Jeyamohan's Blog, page 812
March 14, 2022
ஈரோடு வாசகர் சந்திப்பு
ஈரோடு காஞ்சிகோயிலில் நண்பர் வி.எஸ்.செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் மார்ச் 5,6 ஆம் தேதிகளில் நடந்த விஷ்ணுபுரம் இளம் வாசகர் சந்திப்பு எத்தனையாவது என்று கிருஷ்ணன் என்னிடம் கேட்டார். என்னிடம் கணக்குகள் இல்லை. என்னுடைய தளத்திலிருக்கும் குறிப்புகளினூடாக எண்ணிக்கையைத் தொகுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்றிரண்டு குறித்து எழுதாமல் விட்டிருக்கலாம் எனும் ஐயம் உள்ளது.
2016 முதல் தொடர்ச்சியாக இச்சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் கலந்துகொண்டு இலக்கியம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். பெரும்பான்மையோர் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள்.பல புதியவாசகர் சந்திப்புக் குழுக்கள் அப்படியே விவாதக்குழுக்களாக ஆகி நீடிக்கின்றன.
இன்று இதன் பேசுபொருட்கள் ஓரளவுக்கு தெளிவடைந்துள்ளன. தொடக்கத்தில் இயல்பான ஒரு சந்திப்பாக அமையட்டும் என்று நினைத்தோம் .இன்று இதில் வலியுறுத்தப்படவேண்டியதென்ன என்பது ஓரளவுக்குத் திரண்டுள்ளது. இலக்கியம் எனும் லட்சியவாதத்தை குறித்தே முதன்மையாக பேசவேண்டியுள்ளது.
தற்கசப்பும் அவநம்பிக்கையும் கொண்டவர்கள் நிறைந்த இலக்கிய சூழலில் நின்றுகொண்டு இதைப்பேசுகிறோம். இலக்கியச் சூழலில் அவர்களுக்கான இடம் உண்டு எனினும் அவர்கள் ஒருபோதும் முதன்மைப்படைப்பாளிகள் அல்ல. முதன்மைப்படைப்பாளிகள் இவ்வுலகத்தின் மேல், இதுவரையும் இங்கு நிகழ்ந்த கருத்தியக்கத்தின் மேல் ,இலக்கிய மரபின்மேல் ஆழ்ந்த நம்பிக்கையை கொண்டவர்கள்.
இவ்வுலக வாழ்க்கை ஒன்றும் எளியதோ வரையறுக்கத்தக்கதோ அல்ல என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். அதன் அள்ள அள்ள விரியும் பிரம்மாண்டத்தையும் ,வரையறுக்க முடியாத உட்சிக்கலையும், ஒவ்வொரு முறையும் அறிபவனைத் தோற்கடிக்கும் அதன் விளையாட்டையும் பிறிதெவரைவிடவும் அறிந்திருப்பார்கள். எனினும் இங்கு அவர்களை செயல்பட வைப்பது அறிந்துவிட முடியும், கூறிவிட முடியும் எனும் நம்பிக்கையே. அறிந்து கூறியவற்றால் இவ்வுலகம் எவ்வகையிலோ தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது என்னும் உள்ளுணர்வே.
அதன் மேல் நின்றுகொண்டு தான் டால்ஸ்டாயோ, தாமஸ் மன்னோ, ஐசக் பாஷவிஸ் சிங்கரோ, சுந்தர ராமசாமியோ ,புதுமைப்பித்தனோ நம்மிடம் பேசுகிறார்கள். ஒளி என்றுமிருக்கும் என்ற புதுமைப்பித்தனின் வரிதான் அனைவரிடமும் உள்ளது. அதை அடுத்த தலைமுறை வாசகர்களிடம் கொண்டு செல்வதே இச்சந்திப்புகளின் முதன்மை நோக்கம்.
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான இடர்கள் தீவிர அறிவியக்கத்திற்கும், தீவிர இலக்கியத்திற்கும் உள்ளன. சென்ற காலகட்டத்தில் முழுப்புறக்கணிப்பு இங்கு இருந்தது.பேரிதழ்களில் உருவாகும் நட்சத்திர எழுத்தாளர்களை மட்டுமே தமிழகம் அறிந்திருந்தது. ஏழு லட்சம் பிரதிகள் குமுதம் அச்சிடப்பட்ட காலத்தில் இருநூறு பிரதிகள் எழுத்து அச்சிடப்பட்டது. கசடதபற முந்நூறு பிரதிகள்.அவற்றில் தான் இலக்கியம் வெளியானது. அன்று அந்தப் பேரலைக்குமுன் தன்னந்தனியாக நின்றிருக்கும் அகத்துணிவை எழுத்தாளர் ஈட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. புறக்கணிக்கப்படுதலால் தன்னுள் திரளும் கசப்பு தன்னை அழித்துவிடாமலிருக்க அவன் நம்பிக்கையின் கவசத்தை ஏந்திக்கொள்ள வேண்டியிருந்தது.
இன்று முற்றிலும் புதிய அறைகூவல் உருவாகியுள்ளது. இன்று இணையம் வழியாக, சமூக வலைத்தளங்கள் வழியாக, பொது ஊடகங்கள் வழியாக இலக்கிய எழுத்தாளன் மேலோட்டமாக அறியப்பட்டவனாக இருக்கிறான். அவன் மேல் வாசிப்பு குவிவதில்லை எனினும் அவனை பல்லாயிரம் பேர் அறிந்திருக்க வாய்ப்பு அமைகிறது. அவனைப்பற்றிய விவாதங்களில் அவனுடைய பெயர் மட்டுமோ, அல்லது ஓரிரு சொற்களோ மட்டுமோ அறிந்தவர்கள் தன்னம்பிக்கையுடன் ஊடாடி அவனைப்பற்றி பேசும் வாய்ப்பு அமைகிறது.
இணையத்தில் எந்த ஒரு எழுத்தாளனைப் பற்றி எந்த ஒரு விவாதத்திலும் அவனுடைய ஒரு படைப்பையேனும் படித்திராதவர்கள், படிக்கும் நோக்கம் இல்லாதவர்கள், எதையேனும் படித்து புரிந்துகொள்ளும் அடிப்படை அறிவுத்தகுதியோ ரசனையோ இல்லாதவர்கள், படிப்புக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் எல்லாம் வந்து பேசுகிறார்கள். சொல்லப்போனால் அவர்களே பத்துக்கு ஒன்பது பேர். அவர்கள் கட்சி, அரசியல், சாதி, மதம் சார்ந்து எளிதில் திரளக்கூடியவர்கள். இலக்கிய வாசகனுக்கு உரிய அடிப்படைத் தகுதியான தனித்து நின்றிருக்கும் துணிவும் திமிரும் அற்றவர்கள்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து எழுத்தாளனை வரையறை செய்கிறார்கள். பெரும்பான்மை நெறிகளின்படி அந்த எழுத்தாளன் அங்கே பொதுவாக மதிப்பிடப்படுகிறான். இன்று இவ்வண்ணம் ஒரு எழுத்தாளனை வரையறுக்க முடியும் என்னும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. நேற்று சி.சு.செல்லப்பாவை முற்றாகப் புறக்கணித்தவர்கள் இன்று என்றால் கும்பல்கூடி அவதூறு செய்து கூச்சலிட்டு வரையறை செய்து அவர் குரல் ஒலிக்காதபடி செய்துவிடுவார்கள்.
இவர்கள் ஒவ்வொரு எழுத்தாளனைப்பற்றியும் பொதுப்படையான சில வ்ரையறைகளை தங்கள் அரசியல் அடிப்படையில், அதிகார நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கி பொதுக்கும்பலுக்கு அளிக்கிறார்கள். இங்கு இன்று பெரும்பாலான எழுத்தாளர்களைப் பற்றி பொதுச்சூழலில் புழங்கும் வரையறைகள் இலக்கிய வாசகர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை என்பது விந்தையானது.
கநாசுவும் சுந்தர ராமசாமியும் உருவாக்கிய இலக்கிய வரையறைகள், அவற்றில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் போதாமைகள் ஆகியவற்றைப்பற்றி நாம் இன்னமும் பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் இலக்கியவாதி என்ன எழுதினான் என்றே தெரியாதவர்கள் தன் அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கிய வரையறைகளை இன்றைய இலக்கியவாதி சுமந்தலையக்கூடிய சூழல் இன்று வந்திருக்கிறது.
இன்று ஒரு இளம் எழுத்தாளன் எழுத வரும்போது அவன் இந்தப்பெரும் கூச்சலிடும் கும்பல் முன். சென்று நிற்கவேண்டியிருக்கிறது. தன்னுடைய சொந்தத் தேடல் சார்ந்தோ, ரசனை சார்ந்தோ அவன் ஒரு படைப்பை தேர்ந்தெடுக்க முடிவதில்லை. மாறாக சூழலின் அழுத்தம் சார்ந்து அவன் தேர்ந்தெடுக்கிறான். தன்னுடைய ஆளுமையை மறைத்துக்கொண்டு, தனக்கான அடையாளத்தை இச்சூழலிலிருந்து அவன் உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.
சிந்தனைச் சுதந்திரமே எழுத்தாளனை தன்னைக் கண்டடையச் செய்கிறது. இன்று இருபக்கமும் இரு பாறைகள் அழுத்துகின்றன. ஒருபக்கம் மத, சாதி வெறிகள். எழுத்தாளனை அவை உற்றுப்பார்க்கின்றன. ஒரு வார்த்தைகூட அவன் தங்களுக்கு எதிராக எழுதிவிடக்கூடாது, அப்படி தொனிக்கக்கூட கூடாது என வன்முறையை ஏந்தி அருகே நின்றிருக்கின்றன. மறுபக்கம், தாங்கள் உருவாக்கிய எளிமையான அரசியல்சரிநிலைகள் மற்றும் அரசியல்நிலைபாடுகளுடன் இன்னொரு தரப்பு. அவர்கள் தங்களை முற்போக்கு, திராவிட இனவாதம் (இனவாதம் முற்போக்காக இருக்கும் ஒரே நிலம் தமிழகம்தான் என நினைக்கிறேன்) கலகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். ‘இங்கே வந்து நின்று, நாங்கள் சொல்லும்படி எழுது, இல்லையேல் நீ அந்தத்தரப்பு’ என்கின்றன.
இருபக்கமும் யானைகள் நெரிக்கும் அழுத்தம் மிக்கச் சிறிய வெளி இன்று எழுதுபவனுக்குரியது. புகழ் இல்லை, பணம் அறவே இல்லை. ஆனால் காழ்ப்பும் கசப்பும் பலமடங்கு. எதிர்ப்புகள் சமாளிக்க முடியாத அளவு. நேற்று யாரென்றே தெரியாமல் எழுதிக்கொண்டிருந்த சிற்றிதழ் முன்னோடிகள் எல்லாம் மிகமிக நல்லூழ் கொண்டவர்கள் என்று தோன்றுகிறது.
இந்த கல்லாப்பெருஞ்சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதும், அதன் முன் எப்படி தனித்தன்மையை இழக்காமல் நிலைகொள்வது என்பதும், அதற்கான தன் முனைப்பை (ஆணவத்தை என்றே சொல்வேன்) எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதும், தொடர்ந்து செயல்படுவதற்கான நம்பிக்கையையும் தீவிரத்தையும் எப்படி திரட்டிக்கொள்வது என்பதும் குறித்தே இன்று பேசியாகவேண்டியிருக்கிறது. தீவிர இலக்கியவாதிகள் ‘நாம்’ என பேசவேண்டிய காலம் வந்துள்ளது. பார்வை மாறுபாடுகள், பலவகை போட்டிகளுக்கு அப்பால் நாம் ஒரு அறிவியக்க மையம் என உணர்ந்தாகவேண்டியிருக்கிறது.
இன்று உலகெங்கும் தீவிர இலக்கியமென்னும் சிறு வட்டம் கரைந்தழிந்து விற்பவை- விற்கப்படாதவை என்ற பிரிவினை வணிகச் சூழலால் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இணையத்தில் எத்தனை க்ளிக் என்பதே ஒரு படைப்பை தீர்மானிப்பதாக மாறியிருக்கிறது. இன்று போர்ஹேஸ் எழுதியிருந்தால் பதிமூன்று வாசகர்கள் மட்டுமே தன்னை வாசித்தார்கள் என்று அவர் அடையும் பெருமிதம் பொருளற்ற ஒன்றாக கருதப்பட்டிருக்கும்.
எழுது, எழுதிவிட்டு ஈஃபிள் கோபுரத்திலிருந்து குதி, உயிர் தப்பினால் புகழ்பெற்ற எழுத்தாளராவாய் என்று கேலியாக இலக்கிய விமர்சகர் ஒருவர் கூறிய சூழல் இன்று மெய்யாகவே அமைந்துவிட்டிருக்கிறது. சூழலின் புறக்கணிப்பிலிருந்து எழுந்து வந்துவிட்டோம், சூழலின் மேலோட்டமான கவனிப்பிலிருந்து தப்புவது எப்படி என்ற அறைகூவலை இன்று அடைந்திருக்கிறோம். அதற்கான உளநிலைகளை உருவாக்குவதற்காகவே இன்றைய சந்திப்புகள் தேவையாகின்றன.
இன்னொரு தளத்தில் விவாதம் என்பதே இயல்வதல்ல என்னும் சூழல் உருவாகியுள்ளது. எவரும் உலகம் அனைத்துடனும் நான் விவாதிக்கிறேன் என்று வந்து நிற்க முடியாது. தன் தரப்புக்கு நிகரான மறுதரப்புடன், தன் தரப்பை புரிந்துகொள்ளும் தகுதியும் அக்கறையும் கொண்ட மறுதரப்புடன் மட்டுமே எவரும் விவாதிக்க முடியும். ஆகவே என்று விவாதமென்னும் ஒன்று தொடங்கியதோ அன்று முதல் விவாதிப்பவன் தன்னுடன் விவாதிப்பவர்களை தானே வரையறை செய்துகொள்ள வேண்டிய நிலையே உள்ளது.
ஆனால் சமூக வலைதளங்கள் உலகிலுள்ள அனைவரிடமும் விவாதி என்று சொல்கின்றன. ஒருவன் மிகத்தீவிரமாக கற்று ஆராய்ந்து முன்வைக்கும் ஒரு கருத்தை எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், அவன் சொன்னவற்றையே முழுதும் கவனிக்காமல், ஒருவர் வந்து மறுத்து விவாதிக்க முடியும். அதிலிருந்து நான்கு வரிகளை வெட்டி எடுத்து தன் விருப்பப்படி பொருளளித்து பரப்ப முடியும். அனைத்து கருத்துக்களையும் தன் அரசியல் சாதி மதக்காழ்ப்புகளுக்கேற்ப திரிக்க முடியும்.
இலக்கியத்துக்கான விவாதம் தனித்தன்மை கொண்டது. இங்கே புறவயமான ஆதாரங்களை வைத்து விவாதிக்க முடியாது. புறவயமான தர்க்கம் கூட ஓரளவுக்குமேல் இயல்வதல்ல. எதையுமே ‘நிரூபிக்க’ முடியாது. இது தனிப்பட்ட ஆளுமைகளின் இயல்புகள், ரசனைகள், வாசிப்புப்புலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு செய்யவேண்டிய விவாதம். க.நா.சு அவர் முன்வைத்த எந்த நூலையும் ஏன் அது நல்லது என்று சொன்னதில்லை. அந்நூலை வாசித்தால் அவரையும் அவர் அதுவரை முன்வைத்த நூல்பரிந்துரைகளையும் அறிந்த வாசகன் அவர் ஏன் சொல்கிறார் என புரிந்துகொள்வான். அப்படித்தான் இலக்கிய விவாதம் நிகழமுடியும்.
இலக்கிய விவாதம் ஒருவர் சொல்வதை அவர் உத்தேசிப்பதென்ன என ஊகிக்கும் வல்லமை கொண்ட மறுதரப்பால் எதிர்கொள்ளப்படுகையில் மட்டுமே நிகழ்வது. பெரும்பாலான இலக்கிய வாசகர்கள் தங்கள் வாழ்வனுபவங்களையே வாசிப்புக்கான கருவியாகக் கொள்கிறார்கள். தங்கள் அகவயமான புரிதல்களையே முன்வைக்கிறார்கள். எண்ணி, தயங்கி, கோவையாக இல்லாமல் பேசுவார்கள் பலர். தனக்கே உரிய படிமங்களை பயன்படுத்துவார்கள் சிலர். அவர்களுடன் விவாதிக்க அவர்களை புரிந்துகொள்ளும் கூர்மை கொண்டவர்கள் மறுதரப்பில் இருக்கவேண்டும். அரசியல்விவாதத்தின் மூர்க்கம் ஒரு துளி வெளிவந்தால்கூட அங்கே இலக்கிய விவாதம் நிகழாது.
ஆனால் விவாதம் என்பது இலக்கியத்திற்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருந்தது. நான் எழுத வந்தபோது அன்றைய தலைமுறையின் தீவிர எழுத்தாளர் ஒவ்வொருவருடனும் தொடர்ந்த விவாதத்தில் இருந்தேன். கடிதங்கள் வழியாகவும் நேரிலும் அவ்விவாதங்கள் என்னை உருவாக்கின. இன்றைய வாசகனும் சரி, இளம் எழுத்தாளனும் சரி விவாதமே அற்றவனாக இருக்கிறார்கள். விவாதிப்பதற்கான மறுதரப்பை அவர்களால் கண்டடைய முடிவதில்லை. அவன் எதிரே கொந்தளித்துக்கொண்டிருப்பது எதையும் கவனிக்காமல், எதையும் பொருட்படுத்தாமல், தன் காழ்ப்புகளையும் கசப்புகளையும் சார்புகளையும் மட்டுமே கக்கி கொந்தளித்துக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பெருந்திரள். கண்ணற்ற காதற்ற மூக்கற்ற, நா மட்டுமே கொண்ட ஒரு ராட்சதப் பிண்டம்.
ஆகவே தனக்கான ஒரு சிறு வட்டத்தை அவன் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இணை உள்ளங்களை கண்டடைய வேண்டியிருக்கிறது. அதன்பின் அந்த தளத்துக்கான நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி விவாதிக்க வேண்டும். எப்படி சொல்லப்படுவதை கவனிக்க வேண்டும் எதை முன்வைக்க வேண்டும் எப்படி அதை நிறுவவேண்டும் என்பதை இந்த சூழலுக்காக மீண்டும் நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
வாதத்துக்கான இந்த விதிமுறைகள் உருவாகி இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியிருக்கலாம். இன்றிருக்கும் இந்த சூழல் எக்காலத்திலும் உருவானதில்லை. இதற்காக நாம் அவற்றை கூர்மைப்படுத்தி தொகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றுக்காகவே இந்த சந்திப்புகள் இன்று உதவுகின்றன. இளம் எழுத்தாளர் கொண்டு வந்த படைப்புகளை செம்மைப்படுத்தும் நோக்கத்துடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, குறைகளை வென்ற பிற படைப்புகளை கூறி அவர்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் விவாதங்கள் அமைந்திருந்தன.
இந்த விவாதங்களின்போது நான் உணரும் நிறைவென்பது நானே மறந்து போன கதைகளை இந்த எழுதிக்கொண்டு வரப்படும் கதைகள் நினைவூட்டி சொல்ல வைக்கின்றன என்பது தான். மனிதன் கதைக்கருக்களை சிறு சிறு வேறுபாடுகளுடன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறான் என்ற பிரக்ஞையை நான் அடைந்தேன். அத்துடன் இரண்டு நாட்கள் எழுந்து வரும் புதிய தலைமுறையுடனான உறவுகள் அவை அளிக்கும் புதிய நம்பிக்கையும் ஊக்கமும் இவை மிக முக்கியமான வரலாற்றுப் பங்களிப்புகள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.
குமுதம் ஏழு லட்சம் பிரதிகள் விற்ற போது இருநூறு பிரதிகள் எழுத்து விற்றது .இன்று தேடும் போது குமுதத்தில் எழுதிய எழுத்தாளர்கள், அது பேசிய விஷயங்கள் எதைப்பற்றியும் எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. துமிலன் என்ற ஒரு எழுத்தாளர் இருந்தார், அவருடைய இயற்பெயரென்ன என்று பல நாட்களாக தேடி என்னால் கண்டடைய முடியவில்லை ஆனால் எழுத்து இதழின் ஒவ்வொரு பக்கமும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பலகோணங்களில்பலர் பதிவு செய்திருக்கிறார்கள். எழுத்து இதழ் அழியவில்லை ,அழியாது. தீவிர இலக்கியத்தின் இயல்பு அது.
தீவிர இலக்கியம் தன் பரப்பால் அல்ல, தீவிரத்தால் நிலைகொள்வது. உயர் அழுத்தம் திகழும் புள்ளி அது. ஓர் இசைத்தட்டின் எல்லாப்பக்கங்களிலும் பாடல் இருந்தாலும் அதை தூக்கிச் சுழற்றுவது மையத்திலிருக்கும் அந்த மையப்பிடிப்புதான். தீவிர இலக்கியம் என்பது அந்த மையப்பிடிப்பு மட்டும்தான் .மொத்த செயல்பாடையும் சுழலவைக்கும் விசை அங்குதான் உள்ளது. அங்கு திகழ்வது எப்படி, அதன் பயன்கள் என்ன என்று வலியுறுத்தவே இச்சந்திப்புகள்.
எஸ்.வி.ராஜதுரை,விடியல் சிவா, மற்றும்…கடிதம்
அன்புள்ள ஜெ
எஸ்.வி.ராஜதுரை விஷயம் முடிந்ததைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அது அப்படித்தான் முடியும். அதைப்பற்றி சட்டம் தெரிந்தவர்கள் அப்படி மட்டுமே சொல்வார்கள். எஸ்.வி.ஆர் எந்த டாக்குமெண்டையும் நீதிமன்றத்தில் வைக்க முடியாது. உங்கள் தரப்பில் அச்சிடப்பட்ட நூல்கள் உண்டு. எல்லாமே கோர்ட்டில் பதிவாகவும் வாய்ப்புண்டு. WAC அமைப்பையே நீதிமன்றத்துக்கு இழுக்கமுடியும். எஸ்.வி.ஆர் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார் என்றுதான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இன்று அவர் தனித்துவிடப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த வழக்கு தொடங்கியபோது ஒரு கும்பல் அவருடன் இருந்தது. அவர்கள் நீங்கள் ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வதாக நினைத்தார்கள். இப்போது நான் நினைத்துக்கொள்வது என் நண்பர் விடியல் சிவா மறைந்தபோது அவர் உங்களுக்கு அனுப்பியதாக வெளிவந்த போலிக் கடிதம் பற்றித்தான். விடியல் சிவா எஸ்.வி.ராஜதுரைக்கு ஆதரவாக மிகமிகக் கடுமையாக உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அவர் உங்கள் நண்பர் என்பதனால் நீங்கள் அதிர்ச்சி அடைந்து பதில் எழுதினீர்கள். அதற்கும் ஒரு பதில் வந்தது.
ஆனால் கொஞ்சநாள் கழித்து இலங்கையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், இந்த எந்த விஷயத்துக்கும் சம்பந்தப்படாதவர், வேறு எதையோ எழுதும்போது அந்த கடிதம் விடியல் சிவா எழுதியது அல்ல என்றும் அப்படி தன் பெயரில் வேறு ஆட்கள் கடிதம் எழுதியது சிவாவை வருந்தச் செய்தது என்றும் அப்போது அவர் மிக வலியுடன் மரணப்படுக்கையில் இருந்தார் என்றும் எழுதியிருந்தார். விடியல் சிவா மறைவுக்குப்பின் விடியல் பதிப்பகத்தை கைப்பற்றிக்கொண்டவர்கள் செய்தது அந்த மோசடி. விடியல் பதிப்பக உரிமை பற்றிய சர்ச்சையில் இந்த விவாதம் வெளிவந்தது
நீங்கள் விரிவாக அதை உங்கள் தளத்தில் பதிவிட்டிருந்தீர்கள். பலர் அதைப்பற்றி கேட்டார்கள். எஸ்.வி.ராஜதுரையோ, அவர் சார்ந்தவர்களோ ஒரு வார்த்தைகூட பதில் சொல்லவில்லை. அப்படியே அமைதியாக இருந்துவிட்டார்கள். திருடனுக்கு தேள் கொட்டிய கதை. நானே சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டேன். அது ஒரு சின்னப்பையன் ஆர்வக்கோளாறில் செய்தது என்று சமாளித்தார்கள்.
அந்தக்கூட்டமே இன்றில்லை. அப்படியே கலைந்துபோய் திமுகவில் பாதிப்பேர் இருக்கிறார்கள். பாதிப்பேர் ஆளே காணாமலாகிவிட்டார்கள். அவர்கள்தான் உசுப்பேற்றி சிக்கலில் எஸ்.வி.ஆரை கொண்டுபோய் விட்டவர்கள். அவர்கள்தான் அந்த வக்கீலிடமும் பேசியவர்கள். எஸ்.வி.ஆர் உங்களிடம் சமரசமாகப்போக அனுமதிக்காதவர்கள். நீங்கள் அந்த வக்கீலை மட்டும் குற்றம் சொல்வது சரி கிடையாது.
எஸ்
அன்புள்ள எஸ்,
உண்மை. எனக்கு விடியல் சார்பாக வந்த கடிதம் ஒரு சின்ன தகவல்பிழையை பெரிய தர்க்கப்பிழையாக கட்டமைத்து என் தரப்பு மொத்தமாக பிழை, மொத்தமாக நான் சொல்வது மோசடி என காட்டும் வழக்கமான இடதுசாரி விவாதத்தந்திரம். எஸ்.வி.ராஜதுரை ஈவேரா பற்றிய ஒரே ஆய்வை ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களாக எழுதினார். ஆங்கில நூலில் அதற்கு நிதியுதவி செய்த கிறிஸ்தவ நிறுவனமான WAC க்கு நன்றி சொல்லப்பட்டிருந்தது. நான் அக்குறிப்பு தமிழ் நூலில் இருந்ததாகச் சொல்லிவிட்டேன். பின்னர் திருத்திக்கொண்டேன். அந்தக் குறிப்பு தமிழில் நூலில் இல்லை. அந்த நினைவுப்பிழையை ஒரு மாபெரும் மோசடி என்றும், ஆங்கிலநூல் தமிழ்நூலின் மொழிபெயர்ப்பு அல்ல, அது தனியாக எழுதப்பட்ட வேறு நூல் என்றும் பலவாறாக வாதிட்டு எழுதப்பட்ட கடிதம் எஸ்.வி.ராஜதுரை பற்றிய புகழ்மொழிகள் நிறைந்ததாக இருந்தது.
சிவா அப்படி எழுதுபவர் அல்ல. அவருக்கு அவ்வகை தர்க்கம் மேல் ஏளனமும் இருந்தது. மேலும் அவர் மிகமிக நோயுற்றிருப்பதாக வசந்தகுமார் சொல்லிக்கொண்டும் இருந்தார். சொல்லப்போனால் அவருடைய மரணச்செய்தி எக்கணமும் வரும் என சொன்னார். ஆகவே இக்கடிதம் அவர் எழுதியதா என எனக்கே திகைப்பு. சரி, அவர் எழுதியதாகவே கொள்வோம் என நினைத்தேன். நான் பதில் எழுதியபோதே நண்பர்கள் அழைத்து அதற்கும் சிவாவுக்கும் சம்பந்தமில்லை என்றனர். ஆகவே மேலே பேசவில்லை. ஆனால் பின்னர் இணையதளத்திலேயே சிவாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் அதை தற்செயலாக பதிவுசெய்தார். வேறு சில கட்டுரைகளிலும் குறிப்பிட்டார். ஆகவே நான் அந்த செய்தியை பதிவுசெய்தேன். ஏனென்றால் சிவா எனக்கு எழுதியதாக அனுப்பப்பட்ட மோசடிக் கடிதத்தில் அவர் எனக்கு ‘என் பிணத்தைக்கூட நீங்கள் பார்க்க வரக்கூடாது’ என சாபம் போட்டிருந்தார். மூன்றுமாதம் முன்புகூட தாந்தேயின் டிவைன் காமெடி மொழியாக்க நூலை அனுப்பி கடிதம் எழுதியவர். ஆகவே அந்த மோசடியின் உண்மை பதிவாகவேண்டும் என நினைத்தேன். மற்றபடி அதனுடன் நான் எஸ்.வி.ராஜதுரையை சம்பந்தப்படுத்தவில்லை. அல்லது அதற்கு எனக்கு மனமில்லை
ஜெ
கரும்பனைமீது காற்று
பின்தொடரும் நிழலின் குரல் பலவகையான நினைவுகளைக் கிளர்த்துகிறது. மனஓசைக் காலம் முதலே நமக்கிடையே அறிமுகம் உண்டு. இளந்தென்றலுடன் ஈரோட்டில் முதல்முறை சந்தித்தோம். நினைவிருக்குமென நினைக்கிறேன்
பின்தொடரும் நிழலின் குரலின் அட்டை என்னை பெருமூச்சுவிட வைக்கிறது. கண்ணீர் வருமளவுக்கு ஒரு தனிமையை உணர்கிறேன். எவ்வளவு நண்பர்களின் முகங்கள். எவ்வளவு ஆவேசமான உரையாடல்கள். தூக்கமற்ற ராத்திரிகள்.
அன்றைக்கு ஒருமுறை அந்நாவல் பற்றி தோழர் மருதையனிடம் பேசினேன். அப்போது அவர் அந்நாவலில் கே.கே.எம் தூக்கிவீசப்படுவதும், அவர் குருவாயூரப்பன் பக்திக்குச் செல்வதும் வன்மத்துடன் சொல்லப்பட்டிருப்பதாக ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொண்டார். இன்றைக்கு அவர் கே.கே.எம். இருந்த அதே நிலையில் இருப்பதை நினைத்தால் நெஞ்சில் ஒரு நடுக்கம். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் அதையெல்லாம் கற்பனை செய்து எழுதினீர்களா அல்லது ஒரு கலைஞனின் சாபம்போல அதெல்லாம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.
நான் உங்களைச் சந்தித்து கே.கே.எம் பற்றி கேட்டேன். நீங்கள் கே.ஆர்.கௌரியம்மா எப்படி கிருஷ்ணபக்தையாக ஆனார் என்று சொன்னீர்கள். சிலகாலம் கழித்து டபிள்யூ.ஆர்.வரதராஜன் தற்கொலை செய்துகொண்டார். அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு. அப்படியே அவரை மறந்தும்விட்டார்கள்.
பின்தொடரும் நிழலின் குரல் எப்படி அச்சுஅசலாக அப்படியே திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்று பார்க்கையில் சோர்வும் தனிமையும் ஏற்படுகிறது. ஒரு நண்பரிடம் பேசும்போது அவர் வழக்கமான வசைகளைக் கொட்டினார். நான் சொன்னேன். தோழர், சும்மா ஒரு ஸ்போர்ட்ஸ் மாதிரி கட்சியரசியலை எடுத்துக்கொண்டு நிலைபாடுகளை கக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. அவர்களால் இப்படிப்பேசமுடியும். அவர்களுக்கு பின்தொடரும் நிழலின் குரல் புரியாது. ஆனால் தோழர் டபிள்யூ.ஆர்.வரதராசன் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்தார் என்றால் அவருக்குத் தெரியும். அவர் கடைசிநாட்களில் ஒருமுறையாவது நினைத்துப் பார்த்திருப்பார். தோழர் மறுபடி கத்த ஆரம்பித்தார். என்னவென்று சொல்வது. சிரித்துவைத்தேன்.
இன்றைக்கும் அந்நாவலின் பக்கங்கள் மறக்கவில்லை. கரும்பனைமீது காற்று என்று ஒரு அத்தியாயம். அந்த வரியே என்னை சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது பத்தாண்டுகளுக்கு முன்பு. மண்டை உறுமிக்கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என அறிந்தேன். இப்போது காற்று நின்றுவிட்டது. ஆனால் இந்நாவலை மறுபடி படிக்க மாட்டேன். மறுபடியும் எல்லாவற்றையும் எண்ணி எண்ணி கணக்கிட ஆரம்பித்துவிடுவேன்.
ஆர்
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
vishnupurampublishing@gmail.com
https://www.vishnupurampublications.com/
மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்
அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு
கதையும் புனைவும்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
சில வருட இடைவெளியில் அவ்வப்போது கலை இலக்கியக் கோட்பாடுகளின் அதன் வகை பேதங்களின் அடிப்படைகளை, அவற்றின் மேலதிக சமகால வளர்ச்சிகளை மீண்டும் வாசிப்பதில் சில நடைமுறைப் பயன்கள் உண்டு என்பதை அனுபவித்திருக்கிறேன். வாசிப்பின் வழியே நம் அகரீதியாக அருவமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிணாமகதியை திட்டவட்டப்படுத்திக்கொள்ள முடியும். மெய்காண் முறைகளில் ஒன்றாக விவேக ஞானத்தை அளிக்கும் ஒன்றாக இருக்கும் இலக்கியத்தில் நாம் செல்லும் திசைவழியை அதுவரை வாசித்தும் விவாதித்தும் நாம் வந்து சேர்ந்திருக்கும் தொலைவை அது இன்னும் துல்லியம் செய்யும். அந்த வரிசையில் நான் அண்மையில் வாசித்த நூல் புனைவாக்கப் பின்புலங்கள் குறித்து த. ராஜன் அவர்களுடன் எழுத்தாளர் பா. வெங்கடேசன் அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் எழுத்து வடிவான -கதையும் புனைவும் – எனும் நூல் (எதிர் வெளியீடு).
எது இலக்கியம்?. ஏன் இலக்கியத்தை வாசிக்கவேண்டும்?. எது இலக்கியம் அல்லாதது? இந்த அடிப்படைக் கேள்விகள் எல்லாம் எனக்குள் துளிர்த்து வளர்ந்து அலைக்கழித்தது ஜெயகாந்தனும் ஜெயமோகனும் அறிமுகமான பிறகுதான். கற்பனைக்குத் தீனி எனும் வகையில் வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்த நான் பாலகுமாரனை வந்தடைகையில் இதுவரை வாசித்தது எல்லாம் இங்கே வந்து சேரத்தான் என்பதைப்போல உணர்ந்து மிகுந்த பரவசம் கொண்டேன். நீங்கள் கதைகள் வாசித்துப் பொழுது போக்கிக்கொண்டு இருக்கவில்லை, மாறாக என்னிடம் கதைகளின் வடிவில் ‘வாழ்கையைப் பயின்று’ கொண்டிருக்கிறீர்கள் என்று பாலகுமாரன் சொன்னார். நம்பினேன். தீவிரமாக அவரை வாசித்துத் தள்ளிக்கொண்டிருக்கயில் ஜெயகாந்தன் குறுக்கே வந்தார். பிடரியில் அறைந்து கனவிலிருந்து விழிக்க வைத்தார். அங்கிருந்து விஷ்ணுபுரம். அது தந்த அலைக்கழிப்பு அளப்பப்பரியது. அந்த தத்தளிப்புகள் ஊடே ஒரு வினா துளிர்த்து மெல்ல மெல்ல என்னுள் வளர்ந்து என்னை ஆட்டிப்படைத்தது.
அது இதுதான். அதுவரை வாசித்தவற்றை பாலகுமாரன் வந்து இல்லாமல் செய்தார். அதன் பிறகு வாசித்தவற்றை ஜெயகாந்தன் வந்து இல்லாமல் செய்தார். ஜெயகாந்தனுக்குப் பிறகு வாசிப்பவற்றை என்றேனும் வேறொரு எழுத்தாளர் வந்து இல்லாமல் செய்து விட்டால் உண்மையில் நான் செய்துகொண்டிருக்கும் இந்த வாசிப்பு எனும் செயல்பாட்டுக்கு என்னதான் இயல்பு? இப்போது வாசிப்பில் செல்லும் பாதையேனும் மெய்யானதா அல்லது இதுவும் கனவுதான் என்று சொல்லும் இன்னொரு எழுத்தாளரின் புனைவை வாசிக்க நேரும் வரை காத்திருக்க வேண்டுமா?
இந்த சூழலில்தான் ஏதோ ஒரு இதழில் விஷ்ணுபுரம் நாவலை ‘கட்டுடைத்து’ ‘கொட்டிக்கவிழ்த்தி’ எம்ஜி சுரேஷ் எழுதிய கட்டுரை ஒன்று வாசிக்கக் கிடைத்தது. கட்டுரை சரியாகப் புரியவில்லை. ஆனால் விஷ்ணுபுரம் வாசித்து ‘தப்பு’ செய்துவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது. எம்ஜி சுரேஷ் அறிமுக நூல்கள் வழியாகவே பின்நவீன கோட்பாடுகள் முதன்முறையாக எனக்கு அறிமுகம் ஆகின. (இன்றும் இக் கோட்பாடுகளை அறிமுகம் கொள்ள நல்ல நூல்கள்தாம் அவை)
மெய்யாகவே அதன் கோட்பாட்டு அலகுகளை ஒன்று இரண்டு என்று எண்ணிட்டு குறி குறிப்பான் குறிப்பீடு என்றெல்லாம் கையால் எழுதி எடுத்து உள்வாங்கினேன். ஒருமாதிரி சாமாளித்துவிட முடியும் என்று தோன்றிய பிறகு பின்நவீன புனைவுகளுக்குள் இறங்கினேன். அன்றைய தமிழவன் எழுதிய ஜி கே எழுதிய மர்ம நாவல் துவங்கி எம்ஜி சுரேஷ், சாருநிவேதிதா, பிரேம் ரமேஷ், கோணங்கி, போன்றவர்கள் புனைவுகள் தொடர்ந்து, இன்றைய தூயன் எழுதிய கதீட்ரல் வரை அந்த பின்நவீன அழகியலுக்குள் இன்றுவரை தொடருகிறது வண்ண பேதங்கள். நவீன தமிழ் இலக்கிய ஓடைகளில் இந்த பின்நவீன அழகியல் ஓடையின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான தாண்டவராயன் கதை, வாராணசி போன்ற நாவல்களின் ஆசிரியரான பா.வெங்கடேசன், பொதுவாக புனைவும் அதன் உருவாக்கப் பின்புலங்களும் சார்ந்த அடிப்படைகளை குறித்துப் பேசிய நூலே -கதையும் புனைவும்-.
புனைவும் கற்பனையும், புனைவுச் செயல்பாடு, வாசிப்பும் அரசியலும் என்ற பகுப்புகளின் கீழ் உரையாடல் நிகழும் இந்தச் சிறு நூலை சுவாரஸ்யம் குன்றாத வசிப்பனுபவம் வழங்கும் ஒன்றாக ஆக்கும் அம்சங்ம் இப்பகுப்புகளின் கீழே பேசியது வறட்டுக் கோட்பாட்டாளர் அல்ல ஒரு புனைவாளர் என்பது. நூலுக்குள் பேசப்பட்டவை யாவும் புதியவை அல்ல என்று அவரே இறுதியில் சொன்னாலும் பேசப்பட்டவை அனைத்தையும் புத்தம் புதியதைப்போல உணரச்செய்த வகையில் பா வெ ஒரு சுவாரஸ்யமான உரையாடல்காரர் என்பது இந்நூல் வழி புலனாகிறது.
புனைவுக்கும் கற்பனைக்குமான உறவில் துவங்கி, கற்பனையின் அடித்தளம், கற்பனைக்கும் அனுபவுத்துக்குமான தொடர்பு, மொழியில் அதன் வெளிப்பாடு, மொழி எனும் இருப்பு, கவிதைக்கும் அனுபவுத்துக்குமான தொடர்பு, கதைக்கும் புனைவுக்குமான வேறுபாடு, புனைவுகளுக்குள் தொழிற்படும் தன்னிலை காலம் வெளி, கருத்தியல் அரசியல், பிரச்சார கூறு, அழகியல், புனைவுகள் சித்தரித்துக் காட்டும் கனவு நிலைகள் என புனைவாக்கச் செயல்பாட்டின் பல பின்புலப் புள்ளிகளை தொட்டு விரியும் இந்த முக்கிய உரையாடலை மேலும் சுவாரஸ்யம் கொள்ள வைப்பது தகுந்த இடங்களில் பா வெ தரும் உதாரணங்கள். கவிதைத் தொழில்நுட்பத்தின் அத்தனை அலகுகளையும் அழகிய கம்பராமாயணக் கவிதைகளின் வழியே விவரிக்கிறார். புனைவுகள் கையாளும் கனவு சித்தரிப்பில் விஷ்ணுபுரம் நாவல் வரை பல நாவல்களின் தருணங்களை உதாரணம் சொல்கிறார். இப்படி சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் முதல் முத்து நகுவின் சுளுந்தீ வரை பல புனைவுகள் கையாண்ட அழகியல் கூறுகளை பொருத்தமான உதாரணங்கள் எனக்கொண்டு உரையாடலை நகர்த்துகிறார் பா வெ.
இந்த நூலின் தனித்துவமான அம்சமாக நான் கருதுவது ஆசிரியர் பா வெ அவர்களின் கூர்மை. கோட்பாடு கொண்டு எந்த எல்லை வரை புனைவுச் செயல்பாட்டு முறைமைக்குள் ஊடுருவ வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். மர்மமழிப்பு போன்ற எல்லை மீறல்கள் இல்லை. அடுத்து பா வெ அவர்களின் நேர்நிலைப் பண்பு . நூல்நெடுக எங்கும் எதிர்நிலைப் பண்பே தொழிற்படவில்லை. மூன்றாவதாக கோட்பாடுகளை இயந்திரத்தனமாக அன்றி இலகுவாக அவர் அணுகும் நிலை. உதாரணமாக அங்கே மேற்கின் இலக்கிய சூழலில் பார்த் சொன்ன கோட்பாட்டை, மறுத்து அது எழுத்தாளனின் மரணம் எனும் நிலை அல்ல, இத்தனைக்குப் பிறகும் வாசகனால் தொடப்படாமல் எஞ்சும் எழுத்தாளன் எனும் நிலை என்று கிழக்கின் இலக்கிய சூழல் சொல்லக் கூடும் என்று உரையாடலின் ஒரு பகுதியில் சொல்கிறார்.
இப்படி இவற்றை எல்லாம் இந்த நூலின் பலம் என்று கொண்டால், இந்த நூலின் பலவீனம் என்பது முதலாவதாக இந்த உரையாடல் பின்புலமாக அமையும் கோட்பாட்டின் முக்கிய அலகுகளின் பழமை. உதாரணமாக பா.வெ மொழி என்பது சமூக உற்பத்தி என்கிறார். மொழி இன்றி அனுபவம் இல்லை என்கிறார். இவை எல்லாமே மேலை சூழலில் 1990 இல் பேசப்பட்ட நிலை. மொழியியலாளர் கையில் இருந்து மொழி சார்ந்த உரையாடல்கள் மூளை நரம்பியல் கைக்கு சென்று மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகள் எல்லாம் வளர்ந்து 20 வருடம் ஆகிறது. மூளை நரம்பியலில் இருந்து (FOXP2 மூளையில் மொழிக்கான பகுதிக்கான விதையாக அமையும் மரபணு) மரபணு அறிவியல் நோக்கி மொழி சார்ந்த உரையாடல்கள் கைமாறி மேலும் 10 வருடம் ஆகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கக் கூடும்.
இன்று இத்தனையோடும் முரண் இயக்கம் நிகழ்த்திய பிறகு மொழி என்பது சமுக உற்பத்திதான் என்று மீண்டும் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட பிறகே மேற்சொன்ன கூற்றுக்கு மதிப்பு. அதுவரை அது காலாவதியான ஒன்றே. இதன் தொடர்ச்சியே அடுத்த கூற்றும். நமது நியாண்டர்தால் மனிதனுக்கு உள்ளது போல புருவ மேடுகள் இல்லாமல் நமக்கு தட்டையாக பரிணமித்த காரணம் (ஒளிக்குப் பிறகே கண்கள் என்பதைப்போல) நாம் அடைந்த வியப்புதான் என்கிறது சமீபத்திய உடற்கூறு மானிடவியல் ஊகங்கள். வியப்பால் விரிந்து விரிந்து அசைந்த முகப் புருவத்தசைக்கு இயைபாக பரிணமித்திருக்கிறது நமது மண்டையோட்டின் புருவ மேடுகள். இப்படித் துவங்கி பல ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றை விஞ்சி வரும் வரை அதுவும் காலாவதிக் கூற்றே.
இரண்டாவதாக புனைவாக்க பலவீனங்களை புறந்தள்ளி இந்தக் கோட்பாடு வாசனை விரல் காட்டும் நிலை. கோணங்கி புனைவுகள் புரியவில்லை என்று ஒரு வாசகன் சொன்னால் அது கோணங்கி எழுத்தின் குறைபாடு அல்ல வாசகன் தனது புரிதல் நிலையில் பின்தங்கி இருப்பதன் குறைபாடு அது என்கிறது.
மூன்றாவதாக இத்தகு கோட்பாடுகள் கொண்டு புனைவுக்குள் ‘இல்லாத ஒன்றை’ இருப்பதாக நிறுவி விட முடிந்த வகைமை. உதாரணமாக உரையாடலில் சீரோ டிகிரி நாவல் குறித்து பா வெ கூறி இருப்பவை. அந்த நாவலின் தன்னிலை என்பது பல்வேறு சிதறுண்ட நான்கள். இறுதியில் நான் என்ற ஒன்றே இல்லை எனும் நிலையை நாவல் தொட்டு விடுகிறது என்கிறார்.இவர் சொல்லும் ஒழுங்கமைவு எதுவும் அந்த நாவலில் கிடையாது. அதில் இருப்பது வெறும் சிதறல் மட்டுமே.
இத்தகைய கோட்ப்பாடுகளின் ஆபத்து என்பது இதுதான் புனைவில் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அந்தப் புனைவை அதன் தகுதிக்கு சம்பந்தமே இல்லாத மேலான உயரத்தில் நிறுத்தி விட இக்கோட்பாடுகளால் இயலும்.
இந்த கோட்பாடுகள் கொண்ட அத்தனை பலவீனங்களுக்கும் அடிப்படை அதன் தாய் நிலத்தில் உள்ளது. எந்தத் ‘தத்துவார்த்த தவிப்பும்’ இன்றி அறிவு ஜீவிகளால் உருவாக்கப்பட்ட (தத்துவவாதிகள் பீடத்தில் வெறும் கோட்பாட்டுப் புரவாசல் வழியே வந்து அமர்ந்து கொண்டவரகள்) கோட்பாடுகள். அகடமிக் ஆளுமைகளால் மேஜையில் பேசிப் பேசி வளர்க்கப்பட்ட கோட்பாடுகள். அத்தனை சதுரங்க ஆட்டத் திறமைகளையும் 1996 இல் ஆலன் சோக்காலின் குவாண்டம் இயற்பியல் : அதன் மொழியியல் இருப்பும் சமூகப் பரிணாமமும் எனும் கட்டுரை வந்து முடித்து வைத்தது. பின்நவீன அறிவு ஜீவிகள் அது குறித்து பேசிப் பேசி மாய்ந்த பிறகு, சோகால் அது போலிக் கட்டுரை என்பதை வெளிப்படுத்தினார். இது அறிவுத் துறைக்கு எதிரான மோசடி என்று பின்நவீன அறிவு ஜீவிகள் கொதித்தனர். அப்போதைய நேர்காணல் ஒன்றில் சோகால் புன்னகையுடன் சொன்னார் “நான் யாரையும் மோசடி செய்யவில்லை உண்மையில் அங்கே ஒரு தீவிரத் தத்துவவாதியோ ஒரு தீவிரப் புனைவாளனோ எளிய வாசகனோ இருந்திருந்தால் அக்கட்டுரையின் தலைப்பைக் கொண்டே அது போலி என்று சொல்லி இருப்பார்.” அத்துடன் அங்கே மேலை சூழலில் வேலை முடிந்து திண்ணையை காலி செய்த கோட்பாடுத்தான் இங்கே தமிழ் நிலத்தில் வந்து குத்த வைக்கிறது. கோணங்கி முதலாக பலரை களப்பலி கொடுத்துவிட்டோம் அதற்கு. நீங்கள் போன இருள்வ மௌத்திகத்துக்கே நாங்களும் வருகிறோம் என்று பின்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள் இன்றைய பல இளம் படைப்பாளிகள். உறுதியான அழகான கச்சிதமான புத்தம் புதிய பல ஸ்பானர்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவை எதுவும் நட்டு முடுக்காது.
முடிவாக இவற்றுக்கு வெளியே, இந்த 2020 இல் இலக்கியத்துக்குள் நுழையும் ஒரு அறிமுக வாசகன் புனைவுக்கு வெளியே புனைவுகள் குறித்து ‘மேலதிகமாக’ அறிந்து கொள்ள அவன் தேறும் பல நூல்களில் ஒன்றாக இந்த கதையும் புனைவும் நூலையும் அவன் வாசிக்கலாம்.
கடலூர் சீனு
பத்துலட்சம் காலடிகள் -வாசிப்பு
இக்கதையை பாதி மட்டுமே வாசித்த நிலையில் வெறும் குடிமகன்களின் சம்பாஷனை என்று ஆர்வம் காட்டாமல் விட்டு விட்டேன். கதிர் அவர்களின் ஆலோசனைக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன்.
ஔசேப்பச்சன் பெயரே வித்தியாசமாக இருந்தது. (நமக்கு அபிஷேக்பச்சனை தான் தெரியும்.) நண்பர்களுடன் “ஆலாலோகுளிகா” என்று கூவியபடி காய்ச்சும் சாராயத்தின் மகிமையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். பேச்சு திசைமாறி பத்தேமாரி எனும் படகு பற்றி நீள்கிறது. மாப்பிள்ளைக் கலாசிகள் உள்ளூர் தச்சர்களிடம் இணைந்து பத்தேமாரிகளை செய்கிறார்கள். அதை சிறு பிழை இல்லாமல் கச்சிதமாக செய்து முடிக்க ஒரு கணக்கு உண்டாம். மாப்பிள்ளைகளின் சமூக அமைப்பு பற்றி சிலாகித்து கூறுகிறார். அதன் தொடர்ச்சியாக மங்களூர் ரயில் விபத்து பற்றி கூறி அதே காலகட்டத்தில் நடந்த ஒரு கொலையைச் பற்றி கூறுகிறார்.
இங்கே ஒரு சின்ன திருப்பம், அப்போது ஔசேப்பச்சன் க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி. இளைஞனின் கொலையைத் துப்பு துலக்கும் போது கிடைக்கும் சின்ன துருப்பை வைத்து எவ்வாறு கொலையின் முடிச்சை அவிழ்க்கிறார் என்பதை பற்றி நிறைய நண்பர்கள் கூறிவிட்டார்கள். இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு சில இடங்கள்.
பத்தேமாரி படகின் உறுதி, அனுபவ அறிவு மற்றும் எப்படி மரச்சட்டங்களை வைத்து வலிமையான கடல் அலைகளை எதிர்கொள்வது எப்படி என்ற கணக்கு அற்புதம்.
அடுத்து அரேபிய கட்டிட கலையின் சிறப்பு. பீஜப்பூர் கோல்கும்பாஸ் மசூதியின் வளைந்த கூரையைப் பற்றி குறிப்பிடுவது நேரில் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
மாப்பிள்ளை சமூகத்தின் தலைமை, தொழில் கூட்டமைப்பு மற்றும் துணை சாதி இப்படி பல விஷயங்களை அலசுகிறார் நம் ஆசிரியர்.
1988ல் நடைபெற்ற பெருமண் ரயில் விபத்து, பிற்பகுதியில் 60அடி ஆழத்தில் இருக்கும் 14 ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்த அப்துல்லா சாகிப் உதவியுடன் செயற்படுத்தும் விதத்தை கூறும் இடம் அற்புதம்.
பிறன் மனை நோக்கினால் வரும் அழிவை பற்றி நேரடியாக சொல்லாமல் சொல்கிறார் சீதையை கவர்ந்து சென்றது இராவணன் என்ற சொல்லாடல் மூலம்.
ராதாமணி முகமது ஹாசிம் என்ற இளைஞரின் செயலை கண்டிக்கிறாளே ஒழிய உள்ளுக்குள் அவனது தூய்மையான அன்பை எண்ணி ரசிக்கிறாள்.அவள் கண்களை கண்ட டிஎஸ்பி உணர்கிறார்”சில சமயங்களில் மனித மனதை நேருக்கு நேராக பார்த்து நாம் நடுங்கி விடுவோம்”, அவள் மரணநாள் வரை இனிமையாக நினைத்திருப்பேன் என்றுரைக்கிறாள்.
தவறு செய்தவன் தனது செல்ல மகன் என்றாலும் அறம் காக்கிறார் சாகிப், மனமும் கனக்கிறது இவ்வளவு பெரிய தண்டனை தேவையில்லை என்று. அறிவுரை கூறி நல்வழிப் படுத்தியிருக்கலாம்.
“தொடங்கி விட்டால் பின் நிறுத்தவே முடியாத தப்பு. என் காலத்தில் அது தொடங்காது என சாகிப் கூறிவிட்டு அரபிக் கடலின் ஆழத்தை பார்த்துக் கொண்டிருந்தார் என ஔசேப்பச்சன் கூறும் இடம் துயரம்.
இறுதியில் அப்துல்லா சாகிப் செய்தது சரியா என ஔசேப்பச்சன் மூலம் நம்மையும் வினவுகிறார் ஜெயமோகன் அவர்கள்
ப்ரியா
தொடர்புக்கு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
March 13, 2022
எஸ்.வி.ராஜதுரை வழக்கு, சில நடைமுறைகள் சில வினாக்கள்
ஆசிரியருக்கு,
உங்கள் மீது ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு திரு S.V. ராஜதுரை தொடுத்த பத்தாண்டுகளாக நீடித்து வந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை இவ்வழக்கில் நிகழ்ந்தது என்ன என உங்களுக்கு முழுமையாக தெரிவிக்கவும், உங்கள் வாசகர்களுக்காகவும் இந்த விளக்கமான கடிதம், கிட்டத்தட்ட இது ஒரு வெள்ளை அறிக்கை.
ஆனால் அதைவிட முக்கியமாக இவ்வழக்கை முன்வைத்து இந்தவகையான அவதூறு வழக்குகளை கையாளும் நம் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் கவனத்தில்கொள்ளாத, கவனத்தில் கொண்டே ஆகவேண்டிய சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..
2012 ஆம் ஆண்டு நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில் திரு S.V. ராஜதுரை அந்நிய நிதி பெற்று இந்திய தேசிய கலாச்சார எதிர்ப்பு கட்டுரைகளை எழுதுகிறார், புத்தகங்களை வெளியிடுகிறார் என கூறி இருந்தீர்கள் என்றும்; “கூலி” என்கிற பதத்தை பயன்படுத்தி இருந்தீர்கள் என்றும் குற்றம்சாட்டிய எஸ்.வி.ராஜதுரை உங்கள் கட்டுரை தன்னை அவமதித்து விட்டதாகச் சொல்லி முதலில் ஒரு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார். அந்த அறிவிப்பு ஒரு தொழில்புரியும் வழக்கறிஞர் வெட்கி தலைகுனியும் மொழியில் இருந்தது. இதுபோன்ற கொச்சையான ஒரு வழக்கறிஞர் அறிவிப்பை என் 22 ஆண்டு தொழில் அனுபவத்தில் பார்த்ததில்லை.
அதன் பின் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் எஸ்.வி.ராஜதுரை C.C.No.66/12 ல் ஒரு வழக்கு தொடுத்தார், அதில் மேற்சொன்ன அவதூறுக்காக உங்களை தண்டித்து அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் வெளியூரில் இருந்தால் சிறப்பு விசாரணை நடத்திய பின் தான் வழக்கை கோப்புக்கு எடுக்க வேண்டும் என குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தம் பிரிவு 202 கூறுகிறது. (இந்த பிரிவு பற்றி அடுத்த “அளவை” இதழில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஒரு கட்டுரை எழுதுகிறார்). இந்த வழக்கில் இந்த நடைமுறையை நீதிமன்றம் பின்பற்றவில்லை, ஆனால் கோப்புக்கு எடுத்தது. இது முதல் பிழை.
அடுத்தது இது போன்ற தனிப் புகாரில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 244 படி குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜர் ஆனவுடன் அவருக்கு வழக்கு நகல் அளிக்கப்படும். அதற்கு அடுத்த கட்டம் என்பது புகார்தாரர் ஆஜர் ஆகி தான் பாதிக்கப்பட்டதாகச் சொல்லி முறையிட்டு சாட்சியம் அளிக்க வேண்டும், அத்துடன் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் இது அடுத்த கட்ட விசாரணைக்கு உகந்தது என நீதிமன்றம் திருப்தியுறும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா என வினவும். அதன் பின்னர்தான் குற்றச்சாட்டு பதியப்படும். பிறகுதான் புகார்தாரரை குற்றம் சாட்டப்பட்டவர் குறுக்கு விசாரணை செய்யவார்.
ஆனால் உங்கள் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப் படாமல் நீங்கள் வழக்கு நகல் பெற்றவுடன் அங்கேயே குற்றச்சாட்டு பதியும் வினாவை தொடுக்க நீதிமன்றம் தயாரானது, ஓர் உத்தரவும் பிறபித்தது. இது இரண்டாவது பிழை. பின்னர் நம் ஆட்சேபத்தின் பேரில் இந்த உத்தரவை கைவிட்டு திரு எஸ்.வி.ராஜதுரையை விசாரிக்க உத்தரவிட்டது.
இதற்கு பின் இந்த வழக்கை விசாரணைக்கு முன்பே ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றம் சென்றீர்கள். உங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை, விசாரணையை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உங்கள் மனுவை தள்ளுபடி செய்தது. இது 2013 ல் நிகழ்ந்தது.
உச்சநீதிமன்ற ஆணைப்படி திரு எஸ்.வி.ராஜதுரை சாட்சியம் அளித்து உரிய ஆவணங்களை உரிய முறையில் வழங்கி வழக்கை நிலைநிறுத்த வேண்டும். முன்பே சொன்ன படி அதன்பின் தான் உங்கள் மீது குற்றச்சாட்டு பதிய முடியும். ஆனால் பல ஆண்டுகள் நீதிமன்றம் வராமல் தவிர்த்து வழக்கை இழுத்தடித்து 5 ஆண்டுகளுக்கு பின்பு ஒரே ஒரு நாள் சாட்சியம் அளிக்க வந்தார். ஆனால் உரிய சட்ட நடவடிக்கையை பின்பற்றாமல் ஆவணங்களை சமர்ப்பித்தார். நாம் ஒரு சென்னை உயர்நீதிமன்ற முன் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆட்சேபணை செய்தோம். நம் தரப்பை ஏற்றுக் கொண்ட ஊட்டி நீதிமன்றம் அவர் முன்வைத்த ஆவணங்களை ஏற்க மறுத்து விட்டது. திரு. எஸ்.வி.ராஜதுரை பாதி அளவில் சாட்சியத்தை நிறுத்திவிட்டு கால அவகாசம் கேட்டார், நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
அதன் பின் சில ஆண்டு சென்றது. பின்னர் உடல் நிலை சரியில்லை, தன்னால் நேரில் வர இயலாது, எனவே ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தன் வீட்டுக்கு வந்து எஞ்சிய சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என எஸ்.வி.ராஜதுரை மனு செய்தார். அதே சமயம் அவர் பொதுமேடையில் பேசிய நாளிதழ் புகைப்படத்தையும் செய்தியையும் இணைத்தும், அதுபோக குற்ற வழக்கில் வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க சட்டத்தில் இடமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற முன் தீர்ப்பை மேற்கோள் காட்டியும் எதிர்வாதம் செய்தோம். இதை ஏற்ற நீதிமன்றம் திரு எஸ்.வி.ராஜதுரையின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேற்கொண்டு எஞ்சிய சாட்சியத்தை அளிக்க திரு S.V. ராஜதுரை நேரில் வரவேண்டும். ஆனால் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சாக்குப் போக்கு சொல்லிவிட்டு 2021 ஆம் ஆண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் ஆகவே கோத்தகிரியில் இருந்து கொண்டே இணையம் வழி சாட்சியம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு மனு அளித்தார்.
இந்த மனுவை நமக்கு நகல் அளிக்காமல் நமக்குத் தெரியாமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், இதை நீதிமன்றம் ஏற்று மனுவை அனுமதித்தது. இது மூன்றாவது பிழை. நாம் இதை அறிந்து அதே நீதிமன்றத்தில் முறையிட்ட பின் அதே மனுவில் நம் எதிர்வாதத்தை தாக்கல் செய்ய அவகாசம் அளித்தது. இப்படி உத்தரவு பிறப்பித்த மனுவை அதே நீதிமன்றம் மீண்டும் கோப்புக்கு எடுக்க அதிகாரம் இல்லை, இருந்தும் இதை செய்தது, இது நான்காவது பிழை. பின்னர் நாம் எதிர் வாதத்தை தாக்கல் செய்தோம், ஆனாலும் பழைய உத்தரவை மீண்டும் பிறபித்து திரு. எஸ்.வி.ராஜதுரை அவர்களை இணையம் வழி எஞ்சிய சாட்சியம் அளிக்க அனுமதித்தது.
நான் கூறும் இந்த நான்கு பிழைகளும் அசாதாரணமானவை, இது வெவ்வேறு காலத்தில் மாறுதலாகி வந்த வெவ்வேறு நீதிபதிகளால் நிகழ்ந்தது. இதை இணையத்தில் ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற இணைய தளத்தில் C.C.66/2012 வழக்கில் காணலாம். உங்கள் தளத்தை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சில முக்கிய வழக்கறிஞர்கள் படிப்பதை அறிவேன். இது அவர்கள் கவனத்திற்கு.
இப்போது திரு எஸ்.வி.ராஜதுரை இணையம் வழி எஞ்சிய சாட்சியத்தை அளிக்க வேண்டும். இந்நிலையில் இதுவரை இப்படி இந்த வகை சாட்சியம் பதிவு செய்த அனுபவம் நீதிமன்றத்திற்கு குறைவு என்பதால் இந்த நடைமுறை பற்றி திரு எஸ்.வி.ராஜதுரையிடம் கேள்வி எழுப்பியது, நம்மிடமும் கேட்டது. நாம் இந்த வழக்கறிஞர் அறிவிப்பும் அவர் தாக்கல் செய்த புகாரும் அவதூறானது என்றும், அவர் சாட்சியத்திற்கு பிறகு அவர் மீது அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம் என்றும் கூறினோம், முந்தைய எதிர்வாதத்திலும் இதை கூறி இருந்தோம். இதற்கு சட்டத்தில் இடம் உண்டு.
மேலும் 6 மாதங்கள் அவகாசம் பெற்ற திருஎஸ்.வி.ராஜதுரை கடந்த 8.3.22 அன்று 10 ஆண்டுகளுக்குப் பின் வேறு வழியின்றி நேரில் வருகை தராமல் தன் வழக்கை திரும்பப்பெற மனு கொடுத்தார். இதை ஏற்ற நீதிமன்றம் உங்கள் மீது குற்றச்சாட்டு பதியாமலேயே இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஒரு வழக்கு 10 ஆண்டுகள் நீள்வது நான் இதுவரை காணாதது. இதுபோன்ற 4 அடிப்படை பிழைகளுடன் ஒரு கீழமை நீதிமன்றம் ஒரு வழக்கை நடத்துவதும் நான் இதுவரை காணாதது. இதுபோன்ற சகிக்க இயலாத கொச்சையான அவதூறான வழக்கறிஞர் அறிவிக்கையும் நான் இதுவரை காணாததுதான்.
இந்த வழக்கு நடந்த முறையில் உள்ள கவனப்பிழைகளும் சட்டப்பிழைகளும் நம் விவாதத்திற்கு உரியவை. மறுமுறை இவ்வண்ணம் நிகழலாகாது என்பதனால் இதை பதிவு செய்கிறேன். இதை சட்டநடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏ.எஸ்.கிருஷ்ணன்,
வழக்கறிஞர், ஈரோடு.
எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்
அம்மாவின் திருமணம்
இவ்வாண்டு நான் செல்லவேண்டும் என எண்ணியிருந்த திருவிழா இது. பல நண்பர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கோவிட் காரணமாக மூன்றாண்டுகளாக நடைபெறவில்லை. குமரித்துறைவி அமர்ந்த கோயில், ஆரல்வாய் மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழா. பழைய கதைகளின் படி இங்கே பங்குனியில் திருமணம். கிளம்பிச் சென்று மதுரையில் சித்திரையில் மீண்டும் திருமணம். இங்கே நடந்தது அசல், அங்கே நடப்பது மீண்டும் மகாராஜாவுக்காக நடந்த திருமணம். அங்கே திருமணம் நடக்கும்போது இங்கே மீண்டும் திருவிழா உண்டு.
20 ஆம் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது. 16 அல்லது 17 ஆம் தேதிகளில் சென்று வரவேண்டும் என எண்ணுகிறேன். இவ்வாண்டு மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கும் செல்லவேண்டும்.குமரித்துறைவி எப்போதோ நெஞ்சில் விழுந்த விதை. இப்போது தேவி அன்னை அல்ல மகள். போய்த்தான் ஆகவேண்டும்.
vishnupurampublishing@gmail.com
https://www.vishnupurampublications.com/
உ.வே.சா போற்றுதலுக்குரியவரா?
உ.வே.சா என்றறியப்பட்ட ‘உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்’ தமிழ்த் தாத்தா என்று பரவலாக அறியப்படுபவர். இன்று அவர் குறித்து இரண்டு தரப்பு உள்ளது. ஒன்று அவரைப் போற்றுபவர்கள், இரண்டு அவரைத் தூற்றுபவர்கள் அல்லது அதீதமாகப் போற்றப்படுகிறார் என்று குறைபடுவோர். இவ்விரு தரப்பிலும் அவர் பற்றிய ஞானமும் அவர் பணியின் சிறப்பும் அறியாதவர் தான் அதிகம். ஏன் என்று தெரியாமலே, செவி வழிச் செய்திகளை வைத்தே, போற்றுதலும் தூற்றுதலும் நடக்கிறது.
தமிழ்ப் பதிப்புத் துறையில் “ஆறுமுக நாவலர் அடித்தளம் அமைத்தார், சி.வை.தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார், உ.வே.சா கூரை வேய்ந்தார்” என்ற திரு.வி.கவின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி சுப.வீரபாண்டியன், “அடித்தளம் அமைத்தவர், சுவர் எழுப்பியவரை விட்டுவிட்டு கூரை வேய்ந்தவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார். பதிப்புலக வரலாற்றில் உ.வே.சாவுக்கு என்ன இடம் என்று பார்ப்போம்.
உ.வே.சா போற்றுதலுக்குரியவரா? ப. சரவணனின் உ.வே.சா பதிப்புகளின் சிறப்புஅறத்தின் எதிர்த்தரப்பு எது? -கடிதம்
அன்புள்ள ஜெ
அறம் கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மிக எளிமையாக எந்த ஒரு நேர்மையான மனமுள்ளவரையும் சென்று தொடும் கதைகள் இவை. இந்தக்கதைகளை நான் கேள்விப்பட்டு பத்து ஆண்டுகளாகின்றன. இதுவரை படிக்கத் தோன்றவில்லை. ஏனென்றால் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஓர் இடதுசாரிக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கே இந்தக்கதைகள் எல்லாமே வன்மத்துடன் எழுதப்பட்ட அவதூறுக்கதைகள், சாதிமேட்டிமையை முன்வைப்பவை, பிற்போக்கானவை என்று நாலைந்துபேர் ஆவேசமாக பேசினார்கள்.
அந்த அரங்கிலேயே ஒரு இளைஞர் அப்படி கதைகளில் இல்லையே என்று சொன்னார். அவரை பேசிப்பேசி ஓயவைத்தார்கள். நான் கதைகளை படிக்கவில்லை. ஆனால் அன்று பேசிய அந்த தோழர்களின் உணர்ச்சிகள் நிஜமானவை என்பதைக் கண்டேன். அவர்களில் ஒருவர் உண்மையிலேயே கண்ணீர் மல்கி அதைச் சொன்னார். ஆகவே என் மனசில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் இப்போதுதான் இந்த கதைகளை படிக்கிறேன். இந்தக்கதைகள் இப்படி அப்பட்டமாக இருக்கையில் எப்படி அந்த தோழர்களால் புரிந்துகொள்ள முடியாமலாயிற்று என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களில் ஒருவர் இன்றைக்கு கடும் பா.ம.க ஆதரவாளர். அவரிடம் இந்தக்கதைகளைப் பற்றி கேட்டேன். ’அப்ப மெய்யாகவே அப்டி தோணிச்சு சார்’ என்றார். பொய் அல்ல. உண்மையாகவே அப்படி தோன்றியிருக்கிறது.
அறம் என்பதற்கு நேர் எதிரான உணர்ச்சி என்றால் சுயநலம் அல்ல. இதேபோன்ற கருத்தியல் கண்மூடித்தனம்தான். அவர்களுக்கு எதுவுமே கண்ணில் படாது. எந்த தர்க்கமும் புரியாது. எந்த உணர்ச்சியும் புரியாது. ஆகவேதான் சகமனிதனின் சங்கை அறுக்கிறார்கள். இதில் இடது வலது எல்லாம் ஒன்றே. சகோதரனையே வெறுக்கிறார்கள். அறம் அவர்களுக்கு மட்டும்தான் கொஞ்சம்கூட புரியாது. அதை அவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது. எந்த சுயநலமிக்கும் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும். மூர்க்கமான கருத்தியல்நம்பிக்கை கொண்டவரிடம் அது இருக்காது. வாய்ப்பே இல்லை.
மிகமிக கொந்தளிப்பாக இதை எழுதுகிறேன். என்னவென்று சொல்லி முடிக்கவேண்டும் என தெரியவில்லை. இந்த நூலை பத்தாண்டுகள் வெறுத்ததற்காக ஜே.ஹேமச்சந்திரன் முதல் பூமேடை வரை அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்
முகுந்தராஜ்
திரு ஜெ,
அவர்களுக்கு நடந்து முடிந்த சென்னை புத்தக காட்சியில், அறம் கதையின் நாயகர் தொகுத்து ‘சகோதரர்கள் பதிப்பகம்’ வெளியிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பற்றிய அறிமுக நூல்களைப் பார்க்க நேர்ந்தது. பல மறு பதிப்புகள் கடந்து இன்னும் அவருடைய பெயரிலேயே வெளியிட்டு இருக்கிறார்கள். தற்சமயம் தமிழ் விக்கிக்காக ஆர்வலர்கள் தொகு க்கும் தகவல்கள் இணையம் எங்கும் கொட்டிக் கிடைக்கும் நிலையில் அக்காலத்தில் அவர் நூலகத்தில் பல மணி நேரம் இருந்து தகவல்கள் சேகரித்து இருக்கலாம். அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், தங்களுக்கு நன்றியும்.
அன்புடன் சேது வேலுமணி
சென்னை.
பத்துலட்சம் காலடிகள்- வாசிப்பு
ஜெயமோகன் எழுதிய இந்த சிறுகதை வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி இருந்த்து. ஒருபக்கம் பாராட்டுகளும் மறுபக்கம் சாதிபடிநிலையை கொண்டு கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அழகை குறை சொன்னதற்காக வசைகளுமாய் இச்சிறுகதை திரும்ப திரும்ப கண்களில் தென்பட்டது. அதனால்தான் முதலில் இச்சிறுகதையை அனைவரும் வாசித்து விவாதிக்க தேர்ந்தெடுத்தேன்.
கதைக்கரு:
நண்பர்களுடன் குடிக்கும் ஒரு போலிஸ் அதிகாரி தனது அனுபவத்தில் ஒரு கொலைவிசாரனை பற்றி பகிர்ந்து கொள்கிறார்
கதையோட்டம்:
எனக்கு நண்பர்கள் கேலியும் கிண்டலுமாக துவங்கவும் “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்” கதை நினைவுக்கு வந்தது. அதிலும் இப்படித்தான் நண்பர்கள் பேசி கொள்வது அருமையான கதையாக வந்திருக்கும். நான் வாசித்ததில் மிக முக்கியமானதொரு கொண்டாட்டமான சிறுகதை அது.
எப்போதும் போல கேரளத்து வாடை சற்று தூக்கலாகவே இருக்கும். ஜெமோ கதையில் அது எதிர்பார்த்ததுதான். நாகர்கோயில் பக்க எழுத்தாளர்களின் சிறப்பே அதுதான். முதலில் என்ன பேசுகிறார்கள், எதற்கு பேசுகிறார்கள் என்றே புரியாமல் வாசித்து கொஞ்ச நேரத்தில் தூக்கமே வந்து விட்டது, எழுந்து உட்கார்ந்து வாசிக்க வேண்டி இருந்தது.
கரையோரம் பிணம் ஒதுங்கியதில் இருந்து விறுவிறுப்பாக செல்ல துவங்கியது. மாப்பிள்ளாக்கள் பற்றி சுதந்திர போராட்ட வரலாறில் மிக குறைவாக படித்தது. அவர்கள் பற்றி குறிப்பாக அவர்களின் கட்டுப்பாடுகள் பற்றி சொன்னது சுவாரசியமாக இருந்தது.
அதிலும் அவர்களின் தனிச்சிறப்பான அந்த பத்தேமாரி கப்பல் படுசுவாரசியம்.
அப்படியே கதை ஒரு நடுத்தர குடும்பத்து பேரழகியிடம் வந்து நிற்கையில் ஓரளவு யூகிக்க முடிந்தது.
ஆனாலும் ஒரு இடம் அவ்வளவு துல்லியமாக இருந்த்து
அவள் கண்கள்! தோழர்களே, கதையெழுதும் பாதிமலையாளிப் பாண்டியே, ஒன்று தெரிந்துகொள். சிலசமயங்களில் மனித மனதை நேருக்குநேராகப் பார்த்து நாம் நடுங்கிவிடுவோம்.
திடிரென வெளிப்படும் மனித மனத்தின் நிர்வாணம் கொடுக்கும் அதிர்ச்சி இருக்கிறதே, எனக்கு அந்த அனுபவம் உண்டு.
இதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இறுதியாக ஒரு வரி வரும்
மச்சானே, அது ஒரு அபூர்வமான நாள். ஒருபோதும் வாழ்க்கையை அறிந்துகொள்ள முயலக்கூடாது என்று நமக்குத் தோன்றுமே அப்படிப்பட்ட ஒரு நாள் அது.
இந்த இரண்டு இடங்களுக்கு நடுவே கொலை வழக்கே விசாரித்து முடிந்து விடும். ஆனால் கதையின் மையச்சரடாக, என்னை டப்பென்று கழுத்தை பிடித்தது இந்த இரண்டு இடம்தான். கிட்டத்தட்ட இரண்டும் ஒரே விசயத்தைத்தான் சொல்லும்.
நாம் மனிதர்கள், மனிதர்களை பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்று, ஆனால் நமக்கு யாரையுமே முழுதாய் தெரியாது, இந்த உலகில் நீங்கள் 100% நம்பும் நபர்களை கூட உங்களுக்கு முழுதாய் தெரியாது, அவரிடமும் உங்களுக்கான ஏதேனும் ஒரு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கும். அதை எதிர்கொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது.
அப்படியே வந்து கதையின் இறுதியாக 1000 x 1000 = 10 லட்சம் காலடிகளில் வந்து தலைப்பில் நிறுத்தியது அட்டகாசம்.
கதையில் அனைவருக்கும் விமர்சிக்கும் பகுதி
சாதிப்படிநிலையின் கீழே செல்ல செல்ல கலப்பு குறைந்து அழகு குறையும்.
இக்கதையில் ஜெமோ சொல்ல வருவது, அரேபியர்களும் போர்ச்சுகீசியர்ரகளும் அரபி கடலோர பெண்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் வழியாக வம்சாவழியை உருவாக்காமல் இருந்ததால் அந்த நிறம் அவர்களின் தலைமுறைகளுக்கு இல்லை என்பதைத்தான்.
ஆனால் இதில் விமர்சிக்க வேண்டிய பகுதி வேறு இருக்கிறது. பிராமணர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம். அவர்களுக்கான பாதுகாப்பு. இந்து மதம் மட்டுமன்றி இஸ்லாமியர்களும் அவர்களின் ஆசிர்வாதத்தை கோருவது.
ஆனால் அதற்காக இது புறக்கணிக்கப்பட வேண்டிய கதையாக நான் சொல்லமாட்டேன். இது கெட்ட விசயமாக இருக்கலாம். ஆனால் இப்படித்தானே இருக்கிறது. அதை மறுக்க முடியாதே…என்னை பொறுத்த வரை நல்ல வாசிப்பனுபவம்தான்.
கதிரவன் ரத்னவேல்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்புJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


