Jeyamohan's Blog, page 831
February 9, 2022
இன்காதல் – கடிதம்
   
https://www.vishnupurampublications.com/
அன்பு ஜெ!
எப்படி உங்கள் தளம் கண்டு வாசிக்கத் துவங்கினேன் என்பது நினைவில் இல்லை. எப்போதிருந்து என்பதும்தான். ஏதோ ஒரு தினம் கேளாச் சங்கீதம் வாசித்தேன். முதல் வாசிப்பில் நான் கதைக்குள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன் அல்லது விலக்கம் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் இப்போதுவரை கணேசன் குடித்த மதுரத்தை அனுதினமும் குடித்து அதன் மயக்கத்தில் திளைத்தும் களைத்தும் போய்க்கிடக்கிற ஒருவன்தான் நான்.
எதனால் நான் மங்கை அவளில் மயங்கித் திரிகிறேன் என்பது என் அறிவுக்கும் மனதிற்கும் நன்கு தெரியும். அதுதான் கணேசனுக்கும் எனக்குமான வேறுபாடு. ஆனால் அதிலிருந்து வெளிவருகிற சூத்திரம் பிடிபடாதிருந்த வகையில் நானும் கணேசன் ஆகிப்போகியிருந்தேன்.
ஜெ! அவள் என்னிலும் ஒரு விரற்கடையளவு உயரம். எனக்குப் பிடித்தமான உடல்வாகு. ஒளி வீசும் பற்கள். பேசும் விழிகள். அவள் சிரிக்கிறபோது சிறு மின்னல் ஒன்று வெட்டி முகத்தில் பரவி ஒளியாக நிலைத்திருக்கும். சிரித்துக் கொண்டேயிருப்பாள். மலையாளத்தில் அவள் அம்மையோடு பேசுவதைக் கேட்க வேண்டும்! அவளின் பேச்சை ராஜாவின் இசையாகத்தான் என் மனம் மொழிபெயர்த்துக் கொள்ளும். சிறுவயதில் அப்பாவை இழந்தவள். நிறைய சிலுவைகள் சுமந்தவள். ஆனால் அதன் சுவடுகூட தெரியாது. அப்படி வாழ்வை கொண்டாடி வாழ்கிறவள். அறிவுக் கூர்மை கொண்டவள். என் இரசனையோடு ஒத்துப் போகிறவள். இப்படி தோரணமாக நீளும் காரணங்களால் அவள் என்னில் அமிழ்ந்து கிடக்கிறாள். பித்துப்பிடித்து திரிந்தேன். விலக நினைப்பேன், அவள் இறங்குவாள். அவள் விலகுகையில் நான் இறங்குவேன். சமயங்களில் காலமும் எங்களை இணைக்கிறபடியான கோலம் போடும். நான் மணமானவன். அவளுக்கு இனிதான். மோகமுள் பாபு-யமுனா என என்னென்னவோ ஓடும் மனதில். தூரத்தில்தான் இருக்கிறோம். என்றாலும் தினம் தொடர்பில் இருக்க இந்த அலைபேசியும் கட்புலனும் போதாதா?
எல்லாத் திசைகளிலிருந்தும் தொலைதூரங்களிலிருந்தும் என்னின் வெகு ஆழத்திலிருந்தும் என்னில் அவள் அதிமென்மையாக முடிவேயில்லாத கேளாச் சங்கீதத்தை இசைத்துக் கொண்டேயிருந்தாள். இன்னும் கூடத்தான். உறக்கத்திலும் சதா அவள் நினைவுகளில் அரற்றுகிற மனதிற்கும் புத்திக்கும் அவளிலிருந்து தொலைவு கொள்ள உங்கள் எழுத்துக்களைத்தான் பக்கம் கொண்டுள்ளேன் சமீப காலமாக. நல்ல விளைவு உணர்கிறேன்.
நன்றியும் அன்பும்
சத்யன்
சடம் – கடிதம்
   
அன்புள்ள ஜெ,
சடம், நண்பர்களின் கடிதங்கள் வழியாவே துலங்கி வந்தது.
அந்த சிகப்பு ஒற்றையடி தடம் மனிதர்களின் தொப்புள் கொடி பாதை. நாம் எந்த காட்டில் பிறந்தோமோ, எங்கிருந்து வந்தோமோ அதற்க்கு திரும்பி செல்கிறார்கள் இரு காவலர்களும். எனவே வந்த வழியே தங்கள் நாகரீகத்தால் அடைந்த அனைத்தையும், திரும்பிசெல்லும் வழியே ஒவ்வொன்றாக உதறி ஆதி இயல்புக்கு செல்கிறார்கள். அதாவது இதல்லாம் எங்கு துவங்கியதோ அந்த இடத்திற்கு. ஆனால் துவங்கிய இடத்தில் இருப்பதோ ஜடம் என்ற பெண்.
அந்த கீழ்மையில் காட்டின் எல்லைக்கு சற்று முன்தான் துறவிகள், யோகிகள், மகான்கள் இருக்கிறார்கள். அவர்கள் நகரத்திர்க்குள்ளும் இல்லை காட்டுக்குள்ளும் இல்லை. அவர்கள் காவலர்களுக்கும் காட்டு இயல்புக்கும் மேல் உள்ளவர்கள். ஒரு விதத்தில் இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள்.
தன் சமாதியில் பீடி வைக்க வேண்டும் என்ற வரி கதையில் வந்ததும் எனக்கு நினைவு வந்தது காவல் தெய்வங்களைதான். கதையில் காவலர்கள் அதற்க்கான உருவகங்கள். ஒரு காவலன் ஏன் அவ்வளவு கீழ்மையானவனாக இருக்கிறான். ஒன்று, அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்களில் அச்சத்தை நிறுவியாக வேண்டும். அது, முற்றதிகாரத்தின் வழியாகவே சாத்தியம். முற்றதிகாரம் என்பது அவன் கட்டுப்பாட்டுக்குள் அவனே இல்லாதநிலை-குரூரநிலை. அங்கு அக இருள் விழித்துக் கொள்ளும். இரண்டு, திருடர்களிடம் இருந்து காக்க கூடியவன் மிக பெரிய திருடனாக இருந்தாக வேண்டும். திருடன் என்ற இணையான ஆற்றல் உள்ளவனை எதிர்த்து மக்களை காக்க வருபவன் தான் காவலன். திருடனுக்கு இணையாக ஆற்றல் இருந்தபோதும் அவன் திருடனாகாமல் மக்களை, சமூகஒழுங்கை காக்கிறான் என்பதனால்தான் அவன் தெய்வம். காவல்தெய்வம் என்பது நல்லது தீயது என்ற அடிபடையில் அமையவில்லை.
காவல்×திருட்டு என்ற போட்டியில் காவல் வெல்லும் பொழுதுதான் சமூகத்தில் ஒழுங்கு இருக்கமுடியும். ஆனால் சமூகத்தில் மக்கள் யாரை காவலர்களாக திருடர்களாக கருதுகிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களை பொருத்தவரை ராபின்வுட் காவலன். அரசாங்கத்தை பொருத்தவரை ராபின்குட் திருடன். காவல்தெய்வம் என்று நினைவு வரும் பொழுது கூடவே வருவது பயமும்தான். நாக்கை துருத்தி அருவா ஓங்கி நிற்க்கும் தெய்வங்கள். பயபக்தி என்றுதான் நாம் அதை அழைக்கிறோம்.
அந்த பெண் ஏன் கதையில் பைத்தியமாக இருக்கிறாள், அவள் ஏன் காட்டில் வனதுர்கை இருக்கும் இடத்திற்க்கு செல்கிறாள். மனம் குழம்பி, நாகரீகங்கள் பரிணாமங்கள் அகத்தில் கட்டிய ஒழுங்குகள் கட்டவிழும்போதுதான் ஆதி பிறப்பின் மூலத்திற்க்கு செல்ல முடியுமா. முடிவற்ற காட்டின் மையத்தில் அவள் ஏன் ஜடமா கிடக்கிறாள். அப்படிதான் இது அனைத்தும் துவங்குவதற்க்கு முன், ஜடமாக அந்த பாறையாக இருந்ததா. அறங்கள் ஒழுக்கங்கள் அனைத்தும் ஒரு பண்பாட்டு உயிரியல் பயிற்சிமட்டும் என்றாகி சுடலையும் வனதுர்கையும் சந்தித்து கொள்ளும் இடம் அது.
சித்தும் ஜடமும் ஒன்றை ஒன்று ஈர்க்கிறது. சித் வந்து அந்த ஜடத்தை எழுப்புகிறது. ஜடம் சித்தை எடுத்துக்கொள்கிறது. அப்படிதான் அனைத்தும் துவங்குகிறது. இந்த கதை ஒரே நேரம் சமூகம் உருவாக்கம், உளவியல் பரிணாமம் மற்றும் புவியில் உயிரினங்கள் உருவானது, ஆண்பெண்-சிஜ்ஜடம் கொள்ளும் ஆடல் என்ற பிரபஞ்ச உருவகம், என அனைத்தின் கதையாகவும் உள்ளது. சலனமற்ற ஜடத்தின் அழகுதான் சித்தை ஈர்க்கிறதா, அழகுதான் காரணமா என்பதுதான் வினாவாகவும் வியப்பாகவும் எஞ்சியுள்ளது. வரவர கதைகள் மிக பெரிய ஒன்றை விளக்கும் சிறிய வடிவிலான ஃபார்முலாக்களாக ஆகி கொண்டிருக்கின்றன.
நன்றி
பிரதீப் கென்னடி
February 8, 2022
மொழியாக்க வாசிப்பு -மூன்றுவிதிகள்
 மொழியாக்கங்களை வாசிப்பது
  மொழியாக்கங்களை வாசிப்பது
அன்புள்ள ஜெ.
மொழியாக்கங்களை வாசிப்பது குறித்த தங்கள் கட்டுரையைப் படித்தேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன் பொது நூலகம் ஒன்றில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரங்களின் கதை ( the tale of two cities ) நாவலின் தமிழாக்கம் கிடைத்தது. மொழிபெயர்ப்பு பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார். இது மாதிரி நிறைய மொழிபெயர்த்து வைத்திருந்தார். எனக்கு அவரைப்பற்றி எதுவும் தெரியாது.இருப்பினும் ஒரு துணிச்சலில் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். நான் வேகமாக வாசிப்பவன். எவ்வளவு கடுமையாக முயற்சித்தும் நான்கு பக்கங்களுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. கடுமையான தலைவலி. காரணம் மிகக் கடுமையான தமிழ்நடை. வக்காளி என்னைத் தவிர ஒரு பய இத படிக்கக் கூடாதுடா இனிமே லைப்ரரி பக்கம் வருவீங்க என அப்பாத்துரையார் என்னைப் பார்த்து சிரிப்பதைப் போன்று இருந்தது. ஒருவேளை இந்த நாவலே இப்படித்தான் இருக்கும்போல என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். அதன்பிறகு சூடான பாலில் வாயை சுட்டுக் கொண்ட பூனை மாதிரி மொழிபெயர்ப்பு நாவல்கள் பக்கம் திரும்பியதில்லை.
நிற்க. சில மாதங்களுக்கு முன் கிண்டிலில் உலவியபோது the tale of two cities ஆங்கில நாவல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இந்த தடவை முயற்சித்துப் பார்த்து விடுவோம் என்று இறங்கினேன். வெண்ணெயில் சூடான கத்தி இறங்குவது மாதிரியான மொழிநடை. வழுக்கிக் கொண்டு போவது போல் உணர்ந்தேன். என்ன ஏது என உணர்வதற்குள் பத்து பக்கங்கள் படித்து முடித்திருந்தேன். தவறு என் மீதா, அப்பாத்துரையார் மீது என்று புரியவில்லை.
எளிய மொழிநடை கொண்ட மொழிபெயர்ப்பு புத்தகங்களை தாங்கள் பரிந்துரை செய்யலாமே. இது என் வேண்டுகோள்.
அன்புடன்
தண்டபாணி.
***
அன்புள்ள தண்டபாணி
தமிழில் உண்மையாகவே மொழியாக்க நூல்களில் பெரிய சிக்கல்கள் உள்ளன. ஒன்று, ஆங்கிலத்தின் சொற்றொடரமைப்பு தமிழுக்கு அன்னியமானது. அதை தமிழ்ச்சொற்றொடர்களாக திரும்ப அமைக்காவிட்டால் அந்த சொற்றொடர்கள் நம் மூளைக்கு புரிவதில்லை. ஆகவே ஒரு நூல் முழுக்கமுழுக்க தமிழாகவே அமையவேண்டும் என்பது மிக முக்கியம். முதல் இரு பக்கங்களை வாசியுங்கள். உண்மையில் தமிழ் மொழிக்கான ஓட்டம் இருந்தால் வாசியுங்கள். இல்லையேல் ‘கஷ்டப்பட்டு’ வாசிக்கலாமென எண்ணாதீர்கள். அந்த வாசிப்பால் பயனில்லை. இலக்கிய அனுபவத்தை இழந்துவிடுவீர்கள்.
இலக்கிய நுண்செய்திகளை மொழியாக்கம் செய்வதில் சில சவால்கள் உள்ளன. சில மொழியாட்சிகள் சில வகை சொலவடைகள் மொழியாக்கத்தில் தவறிவிடும். அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. தமிழிலேயே ஆனாலும் நாம் இலக்கிய ஆக்கங்களை கொஞ்சம் கற்பனை கலந்துதானே வாசிக்கிறோம். இன்னொரு பண்பாட்டையும் நம்மால் கற்பனையில் விரிவாக்கிக்கொள்ள முடியும்.
கொள்கைகள், கோட்பாடுகள் பற்றிய நூல் என்றால் கலைச்சொல்லடைவு உள்ளதா என்று பார்க்கவும். அதிலுள்ள கலைச்சொற்களில் சிலவற்றை கூகிளில் தேடி அங்கே பொருள் கிடைக்கிறதா என்று பார்க்கவும். ஏற்கனவே புழக்கத்திலுள்ள சொற்களெல்லாமே விக்ஸ்னரியில் உள்ளன. அப்படியன்றி ஆசிரியர் மனம்போன போக்கில் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தால் அந்நூலை தவிர்க்கவும். ஆனால் நாமறியா கலைச்சொல் கொண்ட நூலை வாசிப்பது கொஞ்சம் கடினம். முயற்சி எடுத்து பயிலவேண்டும். அந்நூல் முக்கியமானது என்றால் அதற்கான பயனும் நமக்குண்டு.
நல்ல மொழியாக்கங்களை நான் சுட்டிக்கொண்டே இருக்கிறேன். முழுப்பட்டியலை அளிப்பது நடக்காத காரியம்
ஜெ
ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா
 
காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
காதுகள், அந்தியூர்மணி – கடிதம்
ஆழத்தில் விதிகள் இல்லை- அசோகன்
அன்புள்ள ஜெ,
“காதுகள்” நாவலை ஒட்டி அந்தியூர் மணி எழுதிய கட்டுரை. அந்த கட்டுரைக்கு அசோகன் எழுதிய பதில். அசோகனின் பதிலுக்கு சத்திவேல் எழுதிய பதில். அந்த பதிலுக்கு அசோகன் மறுபடி எழுதிய விளக்கக் கடிதம். இவை எல்லாவற்றையும் படித்துவிட்டேன். அவசியமான விவாதம். மரபுக்கும் நவீனத்துக்கும் இடையிலான உறவு இருவேறு கோணங்களில் முன்வைக்கப்படுகிறது. உலகளாவிய போக்கோடு நம் மரபை எப்படி இணைப்பது என்பது இன்று மிக முக்கியமான கேள்வி. இரண்டு தரப்புகள் எதிர் நிலையில் நின்று அதை பரிசீலிக்கின்றன. மரபின் பேரிலேயே மத அடிப்படைவாதிகள் தேசத்தை ஆட்சி செய்யும் சூழலில் இது தவிர்க்கமுடியாதது.
அசோகன், சத்திவேல் – இரண்டுமே அறிமுகம் இல்லாத பெயர்கள். தளத்தில் புகைப்படங்கள்கூட இல்லை. அது இயல்பாக அவர்களுக்கு ஒரு சுதந்திர உணர்ச்சியை கொடுக்கிறது என நினைக்கிறேன். கேலியும் கிண்டலுமாக எழுதுகிறார்கள். படிக்க ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. நகைச்சுவையான நடையில் ஆழமான கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
பொதுவாக நான் சண்டையில் ஈடுபாடு கொண்டவன் அல்ல. யாராவது சண்டை போட்டால் ஆர்வமாக வேடிக்கை பார்ப்பதோடு சரி. இந்த நிலையில் அசோகன் வலுக்கட்டாயமாக என்னையும் இந்த விவாதத்தில் இழுத்துவிட்டிருக்கிறார். என்னுடைய “ஆழத்தின் விதிகள்” கட்டுரைக்கு அவர் ஆற்றியிருக்கும் எதிர்வினையை படித்தேன். மேடையில் நின்று முழங்குவதுப் போல் நான் ஆக்ரோஷமாக அக்கட்டுரையை எழுதியிருப்பதாக அவர் கற்பனை செய்திருக்கிறார். என் கட்டுரையிலேயே அந்த தொனி இருக்கிறதா என்று தெரியவில்லை. அதில் அழகிய சிரிப்பு இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள். அசோகனின் கண்களில் அது படவில்லைப் போல. மற்றபடி நான் ரொம்ப சாதாரணமாகத்தான் அக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். அவர் நம்பும் அளவுக்கு எனக்கு அதன்மேல் உணர்ச்சி முதலீடு கிடையாது. தாராளமாக அவர் என்னோடு முரண்பட்டு பேசலாம். நிச்சயமாக சாத்தானே அப்பாலே போ என்று சொல்ல மாட்டேன். அசோகன், சாத்தானின் வக்கீலாகவே இருந்தாலும்.
 அந்தியூர் மணி
அந்தியூர் மணிஅந்தியூர் மணியின் கட்டுரையை பொருத்தவரையில் அசோகனின் கருத்துதான் என்னுடைய நிலைப்பாடும். நுட்பமான வாசிப்பு. ஆனால் நவீன மொழியில் இல்லை. வாசிப்பில் நுட்பமும் தனித்துவமும் அமைவது எளிய காரியம் கிடையாது. எனவே அந்தியூர் மணியின் கட்டுரையை முக்கியமானதாகவே கருதுகிறேன்.இப்போது என் கட்டுரை சார்ந்து சில விளக்கங்கள். அழகியல் மட்டுமே இலக்கிய விமர்சனத்திற்கான ஒரே அளவுகோல் என்று அந்த கட்டுரையில் எங்குமே சொல்லப்படவில்லை. ஏனோ அசோகன் அப்படி புரிந்து கொண்டிருக்கிறார். இலக்கிய விமர்சனத்தில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. அவரே குறிப்பிடுவதுப் போல் மார்க்சிய விமர்சனம் ஒரு வழிமுறை. நான் அந்த கட்டுரையில் அழகியலை என்னுடைய அளவுகோலாக முன்வைத்திருக்கிறேன். என்னுடைய தேர்வு அது. அதன் அடிப்படையில் சிறுகதையின் வடிவம் பற்றியும் அந்த வடிவத்தை தீர்மாணிக்கும் அழகியலின் தத்துவம் பற்றியும் பேசியிருக்கிறேன். இலக்கியத்தின் சமூக பங்கு பற்றியோ இலக்கியத்தை மதிப்பிடும் கருவிகள் பற்றியோ அக்கட்டுரை பேசவில்லை. ரசனையை நான் நம்பும் கருவியாக சொல்லி அதை கட்டமைக்கும் கூறுகளை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். அந்த சட்டகத்தை தவிர்த்துவிட்டு, ரேடியோவில் ஏன் முகம் தெரியவில்லை என்று கேட்பது மாதிரி அசோகன் விடுபடல்களை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்புறம் அழகியலை அசோகன் புரிந்து வைத்திருக்கும் விதம்கூட கொஞ்சம் விபரீதமானதாய் இருக்கிறது. மொழி பழசானால் கவிதை ஆகிவிடும் என்கிறார் அவர். மொழி அழகுக்காக மட்டும் சங்கப் பாடல்கள் இன்று படிக்கப்படவில்லை. கவித்துவத்திற்காகவே அவை படிக்கப்படுகின்றன. பழைய மொழியில் இருந்து நவீன மொழிக்கு மாற்றி எடுத்து, அதில் இருக்கும் கவிதைக் கூறுகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியான நூலே “சங்கச் சித்திரங்கள்”. இசையின் “பழைய யானைக் கடை” இன்னொரு உதாரணம். கடந்தகாலத்தில் இருந்து கிடைக்கும் மொழியின் அழகு , கூடுதல் பரிசுதானே தவிர அது லட்சியம் அல்ல. வெறும் ஓசை நயம் தான் கவித்துவம் என்றால் புது கவிதை இயக்கமே தோன்றியிருக்காது. இன்றைக்கும் செந்தமிழிலேயே கவிதை எழுதிக் கொண்டிருக்கலாம்.
கடந்த காலத்தில் இருந்து எல்லாச் செய்யுட்களும் அப்படியே நம்மை வந்து சேர்வதில்லை. அவை ஏதோவோர் அடிப்படையில் வடிகட்டப்பட்டே எதிர்காலத்தை வந்தடைகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் சிறந்த படைப்புகளை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. எனவே வெறுமனே மொழி பழசாவதால் கவிதையாவதில்லை. அது சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். “கரம் சிரம் புறம் நீட்டாதீர்” எனும் பேருந்து வாசகம் நூறு ஆண்டுகள் கழித்து கவிதையாகக்கூடும் என்கிறார் அசோகன். சுஜாதாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. பேருந்து வாசகம், சுவரொட்டி அறிவிப்புகள், விளம்பரங்கள் முதலியவற்றை எல்லாம் சுட்டிக் காட்டி கவிதை எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பார். கவிதை என்பது எதுகை மோனை மட்டுமே எனும் அந்த தப்பபிப்ராயத்தை தீவிர இலக்கியத்தில் யாரும் பொருட்படுத்தியதில்லை. அது ஏன் என்று யோசித்தால் அசோகனின் கூற்றில் உள்ள இடைவெளி புலப்படும். மேலும் இன்றைக்கு சாதாரணமானதாய் தெரியும் ஒரு வரி நூறு வருஷங்களில் கவிதையாகி விடும் என்றால், அப்படி எத்தனை சாதாரண வரிகள் நூறு வருஷங்களை கடந்து இன்று கவிதையாய் நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்.
பரவலாக வாசிக்கப்படுவதாலோ, பொது சமூகத்தின் ஏற்பினாலோ இலக்கியப் படைப்புகள் நிலைப்பதில்லை. அவை மிகச் சிறிய வட்டத்தின் அங்கீகாரத்தினாலேயே நிலை பெறுகின்றன. அந்த அங்கீகாரத்தின் தேவை எப்போதுமே இருந்து வந்துள்ளது. அதனால்தான் குட்டுவதற்கு பிள்ளைப் பாண்டியனும், மட்டறுப்பதற்கு வில்லிபுத்தூர் ஆழ்வாரும், வெட்டுவதற்கு ஒட்டக்கூத்தனும் வேண்டும் என்று பாடப்பட்டுள்ளது. அப்படியல்லாது, மதிப்பீடுகளே தேவை இல்லை. எந்த வரியையும் சும்மா பிளாஸ்டிக் கவர் போட்டு பத்திரமாக பெட்டியில் மூடி வைத்தால், அது நூறு வருஷங்களில் கவிதையாகிவிடும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அந்த வரி வருங்காலத்தில் ஆராய்ச்சிக்கு பயன்படலாம். ஆனால் கவிதை ஆகாது. இலக்கியத்தை வெறும் ஆவணப்படுத்தும் துறையாக கருதுவதும் அது போல் குறைபாடுள்ள நோக்கே. இலக்கியம் ஆவணம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அதே சமயம், ஆவணப்படுத்துவதோடு அதன் வேலை முடிந்துவிடவில்லை. பெட்ரோல் போட்டால் தான் பைக் ஓடுகிறது. எனவே பைக் கண்டுபிடிக்கப்பட்டதே பெட்ரோல் போட்டு நிரப்புவதற்குதான் என்று சொன்னால் அது அர்த்தப்பூர்வமானதா? அசோகனின் வாதம் அப்படிதான் இருக்கிறது.
என்னுடைய கட்டுரையில் அழகியலை நான் திட்டவட்டமான இருப்பாக குறிப்பிடவில்லை. அது மாறிக் கொண்டே வருவது என்றுதான் சொல்லியிருக்கிறேன். அதைவிட முக்கியமாக, அழகியல் விதிகளை தத்துவத்தின் விளைபொருட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளேன். அசோகன் கருதுவதுப் போல் அழகியலை சொந்த விருப்பு வெறுப்பாக நான் சுட்டவில்லை. அழகியலை, தோராயமாகவேனும், வகுத்துக் கொள்வதே என் எண்ணம். கவனிக்க. அழகியல் அனுபவத்தை வகுப்பதல்ல. படைப்பில் வெளிப்படும் அழகியல் விதிகளை வகுப்பது. (அழகியல் நெறிகள் என்பார் ஜெ).
கட்டுரையை வாசித்த வேறு சில நண்பர்களும் அசோகன் போலவே இந்த குழப்பத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதை தனிப்பேச்சில் தெரிந்துகொண்டேன். அசோகன் எழுதிவிட்டதால் என் விளக்கத்தையும் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்டுரையின் நோக்கம் அழகியலுக்கு ஆதரவாக வாதாடுவது அல்ல. போலவே, இலக்கியத்தை அறிவுஜீவி செயல்பாடாக மாற்றுவதும் அல்ல. “இந்த படைப்பு என்னை பாதிக்கவில்லை” என்பது இலக்கிய விமர்சனத்தில் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய கூற்று. “கதை நீளமாக இருக்கிறது” “கதை நம்பும்படியாக இல்லை” “கதாபாத்திரம் உயிரோட்டமாய் இல்லை”. இவை எல்லாம் நம் காதுகளில் தொடர்ந்து ஒலித்தாலும் நம் பரிசீலனைக்குள் வருவதே இல்லை. என் கட்டுரை இந்த கூற்றுகளை பரிசீலிக்கும் ஒரு முயற்சி மட்டுமே. அதாவது அடிப்படைகளை பேசி புரிந்துக் கொள்வதற்கான முயற்சி. கட்டுரையை படித்த பலரும் இந்த எளிய விஷயத்தை தவறவிட்டிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவை அடிப்படைகள் என்பதையே அழுத்தி சொல்ல வேண்டியிருப்பது துரதிருஷ்டமே. நல்ல வாசகராய் தெரியும் அசோகனே கட்டுரைக்கு வெளியே தான் பேசுகிறார். அழகியல் விமர்சனத்தை மறுப்பவர் என்பதால் அவர் சிக்கல் ஓரளவுக்கு எனக்கு புரிகிறது.
வெகுஜன இலக்கியம் பற்றியும் இணையத்தில் உருவாகிவரும் புதுவகை வெகுஜன எழுத்து பற்றியும் அசோகன், சுவாரஸ்யமான அவதானிப்பை கூறியுள்ளார். நான் அந்த கோணத்தில் யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் நிச்சயம் என் கட்டுரையை அந்த வடிவத்தில் எழுதியிருக்க மாட்டேன். இன்று வெகுஜன கதைகள் எப்படி தீவிர இலக்கியத்தின் பாவனையை சூடிக் கொள்கின்றன என்பதை விரிவாகவே பேச வேண்டும். வெகுஜன கதைகளின் வாசகர்கள் எப்படி தீவிர இலக்கிய வாசகர்களாய் பாவனை செய்கிறார்கள் என்பதை சேர்க்காமல் அதை பேச முடியாது
 
நம்பிக்கைகளின் வன்முறை பற்றி அசோகன் தன் கடிதத்தில் பேசியிருக்கிறார். நானும் அந்த வன்முறையை ஏற்றுக் கொள்பவன் அல்ல. அதே நேரம் ரொம்ப காலமாய் எதையுமே நம்பாமல் இருக்க நாம் பழகிவிட்டோம். அது இப்போது கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது. அவநம்பிக்கையே ஆயிரம் ஆயிரம் மீம்களாய் இன்று நம் உலகை நிரப்பிக் கொண்டிருக்கிறது. எனவே நம்பிக்கைக் கொள்வதொன்றும் பாவச் செயல் அல்ல. இலக்கியத்தை நம்புவது. ரசனையை நம்புவது. அழகியலை நம்புவது. அழகியலின் ஆன்மீகத்தை நம்புவது. மீட்சியை நம்புவது. இவை எல்லாம் அவசியமானவையே. நாட்டை ஆளும் நம்பிக்கைப் பேய்களை ஒன்றுமில்லாத வெறுமையில் இருந்து விரட்ட முடியாது. அடுத்தவரின் உணவையும் உடையையும் மறுக்கும் அவர்கள் நம்பிக்கையை வீழ்த்த, வேறு நம்பிக்கைகள் நம் வசம் வேண்டும்.
ஆழத்தில் விதிகள் இல்லை என்கிறார் அசோகன். ஆழங்களில் எல்லாமே விதியாகிறது எனும் ரில்கேவின் வரியை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அன்புடன்,
விஷால் ராஜா.
உணர்வுகள், உன்னதங்கள் கடிதங்கள்-2
 உணர்வுகள், உன்னதங்கள்
  உணர்வுகள், உன்னதங்கள்
அன்புள்ள ஜெ
உணர்வுகள் உன்னதங்கள் என்னும் கட்டுரை முக்கியமானது. இலக்கியவாசகனிடம் அந்த அனுபவமே இல்லாதவர்கள் அவன் இறுக்கமாக, மூளைக்குள் அரிவாளுடன் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவனுடைய உணர்ச்சிகளை கேலிசெய்து செண்டிமென்ட் என்கிறார்கள். இப்படி சொல்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். உணர்ச்சிநிலைகளை கேலி செய்பவர்கள் அல்லது ஆராய்பவர்களுக்கு எந்த இலக்கியப்படைப்பிலும் நுட்பம் என எதுவுமே பிடிகிடைப்பதில்லை. அவர்களுக்கே உரிய பிரைவேட் எக்ஸ்பீரியன்ஸ் என்பதும் இருப்பதில்லை. அவர்கள் மிகமிக பொதுவான அரசியல் கருத்துக்கள் அல்லது வடிவம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.இலக்கியவாசகனுக்கு எது செண்டிமென்ட் என்று தெரியும். லக்ஷ்மி நாவலுக்கும் டால்ஸ்டாய் நாவலுக்கும் வேறுபாடும் தெரியும். அந்த வேறுபாட்டை இக்கட்டுரையில் வகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நானறிந்து தமிழ்நாட்டில் மட்டும்தான் வாசிப்பு நுண்ணுணர்வு இரண்டுமே கம்மியானவர்கள் இரண்டுமே அதிகமானவர்களுக்கு இலக்கிய ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நுண்ணுணர்வு இல்லாததனால்தான் சொல்கிறார்களோ என்னவோ.
அர்விந்த்குமார்
அன்புள்ள ஜெ
உணர்வுகள் உன்னதங்கள் கட்டுரையில் அளிக்கப்பட்டிருக்கும் பெயிண்டிங்குகளை பார்த்தேன். உதயம், bliss ஆகியவற்றின் வேறுவேறு நிலைகள். அவற்றை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நடுவே உள்ள பரிணாமத்தை விளக்கும்பொருட்டு அளித்திருக்கிறீர்கள். பலர் கவனித்திருக்க மாட்டார்கள்.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
உணர்வுகள் உன்னதங்கள் வாசித்தேன். தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் உண்டு. எவ்வளவு குடித்தாலும் சோபர் ஆக இருப்பார்கள். சோபர் ஆக இருந்து மற்றவர்களை பார்க்கவே குடிப்பார்கள். இலக்கியத்திலும் அதுபோலத்தான். கருத்து மட்டுமே கண்ணுக்குப்படும். ஸ்கூலில் திரண்டபொருள் யாது என்று கட்டுரை எழுதிப்பழகிய கூட்டம். அழகும் உணர்ச்சியும் உன்னதமும் தெரியவே தெரியாது. நான் அவர்களை சிமிண்ட் பொம்மைகள் என்பதுண்டு. சுருக்கமாக சிமிண்ட். சிமிண்ட் அப்படித்தான் நெகிழவே நெகிழாது. உடைக்கத்தான் முடியும். ஒருமணிநேரத்தில் செட் ஆனால் வாழ்க்கை முழுக்க கல்தான். இவர்களும் அப்படித்தான். பதினைந்து பதினாறு வயதுக்குள் இறுகிவிடுகிறார்கள்.
எம்.அருண்குமார்
சடம் -ஒரு வினா
   
ஜெ,
சடம் கதை முதலில் நீங்கள் எழுதியதை பற்றி சொல்லிய பின் ஒரு கடிதமும் வராதது சிறு ஆச்சர்ய அதிர்ச்சி. உங்களின் தளத்தின் பின் இப்போது வரும் கடிதங்களில், ஆழமானவை என பட்டவை ஒரு தத்துவ பார்வையின் கோணத்தில் வந்தவை என பட்டது.
மிக மெல்லியதாக, நுட்பமாக வந்த ரஜ்ஜனியின் கடிதம் கடிதம் பார்த்தபோது சட்டென ஒரு ஆசுவாசம் போல. அக்கடிதம் சொன்னது போல, ஆசிரியனின் பார்வை வேறு. அது தெரியாது,. மேலும் கதைகளில் ஒரு கதாபாத்திரத்தின் அதன் உலகில் செல்லும் போது அனைத்தையும் தொட்டு விளக்கி செல்வது உத்தி அல்ல என சொல்லி கொள்கிறேன். ஆனால், வாழ்வு அப்படி அல்லவே. ஒரு நாளில் தானே ஒவ்வொருவரின் பல நூறு உலகின் ஆட்டங்கள்.
”அந்த மேகம்” கதை ஆகட்டும், “கை விஷம்” கதை ஆகட்டும் மறக்கப்பட்ட, சொல்லாமல் விடப்பட்ட, என சொல்ல தக்கவை அந்த கதைகளில் வரும் பெண்களின் அக உலகம். “அந்த மேகம்” கதையில் அந்த பெண் தன் தொழிலால் உடலின் எல்லைகளை கடந்து, அவனை எப்போதும் வேறு இடத்தில், மனதின் ஒரு உயரிய இட்த்தில் வைத்து இருக்கும் போது, அதனாலயே அடையாளம் காணும் போது, அவளின் பாத்திரம் பெரிதாக பத்திகளில் கூட தெரியவில்லை. அலையெல்லாம் அவனின் உலகம், கொந்தளிப்பு, தேடல், தவிப்பு, என விரிந்துபடி செல்பவை, ”கை விஷத்தில்” ஒருவள் தான் விரும்பும் ஒருவனை அவள் கைக்குள் அடைக்கிறாள். அவன் மெது மெதுவாக சாவான் என தெரிந்தும். அவளின் அக்காதல் அல்லது அந்த ப்ரியத்தின் உச்சம் பற்றியும், அதை கொண்டே அவளும் மரிப்பதின் கோணம் இல்லையோ என தோன்றும்படி கடிதங்களின் அலை பெரிதும் ஆணின் உலகை உலுக்கி எடுத்து காணித்தவை.
”சடத்தில்” அந்த பெண்ணின் உடலின் பகுதிகளை சுடலை பார்க்க தொடங்குகையிலேயே விழிக்க தொடங்கிய அவனின் மிருகத்தின் கண்களை மிக அருகாமையில் என்னுள் பார்க்க முடிந்தது. எத்தனை பெண்களின் உடல்களை அவன் தன் காக்கி உடையின் காப்பால் தின்றபடி வந்து அந்த சடலம் அருகில் சேர்கிறான். அந்த கடைசி வரி கூட புனைவின் சிறு ஒரு வகை நுட்பம் என எடுத்து கொள்கிறேன்.
அவனின் அந்த காம நெருப்பின் இறப்பை அந்த பிணத்தில் கூட அவனால் அடைய முடியாமல் போனது? எல்லார் ஆழத்தில் இருக்கும் மனிதம் எனும் ஒரு சிறு துளியை வெளியே எடுத்து காணிக்க முடியாமல் போனது என்ற வருத்தம் உண்டானது. மீண்டும் அவனின் புனர்வில் முடிகிறது. முடிந்த பின் அவன் என்னவாகி இருப்பான்?
அறிந்ததை, தெரிந்ததை வைத்து தான் மனித மனம் செயல்படுகிறது எனபது இந்த மாதிரி கதைகளை வாசிக்கும் போது ஒரு தடை என ஆகிறது.ஒவ்வொரு பார்வையும் கடிதங்களும் தன்னின் உள்ளிருக்கும் அறிதலை கொண்டே விரிந்தபடி செல்கிறது. ஆனால் எழுதியவன் எழுதும் முன்னும், பின்னும் உணர்ந்த ஒன்று இருக்கும் அல்லவா? எவர் கண்களிலும் படாமல் போன அந்த பார்வை?அது இக்கதையில் எதுவென்று கொள்வது?
அன்புகளுடன்
லிங்கராஜ்
சபரிமலை, கடிதம்
 ஜோசப் இடமறுகு
  விந்தைகளுக்கு அப்பால்
ஜோசப் இடமறுகு
  விந்தைகளுக்கு அப்பால்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். விந்தை உலகம் பற்றிய “விந்தைகளுக்கு அப்பால்” பதிவு படித்தேன். சபரிமலை பற்றிய மகர ஜோதி விஷயத்தை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
ஜோசப் இடமருகு என்ற நாத்திகவாதி சபரிமலை மகரவிளக்கு குறித்து எழுதப்பட்டிருந்தாலும் செயற்கை ஜோதி தரிசனம் கண்டவர்களில் ஒருவன் நான்.
1977. அப்போது சபரிமலைக்கு எனது ஊரிலிருந்து துணிகள் துவைத்து தரும் சுடலையாண்டி குருசாமி தலைமையில் 40க்கும் மேற்பட்டவர்கள் சபரிமலைக்கு எருமேலியிலிருந்து கால்நடையாக சென்றோம். நான் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் காலம். சபரிமலை செல்ல மாலை போட்ட பின்பு எல்லோரும் சமம் என்ற நிலையில்தான் தலித் சாமியை குருசாமி ஆக மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடந்தது.
மகரஜோதி தரிசனத்திற்காக மார்கழி மாதக் கடைசியில் எருமேலி சென்று மூன்று நான்கு நாட்களாக மலைப்பாதை வழியில் சன்னிதானம் அடைகிறோம். மகர ஜோதியை தரிசிக்க கண் பார்க்கும் தொலைவில் எல்லாம் அப்போதும் பெரும் கூட்டம். மகர ஜோதியை தரிசிக்க பக்திப் பரவசத்தோடு நானும் ஒரு காட்டு மரத்தின் சுவட்டில் கிழக்கு நோக்கி ஆர்வத்தோடு சரணகோஷத்தோடு நிற்கிறேன். தடைகள் இல்லாமல் ஜோதியை தரிசிக்க பலர் மரக் கிளைகளிலும் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
உரிய நேரத்தில் அந்த ஜோதி கண்ணில் பட்டது.மூன்று சுற்று முடிந்ததும் கிளம்ப தயாராகும் பக்தர்கள் முன்னால் மீண்டும் ஜோதி காண தொடங்கியது. மூன்றாவது முறையும் ஜோதி கண்ணில் படுகிறது. அதோ அதோ மீண்டும் மீண்டும் ஜோதி தெரிகிறது என்று சொன்னாலும் நம்புவதற்கு இதை பார்ப்பவர்கள்கூட தயாராக இல்லை. இடங்கள் மாறி மாறி மூன்று முறை மீண்டும் மீண்டும் ஜோதி தெரிந்தது. உடன் வந்தவர்கள் இதைச் சொல்வதற்கு தயங்குகிறார்கள். நான் ஜோதிகள் பல முறை பார்த்தேன் என்று சொல்லும்பொழுது ஏதோ விரதத்தில் தவறு இருக்கிறது என்ற குறை தான் சொன்னார்கள்.
அடுத்த நாள் திருவனந்தபுரத்தில் பேருந்து இறங்கிய உடனே மலையாள பத்திரிகைகள் வாங்கி சேமித்து கொண்டு படிக்கும்போதுதான் அங்கு பல முறை ஜோதி காண்பிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையில் தெரிந்தது. அந்த செய்திகளை கூட வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் நம்புவதற்கு தயாராக இல்லை.
பின்னர் மாத்ருபூமி வார இதழில் காவல் துறை தலைவர் பொறுப்பில் இருந்த கிருஷ்ணன் நாயர் ஐபிஎஸ் அவர்கள் எழுதிய சுயசரிதை (விலங்குகளில் வராதே, விலங்குகளில்லாதே)யில் சபரிமலை பணிக்காலத்தில் பழைய கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வேலை செய்யும்போது பொன்னம்பலமேட்டிற்கு திருக்கோயில் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக காவலர்களை அனுப்ப வேண்டும் என்ற அறிவிப்பு வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டு மகர ஜோதி என்று செயற்கையாக காண்பிப்பது என்பதை தெரிவித்தார். பலர் நம்ப தயாராகவில்லை. நாத்திக வாதியான தனுவச்சபுரம் சுகுமாரன் தலைமையில் பொன்னம்பல மேடு செல்லும்போது தாக்கி துவம்சம் செய்தவை எல்லாம் நினைவுக்கு வருகிறது.
இப்போது மகரஜோதி செயற்கையாக காண்பிப்பது என்பது கூட பெரிய செய்தியாக இல்லை. அது திருவிழாவாக மட்டும் கண்டு தரிசனம் நடத்தி செல்வது பெரிய வருவாய் தரும் நிகழ்வாக மாறிவிட்டது. இப்பொழுது நாத்திகவாதிகள் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. நீதிமன்றமும் அரசும் அதை அங்கீகரித்து விட்டது.
தங்களது பதிவை படித்து வாசகர்களுக்கு இது உண்மைதானா என்ற கேள்வி எழாமல் இருப்பதற்காக தான் அன்றைய அந்த நிகழ்வை நேரில் கண்ட நான் இந்த பதிவினை செய்கிறேன்.
அன்புடன்,
பொன்மனை வல்சகுமார்
February 7, 2022
மகிழ்ச்சியான முடிவு?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.
நான் ஜனார்த்தனன் கொழும்பு,இலங்கையில் இருந்து. நீண்ட காலமாக ஒரு கேள்வி என்னை உறுத்திக்கொண்டேயிருக்கிறது. ஒரு சிறுகதையின் முடிவு என்பது எவ்வாறாக வேண்டுமானாலும் முடிவடையலாம். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு தான் நாம் கதையில் பயணிக்கிறோம்.ஆனால் சிலருக்கு ஒரு சிறுகதையின் முடிவு மகிழ்ச்சிகரமாக முடிந்தால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . அது ஏன் என்று மட்டும் என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.
ஒரு முடிவு என்பது ஒரு இழப்பிலோ, இயலாமையை ஏற்றுக்கொண்ட விதத்தில், சொல்லிக்கொள்ளாமல் பயணிக்க ஆரம்பித்தது போல்,ஒருவரை இறுதியாக புரிந்துகொண்டது போல மற்றும் ஒரு கைவிடுதலில் இப்படி நீளும் எந்த விதமான வகையில் முடிவுற்றாலும், மகிழ்ச்சியை தவிர்த்து அதை அவர்கள் மனம் ஏற்கிறது. இதற்கென ஏதேனும் காரணம் இருக்கிறதா? என் புரிதலில் தவறோ, ஒரு வேளை இதுவரை நான் சேர்த்துக்கொண்ட வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தாண்டாமல் என் வட்டம் குறுகியதாகக் கூட இருக்கலாம்.ஆனால் நானும் எழுதும் போது கூட சில கதைகளுக்கு முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பதை முடிந்தவரை தவிர்த்து வருகிறேன். கதையின் போக்கில் அதுவாகவே தன் முடிவை நிச்சயித்துக் கொள்கிறது.இந்த பரீட்சார்த்த முயற்சியை சில காலமாகத் தான் கடைபிடித்து வருகிறேன். இதை கடைப்பிடிப்பது சரியா, இதற்கான விளக்கத்தை இந்தச் சிறியேனுக்கு தாங்கள் தயவு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டும்.
அன்புடன்
ஜனார்த்தனன்.
அன்புள்ள ஜனார்த்தனன்
நான் நீங்கள் சொல்வதை உணர்ந்ததில்லை. கதையின் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என வாசகர் எண்ணுவதில்லை. ஆனால் சிலவற்றைச் சொல்லலாம். கதை செயற்கையாக ஒரு தீர்வை, அல்லது நல்லமுடிவைச் சொன்னால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். எதிர்மறை முடிவு என நாம் சொல்லும் பல முடிவுகள் உண்மையில் வாழ்க்கையிலுள்ள ஒரு பிரச்சினையை அல்லது ஒரு கேள்வியை முன்வைத்து வாசகனே மேற்கொண்டு செல்ல இடமளிப்பவை. வாசகன் கதையில் தானும் செயல்பட விரும்புகிறான். அவனை கற்பனைசெய்யவைக்கும் கதைகள் அவனுக்குத்தேவை. அவனுடைய கற்பனைக்கு இடமே அளிக்காமல் தானே பேசி முடிக்கும் கதைகளை அவன் விரும்புவதில்லை.
மகிழ்ச்சியான முடிவு அல்லது விடை கொண்ட முடிவு என்பது கதையை சொல்லி முடித்து வாசகனுக்கு இடமளிக்காமல் போவதாகவே பெரும்பாலும் உள்ளது. அவ்வாறன்றி ஒரு மகிழ்ச்சியான முடிவிலிருந்து மேலும் கேள்விகள் எழுமென்றால் அவை வாசகனுக்கு உவப்பானவையாகவே இருக்கும்
ஜெ
பூவன்னா சந்திரசேகர், கடிதம்
   
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். பூவன்னா சந்திரசேகர் அவர்கள் உங்களுக்கு எழுதிய கடிதம் மற்றும் அவரது “அச்சாரம்” சிறுகதையையும் படித்தேன். அருமையான கதை. இதை போன்ற மண்ணின் மனத்தை பிரதிபலிக்கும் கதைகள் நம்முடைய அடையாளம் என்று நினைத்து கொள்வேன். நான் விமர்சனம் பண்ண கூடிய அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. எனவே கதை எனக்கு பிடித்திருக்கிறது என்பதை தவிர ஒன்றும் சொல்ல தெரியவில்லை. வாழ்த்துக்கள்
பூவன்னா சந்திரசேகர். மேலும் மேலும் எழுதுங்கள். உங்கள் பதிலும் மனதில் நிற்கிறது. “நீங்கள் எழுதவேண்டும் என உள்ளூர விரும்பினால் அதில் சமரசமே செய்துகொள்ளவேண்டாம்” இது எல்லாருக்கும் பொருந்தும் என்று ஒரு பொது பதிலாக எடுத்து கொள்கிறேன். நாம் எங்கு இருக்கிறோமோ அங்கிருந்தே நம் பயணத்தை தொடர வேண்டும் என்பது போல. நன்றி!
சத்ய நாராயணன்,
ஆஸ்டின்,
டெக்ஸஸ்
அன்புள்ள ஜெ
பூவன்னா சந்திரசேகரின் கதை வாசித்தேன். எளிமையான கதை. ஆனால் ஒருவர் அடிப்படையான ஆவலுடனும் தயக்கத்துடனும் இலக்கியத்திற்குள் நுழைவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. கதையிலிருக்கும் பாசாங்கில்லாத நேர்மை பிடித்திருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும். எப்போதும் தன்னுள் இருந்து எழும் தூண்டுதலுக்கே முதலிடம் அளிக்கவேண்டும். வாழ்த்துக்கள்
அப்துல் நாசர்
ஆழத்தில் விதிகள் இல்லை- அசோகன்
காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
காதுகள், அந்தியூர்மணி – கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்அவர்களுக்கு,
வணக்கம்.
போன கடிதம் வரைக்கும் “ஜெமோ” என்று போட்டுதான் விஷயத்தை ஆரம்பித்தேன். நேத்து பார்த்து, ஏளனம் செய்பவர்கள்தான் அப்படி கூப்பிடுகிறார்கள் என்று ஒரு போஸ்ட்டில் எழுதி உலக்கையால் இடித்துவிட்டீர்கள். சரி. எதற்கு வம்பு? அழைப்பை மாத்திவிடுகிறேன். அப்புறம் “நமோ” என்று செல்லப்பெயர் சூட்டி ப்யூரருக்கு கோஷம் போடும் ஒருகூட்டம் இருப்பது இதுவரை மண்டையில் உரைக்கவில்லை. பெயரில்கூட நமக்கு அந்த வாசமே வேண்டாம். இனி எப்பவும் ஜெயமோகன்தான்.
O
அந்தியூராரின் கட்டுரைக்கு நான் போட்ட பதிலை இவ்வளவு சீக்கிரம் சைட்டில் பப்ளிஷ் செய்வீர்கள் என்று எண்ணவில்லை. அந்த ஆச்சர்யத்தை டபுளாக்கும்படி சத்திவேல் என்பவரின் லெட்டரும் சைட்டில் வந்திருக்கிறது. “சக்திவேல்” எனும் பேரில் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து ஒருவர் நிறைய கடிதங்கள் எழுதுவார். படித்திருக்கிறேன். “த்” வைத்து சத்தி என்பது புதுசாக இருக்கிறது. நல்லது. யாரோ புதிய நண்பர். பொருட்படுத்தி எனக்கு பதில் எழுதியுள்ளார். நன்றி. எல்லா கருத்துக்களும் கருந்துளைக்குள் போய் தொலைந்துவிடும் காலத்தில் வாழ்வதாக நான் நினைத்திருந்தேன். ரியாலிட்டி அப்படி இல்லை போல. சத்திவேல் தெம்பாய் உரையாடலை முன்னெடுப்பது சந்தோஷமாய் உள்ளது.
பிரதிவாதியின் கருத்துக்கு வாதி பதில் சொல்வதற்கு முன்னால் ஒன்றை கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும். சத்திவேலர் என்னென்ன அம்சங்களை அந்தியூராரின் கட்டுரையில் முக்கியமானவை என்று கோடு போட்டுக் காட்டுகிறாரோ அதே அம்சங்கள்தான் அசோகனார் பாராட்டி எழுதியுள்ளார் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அரசியலில்தான் போலரைசேஷன் என்று பார்த்தால் இலக்கியத்திலும் அது நுழைந்துவிட்டது போல. அந்தியூராரின் வாசிப்பை நான் முழுக்க ரிஜெக்ட் செய்யவில்லை. மரபான பார்வை கூடாது என்பது என் கருத்தல்ல. சத்திவேலன் இரண்டு கடிதங்களையும் பலமுறை வாசித்ததாக சொல்லியிருக்கிறார். எனக்காக என் கடிதத்தை இன்னொரு தடவை வாசித்து விடுங்கள் நண்பரே!
இனி என் பக்கத்து நியாயங்கள். நவீனம், மரபு என்றொரு பைனரி சக்திவேல் உருவாக்குவதை கவனித்தீர்களா? அதுதான் மூலப் பிரச்சனை. அங்குதான் தடுப்புக் கட்டை போட வேண்டும் என்கிறேன் நான். அந்தியூராரின் கட்டுரையில் அதே பிரச்சனைதான் உள்ளடங்கி இருக்கிறது. சத்திவேலர் பூனையை சாக்கிலிருந்து வெளியே எடுத்துவிட்டார். இனி பேசுவது கொஞ்சம் ஈசி.
சத்திவேலரின் எழுத்தை மேம்போக்காய் பார்த்தால் அவர் பைனரியை மறுப்பது போல் தெரியும். ஆனால் மொழியில் அர்த்தம் மேலடுக்கில் மட்டும் பார்க்கக் கிடைப்பதில்லை. சொல்லும் செயலும் சுலபமாக வேறுபடுவதுப்போல் சொல்லும் பொருளும் கூட வேறுபடும். ஸ்கூலில் மட்டும் தான் இரண்டுமே ஒன்றுதான் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மொழி ஒரு மாபெரும் இல்யூஷன். சத்திவேலர் குறிப்பிடும் அயோத்திதாசரின் பார்வையில் சொன்னால் புறமெய், உள்மெய் என்று மொழியில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.சத்திவேலரின் பதிலாகட்டும்,அந்தியூராரின் பதிலாகட்டும் இரண்டு பேரிடமும் இருக்கும் உள்மெய்யைத்தான் நான் விமர்சிக்கிறேன்.
(நடுவே சக்திவேலர் அயோத்தி தாசர் விவாதத்தையும் கையாண்டுள்ளார்.நானும் ஸ்டாலின் ராஜாங்கத்தை படித்திருக்கிறேன். டி.தர்மராஜையும் படித்திருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றுக் கதையாடல் போன்ற சமாச்சாரங்களில் எனக்கு தெளிவு இல்லை. இவற்றையெல்லாம் செயல்பாட்டை வைத்தல்ல விளைவுகளை வைத்து புரிந்துகொள்ளவேண்டும் என்பது இப்போதைய என் தெளிவு. இந்த விஷயத்தில் அறிஞர்கள் பேசுவது சரி என்பது என் தாழ்மையான கருத்து. அயோத்திதாசர் வெகுஜனமயமானது மகிழ்ச்சிக்குரியது என்கிறார் பேராசிரியர் தர்மராஜ். எனக்கு என்னவென்றால், அப்படி எல்லோர் வாயிலும் விழ வேண்டுமா என்று ஒரு சம்சயம்)
அந்தியூராரின் விமர்சனக் கட்டுரை மறுபடி அலசலாம். சித்தர் மரபில் சாதகம் எப்படி நடக்கிறது என்பதை சில பத்திகளில் அவர் விளக்குகிறார். அந்த போர்ஷனை மட்டும் மறுபடி படித்து பாருங்கள்.அக்கம் பக்கத்தில் யாராவது சித்தர் இருந்தால் ஓடிப் போய் மந்திரம் படித்து வாழ்க்கைப்பாட்டை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஒரு நொடி மனம் பரபரக்கிறதா இல்லையா? பேசாமல் அந்தியூராரிடமே போய் சிஷ்யனாய் சேர்ந்துவிட்டால் என்ன என்றுக்கூட கபடமில்லாமல் நான் யோசித்தேன். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள். வெளியேயும் ஆயிரம் பிரச்சனைகள். ஞானம் கிடைத்தால் தேவலாம் என்றுதான் தோன்றுகிறது. அந்தியூரார் இப்படியே பேச்சை நீட்டுகிறார். சில விசேஷ நோய்களுக்கு மூலிகை இருக்கிறது. மந்திரங்களுக்கு தொல்காப்பியரே சர்டிபிகேட் கொடுத்துவிட்டார் என்று அவர் அடுக்கிக்கொண்டே போவதைத்தான் நான் வக்காலத்து வாங்குவது என்று சொல்கிறேன். கடைசியில் “யாம் நடத்திய நாடகம் இது” என்று சிவபெருமான் வேஷத்தை கலைப்பது போல், நான் தான் மகாலிங்கம் என்று வேறு அந்தியூரார் சொல்கிறார். இதுக்கு மேலுமா அக்கட்டுரை நம்பிக்கையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு வேறு எவிடென்ஸ் வேண்டும்?
நிஜமாகவே இப்படி ஒரு மரபு தமிழில் இருக்கும்போது அதை ஏன் அப்படியே “நம்பிக்கை வெளிப்படும் விதமாக” சொல்லக்கூடாது என்று ஒருவர் கேட்கலாம். முருகன் வந்து சொன்னால் எனக்கும் பிரச்சனை இல்லைதான்.அந்தியூரார் இலக்கிய விமர்சனத்தின் சொல்லும்போதுதான் இடிக்கிறது. அப்புறம் மொழி உங்களோடு பேசுவது லாஜிக்கால் மட்டும் அல்ல. எனவே அது ரீடரிடம் என்ன விளைவுகளை உண்டுபண்ணுகிறது என்பது இன்றைக்கு ரொம்ப முக்கியம். அந்தியூராரின் கட்டுரை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அது நம்பிக்கையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறதோ என நான் சந்தித்தேன். சக்திவேலர் என் சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கிவிட்டார். இதுவெல்லாம் வெறும் மரபுசார் தரவுகள்தான் என்று சக்திவேலர் கூறுவாராயின்,ஒன்று அவர் நம்பிக்கைவாதியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால்,மொழிக்கு நேரடிப்பொருள் மட்டுமே உண்டு என்று நம்பும் அப்பாவியாக இருக்க வேண்டும். அவர் அப்பாவி இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.நம்பிக்கைவாதி என்று நினைக்கிறேன். ரொம்ப லாஜிக்கலாக தன்தரப்பை முன்வைக்கிறார். லாஜிக்கலான நம்பிக்கைவாதிகள் கொஞ்சம் அபாயகரமானவர்கள்.
நவீனத் தரவுகளை மட்டும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள் மரபுத்தரவுகள் என்றால் மட்டும் கசக்கிறதா? மாடி வீட்டு மங்கை என்றால் மயக்கம் ஏழைவீட்டு பெண் என்றால் ஏளனமா? இப்படி சத்திவேலர் எமோஷனல் பிளாக்மெயில் வேறு செய்கிறார். அந்தியூரார் சொல்வதும் இதைத்தான். ஆனால் அவர் மரபார்ந்த நம்பிக்கைவாதி என்பதால் இந்த ஜாலங்கள் அவருக்கு கைவரவில்லை. சக்திவேலர் சமகாலத்து நம்பிக்கைவாதி போல. சரியாக மடக்கப் பார்க்கிறார். ஆனால் ஒரு விஷயம் முக்கியம். செண்ட் பாட்டில்கள் போல் இறக்குமதியாகும் வெளிநாட்டு கோட்பாட்டு சமாச்சாரங்களை நானே என் பதிலில் சாடலாகத்தான் பேசியிருக்கிறேன். அதை வைத்து நான் பொதுப்போக்கான நவீனத்தை கண்ணைமூடி ஏற்றுக்கொள்பவன் அல்ல என்பதை சக்திவேலர் யோசித்திருக்கலாம். ஆனால் அவரால் அப்படி யோசிக்க முடியாது. நீ தப்பு என்று சொன்னால்தான், நான் சரி என்று அவரால் நிரூபிக்க முடியும். பைனரி என்று இதைத்தான் சொல்கிறேன். நான் இரண்டு தரப்பும் கோணலானது என்கிறேன். அதுதான் சக்திவேலரை குழப்பம் அடைய வைக்கிறது.
என் கடிதத்தில் இருக்கும் “மார்டன்” என்கிற வார்த்தையை, சட்டை பேண்ட்டை உயர்த்தி பேசி வேட்டி சட்டையை மட்டம் தட்டுவது என்கிற ரீதியில் சுருக்கி புரிந்துகொள்ள வேண்டாம். சமகாலத்தின் இன்றைய நிலையைத்தான் நான் மார்டன் என்கிறேன். நீங்களும் நானும் சொந்த நம்பிக்கையை விலக்கிவைத்துவிட்டு காமன் ஸ்பேசில் பேசி உரையாட முடியும். மார்டன் மொழியில்தான் அது சாத்தியம். நவீனத் தரவுகளுக்கு இயல்பாகவே அந்த அம்சம் இருக்கிறது. மரபுத் தரவுகளுக்கு அதை வெளியிலிருந்து கொடுக்க வேண்டும். மரபுக்கு ஜாமீன் கையெழுத்து போடாமல் பேச வேண்டும். நவீனத் தரவுகள் அப்படி எந்த உத்தரவாதத்தையும் கேட்பதில்லை. அதுதான் இரண்டு வகை மொழிக்கும் உள்ள வித்தியாசம். மத்தபடி மரபை பழிப்பதல்ல நான் சொல்லும் மார்டன். இன்றைய நிலையில் மரபான வழிகளை சும்மா கிண்டல் செய்யும் பகுத்தறிவு செல்லுபடியாகாது. தை பிறந்தால் ஐ.டி கம்பனிகளிலேயே பொங்கல் வைக்கிறார்கள். எனவே நான் சொல்லும் மார்டன் என்பது மரபு எதிர்ப்பு அல்ல. அதுப் போன்றே சத்திவேலர் சொல்லும் நவீனத் தரப்பும் இப்பொழுது ஜோராக இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அரசியலில் அவர்கள் சத்தம் கேட்கிறதுதான். அதுக்கு காரணம், எதிர்த் தரப்பில் மரபின் ஒவ்வொரு கோணலையும் படியாக்கி அரியணை ஏறி அமர்ந்திருக்கும் “நமோ” பூதம். சரி. ரொம்ப அரசியல் பேச வேண்டாம். மீண்டும் இலக்கியத்துக்கு வருகிறேன்.
இலக்கியத்தில் இன்று பவரில் இருப்பதே ஜெயமோகன் வட்டம்தான். மரபின் அவசியத்தை ஏற்கனவே எழுதி நிறுவிய ஒருவர்தான் இன்று முக்கியமான பவர் சென்ட்டர். இதை நான் நெகட்டிவாக சொல்லவில்லை. மனம் உவந்து பெருமையோடே சொல்கிறேன். சூழ்நிலை இப்படி இருக்கும்போது சத்திவேலர் எதற்கு வஞ்சிக்கப்பட்ட ஒரு தொனியை தேர்ந்தெடுக்கிறார்? அவர் சொல்லும் அந்த மற்றவர் யார்? எம்.வி.வியின் காதுகள் நாவலை நல்ல படைப்பாக கருதாத சுந்தர ராமசாமிதான் அசலான நவீனத் தரப்பு. அந்த பாணி விமர்சனம் இன்று எழுதப்படுகிறதா என்ன? அரசியல் கட்டுடைப்பு செய்யும் விமர்சனங்கள்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இது இந்துத்துவ பிரதி. இது கிறிஸ்துவ பிரதி. இப்படி நிறைய லேபிள்கள் இருக்கின்றன. ரேஷன் பையில் ஸ்டிக்கர் ஒட்டுவதுப் போல் படைப்பின் மேல் எதையாவது ஒட்டிவிடுகிறார்கள். அதுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.நான் கேட்பது சுந்தர ராமசாமிப் போல் ஒரு பெரிய பெர்சனாலிட்டி இலக்கியம் மேல் நம்பிக்கைக்கொண்டு முன்வைக்கும் நவீனத் தரப்பு இன்று இருக்கிறதா? ரேஷனாலிட்டியை முன்வைக்கும் ஆளுமைகள் யார்? எனக்கு தெரிந்து இல்லை. இல்லாத எதிரியின் முன்னால் தொடையை தட்டி சபதம் எடுத்து என்ன லாபம் என்றுதான் நான் கேட்கிறேன்.
“மரபு பிரச்சாரகர் அல்ல மணி” எனும் தலைப்பே கொஞ்சம் பகீரிட வைக்கிறது. “மரபு பிராச்சாரகர் மணி” என்று நான் என் லெட்டருக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. ஆனால் நான் அப்படி சொன்னதான அர்த்தத்தை இந்த தலைப்பு கொடுத்துவிடுகிறது. இதுதான் நம்பிக்கைவாதிகளின் வன்முறை. போலீஸ்காரர்கள் இப்படித்தான் விசாரனையை ஆரம்பிப்பார்கள். வாக்குமூலம் எழுதிவிட்டுதான் கேள்வியே கேட்பது. நம்பிக்கைவாதிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் பற்றி இன்னொரு நாள் தனியே பேச வேண்டும். அந்தியூரார் மரபை பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்டுரையை எழுதினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அக்கட்டுரை மரபின் பிரச்சாரமாக வளர்கிறது. இதுதான் நான் சொன்னது. இரண்டுக்கும் நடுவே பெரிய வேறுபாடு இருக்கிறது.
கடைசியாக அந்தியூராரின் கட்டுரையில் உள்ளடக்க பாணி விமர்சனம் இல்லை என்று சக்திவேலர் சொன்னது இடி முழங்கும் சினிமா சோகக்காட்சி ரக அதிர்ச்சி. உள்ளடக்க விமர்சனத்தை அறிய உள்மெய்யெல்லாம் தேவையில்லை. புறமெய்யே போதும். நாவலின் மொழி பற்றியோ ஸ்ட்ரக்சர் பற்றியோ கட்டுரையில் ஒரு வார்த்தை கிடையாது.மகாலிங்கம் தவிர வேறு கேரக்டர்கள் பற்றி மூச்சே இல்லை. மகாலிங்கத்துக்கும் உலகத்துக்குமான உறவு நாவலில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது மொழியில் எப்படி உருமாறியிருக்கிறது என்பது பற்றி அந்தியூரார் பேசவே இல்லை. இலக்கியத்தில் எம்.வி.வியின் இடம் என்ன என்றோ அல்லது எம்.வி.வியின் படைப்புகளிலேயே காதுகளின் இடம் என்ன என்றோ குரல் இல்லை. ஆசிரியரின் வரலாறும் கிடையாது. நாவலின் வரலாறும் கிடையாது. அட, நாவல் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட அந்தியூராரின் கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. “முக்கியமான நாவல்” என்று சொல்வதை என்னால் புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. யாருக்கு முக்கியம்? ரீடருக்கா?விமர்சகருக்கா? எழுத்தாளருக்கா? பப்ளிஷருக்கா? ஒரே குழப்பமாகிவிடுகிறது. அந்தியூராரிடம் நாவல் என்ன உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதை பேதமில்லாமல் ராவாக சொல்லவில்லையே. மகாலிங்கத்தின் கதையை சொல்லிவிட்டு கதைக்கு மேல் அந்தியூரார் தன் நிலைப்பாட்டை பேசிக் கொண்டேயிருக்கிறார். நாவல் என்பது வெறும் கதை அல்ல என்பது இலக்கியத்தின் பாலபாடம். மகாலிங்கத்தை கரைத் தேற்றுவதில்தான் அந்தியூராரின் முழு கவனமும் இருக்கிறது. நாவலை அம்போவென்று விட்டுவிட்டார். மகாலிங்கமும்அவரும் வேறு வேறு இல்லை என்றானபின் என்னதான் செய்ய முடியும்? தன்னை காப்பாற்றத்தான் முயற்சி செய்ய முடியும்.
O
நம்பிக்கைவாதிகள் பற்றி பேச ஆரம்பித்தக் கையோடு “அழகியல் பிரச்சாரம்” பற்றியும் கொஞ்சம் பேசிவிடுகிறேன். போன கடிதத்திலேயே அதை தனியாக பேசுவதாக சொல்லியிருந்தேன். சூட்டோடு சூட்டாக பேசிவிட்டால்தான் ஆச்சு. இல்லையென்றால் சோம்பேறித்தனம் வந்துவிடும். அழகியல் பிரச்சாரம் என்று எழுதியபோது என் மனதில் இருந்தது எழுத்தாளர் விஷால் ராஜாவின் கட்டுரைகள். யாரோ ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் பற்றி ரொம்ப மாதங்கள் முன்னால் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். அப்புறம் இப்போது செந்தில் ஜெகன்னாதனின் கதைகள் பற்றி ஒரு கட்டுரை. இரண்டுமே நல்ல கட்டுரைகள். சூழலில் இப்படி ஒரு குரல் இருப்பது நம்பிக்கை அளிக்க வல்லது. ஆனால் இரண்டு கட்டுரைகளிலும் ஒரே பிரச்சார வாடை. கட்டுரையில் தீவிரம் இருப்பதை தப்பு சொல்ல மாட்டேன். ஆனால் மதம் மாற்ற முயற்சிக்கும் தீவிரம் ஆகாது. அது ஒரு கோளாறு. முரண்பட்டு பேசினால் சாத்தானே அப்பாலே போ என்று சொல்லிவிடுவாரோ என்று கலக்கம் வருகிறது. சத்திவேலரின் கடிதத்தில் இருப்பதுப் போலவே சமநிலையில் இருப்பதான பாவனை, புறமெய் அவர் கட்டுரைகளிலும் இருக்கிறது. ஆனால் உள்மெய்யில் தூய்மைவாதி ஒளிந்திருக்கிறார். இளம் எழுத்தாளர் என்பதால் அதை கொஞ்சம் மன்னிக்கலாம்தான். ஆனால் இளம் எழுத்தாளர் என்பதாலேயே அவரை எச்சரிக்க வேண்டியிருக்கிறது. தம்பி, கொஞ்சம் நிதானமாய் இருங்கள்!
அழகியல் பிரச்சாரத்தில் பெரிய சிக்கல் என்னவென்றால் எல்லாவற்றுக்கும் முன்னாலே அழகியல் வந்துவிட்டது என்பதான பிரம்மை எழுத்தாளர்களிடம் வந்துவிடுகிறது என்பதுதான். கடவுள் எல்லாவற்றுக்கும் முன்னால் இருந்தார் என்கிற மத நம்பிக்கையின் இன்னொரு வடிவம் இது. புனைவெழுத்தாளர்களால் வேறு மாதிரி யோசிக்க முடியாது என நினைக்கிறேன். மாத்தி பேசுவது அவர்களுடைய ஆதார நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் நிகழ்வு. அதை அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் நினைப்பது அப்படியே அச்சு பிசகாமல் எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லையே. இலக்கியம் முன்னால் வந்து அழகியல் பின்னால் வந்தது என்று சொன்னால் அவர்கள் பதறிவிடுவார்கள். ஆனால் அதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. இப்படி எண்ணிப் பாருங்கள். இலக்கியம் எதற்காக முதலில் கண்டுபிடிக்கப்பட்டது? விஷால் ராஜா அழகியல் வெளிப்பாட்டிற்காக என்று சொல்வார்.ஆனால் அது உண்மையின் ஒரு பக்கம் தானேத் தவிர எல்லாத் தரப்புகளும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான உண்மை கிடையாது. அது விஷால் ராஜாவின் உண்மை மட்டுமே. உபரிதான் இலக்கியம் என்று ஒரு மார்க்சியர் சொல்வது உண்மையின் இன்னொரு பக்கம். உபரி செல்வமும் உபரி நேரமும்தான் கலை என்று சொன்னதும் அழகியல் தரப்பினர் அய்யய்யோ என்று அலற ஆரம்பித்துவிடுவார்கள்.
இலக்கியம் கண்டுபிடிக்கப்பட்டதே தகவல்களை சேமித்து வைக்கத் தான் என்று இன்னொரு தரப்பினர் சொல்லக்கூடும். அப்போது என்ன செய்வார்கள் அழகியல்வாதிகள்? டாகுமெண்ட்டிங்தான் இலக்கியத்தின் வேலை என்று சொன்னால் அதுவொன்னும் மாபாதக செயல் இல்லை. பாட்டாக எழுதினால் ஞாபகத்தில் நிற்கும் என்பதற்காகத்தான் செய்யுள் வந்தது. மத்தபடி கவிதையும் அழகும் ரெண்டாம்பட்சம்தான் என்று சொல்வதில் என்ன தவறு? கவிதை, அழகு இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அப்ஜெக்டிவ் வரையறை கிடையாது. ஒரு காலத்தில் அன்றாட மொழியாக இருப்பது காலம் மாறும்போது “கவித்துவம்”ஆகிவிடுகிறது. இன்னைக்கு ஒருவர் செந்தமிழில் பேசினால் அது கவித்துவம் போல் ஒலிக்கவில்லை? விஷயம் சாதாரணமானதுதான். மொழி பழசாகும்போது அதில் அழகு வந்துவிடுகிறது. ஏக்கமும் தெரியாமையும் அழகுதான். “கரம் சிரம் புறம் நீட்டாதீர்” என்று பஸ்ஸில் எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னும் நூறு வருஷம் கழிச்சு தமிழின் தினசரி பேச்சு வழக்கு சுத்தமாக உருமாறி இருக்கும்போது இந்த வரி கவித்துவமானதாக அழகியல் கொண்டதாக கருதப்படலாம்தான். யார் கண்டது? உண்மை இப்படி இருக்கும்போது நான் அழகியலை மட்டுமே ஸ்கேலாக வைத்திருப்பேன் அதன் விதிகளை மட்டும் முன்வைப்பேன் என்பதெல்லாம் ஒருவகை பிடிவாதம். விஷால் ராஜா இந்த பிடிவாதத்தை கைவிட வேண்டும்.
நானும் செந்தில் ஜெகன்னாதனின் கதைகளை படித்தேன். என்னை அவை ஈர்க்கவில்லை. உலக இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் மாஸ்டர்களை தினமும் படித்துக் கொண்டிருக்கும் எனக்கு அக்கதைகள் எதையும் கொடுக்கவில்லை. என்னை ஈர்க்கவில்லை என்பதால் உடனே நல்ல கதையின் அடிப்படை கூறுகள் என்ன என்று நான் ஆராய ஆரம்பித்துவிட மாட்டேன். நான் என்ன செய்வேன் என்றால், செந்தில் ஜெகன்னாதன் இன்ன மாதிரி கதைகள் எழுதுவதற்கு என்ன காரணம் என்று யோசிப்பேன். அவற்றின் தேவை என்ன என்று கேள்வி கேட்பேன். அக்கதைகள் சூழலில் கொண்டாடப்பட்டால், சூழலுக்கு நல்ல இலக்கியத்தை போதிக்க புறப்பட்டுவிடமாட்டேன். அதுதான் மத மாற்ற மனோபாவம். மாறாக நான் என்ன செய்வேன்? சூழல் எதை அளவுகோலாக கொண்டிருக்கிறது?அது எப்படி காலந்தோறும் மாறி வருகிறது? இது பற்றியெல்லாம் சிந்திப்பேன்.
வெகுஜனக் கதைகள் என்று ஒரு வகைமை தமிழில் இருக்கிறது. விகடனில் வரக்கூடிய கதைகள் எல்லாம் அந்த பாணியில் ஆனவை. குமுதம் ஒரு பக்க கதைகள் மாதிரி அவை சுத்தமாக கிராப்டே இல்லாமல் இருக்காது. அதற்கென்று ஒரு கிராப்ட்மேன்ஷிப் உண்டு. நம்பகத்தன்மை மிக்க வாழ்க்கைச் சூழல் அக்கதைகளில் இருக்கும். சீரியஸ் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட கிராப்ட்தான் அது. ஆனால் கதைகளில் புதுசாக ஒன்றும் இருக்காது. அல்லது கொஞ்சூண்டு புதுமை இருக்கும். எதிர்வீட்டு அக்கா,ஓடிப் போன சித்தப்பா, கிட்டார் வாசிக்கும் மாமா, விவசாயி அப்பா இப்படி டெம்ப்ளேட் மனிதர்களை வைத்து கதை எழுதுவார்கள். அதில் சில நேரங்களில் நல்ல கதைகளும் வந்துவிடும். பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் போன்றோர் அந்த வரிசையில் குறிப்பிட வேண்டிய நல்ல எழுத்தாளர்கள். சு.வேணுகோபால்கூட ஏறத்தாழ அந்த ரக எழுத்தாளர்தான். இவர்களுடைய கதைகளில் சொந்த அனுபவத்தின் தீவிரம் கூடும்போது கதைகளும் வேறு மாதிரி வடிவெடுத்துவிடும். மத்தபடி அழகியல், தத்துவம் என்று பேசும் சீரியஸ் எழுத்தோடு இந்த வரிசைக்கு ஸ்நானப்ராப்திகூட கிடையாது.
இன்றைய தலைமுறையில் அந்த பாணி எழுத்தாளர்கள் வளரவில்லை. ஏனென்றால் விகடன் வாசகர்களே அருகிவிட்டார்கள். எல்லோரும் இணையத்தில் வாசிக்க வந்துவிட்டார்கள். இண்டர்நெட்டில் இருக்கும் வாசகக்கூட்டமானது தனக்கு தெரிந்த விஷயங்களைத்தான் கதைகளில் எதிர்பார்க்கும். உணர்ச்சிவசமான கதைகளைத்தான் அவர்கள் விரும்புவார்கள். யதார்த்தமான வாழ்க்கையையே கதையில் தேடுவார்கள். செந்தில் ஜென்னாதனின் வாசகர்கள் அவர்கள் தான். அப்படி செந்தில் ஜெகன்னாதனை ஒரு வெகுஜன எழுத்தாளர் என்று அடையாளம் காட்டலாம். சீரியஸ் இலக்கியம் ஏஸி கோச்சில், வெகுஜனம் அன்ரிசர்வ்டில் என்று தரம் பிரிப்பது என் வேலை அல்ல. ஆனால் இப்படியான கோணத்திலும் பார்ப்பது உசிதமே. ஐரனி எனப்படும் முரண் தான் மக்களுக்கு உடனே பிடிக்கக்கூடியது. அழகியல் பிடிவாதம் கண்ணை மறைக்கும்போதுதான் வெகுஜன கதையில் ஐரனி தேவையா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.இருப்பதிலேயே பெரிய ஐரனி அதுதான்.
என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விஷயம். செந்தில் ஜெகன்னாதனின் கதைகளில் கிராப்ட் அப்படி இப்படித்தான் இருக்கிறது. இரண்டுங்கெட்டான் தன்மை என்று அதை சொல்ல்லாம். ஆனால் இன்று கதைகளில் கிராப்ட் தேவையில்லை என்ற முடிவை வாசகப் பரப்பு எடுத்திருக்கிறது. ஏனென்றால் வெகுஜன இதழ் வாசகர்களுக்கு பெரிய பாவனைகள் கிடையாது. பொழுதுபோக்கு வாசிப்பு என்ற தெளிவு அரைகுறையாகவேனும் உண்டு. ஆனால் இன்று இண்டர்நெட் பத்திரிக்கைகளில் கதையை படிக்கும்போது தீவிரம் மற்று செண்ட்டிமெண்ட் என்கிற கலவையான மார்க்கம் திறக்கிறது. கதைகளிலும் இரண்டும் மிங்கிளாகி இருப்பதை அது விரும்புகிறது. இரண்டிலும் தேர்ச்சியில்லாத நடுவாந்திர பாதையை அது தனக்குரியதாய் வகுக்கிறது. இது ஒருசுவாரஸ்யமான தேர்வு. சௌகர்யமான தேர்வும்கூட. இதையெல்லாம்தான் விமர்சகர்கள் பேச வேண்டும். இதைவிட்டுவிட்டு அழகியல் விதிகள் பற்றி வகுப்பெடுப்பதால் யாருக்கு என்ன பயன்? தன் நம்பிக்கைகளை உலகின் மேல் திணிக்கும் போக்குதான் நடக்கும். விஷால் ராஜாவிடம் நான் சொல்ல விரும்புவது “ஆழத்தில் விதிகள் இல்லை”
O
ஓரளவுக்கு விரிவாகவே என் நியாயங்களை சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இதையெல்லாம் எழுத தூண்டுதல் அளித்த சத்திவேலருக்கு நன்றி. இனி இப்படி நிறைய எழுத வேண்டும். சோம்பேறித்தனம் விலக வேண்டும். அப்புறம் வாழ்க்கைச் சூழல் ஒத்துழைக்க வேண்டும்.
பிரியத்துடன்,
அசோகன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
  
