Jeyamohan's Blog, page 818
March 3, 2022
பின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்பு சென்னை புத்தகக் கண்காட்சியில்
பின்தொடரும் நிழலின் குரல் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக இன்று (4-3-2022) முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
புதிய வடிவமைப்பு. கெட்டி அட்டை.
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
vishnupurampublishing@gmail.com
https://www.vishnupurampublications.com/
விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட 13 புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக அரங்கில் (11 மற்றும் 12), ரிதம், ஸ்வாசம் அரங்குகளிலும் கிடைக்கும். விஷ்ணுபுரம் பதிப்பகம் தளத்திலும் இவை கிடைக்கும்.
நன்றி
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
வாசிப்பின் வழிகள் அச்சு நூல் வாங்க
பத்துலட்சம் காலடிகள் அச்சு நூல் வாங்க
ஆயிரம் ஊற்றுகள் அச்சு நூல் வாங்க
தங்கப்புத்தகம் அச்சு நூல் வாங்க
புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள்March 2, 2022
மிளகு- வாசிப்பின் வழி…
அன்புள்ள ஜெ
இரா முருகனின் மிளகு பற்றி எழுதியிருந்ததற்கு நன்றி. அவருடைய இணையதளத்தில் அந்நாவல் தொடராக வெளிவந்த ராமோஜியம் முதலிய நாவல்களை வாசித்துள்ளேன். ஆனால் அந்த இணையதளம் மிகமோசமாக வடிவமைக்கப்பட்டது ஆகவே எவற்றையும் முழுமையாக படிக்க முடியவில்லை. (இத்தனைக்கும் இரா முருகன் ஒரு கணிப்பொறி நிபுணர்) .சொல்வனம் இணையதளத்தில் கொஞ்சம் வாசித்தேன். வாசித்தவரை என் அனுபவம் என்பது சுவாரசியம். அவ்வப்போது புன்னகையும் சிரிப்புமாக வாசிக்கமுடிந்தது. அதுதான் அந்நாவல் முக்கியமானது என நான் நினைக்கக் காரணம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக அந்நாவலை புரிந்துகொள்ள எனக்குச் சில சிக்கல்கள் இருந்தன. அந்நாவல் விரைவாக படங்களை காட்டிக்கொண்டே போவதுபோல் இருந்தது. அதை எப்படிப் புரிந்துகொள்வது? விமர்சனமாக அல்ல. ஒரு வழிகாட்டியாக ஒரு குறிப்பு எழுதலாமே. நீங்கள் எழுதிய சிறு குறிப்பே எனக்கு ஒரு வாசகனாக மிகமிக உதவியானதாக இருந்தது. மேலும் ஒரு சிறு விளக்கமே நான் கேட்பது
ஆர்.ராகவ்
அன்புள்ள ராகவ்,
இரா முருகனின் இணையப்பக்கம்தான் தமிழ் இணையப்பக்கங்களிலேயே தாறுமாறானது. அவர்கள் கணிப்பொறியில் புழங்கிப்புழங்கி எதையும் பொருட்படுத்தாமலாகிவிடுகிறார்கள்.
மிளகு தமிழ் நாவல் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. அப்படியெல்லாம் எளிதாக நான் சொல்லிவிடமாட்டேன். சொல்வதற்கு முன் நானே என் பிரேக்கில் காலை நன்றாக அழுத்திக்கொள்வேன்.அந்நாவலை நான் விரிவாக இன்னும் வாசிக்கவேண்டும் கையில் இருந்த நாவலை எவரோ கொண்டுசென்றுவிட்டார்கள். ஒன்பதே நாள்தான் கையில் இருந்தது.
ஒரு நூலை அதன் வடிவத்தை உணர்ந்து வாசிக்க அது நம் கையில் அச்சுவடிவில் இருக்கவேண்டும். அதன் அத்தியாயக் கட்டமைப்பு, பகுப்புகள், விகிதங்கள் எல்லாம் ஒரே பார்வையில் நம்முள் வந்துவிடுகின்றன.
இரா.முருகனின் பெரிய சிக்கல், அவர் இளமையிலேயே சுஜாதாவின் நடைக்குள் சென்றுவிழுந்தது. தமிழில் இலக்கியப்பார்வையில் சுஜாதாவின் நடை மோசமான ஒன்று. அதில் ஆசிரியரின் நையாண்டிப் பார்வை இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவகை சமத்காரப் பேச்சுதான் அது. பலவகையான வித்தாரங்களும் தந்திரங்களும் கொண்டது. அந்த வகையான பிரக்ஞைபூர்வமான வித்தைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் இல்லை
நம்மிடம் ஒருவர் எப்போதுமே ஜோக் அடித்து பேசினால் சட்டென்று ஒரு சலிப்பை அடைவோம். ஏனென்றால் ஜோக் மேலோட்டமானது. அது உணர்வுகளை, கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. அந்தச் சலிப்பு சுஜாதாவில் நல்ல வாசகனுக்குச் சீக்கிரமே வந்துவிடும்.
சுஜாதாவின் நடை எல்லா எழுத்திலும் ஒரே வகையானது. உரையாடல்கள் கூட ஒரே வகையானவை. அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஒரே மொழிநடை. அதுவும் இலக்கியத்துக்கு எதிரானது. இலக்கியம் மொழிநடையின் வண்ணபேதங்களாலானது.
இரா முருகன் சுஜாதாவில் இருந்து வெளிவர மிகவும் பிந்திவிட்டது. அதோடு சுஜாதா முத்திரை விழுந்தமையால் அவரை இலக்கியத்தில் கவனிக்காமலும் விட்டுவிட்டார்கள். அவர் வெளியேறி வந்து எழுதிய முதல் நாவல் அரசூர் வம்சம். முழுக்க தன் நடையை கூறுமுறையை கண்டுகொண்ட நாவல் மிளகு.
அரசூர் வம்சம் முதல் மிளகு வரையிலான நாவல்களில் இரண்டு விஷயங்கள் முதன்மையாகின்றன. ஒன்று, வரலாறு. இன்னொன்று வெவ்வேறு வகையான மொழிநடை. இரண்டுமே சுஜாதாவிடம் இல்லாதவை, சுஜாதா பாணி நடையால் எய்த முடியாதவை. அரசூர் வம்சத்தில் சுஜாதா நடையின் கலைக்குறைபாடு இருந்தது. மிளகு அதை முழுமையாக வென்றிருக்கிறது.
இன்று இரா.முருகனின் நடையில் ஆசிரியர் அடிக்கும் ‘ஜோக்கு’கள் இல்லை. அவை ஒருவகையான அப்பாவித்தனம் அல்லது கட்டற்றதனத்துடன் வெவ்வேறு கதைச்சூழல்கள் மற்றும் கதாபாத்திரங்களை சார்ந்தே உருவாகியிருக்கின்றன. தமிழில் மிக அரிதாக உருவாகும் ஒரு கலவையான மொழிச்சுழி என இந்நாவலைச் சொல்லமுடியும்
இந்நாவலை வாசிக்க சில முன்புரிதல்கள் தேவை.
ஒன்று, வரலாறு பற்றிய நம் உளநிலையை நாம் கவனிக்கவேண்டும். நாம் ஒரு வரலாற்றை அறிந்திருக்கிறோம். அது அடுக்கப்பட்ட வரலாறு. சீரான தர்க்க ஒழுங்கும் காலவரிசையும் கொண்டது. இந்நாவல் அதை கலைக்கிறது. பல்வேறு சாமானியர்கள், சரித்திரபுருஷர்கள் வழியாக அதை கலைத்து விரித்து வெவ்வேறு வண்ணம் காட்டுகிறது. இதிலுள்ள வரலாறு என்பது ‘உண்மையான’ வரலாறு அல்ல. கலைக்கப்பட்ட வரலாற்றுத் துண்டுச் சித்திரங்கள்.
ஏன் கலைக்கவேண்டும் என்றால் அது நவீன இலக்கியத்தின் வழிகளில் ஒன்று. அது தன்னை வரலாற்றுக்கு எதிரான அல்லது மாற்றான வரலாறு என எண்ணிக்கொள்கிறது. வரலாற்றெழுத்தில் ஓர் அதிகாரம் அல்லது ஆதிக்கம் உள்ளது என உருவகித்து அதை கலைத்துப் பார்க்கிறது. அதை கேலிக்குரியதாக பொருளற்றதாகக்கூட ஆக்கிக் காட்டுகிறது. இது ஒருவகை சிதைவு வரலாறு, உடைந்த கண்ணாடிவழியாக பார்ப்பதுபோன்றது என்னும் புரிதல் நமக்குத்தேவை.
இரண்டு, இந்நாவலின் கதாபாத்திரங்கள் ‘யதார்த்த’ மனிதர்கள் அல்ல. அவர்கள் கார்ட்டூன்கள். கேலிச்சித்திரங்கள். ஆகவே அவர்கள் உள்முரண்பாடுகள், உணர்வுநிலைகள் ஆகியவற்றுடன் காட்டப்படுவதில்லை. அவர்களின் குணச்சித்திரம் முழுமையாக வரையறை செய்யப்பட்டிருப்பதில்லை. அவை விரைவான கோடுகளால் வரையப்பட்டவை. ஏதேனும் ஒரு அம்சம் மேலோங்கியவை. கேலிச்சித்திரமே அப்படித்தான். ராகுல்காந்தி என்றால் மூக்கு ஏந்திநீண்டிருக்கும். இந்த கோணத்தில்தான் இக்கதாபாத்திரங்களை அணுகவேண்டும்.
இந்தவகையான கேலிச்சித்திரக் கதாபாத்திரத் தன்மைக்கு முன்னுதாரணமான நாவல் ஜே.ஜே.சில குறிப்புகள். ஆனால் அதில் இல்லாத மிகவிரிவான வரலாற்றுக் களம் இந்நாவலில் உள்ளதனால் இதன் கார்ட்டூன் மனிதர்கள் ஏராளமான வண்ணபேதங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று, இந்நாவலின் முதன்மை அழகு இதிலுள்ள பல வகையான மொழிநடை. மொழிநடைகளாலான ஒரு கலைடாஸ்கோப் இந்நாவல். வெவ்வேறு நூற்றாண்டுகளின் பேச்சுமொழிகள், எழுத்துமொழிகள் கலந்து வருகின்றன.
நாம் வணிக நாவல்களில் காண்பது சீரான ஒழுக்குள்ள ஒரு பொதுநடையை. அது நமக்கு தடையை அளிப்பதில்லை. இந்தவகையான மொழிநடை நம்மை அந்தந்த வரிகளில் தடை செய்து நிலைக்க வைத்து கூர்ந்து வாசிக்கச் செய்கிறது. இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இந்த தடை. அதுவே கூர்வாசிப்புக்கு இடமளித்து புனைவை வாசகனுக்குள் கொண்டுசெல்கிறது
அந்த தடையை நல்ல இலக்கியம் இரண்டு வகைகளில் உருவாக்கும். அரிய வாழ்க்கைசார்ந்த அவதானிப்புகள் வழியாக நம்மை யோசிக்கவைத்து நிலைக்க வைக்கும். மொழிநடையின் உள்ளடுக்குகள் வழியாக தயங்க வைக்கும். சிற்றிதழ் எழுத்தாளர்கள் செயற்கையான சுற்றுநடை வழியாக அந்த தடையை உருவாக்க முயல்கிறார்கள்.
இரா.முருகன் மொழிநடை வழியாக அதை உருவாக்குகிறார். அதற்கு விரிவான வரலாற்று வாசிப்புடன் மொழித்திறனும் தேவை. அது அவரிடமுள்ளது. குமிழியிட்டுக்கொண்டே இருக்கும் இந்த மொழிநடைக்கு கொஞ்சம் கவனத்தை நாம் அளிக்கவேண்டும். அந்த மொழிநடையின் மூலநடைகள் கொஞ்சம் தெரிந்திருந்தால் நல்லது. அல்லது கற்பனைசெய்துகொள்ளவேண்டும்.
நான்கு, இந்நாவல் சமகாலத்தில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றுக்குச் செல்கிறது. கெட்டகனவு போல வரலாற்றின் எந்தப் பகுதியிலும் நுழைந்துவிடுகிறது. ஏன்? ஏனென்றால் அப்படித்தான் வரலாறு நம்மை வந்தடைகிறது. நீங்கள் திருச்சியில் ஆபீஸ் செல்வதற்குள் வழியில் நாலைந்து வரலாற்றுப்புள்ளிகளில் நுழைந்து வெளியேறிருப்பீர்கள். சோழர்காலக் கோயில்கள், நாயக்கர் காலக் கோட்டைகள். இந்த வரலாற்று நெசவு எப்படி நம் பிரக்ஞையை உருவாக்கியிருக்கிறது என்றுதான் இந்நாவல் ஆராய்கிறது.
வாசகன் ஓர் உழைப்பை அளித்து வாசிப்பதே நல்ல இலக்கியம். ஆனால் அந்த உழைப்பும் களிப்பூட்டுவதாக இருக்கவேண்டும். மிளகு அப்படிப்பட்ட நாவல்.
ஜெ
இதற்குப் பிறகு கவிதை சாத்தியமா – உக்ரைன் கவிகளின் குரல்கள் -மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை
போரிஸ் ஹுயூமன்யுக் (BORYS HUMENYUK)
எங்கள் படைப்பிரிவின் தளபதி ஒரு விசித்திரமான பிறவி
போர்க்களத்தின் கிழக்கில் சூரியன் உதிக்கும் போதெல்லாம்
தொலைவில் இருக்கும் சோதனைச்சாவடியில்
யாரோ டயரை எரிப்பதாக சொல்லிக் கொண்டிருப்பான்
அவனுக்கு பிரங்கியின் பீப்பாய் தான் நிலவு
கடலென்றால் உருக்கிய ஈயம்
கண்ணீரும் ரத்தமும் மூத்திரமும் கலந்தோடும்போது
ஏன் உப்பு கரிக்காது ?
இன்று
அவனின் விநோதத்தை அவனே விஞ்சினான்
அதிகாலையில் முகாமிற்குள் நுழைந்து
போர் நிறுத்தத்தை அறிவித்தான்
தொலைக்காட்சியில்
இன்றோடு போர் நிறுத்தமென
செய்தி வாசித்ததாக சொன்னான்
போர்முனையில் இருக்கும் எங்களுக்கான பாடம்
மனிதர்களில் இரண்டு வகை
மனிதர்கள் மற்றும் தொலைக்காட்சி மனிதர்கள்
நாங்கள் தொலைக்காட்சி மனிதர்களை வெறுக்கிறோம்
அவர்கள் மிக மோசமான நடிகர்கள்
தொலைக்காட்சியில் கார்ட்டூன் மட்டுமே காட்டப்பட வேண்டும்
அவற்றில் தான் கொஞ்சம் உண்மையிருப்பதாக படுகிறது
மிருகங்களைக் காட்டும் நிகழ்ச்சிகளும் சுவாரஸ்யமானவை
நாங்கள் ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும்
தயார் செய்துக் கொண்டிருக்கும் போது
எங்கள் விசித்திர தளபதி கொண்டு வந்த
செய்தி அதிர்ச்சியளித்தது
இயந்திரத் துப்பாக்கியின் அரைக்கச்சு
கிரமனட்ஸ் வீரர் வாசில் மற்றும்
போயோற்கோவை சேர்ந்த துப்பாக்கி ஏற்றி சாஷ்கோவின்
கைகளில் உறைந்தது
பின் அது ஒரு ஆதி மிருகத்தின் முதுகைப் போல முறுக்கியது
லுஹான்ஸ்கிலிருந்து வந்திருந்த எரிகுண்டாளர் மேக்ஸின்
பையில் இருந்து எட்டிப் பார்த்த கைக்குண்டுகள்
பயந்து போன பூனைக் குட்டிகளென உள்ளொடுங்கின
நீங்கள் எப்போதாவது ஒரு அதிவேக ரயிலை
தண்டவாளத்தில் ஒரு பைசாவை சொருகி நிறுத்த முயன்றிருக்கிறீர்களா
நீங்கள் என்றாவது சூரியனைப் பார்த்து
எனக்கு செய்ய நிறைய இருக்கிறது
கொஞ்சம் நகராமல் சும்மா இரு என சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா
அல்லது பிரசவ வலியில் இருக்கும் பெண்ணிடம்
பனி பொத்துக் கொண்டு பெய்கிறது
மருத்துவச்சியால் வர இயலவில்லை
ஒரு மூன்று நாட்கள் தாழ பெத்துக்கொள் எனக் கெஞ்சிக்கேட்டிருக்கிறீர்களா
குழந்தை பிறந்தாக வேண்டும்
ரயில் இலக்கை அடைந்தாக வேண்டும்
எரியும் டையர் போல சூரியன் உருண்டாக வேண்டும்
அது போனதும் பீரங்கி பீப்பாயாக நிலவு அதன் இடத்தை பிடித்தாக வேண்டும்
மேலும் இரவு சாம்பலாக உதிர்ந்தாக வேண்டும்
போர் நிறுத்தத்தின் முதல் நாளன்று
போயோற்கோவை சேர்ந்த துப்பாக்கி ஏற்றி சாஷ்கோவை
லுஹான்ஸ்கிலிருந்து வந்திருந்த எரிகுண்டாளர் மேக்ஸை
நாங்கள் இழந்தோம்
போர்க்களத்தின் எதிர்ப்பக்கத்தில் இருந்து பாய்ந்த தோட்டாக்கள்
வெறிபிடித்த மலைக்குளவிகளைப் போல
சாஷ்கோவை கழுத்திலும்
மேக்ஸை இதயத்திலும்
துளைத்தன
ஒரு வேளை மறுபுறத்தில்
எங்களுக்கு வாய்த்த விசித்திரமான தளபதி போலொருவர் இல்லாதிருக்கலாம்
அல்லது அவர் வேறொரு தொலைக்காட்சி சேனலை பார்ப்பவராய் இருக்கலாம்
(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் -ஒக்ஸானா மாக்சிம்சுக், மேக்ஸ் ரோஸோசின்ஸ்கி )
அனஸ்தேசியா அஃபனசீவா (ANASTASIA AFANSIEVA)
இதற்குப் பிறகு கவிதை சாத்தியமா
யாசினுவதா, ஹார்லிவகா, சாவூர் மொஹைலா, நோவோஜாவாசிற்குப்
பிறகு
கிராஸ்நியி லுச், டொனிட்ஸ்க், லுஹான்ஸ்கிற்குப்
பிறகு
இறந்தவர்களின் உடலை வரிசைப்படுத்தி எண்களிடுகிறார்கள்
இன்னும் பசித்தவர்கள் உறுமியபடி உலா வருகிறார்கள்
நீண்ட பிறகு
கவிதை மனம்பிறழ்ந்து சலசலக்கிறது
உதடுகள் இருளைப் புணர்கின்றன
பாதி விழிப்பில்
நான் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இதற்குப் பிறகு கவிதை சாத்தியமா
வரலாறு பரபரக்கும் இந்தக் கணம்
அடுத்த அடியெடுத்து வைக்கும் போது
ஒவ்வொரு இதயமும் அதை எதிரொலிக்காதா
வேறெதுவும் பேசுவதற்கில்லை
பேசவும் ஏலவில்லை
இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
எல்லா நம்பிக்கைகளும் முடிவுக்கு வருகின்றன
(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் – கெவின் வான், மரியா கோடிம்ஸ்கி )
கேத்ரீனா கேலிட்கோ (KETRYNA KALYTKO)
நீங்கள் அந்த மனிதனோடு மட்டுமல்ல
அவனுடைய வாழ்க்கையோடும் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
சிலவேளை அது உங்களை எழுப்பி
உங்கள் கரங்களில் இருந்து அவனைப் பறித்துக் கொள்கிறது
பாருங்கள்
போர் உங்களுக்கே தெரியாமல்
இருளில் தனியாயிருக்க பயந்துக் கொள்ளும்
ஒரு குழந்தை போல
உங்களருகில் படுத்துக் கொள்கிறது
போர் எண்களால் ஆனதென
அவர் கூறுகிறார்
எப்படியென பார்ப்போம்
ஒரு எலும்பு மூட்டைக்குள் இரண்டு உறவினர்கள்
ஆயிரத்து முந்நூற்று தொண்ணூற்றைந்து
நாட்கள் முற்றுகை
வெண்ணெய், உறைந்த உணவு, தூள் பால், மூன்று சோப்புகளடங்கிய
நிவாரணப் பொட்டலங்கள்
அவர் கூறுகிறார்
நான்கு ஆயுதமேந்திய மனிதர்கள்
உங்களை தேடி வந்து உத்தரவுகளை காண்பித்து
இரவுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்
நகரத்தை குறுக்கு வெட்டாக நீங்கள் கடந்து செல்லும்போது
உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பதை இரண்டு முறை கேட்கிறீர்கள்
அவர் கூறுகிறார்
ராணுவக் குடியிருப்பிலிருந்து ஐந்து தடவை
உங்களை நாற்பத்திமூன்று பேர் அழுகி கிடைக்கும் பள்ளத்திற்கு மாற்றுகிறார்கள்
ஒவ்வொரு தடவையும் நினைக்கிறீர்கள்
இந்த தடவையாவது இறந்துவிட வேண்டும்
இதெல்லாமும் ஒரு மோசமான நகைச்சுவையென கடவுளிடம் சொல்ல வேண்டும்
ஆனால் அவர்கள் உங்கள் முகத்தை சாக்கடையில் இறக்குகிறார்கள்
அவகாசமெடுத்து தலையில் துப்பாக்கியை அழுத்துகிறார்கள்
அந்த தருணத்திலிருந்து கனவுகளை வெறுக்கிறீர்கள்
இந்த வகையான நினைவுகள் ஒரு மனிதனுக்குப் பொருத்தமில்லாதவையென கூவுகிறீர்கள்
அவர் கூறுகிறார்
நீங்கள் காடுகளிடையே ஓடுகிறீர்கள்
அவர்கள் முதுகில் சுடுகிறார்கள்
ஒரு தோட்டா உங்கள் தொடையில் தாக்குகிறது
ஆனால்
உங்கள் முகத்தில் அப்பியிருக்கும் அழுக்கை மட்டுமே
நீங்கள் உணர்கிறீர்கள்
அப்போது இலையற்ற மரமென
வலி வளர்ந்து வளர்ந்து
உங்கள் நெஞ்சில் துடிக்கிறது
அவர் கூறுவதையெல்லாம் கேட்டு
நான் என்ன செய்ய முடியும்
அவர் முகத்தில் இருக்கும் அழுக்கை துடைத்துக் கொண்டே இருக்கிறேன்
அவர் தூங்கும் போதும்
தொலைவில் இருக்கும் போதும்
(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் -ஒலெனா ஜென்னிங்க்ஸ், ஒக்ஸானா லுட்சியானா)
Miesiąc Spotkań Autorskich 2015செர்ஹி சாதன் (SERHIY ZHADAN)
போரின் மூன்றாம் ஆண்டு
அவனை சென்ற குளிர்காலத்தில் புதைத்தார்கள்
பனி பெய்யவில்லை, மழை தான்
ஒரு துரிதமான இறுதிச்சடங்கு
செய்ய வேண்டிய வேறு வேலைகள்
எல்லோருக்கும் இருந்தன
இந்தப் போரில் அவன் யார் பக்கம் போரிட்டான், நான் கேட்கிறேன்
இதென்ன கேள்வி என்கிறார்கள்
ஏதோ ஒரு பக்கம், யாரறிவார்
என்ன வித்தியாசம், ஒன்றும் பெரிதாய் இல்லை
இதற்கு சரியான பதில் இறந்தவன் தான் சொல்ல முடியும்
ஆனால் அவனால் முடியுமா
அவனது சடலத்தில் தலையைக் காணவில்லை
போரின் மூன்றாம் ஆண்டு
பாலங்களை திருத்தியிருந்தார்கள்
அவனைப் பற்றி எனக்கு நிறைய தெரியும்
அவனுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்திருந்தது
அவனுடைய சகோதரியை அறிவேன், அவளை நேசித்தேன்
அவனுடைய அச்சங்களையம் அவை எங்கிருந்து வந்தன என்பதையும் நானறிவேன்
அந்தக் குளிர்காலத்தில் யாரை சந்தித்தான் என்ன பேசினான் எனத் தெரியும்
சாம்பலும் நட்சத்திர ஒளியுமாய் மூன்று வருடங்கள்
மற்றொரு பள்ளிக்காக விளையாடினான் என்பது கூட நினைவிருக்கிறது
இப்போது அதனால் என்ன
இந்தப் போரில் அவன் யார் பக்கம் போரிட்டான்?
(உக்ரைன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் -வால்சினா மோர்ட்)
மொழியாக்கம் லீனா மணிமேகலை
இரு இலக்கியக்கொள்கை நூல்கள்
எம். வேதசகாயகுமார்
கலைக்களஞ்சியம் என்பது எழுத்து வடிவிலான அறிவுத் தொகுப்பு. அது பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கானதாகவோ, நிலம், இனம் குறித்தோ அமையலாம்.
தமிழுக்குப் புதிய முயற்சியாக அமையும் இந்தக் களஞ்சியத்தில் வேதசகாயகுமார், இலக்கியத் திறனாய்வை முன்வைத்துத் தொகுத்திருக்கிறார். இதில் தமிழ் இலக்கிய விமர்சனத்தில் தடம் பதித்த ஆளுமைகள், விமர்சனக் கொள்கைகள், விமர்சன இயக்கங்கள், இலக்கிய வடிவங்கள், விமர்சன வளர்ச்சிக்குக் களம் அமைத்த இதழ்கள், விமர்சனக் கலைச்சொற்கள் என அனைத்து செய்திகளும் அகரவரிசையில் இடம்பெறுகின்றன.
சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான இலக்கியத் திறனாய்வு தொடர்பான அனைத்து செய்திகளையும் தெளிவான நடையில், ஓரிடத்தில் தொகுத்துத் தருவது மூலம் இந்தப் புத்தகம், இலக்கிய மாணவருக்கும் பொதுவான வாசகருக்கும் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் பல்வேறு போக்குகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
இதுவே இலக்கிய விமர்சனம் என்னும் இலக்கியத்தின் மீதான ஆய்வு, மதிப்பீடு, விளக்கம் ஆகியவற்றுக்கான விமர்சனக் கருவிகளை நம்மிடம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது; சமகால இலக்கிய வாசிப்புக்கு நல்லதொரு திறவுகோல்..
வேதசகாயகுமார் கறாரான அழகியல் விமர்சகர் . மூலநூலை விரிவாக, ஐயமறக் கற்பது அவர் வழி. அது நவீனத் தமிழிலக்கியமானாலும் சரி, மரபிலக்கியமானாலும் சரி, பிரதி சார் விமர்சனம் அவருடைய மரபு. சி.சு. செல்லப்பாவுக்குப் பின் வேதசகாயகுமார்தான் தமிழின் முக்கியமான, அசல் விமர்சகர்.
இந்தக் குறுங்கலைக்களஞ்சியம் தமிழ் நவீன இலக்கிய விமர்சன மரபைப் பற்றியது. அதிலுள்ள மைய ஆளுமைகளைத் தொகுத்துப்பார்ப்பது. தமிழில் இவ்வகையில் இதுவே முதல் முயற்சி. தமிழ் இலக்கிய விமர்சனத் தளத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு.
-ஜெயமோகன்
பக்கம்: 432
நூலளவு: டெமி
விலை ரூ. 390
தொடர்புக்கு: வாட்ஸ்அப்: +91 944 37 68004
வேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்
பொருள்கோள் ஓர் அறிமுகம்
க. பூரணச்சந்திரன்
பொருள்கோள் (ஹெர்மனூடிக்ஸ்) என்பது பொருள் விளக்கத்திற்கான கோட்பாடு, ஆய்வுமுறை. இது இறையியல், ஞான இலக்கியம், தத்துவம் சார்ந்த பிரதிகளைப் பொருள் விளக்குவதற்கான கோட்பாடாக உருவானது.
ஆனால் இன்று வாய்மொழி, தகவல் தொடர்புகள், முன்கணிப்புகள், சட்டம், வரலாறு போன்றவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருள்கோள் முந்தைய பொருள் விளக்கக் கொள்கைகளையும் முறையியலையும்விட மேலானது. அது புரிந்துகொள்ளல், தொடர்பாடல் கலையையும் உள்ளடக்கியிருக்கிறது.
தமிழில் ஒரு முன்னோடியாக அமையும் இந்தப் புத்தகத்தில் க. பூரணச்சந்திரன் தொல்காப்பியத்தை முன்வைத்து நமக்குப் பொருள்கோள் கோட்பாடுகளை அறிமுகம் செய்கிறார்.
பத்து இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் நான்கு இயல்கள் மேற்கத்திய நோக்கில் பொருள்கோள் பற்றி விளக்குகின்றன. ஐந்தாம் இயல் தனித்த போக்கினதாக, தொல்காப்பியப் பாயிரத்தை எவ்விதம் நோக்கலாம் என்பதாக அமைந்துள்ளது. பிற இயல்கள் தொல்காப்பியம் கூறும் பொருள்கோள் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றன.
பொருள்கோள் முறைமையின் பெரும்பகுதி நமது உரைகாரர்களின் முறைகளைக் கொண்டிருக்கிறது. அதனினும் ஆழமாகச் சென்று, ஒரு பிரதியில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணும் துறையாகப் பொருள்கோள் எவ்வாறு அமைந்துள்ளது என விளக்குகிறது இந்த நூல். தொல்காப்பியம் என்னும் நமது செல்வத்தைப் பொருள்கோள் நோக்கில் ‘எவ்விதம் அணுகலாம்’ என்பதோடு நிற்காமல், தொல்காப்பியமே பொருள்கோள் அணுகுமுறைகளை ‘எவ்விதம் தன்னகத்தே கொண்டு இலங்குகிறது’என்பதையும் விளக்குகிறது; இதுவரை தொல்காப்பிய ஆய்வாளர்கள் எவரும் பயன்படுத்திய ‘நோக்கு’களுக்கு அப்பாலும், மேலும் ஆழமாகப் பொருள் காண்பதற்குக் கையாள வேண்டிய நெறிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்த நூல்.
ஒரு தருணத்தில் புரிந்துகொண்டதை மற்றொரு சூழ்நிலையில் விளக்க விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.
பக்கம்: 144
நூலளவு: டெமி
விலை ரூ. 140
தொடர்புக்கு: வாட்ஸ்அப்: +91 944 37 68004
பொன்னுலகம்- சுரேஷ் பிரதீப்
மரபுக்கு திரும்புவோம் என்ற கூக்குரல் அதிகரித்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று கேட்கும் கூக்குரலும் ஒலிக்கிறது. பக்தி, மதம்,சாதிக்கு திரும்புவது தான் இது என்றும் அதற்கு பொதுப்படையாக பதிலளிக்கிறார்கள் இந்த திடீர் மரபுக் காதலர்கள். ஆனால் எப்போது நாம் இந்த பக்தி, மதம் மற்றும் சாதியை கைவிட்டோம். சாதியை வேண்டுமானால் சற்று மறைத்திருக்கலாம், ஆனால் இம்மூன்றையும் எக்காலத்திலும் நாம் கைவிட்டதில்லை. இந்த கூர் கத்தியை நவீனம் என்ற கைப்பிடி கொண்டு தான் உபயோகிக்கிறோம். அவர்கள் விடச்சொல்வது இந்த கைப்பிடியைத்தான்.
அறிவியல் சிறுகதைகள் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நான் உங்கள் சிறுகதைகளை இப்போதுதான் தொட்டுத்தொட்டு வாசித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல்சிறுகதைகளிலுள்ள பித்தம் ஓர் அற்புதமான கதை. அது ஒரு ரியலான உலகைச் சொல்கிறது. எல்லாமே யதார்த்தம். ஆனால் அறிவியல்புனைவும்கூட. அப்படி ஓர் அறிவியல்புனைவை எழுதுவதுதான் உண்மையான சவால் என நினைக்கிறேன்.
அந்தக்கதையின் ஆழமே தங்கம் -இரும்பு என இரண்டுக்கும் இடையே உள்ள முரண்பாடுதான். தங்கமாக உலகையே மாற்றவேண்டும் என்னும் துடிப்புதான் அதில் சாராம்சம். அது ஆன்மிகமான ஓர் உண்மையைச் சொல்கிறது
அந்த தங்கத்தின் கீற்று சிலருக்கு கிடைக்கிறது. வந்து வந்து மாயம் காட்டுகிறது. நான் நினைக்கிறேன். தங்கம் வந்திருந்தால் பண்டாரம் எனன் செய்திருப்பார்? அப்படியே கிளம்பிச்சென்று சித்தர் ஆகியிருப்பார்
செந்தில்குமரன்
வணக்கம். தங்களின் ஐந்தாவது மருந்து வாசித்தேன்.. வாசகர்களின் கடிதங்கள் வழிதான் கதைகளைப் பிடிக்கிறேன்.. ஈர்த்துக் கொண்ட கதை….
தளவாய் எனும் சோலைச் சித்தரின் உயர் மனநிலைக்கு எத்தனை நோபலும் இணை கிடையாது.. 100 ஆண்டுகளுக்குப் பிறகு எனது கதிரியக்க மருந்தே எய்ட்ஸ் வைரஸ் பல்கிப் பெருக காரணமாகும் எனும் உண்மையை உணர்ந்து, தனது கண்டுபிடிப்பையே வெளியிட மறுக்கும் அந்த மனநிலை மலைக்க வைக்கிறது.. இது சாத்தியமா.. சாத்தியமே.. அவர் சித்தர் மரபர் அல்லவா.. சாதாரண நபருக்கு சாத்தியமில்லை…. அலோபதி வைத்தியத்தில் கூட இன்று மனசாட்சி மருத்துவர்கள் உள்ளனர்.. ஆகையால் சித்தர் மரபில் நோபல் போன்ற புகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது ஆச்சர்யம் இல்லை….
சித்த வைத்தியம் என்பதை ஏதோ காலத்தால் பின்தங்கிய ஒன்று, கடந்த நூற்றாண்டுகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிறது என எண்ணினேன்.. அதில் இவ்வளவு காலத்திற்கு ஏற்ப புதுப்பித்தல்களா… போகர், அஜீவத்தை ஜீவமாக்குகிறார். அதாவது குரங்கு ரத்தம் மனித சிறுநீர் கலவையில் எய்ட்ஸ் மருந்து காண்கிறார்.. பிறகு மாம்பழச்சித்தர், ஈயம் தங்கம் கலவையில் அடுத்த கட்ட எய்ட்ஸ் மருந்தைக் காண்கிறார்….பிறகு வரும் தளவாய், கதிரியக்க மருந்தென அடுத்தக் கட்டத்திற்குப் பாய்கிறார். தொடர் சவால்களுக்கு ஏற்ப தொடர் ஆராய்ச்சிகள்..வைரஸ்க்கு பெரிய நெருக்கடி தருகிறார்கள். இனி சித்த வைத்தியம் காலத்திற்கு பொருந்தாத வைத்தியம் என்ற எண்ணம் வராது.. அப்படியொரு மனநிலை பொது புத்தியில் உண்டென்பது அறிந்ததே. என்னதான் ஆராய்ச்சி வெற்றிகள் கண்டாலும், ஐந்தாவது மருந்தென நிரந்தர மருந்தைச் சிந்திக்கும் சித்த மனம் அதற்கு வைரஸோடு ஒத்துப் போதல் எனும் தீர்வு தரும் இடத்தில்தான் சித்த வைத்தியம் தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்டுகிறது.
வைத்தியத்தோடு தொடர்புடைய, ஆயுர்வேதக் கட்டுரைகள் தங்களுடையதை வாசித்தவை நினைவில் எழுகின்றன…. நோய் காரணமென ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க ஆயுர்வேதம் நோயாளிமின் மனநிலையே முடிவான காரணம் என சொன்னது பெரிய திறப்பு… அடுத்து ஆரோக்கிய நிகேதனம் நாவலைத் தாங்கள் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள்.. நாவலை ஒரு முறை வாசித்து விட்டேன்.. மறுமுறை வாசிக்க தயாராகி வருகிறேன்… அலோபதி ஆயுர்வேத முட்டல் மோதல்களைப் பேசும் படைப்பல்லவா.. ஆயுர்வேதம் உண்மை மருத்துவம் என்பதும், அலோபதி நிறைய நாடகம் போடும் வைத்தியம் என்பதை மனம் அறிந்தது அந்த படைப்பில்.
இப்படி சிறந்த சிகிச்சை முறைகள் கொண்டது நம் மண்.. சித்த வைத்தியத்தை மேலும் புரிந்து கொள்ள, அதன் சேவை குணத்தை, அறப் பொதிவை அறிய ஐந்தாவது மருந்து உதவியது
முத்தரசு
வேதாரண்யம்
March 1, 2022
யுவன் வருகை…
இந்த புத்தகக் கண்காட்சியில் யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும் சீரோ டிகிரி பதிப்பக மறு வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. நுண்கதைகளின் ஒரு தொகுப்பும் புதிய நாவலும் வெளிவந்துள்ளது .எல்லாமே அழகான தயாரிப்புகள். தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு இது.
யுவன் தமிழ் நவீன இலக்கியத்தில் பிரசுரிக்கப்பட்ட எல்லா பக்கங்களும் சுவாரசியம் குறையாதபடி எழுதும் படைப்பாளி. இலக்கிய வாசகன் அவர் நாவல்களில் மேலே சென்றுகொண்டே இருக்கலாம். வெறும் கதைச்சுவாரசியத்துக்காக மட்டுமே வாசிப்பவர்கள் அதற்காக மட்டுமே அவற்றை வாசிக்கலாம். மர்மக்கதைபோல பகடிக்கதைபோல வாசிக்கவேண்டியவை. உரையாடல்களை, வெவ்வேறு வகையான உரைநடை வடிவங்களை எழுதுவதில் அரிய திறன் வெளிப்படுபவை.
இருபதாம் நூற்றாண்டில் உருவான மதம்கடந்த ஆன்மிகம் ஒன்று உண்டு. அது மத அடையாளங்களை மறுக்கும். ஆனால் அரிதாக மதக்குறியீடுகள் வழியாகவும் பேசும். அது மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. எந்த நம்பிக்கையையும் அது தடையாகவே பார்க்கிறது. மதம் ஒரு நம்பிக்கை வட்டம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டு வட்டமும்கூட என அது அணுகுகிறது. அரசியல் என்பது அதிகாரத்துக்கான விழைவும் சூழ்ச்சியும். அதுவும் அறிவுத்தளைதான். இந்த வகையான ஆன்மிகம் அடையாளம், ஆதிக்கம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒரு சர்வதேச மனிதனை, தூய மனிதனை உருவகம் செய்து அவனுடன் பேசுகிறது.
அதன் வழி என்பது அடிப்படைசார்ந்த ஐயம், அதன்மீதான தர்க்கபூர்வ வினா, புறவயமான கண்டடைதல், நேரடியாக நடைமுறைக்கு கொண்டுவந்துபார்த்தல், அன்றாடப் பழக்கத்தினூடாக கடந்து செல்லுதல் என்பது. இந்தவகையான ஆன்மிகத்தை முன்வைக்கும் நவீன ஆன்மிகவாதிகள் என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். முரண்படுபவர்களும்கூட. ஆனால் இந்த அடிப்படை பார்வை அவர்கள் அனைவருக்கும் பொது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் நாம் அறிந்தவர்கள். குர்ட்ஜீஃப் நாம் அதிகம் அறியாத ஆளுமை. கார்லோஸ் கஸ்டனெடா (Carlos Castaneda) வின் டான் யுவான் மேலும் குறைவாக இங்கே அறியப்பட்டவர். வுல்ஃப் காங் பௌலி (Wolfgang Pauli) ராபர்ட் ஃபிர்சிக் (Robert M. Pirsig) போன்ற பல எழுத்தாளர்கள் உண்டு. அந்த உலகில் ரிச்சர்ட் ரீஸ்டாக், ஃப்ரிஜோ காப்ரா போன்ற அறிவியலாளர்கள் உண்டு. சமூகவியலாளர்கள் உண்டு.அவர்கள் உலகமெங்கும் சிந்தனையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியவர்கள்.
தமிழ் நவீன இலக்கியத்தில் நாம் செய்யும் பெருந்தவறு ஒன்று உண்டு.நவீன இலக்கியம் என்னும் சிறிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிந்திப்பது. இங்கே பெரிதும் பேசப்படுபவை ஐரோப்பிய நவீன இலக்கிய அலைகள். அவை பெரும்பாலும் எழுத்தின் வடிவம் சார்ந்த புதியபோக்குகள் மட்டுமே. அரிதாக சில அழகியல் கோணங்கள். அவ்வப்போது அரசியல் ,சமூகவியல், உளவியல் சார்ந்த சில ஊடுருவல்கள் நிகழும். இந்த வட்டத்திற்குள் இலக்கியத்தில் இருந்து இலக்கியத்தை அள்ளுவதன் எல்லா குறுகல்களும் தமிழ் நவீன இலக்கியத்தை தென்னைக்கு மண்டரி நோய்போல பாதித்திருக்கின்றன. கொட்டைப்பாக்கு சைசில் தேங்காய்கள் காய்ப்பதன் ரகசியம் இதுதான்.
அமெரிக்க- ஐரோப்பியச் சூழலிலும் இதைப்போல ஒரு தளக்குறுகல் உண்டு. அங்கே இலக்கியம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. ஒன்று வணிகரீதியான பிரசுரம் மற்றும் பெருந்திரள் வாசிப்பு. இன்னொன்று ,அதற்கு எதிராகவும் மாற்றாகவும் உள்ள கல்வித்துறை சார்ந்த எழுத்து மற்றும் ஆய்வு (அங்கும் இங்கும் கல்வித்துறையில் வாசிப்பே இல்லை, ஆய்வு மட்டும்தான்) நவீன இலக்கியம் என்னும் சிறு அழகியல் வட்டம் ஐரோப்பாவில் எண்பதுகளுடன் அழிந்து அந்த இடத்தை கல்வித்துறை எடுத்துக்கொண்டுள்ளது.
விளைவாக இன்று இலக்கியத்தில் தீவிரமான சோதனைகள், தத்துவமும் வரலாறும் ஊடாடும் புனைவுகளை கல்வித்துறையினரே வாசிக்கிறார்கள். அவர்களுக்கு கற்பனை அரிது. ஆய்படுபொருள் சிக்கலாக இருக்க இருக்க அவர்களின் மூளை மகிழ்ச்சி அடைகிறது. அவர்கள் புனைவை நாடவில்லை, ஒருவகை குறுக்கெழுத்துப் போட்டியை விரும்புகிறார்கள். அவர்களுக்காக வடிவச்சோதனைகள் உருவாக்கப்படுகின்றன. புதியவகை எழுத்து என அவை அவர்களால் மட்டும் கொண்டாடப்படுகின்றன.
நவீன இலக்கியச் சூழலில் கல்வித்துறையின் செல்வாக்கு ஐரோப்பாவின் பெரும் நோய்க்கூறு. கலையின் தன்னியல்பான எழுச்சி நிகழாமல் அது தடுத்துவிடுகிறது. முன்னரே கல்வித்துறை தயாரித்துள்ள பின்நவீனத்துவம், பின் அமைப்பியல் இன்னபிற ‘டெம்ப்ளேட்டு’களுக்கு ஏற்ப படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கான கையேடுகளும் கிடைக்கின்றன. பயிற்சி வகுப்புகளும் நிகழ்கின்றன
அவை அனைத்திலும் சிக்கலான மேல்தளத்துக்கு அடியில் மிகமிக எளிய, மிகப்பொதுப்படையான சமூகவியல் புரிதல் அல்லது அரசியல் புரிதல் அல்லது குறியீட்டு ஆய்வு இருக்கும். இலக்கியம் எந்தவகையான எளிமையாக்கலுக்கும் எதிரானது. அதன் வழி சிக்கலாக்கம். ஆனால் இந்தவகை எழுத்துக்கள் வடிவத்தை சிக்கலாக்கி, உள்ளே பார்வையை எளிமையாக்கிக்கொண்டவை. இலக்கியத்தின் புதிய அலை என நம்மை வந்தடைபவை இவையே.
இலக்கியத்திற்கு புதிய காற்று போன்றவை மெய்த்தேடல், கலை ஆகியவற்றில் நிகழும் புத்தியக்கங்கள். மெய்யாகவே இலக்கியத்தில் எதையேனும் புதியவற்றை எழுதுபவர்கள் தங்கள் வேர்களை இலக்கியம் கடந்து வெளியே நீட்டுபவர்கள் மட்டுமே. எஞ்சியோர் தொட்டிச்செடி போல வேர்கள் ஒடுங்கியவர்கள்.
யுவன் சந்திரசேகரின் தேடல் சென்று நீளும் மாற்று ஆன்மிகத்தின் உலகம் மிகப்பிரம்மாண்டமானது. அதன் தொடக்கம் பதினேழாம் நூற்றாண்டின் குவாக்கர்கள் போன்ற வெவ்வேறு சுதந்திரக் கிறிஸ்தவ இயக்கங்கள். அதன்பின் பிரிட்டனில் உருவான இயற்கைவாதம் .இயற்கையில் ஆன்மிகசாரத்தை கண்டடையும் கற்பனாவாதக் கவிஞர்களின் உலகம். அதன்பின்னர் ஆழ்நிலைவாதம். எமர்சனும் தோரோவும் முன்வைத்தது. அதன் பின் டால்ஸ்டாய், காந்தி…
அந்த அடித்தளம் மீது எழுந்தவர்கள் இன்றைய நவீன மதம்கடந்த ஆன்மிகவாதிகள். இன்றைய அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிக் கொண்டு பிரபஞ்சம் தழுவிய ஒரு முழுமைநோக்கை உருவாக்கி கொள்ள முயல்பவர்கள் அவர்கள். இயற்கை, மானுட வாழ்க்கை அனைத்தையும் பொருத்திச் சிந்திக்கும் ஒரு கோணம் அது. மானுடன் என நின்று அனைத்தையும் அறியமுயலும், உணரந்து நிறையும் ஒரு நிலையை அவர்கள் உருவகிக்கிறார்கள்.
அந்தக் களத்தில் இருந்து வெவ்வேறு கோணங்களில் வாழ்க்கைமேல் வந்து படியும் பார்வைகளை யுவன் எழுதுகிறார். அவருடைய கதைகள் குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம் போல நேரடியாக வரலாற்று உருவகத்தன்மைக்குச் செல்கின்றன. அல்லது வெளியேற்றம் போல எளிய அன்றாடத்துக்கு வருகின்றன. ஆனால் இந்த மாற்று ஆன்மிகம் அல்லது மதம்கடந்த ஆன்மிகத்தின் தேடலையும் கண்டடைதலையும் முன்வைக்கின்றன. ஆகவே அவை ஒருபோதும் நவீன இலக்கியத்தின் பல படைப்புகள் அளிக்கும் உள்ளீடற்ற வடிவத்தை வாசிக்கும் நிறைவின்மையை அளிப்பதில்லை. அவை மேல்மட்டத்தில் எளிமையானவை, தேடல்கொண்டவர்களுக்கு ஆழத்தில் மேலும் மேலும் சிக்கலான பார்வையை அளித்துக்கொண்டே செல்பவை.
தமிழில் தனக்கென நிற்க ஒரு பீடம் கொண்ட படைப்பாளி யுவன் சந்திரசேகர். இன்றைய வாசகன் வழக்கமான இலக்கியப் பிலாக்காணங்களை விட்டு ஒதுங்கி சென்றடையவேண்டிய புனைவுலகு அவருடையது.
அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்:
இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே.
இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?
மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்…
முன்னுரை
கதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள் ஜெயமோகன்
மாற்று மெய்ம்மையின் மெய்த்தன்மையைவிட அதில் கலந்திருக்கும் ஃபேன்ட்டஸி அம்சம் எனக்குக் கவர்ச்சியூட்டுகிறது. வேற்றுக் கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்குப் பயணிக்கும் விஞ்ஞானப் புனைகதைகளுக்கு ஈடான சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது இந்தவிதமான சிந்தனைப் போக்கு.
இந்த மாற்றுத் தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கணித சூத்திரங்கள், கருதுகோள்கள், தர்க்க நியாயங்கள், மரபுவழி வளர்ச்சி ஆகியவை உள்ளன. தவிர, அறிவியலின் வழிப்பட்ட காண்முறைக்கு பதிலியானது அல்ல இது; தன்னளவிலேயே
முழுமையான ஒரு அனுபவப்புலம் என்பதற்கும் நிரூபணங்கள் தரப்படுகின்றன.
இதுபோன்ற தர்க்கபூர்வ ஆதாரங்களை விடவும், என் எதிரில் இருக்கும் மனிதனுக்கும் எனக்கும் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த காலவெளி அனுபவம் ஒன்றேயானதோ, சமமானதோ அல்ல என்பது சுவாரசியமான விஷயமாய் இருக்கிறது.
பின்னட்டை
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம் ஜெயமோகன்
கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக்கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின்தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும், ரப்பரின் சக்திதான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அத்தியாயங்கள். ஊன்றிக் கவனித்தால் மட்டுமே தொடர்பின் இழை புரியும் எழுத்து லாகவம். சிறு மணல் துகளோ, அண்ட வெளியோ எதையும் முழுப் பரிமாணத்துடன் விவரிக்கும் ஆற்றல். முதல் வரியிலிருந்து இறுதி அத்தியாயம் வரை வாசகனை பிரமிக்க வைக்கிற சம்பவங்கள்.
நேர்ப் பார்வையுடன் நடந்து கொண்டிருக்கும் சிறுவனின் பின்னால் அரவமில்லாமல் தொடர்கிறது ஒரு கரடி. நீண்ட கூர் நகங்கள் கொண்ட இரண்டு முன்னங்கால்களையும் அரவணைக்க நீளும் கைகள் போல நீட்டியபடி அவனை நெருங்குகிறது… இன்னும் இரண்டு தப்படிகள்தாம் பாக்கி. கரடி பாய்கிறது…
சுவாரஸ்யம், விறுவிறுப்பு என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள். வாழ்க்கை கற்றுத் தரக்கூடிய அனுபவங்களைவிடச் சிறந்த மர்ம நாவல் வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் மேலும் மெருகேற்றி ஒவ்வொரு பாத்திரத்தையும் உலவவிடும் கணங்களில் யுவன் சந்திரசேகர் மிக அழுத்தமாகத் தெரிகிறார்.
யுவன் சந்திரசேகர் -பின்னட்டை குறிப்பு
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘ ஜெயமோகன்
நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் – தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்; அல்லது நிசப்தம் போட்ட சப்தம் என்பதுபோன்ற கவிக்கிறுக்கு என்பதெல்லாம் சரிதான். என்றாலும், எத்தனை நூற்றாண்டுப் பழைய வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் மானசீகத்தில் எவ்வளவு தீர்க்கமாக மீட்டுருவாக்க முடிந்திருந்திருக்கிறது அவர்களால். அவற்றில் ஒரு தர்க்கத் தொடர்ச்சியை நிறுவிக்காட்டவும் முடிந்திருக்கிறது… வரலாற்றுத் தொடர்ச்சியைக் கட்டமைக்கும்போது, அவர்களுக்குப் புராதன நாட்களிலும், சமகாலத்திலும் ஒரே சமயத்தில் காலூன்றி நிற்க வாய்த்திருக்கும்தானே….
– நாவலிலிருந்து
யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்
யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்
யுவன் என்னும் கதைசொல்லி ஜெயமோகன்
யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி
நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு
யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை
சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்
மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்
கதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்
கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘
திலுகோத்தி சாலுமா 2.0
மணி.எம்.கே,மணிஒரு வாசகனாக நான், மணி எம்.கே.மணி அவர்களின் கதைகளை இணைய இதழ்களில் தேடி வாசிப்பதுண்டு. அவர் ஒரு சிறுகதையை கச்சிதமாக சொல்வதை கவனித்தபடி இருப்பேன். அந்த வகையில் அவருடைய முந்தைய தொகுப்பான “டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்” சென்ற வருடத்தில் வெளியான சிறுகதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்று
திலுகோத்தி சாலுமா 2.0அளவை, இரண்டாம் இதழ்
நண்பர் ஈரோடு கிருஷ்ணன் நடத்தும் அளவை இணைய பத்திரிக்கையின் இரண்டாவது இதழ்(1.3.22) வெளியாகிவிட்டது. சென்ற இதழுக்கு கிடைத்த வரவேற்பில் கிருஷ்ணன் உற்சாகமாக இருந்தார். பொதுவாக சட்டம் சார்ந்த விஷயங்களை எளிமையாக எழுதினால் அதற்கு வாசகர் வட்டம் இருக்கிறது
இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன. மொத்தம் ஐந்து உரிமையியல் மற்றும் குற்றவியல் தீர்ப்புகள் தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளது.
ஈரோட்டிின் மூத்த வழக்கறிஞர்களுள் ஒருவரான திரு. A.C. முத்துசாமி அவர்களின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. முந்தைய இதழை படிக்க ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் இணைப்பு உள்ளது.
மாபெரும் தாய்- சிறில் அலெக்ஸ்
எழுத்தாளர் அகரமுதல்வனின் ‘மாபெரும் தாய்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று கதைகளையும் முடித்ததும் இந்தக் குறிப்பை உடனே எழுதிவிடத் தோன்றியது.
ஒரு போரின் முடிவில் உயிரிழந்தவர்களின் கணக்கெடுப்பைவிட வலி மிகுந்தது துரோகிகளின் கணக்கெடுப்பு. சடலங்களைப்போல இறுக்கம் இல்லாதவை துரோகிகளைக் குறித்த வரையரைகள்.
நண்பனின் துரோகம், போராளிக்குச் சமூகம் செய்யும் துரோகம், கடவுள் மக்களினத்துக்குச் செய்த துரோகம் என முதல் மூன்று கதைகளும் வெவ்வேறு பரிமாணங்களை முன்வைப்பவை. துரோகம் இலக்கியத்தில் அதிகம் சொல்லப்பட்ட ஒரு உணர்ச்சி என்றாலும் அது அதிக துல்லியமாக வெளிப்படும் காலம் என்று (ஈழப்) போரின் காலத்தையும் அதன் பிந்திய காலகட்டத்தையும் உணர முடிகிறது.
துரோகம் நாம் நின்றுகொண்டிருக்கும் திடமான பூமி நெகிழ்ந்து நம்மை மண்ணுக்குள் இழுத்துப் போடும் அனுபவத்தைப் போன்றது. அது நம்பிக்கைகள் மீது கட்டப்படும் எதிர்காலத்தை மட்டுமல்ல, நாம் நம்பிக்கொண்டிருக்கும் கடந்தகாலத்தையும் புரட்டிப்போடுவதுமாகும்.
அகரமுதல்வன் எழுதியிருந்த சில முகநூல் கவிதைகளில் வெளிப்பட்டதைவிட சிறந்த கவி நயம் இக்கதைகளில் வெளிப்பட்டுள்ளது. ஒரு கவிஞன் எழுதிய கதைகள் இவை என்பது இன்னும் அவற்றைச் சிறப்பாக்கியுள்ளது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கூறுமுறைகள் இதை ஒரு ஒற்றைப்படையான தொகுப்பை வாசிக்கும் சோர்வான அனுபவத்திலிருந்து விடுவிக்கின்றன. கடவுளின் துரோகத்தை முறையிடுவதுவும் ஒரு பிரார்த்தனையாகவே எஞ்சிவிடுகிற பாலன் கதை எழுதப்பட்டிருக்கிற விதம் புதுமையானது. ஏரோதுக்குத் தப்பிய பாலன் பதுங்குகுழிக்கு வந்து சேர்வதும், ஏதேனின் தொன்மத்தைப் பின்னி ஒரு நவீன தொன்மைத்தை உருவாக்கியதிலும் ‘பாலன்’ கதை சிறப்பாக வந்துள்ளது.
சுதந்திரத்திற்கும் முன்னிருந்தே துவங்கிவிட்ட தமிழ் சிறுகதை மரபில் பெரிய பெரிய சாதனையாளர்களையும் தாண்டி, ஜெயமோகன் ஒரே மூச்சில் நூறு கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்த ‘மீம்ஸ்’ காலத்திலும் இளம் படைப்பாளிகள் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி கதை சொல்லும் மரபை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டிருப்பதை நான் அண்மையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தேன். அகரமுதல்வன் அவ்விளைஞர் வரிசையில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர்
சிறில் அலெக்ஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

