Jeyamohan's Blog, page 830
February 11, 2022
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் திருமண நிகழ்வில்…கடிதம்
கொரானா பேரிடரின் முதல் அலை (அவ்வாறான சுட்டு பெயரை காலம் பிற்பாடுதான் உருவாக்கிக் கொள்கிறது) எல்லோரையும் பாதிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் பெருந்தொற்று குறித்து தாங்கள் எழுதிய முதல் கதை, படிப்படியாக ஒவ்வொன்றாக என நூறு சிறு கதைகளாக நிறைவடைந்தன. அதன் பிறகு (இரண்டாம் அலையின்போது, அல்லது பொதுமுடக்கம் கடந்த ஆண்டு அறிவிக்கப்படுவதற்கு சற்று) முன்பு ‘இரு நோயாளிகள்’ சிறுகதை வெளியான போது படித்திருந்தேன்.
மீண்டும் 05-02-22 அன்று சுக்கிரி வாட்ஸப் குழுமத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி அன்று மாலை இந்த கதை விவாதத்துக்கும், உரையாடலுக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. Zoom meeting-ல் நானும் கொஞ்சம் நேரம் இருந்தேன். ஒரு கதையைக் குறித்து இரண்டு மூன்று மணிநேரங்கள் பேசமுடியுமா என்றால் பேசக்கூடிய விஷயமாக இக்கதையில் தொடர்புடைய இருவரின் வாழ்க்கை இருந்திருக்கிறது.
இந்த ஆண்டில் இதே நோயச்ச மூன்றாம் அலை வந்து சென்ற பின் மீண்டும் இதே கதையை மீள்வாசிப்பு செய்ய நேர்ந்தது. உள்ளபடியே Changampuzha Krishna Pillai (17-June 48) திருச்சூர் புதுமைப்பித்தன் (30-June 48) ஆகிய இருவரின் மரணம் ஒரே மாதத்தில் இறந்து போன ஒற்றுமையும், காசநோய் என்கிற பொதுமையும் புனைவா, வரலாறா என தோற்றம் மயக்கத்தை தருகிறது. ஜும் மீட்டிங்கில் கேட்டதைப் போல இருவரும் ஒரே மருத்துவமனையில் இருந்தனரா, அந்த மரணங்களை கண்ணால் பார்த்த நேர்சாட்சி என்கிற முறையில் இணைத்துப் பேசி வரலாற்றை இட்டு நிரப்பக்கூடிய கேரியர் வேலையை எட்டு வயது சிறுவனாக இருந்த கிருஷ்ணன் நாயர் செய்தாரா என்கிற கேள்வியை மறுக்க நம்மிடம் வேறு காரணங்களில்லை.
அன்று மாலை ஈரோடு நவீனுடைய திருமண வரவேற்பு, நேரில் மதுரைக்கு சென்று அபி சாருக்கு பத்திரிகை வைத்த கையோடு என்னை அலைபேசியில் அழைத்துவிட்டு முடிந்தால் நேர் சந்திப்பில் அழைப்பிதழ் தருவதாக கூறிவிட்டு வாட்ஸப்-பில் அனுப்பியிருந்தார். எப்படியும் தாங்களும் வந்துவிடுவீர்கள் என்று நினைத்து ஞாயிறு காலை செண்ட்ரல் வந்திறங்கி லோக்கல் ட்ரெயினில் பழவந்தாங்கல் ஸ்டேஷனிலிருந்து மடிப்பாக்கம் ஷேர் ஆட்டோ பிடித்து மண்டபம் வந்து சேர்ந்த போது தை மாதம் முடிவடைய இருக்கும் இந்த கடைசி நாள் முகூர்த்த நாளாக இருந்தது போல் தெரிகிறது, வந்த பஸ்ஸிலும், ட்ரெயினிலும் அந்த அதிகாலை நேரத்திலேயே கல்யாண வீட்டிற்குச் செல்லும் ஏராளமான பயணிகளைப் பார்த்தேன். வழியில் தென்பட்ட திருமண மண்டபகங்களும் நிரம்பி வழிய லேசான பனியை, இதமான பனிக்காற்றை சென்னை மாநகர மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
செல்லம்மாள் சக்தி திருமண மண்டப கூடத்தில் தாங்கள் குடும்பத்துடன் இருந்தீர்கள், சற்று நேரம் செல்லச் செல்ல சுனில் கிருஷ்ணன், சுபஸ்ரீ ஆகியோருடன் எனக்கு அறிமுகமில்லாத (விஷ்ணுபுர நண்பர்களில்) சிலரும் சேர்ந்து கொண்டது இலக்கிய விழாவைப் போல மாற்றிவிட்டது. நாதஸ்வரம் முழங்க, மணமேடையீருந்த பெண்கள் மங்கல ஒலியெழுப்பி குலவை இட்ட போது என் சிறு வயதில் எங்களூர் வகையறாவிலும் இதுபோன்ற திருமணத்திலும், பூப்பெய்தும் சிறுமிகளுக்கான சடங்குகளின்போதும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் இன்று அருகத் தொடங்கிவிட்டன. மற்றபடி செல்வேந்திரன் சென்னைவாசியாகி பத்து, பதினைந்து ஆண்டுகளாகி இருந்தாலும் இன்னும் தன் ஊர் நினைவாக சாத்தான்குளம் பற்றிப் பேச்சைத் தொடங்கினார்.சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஒரு லெஜெண்ட் என்று சட்டென்று கூறினீர்கள். கிரிக்கெட் தமிழ் வர்ணனையில் அவருடைய இடத்தை சரியாக மதிப்பிட்டீர்கள். அதே ஊர்க்காரரான தாமரைமணாளனைப் பற்றி சிறியதொரு உரையையே ஆற்றினீர்கள். விகடனில் இருந்தது, தொடர்ச்சியாக வணிக எழுத்திலும், பத்திரிகையிலும் அவர் ஈடுபட்டிருந்தது என பலவற்றை நினைவு கூர்ந்தீர்கள்.
இதெல்லாம் திட்டமிட்டு தயாரித்து வந்தவையல்ல, ஏற்கனவே முன்பு எப்பொழுதோ கேட்டது, படித்தது எப்படி இவ்வளவு கோர்வையாக தங்களால் சொல்ல, பேச முடிகிறது என்று தெரியவில்லை. முன்பு நானும்கூட தாமரைமணாளனை படித்திருக்கிறேன், ஆனால் இப்பொழுதெல்லாம் வணிக எழுத்து என்று என்னைப் போன்றவர்களே வளர்த்துக் கொண்ட ஒவ்வாமை அனாவசியமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு படைப்பிலக்கியத்துக்கும் அதற்குரிய இடமுண்டு, எதற்கு பாலகுமாரனை, ராஜேந்திரகுமாரை தீவிர இலக்கியத்துக்கு எதிரானவர்களாக நிறுத்திக் கொள்ள வேண்டும்? பெரிய எண்ணிக்கையிலான வாசகர்களை எழுத்தின் பக்கம் அழைத்து வந்தவர்களல்லவா, அவர்கள்.
நிற்க, தாலி கட்டும் நேரத்தில் நவீன் தங்களை மணமேடைக்கு அழைத்து அருகில் நிற்கச் செய்தது, முடிந்த சிறிது நேரத்தில் மணமகள் சகிதமாக சாஷ்டங்கமாக தங்களின் காலில் விழுந்தது, மேடையேறும் போது, அவர் இப்படி சட்டென செய்யப் போவதை உணர்ந்து காலில் இருந்த செருப்பைக் கழட்டிக் கொண்டது, மாப்பிள்ளை கோலத்தில் ‘குமரித்துறைவி’ நாவல்கட்டை தாம்பூலப் பையாக எல்லோருக்கும் கொடுத்த நேரத்தில் இலக்கியவாதி என்பது பகுதி நேர வேலையல்ல, நவீன் அதை முழு நேரமாக செய்தார் என்பதை உணர்த்தியது.
நவீன் வல்லினத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதைகள் நாட்டார் மரபுகளை எப்படி இவ்வளவு கூர்மையாக எழுதிவிட முடிகிறது என்று மலைக்கச் செய்தவர். அவருக்கு எது குலசாமி என்பது எனக்குத் தெரியாது, பெற்றோர் இருவரின் பெயரையுமே இனிஷியலாக கொண்டிருக்கும் நவீனுக்கு சுந்தரேசரும், மீனாட்சியும் ஆசிர்வதிப்பார்களாக! லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முஸ்லிம் முறைப்படி கையேந்தி ‘துஆ’ கேட்டபடி உருகிநிற்க, உடனிருந்த (அவருடைய மனைவி) கௌரி கான் தன் மரபுப்படி கைகூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்தியதைப் போல – திருவல்லிக்கேணி வாலாஜா நவாபு பள்ளிவாசலில் நவீனுக்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்திருந்தேன். அல்லாசாமியின் ஆசிர்வாதம் புதிய வாழ்க்கையை தொடங்க இருக்கு நவீன் – கிருபா தம்பதிகளுக்கும் தேவைப்படும்தானே?
கொள்ளு நதீம், ஆம்பூர்.
February 10, 2022
பனி உருகுவதில்லை- நூல்வெளியீட்டு விழா.
எழுத்தாளர் அருண்மொழி நங்கை எழுதிய பனி உருகுவதில்லை நூல்வெளியீடு
நாள் 13 -2-2021
இடம் ஃப்ரண்ட்ஸ் பார்க், அம்மாச்சி பார்ட்டி ஹால்,
எண் 3, ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை. வளசர வாக்கம் ,சென்னை
பொழுது மாலை 530
பங்கேற்பவர்கள் : சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன், காயத்ரி
வருக
ஜெ
பனி உருகுவதில்லை நூல் வாங்கஊர்!
Quara இணையதளத்தில் ’நீங்கள் இருந்த ஊர்களிலே எது மோசமான ஊர்?’ என்னும் கேள்விக்கு Nimmy Sunny இந்தப்பதிலை அளித்திருக்கிறார். ஒரு வாசகர் இதை எனக்கு அனுப்பினார்.
அந்த ஊர் மருத்துவமனையில் ஒரு காட்சி. ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை. அதைக் காட்ட மருத்துவரிடம் குழந்தையின் அப்பா கொண்டு வந்திருக்கிறார்.
மருத்துவர்,’ குழந்தைக்கு என்ன பண்ணுது?’
பதில் -‘ அதை கண்டுபிடிக்க தானே நீங்க இங்க ஒக்காந்து இருக்கிய ‘ செம பதில்!
சரி,கடையில் ஒரு சாமான் வாங்க போயிருக்கிறீர்கள். கடைக்காரர் மாத்திரம்தான் இருக்கிறார். கூட்டம் ஒன்றும் இல்லை. கொஞ்ச நேரமாக நீங்கள் உங்களுக்கு வேண்டிய அந்த பொருளை தேடுகிறீர்கள். கடைக்காரர் அவர் பாட்டுக்கு சாலையை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். உங்களிடம் ஒன்றும் கேட்க மாட்டேங்கிறார். ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் அவரிடம்,’இந்த சாம்சன் ஜாமீட்டரி பாக்ஸ் இருக்குதா?’ அவர் பதில்-‘ தெரியாது, பாக்கணும் ‘.
நீங்கள்-‘ சரி,பார்த்து சொல்லுங்க’.
கடைக்காரர்-‘ வாங்குறீங்களா?
நீங்கள்,’ முதல்ல காட்டுங்க ‘ அவ்வளவுதான்,கடைக்காரர் பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறார்! அந்த ஊரில் அதுதான் normal பழக்கம்!உடனே கோபத்தில் பக்கத்து கடைக்கு போகிறீர்கள்.அவர், இவரே தேவலாம் என்ற வகையில் நடந்து கொள்கிறார்!
சரி, ஒரு வழியாக உங்களுக்கு வேண்டிய அந்தப் பரிசுப் பொருளை வாங்கி விட்டீர்கள். அதை பரிசுக்காக பொதிந்து தர சொல்லுகிறீர்கள். 10,15 நிமிடம் ஆகி விடுகிறது.நீங்கள் கவுண்டரில் காத்திருக்கிறீர்கள். பணமெல்லாம் கொடுத்தாகிவிட்டது. மற்ற ஊர்களைப் போல,அவன் பொருளை கொண்டு வந்து தருவான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 20 நிமிடம் ஆனவுடன் நீங்கள் பொறுமை இழந்து ,என்ன பே க் பண்ணி விட்டீர்களா? என்று கேட்கிறீர்கள். விற்பனைப் பையன் பதில் ஒன்றும் சொல்லாமல், கண்ணைக் காட்டுகிறான். அவன் காட்டிய பகுதியில் ஏற்கனவே பொதிந்து வைத்த பரிசுப் பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக 15 நிமிடத்திற்கு முன்னாலே அது தயாராகி இருக்கிறது. ஆனால், அதை சொல்ல மாட்டார்கள்.நாமே தான் கண்டுபிடிக்க வேண்டும். கடைப் பையன் சொல்ல மாட்டான்! அதுதான் அந்த ஊர் பாணி!பளாரென்று ஒரு அறை அறையலாம் போல உங்களுக்கு இருக்கிறது! ஆனால் கோபத்தோடு வீட்டுக்கு வந்து விடுகிறீர்கள். அந்த ஊரில் அது இயல்பான அனுபவம்.
இப்போது,கடன் வாங்க ஒருவர் வங்கிக்கு சென்று இருக்கிறார்.வங்கி மேலாளர் கேட்கிறார், பேர் என்ன? பதில் – அதில் எழுதி இருக்கு ல்ல .
விண்ணப்பத்தில் இருக்கிறதாம்!
மேலாளர் -சரி நாளைக்கு வாங்க.
பதில்-ஏன், இன்னிக்கு தர மாட்டீகளோ.
மறுநாள் வங்கி மேலாளர் காலையில் வேலைக்கு வருகிறார்.கிளைக்கு முன்னால் ஒரு பெருங்கூட்டம் நிற்பதை பார்க்கிறார்.ஒரே சத்தம்,ஆர்ப்பாட்டம். என்ன என்று உற்றுப் பார்க்கிறார்.’ கல்விக் கடன் தர மறுக்கும் வங்கி மேலாளர் செல்வராஜை வன்மையாக கண்டிக்கிறோம்’. என்று எழுதிய அட்டைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.நகரின் பிரதான சாலை இந்த மறியலால் ஸ்தம்பித்து விடுகிறது.உடனே ஊடகங்கள் எங்கிருந்தோ ஓடி வருகின்றன. வங்கி தலைமை அலுவலகத்திலி ருந்து ரீஜனல் மேனேஜர், என்ன செல்வராஜி என்ன பிரச்சனை? கொஞ்சம் பாத்து நடந்துக்கங்க, என்று அறிவுரை கொடுக்கிறார். ரீ ஜினல் மேனேஜருக்கு தெரியாது. அந்த ஊரில் மிரட்டி தான் கடன் வாங்குவார்கள்! அதுதான் அந்த ஊரின் பாணி! மேலாளராக மனமுவந்து கொடுத்தால் அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது!
சரி, அவசரமாக ஒரு பாட்டியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். டாக்ஸி அழைக்கிறீர்கள். அவன் வந்து, வீட்டு முன்னால் நிற்பான். அரைமணி நேரம் ஆனாலும், அவன் வந்ததை சொல்ல மாட்டான். நீங்களாக வெளியே போய் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சரி,பார்த்து விட்டீர்கள். பாட்டியை கஷ்டப்பட்டு கையைப்பிடித்து காருக்குள் ஏற்ற முயற்சிக்கிறீர்கள். கார் டிரைவர் சும்மா பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு உதவியும் செய்ய மாட்டான். ஏனென்றால், கார் டிரைவரின் வேலை அதுவல்லவாம் , கார் ஓட்டுவது மட்டும் தானாம் என்பது அந்த ஊர் மக்களின் பலமான கருத்து. அவங்க வேலை மாத்திரம் செய்தால் போதுமாம்!
சரி, இரவில் அவசரமாக கார் தேவைப்படுகிறது. அதே டிரைவரிடம் நீங்கள் அழைத்து, உங்கள் அவசரத்தை சொல்லுகிறீர்கள். முதலில் அவன் போனை எடுக்கவே மாட்டான். அப்படி மீறி எடுத்தால், காரு செட்டுக்குள்ள இருக்கு, வெளிய எடுக்க முடியாது, ன்னு டக்குனு சொல்லிவிட்டு வைத்து விடுவான். எவ்வளவு பழக்கமான டிரைவர் ஆனாலும் சரி இரவு 10 மணிக்கு மேல், எந்த உயிர் போகும் அவசரத்துக்கும் கூட வர மாட்டான்! அவங்களுக்கு அவ்வளவு கொள்கைப் பிடிப்பு!
அந்த ஊரில் இருக்கும் எல்லா ஊழியர்களும் அந்த ஊரின் இப்படியான உயரிய குணங்கள் கொண்டவர்கள் தான்! காலையில் எட்டு மணிக்கு வங்கிக்கு போஸ்ட்மேன் வருவார். வங்கிக்கு தினசரி 20,30 பதிவுத் தபால் வரும். எல்லா தபால்களும் கிளை மேலாளர் பெயருக்கு தான் வரும். காலை 8 மணிக்கு கிளை மேலாளர் வேலைக்கு வர மாட்டார். ஆதலால், பணியில் இருக்கும், வாட்ச்மேனிடம் தபால்களை கொடுத்து கையெழுத்து வாங்குவது எல்லா ஊரிலும் பழக்கம். ஆனால் இந்த ஊரில், போஸ்ட்மேன் வேண்டுமென்றே, கிளை மேலாளர் கையில்தான் கொடுப்பேன், அவரை வரச் சொல்லுங்கள் என்று அடம்பிடிப்பார்! தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் வங்கிக் கிளை மேலாளர் என்றாலே ஒரு தனி மரியாதை கொடுப்பார்கள். இந்த ஊரில் எந்த பதவிக்கும் மரியாதை கிடையாது. சரி, வங்கி மேலாளர் அந்த நேரத்தில் வங்கிக்கு போக முடியாது எனவே கடிதங்களை வாட்ச்மேனிடம் கொடுக்கவும் என்று போஸ்ட் மேனின் மேலதிகாரி போஸ்ட் மாஸ்டரி டம், பேசுவார். உடனே போஸ்ட் மாஸ்டர் சரி என்று சொல்வார் என்று நினைக்காதீர்கள். அவர் சொல்வார், அதுதான் ரூலு! இதுல நான் என்ன பண்ணமுடியும்? என்பார்! எதிலேயும் பிரச்சனை செய்வதில் வல்லவர்கள் இந்த ஊர்க்காரர்கள்! அதுதான் அவர்கள் பவர் என்று நினைத்துக்கொள்வார்கள்! வீட்டில் போய் பெருமையாகச் சொல்வார்கள், வங்கி மேலாளரை மிரட்டிட்டேன் பாத்தியாடா! என்று.
இதெல்லாம் என் கணவர் வங்கி மேலாளர், அவருடைய உண்மை அனுபவங்கள்.
ஒரு முறை கணவரின் வங்கி தலைமை பொது மேலாளர் கிளைக்கு வந்திருந்தார். அவருடன் அவர் குடும்பமும் வந்திருந்தது. இதுதான் சரியான நேரம் என்று, என் கணவரை பழிவாங்க நினைத்த ஒரு வங்கி வாடிக்கையாளர், அவர் காரை வேண்டுமென்றே தலைமை பொது மேலாளர் வந்திருந்த காரின் முன்னால் நிறுத்தி விட்டார்! அதாவது இந்த காரை எடுத்தால்தான் அதை எடுக்க முடியும்! முன்பு,அந்த வங்கி வாடிக்கையாளர் கேட்ட ஒரு கடனை என் கணவர் தகுதி இல்லாததால் மறுத்துவிட்டார்! அதற்கு பழிவாங்க அவர் தருணம் நோக்கிக்கொண்டிருந்தார்! பெரிய அதிகாரி வருவதை உள்ளிருக்கும் ஊழியர்கள்தான் போட்டுக் கொடுத்து இருக்க வேண்டும்! இது வெளியே சொல்லப்படும் செய்தி அல்ல. அதிகாரி வேலை முடிந்து திரும்பும் நேரம் வந்தது. இந்த வாடிக்கையாளர் அவர் காரை நகர்த்த மறுக்கிறார். என் கணவர் வெளியில் வந்து சொல்லிய பிறகும், அவர் வேண்டுமென்றே காரை நகர் த்தாமல் அடம்பிடிக்கிறார். பின்னர் அந்த பெரிய அதிகாரியே, அப்படியே வந்து,ஆங்கிலத்தில் வாடிக்கையாளரை பார்த்து காரை நகர்த்தச் சொன்னார். பின்னர் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு அவர் காரை ஒருவழியாக நகர்த்தினார். வாடிக்கையாளரின் ஒரே நோக்கம், என் கணவரை பெரிய அதிகாரியின் முன் அவமானப்படுத்த வேண்டும் என்பதே! ஆனால் என் கணவர் நடந்த இந்த மோசமான சம்பவத்தை அவருக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்! இந்த ஊர் மக்களின் குணமே தனி, என்பதை விளக்கமாக சொன்னார்! இறுதியில் பெரிய அதிகாரி என் கணவரை பாராட்டிவிட்டு சென்றார்! எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் எப்படி இவ்வளவு நல்ல வியாபார வளர்ச்சி காட்டியிருக்கிறீர்கள் என்று எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினார்.
வங்கியில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் Messenger மெசஞ்சர் என்று அழைக்கப்படுவார். எல்லா ஊரிலும் அந்தப் பதவியில் வேலை பார்ப்பவர்கள் சொன்ன எல்லா வேலை எல்லாவற்றையும் செய்வார்கள். அரசு அலுவலகங்களில் பியூன் என்று சொல்லப்படும் ஊழியர்கள்தான் வங்கியில் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.அந்த ஊரில் மட்டும், மெசஞ்சர் என்றால் மெசேஜ் கொடுப்பவர் என்று பொருள், ஆதலால் காபி எல்லாம் வாங்கி கொடுக்க மாட்டேன், என்று வாதிடுவார் அந்த கடைநிலை ஊழியர் ! அதற்கு தொழிற்சங்கமும் ஆதரவு கொடுக்கும்! முக்கியமான பெரும் வாடிக்கையாளர்கள் வரும்போது, கிளை மேலாளர் அவர்களுக்கு காபி வாங்கி கொடுப்பார். இந்தக் கிளையில் மெசஞ்சர் அந்த வேலையை செய்ய மாட்டார்! டீ கடைக்காரருக்கு தனியாக காசு கொடுத்து கொண்டு வந்து கொடுக்கும் படியாக ஒரு ஏற்பாடு செய்தார் என் கணவர்!
ஒருமுறை வங்கியில் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு கடன் கொடுத்து இருந்தார்கள். அந்த தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வங்கியின் வட்டார தலைமை அலுவலரை ( ரீஜனல் மேனேஜர் ) அழைத்திருந்தார்கள். காலையில் எட்டரை மணிக்கு திறப்பு விழா. அதனால் அவர் அதிகாலையிலேயே எழும்பி,120 கிமி பயணம் செய்து மிகுந்த பசியுடன் வந்து சேர்ந்தார். பொதுவாக தமிழ்நாட்டில் இவ்வாறாக யாரை அழைத்தாலும் அவர்களுக்கு விஐபி வரவேற்பு கொடுப்பார்கள். அவர்களை தனியே அழைத்துக்கொண்டு போய் உணவு கொடுத்து உபசரிப்பார்கள். ஆனால் இந்த ஊரில் அப்படி கிடையாது. உணவு எல்லாம் தயாராக இருந்தது. ஆனால் இவரை அழைக்க இல்லை. உணவு கொடுக்கவும் இல்லை. அவர் நீரிழிவு நோயாளி ஆனதால் பசியில் கிரங்கி விட்டார். என் கணவரையும் உணவுக்கு அழைக்காததால் அவர்களிடம் போய் உணவு கேட்பது கேவலமாக இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! திறப்பு விழா முடிந்தவுடன் முதல் வேலையாக என் கணவர் அவர் மேல் அதிகாரியை ஒரு உணவகத்திற்கு கூட்டிச்சென்று உணவை வாங்கி கொடுத்தார். இவ்வளவு ஒரு கேவலமான வரவேற்பு தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரிலும் நடக்காது.
ஒரு முறை எங்கள் கார் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தோம். திரும்ப வந்து ஸ்டார்ட் செய்த போது ஸ்டார்ட் ஆகவில்லை. அதன் அருகில் நான்கு இளைஞர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என் கணவர் போய், தம்பி கார் ஸ்டார்ட் ஆகவில்லை, கொஞ்சம் தள்ளி விட முடியுமா? என்று கேட்டார். அவர்கள் உடனே பதிலுக்கு, பக்கத்துல ஒர்க்ஷாப் இருக்கு போங்க, ஸ்டார்ட் பண்ணி தருவாங்க, ன்னு சொல்லிவிட்டு அவர்கள் பார்த்துக் பேசிக்கொண்டிருந்தார்கள்! இந்தியா முழுவதும் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். எந்த ஊர்லயும் இவ்வாறான ஒரு உணர்ச்சி இல்லாத பதிலை நாங்கள் கேட்டதே இல்லை. இவ்வளவுக்கும், எங்கள் குடும்பம் காரினுள் இருப்பதையும் அவர்கள் பார்த்தார்கள்! அதுதான் அந்த ஊர் பாணி! அப்புறம் நாங்க ஒர்க் ஷாப் போன் பண்ணி அவர்கள் வந்து சரி பண்ணி கொடுத்தார்கள்!
அந்த ஊர் மக்களுக்கு இன்னொரு குணம் உண்டு. அவர்கள் கேட்டதை கொடுக்க வில்லை என்றால் ஊடகத்திலிருந்து பேசுவது போல பேசுவார்கள்! நிறைய குற்றச்சாட்டுகள் சொல்லுவார்கள்! அதைக் கேட்டால் பயந்து விடுவோம் என்று நினைப்பார்கள்!
இந்த ஊரில் இரண்டு வருடம் நாங்கள் உயிர்தப்பி வாழ்ந்தோம் என்றால், எங்களுக்கு அதற்காகவே நோபல் பரிசு தரலாம்! டிஸ்கவரி சேனல் கிர்ல் பேர் ஸ் இந்த ஊரில் ஒரு நாள் கூட வாழ முடியாது. நாங்கள் ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் தப்பித்து வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றோம்! அப்பாடா 
இவ்வளவு கேட்டவுடனே நீங்கள் அது எந்த ஊர் என்று தலையை குழப்பிக் கொண்டு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
அந்த ஊரில் எல்லாம் படித்த மக்கள். அழகாக இருப்பார்கள், அழகாக உடுத்துவார்கள். கேரளாவின் வெள்ளை தோலும், எல்லா கெட்ட குணங்களும் இவர்களுக்கு நிறைய உண்டு! இந்த ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் போனால் கேரள எல்லை வந்துவிடும். இங்கு ஓணம் விமரிசையாக கொண்டாடுவார்கள்.
ஊரின் பெயரை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!
அந்த ஊர்க்காரர்கள் கோரா விலும் நிறைய இருக்கிறார்கள். அதனால் நான் பெயரை வெளியிட விரும்பவில்லை. அவர்கள் வருத்தப்படுவார்கள்..
*
ஏறத்தாழ போகன் சங்கர் அளவுக்கே மெல்லிய நையாண்டியுடன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ அவர் சொல்வது உண்மை. நாகர்கோயிலில் பணியாற்ற அதிகாரிகள் அஞ்சுவார்கள். உரிமைக்குரல் எங்கே எழும் என சொல்லமுடியாது. ஜனநாயகம் அடுத்தபடிக்குச் சென்றுவிட்ட ஊர்.
யோசித்துப் பார்த்தால் குமரிமாவட்டத்தின் ஒரே சிறப்பு என்பது சாமானியர்களின் பேச்சில்கூட இருக்கும் நையாண்டியும் படிமங்களும்தான். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை ஒவ்வாமைகள். முற்றிலும் சம்பந்தமில்லாமல் பேசுவது, எந்த உள்ளடக்கமும் இல்லாமல் மணிக்கணக்காக உரையாடுவது, முன்னர் சொன்னவற்றை அக்கணமே மாற்றிப்பேசுவது என மையத்தமிழகத்தில் நான் இதேபோல பல ஒவ்வாமைகளைக் கண்டிருக்கிறேன்.
ஜெ
அசோகமித்திரனும் புவியரசுவும்-சக்திவேல்
அன்புள்ள ஜெ
நேற்று கவிஞர் புவியரசு அவர்களை பற்றிய விஷ்ணுபுரம் ஆவணப்படத்தையும் இன்று அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்தையும் பார்த்தேன். இருவரையுமே அவர்களின் படைப்புகளின் வழி சிறிதே அறிந்துள்ளேன்.
கவிஞர் புவியரசு அவர்களை பெரும்பாலனவர்களை போலவே அவரது ஓஷோ மொழியாக்கங்கள் வழியே அறிமுகம். அந்த மொழியாக்கங்கள் மிக பிடித்தவை. ஓஷோவே தமிழில் நம்மோடு உரையாடுவது போல் உணர வைப்பவை. அதன் பிறகு சென்ற ஆண்டு படித்த கரமசோவ் சகோதரர்கள் நாவல். தஸ்தாயெவ்ஸ்கியின் அந்த நீண்ட தன்னுரை பாய்ச்சல்களை உணர வைப்பவை. மாபெரும் விசாரணை பகுதியும் இவானின் மனப்பிறழ்வு நிலையும் இருவகை உச்சங்கள். அவையிரண்டும் தமிழில் வாசிக்கும் எனக்கு மொழியாக்கத்தின் வழி கிடைத்த செல்வங்கள்.
இவை மட்டுமே புவியரசு அவர்களது மொழியாக்க நூல்களின் வழி நான் அறிந்தவை. இந்த ஆவணப்படம் அவரது வெவ்வேறு முகங்களை சுருக்கமாக செறிவாக காட்டி செல்கிறது. மிக நல்ல அனுபவம்.
இதற்கு அடுத்து இப்போது கண்ட அசோகமித்திரனின் ஆவணப்படம் மிக பிரமாதம். சென்ற மாதம் தான் அவரது தண்ணீர் நாவலை வாசித்தேன். நான் வாசிக்கும் அவரது முதல் படைப்பு. உங்களுக்கு அடுத்து இத்தனை நெருக்கமாக உணர்ந்த இன்னொரு எழுத்தாளர் அவரே. என்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை. அங்கிருந்து எழும் அற்புதமான வாழ்க்கை தருணங்கள். அன்றாடத்தை இத்தனை நெருக்கமும் நுண்மையும் கொண்டு காட்சியாக்குவது ! சில நாட்கள் அவரது நினைவே இருந்தது. இந்த படம் அவரை கண்டு மகிழ அரியதொரு ஆவணம். அந்த தகவல்களை நான் புத்தகங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனால் காலத்தில் கரைந்து சென்றுவிட்ட அந்த குரலையும் நடையையும் முக பாவனைகளையும் என் தலைமுறையை சேர்ந்தவர்கள் இனி இவ்வண்ணம் மட்டுமே அறிய முடியும்.
இவர்களிருவரையும் பார்க்கையில் ஆச்சரியமாக ஒரு விஷயத்தை உணர்ந்தேன். புவியரசு அவர்கள் பேசுவதை காண்கையில் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்த என் தாத்தாவின் அதே சாயல். குரலில் மட்டுமல்ல, ஒரு சம்பவத்தை அவர் விவரிக்கும் முறையில், கருத்துகளின் மேலான அவரது பிடிப்புணர்வை பார்க்கையில் எல்லாம் தாத்தாவே நினைவுக்கு வருகிறார்.
அதேபோல அசோகமித்திரனை கேட்கையில் எங்கோ அவரது அந்த குரலையும் பாவத்தையும் என் இளமையில் கண்ட உணர்வே ஏற்படுகிறது. இந்த உணர்வுகள் ஒருவகையில் அவர்களை அணுக்கமாக உணர செய்கிறது.
இவற்றை சொல்லி வருகையில் எனக்கொரு கேள்வி எழுகிறது. உங்களது நீண்ட பயணத்தில் இதேபோன்று இதைவிட தீவிரமாக அனுபவங்களை அடைந்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழும் மனிதர்களில் இருக்கும் ஓரே போன்ற அம்சங்கள் அந்த காலக்கட்டத்தில் வாழும் முதன்மையான ஆளுமைகளிலும் வெளிப்படுவது எப்படி ? அதன் வேறுபாடு எவ்வண்ணம் துலங்கி வருகிறது ?
இப்போது இந்த கேள்வியை சரியாக கேட்டதாகவே எனக்கு தோன்றவில்லை. ஏதோ ஒன்றை இன்னும் சரியாக கேட்க முடியாத, சொல் திரளா வினாவாகவே உள்ளது அது. இந்த கடிதத்தில் இருந்து நீங்கள் அந்த தயக்கத்தை கண்டுபிடித்து விடுவீர்கள்.
அன்புடன்
சக்திவேல்
தம்பி- ஒரு வாசிப்பு
 விஷ்ணுபுரம் பதிப்பகம்
  விஷ்ணுபுரம் பதிப்பகம்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
abiman.in எனும் திரைப்படம் சார்ந்த இணையதளத்தில் மாதம் பத்து சிறுகதைகள் வாசிப்பு இலக்காக வைக்கப்பட்டு அவை குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் தம்பி, வணங்கான் சிறுகதைகளும் இருந்தன. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும், கதை குறித்து எழுதி பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்புதானே என எண்ணி ‘தம்பி’ சிறுகதையை வாசித்து, என் வாசிப்பை அதற்காக எழுத துவங்கினேன். அது குறித்து எழுதும் போதுதான் அதில் நான் கண்டுகொண்டதை (சரியாகவோ பிழையாகவோ) திடமாக கொண்டுவர முடிந்தது. எழுதுவது நம்மை தொகுத்துக்கொள்ள உதவும் என நீங்கள் சொன்னதை உணர்கிறேன்.அந்த கருத்துக்களை தங்களிடம் பகிர்கிறேன்.-சஃபீர் ஜாஸிம் தம்பி [சிறுகதை] தம்பி (ஜெயமோகன்) – சிறுகதை வாசிப்பிலிருந்து என் கருத்துக்கள்இந்த சிறுகதை எல்லா ஜெ-வின் படைப்புகளை போல் கதைமாந்தர்களின் ஆழுள்ளத்தை அப்படியே வாசகர்களுக்கு கடத்துகிறது. மேலதிகமாக கதையிலுள்ள அமானுஷ்ய சித்தரிப்புகள், மேலோட்டமாக வாசிப்பவரை கூட கதைச்சூழலுக்குள், கதைமாந்தருக்குள் வாசகனைக் கொண்டு நிறுத்தி நடுங்க வைக்குமளவுக்கு இருக்கின்றன. சரவணனின் பார்வையில் அமானுஷ்யத்துக்கும் பிரமைக்கும் ஊசலாடும் தருணங்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிரமையை ஒரு திடமான அமானுஷயமாக அவன் உணர்வது, அவை எழுதப்பட்ட விதம், திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் jump scare போல் நொடிக்கு பயமுறுத்தாமல், ஒரு தொடர் திகிலை நமக்குள் புகுத்துகிறது.
ஒரு இயல்பான பொருளை தனிமையான, அரவமற்ற பொழுதில் (பெரும்பாலும் இரவில்), முக்கியமாக ஒரு எதிர்மறை மனநிலையில் பார்க்கும் போது அது ஒரு கணத்துக்கு அமானுட இருப்பாக தெரியும். இந்த வகை திகில், கதையில் கையாளப்பட்டுள்ளது. மேலும் கதைக்கு அப்படிபட்ட திகில்தான் ஏற்றது.
பொதுவாக பேய்க்கதைகளும் திரைப்படங்களும், மனிதமனம் உச்சக்கட்ட கற்பனையில் உருவகித்துக்கொண்டு பயப்படும் மின்னல் வேக குரூர உருவங்களை (பேய் என்றோ காட்டேரி என்றோ கூறி) கதைக்குள் பயன்படுத்துவன.’தம்பி’யில் (குறிப்பாக மனநோயின் ஆரம்பக் கட்டத்தில் ) காட்டப்பட்டிருக்கும் பேய் (பிரமை) சாதாரணமாக நாம் புறச்சூழலால், எதிர்மனநிலையால் ஒரு பொருளை, ஒரு அமானுட இருப்பு என தவறி உணரும் தருணங்களை ஒத்து இருப்பதால், அவ்வப்போது பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டுதான் கதையை படித்தேன்.கதையின் சாரமே சரவணன் தன் மூளைபாதித்த அண்ணன் மீது கொண்ட அருவருப்பு, அவன் பதிலுக்கு தன் மீது காட்டிய அன்பு, அவனை வெறுப்பின் உச்சியில் கொலைசெய்தல் மற்றும் அதனால் விளைந்த குற்றவுணர்ச்சிகள். அவன் அண்ணனை சுற்றிய இந்த பல்வேறு உணர்ச்சிகள் முற்றி, பேயாக அவன்முன் வருகிறது.’பேய்ன்கிறது நம்ம மனசாட்சிதான்’ என எங்கோ கேட்டது படிக்கும்போது நினைவுக்கு வந்தது.
சகோதரர்களுக்குள் உள்ள ஒரு உளவியல் பிணைப்பு ×உரசல் முரணை கதை பேசுகிறது.”நான் ஒரு படம் என்று வைத்துக் கொள்வோம். அதே படத்தை நன்றாகக் கசக்கி விரித்தது போலத்தான் அவன். அவனது குரூபத்தோற்றத்துக்கு உள்ளே என்னுடைய முகமும் உடலும் ஒளிந்திருந்தது. அவன் பேசும்போது நடக்கும்போதும் என்னை ஏளனம் செய்வதுபோல இருந்தது.”
” ஒரு மங்கலாய்டு நமக்கு மகனாகப் பிறக்கலாம். நம் அப்பாவாக இருக்கலாம். நம் சகோதரனாக இருக்கக் கூடாது….”
நிச்சயமாக செந்திலும் தன் உருவத்தை தன் தம்பியில் கண்டு கொண்டதனால்தான் அவனிடம் அன்பு காட்டியிருக்க கூடும் என நினைக்கிறேன். இங்கு பிணைப்பு அன்பாக இருக்கிறது.
ஆனால் சரவணன் தன்னை அவனில் கண்டுகொள்ளும்போது அவனது குரூபத் தோற்றம், அவன் தோற்றத்தின் பகடிபோல் தெரிய அவனுக்கு அந்த பிணைப்பு முற்றிலும் எதிர்மறையாக ஒரு வெளிப்படையான அருவருப்பாக, வெறுப்பாக வெளிப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அந்த வசனங்களிலிருந்தும், கதையிலிருந்தும் மங்கலாய்டு, அருவருப்பு எனும் விஷயங்களை நீக்கிவிட்டு பொதுவாக பார்த்தால், எல்லா உடன்பிறப்புகளுக்குள்ளும் அந்த ஒரு பிணைப்பு×உரசல் முரண் ஏதோ ஒருவகையில் (அவ்வளவு தீவிரமாக இல்லாதிருப்பினும்) இருக்குமோ என படுகிறது.
சரவணனுக்கு அண்ணனின் தோற்றம் வெறுப்பாக அல்லது அருவருப்பாக ஒருபக்கம் இருக்க , அந்த தோற்றமே தனக்கு நெருக்கமானவனாக அவனை ஆக்கிவிடுகிறது. அந்த நெருக்கம் அவ்வெறுப்பை பலகீனமாக்குகிறது.
அண்ணன் தன் மீது வைத்திருந்த கள்ளமற்ற அன்பு தனது அருவருப்பு உணர்ச்சியுடன் மோதி தன்னை ஏதோ கெட்டவன் போல காட்டியாதால் உருவான வெறுப்பு ஒருபக்கம் இருக்க , அவன் தன்னால் இறந்ததை எண்ணி வந்த குற்றவுணர்ச்சி அந்த வெறுப்பை பலகீனமாக்குகிறது.
அவன் தாய் அவன்மீது வைத்திருந்த அன்பு மேல் வெறுப்பு ஒருபக்கம் இருக்க, அந்த அன்பால் தாய் இறந்ததன் குற்றவுணர்ச்சி அந்த வெறுப்பை பலகீனமாக்குகிறது.
ஒரு இரவில் அவன் காணும் பிரமையை தனது அண்ணனோ என எண்ணி பயந்ததில் வந்த சிறு பொறி அவனுக்குள் அதுவரை உறங்கியிருந்த ஒவ்வொரு வகை வெறுப்பையும், அது விளைத்துவிட்ட குற்றவுணர்ச்சிகளையும் எழுப்பி ஒன்றோடுன்று மோதவிட்டு அவனை பிளந்து விடுகிறது. தன் குற்றவுணர்ச்சியே அண்ணனாய் வந்து நிற்க, அவன் அதனுடன் தனது வெறுப்பால் மோதி இறுதியில் அந்த இரண்டாலும் தோற்று இறக்கிறான்.
கதையின் உச்சம், சரவணனின் நிலை குறித்து டாக்டர் அதுவரை கொண்டிருந்த உளவியல் தர்க்கங்களை ஒரு நொடிக்கு ஆட செய்யும் அந்த இறுதி சிரிப்பு சத்தம்.
1.அதை ‘அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட திடமான பேய்தான்’ எனக்கொள்ளலாம். அல்லது
2.தர்க்கத்திற்கு உட்பட்டு ‘அது மரித்த உடல் படிப்படியாய் தளரும்போது நிகழ வாய்ப்புள்ள செயல்தான்’ என கொள்ளலாம்.
அல்லது
3.’சரவணன் கொண்ட உச்சநிலை பிறழ்வை தொடர்ச்சியாக கண்ட பாதிப்பால் டாக்டர் கொள்ளும் பிரமை’ எனக்கொள்ளலாம்.
எப்படி கொண்டாலும் சரவணனின் மரணத்துக்கு முன்பு வரை அவனுள் இருந்த வெறுப்பாலும், அண்ணனின் கள்ளமற்ற அன்பால் தாயின் பிரிவால் ஆன குற்றவுணர்ச்சியாலும், விளைவில் உருவகித்த செந்திலின் மறுபிரதியாலும் கூடி அவனில் உருவான ஆளுமைப்பிளவின் உக்கிரம், அந்த சிரிப்புக்கு ஒரு படி மேலே போய் ஒரு விளக்க இயலா திகிலை படர்த்துகிறது.
அவனது பிளவுண்ட மனம் பிறரை நம்பவைக்க அல்லது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவனது உடலை, குரல்வளையை கதைநெடுக இயக்கியது போல், அவற்றை மரணத்தின் நுனி வரை இயக்க செய்து, உடல் மரித்து விட்டு தளரும்போது விழும் இறுதி ஓசையாகவேணும் தன்னை வெளிப்படுத்த செய்திருக்கிறது.
அந்த பிளவுண்ட/ பிறழ்வுண்ட மனம் எந்த ஒரு பிசாசை, காட்டேரியை விடவும் திகிலூட்டுவது. மனம் என்பது பேராற்றல்.அந்த இறுதிசிரிப்பின் மூல ஊற்று அந்த பேராற்றலின் கிலியூட்டும் மற்றோரு மர்மதோற்றம்.
-சஃபீர் ஜாஸிம்
இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திகள்!-பீட்டர் துரைராஜ்
இன்றைக்கும் காந்தியம் எவ்வளவு வலிமையாக உயிர்ப்புடன் எப்படி எப்படியெல்லாம் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை நிதர்சனமாக்கி வரும் அரும்பெரும் காந்திய செயற்பாட்டாளர்கள் 11 பேர் பற்றிய சிலிர்க்க வைக்கும் உயிர்ப்பான பதிவு இது!
இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திகள்!-பீட்டர் துரைராஜ்
உச்சவழு – கடிதம்
   
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/உச்சவழு வாங்க
அன்புள்ள ஜெ
உச்சவழு கதையை நான் சமீபத்தில் படித்தேன். அழகான கெட்டி அட்டைபோட்ட சிறிய புத்தகம். அந்தக்கதை அளித்த ஒரு பெரிய கொந்தளிப்பை என்னால் சொல்ல முடியாது. நான் அதே டாப்ஸ்லிப்புக்கு 2010ல் சென்றிருக்கிறேன். அதே நோக்கத்துடன். உயிர்வாழவேண்டியதில்லை என்று முடிவெடுத்து போனேன். அங்கே அதற்கான இடம் தேடிச் சென்றேன். ஏன் அங்கே சென்றென் என்று தெரியாது. அன்று ஒரு மோசமான பிரிவு. ஒரு கைவிடப்படுதல். அல்லது துரோகம். என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். அப்படியே உடைந்துபோய்விட்டேன். ஆகவே சாக முடிவெடுத்தேன்.
ஆனால் சாகவில்லை. ஏன் சாகவில்லை என்றால் வேறு காரணம் ஒன்றுமில்லை. அந்த கடைசிப்புள்ளியில் ஒரு கணத்தில் வேண்டாம் என்று தோன்றிவிட்டது. அந்த கடைசிநிமிட நழுவுதல்தான் என்னுடைய இதுவரையிலான வாழ்க்கையாக நீண்டுள்ளது. இன்றைக்கு அதெல்லாம் பழைய கதைகள். இன்றைக்கு அதை அவ்வப்போது வேடிக்கையாக நினைத்துக்கொள்வதுடன் சரி. ஆனால் அன்றைக்கு ஏன் அந்த நழுவுதல் நடந்தது என்று நினைத்துக்கொண்டே இருப்பேன். அது ஒரு தெய்வ ஆணை என தோன்றும். அல்லது சாதாரண உயிராசை.
ஆனால் அந்த ஊரின் பெயரிலேயே அந்த ஸ்லிப் இருப்பதை இந்தக்கதையை வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன். அந்த ஊரின் பெயரை சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன். ஆகவேதான் அந்த ஊர் என்னை காப்பாற்றியிருக்கிறது. இன்றைக்கு உச்சவழு வாசிக்கும்போதும் அவனை காப்பாற்றியது அந்த ஊரின் பெயர்தான் என நினைக்கிறேன். அற்புதமான பெயர். டாப் ஸ்லிப். உச்சவழு. அழகான கதை. ஒன்றுமே சொல்லாமல் என்னென்னவோ சொல்லிச்செல்லும் கதை.
கதையில் அவனை யானை கொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை. அது மீட்பு என்றும், அந்த யானையை பார்த்தபின் அவன் மீண்டு வருகிறான் என்றும்தான் நினைக்கிறேன். அவன் காட்டின் தெய்வத்தைத் தரிசனம்கொண்டுவிட்டான். வாழ்க்கையின் பொருளை அறிந்து தெளிவடைந்துவிட்டான். நான் அன்றைக்கு இரவில் கண்டது காட்டின் அடர்ந்த இருட்டை. அதுதான் அந்த யானை.
ஆர்.
February 9, 2022
இலக்கியநுண்ணுணர்வு – மூன்றுவிதிகள்
ஜெ
உங்களுடய சில கட்டுரைகளில் ஒரு இலக்கிய வாசகன் நுண்ணுணர்வும் கூர்மையும் கொண்டவன் என்றும் , அந்த நுண்ணுணர் பிறவியிலே வரும் என்கிரிர். ஆனால் புது வாசகன் தன்னுள் நுண்ணுணர்வும் இல்லாதவன் (இருப்பதை அறியாதவன்) அதை அடைவதற்கான வழிகள் ஏதேனும் உள்ளதா ? அல்லது இதைபற்றிய கவலை அவனுக்கு அர்த்தமற்றத?
நன்றி
விஜய்
அன்புள்ள விஜய்
எந்தக் கலைக்கும் அதற்குரிய நுண்ணுணர்வை அடைய ஒரே வழி சிலகாலம் அதில் ஈடுபடுவதே. தொடக்ககால தத்தளிப்புகள், தாழ்வுணர்ச்சிகளை பொருட்படுத்தாமல் குறைந்தது இரண்டு ஆண்டு தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்கே நுண்ணுணர்வுகள் உருவாகும்.
அத்துடன் இலக்கியம் சார்ந்த விமர்சனங்கள், விவாதங்களை கவனியுங்கள். (அரசியல், கோட்பாட்டு விமர்சனங்களை அறவே தவிர்த்துவிடுங்கள். நான் சொல்வது அழகியல் விமர்சனங்கள், ரசனை விமர்சனங்களை. அரசியல், கோட்பாட்டு விமர்சனங்கள் இலக்கியத்தை சடலப்பரிசோதனை செய்பவை. நுண்ணுணர்வுக்கு நேர் எதிரானவை) கூட்டுவாசிப்பு வழியாக நம் நுண்ணுணர்வுகள் மேம்படும்.
இவற்றுடன் ஒன்று, வாசிப்பை உங்கள் சொந்த அனுபவங்களுடன் நீங்கள் அறியும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொண்டே இருங்கள். இலக்கியம் என்பது வாழ்க்கைமேல் விமர்சனம், வாழ்க்கையின் விரிவாக்கம். வாழ்க்கை சார்ந்த நுண்ணுணர்வே இலக்கிய நுண்ணுணர்வு என்பது. ஒரு கதையில் ஒரு நிகழ்வை பார்க்கிறீர்கள், அது வாழ்க்கையில் அப்படி அல்ல என உணர்கிறீர்கள், ஆகவே அதை நிராகரிக்கிறீர்கள்- இதுவே நுண்ணுணர்வு. இலக்கியத்தை வாழ்க்கையாலும் வாழ்க்கையை இலக்கியத்தாலும் அர்த்தப்படுத்திக்கொண்டே இருங்கள்.
ஜெ
ஆசான் – கடிதங்கள்
 ஆசான் என்னும் சொல்
  ஆசான் என்னும் சொல்
அன்புள்ள ஜெ
ஆசான் என்னும் சொல் பற்றிய கட்டுரை வாசித்தேன். ‘அரசியல்வாதிகளில் எவரையெல்லாம் நீங்கள் ஆசான் என்றும் தெய்வம் என்றும் சொல்கிறீர்கள்? ஒருவரையாவது பெயர் சொல்லி பேச முடியுமா? எழுத்தாளரை ஆசான் என்றால் மட்டும் ஏன் தன்மதிப்பு தலைக்குமேல் ஏறுகிறது?’ இதை நானும் ஐம்பதுபேரிடமாவது கேட்டிருப்பேன். அவர்களின் பிரச்சினை எழுத்தாளர் என்னும் ஆளுமை மேல் அவர்களுக்கு மதிப்பில்லை, அவரிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான்.
ஒருவர், எழுதக்கூடியவர், சொன்னார் ‘நான் எதையுமே படிப்பதில்லை. இன்ஃப்ளூயன்ஸ் ஆகிவிடுவேன்’ ஆனால் கண்டபடி சினிமா பார்ப்பார். அவருடைய எழுத்தே சினிமாவின் நிழல்தான். இதெல்லாம் அறியாமையின் வெவ்வேறு முகங்கள்
அர்விந்த்குமார்
அன்புள்ள ஜெ,
ஆசான் என்னும் சொல் வாசித்தேன். எனக்கும் நீங்கள் ஆசான் தான் ஆனால் அதைவிட ஆசிரியர் என்று எனக்குள் கூறிக் கொள்வது நன்றாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல உங்களுடைய எழுத்து சில நேரம் எனது தந்தையின் “சொல்லாமல் சொல்வது” போல இருந்தாலும், பல சமயம் என் முத்த சகோதரர் திட்டுவது போலவும் உணர்கிறேன்.
என்ன இருந்தாலும், ஏதாவது எழுதினால் நண்பன் போல தோற்றம் கொடுக்கும் ஜெ தான் எனக்கு விருப்பமானது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஆசான் என்னும் சொல் பதிவு தொடர்பாக, ஒரு கேள்வி. கேள்வி பொதுவாக ஒருவரை விளிப்பதைப் பற்றி.
நேர்ப்பேச்சில் நாம் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கும் ஒருவரை, சார் என்று கூறவருகிறது. அய்யா என்பது எல்லா இடத்திலும் பொருந்தி வருவதில்லை.
மேடைப்பேச்சில் “செந்தில் அவர்களே” என்று விளிக்கும் பழக்கம் இருந்தாலும், நேர்ப்பேச்சில் ‘அவர்களே’ என்னும் விகுதி சேர்த்து இங்கு விளிப்பதில்லை. ‘செந்தில் சார்’ என்பதே பொதுவான வழக்கமாக உள்ளது.
ஆனால், நீங்கள் கன்னடத்தில் கவனித்திருக்கக் கூடும், அவர்கள் பேச்சு வழக்கில், வெகு இயல்பாக ‘அவரே’ ‘அவுரே’ என்ற விகுதி சேர்த்து அழைக்கிறார்கள். கேட்டிருப்பீர்கள். நன்றாக இருக்கிறது தானே? செந்தில் அவரே, ஜெயமோகன் அவரே. எளிமையாகவும் உள்ளது, மரியாதையாகவும் உள்ளது. சார் மோர் ஜி எதுவும் தேவையில்லை.
அவரே என்ற சொல் நமக்கும் அதே பொருள்தான். ஒரே மொழிக்குடும்பம் தான். ஆனால், தமிழில் இந்தப் புழக்கம் இல்லாமல் இருப்பது ஏக்கமாக உள்ளது.
ஏதேனும் ஒரு திரைப்படத்தில், முக்கியப் பாத்திரம் ஒருவர் இவ்வாறு பயன்படுத்தினால், பரவிவிடுமோ?
அன்புடன்,
வி. நாராயணசாமி.
உதிர்பவை மலர்பவை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
நலம் விழைகிறேன்.
இன்று அதிகாலையில் தங்களின் தளத்தில் வெளியான சதீஸ்குமார் சீனிவாசனின் ‘புகை’ப்படத்தையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். காலையில் அழக்கூடாது என்ற சங்கல்பத்தை என்னை அறியாமலேயே கடந்திருந்தேன். இன்று அனைவருமே ஒன்றுமே செய்யமுடியாது இப்படித்தான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது. வேறொன்றும் செய்ய முடியாது. இந்த காலத்தின் கையறு நிலை இதுதான். ரத்தமும் வலியுமாக ஒன்றுமே செய்ய முடியாது.நம் குடும்பத்தில் தான் நடக்க வேண்டும் என்றில்லை. தெருவில்…உறவில் அனுதினமும் நிம்மதியிழக்கச் செய்கிறது.மனதிற்கு பிடித்த அண்ணன்,தம்பி,மாமா (ஊரில் முக்கால்வாசிப்பேர் மாமா தான் . அம்மா தம்பி என்று அழைப்பவரை நாம் வேறெப்படியும் அழைக்கமுடியாது) என்று வரிசையாக எத்தனை முகங்கள்.இதெல்லாம் விட நம்முடைய பிள்ளை போன்ற அல்லது பிள்ளைக்கு மேலான மாணவர்களை அப்படிக்காண்பது.
கல்வியியல் கல்லூரியில் படிக்கும் போது பள்ளியில் பயிற்சிகாலம் உண்டு. அப்படி என் முதல் மாணவனாக பனிரெண்டாம் வகுப்பில் என்னைப்பார்த்து முதன்முதலாக குட்மானீங் டீச்சர் என அழைத்து சிரித்தவன் இந்தப்பயலை போலத்தான் இருப்பான். அவனை இப்படி கண்ட போதுதான் முதன்முதலாக அறுத்துப்போட்ட மாதிரி இருந்துச்சு என்று வீட்டுப்பெண்கள் சொல்லும் வார்த்தையை உணர்ந்தேன்.
என் நடுநிலைப் பள்ளி வகுப்புத்தோழன் இருபத்தாறு வயதில் போய் சேர்ந்தான். நான் என் சகவயதினனின் இறப்பிற்கு முதன்முதலாக அவன்வீட்டு வாசலில் நிற்கும் போது கண்ணீரை விட கோபம்தான் அதிகமாக இருந்தது.
இதெல்லாம் மனிதனின் இயல்புகள். அதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டாம்…க்ளீனாக காட்டிக்கொண்டு அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம் என்று இவர்கள் சட்டென்று வெட்டிவிடுவதை அழகாக செய்கிறார்கள். நம் சமூகம் இன்னும் தனிமனிதன் என்ற கருத்துருவிற்கு தயாராகவே இல்லை. குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருந்தால்தான் நம்மால் உறங்கமுடியும். அகக்கதவை சாத்திக்கொள்ள இன்னும் பழகவில்லை. என்னுடைய தனிப்பட்ட உரிமை என்று சொல்லியே நாட்களை கடத்துகிறார்கள். அவர்களிடம் பேசும்போது அலட்சியமான அவர்களின் சிரிப்பை போல வெறுக்கத்தக்கது எதுவும் இல்லை.
பெரும்பாலும் லௌகீகவாதிகள் இதிலும் கட்டுக்குள் இருந்து சமாளிக்கிறார்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அன்பானவர்கள் தான் நன்றாக சிக்கிக்கொள்வதாக நினைக்கிறேன். கேட்டால் நாங்க எந்த கட்டுப்பாடுகளிலும் சிக்காத பறவைகள் என்பார்கள்.
மற்றபடி கவிதையில் காற்றில் வரையும் விரல்களுக்கு காற்றே மொழியென…விரல் என தொடுகை என சதீஸ் வந்தடையக்கூடிய இடம் உள்ளது. இலையில் நடுங்கும் பனியை தன்வயப்படுத்தும் சூரியனுக்கு மிகஅருகில் வந்துவிட்டார் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல எழுதிக்கடத்தல். புகைப்படங்கள் தற்படங்களாகி நாளாக்கிறது சதீஸ். இன்னும் அதிலேயேவா. புகையில்லாமல் இந்தப்படத்தை மனதில் வரைந்து பார்க்கிறேன். மிக அழகான மஞ்சள் பூ வொன்று தெரிகிறது.
அன்புடன்,
கமலதேவி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 


 
   
   
   
  
