Jeyamohan's Blog, page 823

February 23, 2022

தன்னறம்- உரைகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த 28.01.22 அன்று, ஈரோட்டில் டாக்டர் ஜீவா நினைவு அறக்கட்டளை அரங்கில் நிகழ்ந்த ‘தன்னறம் இலக்கிய விருது விழா’ என்பது எல்லாவகையிலும் எங்கள் எல்லோரின் அகத்தை நிறைக்கும்படி அமைந்தது. தமிழின் மூத்த படைப்பாளுமை மனிதரான எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு உங்கள் கைகளால் தன்னறம் விருது அளிக்கப்பட்டதை சமகால நல்லசைவுகளுள் ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். நிகழ்வுக்கு வந்திருந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களின் அன்புக்குரிய வாழ்த்துகள் இப்பவரை நீடிக்கின்றன. இந்நிகழ்வுக்காகத் தங்கள் உழைப்பை முழுதுற வழங்கிய அனைத்து தோழமைகளையும் நன்றியுடன் இக்கணம் நினைத்துக்கொள்கிறோம்.

2021ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருதளிப்பு நிகழ்வில் நீங்கள் ஆற்றிய உரை மற்றும் தேவிபாரதி அவர்களின் ஏற்புரை காணொளிகளை இத்துடன் இணைத்துள்ளோம். எக்காலத்தும் எங்கள் எல்லா முயற்சிக்கும் ஆசிவழங்கி அதை முன்னகர்த்தத் துணைநிற்கும் உங்களுக்கும், உங்களைச்சூழ்ந்த அத்தனை மனிதர்களுக்கும் தீராநன்றிகள்.

~
தன்னறம் இலக்கிய விருது – 2021

 

 

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

www.thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2022 10:31

பதிப்புரிமை- கடிதம்

Trader is a painting by Sal Marino ஓணத்தில் புட்டு வியாபாரம்

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரை படித்தேன். இந்த புட்டு வியாபாரத்தை ஏதோ பெரிய இலக்கிய கசரத் எடுப்பதுபோலச் செய்துகொண்டிருக்கிறார்கள்.  பரவலுக்கு எதிராக நிலைகொள்ளும் இணையதளங்களை இணைய இதழ்களை முழுமையாகவே புறக்கணிக்க வேண்டும். அவற்றைப் படிக்க வேண்டியதில்லை என்பதே என் எண்ணம்

ஓர் இணையதளம் வலப்பக்கச் சொடுக்கை தடை செய்திருந்தால் அந்த இணையதளத்தை உடனடியாக பிளாக் செய்யவேண்டும் என்றே நான் சொல்வேன். (அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அது வெளியிட்டிருக்கும் அத்தனை செய்திகளையும், தகவல்களையும் பொதுவெளியில் பகிருங்கள். சனியன்கள் ஒழிந்தால் எந்த தீங்கும் இல்லை). நான் அதைச் செய்கிறேன். எந்த வகையிலும் இணையத்தில் வெளியானவற்றை பிளாக் செய்ய முடியாது. ஒன்றும் செய்ய முடியாதென்றால் ஸ்க்ரீனில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து அல்லது பிடிஎஃப் ஆக்கி திரும்ப வேர்ட் ஃபைல் ஆக்கலாம். அவற்றை வேறு இணையப்பக்கங்களில் இலவசமாக பகிர்ந்து நிறைய குறிச்சொற்கள் கொடுத்தால் இரண்டாவதாக இந்த இலவசக்கட்டுரையைக் காட்டும். அவற்றை தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.

இங்கே ஒவ்வொருவரும் இன்னொருவரின் அறிவுச்செயல்பாட்டை அழிப்பதுதான் நோக்கம் என்று இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் மனநிலை எவருக்கும் இல்லை. ஆனால் இணையதளங்களில் வெளியிட இலவசமாக படைப்பு கேட்கிறார்கள்.

ராஜன் முருகேஷ்

 

அன்புள்ள ஜெ

அறிவுப்பரவலின் அறம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். சிற்றிதழ்களின் மனநிலை அது. சுந்தர ராமசாமி சொல்லிக்கொண்டிருந்தார். நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் காலத்துடன் அதெல்லாம் முடிந்தது. உங்களுக்கே தெரியும். பெருமாள் முருகன் கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்கு ஒரு கால அட்டவணை போட்டார். அதற்கு நிதியும் பெற்றிருப்பார். அந்த அட்டவணைக்குமேல் இன்னும் சில படைப்புகளை வெளியிட்டதற்காக அழிசி சீனிவாசன் மேல் புகார் செய்து அவர் வலையேற்றம் செய்து வைத்திருந்த 500க்கும் மேல் புத்தகங்களை அழிக்கவைத்தார். அவருக்கு அப்படி புகார் செய்ய உரிமையே இல்லை. நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகம் அது. ஆனால் அமேசான் போன்ற நிறுவனங்கள் அதையெல்லாம் விசாரிப்பதில்லை. புகார் வந்தாலே உடனே பிளாக் செய்துவிடுகின்றன. அதை பயன்படுத்திக்கொண்டு பெருமாள் முருகன் போன்றவர்கள் பணவெறி கொண்டு செயல்படுகிறார்கள். இந்தச் சூழலில் நீங்கள் பேசும் வெளியீட்டு முறை, அறிவுலக அறம் என்பதற்கெல்லாம் என்ன மதிப்பு?

அ.ராமகிருஷ்ணன்

இலக்கியத்தை விலைபேசுதல்…

இலக்கியமென்னும் இலட்சியவாதம்

இலக்கியத்தின் விலை – கடிதங்கள்

இலக்கியத்தின் விலை -கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2022 10:31

பயணத்தின் நிறைவு- இரா.மகேஷ்

பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,

ஒரு ஆகச்சிறந்த பயணத்தை நிறைவு செய்த பேருவகையுடன் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வெண்முரசை நான் வாசிக்க முடிவுசெய்த பல காரணங்களை கண்டறிந்தேன், அதில் மிக முக்கியமான ஒன்றாக என் நினைவுக்கு வந்தது “மகாபாரதம் நாவல் வடிவில்” என்ற  இணைத்தலைப்பு வரி.

அவ்வரியில் முற்றிலும் ஈர்க்கப்பட்டு வெண்முரசு பற்றிய சில தகவல்களை தேடிப் பார்க்க ஒரு நாள் உங்கள்  தளத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது என்னால் இவ்வளவு பெரிய தொலைவை எட்ட முடியுமா என்ற ஐயமும் எனக்கு இதில் இருந்து என்ன கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.

சரி வாசித்துதான் பார்க்கலாமே என்று முதற்கனலை கின்டிலில் வாங்கி வாசிக்க தொடங்கினேன். என்னால் நூறு பக்கங்களுக்கு மேல் வாசிக்க இயலவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு வேறு எதையும் வாசிக்கலாம் என்று எண்ணத் தொடங்க மனம் மட்டும் திரும்ப திரும்ப வெண்முரசையே பிடித்துக் கொண்டிருந்தது. வெண்முரசு முழுவதும் வாசித்தால் எப்படி இருக்கும் என்ற உள்ளுணர்வு உருவானது.

அருண்மொழி நங்கை அம்மாவின் “வெண்முரசு ஒரு நுழைவாயில்” எனும் காணொளித் தொகுப்பு நான் வெண்முரசு வாசிப்பதை தொடங்க மேலும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. முதற்கனல் அதற்கு முன்பே சில அத்தியாயங்கள் வாசிக்க தொடங்கியிருந்தாலும் அக்காணொளியை கண்டு முடித்த போதுதான் நிச்சயம் வெண்முரசை ஒரு பயணமாக மேற்கொள்வது என்ற உறுதிபாட்டை எடுத்து மீண்டும் முதற்கனலை ஆதியில் இருந்து ஆரம்பித்து அந்தப் பயணத்தை தொடங்கி முதலாவினில் நிறைவு செய்தேன். நிறைவாக.

வெண்முரசு பயணத்தைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியது நண்பர் குக்கூ ஸ்டாலின் தான். ஒரு வேளை நான் அவரை சந்திக்காமல் இருந்திருந்தால் எங்களுக்குள் நட்பு உருவாகாமல் இருந்திருந்தால் இந்த கடிதம் ஒரு போதும் நான் எழுதியிருக்க மாட்டேன் என்றே நம்புகிறேன்.

எங்களின் நட்பு உறுதி அடைந்ததற்கான முதற்காரணம் தங்களைப் பற்றிய ஒர் உரையாடலின் தொடக்கம் தான், அதுவும் முதல் சந்திப்பிலேயே. அவரின் உந்துதலின் பெயராலேயே நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதினேன். அக்கடிதம் நான் முதன் முறையாக உங்களை பார்த்த அனுபவத்தை பற்றி எழுதியிருந்தேன்.

அச்சந்திப்பில் நான் வெண்முரசு வாசிப்பதை பற்றியும் உங்களை முதன் முதலில் நேரில் பார்த்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட போது அவர் மிகவும் உற்சாகமாக அவ்வனுபவத்தை பற்றி உங்களுக்கு ஒரு கடிதம் எழுத என்னை ஊக்கப்படுத்தினார். இன்றும் அவர் என்னை எழுத ஊக்கப்படுத்திய அத்தருணம் என் நெஞ்சின் ஆழத்தில் வேரூன்றியுள்ளது.

(எழுதுங்கள், ஜெ அதனை மிகவும் விரும்புவார். அதை விட அவர் நேசிக்கும் ஒன்றில்லை. நிச்சயம் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்).

நான் வெண்முரசில் தீவிரமாக  பயணிக்கவும் ஆழமாக வாசிக்கவும் பேருதவியாக இருந்தது ஸ்டாலினுடனான அன்றைய உரையாடல்.

உங்களுக்கு ஏன் திடீரென மகாபாரதம் வாசிக்க தோன்றியது என்று என் மனைவி நான் களிற்றுயானை நிரை நிறைவு செய்யும் தருவாயில் என்னை கேட்டார். என் பதிலாக, முதலில் வெண்முரசு வாசித்தேன் என்பதை விட பயணித்தேன் என்றே நான் கருதுகிறேன்.

வெண்முரசு எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அனைத்தையும் என்றால் அனைத்தையும் தான். இது மிகைப்படுத்தி சொல்வதற்காக அல்ல எனக்கு நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு  அபரிமிதமான அனுபவம் வெண்முரசில் கிடைத்தது என்பதனை சொல்ல விழைகிறேன். அதேபோல் மகாபாரதம் பற்றிய என் புரிதல் முற்றிலும் மாறுபட்டு தெளிவான பார்வையை அடைந்த பேரானந்தம்.

பயணம் என்பது ஒரு இடத்தை இலக்காக வைத்துக் கொண்டு பயணிப்பது ஒரு சாராரின் ரகம். அனுபவம் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே  அடைய பயணம் மேற்கொண்டு நிறைவடைவது மற்றொரு ரகம். என் இலக்காக நான் திட்டமிட்டு முடிவு செய்து பயணத்தை தொடங்கி நிறைவை அடைந்தது அனுபவத்தை நோக்கமாகக் கொண்ட முறையை தான்.

ஒரு பயணம் கொடுக்கும் அனுபவம் எப்போதும் நம்முள் ஆழப்பதிந்திருக்கும், நம்மை வடிவமைக்கும், நம்மை வளர்க்கும், உரிய நேரத்தில் இன்னல்களிருந்தும், குழப்பங்களிருந்தும் ஒருவரை மீட்டெடுக்க அப்பயண அனுபவங்கள் உதவும் என்பது என் நம்பிக்கை.

வெவ்வேறு வகையான மனக் குழப்பங்களில் இருந்தும், உளச்சிக்கல்களிருந்தும் விடுபட எனக்கு பேருதவியாக இருந்தது வெண்முரசு.

அழுத்தமான தத்துவங்கள், மிக நுண்ணிய வாழ்க்கை முறைகள், நெறிகள் பல உரையாடல்களில், கதாபாத்திரங்களில்  கண்டடைந்து, கரைந்து, கடந்து பல இடங்களில் நான்  பயணித்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ஏதோ ஒரு இடத்தில் நானும் என்னை உடன் உணர்ந்துள்ளேன்.

சுயத்தை உணர்ந்து நம்மை நாமே முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் தருணத்தை போன்ற அனுபவம் அனைத்திலிருந்தும் விலகி நமக்கு ஓர் விடுதலை உணர்வை அளிக்கிறது. அப்படி பல தருணங்களை  இப்பயணத்தினூடாக நான் அடைந்துள்ளேன்.

வெண்முரசு பயண அனுபவம் வெற்றிமுரசு கொட்டி கொண்டாடக் கூடிய பேரனுபவமாக அதை வாசிக்க எண்ணக் கூடிய அனைவருக்கும் அமையும் என்று நம்புகிறேன். வெண்முரசால் நான் என்னை  அளவுகடந்து மீட்டெடுத்துள்ளேன், மேம்படுத்திக் கொண்டுள்ளேன் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்பெரும் படைப்பில் நான் உங்களுடன் பயணித்தேன், பயணத்தின் இடையே தங்களை நான்கு முறை நேரிலும் சந்தித்தது என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்கள். நன்றி என்ற ஒற்றைச் சொல் நிச்சயம் தங்களின் படைப்பிற்கு ஈடானதாக இருக்கும் என தோன்றவில்லை. ஆனாலும் ஆத்மார்த்தமான மிக நிறைவான பேரன்புடன் பிணைந்த நன்றிகளை தங்கள் கரங்களில் குவிக்கின்றேன்.

நிறைவும் நன்றியும் கலந்த

பேரன்புடன்

இரா.மகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2022 10:30

February 22, 2022

ஓணத்தில் புட்டு வியாபாரம்

Trader is a painting by Sal Marino

சென்ற நாட்களில் இணையத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக  ஒன்றைக்கவனித்தேன். பல  இணையதளங்கள் வலப்பக்க சொடுக்கை தடை செய்துவிட்டிருக்கின்றன, நகல் எடுக்கவோ வெட்டி பயன்படுத்தவோ முடியாதபடி. ஆங்கில இணையதளங்களில் இவ்வாறு செய்வதை கண்டிருக்கிறேன். சில வணிக இணையதளங்களும் இப்படிச் செய்வதுண்டு. நான் சொல்வது நவீன இலக்கியம், ஆய்வுகள் சார்ந்து செயல்படும் தளங்கள் பற்றி.

இவ்வாறு இவர்கள் வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் அசல் செய்திகள் கிடையாது. வெவ்வேறு பேரறிஞர்கள் தங்கள் வாழ்நாள் உழைப்பை செலவழித்து நூல்களில் எழுதித் தொகுத்தவை. அவற்றை இலவசமாக எடுத்து அளிக்கிறார்கள். சுருக்கியும் மறுதொகுப்பு செய்தும் அளிக்கிறார்கள். அவற்றை இப்படி இன்னொருவர் பகிரமுடியாதபடி தடுக்கிறார்கள். வெவ்வேறு புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களை இணைய தளங்களில் பிரசுரிக்கும்போது அவற்றை பிறர் பயன்படுத்த முடியாதபடி தடை செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய இணையதளத்தில் நானே எழுதிய நூல்கள் முழுமையாகவே அனைவரும் பகிரும்படித்தான் அளிக்கப்பட்டுள்ளன. புகைப்படங்கள் செய்திகள் அனைத்துமே அவ்வாறு அளிக்கப்பட்டுள்ளன. பதிப்புரிமை உள்ள எனது நூல்கள் கூட இணையப் பகிர்வுக்கு தடை இல்லை என்ற அளவிலேயே  அளிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு மதிப்பீடை முன்வைக்கிறது. நாம் இங்கு வணிகம் செய்யவில்லை. ஓர் அறிவியக்கத்தில் இருக்கிறோம். பிரம்மாண்டமான ஓர் அறிவுப்பகிர்வை செய்து கொண்டிருக்கிறோம். அறிவு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தன்னை விரித்துக்கொண்டே செல்லும் ஒரு  வலை போன்றது. ஏதேனும் ஓரிடத்தில் அறிவை தளையிடுவதென்பது அந்த வலையை நடுவே அறுப்பது. வணிக நோக்கோடு செயல்படும் ஒரு நிறுவனம் அதை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தமிழில்  தீவிர இலக்கியங்களை வெளியிடும் இணையதளங்கள் ஏன் இதைச் செய்கின்றன?

இந்த விழுமியங்களை திரும்பத் திரும்ப நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலக இலக்கிய சிந்தனைச் சூழலை இன்று பார்த்தால் அது மிக விரைவாக அறிவுச்சேவை என்ற இடத்திலிருந்து சொல்வணிகம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது என்பதை காணலாம். எழுத்து என்பது வணிகமாக ஆகி நூறாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சிந்தனையும் வணிகம் என்றானது சென்ற இருபது ஆண்டுகளில்தான்.

சில ஆண்டுகளுக்கு முன் தெரிதா எழுதிய ஒரு நூலை புத்தகக் கடையில் பார்த்தேன். தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது. நூறு பக்கங்கள் இந்திய ரூபாயில் ஏழாயிரம் ரூபாய்க்கும் மேல் விலை போடப்பட்டிருந்தது. உண்மையில் அது சரியானபடி அச்சிடப்பட்டிருந்தால் முப்பது பக்கங்களுக்குள் வரக்கூடிய ஒரு கட்டுரை மட்டும்தான். அப்பதிப்பகம்  அவருடைய  புகழை, அவருடைய நூல் ஒரு ஆய்வு நூலகத்தில் இருந்தாகவேண்டுமென்ற கட்டாயத்தை பணமாக ஆக்குகிறது.

அதன் வழியாக அவருக்கு நிதி செல்கிறது, அவர் தன் ஆய்வுக்கான ஊதியமாக அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் இச்செயலில் ஓர் அறமின்மை உள்ளது. முன்பும் ஆய்வாளர்கள் நிதி உதவிகளால்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அரசர்கள், சிற்றரசர்கள், செல்வந்தர்களின் நிதி உதவிகள் அவர்களுக்கு இருந்திருக்கின்றன. சைவ ஆதீனங்களோ, பாண்டித்துரைத் தேவரோ, தமிழ்வேள் உமாமகேஸ்வரனாரோ இல்லையேல் தமிழில் ஆய்வுகள் நிகழ்ந்திருக்காது. ஆனால் அவ்வகையில் நிகழும்போது அதிலொரு இயல்புத் தன்மை இருக்கிறது. அறிவுக்கொடை ஒருவர் செய்கிறர்,  இன்னொருவர் நிதிக்கொடை செய்கிறார். இரண்டுமே பங்களிப்புதான். அதுவே முறையானதென்று தோன்றுகிறது.

மாறாக, இன்னொரு ஆய்வாளர் அந்நூலை வாங்கும்போது, அல்லது ஒரு மாணவர் அதை வாங்கும்போது அவர் அதற்கு ஒன்றுக்கு பத்து மடங்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது ஆய்வும் அறிவும் பரவும் விதத்துக்கு உகந்த நெறியே அல்ல. அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் தின்று உயிர்வாழவேண்டும் என்று சொல்வது அது.

ஒரு நூல் மிகக்குறைந்த விலையில், அல்லது இலவசமாக கிடைக்கும்போது மட்டும் தான் அறிவுப்பரவல் நிகழ்கிறது. நூலகம் என்பது அவ்வகையிலேயே பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நிலவி வருகிறது. அறிவுக்குமேல் வணிகக் கட்டுப்பாடென்பது நீண்ட கால நோக்கில் அறிவுச் செயல்பாடை அழிக்கும்.

எவ்வகையிலும் உடன்பட முடியாத ஒன்று அது. நம்மை அறியாமலேயே இந்த மனநிலைகளுக்கு நாம் சென்றுகொண்டிருக்கிறோம். தமிழ்ப்பேராசிரியர்கள்  (எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட) அவர்கள் செய்த சர்வ சாதாரணமான ஆய்வுகளை பல ஆண்டுகள் தவமிருந்து செய்தது போல பாவலா காட்டுகிறார்கள். அந்த ஆய்வுகளுக்கு தங்களுக்கு அள்ள அள்ள பணம் அளிக்கப்படவேண்டுமென்று கோருகிறார்கள். எத்தனை பணம் அளிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அது நிறைவளிப்பதில்லை. அதில் ஒரு துளி சிந்தினாலும் வெறிகொள்கிறார்கள். அழுது புலம்புகிறார்கள். அவர்கள் செய்வது ஆய்வல்ல, ஆய்வு வணிகம்தான். தாங்கள் செய்த ஆய்வுகள்  இன்னொருவரால் மேலதிக ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டாலே தங்களுக்கு வரவேண்டிய பணம் வராமலாகிறது என்று அவர்கள்  எண்ணுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் எந்த தமிழ் ஆய்வாளனாவது அவ்வாறு எண்ணியிருப்பாரா? வி.கனகசபைப் பிள்ளை அரும்பாடுபட்டு சேர்த்த சுவடிகளை உ.வே.சாமிநாத ஐயர் வந்து கேட்டபோது, ஐயர் முறையாக ஆய்வு செய்யக்கூடியவர் என்ற ஒரே காரணத்தினால் அள்ளிக்கொடுத்துவிட்டார் என்று நாம் படிக்கிறோம். இத்தனைக்கும் வி.கனகசபைப் பிள்ளை உ.வே.சாமிநாதையருக்கு நேர் எதிரான திராவிட இயக்கப் பார்வை கொண்டவர்.

அந்த மனநிலைகள் இன்றைய வணிகச்சூழலில் அபத்தமாகத் தென்படலாம். ஆனால் அவையே உண்மையில் அறிவியக்கத்தின் மனநிலைகள். அறிவுச்செயல்பாட்டில் செல்வத்தை நாடுவது இழிவானது. புகழை நாடுவது பிழையன்று, ஆனால் அதைக்கடந்தும் எண்ணுவதே சிறப்பு.

இன்றைய மனநிலைகளை நம்மை நாமே கண்காணிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் எழுதியதை முழுக்க பொதுவெளியில் இலவசமாக அளிக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் தங்களுக்குத் தாங்களே ஒரு வரையறையை வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

தமிழ் போன்ற ஒரு சூழலில் ஒருபோதும் எழுத்தும் வாசிப்பும்  வணிகமென தொழிலென ஆகப்போவதில்லை, எவரும் அதைக் கொண்டு செல்வந்தராகப் போவதுமில்லை. ஆய்வுகளைக்கொண்டு செல்வந்தராகிறவர்கள் அவற்றின் வணிகமதிப்பால் அதை ஈட்டுவதில்லை, பல்கலைக்கழகங்களை நிதிக்கொடைகளை சுரண்டுவதன் வழியாகவே அடைகிறார்கள். சிறிய உழைப்புகளுக்கு மிகப்பெரிய கால அட்டவணைகளையும் உழைப்பையும் காட்டி வெளிநாட்டு நிதிக்கொடைகள் மற்றும் பல்கலைக்கழக நிதியமைப்பின் நல்கைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, ஏற்கனவே தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆய்வு செய்யப்பட்ட ஒரு நூலில் மூல பாடங்களை ஒரே ஒரு நூலகத்திலிருந்து எடுத்து காலவரிசைப்படி அட்டவணையிட்டதற்கு அந்த முழு நூலையும் உரிமை கொண்டாடும் கீழ்மையை நாம் இன்று காண்கிறோம்.

நவீன இலக்கியவாதிகளும் இலக்கிய ஆய்வாளர்களுமான நாம் தமிழ்ப் பொதுச்சூழலில் இருந்து நாம் நம்மை விலக்கிக்கொள்வதின் வழியாகவே அறிவியக்கத்தின் ஆன்மிகத்தை இதுகாறும் பாதுகாத்து வந்திருக்கிறோம். நம்மை வணிக எழுத்திலிருந்து விலக்கிக்கொண்டிருக்கிறோம். அதே போன்று கல்வித்துறையின் அதிகார அடுக்குகள் மற்றும் நிதிமோசடிகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று எங்கும் பரவி வளர்ந்திருக்கும் இந்த வணிக எண்ணங்களிலிருந்து விலக்கிக் கொள்ளவேண்டும். நம் செயல்களின் நோக்கம் சார்ந்த அறத்தை உருவாக்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் நம்மை நாமே ஒருங்கிணைத்துக் கொள்ளவேண்டிய காலம் இது.

அவ்வாறன்றி இதை  ஒவ்வொருவரும் தங்கள் போக்கில் வணிகமாக உரிமை கொண்டாடத் தொடங்கினால் என்ன ஆகும்? ஒரு சிற்றிதழ் அது பிரசுரிக்கும் ஒரு கவிஞனின் புகைப்படத்தை பிறர் பகிரமுடியாமல் தடை செய்கிறது. ஓர் இணையதளம் தான் வெளியிட்ட ஒரு கவிதையை இன்னொருவர் வெட்டி ஒட்ட முடியாதபடி தடை செய்கிறது. எளிமையான ஒரு உரிமை கொண்டாடல். ஆனால் அதனுள்ளிருக்கும் மனநிலை ஆபத்தானது. அது மேலும் மேலும் நம்மை இத்தளத்தில் செயல்பட முடியாதவர்களாக்குகிறது. அது வணிக எதிர்பார்ப்புகளை நமக்கு உருவாக்கும். அவ்வெதிர்பார்ப்புகள் இங்குள்ள சூழலால் முறியடிக்கப்படுகையில் கசப்பும் எதிர்மனநிலையும் கொண்டவர்களாக்கும்.

இது நம் சூழலின் மையத்தில் நிகழும் ஓர் அறிவியக்கச் செயல்பாடு ஓர் ஆன்மிக அடிப்படை கொண்டதாகவே இருக்க முடியும். உலகில் வேறெங்காவது வேறெப்படியாவது இருக்கலாம், இங்கு இப்படித்தான் இருக்க முடியும். இங்கே நாம் அளிப்பவர்கள் மட்டுமே. எதையும் பெற்றுக்கொள்பவர்கள் அல்ல. எந்நிலையிலும் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி கொடையளிப்பவர்களாகவே நாம் நின்று  பேசவேண்டும்.  அந்த மனநிலை நமக்கு நிமிர்வையும், எதையும் எதிர்பார்க்காத பெரும்போக்கையும் அளிக்கும்.அம்மனநிலை கொண்டவர்களே இச்சூழலில் தொடர்ந்து பணியாற்ற முடியும். மற்றவர்கள் சில நாள் சில செய்துவிட்டு அதற்கு பெரும் எதிர்வினைகளை எதிர்பார்த்து ஏமாற்றமுற்று, கசந்து ,அக்கசப்பை பழிச்சொற்களாகக் கொட்டிக்கொண்டிருப்பார்கள். கழிவிரக்கங்களை அள்ளி முன்வைப்பார்கள்

எண்ணிப் பாருங்கள், ஓர் இணையதளம் அதில் பிரசுரமாகும் ஒருவருடைய புகைப்படத்தையோ படைப்பையோ பகிர்வதையோ தடை செய்கிறது. ஆனால் அதில் எழுதுபவர்களுக்கு என்ன அளிக்கிறது? ஊதியமளித்து பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல.எந்த மனநிலை ஒருகவிஞனிடமிருந்து ஒரு படைப்பாளியிடமிருந்து இலவசமாக படைப்புகளை எதிர்ப்பார்க்கிறது? அந்த உழைப்புக்கு  ஊதியமளிக்கப்படவில்லை என்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறது? ஏனெனில் அங்கு இலக்கியமென்பதும் சிந்தனை என்பதும் ஓர் அறிவுப் பங்களிப்பு, சமூகத்துக்கு ஒரு கொடை மட்டுமே என்ற மனநிலை உள்ளது. ஆனால் அதை விற்கும் இடத்தில் வணிகனுடைய மனநிலை வந்தமைகிறது.அப்பட்டமான இரட்டைவேடம்.

மலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு, ”ஓணத்தின் நடுவே புட்டு வியாபாரம்” ஓணம் அனைவரும் அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ந்திருக்கும் ஒருநாள். அன்று எவருக்கும் எதுவும் இல்லையென்பதில்லை. அது மகாபலி நாடுகாண வரும் நாள். அன்றைக்கும் புட்டுக்கடையை திறந்து வைத்திருக்கும் அற்பனை குறிக்கும் சொலவடை அது.

என்னால் எவ்வகையிலும் இவற்றை ஏற்க முடியவில்லை. அவர்களிடம் அப்படிச் செய்யலாகாது என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஒன்று சொல்லலாம். வலப்பக்கச் சொடுக்கை தடை செய்து பகிர்வைக் கட்டுப்படுத்தியிருக்கும் எந்த ஒரு இணையதளத்தையும் இனி எனது தளத்தில்  இணைப்பளிக்கவோ அவற்றில் வரும் செய்திகளையோ கட்டுரைகளையோ பகிரவோ, அவற்றுக்கு எவ்வகையிலும் பங்களிப்பாற்றவோ போவதில்லை. ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு இணையதளத்தையும் விட பல மடங்கு வாசக எண்ணிக்கை உடையது எனது இணையதளம். நான் அவற்றுக்கு அளிக்கும் இணைப்பின் வழியாக  அந்த இணையதளங்களை வாசகர்களிடம் கொண்டு செல்கிறேன். சரியாகச் சொன்னால் என் வாசகர்களை அவர்களிடம்  பகிர்ந்துகொள்கிறேன். இவர்கள் தாங்கள் செய்வது வணிகம் என்று அத்தனை தெளிவுடன் இருந்தார்கள் என்றால் என்னிடம் வணிகத்தைத் தான் எதிர்பார்க்கவேண்டும். என் செவையை பெறுவதற்கு அவர்கள் எனக்கேதும் பணம் அளிக்கிறார்களா என்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2022 10:35

நிமித்திகனின் சொற்கள்

வரலாறு ,அறிவியல் ,அரசியல், தொன்மம் , மானுடவியல். என அனைத்தையும் அறிந்த ஒரு அறிஞர், இந்த மானுடகுலம் முழுவதையும்,கணித்து,  தன் சொற்களால் கோர்த்து சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு பதில் தான்  யுவால் நோவா ஹராரி. அவர் குறிக்களம் வரைந்து,  மிக நேர்த்தியாக சோளிகளை உருட்டி,  முக்காலத்தையும் தன் சொற்களால் திரட்டி அளித்தது தான்  அவருடைய மூன்று நூல்கள். ‘யுவால் ட்ரியாலஜி’  எனலாம்.

நிமித்திகனின் தேர்ந்த சொற்கள் – யுவால் ஹராரியை முன்வைத்து

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2022 10:34

குமரித்துறைவி, இரு ஐயங்கள்

அன்புள்ள ஜெ

உங்களது வெள்ளை யானை நாவலுக்கு அடுத்து வாசித்த நாவல் குமரித்துறைவி. வெள்ளை யானை தந்த பிரம்மிப்பே, மனம் உங்களுக்க எந்த கடிதமும் எழுதச் சொல்லவில்லை. எனக்கு வெள்ளை யானை பற்றி கேட்கவோ அபிப்பிராயம் கூறவோ தெரியவில்லை. என் வயதும் அனுபவமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் குமரித்துறைவி வாசித்த பிறகு, நான் இப்போது அனுபவித்து கொண்டு இருக்கும் உணர்வு நிலை என்பது சொல்லாலாகாதது.

வேணாட்டில் பிறந்து வளர்ந்து கொண்டு இருக்கும் எனக்கு குமரித்துறைவி எப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கி இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. வாசிக்கும் தருணமே ஒரு பேரதிர்ச்சியை தான் அளித்தது. காரணம் இது அனைத்தும் உண்மை சம்பவம் என்றே மனம் அடுக்கிக்கொண்டு இருந்தது. அதற்கு அடுத்து ஏதோ ஒரு தருணத்தில் இது புனைவு என்று மனம் எழுதல்‌. இது வழக்கம் தான் என்று தெரியும். புனைவு விரிக்கும் மந்திர வலை‌. அதுவும் உங்கள் புனைவு சொல்லவே வேண்டாம். ‘என்ன டா இது இந்த ஆளு எழுதுறது புனைவா இல்லை நிஜமா ‘ என்று குழம்பிய தருணங்கள் நிறைய. உங்களிடமே கேட்டு தெளிவும் பெற்றிருக்கிறேன்.

இந்நாவலை நான் Subconscious நிலையில் எப்படி கற்பனை (அதாவது மனதில் பதிய வைப்பது, படிமம்மாக) செய்திருப்பேன் என்று என்னால் விளக்க முடியாது. விளக்கவும் முயலமாட்டேன். அது எனக்கு மட்டுமே உரிய படிமம் என்று நினைக்கிறேன். ஆனால் transparent ஆக பார்க்கும் போது Pieter Bruegel ன் ஓவியங்கள் போல் தான் நான் குமரிதுறைவியை மனதில் நினைத்துக் கொண்டேன். நாவலின் கடைசி பக்கம், அதாவது மழை வந்து வேணாட்டை குளிர்விக்கும் தருணம், நான் Dante Alighieri யின் நரகம் போன்று நான் இந்நாவலை  Dante Alighieri வேணாட்டை ஒரு சொர்க்கமாக பாவித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் என் மனதில் ஓட்டிப் பார்தேன். அற்புதம்! யாராவது கண்டிப்பாக குமரித்துறைவி நாவலை ஓவியமாக தீட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு வேண்டுகோளாகவும் வைக்கிறேன். மிகப் பெரிய பணி என்று தெரியும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌. இருந்தும் குமரித்துறைவியை ஒரு  image ஆகவோ இல்லை Visual  ஆகவோ பார்கக அவ்வளவு ஆசை. எனக்கு குமரித்துறைவி நாவலை ஒட்டி இரண்டு சந்தேகங்கள் உள்ளன. இது இந்நாவலை மட்டும் சம்பந்தப்ட்ட சந்தேகம் இல்லை எல்லா படைப்புக்கும் உரிய கேள்வியாகவே பார்க்கிறேன்.

இசை – இந்நாவலை வாசிக்கும் என்னால் நீங்கள் விவரிக்கும் அனைத்தையும் கற்பனையில் ஓட்டி பாரத்து அதை அனுபவிக்க முடிகிறது. உதாரணத்திற்கு Landscape , Characters, Costumes, Dialogues, Conversations even Sound also. ஆனால் என்னால் இசையை கேட்கவே முடியவில்லையே? அதுவும் குமரித்துறைவி நாவல் என்பது இசை நிறைந்த படைப்பு. நீங்கள் இசையை விவரிக்கிறீர்கள் என்னால் அதன் வாத்தியங்களை மட்டுமே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இசையை கேட்கவோ இல்லை உணரவோ முடியவில்லை. ஒருவனால் ஒரு இலக்கிய படைப்பில் இருக்கும் இசையை உணரவோ கேட்கவோ முடியுமா? இல்லை கற்பனையில் ஓட்டி பார்க்க முடியுமா? இல்லை இது நான் மட்டும் அனுபவிக்கும் கோளாறா? இலக்கியத்தால் இசையை ஒரு மனிதனுக்குள் கடத்த முடியுமா?

மீனாக்ஷி அன்னை ஒரு மீனவ குலத்தில் பிறந்த தெய்வம் என்று சொல்லப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கூட மீனவ குலத்தில் பிறந்த தெய்வம் என்றும் , முன்னர் மீனவர்களே மண்டைக்காடு பகவதி அம்மனை வழிப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இங்கு மீனவ இனத்திற்கும் இங்குள்ள தெய்வங்களும் உள்ள தொடர்பு என்ன? ஏன் அவர்கள் கையிலிருந்த தெய்வங்கள் இன்று அவர்களை மீறி சென்றது? இந்தியா மீனவர்கள் அடிப்படையில் இந்துக்கள் என்பது தெரிந்த தகவல் தான், அதையும் மீறி அவர்களுக்கும் இங்குள்ள தெய்வங்களும் உள்ள தொடர்பு என்ன?

நன்றி ஜெ. இதற்கான உங்கள் பதில் எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் உதவும் என்ற நினைக்கிறேன்.

 

தருண் வாசுதேவ்.

குமரித்துறைவி வாசிப்புக்கு மகிழ்ச்சி.

இரண்டு ஐயங்களுக்கும் பொதுப்படையான பதிலையே அளிக்கமுடியும். இசை, ஓவியம் போன்றவை நம்முள் அனுபவங்களாக தேங்கி நின்றிருக்கின்றன. இலக்கியம் வழியாகச் சொற்கள் வந்து அந்த அனுபவத்தை தொடும்போது அவ்வனுபவம் மீள நிகழ்வதையே நீங்கள் இசையை உணர்தல் என்கிறீர்க்ள். அதாவது அது ஒரு நினைவூட்டல் மட்டுமே. என்ன வேறுபாடு என்றால் அந்த நினைவுகளை இந்த கதைக்களத்தின் உணர்வுகள், அழகியலுக்கு ஏற்ப படைப்பு மாற்றி அளிக்கிறது. உங்கள் நினைவுகளில் எதையும் குமரித்துறைவி தொடவில்லை என நினைக்கிறேன்

குமரிமாவட்டத்தில் என்றல்ல. கல்கத்தா முதல் இந்தப்பக்கம் கட்ச் வரை கடலோரமாக ஏராளமான பெண் தெய்வங்கள் உள்ளன. அவை கடலோர மக்களின் தொல்தெய்வங்கள். சும்மா கூகிள் மேப் வைத்து பார்த்தாலே தெரியும். ஆனால் மண்டைக்காட்டம்மன் கடல்மக்களின் தெய்வம் அல்ல. அது மிகப்பிற்காலத்தைய தெய்வம். 1700களில்தான் அது தெய்வமாகியது. அது தெளிவாகவே வரலாற்றில் வாழ்ந்த ஒரு நாடார் குடும்பத்து அன்னை பின்னாளில் தெய்வமாக ஆன கோயில். (தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நூலில் அந்த வரலாறு உள்ளது)

ஜெ

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2022 10:31

மார்ட்டின் விக்ரமசிங்கேயின் கலை-ஜிஃப்ரி ஹாசன்

சிங்கள அறிவுலகில் முதன்முதலாக மார்ட்டின் விக்ரமசிங்க மூலமே பரிணாமத் தத்துவம் பற்றிய அறிமுகம் கிடைத்தது எனக் கூறப்படுகிறது. பரிணாமமும் மானுடவியலும் சார்ந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பின்னர் மூன்று தொகுப்புகளாக வெளிவந்தன. அது அவரது படைப்புச் செயற்பாடுகளுக்கு அப்பாலான அறிவியல்சார்ந்த எழுத்துப் பணியாக அமைந்தது

மார்ட்டின் விக்ரமசிங்கவின் கலை: ஜிஃப்ரி ஹாஸன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2022 10:31

வெண்முரசு நடனம்

வெண்முரசு இசைக்கோலம் ’நீலத்தின் வண்ணங்கள்’ ராஜன் சோமசுந்தரம் இசையமைப்பில் வெளிவந்தது. இப்போது அதற்கு ஒரு நடன வடிவம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2022 10:30

புதிய வாசகர் சந்திப்பு- ஈரோடு

நண்பர்களே,

தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக இந்த ஆண்டின் இரண்டாவது புதிய     வாசகர் சந்திப்பை ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவிலில் நண்பர் செந்திலின் பண்ணை இல்லத்தில் நடத்த உள்ளோம். இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார்.

இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.   விருந்தினர் இல்லத்தில் 20 பேர்வரை தங்கலாம், அதனால் சுமார் 20 நபர்களையே ஏற்றுக்கொள்ள முடியும். பெண்களுக்கு தனி தங்கும் அறை வசதி உண்டு. ஏற்கனவே சில இடங்கள் நிரம்பிவிட்டன.

கடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வரத் தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,

 

Name :

Age :

Place :

Occupation :

Email-id:

Mobile Number :

Details of previous meet :

 

ஆகிய விபரங்களுடன் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் சுய விவரங்களை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பவும். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் சில நாட்களில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

 

இடம் : ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அருகே பெத்தாம் பாளையம்.

தேதி, நேரம் : 5.3.2022 சனி காலை 10 மணி முதல் 6.3.2022 ஞாயிறு மதியம் 1.30 வரை.

 

தொடர்புக்கு:

மணவாளன்

98947 05976

azhaindian@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2022 10:11

February 21, 2022

பழைய சுழல்

( 1 )

பழைய நூல்கள் மறுபிரசுரம் ஆகும்போது ஆசிரியர்கள் அளித்துள்ள முன்னுரையைப் படித்து அவற்றின் முதல் பதிப்பிற்கு அவர்கள் அளித்துள்ள முன்னுரையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்னுடைய வழக்கம். ஜெயகாந்தன் பெரும்பாலும் மறுபதிப்புகளுக்கெல்லாம் புதிய முன்னுரை எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமியும் மீண்டும் மீண்டும் முன்னுரை எழுதியிருக்கிறார். சில தருணங்களில் நீண்ட காலங்களுக்குப் பிறகு அந்த முன்னுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த முன்னுரைகளில் வெவ்வேறு வகையான உணர்வுகள் வெளிப்படுகின்றன. அந்நூல் உருவாக்கிய வாசிப்புகளின் மீதான எதிர்வினைகள், விமர்சனங்களுக்கான பதில்கள். ஆனால் பெரும்பாலான முன்னுரைகளில் அந்நூலில் இருந்து அதன் ஆசிரியர் உளம் விலகிவிட்டதன் தடயங்கள் தென்படுகின்றன. மணமுடித்து கணவன் வீட்டிற்கு அனுப்பிய மகளுடன் தந்தைக்கு இருக்கும் உணர்வு போல. மகள் தான், ஆனால் பிறிதொருத்தி.

என்னுடைய உணர்வுகள் எப்போதும் அவ்வாறுதான். ஒவ்வொரு நூலிலிருந்தும் நான் வெளியேறிச் சென்றுகொண்டே இருக்கிறேன். ஒரு நூலை எழுதி, அதன் வழியாக அந்நூலை எழுதத் தூண்டிய காரணங்களை கடந்துவிட்டிருக்கிறேன். அந்நூலில் எழுப்பிய வினாக்களுக்கு விடை கண்டு அவ்விடைகளையும் கடந்து புதிய வினாக்களுடன் புதிய படைப்புகளை நோக்கிச் சென்றுவிட்டிருக்கிறேன். மீண்டும் திரும்பி அந்நாவலுக்குச் செல்லும்போது அது முற்றிலும் புதியதாக இருக்கிறது. நான் சற்றே அறிந்த பிறிதெவரோ எழுதியது போலிருக்கிறது. அந்த நூலின் பக்கங்களைப் புரட்டுகையில் ஆங்காங்கே என் உள்ளம் தொட்டுச் சென்று நினைவுகள் மின்னி மின்னி அந்தப்படைப்பு மங்கலாக நினைவிலெழுகிறது.

இது விந்தைதான். எனக்கு நான் படித்த நூல்கள் மிக அரிதாகத்தான் மறக்கின்றன.அவற்றின் நிகழ்வுகள் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல சமயங்களில் அவற்றின் அட்டை, உள்ளே அச்சு கோக்கப்பட்டிருக்கும் முறை, பக்கங்களில் ஏதேனும் கறைகளோ அடையாளங்களோ இருந்தால் அவை கூட என் நினைவில் நின்றிருக்கின்றன. அந்நினைவின் மீதான அதீத நம்பிக்கையில் அவ்வப்போது சில நினைவுப்பிழைகளும் உருவாவதுண்டு. ஆனால் நூலின் ஆசிரியர் என நான் நின்றிருக்கும் படைப்புகள் உள்ளத்தில் எஞ்சவே இல்லை.  இந்த விலக்கம் இயல்பானது. இல்லையேல் அடுத்த படைப்புக்கு நம்மால் செல்ல முடியாது.

அத்துடன் வேண்டுமென்றே இந்த விலக்கத்தை உருவாக்கிக்கொள்வதும் உண்டு. இல்லையேல் முன் நகர முடியாது. விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பத்தாண்டுகளாக வெவ்வேறு நூல்களிலிருந்து தரவுகள் சேகரித்தேன். வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்தேன். உரையாடல்கள் வழியாகவே அந்நூலின் பெரும்பாலான தரவுகள் சேகரிக்கப்பட்டன. மரபார்ந்த கல்வி கொண்டவர்கள், குறிப்பாக நியாயம், யோகம் ஆகிய தளங்களில் தேர்ச்சி கொண்டவர்களை நேரில் சந்தித்துக் குறிப்பெடுத்தேன். அந்நாவல் எழுதும் பத்தாண்டுக் காலத்திற்குள் பெரும்பாலானவர்கள் உயிர் துறந்தனர். நாவல் முடிந்ததும் அந்த மொத்த கைப்பிரதிகளையும் என் அறையிலிருந்து அகற்றாமல் என்னால் எழுதமுடியாமல் ஆயிற்று. அவற்றை வெளியே தூக்கிப் போட்டதுமே என் உள்ளமும் ஒழிந்து வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தது ஆகவே அது ஒரு நல்ல வழி என்று கண்டு கொண்டேன்.

பின்தொடரும் நிழலின் குரல் நான் 1998-99-ல் பத்மநாபபுரத்தில் குடியிருந்தபோது எழுதப்பட்டது. இன்றைக்கு 23 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அது என் வாழ்க்கையின் இனிய பருவங்களில் ஒன்று. நான் என் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். பத்மநாபபுரம் எனது சொந்த ஊர்களில் ஒன்று என்று சொல்லத்தக்கது. என் சித்தப்பா அங்கே குடியிருந்தார். எங்கள் பூர்வீகர்களுடைய வீடுகள் அங்கிருந்தன. கோட்டைக்குள் அமைந்த பழமையான அமைதியான சிற்றூர். நிறைந்து பளபளக்கும் குளங்கள் பின்னணியில் வேளி மலையின் பசுமை எழுந்த தோற்றம். ஊர் முழுக்க நிரம்பியிருக்கும் ஆழ்ந்த அமைதி.

நான் குடியிருந்த வீடு மிகப்பெரியது. ஓட்டுக்கூரை கொண்ட பழைய பாணி கேரளக்கட்டிடம். முதல் முறையாக நான் எழுதுவதற்கு என்று மட்டும் ஓர் அறை அமைந்தது. இரண்டு சன்னல்கள் கொண்ட சிறிய அறை. அந்த அறை எனக்களித்த அவ்வுளக்கிளர்ச்சியை இப்போதும் நினைவு கூர்கிறேன். என் குழந்தைகள் வளர்ந்துகொண்டிருந்தார்கள் ஒருவயதான சைதன்யா தவழ்ந்து வந்து மேஜையைப் பிடித்துக்கொண்டு நான் எழுதுவதை பார்த்து நிற்பாள். அவளுடைய அழகிய குட்டி மண்டை மேஜையின் விளிம்பில் இருப்பதைப் பார்ப்பேன். அவளுக்கு என்னென்னவோ கேட்கவேண்டும் என்று தோன்றும் ஆனால் சொற்கள் திரளாத வயதென்பதால்   “அப்பா…” என்பாள். சற்று இடைவெளிவிட்டு மீண்டும்   “அப்பா…”, மீண்டும்   “அப்பா…” ஒவ்வொரு முறையும் நான்   “உம்” கொட்டுவேன். அந்த இரு ஒலிகள் வழியாக ஒரு உரையாடல் சென்று கொண்டே இருக்கும். நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு இணையாக பிறிதொன்று.

துயரமும், அவநம்பிக்கையும், கைவிடப்படுதலும் நிறைந்த ஒரு நாவலை எழுதும்போது இனிய அழகிய ஓர் உரையாடல் நடந்துகொண்டிருந்தது. ஆகாய ஊஞ்சலில் ஆடுபவனின் பிடி போல அது என்னை இவ்வுலகத்திற்குள் நிறுத்தி வைத்தது. சைதன்யா என்ன கேட்டிருப்பாள் என்று இப்போது எண்ணிப்பார்க்கிறேன். ‘என்ன எழுதுகிறாய்?’ என்று கேட்டிருப்பாள். ‘ஏன் அத்தனை உணர்ச்சிகள்?’ என்று கேட்டிருப்பாள். ‘இத்தனை துயரம் எதற்கு உனக்கு?’ என்று கேட்டிருக்கலாம். ‘இத்தனை பொருளின்மையை ஏன் உருவாக்குகிறாய்? வாழ்வின் விழுப்பொருள் என நான் நின்றிருக்கிறேனே…’ என்று சொல்லியிருக்கலாம். என் குட்டிச் செல்லத்தின் அந்த அழகிய முகம், வசந்தகுமார் எடுத்த சிறந்த புகைப்படங்கள் வழியாக இன்றும் என் இல்லத்தில் இருக்கிறது. பெரும்பிரியத்துடன் அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்துக்கொள்வேன்.

நான் எழுதிய நாவல்களில் எதிர்மறை முடிவுகளே இல்லை என்பது தான் எனது எண்ணம். என் இயல்பு அது அல்ல. ஏனெனில் வாழ்வை நம்பவும் அதில் செயலாற்றவும் தேவையான அடிப்படையான நம்பிக்கைக்குப் பிறகு எழுத வந்தவன் நான். எனது அவநம்பிக்கையின் கொந்தளிப்பின் அலைச்சலின் காலங்கள் இலக்கியத்திற்குள் நான் வரும்போதே முடிந்துவிட்டிருந்தன. அந்த எரியும் காலத்தின் நினைவுகளையே பின்னர் என் நாவல்களில் எழுதியிருக்கிறேன். எழுதும்போது அவற்றை மிக அகன்று நின்று பார்த்திருக்கிறேன். ஆகவே எத்தனை கொடும் கொந்தளிப்புகள் வழியாகச் சென்றாலும் அறுதியாக வெளிவந்து நின்றிருக்கும் ஒரு தருணத்தை எழுதியிருக்கிறேன்.

விஷ்ணுபுரம் மெய்த்தேடல்களின் தகிப்பையும், பாவனைகளையும், கைவிடல்களையும், அர்த்தமின்மையையும் சொன்ன நாவல். ஆனால் கள்ளமற்ற எளிமையையும், அழியாத தாய்மையையும், அறிவின் தவிர்க்க முடியாத தொடர்ச்சியையும், கண்டடையும் முடிவே அதற்கு அமைந்தது. ஏழாம் உலகம் இருளுலகங்களினூடாக செல்லும் ஒரு பயணம். ஆனால் அது அவ்வுலகத்தின் மனிதர்களிலும் வாழும் கருணை, மாங்காடு சாமியிலெழும் மெய்தரிசனத்தை சுட்டியே முடிந்தது. காடு வீழ்ச்சியின் அலைகளினூடாக இயற்கை அளிக்கும் மீட்பு நோக்கிச் செல்கிறது. வெவ்வேறு கட்டங்களில் இவை அனைத்துமே எனது அனுபவங்கள்தான். பின்தொடரும் நிழலின் குரலும் தேடலின் தவிப்பை,பற்றி நின்று எரிதலை சொன்ன நாவல் மட்டுமல்ல, அதில் பெரும் கண்டடைதலே உச்சமென அமைந்துள்ளது. என் சொற்கள் கிறிஸ்துவின் நாவில் இருந்து வந்தன. அன்று அதை எழுதுகையில் என் அருகே மெய்யான இருப்பென கிறிஸ்துவை உணர்ந்தேன். என் சொற்களின் மேல் கண்ணீர்த்துளிகள் சொட்ட அதை எழுதினேன்.

( 2 )

பின்தொடரும் நிழலின் குரலும் என்னுடைய அனுபவம்தான்.நான் என் மிக இளமைப்பருவத்திலேயே அரசியல் நோக்கி இழுக்கப்பட்டவன். எங்கள் காலகட்டத்தின் இயல்பு அது. எனக்குப் பிந்தைய தலைமுறை அரசியலற்று இருப்பதைக் காண்கிறேன். அவர்கள் தொழில் நுட்ப யுகத்தில் பிறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பமே திகைப்பூட்டி ஈர்த்து எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று ஒரு இளைஞனிடம் பேசினால் அவனுடைய பத்து வயதில் நோக்கியா செல்பேசி அறிமுகமானதை, பதினைந்து வயதில் ஆண்ட்ராய்டு போன் வந்ததை, இருபது வயதில் சமூக வலைத்தளங்கள் அறிமுகமானதை இருபத்தைந்து வயதில் ஓடிடி பிளாட்பாரங்களில் உலகத்தின் திரைப்படங்கள் அனைத்தும் வந்து கண்முன் நின்றதை அவன் சொல்லக்கூடும். எனது தலைமுறையில் மொழி தெளிந்ததும் அரசியல் வந்து சேர்ந்தது

என் பதினைந்து வயதில் கம்யூனிசம் அறிமுகமாகியது. சில நாட்களிலேயே வலதுசாரி அரசியல் அறிமுகமாகிறது. முதலில் எனது தாய்மாமனிடமிருந்து கம்யூனிசம். அவசரநிலை பிரகடனத்தின்போது ரகசியமாக துண்டுபிரசுரங்களை ஏந்திச் சென்றுகொண்டிருந்தவன் நான். புறா போல. அவை என்னவென்றே தெரியாது. அதன்பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு. அவற்றுக்கான காரணம் என் ஊரில் இருந்தது. கிறிஸ்தவப் பெரும்பான்மையாகிவிட்ட எனது ஊரில் அன்று இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்த கிறிஸ்தவர்களின் எதிர்ப்பும் தடையும் இருந்தது. ஆலயமணிகளே ஒலிக்க தடை இருந்தது. ஆலயங்களுக்குச் செல்பவர்களும் வருபவர்களும் நெற்றியில் மதக்குறியீடுகளை அணிந்துகொள்வதற்கு தடை இருந்தது. பல ஆலயங்களுக்குச் செல்வதை முழுக்கவே வேலிகட்டித் தடுத்து வைத்திருந்தார்கள்.

புதிதாக மதம் மாறுபவர்கள் உருவாக்கும் அதிதீவிரமான உளவிலக்கம் அது. அவர்களுக்கு இந்து தெய்வங்கள் அனைத்துமே சாத்தான்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அவற்றை வழிபடுபவர்களும் சாத்தானின் செய்தியைப் பரப்புபவர்கள். தங்கள் ஊருக்குள் ஒரு இந்து ஆலயம் இருப்பதனால் சாத்தானுடைய இருப்பு அங்கு இருப்பதாகவும் ஆகவே தங்களுடைய குடும்பங்களும் தாங்களும் வளம் பெற முடியாது தவிப்பதாகவும் மெய்யாகவே அன்றைய கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய எதிர்ப்பு அன்று ஆத்திரமூட்டினாலும் இன்று எண்ணுகையில் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் மாற்று மதத்தின் தெய்வம் சாத்தான் என்றும் அழிவு சக்தி என்றும், தனக்குத் தீங்கு கொண்டு வரும் என்றும் உண்மையிலேயே நம்பினாரென்றால் அவரிடம் மத ஒற்றுமையைப்பற்றியும் சகிப்புத்தன்மையைப் பற்றியும் பேசிப் பயனுண்டா என்ன?

அந்தக் கசப்புகளிலிருந்து இந்துத்துவ அரசியல். பின்னர் அதிலிருந்து வெளியேறி மீண்டும் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கப் பணிகள். பின்னர் தொழிற்சங்க செயல்பாடுகள் மட்டுமாக நிறுத்திக்கொண்டு கட்சிச் செயல்பாடுகளிலிருந்து முழுக்க விலகினேன். ஆனால் அரசியலை கவனித்துக் கொண்டிருந்தேன். என்ன நிகழ்கிறதென்று அறிந்திருந்தேன்.நான் அரசியலை விட்டு அகல சுந்தர ராமசாமியும், ஆற்றூர் ரவி வர்மாவும் காரணம். அவர்கள் தனிநபர்வாதிகள், அரசின்மைவாதிகள். அதன்பின் நித்ய சைதன்ய யதி. அரசின்மைவாதத்தின் உச்சப்புள்ளியில் இருந்தே ஆன்மிகம் தொடங்குகிறது.

அரசியல் வழியாகச் செல்லும்போது எப்போதுமே நான் முழுக்க தீவிரமான உணர்வுகளை அடைந்ததில்லை. என்னவென்று பார்ப்போம் என்று ஆர்வமிருந்தது. அதற்கப்பால் ஒரு தனிமனிதனின் சிந்தனைக்குப் பெரிய மதிப்பொன்றுமில்லை என்றும், அது பிறருடைய சிந்தனைகளைத் திரட்டி ஒன்று திரண்டு பெரிய விசையென்றாக மாறினாலொழிய அதனால் எந்த செயலையும் ஆற்றமுடியாது என்றும் ஒரு நம்பிக்கை அன்று இருந்தது. அமைப்பு மேல் கொண்ட நம்பிக்கை அது. அதற்கப்பால் அமைப்பை வழிநடத்த முடியும், என் சிந்தனைகளை அமைப்பை எதிரொலிக்க வைக்க முடியும் என்று கொண்ட அதீத நம்பிக்கை.

இந்நாவல் எழுதும் காலத்தில் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன். இந்நாவலில் ஓர் இடம் வருகிறது. அரசியல் அமைப்புகளுக்குள் செல்லும் எவரும் அங்கு தொண்டனாக வாழும் பொருட்டு செல்வதில்லை, ஒருநாள் அதற்கு தலைமை தாங்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தன்னுடைய வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்ற நினைக்கும் ஒருவர் தான் ஒரு வரலாற்றுநாயகன் என்றுதான் நினைக்கிறார். வரலாறெனும் பெரும் பெருக்கில் தான் ஒரு துளியினும் துளி என அவன் உணர்வதில்லை. வரலாறென்பது ஒரு மாபெரும் மந்தை என்றும் தான் அதன் தலைவன் என்றும் நினைக்கிறான். சுந்தர ராமசாமியிடம்  “நீங்கள் அவ்வாறு எண்ணியதுண்டா?” என்றேன்.  “அவ்வாறு சொல்ல முடியாது” என்றபின் கண்களின் புன்னகையுடன் “ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் கனவிருந்தது” என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் ஒவ்வொருவரும் தங்களை ஸ்டாலின் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதற்கப்பால் அங்கு நம்மைப்பிடித்து வைக்கக்கூடிய ஒன்று தோழமை என்பது. எந்த தீவிர செயல்பாடு கொண்ட அமைப்பிலும் அதன் பெருங்கவர்ச்சி என்பது அங்குள்ள தோழமைதான். வேறெங்கும் இல்லாத அளவுக்கு இறுக்கமான நட்புகள் அமைகின்றன. இரவுபகலாக நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் ஒத்த கருத்துள்ள ஓர் அமைப்பிலுள்ள நண்பர்களிடம் தான். மேலும் பேச நட்புகொள்ள விழையும் பருவத்தில் அதற்குள் நுழைகிறோம். பின்தொடரும் நிழலின் குரலில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிறுத்தி வைத்தது அந்த நட்புக்கொண்டாட்டம் தான் என்று வீரபத்ரபிள்ளை சொல்கிறார்.

ஆனால் அந்த நட்பு கூட ஒரு பாவனை தான் ஒரொரு மனிதனும் இன்னொரு மனிதனுடன் ஆழ்ந்த உறவை உருவாக்குவது அவர்கள் இருவரும் நின்றிருக்கும் பொதுத்தளம். அப்பொதுத்தளமாக இருக்கும் ஓர் அமைப்பு.குடும்பம் மதம் அரசியல் அமைப்புகள் அலுவலகம் சங்கம் அவ்வாறு ஏதோ ஒன்று அந்த அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இருக்கும்போது மட்டும் தான் அந்த நட்பு தொடருகிறது. அதில் ஏதேனும் ஒரு விதி தவறுமென்றால் அப்போதே அந்நட்பு அழிந்துவிடுகிறது. குடும்பம் சில நெறிகளை அதன் உறுப்பினர்களுக்குச் சொல்கிறது. அந்நெறிகளை மீறும் கணமே குடும்பம் சார்ந்த அத்தனை உணர்வுகளும் வற்றிப்போய் அவர் அந்நியராகி வெளியே தள்ளப்பட்டுவிடுகிறார். அதைப்போன்றது தான் அரசியல் இயக்கம், தொழிற்சங்கம் போன்றவை.

இந்த நாவலினூடாக செல்லுகையில் அந்த இனிய மயக்கங்கள் நினைவில் எழுகின்றன. அவற்றுக்கும் அப்பால் ஒன்று உண்டு. அது கருத்தியல் நமக்களிக்கும் பெரும் நம்பிக்கை. இருகூர் கொண்ட வாள் கருத்தியல் அளிக்கும் நம்பிக்கை என்பது. நாம் வாழும் இந்த உலகம் கொண்டுள்ள பிழைகள் பிசிறுகள் போதாமைகள் அனைத்தையுமே நம்மால் சீர்த்திருத்த முடியும் என்ற நம்பிக்கையை கருத்தியல் அளிக்கிறது. உலகைச் சீர்திருத்தும்பொருட்டு நாம் உருவாக்கிக்கொள்ளும் சிந்தனையை முழுமையான நிலைபாடாக ஆக்கிக்கொள்கிறோம். அதன்பின் நம் தரப்பு முற்றிலும் சரியானது, முழுமையாக முன்வைக்கத்தக்கது, அதன்பொருட்டு வாழவும் உயிர்விடவும் உகந்தது என்ற நம்பிக்கையை கருத்தியல் நமக்கு அளிக்கிறது. அந்நம்பிக்கை அக்கருத்தியலுக்கு எதிரான அனைவரும் இவ்வுலகம் மாறுவதற்கு எதிரானவர்கள், திருத்திக்கொள்வதற்கு எதிரானவர்கள், மேம்படுவதற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை அளிக்கிறது.

எதிரிகளை உருவாக்காத கருத்தியல் என எதுவுமில்லை. காழ்ப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் எந்தக் கருத்தியலும் செயல்பட முடியாது. கருத்தியல் நம்பிக்கை கொண்ட ஒருவர், அது எந்த கருத்தியலாக இருந்தாலும், எதிர்மறைப்பண்பு கொண்டவராக உளம் கசந்தவராக மட்டுமே இருப்பார் கருத்தியல் நீண்டகால அளவில் மெல்ல மெல்ல நிறம் மங்குகிறது. அதன் நடைமுறைச் சிக்கல்களில் லட்சியவாதச் சாயங்கள் வெளுக்கின்றன.நீண்ட காலம் ஒரு கருத்தியலில் வாழ மனிதர்களால் இயலாது. பெரும்பாலானவர்கள் கருத்தியலில் இருந்து அகம் விலகிவிடுவார்கள். ஆனால் அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள், உறவுகள் அனைத்தையும் அதிலேயே அமைத்துக்கொண்டவர்கள், அதிலிருந்து நலன் பெறுபவர்கள் அதைக் கைவிடமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு பெரிய இழப்பு. அதை விடுவது ஒருவகைச் சாவு. ஆகவே அவர்கள் அதை ஓர் அடையாளமாக, ஒரு எளிய சார்பு நிலையாக மட்டும் வைத்துக்கொள்வார்கள் அதற்கு உரிய கப்பத்தைக் கட்டி அதனுள் இருப்பார்கள். இன்னொரு சாரார் அதிலிருந்து உளம் கசந்து விலகிவிடுகிறார்கள்.

கருத்தியல் நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அத்தனை கசந்தவர்களாக, தனித்தவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்று வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களுடைய இளமைக்காலத்தை அவர்கள் இழந்ததைக் குறித்த ஏக்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதைவிட அன்றிருந்த நம்பிக்கைகள் எத்தனை விரைவாக அழிந்தன என்ற திகைப்பும் துயரும் இருக்கிறது. -உண்மையில் அக்கருத்தியல் தன்னியல்பான எல்லைகளால் அடைந்த போதாமையால் பொருளிழந்து விலகியது என்று உணர்வார் என்றால் அவர் தப்பித்தார். எக்கருத்தியலும் இவ்வாழ்க்கையை விளக்கிவிட முடியாதென்றும் எந்தக் கருத்தியலைக் கொண்டும் இப்பிரபஞ்சத்தையும் வாழும் உலகத்தையும் முற்றிலும் மாற்றிவிட முடியாதென்று உணர்ந்தவர் ஒரு மெல்லிய புன்னகையுடன் தன் பழையகால நம்பிக்கைகளை திரும்பிப்பார்க்கவும் அவ்விடுதலையில் இறுதிக்காலத்தை கழிக்கவும் முடியும்.

மாறாக அப்போதும் தன் கருத்தியல் சரியானது என்றும், அது எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றும் உண்மையிலேயே ஒருவர் எண்ணுவாரென்றால் அவருக்கு மீட்பில்லை. உண்மைகளை சந்திக்கும் திராணியற்றவர்கள் அவ்வாறு பொய்களை உண்மையென்று தங்களையே நம்ப வைத்துக்கொள்ள முடியும். மானுட உள்ளம் பொய்யை உணமை என ஏற்பதில் நம்ப முடியாத அளவுக்கு உடன்பாடு காட்டுவது. நான் இன்று அவ்வப்போது சந்திக்கும் பல முதிய வயது நண்பர்கள் அவ்வாறு கருத்தியலை கவ்விக்கொண்டு கசந்து துயருற்று இருப்பவர்களாக காண்கிறேன். கசப்பே உருவான எட்டி மரத்திலிருந்து கசப்பு கனிந்து உதிர்கிறது. கசப்பின் விதைகளை மண்ணுக்கு விடுகிறது. கசப்பு முளைத்து கசப்பு மரமென ஆகி கசந்த காடென ஆகிறது

கருத்தியலின் எல்லை என்ன என்று தேடும் நாவல் இது. மூன்று வெவ்வேறு காலங்களை அக்கேள்வியில் நான் எதிர்கொண்டேன். ஒன்று எனது தனி வாழ்க்கையில் கருத்தியல்கள் வழியாக சென்றது. முற்றிலும் மாறுபட்ட இரு கருத்தியல்கள் அவை. ஆனால் அடிப்படையில் அவை ஒன்றே. அவற்றின் மனநிலைகள், அவற்றை நம்புபவர்களின் இயல்புகள், அவற்றின் அமைப்பு முறைகள் அனைத்தும் முற்றிலும் ஒன்றே. அவற்றின் உள்ளிருக்கையில் உங்களுக்கு கிடைக்கும் நட்பும் வெளியிலிருக்கையில் உங்களுக்குக் கிடைக்கும் பகைமையும் ஒன்றே. நம்பும்போது நீங்கள் கொள்ளும் வேகமும் எதிரிகளை உருவாக்கிக்கொள்ளும் வெறியும் ஒருகணத்தில் அதிலிருந்து வெளிவரும்போது அவ்விரு உணர்வுகளும் அளிக்கும் திகைப்பும் ஒன்றே.

இன்னொன்று அக்காலகட்டத்தில் விடுதலைப்புலி அமைப்பிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களுக்காக வெளிவந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய அனுபவங்கள், பலர் இந்தியா விட்டு செல்வதற்கு நான் உதவியிருக்கிறேன். பலருடன் எனக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் ஒரு மந்திரவாதியின் மாயவலையத்திற்கு உள்ளிருந்து அவன் ஏவிய பூதம் போல அனைத்தையும் செய்தவர்களாகத்தான் பின்னர் தங்களை உணர்ந்தார்கள். இருபது வயதுவரை தன் குடும்பத்திலிருந்தும் தன் மரபிலிருந்தும் பெற்ற அனைத்து அறச்சார்புகளையும் உதறிவிட்டு தங்களால் எப்படி பெருங்கொடுஞ்செயல்களைச் செய்ய முடிந்தது என்று எஞ்சிய வாழ்நாள் முழுக்க எண்ணி எண்ணி துயருற்று வாழ்ந்தவர்கள் பலர். பலர் குடித்து குடித்து உயிர் துறந்தனர். தங்களைக் கொல்லும் தெய்வங்களுக்காக தவமிருந்து நோய்களைப் பெற்றுக்கொண்டு உலகிலிருந்து மறைந்தனர்.

ஐந்து அல்லது ஆறு ஆண்டுகாலம் அவ்வமைப்பிலிருந்து கொடுஞ்செயல்களைச் சேர்ந்தவர்கள் பிறகு எப்போதும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. கொடுஞ்செயல்களை நோக்கிச் செல்லும்போது கருத்தியலின் மாயம் அவர்களின் நீண்ட மரபை அவர்களிடமிருந்து விலக்கி வைத்தது. ஆனால் கருத்தியலை விட்டு வெளிவந்த பிறகு மதமோ, தெய்வ நம்பிக்கையோ, பல்லாயிரம் பிராயச்சித்தங்களோ, போகங்களோ, களியாட்டுகளோ எதுவுமே அவர்களைக் காப்பாற்றவுமில்லை. அவர்களின் குற்ற உணர்விலிருந்து பழி உணர்விலிருந்து அவர்களால் வெளிவர முடியவில்லை.

ஏறத்தாழ அதே காலத்தில் தான் சோவியத் ரஷ்யா உடைந்தது. 1992-ல் ரஷ்யாவின் உடைவென்பது இன்று மிக எளிதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அது நிகழ்ந்தபோது இன்னும் பல ஆண்டுக் காலத்திற்கு பெருங்கொந்தளிப்புடன் அது பேசப்படப்போகிறது, நூறு ஆண்டுகளுக்கான வரலாற்றூ நிகழ்வு அது, அதிலிருந்து மானுடம் அத்தனை எளிதாக வெளிவர முடியாது என்றெல்லாம் நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் பத்தாண்டுகளுக்கு கூட அதைப்பற்றிய விவாதங்கள் நீடிக்கவில்லை. சொல்லப்போனால் ஓரிரு ஆண்டுகளிலேயே அந்நிகழ்வே முற்றாக மறக்கப்பட்டது. ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு நினைவில் நின்றிருக்கும் அளவுக்குக்கூட எழுபத்தைந்து ஆண்டுக்காலம் நீடித்த சோவியத் ரஷ்யாவின் யுகம் நினைவில் நிற்கவில்லை. கம்யூனிஸ்டுகளே அதை உடனடியாக மறந்துவிட்டார்கள். இன்று மேடைகளிலே சோவியத் ரஷ்யாவைப்பற்றி பேசுபவர்கள் அரிதினும் அரிது.

இன்றைய பார்வையில் அது எத்தனை விரைவாக அது கைவிடப்பட்டது என்பது வியப்பளிக்கவில்லை ஏனெனில் ஏற்கனவே அதைப்பற்றி இடதுசாரிகள் அறிந்திருந்தார்கள். அது உதிரும் என்று அவர்களுக்கு உள்ளூர தெரிந்திருந்தது. அத்துயர நிகழ்வு நிகழ்ந்தபோது அது ஒரு அவமானமாக, கசப்பாக அவர்களிடம் எஞ்சியது. எத்தனை விரைவாக அதை உதறிவிடுகிறோமோ அத்தனை விரைவாக விடுதலை பெறலாம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். பிறகு அவர்கள் செய்ததெல்லாம் சாவுச் சடங்குகள் தான். அத்தனை சாவுச் சடங்குகளும் சாவை மறப்பதற்கும் கடப்பதற்கும் உரியவை.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி அதை நம்பி தன் இளமையைத் தொலைத்த முதியவர்களிடம் மட்டுமே ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. உண்மையில் அவர்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னரே இடதுசாரி அமைப்புகளிலிருந்து வெளியே வந்தவர்கள் சுந்தர ராமசாமி போன்றவர்கள் சோவியத் ரஷ்யாவிலிருந்த அடக்குமுறை, மானுட அழிவு ஆகியவற்றை நன்கறிந்து அவற்றை எழுதியவர்கள். அதனாலேயே வெறுக்கப்பட்டவர்கள்.ஆயினும் அவர்களுக்கு அந்த வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சுந்தர ராமசாமி, கோவை ஞானி, ஆற்றூர் ரவிவர்மா போன்றவர்கள் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியால் அடைந்த அந்த பெருந்துயரை அருகிருந்து கண்டேன். கருத்தியலின் இன்னொரு முகம் எனக்கு தெரியவந்தது.

கருத்தியல் என்பது ஒருவகையான தந்தை என்னும் உணர்வை அப்போது அடைந்தேன்.தந்தை ஒருவகையான தெய்வம். எல்லா தெய்வங்களும் தந்தைதான். தந்தை என்று வந்திருப்பது இதுவரைக்குமான பல்லாயிரம் தந்தைகளின் பொதுத்தொகுப்பு. கருத்தியல் என்று வந்திருப்பது இதுவரைக்கும் பல்லாயிரம் சிந்தனையாளர்கள் கண்ட கனவுகளும் எண்ணங்களும் ஒருங்கிணைந்தது. அதன் ஆற்றல் மிகப்பெரியது. கருத்தியலுடன் மோதி விலகலாம். அது தந்தையுடனான மோதல் மட்டும்தான். விலகும் தோறும் பிறிதொரு இடத்தில் நாம் அணுகிக்கொண்டிருக்கிறோம். அது இல்லாமல் ஆகும்தோறும் அந்த பெரும் வெறுமையை உணர்கிறோம்.

கருத்தியலிலிருந்து எளிதில் விடுதலை பெற முடியாது. ஏனெனில் உண்மையில் நாம் கருத்தியலை நோக்கி புதிதாக சென்றடையவில்லை. கருத்தியலிலேயே நாம் பிறந்து வளர்கிறோம். ஒரு கருத்தியலிலிருந்து இன்னொரு கருத்தியலுக்கு செல்வதையே நாம் இளமையில் செய்கிறோம். மதம் ஒரு மாபெரும் கருத்தியல், அதில் பிறக்கிறோம். அரசியல் கருத்தியல்களுக்குச் செல்கிறோம். அது உதிர்ந்தால் மீண்டும் மதத்திற்கே செல்கிறோம், அல்லது ஒரு புதிய கருத்தியலுக்கு தவிக்கிறோம். கருத்தியல் இல்லாத வெற்றிடம் என்பது ஆன்மீகத்தால் கவிதையால் மட்டுமே நிரப்பத்தக்கது. ஆன்மீகமோ கவிதையோ இன்றி கருத்தியலால் கைவிடப்பட்டவர்கள் மதத்தையே சென்று சேர்கிறார்கள். அவ்வாறு நான் வழிபட்ட பல இடதுசாரிகள் மதத்தின் காலடியில் சென்று அமர்வதைப்பார்த்தேன். கே.ஆர்.கௌரி குருவாயூரப்பன் பக்தையாக வந்து அம்ர்வ்தை பார்ப்பேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. கெ.கெ.எம் சென்ற பாதையும் அதுவே.

மூன்று களங்ளினூடாக கருத்தியல் குறித்த என் உசாவல்கள் உருவாயின. அதன் விளைவே பின் தொடரும் நிழலின் குரல். இன்று அதை திரும்பப் படிக்கையில் அதன் பல்வேறு களங்கள் எனக்குத் திகைப்பூட்டுகின்றன. நான் அதைக் கடந்து வந்துவிட்டேன் என்றே எண்ணுகிறேன். இன்று என்னிடம் விடைகள் இருக்கின்றன. அவ்விடைகளை துல்லியப்படுத்திக்கொள்ளும் பொருட்டு வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆயினும் இந்த வினாக்களை மீண்டும் வாசிப்பது என்பது என்னை தொகுத்துக்கொள்வதாகவே அமைகிறது.

( 3 )

இன்று நினைவுகளை மீட்டுக்கொள்ளும்போது தமிழினி வசந்தகுமாரை மிகநெகிழ்வுடன் எண்ணிக் கொள்கிறேன். இந்நாவலை எழுதும் நாட்களில் ஒவ்வொரு நாளும் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பத்மநாபபுரத்தில் என் இல்லத்திற்கு வந்து தங்கியிருந்து இந்நாவலின் பிழைதிருத்தங்களைச் செய்தார். இந்நாவலுக்காக மிகச்சிறந்த வெளியீட்டுவிழாவை ஒருங்கிணைத்தார். எங்கள் என்.எஃப்.டி.இ தொழிற்சங்கத்தலைவர் ஜெகன் வந்திருந்து இந்நூலை வெளியிட்டார். தோழர் பட்டாபிராமன், இராஜேந்திரசோழன் ஆகியோர் பேசினர். மகத்தான நினைவாக நின்றிருக்கிறது அந்த விழா. வசந்தகுமாருக்கு நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

ஜெயமோகன்

நாகர்கோயில்

17-2-2022

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் முன்னுரை)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.