையின் ஒரு பகுதியில் ஜெ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
…..இடதுசாரி அறிவுலகில் இத்தனை பரிச்சயம் இருந்தும் ஸ்டாலினிச அழிவுகள் பற்றிய எளிய தகவல்கள்கூட எனக்கு சுந்தர ராமசாமியின் அறிமுகம் மூலமே கிடைத்தன. பிற்பாடு அவர் மகன் கண்ணனுடனான உரையாடல்கள் உதவின. பிறகு நூல்கள். நூற்பட்டியலை இங்கு தர விரும்பவில்லையென்றாலும் சேரன் தொகுத்த ‘ரெஜிசிரிவர்த்தனே’யின் சோவியத் ருஷ்யாவின் உடைவு என்ற கட்டுரை நூல் இந்நாவலுக்கு நேரடியான தூண்டுதலாக அமைந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்…
ஜெ. குறிப்பிட்டுள்ள அந்த நூலை (சோவியத் ருஷ்யாவின் உடைவு) கீழ்கண்ட இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
ஆர்வமுடையவர்களுக்காக.
சுரேஷ் கண்ணன்
அயோத்திதாசரியம் ,ஒரு கடிதம்
அன்பு ஜெயமோகன்,
பேராசிரியர் பா.சஅரிபாபு-வின் ஒருங்கிணைப்பில் வெளியாகி இருக்கும் நூல் டி.தருமராஜின் அயோத்திதாசரியம்(கிழக்கு). ஓராண்டு கால உழைப்பில் இத்தொகுப்பு நூல் தயாராகி இருக்கிறது. பேராசிரியர் தருமராஜின் அயோத்திதாசர்(பார்ப்பனர் முதல் பறையர் வரை) நூல் வெளியீட்டு நிகழ்வு உரைகள் மற்றும் அந்நூல் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்திருக்கிறார் அரிபாபு. உங்களின் அணுக்கமான வாசகர் அவர். பபூன் எனும் வலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். இன்னும் அவரை நேரில் சந்தித்ததில்லை. பலமுறை அலைபேசியில் உரையாடி இருக்கிறேன்.
தமிழக அறிவுச் சூழலில் இன்னும் கவனம் பெற்றிருக்க வேண்டிய நூல் அயோத்திதாசர். டி.தருமராஜ் பல காலகட்டங்களில், பல அமர்வுகளில் எழுதியவற்றின் தொகுப்புநூல். தாசரின் படைப்புகளை ஆழமாய் வாசித்து, உட்செரித்து நிதானமான மனநிலையில் எழுதப்பட்ட கட்டுரைகள். நடைமுறையில் நம்மிடம் இருக்கும் ’ஆவண வரலாறு’ பற்றிய நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்கும் தீர்க்கம். தாசரை ஒரு ‘தலித சிந்தனையாளர்’ என நிறுவ ‘தலித் ஆராய்ச்சியாளர்கள்’ முயன்று கொண்டிருந்த வேளையில் அவரை ‘வெகுமக்கள் நிகழ்வாக’ அடையாளப்படுத்த விரும்பியவர் தருமராஜ். ஒரு கல்விப்புலப் பேராசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றால் நம்பவே முடியாது. வழக்கமான ஆய்வுக் கட்டுரை மொழியில் இருந்து விலகி புனைவின் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருப்பார்.
தாசரை ஒரு கோட்பாட்டாளராக அறிமுகப்படுத்தி தருமராஜ் ‘தலித் அரசியல்’ செய்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால், தொலைக்காட்சி விவாதங்களில் ‘தலித் சிந்தனையாளர்’ எனும் அடைமொழியோடு அவரை அமர வைத்திருப்பார்கள். ‘தலித் அரசியல்’ மேடைகளில் விருதுகளும் கெளரவமும் கிடைத்திருக்கும்(சொல்ல முடியாது, ரவிக்குமாரைப் போல எம்.பி கூட ஆகி இருக்கலாம்). தாசரின் சிந்தனைகளால் ஊக்கம் பெறும் தருமராஜ்-க்கு அவரின் சிந்தனை முறைமை மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்த வியப்பு எழுகிறது. அவ்வியப்பைப் பின் தொடர்ந்து செல்லும்போது பல அனுபவங்கள் உள்நிகழ்கின்றன. அவற்றைத் திக்கித் திணறி நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதனாலேயே, அவரை நம் ‘அறிவுச்சூழல்’ சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்து அடிப்படைவாதத்திற்கு முட்டுக் கொடுப்பதுதான் உங்கள் நோக்கமாக இருந்தால் நிச்சயம் ஒரு ‘இந்து அமைப்பில்’ உங்களை இணைத்துக் கொண்டிருப்பீர்கள். தலித் அடிப்படைவாதத்திற்கு வக்காலத்து வாங்குவது என்று முடிவெடுத்திருந்தால், டி.தருமராஜும் அங்ஙனம் ஒரு ‘தலித் அமைப்பில்’ தன்னை இணைத்துக் கொண்டிருப்பார். அதைத்தான் ’அறிவுச்சமூகமும்’ விரும்புகிறது. ’உண்மையை’த் தெரிந்து கொள்வதற்கான உரையாடலை மேற்கொள்ளும் உங்களைப் போன்றோரைப் புரிந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை. உங்களைத் திரித்துக் கபடி வேறு ஆடி விடுகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பது நம் வேலை இல்லை என்றாலும், அவர்களின் வழி சிந்தனை உலகுக்குள் நுழையும் இளைஞர்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
தருமராஜ்-க்கு வருவோம். திருநீறு மந்திரித்துக் கொடுக்கும் தாசரே, தனது சாதிக் குழந்தைகள் ஆங்கிலக்கல்வி பெற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார். சிந்தனையில் மரபையும், செயல்பாட்டில் நவீனத்தையும் கொண்டிருந்த அவரின் வாழ்வைக் கவனித்த தருமராஜ் முதலில் ஆச்சர்யமே அடைந்திருக்கக் கூடும். போகப்போக, தாசரின் ஆக்கங்களை ‘நவீன ஆய்வுக் கருவிகள்’ வழி புரிந்து கொண்டு விடவே முடியாது எனும் தெளிவுக்கு வருகிறார். புராண மொழியில் தனது சிந்தனைகளைத் தாசர் சொல்ல வேண்டியதன் தேவையை உணர்ந்த பொழுதே.. தருமராஜ் அவரை ‘தமிழ் நாட்டுப்புறவியலின்’ தலைமகனாக்குகிறார்(தமிழ் நாட்டுப்புறவியல் நூலை வாசகர்கள் வாசிக்க வேண்டுகிறேன்). வழக்காறுகளைக் கொண்டு வரலாற்றுக் கதையாடல்களில் மறைந்திருக்கும் அரசியல் திரிபுகளைப் பொதுவெளிக்குக் கொண்டு வர தாசர் முயற்சித்திருக்கும் பாணியை விடாமல் வியக்கிறார்.
அரிபாபுசமூக வரலாற்றில் சம்பவங்கள் பெரும்பாலும் கருப்பு வெள்ளையாகவே இருக்கும். மேலும், அவை ஒற்றைத்தளத்தின் மீதே பொருத்தப்பட்டிருக்கும். மார்க்சியத்தில் சமூக வரலாறு கருப்பு முதலாளிகளுக்கும், வெள்ளைத் தொழிலாளிகளுக்குமானது; வர்க்கத்தளத்தை மட்டுமே சார்ந்திருப்பது. மார்க்சே வர்க்கம் சாராத ஒடுக்குமுறைகள் பற்றியும் பேசி இருக்கிறார். என்றாலும், நடைமுறையில் வர்க்கங்களின் மோதலாகத்தானே சமூகவரலாறைத் தொடர்ந்து நிறுவி வருகிறார்கள். நடைமுறைச் ‘சமூகச் சீர்திருத்த வடிவங்களில்’ இருக்கும் கோளாறுகளைத் தாசரே தொட்டுக் காட்டுகிறார். ஆனால், அவற்றை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பகுத்தறிவியக்கவாதிகள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வரலாறு இருமைகளின் முரண்பாடுகளாகவே நம்பப்பட்டது(இப்போதும் சூழலில் பெரிய மாற்றமில்லை). அதன் அடிப்படையிலேயே சமூகத் தீர்வுகளும் முன்மொழியப்பட்டன. சமூக வரலாற்றை விளக்க முயன்ற மார்க்ஸ்-ம் அதை வர்க்கங்களின் வரலாறு என்றே சொன்னார். சமகாலச் சமூச்சிக்கல்களை ஆராயும் வகையிலேயே வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை மார்க்ஸ் பயன்படுத்தினார். முதலீட்டிய அமைப்பின் சாரத்தைக் கண்டறிய முயன்ற மார்க்ஸ், சமூக மனிதர்களை பொருளியல் அடிப்படையில் வர்க்கங்களாகப் பிரிக்கிறார். இது ஒரு அவசியமான அவதானம். இதுவே முழுமுதல் பார்வை அன்று. மார்க்ஸ்-ம் தனது விளக்கத்தை அப்படி தீர்மானமாய்க் கொள்ள வற்புறுத்தி இருக்கவில்லை.
சமூகப் பொருளியல் தளத்தை அறிய வேண்டுமானால், மார்க்சியமே உதவும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம், சமூகத்தின் அனைத்துத்தளங்கள் பற்றிய வெளிச்சங்களையும் மார்க்சியப்பார்வைக்குள் குறுக்கிச் செருகுவது முரட்டு பக்தியாகவே இருக்க முடியும். இப்பார்வை அனைத்து இயங்களுக்கும் பொருந்தும். இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். எந்தவொரு இஸமும் பயனற்றது அன்று. சமூகத்தின் பன்முகச் சிந்தனைக் கோணங்களை இஸங்களே நமக்குத் அடையாளம் காட்டுகின்றன.
கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். அது நம் முகத்தைக் காட்டுகிறது. அதை வைத்து கண்ணாடி நம் முகத்தை மட்டுமே காட்டும் எனச் சொல்லிவிட முடியுமா? இன்னும் இப்படியான அவலத்திலேயே கோட்பாட்டாளர்களும், வரலாற்றாசிரியர்களும், கள ஆய்வாளர்களும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். சிலர், தங்கள் அரசியல் கணக்குகளுக்கு கோட்பாடுகளைத் திருகலாக்கிப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். இவர்களின் வறட்டுத்தனத்துக்குப் பலியான முன்னோடிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
தாசருக்கு வருவோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் அவர். தமிழன் இதழ்களின் ஆசிரியர். அக்காலத்திய பெளத்த அறிஞர் ஆல்காட்டுக்கு அறிமுகமானவர். நடைமுறை வழக்காறுகளில் இருக்கும் புனிதத்தன்மைக்கு சமூகத்தன்மையை உருவகித்தவர்(புராண மொழியிலேயே அதைச் செய்தார். அதுதான் கவனிக்கப்பட வேண்டியது). பூர்வ பெளத்தர் எனும் கலைச்சொல்லை அளித்தவர். இப்படி இவரை விரித்துக் கொண்டே செல்லலாம். ஆனால், தற்காலத்தில் அவர் நமக்கு எப்படி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்? தலித் முன்னோடி எனும் ஒற்றை அடையாளத்தில். அவர் தலித் முன்னோடிதானே என்றால், ஆம்தான். ஆனால், அவரை அப்படியாக மட்டுமே குறுக்கிக் கட்டம் கட்டி விட முடியாது. அதையே டி.தருமராஜ் தொடர்ந்து பேசி வருகிறார். மார்க்ஸ், நாராயணகுரு, வள்ளலார், காந்தி, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட முன்னோடிகளையும் நாம் கட்டம் கட்டியே வைத்திருக்கிறோம். இன்னும் மேல் சென்று, அவர்களை ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாகச் சித்தரிப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறோம்.
19-ஆம் நூற்றாண்டில் வரலாறு இருமைத்துவத்தால் நிறுவப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தாசரும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பிராமணர் எதிர் பறையர் எனும் இந்துப்புராணப் பெருமிதத்துக்கு மாற்றாக வேஷ பிராமணர் எதிர் யதார்த்த பிராமணர் எனும் புராணப்பார்வையை உருவாக்கி அளித்தார். இந்துப் புராணக்கதைகளுக்கு மாற்றாக பெளத்தப்புராணக்கதைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார். செவ்வியல் எழுத்து மதத்தை, நாட்டுப்புற பேச்சுச் சடங்குகளால் சீண்டினார்.
இங்கு அவரின் நோக்கம், புராணக்கதைகளின் வழியாக மதத்தை நிறுவுவதல்ல. அவர் சார்ந்திருக்கும் சாதியினரின் மீது ஏற்றப்பட்டிருக்கும் இழிவரலாற்றின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவதே. அவருக்கு மதம் முக்கியமே அல்ல. பெளத்த மதத்துக்கு மாறினார் என்றாலும், அதன் அன்றைய ’நிர்வாக வடிவத்தை’ அவர் பொருட்படுத்தவே இல்லை. ஆகுதல், மாறுதல் போன்ற சொற்களால் அதை மேலதிகத் துலக்கமும் செய்திருக்கிறார்.
பெளத்தராக மாறுதலை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பெளத்தராக ஆகுதலையே வலியுறுத்துகிறார். மத அடையாளங்களை மட்டுமே மாற்றிக் கொள்ளும் புறமாற்றத்தையே அவர் மாறுதல் எனச் சொல்கிறார். ஒரு இந்துப்பறையர் பெளத்தப்பறையராக மாறுவதில் அவருக்கு உடன்பாடே இல்லை. இந்துப்பறையர் பெளத்தராக வேண்டும் என்றே சொல்கிறார். மாறுதலுக்கு புறஅடையாளங்கள் முக்கியம். ஆகுதலுக்கு அவை அவசியமில்லை; உளத்தெளிவே முக்கியம். பெளத்தர் என்பதை அவர் ‘நிறுவன மத அர்த்தத்தில்’ பயன்படுத்தவில்லை. அப்படி குழப்பம் நேரலாம் என்று ஒரு புதுச்சொல்லை வழங்குகிறார். பூர்வ பெளத்தர். அதற்கு சாதி மதங் கடந்த தமிழன் என்றும் அர்த்தம் சொல்கிறார்.
அழுத்தமாகவே சொல்கிறேன். புறச்சீர்திருத்தங்களை தாசர் முற்றாய் ஒதுக்கிவிடவில்லை. மாறாக, உளத்தெளிவு முதன்மையானது என்பது அவரின் அடிப்படை. ஒரு பறையர் பெளத்தராக மாறும்போது அவரின் உள்ளத்தில் ‘சாதித் தாழ்வுணர்ச்சி’ நீங்கி இருக்குமா அல்லது சமூக உளவியலில் அவரின் ‘சாதி பற்றிய கீழ்மை’ களையப்பட்டிருக்குமா? தாசர் இக்கேள்வியையே பலவிதங்களில் எழுப்புகிறார். அதனால்தான் தன்னோடு இருந்தவர்களை பெளத்தர்களாக மாறச் செய்யவில்லை. பெளத்தராக ஆகுதல் பற்றி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். அவர் நினைத்திருந்தால் நாடு முழுவதும் பெளத்த சங்கங்களை நிறுவி மதத்தலைவராகி இருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை.
தெளிவாகப் புரிந்து கொள்வோம். தாசரின் பிராமணரும், பெரியாரின் பிராமணரும் ஒருவரல்ல. பெரியாரின் பிராமணர் சமூகத்தளத்தில் இருப்பவர். தாசர் குறிப்பிடுபவரோ வரலாற்றுத்தொன்மத்தில் இருப்பவர். அதனால்தான் பெரியாருக்கு முன்னோடியாக நாம் தாசரைக் கருதிவிட முடியாது எனச் சொல்கிறேன். இன்னும் விளங்கப் பார்ப்போம். மரபை முழுக்கப் புறக்கணித்து நவீனத்தையே தீர்வாகக் கொண்டவர் பெரியார். அவர் தாசரை மதித்திருந்தாலும், அவரின் சிந்தனைகளைக் கண்டிக்கவே செய்திருப்பார். புராணம் என்றாலே புளுகுமூட்டைதான் எனும் முன்முடிவில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த பெரியாருக்குத் தாசரின் புராணக்கதையாடல்கள் எரிச்சலையே அளித்திருக்கக் கூடும். சமூக வடிவத்தைப் பற்றிப் பெரியார் பேச, சமூக உளவியல் பற்றிக் கேள்வி எழுப்புக்கிறார் தாசர். பெரியாருக்கு புறவயச் சீர்திருத்தமே அடிப்படை. தாசருக்கோ உளத்தெளிவு முக்கியம். அதனால்தான் புறமெய், உள்மெய் என்றெல்லாம் தாசர் உரையாட நேர்ந்திருக்கிறது.
பெரியார் புறச்சமூக ’நிர்வாக அமைப்பில்’(அரசு) கொண்டு வரும் மாற்றங்களின் வழி மனிதர்களுக்கு இடையேயான பேதத்தைப் போக்கிவிட முடியும் என்று உறுதியாக நம்பினார். சட்டம் இயற்றுவதன் வழி ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பிரிவினரே இல்லாமல் செய்து விட முடியும் என்றும் கருதினார். ஒரு இடைநிலைச் சாதியில் பிறந்தவராக அவரால் அப்படித்தான் யோசித்திருக்க முடியும். கூடுதலாக, அவர் செல்வந்தக்குடும்பத்தில் பிறந்தவர். சாதிக்கொடுமை, வறுமைநிலை போன்றவை பற்றி எல்லாம் அவரால் ’தன்னிலையின் உளவியலில்’(தனிமனித மனநிலையில்) கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியாது. இப்படி சொல்லி பெரியாரைச் சிறுமைப்படுத்துவது இங்கு நோக்கமல்ல. அவரைக் கொஞ்சம் நுணுக்கிப் புரிந்து கொள்வதன் வழியாகவே தாசரைக் கொஞ்சமேனும் நெருங்க முடியும். அதற்காகவே பெரியாரின் காலப்பின்புலத்தையும் வாழ்வியல் சூழலையும் ஊகித்துக் கவனிக்கச் சொல்கிறேன்.
தாசரின் சமூகச்சூழலோ பெரியாரைப் போன்றதன்று. இந்துவான அவருக்கு இந்துக் கோவில்களில் நுழையக்கூட முடியாது; இந்துவான அவருக்கு இந்துக்களின் ஊருக்குள் செல்லவே இயலாது. அவரின் அப்போதைய உளநிலையை இப்போது கூட நம்மால் உணர முடியும். பெரியாரும் பிராமணர்களால் காசியில் விரட்டப்பட்டிருக்கிறார். என்றாலும், அதன் ‘உளத்தாக்கமும்’, தாசரின் ‘தாழ்வுணர்ச்சியும்’ ஒன்றெனக் கருதிவிட முடியாது. நமது ஊருக்கு அருகே உள்ள சேரிக்குச் சென்று கவனித்துப் பாருங்கள். அதனால்தான் அவர் புறச்சீர்திருத்தங்களை விட உளத்தெளிவை அடையும்படியான செயல்பாடுகளுக்கு கவனம் கொடுத்தார். அக்காலகட்டத்தில் அது பெருஞ்சலிப்பைத் தரக்கூடிய பணி. தாசர் ஊக்கங் குன்றாமல் அப்பணியை பெருநம்பிக்கையுடன் மேற்கொண்டிருக்க வேண்டும். தாசரின் சிந்தனைகளை ஞான அலாய்சியஸ் பதிப்பிக்கும் வரை அவரைத் தமிழ்ச்சமூகத்துக்குத் தெரியாது என்பதைக் கொண்டே.. நமது ‘வரலாற்று ஆவணங்களின்’ சார்புநிலையைப் புரிந்து கொள்ள முடியாதா?
சாதிப்பாகுபாட்டிற்கு பிராமணியமே காரணம் என்றும், பிராமணியத்தை ஒழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் எனும் பெரியாரின் கோணம் தர்க்கப்பூர்வமானது. ஆனால், மிகக்குறுகலானது. பிராமணியம் என்பதன் பின்னணியில் பிராமணர்களே இருந்தார்கள் எனச் சொன்னதோடு, இடைநிலைச்சாதியினரே அதை நடைமுறையில் தீவிரப்படுத்தியவர்கள் என்பதையும் அவர் அழுத்திப் பேசி இருக்க வேண்டும். அதனால்தான் அவரின் ‘நடைமுறைச் சீர்திருத்தங்கள்’ இன்றைக்கு பொருளற்று ‘சாதிப்பாகுபாடுகள்’ மிகும்படியான சூழலைப் பார்க்கிறோம். இதற்குப் பெரியாரையே முழுக்கக் காரணமாய்ச் சொல்லிவிட முடியாதுதான். என்றாலும், சாதிஒழிப்பு என்றாலே அவரைத் தானே முன்னுக்குக் கொண்டு வருகிறோம். அவர்தானே எல்லாவற்றுக்கும் ‘பிராமணர்களையே’ காயடிக்கிறார். அதனால்தான் அவரைச் சுற்றியே பேச வேண்டி இருக்கிறது.
தாசரின் கோணம் உணர்வுப்பூர்வமானது. நடைமுறையைக் கவனத்தில் கொண்டது. சிந்தனை, செயல் இரண்டிலுமே நவீனத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்த பெரியாருக்கு மரபு என்பது மூடநம்பிக்கை. அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆனால், தாசர் சிந்தனையில் மரபைக் கொண்டிருந்தார்; நடைமுறையில் நவீனத்தை அங்கீகரிக்கவும் செய்தார். தாசரின் மரபுப்பார்வையைக் கட்டுடைக்கவே கூடாது என்பதல்ல நம் வாதம். அவரை மரபாளராக மட்டும் புரிந்து புறக்கணித்து விடக்கூடாது என்பதே கருத்து. அவரின் முதன்மை ஆதங்கம், தங்களைத் தாழ்வுணர்ச்சிக்குத் தள்ளிய மதக்கதையாடல்களைப் பற்றியதாகவே இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களாகத் தங்கள் சாதியினரை நம்ப வைத்திருக்கும் சமூக உளவியலைப் பகிரங்கப்படுத்துவதற்காக மட்டுமே அவர் எதிர்க்கதையாடல்களைத் தொடர்ந்து கட்டமைத்து வந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வருடங்களில், தாசர் பெரியாரைப் போன்று பிம்பமாக்கப்பட்டுக் குறுக்கப்படுவார் என்றால்.. நிச்சயம் அதையும் விமர்சிப்போம்.
தாசரிய ஆய்வுமுறைமை என் ஒன்றை நாம் வரையரை செய்தால், அது மரபையும் நவீனத்தையும் உள்ளடக்கியே சமூகவரலாற்றை அணுகுவதாக இருக்கும். பெரியாரிய ஆய்வு முறைமை எனச் சொன்னால், அது நவீனத்தை மட்டுமே ’அறிவுக்கருவியாக’க் கொள்ளும். மரபைக் கடந்தகாலமாகவும், நவீனத்தைச் சமகாலமாகவும் கொண்டால்.. கடந்தகாலம் பற்றிய பன்முகச் சாத்தியப்பாடுகளை சிந்தனை செய்யாமல் சமகால நடைமுறையைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. பெரியாரைத் தாசருக்கு எதிரி போலச் சித்தரிப்பதாகத் தெரியலாம் அல்லது தாசரின் சரியானவர் பெரியார் தவறானவர் எனச் சொல்வதைப் போன்றும் தொனிக்கலாம். வரலாறு இயங்கி வந்ததைப் புரிந்து கொள்ளும் அறிவுக்கருவிகள் பற்றிய காத்திரமான உரையாடலை இருவரின் வழியாகவும் முன்வைக்கிறேன்.
இன்றைக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது; கோவில்கள் இருக்கின்றன; சடங்குகள் இருக்கின்றன. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை வழக்காறுகளாக அவை இருப்பதன் காரணத்தை புறமெய்யால் நாம் நெருங்க வாய்ப்பில்லை. அதனால்தான் கடவுளையும் மதத்தையும் சாதியையும் ஒழித்துக் கட்டிவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என நவீன நம்பிக்கையை விதைக்கின்றனர். கடவுளும், மதமும், சாதியும் கருத்தாக்கங்கள். அவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே பாகுபாடு கற்பித்திருக்கும் மாய அதிகார அமைப்புகளின் திரிபுகளும் திருகல்களுமே கண்டிக்கத்தக்கவை; கட்டுடைக்கப்பட வேண்டியவை. நேற்று உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்றால்.. இன்றைக்கு அதுபற்றிப் பேசி முடிவெடுத்து விடலாம். பல நூறு ஆண்டுகளாக நம் சமூக உளநிலையில் கெட்டி தட்டிப் போயிருக்கும் அவலங்களை ஒரு நூற்றாண்டின் புறமாற்றங்கள் வழி ஒழுங்கு செய்துவிட முடியுமா? அதற்காகப் புற மாற்றங்களைத் தாசர் புறந்தள்ளிவிடவில்லை. அதைவிட உளத்தெளிவு முக்கியம் என நம்புகிறார்.
உள்மெய் வழியாக சாதியப்பாகுபாடுகளைத் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் சமூக உளவியலின் கசடுத்தனத்தைப் பகிரங்கப்படுத்துகிறார் தாசர். இந்துப்பறையன் பெளத்தப்பறையனாகி விடுவதன் வழி அவனை பெளத்தனாகச் சமூகம் ஒப்புக்கொண்டு பறையனில்லை எனச் சொல்லி விடுமா? அதை விடுங்கள். சேரியில் இருந்து ஊருக்குள் வர முடியுமா? பறையன் என்னவாக மாறினாலும் அவன் பறையன்தான் எனும் சமூக உளவியலை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் இந்துப்புராணக்கதைகளுக்கு மாற்றுப் புராணக்கதைகளைக் கட்டுவதன் வழியாக.. வெகுமக்கள் பரப்பில் உளவியல் அதிர்ச்சியைத் தர முயன்றிருக்கிறார் தாசர். ஆனால், அதை ‘அறிவுஜீவி’களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு இந்துப்புராணத்துக்கு மாற்றாக பெளத்தபுராணத்தை நிறுவி ‘மதப்புகழ்’ பரப்புவது அவரின் நோக்கம் அன்று. அவர் வாழ்ந்த காலத்தில் கிறித்துவத்துக்கு மாறிப் பறையர்களாகவே வாழும் பலரைக் கண்டிருக்கக் கூடும்(நிவேதிதா லூயிஸ் அவர்களின் அறியப்படாத கிறிஸ்துவம் நூலை வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்). அதனால் மக்கள் மத்தியில் புதிதாகப் பரவத் துவங்கி இருந்த பெளத்தத்தை அவர் கண்டிருக்கலாம். கடவுள், சாதி போன்றவற்றை மறுக்க அந்நிய மண்ணின் மதமான கிறித்துவத்தைக் காட்டிலும், நம் மண்ணின் மதமான பெளத்தம் உதவக்கூடும் என நம்பி இருக்கலாம். கடவுள், சாதி, ஆண்-பெண் பாகுபாடு போன்றவை இல்லாத பெளத்தமத வடிவத்தைக் கொண்டு தன் தரப்பைத் தெளிவுபடுத்தி விட முடியும் என்றும் யோசித்திருக்கலாம்.
மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம், காந்தியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பற்றித் தொங்கிக் கொண்டு சமூகவரலாற்றைக் குறுக்கிப் புரிந்து கொள்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், அவர்கள் நேர்ந்து கொண்ட இஸமே சர்வரோக நிவாரணி என்பதை நிறுவுபவர்களாக பல ‘அறிவுஜீவி’களும் இங்கு அதிகம். ஒரு இஸமே சரியானது எனும் தீவிரப்பிடிமானத்தையே ‘இஸ மயக்கம்’ என்கிறேன். அது சமூக வரலாற்று இயங்கியலைப் புரிந்து கொள்ள இயலாமல் செய்து விடும். சமூகவரலாற்றை இஸங்களின் வழியாகவும், இஸங்கள் கடந்தும் யோசித்தால்தான் ஓரளவிலான ‘உண்மையையாவது’ நெருங்க முடியும். இப்படியான திறப்பை நிகழ்த்தும் கோணமாகவே ‘அயோத்திதாசரியத்தை’ப் பார்க்கிறேன்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.
விஷ்ணுபுரம் பதிப்பகம் எவருடையது?
விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் கோவை
அன்புள்ள ஜெ
பொதுவான ஒரு கேள்வி. இக்கேள்வி ஏன் முக்கியம் என்றால் இதுவரை உங்கள் நூல்களை வாங்கும்போதெல்லாம் அந்த நிதியில் ஒரு பகுதியேனும் உங்களுக்கு வந்துசேர்கிறதா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. உங்கள் பதிப்பாளர்களில் இருந்து பெரும்பாலும் ராயல்டி என எதுவும் வருவதில்லை என நீங்கள் சொன்ன நினைவு. விஷ்ணுபுரம் பதிப்பகம் உங்கள் சொந்த நிறுவனமா? ஏற்கனவே சொல்புதிது என ஒரு பதிப்பகம் தொடங்கியது. அது இப்போது நடைபெறுகிறதா?
செல்வன் ஆறுமுகம்
அன்புள்ள செல்வன்,
சொல்புதிது பதிப்பகம் என் நண்பர் கடலூர் சீனுவுக்காக நான் நிதியுதவி செய்து தொடங்கியது. அவரால் அதை நடத்த முடியவில்லை. அவருடைய உளநிலைக்கு அது சரிவரவில்லை.
விஷ்ணுபுரம் பதிப்பகம் என் நண்பர்கள் மூவர் நடத்துவது. அதில் என் மகன் மகள் பங்குதாரர்கள். ஆகவே அது என் பதிப்பகமும்கூட. அது வெற்றிகரமாக நிகழவேண்டுமென்பது எனக்கு இரு வகைகளில் முக்கியமானது. அது என் குழந்தைகளின் உடைமை. அதைவிட இன்னும் பல ஆண்டுகளுக்கு, அச்சுமுறை வழக்கில் இருக்கும் காலம்வரை, என் நூல்கள் அனைத்தும் அச்சில் கிடைப்பதற்கு இப்படி ஓர் தனி அமைப்பு இருப்பது இன்றியமையாதது.
இப்பதிப்பகத்திற்குச் செய்யும் உதவி எனக்குச் செய்வதுதான்.
ஜெ
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
இரு கடிதங்கள் – அருண்மொழிநங்கை
அன்புள்ள அருண்மொழி,
மொகல்-ஏ-ஆஸம் படத்தில் இடம்பெற்ற படே குலாம் அலிகானின் இசையைக் கொண்டு ஓர் இரவு முழுவதையும் நிரப்பிக்கொண்ட உங்கள் அனுபவம் மகிழவும் நெகிழவும் செய்கிறது.
உங்கள் பரவசத்தை வெளிப்படுத்த ‘குரல் செய்யும் மாயம்’, ‘மயக்கம்’, ‘காதலின்வலி’, ‘தவிப்பு’, ‘இனிமை’… இப்படி சொற்களில் தாவித்தாவி அமர்ந்தும், நிறைவு பெறாமல் நீங்கள் ‘இன்பத்துன்பத்தில்’ திளைத்தது தெரிகிறது.
இரு கடிதங்கள்March 7, 2022
விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு
நண்பர்கள் இணைந்து விஷ்ணுபுரம் பதிப்பகம் தொடங்கியபோது அதை லாபகரமாக நடத்தவேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. எல்லா நூல்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்றே எண்ணினார்கள். ஏனென்றால் இன்று நூல்கள் வெவ்வேறு பக்கங்களில் சிதறிக் கிடக்கின்றன. பெரிய பதிப்பகங்களுக்கு எல்லா நூல்களையும் கணக்கில் வைத்து எப்போதும் கிடைக்கும்படிச் செய்ய முடியாது.
ஆனால் பதிப்பகம் தொடங்கி ஓராண்டு ஆவதற்குள் அது லாபகரமானதாக ஆகிவிட்டது. குமரித்துறைவி நாவல்தான் முதன்மையான காரணம் என சொல்லவேண்டியதில்லை. பின்தொடரும் நிழலின் குரல் வெளியாகிவிட்டது. இவ்வாண்டுக்குள் வெண்முரசு முழுமையாகவே விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வெளிவரும். எல்லா நூல்களையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் வடவள்ளியில் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு ஓர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களையும் என் நூல்களையும் அங்கே வாங்கலாம். அது நண்பர்கள் சந்திக்கும் ஓர் இலக்கிய மையமாக ஆகவேண்டும் என்பது என் விருப்பம். நான் கோவை வந்தால் அங்கே நண்பர்களைச் சந்திப்பேன்.
விஷ்ணுபுரம் பதிப்பகம் ஒரு சிறு முயற்சிதான் இப்போதும். நண்பர்களின் முதலீடு. (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்புடன் தொடர்பில்லை இதற்கு). எங்கள் நூல்களை வாசகர்கள் வாங்கி ஆதரிக்கவேண்டும் என்பது இன்று என் கோரிக்கை. இந்நிறுவனம் வளரவேண்டும், எனக்குப்பின்னரும் நீடிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
ஜெ
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
விஷ்ணுபுரம் பதிப்பகம் அறிவிப்புஅன்புள்ள நண்பர்களுக்கு
கோவை வடவள்ளி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், நேரு நகர், 1/28 என்ற முகவரியில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் அலுவலகம் 21.02.2022 முதல் செயல்படத் துவங்கியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் போன்ற இடங்களிலிருந்து 8 கிமீ தொலைவில் இவ்வலுவலகம் அமைந்துள்ளது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த வருடம் ஜுன் மாதம் முதல் தனிமையின் புனைவுக்களியாட்டு கதைகள் தொடங்கி கட்டுரைகள் விவாதங்கள் என விஷ்ணுபுரம் பதிப்பகம் மென்புத்தகங்களாக 40 புத்தகங்களை இதுவரை கிண்டிலில் வெளியிட்டுள்ளது.
விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகமான குமரித்துறைவி துவங்கி இரு கலைஞர்கள் என பதினான்கு புத்தகங்கள் இதுவரை அச்சில் வெளிவந்துள்ளன. இலக்கியத்தின் நுழைவாயிலில், மலைபூத்தபோது, உடையாள் மூன்று புத்தகங்களும் தயாரிப்பில் உள்ளன.
இதுவரை தமிழினியின் பதிப்பில் வெளிவந்துகொண்டிருந்த பின்தொடரும் நிழலின் குரல் நமது பதிப்பகத்தில் புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
வெண்முரசின் இறுதி நான்கு நாவல்களான நீர்ச்சுடர், களிற்றுயானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் நான்கு நூல்களும் செம்பதிப்பாக இனிவரும் மூன்று மாதங்களுக்குள் விஷ்ணுபுரத்தின் வெளியீடாக வரவுள்ளன. அதற்கான முன்பதிவுகள் நாவலின் வரைவு வேலைகள் முடிந்ததும் இத்தளத்தில் அறிவிக்கப்படும்.
ஜெயமோகன் அவர்களின் 60ம் ஆண்டு நிறைவான இவ்வாண்டில் அவரது நீண்ட படைப்பான வெண்முரசின் இருபத்தாறு புத்தகங்களும் கட்டாயம் அச்சில் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். பதிப்பில் இல்லாத மற்ற அனைத்து வெண்முரசு புத்தகங்களும் இன்னும் நான்குமாதங்களில் விஷ்ணுபுரத்தின் வெளியீடாக விற்பனைக்கு வந்துவிடும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுவரையிலும் எங்களுடன் உடன் நின்ற வாசகர்கள், எழுத்தாளர்கள் நண்பர்கள் பதிப்பாளர்கள் அனைவரும் இனி வரும் ஆண்டுகளிலும் எங்களுடன் துணை நிற்க வேண்டுகிறோம்.
அன்புடன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
மேலதிக தகவல்களுக்கு : மீனாம்பிகை, 9080283887
மின்னஞ்சல்: info@vishnupurampublications.com
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
கோல்டிகா- தங்கபாண்டியன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
கோல்டிகாவின் தலை சரியாக தலைக்கும் முதல் கழுத்தெலும்புக்கும் இடையே வெட்டப்பட்டு கீழ்தாடை தரையில் படிய தனியே கிடத்தப்பட்டிருந்தது. வெறித்த கண்களில் தேங்கியிருந்தது அதன் இறுதி சொற்கள் ” கடைசி வரை நான் சொன்னத நீ கேக்கவே இல்ல” என. அது ஒரு பின் அக்டோபர் மாதம். வெளியே அறையும் மழை. பகல்பொழுதின் மழையின் ரம்மியத்தை உணரும் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. கோல்டிகா என் குதிரை. தங்கத்தை குறிக்கும் ‘கோல்டு’ ல வரும் ‘கோ’ ‘என்னடி’ என்பதில் வரும் ‘டி’. கோல்டிகா, எனக்கும் செந்தில்நாதனுக்குமான தேவதை, செல்லமாக ‘கோல்டி’.
கல்லூரி வகுப்பறையில் செலவிட்ட நேரங்களுக்கு சற்றும் குறைவில்லாத நேரங்கள் கோல்டியுடன் இருந்தவை. கோல்டிக்கு வெண்ணீலா பிடிக்காது. எனக்குப்பிடிக்கும். கோல்டியின் விருப்பம் எப்போதும் ஸ்ட்ராபெர்ரி. எங்கள் விடுதியில் சனிக்கிழமைகளில் தரப்படும் ஐஸ்கிரீம் கோல்டிக்கே சேரும். சமயங்களில் சிக்கன் 65 கூட. குதிரை சிக்கன் சாப்பிடும் என அதற்குமுன் யாரேனும் சொல்லியிருந்தால் நானும் நம்பிருக்கமாட்டேன். அந்நேரங்களில் கோல்டியின் எளிய மானுடர் அறியமுடியாத புன்னகை கொண்ட உதடுகளை என்னால் பார்க்கமுடியும். தெய்வங்கள் மனிதனை நோக்கி புன்னகைப்பது போன்றது அது.
எங்கள் கல்லூரியில் இருந்து புலரிக்கு சற்று முன்பே குதிரைகளுடன் தீவுத்திடலை நோக்கிய பயணம் ஆரம்பித்துவிடும். புரவியேற்ற பயிற்சியின் ஆரம்பகால தடுமாற்றங்களுக்குப்பிறகு கோல்டியை நான் உணர ஆரம்பித்த உடனே அது என் உள்ளென்றாகியது. விலகியணுகும் ஆடல் போல ஒரு மெல்லிய கோடு மட்டுமே தாண்டப்பட வேண்டியிருந்தது. இன்னதென்று சொல்லவியலா ஒரு தருணத்தில் நானே அதுவாக ஆகியிருந்தேன். அதுவரை நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக மாறியிருந்தேன்.
1997 ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை பிற்காலை நேரம். டெல்லியைப் போர்த்தியிருந்த முகிற்பனிகள் லேசாக விலகியிருந்தது. குதிரையேற்றப்போட்டிகள் நடந்து கொண்டிருந்த மைதானம் குதிரைகளின், வீரர்களின் வெப்பத்தால் சற்றே தெளிவாக இருந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் குடியரசுதின விழா முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மாணவர் படையின் குதிரைப்பிரிவு மாணவர்கள் எல்லோரும் அம்மைதானம் முழுக்க பரவி புரவியுடனிருந்தனர். தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் உள்ளடக்கிய பிரிவில் தேர்வான ஆறு பேரில் நானும் செந்தில்நாதனும் இருந்தோம்.
அன்று நான் எனக்கான போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்தேன். முதலில் show jumping எனப்படும் உயரம் தாண்டுதல். தொண்ணூறு செகண்டில் பத்து உயரத்தடைகளைத் தாவவேண்டும். நான் கோல்டியுடன் நடுவரிடம் முறையாக அறிவித்து ஒப்புதல் பெற்றுக்கொண்டு jumping arena எனப்படும் தாண்டு எல்லைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த அனைவரின் கவனமும் கோல்டியின் மீதே இருந்தது. கோல்டியின் அழகும் அசைவுகளும் அப்படி. முதல் நான்கு தடைகள் வரை உயரம் அதிகரித்துக்கொண்டே செல்லும். லைசன்ஸ் வாங்கும்போது போடும் எட்டு போல இருக்கும் அந்த ஜம்ப்பிங் வரிசை. நான்காவது முடித்து ஐந்தாவது போகும்போது சிறிது தூரம் நேராக சென்று வலது திரும்பவேண்டும். நான் பதட்டத்தில் தேவையான தொலைவுக்கு முன்னமே திரும்புவதற்கு கோல்டியை கட்டாயப்படுத்தினேன். கணநேரம் மறுத்தாலும் திரும்பிவிட்டது. உயரம் சரியாக தாண்டமுடியாமல் கட்டை கீழே விழுந்தது. ஒன்பதாவது ஜம்ப்பில் ஒரு அடி பின்னதாக எகிருவதற்கான சிக்னல் கொடுக்க கோல்டி மறுக்க, தவறான கணிப்பில் நான் மீண்டும் காலால் ஊக்கினேன். தாண்டிவிட்டது. ஆனால் கட்டை கீழே விழுந்துவிட்டது. அறுபது செகன்டில் முடித்து விட்டேன். சீக்கிரம் முடித்தது நல்லது எனினும் இரண்டு கட்டைகள் விழுந்ததில் வெற்றி பறிபோனது. நாங்கள் கட்டைச்சுவரில்.
ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுவிட வேண்டியதுதான் என்றிருப்பவனை எப்புள்ளியிலும் தோற்கடித்துவிடமுடியும் என ஜெயமோகன் சொன்னது ஞாபகத்தில் வந்து போனது. அவ்வாறெனில் நான் விழைந்திருக்கிறேன். எங்கோ சுஷூப்தத்தில்.
மைதானத்தைச் சுற்றியிருந்த கட்டைச்சுவரின்மீது இடதுகாலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தோம் நானும் செந்தில்நாதனும். வேட்டை முடித்துவந்த அய்யானார் போல. அருகமர்ந்து பீடி இழுத்துக்கொண்டிருந்தார் ஓம்பிரகாஷ். நானிருந்த மனநிலையில் அவரது எண்ண ஓட்டத்தை கணிக்கவில்லை. ஓம்பிரகாஷ் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் சிறந்த குதிரையேற்றப் பயிற்றுநர்களில் ஒருவர். எனக்கு குதிரையேற்றத்தைக் கற்றுக்கொடுத்த ஆசான். அவர் ஏதும் பேசிவிடக்கூடாது என விரும்பினேன். நான்கு பீடிகளை முடித்தபின் சற்றே தலையை மட்டும் திருப்பி “ச்சோடோ மேரா பையா” னு சொல்லிவிட்டு போய்விட்டார். நானும் செந்தில்நாதனும் ஒருவரையொருவர் கூட பார்த்துக்கொள்ளாமல் தன்னிரக்கத்தில், கோல்டியின், ஆசானின் பேச்சை மறந்த அல்லது அதீத ஆணவத்தவறிழைத்த குற்ற உணர்ச்சியில் அமர்ந்திருந்தோம். செந்தில்நாதன் எதுவும் பேசிவிடக்கூடாது என்று எண்ணிமுடித்த கணத்தில் சொன்னான் ” கோல்டி சொன்னமாதிரி கேட்டிருக்கலாம்ணே”.
மேலும் பேசவிரும்பாமல் அமர்ந்திருந்தோம். புரவிக் கலையறிந்தவர்கள் சொல்வார்கள், புரவி அறிந்ததை ஒருபோதும் மானுடன் அறியமுடியாது என்று. புரவி திரும்பாத திசைக்கு அதைச் செலுத்துவது இறப்புநோக்கி செல்வது என ஆசான் ஜெயமோகன் அடிக்கடி சொல்வார்.
“…. விளக்கத் தொடங்கினால் அது சொல்லொழுங்காகும், எண்ணக்கட்டமைப்பாகும். சொல்லென்றும் எண்ணமென்றும் ஆன எதுவும் இணையான மறுப்பையும் கொண்டிருக்கும். ஓயாத அலைவுறுதலும் தொடங்கும். ஆகவே அடைந்ததை எங்களுக்குள் செலுத்துங்கள உங்கள் உயிர் என மூச்சென அது உங்களுக்குள் மட்டும் இருக்கட்டும்” என வசிட்டர் சொன்னது ஊடாக ஓடியது.
மூன்று வருட கடுமையான இடைவிடாதப் பயிற்சி. பதக்கம் வென்றாகவேண்டுமென்ற வெறி. ஆம் வெறி, நீநாள் கழித்தே உணர்ந்த நிதானம் தவறிப்போன வெறி. அல்லது எங்கோ நான் தோல்வியை விரும்பிருக்கிறேன். தோற்றால் எப்படியிருக்கும் என கற்பனையில் கழிவிரக்கமும் தன்னிரக்கமும் அக்கற்பனையினூடாக எழும் நகலின்பத்தையும் ரசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
பெண்களுக்கான போட்டி முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்பட்டன.
“அது அவள்தானா?” என்றேன். அந்த அறிவிப்பை ஒருகணம் கேட்டதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தேன். அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது. கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம்” என்றான் செந்தில்நாதன். மூன்று வருடங்களுக்கு மேலாக அவள் என் அணுக்கமான தோழி. மிச்சமின்றி பகிர்ந்திருக்கிறாள் அனைத்தையும்.
உச்சவெறுப்பென்பது புறக்கணிக்கப்பட்ட அன்பின் மாற்றுரு. வெற்றிக்குப் பின் என் தோழி அன்று காட்டிய சிறு அவமதிப்பை இதுவரை கடக்க இயலவில்லை. சொன்னாலும் பிறர் நம்ப மாட்டார்கள். நச்சுநா கொண்டு கடிக்கும்வரை விழிகளுக்குத் தெரியாத நாகம் அவள். மற்றபடி தேவதை. கோல்டி மாதிரியே. அதன்பின்னான அவளின் வெற்றி அறிவிப்பு என்னை நிலைகுலைய வைத்தது. இயல்பான தன்னுணர்வால் அவ்வெண்ணத்தை அடக்கியதுமே ஏன் அடக்கவேண்டும் இனி என்ற எண்ணம் வந்தது. இனி எத்தளையும் இல்லை. எந்தப் பார்வைக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்ற எண்ணமும். இப்புவியில் நான் செல்லும் பயணங்களெல்லாம் என்னுள் நுழைந்து செல்பவை என்றே உணர்கிறேன். நான் காணும் ஒவ்வொரு எல்லையிலும் பாம்பு தன் உறையை என என்னை கழற்றிவிட்டு கடந்துசெல்கிறேன்.
அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உருவாகியிருந்தது. எங்கள் அணியினர் வாழ்த்திக்கொண்டிருந்தனர். ஜெயித்தவர்கள் சுயததும்பலால் நிறைந்திருந்தார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’ஜெயிச்சிட்டேன்ல’ என்ற பாவனை. எனக்கும் மகிழ்வே. ஆனால் அதன் பின்னான கல்லூரி வாழ்விலும், இன்று வரையிலும் கூட அந்த உதாசீனத்தை மறக்க இயலவில்லை.
சில வருடங்களுக்குப்பின் எங்களிடம் இருந்த பதினான்கு குதிரைகளுக்கும் அளிக்கப்பட்ட பச்சைப்புல்லில் அதிக அளவில் நைட்ரைட் இருந்த காரணத்தால் ஒவ்வொன்றாக நோய்வாய்ப்பட்டது. நாங்கள் காரணமறிவதற்குள் ஆறு இறந்துவிட்டன. கோல்டி ஏழாவது மற்றும் கடைசி. வழக்கமாக நிறைய சாப்பிடும் கோல்டி அன்று ஏனோ சாப்பிடாமல் இருந்தது. நான்தான் கட்டாயப்படுத்தி சாப்பிடவைத்தேன். இரண்டு நாட்களில் எல்லாமும் முடிந்துவிட்டது. என் குதிரையை நானே போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டிய நிலை. எங்கள் இறப்பறி பரிசோதனைக்கூடம் முழுக்க வெட்டி பரப்பப்பட்ட குதிரைகளின் உடல்பாகங்கள். கோல்டியின் கண்களில் தேங்கியிருந்த சொல்லென்றாகாத அந்த ஒன்றை எண்ணியபடி எஞ்சிய வாழ்நாள் முழுக்க அதை சுமந்தலையப் போகிறேனோ?.
செல்லச்செல்லப் பெருகும் என்னுள் பெருகாதிருப்பது ஒரு வினா மட்டுமே. என்னை முற்றிலும் கழற்றிவிட்டு அவ்வினா மட்டுமாக நான் எஞ்சும் ஒரு தருணம் வரும். அதுவரை எங்கும் அமர்ந்திருக்க என்னால் இயலாது.
பேரன்புடன்
தங்கபாண்டியன்
[பி.கு: இதிலுள்ள பெரும்பாலான வரிகள் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டவை]
ஜடம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சடம் கதை வாசித்தேன். சமீபத்தில் எழுதிய இந்தக்கதைகள் எல்லாம் புனைவுக் களியாட்டு கதைகளின் அதே மனநிலைகளின் நீட்சிகள். எல்லாவற்றிலும் கண்டடைதலின் பரவசம் உள்ளது. நேர்மறையாக, அல்லது வேறெவ்வகையிலோ. மிகக்குறைவாகத்தான் துக்கமும் கசப்பும் உள்ள கதைகள். ஆனால் அந்தக்கதைகளில்கூட இறுதியில் ஒரு நிறைவும் நீட்சியும் உள்ளது. பேசாதவர்கள் என்னும் கதைபோல. இக்கதைகள் நீங்கள் இன்று இருக்கும் நிலையை காட்டுகின்றன. வழக்கமான தமிழ்க்கதைகள் அளிக்கும் இருட்டும் சலிப்பும் இல்லாத கதைகள்.
இவற்றையும் சேர்த்து நூலாக்கவேண்டும்
மகேந்திரன்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களது “சடம்” கதை படித்தேன்.
தத்துவ விளக்கமாகவே வாசகர்கள் கதையை அணுகும்போது எனக்கு இது மீண்டும் காட்டை எழுதுவது போல் உள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கட்டு சமீபத்திலிருந்து கதை நகர்ந்து வடக்கு பகுதிலுள்ள காட்டினுள் எல்லாம் நிகழ்கிறது.
காட்டை எழுதும்போது தங்கள் விரல்கள் காடு எனும் கவிதை மலர்கிறது.இப்போது பாறையில் உராயும் சிரட்டை சத்தம் காட்டிலும் கிராமங்களிலும் ஒலிக்க துவங்கி விட்டது, குரங்கு கூச்சல்.இப்போது கரடியும் புலியும் கதை களத்தில் உண்மையில் நடமாட துவங்கி விட்டது.
அந்த போலீஸ்காரர் சுடலை பிள்ளையின் மனம் வக்கிரமானது.இதுபோன்ற போலீஸ்காரர்கள் ஏராளமாக உண்டு.வாச்சாத்தி போன்ற எத்தனையோ இடங்களில் இவர்கள் கட்டுக்கடங்காத கொடூரங்கள் செய்தவர்கள் தானே.இந்த பரம்பரையை பார்த்தவருக்கு காடு என்றால் கேட்கவா வேண்டும்.?
படிக்கவே நெருடல்கள் தரும் நிகழ்வுகள் இன்றும் காணகிடைப்பவை.இதை ஐபிசி கொண்டு அளவிடுவதற்கு பதில் கதையாக பார்ப்பதே சிறந்தது.
கதை மொழியும் உரையாடல் மொழியும் அழகே.கதை நிகழுமிடம் எப்போது கண்முன்னே உள்ளதால் அந்த மொழியும் ரீங்காரமிடுகிறது.பேச்சிப்பாறைக்கு மேலே கோதையாறு காட்டில் கண்ட ஜடம் வெறும் ஜடம் அல்ல.
“சுற்றி நின்ற மரங்கள் எல்லாம் விரைப்படைந்தன.பாறைப்பரப்புகள் சருமம் போல் உயிர் பெற்றன.இலைகள் கண்ணிமைகள் என ஆயின.
சட்டென்று ஒரு முனகலோசையுடன் அவள் உடல் அசைவுகொண்டது.கைகள் அவரை வளைத்து இறுக்கிக் கொண்டன”
என்று கதை முடியும்போது காட்டில் நிகழ்த்திய அதர்மத்திற்கு காடு ஜடம் வழியாக தண்டனை வழங்குகிறது என்று வாசிக்கும்போது தான் மனம் அமைதி கொள்கிறது.
மலையாள இலக்கிய உலகின் “இலக்கிய வாரபலன்” தொடர்ச்சியாக எழுதிவந்த எம்.கிருஷ்ணன் நாயர் “ஒரு இலக்கியத்தை படித்தபின்பு படித்தவை இதயத்தை கிளற செய்யவேண்டும்,அதுவே சிறந்தது”என அடிக்கடி எழுதிவந்தார்.சடம் அந்த வகையிலான கதை.
கதைபற்றிய கடிதங்களும் அதை நிரூபிக்கிறது.
நன்றி.
அன்புடன்
பொன்மனை வல்சகுமார்
சடம் – கடிதம்-8
Last Machine
பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ள ஒரு சிறுகதை இறுதி யந்திரம். அதன் ஆங்கில மொழியாக்கம் இண்டியன் பீரியாடிக்கல் இதழில் வெளியாகியிருக்கிறது. ஜெகதீஷ்குமார் மொழியாக்கம்
Last Machine – இறுதி யந்திரம் பின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்புஎழுத்துக்களும் இணையச்சல்லிகளும்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இணைய ஊடகம் தொடக்க காலத்தில் கொஞ்சம் வாசிப்பவர்கள், வாசிக்க ஆசைப்படுபவர்கள் நிரம்பியதாக இருந்தது. ஏனென்றால் ஆரம்பத்தில் இதற்குள் வந்தவர்கள் இளைஞர்கள். பெரும்பாலும் ஐடி துறைகளில் வேலைபார்ப்பவர்கள். அப்போது புத்தகங்கள் பற்றியும் புதிய செய்திகள் பற்றியும் பேசமுடிந்தது
ஜியோ இணைய இணைப்பு, ஆண்டிர்ராய்ட் செல்பேசி இரண்டும் வந்தபோது ‘பொதுமக்கள்’ வெள்ளம் போல உள்ளே வந்தனர். அவர்களில் 99 விழுக்காடுபேர் சாப்பாடு, சினிமா, வம்பு என்று போனார்கள். ஆனால் கொஞ்சபேர் சமூக வலைத்தளங்களுக்குள் வந்தனர். அவர்கள் உருவாக்கும் சீரழிவையே இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.
அவர்கள் சும்மா ஆங்காங்கே அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் கும்பல். ஒன்றுமே தெரியாது. ஆகவே ஒரு தன்னம்பிக்கையுடன் எதைப்பற்றியும் பேசுவார்கள். எதையும் நக்கலடிப்பார்கள். எந்த விவாதத்திலும் புகுந்து சீரழிப்பார்கள். இவர்கள்தான் புத்தகம், எழுத்து ஆகியவற்றுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருப்பவர்கள்.
‘எழுத்தாளன்லாம் அயோக்கியன், நான்லாம் ரொம்ப யோக்கியன்’ என்று பேசுபவன், வாசிப்பை கிண்டலடிப்பவன் எல்லாம் இந்த வகையில் வருபவர்கள்தான். ‘நான்லாம் வாசிக்கவே மாட்டேன். ஞானம் எனக்கு பீ மூத்திரம்போல ஊறிக்கொண்டே இருக்கும்’ என்று சொல்லும் கும்பல். கிரிஞ்ச் ஜென்மங்கள். முகநூலில் தினசரி ஐம்பதுபேரை பிளாக் செய்யாமல் வாழவே முடியாது.
இன்னொரு கும்பல் அரசியல் வெறியர்கள். பெரிய செயல்பாட்டாளர்களோ நம்பிக்கையாளர்களோ இல்லை. ஒரு அரசியல்நிலைபாட்டை எடுத்துவிட்டு அதை எங்கே சென்றாலும் போய் கத்திக்கொண்டே இருப்பவர்கள். அரசியலில் எதையும் வாசிக்கவேண்டியதில்லை. ஒரு நிலைபாடு எடுத்தாலே போதும். இவர்களில் பலர் ரிட்டயர்ட் ஆசாமிகள். வேலைமெனக்கெட்டு அமர்ந்து எல்லாவற்றையும் கசந்து, வம்புகளை எழுதி எல்லா மனநிலைகளையும் சீரழிக்கிறார்கள்.
இந்த முதியவர்களின் தொல்லையாலேயே முகநூல் போன்றவற்றை விட்டு இளைஞர்கள் ஓடிப்போகிரார்கள்.
ஸ்ரீதர்
அன்பு ஜெயமோகன்,
எழுத்தாளர்கள் பற்றிய வாட்சப் தகவல் ஒன்றைப் பற்றிய வாசகர் பகிர்தலுக்கு நீங்கள் அளித்த பதில் நிமிர்பவர்களின் உலகம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது.
எழுத்தாளர்கள் பற்றிய அக்குறிப்பு 2016 புத்தகக் கண்காட்சியை ஒட்டி புதியவன் என்பவர் எழுதிய கட்டுரை(https://pudhiavan.blogspot.com/2016/06/blog-post.html) ஒன்றில் இடம்பெற்றிருக்கிறது. அது சமீபமாய் எழுதி பகிரப்படவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அக்குறிப்பு கட்டுரையின் ஒரு பத்தி. அதைத் தனித்து ஒரு ’பொன்வாசகம்’ போல பரப்புவதும் பகிர்வதும் சில கும்பல்களின் திட்டமிட்ட சித்து வேலை. பாவம், அதற்கு அக்கட்டுரை ஆசிரியர் பலிகடா ஆகிவிட்டார். ஒருவேளை, அக்கட்டுரை ஆசிரியரே அதைச் செய்திருந்தாலும்.. நாம் ஒன்றும் செய்து விட இயலாது. ஏனெனில், அவர்கள் பாணியில் இலக்கியம் என்பது ‘நீதிபோதனை’; எழுத்தாளர் என்பவர் ‘நீதிபோதகர்’. ஆக, அவற்றைப் பொருட்படுத்தாமல் கடப்பதே நல்லது.
புதியவனின் கட்டுரை தலைப்பே புத்தகத் திருவிழா புத்திமதிகள். அதற்கு மேல் கட்டுரையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? கூட, அவர் குறிப்பிடும் புத்தகங்கள், விபரங்கள் எதுவுமே இலக்கிய வாசிப்பாளனுக்கானது அன்று. தன்னை ஒரு எழுத்தாளர் என்று அவர் சொல்லிக் கொள்வதை நம்மால் ஒன்றும் செய்து விட இயலாது. இங்குதான் ஒரு வாசகன் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது என்கிறேன்.
மின் ஊடகங்கள் பெருகி இருக்கும் நவீனச்சூழலில், எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை விட கவிஞர்கள் மிகுந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான முகநூல் பக்கங்களில் இலட்சக்கணக்கான ‘கவிதைகள்’ தேம்பி அழுது கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் கவிதைகள் என்றாலே அவைதான் எனும்படியான பொதுப்புத்தியும் உருவாகி விடலாம்.
ஒரு வாசகனுடைய முதல் வேலை வாசிப்பது அல்ல. எது வாசிப்பு என்பதைப் புரிந்து கொள்வதே அவனின் துவக்கமாக இருக்க வேண்டும். இலக்கிய வாசிப்பு, தத்துவ வாசிப்பு, அரசியல் வாசிப்பு என வாசிப்புகளைப் பகுத்தறியவும் பழக வேண்டும். வாசிப்பு, சமூகத்துக்கும் நமக்குமான புதிர் உறவை விடுவிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறது; ஒருபோதும் முடித்து வைக்காது. அதனால்தான் வாழ்நாளின் இறுதிவரை ஒருவன் வாசகனாக இருந்து கொண்டே இருக்கிறான்; வாசித்துக் கொண்டே இருக்கிறான்.
படிக்கும் காலத்தில் எனக்கு இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாது. கதைகள்தான் தெரியும். கல்லூரியில் நான் வாசித்த சில சிறுகதைகளையும் நான் இலக்கியம் என்று அறிந்தேனில்லை. கல்லூரிக் காலத்தில் சுஜாதாவும் பாலகுமாரனும் என்னை ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்களின் நாவல்களை இலக்கியம் எனப் பலர் சொன்னார்கள். நானும் அப்படியே நம்பினேன். பாலகுமாரனைப் படிக்கிறவன் என்றாலே அப்போது தனிமரியாதை. தொடர் வாசிப்பின் ஊடாகவே, இலக்கியத்தின் இலக்கணம் புரிபடத் துவங்கியது. பெரும்பாலான நாவல்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் ஜல்லி அடித்திருக்கிறார்கள் என்றும் விளங்கியது. அதற்காக அவர்களை நான் குறைசொல்லிவிட மாட்டேன். இலக்கியத்தை வந்தடைய அவர்கள்தான் வழிகாட்டிகள். எல்லோருக்கும் அப்படியான பாதையே அமைய வாய்ப்பு இருக்கிறது. மீண்டு வருகிறோமா அல்லது தேங்கி மூழ்குகிறோமா என்பதுதான் டிவிஸ்ட்.
இலக்கியத்தையும் வசதி கருதி பலவாகக் கூறுபோட்டிருக்கிறோம். பயண இலக்கியம், வணிக இலக்கியம், சரித்திர இலக்கியம், சிறுவர் இலக்கியம் என வகைமைகளாக அடுக்கி ஆயிரக்கணக்கான ஆக்கங்களைக் குவித்து வைத்திருக்கிறோம். இவற்றில் எது ‘இலக்கியம்’ என்பதைக் கண்டறிய வாசகன் மெனக்கெட்டே ஆக வேண்டும். தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளும், ஜெயமோகனின் பயண அனுபவங்களும் ஒன்றல்ல என்பது பிடிபட வேண்டும். மேத்தாவின் கவிதையும், விக்ரமாதித்யனின் கவிதையும் வேறுவேறு என்ற தெளிவு அமைய வேண்டும். சோவின் அரசியல் கட்டுரைகளும், ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வுக்கட்டுரைகளும் எப்பின்னணியில் கருகொண்டவை என்ற தெளிவு வேண்டும். கவிஞர் சோதியின் சிறுவர் நாவலும், அந்த்வானின் குட்டி இளவரசன் நாவலும் ஒரே வகைமையில் ஆனவை அல்ல என்ற கவனம் வேண்டும்.
ஒரு நல்ல படைப்பை அடையாளம் கண்டுகொள்ள சில அவதானிப்புகளைச் சொல்கிறேன். முதலில், எது அதிகம் பேரால் பகிரப்படுகிறதோ அது நல்ல படைப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. இரண்டாவது, ஒரு நல்ல படைப்பு பெரும்பாலும் நம்மைத் தேடி வராது; அதைத்தான் நாம் தேடிச் செல்ல வேண்டும். வேறுவிதமாகச் சொல்வதானால், வாசிக்கச் சுலபமாய் இருக்கும் ஆக்கங்கள் பெரும்பாலும் குப்பைகளாகவே இருக்கும். வாசிக்கச் சிரமம் தருபவையும், பல்துறை ஞானத்தைக் கோருபவையுமே நல்ல படைப்புகளாக இருக்கும். மூன்றாவது, வாசித்து முடிந்தவுடன் மறந்து போவது நல்ல படைப்பாக இருக்க வாய்ப்பில்லை அல்லது தற்காலிக மகிழ்ச்சியைத் தருவதும் நல்ல படைப்பாக இருக்காது.
செயற்கை நுண்ணறிவு கோலோச்ச இருக்கும் எதிர்வரும் ஆண்டுகளின் வாசகர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஏன் என்றால், எங்கள் தலைமுறையோ பாலகுமாரனின் நாவல்களைத்தான் இலக்கியம் என நம்பியது. ராஜேஷ்குமார் போன்றோரின் நாவல்களைக் கூட ஒதுக்கி வைக்கும் காலம் வந்தாலும் வரலாம். அப்படியெல்லாம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என எல்லாம் வல்ல கூகிள் ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.
முருகவேலன்
கோபிசெட்டிபாளையம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

