நிமிர்தல் – கடிதங்கள்

நிமிர்பவர்களின் உலகம்

ஆசிரியருக்கு,

மிக அருமையான பதிவு. முதன்முதலில் உங்களை நேரில் சந்தித்த அந்த கொல்லிமலை தருனங்கள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளன். நீங்கள் பேசிய வார்த்தைகளைக்கூட இன்னும் அருகில் கேட்க முடிகிறது. எப்போதும் கீதை உரை நீள்பயணங்களில் கேட்டபடி செல்வது இப்போதும் மிகப்பிடித்தமான ஒன்று. எஸ் ரா வை நான் முதன்முதலில் புத்தகக்கண்காடையில்தான் கண்டேன் அப்போது அடைந்த பரவசம் நேற்று முன் தினம் பார்த்தபோதும் வந்தது. சட்டென்று கட்டி தழுவ உளம் வந்தது. அப்புறம் வேகமாக விருட்சம் கடையில் சென்றுவிட்டார். பின் கொஞ்ச நேரம் பின்னால் இருந்து பார்த்த்க்கொண்டே இருந்தேன்.

சென்றமுறை அடையாளம் பதிப்பகத்தில் சோ. தருமன் அவருடைய நாவல் வாங்கசென்றபோது எதிர்பாராமல்  அவரை சந்தித்தேன் பரவசம் சொல்லமுடியாது. அவர் பேசிக்கொண்டே சென்றார் நான் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். சா.கந்தசாமி, நாஞ்சில், இப்போது காளி, அசோக்குமார், பிரபு, திருமா, மணி, தாமரை இப்படி பார்த்தால் பரவசமே எஞ்சி நிற்கிறது.

கடைசியாக வசந்த் இயக்குனர் அருகில் இருந்து பார்த்ததும் மீண்டும் மீண்டும் பேச முயற்சித்து முடியாமல் போனதும் இன்னும் நினைவில் இருக்கிறத அந்த தருணம் வாழ்வின் பொக்கிஷ தருணங்கள்.

அனைத்தையும் வார்த்தையில் சொல்ல உங்களால் முடிகிறது. நான் உணர்ந்தவற்றை அப்படியே எழுதி இருப்பதில் உள்ள எழுச்சி சொல்லமுடியாது

கட்டுரைக்கு நன்றி.

அன்புடன்,
திருமலை

அன்புள்ள ஜெ

இன்றைய கட்டுரை மிக அருமையானது. உணர்ச்சிகரமானது. நான் வாசிக்க ஆரம்பித்த காலம் முதலே இந்த உபதேசத்தைச் சந்தித்து வருகிறேன். ’ஏன் படிக்கிறே, தேவையில்லாம?’ என்பது ஒரு கேள்வி. அந்தக்கேள்வியின் இன்னொரு பக்கம்தான் ‘வாசிச்சா போருமே, எதுக்கு கூட்டத்துக்கு போறே?’ இவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் அவ்வளவு காழ்ப்பு இருக்கிறது. ஆகவே இலக்கியவாதிகளைச் சந்திப்பதை அப்படி எதிர்ப்பார்கள்.

என் நண்பர்கள் நான் ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது கேலி செய்தார்கள். கொஞ்சநாள் கழித்து நானே சும்மா காமெடி நடிகர் சூரியை சந்தித்தேன் என்றேன். அப்படியே பரவசமாகிவிட்டார்கள். துளைத்து துளைத்து கேள்வி கேட்டார்கள். அடச்சீ என்று ஆகிவிட்டது. எழுத்தாளர்கள் உள்ளும் புறமும் வேறாக வாழ்கிறார்கள் என்று சொல்லும் இந்த குற்றெழுத்தாளர் எவரை ஓடிப்போய் சந்தித்து இளிப்பார்? அரசியல்வாதிகளைத்தான். என்ன சந்தேகம்?

எனக்கு இலக்கியத்தை கொண்டாட எழுத்தாளர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒன்று உண்டு. இதை பலபேர் உணர்ந்திருக்கலாம். நாம் ஓர் எழுத்தாளரை நேரில் சந்தித்ததுமே அவருடைய புத்தகங்கள் மாறிவிடுகின்றன. அவர் முகம் கண்முன் வந்துவிடுகிறது. அவருடன் பேசுவதுபோலவே தோன்றுகிறது. முதன்முதலாக 2007ல் பிரபஞ்சனைச் சந்தித்தபோது இதை உணர்ந்தேன். அதன்பின் எந்தச் சந்திப்பையும் தவறவிடுவதே இல்லை.

கே.விஜயகுமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.