Jeyamohan's Blog, page 814
March 10, 2022
வேதங்களை வாசிப்பது…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் கடந்த பல மாதங்களாக கீதை, வேதாந்தம், மதம் சம்பந்தமாக ஆர்வம் கொண்டு தங்கள் உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றை படித்து வருகிறேன்.
நான் வேதங்களை படிக்க எண்ணுகிறேன். எங்கிருந்து ஆரம்பிப்பது? சரியான பதிப்பு எங்கு கிடைக்கும்? உங்களால் வழி காட்ட முடியுமா?
வேதாந்தத்தில் வேதத்திற்கு அளிக்கப்படும் இடம் என்ன? வேதத்தை சேர்த்துக் கொள்கிறதா அல்லது நிராகரிக்கிறதா?
அன்புடன்
முருகேஷ்
*
அன்புள்ள முருகேஷ்,
வேதங்களை இருவகையில் கற்கலாம்.
வேதங்களை மரபாகக் கற்பவர்கள் அதை முறையாக ஓதும்பொருட்டு கற்கிறார்கள். அது பல ஆண்டுகள் கடுமையான பயிற்சி எடுக்கவேண்டிய ஒன்று. புரோகிதப் பணிக்கானது அந்தக் கல்வி. வேள்விச்சடங்குகளைச் செய்வதற்கு உரியது. பொருளுணர்ந்து கற்பதில்லை, அதற்கான தேவையும் இல்லை. அந்தவகை கல்வியில் வேதங்கள்மீதான முழுமையான பக்தியே தேவை. அதற்கு ஆன்மிகமாகவோ அறிவார்ந்தோ அழகியல்நோக்கிலேயோ வேதங்களை ஆராய்வது முற்றிலும் தடையாக அமையக்கூடியது
அந்தணர் அல்லாதோருக்கு வேதம் கற்பிக்கும் ஒருசில அமைப்புகளே இந்தியாவிலுள்ளன. தேடிச்செல்லவேண்டும். இன்றைய சூழலில் அதற்காக முழுமையாகவே வாழ்க்கையை அளிப்பவர்களுக்கே அந்த வாய்ப்பு உள்ளது.
வேதங்களை மெய்யியல் அறிதலின் பொருட்டு கற்கவேண்டும் என்றால் அதற்கு இணையத்திலேயே ஆங்கில நூல்கள் உள்ளன.
http://cakravartin.com/wordpress/wp-content/upoads/2008/08/vedas.pdf
என்னும் தளம் பிடிஎஃப் வடிவில் அளிக்கிறது. பலரும் அதை பரிந்துரைப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் இந்த தளமே பெரிதும் உதவியானது.
http://www.sanskritweb.net/rigveda/griffith-p.pdf
https://www.hinduwebsite.com/sacredscripts/rigintro.asp
வேதங்களின் மொழியாக்கத்துக்கு இன்றும் கிரிஃபித்தின் வடிவமே அழகானது, உதவியானது.
இணையத்தில் சில பழைய மொழியாக்கங்கள் உள்ளன
https://shaivam.org/tamil/sta-rigveda-samhita-ashtaka-first.pdf
https://eegarai.darkbb.com/t147975-topic
ம.ரா.ஜம்புநாதன் மொழியாக்கத்தில் அலைகள் வெளியீட்டகம் தமிழில் வெளியிட்டிருக்கும் வேதங்களின் மொழியாக்க நூல்களும் உதவியானவை.
ஆனால் வேதங்களை அப்படி நேரடியாகச் சென்று படிப்பதில் பயனில்லை. ஏனென்றால் அவை தொல்நூல்கள். அவற்றில் பெரும்பாலும் வேண்டுதல்களும் துதிகளுமே உள்ளன. அவற்றைப் பற்றிய ஆய்வுநூல்களையே முதலில் பயிலவேண்டும்.
கைலாசநாத குருக்கள் எழுதிய சம்ஸ்கிருத இலக்கிய அறிமுக நூல் உதவியான ஒரு நல்ல தொடக்கம் ( இணைய நூலகம்)
வேதங்கள் ஒரு பகுப்பாய்வு -முனைவர் இராமமூர்த்தி
வேத மந்திரங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர்
நற்றமிழில் நால்வேதம் (இணையநூலகம்)
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல் அரவிந்தன் நீலகண்டன்
ஒரு நல்ல துணைநூல். அதன்பின் வேதங்களை பயிலலாம். குறிப்பாக ரிக்வேதம் இறுதிப்பகுதிகள்
வேதாந்தத்திற்கு வேதங்களே மூலநூல்கள் என பிற்கால வேதாந்த முதலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கீதையின் கொள்கைப்படி வேதாந்தம் வேததரிசனத்திற்கு எதிரானது. வேதம் வழிபாட்டையும் சடங்குகளையும் முன்வைப்பது. உலகியல்தன்மை கொண்டது. வேதாந்தம் அடிப்படையில் அறிவார்ந்தது. அகவயமான தேடலை முன்வைப்பது.
தொடக்கத்திலேயே எந்த வகையான முன்முடிவுகளையும் உருவாக்கிக் கொள்ளவேண்டியதில்லை. படியுங்கள்
ஜெ
பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியனின் குரல்
பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் புதிய பதிப்பைப் பார்த்தேன். அதன் பின்னட்டைக்குறிப்பு என்னை ஒருவகையான பதற்ற நிலைக்கு ஆளாக்கியது. 2002ல் அந்நாவலை நான் படித்தேன். அன்று தொழிற்சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகவே அந்நாவல் ஒரு மார்க்ஸிய விரோதியால் மார்க்ஸிய எதிர்ப்புக்காக எழுதப்பட்டது என்று தோன்றியது. மார்க்ஸிய எதிர்ப்பு என்றால் எதிர்த்தரப்பு. எதிர்த்தர்ப்பு என்றால் மார்க்ஸியர் அப்போது எவரை எதிர்த்தரப்பு என்று கொள்கிறார்களோ அந்தத்தரப்பு. 1991க்கு முன் என்றால் காங்கிரஸ், அமெரிக்க ஏகாதிபத்தியம். பிறகு என்றால் இந்துத்துவம். இப்படித்தான் மார்க்ஸியர் யோசிக்கமுடியும். வேறு வழியே இல்லை. இதே டெம்ப்ளேட் தான் நூறுவருடமாக இருக்கிறது. மாற்றவே முடியாது. நானும் அப்படியே நினைத்தேன்.
ஆனால் இன்று எவ்வளவோ கடந்துசெல்லப்பட்டுவிட்டது. இன்றைக்கு ஆந்நாவலின் பின்னட்டையை வாசிக்கும்போது அதை எப்படி முற்றிலும் தவறாக, முழுக்கமுழுக்க அபத்தமாக புரிந்துகொண்டோம் என்று தெரிகிறது. அப்படித்தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்றாலும் அந்த கண்கட்டித்தனம் திகைப்பை அளிக்கிறது. உண்மையில் 1991 முதல் மிகப்பெரிய ஓர் உடைவு நிகழ்ந்தது. அந்த நொறுங்கலைத்தான் 1998ல் வந்த பின்தொடரும் நிழலின் குரல் சொல்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்று அன்று பலம்பிடித்துச் சொல்லிக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் ஒருசாரார் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம்பேர் வன்மமாகச் சொல்கிறார்கள். மிச்சபேர் பாவலாவாகச் சொல்கிறார்கள். மிகக்கொஞ்சம்பேர் நம்பிச் சொல்கிறார்கள்.
1991க்குப் பிறகுதான் இங்கிருக்கும் இடதுசாரி அமைப்புகளில் இன்றுள்ள எல்லா கொள்கைச் சிக்கல்களும் உருவாயின. தேசிய இனப்பிரச்சினை மேலேழுந்து வந்தது. தமிழ்த்தேசியவாதிகள் இடதுசாரிகளாக ஆனார்கள்.(அதுவரை அவர்கள் பாசிஸ்டுகளாக இடதுசாரிகளால் சொல்லப்பட்டார்கள்) மார்க்ஸியர்கள் பெரியாரியம் பேச ஆரம்பித்தார்கள் – தலைமையில் பிராமணர்களை வைத்துக்கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு பேசினார்கள். நம்பிக்கையிழப்பு, கொள்கைக்குழப்பம். அதன் விளைவாக நிறையபேர் சாதிக்கட்சிகளுக்குச் சென்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை இடதுசாரிக் கட்சி என்றார்கள். அதுதான் பெரியாரிய இடைநிலைச் சாதி அரசியலுக்கான குறுக்குப்பாதையாக அமைந்தது.
மொத்தத்தில் ஒரு பெரிய கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் நிகழ்ந்து ஆளுக்கொரு திசையில் ஒதுங்கினார்கள். அந்த அத்தனை தரப்பையும் மிகநேர்மையாக முன்வைக்கும் நாவல் பின்தொடரும் நிழலின் குரல். சொல்லப்போனால் மார்க்ஸியமே அர்த்தமிழந்துவிட்டது என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் உண்மையான மதிப்பென்ன, சாராம்சம் என்ன என்று சொன்ன நாவல் அது. மார்க்ஸியத்தின் சாரம்சம் அந்த இலட்சியவாதமும், அந்த வரலாற்றுவாதமும்தானே ஒழிய அந்த அரசியல்சூழ்ச்சிகள் அல்ல. சோவியத் ருஷ்யாவோ சீனாவோ அல்ல. தொழிற்சங்க அரசியலோ தலைமைக்கான போட்டியோ அல்ல.
என் தொழிற்சங்க நண்பர் பட்டாபிராமன் அந்நாவலின் வெளியிட்ட மேடையில் சொன்னார் நாவலின் முதல் வார்த்தை இடது கடைசி வார்த்தை தோல்வியற்றவன். நாவல் அதைத்தான் சொல்கிறது. மார்க்ஸியத்தை ஒரு மூர்க்கமான நம்பிக்கையாக அல்லாமல் ஒரு இலட்சியவாதமாக, ஒருபோதும் தோற்காத மானுடக்கனவாகக் கொண்டுசெல்வது பற்றி பேசும் நாவல் அது. ஆனால் கருத்தியல் மூர்க்க நம்பிக்கைக்குள் இருக்கும் வரை அதைக் காணும் கண் இருக்காது. கூச்சலிடத்தான் தோன்றும். நானும் கூச்சலிட்டவன்தான்
ஆனால் இன்றைக்கு பல அடிகள். பல கசப்புகள். எல்லாம் தெளிந்து அமர்ந்து இன்றைக்கு யோசிக்கமுடிகிறது. வாழ்த்துக்கள்
என்.ஆர்.சிவராமன்
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
கருணை -கடிதங்கள்
https://victorianweb.org/art/illustra...கருணையும் உரிமையும்அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரையை வாசித்தேன். கடிதமாக இருந்தாலும் அது ஒரு கட்டுரை. அதில் நீங்கள் எப்போதுமே வலியுறுத்தும் ஒரு விஷயம்தான் இருந்தது. மனிதர்கள் வாழ்வது உடம்பால் அல்ல, பிரக்ஞையால். ஒருவன் அவனுக்கு அவன் யாரோ அதுதான் முக்கியம். அவனுடைய தன்னுணர்வுதான் அவன். அந்த தன்னுணர்வை அவை தன்னுடைய தன்னறத்தைச் செய்வதுவழியாகத்தான் ஈட்டிக்கொள்ள முடியும். அதைத்தான் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்
நன்றி
ஆர்
அன்புள்ள ஜெ
கருணை பற்றிய கடிதத்தில் உள்ள ஓவியத்தை இரண்டாம் வாசிப்பில்தான் பார்த்தேன். கண்இல்லாத பேரறிஞர். அற்புதமான ஓவியம்.
கே.ஆர்.குமார்
அன்புள்ள ஜெ
சென்ற வியாழனன்று மூடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கம் போல எனக்கான பரிதாப குரலொன்று பக்கத்தில் ஒலித்திருந்தது. ஒரு ரகசிய புன்னகையோடு வீடு திரும்பினேன். இன்றுகாலை கருணையும் உரிமையும் பதிவை படித்தவுடன் நினைவில் தோன்றியது. வாசகர் சரவணன் சொல்லியிருந்த எரிச்சலும் ஒவ்வாமையும் சில மாதங்களுக்கு முன்பு வரை எனக்குமிருந்தது.
ஜா.தீபாவின் ஒற்றை சம்பவம் கதை அதிலொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. அது செல்லும் பாதை வேறாயினும் அங்கிருந்து நான் சென்றடைந்தது ஒன்றரை ஆண்டுக்களுக்கு முன் நீங்கள் எனக்கு சொன்ன விடையை தான். வெறும் உடலாலேயே தன்னை பிறனுடன் ஒப்பிட்டு மகிழும் எளிய உள்ளத்தின் சிறுமையை அறியும் திறன் கொண்ட நான் கனிவான புன்னகையை தானே அவனுக்கு தர வேண்டும். அறிவின் முதன்மை பெறுபயன், கனிந்து விடுதலை அடைதல்லவா. இந்த அறிதலை வந்தடைந்த பின் இயல்பான நட்பு புன்னகையை தருவதில் எச்சிரமமும் இல்லை. அவர்கள் அப்படித்தான் என்று அறியும் போதே அதனோடு வீண் முரண்களை வளர்க்காது இசைந்து என் வழி தேறுதல் நலமென முடிவு செய்தேன்.
ஆனால் இன்றைய பதிலின் பிற்பகுதி நானும் கொண்டிருந்த ஐயத்தை நீக்கியது. ஒரு ஆசிரியராக பலவகையிலும் ஐயங்களை விலக்க வழிசொன்னாலும் அவ்வப்போது உங்கள் சொற்கள் இல்லாது கடந்து வரும் நிலையை அடையவில்லை. இங்கே சூழலில் என்னை போன்றோரிடம் தொடர்ச்சியாக ‘நீ ஒரு உடல் மட்டுமே, குறையுள்ள உடல்.’ என்ற குரல் ஒலித்து ஒலித்து ஏற்க வைக்கிறது. ஆனால் சற்று பார்வையை திருப்பினால் நம் சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது. வெறும் சோற்றுப்பிண்டங்களின் சமூகம். எந்த மரபு உடல் ஒரு கருவி, மனிதன் தன் அறிவால் தன் சுயத்தை விரிவாக்கி கொள்வதே முழுமை என அறைகூவியதோ அதன் தலைமுறைகள் அதற்கு முற்றிலும் எதிராக இருப்பது ஒரு வரலாற்று முரண்நகை தான்.
இங்கே அறிவியக்கவாதியாக தன்னை உணர்பவன் அந்த தளையிலிருந்து விடுவித்து கொள்ள உங்களை போன்ற நல்லாசிரியரின் சொல் தேவைப்படுகிறது. ஒவ்வொருமுறையும் உரிய காலத்தில் என்னை வந்தடையும் தங்களின் சொற்களுக்காக இக்கணத்தில் தலை பணிகிறேன்.
அன்புடன்
சக்திவேல்
மிளகு- காளிப்பிரசாத்
ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் மிளகுராணியின் அரசாங்கம் வீழ்த்தப்படும் கதை. இது ஒரு சரித்திர புத்தகத்தின் ஒரு பத்தியில் சொல்லப்பட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்பது எளிதில் புரிந்து விடும். அந்த அளவிற்கு நாம் அறிந்த போர், தியாகம் மற்றும் துரோகம் கலந்த அரசக்கதைத்தான். ஆனால் 1200 பக்கங்களில் அதை வாசிக்கும்போது எங்கும் சுவாரசியம் குறைவதில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கு நவீன இலக்கியத்தின் அத்தனை கூறுமுறைகளையும் தேவைக்கேற்ப கையாண்டிருக்கிறார்
மிளகு – காளிப்பிரசாத்மிளகு- வாசிப்பின் வழி…ஜெயமோகன்
வெண்முரசு, கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
2020ஆம் ஆண்டு வெண்முரசு நாவலினை படிக்க ஆரம்பித்தேன்.வேலை காரணமாக லண்டனில் தனியாக இருந்த போது பெரும் துணையாக, பல்வேறு இடங்களுக்கும், கால நிலைகளுக்கும் அழைத்துச் சென்ற ஒரு நண்பனாக வெண்முரசு இருந்தது.
என் தாயார் சிறு வயதில் துரியோதனன் குறித்து கூறுகையில், அவன் எவ்வளவு சிறந்தவன், கருணை கொண்டவன் என கூற கேட்டதுண்டு.எனினும் தொலைக்காட்சியில் பார்த்த துரியோதனன் தான் என் மனதில் பதிந்தான்.வெண்முரசு படிக்க தொடங்கிய பின்னர், தங்கள் பார்வையில் பார்க்கும் தோறும் என்னுள் பதிந்த பிம்பம் மாற தொடங்கியது.
துரியோதனன் மட்டும் அல்ல அனைவரையும் புதிய கோணத்தில் பார்க்க தொடங்கினேன்.வருடத்திற்கு ஒரு முறை, எனக்கு பணி இடையே ஓய்வு தேவையெனில், சென்னையில் இருந்து திருப்பதி வரை தனியாக நான்கு நாட்கள் நடை பயணம் செல்வதுண்டு.
முதல் நாள் ஆரம்பிக்கும் போது உள்ள மலைப்பே எனக்கு வெண்முரசு படிக்க தொடங்கிய போது இருந்தது. 2020 அக்டோபர் மாதம், படித்து முடித்து திரும்பி பார்க்கையில் நான் பாரத நாட்டையே நடந்து வந்த உணர்வே உண்டானது. நுணுக்கமான, எளிதில் கவணிக்க தவற கூடிய தகவல்களை கூட அழகாக விவரித்த தங்கள் எழுத்திற்கு என் வியப்புடன் கூடிய வணக்கங்கள்.
படிப்பதற்கே மலைப்பூட்டும் வெண்முரசு படைத்த தங்களுக்கு அன்புடன் கூடிய வாழ்த்துக்கள்.மீண்டும் படிக்க துவங்கிய எனக்கு இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என தோன்றியது.
அன்புடன்,
ஜெ. ஜெயபிரகாஷ்.
அன்புள்ள ஜெ
வெண்முரசின் வாசகன் நான். அதாவது ஓராண்டாக வாசித்துக் கொண்டே இருக்கிறேன். நடுவே இரண்டுமுறை வாசிப்பு நின்றுவிட்டது. அதன்பின் விடக்கூடாது என்று மீண்டும் தொடங்கினேன். புத்தகமாகத்தான் வாசிக்கிறேன் நான் வந்துசேர்வதற்குள் மிஞ்சிய நான்கு பகுதிகளும் வெளியாகிவிடுமென நம்புகிறேன்.
என் மனைவி என்னிடம் ஒருமுறை கேட்டாள். வெண்முரசு உங்களுக்கு என்ன அளிக்கிறது என்று. நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன். ‘அதான் ஒரிஜினல் மகாபாரதம் இருக்கே’ என்று அவள் சொன்னாள். ஆனால் காலந்தோறும் மகாபாரதத்தை திருப்பி எழுதுகிறார்களே என்று நான் சொன்னேன்.
அதன்பிறகு நான் ரொமிலா தாப்பர் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்தேன். மகாபாரதத்தில் துஷ்யந்தன் சகுந்தலையை அப்படியே மறந்துவிடுகிறான். காரணம் ஒன்றும் இல்லை. ஆனால் காளிதாசன் அதற்கு துர்வாசரின் சாபம் என்று ஒரு காரணத்தை கொண்டுவருகிறான். காளிதாசனில் இருந்து அதை மீண்டும் மகாபாரதத்திலே சேர்க்கிறார்கள். துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் உள்ள அனாமலி ஒன்றை காளிதாசன் தீர்க்கிறான். அவன் வேண்டுமென்றே சகுந்தலையை கைவிட்டால் அதன்பின் ஏற்றுக்கொள்வதும் பெரிய மாண்பு இல்லையே. மறுபடி மறக்கமாட்டான் என்று எப்படிச் சொல்லமுடியும்?
இதேபோல பலநூறு அனாமலிகளை வெண்முரசு சரிசெய்கிறது என்று நான் என் மனைவியிடம் சொன்னேன். இந்த அனாமலி எல்லாம் காலமாற்றத்தால் வேல்யூஸ் மாறும்போது உருவாகிறது.அவற்றை ஏன் சரிசெய்யவேண்டும் என்றால் சாராம்சமாக மகாபாரதத்திலே உள்ள தர்சனத்தை துலக்கம் பண்ணுவதற்காகத்தான் என்று சொன்னேன். எனக்கே ஒரு தெளிவு கிடைத்தது.
அன்புடன்
அனந்த்ராம்
March 9, 2022
பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைத் தூய்மை செய்வது…
வணக்கம். தினமணியில் இந்த செய்தியை படித்தேன்
கழிவறையை மாணவர்களைக்கொண்டு தூய்மைசெய்யவைத்த ஆசிரியை பணியிடைநீக்கம்
நான் படித்த காலத்தில் மிக சாதாரணமாக எங்கள் ஆசிரியர்கள் எங்களை அழைத்து கழிவறைகளை சுத்தம் செய்வதும், குப்பைகளை பெறுக்குவதும் அனுதினமும் நடக்கும்.எங்களுக்குள் குழுக்கள் பிரித்து விடப்படும். முறைவைத்து நாங்கள் குழுவாக வேலைசெய்தோம் . இப்பொது அந்த நாளை நினைக்கையிலும் ஒரு குதூகலம்தான்.
என் நண்பன் ராமகிருஷ்ணா மடத்தின் பள்ளியில் தான் தங்கி படிதான். அவன் என்னுடன் பகிர்ந்துகொண்ட அவனது அனுபவங்கள் மிக சுவாரசியமானவை . முறை வைத்து சமைப்பதும், சுத்தம் செய்வதும், தோட்ட வேலை செய்வதும் என.
எனது கேள்வி என்னவென்றால் இது எப்படி தவறாகும் ?
எங்கள் ஊரின் பள்ளிகளின் கழிவறைகளை பற்றி பல முறை என் வீட்டருகில் இருக்கும் மாணவ மாணவிகளை விசாரித்திருக்கிறேன் . பல மாணவிகள் மிக கமியாக தண்ணீர் குடித்து முடிந்த அளவு வீட்டிற்கு சென்றுதான் urine செல்வதாக சொல்கிறார்கள். two Toilet போவதை கற்பனைகூட செய்யமுடியாது என்று ஒரு மாணவி சொன்னால்.
இது நடக்க கூடாது என்று தான் அந்த தலைமை ஆசிரியர் இதை செய்திருக்கிறார். அரசும் ஆட்களை வைத்து சுத்தம் செய்யாது , சுத்தம் செய்கிறவர்களையும் இவர்கள் இடைநீக்கம் செய்வார்கள்.
இவர்கள் அந்த தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்து ஒரு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார்கள் என்பதே என் எண்ணம்.
அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன்
அன்புள்ள பன்னீர்
பழையகாலக் கல்விமுறையில் வகுப்பறைகள், கழிப்பறைகள் எல்லாவற்றையும் மாணவர்களே தூய்மைசெய்யவேண்டும். அது ஒரு பயிற்சி. என் ஆசிரியர் எனக்கு முறையாக கழிப்பறை தூய்மைசெய்யவேண்டிய விதத்தைச் சொல்லித் தந்தார்.
ஆனால் அன்றெல்லாம் வீட்டிலும் நாமே செய்துகொண்டிருந்தோம். இன்றைய உயர்நடுத்தர சூழலில் வேலைக்காரர்களே அதைச் செய்யவேண்டும். நான் கழிப்பறையை தூய்மை செய்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என ஒருவர் ஒருமுறை டிவியில் சொல்வதை கேடேன். நடுத்தர குடும்பங்களில் அது அம்மாவின் பணி. பிள்ளைகள் எதையும் செய்வதில்லை. இழிவாகவும் நினைக்கின்றன. ஏனென்றால் நாம் பிள்ளைகளை இப்போதெல்லாம் சக்கரவர்த்திகளின் குழந்தைகள் மாதிரி வளர்க்கிறோம்.
ஆகவே கல்விநிலையங்களில் அவற்றைச் செய்யவைத்தால் குடும்பத்தவர் சீறி கொலை,செய்ய வருவார்கள். தனியார்ப் பள்ளிகளில் இன்று பெரும்பணம் கட்டி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கல்வி அவர்கள் விலைகொடுத்து வாங்கும் பொருள்.அங்கே தூய்மைசெய்யும் வேலைக்கெல்லாம் இடமில்லை.
அந்த ஆசிரியை தேசியக் கழிப்பறை தினம் பற்றியெல்லாம் சொல்லி, ஒவ்வொருவரும் கழிப்பறைகளை தூய்மை செய்யவேண்டியதை வலியுறுத்தி, அத்தனை மாணவர்களையும் தூய்மைசெய்ய பயிற்றியிருந்தால், அவரும் முன்னின்று அதைச் செய்யவைத்திருந்தால், அது உயரிய செயல். ஆனால் நம் நடுத்தரவர்க்கத்தின் அற்பத்தனம் அதை ஏற்காது. ஆகவே அவர் தண்டிக்கப்படுகிறார்.
ஆனால் ஒன்றுண்டு, கழிப்பறைத் தூய்மை உட்பட அனைத்தும் அனைத்து மாணவர்களாலும் செய்யப்படவேண்டும். நான் படித்தபோதெல்லாம் அப்படித்தான். சாதிபார்த்து செய்யவைப்பது வன்கொடுமை. அதையும் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை
ஜெ
பின்தொடரும் நிழலின் குரல்- சு.கார்த்திகேயன்
வருடத்தின் ஆரம்பத்திலேயே 720 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க தேர்ந்ததெடுத்ததில் ஒருபுறம் உற்சாகமும் மறுபுறம் பதட்டமும் மனதை நிறைத்திருந்தது. உற்சாகத்திற்கான காரணமாக பரந்துபட்ட வாசிப்புக்குள்ளாகி பல விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழின் மிக முக்கியமான நாவலை படிக்கிறேன் என்பதை சொல்லலாம்.அதே நேரத்தில் அதையே பதட்டத்திற்கான காரணமாகவும் சொல்லலாம்.
ஒரு புத்தகத்தை படிக்க பதட்டப்பட வேண்டுமா என்ன? அதை சரியாக சொல்லத் தெரியவில்லை, எனக்கு அப்படித்தான் இருந்தது. அதற்கான காரணமாக அந்த நாவலை குறித்தான என் முன்முடிவுகளை சொல்லலாம், இப்படி நிறைய அனுபவம் எனக்கு உண்டு, நண்பர்கள் பார்த்து,படித்து பரிந்துரை செய்யும் நல்ல படங்கள் மற்றும் புத்தகங்கள் என்னை இவ்வாறான அனுபவத்திற்கிட்டுச் செல்லும், அப்படி நேர்ந்தது தான் இந்த நாவலின் வாசிப்பு அனுபவம்.
ஜெயமோகனின் சிறந்த படைப்புகளில் ஒன்று என்று தீவிர இலக்கிய வாசகர்களால் குறிப்பிடப்படும் “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலை வாசிக்கத் தொடங்கி, ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து அதை வாசித்து முடித்தேன்.சிறந்த ஒரு வாசிப்பு அனுபவமாக இருந்தது.
மனிதனால் அளக்க முடியாத அறிந்துகொள்ள இயலாத ( முற்றிலுமாக ) மனதை பற்றிய தருக்கங்கள் விரவிக்கிடக்கும் ஒரு பரந்தவெளி தான் இந்த நாவல்,அதன் இன்னொரு பகுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் அதனூடாக கம்யூனிசத்தின் தோல்வியையும் சொல்லிச் சொல்கிறது.
எந்தவொரு சிந்தாந்தமும் அதன் அடிப்படையில் முரண்பாட்டை கொண்டிருந்தால் அதன் அழிவு அதற்கு மட்டுமல்லமாது அது எதை நிலைநிறுத்தி அதை யாரை பின்பற்ற நிர்பந்திக்கிறதோ அந்த எல்லாவற்றிற்குமான அழிவாக இருக்கும் என்பது திண்ணம்.
நாவலின் முக்கிய கதாபாத்திரமான அருணாச்சலம், வீரபத்திரபிள்ளையாகவும், வீரபத்திரபிள்ளை புகாரினாகவும் கூடுவிட்டு கூடு பாய்ந்து வரலாற்று சான்றுகளாக இந்நாவலில் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒரு அமைப்பு அதன் செயல்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை எப்படி அந்த அமைப்பின் வரலாற்றிலிருந்து சுவடுகளே இல்லாமல் அழிக்கிறது,அதற்கான நியாய தர்மங்களை அந்த அமைப்பு எப்படி வரலாற்றிலிருந்தே தெரிவு செய்து செயல்படுத்துகிறது என்பதிலிருந்து,கதை கம்யூனிசத்தின் அடிவேரை ஆட்டிப்பார்க்கிறது.
மனிதனின் வாழ்வில் அவன் துயருரும்போது அவனை இரட்சித்து மீட்க மீட்பர் ஒருவர் எப்போதுமே தேவைப்படுகிறார், அவ்வாறு இல்லாதவர்களின் மனத்துயர் அவர்களை எந்த எல்லைக்கும் இட்டுச்சென்று அலைகழித்து விட்டுவிடும், இது மாபெரும் மேதைகளையும் கலைஞர்களையும் கூட விட்டு வைப்பதில்லை.
அருணாச்சலத்தின்,பாஸ்கரனின் தந்தை வீரபத்திரபிள்ளை பற்றிய தேடல்தான் அவனை வரலாற்றினூடாக பயணிக்க செய்து, வீரபத்திரபிள்ளையாகவும் புகாரினாகவும் அவனுடைய நிழலாக பின்தொடர வைக்கிறது
வீரபத்திரபிள்ளை பற்றிய தேடலில் அவன் சென்றடையும் இடம்,வீரபத்திரபிள்ளை ஏற்கனவே புகாரினை தேடி அடைந்த இடம் தான்,நாம் வாழ்க்கையை எதுவாக நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோமோ அதன் அடிப்படையே தவறு என்று நமக்கு தெரியவந்தால் அதன்பின் என்ன என்ற தேடல் தான் நம் எஞ்சிய வாழ்க்கை, இந்த நாவலின் மையமே இந்த வாழ்க்கையின் இரட்சிப்புக்கான தேடல்தான். புகாரின், தன் மனைவி அன்னாவின் மூலம் அதை கண்டடைகிறார், அருணாச்சலம் தன் மனைவி நாகம்மையின் மூலம் அதை அடைகிறார், ஆனால் வீரபத்திரபிள்ளையோ அந்த தேடலாகவே மறைந்துவிடுகிறார்.
இந்த நாவல், கம்யூனிசம் என்னும் சித்தாந்தம் தன்னை நிறுவிக்கொள்ளும் பொருட்டு உலக வரலாற்றில் விட்டுச் சென்ற தடயங்களை கண்டெடுக்கிறது,அதன் கொள்கைகளில் உள்ள அடிப்படை முரண்களை அலசி ஆராய்ந்து, நூறு வருடங்களில் அதன் சரிவை நியாயப்படுத்துகிறது,அது தின்று விழுங்கிய உயிர்களின் எண்ணிக்கையை வார்த்தைகளில் வரைந்து செல்கிறது,படிப்பவர்களுக்கு மனதில் ஒரு படிமத்தை விட்டுச்செல்கிறது.
இந்த நாவலின் சிறப்பம்சமாக அதன் கதை சொல்லும் விதத்தை சொல்லலாம்,உதாரணத்திற்கு அருணாசலத்தின் மூலம் கதை நகரத்தொடங்கி வீபத்திரபிள்ளையின் கடிதங்கள், கதைகள், நாடகங்கள் மூலம் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறது,நாவலாசிரியர் புத்திசாலித்தனமாக கேரக்டர்களை உருவாக்கியிருக்கிறார்,சுந்தர ராமசாமி, லியோ தால்ஸ்த்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி,இன்னும் சிலரையும் வைத்து தன்னுடைய கற்பனைத் திறனுக்கு தீனி போட்டிருக்கிறார்.
நாவலில் ஓரிடத்தில் தால்ஸ்த்தோய் இறந்த இரயில் நிலையத்தில்தல்ஸ்தோய்க்கும், தாஸ்தாயெவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு உரையாடலை நிகழ்த்திக்காட்டியிருப்பார், புனிதர் என்ற பெயரில் தால்ஸ்தோயும், சூதாடி என்ற அடையாளத்துடன் தாஸ்தாயெவ்ஸ்கியும் அதில் வாழ்ந்திருப்பார்கள், இதை படிக்கும் எந்தவொரு வாசகனும் இந்த நாவலாசிரியரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம்
அதேபோல நாவலின் இறுதி அத்தியாயத்தில் வரும் பைத்தியகார ஆஸ்பத்திரியில் நிகழும் வீரபத்திரபிள்ளையின் கைப்பிரதி நாடகங்கள் இன்னொரு உச்சம்,நாவலில் வரும் கெ.கெ.எம் உம்,அருணாச்சலமும் இறுதியில் ஆன்மீகத்தின் பாதையில் செல்வது அவரவருக்கான நியாயத்தை தருக்கப்பூர்வமாக நிறுவுகிறது.
நாவலின் குறையாக தெரிவது மிகையான சம்பாஷணைகள்தான், நிறைய பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பல இடங்களில் சலிப்பூட்டும் உரையாடல்கள்,நாவலாசிரியரே கதைமாந்தரகளாகி பேசுகிறாரோ என்ற ஐய்யம் அடிக்கடி வருகிறது, ரஷ்யாவை பற்றி நாவல் பல இடங்களில் பேசுவதால்,ரஷ்ய இலக்கியங்களைப் போலவே கதைமாந்தர்கள் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நாவலாசிரியர் நினைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
தருக்கம் என்ற வார்த்தையிலிருந்து நாவல் தொடங்குவதால் இந்த சம்பாஷணைகள் ஒருவேளை நியாயப்படுத்தப்படலாம், எதுவாயினும் தமிழின் மகத்தான படைப்புகளில் ஒன்றாக இதை வைக்கலாம் என்று தோன்றுகிறது.
சு.கார்த்திகேயன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
vishnupurampublishing@gmail.com
https://www.vishnupurampublications.com/
பின்தொடரும் நிழலின் குரலின் முன்னுரை
இரு கட்டுரைகள், ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த கடிதத்தில் இரண்டு விசயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
முதலில் உங்கள் நேரத்திற்கு நன்றி!
1) உங்களுடைய காணொளி பதிவு ஒன்றில் “கண்ணிநுண் சிறுதாம்பு” என்ற வார்த்தை உங்களை எப்படி கவர்ந்தது பற்றி சொல்லியிருப்பீர்கள். அந்த பதிவில் உங்களுடைய உள்தோன்றும் உணர்வு பற்றி பேசியிருப்பீர்கள். எனக்கும் “நாலாயிர திவ்ய பிரபந்தம்” படிக்கும் போது சில வரிகள் அப்படியே அந்த நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும். (திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.)
அதைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். இங்கே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
திருமங்கை ஆழ்வார் எழுதிய “பெரிய திருமொழியில்” “எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்” என்ற 10 பாடல்களில்,
“கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே”
iதில் “தொண்டராய் நின்று“ என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு அவ்வளவு அதிர்வுகளை தந்தது. என்னமோ நானே இதை எழுதியது போல பல நாட்கள் ஆனந்தத்தில் திருமங்கை ஆழ்வாரை கொண்டாடித் திளைத்தேன். வைஷ்ணவத்தின் சாரம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லி விட்டார் என்று தோன்றியது. இன்னும் இந்த வரிகளை படிக்கும் போது அப்படி ஒரு உள்ளே ஒரு மகிழ்ச்சி.
2) இந்தப் பதிவில்,
https://www.jeyamohan.in/161327/
“நீங்கள் சொல்லும் அந்த சின்னக்குழு ஒரே இடத்தில் சுற்றிச்சுற்றி வருவது. முகநூலின் செயல்முறை என்பது நம்மைச்சார்ந்தவர்களை மட்டுமே நமக்கு காட்டுவது. அதுவே உலகம் என நாம் எண்ண ஆரம்பிக்கிறோம். முகநூலில் புழங்கும் கசப்புகள், காழ்ப்புகள், வம்புகள், சில்லறை அரசியல் ஆகியவை அதை கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களுக்கான மடமாக ஆக்குகின்றன என நினைக்கிறேன். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.” என்று சொல்லியிருப்பீர்கள்.
“AI (Artificial Intelligence) is creating the world based on your search and companies are investing heavily on this” என்பது பெரிய கவலைப்பட வேண்டிய விசயம். உதாரணமாக, உங்களுடைய காணொளியை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது உங்களிடம் கேள்வி கேட்கப்படுகிறது. நீங்கள் பதில் சொல்வதற்கு முன் விளம்பரம் வருகிறது. எந்த அளவுக்கு AI காணொளியை கவனித்து கேள்விக்கும் பதிலுக்கும் நடுவே விளம்பரத்தை உள்ளே புகுத்தியுள்ளது என்று யோசிக்கும் போது “அதுவே உலகம் என நாம் எண்ண ஆரம்பிக்கிறோம்.” என்று நீங்கள் சொன்னது எவ்வளவு சரி என்று புரியும்.
Google போன்ற நிறுவனங்கள் AI-ல் நிறைய பணம் போடுகிறார்கள். இது வரும் கால சந்ததியினருக்கு மிக பெரிய சவாலாக இருக்கும். நாம் தேடும் விசயங்களை வைத்து நமக்கென்று உலகத்தை உருவாக்குகிறார்கள். வெளியில் நடக்கும் உண்மை உலகத்தை ஆராய்ந்து தேட வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் நாம் எல்லாரும் AI தரும் உலகத்திலேயே வாழ வேண்டியது தான்.
நல்ல புத்தககங்களை படிக்க வேண்டிய அவசியத்தை உணருகிறேன். தெரிந்தவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இல்லையென்றால் AI-க்கு அடிமைகளாவோம் என்று தோன்றுகிறது.
உங்களின் பதிவுகள் இப்படி என்னுள் தோன்றும் விஷயங்களை தட்டி எழுப்புகிறது.
நிறைய இது போன்ற விசயங்களை படிக்கும் போதும் அந்த அனுபவமும் என்னுடைய அனுபவத்தை பொருந்தி இருக்கும் போதும் என்னுள் உங்களிடம் நேரடியாக பேசுவது போலத் தோன்றும்.
நன்றி!
சத்ய நாராயணன்,
ஆஸ்டின், டெக்சாஸ்.
தேய்வழக்கை ஒளிரச்செய்தல்
இனிய ஜெயம்,
தேய்வழக்குகள் எவ்வாறு உருவாகின்றன என்று பார்த்தால், அந்த சொற்றொடர் முதலில் பயன்படுத்தப்படுகையில் அது ஏதோ ஒரு உணர்வைக் கடத்தும் ‘தனி மொழி’ யில் வெளிப்பாடு கொள்வதைக் காண முடிகிறது.
‘இழப்பதற்கு ஏதும் இல்லை நமது கைவிலங்குகள் தவிர, அடைவதற்கோ ஒரு பொன்னுலகே இருக்கிறது’ எனும் முழக்கம் முதல் நடிகர் சின்னி ஜெயந்த் உருவாக்கிய சில்ஃபான்ஸ் எனும் பொருளற்ற சொல் வரை, அது முதலில் வெளிப்படுகையில் அதன் தனி மொழி காரணமாகவே முந்தைய முழக்கம் உணர்வெழுச்சி கொடுப்பதாகவும் பிந்தைய சொல் ஒலி வழியே கிளுகிளுப்பு எழுப்புவதாகவும் இருக்கிறது.
அங்கிருந்து படி இறங்கி வெகு மக்கள் வழியே புழங்கு மொழி அல்லது பொது மொழிக்கு இவை சென்று பரவலாகும் போது முந்தைய முழக்கம் வெறும் உணர்ச்சி கிளர்த்தும் கும்பல் கோஷமாக மாறு கிறது. இன்னும் பரவப் பரவ எந்த உணர்ச்சியையும் கிளர்த்தாத வெறும் கும்பல் கோஷமாக எஞ்சி விடுகிறது. பிந்தைய சொல் அதன் கிளுகிளுப்பை இழக்கிறது.
இப்படி சாரமிழந்து போன உப்பைப் போல மாறிப்போன பல சொற்றொடர்கள் நம்மிடம் உண்டு. அப்படிப்பட்ட சொற்றொடர்களில் ஒன்று சு ரா வின் ‘எல்லோரும் சற்று நிம்மதியாக வாழும் காலம் ஒன்று வரும்’ எனும் தொடர்.
மனுஷ்ய புத்திரன் இதை அடிக்கடி பயன்படுத்துவார். அவர் வீட்டில் ஏதேனும் கொண்டாட்ட நிகழ்வு என்றாலும் சரி, எதிர் கட்சி நிகழ்த்தும் ஏதேனும் சமூக நீதிக்கு எதிரான கொடுமை என்றாலும் சரி, அது குறித்த பதிவின் இறுதியை இந்த சு ரா வின் பன்ச் குத்து வரிகள் கொண்டே முடிப்பார். (அவர் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் இனி அவர் பதிவின் இறுதியில் இந்த பன்ச் குத்து இடம்பெறாது என நினைக்கிறேன்). இவர் போக இன்னும் பலப் பலர் இந்த சொற்றொடரை சொல்லி சொல்லி எழுதி, இதை சொன்னவர் சு ரா அல்ல அப்துல் கலாம் என்று எவரேனும் நாளை சொன்னால் அது ஏற்றுக்கொள்ளப்படும் நிலையே கிட்டத்தட்ட வந்து விட்டது.
இப்படி சாரமாற்றுப்போன உப்பை மீண்டும் அதன் சாரம் கண்டு அமைய வைத்த கவிதை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். கவிதையால் என்னென்ன மாயம் எல்லாம் நிகழ்த்த முடியும் என்பதன் மற்றொரு சாட்சியம்.
கவிதை எனும் இலக்கிய வடிவத்தின் பலம் இரண்டு தளங்களில் இருக்கிறது. ஒன்று கவிதை பிற புனைவு அல்புனைவு வடிவங்களின் அலகுகளில் ஒன்றை போல ‘எடுத்துச் சொல்ல’ வந்தது அல்ல. ‘எப்படிச் சொல்கிறது’ என்பதே அதன் அடிப்படைத் தொழில். இரண்டாவதாக அதன் உடனடித் தன்மை. இந்த உடனடித் தன்மையை காலம் இடத்துக்கு கட்டுப்படாத தனக்கே உரிய பிரத்யேக தனி மொழி கொண்டு வாசகனின் புலன்களை உணர்வை நேரடியாக தீண்டுவதன் வழியே கைக்கொள்ளுகிறது.
மேற்சொன்னவை எல்லாம் தொழில்நுட்பமாக அன்றி கலைக்கூராக ஒரு கவிதைக்குள் தொழிற்பட்டால் அந்த இலக்கிய வடிவம் என்ன மாயத்தை எல்லாம் நிகழ்த்தும் என்பதன் மற்றொரு சட்சியம்
சு ரா வின் மந்திரம் என்ற தலைப்பு கொண்ட இசையின் கீழ்கண்ட கவிதை.
மோனைகளின் மயக்கம் ஏதுமில்லை
ஒரு எதுகையும் இல்லை
அதன் சந்தமாவது
நம் நெஞ்சத்து ஏக்கம்
அதில் லயம் கொள்வது
குருட்டு நம்பிக்கைகளின் இதம்
மந்திரம் போல் இல்லாததொரு மந்திரம் அது
ஆயினும்
மிக உறுதியாக மந்திரம்
நம் கைவசம் உள்ள கடைசி மந்திரம்
மந்திரங்களுக்கு ஆற்றல் உண்டு
மந்திரங்களில் மாயம் உண்டு.
நண்பா,
உன் ஒரு கையை நெஞ்சில் வைத்துக் கொள்ள வேண்டுமா?
வைத்துக் கொள்!
அழுகை பீறிட்டு வருகிறதா?
அதை அடக்க முனையாதே!
நாம் ஒரே குரலில்
சேர்ந்து சொல்வோம்…
எல்லோரும்…
எல்லோரும்…
சற்று…
சற்று…
நிம்மதியாக….
நிம்மதியாக….
வாழும்…
வாழும்…
காலம் ஒன்று வரும்.
காலம் ஒன்று வரும்.
(இசை)
கவிதையின் முதல் வரிகள் சு ரா வின் சொற்கள் மீது கவியின் மதிப்பீடு. அதில் எதுகை மோனை இல்லை ஆகவே அது அரசியல் கோஷமாக கீழிறங்க வாய்ப்பே இல்லை.
அடுத்த வரிகள் அச்சொற்றொடருக்கு கவி அளிக்கும் பிறிதொரு மறு அர்த்தம்.
அது லட்சியவாத கனவின் பிரகடனம் இல்லை. வெறும் உதிரிகளின் நெஞ்சத்து ஏக்கம் மட்டுமே. அதில் உறைவது குருட்டு நம்பிக்கைகளின் இதம் மட்டுமே.
இந்த நிறைவேரா ஏக்கத்தின் குருட்டு நம்பிக்கை தரும் இதத்தின் சொற்களை மந்திரம் என மாற்றினால்?
மந்திரத்தால் மாயம் நிகழும்.
அந்த மாயத்தை நிகழ்த்தும் மந்திரமாக இச் சொற்கள் மாற என்ன செய்ய வேண்டும்
நண்பா
உன் நெஞ்சில் கைகளை வைத்துக்கொள்ளத் தோன்றினால் வைத்துக்கொள், பீறிட்டு அழுகை வருகிறதா அதை அடக்காதே.
நாம் ஒரே குரலில் சேர்ந்து சொல்வோம்…
இக் கவிதையின் இயங்கு வெளியில் இருந்து அக்கவியின் பிடியை மீறி நிற்கும் இந்த ‘நாம்’ சற்றே ‘பெரிய நாம்’, காக்கையும் குருவியையும் எங்கள் சாதியாக காணும் நாம், நீள் மலையையும் கடலையும் எங்கள் கூட்டமாக காணும் நாம்
எல்லோரும்…
எல்லோரும்…
சற்று…
சற்று…
நிம்மதியாக….
நிம்மதியாக….
வாழும்…
வாழும்…
காலம் ஒன்று வரும்.
காலம் ஒன்று வரும்.
பொது மொழியில் திருப்பத் திரும்ப சொல்லி சாரமிழந்து போன சொற்றொடரை, அதன் களிம்பிலிருந்து புடம் போட்டு மீட்டு தனது தனி மொழியால் மந்திரம் என மாற்றி அந்த மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதால் நிகழும் மாயத்தை நிகழ்த்திக் காட்டும் கவிதை. சு ரா வின் சொற்களை மீண்டும் அதன் ஆதார உணர்வுக்கு மீட்ட கவிதை.
இந்த ரசவாதத்தை நிகழ்த்தியமை கொண்டே இக் கவிதயை சமகால தமிழ்க் கவிதைப் பரப்பில் முக்கியமான கவிதை என்று சொல்லத் துணிவேன்.
கடலூர் சீனு
புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பதிப்பகங்கள்/ஸ்டால்கள் அட்டவணைகள் குறிப்பிட்ட பதிப்பகத்தை எளிதாக கண்டுபிடிக்க உதவவில்லை. ஒரே வரிசை எண் இல்லை. கடைகளின் அளவை கொண்டு வெவ்வேறு எண் வரிசைகள். என்னை போன்ற பலரும் விசாரித்து தேடுவதைப் பார்த்தேன்.
கடைகளில் பார்வைக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்ட முறையும் வாசகர்களுக்கு உதவும் வகையில் இல்லை. எழுத்தாளர் பெயர் /புத்தகங்களின் பொருள் வாரியாக ஒழுங்கு செய்யப்படவில்லை. விற்பனையாளருக்கே புத்தகங்கள் தேடிக் கண்டுபிடிக்க கடினமாக இருந்தது.
“பொன்னியின் செல்வன்” மற்றும் பிற சரித்திர நாவல்கள் பல வடிவங்களில் பல கடைகளில் விற்பனைக்கு இருந்தன. தமிழர் வாசிப்பில் இவைதான் பிரதானம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
கி.ரா., யுவன், நிர்மல் வர்மா, விபூதிபூஷண் மற்றும் சில புத்தகங்களும் வாங்கியதும், முன்பே இருமுறை வாசித்திருந்தாலும் அன்பளிப்புக்காக “குமரித்துறைவி” இரண்டு பிரதிகள் வாங்கினேன். விற்பனையாளர் புத்தகம் எதைப்பற்றி என கேட்டார். சுருக்கமாக கூறினேன். கேட்கவே சிலிர்க்குது சார் என்றார். பிறகு. அவர் தங்களைப் பற்றி கூறி அவர் ஏன் சார் வெண்முரசு எழுதினார். அந்த நேரத்தில் பல நல்ல நாவல்கள் கதைகள் எழுதியிருக்கலாம் சார் என்றார். பதிலுக்கு சிறிய விளக்கம் மட்டும் கொடுத்துவிட்டு, கால் அசதி காரணமாக வெளியேறி வீடு வந்து சேர்ந்தேன்.
நோய் தொற்று குறைந்த இந்நிலையில் சென்னை புத்தக விழா நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புடன்
பா.ரவிச்சந்திரன்
சென்னை
அன்புள்ள ஜெ
சென்னை புத்தகக் கண்காட்சியில் பின்தொடரும் நிழலின் குரல், குமரித்துறைவி வாங்கினேன். பின்தொடரும் நிழலின் குரல் கடைசிநாள்தான் வந்தது. குமரித்துறைவி எல்லா கடைகளிலும் சுடச்சுட விற்கப்பட்டதைக் கண்டேன். இந்த ஆண்டின் ஹிட் புத்தகங்களில் ஒன்றாக குமரித்துறைவி இருக்கும் என நினைத்திருந்தேன். அதுவே நடந்தது.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நாயகன் புதுமைப்பித்தன்தான். நற்றிணை பதிப்பகம் புதுமைப்பித்தன் கதைகளை மலிவுப்பதிப்பாகக் கொண்டு வந்தது. அதற்கு முன்னரே சீர் வாசகர்வட்டம் வீ.அரசு பதிப்பாசிரியராக நூறுரூபாய் விலையில் புதுமைப்பித்தன் கதைகளைக் கொண்டுவந்தது. வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கையில் அந்நூல்கள் இருப்பதைக் கண்டேன். மிகச்சிறப்பான ஒரு முன்னெடுப்பு. புதுமைப்பித்தன் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு இப்படி ஒரு ‘ஹாட் கேக் சென்சேசன்’ ஆவது அற்புதமான விஷயம். வாங்கிச்செல்பவர்களில் பத்துக்கு ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தால்கூட ஒரு பெரிய மாற்றம்தான்.
மற்றபடி ஒருபக்கம் பெரியார் மறுபக்கம் சித்தர்கள் இன்னொருபக்கம் பதினெண்புராணங்கள் பகவத்கீதை என வழக்கம்போல விற்பனையாகும் நூல்கள் விற்றுக்கொண்டிருந்தன. புனைவுக்களியாட்டு நூல்கள் நன்றாக விற்றிருக்குமென நினைக்கிறேன். அறம் பத்தாண்டுகளாக எல்லா புத்தகக் கண்காட்சியிலும் பெஸ்ட் செல்லர்தான்.
முதற்கனல், குமரித்துறைவி எல்லாம் மலிவுப்பதிப்பாக போட்டு விரிவான வாசகர்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பது என் ஆசை.
ஆர்.ராஜாராம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


