Jeyamohan's Blog, page 827
February 15, 2022
அருண்மொழியின் நூல் வெளியீடு
அருண்மொழியின் ‘பனி உருகுவதில்லை’ நூலின் வெளியீட்டுவிழா சென்னையில். விழா முடிவில் ஒரு போர் முடிந்த பேரமைதி செவியை குத்துவதுபோல உணர்ந்தேன். விடைபெறல்கள், கட்டித்தழுவல்கள். வழக்கமாக எல்லா இலக்கியவிழாக்களும் அளிப்பது ஒரே மனநிலையைத்தான். ’என்னதான் இருந்தாலும் நாமெல்லாம் ஒண்ணு.’
விழா முடிந்து வரும்போது அருண்மொழியிடம் கேட்டேன். “சாருவோட மியூசிக் டேஸ்ட் பற்றி என்னமோ சொன்னியே, என்னது அது?”
“இல்ல, சாரு மியூசிக்ல எந்த மாஸ்டர்கிட்டயும் நின்னுட மாட்டார்னு…”
“அதான், அது என்னது?”
“பொதுவா சங்கீதத்துக்கு அப்டி ஒரு குணம் உண்டு. ஒரு வகையான சங்கீதத்தை கேக்கிறப்ப அதான் பெஸ்ட்னு தோணிடும். ஒரு மாஸ்டரை கேட்கிறப்ப அவர்தான் அல்டிமேட்னு தோணிடும். அப்டியே கேட்டுக்கிட்டே இருந்தா கொஞ்சநாளிலேயே நம்ம மனசு டியூன் ஆயிடும். வெளியே போக முடியாது. இன்னொண்ண கேக்க முடியாது. ரொம்ப பெரிய சங்கீத ரசிகர்கள்கூட எங்கியாம் அப்டி நின்னுட்டவங்கதான்…அப்டி நின்னுக்கிடறது ஒருவகையிலே நல்லது. அங்க ரொம்ப ஆழமா போய்ட முடியும். ஆனா வெளியேறி இன்னொரு ஏரியாவுக்குள்ள இன்னொரு மாஸ்டர்கிட்ட போறது இன்னொரு சிறப்பு…அது அவ்ளவு ஈஸி இல்ல”
“அதில என்ன அவ்ளவு கஷ்டம்? லிட்டரேச்சர்லயும் மாஸ்டர்ஸ் இருக்காங்களே”
“ஆமா, ஆனா லிட்டரேச்சர்ல மண்டை இருக்கே. சங்கீதத்லே மண்டையே இல்ல. நாம எப்டியெல்லாம் டியூன் ஆகிறோம்னு நமக்கே தெரியாது. மந்திரம் மாதிரி. என்னாச்சுன்னு தெரியறதுக்குள்ள ஸ்லேவ் ஆயிடுவோம்…சிமிழ்ல அடைச்சிருவாங்க மாஸ்டர்ஸ்”
“ஓகோ”
“ஒண்ணை நிராகரிக்காம இன்னொண்ணுக்கு போறது பெரிய தாவல். படே குலாம் அலி கான் கேட்டுட்டு வெஸ்டர்ன் ஜாஸ் கேக்கணும்னா அதுக்கு பெரிய டிராவல் வேணும். அதாவது…”
’புரியுது’ என்றேன். ஆனால் புரியவில்லை
‘அது லாவா இருக்கில்ல அது இறுகி கல்லாகி அப்றம் மறுபடி உருகி லாவா ஆகிறது மாதிரி…ஏன்னா…”
மேற்கொண்டு அதை நான் புரிந்துகொள்ள முயலவில்லை. நாமுண்டு நம்முடைய இரும்புக் காதுண்டு என இருந்துவிடுவது நாட்டுக்கும்கூட நல்லது.
அருண்மொழியின் இந்த நூல்வெளியீட்டு விழா ஒரு வேடிக்கை. என் சொந்தத்தில் ஒரு பெண்ணுக்கு வளைக்காப்பை பிள்ளை பிறந்து காதுகுத்துடன் சேர்த்து வைத்தார்கள், பெண் அவ்வளவு பெரிய அடம். அப்போது பெற்றோரால் சில சிக்கல்களால் வளைக்காப்பு வைக்க முடியவில்லை. இந்த நூல் வெளியீட்டு சென்ற ஜனவரியில் ஏற்பாடானது.அப்போது கொரோனா நெருக்கடி, புத்தகக் கண்காட்சி தள்ளிப்போனது, ஆகியவற்றால் நடத்த முடியவில்லை.
ஆகவே மறுமுறை புத்தகக் கண்காட்சி ஏற்பாடான பத்தாம் நிமிடத்தில் விழா ஏற்பாடாகி விட்டது. அன்புத்தம்பிகளுக்கு ஆணைகள் நாலாபக்கமும் பறந்தன. எள் என்றால் எண்ணையாக தம்பிகள் முன்னின்றனர்.
“காளி கிட்ட இதச் சொல்லியிருக்கேன்.சண்முகம் கிட்டேயும் சொல்லியாச்சு. நீங்க இத மறுபடியும் காளிகிட்டயும் சண்முகம் கிட்டயும் சொல்லி ராஜகோபால் கிட்ட சொல்லச் சொல்லுங்க” ராஜகோபாலிடம் ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட செய்திதான். “அகரன் கிட்ட சொல்லிட்டேன்னு இவங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் ஜெயன்.அத இப்பதான் சௌந்தர் கிட்ட சொல்லிட்டு…”
நள்ளிரவிலும் பதற்றங்கள். ’ஜெயன் வளசரவாக்கம் பக்கமா, இல்ல டி நகரா?” நான் சென்னையைப் பற்றிய இனிய அறியாமையை கொண்டவன். ‘டி நகர்னா இந்த தாம்பரம் பக்கம் இருக்கே…”
’நீ ஒண்ணும் சொல்லவேணாம், நானே பாத்துக்கறேன். ஹலோ, சண்முகம் அதாவது டி நகர்லே…”
ஒரு துல்லியத் தாக்குதலுக்கான மயிரிழை பிசகா திட்டமிடல்கள். நிகழ்ச்சியின்போது யார் எங்கே நிற்கவேண்டும் ,எவர் என்ன சட்டைபோடவேண்டும்…(இந்த காஞ்சி சிவா ஏன் கறுப்புச்சட்டை போட்டுட்டு வர்ரார்? பிடிக்கவே இல்லை). நான் நாலைந்து நாள் மாடியை விட்டு இறங்கவே இல்லை.எப்போது வந்தாலும் அதிதீவிர திட்டங்கள். உண்மையில் வேளச்சேரியை படைகொண்டு சென்று கைப்பற்றத்தான் முயற்சியா என குழப்பம் வந்தது.
விழாவுக்கு முதல்நாள், பிப் 13 அன்று மலேசியா வல்லினம் சார்பாக எழுத்தாளர் அம்மாவுக்கு ஒரு சூம் உரையாடல் ஆகவே 11 ஆம் தேதியே கிளம்பி சென்னை சென்றோம். விடுதியில் உரிய கணிப்பொறி அமைத்தல், ஒலி சோதனை செய்தல் ஆகியவற்றில் இளவல்கள் ஈடுபட அந்தப் பகுதியிலேயே என் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. உரையாடல் முடிந்த பின்னர் விரிவான மொத்த உரையாடலையும் மேலும் விரிவாக என்னிடம் சொன்னாள். அதன்பின் எவர் எங்கே எப்படி எதைக் கேட்டார்கள் என்று தனியாகக் கணக்கெடுப்பு.
13 ஆம் தேதி விழாவன்று நான் ஒரு சினிமாச் சந்திப்புக்காகச் செல்லவேண்டியிருந்தது. ‘நீ எப்ப வருவே?’ என்று கேட்ட கேள்வியில் நான் வந்தாகவேண்டுமென அப்படியொன்றும் கட்டாயமில்லை என்னும் தொனி இருந்தது. விழாவில் நான் பேசக்கூடாது, மேடைக்கு வரக்கூடாது, முன்னிருக்கையில் அமரக்கூடாது, முகத்தோடு முகம் பார்க்கக்கூடாது, எதன் பொருட்டும் சிரிக்கக்கூடாது என பல நிபந்தனைகள்.
உண்மையில் அரங்கில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தபோது அருண்மொழி மேடையில் பேசுவதுபோலவே தோன்றவில்லை. மேடைப்பேச்சுக்குரிய தனி மொழி இன்னமும் உருவாகவில்லை. நேரில் அல்லது ஃபோனில் பேசுவதுபோல இருந்தது
அகரமுதல்வன் ஏற்பாட்டில் நல்ல கூடம். நல்ல ஒலி, ஒளி அமைப்பு. யுவன் அருண்மொழிகூடவே வந்தான். தாத்தா ஆன பிறகு இன்னும் இளமையாக தெரிந்தான். அங்கே ஏற்கனவே தெரிந்த முகங்கள் தென்பட ஆரம்பித்திருந்தன. ஃப்ரண்ட்ஸ் பார்க் தொடக்கத்திலேயே அருண்மொழிக்கு ஒரு பேனர். அம்மாவின் வண்டி திரும்பும்போது துல்லியமாகக் கண்ணில்படும்படியாக.
எம்.கோபாலகிருஷ்ணன் முன்னரே வந்திருந்தார். கொஞ்சம் பிந்தி சாரு வந்தார். விழா தொடங்கியது.சுவாரசியமான கச்சிதமான உரைகள். யுவன் சந்திரசேகரின் வெடிச்சிரிப்புகள் பெரும்பாலும் என்னை மையம் கொண்டிருந்தன. மூத்த எழுத்தாளராகவே தமிழுக்கு அறிமுகமாகும் அருண்மொழியை வாழ்த்தினான்.
நடுவே ஒரு வார்த்தை. எனக்கு இரும்புக் காது என்பது மூன்று நல்லெண்ணமற்றவர்களால் உருவாக்கப்பட்ட தொன்மம். சுந்தர ராமசாமி, யுவன் சந்திரசேகர் மற்றும் சுகா. நானும் இசை கேட்பவன்தான். திருவையாறுக்கெல்லாம் பலமுறை போயிருக்கிறேன் (சரி, போகப்பட்டிருக்கிறேன்). சுதா ரகுநாதனின் ஜிமிக்கியின் நிழல் வெவ்வேறு ஒளிமாறுபாடுகளில் என்னென்ன ஆனது என்றெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறேன்.
கடைசியாக அருண்மொழியின் அதிவேக உரை. அவளை அறிந்தவர்களுக்கு அவள் கொஞ்சம் மெதுவாகப் பேசினாள் என்றுகூட தோன்றியிருக்கலாம். தஞ்சாவூர் பகுதியில் அப்படித்தான் பேசுகிறார்கள். ஜானகிராமன் அவருடைய கதாபாத்திரங்கள் அப்படி பேசுவதைப் பற்றி பலவகையாக வர்ணித்திருக்கிறார்.
விழா முடிந்து திரும்பும்போது ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து மீண்டும் உரையாடல். இதெல்லாம் ஒரு கல்யாணம் போல. யாரெல்லாம் வந்து என்னவெல்லாம் மொய் செய்தார்கள், என்ன சட்டை அணிந்திருந்தார்கள் என்றெல்லாம் துல்லியமான கணக்கு இருக்கும்.
‘ஹமீதை கூப்பிட்டிருக்கலாம், அவர் இல்லாம கொறையா இருந்துச்சு’ ஆரம்பித்து ‘சுகா வந்துட்டு ஒரு ஹாய் கூட சொல்லாம போய்ட்டார். கூப்பிடணும்’ ‘இந்த செல்வேந்திரனை எங்க காணும்?’ ‘ஷாகுல் வந்திருக்கலாம்’ என விரிவான அட்டவணைப்படுத்தல். ஒரு நாலைந்து நாள் அது போகும்.
சரிதான், 1990ல் என் ரப்பர் நாவலுக்கு கோவையில் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஒரு விழா எடுத்தார். முல்லை ஆதவன் அதில் பேசினார். அன்றும் மறுநாளும் எனக்கு உடம்பில் காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தது. விழா முடிந்த மறுநாள் தினதந்தியில் செய்தி வந்திருந்தது. நான் கோவை நகரமே பரபரப்படைந்துவிட்டிருந்ததை அன்று கண்ணால் பார்த்தேன்.
அருண்மொழி நங்கை விழா- உரைகள்
அருண்மொழி நங்கை எழுதிய ‘பனி உருகுவதில்லை’ நூல் வெளியீட்டு விழா 13-2-2022 அன்று சென்னை வளசரவாக்கம் ஃப்ரன்ட்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்றபோது ஆற்றப்பட்ட உரைகள்
கவிதைகள் இதழ், ஐந்து கவிஞர்கள்
அன்புள்ள ஜெ,
இம்மாத கவிதைகள் இணைய இதழ், ஐந்து இளம் கவிஞர்களின் சிறப்பிதழாக வெளிவருகிறது. பெரு விஷ்ணுகுமார், வே. நி. சூர்யா, ச. துரை, றாம் சந்தோஷ் மற்றும் நிலாகண்னன் ஆகியோரின் புதிய கவிதை தொகுப்பிலிருந்து கவிதைகளை தேர்வு செய்து நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள்.
புத்தகத் திருவிழா நடைபெரும் இம்மாதம் நண்பர்கள் இக்கவிஞர்களின் புதிய தொகுப்பை வாங்கி வாசிக்க இந்த அறிமுகம் உதவியாய் இருக்கும்.
பெரு விஷ்ணுகுமார் – அசகவ தாளம், காலச்சுவடு வெளியீடு பெரு விஷ்ணுகுமார் இணையப்பக்கம் வே நி சூர்யா – அந்தியில் திகழ்வது, காலச்சுவடு வெளியீடு வே.நி.சூர்யா இணையப்பக்கம் ச. துரை – சங்காயம் , எதிர் வெளியீடு ச.துரை பக்கங்கள்
றாம் சந்தோஷ் – இரண்டாம் பருவம் , எதிர் வெளியீடு
நிலாகண்ணன்- பியானோவின் நறும்புகை , படைப்பு பதிப்பகம் வெளியீடு நிலாக்கண்ணன் அறிமுகம்
ஒரு இதழுக்கு அதிகபட்சம் ஐந்து கவிஞர்களின் கவிதைகள் என முடிவெடுத்துள்ளதால் மேலும் புதிதாக வந்திருக்கும் சில கவிஞர்களின் தொகுப்பு குறித்து இம்மாத இதழில் வெளியிட முடியவில்லை. தொடர்ந்து வரும் மாதங்களின் புதிய கவிஞர்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படும்.
ஆனந்த் குமார்
ஆசிரியர்
கவிதைகள் இணைய இதழ்
கவிதைகள் இணைய இதழ்THE STORY OF EKOLU
அ.முத்துலிங்கம் எழுதிய எகோலுவின் கதை என்னும் சிறுகதை ஜெகதீஷ் குமார் மொழியாக்கத்தில் spillwords இலக்கிய இதழில் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சுசித்ரா மொழியாக்கத்தில் ஆட்டுப்பால் புட்டு என்னும் கதை வெளியாகியிருந்தது.
மழைப்பாடல் வாசிப்பனுபவம்
ஆசானுக்கு வணக்கம்,
காலத்தின் விரிவு, சிவநடனத்தின் சாரமாக சொல்லப்படும் தொன்மத்தில் இருந்து விரியத் தொடங்குகிறது “மழைப்பாடல்”.
தாயானவள், தன் கனவை தனது குழந்தை மீது சுமத்தும் பழக்கம் இராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டு இன்றும் நீடிப்பது இனிய தண்டனை. அதற்காக அனைத்து தாய்மார்களும் கூறும் காரணங்கள் கொண்டு, எத்தனை காவியங்கள் இன்னும் தோன்றுமோ! பேராற்றல்களும் வணங்கி அடங்கும் ஒற்றைச்சொல் “அன்னை”. மழைப்பாடலில் சத்யவதி மட்டும் அல்ல, எல்லா அன்னையரும் அவ்வண்ணமே. பீஷ்மர் செய்ய இருக்கும் ஒரு அறமீறலுக்கான ஆணை, “அன்னை” சத்யவதியால் அவர் முன் வைக்கப்படுகிறது. ஒரு பெரும்போரை தவிர்க்கும் பொருட்டு, அஸ்தினபுரியின் குருதி மண்ணில் வீழுவதை தவிக்கும் பொருட்டு அவர் விருப்பமில்லாத அனைத்தையும் சகிக்கிறார். இம்முறை அவரது மகனான விதுரனும், சத்யவதியுடன் சேர்ந்து கொள்கிறான். சத்யவதியின் ஆண் வடிவமாகிறான் விதுரன். அவனின் மதிசூழ்கை, பீஷ்மரின் முடிவுகளை அவரே மறுபரிசீலனை செய்யும் இடத்திற்கு தள்ளுகிறது. பீஷ்மரின் நாடு திரும்புதலை நாடறிவிக்க விதுரன் செய்யும் சூழ்ச்சி, அவன் நினைத்த பலனையே அருள்கிறது.
வெண்முரசு நூல்வரிசையில்,இந்நூலுக்கு மற்றொரு பொருத்தமான தலைப்பு “சூழ்மதிச் சதுரங்கம்”. இதில் முக்கிய பங்காற்றும் அனைவருமே தனக்கென ஒரு இலக்கை வைத்துக்கொண்டு எதிர்வரும் அனைவரையும், இலக்கை அடையும் யுக்தியில் ஒரு முன்னகர்வாகவே பார்க்கின்றனர். விதுரனையும் பீஷ்மரையும் தவிர. அவர்கள் இருவரும் “நேர்ச்சை” என அஸ்தினாபுரிக்காக நேர்ந்து விடப்பட்டவர்கள். ஆனால் அவர்களுள் ஒருவருக்கு போர் நிகழ்ந்து அஸ்தினபுரி காக்கப்படவேண்டும், மற்றொருவருக்கு தன் வாழ்நாளில் அப்போர் நிகழவே கூடாது. யாதவர்களுக்கு சத்ரியர்களாக வேண்டும். சத்ரியர்களுக்கு நாடு நிலையாகி, பெருகவேண்டும். காந்தாரத்திற்கு மகதம் வேண்டும். மகதத்திற்கு அஸ்தினபுரியை விழுங்க வேண்டும். இளவரசிகளுக்கு பேரரசியாக வேண்டும். பேரரசிக்கோ அஸ்தினபுரியை நாடாளும் குருதி வேண்டும். இவற்றை அடைய எல்லோர் முன்னும் ஒரு பெருந்தடை உள்ளது. இத்தகைய மாபெரும் பின்னல்களுக்குள் விதுரரின் மதிசூழ்கை அஸ்தினபுரியின் பக்கம். சிலிர்ப்பு.
அன்றும், இன்றும் அதிகாரத்திலும், அதன் பசியிலும் உழலுபவர்களுக்கான தேவையுள்ள பல கூற்றுகள் இந்த பாகத்தில் இடம்பெற்றுள்ளது. வாசித்துத் தெளிபவர்கள் பாக்கியவான்கள். அதிகாரத் திமிரில், அறிஞர்களையும், துறையியல் மேதைகளையும் இழிவு செய்யும் பழக்கம் (இன்றும் கூட) பாரத வருஷத்தின் தலையாய தன்னியல்புகளுள் ஒன்று போலும். அஸ்தினபுரியின் இளவரசர் ஆகச்சிறந்த “மதியூகி”யான விதுரனை சொல்லுக்குச் சொல், விளிக்குவிளி “மூடா” என்கிறார். அவனும் புன்னகையால் அவற்றை கடக்கிறான். அதுவே இன்றும் நிகழும் நிதர்சனம். எக்காலத்திற்கும் பொருந்துவதுதானோ அதிகாரம் எனும் “போதை”?
வெண்முரசு நூல்வரிசையின் முதல் நூலான முதற்கனலில், பாரத வருஷத்தின் தொன்மக்கதைகள் அணிபோல மிக அழகாக ஒருங்கே அமைந்திருந்தது. இந்நூலிலும் அவ்வாறே மிகச்சரியான இடங்களில் பொருந்திவருகிறது. தூரத்துசூரியன் பகுதியில், கர்ணனின் பிறப்பு இருவேறு விதமாக, சொல்லப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. ஒன்று தருவது தொன்மத்தின் சாரம். மற்றொன்று தருவது பெண்ணியத்தின் அகங்களுள் ஒன்று. பெண்ணியத்தின் அகத்தினுள் விரியும், கர்ணன் பிறப்பின் இரண்டாம் கதையானது அனகை, பிருதை, தேவகி என பெண்களுக்குள் மட்டுமே நடைபெற்று, பெண்களுக்குள் மட்டும் உலாவுவது/பகிரப்படுவது போல சித்தரிக்கப் பட்டுள்ளதால் உருவகத்தன்மை (Metaphor) /குறியீட்டுத்தன்மையை அடைகிறது. இலக்கியத்தில், தர்க்க நோக்கு கொண்டு அலையும் நவீனத்துவ இளைய தலைமுறைக்கும், தொன்மத்திற்குமான பாலமாக கர்ணபிறப்பு அமைத்துள்ளது. தொன்மத்தில் பேதையாக வரும் குந்தி, மழைப்பாடலில் அரசியல் சூழ் வினைஞர்/மதியூகி. இந்த யுகத்தின் பெண்ணுக்கானவள்.
பிறப்பு, இந்நூலில் நெடுக நாம் அறிவது. அவற்றில் தலையாயது, “கலியுகத்தின் பிறப்பு”. கலி தன்னைத்தானே உண்டு இறுதியில் ஏதுமில்லாதது. கலியுக பிறப்பின் போதே அதற்கான யுகபுருஷர்களும் பிறக்கிறார்கள். அவர்களுடன் அவர் கதைகளும். கலியுகம் தன்னை அழிக்கவே பிறந்து கொள்வதால், கலியுக புருஷர்களும் கலியுடன் பிறந்து, அதனுடன் வளர்ந்து தங்களுக்குள் பொருதி, இறுதியில்ஏதுமற்றதாகின்றனர். ஒரு பிறப்பின் பின்னால் பல நோக்கங்களைக் கொண்டு காய் நகர்த்தும் அனைவருக்கும் முன்னால், தன் குழந்தைகளின் பிறப்பை, தன் தமையனின் குழந்தைகளின் பிறப்பை, அவர்கள் தன்னை அருகாமையில் இருப்பதை மட்டும் விரும்பும் பாண்டு, மனதளவிலும் “வெள்ளை”யன் ஆகிறான். தோள்வலியற்ற அவன் பிள்ளைகளை தொடர்ந்து தோளில் சுமப்பதிலேயே வலிமை கொண்டவனாகிறான். பாண்டுவின் இறப்பு விவரிக்கப்பட்ட விதம் அழகானது. எந்தவித புனிதமும், அதற்கான சப்பைக்கட்டுகளும் இன்றி மிக எளிமையாக, அதே நேரம் கவித்துவமாக சொல்லப்பட்ட இறப்பு அது. பாண்டுவின் இறப்பிற்கு பின்னர் மாத்ரி எடுக்கும் முடிவில், காதல் முன்வைக்கப்பட்டு, குற்றவுணர்வு இலைமறைகாயாக வைக்கப்பட்டது சிறப்பு.
களிற்றுநிரையில், துரியோதனனின் பிறப்பை காந்தாரியும், சகுனியும் கனவில் அறியும் விதம், முதல், இரண்டாம் மூன்றாம் அலையெனத் தாண்டி முடிவில் எழும் பேரலை போல, மிக நுணுக்கமாக, சிறுகச்சிறுக சென்று உச்சம் தொடுவது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது. தூரத்தில் புள்ளியாக தெரியும் கோபுரம், நெருங்க நெருங்க, கண்ணிலடங்கா பேருருக்கொள்வதுபோல துரியோதனனை கலியின் பிறப்பாக சித்தரிக்கும் விதம் தனது உச்சத்தை மெல்ல மெல்ல, அதே நேரத்தில் மிக இயல்பாக அடைகிறது. அவ்வாறு மிக இயல்பாக மிகையை அடைவதனாலேயே அப்பிறப்பு நம்மையும், அஸ்தினபுரியையும் பின்வருவனவற்றிற்கு தயார் செய்கிறது. துரியோதனின் முதன்மைப்பண்புகளாக தந்திரம், வலிமை, நிறைகொண்ட இருள் போன்றவற்றை சித்தரிக்கும் உருவகங்கள் புல்லரிக்கச்செய்பவை. இப்பண்புகள் அனைத்தையும் தனித்தனியே தன்னுள்கொண்ட உச்சபடைப்புகளாக நாம் முன்னமே அறிந்த சகுனி, பிதாமகரின் தோழனாக வரும் உபாலன் என்னும் யானை, தன் கணவனுக்காக தான் ஏற்ற இருளை, இனிமேல் தன் மகனுக்காக அளிக்கத்துடிக்கும் காந்தாரி ஆகியோர் பேரதிர்வு கொள்ள தன் இருப்பை உலகுக்குச் சொல்கிறது துரியோதனனின் “பார்த்திவ பரமணு”. கலியின் களிறு கொள்ளும் களியாட்டம் மற்றவரை கொஞ்சமேனும் அதிரச்செய்ய வேண்டாமோ! துரியோதனின் பிறப்பின் போது கிடைக்கும் “கதை”க்கு தீர்க்கஷ்யாமரின் விளக்கம் அருமையானது. அந்நிகழ்வு அனிச்சையாகவே, இந்நாவலில் எங்கும் முன்னர் குறிப்பிடப்படாத பீமனையும், அவன் பிறப்பையும் சேர்த்தே வாசிப்போருக்கு நினைவூட்டுகிறது. இதுவே, இந்திய தொன்மத்தின் பலம்.
மழைப்பாடலில் என் விருப்ப நாயகன் “திருதிராஷ்டரன்”. மழைப்பாடல் முழுவதும் திருதிராஷ்டரன் மிக எளிய, உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு மாபெரும் களிறு போல் தெரிகிறான். பீஷ்மரை யுத்தத்திற்காக அறைகூவல் விடும் போது காட்டு யானையாகவும், அவரால் அடக்கப்பட்ட பின்னர் பாகனுடன் கொஞ்சிக் குலாவும் கோயில்யானையை போலவும் இருக்கிறான். காந்தாரியின் மணவிழவில் மதங்கொண்டு திரியும் போர்யானை. அவனுக்கும், அவன் இளவலுக்கு நிரைநிரையாக பிறக்கும் குழந்தைகளால் முற்றம் நிறையும் என பூரிக்கும் போதும், பாண்டுவுக்கு நாடளிக்க சித்தமாகும் போதும், அன்பில் மகவை வருடும் “தாய் யானை”. தீர்க்கசியாமருக்காக, மிகவும் உணர்வெழுச்சி கொண்டு, அவரில் தன்னைக்கண்டு, அரசநெறியை மீறி அவரின் சிதையைக் காணச்செல்லும் போது, சகயானைக்காக (யானை டாக்டரில் வருவதுபோல) கண்ணீர் சுரக்கும் தோழமை கொண்ட யானை. பாண்டு வனம்புகும் பொருட்டு தன்னை பிரியும் போது கலங்கும் போதும், பாண்டுவின் இறப்பின் போதும் உருகும் போதும், இரயில் தண்டவாளங்களில் சிக்கி தனது நிரையில் உள்ள ஒரு யானை குறையும் போது கண்ணீர் சிந்தும் தலைமை-யானை. இறுதியாக, துரியோதனின் பிறப்பின் போது, பிறந்ததே யானையாதலால் அவன் தந்தை-யானை. ஒவ்வொரு முறையும் அவனும் சஞ்சயனும், யானை-பாகன் உறவை நினைவூட்டுகின்றனர். யானை நினைத்தால் எதுவும் செய்யலாம். ஆனால், பாகன் சொல்வதை மட்டும் கேட்கும் யானையாகிறான் “திருதிராஷ்டரன்”. தான் கண்டதோடு, தன் யானை உணருவதையும், மொழியாக்கி யானைக்கே மீண்டும் சொல்லும் பாகனாகிறான் “சஞ்சயன்”. இருவருக்குமிடையே இனியமுரணாக இருப்பது இசை மட்டுமே.
சார்வாகன் வரும் இடங்களிலெல்லாம் தத்துவ தெறிப்புகள் நிகழ்கின்றன. அது, எழுத்தாளரை எழுத்தின் மூலம் மட்டும் முன்னமே அறிந்தோருக்கு, எழுத்தாளரின் குரலாகவே ஒலிப்பது தவிர்க்க முடியாததாக ஆகிறது. திருதிராஷ்டரனின் மணிசூட்டு விழாவிலும் சரி, துரியோதனின் பிறப்பிலும் சரி, முடி சூட்டப்பட்ட பின், விதுரனுக்கும் அவருக்கும் நிகழும் உரையாடலில் காமம் என்பது என்ன? தான் துறந்தது என்ன? இன்னும் பற்றிக் கொண்டிருப்பது என்ன? என விதுரனை சினப்பதும் சரி, சார்வாகனின் தர்க்கங்கள், தத்துவ நிலையை அடியாகக்கொண்டு, அதன் மேல் நடமிடும் முனியின் ஆட்டமாக நிகழ்கின்றன.
“சத்ரியர்கள் அனைவருமே விழியில்லாதவர்கள்”, “எதிர்த்தபின், பணிவென்பது மாபெரும் இழிவு”, “அனைத்துமறிந்தவன் வரலாற்றின் இளிவரலாக எஞ்சுகிறான்”, “ஏதும் இயலாதவர்களே பேரரசு கனவை காண்கின்றனர்”, “தன்னை கலக்காமல் தன்னைச் சார்ந்தவர்கள் அடையும் நிறைவை ஏற்றுக்கொள்வது எளிதல்ல” “கையறுநிலை போல அமைதி தருவது வேறொன்றுமில்லை”, “கொலைவேழத்தின் பெருங்கருணையை அறியும் காலடிப்பாகன்”, “சுவை என்றால் அது வெறும் மனப்பழக்கம்”, “உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது, அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்”, “உண்மை கரும்பாறை போன்றது.” “அழகிய சொற்கள் அழகிய பொய். மகத்தான சொற்கள், மகத்தான பொய்.” போன்ற வரிகள் இப்பகுதியில் இருக்கும் தத்துவமுத்துக்கள். பெருமழையில் சிப்பியை அடையும் மழைச்சிதர் போல அமைந்த துளிமுத்துக்கள். வாசிப்போர் புன்முறுவலுதிர்ப்பது இயல்பாக நிகழும்.
மழைப்பாடலின் முடிவில், எல்லாவற்றையும் விட தன் அகங்காரம் முற்றிலும் ஒழிந்து, எஞ்சி நிற்பது என்ன? என பேரரசி சத்யவதியும், தான் யார்? என இளவரசிகளான அம்பிகையும் அம்பாலிகையும் உணரும் தருணங்களின் தொகுப்பு மிக உணர்வுபூர்வமானது. ஒருவர் எல்லா கசப்புகளையும் ஒரு கணத்தில் மறக்க முடியுமா? முடியும். அவர்களின் முடிவு மனதினுள் கசப்பு கொண்டு வாழும் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் அருமருந்து. இம்மூன்று கதாபாத்திரங்களின் பயணம், (Character’s Arc) மிகவும் உணர்வுப் பூர்வமாகவும், அதே நேரத்தில் அவர்களின் ஆரம்ப நிலைக்கும், இறுதி நிலைக்கும் இடையே நிகழும் விரிவு அழகாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழைப்பாடலை வாசித்து முடித்தபின் தோன்றுவதை ஒற்றைச் சொல்லில் சொல்ல வேண்டும் என்றால், அந்தச் சொல் “மாஸ்டர்”.
தீ.நாராயணன்
February 14, 2022
வேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்
எம்.வேதசகாயகுமார் பற்றிய என் நினைவுகளில் முக்கியமானது அவரால் எழுத முடியாதென்பது. பல இதழாசிரியர்களுக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இப்பிரச்சினை வந்துவிடுகிறது. இதழாசிரியர்கள் பிறர் எழுதியதை வெட்டிச்சுருக்கி தொகுத்து சொந்த மொழியை இழந்துவிடுவார்கள். சொற்கள் அகத்தே தோன்றாமலாகிவிடுவார்கள். உண்மையில் பிறர் படைப்புகளில் அவர்களும் வெளிப்படுகிறார்கள். அந்த வெளிப்பாடே அவர்களை நிறைவடையச் செய்துவிடுகிறது. அதேபோல கல்லூரி ஆசிரியர்கள் பேசிப்பேசி பேச்சே அவர்களின் வெளிப்பாட்டுமுறையாக ஆகிவிடுகிறது.
வேதசகாய குமார் கறாரான அழகியல் விமர்சகர் . மூலநூலை விரிவாக, ஐயமற கற்பது அவர் வழி. அது நவீனத்தமிழிலக்கியமானாலும் சரி, மரபிலக்கியமானாலும் சரி, பிரதிசார் விமர்சனம் அவருடைய மரபு. அமெரிக்க புதுத்திறனாய்வாளர்கள் (New Critics) அவருடைய முன்னோடிகள். அவர்களின் முன்னோடியான ஐ.ஏ.ரிச்சர்ஸை பேராசிரியர் ஜேசுதாசன் வேதசகாய குமார்ரின் மண்டைக்குள் ஏற்றிவிட்டிருந்தார். சி.சு.செல்லப்பாவுக்குபின் வேதசகாயகுமார்தான் தமிழின் முக்கியமான அலசல்விமர்சகர்.
வேதசகாயகுமாரின் வகுப்புகள் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பெரும் சுரங்கங்கள் ஆனால் அதெல்லாம் வகுப்புகளில். அவற்றை எழுதுவதென்றால் அவரால் முடிவுகளையே எழுத முடியும். அவற்றால் பெரிய பயன் இல்லை. அம்முடிவுக்கு அவர் படிப்படியாக வந்த முறையே அலசல் விமர்சனங்களில் முக்கியமானது. அதை அவர் எழுதமுடியாது. சோம்பல் அல்ல. அவருடைய வழிமுறை அது அல்ல. நாளெல்லாம் பேசிவிட்டு அதைப்பற்றி எழுத அமர்ந்தால் பத்து வரி எழுதுவார். சொல்புதிது இதழில் அவர் எழுதிய நீண்ட கட்டுரைகள் எல்லாம் அவரை நான் தூண்டி தூண்டி எழுதவைத்தவை
ஆகவே வேதசகாய குமார் மைய அரசின் பல்கலைக்கழக நிதிக் குழுவின் நிதியுதவி பெற்று தமிழ் விமர்சனத்துக்காக ஒரு கலைக்களஞ்சியத்தை தயாரிக்க முனைவதாக என்னிடம் சொன்னபோது அவர் அதை முடிப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால் அபூர்வமான செயலூக்கத்துடன் வேதசகாய குமார் அப்பணியைச் செய்து முடித்தார். அதன் கைப்பிரதியை எம்.எஸ். செம்மைநோக்கியபோது நானும் படித்தேன். திகைப்பாக இருந்தது.
இந்நூலை எழுத வேதசகாய குமார் விரிவான ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவையே இல்லை. முப்பதாண்டுகள் அவர் ஒவ்வொருநாளும் பலமணிநேரம் படித்து, விவாதித்த களம் இது. ஆனால் அவர் தன் இயல்புப்படி ஒவ்வொன்றையும் மீண்டும் உறுதிசெய்துகொண்டார். ஒவ்வொரு செய்திக்கும் பின்னணி ஆதாரம் தேடினார். எழுதி முடிப்பது வரை ஒருநாளில் ஐந்தாறு மணிநேரம் இதற்காகச் செலவிட்டார். ஒருவகையில் அது நன்று. அவர் செயலூக்கம் கொண்ட மனிதர். அவரைப்போன்ற ஒருவருக்கு 55 வயதில் பணி ஓய்வென்பது ஒரு தண்டனை. வேதசகாய குமார் இந்த அகராதிப்பணியி தன்னை மூழ்கடித்து அந்த விடுபடலைக் கடந்தார்.
வேதசகாய குமார்ரின் இந்த தொகுப்புநூலை குறுங்கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம். கோசம் என்று இதை சம்ஸ்கிருத மரபு சொல்கிறது.ஆ.சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி ஒரு கோசம்தான். ஒரு குறிப்பிட்ட கலை,சிந்தனை, அறிவியல் களம் பற்றிய செய்திகளின் தொகுதியே கோசம். இந்தக் குறுங்கலைக்களஞ்சியம் தமிழ் நவீன இலக்கிய விமர்சன மரபைப் பற்றியது. அதிலுள்ள மைய ஆளுமைகளை தொகுத்துப்பார்ப்பது. தமிழில் இவ்வகையில் இதுவே முதல்முயற்சி. ஒட்டுமொத்தமாக என்ன நிகழ்ந்திருக்கிறது, என்ன எஞ்சுகிறது என வேதசகாய குமார் ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
கலைக்களஞ்சியம் என்பது செய்திகளின் தொகுதி மட்டுமல்ல. அதில் கூரிய மதிப்பீடும் இருந்தாகவேண்டும். கலைக்களஞ்சியத்தில் யார் இடம்பெறவேண்டும் என்று முடிவுசெய்வதிலேயே அந்த மதிப்பீடு வந்துவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை அளிப்பது, பங்களிப்பைத் தொகுத்துச் சொல்வது, ஒருவரை இன்னொருவருடன் தொடர்புபடுத்துவது, பகுப்புகளை நிகழ்த்துவது ஆகியவற்றில் அந்த மதிப்பீடே தொழிற்படுகிறது.
அத்தகைய மதிப்பீடு கொண்ட கலைக்களஞ்சியங்களுக்கே கல்விமதிப்பு உண்டு, எஞ்சியவை வெறும் தகவல்திரட்டுகள் (journals, Annals) மட்டுமே. மதிப்பீடுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியம் என்பது தகவல்களுடன் மாணவர்களுக்கு அதுவரையிலான சிந்தனையையும் தொகுத்தளித்துவிடுகிறது. அதனுடன் விவாதித்தும், முன்னகர்ந்தும் அவர்கள் சிந்திக்கமுடியும்.
மதிப்பீடுகளுடன் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது அனைவராலும் இயல்வதல்ல. அதற்கு ஓர் அறிவுத்துறையில் முழுவாழ்க்கையையும் செலவிட்டிருக்கவேண்டும். அதில் பல்லாண்டுகள் விவாதித்திருக்கவேண்டும். ஏராளமாக எழுதி பேசி தெளிவடைந்திருக்கவேண்டும். வேதசகாய குமார் இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு ஆகியவற்றிலே வாழ்க்கையை முழுமைசெய்தவர்
அத்துடன் இது ஓர் ஆசிரியர், ஒரு வாழ்நாள் அறிவைக்கொண்டு செய்யும் பணி அல்ல. அவர் ஓர் ஆசிரியமரபின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்த ஆசிரிய மரபு பல்லாண்டுக்காலமாகத் திரட்டிய ஞானத்தின் வெளிப்பாடாக அந்த நூலாசிரியர் திகழவேண்டும். தொல்காப்பியர் காலம் முதல் இலக்கணநூல்கள், பாட்டியல்நூல்கள், நிகண்டுகள், கோசங்களின் ஆசிரியர்கள் தெளிவான ஆசிரிய மரபு கொண்டவர்கள்.
வேதசகாய குமார் எஸ்.வையாபுரிப் பிள்ளை மரபைச் சேர்ந்தவர். வையாபுரிப் பிள்ளையின் மாணவரின் மாணவரான பேரா.ஜேசுதாசனின் மாணவர் அவர். பேராசிரியரிடமிருந்து வையாபுரிப்பிள்ளையின் புறவயமான முறைமை, ஒட்டுமொத்தப்பார்வை, பற்றின்மை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டவர். இன்னொரு வகையில் அவர் க.நா.சுப்ரமணியம் மரபைச் சேர்ந்தவர். புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி என அவருக்கு அழகியல் சார்ந்த ஓர் இலக்கியப்பார்வை உண்டு.
இந்த இரு மரபுகளின் வெளிப்பாடாக அமையும் பெருநூல் இது. பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் அறிந்தவை அனைத்தையும் ஒற்றைநூல் என ஆக்கிவிட்டுச் செல்வதுண்டு. அப்படி வேதசகாய குமார் உருவாக்கிய படைப்பு. தமிழ் இலக்கியவிமர்சனத் தளத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. இதுவரையிலான விமர்சன சிந்தனைகளை திரட்டி,மதிப்பீடுகளுடன் தொகுத்து, வரையறை செய்து முன்வைக்கும் இந்நூல் இனி என்ன என்னும் வினாவை முன்வைப்பதும்கூட
ஜெ
(அடையாளம் இதழ் வெளியிடவிருக்கும் எம்.வேதசகாய குமாரின் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் நூலுக்கான முன்னுரை)
விகாஸ் எதிராஜ்
இவர் விகாஸ் எதிராஜ். சுமார் 3 மாதங்களுக்கு முன் “சென்னை முதல் ஆஸ்திரேலியா வரை சைக்கிளில்” என்கிற பயணத்தை துவங்கி உள்ளார். இவர் ஒரு 25 வயதான கட்டிட பொறியாளர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்த பயணத்திற்காக சேமித்து உள்ளார், திட்டமிட்ட படி கிளம்பி விட்டார். வியட்நாம் வரை சாலை மார்க்கமாகவும் அங்கிருந்து கடல் மார்க்கமாகவும் செல்ல திட்டமிட்டு உள்ளார், மொத்தம் 22000 கிமீ ஆகும் என எண்ணுகிறார், ஒரு நாளைக்கு சுமார் 80 கிமீ என செல்கிறார். ஒரு ஆண்டில் இதை செய்யப் போகிறார். குறைந்த செலவில் உண்டு கூடாரத்தில் தங்கி எளிமையாக இப் பயணத்தை மேற்கொள்கிறார். பண உதவிகளை ஏற்பதில்லை.
இவர் நேர் வழியில் செல்லவில்லை, நேபாள், பூட்டான், மியான்மார் என சுற்றிப் பார்த்துவிட்டு மலேசியா சிங்கப்பூர் என செல்கிறார். டார்ஜீலிங் சென்று ஒரு பனிமலை ஏற்றமும் செய்துள்ளார். இப்போது மொத்தம் 3500 கிமீ பயணித்து அஸ்ஸாமில் குவாஹத்தி அருகே உள்ளார். இவர் நடத்தும் யூ ட்யூப் சேனல் அதற்குள் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.
பயணத்தில் ஒருவரின் ஆளுமை மோடுவதை நான் பார்த்துள்ளேன். இந்த மூன்று மாத அனுபவச் செறிவால் இவர் பரிணமித்து உள்ளார். இவரின் முதல் பதிவிற்கும் இப்போது உள்ளதற்கும் உள்ள இவரது மொழியும் மேம்பாட்டு இருப்பதை நாம் காணலாம். வெவ்வேறு மாநிலத்தில் இவர் சந்தித்த மனிதர்கள் அவர்கள் அளித்த உதவிகள் எல்லாம் அற்புதமானவை. சாமான்ய இந்தியா தன்னை ஒருதாய் மக்கள் என்று தான் இன்றும் உணர்கிறது. சக பயணிகளையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார், உடன் பயணிக்கிறார். இந்த காணொளிகளை பார்க்கையில் இந்தியாவே பயணப் பித்தில் இருக்கிறது என்கிற எண்ணம் நமக்கு வருகிறது.
அச்சமின்மை, தயக்கமின்மை, பயண உறுதி ஆகிய குணங்கள் இவரது பலம். இவர் சேனலில் அதீத அக்கறையால் வழங்கப்படும் எதிர்மறை அதி ஜாக்கிரதை அறிவுரைகளை முதிர்ச்சியுடன் கையாள்கிறார். இன்னும் முதல் நாள் உற்சாகத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார், வலுவாகவே உள்ளார். விகாசுக்கு வாழ்த்துக்கள்.
பேசும் புதிய சக்தி- ஒரு மலர்
பேசும் புதிய சக்தி மாத இதழில் என்னுடைய அட்டைப்படத்துடன் 60 ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் 60 ஆண்டு நிறைவுக்கு நான் மலர் தயாரித்தது மிக அண்மையில் என பிரமை ஏற்படுகிறது.
பேசும் புதிய சக்தி இதழுக்கு நன்றி
சடம் – கடிதம்-8
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்…” என்று தொடங்கும் பாந்தனின் வரிகளில் வருகிறது, இக்கதையின் ஆதாரமான முடிச்சு. தத்துவார்த்தமான உருவகமாக பார்த்தால், சுடலைப் பிள்ளை பிணத்தை புணரும் பொழுது, அது உயிர் கொள்வதாக வரும் அக்கடைசி காட்சி ( உயிரற்ற ஒரு உலகு விழைவினால் உயிர்கொள்ளல் ) ஆதி உயிர் ஜனித்த நொடியின் மறுச்சொல்லல் தான் என்று எனக்குத் தோன்றியது.
‘சிஜ்ஜடம்’, ‘சிஜ்ஜடம்’ என்று அனத்திக் கொண்டு அரைக்கிறுக்கன் போல் அக்காட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஒருவன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணத்தில் எனக்குத் தோன்றுகிறது, அவனின் கடந்த கால வாழ்க்கை தான் சுடலைப் பிள்ளையின் வாழ்க்கையாக கதையில் விரிகிறது என்று. அவனே அந்த நிகழ்வை மீள மீள நினைத்துக் கொள்கிறான் என்றும்.
தத்துவார்த்தமான பல கேள்விகளை எழுப்புகிறது இக்கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தன.
அன்னைக்கு, ‘சிதக்னி குண்ட ஸம்பூதா..’ என்ற ஒரு நாமம் இருக்கிறது. சித் என்னும் அக்னியிலிருந்து தோன்றியவள்’ என்று பொருள்.கண்ணன் கீதையில், ‘எல்லா உயிர்களும் தோன்றும் இந்த பிரகிருதியே கருப்பை, அதற்கு பீஜம் அளிக்கும் நானே, தந்தை — மஹத் ப்ரஹ்ம யோனி:, தஸ்மின் கர்ப்பம் ததாமி அஹம் ; அஹம் பீஜபிரத: பிதா’ என்கிறான் .அக்கடைசிக் காட்சி இவ்விரண்டிற்கும் மிக அருகில் இருப்பதாகப் பட்டது எனக்கு.
உலகியல் தளத்தில் வைத்துப் பார்த்தால்:
மிருகக் காமம் மிகத் தூயது. புணர்ந்து கொண்டிருக்கும் எவ்வுயிரையும் கொல்லாதிருப்பது நம் வாழ்வியல். காமன் கடவுளே தான் நமக்கு.
ஆனால் இக்கதையில் வரும் சுடலை பிள்ளையின் காமம் தூயதா. அதில் சிறுமை செய்யும் எண்ணம் இல்லையா? கீழ்மை இல்லையா? அதிகார வெறியில்லையா? வக்கிரம் இல்லையா?
காமத்தை ஆராய்வதல்ல கதையின் நோக்கம் என்று புரிகிறது. மிகப் பெரிய தத்துவத்தை ஒரு உலகியல் நிகழ்வாகக் காட்டுவது தான் இக்கதையின் நோக்கம். பிணத்தை புணரும் அளவு அவன் நோய் கொள்ள வேண்டுமானால் , அவன் எத்தனை கீழ்மை கொண்டிருக்க வேண்டும், என்று சொல்ல கதை ‘வல்லுறவு’ என்பதை கையாள்கிறது.
80களில் வந்த சினிமாக்களில் பலவந்தப் படுத்தப் படுவதற்காகவே படைக்கப்பட்டனர் தங்கை கதாபாத்திரங்கள். அக்காட்சிகள் ‘கிளர்ச்சிக்காக’ பயன்பட்டன. இது போன்று பிணத்தை புணரும் கதைகள் தமிழிலக்கியத்தில் இரண்டு மூன்று வந்திருக்கின்றன. அவை காமத்தை ஆராய்கின்றன. அவற்றில் மனிதனின் கீழ்மையைச் சொல்ல ‘வல்லுறவுக்’ காட்சிகள் பயன்பட்டிருக்கின்றன. இக்கதையில் தான் முதன்முறையாக, உயர் தத்துவத்தைச் சொல்ல ‘வல்லுறவு’ கையாளப் பட்டிருக்கிறது.
ஆனால் , ‘சித்’ என்று சொல்லப்படுவது இந்த ‘lust’ அல்ல. அது ‘pure consciousness’. ஐந்து இந்திரியங்களுக்கும் மேலாக வைக்கப்படும் ‘மனஸ்’ என்பதற்கும் மேலாக வைக்கப்படுவது . ஏழு சக்கரங்களில் ஸஹஸ்ராரத்தோடு சம்பந்தப் பட்டது. இந்திரியக் காமத்திற்கு பல படிகள் மேலானது. ‘சித்’ என்னும் பிரம்மத்தின் முதல் சலனத்தை , அதிகார வெறி கொண்ட, வக்கிரத்தோடு சமன்படுத்துவது கொஞ்சம் far-fetched ஆகத் தோன்றுகிறது. கண்ணனின் கீதை வரிகளில் வருவதும் தத்துவ உருவகம் தான் என்றும் தோன்றுகிறது.
இக்கதையில் desire-lust ஆகி, lust-fetish ஆகி, fetish-necrophilia வரை சென்றிருக்கிறது.
‘Rape’ என்பது காமம் கூட அல்ல. அது ஒரு அதிகார வெறிச் செயல்பாடு, ஒரு assault, அது ‘உடலுக்கு’ எதிராக செய்யப்படும் வன்முறை மட்டும் அல்ல. அதை normalize செய்வதும், பேசிப் பேசி அதிலுள்ள அதிர்ச்சியை desensitize செய்வதும் கூடாது என்பது என் தரப்பு. இவை, ஒரு சமூகமாக இவ்விஷயத்தில் நாம் அடைந்துள்ள ஒரு awareness-ஐ பின்னடையச் செய்கிறது என்பது என் எண்ணம்.
பிணமென்றும் பாராமல் அவள் உடலை violate செய்யும் சுடலைப் பிள்ளையை, அவள் அணைத்துக் கொண்டதும், அவளுக்கு Rigor Mortis set ஆகியிருக்க வேண்டும் என்று மிக விரும்புகிறேன்.
அன்புடன்,
கல்பனா ஜெயகாந்த்.
சடம் – கடிதம் -7 சடம் கடிதங்கள் -6அறிவியலும், புனைவியலும்_ கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
மிக அருமையான விளக்கமளித்தற்கு நன்றி. Unweaving Rainbow புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்திற்கும் நன்றி. குறித்துக்கொண்டேன்.
அறிவியல் தர்க்க கண்டுபிடிப்புகள் மென்மேலும் செல்ல செல்ல, அவை மனிதனின் கற்பனையையும் உள்ளுணர்வையுமே மென்மேலும் விரிவடையச்செய்கின்றன. நீங்கள் சொன்னது போல் அவை மேலும் படிமங்களாக உருவகங்களாக மாறி நம்மில் உறைகின்றன.
நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் போன்ற வானவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கிரேக்க, ரோம தொன்ம கடவுள்கள்/தேவதைகள் பெயர்கள் வழங்கிவருவதே இதற்கு ஒரு உதாரணம்தான்.(நாஸா, அடுத்த மனித நிலவு பயணத்திட்டத்தில் இருக்கிறது. 2025 வாக்கில் மறுபடியும் மனிதனின் நடமாட்டம் நிலவில் இருக்கப்போகிறது அதற்கான திட்டத்தின் பெயர் Artemis, கிரேக்க தொன்மம்!)
நீங்கள் நிலவில் மானிடன் கால் வைத்த தருணத்தைப் பற்றி குறிப்பிட்டபோது டென்சிங்கின் சுயசரிதையில் வாசித்த ஒன்று நினைவிற்கு வந்தது.எவெரெஸ்ட் சாதனையை செய்துவிட்டு கீழிறங்கிய டென்சிங்கிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில – உச்சி முகடில் விஷ்ணுவைக் கண்டாயா? புத்த பகவானைப் பார்த்தாயா?
டென்சிங்கின் தாயார், அவர்தம் வாழ்நாள் முழுவதும் எவெரெஸ்ட்டின் உச்சியில் தங்க சிட்டுக்குருவி இருந்ததாக நம்பி வந்தார். கூடவே தங்க நிற பிடரி கொண்ட, நீலப்பச்சை வண்ண சிங்கமும் இருந்து வந்ததாக நம்பிக்கை.டென்சிங்கின் இல்லையெனும் பதில் எவெரெஸ்ட்/இமாலயத்தைப் பற்றிய மத நம்பிக்கைகளை, படிமங்களை எந்த விதத்திலும் குறைக்கவில்லை.
இது போன்று புறவய, அறிவியல் தர்க்கங்களை மேலும் எடுத்துச்செல்லவும் அதே சமயம் அவற்றை அகவயமாக, அழகியல் படிமங்களாக கூடவே கொண்டு விரித்துச் செல்வது மானுடன் எனும் உயிரியினால் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. வேறு எதையும் விட இதையே மானுடத்தின் சாதனை என்று பெருமிதத்துடன் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மேலும், இத்தனை தூரம் விண்வெளி துறையில் முன்னேறி வந்திருக்கிறோம். நமது சூரிய குடும்பத்தைத்தாண்டி, நமது பால்வெளியைத்தாண்டி ஆயிரமாயிரம் பால்வெளிகளும் அதனுள் ஆயிரமாயிரம் கிரகங்களும் துணை கோள்கள் இருப்பதை தெரியவந்திருக்கிறோம். ஆனால், இன்று வரை நாம், மானுடன் எனும் உயிரி மட்டுமே இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் இருக்கிறோம்…எத்தனை தனியாக இருக்கிறோம்..! அதாவது நாம் இதுவரை அறிந்துள்ள பிரபஞ்சத்தில்…
சிவா கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள ஜெ
கட்டுரை முக்கியமான ஒன்று. நான் என் கல்லூரியில் பேசிக்கொண்டிருந்தபோது அறிவியல் ஆய்வு மாணவர் ஒருவர் அறிவியல் அணுகுமுறையை உயர்த்தி அது மற்ற அறிதல்முறைகளை அழித்துவிட்டது என்று பேசிக்கொண்டிருந்தார். முதிய பேராசிரியர் கேட்டார். ‘மனிதனின் ஐந்து புலன்களில் ஒன்று மனிதகுலம் முழுமைக்கும் இல்லாமலாகிவிட்டாலும் இங்கே மானுடம் வாழும். ஆனால் அது இழப்பா இல்லையா?” அவரால் பதில் சொல்லமுடியவில்லை. பிறகு ‘இழப்புதான்’ என்றார். ‘அதேபோலத்தான் அறிதல் முறைகளும். இறுதியான முழுமையான அறிதல் முறைகள் என ஏதுமில்லை. மனிதன் தனக்கு கிடைத்துள்ள ஃபேக்கல்டிகளை பயன்படுத்தி உலகை அறிய முயல்கின்றான். எல்லா வகை அறிதல்களும் ஏதோ ஒருவகையில் உலகை வகுக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தம்தான் உலகம் என நாம் அறிவது. ஓர் அறிதல் முறைக்கு இன்னொன்று காம்பிளிமெண்டரி ஆகவேண்டுமே ஒழிய ஒன்று இன்னொன்றை தடுக்கவோ அழிக்கவோ முயன்றால் அது மனிதகுலத்துக்கு இழப்புதான்” என்றார்.
அறிவியலால் கற்பனை சார்ந்த அறிதல் அழியாது. மாறாக அறிவியல் அறிதல் கற்பனையையும் கற்பனை அறிவியலையும் நிரப்பி வளரச்செய்யும். அதுவே மனிதசிந்தனையின் வரலாறு
ஸ்ரீனிவாஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

