Jeyamohan's Blog, page 820

February 27, 2022

அந்த ரோஜா- கடிதம்

 

அன்பு ஜெயமோகன்,

தன்னறம் விருது வழங்கும் நாளன்று நானும் வந்திருந்தேன். காலை பத்து மணிக்கு வந்தபோது குமார் சண்முகமும், மணவாளனும் எதிர்கொண்டனர். அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டோம். வெளியே நின்று டீ கேட்டுக் கொண்டிருந்த யாசகர் ஒருவருக்கும் குமார் சண்முகம் டீ சொன்னார்.

டாக்டர் ஜீவாவின் நினைவில்லத்துக்கு நாங்கள் வரும்போது விழா துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. உள்ளே வந்து நண்பர்களுடன் அமர்ந்து கொண்டோம். தேவிபாரதி, பார்ப்பதற்கு திருமண வரவேற்பு நிகழ்வின் புதுமாப்பிள்ளை போல இருந்தார். பற்றாக்குறைக்கு நீங்கள் அணிவித்த மாலை வேறு. புதுமாப்பிள்ளையேதான். விருது பெறும் நேரம், அவர் முகம் முழுக்க குதூகலம் நிரம்பிச் சொரிந்தது.

தேவிபாரதியின் கதைகளில் எனக்குப் பிடித்தது பிறகொரு இரவு. காந்தியைப் பற்றிய புனைவு என்பதாலேயே அதைப் படித்தேன். இன்றளவும் அது எனக்குப் பிடித்தமான ஒன்று. அவரின் ஆக்கங்களில் அக்கதையை மட்டுமே படித்திருக்கிறேன். சமீபமாய் தன்னறம் கொண்டு வந்திருந்த தொகுப்பின் வழியாகவே அவரின் முக்கியமான சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு. பல கதைகளின் ஆழத்தில் தென்பட்ட இருண்மையை அவரின் விருது உரையிலும் காண முடிந்தது. வாழ்வை கடுஞ்சலிப்புடன் நேர்கொண்டு களைத்திருந்த அவரின் உரையில்.. குரல் தடுமாற்றத்தை விட மனத்தடுமாற்றமே மிகுந்திருந்தது. இப்படியான ஒரு நிகழ்வில் பேசுவது அவரே ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். அப்படியான வாழ்வைத்தான் அவர் வாழ்ந்திருந்தார். இது என் வகையிலான ஊகம்.

தேவிபாரதியுடன் வந்திருந்த காலச்சுவடு கதிர்வேல் அண்ணனை நெடுநாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவரைச் சந்தித்து பல ஆண்டுகள் இருக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சி ஒன்றில் எனக்கு அறிமுகமானவர். அவரும் தேவிபாரதியும் ‘தலைமறைவாளர்களாக’ இருந்தவர்கள் என்பதைத் தேவிபாரதியின் ஆவணப்படம்(தன்னறம்) வழியே அறிந்து ஆச்சர்யப்பட்ட நிலையில், அவருடனான சந்திப்பு. அவரைக் காலச்சுவடு விற்பனை முகவராக மட்டுமே எனக்குத் தெரியும். அவரின் புரட்சி முகம் எனக்கு ஆச்சர்யம் அளித்த ஒன்று.

ஆயுதப்போராட்டம்தான் புரட்சிக்கான சரியான வழிமுறை எனத் தமிழகத்தில் ஒரு அலை உருவாகி இருந்த காலகட்டத்தை இன்றைய நவஇளைஞர்கள் கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. அக்காலகட்டப் பின்புலத்தைத் தனது சமீபத்திய நேர்காணலில் தோழர் தியாகு(சவுக்கு வலைக்காட்சியில்) புனைவைப்போல விவரித்திருப்பார். மிகச்சிறப்பான நேர்காணல். ’தோழர் புரட்சி சீக்கிரம் வந்திடும்.. நாம தயாரா இருக்கணும்” எனும் சகதோழர் தன்னிடம் சொல்லிக் கொண்டே இருந்ததைத் தியாகு பலமுறை குறிப்பிட்டுச் சிரிப்பார். அதைக்கொண்டு அப்போதைய புரட்சி இயக்கங்களின் உளநிலைத் தீவிரத்தை அனுமானிக்கலாம். ‘தலைமறைவு’ இயக்கங்களில் பங்குகொள்ள இளைஞர்கள் துடித்த காலகட்டம் அது. அக்காலச் சூழல் பற்றிய அனுபவங்களை தனது ஆவணப்படத்தில் தேவிபாரதி பகிர்ந்து கொண்டிருப்பார். அவை பற்றி கதிர்வேல் அண்ணனிடம் பேச நினைத்தேன். ஏனோ, பிறகு பேசிக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்.

புரட்சிக்குழுக்களில் இயங்கி வந்த பலரை நான் அவர்களின் முதுமைக்காலங்களில் சந்தித்திருக்கிறேன். அச்சந்திப்புகள் திட்டமிட்டு அமைந்தவை அல்ல. ஒருமுறை கவிஞர் புவியரசு அவர்கள் சொன்னதன் பேரில் புலவர் இராசியண்ணனைச் சந்தித்தேன். முருகவழிபாடு தொடர்பான பழைய நூல்களைத் தேடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருமணி நேரத்துக்கும் மேலாக என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார். அச்சந்திப்பு பற்றி நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டேன். அப்போதே அவர் ஆதி எனும் பெயரில் புரட்சிக்குழுக்களில் இயங்கி வந்தவர் எனத் தெரிய வந்தது. அவரைப் பற்றி மேலதிகமாய்த் தகவல்களை அறிந்து கொஞ்ச நாட்கள் திகைத்திருந்தேன். புரட்சி நமக்கு முந்தைய தலைமுறையினரை எவ்வாறு ஆட்டிப்படைத்திருக்கிறது என்பதைப் பல நூல்களாகக் கொண்டு வரலாம். யாராவது செய்வார்கள் என நம்புவோம்.

பால்யகாலத்தில் எனக்கு முன்னோடிகளாக அமைந்த பலரும் புரட்சி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என என்னிடத்தில் தொடர்ந்து சொல்லி வந்திருக்கின்றனர். புரட்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்கத் தயங்கக் கூடாது என வாய்கிழியக் கூவவும் செய்திருக்கின்றனர். அவர்களில் பலரின் வாழ்வைக் கடந்த இருபது வருடங்களாகக் கவனித்துப் பார்த்தேன். வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருக்க அவர்கள் விரும்புகின்றனர் எனப் புரிந்தது. இவர்களாலேயே போலி நாத்திகர்களும், போலிப்புரட்சியாளர்களும் உருவாகி இருக்கக்கூடும் என்றும் யோசிக்கத் தலைப்பட்டிருக்கிறேன். புரட்சிக்குழுக்களின் மீது உளப்பூர்வமாய் ஈர்ப்பு கொண்டு அதற்குத் தங்களை ஒப்பு கொடுத்த பலரின் வாழ்வு அவர்களுக்கு மேலும் சலிப்பையும் கசப்பையுமே அளித்து இருக்கிறது. அப்படியான அலுப்பையும் சலிப்பையுமே தேவிபாரதியிடம் நான் பார்த்தேன்.

உங்கள் உரையின்போது தஸ்தாயெவ்ஸ்கியைக் குறிப்பிட்டீர்கள். முழுக்க முழுக்க இருண்மையை எழுதியவனின் பாக்கெட்டில் இருந்த ரோஜாவையும் தொட்டுக் காட்டினீர்கள். அச்சமயத்தில் மார்க்ஸ் என் நினைவுக்கு வந்தார். கட்சி கம்யூனிசமும், புரட்சிகரக் குழுக்களும் அறிமுகப்படுத்தி இருந்த மார்க்ஸ் ஒரு புனிதப்புரட்சியாளர். அவரால் எல்லாம் முடியும். அவரில்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை. மார்க்ஸ் இல்லாவிட்டால் நாமெல்லாம் நாசமாகப் போய் இருப்போம். இப்படியான கருத்துப்பரவல்களால் மார்க்ஸை நான் தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். 1818-இல் இருந்து துவங்கும் அவர் வாழ்வின் தருணங்களை நானே தேடிக் கண்டடைந்த போது குறுகிப் போனேன். ஒரு தத்துவ மாணவனாக, இதழியலாளராக, களச்செயல்பாட்டாளராக.. அவரின் செயல்பாடுகளை விளங்கிக் கொண்டபோது நெகிழ்ந்து போனேன்.

மார்க்ஸை இந்நவீனகாலப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த கால-வெளியில் இணைத்தே நோக்க வேண்டும். நாம் அதைச் செய்யத் தவறவிடுகிறோம். அவரை நான் தேடிச்சென்ற போது இலண்டன் தெருக்களில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கண்டேன். வாடி வதங்கிய உடல்களாய் அவர்கள். எதற்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலே ஒரு சலிப்புச்சுழற்சியில் சிக்கிக் கொண்ட அவலம். வாழ்வுக்காகவே வாழ்வையே தொலைக்கும் அபத்தம். என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவுசெய்தேன். அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள். நம்மிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. அடைவதற்கு ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது” எனும் அக்குரல் மார்க்ஸ் அவர்களுடையது. அச்சமயத்தில் அக்குரல் இப்போது நமக்குச் சொல்லப்படுவது போன்ற சர்வாதிகாரப் புரட்சிக்குரல் அன்று; சகமானுடர்களின் அவலங்களைத் தீர்க்க முனையும் நம்பிக்கைக்குரல்.

தொழிலாளர்களிடம் நம்பிக்கையையும் கனவையும் விதைப்பது பகுத்தறிவுக்குத்தகுமா என உட்கார்ந்து விவாதித்துக்கொண்டிருக்கும் இன்றைய காம்ரேட்களை நோக்கி அவர் தனது குரலை எழுப்பவில்லை. தோழர் என்றால் என்னவென்று அர்த்தம் தெரியாத, தாங்கள் யாரென்று அறிய இயலாத ஒரு துயரச்சுழலில் சிக்கித்தவிக்கும் அன்றாடங்காய்ச்சிகளை நோக்கியே தனது குரலை மார்க்ஸ் எழுப்பினார். அக்குரலை எழுப்பும் சூழலில் மார்க்ஸின் வாழ்வும் துன்பத்திலேயே இருந்தது. கடுமையான வாழ்வுச் சிக்கல்களுக்கு நடுவே பொன்னுலகம் பற்றிய கனவை நம்பிக்கையாகத் தனது சகமனிதர்களிடம் பகிர்ந்து கொண்டவராகவே மார்க்ஸை நான் பார்த்தேன். அவரை வாசிக்கத் தலைப்பட்டிரா விட்டால், அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரோஜாவைப் பார்க்கத் தவறியவனாகி இருப்பேன். இன்றைக்கு, மார்க்ஸ் என் முன்னோடிகளில் மிக முக்கியமானவர். அவர் வாழ்வுச் சம்பவங்களைத் தொடர்ந்து நானாகத் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு புனைவாக்கத்தைப் போல பெருந்திகைப்புகளைக் கொண்டிருக்கிறது அவரின் வாழ்வு. இப்போதுதான் துவங்கி இருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது, வாசிக்க.

மூலதனம் எனும் பிரதியை ஒரு பொருளாதாரப்பிரதியாக அல்லது அரசியல் பிரதியாகவோதான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில், அது வரலாற்றுப் புனைவுப் பிரதி. சமகால முதலியப்(முதலாளித்துவம் எனும் பதமே தவறானது. முதலியம் அல்லது முதலீட்டியம் என்பதே சரி) போக்குகளை விளங்கிக் கொள்ள முற்பட்ட போது எழுந்த ஆக்கமே மூலதனம். அதன் அத்தியாயங்கள் மேம்போக்காக கணக்கியல், பொருளாதாரத் தரவுகளைக் கொண்டதாகவே புலப்படும். ஊன்றிக் கவனிக்கும் ஒருவருக்கு அதன் சாரமாய் அவர் முன்வைக்கும் மனித உறவுகள் மீதான அன்பும் நம்பிக்கையும் புலப்படும். ”மனிதர்களுக்கு இடையேயான உறவு எப்படி பொருட்களுக்கு இடையேயான உறவாகத் திரிபானது” என்பதற்கான வியாக்கியானமே மூலதனம். மார்க்சியத்தைக் கற்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்.

மார்க்ஸ் தொழிலாளர்கள் மட்டும் அந்நியப்பட்டிருப்பதாகச் சொல்லவில்லை. முதலாளிகளும் சந்தையால் அந்நியப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும், இருவருயுமே அந்நியப்படுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் என நினைக்கிறார். அதையே தனது நூல்களின் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். எஸ்.வி.ராஜதுரையின் அந்நியமாதல்(க்ரியா வெளியீடு) நூலை வாசகர்கள் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும். கட்சி மார்க்சியர்களால் குறுகித் தவித்த மார்க்சை விரிவாக்கி அளித்த பெருமை தமிழ்ச்சூழலில் ராஜதுரையைச் சாரும். ஜார்ஸ் தாம்சனின் மூன்று முக்கியமான நூல்களையும் எஸ்.வி.ஆர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, முதலாளித்துவமும் அதன் பிறகும் மற்றும் மனித சாரம் போன்ற அந்நூல்களை மார்க்சிய அடிப்படைகளைக் கண்டுகொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். எஸ்.வி.ஆரோடு கோ.கேசவன் மற்றும் தியாகு போன்றோரின் ஆக்கங்களும் மார்க்சியத்தை நுணுக்கிப் பார்க்க உதவும்.

மார்க்ஸ் 1818-ல் பிறந்து 1883-ல் மறைந்தார். அவருக்கு பின்பு பிறந்து(1821) முன்பே இறந்தார்(1881) தஸ்தாயெவ்ஸ்கி. இருவரின் வாழ்விலும் இருண்மைத் தருணங்களே அதிகம். அதற்காக அவர்கள் இருண்மையையே நமக்களித்து நம்மை மேலும் சோர்வடைய வைக்கவில்லை. அவர்கள் கையளித்த நம்பிக்கையைப் பகுத்தறிவு கொண்டு பார்க்கும்போது அவை காலாவதி ஆகி இருப்பதாகத் தோற்றம் தரலாம். இன்றைய நடைமுறைக்குப் பொருந்தாத ஒன்றாகவும் தெரியலாம். உள்ளுணர்வில் தரிசிக்கும் போது அவை என்றும் கையளிக்கப்பட வேண்டிய நம்பிக்கை ரோஜாவாகப் புலப்படும். இங்கு நம்பிக்கை என்பது அறிவு, அறியாமை எனும் இருசொற்களையும் கடந்த பதமாகும்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2022 10:31

February 26, 2022

எதற்கு இத்தனை நூல்கள்?

கருப்பங்கிளர் ராமசாமிப் புலவர் நிமிர்பவர்களின் உலகம்

ஒவ்வொரு முறை புத்தகக்  கண்காட்சி அறிவிக்கப்படும்போதும் வாட்ஸப்பில், முகநூல் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட வகை கிண்டல் பரவலாகிறது. ‘அச்சுத்தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு சரமாரியாக நூல்கள் வெளிவருகின்றன. கொத்துக்கொத்தாக நூல்களை வெளியிடுகிறார்கள். முன்பெல்லாம் யாரும் இவ்வளவு எழுதியதில்லை. அன்றெல்லாம் மிகக் கவனமாக பல ஆண்டுகளுக்கு ஒரு புத்தகம்தான் எழுதினார்கள். இப்போது எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வெளிவருகின்றன.ஆகவே புத்தகக் கண்காட்சியில் தேவையற்ற நூல்கள் குவிந்துகிடக்கின்றன. வெளியாகும் நூல்களில் பெரும்பாலானவை குப்பைகள்தான். இது ஒரு அறிவுலகச் சிக்கல்’

இதைச் சொல்பவர் பெரும்பாலும் ’நல்லவேளை நான் நூல் எழுதவில்லை, நான் மட்டும்தான் புத்தகம் எழுதாதவன் போலிருக்கிறது, இத்தனை புத்தகங்கள் எழுதினால் வாசிப்பவன் நான் மட்டும்தானா?’ என்ற பாணியில்  தன்னை முன்நிறுத்துவார். புத்தகங்கள் எழுதவில்லை என்பதையே ஒரு தகுதி என முன்வைப்பார். அடுத்த படிக்குச் சென்று ‘நான் எதையும் வாசிப்பதில்லை’ என அதை தன் தகுதியாக முன்வைப்பவர்களும் உண்டு. உலகில் வேறு எங்காவது ‘நான் ஒரு மொண்ணை’ என தன்னை பெருமிதத்துடன் அறிமுகம் செய்துகொள்பவர்கள் உண்டா என தெரியவில்லை. எனக்கென்னவோ இந்த மொண்ணைகளை ஆவணப்படுத்தி அட்டவணை இடவேண்டும் என்று தோன்றுகிறது. விந்தையான இந்த உயிரினமாதிரிகளை பாதுகாக்க ஏதாவது அமெரிக்க பல்கலைக் கழகம் நிதிக்கொடையும் அளிக்கக்கூடும்

எதற்கு இத்தனை நூல்கள் என ஒருவன் பிலாக்காணம் வைத்தால் அந்த கூற்று உடனடியாக ஒரு ஏற்பை அடைவதையும் பார்க்கிறேன். ஏனேன்றால் இதை வாசிப்பவர்கள் எவரும் ஆழமாகப் படிப்பவர்களோ, இலக்கிய வரலாறும் இலக்கியச் சூழலின் இயல்பும் அறிந்தவர்களோ அல்ல. பெரும்பாலானவர்கள் மிக மேலோட்டமான சமூக வலைத்தள அரட்டையர். அவர்களுக்கு ஏற்கனவே வாசிக்கும் வழக்கம் இருக்காது. இயல்பாகவே புத்தகங்களைப்பற்றிய ஓர் ஒவ்வாமை இருக்கும்.

இதை நாம் கவனித்திருக்கலாம். வாசகர்களாகிய நாம் நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுக்கும்போது இயல்பாகவே பெரிய புத்தகங்களை நோக்கித்தான் கை நீளும். நான் சிறிய புத்தகம் என்பதனாலேயே பல முக்கியமான நூல்களை பல ஆண்டுகளுக்குத் தவிர்த்திருக்கிறேன். ஒரு புத்தகத்திற்குள் சென்று அமிழ்ந்து வாழ்ந்து நிறைவுற்று மீள்வதற்கான இடம் அதில் இருக்கவேண்டும் என்று நான் எண்ணுவேன். சிறிய புத்தகங்கள் என்னை ஏமாற்றுகின்றன என்ற எண்ணமே எனக்கிருந்தது. இதை இப்போது கூட நூலகங்களில் இளம் வாசகர்களின் மனநிலையாக இருப்பதைக் காண்கிறேன். இதுவே வாசிப்பவனின் இயல்பு.

வாசகன் வெறிகொண்டு பசித்திருக்கிறான். அவனுக்கு உள்ளே எத்தனை போட்டாலும் நிறையாத இடமிருக்கிறது. ஆகவே அவன் பெரிய புத்தகங்களை நாடுகிறான். மேலும் மேலும் புத்தகங்களை நாடுகிறான். ஒரு நல்ல வாசகன் நூலகத்துக்குச் சென்று அல்லது புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை பார்ப்பான் என்றால் பெரும்பரவசத்தை அடைவான். இவற்றையெல்லாம் எப்போது படிக்கப்போகிறோம் என்ற ஏக்கத்தையே கொள்வான். எப்படியாவது படித்துவிடவேண்டும் என்று வெறி எழப்பெறுவான். ஒவ்வொருமுறை நூலகத்திற்கு செல்லும்போதும் இன்றும் நான் அந்த ஆவேசத்தை அடைகிறேன்.

அது ஓர் அடிப்படையான மனநிலை. அறிவின் இயல்பு அதுதான் அது தன்னைத் தானே கட்டமைத்துக்கொண்டு, ஒன்றிலிருந்து ஒன்று தொட்டுப்பெருக்கி வளர்ந்துகொண்டே செல்வது. பருகுந்தோறும் விடாய் பெருகும் நீரொன்று உண்டு. உலகம் முழுக்க தொன்மங்களில் அந்த நீரைப்பற்றிய வெவ்வேறு வகையான கதைகளைக் காணலாம் அறிவென்பது அதுதான்.

நேர்மாறாக அறிவில் ஆர்வமற்றவர்களுக்கு புத்தகங்களின் அளவும் எண்ணிக்கையும் திகைப்பூட்டுகிறது. ஒரு பெரிய புத்தகத்தை பார்த்ததுமே இதை யார் படிப்பார்கள் என்று ஒருவன் கேட்கிறான் என்றால் அக்கணமே முடிவு செய்துவிடலாம், அவன் எப்போதுமே முதன்மை வாசகனாக ஆகக்கூடியவன் அல்ல. அறிவுக்களத்தில் அவனுடைய பங்களிப்பென ஏதுமில்லை. அதற்கான அடிபப்டை உளநிலையே அவனிடம் இல்லை. அவன் சும்மா, ஆசைக்கு ஒன்றிரண்டை கொறித்துவிட்டு, எளிமையான கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு, தனக்கென சிறு அடையாளங்களைத் தேடிக்கொண்டு அதில் ஒடுங்கி அமர்ந்துகொண்டிருப்பவன். அவனுடைய எல்லை அதுதான்.

சிறு குழந்தைகள் உணவைப்பற்றிக் கொண்டிருக்கும் உளநிலையைக் கவனிக்கலாம். பசித்து அமர்ந்திருக்கும் ஒரு குழந்தையிடம் உனக்கு எவ்வளவு உணவு வேண்டும் என்று கேட்டால் ’அவ்வ்வ்வ்வ்வளவு!!!” என்று கையைக் காட்டுகிறது. இதுதான் வாசகனுடைய மனநிலை. நான் யானையளவு என்று கையைக்காட்டி உணவைக் கோருவேன் என்று என் அக்கா அடிக்கடி சொல்வதுண்டு. யானைத்தீனி என்ற சொல் அதிலிருந்துதான் வந்தது என்று தோன்றுகிறது. என்னையை ஆனத்தீனி என்றே சிறுவயதில் அழைத்தனர். நெஞ்சில் இருக்கும் பசி அது. அந்தப் பசி பிறகு வாசிப்பில் திரும்பியது.

அளவற்ற பசியே ருசியை உருவாக்குகிறது. பஷீரைப் பற்றி கல்பற்றா நாராயணன் எழுதிய கட்டுரையில் ’எந்த இலையும் இனிக்கும் காட்டில் பஷீரின் ஆடு உலவுகிறது’ என்கிறார். அந்தத் தீராப்பசியாலேயே அனைத்து இலையும் இனிப்பாக ஆகும் வரம் கொண்டது அது. வாசகன் என நான் எண்ணுபவன் அத்தகையவனே. அவன் ஒருபோதும் புத்தகங்களின் எண்ணிக்கையை, அளவை பழிக்கமாட்டான். இன்னும் புத்தகங்கள் என்றே அவனுக்குத் தோன்றும்.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான புத்தக விற்பனைக்கடைகளில் நடந்துகொண்டு இருக்கையில் அலையலையாக வந்து கொண்டே இருக்கும் அந்தக் கடைகளின் வரிசை ஒருபோதும் முடியலாகாது என்றுதான் எனக்குத் தோன்றும். முடிந்ததுமே ஏமாற்றம் தான் எழும். சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்கையிலேயே கல்கத்தா புத்தகக் கண்காட்சி இதைவிடப் பெரிது என்று சொல்லப்படுவதுதான் என் நினைவில் எழுகிறது. ‘இதையெல்லாம் யார் படிப்பார்கள்?’ என்ற அசட்டு கேள்வியை  என் அகம் கேட்டதில்லை. ஒவ்வொரு நூலுக்கும் அதற்கான வாசகன் இருப்பான் என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்.

வாசகன் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அதனாலென்ன? ஒருவனுக்கு தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த வெளிப்பாட்டை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவன் அதை எழுதி பிரசுரிக்கிறான். எத்தனை புனிதமான உளவிசை அது! மானுடன் தோன்றிய காலம் முதல் இருந்துவரும் அடிப்படையான உந்துதல் ஒன்றின் வெளிப்பாடு அல்லவா அது? துளித்துளியாக மானுடம் தன் அறிவை சேர்த்து திரட்டி புறவயமாக ஒன்றாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மானுட அறிவின் பிரம்மாண்டப் பெருக்கில் ஒரு துளியென தானும் சேர விரும்புவதைப்போல மகத்தான பிறிதொன்றுண்டா என்ன?

அன்றி, வேறு எது பொருள் உள்ள செயல்? திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து பொருளீட்டுவதா? அதை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு செத்துத் தொலைவதா? அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டி எழுப்பி, அவற்றை வாழ்நாள் சாதனை என்று  எண்ணிக்கொள்வதா? சேர்த்து வைத்த பணத்தை வங்கிக்கணக்கில் அடிக்கடி எடுத்துப்பார்த்து மனம் மலர்வதா? என் எதிரியைவிட நான் ஒரு படி மேலாக ஆகவேண்டும் என்னும் விழைவால் இரவுபகலாக வேலைசெய்வதா? வெல்ல வெல்ல புதிய எதிரியை கண்டடைந்து காரட்டை தொடரும் குதிரைபோல நெஞ்சடைக்க வாழ்நாள் முழுக்க ஓடி களைத்து விழுந்து சாவதா? வேறெதை அர்த்தமுள்ள செயல் என்று சொல்வீர்கள்?

இங்கே மற்றவர்கள் என்னதான் செய்கிறார்கள்? ஏதேனும் அரசியல் தலைவரின் அதிகார வெறிக்கு காலாட்படையாக பின்னணியில் திரள்கிறார்கள். ஏதாவது மத அமைப்பின் உறுப்பினராக அடையாளம் தாங்கி அவர்கள் அளிக்கும் அத்தனை வெறிகளையும் ஏற்றுத் திருப்பிச் சொல்கிறர்கள். இரவுபகலாகப் பிள்ளைகளை வளர்த்து, பிறகு அந்தப் பிள்ளைகளிடம் நன்றியை எதிர்பார்த்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து பிலாக்காணம் வைக்கிறார்கள். வாய் ஓயாமல் எதைத் தின்னலாம், எந்த மருந்து எதற்கு நல்லது என்று பேசிப்பேசி மாய்கிறார்கள். அதெல்லாம் பொருள் உடைய ‘இயல்பு வாழ்க்கை’ என எடுத்துக்கொள்ளும் அற்பன் புத்தகம் எழுதுவதை கேலி செய்து பல்லைக்காட்டுகிறான். புத்தகங்களை பழித்து வாட்ஸப் சுற்று விடுகிறான்.

அறிவுச் செயல்பாடு மேல் அடிப்படை நம்பிக்கை கொண்ட எவனும் எந்நிலையிலும் நூலை நூல் வெளியீட்டை நூல் எழுதுபவனை ஏளனம் செய்ய மாட்டார்கள். அந்த ஏளனம் அடிப்படை அறிவுச் செயல்பாட்டுக்கு எதிரான உளம் கொண்டவர்களிடமிருந்து. அந்த அடிப்படையான உணர்வுநிலையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடமிருந்து எழுவது. நம் இயலாமையால்,

இவர்களுக்கு யார் சொன்னது பழைய கால எழுத்தாளர்கள் எல்லாம் குறைவாக எழுதினார்கள் என்று? ஆண்டுக்கு ஐந்துமுறை விக்கிப்பீடியாவைப் பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரியும். பழங்கால எழுத்தாளர்கள் எழுதிய அளவுக்கு இன்றைய எழுத்தாளர்கள் எவரும் எழுதவில்லை ,எழுதுவது மிகக்கடினம் என்று.

க.நா.சு எழுதிய நூல்களை, வெளியிட்ட கட்டுரைகளை, எழுதி வெளியிடாமல்  வைத்திருந்த கைப்பிரதிகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்ட தஞ்சை பிரகாஷ் அது எவராலும் செய்து முடிக்க முடியாத பணி என்று உணர்ந்ததை சாகித்ய அக்காதமி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசைக்காக அவர் எழுதிய நூலில் குறிப்பிடுகிறார். பல ஆயிரம் கட்டுரைகள். வெளியிட்ட நூல்களே முன்னூறுக்கு மேல். ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளுக்குரிய கணக்கே இன்னும் தெரியவில்லை. அச்சில் வராமல், உள்ள நாவல்கள் கைப்பிரதியாக திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன என்கிறார். வல்லிக்கண்ணன் எழுதிய நூல்களின் பட்டியலைப் பாருங்கள். சி.சு.செல்லப்பா முதுமையில் எழுதிய நூல்களின் அளவைப் பாருங்கள்.

ஒப்புநோக்க நவீன இலக்கியவாதிகள் மிக குறைவாக எழுதுகிறார்கள். பழந்தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவருடைய நூல்பட்டியலும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கின்றன. கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர் என்னும் பழந்தமிழ் ஆய்வாளரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை தெரியுமா? இன்று கிடைப்பவையே கிட்டத்தட்ட இருநூறு. எவையுமே ‘போகிறபோக்கில்’ எழுதப்பட்டவை அல்ல. இலக்கிய ஆராய்ச்சிகள், இலக்கண நூல்கள். அவர் உருவாக்கிய தமிழ்ப்புலவர் வரிசை என்னும் நூல் 31 பகுதிகள் கொண்டது. அகரவரிசையில் அத்தனை தமிழ்ப்புலவர்களையும் தொகுத்தளிப்பது. அது ஒன்றே ஒரு வாழ்நாள் சாதனை.

சென்ற தலைமுறை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தையே வாழ்க்கை என பிறவிப்பணி என செய்தவர்கள். நாற்பது ஐம்பது ஆண்டுகாலம் ஒவ்வொரு நாளும் எழுதியவர்கள். அச்சகத்திலிருந்தே எழுதி பிழை நோக்கி, செம்மை செய்து வெளியிட்டவர்கள். பலர் தங்கள் நூல்களுக்காக அச்சகங்களையே நடத்தினார்கள். நூல்களை எழுதும் பொருட்டு இதழ்களிலும் அச்சகங்களிலும் பணி புரிந்தவர்கள் உண்டு. நூல் எழுதுவதைத் தவிர பிற வேலைகள் எதையும் செய்ய மாட்டேன் என்று சூளுரைத்து அதன்பொருட்டே கடும் வறுமையைத் தாங்கிக்கொண்டவர்கள் உண்டு, சு.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன் போன்று பலர் அரசு வேலையைத் துறந்து முழுநேர எழுத்தாளராகி வாழ்நாள் முழுக்க அரைப்பட்டினியில் வாழ்ந்து எழுதினார்கள். வல்லிக்கண்ணன் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை.

மறைமலை அடிகளோ, மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளையோ எழுதிக்குவித்த தமிழாய்வுகளைக் காண்கையில் அவர்கள் எவருக்காக எழுதினார்கள் என்ற எண்ணம் சிலபோது நமக்கு எழும். ஏனென்றால் இன்று அவற்றில் 99 சதவீதம் நூல்கள் வாசிக்கப்படுவதில்லை. பெரும்பாலானவை கிடைப்பதுமில்லை. ஆனால் அவர்கள் ஓர் ஒற்றைப்பேரியக்கம். தமிழியக்கம் என்று இன்று நாம் சொல்லும் அந்த மரபுமீட்பு இயக்கம்தான் தமிழ் நூல்களை பிழை நோக்கி அச்சுக்குக்கொண்டு வந்தது. அவற்றுக்கு உரை எழுதியது. அவற்றை மிக விரிவாக பொதுக்களத்தில் அறிமுகம் செய்தது. அவற்றுக்கு அட்டவணைகளை விளக்கங்களையும் உருவாக்கியது. அவற்றை ஒப்புநோக்கி மதிப்பீடுகளைச் செய்தது. அவற்றிலிருந்து இலக்கிய வரலாறுகளை உருவாக்கியது. அதன்பொருட்டு பெரும் விவாதங்களை நடத்தியது. அவர்கள் இல்லையேல் தமிழனுக்கு மரபோ பண்பாடோ இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூட வரலாறு இல்லை.

அக்காலத்தில் தமிழறிஞர்கள் பெரும்பாலானவர்கள் தங்களுக்குள்ளேயே படித்து எழுதிக்கொண்டிருந்தார்கள் என்று நூல்களை வாசிக்கையில் தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான நூல்களை இன்னொரு தமிழறிஞர் மட்டுமே படிக்க முடியும். ஆனாலும் குன்றாத ஊக்கத்துடன் அவர்கள் எழுதினார்கள். அவர்களின் பெரும்பாலான நூல்கள் இன்று மறைந்துவிட்டிக்கலா, பலநூல்கள் இன்று பயனற்றவையாக இருக்கலாம். மறைமலை அடிகள் எழுதிய நூல்களிலேயே மிஞ்சிப்போனால் ஐந்து நூல்கள் மட்டுமே இன்று வாசிப்புக்குரியவை. ஆனால் அவர் எழுதிய பிற நூல்களெல்லாம் பயனற்றவை அல்ல. அவை அன்று ஒரு மாபெரும் பொதுவிவாதத்தை உருவாக்கின. அவ்விவாதத்தின் உச்சத்திலிருந்தே பெரிய நூல்கள் உருவாயின.

நான் எப்போதும் சொல்வதுதான். மகாராஷ்டிராவே கிரிக்கெட் விளையாடினால்தான் சச்சின் டெண்டுல்கர் உருவாக முடியும். ஒட்டுமொத்தமான பெரும் அறிவியக்கங்களே வரலாற்றுச் சாதனைகளை உருவாக்க முடியும். அதன் உச்சத்தில் பேரறிஞர்கள், பெரும்புகழ்பெற்றவர்கள் இருக்கலாம். ஆனால் அவ்வியக்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் அதற்கு பங்களிப்பாற்றுகிறார்கள். அவ்வியக்கமே அந்தப்

தமிழில் தமிழ் மீட்பு இயக்கம், சைவ மீட்பு இயக்கம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களின் அட்டவணையை ஒருவர் ஒரு கலைக்களஞ்சியத்தில் சென்று பார்த்தாலே திகைத்து அமைதியடைந்துவிடுவார். கலைமகள் இரண்டாவது இதழில் அதில் எழுதப்போகிறவர்களுடைய ஒரு பட்டியல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ நூறு எழுத்தாளர்கள். அதில் பத்து எழுத்தாளர்கள்தான் இன்று விரிவாக வாசிக்கும் எனக்கே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எஞ்சியோரும் எழுதியிருக்கிறார்கள். கலைமகள் முன்வைத்த அறிவியக்கத்தில் அவர்களுடைய பங்களிப்பு உள்ளது. அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்துதான் அவ்வியக்கத்தை நிலைநிறுத்தினார்கள். அவ்வாறுதான் எந்த அறிவியக்கமும் நிகழமுடியும்.

அச்சுப்புத்தகங்கள் தோன்றிய பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இலக்கியத்தைப் பார்க்கையில் எத்தனை ஆயிரம் நூல்கள் வந்திருக்கின்றன என்ற எண்ணம் எழுந்து பெரும்பரவசத்தை அளிக்கிறது. அத்தனைபேர் சேர்ந்து ஒரு பெரும் ஊர்வலம் போல அந்த சுடரை ஏந்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தனை பேர் சேர்ந்து ஒன்றாகி ஒரு கோபுரம் போல் மேலெழுந்து ஒரு சிலரைத் தூக்கியிருக்கிறார்கள். உலகுக்கே சிலரை காட்டியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள். இன்று பலர் வாசிக்கப்படாமல் மறைந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் அதில் பங்களிப்பாற்றியவர்களே

இன்று ஒப்புநோக்க எழுதுவதற்கான சூழல் இல்லை. இன்று ஒருவர் எழுதும்பொருட்டே வாழ முடியாது. எழுதுபவனை ஆதரிக்கும் வள்ளல்கள் இன்றில்லை. பாண்டித்துரைத் தேவரோ உமாமகேஸ்வரனாரோ சைவ ஆதீனங்களோ இன்றில்லை. இன்றைய மாபெரும் தொழிலமைப்புகள் எவையும் கலையிலக்கியத்துக்கு ஒரு காசுகூட கொடுக்க தயாராக இல்லை.அவர்கள் தங்கள் எப்பயனும் அற்ற சந்திப்புகளில் சாப்பிடும் சமோசாவின் பணம் இருந்தாலே போதும், தமிழில் பண்பாட்டுச் சாதனைகளை உருவாக்கிவிட முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எவருக்கும் எந்தவகையான பண்பாட்டுப் பயிற்சியும் இல்லை. (கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பார்த்தால் நல்லி குப்புசாமி மட்டுமே ஒரே விதிவிலக்காக தெரிகிறார். குறிஞ்சிவேலனின் மொழியாக்கப் பணிகள் மற்றும் திசை எட்டும் இதழின் பணிகளுக்கு அவருடைய உதவி மதிக்கத்தக்கது. வரலாற்றில் பதிவுசெய்யப்பட வேண்டியது)

இன்று எழுத்தாளர்கள் ஆலைகளில் வேலை செய்கிறார்கள். அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். அந்நிய நாடுகளில் வாழ்வை வீணடிக்கிறார்கள். அதற்கு மிஞ்சி தங்கள் எஞ்சிய நேரங்களைச் சேர்த்து நூல்களை எழுதுகிறார்கள் என்றால் அது அந்த அடிப்படையான விசையின் தீவிரத்தையே காட்டுகிறது. ஒருபோதும் அறிவியக்கம் அழிந்துவிடாதென்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. அதை எழுதுவதன் வழியாக அவன் அடைவதொன்றுமில்லை. வாசகப்பெருக்கம் இங்கில்லை. மதிப்புரைகள் கூட சிலசமயம் வராமல் போகலாம். பிறிதொரு எழுத்தாளன் அன்றி எவருமே தன்னைக் கவனிக்காமலாகலாம் என்று அவனுக்குத் தெரியும். ஆயினும் எழுதுவது என்பது எழுத்தெனும் செயலில் இருக்கும் பெரும் கவர்ச்சியால்தான். எந்த அடிப்படை விசை மனிதகுலம் முழுக்க வாசிப்பை நிலைநிறுத்தியிருக்கிறதோ அந்த விசைதான் அவனையும் இயக்குகிறது.அது தெய்வங்களை உருவாக்கியது.பண்பாட்டை கட்டமைத்தது. சமூக ஒருங்கிணைப்பை உருவாக்கியது. எது மனிதர்களை மானுடமென ஒன்றாகத் தொகுக்கிறதோ அந்த விசை தான் அது.

தமிழ் இன்று கல்விக்கூடங்களிலிருந்து அகன்று கொண்டிருக்கிறது. இன்று தமிழ் பேசுபவர்களே   பெருநகரங்களில் குறைந்து வருகிறார்கள். அடுத்த தலைமுறை தமிழ் படிப்பது அரிதினும் அரிதாகிவருகிறது. இச்சூழலிலும் இத்தனை நூல்கள் வருவதென்பது எந்த தமிழனுக்கும் உளநிறைவை அளிக்கவேண்டிய ஒன்றல்லவா? நம்பிக்கையும் நிறைவும் அளிக்கவேண்டிய ஒன்றல்லவா? அதில் ஒருவன் உளச்சோர்வு கொள்கிறான் என்றால், சலிப்புறுகிறான் என்றால், ஏளனம் செய்கிறான் என்றால் அவன் யார்?. அந்த உளநிலையை ஒரு வேடிக்கைக்காக கூட நுண்ணுணர்வுள்ளோர் பகிர்ந்து கொள்ளவேண்டியதில்லை. அது நம்முள் செலுத்தக்கூடிய ஒருவகை அகச்சிறுமை நம்மை மேலும் சிறியவர்களாக்குகிறது.

நீர்த்துளியை  வானம் போல நாம் ஒவ்வொரு திசையிலிருந்தும் அழுத்தி சிறிதாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். சூழலில் இருக்கும் சிறுமைகள், உலகியல் அற்பத்தனங்கள் நம்மை அழுத்தி சுருக்கிக்கொண்டிருக்கின்றன. நம் அகத்திலிருந்து எழும் விசையால் நம்மை விரித்து பெருகவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இச்சூழலில் இதேபோன்ற சிறுமைகளுக்கு காது கொடுப்போமென்றால், வெறும் வேடிக்கைதானே என்று அவற்றை நம்மில் நிறைப்போமென்றால் நம்மை அறியாமலே நாம் அந்த அகச்சிறுமையை அடைய ஆரம்பிக்கிறோம். அவநம்பிக்கையும் கசப்பும் கொண்டவர்களாகிறோம்.

அந்த அவநம்பிக்கையையும் கசப்பையும் ஈட்டிக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்? முதுமையில்  அகம் சுருங்கி அமர்ந்து உலகை சபித்துக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கைக்காகவா அத்தனை கஷ்டப்பட்டு முயல்கிறோம்? அந்தச் சிறுமையை அத்தனை உழைத்து ஈட்டிக்கொள்ள வேண்டுமா? நாம் நம் காலகட்டத்து அறிவியக்கத்தின் பிரம்மாண்டத்துடன் நம்மைப் பொருத்திக்கொள்ளும்போது நாம் பெருகுகிறோம், திசைகள் என அகல்கிறோம், அகஅழுத்தம் கொள்கிறோம். நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அதற்கான வாய்ப்பு நம் முன் இருக்கையில் நாம் ஏன் அற்பத்தனங்களை தெரிவுசெய்யவேண்டும்?

இங்கே பெரும்புகழ் பெரும் ஒரு நூலுக்கும் எவரேனும் படிக்காத ஒரு நூலுக்குமான வேறுபாடென்பது ஆயிரம் பிரதிகள் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக அனைவருமே எவருக்கும் தெரியாமல் ஒரு சின்ன சிமிழுக்குள் தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இங்கு ஈட்டுபவனும் இழப்பவனும் எவரும் இல்லை. அனைவருமே அளிப்பவர்கள் மட்டுமே. அந்த தன்னுணர்வு இருக்குமெனில் இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு புத்தகமும், தன்னளவில் முதன்மையானது என அறிவோம். தமிழ் அறிவியக்கத்திற்கு ஒரு கொடை என உணர்வோம். ஆகவே புத்தக கண்காட்சிக்கு செல்லுங்கள். அங்கு வெளியிடப்பட்டு பரந்திருக்கும் பல்லாயிரம் நூல்களை வெறுமே பாருங்கள். அப்பெருவுணர்வில் திளையுங்கள். நம்முடைய கோயில், நமது தெய்வம் அதுதான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:35

புத்தகக் கண்காட்சியில் நான்

 அன்பின் ஜெ.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு 1991/92 முதல் இடைவிடாமல் வந்து கொண்டிருக்கிறேன். இது அனேகமாக எனக்கு முப்பதாவது ஆண்டு. விஷ்ணுபுர அமைப்பில் வாசகர்களாக தொடர்ந்து பயணித்த பலரும் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக மாறியுள்ளதை வெவ்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளிலிருந்தும், அளிக்கப்படுகிற விருது பெற்றோர் பட்டியலிலிருந்தும் எவரும் அறியக்கூடிய வெளிப்படையான உண்மை.

விஷ்ணுபுர நண்பர்களும் வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்தப் புத்தக கண்காட்சிக்கு வந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் தங்களுடன் இலக்கிய நிகழ்வுகளில் அணுக்கமாக இருக்கும் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தாங்கள் வந்தீர்களா, அல்லது ஏதும் பிறிதொரு நாள் வருவாரா எனக்கேட்டேன். தாங்கள் சென்னையிலேயே இருந்தாலும் இங்கெல்லாம் வரமாட்டீர்கள் என்று சொன்னார். நானும் தங்களை ஒருமுறை சென்னையிலும், இன்னுமொரு முறை கோவை கொடிசியாவிலும் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பார்த்த நினைவு மட்டுமே உள்ளது. பிற எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் இங்கு கிட்டத்தட்ட நாள்தோறும் வருகின்றனர், தங்களுக்கு வேண்டிய அளவைவிட படிக்க முடிகிற அளவுக்கும் மேல் நூல்கள் திகட்ட, திகட்ட கிடைத்துவிடுகிறதோ – மதிப்புரை கேட்டு, அணிந்துரை கேட்டு அனுப்பப்பட்டு விட்டிருக்கலாம் – அவ்வாறெனில் இங்கு வருவது வீண் தான், இது இந்த கொரொனா பெருந்தொற்று நோயச்ச தவிர்ப்பு மாதிரியும் தெரியவில்லை. அதுவும் – தங்களின் படைப்பை மட்டுமே அறிந்திருக்கிற எனக்கு தாங்கள் புத்தக கண்காட்சிக்கே வருவதில்லை என்று திட்டவ்ட்டமாக ஒரு வாசகர் சொல்லும்போது ஏன் – நாம் ஜெ.வை தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்கவில்லையோ, நட்பு பேணவில்லையோ, பிரதிக்கும் வாசகனுக்குமான உறவே பிரதானம். அங்கு படைப்பாளி எழுதி முடித்த பின்னர் பிறிதொரு ஆளுமையோ,

https://www.jeyamohan.in/162359/

பிறிதொரு சுழல் – கட்டுரையில் குறிப்பிடுவது போல எழுதி முடித்த பின்னர் அதிலிருந்து தாங்கள் விலகி விடுவதும், இந்த திருவிழா மனநிலையை விரும்பாததற்கு தங்களுக்கு இருக்கும் துறவு, ஆன்மிகம் குறித்த ஈடுபாடு தான் காரணமா, அல்லது புறக்கணித்தல், வெளிநடப்பு போன்ற அரசியல் / செயல்பாட்டுக் காரணம் ஏதும் உள்ளதா?

கடந்த மாதம் ஜனவரியில் திடீரென்று புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளிவந்த போது ஏராளமான பதிப்பகங்கள் மனம் தளர்ந்து அதிகமான தள்ளுபடியை, சலுகை அளித்து விலைக் குறைப்பு செய்தன. நானும் அதனால் கொஞ்சம் அதிகமாகவே (தேவையில்லாத நூல்களையும்) வாங்கிவிட்டேன். இப்பொழுது அடடா, வேறு நூல்களைப் பார்க்கும்போது இதை வாங்க வேண்டுமே என்று தோன்றுகிறது. மற்றபடி இந்த புத்தக கண்காட்சிக்கு வருவதும், வெவ்வேறு ஊர்களிலிருந்து வரக்க்கூடிய நண்பர்களில் பலரை சந்திக்க அமைந்த வாய்ப்பாகவும் இது பயன்படுவதால் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு இருக்கும் பணிகளுக்கு மத்தியில் இதில் ஏதேனும் சொல்வதற்கு இருந்தால் கூறவும், நன்றி

கொள்ளு நதீம், ஆம்பூர்.

அன்புள்ள கொள்ளு நதீம்,

நான் புத்தகக் கண்காட்சிக்கு, அது முன்பு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலுக்குள் சிறிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் முதல் வந்துகொண்டிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஓரிருமுறை தவிர பெரும்பாலானவற்றுக்கு வந்துள்ளேன். மதுரை, கோவை, ஈரோடு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். நாகர்கோயில், நெல்லை புத்தகக் கண்காட்சிக்கும் சென்றுள்ளேன். வரும் நெல்லை புத்தகக் கண்காட்சிக்கும் செல்லவிருக்கிறேன்.

எனக்கு ஒரு நாளுக்கு சராசரியாக இருபது நூல்கள் தபாலில் வருகின்றன. இருந்தும் நூல்களை வாங்கிக் குவிக்கிறேன். இந்த புத்தகக் கண்காட்சியிலும் எனக்கான புத்தகப்பட்டியலுடன் நண்பர்கள் வந்தனர்.

ஆனால் நான் கொஞ்சம் ரகசியமாகவே வருவேன். அதிகமாக எவரையும் சந்திப்பதில்லை. புத்தகக் கண்காட்சியில் கொஞ்சநேரம் வசந்தகுமாருடன் தமிழினி ஸ்டாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். புத்தகங்களை பார்த்து அலைய விரும்புவேன். என்னை பிறர் பார்ப்பது அதற்குத் தடையாக அமைவது.

இப்போது என் நிகழ்ச்சிகள் மிகச்செறிவாக அமைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய அறிவுப்பணி ஒன்றில் இருக்கிறேன். கூடவே பல சினிமா வேலைகள். இலக்கியப்பயணங்கள். ஆகவே திட்டமிடா நிகழ்ச்சிகளுக்குச் செல்வது இயலாது. சென்னைக்கு எப்போதுமே மிகக்கறாராக திட்டமிடப்பட்ட பயணங்கள்தான். சினிமாச்சந்திப்புகள். அவற்றில் இருந்து நேரம் எடுத்து புத்தகக் கண்காட்சிக்கு வருவது பலசமயம் நடைபெறுவதில்லை. இம்முறை சென்ற ஞாயிறு வருவதாக இருந்தேன். உடனடியாக திரும்பவேண்டியிருந்தது. நண்பர்கள் வந்திருந்தனர். நான் வந்திருந்தாலும் எவரையும் பார்க்காமல் புத்தகங்களைப் பார்த்துவிட்டு திரும்பியிருப்பேன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:31

சோர்பா

முதன்முறையாக நீகாஸ் கசந்த்சாகீஸ் தமிழுக்கு வருகிறார். அதுவும் கமலக்கண்ணனைப் போன்ற தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வழியாகக் கசந்த்சாகீஸ் தமிழில் அறிமுகமாவது மேலும் சிறப்பானது. கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்கிற வேகத்தைக் கண்டு நான் வியக்காமல் இருந்ததே இல்லை. அவரது தனித்தமிழ் பயன்பாடாகட்டும், கச்சிதமான சொல்லாட்சிகளாகட்டும், கவனச் சிதறல்கள் ஏதுமின்றி தான் எடுத்துக்கொண்ட பணியைக் கர்ம சிரத்தையுடன் மேற்கொள்வதிலுள்ள துடிப்பாகட்டும், சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்வதிலுள்ள அறிவாண்மையாகட்டும், இத்தனை குணாம்சங்களும் பொருந்திய ஒரு மொழிபெயர்ப்பாளர் தமிழிலக்கிய உலகிற்கு அரிதாகவே கிடைத்திருக்கிறார்.

சோர்பாவை ஏன் வாசிக்கவேண்டும்?

கசந்த்சாகீஸ் ஒரு மறுப்புவாதி. தற்கணத்தின் மகிழ்ச்சியை மட்டுமே அவர் ஏற்கிறார். அந்த மகிழ்ச்சியை விடுதலையடைவதன் வழியாக மட்டுமே மனிதர்கள் அனுபவிக்க முடியும் என்பது அவரது வாதம். எவற்றிலிருந்து விடுதலை? எல்லாவற்றிலிருந்தும். அதன் வாய்ப்புகளை ஆராய்வதற்காக உணர்ச்சிகர நிகழ்வுகளை விலக்கி முழுக்க முழுக்கச் சிந்தனைக் குவியல்களின் தொகுப்பாகப் புனையப்பட்டுள்ளது இந்நாவல். இதில் சிந்தனை என்பது நிலைத்தன்மையுடையதாக (static) அல்லாமல் நடன அசைவுகள் கொண்ட செயலூக்கமாக (dynamic) முன்வைக்கப்படுகிறது. நமது முன்முடிவுகளையும் செக்கு மாட்டு வாழ்க்கையையும் மறுபரிசீலனை செய்ய வற்புறுத்துகிறது. அதன் காரணமாக, கசந்த்சாகீஸின் புகழ்பெற்ற இந்நாவல் குறித்த பேச்சு இலக்கிய உலகில் எப்போதும் இருக்கிறது

கோகுல் பிரசாத்

நீகாஸ் கசந்த்சாகீஸ் Translator: கோ. கமலக்கண்ணன்Publisher: தமிழினி

 

சோர்பா    எனும்   கிரேக்கன் – அருண்மொழி நங்கை  

சோர்பா கடிதங்கள்

சோர்பா கடிதங்கள் 2

சோர்பாவும் நித்யாவும்- கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:31

மார்ட்டின் விக்ரமசிங்ஹ- கடிதம், கதை

மார்ட்டின் விக்ரமசிங்கேயின் கலை-ஜிஃப்ரி ஹாசன்

அன்புள்ள ஜெ

வணக்கம் .அகழில் வெளிவந்த மார்ட்டின் விக்ரமசிங்ஹ பற்றி ஜிஃப்ரி ஹாஸன் எழுதிய கட்டுரை முதலில் வாசித்துவிட்டு அது சார்ந்து அவருடன் உரையாடினேன். சிங்கள இலக்கியத்திலிருந்து முதலில் யாரை மொழிபெயர்க்கலாம் என்று என்னிடம் பலபேர் கேட்கையில் மார்ட்டினைத்தவிர வேற யாரையும் நான் சொன்னது கிடையாது.  நான் உயர்தரம் படித்துவிட்டு முதன் முதலில் பல்கலைக்கழகம் நுழைந்தபோது சிங்களம் எனக்கு பேசத்தெரியாது. வாசிக்க, எழுத தெரிந்த போதிலும் பெரும்பாலான சொற்களுக்கு பொருள் தெரியாது. முதல் ஆண்டில்  batch trip செல்வது வழமை. ஏதாவது ஒரு மலையில் ஹைக்கிங் செல்ல கூட்டிச்செல்வார்கள்.  அதற்கு  batch fit ஐ அதிகரிக்க உதவும் என்ற வதந்தியும் பரவலான காலப்பகுதி. அனாடமி படிக்காவிடினும் சிங்களம் படித்துவிட வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது காரணம் என் batch ல் இருந்த இரண்டே இரண்டு தமிழ் பேசும் மாணவர்கள். ஒன்று நான் மற்றையது என் அறை நண்பன். அவன் படித்தது நாட்டில் புகழ் பெற்ற சிங்களப்பாடசாலையில் என்பதால் அவனுக்கு சிங்களமும் அத்துப்படி. விரிவுரையாளர்கள் சிங்களத்தில் குறிப்பிடும் சில பகடிகளுக்கு கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கேட்டு சகபாடிகளை நச்சரிப்பதை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

மார்ட்டின் விக்ரமசிங்ஹ நினைவில்லம் கொக்கல

அப்படியான ஒரு ஹைக்கிங்கில் தான் மார்ட்டின் எனக்கு அறிமுகமானார். சிங்கள நாவல்கள் ஏதும் வாசித்ததுண்டா என்ற ஒரு தோழியின் கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்க, மார்டின் விக்ரமசிங்ஹ எனக்கு அறிமுகமாகிறார். இலங்கை சிங்கள மக்கள் வாழ்வியலில் வாசிப்புக்கென்று ஒரு நேரம் உண்டு. பாடசாலை முடிந்ததும் பெற்றோருடன் சரசவி(புத்தக நிலையம்)  சென்று சிறார்கதை நூல்களாவது வாங்கிச்செல்லும் பழக்கம் இங்குண்டு. வீட்டில் சமைப்பது, தூங்குவது போல வாசிப்பதற்காகவே பெண்கள் நேரம் ஒதுக்குவர். நான் வாங்கிவரும் புத்தகங்களை வைக்க இடமில்லாமல் இருந்து என்வீட்டை ஒப்பிடுகையில் இது அபூர்வமான கலாசாரமாகத்தான் இருந்தது. கம்பெரலிய, மடொல்துவ வாசிக்காத வீடுகளே இல்லை. மார்ட்டினை எழுதப்படிக்கத்தெரியாதவர்கள் கூட அறிந்து வைத்திருந்தனர். இப்படியெல்லாம் சிங்கள மக்கள் வாழ்வியலை பேசிய எழுத்துகள் உண்டா என மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் நூல்களை வாசித்து வியந்திருக்கிறேன். அப்பாவின் நூல்களிடையில் மாடொல் துவ என்ற மார்டினின் இன்னொரு புகழ்பெற்ற நாவலை கண்டிருக்கிறேன்.

மார்ட்டின் எழுதிய காலம் தொட்டு இன்றுவரை சிங்களத்தில் தீவிர இலக்கியங்களும் தினசரி பத்திரிகைகளிலேயே வெளிவருகின்ற ஒரு நடைமுறை இருக்கிறது. அதனாலேயே என்னவோ மார்ட்டின் அதிகம் அறியப்பட வாய்ப்பிருக்கிறது. கம்பெரலிய, கலியுக, யுகான்தய எனும் மூன்று தொகுப்புகளும் triple gems of Sinhala literature என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். என்னைப்பொறுத்தமட்டில் சிங்களத்தில் ஒரு புதுமைப்பித்தன் அவர். அவரது நினைவு இல்லம் கொக்கல எனும் இடத்தில் உள்ளது. அவரது நூல்கள் சிலவற்றை தமிழில் கொண்டுவர இப்போது தான் முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.மார்ட்டின் பற்றி நீங்கள் கவனப்படுத்தியதற்கு மிக்க நன்றி. மார்ட்டின் விக்ரமசிங்ஹ பற்றி ஜிஃப்ரி ஹாஸன் எழுதும் தொடர் இந்த மாத்த்திலிருந்து வனம் இதழில் தொடர்ச்சியாக வெளிவரும் என்ற அறிவிப்பையும் விட்டிருந்தேன்.

இத்தோடு ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த மார்ட்டினின் முனகிய சடலம் என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பையும் இணைத்துள்ளேன்.

நன்றி

ஷாதிர்

முனகிய சடலம் மார்ட்டின் விக்ரமசிங்ஹ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:31

நிமிர்தல் – கடிதங்கள்

நிமிர்பவர்களின் உலகம்

ஆசிரியருக்கு,

மிக அருமையான பதிவு. முதன்முதலில் உங்களை நேரில் சந்தித்த அந்த கொல்லிமலை தருனங்கள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளன். நீங்கள் பேசிய வார்த்தைகளைக்கூட இன்னும் அருகில் கேட்க முடிகிறது. எப்போதும் கீதை உரை நீள்பயணங்களில் கேட்டபடி செல்வது இப்போதும் மிகப்பிடித்தமான ஒன்று. எஸ் ரா வை நான் முதன்முதலில் புத்தகக்கண்காடையில்தான் கண்டேன் அப்போது அடைந்த பரவசம் நேற்று முன் தினம் பார்த்தபோதும் வந்தது. சட்டென்று கட்டி தழுவ உளம் வந்தது. அப்புறம் வேகமாக விருட்சம் கடையில் சென்றுவிட்டார். பின் கொஞ்ச நேரம் பின்னால் இருந்து பார்த்த்க்கொண்டே இருந்தேன்.

சென்றமுறை அடையாளம் பதிப்பகத்தில் சோ. தருமன் அவருடைய நாவல் வாங்கசென்றபோது எதிர்பாராமல்  அவரை சந்தித்தேன் பரவசம் சொல்லமுடியாது. அவர் பேசிக்கொண்டே சென்றார் நான் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். சா.கந்தசாமி, நாஞ்சில், இப்போது காளி, அசோக்குமார், பிரபு, திருமா, மணி, தாமரை இப்படி பார்த்தால் பரவசமே எஞ்சி நிற்கிறது.

கடைசியாக வசந்த் இயக்குனர் அருகில் இருந்து பார்த்ததும் மீண்டும் மீண்டும் பேச முயற்சித்து முடியாமல் போனதும் இன்னும் நினைவில் இருக்கிறத அந்த தருணம் வாழ்வின் பொக்கிஷ தருணங்கள்.

அனைத்தையும் வார்த்தையில் சொல்ல உங்களால் முடிகிறது. நான் உணர்ந்தவற்றை அப்படியே எழுதி இருப்பதில் உள்ள எழுச்சி சொல்லமுடியாது

கட்டுரைக்கு நன்றி.

அன்புடன்,
திருமலை

அன்புள்ள ஜெ

இன்றைய கட்டுரை மிக அருமையானது. உணர்ச்சிகரமானது. நான் வாசிக்க ஆரம்பித்த காலம் முதலே இந்த உபதேசத்தைச் சந்தித்து வருகிறேன். ’ஏன் படிக்கிறே, தேவையில்லாம?’ என்பது ஒரு கேள்வி. அந்தக்கேள்வியின் இன்னொரு பக்கம்தான் ‘வாசிச்சா போருமே, எதுக்கு கூட்டத்துக்கு போறே?’ இவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் அவ்வளவு காழ்ப்பு இருக்கிறது. ஆகவே இலக்கியவாதிகளைச் சந்திப்பதை அப்படி எதிர்ப்பார்கள்.

என் நண்பர்கள் நான் ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது கேலி செய்தார்கள். கொஞ்சநாள் கழித்து நானே சும்மா காமெடி நடிகர் சூரியை சந்தித்தேன் என்றேன். அப்படியே பரவசமாகிவிட்டார்கள். துளைத்து துளைத்து கேள்வி கேட்டார்கள். அடச்சீ என்று ஆகிவிட்டது. எழுத்தாளர்கள் உள்ளும் புறமும் வேறாக வாழ்கிறார்கள் என்று சொல்லும் இந்த குற்றெழுத்தாளர் எவரை ஓடிப்போய் சந்தித்து இளிப்பார்? அரசியல்வாதிகளைத்தான். என்ன சந்தேகம்?

எனக்கு இலக்கியத்தை கொண்டாட எழுத்தாளர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒன்று உண்டு. இதை பலபேர் உணர்ந்திருக்கலாம். நாம் ஓர் எழுத்தாளரை நேரில் சந்தித்ததுமே அவருடைய புத்தகங்கள் மாறிவிடுகின்றன. அவர் முகம் கண்முன் வந்துவிடுகிறது. அவருடன் பேசுவதுபோலவே தோன்றுகிறது. முதன்முதலாக 2007ல் பிரபஞ்சனைச் சந்தித்தபோது இதை உணர்ந்தேன். அதன்பின் எந்தச் சந்திப்பையும் தவறவிடுவதே இல்லை.

கே.விஜயகுமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:31

February 25, 2022

உக்ரேன், உண்மை உருக்கப்படுவது பற்றி…

உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?

அன்புள்ள ஜெ

உக்ரேன் – ருஷ்ய பூசல் உருவாகி வலுப்பெற்று வரும் சூழலில் தமிழில் அந்த வரலாற்று முரண்பாடு பற்றி ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடினேன். வழக்கமாக இதெல்லாம் எப்படி நடக்குமென்றால், இப்படி ஒரு பூசல் உருவாகும்போது அதையொட்டி ஆங்கில இதழ்களில் வரும் கட்டுரைகளை வாசித்து, அவற்றில் நம் அரசியலுக்கு உகந்ததை தேர்வுசெய்து, அவற்றையொட்டி நிலைபாடு எடுத்து எழுதுவோம், பேசுவோம். உக்ரேன் விஷயத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

பொதுவான ஆர்வத்தால் எவராவது எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஆச்சரியமாக, நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டிருக்கிறது என்னும் கட்டுரை உக்ரேன் -ரஷ்யா பூசலின் உண்மையை ஆழமாக சொல்லும் முக்கியமான கட்டுரை. வழக்கம்போல அதையும் இலக்கியம் வழியாகவே அணுகியிருக்கிறீர்கள். ஆனால் மிக ஆழமாக அந்த கலாச்சார அரசியல், அடக்குமுறை, பிரச்சாரம் ஆகிய அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் அதில் ஆச்சரியமேதுமில்லை. நீங்கள் எழுதாமலிருந்தால்தான் ஆச்சரியம்.

நான் இப்போது நிகழும் இந்த பேச்சுக்களைப் பார்க்கிறேன். அவற்றில் இருக்கும் சார்புநிலை ஆச்சரியமளிக்கிறது. இடதுசாரிகள் கிட்டத்தட்ட மதநம்பிக்கையாளர்கள். மதவெறிபோலவே ’எங்காளு எதுசெஞ்சாலும் ரைட்டு‘ என்னும் நம்பிக்கைதான். புடின் கம்யூனிஸ்ட் இல்லை. கம்யூனிச எதிரி. ஆனாலும் அவர் பழைய சோவியத் ருஷ்யாவின் சாயம் உடையவர் என நினைக்கிறார்கள். நான் பலபேரிடம் பேசினேன். அவர்கள் எல்லாருமே அமெரிக்க எதிர்ப்புநிலைபாட்டை முன்வைத்தனர். எவருக்குமே எந்த அடிப்படைப்புரிதலும் இல்லை.

இச்சூழலில் உங்கள் கட்டுரை மிக முக்கியமானது. ருஷ்யா உக்ரேன் மேல் கொண்டிருப்பது ஆதிக்க உறவு. ஆதிக்கம் செலுத்திய வரலாறு இருப்பதனாலேயே அது உரிமையும் கொண்டாடுகிறது. உக்ரேனிய கலாச்சாரத்தை எப்படி ருஷ்யா அழித்தது, எப்படி மேலாதிக்கம் செலுத்தியது, உக்ரேனிய தேசியத்தை எப்படி ஒடுக்கியது என்பது திகைப்பூட்டுகிறது. சிமோன் பெட்லியூராவுக்கு என் அஞ்சலி. உக்ரேன் மக்களுக்கு என் ஆதரவு.

ஜே.ஆர்.சசிகுமார்

[image error]

அன்புள்ள சசிகுமார்,

சென்ற முப்பதாண்டுகளிலில் உலகை அச்சுறுத்தும் ஆதிக்கசக்தி என்பது சீனா. ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் பலவற்றை அது கடன் வலைக்குள் சிக்கவைத்துள்ளது. எந்த மறைவும் இல்லாமல் அந்நாடுகளின் விமானநிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்றிக் கொள்கிறது. அந்நாடுகளை வறுமையில் ஆழ்த்தி, அந்நாடுகளில் போலி அரசுகளை உருவாக்கிச் சுரண்டுகிறது. வரலாறுகள் வந்துகொண்டே இருந்தன. கடைசியாக இலங்கை ஆக்ரமிக்கப்பட்டபோது நம் முகத்தில் அறைந்தன உண்மைகள். ஐ.எம்.எஃப் போலவோ ஆசிய வளர்ச்சி வங்கி போலவோ அல்ல சீனா, அப்பட்டமான நேரடியான சுரண்டல், ஆதிக்கம் கொண்டது.

ஆனால் அப்போதுகூட இங்குள்ள இடதுசாரிகள் அதை ஆதரித்தனர். எனக்குத் தெரிந்து சீன ஆக்ரமிப்பு பற்றி ஒரு வார்த்தை எழுதிய ஒரு இடதுசாரியை நான் எங்கும் பார்க்கவில்லை. இத்தனைக்கும் சீனாவில் கம்யூனிசமில்லை என தெரியாத ஒரு இடதுசாரிகூட இல்லை. அங்கிருப்பது அரசு முதலாளித்துவம். தொழில்நுட்ப ஆதிக்கம். ஆனால் அங்கிருந்து சிலருக்கு மறைமுக நிதி வருகிறது. பலர் வெறும் மதநம்பிக்கைபோல அடையாளங்களை நம்பி பின்னால் செல்லும் வெற்று மந்தைகள். சீனச் சூழியல் அழிவு அவர்களுக்கு பொருட்டல்ல. உய்குர் முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவது பொருட்டல்ல. சீனாவின் பெருமுதலாளித்துவமும் பொருட்டல்ல.

அதே நிலைபாடுதான் இங்கும். அமெரிக்கா ரஷ்யா என்றால் நாம் ரஷ்யாவை ஆதரிக்கவேண்டும், இவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல். உக்ரேன் ரஷ்யாவின் உடைந்த துண்டு அல்ல. அது ஆக்ரமிக்கப்பட்ட தேசியம். அதற்கும் ஐரோப்பிய ரஷ்யாவுக்கும் எந்த கலாச்சார ஒருமையும் இல்லை. அந்தப் பண்பாடு இழிவுசெய்யப்பட்டது. சிதைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டது. அது தன் விடுதலைக்காகப் போராடுகிறது. மீண்டும் மீண்டும் போலி அரசை அங்கே உருவாக்கி மறைமுக ஆதிக்கம் செலுத்துகிறது ரஷ்யா. அதற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குகிறது.

இங்கே உக்ரேனின் மாபெரும் கலாச்சார ஆளுமை, மக்கள் தலைவர், உக்ரேனின் தேசிய முகம் சைமன் பெட்லியூரா ஒரு போலி இலக்கிய நூல் வழியாக எப்படி இழிவுசெய்யப்பட்டார் என்பதை வீரம் விளைந்தது என்னும் நாவல் காட்டுகிறது. முழுக்கமுழுக்க பொய்யாக உருவாக்கப்பட்ட நாவல். அந்த ஆசிரியனுக்குக் கூட அதில் பெரிய பங்கில்லை. ஆனால் 220 மொழிகளில் பல லட்சம் பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டு உக்ரேனின் தேசியத்தலைவர் ஒரு கோழையாக, அற்பனாக கட்டமைக்கப்பட்டார். மறுகேள்வியே இல்லாமல் நாம் அதை விழுங்கினோம். எண்ணிப்பாருங்கள் நம் தலைவர்கள் அப்படிச் சித்தரிக்கப்பட்டிருந்தால் நாம் எப்படி அதை எடுத்துக் கொண்டிருப்போம்?

இடதுசாரிகளின் பற்று ஆச்சரியமளிக்கவில்லை. நேற்று கமிசார்கள் உற்பத்தி செய்த வீரம் விளைந்தது போன்ற போலி நாவல்களால் கட்டமைக்கப்பட்ட போலி நம்பிக்கை அவர்களுடையது.

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2022 10:35

தே- ஓர் இலையின் வரலாறு- வெளியீடு

மதிப்பிற்குரிய ஆசிரியர்.ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த  நாள்(19.2.22) என் வாழ்வில் மிக முக்கியமான நாள் நான்கு தினங்களுக்கு முன்பு சிறில் அலெக்ஸ் அண்ணாவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது உப்புவேலி புத்தகம் 20 எண்ணிக்கை வேண்டும் என்று அண்ணா கேட்டிருந்தார்கள். தே ஒரு இலையின் வரலாறு புத்தகத்தின் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.அதற்கான அரங்கினை அண்ணா தேடிக் கொண்டிருந்தார்..

எனக்கு தெரிந்த சில அரங்குகளை அண்ணாவிற்கு சொன்னேன்.தேர்தல் சமயம் மேலும் நேரம்  ஒத்துவரவில்லை பின்னர் அண்ணனின் முகநூலில் அந்த  அழகிய அழைப்பிதழ் பார்த்தேன்.

நிகழ்வில் கலந்துகொள்ளும் அத்தனை பேச்சாளர்களும் என் மனதிற்கு மிக விருப்பமானவர்கள் இந்த நிகழ்விற்காகவே மதுரையிலிருந்து நேற்று இரவு கிளம்பி வந்து விட்டேன் .புத்தக கண்காட்சி சென்று விட்டு  மாலை தன்னறத்தின் சில நூல்களும் எடுத்துக்கொண்டு நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு 5 மணிக்கு வந்து சேர்ந்தேன்.

அகரமுதல்வன் சிறில் அலெக்ஸ் அண்ணா அரங்கின் பணிகளே தொடங்கியிருந்தார்கள்.அஜிதன்,பாரதி பாஸ்கர்  அக்கா,விஷ்ணுபுரம் நிகழ்வின்போது பார்த்த மேலும் சில நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். நிகழ்வு நடக்கும் அரங்கின் வெளியே புத்தகங்களை பார்வைக்கு வைத்துவிட்டு மனிதர்களின் முகங்களை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அழைப்பிதழில் புகைப்படம் பதிவு செய்திருந்ததால் கார்த்திக் புகழேந்தியையும் அடையாளம் கண்டு கொண்டேன்.

சிறில்  அண்ணா  பாரதி பாஸ்கர் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவுடன் அவர் குக்கூ தன்னறம் பற்றி ஏற்கனவே நன்கு தெரியும் என்று சொன்னது சந்தோஷமாக இருந்தது.தன்னறம் பதிப்பகத்தின் புதிய நூல்கள் பற்றியும் புத்தக கண்காட்சியில் விற்பனை குறித்தும் நண்பர்கள் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.யுவன் சந்திரசேகர் ,தங்கவேல் ,காளி பிரசாத் மேலும் புதிய நண்பர்களும் வந்து சேர நிகழ்வு துவங்கியது.

சிறிய ஆனால் ஒரு செறிவான கூட்டம் என என்னால் உணர முடிந்தது.கடைசி இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். அகரமுதல்வன்  பேசத்  துவங்கிய ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு என்னால் உணர முடிந்தது இந்த நிகழ்வு ஒரு தீவிரமான  மனநிலைக்கு  எடுத்து செல்லும் என்று.

காளி பிரசாத் மற்றும், கார்த்திக் புகழேந்தி பேசிய பிறகு குளிரூட்டப்பட்ட அந்த அறைக்குள் ஒரு வெம்மையை உணர்ந்தேன்.இது தே என்னும் நூலின் அறிமுக கூட்டம் என்றபோதிலும் சரி நிகர் உப்பு வேலி  நூல்  பற்றி அனைவரும் பேசினார்கள்.ஒரு நூல் என்பது மரம் போல அத்தனை வேர்கள் பரப்பி தரையினுள் ஆழ்ந்து நீரை தேடுவது போல இந்த நிகழ்விற்கு வந்த ஒவ்வொருவரும் ஒரு தளத்திலிருந்து இந்த நூலினை குறித்துப் பேசிக் கொண்டே சென்றார்கள். குழந்தை அசைவுரும்  பந்தை பார்த்தால் உயர்வது போல நான் இந்த நிகழ்வினை பார்த்து எனக்குள் வியந்து கொண்டே இருந்தேன்.

இவர்கள் எல்லாம் பேச பேச எரியும் பனிக்காடு புத்தகமும் பாலா அவர்களின் பரதேசி திரைப்படமும் என் கண்முன்னே விரிந்தது.சருகில் பற்றிக்கொண்டு மெல்லிய சத்தத்துடன் எரியத் தொடங்கிய தீ மளமளவென்று கொழுந்துவிட்டு ஆக்ரோஷத்துடன் எரிவது போல இருந்தது பாரதி பாஸ்கர் அக்கா பேசி முடித்த சமயம் உணர்ந்தேன்.

அத்தனை உணர்வுப் பூர்வமாக இருந்தது.உப்பு,பருத்தி,தேயிலை இந்த மூன்று பொருட்களும் இந்திய தேசத்தில் விளையக் கூடியவை.ஆனால் இதன் பின்னால்இருக்கும் வரலாறு எவ்வளவு முக்கியம் என இவர்கள் அனைவரும் பேசிய சமயத்தில் உணர்ந்து கொண்டேன்.பிரிட்டிஷ் காலத்திற்கு முந்தைய நமது மரபு பிரிட்டிஷ் காலம் அதன் பின்னர் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை என எல்லா தளத்திலும் உப்பும் தேயிலையும் பயணித்துள்ளது உருமாறி உள்ளன.அதனால் உருவாகியிருக்கும் ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யம் அதனை  விளைவிக்க பாடுபடும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அதன் பின்னர் இருக்கும் உலக அரசியல் ஐரோப்பா சீனா மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் போராட்ட காலம் என இந்த உரையாடல் ஒரு பெரும் ஊசலாட்டத்தை நிகழ்த்திக் காட்டியது.ராய் மாக்ஸம் என்னும் ஒரு பயணி எத்தனை அதிர்வலைகளை உருவாக்கியுள்ளார்அவரும் இந்த நிகழ்வில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

நிகழ்வு நடக்க நடக்க இன்னும் நிறைய நண்பர்கள் வந்து அமர்ந்தனர்.இரு பெண் குழந்தைகளுடன் வந்தமர்ந்த அக்கா அவர்களின் முகத்தில் இருந்த தீவிரம் இந்த நிகழ்விற்கு சம்பிரதாயமாக அழைப்பின் பேரில் வந்திருந்த நண்பர்களின் நிலைகொள்ளாமை, அனைத்தையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஏனெனில் நிகழ்வு  2 மணி  நேரத்திற்கு கூடவே நடைபெற்றது.ஏனெனில் நானே அப்படி தவித்து இருக்கிறேன் வேறு சில நிகழ்வுகளில். ஆனால் இந்த நாள்  இது எனக்கான தளமாக உணர்ந்தேன்.

வரலாறு,மேலும் எந்த ஒன்றை எடுத்தாலும் அதன் ஆதி என்னஅது இன்று எப்படி உருமாறியுள்ளது மேலும் பல தேசத்திலும் அது எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ள விருப்பப்படும் மனது என்னுடையது.என் மேல் வெகுநாளாக படிந்து இருந்த சோர்வும் அயர்ச்சியும் இந்த நிகழ்வில் பாம்பு சட்டை உரிப்பது போல நானே கழட்டி வைத்து விட்டேன். புதிய பாதை, உற்சாகம் ஒரு திறப்பு அடைய பெற்றேன். ஆறாவது வகுப்பில் சைக்கிள் நன்றாக ஓட்ட கற்றுக் கொண்ட நாளில் இருந்த அந்த உற்சாகம் இந்த நிகழ்வு முடிந்து செல்லும் போது எனக்கு இருந்தது…

யுவன் சந்திரசேகர் பேசியது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் நிதானத்துடன் இருந்தது.அவரின் நுண்ணுணர்வு,வெளிப்படைத்தன்மை மேலும்  மேடையில் மற்றவர்கள் பேசும் போது அவரின் உடல் மொழி என ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன்.

இறுதியாக சிறில் அலெக்ஸ் அண்ணன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் எனக்கு ஏனோ  காட்சன் சாமுவேல் பாதர் அவர்களின் நினைவு வந்து சென்றது.உண்மையில் எல்லோரும் இந்த நிகழ்வில் சொன்னது போல சிறில் அலெக்ஸ் அண்ணா இவ்வளவு ஆர்ப்பாட்டமான நிகழ்வுக்குப் பிறகும் அதே அமைதி தன்னிலை மாறாமல் பேசினார்.

 

ஒரு  எளிய வாசகராக பதிப்பகத்தை சார்ந்தவனாக புத்தகம் விற்பனை செய்பவனாக மொழிப்பற்றாலானக மாணவனாக எழுத்தாளனாக தலைவராக ,இந்திய தேசத்தின் ஒரு பிரதிநிதியாக,வாக்காளராக பல தளங்களில்  என்னை கற்பனை செய்து கொண்டேன்.ஏனெனில் வந்திருந்த அனைவரும் ஒரு துறை சார்ந்து மிக நீண்ட நெடிய காலம் பணியாற்றி இருந்தார்கள் அவர்கள் இந்த நூலினைப் பற்றி அதிலிருந்து சில பிழைகள் பற்றி அவற்றில் இருந்த சரி தவறு நேர்த்தி என பலவற்றை பற்றி சொன்னார்கள் இதுவெல்லாம் எனக்கு மிகப் பெரிய படிப்பினையாக இருந்தது.

ஆனால் எனக்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு இந்த நிகழ்வு முழுவதுமாக உள் சென்றதற்கான காரணம் என்ன என என்னால் உணர  முடிந்தது. நிகழ்வு முடிந்து ஆட்டோவில் வீடு செல்லும்போது கூட என் மனது உற்சாகத்தில் வைத்துக் கொண்டிருந்தது ஒன்று தன்னறம் பதிப்பகம் பற்றி நண்பர்கள் பாராட்டுக்களையும் இந்த நிகழ்வில் நண்பர்கள் தெரிவித்தார்கள் மேடையில். அதுவும் காரணமாக இருக்கலாம் இல்லை ஏதோ ஒரு கண்டடைவை என் மனம் பெற்றுவிட்டது.

நிச்சயமாக உப்பு வேலி மற்றும் தே புத்தகத்தை எத்தனை தீவிரத்துடன் படிக்க வேண்டும் என உணர்ந்தேன்.அதன் மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு மென்கெட்டுள்ளார் மேலும் தன்னை வேறு ஒன்றை உணர வைத்த நூலை எல்லோர் கைக்கும் கொண்டு போய் சேர்த்த கார்த்திக் புகழேந்தி மீண்டும் இந்த நூலை வாசிப்பு வட்டத்துக்குள் கொண்டு வர மெனக்கெட்டு இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த அகர முதல்வன் ,மூல கணபதியான ராய் மாக்சிம்  மற்றும் ஆசிரியர் உங்களையும் நன்றியோடு நினைத்து கொள்கின்றேன்.

என்றும்  அன்புடன்

ஸ்டாலின்.பா,  

காரியாபட்டி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2022 10:34

இயற்கையின் ஆசீர்வாதங்கள் -நாராயணன் மெய்யப்பன்

வணக்கம். நலம். நலமே விழைக என்று பிராத்திக்கின்றேன்.

மதுரையில் சித்திரை பிலவ வருட தொடக்க நிகழ்ச்சி அளித்த உற்சாகம் ஊக்கம் பெற்று சிறய முயற்சிகள் எடுத்திருந்தாலும் தன்னியல்பாக நடைபெற்ற சில மாற்றங்கள் மனதிற்கு அமைதி அளித்தது குறிப்பாக தோட்டத்தில் ஒரு வேளான் குடி வாய்க்கப்பெற்றது. இந்த வருடம் தை பூசத்திற்கு முன்பாக மார்கழி பூசத்தை கணக்கிட்டு பழனி பாதயாத்திரை முழுதாக நிறைவுற்றது என்பது மிக நிறைவான ஒன்று. காரணம், தை பூசத்தின் நிகழ்வுகள் எந்த வித முன் எச்சரிக்கையும், ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டியதும், எந்த மேன்மையும் இல்லாமல் நடைபெற்ற நிகழ்வு.

2016 கார்த்திகை தொடங்கி ஒருங்கிணைந்த பண்ணை முறையில் சில கோணங்களில் படி படியாக தொடர்ந்து நிதானமான வேகத்தில் முன் செல்கிறோம். இந்த வருடம் 2022 தை பொங்கலும், நெல் அறுவடையும் மனதிற்கு மிக அனுக்கமானது, மன நிறைவால். இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒரு கூட்டுறவு ஏற்பாட்டை பரிசோதனை முறையில் செயல்படுத்தி அதன் படி நாகு அண்ணண் மற்றும் குடும்பத்தார்கள் தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவர்களுடன் கொண்டாடிய மாட்டு பொங்கல் மிக மிக நிறைவான நாள். அலங்கரிக்கப்பட்ட காளைகள், உலாவும் ஆடுகள் அதிலும் ஆட்டுக்குட்டிகள் அதனுடன் குழந்தைகள் விளையாடும் நிமிடங்கள், இரு நாய்கள், சில பறவை சப்தங்கள், மரங்கள், பயிர், நாகு அண்ணண் குடும்பத்தார்கள் முழு ஈடுபாடு, என் பெற்றோர்கள், மனைவி மக்கள் என்று கரைந்துகொண்டே இருந்தேன் நான் இல்லாமல் ஆகும் தருணங்கள். பற்றற்ற பற்றை நோக்கி செயலில் கரைந்து நான் இல்லாமலே அகும் காலம் விரைந்து வர வேண்டிக்கொண்டேன்.

இந்த கூட்டுறவு முறையில் முதல் அறுவடை இது. அம்பாசமுத்திரம் 16 பலகார அரிசி இயற்கை முறையில் விளைவிக்கப்பெற்று அறுவடை அகியுள்ளது. ஒன்றுக்கு சற்று கூடுதலான ஏக்கரில் 20 மூட்டை அறுவடையாகியுள்ளது, கால் ஏக்கருக்கும் குறைவான செய்யில் கருப்புகவனி விளைவிக்கப்பெற்று 1 மூட்டை அறுவடையாகியுள்ளது. 2018 முதல் அறுவடை கொள்ளு 150 கி அதற்கு பிறகான அனைத்து முயற்சியும் எள்ளளவு பலன் தான் (ஒரு முறை நெல் அரை ஏக்கருக்கு 5 மூட்டை, உளுந்து 100 கி, ஒரு முறை பட்டம் தவறி பயிர் செய்து விளைந்த பின்னும் முற்றிலும் அறுவடை செய்ய முடியாமல் போனது) புத்திக்கொள்முதல் மட்டுமே. அங்கிருந்து இன்றைய நிலை என்பது நினைக்க நினைக்க நிறைவான இடம். அறுவடை ஆன பிறகு தந்தை படத்தை அனுப்பியதும் பார்த்த கணம் மனம் ஒன்றி ‘அரோகரா! அரோகரா!’ என்று கூக்குரலிட்டது. சரணாகதி தான் வேறு என்ன செய்யமுடியும்? ஐம்பூதங்களின் ஆற்றலையும் பின்னி பூமாலை செய்து படைக்கலாம் அந்த நம்பிக்கைக்கு அற்புதங்கள் நிகழ்ந்தால் இயற்கையின் கருனை அது.

இன்னல்கள் இல்லாமல் ஒரு அசைவும் கிடையாது ஆனால் அவை இயல்பானது கடக்கவேண்டும் என்ற மனநிலை மிக அவசியமானது. இந்த முறை தொடர் மழை கால்நடைகளுக்கு ஏற்ற நிலை இல்லை ஆகையால் அவற்றை நாகு அண்ணணின் ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஆக தினமும் ஊரிலிருந்து வந்த போக வேண்டும் அந்த இடைப்பட்ட நேரத்தில் மயில் கூட்டம் பயிர்களை சூரையாடும், களை மேலான்மையும் சாத்தியமற்று போயிற்று, கடைசி நேரத்தில் ஒரு வித பதற்றம் இதற்கு மேல் மழை வந்திட்டா என்று! ஒரு வழியாக அறுவடை நாளை குறித்து அதற்கு தயாரானதும் அடுத்த விசயம், 5 ஆண்டுகள் முன்ப கேட்ட விவசாய மின்சாரம் (4 ரூ) 2020 பின் மாதங்களில் கிடைத்தது,10 அடி வழியில் 1.1/2 அடியில் மின் கம்பங்களை ஊன்றிவிட்டார்கள் அறுவடை இயந்திரம் வர வழியில்லை. முன் தோட்டத்தில் பேசி வழி வகை செய்து இந்த ஆண்டு அறுவடை முடிந்தது இதற்கான நிரந்திர வழி செய்ய வேண்டும்.

3 வயதிற்கு மேலான தென்னங்கன்றுகள் தூர் கட்டாததால் அதற்கு மண் அனைத்து வேலை செய்து முடித்தோம். இந்த ஆண்டு மழையில் சேதம் தென்னைக்கு தான் அதிகம். வடிகால் திறன்பட இருத்தல் வேண்டும் இதற்கு சாத்தியமற்ற நிலை சொட்டு நீர் பாசன வசதிகள் செய்திருந்தபடியால், ஆக பொறுத்திருந்து வழி செய்ய வேண்டும் அதற்குள் பிழைக்கவில்லை என்றால் மாற்ற தான் வேண்டும். வடிகால் வசதியற்ற இடங்களில் ஒரே வழி, மழை காலம் முடிந்த கையாடு கன்று வைப்பது தான்!

கன்றுகள் நட்டதில் 60% மேல் மரங்கள் ஆகிற்று, ஆம் கன்றுகள் காடாகிக்கொண்டிருக்கிறது. தொடக்கதில் அதிகம் இருந்தாலும் வேர் கரையான் பாதிப்பினால் குறைந்திருக்கிறது அதற்கு வழி பார்க்கவேண்டும். காடு எங்களை ஆசீர்வதித்தது முதல் பலனாக நெல்லி கனி கொடுத்து. ஊரில் உறவினர்களுக்கு கனிகள் கொடுத்து மகிழ்ந்தோம் ஏகாதசி விரதத்திற்கு அத்துடன் பல முயற்சிகள் யூடிப் வாயிலாக தேன் நெல்லி, நெல்லி ஊருகாய், நெல்லி தொக்கு என்று. என்ன செய்தோம் என்று இந்த கொடை எங்களுக்கு என்று நெல்லி கனியை சுவைத்த போது மனம் வினவியது.

இதே நேரத்தில், விஷ்ணுபுர நண்பர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் வேளான் நிலை பற்றி பேசியும், நிலையை விசாரித்தும், ஊக்கம் அளித்தும், தேவைப்படும் நேரத்தில் தொடர்புகள் ஏற்படுத்தி உதவியும், உரிமையோடு பொருளாதார பின்னடைவை கவனிக்க சொல்லும் அவர்கள் அனைவருக்கும் என் நிலையை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். புத்திக்கொள்முதலை பயண்பாட்டிற்கு கொண்டுவருகிறோம் அதன் ஒரு சாரம் கூட்டுறவு முயற்சி நம் நோக்கம் என்ன என்று தெரிந்து அதில் அவர்களுக்கு சாதகம் இருக்கும் என்று நம்பும் மக்கள் காணக்கிடைக்கிறார்கள், இந்த முறை மரபான நெல் அது இது என்று இல்லாமல் அந்த வட்டாரத்தில் எது இருக்கிறதோ அதைய பயிர் செய்தோம், அடுத்ததாக இயற்கை தொழுவுரங்களை வெளியில் இருந்து வாங்குவதை குறைத்து தோட்டத்து கால்நடை உரங்களே பயண்படுத்தினொம், கட்டாயம் களை எடுப்போம் என்றில்லாமல் நேரம் தப்பியிருந்ததாலும் கூலிக்கு கட்டாது என்பதாலும் களையை களையவில்லை, முன் எப்பொதும் இருந்த செலவைவிட குறைவு தான். தொடர்ந்து செயல்படுகிறோம் சிறிது சிறிது என்றாலும் முன் செல்கிறோம் காலம் மனம் இறங்கி எங்களை ஏற்றுக்கொள்ளும் வரை. அக்கரை கொண்ட அன்பை பரிமாறும் நண்பர்கள், பெரியவர்கள், சான்றோர்கள் ஆசீர்வாதங்கள் தான் நம்மை வழிநடத்தும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. ஆகவே கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கான தனி கட்டுரையும் அதன் தோட்டத்தின் படங்களை பதிவிட்டு தெரியபடுத்துகிறேன்.

ஒரு ஆவலும் உண்டு, விஷ்ணுபுரம் பொருளாதார விவாத வட்டம் அமைய பெற்று விவாதிப்பது. மின்னஞ்சல் குழுமத்தில் சில உரையாடல் நடந்தது பாலா அண்ணணுடன் அவர்களை கண்ணண் தண்டபானி அவர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகர்நிலை காந்தி நிகழ்ச்சியில் கலந்து சில கேள்விகள் கேட்டதுண்டு அவற்றை தொடர்ந்து, இந்த ஆர்வம் சாரந்த அனைவரும் குழுவாகவிவாதிப்பது. சில சாத்தியங்களை வாய்ப்புகளை பொருளாதாரம் கடந்து இன்றைய சூழலில் குவிந்து கிடக்கும் இயற்கை பற்றிய தகவல் மற்றும் தொடர்ந்து கவனிக்கப்படும் நிகழ்வுகளின் தரவுகள் கொண்டு எப்படி ஆக்கபூர்வமான முடிவுகளை எட்டிபிடிக்க பயண்படுத்தலாம் என்று.

நிறைவாக, உங்களுடனான நேரடி உரையாடலில் நீங்கள் எடுத்துரைத்த சொற்களை மீண்டும் மீண்டும் நினைவுபடித்திக்கொள்கிறேன் ‘பஞ்ச பூதங்களுடன் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் அவசியம்…’ பிரபஞ்சம் நமக்கு தந்துக்கொண்டே இருக்கிறது காட்டிக்கொண்டே இருக்கிறது அதை உணரும் காலம் தான் தேடுதல் நமக்கு அளிக்கும் விடுதலை.

பாலபாடம் சிறு குறிப்புகளாக ஒழுங்குபடுத்தலாம் என்று தொன்றுகிறது;

– வேளான் நிலம் கண்ணில் பட வேண்டும், தினம் தினம் பார்வையிடும்படி. நாம் அங்கு இருக்கவேண்டும் அல்ல ஒரு வேளான் குடி இருக்க வேண்டும், குறைந்தது காவல் குடி. இல்லையேன்றால் எத்தனை காலம் வேண்டுமானாலும் பொறுமையாக இருங்கள் தயாரானதும் செயல்படுங்கள்.

– வேளான்மையில் உணவு பிரதானம் என்றிருத்தல் சிறப்பு (லாபம் நஷ்டம் என்பதையேல்லாம் கடந்து). வேளான் பின்புலம் இல்லாதோர் ஒரு போதும் தன் பணியை தொழிலை விட்டு முழு நேரம் வரவேண்டாம். எனக்கு அறிவுரித்தைய கடைபிடித்தேன் ஆகையால் அனுபவித்து பதிவிடுகிறேன்.

– ஆர்வம் மிக்கவர் என்றால் மாடி தோட்டம், குறுகிய இடத்தில் முயற்சி என்று தொடங்கலாம். ஒரு செடி ஒரு மரம் வளர்த்து அதில் அடையும் திருப்தி உங்களுக்கு இதை பெரியதாக செய்ய வேண்டுமா என்பதை அடையாளம் காட்டும்.

– கால்நடை இல்லாத இயற்கை வேளான்மை பொருள் விரையம்.

– புதிதாக வேளான் நிலம்/தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு!

– புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால்(எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 ஆடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.

– எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனினுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்கையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.

– சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வெறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.

– எல்.ஈ.டி விளக்குகள் பூச்சிகளை, வண்டுகளை விரைவாக ஈர்கிறது அதனால் கவனம் தேவை

நன்றி!

நாராயணன் மெய்யப்பன்

தை அறுவடை

புரட்டாசி பட்டம்

என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!

ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்

கன்றுகள் காடாகவேண்டும்!

இயற்கைவேளாண்மை -கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2022 10:31

புதியவாசகர் சந்திப்பு கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெளியுலகில் இருந்து தனிமை படுத்தப்பட்டிருந்த பண்ணை நிலத்தினுள் புதிய வாசகர்களில் ஒருவனாக உள்ளே நுழையும் போது நினைக்கவில்லை வெளியேறும்போது மனதில் இத்தனை தெளிவு ஏற்பட்டிருக்கும் என்று.

இலக்கியத்தின் முதன்மை ஆளுமை அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்துக்கொள்ளும் அரிய அனுபவம் தான். சிறுகதையாக உருவாகாத படைப்பை இயற்றிய என் சுமார் சித்தத்திற்க்கு அவ்வாய்ப்பை அளித்ததற்காக நன்றிகள் கோடி தெரிவித்துக் கொள்கிறேன்.

விஷ்ணுபுரம் விழாவில் தங்களை இரண்டு நாட்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது முதல்முறை சந்திக்கும்போது ஏற்படும் தயக்கங்களில் இருந்து முற்றிலும் விடுபட உதவியாக இருந்தது. பொதுவெளியில் அறியமுடியாத ரகசியத்தை சொல்லி நிகழ்வை தொடர்ந்ததில் இருந்து இரண்டு நாட்களும் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பயனுள்ள தகவல்களை மட்டுமே தாங்கள் பேசியதில் ஏற்பட்ட தாகம் இன்னும் அடங்கவில்லை. அறிவியக்கம் செயல்படுவதே அந்த தீரா தாகத்தில் தான் என்று சொல்லாமல் உணர வைத்தீர்கள்.

கலையில் ஈடுபடுவது ஒரு மனிதனின் தனிப்பட்ட மனதிற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் எவ்வகையில் பொருள் அளிக்கும். எத்துறையிலும் ஈடுபடுவதற்கு முன் ஏன் மூலநூல்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். குறைந்த நபர்கள் மட்டுமே வாசிக்கும் இச்சமூகத்தில் இலக்கிய கலந்துரையாடல்களில் பங்கேற்பதின் முக்கியத்துவம். அவ்வுரையாடல்களில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று பல எழுத்து வடிவங்கள் என்று மட்டுமல்லாமல். சுருட்டு, கத்திரிக்கா முதல் பௌத்தம், சமணம் என்று எதைப் பற்றிப் பேசினாலும் வரலாறு என்னும் கழுகின் மேல் அமர்ந்து பறந்து கொண்டு முழுப்பார்வையில் நுண்தகவல்களுடன் கருத்துகளை முன்வைக்கும் தங்களை அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டிருந்தேன்.

ரயில் பயணச்சீட்டுகளை ரத்து செய்வதில் தாங்கள் செய்த லீலைகளை பகிர்ந்து எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்று நிரூபிக்க முயன்றாலும் அவர்கள் அசாதாரணமானவர்கள் என்னும் பிம்பம் களைய கொஞ்சம் சிரமப் படுகிறது. நிகழ்வில் சாம்பார் சமைப்பது எப்படி என்று மட்டும் சொல்லித் தராமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியை சமைப்பது எப்படி என்றும் பல சிந்திக்க வைக்கும் வெடிச் சிரிப்புகளுடன் சொல்லித் தந்தீர்கள்.

மனித வரலாற்றிலேயே தற்போது உள்ளது போல் சிறந்த சூழல் இதற்கு முன் இருந்ததில்லை என்றும். இந்த அற்புதமான வாய்ப்புகள் நிறைந்த சமூக அமைப்பில் பிறந்துவிட்டு அதை குறை சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க மறுப்பீர்கள் என்றால் அது யாருடைய பிரச்சனை? என்று கேள்வியுடன் தாங்கள் முன்வைத்த பார்வை மிக முக்கியமானது. இவை எல்லாம் சிறு துளியும் சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் வகையில் சோர்வே அறியாத ஒருவராக கண்முனே திகழவும் செய்தீர்கள் என்பது அதைவிட முக்கியமானது.

புதிய வாசகர்களின் படைப்புகளின் குறைகளை வைத்தே அமைந்த தங்கள் பெரும்பாலான உரையாடலில் வாசிப்பது எழுதுவது பற்றிய போதுமான வெளிச்சத்தை அளித்தீர்கள். அதை கொஞ்சம் கூட யாரையும் துன்புறுத்தாத வகையிலும் வயது வித்தியாசம் எதுவும் பார்க்காமலும் அனைவரையும் ‘ங்க’ உடன் தான் நேர்த்தியாகவும் கையாண்டீர்கள். எடுத்துக்காட்டுக்கு தங்கள் படைப்புகளை ஒன்றை கூட சொல்லாமல் பிற முதன்மை படைப்புகளை மட்டுமே சுட்டிக்காட்டினீர்கள். மேலும் தகவல்களை அறிய சில கட்டுரைகளை சொன்னதே தங்கள் எழுத்தென தாங்கள் சுட்டிக்காட்டியது என்று கண்டிப்பாக பதிவு செய்தே ஆகவேண்டும்.

“ஈஸ்டு தான் பெஸ்ட் வெஸ்டர்ன் பிலாஸஃபி குறைப்பட்டது” என்று ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன் என்று கொஞ்சம் கறாராக சொன்னதும். ஆன்மீகம் தத்துவம் போன்ற தளங்களில் கேட்பவர் மேலோட்டமாக பொதுப் புரிதலோடு கேட்கிறார் என்றால் அதை விரிவாகப் பேசாமல் இவ்வளவு குறைவாக அறிந்துகொண்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்று குறைந்த சொற்களில் கேட்பவருக்கே உணர வைத்துவிட்டு அமைதியாக அதைப் பற்றி மேற்கொண்டு பேசாமல் தவிர்த்ததும். அத்தளங்களில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த கல்வியும் அதனால் அதற்கு தாங்கள் அளிக்கும் மதிப்பும் வெளிப்பட்ட தருணங்கள் அவை என்று எண்ணுகிறேன்.

இத்தகைய விஷயங்களில் குறைந்தது ஐந்து வருடமாவது கற்பதற்கு ஒதுக்கி ஒரு தகைமையை அடைந்தவர்களே தரமான உரையாடலை தங்களிடம் நிகழ்த்த முடியும் என்றும். ஒன்றை எப்படி அணுக வேண்டும், கிடைக்கும் தகவல்களை வைத்து எப்படி சிந்திக்க வேண்டும் என்பதும் தான் தாங்கள் எங்கள் முன் நடத்திக் காட்டியது என்றும் புரிந்துக் கொண்டேன். இந்த அனைத்து அறிதலும் சிறந்த சூழலில் நல்ல உணவுடன் அமைந்தது கூடுதல் சிறப்பாகும்.

நிகழ்வு முடிந்து மீண்டும் எதார்த்த உலகில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மூத்த குடிகாரனுக்கும் இளைய கண்டக்டருக்கும் ஏற்பட்ட முக்கிய மூன்று ரூபாய் தகராறால் நிற்க. பேருந்து ஸ்பீக்கரின் ரேடியோ விளம்பரம், சக பயணிகளின் செல்போனின் சினிமாப் பாட்டு, வெளியே கோவிலின் பக்திப் பாட்டு, மற்ற வாகனங்களின் ஹாரனுடன் சேர்ந்து உண்டான ஓசையென அனைத்தும் இணைந்து. அந்த கெட்ட வார்த்தையாலான உன்னத சண்டைக்கும், அதைக் கண்டுக்காத பின் இருக்கையின் பான் வாசனை மணக்கும் இந்தி உரையாடலுக்கும், முன்னிருக்கையின் வெள்ளை சட்டையின் அரசியல் உரையாடலுக்கும் பின்னிசை என ஒலிக்க.

இத்துடன் சேர்ந்து இன்னது என பிரிக்க முடியாத பலமணங்கள் ஒன்றாக கலந்து குமட்டலை உன்டாக்கிய லவ்கீகத்தின் மகத்தான உச்சத் தருணத்தில். ஜன்னலின் வழியே தெரிந்த கான்கிரீட் பெட்டிகளின் குவியலின் மேலே குறுக்காக ஓடிய மின்கம்பிகள் உண்டாக்கிய நீள் சதுரங்களின் நடுவே தெரிந்த நீல வானத்தை நோக்கிக் கொண்டு. இவையாவும் நுழையாத மனவேலிக்குள் மகிழ்வாய்.. தனிமையாய்.. இனிமையாய்..

என்றென்றும் நன்றியுடன்,

விஜய் கிருஷ்ணா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.