Jeyamohan's Blog, page 816
March 6, 2022
மெய்யியலும் வரலாற்றாய்வும்
அரையோக அமர்வு. சாஸ்தாஅன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் தளத்தில் வரும் அயோத்திதாசர் பற்றிய விவாதங்களை பற்றி தொடர்ந்து படித்து வருகின்றேன். கற்றுக் கொள்ள பெரும் உதவியாக உள்ளது.நண்பர்களால் இந்து மதம் இந்திய மண்ணோடு தொடர்பள்ளதை பற்றி பல கேள்விகள் விதவிதமான வடிவில் கேட்கப்பட்டும் பதிலளிக்கப்படும் வருகிறது.இந்து மதம் என்பதை ஹிஸ்டாரிக்கல் டைம் லைன் என்ற வரலாற்று காலக் கோட்டில் ஏதாவது ஓரிடத்தில் அமைப்பது பற்றி பல நண்பர்கள் பல கோணத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.இந்த கேள்விகள் சில நேரம் இந்து மதம் என்பது ஒரு டைனோசர் எலும்புக் கூடு போல கருதி அதனை கால ஆராய்ச்சி செய்கிறன. இந்து மெய்யியல் பார்வையில் இது போன்ற கால ஆராய்ச்சியின் இடம் என்ன? இந்து மெய்யியல் தரிசனங்கள் காலத்தினை எவ்வாறு அணுகுகின்றன?இந்து மெய்யியல் காலம் சார்ந்த வரலாற்று ஆராய்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? சர்வதேச அளவில் பொதுவாக கால ஆய்வுகள் என்னென்ன நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகின்றன? அவை உருவாக்கும் தாக்கங்கள் என்னென்ன? சர்வதேச அளவில் உள்ள பல நாகரீகங்களில் எவை எவை கால ஆய்வு செய்வதன் வழியே மெய்யியல் பக்குவத்தினை வளர்த்து மனித மீட்சிக்கு உதவியுள்ளதுன?அன்புடன்நிர்மல்.
யானைமேல் அமர்ந்த சாஸ்தாஅன்புள்ள நிர்மல்,பொதுவாக கால ஆராய்ச்சி என்பது ஒரு தலைப்பை வரலாற்று ரீதியாக புரிந்துகொள்ள அவசியமானது. வரலாறென்பது என்ன என்றால் அது ’காலவரிசைப் படுத்தப்பட்ட கடந்தகாலம்’ என்றுதான் குறைந்தபட்ச வரையறை கூற முடியும். கால அடையாளப்படுத்தப்படாத ஒன்றுக்கு வரலாறு இல்லை என்றுதான் பொருள்.
ஒன்றை உட்பொருள் சார்ந்து குணவயமாக புரிந்துகொள்வதற்கு காலவரையறைப் படுத்துவது இன்றியமையாததா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான தருணங்களில் அவ்வாறு தேவையில்லை என்ற பதிலே நித்ய சைதன்ய யதி போன்ற மெய்யியலாளர்களால் சொல்லப்படுகிறது.
இந்துமதத்தை ஆன்மிகமாக அணுகுபவர்களுக்கு அதிலுள்ள தத்துவக் கருத்துக்களும் குறியீடுகளும் மட்டுமே போதுமானவை. அவை காலம் கடந்தவை. இந்தக் காலத்திற்கு எந்த வகையில் அவை பொருந்துகின்றன, எவ்வாறு பொருள் கொள்கின்றன என்பது மட்டும்தான் முக்கியமே ஒழிய அவற்றின் தொன்மையோ காலப்பரிணாமமோ எந்த வகையிலும் ஒரு ஆன்மீகப்பயணிக்கு பக்தனுக்கு முக்கியமானதல்ல. அவன் கால அடுக்கைப்பற்றி கவலைகொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
முழுயோக அமர்வுஇந்தியாவில் உள்ள பலகோடி இந்துக்கள் எவரும் இந்துக்கள் எவரும் இந்து மதத்தின் காலம் பற்றி பிரக்ஞை உள்ளவர்களோ அதன் வரலாற்றுச் சித்திரத்தை உணர்ந்தவர்களோ அல்ல. மெய்யியல் சார்ந்த பயிற்சிகளில் இருப்பவர்கள், பக்தர்கள் வரலாற்று விவாதங்களில் ஈடுபடலாகாது. அவை அவர்களின் அகத்தைச் சிதைத்து எதிர்மறை உளநிலைகளை உருவாக்கக் கூடும்.
அதைப்போலத்தான் இலக்கியமும் என்றால் அது சற்று மிகையாகத் தோன்றும் எனினும் அது உண்மை. இலக்கியத்தை உணர்வதற்கு அது உருவாக்கும் வரலாற்றுச் சித்திரம் முக்கியமானது அல்ல. இலக்கியம் மொழியில் புனைவாகப் பதிவு செய்யப்பட்ட வரலாறு என்னும் பார்வை ஒரு பக்கத்தில் இருந்தாலும் கூட ஓர் இலக்கியப்படைப்பு காலங்கடந்து இன்று வந்து எவ்வண்ணம் நிலைகொள்கிறது என்பதே இலக்கிய வாசகனுக்கு முக்கியமானது.சங்கப்பாடல்களை இன்று புதுக்கவிதையை எப்படிப் படிப்போமோ அப்படிப்படிக்கவேண்டும் என்பதுதான் ஒரு இலக்கியவிமர்சகனாக நான் என்றும் சொல்லி வருவது. அத்தகைய வாசிப்புக்கு சங்கப்பாடல்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்ற வினாவிற்கே பொருளில்லை.
அழகுணர்வுக்கு வரலாறு மேலதிகமாக எதுவும் அளிப்பதில்லை, ஆன்மிகத்திற்கும் பக்திக்கும் போலவே. அப்படியானால் வரலாறுகளின் பயன் என்ன?
பொருள்கொள்ளல் என்னும் செயல்பாடு வழியாகவே நாம் வரலாற்றையும் பண்பாட்டையும் உயிருள்ளவையாக, செயல்படுபவையாக ஆக்குகிறோம். உதாரணமாக, ஒரு நாட்டார்த் தெய்வத்தை பார்க்கிறோம். அதை நாம் எவ்வகையிலும் அறியாதபோது அது ஒரு சிற்பம் மட்டுமே. அதை பொருள்கொள்ளத் தொடங்கும்போது அது ஒரு பண்பாட்டுச் சின்னம் என ஆகி நம்முள் வளர்கிறது. அதை சாஸ்தா என அறிந்ததுமே நம்முள் அது வளர்கிறது. இந்த ‘பொருள்கொள்ளுதல் என்னும் செயல்பாடு’ நம்முள் தொடர்ச்சியாக, நம்மையறியாமலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அச்செயல்பாட்டை கூர்மையாக, தெளிவாக அமைத்துக்கொள்ள வரலாற்று அறிதல் உதவுகிறது.
பொருள்கொள்ளுதல் இரண்டுவகை. அகவயமான பொருள்கொள்ளுதல் புறவயமாக பொருள் கொள்ளுதல். புறவயமாக பொருள்கொள்வதற்கே வரலாற்றாய்வு தேவைப்படுகிறது. அகவயமாகப் பொருள்கொள்வதே உண்மையில் முக்கியமானது என நான் நினைக்கிறேன். மேலைநாட்டு ஆய்வாளர்கள் அகவயப் பொருள்கொள்ளுதலை முழுமையாகவே நிராகரித்து முழுக்கமுழுக்க புறவயமாகப் பொருள்கொள்ள முயல்பவர்கள். அவர்களுக்கு பண்பாடுகள் என்பவை ஆய்படுபொருட்கள் மட்டுமே. சான்றுகளை அளிக்கும் களம் மட்டுமே.
நாகனிகா கல்வெட்டு,பொமு 2அவர்கள் பறவையின் பாறைப்படிவை ஆய்வுசெய்கிறார்கள். மெய்யியலாளர்கள் பறக்கும் பறவையில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்கள். பாறைப்படிவில் உள்ள பறவையையும் அவர்கள் பறக்க வைக்க முயல்கிறார்கள். நான் இரண்டுக்கும் நடுவே ஒரு வழியை தேர்வுசெய்கிறேன். ஏனென்றால் நான் ஆன்மிகவாதி, கூடவே அறிவியக்கவாதி. என்னால் முடியும் என்றால் இந்த அறிவியக்க களத்தை உதறிவிடுவேன்.
சாஸ்தா என நாமறியும் அத்தெய்வத்தை அதன்பெயர், அதன் சிலைவடிவத்தின் தனித்தன்மை, அதைச்சார்ந்த தொன்மங்கள் மற்றும் நம்பிக்கைகள் வழியாக அறிவது அகவய அணுகுமுறை. நம் தியானம் வழியாக அகத்தே வளர்த்துக் கொள்வது. அதற்கு முடிவே இல்லை. சாஸ்தா செண்டாயுதம் ஏந்தியவர். முழுக்க மலராத மொட்டு போன்றது அந்த ஆயுதம். ஓர் ஆயுதமே மலர்மொக்கு என இருப்பது நம் அகத்தை திகைக்கச் செய்து மேலெழசெய்யலாம்.
சாஸ்தா யானைமேல் அல்லது புலிமேல் அமர்ந்திருக்கிறார். யானை என்பது நீர், புலி என்பது நெருப்பு. அவர் அரையோகநிலை அல்லது முழு யோகநிலைகளில் அமர்ந்திருக்கிறார். அரையோகநிலையில் இருப்பவர் இன்னும் செயலில் இருந்து முழுக்க விடுபடாதவர். முழுயோகநிலையில் இருப்பவர் செயலில் இருந்து முற்றும் அகன்ற பெருநிலை கொண்டவர். இவ்வாறு நம்முள் சாஸ்தா பெருகுவதே அச்சிலை உருவாக்கப்பட்டதன் மெய்யான நோக்கம்.
ஒருகை ஓசை என இதையே சொல்கிறார்கள். சிலை நமக்கு அளிக்கும் திகைப்பு ஒரு கை. நம்முள் இருந்து இன்னொரு அறியாத கை சென்று அதை முட்டி ஓசையாகிறது. சிலைகள் நேரடியாகவே கனவுக்குள் எழக்கூடியவை, முடிவிலாது வளரக்கூடியவை. அவை அளிக்கும் அர்த்தவிரிவு நாம் தர்க்கபூர்வமாக அறிவதைவிட மிகமிக ஆழமானது. அன்றாடம் சாஸ்தாவை நேரில் கண்டு வழிபடும் ஒரு பக்தன் ஒரு தொல்லியலாளர் அறிந்ததை விட சாஸ்தாவை உள்ளூர அறிந்திருப்பான். ஒருவேளை அவனுக்கே அது தெரியாமல் இருக்கும்.
நானே கட்ஆனால் வரலாற்று ரீதியாக மதத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வது மேலதிகமான சில தெளிவுகளை அளிக்கிறது. ஒரு சிலையை அதன் பீடத்துடன் அறிந்துகொள்வது போல. வரலாற்று காலவரிசை, வரலாற்றுப் பரிணாமம் ஒவ்வொன்றையும் மிக விரிவான சமூக சித்திரத்தில் பொருத்துகிறது. அதற்கிணையான வேறு வரலாற்று களங்களுக்குள் இணைக்கிறது. இவை இரண்டும் கூடுதலான அர்த்தங்களை அளித்துக்கொண்டிருக்கின்றன.
இவை எவருக்கு தேவை? விஷ்ணுபுரம் நாவலில் இப்பிரச்சினை எழும். (இத்தகைய ஆன்மிகப்பிரச்சினைகள் எல்லாமே அதில் பேசப்பட்டிருக்கும்) ‘உனக்கு கேள்விகள் எழுந்துவிட்டது, இனி கேள்வியற்ற நிலை என்பது இல்லை. ஆகவே கேள்விகளுக்கான சரியான பதிலை தேடிச்செல். அதுவே உன் வழி. அதிலுள்ள சவால்களால் நீ பின்னால் திரும்பி வரமுடியாது’ என பிங்கலனிடம் அவன் குரு சொல்வார். வினா எழுவது ஓர் அறிவுள்ளத்தின் இயல்பு. வரலாற்றுவினா மெய்யாகவே எழுந்தால் வரலாற்றாய்வே அந்த வினாவுக்கு பதிலை அளிக்கும்.
சங்க இலக்கியத்தை இன்று வாழ்க்கைச் சித்திரங்களாகப் படிக்கலாம். ஐவகை நிலங்களில் நிகழும் உருவகத்தன்மை கொண்ட வாழ்க்கைக் கணங்களினூடாக என்றென்றைக்கும் பொருள்படும் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் முன்வைப்பவை சங்கப்பாடல்கள். இன்று அவற்றை கவிதையென உணர்வதற்கு நமக்கு இன்றைய வாழ்க்கையே போதுமானது. ஆனால் அவற்றை கால வரலாற்றில் பொருத்தினால் அவை கொள்ளும் அர்த்தவிரிவாக்கம் குறிப்பிடத்தகுந்தது.
சங்கப்பாடல்கள் பொமு இரண்டாம் நூற்றாண்டு முதல் பொயு இரண்டாம் நூற்றாண்டு வரையிலான நானூறு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்பது பொதுவான வரலாற்று ஊகம். சங்கப்பாடல்களில் மௌரியர் குறிப்பிடப்படுவது, சங்கப்பாடல்களில் உள்ள அரசர்களை குறிக்கும் வெவ்வேறு கல்வெட்டுகள் தமிழகத்தில் கிடைத்திருப்பது ஆகியவற்றை ஒட்டி இந்தக் கணிப்பு செய்யப்படுகிறது.
ஹாத்திகும்பா கல்வெட்டுஇவ்வாறு கணித்த உடனேயே அன்றைய சமூக சித்திரம் என்ன என்கிற கேள்வியை நோக்கி நம் உள்ளம் செல்கிறது. அன்று தமிழகம் மூவேந்தர்களால் ஆளப்பட்டது. சங்கம் முதிர்ந்த காலகட்டத்தில் அம்மூவேந்தர்களும் பேரரசர்களாக உருமாறியிருக்கின்றனர். சங்க காலத்தின் தொடக்கத்தில் அவர்கள் இங்கிருந்த பலநூறு சிற்றரசர்களுடன் தொடர் போரில் இருந்தனர். பேரரசுகள் படிப்படியாக உருவாகி வந்த ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை சங்க இலக்கியங்கள். அப்போதே தமிழகத்தில் மாபெரும் நகரங்கள் உருவாகிவிட்டிருக்கின்றன. வணிகம் உருவாகிவிட்டிருந்தது. சுங்க வரி கொள்வதைப்பற்றி சங்க கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கடல்வணிகம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஆகவே சங்க கால அகத்துறைப் பாடல்கள் காட்டும் நாட்டுப்புறப் பழங்குடித்தன்மை உள்ள வாழ்க்கை என்பது அதற்கும் பல ஆண்டுகளுக்கும் முன்பு இங்கே இருந்து, பின்னர் அவர்களின் பண்பாட்டு நினைவுகளிலிருந்து உருவகத்தன்மையோடு புனைவுக்குள் உருவாக்கப்பபடுவதே ஒழிய நேரடி வாழ்க்கைச் சித்திரம் அல்ல என்கிற எண்ணம் நமக்கு கிடைக்கிறது. இச்சித்திரம் உருவானதுமே நாம் சங்க அகப்பாடல்களை பொருள்கொள்ளும் முறை மாறிவிடுகிறது.
அன்றிருந்தது உருவாகிவரும் நகர்ப்பண்பாடு. சமீபகாலம் வரைக்கும் சங்க இலக்கியத்தில் இருக்கும் அந்த நகரச் சித்திரங்கள் எல்லாம் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டவை மட்டும் தான் என்றும், அன்றிருந்த நகரங்கள் எதுவுமே தோண்டி எடுக்கப்படவில்லை என்றும், தொல்லியல் சான்றுகள் ஏதும் இல்லாத நிலையில் சங்ககாலத்தில் நகரங்கள் இருந்தன என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறிவந்தார்கள். ஆனால் கீழடிக்குப்பிறகு அந்நிலை மாறிவிட்டது. கீழடி சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு சிறு நகரம். இன்னும் இதைப்போன்ற நகரங்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஹிலியொடோரஸ் தூண்இந்திய வரலாற்றுக் காலத்தில் சங்க காலத்தை பொருத்தும்போது அது மைய இந்தியாவில் சதகர்ணிகளின் அரசு இருந்த காலகட்டத்தை சேர்ந்தது. நாகனிகா அரசியின் கல்வெட்டு காட்டும் சதகர்ணிகள் மத்திய இந்தியாவை கிழக்குமுதல் மேற்குவரை முழுமையாகவே ஆண்ட மாபெரும் பேரரசுகள். அதற்கும் வடக்கே மௌரியப்பேரரசு இருந்தது. புத்த மதம் சமணமதமும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த காலத்தை சேர்ந்தது சங்க இலக்கியம்.
அம்மதங்களின் செல்வாக்கு வணிகத்தினூடாக இங்கு வந்திருக்கலாம். ஏனெனில் சங்க காலம் என்று நாம் வகுக்கக்கூடிய காலகட்டத்தில் இந்தியாவில் மிகத் தொன்மையான வணிக வழிகள் உருவாகிவிட்டிருந்ததை நானே கட் கல்வெட்டுகள் போன்றவை காட்டுகின்றன. ஆகவே சங்க காலத்தில் புத்த சமண வைதிக செல்வாக்குகள் இங்கு இருந்திருக்கலாம்.
இவ்வாறு நாம் சங்க காலத்தின் சமூக உள்ளடக்கம், அரசியல் உள்ளடக்கம் ஆகியவற்றை மிக விரிவாக விரித்துக்கொள்ள அந்த வரலாற்றுப்புரிதல் உதவியாக இருக்கிறது. அதை ஒரு வரலாற்றுக்காலத்தில் பொருத்திய உடனேயே அது மேலும் அர்த்தத்தை கொடுக்க ஆரம்பிக்கிறது. அந்த கூடுதல் அர்த்தம் சங்கப்பாடல்களின் கவித்துவத்தை மேலெடுக்கக்கூடும்.
இவ்வாறுதான் இந்து மதத்தை பற்றிய காலக்கணிப்புகளும் .இந்து மதத்தை நூல்களைகொண்டும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டும் வரலாற்று விவரிப்பு செய்யவேண்டியிருக்கிறது. கிறிஸ்துவுக்கு முன்பு இருநூறு ஆண்டுகள் தொன்மை கொண்ட ஹிரோடிடஸ் கருடத்தூண் பிராமி கல்வெட்டுடன் இங்கே கிடைக்கிறது. அது இங்கே வாசுதேவ (விஷ்ணு) வழிபாடு மிக வேரூன்றி இருப்பதை காட்டுகிறது. அதற்கு எப்படியும் முந்நூறு முன்னூறு ஆண்டுகள் முன்பே வைணவம் இங்கே ஒரு வலிமையான மதமாக இருந்தது என்று சொல்ல முடியும்.
அதற்கு முன்பு செல்லும்போது மகாபாரத காலத்தைச் சென்றடைகிறோம். மகாபாரத காலத்தைச் சேர்ந்த சிறு தொல்லியல் தடயங்கள் தான் இங்கே கிடைக்கின்றன. ஆனால் மகாபாரதத்தில் உள்ள குறிப்புகளை வைத்துப்பார்த்தால் அது இரும்பு பயன்படுத்தப்பட்ட காலம். குறிப்பாக உறையடுப்புகள் வைக்கப்பட்டு இரும்பு உருக்கி பயன்படுத்தப்பட்ட காலம். ஆகவே மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையான. காலகட்டத்தில் நிகழ்ந்ததாக இருக்கலாம்.
இவ்வாறு அதை ஒரு காலத்தில் பொருத்தும்போது அதன் அர்த்த விரிவு எவ்வண்ணம் நிகழ்கிறது? பொதுயுகத்திற்குமுன் மேலும் ஆயிரம் ஆண்டு தொன்மை கொண்டது மகாபாரத நிகழ்வு என்றால் அக்காலத்தில் சீனப்பண்பாடு என்னவாக இருந்தது? ஷாங்(Shang) ஷௌ (Zhou) அரசவம்சங்கள் உருவாகி சீனா இந்தியப்பெருநிலத்தில் எக்காலத்திலும் உருவானவற்றை விட பலமடங்கு பெரிய பேரரசுகளாக ஒருங்கிணைந்து வணிகம், பண்பாடு ஆகியவற்றில் மிகமிக முன்னேறியிருந்தது. அதற்கும் மகாபாரத கால நாடுகளுக்குமான உறவென்ன?
இந்தியா உட்பட அப்பகுதிகளில் வணிகப்போக்குவரத்து எப்படி இருந்தது? துறைமுகங்கள் என்னென்ன? அதற்கு முந்திய காலகட்டத்தை சேர்ந்தவை ஹரப்பா நாகரீகங்கள். மேலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டவை அவை.. அந்நாகரிகத்தின் நீட்சியோ தொடர்ச்சியோ எப்படி மகாபாரதத்தில் உள்ளது?
இவ்வாறு இந்துமதத்தின் குறியீடுகள் தொன்மக்கதைகள் ஆகியவற்றுக்கு நாம் அளிக்கும் அர்த்தங்கள் பெருகத் தொடங்குகின்றன. இந்த வரலாற்றுப்புரிதல் ஆன்மிகமாகவோ அழகுணர்வு சார்ந்தோ கூட நமக்கு கூடுதல் பொருள் அளிப்பதுதான். ஆனால் அது அறிவின் பாதை. உள்ளுணர்வை, உணர்ச்சியை நம்பிச்செல்பவர்கள் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. அவர்களின் பயணத்துக்கு இந்த வரலாற்றுணர்வு தடையென ஆகுமென்றால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது.
இங்கே எழும் சிக்கல் என்னவென்றால் வரலாற்றின் மீதான சார்புநிலைப் பார்வைதான். இவர்கள் வரலாற்றை முறையாக அறிவதில்லை, அதை தவிர்க்கும் அகவயப் பார்வையும் அவர்களிடம் இல்லை. அதை வசதிப்படி திரிக்கிறார்கள். அதை தமிழ்த் தொன்மையோ, வேதகாலம் அல்லது மகாபாரதகாலத்தின் தொன்மையையோ உணர்வுநிலை ஒன்றே. இந்து பக்தர்களும் சரி, தமிழுணர்வாளர்களும் சரி மிகையுணர்ச்சியுடன், வெறும் பற்று வழியாக வரலாற்றை புரிந்து கொள்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு ஒரு தொன்மகாலத்தைச் சேர்ந்தது. காலமிறந்தது. அந்தக் காலமிறந்த தன்மையைத்தான் அவர்கள் புராணம் என்றோ தொல்காலம் என்றோ சொல்கிறார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என்கிறர்கள். வேதங்கள் ஔபௌருஷேயங்கள் ,மனிதர்களால் சொல்லப்படாதவை என்று சொல்லும்போது காலமின்மையைத்தான் உத்தேசிக்கிறார்கள்
அந்த காலமின்மையை மிக நெடுங்காலம் என மாற்றிக்கொள்வதுதான் இவர்களின் வரலாற்றாய்வின் நோக்கம். சமணர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளை தங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கைக்கு அளிக்கிறார்கள். இந்துக்கள் யுகக்கணக்குகளை அளிக்கிறார்கள்.தமிழுணர்வாளர்கள் தமிழிலக்கியங்களின் காலங்களை டைனோசர்கள் வாழ்ந்த காலத்துக்கு, மனிதகுலம் தோன்றுவதற்கு முந்தைய ஜுராசிக் காலங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துறை போன்றவர்கள் கண்டத்திட்டுகள் விரிசலிட்ட காலத்திற்கு, அதாவது பலகோடி ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் தொன்மையைக்கொண்டு செல்கிறார்கள். இந்த வகையான பற்றுகொண்ட பார்வைக்கு வரலாறு முற்றிலும் எதிரானது.
மனிதர்களுக்கும் முன்னால் ,டைனோசர்களும் உருவாவதற்கு முந்தின காலத்தில், தமிழ் இருந்தது என்றும் நம்பும் ஒருவரிடம் சங்க காலத்தின் காலம் மிஞ்சிப்போனால் பொமு இரண்டாம் நூற்றாண்டாகத்தான் இருக்க முடியும் என்று நாம் சொன்னால் அதிர்ச்சி அடைகிறார்.. இப்போது கூட கீழடியைப் பற்றிய விவாதங்களில் கூட இந்த வேடிக்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கீழடி அங்கு கிடைக்கும் சான்றுகளை அப்படியே எடுத்துக்கொண்டாலும் கூட, அதை ஆதரிப்பவர்கள் கூறுவதை ஐயமின்றி ஏற்றுக்கொண்டால் கூ,ட பொதுயுகத்துக்கு முன்னால் இருநூறாண்டுகளுக்குள் தொன்மை கொண்டது, சங்க காலத்தைச் சேர்ந்தது,
அதற்கு இணையான அதே காலத்தில் தான் இந்தியாவில் சதகர்ணிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. நானேகட போன்ற வழிகள் இருக்கின்றன. கார்லே குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. காரவேலரின் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.. ஹாத்திக்கும்பா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.. அதற்கு முன்னால் முன்னால் என இந்திய வரலாறு சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் தமிழுணர்வாளர்கள் இனி இந்திய வரலாற்றையே கீழடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்,. உலகத்திலேயே தொன்மையான நாகரிகம் தமிழ் என்று கீழடி நிரூபித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
வரலாறு இந்தப் புராண நம்பிக்கைகளுடன் மோதும்போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறது. மகாபாரதத்தை இரும்புக் காலகட்டத்துடன் பிணைக்கும்போது ஒரு பக்தன் அடையும் கொதிப்பும் சங்க காலத்தை பொமு இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லும்போது தமிழுணர்வாளருக்கும் வரும் கொதிப்பும் ஒன்றே. வரலாறு சார்ந்து அவர்களுடன் விவாதிக்க முடியாது. அவர்கள் தங்கள் தொன்ம -புராண நம்பிக்கைகளின் உலகில் வாழவேண்டியவர்கள். வரலாற்றை அவர்கள் தங்களுக்கேற்ப திரித்து தொன்மமாக்கி கொள்வார்கள்.. விவாதத்துக்கு அப்பாற்பட்ட மூர்க்கத்தை அதில் காட்டுவார்கள். வரலாற்று ஆசிரியர்களை மிரட்டி அடிபணிய வைப்பார்கள்.
இன்று ஒவ்வொரு ஜாதியும் இதே போல ஒரு புராண வரலாற்றை உருவாக்க ஆரம்பிக்கிறது. தங்களுடைய தொன்மையை பெரும்பாலான ஜாதிகள் இன்று குமரிக்கண்டம் வரைக்கும் கொண்டு செல்வதை இன்று காணலாம். இவர்கள் தங்கள் ஜாதியில் கதாநாயகர்களை உருவாக்கும்போது கற்பனையான ஆளுமைகளை செயற்கையான வரலாற்றுக்காலத்தில் கொண்டு வைப்பதைக் காணலாம்.
வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர்கள் இவர்களுடன் விவாதிக்க, இவர்கள் முன் எதையேனும் நிறுவ முயலக்கூடாது. வரலாற்றாய்வு என்பது நமக்கான தெளிவை நாம் அடைவதற்குரியது. ஒற்றை வரியில் இவ்வாறு சொல்லலாம். வரலாறு அறிஞர்களுக்கு உரியது. தொன்மங்கள் நம்பிக்கையாளர்களுக்குரியவை. அவர்களுக்கிடையே உரையாடல் நிகழ முடியாது.
சாஸ்தாவுக்கே வருகிறேன். வரலாற்று ஆய்வாளன் சாஸ்தாவை ஆராய்ந்தால் மேலதிகமாக என்ன கிடைக்கும்? சாஸ்தா என்னும் உருவகத்திற்கும், இன்று கிடைக்கும் சிலைகளுக்கும் பௌத்த மதத்தின் போதிசத்வர்களுக்கு இருக்கும் ஒற்றுமையை கண்டடைவான். போதிசத்வ வஜ்ரபாணிக்கும் புலிமேல் அமர்ந்திருக்கும் புத்தருக்கும் ஒற்றுமை உண்டு. போதிசத்வ பத்மபாணியே யானைமேல் அமர்ந்த சாஸ்தா. அந்த இரு போதிசத்வர்களும் வெவ்வேறு வகையில் இந்தியாவெங்கும் செதுக்கப்பட்டுள்ளனர். யானையும் தாமரையும் நீரும், புலியும் மின்னலும் நீரும் ஒன்றே என தொன்மங்களின் பரிணாமம் காட்டுகிறது.
மேலும் பின்னால் சென்றால் அந்த போதிசத்வர்களே தொன்மையான இந்திரனின் உருவங்களை ஒட்டி விரிவானவை என்று கண்டடைய முடியும். மின்னலின் இறைவன். தாமரையின் தலைவன். வெள்ளைவாரணம் ஊர்பவன். வெம்புலியை ஆள்பவன். அவனுக்கு முன்னால் என்ன? எங்கிருந்து தோன்றியது அந்த உருவகத்தின் முதல் கற்பனை? அதை மானுட உள்ளத்தில் உருவாக்கியது எந்த விசை?
இங்கும் இருவகை தெரிவுகள் நம் முன் உள்ளன. இந்திரன் என்ன மதம், போதிசத்வர் எந்த மதம், சாஸ்தா ஏது மதம் என சழக்கிடலாம். அல்லது நம்முள் சாஸ்தாவை பெருக்கிப்பேருருவாக்கி மேலும் அணுகிச் செல்லலாம். வரலாறு இரண்டுக்கும் வழிகாட்டுகிறது.
வரலாற்றுணர்வு மெய்யுணர்வுடன் இணையும் தருணங்கள் சில உண்டு. என் பாதை அதுவே. நான் காட்டில் பார்த்த புலியின் கோடுகளின் நெளிவில் தழல் எழுந்து சாஸ்தா தோன்றினார். மின்னலின் துடிப்பில் இந்திரன் என எழுந்தவரும் அவரே. வரலாற்றிலும் நனவிலியிலும் சாஸ்தா எழுந்தருள்வார். இந்து பௌத்த சமண பண்பாடுகளில் எல்லாம் அவர் பெருகி நிறைவார்.
ஜெ
அருண்மொழி உரை -கடிதம்
அருண்மொழி நங்கை விழா- உரைகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
அருணாவின் ’’பனி உருகுவதில்லை’’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர விரும்பினேன் எனினும் சென்னைக்கு வருவதென்பது இன்னுமே வேற்று கிரகத்துக்கு பயணம் செய்வதை போலவே சாத்தியமில்லாததாக இருக்கிறது. ஆனால் விழாவின் காணொளிகளை பார்த்தேன். யுவன், சாரு மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன.
அருணாவின் ஏற்புரையை தேர்தல் பணியின் போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வர காத்திருக்கையில் அந்த குக்கிராமத்து பள்ளியின் ஏராளமான வேப்பமரங்களினடியில் அமர்ந்து கேட்டேன். அருணாவின் முந்தைய பேய்ச்சி உரைக்கும் இதற்கும் வித்தியாசம் இருந்தது.பேய்ச்சி உரை மரபான மேடை உரை அதையும் தனது இயல்பினால் அழகிய பாவனைகளுடன் பேசினார்கள்.
பனி உருகுவதில்லை ஏற்புரையில் அருணா முதலில் சிறப்பு விருந்தாளிகள் பற்றி சொல்ல போகையில் எதற்கு அதை சொல்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன். ஏனெனில் வழக்கமான ஏற்புரைகள், தான் அதை எழுத காரணமாயிருந்தவைகள், இருந்தவர்கள், எழுதுகையில் நிகழ்ந்தவை, உணர்ந்தவை உண்டான தடங்கல்கள், நிகழ்வுகள் என்றிருதானிருந்தது அதுநாள் வரைக்கும்.
ஆனால் அருணா மிக அழகாக முகம் கொள்ளா சிரிப்பும் தோழமையுமாக சாருவை குறித்தும் யுவனை கோபாலகிருஷ்ண சாரை குறித்தும் சொல்லிக்கொண்டிருகையிலேயே தான் அந்த பதிவுகளை எழுதுகையில் அவர்களுடன் விவாதித்ததையும் கலந்து சொல்லி அந்த துவக்க பகுதியை மிக அழகாக்கி விட்டார்கள்.
வழக்கம் போல அபிநயங்களுடன் ரசிக்கும்படியான பேச்சுத்தான் எனினும் இந்த முறை சீரான பலவரிசை தெரியும்படி பலத்த சிரிப்பும் புன்னகையுமாக அருணா பேசியது மிக அருமையாக இருந்தது. மேடை உரையை போலவே இல்லாமல் வீட்டு கூடத்தில் அமர்ந்து அருணாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் உணர்வுதான் இருந்தது முழு உரையை கேட்கையிலும்
அருணாவின் உடல் மொழியிலும், பேச்சிலும் மகிழ்விலும் தெரிந்தது தன்னம்பிக்கை தான். அதுவே அவரின் உரையை மிக சிறப்பாகவும் அழகாகவும் ஆக்கிவிட்டிருந்தது. அவரின் சொந்த படைப்பு, அவரின் சொந்த வாழ்க்கை, அவரின் பால்யம் என்பதால் அதை உளமாற பேசினார். ஒரு எழுத்தாளரின் மனைவி என்னும் அடையாளத்தை வைத்துக் கொண்டு அருணா இதை எழுதியிருக்கிறார் என்று யாரேனும் நினைதிருந்தாலும் இந்த உரை அவர்களுக்கான பதிலாக இருந்திருக்கும்.
தயக்கமே இல்லாமல் அருணா பேசியவற்றில் அவரது நினைவாற்றல், அவரது வாசிப்பு பின்புலம், அவர் எவ்வாறு உரையாடல்களை கட்டமைத்தார், எப்படியான படைப்புக்களை தன் எழுத்துக்கு முன்னுதாரணங்களாக கொண்டார், தன் கட்டுரைகளை எப்படி வடிவமைத்தார், ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் எத்தனை கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதையெல்லாம் கேட்கையில் ஆச்சர்யமாக இருந்தது ஏதோ தனக்கு நிகழ்ந்தவற்றை அப்படியே எழுத்தில் கொண்டு வந்ததல்ல இந்த பதிவுகள். அருணாவின் உழைப்பையும் ரசனையும் அவருக்குள்ளிருக்கும் எழுத்தாளரையும் அவரது கலை மனதையும் அடையாளம் காட்டும் பதிவுகள் அவை.
தவழ்ந்து வரும் குழந்தையை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் சிறுமி அருணாவை எழுத்தாளர் அருணா பிரிதொரு புலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததையும், காலத்தின் சாராம்சத்தை செறிவாக்கியதையும் அவர் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
அதைபோலவே குடும்ப உறுப்பினர்களின் பிரத்யேக ’’ஆளுமைகளை கணக்கிட்டு அவற்றிற்கு தக்கவாறு நான் என் எழுத்தை நிகழ்த்தினேன்’’ அன்று சொன்னதும்தான்.
அருணா விவரித்த அழகுக்காகவே நான் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் வாசிச்கவிருக்கிறேன்.
மரபான மேடைப்பேச்சுக்களின் பிடியில் அகப்படாமல் அவருக்கெ உரித்தான விரைவும் இயல்பும் கலந்த இயலபான உரையை அருணா அன்றளித்தார். அவரது உடையும் மிக பொருத்தமாகவும் கண்ணியமாகவும் இருந்தது.பனி உருகுவதில்லை வெளியீட்டு விழாவை இனி எப்போது நினைத்துக் கொண்டாலும் அருணாவின் புன்னைகையில் பூரித்திருந்த அந்த அழகிய முகம் நினைவுக்கு வரும்.
இந்த பதிவுகளை தொடந்து அன்றன்றைக்கு வாசித்தவள் என்னும் வகையில் அருணாவின் எழுத்துக்களோடு நானும் பயணித்துக்கொண்டிருந்தேன். அவற்றை வாசிக்கையிலும், மேடையில் அருணா பேச கேட்கையிலும் அவரின் இளமைப்பருவத்தில் நிகழ்ந்தவை எல்லாம் எனக்கே நிகழ்ந்தவைகள் போல் ஒரு மயக்கம். அஜி பள்ளிக்கு போய் வந்து சொல்லும் கதைகளெல்லாம் தனக்கும் நடந்ததாக, சைது சொல்வதைப்போல):
வீட்டில் புத்தக அலமாரியில் அருணாவிற்கென்று தனியே ஒரு புதிய பகுதியை ஒதுக்கி வைத்திருக்கிறேன். இனி வரப்போகும் அவரின் படைப்புக்களுக்காக அந்த இடம் காத்துக்கொண்டிருக்கிறது
அருணாவுக்கு அன்பு
லோகமாதேவி
தந்தை மகன் உறவு -கடிதங்கள்
தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்
தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும் —2
அன்புள்ள ஜெ
தந்தை மகன் உறவு இரு படைப்பாளிகள் கட்டுரையை வாசித்தேன். இலக்கியவிமர்சனம் என அதைச் சொல்லமுடியாது. அனுபவப்பகிர்வு. ஆனால் இந்தவகையான கட்டுரைகள் நூல்களை நம் மனசுக்கு மிக அருகே கொண்டுவருவதைப்போல எதுவுமே கொண்டுவருவதில்லை. இந்த கட்டுரை இரு எழுத்தாளர்களின் மனதுக்குள் ஆழமாக செல்கிறது. அந்த எழுத்தாளர்களையும் அவர்களின் நாவல்களையும் இணைக்கிறது. கூடவே நம்முடைய வாழ்வனுபவம் வழியாக அந்நூல்களை வாசிக்கச் செய்கிறது. இலக்கிய விமர்சனம் அலசலாக ஆகும்போது அது நம்மை அகற்றிவிடுகிறது. எல்லாவற்றையும் விமர்சகனே சொல்லிவிட்டால் வாசகனாகிய என் இடம் என்ன என்று தோன்றுவதுண்டு. இந்தக்கட்டுரை போன்ற விமர்சனக் கட்டுரைகள்தான் இரு படைப்பாளிகளையும் நுட்பமாக அறிவதற்கான வழி
செல்வக்குமார்
அன்புள்ள ஜெ
நான் 1992ல் உறவுகள் நாவலை வாசித்தேன். அப்போது எனக்கு அது சலிப்பூட்டும் ஓர் அனுபவமாக இருந்தது. ஆனால் அன்று திருவனந்தபுரத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். ஆகவே வாசிக்கமுடிந்தது. ஆனால் இருபதாண்டுகளுக்குப்பின் சென்ற வாரம் என் அப்பா மறைந்தபோது அந்நாவல் அப்படியே என் நினைவில் எழுந்தது. அப்பா இறந்த சம்பவமே இன்னொருமுறை நிகழ்வதுபோல் இருந்தது. அந்தவகையான இலக்கியத்தின் அடிப்படை என்ன என்று அப்போதுதான் தெரிந்தது. இன்று உங்கள் கட்டுரை படித்தால் நான் எண்ணியதையே எழுதியிருக்கிறீர்கள்.
ராகவேந்திரன் சென்னை
ஆசான் – கடிதம்
அன்புள்ள ஜெ..
புரட்சித் தாய் , பிரபஞ்ச நாயகன் , தமிழினக் காவலர் என அரசியல்வாதிகளை , நடிகர்களை அழைப்பதை இயல்பாகவும் பிடித்த எழுத்தாளர்களை தனக்கு உகந்தபடி போற்றுவதை நெருடலாகவும் படித்தவர்கள் (?!) நினைப்பதும் இது சார்ந்த விவாதமும் கிராமத்துப் பின்னணி கொண்டவர்களுக்கு காமெடியாக இருக்கிறது
எங்கள் கிராமங்களில் எல்லாம் எப்பேற்பட்ட தலைவர் என்றாலும் அவன் இவன்தான். ஆனால் கல்வி சார்ந்தவர்கள் என்றால் அவர் என அழைப்பதேகூட மரியாதைக்குறைவாகத்தான் கருதப்படும்.
வெகு இயல்பாக பேச்சு வழக்கில் கணக்கு சார் அவர்கள் என்பார்கள். சாருஹ வந்துட்டாஹகளா ( சார் அவர்கள் வந்து விட்டார்களா ) என்று மெத்தப்பணிவாக கேட்க வேண்டும். கணக் கு சார் வந்துட்டாரா என்று கேட்பது வந்துட்டானா என கேட்பதற்கு சமம்
அதன்பிறகு இளமைப்பருவத்தில் ஐயா , ஆசானே , வாத்தியாரே என தொழில் சார்ந்த நெருக்கத்தின் அடிப்படையில் அழைப்பதும் வழக்கம்தான்.ஆனால் இதை நகரப்பள்ளிகளில் படித்து கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி அப்படியே செட்டில் ஆகி விட்ட நண்பர்களுக்கு புரிய வைக்கவே முடிவதில்லை.மேடையில்தானே அவர்களே என்று விளிப்பார்கள்? நேர்ப்பேச்சில் − அதுவும் சிறுவர்கள் − அப்படியா அழைப்பார்கள்? சார்தானே இயல்பாக இருக்கிறது? ஐயா , ஆசான் , வாத்தியாரே இவை நாடகத்தனமாக இல்லையா என்று கேட்போரிடம் உரையாடவே முடிவதில்லை
வட இந்தியாவில் பெரியோரின் பாதம் பணிதல் சர்வ சாதாரணம். பொது இடம் , வீடு என்ற பிரிவினைகளெல்லாம் இல்லை. அந்த அடிப்படையில் புத்தகக்கண்காட்சியில் நான் பாலகுமாரன் பாதம் பணிந்தேன். அதற்காக இணையத்தில் கடுமையான கேலிகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளானேன்.
சாரு நிவேதிதா நூல் வெளியீடு ஒன்றில் அல்ட்டிமேட் ரைட்டர் என்ற அடைமொழியோடு அடித்த போஸ்டரும் விமர்சனத்துக்கு உள்ளானது.ஆனால் தனக்குப்பிடித்த எழுத்தாளர்களை தன் மனநிலைக்கு ஏற்ப கொண்டாடுவது இயல்பான ஒன்றுதான்.
இணைய சலசலப்புகளுக்கு அப்பால் நமது சமூகம் எழுத்து , கல்வி சார்ந்தவற்றை சரஸவதி , தட்சிணாமூர்த்தி என சில தொன்மங்களை இணைத்து போற்றியே வருகிறது
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஜெ
ஆசான் என்ற சொல் வாசித்தேன். உண்மையில் அந்த கட்டுரையை வாசிக்கும் வரை அந்தச் சொல்லை கேலி செய்து சுயமரியாதை பேசுபவர்கள் தங்கள் தலைவரின் பெயரை ஒருவர் சொன்னாலே கொந்தளிப்பவர்கள் என்பதை உணரவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இவர்களுக்கு மரியாதைக்குரியவர்கள் என்றால் அது அதிகாரத்தில் இருப்பவர்கள், பணபலம் கொண்டவர்கள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு மரியாதை வந்தாலே திகைப்பு அடைகிறார்கள்.
சரவணக்குமார்
ஊழலின் புதிய முகம்
2010 முதல் 2016-ம் ஆண்டு வரை நிகழ்ந்த தேசியப் பங்குச் சந்தை முறைகேடுகளை விசாரித்த இந்தியப் பங்குச் சந்தை வாரியம் – செபி (Securities and Exchange Board of India), சமீபத்தில் தன் அறிக்கைகளைச் சமர்ப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, மத்தியப் புலனாய்வுத் துறை, தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா, குழுமச் செயல் அலுவலர் ஆனந்த் சுப்ரமணியம், தேசியப் பங்குச் சந்தையின் முதல் மேலாண் இயக்குநர் ரவி நாரயண் மூவரையும் தேடப்படும் நபர்களாக அறிவித்தது.
March 5, 2022
தார் குழையும் தருணம்
உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், ஜெமோ. அது சிறு வயதில் பள்ளியில் படித்த, புரிந்து கொண்டிருந்த ஒரு புறநானூறு பாடல், அதன் அர்த்தம் மட்டும் மிக ஆழமாக மனதில் பதிவாகியிருந்தது.
முதலில் அது மன்னன் நெடுஞ்செழியனின் வஞ்சினம் உரைத்தலாக எனக்கு மனதில் பதிவாகியிருந்தது.
அந்த வஞ்சினம் இப்படி இருக்கும், “இந்த போரில் நான் அந்த எதிரி நாட்டு மன்னைனை வெல்லவில்லை எனில் தன் மனதில் என் மேல் சிறிதும் அன்பு இல்லாத ஒரு பெண்டிரை கட்டி அணைத்த பாவம் என்னை வந்து சேரட்டும்” என்று போருக்கு போவதற்கு முன் வஞ்சினம் உரைத்ததாக. அந்த வயதில் அது ஒரு பெரிய செய்தி சொல்லலாக எனக்கு இருந்தது. “கங்கை கரையில் காரம் பசுவை கொன்ற பாவம் என்னை வந்து அடையட்டும்” என்பது போல் பெரும் குற்றத்தை அல்லது பாவத்தை முன்வைத்தே அரசர்களால் போருக்கு போவதற்கு முன் வஞ்சினங்கள் சொல்லப்பட்ட காலத்தில், தன் மேல் விருப்பம் இல்லா ஒரு பெண்ணை கட்டி அணைப்பதை, இன்னும் சொல்லப்போனால் “consent இல்லாமல் ஒரு பெண்ணை தொடுதல்” என்பதை எவ்வ்ளவு பாவமாக ஒரு மன்னன் கருதி இருக்கிறான் என்ற எண்ணம் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணி இருந்தது.
ஆனால் அந்த குறிப்பிட்ட பாடல் முற்றிலும் மறந்து விட்டிருந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாள் தேடி பார்த்து கிடைக்காமல் விட்டுவிட்டேன். அதன் அர்த்தம் மட்டும் மனதில் இருந்தது. போன வாரம் நாஞ்சிலிடம் பேசும்போது கேட்க, அவர் இதுவா, அதுவா என்று சிலவற்றை சொல்ல, அவர் சொன்னவற்றில் இருந்து குறிச்சொற்களை இட்டு தேடி கடைசியில் அந்த பாடலை கண்டுபிடித்துவிட்டேன்.
இதுதான் அந்த பாடல்.மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்5உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்10வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!
சோழன் நலங்கிள்ளி சொல்கிறான். என் நாட்டை விரும்புபவர் மெதுவாக என்னிடம் வந்து, என் கால்களைப் பிடித்து, உன் நாட்டைக் கொடு என்று பிச்சையாகக் கேட்டால் முரசு முழங்கும் என் ஆட்சியையும், வேண்டுமானால் என் உயிரையும் அவருக்கு உரிமை ஆக்குவேன். இந்த நிலத்தில் என் ஆற்றலைப் போற்றாமல், என் உள்ள உரத்தை எள்ளி நகையாடிய மடவோன் தூங்கும் புலிமேல் கால் தடுக்கிய குருடன் போல தப்பிச் செல்லமாட்டான். மூங்கிலைத் தின்னும் வலிமை மிக்க யானையின் காலடியில் பட்ட மூங்கில் முளைக்குருத்து போல அவனைப் போரிட்டு நசுக்குவேன். அப்படி நசுக்காவிட்டால், என் மாலை நெஞ்சில் காதல் இல்லாமல் ஒப்புக்குத் தழுவும் கூந்தல் பகட்டுக்காரியின் தழுவுதலில் குழைவதாகுக.
ஆனால் இந்த பாடலை படித்த பின் என் “மனதில் இருந்த கருத்து தீவிரத்துக்கு” இந்த பாடல் இயைந்து வருகிறதா என்று சந்தேகமாக இருந்தது. இந்த பாடலில் சோழன் நலங்கிள்ளி ‘தன் மனதில் சிறிதும் காதல் இல்லா மகளிரை தழுவுவதில் என் மாலை குழைவதாக’ என்று வஞ்சினம் உரைப்பதாக அர்த்தம் கொள்கிறேன். ஆனால் அதை ஒரு “பெரும் பாவத்துக்கு” அவன் இணைவைத்ததாக கொள்ள இடம் இருக்கிறதா? ‘என் மாலை குழைவதாக’ என்பதற்கு நான் நினைத்திருந்த பொருள் தீவிரம் வருமா?
அந்தப்புரத்தில் நூறு பெண்களை வைத்திருப்பார்கள், ஒவ்வொரு பக்கத்து நாட்டு அரசுகளுடனான போர் சமரசங்களும் அந்த நாட்டு பெண்ணை மணம் முடித்து வருவதில் முடியும் அல்லது போரில் வென்று ஆநிரை, பெண்டீர் கவர்தல் என்பதையெல்லாம் அறமாக கொண்ட காலகட்டத்தில் Consent இல்லாமல் ஒரு பெண்ணை தொடுதலை ஒரு மன்னன் வஞ்சினம் உரைக்கும் அளவுக்கு பெரும் பாவமாக கருதினான் என்று சொல்வதற்கான இடம் உண்டா?
இல்லை, அது அந்த வயதில் அது என் மனதில் இருந்த அர்த்தம் மட்டும்தானா? நீண்ட நாளாக மனதில் அர்த்தமாக மட்டும் உருக்கொண்டிருந்த இருந்த ஒரு பாடல் உண்மையில் அதே தீவிரத்துடன் இல்லையோ என்று நினைக்கத் தோன்றியது. அதனால்தான் உங்களிடம் கேட்க நினைத்தேன்.
சரவணன் விவேகானந்தன்
அன்புள்ள சரண்
உங்கள் கவிதையுடன் இணையக்கூடிய ஒரு வரி ‘அதனினும் கொடிது அன்பிலாப்பெண்டிர்’ என்ற அவ்வையின் கவிதை. அன்பிலாது பெண்டிரை அணைதல் ஆண்மைக்கு இழுக்கு என்னும் கருத்து வெவ்வேறு வகையில் தொடர்ந்து தமிழிலக்கியத்தில் வந்துகொண்டிருக்கிறது. அது ஒருவகையான அத்துமீறுதல் என்றே நம் மரபு கருதுகிறது. ஒருவன் தன் ஆண்மையை இழிவு படுத்திக்கொள்ளுதல் அது.
அன்பைப்பெறுவதற்கு மடலூரலாம் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. தன்னை அனைத்துக்கும் கீழாக இழிவுபடுத்திக்கொண்டு ,எந்த எல்லைக்கும் தான் செல்வதற்கு தான் தயார் என்று அந்தப்பெண்ணுக்கும் அவள் உற்றாருக்கும் காட்டி அதனூடாக அவளது அன்பைப் பெறுவதுகூட ஏற்கப்பட்டிருக்கிறது. காதலை மறுக்கும் பெண்ணின் உள்ளத்தை இளகச் செய்வதற்காக அவள் கால்களைத் தன் தலையில் சூடுவது ஆண்மைக்கு சிறப்பென்று சொல்லப்பட்டிருக்கிறது. கம்பன் ராவணனைப் பற்றியே அவ்வாறு பாடுகிறான். ஆனால் எவ்வகையிலேனும் அவள் அன்பை ஈட்டவேண்டுமேயொழிய அன்பிலாது அணைதல் என்பது அனைத்து வகையிலும் கீழ்மை. அன்பைப் பெறுவதற்கு இதையெல்லாம் அனுமதிக்கும் பண்பாடு அன்பிலாமல் பெண்ணை அடைவதை கடுமையாக அருவருத்து விலக்குவது இயல்புதானே? நீங்கள் சுட்டிய பாடலும் அதைத்தான் சொல்கிறது.
இயல்பாக எழும் கேள்வி, அந்தப்புரத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை வைத்திருத்தல், பெண்களை கவர்ந்து கொண்டு வருதல் ஆகியவற்றை செய்தவர்களால் இதை சொல்ல முடியுமா என்பது. என் வாசிப்பில் சங்க காலத்தில் அவ்வாறு ஆயிரக்கணக்கான பெண்கள் கொண்ட அந்தப்புரங்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. உரிமை மகளிர் என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் தென்படுகிறது. அது அடிமைகொள்ளப்பட்ட அல்லது உரிமைகொள்ளப்பட்ட பெண்கள். ஆனால் அவர்கள் பாலியல் அடிமைகள் என்றோ அவர்கள் மன்னர்கள் வலுக்கட்டாயமாக அடையலாம் என்றோ சங்க இலக்கியம் காட்டவில்லை.
உண்மையில் சங்க இலக்கியம் போன்ற தொடக்க காலத்தில் அவ்வாறு பெண்கள் பாலியல் அடிமைகளாக இருந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அது பேரரசுகள் உருவாகிக் கொண்டிருந்த சூழல் எனினும் பழங்குடி மதிப்புகள் நீடித்த காலம். அன்று அவ்வாறு நூற்றுக்கணக்கான பெண்களுடன் கூடிய அந்தப்புரங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. உரிமை மகளிர் என்று சொல்லப்படுபவர்கள் கூட அவர்களுக்கு அன்றைய ஆசாரங்களும் நெறிமுறைகளும் அளித்த வசதிகளையும் வாழ்க்கை முறைகளையும் அனுபவித்து அவர்களுக்குரிய வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பார்கள். பழங்குடிச் சமூகத்தில் அடிமை முறை உண்டு .ஆனால் அது ஒரு வளர்ந்த நகர சமுதாயத்திலுள்ள வாழ்க்கை போன்றதல்ல. அந்த அடிமையும் ஒருவகையான குடிமகனே. அவனுக்கு வேறு வகையான வாழ்க்கை முறை, இன்னொரு வகையான உரிமை முறை வகுத்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தான் வேறுபாடு
அன்று போர்களில் பெண்களைக் கவர்ந்தார்கள் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனெனில் அது ஆநிரை கவர்தலில் இன்னொரு வழி. ஆநிரை கவர்தல் என்பது இயல்பான ஒரு அரசியல் நடவடிக்கையாக கருதப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்ணை திருடிக் கொண்டுசெல்வது ஏற்கப்பட்டிருந்தது என்றால் ஏன் பேரரசர்கள் வந்து சிற்றரசர்களின் வீட்டுமுன் பெண் கேட்டு மன்றாடி நின்றிருக்கும் ஒரு துறை – மகடூ மறுத்தல்- சங்கப்பாடல்களில் உள்ளது? குழப்பம்தான். ஆய்வாளர்தான் சொல்லவேண்டும்
அன்றைய பெண்கள் அவ்வாறு கவரப்படுதலை இயல்பானதாக, ஒருவேளை தங்களுடைய மதிப்பிற்கு ஒரு சான்றாகக் கூட எடுத்துக்கொண்டிருக்கலாம். பல பழங்குடிச் சமூகங்களில் தாங்கள் கவரப்படுவதைப்பற்றி பெண்களுக்கு எந்த தன்மானச் சிக்கலும் இல்லையென்பதைக் காணலாம். அவர்கள் அதுவே இயல்பானதென்று எடுத்துக்கொள்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மதுரைப் பகுதிகளில் கவரப்படும் பெண்கள் அதை அவமதிப்பாக எடுத்துக்கொண்டதில்லை. பெருமிதமாகவே எடுத்துக்கொண்டார்கள். என் நண்பரின் பாட்டி களவுசெய்து கொண்டுவரப்பட்ட பெண். அவருக்கு நினைக்க நினைக்க பெருமிதம் அதில்.அன்று மன்னனால் கவரப்படும் பெண் அவனை விரும்புவதற்கும் அவனுடைய பெண்ணாக தன்னை கற்பனை செய்துகொள்வதற்கும் எந்த தடையும் இருந்திருக்காது.
பொதுவாகவே அற ஒழுக்க விஷயங்களில் நம்முடைய முந்தின தலைமுறையுடைய உளநிலைகளைக் கணிப்பது கடினம். பல மனைவியர்களில் ஒருவராக இருப்பதற்கு இன்றைய ஒரு பெண் மிகப்பெரிய உளவியல் சிக்கலை அடையலாம். ஆனால் நேற்றைய காலத்து பெண் அதை இயல்பாகவும் மகிழ்வாகவும் தான் எடுத்துக்கொண்டிருக்கிறாள். பல அரசியரில் ஒருவராக இருப்பதென்பது உயர்ந்த விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம்.
அன்று விரும்பாத பெண்ணை அணைவதென்பது இருந்திருக்கிறதா? அந்த வன்முறை ஆணின் இயல்பு. வன்முறையே வாழ்வெனக் கொண்ட அச்சூழலில் அது சாதாரணமாக நடந்துகொண்டிருக்கலாம். அது அத்தனை சாதாரணமாக நடந்தமையால்தான் அத்தனை கடுமையான கண்டனத்தை கவிதை முன்வைக்கிறது. அன்றாடத்தில் இயல்பான ஒருநடவடிக்கை, ஆனால் உயர்விழுமியங்கள் அதை ஏற்கவில்லை. அதைத்தான் சோழனின் இந்தப்பாடல் சொல்கிறது.
பொதுவாக ஒன்றைச் சொல்லவேண்டும். சங்கப்பாடல்கள் காட்டும் சமூகச்சூழலில் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு உள்ளது. அதன் உச்சம், அதன் சிந்தனையின் மேல்மட்டம், மிக உயர்ந்த அறமும் விழுமியங்களும் கொண்டதாக உள்ளது. அதன் அடித்தளம் பழங்குடிப் பண்பாடுகளுக்குரிய கட்டற்ற வன்முறையும் பகைமைகளும் கொண்டதாக இருக்கிறது. தலைக்கும் வாலுக்கும் நடுவே அவ்வளவு தொலைவு.
கொல்லாமை உள்ளிட்ட நெறிகள் தனிமனித விடுதலை போன்ற கொள்கைகள் அன்று வந்துவிட்டன. அவையே புறநாநூற்றின் பாடல்களில் வெளிப்படும் விழுமியங்கள். ஆனால் புறநாநூறு காட்டும் சமூகச்சூழலில் அந்த விழுமியங்கள் இறங்கிச் சென்றிருக்கவில்லை. அங்கே கைப்பற்றிய நாட்டின் மன்னனுக்கு குடிநீர் கொடுக்காமல் சாகவிடுகிறார்கள். அவன் பற்களைக் கொண்டு கோட்டையில் பதிக்கிறார்கள். எரிபரந்தெடுத்தல் என்ற பெயரில் நகரங்களை அழிக்கிறார்கள். குடிநீர்ச் சுனையை சிதைக்கிறார்கள்.
இன்னமும் பழங்குடித்தன்மை அகலாத அப்பண்பாட்டை தத்துவத்தால் உருவகிக்கப்பட்ட ஓர் உயர்நிலை நோக்கி இழுக்கிறார்கள் கணியன் பூங்குன்றனும், கபிலரும், பரணரும், ஔவையாரும். மன்னனாக இருந்தாலும் சோழன் நலங்கிள்ளி அவர்களில் ஒருவனாக நிலைகொள்கிறான் என்பதே அவனுடைய மாண்பு.
சங்கப்பாடல்களில் ‘வரிகளுக்கிடையே வாசிக்கும்’ ஒரு நுண்வாசிப்பு நமக்குத் தேவை. இதில் நேர்ப்பொருளாக விரும்பா மாதரை அணைந்த கீழ்மையை அடைவேனாக என்னும் வஞ்சினம் உள்ளது என்பது பொழிப்புரை. பொழிப்புரை கவிதை அல்ல. கவித்துவமாக இப்பாடல் ஒரு படி மேலே செல்கிறது. கீழ்மை அடைவேனாக என்று சோழன் நலங்கிள்ளி சொல்லவில்லை. அவர்களுடன் இணைகையில் என் மாலை வாடிக்குழையட்டும் என்கிறான்.
அந்த மாலை, ஆண்மகனின் ஆழத்திலுள்ள மிகமிக மென்மையான ஒன்று. அது வாடுவதென்பது அவன் மட்டுமே அறியும் ஓரு நுண்நிகழ்வு. அது புறவுலகின் பார்வையில் பெரிய கீழ்மையோ, தோல்வியோ அல்ல என்றாலும்கூட அவனுக்கு மிக அந்தரங்கமான ஓர் இழப்பு, ஒரு கசங்கல்.மீளமுடியாத ஒரு வீழ்ச்சி. எந்த ஆணும் அந்த மென்மலர்தாரை தன்னுள்ளே உணர முடியும். மலரினும் மெல்லிய ஒன்று, அதன் செவ்வி தலைப்படுவோர் சிலரே.
அந்த மாலையை எண்ண எண்ண விரியும் இப்பாடல் தமிழில் எழுதப்பட்ட மிகமிக நுட்பமான, மகத்தான கவிதைகளில் ஒன்று.
ஜெ
அறம் வழியாக நுழைவது…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலம் . நலம் அறிய ஆவல் . தங்களின் அறம் புத்தகத்தை தந்தையின் பரிந்துரையில் படித்தேன் . வாழ்வின் அனைத்து மெய்த்தேடல்களுக்கான களஞ்சியமாக “அறம்” அமைந்தது . வாழ்வின் எதார்த்தங்களை என் இருபதாம் வயதில் புரிய செய்தமைக்கு நன்றி . ” மனமே , சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு ” என்று கூறி ஓடிக்கொண்டு இருந்தேன் . அறம் சிறுகதைகள் அனைத்தும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலாக அமைந்தன , வலிமை சேர்த்தன . விடை காண இயலாத பெரும் போராட்டமாக மரணத்தை எண்ணி இருந்தேன் . அன்பிற்குரியவர்களின் மரணத்தை ஏற்று கொண்டு , அதனை தாண்டி வாழும் பக்குவத்தை இந்நூலின் வரிகள் தந்தன .வாழ்வின் வழிகாட்டியை வழங்கியமைக்கு நன்றி . “அறம்” என்ற நூலை மையமாகக் கொண்டு செயல்பட்டால் வரும் நாட்கள் வசந்தமாக அமையும் என்று உணர்ந்தேன் .
அறம் நூலில் வரும் ஒவ்வொரு சிறுகதையும் திருக்குறளின் அதிகாரங்களின் மிகச் சிறப்பான விளக்கங்களாக தோன்றியது .உதாரணமாக சோற்றுக்கணக்கு
என்னை உறங்கவிடாமல் செய்த சிறுகதை . திருக்குறளின் பொருட்பாலில் வரும் நல்குரவு என்னும் அதிகாரத்தின் வலியை உணர்த்தியது . “மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ” என்ற வரி மனதில் ஆழமாக பதிந்தது . “விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன்” என்ற வரியை பலமுறை படித்தேன் . இத்தகைய ஈடு இணை அற்ற படைப்பை வழங்கியதற்கு நன்றி . யானை டாக்டர் ” கொல்லாமை ” என்னும் அதிகாரத்தை விளக்கியது . “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.” என்னும் திருக்குறளின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக தாயார் பாதம் தோன்றியது . மத்துறு தயிர் கம்பராமாயணத்தின் பெருமையை உணரசெய்தது . அறத்துப்பால் , இல்லறவியல் ஆகியவற்றை உணர செய்தது . பெருவலி கதையில் கோமலின் வலி என்னை வாட்டியது . என்னதான் நவீனங்கள் , முற்போக்கு நிறைந்த நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது மனம் கடவுளை தேட தொடங்குகிறது என்பதை பெருவலி சிறுகதை மிக அழகாக உணர்த்தியது . நூறு நாற்காலிகள், என் மனதில் இருக்கும் அரசியல் பற்றிய எண்ணத்தால் ,மேலும் ஆழமாக உணர முடிகின்றது .சரியான தலைமை இல்லாவிடில் ஆயிரம் நாற்காலிகள் இருந்தாலும் போதாது என்று தோன்றியது . இக்கதையில் அம்மாவின் மரணப்படுக்கை செய்தி என்னை கண்ணீர் விட்டு அழ செய்தது . ஓலைச்சிலுவை கதை வெள்ளைக்காரர்களை பற்றிய என் எண்ணம் முழுவதும் மாறியது .
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தெரிந்திருந்தேன் . இக்கூற்றை உணர செய்தது அறம் புத்தகம் தான் .
வாழ்வை மாற்றியமைக்க வல்லதோர் படைப்பை தந்தமைக்கு நான் எவ்வாறு நன்றி கூறுவேன் என்று தெரியவில்லை . அறம் படித்து முடித்த பிறகு உங்களை காணும் வாய்ப்பு அமைந்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை . என் வாழ்வின் மிகச் சிறந்த நொடிகள் அவை . என் வாழ்வின் ஆசீர்வாதங்களை எண்ணும் போது “அறம்” புத்தகத்தை இருமுறை எண்ணி கொள்கிறேன் . நாம் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்துள்ளேன் .இத்தனை நாட்கள் எப்படி இந்த அற்புத படைப்பை அறியாமல் இருந்தேன் என்று வருந்துகிறேன் . நன்றி !
நன்றிகளுடன் , சுபாங்கி
அன்புள்ள சுபாங்கி,
நான் அறம் தொகுதியை பற்றி அவ்வப்போது எண்ணுவதுண்டு. அதன் முதன்மையான இடம் என்னவாக இருக்க முடியும்? பொதுவாக நவீன இலக்கியம் எதிர்மறையானது. விமர்சனக்கோணம் கொண்டது. இருண்மையானது. ஆனால் அதற்குள் அறம் வழியாக நுழையும் ஒருவர் நம்பிக்கையுடன் கனவுடன் நுழைய முடியும். நவீன இலக்கியத்தின் எந்த இருளும் அடிப்படையான அந்த நம்பிக்கையையும் கனவையும் கலைத்துவிடமுடியாது.
சந்தித்ததில் மகிழ்ச்சி
அன்புடன்
ஜெ
பேசாதவர்கள் -கடிதம்
பேசாதவர்கள் சிறுகதையை வாசித்தேன் சொல் அற்றவர்களாக ஒடுக்கப்பட்ட சமூகம் முச்சந்தியில் நின்று காக்கைகளும் கழுகுகளும் கொத்த இறந்தவர்களின் குரலாக ,இன்றும் இருட்டு அறையில் பூட்டி கிடைக்கின்ற அவர்களின் குரலாக இக்கதையை பார்க்கிறேன். நிஜமான தூக்குக்கு செய்யும் அதே நடைமுறைகளை அந்த டம்மிக்கும் செய்கிறார்கள் பிறகு அதே நடைமுறையை குற்றவாளிகளாக கருதப்படும் நபருக்கு செய்கிறார். குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் போது அந்த டம்மிக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர்களின் குரலாக ஒரு மலை தெய்வம் இறங்கி வர வேண்டியிருக்கிறது, நின்று எறிய வேண்டியிருக்கிறது.
ஏழுமலை
அன்புள்ள ஜெ
பேசாதவர்கள் சிறுகதையை வாசித்தேன். பேசாதவர்களின் அதே அலைவரிசையில் வரும் சில கதைகள் உங்கள் புனைவுக்களியாட்டில் உள்ளன. கழு முதலிய கதைகள். அவையனைத்துமே தலித் வாழ்க்கை, அவர்கள்மேல் செலுத்தப்படும் ஒடுக்குமுறை பற்றிய கதைகள். அவற்றை ஒரு தொகுப்பாக கொண்டுவரலாம் என நினைக்கிறேன். ஆலோசியுங்கள். தலித் ஒடுக்குமுறையை ஒற்றைப்படையான சீற்றமாகச் சொல்லாமல் அதிலுள்ள மானுட அம்சத்தைச் சொல்லும் கதைகள். அதேசமயம் கலையழகுடன் உள்ளடுக்குகளுடன் வரலாற்றுணர்வுடன் பேசும் கதைகள் இவை
எழுலரசு ஆறுமுகம்
இலக்கியத்தின் நுழைவாயில்
அன்பின் ஜெ.
இந்தச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (கடந்த ஆண்டுகளுடன்) ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே வாங்கினேன். அதிலொன்று சுவடு பதிப்பகத்தில் ரெ.விஜயலெட்சுமி எழுதிய “வாசிப்பின் வாசல்” என்ற நூலாகும். இதில் ‘வல்லினம்’ நவீன் அணிந்துரையில் குறிப்பிடுவதைப் போல – ஏராளமான வாசகர்கள் தாம் வாசித்த நூல்களின் பெயர்களையும், அதன் ஆசிரியர் பெயர்களையும் ஒரு மெடல் போல சுமந்து திரிவிதைல் சொல்லொணாப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் தங்களைச் சந்தித்தப் பிறகு அந்தப் பெருமைகளெல்லாம் பொலபொலவெனச் சரிந்து விழுந்தன. வாசித்த எதையும் தொகுத்துச் சொல்லும் திறனற்றுத் திணறுவதை அறிந்தது அப்போதுதான். நூல்களின் பெயரை மட்டும் மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தேன். நாவல்களின் பெருவாழ்வு ஒற்றை வரித் தகவலாகவே எஞ்சி நின்றது. சிறுகதைகளின் கருத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அதைச் சொல்ல மட்டுமே, அவர்கள் அத்தனைப் பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார்கள் என்ற உண்மை வதைத்தது. வாசிப்பு என்பது சொற்களை விரைவாக உச்சரித்துக் கடப்பதல்ல, சொற்களுக்கு இடையில் உள்ள வெளிகளுக்குள் நம்மை இட்டு நிரப்புவது எனத் தாமதமாகவே புரிந்துகொண்டேன்’ என்கிறார்.
மேலும் ‘ஒரு படைப்பை வாசிக்க எவ்வளவு கவனம் தேவை, ஒரு நூலின் முன் வாசகன் தன்னை எவ்வாறு ஒப்புக் கொடுக்க வேண்டும். வாசிப்பு நமக்குள் எவ்வகையான மாற்றங்களை உருவாக்கும், வாசிப்பு முன்பான மனத் தயாரிப்புகள் என்ன என்று நான் அறிந்துகொண்டது ஜெயமோகன் வழிதான். அதுவரை போட்ட கோடுகள் அனைத்தையும் அழித்துவிட்டு முதலிலிருந்து வாசிக்கத் தொடங்கினேன்.’
https://www.facebook.com/viji.swetha.7
‘ஓர் எழுத்தாளர் தான் உணர்ந்த, அறிந்த வாழ்வைப் புனைவாக எழுதுகிறார். அதில் சில வாழ்க்கைகள் நமக்கு அறிமுகமானவையாக இருக்கும் பட்சத்தில், அதை வாசித்து முடித்தபிறகு எளிதாக நினைவிலிருந்து மீட்டெடுக்கிறோம். அறிமுகமில்லாத புதிய வாழ்க்கை சில வரிகளாக மட்டுமே நினைவில் எஞ்சுகிறது. ஒரு புனைவை வாசித்தபிறகு, அது குறித்து பிறரிடம் உரையாடுவதும் விவாதிப்பதும் அந்தப் புனைவில் நம் கண்டடைவை முன்வைப்பதுமே அப்பிரதியுடன் நமக்கே நமக்கான தனி உறவை ஏற்படுத்துகிறது. அதற்குப் பின்னர் ஒரு புனைவு அந்த எழுத்தாளருடையது அல்ல, வாசகனுடையது’ என்று தொடர்கிறார்.
ரெ.விஜயலெட்சுமி இந்த இடத்தை தன்னியல்பாக வந்து அடைந்துள்ள விதம் ஆச்சரியமானது. இதன்வழி அவர் தமிழ் இலக்கிய்ச் சூழலுக்கு அளித்துவரும் பங்களிப்பு கவனப்படுத்தத்தக்கது. மதுரைகாரரான விஜயலெட்சுமி தொலைக்காட்சி, திரைப்படம் என இயங்கி வருபவர். தேன்கூடு என்ற youtube சமூக ஊடகம் வழியாக இருநூறுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி உள்ளார். அவற்றில் முதல் ஐம்பது நூல்கள் இவை. இது தர வரிசைப்பட்டியல் அல்ல. அவர் படித்த, அவருக்குப் படிக்கக் கிடைத்த நூல்களென கருதலாம்.
மூன்று அடிப்படைகளில் அவர் மேற்கொள்ளும் இப்பணி முக்கியமானது.
முதலில் வாசித்து வாசித்து அடைந்த ரசனையின் வெளிப்பாடாக அவர் முன் வைக்கும் நூல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மறுபடி மறுபடி கவனப்படுத்தப்பட வேண்டியவை. அவ்வகையில் அவரது நூல் தேர்வில் உள்ள பொறுப்புணர்ச்சி, ஆரோக்கியமான நூல் பட்டியலை முன்வைக்கிறது.
இரண்டாவது, விஜயலெட்சும் ஒரு நூலின் கதையை முழுமையாகச் சொல்லவில்லை. வாசிப்பின் வழி அந்த நூலின் தான் சென்று தொட்ட ஆன்மாவைப் பகிர முயல்கிறார். அவ்வளவுதான். ஒரு ஆரம்பகட்ட வாசகன், குவிந்து கிடக்கும் ஏராளமான நூல்களில் தனக்கானதை சட்டெனக் கையில் எடுக்க இந்த பகிர்தல் நிச்சயம் உதவும்.
மூன்றாவது, வாசகனை முன் தயாரிப்பு செய்யும் விதத்தில் அவரது உரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நூலின் முக்கியமான பகுதியை வாசித்துக் காட்டுதல். நூல் சொல்லும் வரலாற்றுத் தகவலை கூடுதலாக ஆய்ந்தறிந்து கூறுதல்’ என்று ம.நவீன் முடிக்கிறார்.
உள்ளபடியேச் சொல்லப் போனால் விஷ்ணுபுர வாசகர் செல்வேந்திரன் எழுதிய முகநூல் பதிவிலிருந்துதான் விஜயலெட்சுமியின் உரைகள் நூலாக தொகுக்கப்பட்டதை அறிந்துகொண்டேன். உற்சாகமான உரையாடல்காரரான செல்வேந்திரனின் reporting வகைமை சுவராசியமானது; ‘கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்; உங்கள் ஒன்றரையணா வாழ்க்கையை மேலும் கொஞ்சம் பெருக்கிக் கொள்ளுங்களேன் என மன்றாடுகிறார்கள்’ என்கிறார்.
மேலும், தான் வாசித்த பின்னணி, எழுத்தாளரைப் பற்றிய சிறு அறிமுகம், கதைச் சுருக்கம், நூலின் சில பகுதிகள் என ஒரு புதிய கலவையில் நூல்களை அறிமுகம் செய்கிறார் விஜயலெட்சுமி. சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் விருப்பக் குறிகளுக்காக இவர் இதைச் செய்யவில்லை என்பது நூல்களின் தேர்விலியே தெரிகிறது. அதிகம் பிரபலமடையாத நூல்கள்கூட முன்முடிவுகள் ஏதுமின்றி வாசித்து இந்நூலின் அறிமுகம் செய்திருக்கிறார்.
தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் நுழைந்து வாசிக்க ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே ரசனை அடிப்படையில் தேர்வும், முதன்மை ஆசிரியரும், சிந்தனைப் பள்ளியும் பலருக்குள்ளும் உருவாகிவிடுவார்கள். விஜயலெட்சும் ஒரு விதிவிலக்கு. எல்லா இலக்கிய வகைமைகளையும் வாசிக்கிறார். நாடும், மொழியும் அவருக்குத் தடையாக இல்லை. இந்நூலின் மிகப்பெரிய பலமாக இருப்பது அந்தப் பன்முகத்தன்மையே.
வாசிப்பிற்குள் புதிதாக நுழைபவர்களுக்கு இந்நூல், இந்த பட்டியல் ஒரு வழிகாட்டியின் வேலையைச் செய்யக்கூடும். அதுதான் இந்த நூலின் நோக்கமாகவும் இருக்கும்’ என்று வாழ்த்துகிறார், செல்வேந்திரன் – அது உண்மையும்கூட.
‘வாசகர்களுக்கு அரிச்சுவடி பாடம் எடுப்பது அவசியமில்லை’ என்கிறார், தன்னுரையில் ரெ.விஜயலெட்சுமி. மேலும் ‘ஒரு நல்ல இனிப்பைச் சுவைத்தாலோ, ஒரு நல்ல திரைப்படத்தை அனுபவித்தாலோ, ஒரு அருமையான இடத்தை ரசித்தாலோ, அந்த இன்பத்தை இன்னொருவருடன் பகிர மனம் எப்படி தேடுவோமோ அதே ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்த நூல் என்றும், தான் திறனாய்வு செய்யவில்லை என்றும், தன் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வதாக மட்டுமே கூறுகிறார். இந்த நூலிலுள்ள ஐம்பது நாவல்களின் தகவல்கள், ஒரு நூல் அறிமுகம் மட்டுமே. எந்த விதத்திலும் ஒரு நாவலைப் படிக்கும் அனுபவத்தை இதில் அடைவது சாத்தியம் கிடையாது, பூட்டைத் திறக்கும் சாவியாக பாவிக்கலாம் என்கிறார். அதுவும் அந்த வீட்டிற்குள் நுழையலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் தகவல்களையும் இந்த நூல் வழங்குகிறது.
தேன்கூடு thendkoodu.books முகநூல், youtube ஆகிய சமூக வலைத்தளத்தில் இந்த பட்டியலில் முதல் ஐம்பது நூல்கள் உள்ளன. அதுபோக ஒருநூறு நூல்களையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவையும் அடுத்தடுத்த தொகுப்பாக வர வேண்டும். இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என்றும் கருதுகிறேன். முன்னோடி எழுத்தாளர், சமகால எழுத்தாளர்கள், புதிதாக வந்திருக்கும் இளம் எழுத்தாளர்கள், பிற இந்திய மொழி வரிசைத் தொடரில் – முதலில் மலையாள எழுத்தாளர்களும், ஈழ, மலேசிய எழுத்தாளர்களும், மேற்கத்திய எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகளில் அவற்றில் பெரும்பாலும் நானும் படித்திருந்தாலும் பத்து, பதினைந்து ஆண்டுகளான பல நூல்களை மீண்டும் எடுத்துப் படிக்க வேண்டுமென குறித்து வைத்துள்ளேன். அதேபோல எட்டு, பத்து எழுத்தாளர்களின் நாவல்களை ஏனோ தவறவிட்டுள்ளேன், அவற்றையும் படித்துப் பார்க்கலாமே என்று இந்தப் பட்டியல் ஆசையைக் கூட்டுகிறது.
1) அடி – தி.ஜா.ரா.
2) இடைவெளி – சம்பத்
3) கோபல்ல கிராமம் – கி.ரா.
4) நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
5) 18-வது அட்சக் கோடு – அசோகமித்திரன்
6) பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
7) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
8) பேட்டை – தமிழ்ப்பிரபா
9) பொய்த் தேவு – கா.நா.சு.
10) வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் – தமிழ்மகன்
11) உலகில் ஒருவன் – குணா கந்தசாமி
12) என் கதை – இமையம்
13) ஒற்றைப் பல் – கரன் கார்க்கி
14) கருக்கு – பாமா
15) காடு – ஜெயமோகன்
16) கூகை – சோ.தர்மன்
17) கோரை – கண்மணி குணசேகரன்
18) சாயாவனம் – சா.கந்தசாமி
19) துயில் – எஸ்.ரா.
20) துறைமுகம் – தோப்பில் மீரான்
21) நிலம் என்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
22) நீர் வழிப் படுஉம் – தேவிபாரதி
23) பெரு வலி – சுகுமாரன்
24) 37 – எம்.ஜி.சுரேஷ்
25) வாடா மல்லி – சு.வேணுகோபால்
26) வெக்கை – பூமணி
27) லகுடு – சரவணன் சந்திரன்
28) அளம் – சு.தமிழ்ச்செல்வன்
29) தட்டப் பாறை – முகமது யூசுப்
30) காலாபாணி\- மு.ராஜேந்திரன்
31) கையறு – புண்ணியவான்
32) கொண்டல் – ஷக்தி
33) கோலப்பனின் அடவுகள் – பிரபு தர்மராஜ்
34) நல்லப் பாம்பு – ரமேஷ் பிரேதன்
35) நீங்கள், நான் மற்றும் பெண் – எஸ்.செந்தில்குமார்
36) பாடுவான் நகரம் – ஆர்.கே.ஜி
37) உபுகு – பாபாகா ஸ்ரீராம்
38) நடுகல் – தீபச்செல்வன்
39) பேய்ச்சி – ம.நவீன்
40) அக்னி வளையங்கள் – எஸ்.பீர் முஹம்மத்
41) இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயன் (குறிஞ்சிவேலன்)
42) தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை (சுந்தர ராமசாமி)
43) மதில்கள் – வைக்கம் பஷீர் (சுகுமாரன்)
44) Jose Saramago Portugese அறியப்படாத தீவின் கதை
45) Chinghiz Aitmatov Russian அன்னை வயல்
46) Fyodor Dostoevsky Russian வெண்ணிற இரவுகள்
47) Emmanuyeel Kasakevich Russian விடிவெள்ளி, நட்சத்திரம்
48) Ernest Hemingway American கிழவனும் கடலும் (எம்.எஸ்.)
49) Paulo Coelho Brrazilian ரசவாதி (நாகலட்சுமி சண்முகம்)
50) Alessaandro Baricco Italian பட்டு (சுகுமாரன்)
கொள்ளு நதீம், ஆம்பூர்.
ஆயிரம் காந்திகள் – சுனில் கிருஷ்ணன்
https://www.commonfolks.in/books/d/aayiram-gandhigal
சுனீல் கிருஷ்ணன் எழுதிய “ஆயிரம் காந்திகள்” எனும் நூல் காந்திய தரிசனங்களை தங்கள் வாழ்வியல் செயல்பாடுகளாக கொண்டு வாழ்ந்த, வாழ்கின்ற ஆளுமைகளை பற்றி விரிவாக பேசுகிறது. அதன் வழியாக காந்திய சிந்தனைகளை ஆழமும் விரிவும் கொண்டு முன்வைக்கும் நூல்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

