Jeyamohan's Blog, page 832
February 7, 2022
சடம் கடிதம்-6
   
அன்பு ஜெ,
சுடலை அவன் வன்புணர்வு அனுபவத்தைப் பற்றிக் கூறுவதும், இறுதியாக அவன் புணரும் சித்திரமும் எனக்கு திகைப்பையே ஏற்படுத்தியது.
வன்புணர்ச்சி சம்பவங்களை இளவயதில் கேள்விப்படுகையில் நடுக்கமாக இருக்கும். எனக்கே உடல் கூசி அன்றைய நாள் முழுவதும் செயலற்று கூட உட்கார்ந்திருக்கிறேன். நிர்பயா வழக்கு பலவாறாக விவரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்று வாசிக்க வாசிக்கவே என்னுள் வலி பரவியது. அன்று முழுவதுமாக செயலற்று இருந்தேன். அப்படிச் செய்பவர்களின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்ததில்லை. அது எத்தகைய மன நிலை என்று வியந்திருக்கிறேன். வெறுமே அவன் வாழ்ந்த சூழ் நிலை என்று சொல்லி விட முடியுமா?
நீண்ட வருடங்கள் கழித்து இன்று அத்தகையவர்களின் மனதை சுடலையின் வழி கண்டேன். “…து ஒரு அனுபவம்டே… அவ அலறிகிட்டே இருந்தா. அறுக்கப்போற கோளி சிறகடிச்சு கத்துறது மாதிரி… அப்ப ஒரு நாலஞ்சு நாளு அதை நினைக்கிறப்ப ஒருமாதிரி இருந்தது. பிறவு பழகிப்போச்சு. பிறவு அது ஒரு சொகமா ஆச்சுடே… குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம். சும்மா செத்த சவம் மாதிரி கிடக்குத பொட்டைகளை வச்சு என்ன செய்ய?” இப்படிச் செய்யக்கூடிய அனைவரின் மனதின் ஆழத்தையும் சென்று கண்டேன். வெறுமே வன்புணர்ச்சியாளர்கள் மட்டுமல்ல, கொலை செய்பவர்கள், துன்புறுத்துபவர்கள், அறப்பிழை செய்பவர்கள் என யாவரின் ஆழத்தின் மூலத்தையும் அது சென்றடைந்தது.
வெண்முரசின் இந்த வரிகளை நினைத்துக் கொண்டேன்.“தீயவை செய்வதற்கு முன் கடக்கவேண்டிய ஒரு கணம் உண்டு என்று ஒருமுறை என் ஆசிரியர் சொன்னார். நூற்றியெட்டு தெய்வங்களால் காக்கப்படும் பெரும் அகழி அது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டு எழுந்து வந்து நம்மை விலக்கும். மூதாதையென, குல தெய்வங்களென, அறநெறிகளென, அயலென, உறவென, குலமென, குடியென, கல்வியென,அகச்சான்று என உருக்கொண்டு சினந்தும் அழுதும் நயந்தும் பேருரு காட்டியும் பேதையென நின்றும் சொல்லெடுக்கும்.ஒரு கணத்தில் அவற்றை தாண்டிச் சென்றுதான் தீயவை எவற்றையும் நாம் ஆற்றுகிறோம்.” இதைப் படித்த அன்று உளம்பொங்கி அழுதேன். அப்படியான எத்துனை தருணத்தை இந்த வாழ்க்கைப் பயணம் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகிறது. இந்த வரிகளில் சொல்லப்பட்ட அத்தனையையும் கடந்து போய் நான் செய்த தவறுகளை நினைத்துக் கொண்டேன்.
”நாலஞ்சு நாள் ஒரு மாதிரி இருந்தது” என்று சுடலை சொல்வது இவைகளாகத்தானே இருக்க முடியும் என்று தோன்றியது. ஒரு முறை இந்த அறமீறலைச் செய்து மீண்டும் மீண்டும் அதில் திழைக்கும் போது அந்த நாலஞ்சு நாள் என்பது நான்கு நொடிகளாகவும் பின் அதை பழக்கமாகவும் செய்ய ஆரம்பிக்கிறோம். அதன் பின் திரும்புதலில்லாத பாதை. அதனால் தான் காவல்துறையில் குற்றம் நடக்கும்போது வழக்கமான குற்றவாளிகளை (Habitual offenders) முதலில் சந்தேகப்படுகின்றனர் என்று நினைத்தேன்.
“குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம்.” என்று அவன் ரசித்துச் சொல்லும்போது அந்த விலங்கு மன நிலையின் திரும்புதலில்லாத பயணத்தைச் சென்று அடைந்துவிட்டான் என்று கண்டேன். இந்த விலங்கு மனநிலையை ஒருவன் வந்தடைய எத்துனை கீழ்மையின் பாதையைக் கடந்து வந்திருக்க வேண்டும் என்று வியக்கிறேன். உடனே இதைக் கீழ்மை என்று நினைக்கும் என் ஆணவத்தை நினைத்தும் நொந்தேன். வெண்முரசு காண்டீபத்தின் வரிகள் நினைவுக்கு வந்தது
”விளைவுகள் எவ்வகையிலும் ஆகுக! நிகழ்வுகள் எவையாயினும் அவை அறிதலை உள்ளடக்கியவையே. நன்றெனினும் தீதெனினும் அந்நிகழ்வு அளிக்கும் அறிதல் தூயதே. சந்தனத்திலும் மலத்திலும் எரியும் தழல் என்பது அவிகொள்ளும் தேவனே அல்லவா?”
என்ற வரிகள். இவைகளையெல்லாம் மலம் என்று வரையறை செய்து கொள்வேனாயின் அதில் உரைவதும் தெய்வம் தானே. அந்த திரும்புதலில்லாத பயணத்தின் முடிவில், சூன்யத்தில் அவன் கண்டடைவதும் தெய்வமாகத்தானே இருக்கும். யாவரும் செல்வது மூலத்தை நோக்கியே என்று கண்டேன்.
ஏனோ எனக்கு இயேசு நாற்பது நாள் தவமிருந்தபோது அலகையால் சோதிக்கப்பட்ட இடம் நினைவிற்கு வந்தது. இயேசு அந்த ஒரு கணத்தை கடந்த இடத்தை வெண்முரசின் வரிகள் கொண்டு விரித்துக் கொண்டிருந்தேன். அலகையைப் பற்றி எனது பிரியத்திற்குரிய சிஸ்டர் மார்செலின் சொல்லும்போது ”அலகையும் கடவுளின் அணுக்கமான குழந்தையாக இருந்தது தான். அது வேறுபாதையை தேர்வு செய்து கொண்டது” என்பார். இன்று நினைத்துப் பார்த்தால் சாத்தான் கடவுளிடமிருந்து விலக எடுத்துக் கொண்டதும் அந்த ஒரு கணமாகவும் தான் இருக்கும் என்று நினைத்தேன். இரண்டும் சென்று சேரும் இடம் ஒன்றாகத்தானே இருக்க முடியும். பிரம்மமே தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டு ஆட்டக்களத்தில் ஆடினால் திரும்ப அவை சென்று இணையும் புள்ளியும் பிரம்மமாகத்தானே இருக்க முடியும் என்று நினைத்தேன்.
நன்மை/அறம் என்ற பாதையின் வழி சென்றடையும் பாதை ஒன்று இருப்பதுபோல… இத்தகைய கீழ்மையும்(கருதினால்) சென்றடையும் பாதை ஒன்று இருக்கும் என்று கண்டேன்.
நீண்ட தொலைவு சென்று விட்டேன் என்று நினைத்து சிறுகதையின் சித்தரின் வரிகளுக்குள் புகுந்தேன் ”சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்… ரெண்டும் சேந்தா சிஜ்ஜடம்னு ஒரே சொல்லு. சித்னா நம்ம சித்தம். அதாவது நமக்கு உள்ள இருக்கப்பட்டது. ஜடம்னா வெளியே இருக்கப்பட்ட இந்த அன்னமய லோகம்… அதுக்க சமன்வயமாக்கும் இந்த உலகம்”
“அவருக்குள் அவரே திகைப்புடன் விலகி நின்று அவர் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தார்.” என்ற சுடலையைப் பற்றிய வரிகள்.. அவரே விலகி நிற்பது ”சித்” விலகி நிற்பது தானே. அப்படியானால் தொடர்ந்து இவ்வாறு வன்புணர்ச்சி செய்யும் சுடலையின் செயல் ஜடமாக மாறும்போது அதை சமன்வயப்படுத்த அவளின் சித்தம் விழித்துக் கொள்கிறது. “உலகம் சமன்வயம் கொள்கிறது.”
ஆ. ஞானசம்பந்தன், செல்வக்குமரன் பழனிவேல் ஆகிய இருவர் சொன்ன சைவ சித்தாந்தத்தின் வழியான புரிதலுடன் மேலும் கதையை நிறைவு செய்து கொண்டேன்.
அருமையான கதை ஜெ. நன்றி.
பிரேமையுடன்
இரம்யா.
சடம் கடிதங்கள் -6வள்ளுவர் ஒரு கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்!
இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸாப் ஸ்டேடஸில் நண்பர் காளி பிரசாத் திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரை நினைவுகூரும் வகையில்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’
குறளைப் பதிவிட்டிருந்தார். திருவள்ளுவரை சாதி, இன அடையாளங்களுக்குள் அடைக்கப்பார்க்கும் தற்போதைய பொதுவான சமூக நிலையை எள்ளுவதாக இருந்தது. வள்ளுவரின் கோபம் சிரிக்கத் தூண்டியது. பிறகு குறிப்பிட்ட குறளுக்கும் அதன் வழியான குறிப்புணர்த்தலுக்கும் உள்ள உறவு என்ன என்று சற்றே குழம்பி மெல்ல அக்குறளைப்பற்றிய உரைகளைத் தேடினேன், என்னிடமிருந்த இரு விளக்க உரை நூல்களையும் சேர்த்து. அப்போது எதேச்சையாக உங்களது வலைதளத்தில் சௌம்யா அவர்களுடனான உங்களது உரையாடல்களை (16, செப்டம்பர் 2011) வாசிக்க நேர்ந்தது.வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்
கீதையில் குறிப்பிட்டிருந்த நால் வர்ணங்களின் படைப்பு என்பதுடன் பிறப்பொக்கும் குறளை ஒரே அர்த்தம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டபட்டிருந்தது.
இரண்டு நாட்களாக மீண்டும் மீண்டும் வாசித்து அர்த்தங்களைப் புரிந்துணர முயன்றேன். ஒருவித பஸ்ஸ்ல் போலத்தான் இருந்தது கீதை வரிகளுக்கும் இக்குறளுக்குமான தொடர்பு. ஒருவிதத்தில் அப்படியான அர்த்தப்பாட்டில் இரண்டிற்குமான பொதுப் பொருத்தம் கொள்ள முடிந்தாலும் எனது சூழலியல், மரபணுவில் சார்ந்த மெய்யியல் நோக்கு அவற்றுக்கான தொடர்பு தாண்டி ஒரேயொரு வேறுபாட்டைக் கொண்டதாய் இருந்தது.
கீதையில் ‘நால் வருணங்கள்’ அக்கால இந்தியாவில் மனித பிறப்பின் அடிப்படையிலான இனப் பேதத்தால் பலமுள்ளதொரு இனக்குழு அதையொரு மனித சமூகக் கட்டமைப்பை ‘மானுட தர்மமாக’ முன்வைக்கிறது என்று தோன்றுகிறது. அதையே பிறப்பொக்கும் குறளைப் பார்க்கையில் அதன் மிக முக்கிய வார்த்தையான ‘எல்லா உயிர்க்கும்’ என்பது மனிதர்களையும் தாண்டி அடுத்த வார்த்தையான, ‘எல்லா உயிர்களுக்கும்’ என்று பொதுவாகக் குறிக்கப்படுகிறது. இதையொரு ‘சூழலியல் தர்மம்’ எனலாம் என்றே தோன்றுகிறது.
விலங்குகளில் உயிர்கள் பிறப்பால் ஒத்ததாகின்றன. ஆனால் தொழிற்படும் விதத்தில் சிங்கம் பிரிடேடர் எனும் ஓர் அடித்துண்ணியாகிறது; மான் ஒரு தாவரவுண்ணியாகிறது; காகம் அனைத்துண்ணியாகிறது. அதேசமயம் மனிதகுல இன, பிறப்புசார், தொழில்சார் பேதங்கள் போல சில சமூக உயிர்களெனக் கொள்ளப்படும் தேனீக்களிலும் எறும்புகளிலும் காணப்படுகின்றன. என்றாலும் அது சில உயிரினங்களில் அரிதாகக் காணப்படுவது, அல்லது ஆர்டர் ஆஃப் லைஃப்; இயற்கையின் படைப்பாக்கமும் கூட. அந்த சமூக ஹேரார்கி என்பது வேறு, ஒரே விலங்கினத்திற்குள் நிகழும் அதிகாரம் சார்ந்த டாமினன்ஸ் என்பது வேறு. அது எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது. அதன் அடிப்படையில் இக்குறள் நால் வருணங்களோடு ஒப்புமை கொள்ளத்தக்கதல்ல என்று தோன்றுகிறது.
என்றாலும் இறுதியாக இப்படியொரு தேடலை ஏற்படுத்திய காளிக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்,
வி.அமலன் ஸ்டேன்லி
February 6, 2022
அந்த தாடியும் காவியும்…
உங்களிடம் இந்திய மெய்ஞான மரபு பற்றிய அறிவு அபரிதமாக இருக்கிறது. நீங்கள் அதனை பற்றிய தெளிவை நித்யாவிடம் அறிந்ததாக கூறியிருக்கிறீர்கள். உங்களிடம் அதிகமாகவே சுய ஒழுக்கமும் கடின உழைப்பும் இருக்கிறது. எல்லாவற்றையும் விட எந்த ஒரு விஷயத்தையும் மற்றவருக்கு தெளிவாக புரிய வைக்க முடியும் ஆற்றல் உண்டு. நித்யா உளவியலாளர். உங்களை வருங்காலத்தில் நல்ல prospect உள்ள மாணாக்கராக கட்டாயம் பார்த்திருப்பார். உங்களை recruit செய்யவும் முயன்றிருப்பார் என்று தோன்றுகிறது. இந்த ஞான தேடலில் விருப்பமிருந்தும் உங்கள் இலக்கிய ஆர்வமும் அதில் சாதிக்கும் முனைப்பும் கடைசியில் அதனை மறுத்திருக்கும். உங்களுக்காக துறவுக்கு பெயரை நித்யா தேர்ந்த்தெடுத்திருப்பார். நீங்களும் ஒரு பெயரை உங்களுக்காக தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று ஒரு பட்சி என்னுள் கூறுகிறது. என்ன, கிளி ஜோசியரிடம் உட்கார்ந்தது போல் இருக்கிறதா?
இல்லை அதற்குள் உங்களுக்கு மணமாகிவிட்டதா. மணமாகிவிட்டது என்றால் என் லாஜிக் எல்லாம் கோவிந்தா. அப்படியே மணமாகியிருந்தாலும் இது பற்றி சிந்தனை உங்களுக்கும் நித்யாவுக்கும் எழுந்திருக்கும் என நினைக்கிறேன். இது எல்லாம் என் சொந்த கற்பனையே. இல்லையென்றால் கூறுங்கள். அப்புறம், நடராஜ குரு மிகச்சரியாக நித்யாவை தேர்ந்தெடுத்தது போல் நித்யாவும் தனக்கப்புறம் தத்துவம் தெரிந்தவரை தேர்வு செய்திருக்கிறாரா? நீங்கள் இப்போதைய குரு மருத்துவராக இருந்து இப்போது இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர் என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் தாடி எல்லாம் வளர்த்து அருமையான குரு ஜெயாவாக இருந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அன்புடன்
சிவா
Stride
   
அன்புள்ள சிவா,
நித்யா இரு முகங்கள் கொண்டவர். நடராஜ குரு உருவாக்கிய நாராயணகுருகுலத்தின் தலைவராக இருந்தார். ஆனால் அவர் அதற்குக் கட்டுப்பட்டு அதன் தலைவராக மட்டுமே இருக்கவில்லை. அவரது ஆளுமை அதைவிட பெரியது. அவர் இலக்கியவாதி, உளவியலாளர்.
நாராயணகுரு உருவாக்கிய தர்ம சபா என்ற துறவியர் அமைப்பு சாதிய அமைப்பாக உருமாறியதனால் அதில் இருந்து விலகிய நடராஜகுரு தன்னியல்பாக அலைந்து ஊட்டியில் இலவசமாகக் கிடைத்த நிலத்தில் தன் கையாலேயே தகரக்கொட்டகை போட்டு உருவாக்கிய குருகுலம்தான் நாராயணகுருகுலம்.
ஒருகாலத்தில் அதில் அவர் மட்டுமே இருந்தார். பின்னர் நித்ய சைதன்ய யதி வந்து சேர்ந்தார். பின்னர் ஜான் ஸ்பியர்ஸ். பின்னர் மங்களானந்த சாமி. மெல்ல அது வளர்ந்தது. நடராஜகுருவுக்கு உலகம் முழுக்க சீடர்கள் உண்டு.
நடராஜகுரு தனக்குப்பின் நித்யாவையும் அவருக்குப் பின் அடுத்த சீடரான முனி நாராயணப் பிரசாத்தையும் நியமித்தார். நடராஜகுருவின் மாணவர்களில் ஆக இளையவர் வினய சைதன்யா. அவரும் இருக்கிறார். நித்யா மறைவுக்குப் பின்னர் நாராயணகுருகுலம் முனி நாராயணப்பிரசாத் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது.
நாராயணகுருகுலம் சம்பிரதாயமான மடம் அல்லது ஆசிரமம் அல்ல. அங்கே நியதிகள் முறைமைகள் மூப்புவரிசை ஏதும் இல்லை. ஒரு குருவின் கீழே சில மாணவர்கள் கூடி வாழும் அமைப்பாகவே அதை நடராஜகுரு உத்தேசித்தார். நிலையான நிதி வசதி, பெரிய கட்டிடங்கள், சீடர் படைகள், ஆதரவாளர்கள் போன்றவை தேவையில்லை என்று முடிவுசெய்தார். அப்படியே அது ஒரு கட்டற்ற சிறு தனிக் குருகுலங்களின் கூட்டாக உள்ளது. அதில் ஆயுர்வேதம் இயற்கை மருத்துவம் முதல் பற்பல தளங்களில் செயல்படும் பலவகையான துறவிகள் உள்ளனர்.
நாராயண குருகுலத்தில் துறவு உண்டு, அது கட்டாயம் இல்லை. வினய சைதன்யா மணமானவர். அவர் திருமணத்தை நடராஜ குருவே நடத்தி வைத்தார்.
*
நான் 1993 ல் நித்யாவைச் சந்திக்கும்போதே மணமாகிவிட்டிருந்தது. எனக்கு அப்போது சாமியார்களில் பயங்கரமான கசப்பு இருந்தது. பலவழிகளில் தேடி பலமுறை ஏமாந்து, எல்லா சாதனைகளையும் கைவிட்டு நாலாண்டுகள் ஆகியிருந்தன.
பலமுறை என் நண்பர் ஊட்டி நிர்மால்யா சொல்லியும்கூட நித்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். குருகுலம் முன்னால் உள்ள சாலைவழியாகச் சென்றும் கூட உள்ளே போனதில்லை. ஆனால் அவரது நூல்களை வாசித்திருக்கிறேன். இலக்கியம் உள்ளிட்ட பல தளங்களில் எழுதிக்கொண்டே இருந்த நித்யா கேரளத்தில் மிகப்பிரபலமான எழுத்தாளர்.
அதன் பின் நிர்மால்யாவின் வற்புறுத்தல் தாங்கமுடியாமல் அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் வெளியே வந்து கொண்டிருந்தார். காலைநடை. சாலையோரம் மலர்ந்திருந்த பூக்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார். காலை ஏழு மணி. பனி விலகவில்லை. நல்ல குளிர். நித்யா காவி நிறமான கோட்டும் வேட்டியும் அணிந்து குல்லாய் வைத்திருந்தார். அழகிய வெண்தாடி பறந்துகொண்டிருந்தது.
நான் அவரை முதலில் பார்த்ததுமே அவரால் கவரப்பட்டேன். அவர் சின்னக்குழந்தை மாதிரி இருந்தார். ஐந்து வயதுப்பையனின் கண்கள் அவை. உற்சாகம் நிறைந்த, உலகை பெருவிருப்புடன் வேடிக்கை பார்க்கிற, சிரிக்கும் கண்கள். அப்போது நித்யாவுக்கு எழுபது வயது. இரு முதுகெலும்பு அறுவை சிகிழ்ச்சைகள் செய்திருந்தார். உடலில் நீங்காத வலி இருந்துகொண்டிருந்தது.
அவருடன் நான் காலைநடை சென்றேன். அவர் வழியில் மலைவிளிம்பில் நின்றார். எதிரே பச்சை அடர்ந்த மலையின் விளிம்பில் சூரியன் ஒளியுடன் எழுந்தான். ஊட்டியில் சிலசமயம் உதயத்தில் தூரமலைவிளிம்பில் சூரியவட்டத்தைச் சுற்றி ஒரு மரகதப்பச்சை நிறம் தெரிவதுண்டு. அன்று அதைக் கண்டு பிரமித்து நின்றேன்.
நித்யா சட்டென்று ‘ஓம்’ என்று ஆரம்பித்தார். ‘அஸதோமா சத்கமய’ என்ற புராதனமான பிரார்த்தனை. தீமையில் இருந்து நன்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் நிலையின்மையில் இருந்து நிறைவுக்கும் கொண்டு செல்லக்கோரும் மூதாதையின் சொற்கள். மிக நன்றாக அறிந்தவை. அந்த பிரார்த்தனையின் காலாதீதத் தன்மையை அப்போதுதான் உணர்ந்தேன்.
பின்னர் நித்யாவிடம் நெருங்கினேன். ஆரம்பம் முதலே எனக்கு குருகுல அமைப்பு மேல் நம்பிக்கை இருக்கவில்லை. என் ஐயங்களையே அதிகமும் கேட்டுக்கொண்டிருந்தேன். இலக்கியம் பற்றியே அதிகம் பேசியிருக்கிறோம். இந்து தத்துவம், மேலைதத்துவம் குறித்து பிறகு. நான் என் முதிர்ச்சி இன்மையால் அவர் என்னை கண்டித்தபோதெல்லாம் அகங்காரம் புண்பட்டிருக்கிறேன். அவர் என்னை ஏற்க ஒருவருடம் ஆகியதென்றால் நான் அவரை ஏற்க மேலும் சிலமாதங்கள் ஆயின.
மெல்ல நான் குருகுலத்துடன் நெருங்கினேன். ஆனாலும் அதன் பகுதியாக எவ்வகையிலும் ஆகவில்லை. இத்தனை வருடங்களில் எனக்கு நாராயண குருகுலத்தில் பெரும்பாலானவர்களை தெரியாது. அறிமுகமே இல்லை. பலருக்கு நான் வெறும் பெயர் மட்டுமே. இப்போது, நித்யா மறைந்த பின் தொடர்பு மிகவும் குறைவு.
குருகுலத்தில் நான் நடத்திய கவிதை விவாத அரங்குகள்தான் எனக்கும் குருகுலத்துக்குமான உறவு. நித்யா இருந்தபோதே பத்து அரங்குகள் நடத்தியிருக்கிறேன். 2008 மே மாதம் கடைசியாக. அதன் பின் நான் குருகுலம் சென்றதில்லை. கருத்தரங்கு நடத்தும்படி குருகுலத்தின் அழைப்புகள் உள்ளன. நான் பயணங்களில் இருந்தேன். இந்தவருடம் நடத்தலாம்.
குருகுலத்தில் என் வணக்கத்திற்குரிய சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] இருக்கிறார். அவர்தான் ஆயுர்வேத ஆய்வாளர். மியாகோ என்ற ஜப்பானிய சீடப்பெண்மணி இருக்கிறார். நித்யாவின் சமாதி இருக்கிறது. ஆனாலும் எனக்கு குருகுலம் மனதுக்கு நெருக்கமாக இல்லை. அது நித்யா இல்லாத வெறுமையையே எனக்குக் காட்டுகிறது. அங்கே அதிகம்பேர் இல்லை. பலசமயம் மூன்றுபேர் இருப்பார்கள். அவர்கள் பிறருடன் பேசுவதே குறைவு. வேறுலகில் இருக்கிறார்கள். எனக்கு சமாதிகளில் ஈடுபாடும் இல்லை.
நான் இந்த வருடங்களில் நித்யாவை நினைக்காத நாளே இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் நினைவுடன் தான் கண்விழித்தெழுகிறேன் என்றால் அது உண்மை. அவரை எண்ணி தியானிக்காமல் தூங்கியதும் இல்லை. ஆகவே குருகுலம் செல்லவேண்டியதில்லை. பிறிதொருவர் தேவையும் இல்லை.
நித்யா என்னை ஓர் இலக்கியவாதியாகவே கண்டார். எழுதுவதே என் வழி என்றார். எழுத்தின் வழியாக குவியும் ஒர் அகம் உண்டு என்று என்னிடம் சொன்னார். ஆனால் அதற்கப்பாலும் சில கற்றுக்கொடுத்தார். அதற்குள் இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியிருக்கிறது. அமைப்புகளுக்குள் என்னால் நிற்க முடியாதென்றும் எந்த பொறுப்புகளையும் சுமக்க முடியாதென்றும் என்னைச் சந்தித்த மறுநாளே என்னிடம் சொன்னவர் நித்யா.
எழுதி எழுதி தீரும் அகங்காரம் ஒன்று உண்டு. அது நிகழ்கிறதா என்று பார்ப்போம். உங்கள் அழைப்புக்கு நன்றி விசித்திரமான பூதாகரமான சட்டை போல இருக்கிறது அது
ஜெ
மறுபிரசுரம்/ முதல்பிரசுரம் 2010 மார்ச்22
பெரியம்மாவின் சொற்கள், பிரதமன் – கடிதங்கள்
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ,
நலமா? நூலகத்திருந்து தங்கள் உச்சவழு சிறுகதை புத்தகம் எடுத்து வந்து வைத்திருந்தேன். வேறு புத்தகங்கள் இருந்ததால் தள்ளி கொண்டிருந்தது. இன்று பெரியம்மாவின் சொற்கள் படித்ததும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
முதலில் படித்ததும் கவர்ந்தது, ஒரு மனம் எப்படி புது விஷயங்களை உள் வாங்கி கொள்கிறது என்பதும் அழகிய நடையும் தான். ஆனால் இது எளிய மனம் கொள்ளும் மோதல் அல்ல என்று கதை இறுதியில், தன் கொள்ளு பேத்தி நான்காவது திருமணம் செய்து கொண்டதை பெரியம்மா “அவ அந்த ஊரு குட்டியில்லா? அந்த ஊரிலே பொம்புளங்க மனசுக்கு பிடிச்சவன கெட்டிகிட்டு மானம் மரியாதையா சந்தோசமா இருக்காளுக ” என்று ஏற்குமிடத்தில் தான் இந்த கதையால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். மீள் வாசிப்பு செய்யும் போது தான் இதனை எழுதுவோம் என்று நினைத்தேன்.
பெரியம்மா ஒரு மேல் தட்டு பெண். அத்தனை வசதிகளும் இருந்தாலும் பழைய கால கட்டுப்பாடுகளால் பிணைத்தும் வைக்கப்பட்டவள். அவள் அறிந்ததெல்லாம் புராண கதைகள் வழியாக தான். அதுவும் கடந்த 40 வருடங்களாக, கணவன் இறந்த பிறகு. தினமும் புலவரை கொண்டு வீட்டில் இருக்கும் சிறு கோயிலில் புராண பாராயணமும், விளக்கமும் அதனையும் அனுபத்தையும் கொண்டு உருவாக்கிய சொந்த புராண கதைகளும் கொண்ட, ஒரு பாரம்பரிய உதாரண இந்திய பெண்ணின் மனதில் உருவாகி இருக்கும் கருத்துக்களை, ஆங்கில மொழியில் தெரிந்து கொள்ள நினைக்கும் போது நடக்கும் சுவரசியமான நிகழ்வுகளே கதை எனலாம் சுருக்கமாக.
ஆங்கில வார்த்தைகள் பொருள் கொள்ள துவங்கும் முன்பே, வார்த்தையின் ஒலி வழியே அவள் அகம் அடையும் பொருளும் ஏற்பும் சுவை பட சொல்லப்பட்டு இருந்தது. நாய் நன்றியுள்ளது என்று சொல்ல கதை சொல்லி எடுக்கும் முயற்சிகளும் பெரியம்மாவின் பதில்களும் ரகளையாக இருந்தது.
முருகன் அருளை எப்படி சொல்வது என்ற கேள்வி திகைப்பூட்டியது. இறைவா என்னை இரட்சியும்! இறைவா என்மேல் இரக்கம் காட்டும்! ஆண்டவரே என்னை கைவிடாதேயும்! என்று தானே கிறித்துவ பிரார்த்தனை சொல்கிறது(நான் அறிந்தவரையில் ). அருளளை எப்படி எதிர் கொள்ளும் ஆங்கிலம். Bless என்று சொல்லலாமா? தெரியவில்லை.
Manners என்பதை நாகரிகம் என்று சொல்லும்போது, அது அழகு படுத்தி கொள்ளுதலாகவே பெரியம்மாவிற்கு பொருள் கொள்ளுகிறது. ஆனால், சீதையோடு இணையும் போது நாகரிகத்தின் சித்திரம் உடனே மாறிவிடுகிறது. அடுத்த பிரச்சனையாக கற்பு சொல்லப்பட்டு, மரபான மனதிற்கு குந்தியோ பாஞ்சாலியோ விளக்கம் அல்ல என்று ஏற்கிறாள் பெரியம்மா.
இடையே சொல்லப்படும் இந்திய மேற்கத்திய புராண கதைகளும், மொழிக்கு நடுவே உள்ள தூரத்தையும், நாகரிகத்திற்கு இடையேயான தொடர்பையும் அறிய உதவும் உள்ளடுக்காக உதவுகின்றன. இருவேறு நாகரிகங்கள் சந்திக்கும் புள்ளிகளாகவும், புதியவர்களுக்கு தொடங்கும் புள்ளியாவாகவும் அமைய சாத்தியம் கொண்ட அழகான கதை.
நன்றி
க சரத்குமார்
அன்புள்ள ஜெ
உங்கள் சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 1993 முதல் உங்கள் கதைகளை வாசிப்பவன் நான். முந்தைய கதைகளில் இருந்த ஏதோ ஒரு கசப்பு இப்போது கனிந்திருப்பதை காண்கிறேன். அன்றிருந்த இறுக்கம் இல்லை. சுந்தர ராமசாமியிடமிருந்து பஷீர் நோக்கி நகர்ந்திருக்கிறீர்கள். பிரதமன், பெரியம்மாவின் சொற்கள் இரண்டு கதைகளுமே அற்புதமானவை. அதிலுள்ள கனிவு எட்டுவதற்கு அரியது. கலை வழியாக அங்கே செல்லமுடியாது. அது கிராஃப்ட் அல்ல. அகம் கனிந்தால் கதை அப்படியே ஆகிவிடுகிறது. அந்த கனிவுதான் பிரதமன் கதையின் சாரமும்.
எம்.ஆர்.ராம்
பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
தற்கொலைகள் – கடிதங்கள்
 இன்றைய தற்கொலைகள்
  இன்றைய தற்கொலைகள்
அன்புள்ள ஆசிரியருக்கு
சமீபமாக பன்னீர் செல்வம் ஈஸ்வரன் அண்ணா கடிதம் எழுதி வருகிறார்.உங்கள் இடது புறம் உள்ளவர்.ஈரோடு வாசகர் சந்திப்பில் அண்ணாவை நேரில் சந்தித்தேன்.சொல்முகம் நிகழ்விற்கு வந்திருக்கிறார்.தொடர்ந்து உங்கள் படைப்புகள் வாசிப்பது அது குறித்து தன் அனுபவத்தை பகிர்வது என்று தொடர்பில் இருக்கிறார்.
உடலுக்கு அப்பால்,தற்கொலைகள் கேள்வி பதில் இன்றைய சூழலில்மிக முக்கியமாக தோன்றுகிறது.
நன்றிகள்.
குமார் ஷண்முகம்
   
அன்புள்ள ஆசானுக்கு ,
நலம் என்று நினைக்கிறேன்.என் வாழ்க்கையில் எப்போது எல்லாம் ஒரு குழப்பமான சூழல் வருகிறதோ அப்போது எல்லாம் .உங்கள் பதிவு அதை தெளிவாக்கிவிடுகின்றது.இதற்கு முன் பல முறை பல சிக்கல்கள் பற்றி உங்களுக்கு கடிதம் எழுத எண்ணி இருந்த போது அடுத்த நாள் அதைப்பற்றி யாரோ ஒருவர் கேட்டிருப்பார்.உங்கள் பதிலும் எனக்கு ஏற்புடையதாக இருக்கும். அப்படி தான் உங்கள் இன்றைய தற்கொலைகள் பதிவும் . அதற்கு முன் இரவு தான் முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்தது.நான் தேர்வில் மிக மோசமான மதிப்பெண் பெற்றேன்.
நான் சிறுவயதில் இருந்தே தேர்வுகளில் வெற்றி பெற்றே வந்ததால் இந்த தோல்வி என் சுற்றத்தை தான் பாதித்து.எனக்கு இந்த முடிவுகள் பெரிய துக்கத்தை தரவில்லை. நான் சோர்வு அடையாததே கூட அவர்களுக்கு ஒரு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். என் நண்பர்களில் பலர் மிக பெரிய வெறுமைக்கு செல்வதை பார்க்கிறேன். ஒரு தேர்வின் தோல்வி அவர்களை உடைக்கிறது இதற்கும் அவர்கள் அடிப்படைகள் எல்லாம் கற்ற மருத்துவர்கள் .அந்த தேர்வில் வென்றாலும் மீண்டும் மூன்றாண்டு மிக கடுமையான பயிற்சி தான் இருக்கும்.அதன் பின் மீண்டும் ஒரு தேர்வு என்று அடுத்த இலக்கு. உங்கள் கட்டுரையில் கூறியது போல ” இளமையை இழந்தவர்கள்” தான் நாங்கள் .
அந்த கட்டுரை வருவதற்கு முன்பாக இந்த கேள்வி மனதில் இருந்தது. ஒரு முதுநிலை படிப்பு ஏன் அவசியமான ஒன்றா என்று. அப்படி ஒன்று எனக்கு தேவையானது தான் என்று என் சமூகம் எனக்கு மூளையில் ஏத்திவிட்டு இந்த பந்தையத்தை வெற்றி பெற்றுவா என்று என்னை அனுப்பி வைக்கிறது.நானும் ஒன்றரை வருடம் இதன் பின்னால் ஓடி வெறுத்துவிட்டேன்.என் மனதுக்கு இதில் ஆர்வம் அற்று பல நாட்கள் ஆகிறது. உங்கள் கட்டுரை எனக்கு என் வழியை காட்டியதாக உணர்கிறேன் ஜெ. இந்த ஒன்றரை வருடமும் இலக்கியம் கூட இல்லை என்றால் இந்த வருடத்தை நான் இழந்ததாகவே கருதி இருப்பேன். என் நண்பர்கள் போல மிக பெரிய வெறுமைக்கு தான் சென்று இருப்பேன். அதில் இருத்து உங்கள் எழுத்து என்னை காக்கிறது…
நன்றி ,
பா.சுகதேவ்.
மேட்டூர்.
February 5, 2022
விந்தைகளுக்கு அப்பால்
   
வளியில் ஒரு விந்தை – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
அன்புள்ள ஜெ,
வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைத் தாங்கிய ராக்கெட் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி (நம் விஷ்ணுபுர விழா அன்றுதான்!) விண்ணில் ஏவப்பட்டதை youtubeல் நேரடியாக கண்டு களித்தேன். கட்டுரையாளர் முரளி குறிப்பிட்டது போல் மனித வரலாற்றில் இது ஓர் மிக முக்கிய, மகத்தான மைல்கல்.
நாம் சென்ற நூற்றாண்டிலேயே இப்புவியின் அனைத்து மூலைகளிலும் கால் பதித்துவிட்டோம்.
உலகின் மிக உயர முகடான எவெரெஸ்ட்டில் டென்சிங், 1953ல் தனது ஏழாவது முயற்சியில், ஓர் அற்புத காலைப்பொழுதில், மானிடர்கள் அனைவரின் சார்பிலும் காலைப் பதித்தார். ஆனால் இந்த நூற்றாண்டிலோ (வருடம் 2019) ஏராளமானவர்கள் உச்சியை அடைய வரிசையில் நெருக்கியடித்து காத்துக்கொண்டிருந்த புகைப்படத்தைக் கண்டேன்.
புவியின் இரு துருவங்களையும் சென்ற நூற்றாண்டிலேயே அடைந்தாகிவிட்டது. Worst Journey in the world எனும் புகழ் பெற்ற தென் துருவ பயண நூலில் அண்டார்டிக்காவின் பனிக்காலத்தில் 24 மணி நேர இருள் பனிக்காலத்தில், 120 கிமீகள் பயணம் செய்து emperror penguin முட்டைகளை சேகரித்து விட்டு வந்த டாக்டர் வில்சனின் கடும் சாகஸ பயணத்தை மயிர் சிலிர்க்க வாசித்தது நினைவிற்கு வருகிறது.இன்றோ, அங்கு நிரந்தர விஞ்ஞான ஆய்வு களம் அமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்ற டிசம்பரில் கொரோனா கூட அங்கு சென்றுவிட்டது!இனி இப்புவியில் நமக்கு தெரியாத ரகசியங்களே இல்லை, அல்லது அவை மிக அருகிவிட்டன.
இது போன்று விண்வெளித்துறையில் பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாம் அடைந்திருக்கிறோம். சென்ற வருட பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் நாஸா, தனது ஐந்தாவது இயந்திர வாகனத்தை, ரோவரை இறக்கியது. கடந்த காலத்தில் உயிர் இருந்ததற்கான (இருந்திருந்தால்!) தடயங்களைத் தேடுவதற்கும் பாறை/மண் மாதிரிகளை சேகரித்து புவிக்கு அனுப்பவுதற்குமான பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இத்தகைய இந்நூற்றாண்டு முக்கியத்துவங்களில் ஒன்றுதான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இந்த ஜனவரியில் இந்த தொலைநோக்கி, L2 எனப்படும் லாக்ரெஞ்ச் புள்ளியையும் அடைந்துவிட்டது. திட்டமிட்டபடி வரும் ஏப்ரலிலிருந்து இத்தொலைநோக்கி முழுமையாக செயல்படத்துவங்கும் எனத் தெரிகிறது.
புவியிலிருந்து கிட்டதட்ட ஒரு மில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து கொண்டு பிரபஞ்சத்தின் வரலாற்றை, பிரபஞ்சத்தின் ஆரம்ப விண்மீன்களை, நட்சத்திர மண்டலங்களை, அவற்றின் பிறப்புகளை இன்னும் எத்தனையோ, இன்னும் நமக்கு விலகாத திரைகளை விலக்கி அளிக்கப்போகிறது.
இன்றைக்கு, நிகழ்காலத்திலிருந்து கொண்டு நாம் இறந்த காலத்தை இன்னும் தெளிவாக காணப்போகிறோம். இதன் மூலமே எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கப்போகும் ஓர் பிரமாண்ட மாயக்கண்ணாடி, இத்தொலைநோக்கி.
ஒரு youtube வீடியோவை நம் மவுஸைக்கொண்டு முன்னும் பின்னும் நகர்த்திக்காண்பது போல் பிரபஞ்ச இறந்த, நிகழ் காலங்களைக் காணப்போகிறோம்!
இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் அல்ல, நம் வாழும் காலத்திலேயே இந்த அதீத ஆச்சரியங்களை நாம் காணப்போகிறோம்.
இத்தனை நூற்றாண்டுகளாக மானிடன் ஆதாரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் மத, தத்துவ நம்பிக்கைகளை இக்கண்டுபிடிப்புகள் எப்படி மாற்றி அமைக்கப்போகின்றன என்று காண்பதை விட வேறு சுவாரசிய விஷயம் உண்டா என்ன?!
சிவா கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள சிவா,
நான் சிறுவனாக இருந்தபோது, 1969 ஜூலை 16 ஆம் நாள் மானுடன் நிலவில் கால் வைத்தான். அந்நிகழ்வை நான் அத்தனை தெளிவாக நினைவுகூர்கிறேன். பெரும் பதற்றத்துடன் அத்தனை நாளிதழ்களையும் வாசித்தேன். எனக்கு இருந்தது மகிழ்ச்சியோ கிளர்ச்சியோ அல்ல, ஒரு வகையான பதற்றம் என்றே நினைவுகூர்கிறேன். என்ன பதற்றம்? நான் வாழ்ந்த உலகம் இன்னொன்றாக ஆகிவிட்டது. நான் நம்பியவை உருமாறி வேறு அர்த்தம் கொண்டுவிட்டன. சட்டென்று நிலவு ஒரு ‘தரை’ ஆக மாறிவிட்டது.
அத்துடன் எங்களூர் கிறிஸ்தவ மேலாதிக்கம் கொண்டது. என் வகுப்பில் தமிழ்சார் ‘சிவனுக்க தலையிலே கிறிஸ்தவன் கால் வைச்சிட்டாண்டா’ என்றார். நான் அழுதுவிட்டேன். என் அம்மாவிடம் கேட்டேன். ‘இனிமே சிவன் என்ன செய்வார்?’ என்றேன். அம்மா ஒரு தயக்கமும் இல்லாமல் ‘அது வேற நிலாடா…ஒரு நிலாவா இருக்கு?’ என்றார். அவ்வளவுதான், முடிந்துவிட்டது. ஆயுர்வேத வைத்தியர் சங்கரன் நாயர் சொன்னார். ‘இந்த பிரபஞ்சத்திலே பலகோடி நிலாக்கள் இருக்கு. அதவிட பலகோடி மாயாநிலாக்கள் உண்டு. சிவன் தலையிலே இருக்கிறது மாயாநிலா… அது க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிட்டிருக்கும்”
எங்களூரில் அறிவியல்பார்வை தலைகீழாக மாறியது. அதுவரை நவீன அறிவியல்மேல் இருந்த சந்தேகம் அகன்றது. மக்கள் அலோபதி மருந்துக்கள், ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் ஆகியவற்றின் மீதான அவநம்பிக்கையை களைந்தனர். எதையும் ‘அதெல்லாம் சயண்டிபிக்காக்கும்’ என்று சொல்லும் மனப்பான்மை மிகுந்தது. சைபால், அமிர்தாஞ்சன் போன்றவை தாரளமாக விற்க ஆரம்பித்தன. ஆனால் பக்தி, மதநம்பிக்கை, புராணம்? அதெல்லாம் முன்னரும் வலுவுடன் நீடித்தன. ‘சந்திரசூடனுக்கு’ ஒன்றும் ஆகவில்லை.
மத உருவகங்கள் கவித்துவப் படிமங்கள் போல. அவை நேரடியாகவே புறவுலகில் இருந்துதான் உருவாகின்றன. மலைமுடிகள், ஆறுகள், கடல், சூரியன் சந்திரன் எல்லாம் கவிதையில் படிமங்களாகி பின் தொன்மங்களாகி ஆழ்படிமங்களாகி மதத்தில் நீடிக்கின்றன. அந்தப்பொருளின் அர்த்தம் மாறிவிடுவதனால் ஆழ்படிமங்களோ தொன்மங்களோ மாறுவதில்லை. மனிதன் அவற்றுக்கு அளித்த அர்த்தங்கள் அப்படியேதான் நீடிக்கும். அவை அவனுடைய அகவுலகு சார்ந்தவை.
மதம் சார்ந்த படிமங்களை பகுத்தறிவால் மாற்ற முடியாது. அவை உடனே தங்கள் புறவய விளக்கங்களை கைவிட்டுவிட்டு அகவயமான அர்த்தங்களை மட்டும் கைக்கொள்ள ஆரம்பித்துவிடும். மதம் சார்ந்த ஒரு வழிபாட்டுப்பொருளை பொருளிழப்பு செய்தால் அந்த வழிபாட்டுப்பொருள்மேல் ஏற்றப்பட்டிருந்த உளநிலைகளும் உருவகங்களும் படிமங்களாக மாறி நீடிக்கும்.
என் இளமையில் இன்னொரு உதாரணம் சபரிமலை மகரஜோதி. அது சபரிமலை உச்சியில் ஐயப்பனால் காட்டப்படுவதென்றே பக்தர்கள் நம்பினர். ஜோதி சட்டென்று மலைமேல் தெரியும்போது பல்லாயிரம்பேர் பக்திப்பரவசத்தால் கண்ணீர் விடுவார்கள். சபரிமலை ஐயப்பனே ஒளிவடிவாக மலையில் எழுந்தருளுவதாக தொன்மம்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 13 அல்லது 14 ஆம் தேதி (தைப்பொங்கல்நாளில்) இது கொண்டாடப்படுகிறது. இது தொன்மையான சௌர மதத்தின் விழா. சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். மகர சங்கிராந்தி என வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதம் மகரம் தொடங்கும் நாள் இது. கேரளத்தின் பழைய புத்தாண்டுப்பிறப்பு மகரம் ஒன்றுதான்.
1972ல் ஜோசப் இடமறுகு என்னும் நாத்திகப் பிரச்சாரகர் அது பழங்குடியினரின் மகரவிளக்குக் கொண்டாட்டம் என்றும் அதில் மர்மம் ஏதுமில்லை என்றும் சொன்னார். பக்தர்கள் அதை மறுத்தனர். இளைஞர்களின் குழு ஒன்று மலையேறிச்சென்று கண்காணித்தது. சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள் மலைமேல் ஓரிடத்தில் பெரிய குழியில் நெய்யும் விறகுமிட்டு தீ எழுப்புவதை கண்டனர். அவர்கள் தாங்களும் பல இடங்களில் அப்படி தீயிட அம்முறை ஏழெட்டு மகரஜோதி தெரிந்தது.
அதன்பின்னர் தேவஸ்வம் போர்டு ஒப்புக்கொண்டது. பழங்குடிகளான பளியர்தான் இருநூறாண்டுகளாக அங்கே மகரஜோதியை எரியவிட்டவர்கள். அது அவர்களின் விழா. ஆனால் அவர்கள் குடிபெயர்க்கப்பட்டனர். ஆகவே ஜோதியை தேவஸ்வம்போர்டு கொளுத்த ஆரம்பித்தது. 2008ல் மீண்டும் ஜோதி பற்றிய விவாதம் எழுந்தது. தகவலறியும் உரிமை சட்டப்படி ஒருவர் கோரிக்கை விடுக்க சபரிமலை தலைமை மேல்சாந்தி கண்டரரு மகேஸ்வரரு அது தேவஸ்வத்தால் கொளுத்தப்படுவது என சட்டபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் சபரிமலை ஜோதிதரிசனம் இன்று நூறுமடங்கு பெரிய விழா. பக்தர்களுக்கு அதே பரவசம். ‘ஐயப்பன் அப்டியே, தானா வந்திரமுடியுமா? ஆதிவாசிங்க மனசிலே அங்க தீய கொளுத்தி கும்பிடச்சொன்னது ஐயப்பன் அல்லவா?” என்று மகேஸ்வரரு கண்டரரு விளக்கினார்.
   
Unweaving the Rainbow ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய நூல்.அறிவியலின் தளராத புறத்தர்க்க முறைமையைப் பற்றியது. இந்த நூல் முன்பு டாக்கின்ஸ் எழுதிய The Selfish Gene மற்றும் The Blind Watchmaker ஆகிய நூல்களில் இருந்த கறாரான புறவய அணுகுமுறைக்குமேல் உருவான விமர்சனங்களுக்கான பதில். தொன்மங்கள், மதம் ஆகியவற்றை கடுமையாக மறுப்பவர் டாக்கின்ஸ்.அவர் வாழ்க்கையின் அழகுணர்வு, ஆன்மிகவுணர்வு, அடிப்படையில் மனித உள்ளத்தை செலுத்தும் வியப்புணர்வு பரவசங்கள் ஆகியவற்றை மறுக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
டாக்கின்ஸ் இந்நூலில் அவர் மானுட உள்ளத்தின் வியப்புணர்வையும் பரவசங்களையும் மறுக்கவில்லை என்றும், அவற்றை அறியாத சக்திகள் அல்லது தெய்வங்கள் என்னும் கற்பனையுருவங்கள் மேல் சுமத்தி ‘முடித்துவிடுவதை’ மட்டுமே எதிர்ப்பதாகவும், உண்மையில் அறிவியல் பிரபஞ்சத்தின் விந்தையையும் அதை அறிவதிலுள்ள பரவசத்தையும் பெருக்கவே செய்கிறது என்றும் சொல்கிறார்.
இந்த தலைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டு விவாதமொன்றை நோக்கிக் கொண்டுசெல்வது. இலக்கியத்தில் முக்கியமான ஒரு சொலவடை அது. ஜான் கீட்ஸ் அறிவியல் பிரபஞ்சத்தின்மீதான மானுடனின் அழகனுபவத்தை அழிக்கிறது என வாதிட்டார். பிரபஞ்சம் அளிக்கும் வியப்பும் புதிரும் பரவசமுமே மனிதனை பிரபஞ்சக்கூறுகளை படிமங்களும் தொன்மங்களும் ஆழ்படிமங்களுமாக ஆக்கிக்கொள்ளச் செய்கின்றன. அவற்றுக்கு அளிக்கப்படும் தர்க்கபூர்வ விளக்கங்களால் அந்த வியப்பும் புதிரும் பரவசமும் இல்லாமலாகிறது. அழகுணர்வும் மீமெய்மையுணர்வும் அழிகின்றன.
ஐசக் நியூட்டன் வானவில் என்பது நிறப்பிரிகையால் உருவாவது என விளக்கியபோது பல்லாயிரமாண்டுக்கால தொன்மங்கள் அழிந்தன என்றார் கீட்ஸ். தோர் என்னும் தெய்வம் மறைந்தது. ‘வானவில்லை பிரித்துப்பரப்புதல் ‘ (Unweaving the Rainbow)என அவர் இதைச் சொன்னார். அதையொட்டி இலக்கியத்தில் விரிவான விவாதம் நிகழ்ந்தது.Unweaving the Rainbow விவாதம் என அது அழைக்கப்படுகிறது. அறிவியல் பிரபஞ்சத்தின் மர்மங்களை அதிகரித்தபடியே இருக்கிறது, வியப்பை கூட்டிக்கொண்டே இருக்கிறது, ஆகவே மேலும் மேலும் படிமங்களும் தொன்மங்களும் ஆழ்படிமங்களுமே உருவாகும் என்று பதில் சொல்லப்பட்டது
அதை இலக்கியத்திலேயே காணலாம். இருபதாம்நூற்றாண்டு கவிதையிலும் வானவில் மேலும் அழகுடன் மிளிர்கிறது. அது நிறப்பிரிகை என்பதே மேலும் அழகிய படிமம் ஆகியது. அறிவியல் உருவாக்கிய கண்டுபிடிப்புகளும் கொள்கைகளும் புதிய படிமங்களை உருவாக்கி அறிவியல்புனைகதை என்னும் மிகப்பெரிய கற்பனைவெளியை சமைத்தன. காலப்பயணம், பொருள்-ஆற்றல் முயக்கம், வேற்றுக்கோள் உயிர்கள் என இன்றைய நவீன தொன்மங்களெல்லாம் அறிவியலால் உருவாக்கப்பட்டவை.
ஏனென்றால் அறிவியலும் இலக்கியமும் செயல்படும் தளங்கள் வேறுவேறு. அறிவியல் தர்க்கமுறைமை சார்ந்து மெய்மை நோக்கிச் செல்ல இலக்கியம் கற்பனை, உள்ளுணர்வு சார்ந்து மெய்மையை உசாவுகிறது. ஆகவே அறிவியல் அளிக்கும் உண்மைகளை எல்லாம் உடனுக்குடன் படிமங்களாக ஆக்கிக்கொண்டு இலக்கியம் முன்செல்லும்.
மதம் கவிதையுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. அதன் வழிகள் அகவயமானவை. அது வெளியே நிலையான ஓர் அமைப்பு. ஆனால் அகவயமாக அது மாறிக்கொண்டே இருக்கிறது. சென்ற ஐம்பதாண்டுகளில் மதத்தின் குறியீடுகள் எப்படியெல்லாம் மாறியிருக்கின்றன என்று மட்டும் பாருங்கள், புரியும். கவிதைக்கு ஓர் அகராதி போடலாம், அதை வைத்து கவிதையை புரிந்துகொள்ள முடியாது. மதத்தையும் மதநூல்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடியாது.
ஜெ
முதுமை, கடிதங்கள்
 கனிந்த முதுமை
கனிந்த முதுமை
அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம்
தங்கள் “கனிந்த முதுமை” கட்டுரைக்கு மிக்க நன்றி.
இன்றைய இளவட்டங்கள் தங்கள் பெற்றோரிடம் உள்ள எதிர்பார்ப்புக்கும் உங்கள் கட்டுரையில் முதியவர் பற்றி வர்ணித்துள்ள விவரணைகள் ஒத்துப்போகின்றன, ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் தங்கள் பெற்றோரிடம் கடன் வாங்கியாவது அவள் கல்யாணத்தை மிக விமர்சையாக நடத்த வேண்டி கேட்டு கொண்டாள் , இதை வைத்து பார்த்தால் நீங்கள் சொன்ன நுகர்வு கலாச்சாரம் முற்றிலும் உண்மையே, “பூத்து, காய்த்து, கனிந்து, விதையாக விரும்பாமல் வெறும் கிளையாக இருக்க விரும்பி மனம் குறுகி இருகுகிறது. அவர்கள் வளரவேஇல்லை.
மீண்டும் நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்
அன்புள்ள ஜெ
கனிந்த முதுமை வாசித்தேன். உண்மையில் நானே அடிக்கடி நினைத்துக்கொள்வதுதான் இது. ‘நான் என்னை வயசானவனா நினைக்கலை’ ‘நான் இன்னும் மனசுக்குள்ள இளமைதான்’ என்றெல்லாம் பேசுவது எத்தனை காலமாக இங்கே ஆரம்பித்தது? நம் அப்பாக்கள் அப்படிச் சொல்வதில்லை. நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். நாம் முதுமையை வெறுக்கிறோம். ஆகவே முதியோரை வெறுக்கிறோம். முன்பு நமக்கு முதுமை என்றால் மதிப்பு இருந்தது. அவர்களின் சொற்கள் மேல் மதிப்பு இருந்தது. இன்று முதியோரை தூக்கி அப்பால் சாத்திவிட்டு வாழ்கிறோம்.நமக்கு முதுமைவராது என நினைக்கிறோம். ஒருவர் உடலால் முதுமை அடைந்தபின் இளமையாக நடிப்பதுபோல ஆபாசமன விஷயம் வேறு கிடையாது
ஜான் சுந்தர்ராஜ்
கல்குருத்தும் கருப்பட்டியும்
அன்புள்ள ஜெ,
நலம் தானே?
கல்குருத்து சிறுகதை அதிமதுர வாசிப்பனுபவம். ‘திருவிளையாடல்’ சினிமா காணும் பொழுதெல்லாம் ஒருவித பரவசம் தோன்றும். அப்படியொரு திருப்தி இக்கதையில் கிடைக்கிறது. பூலோக ஆத்மாக்களுக்கு ஏதேனும் சோதனையென்றால் கடவுளர்கள் மண்ணில் தோன்றி திருவிளையாடல் நிகழ்த்தி சுபமாய் முடித்து வைப்பதுபோலே கல்லாசாரியும் கல்லாசாரிச்சியும் அழகம்மை வீட்டில் தோன்றி மாற்றங்கள் செய்வது அற்புதம்.
அவர்கள் அம்மியை மட்டும்தானா கொத்துகிறார்கள்? சிற்பிகள் போல் அவர்கள் செதுக்குவது மற்றுமோர் சிலையையும் தானே? அழகம்மை. என்னவொரு அருமையான பெயர். அழகு அம்மை. “A Beautiful Mother” is in the making. இன்னொரு பக்கம் ஆசான் கதை வழியாய் வாசக மனங்களை கொத்தி கொத்தி கனிய வைத்து நெகிழ்த்தியபடி செல்கிறார். So many parallel tracks, subtexts and nuances.
“அவர்கள் இருவரும் இரு பக்கமாக அமர்ந்து அம்மியை கொத்த ஆரம்பித்தனர். இரு கிளிகள் சிலைப்பொலி எழுப்புவது போலிருந்தது. டிச்! டிச்! டிச்!
கருங்கல் கற்கண்டு சீவல்கள் போல உடைந்து உடைந்து விழுந்தது. அதன் தூள் விபூதி போலிருந்தது” அடடா. கவித்துவமாய் வரிகள் விரிந்து பறக்கிறது. கதை நெடுக அவரவர்க்கு தேவையான பிரசாதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனது கற்கண்டு விபூதியை நான் எடுத்துக் கொண்டேன்.
“ஒரு கல்லு கோயிலிலே நிக்குது. ஒரு கல்லு தான் தேய்ஞ்சு சமையலுக்கு கூடுது” இவ்வரிகள் பாரதியின் பராசக்தி வணக்கத்தை நினைவு படுத்தியது.
“ஆங்கொரு கல்லை வாயிலில் படியென்றமைத்தனன் சிற்பி மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்றுயர்த்தினான்; உலகினோர் தாய்நீ;
யாங்கணே எவரை எவ்விதம் சமைத்தற்
கெண்ணமோ அவ்விதம் சமைப்பாய்
ஈங்குனைச் சரணென் றெய்தினேன் என்னை
இருங்கலைப்புலவனாக்குதியே”
அந்த பெருசுகள் ரெண்டும் ஏதோ பிதற்றுகிறார்கள் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்க நமக்கு நேரமும் மனமும் அமையவில்லை என்றால் அவை வெறும் உளறல்கள் தான். மாசி மாசம் இருள் குழ்ந்து கருமேகம் மழை பெய்து காற்றடித்து பூக்கள் உதிர்ந்துவிட்டால் பிறகு பிஞ்சு வைத்து காயாகி கனிவது எப்படி? ஆனாலும் கிழவி ஆவணி மாதம் சுபநிகழ்ச்சியை ஊகித்து விடுகிறது. ஆவணி மைனஸ் மாசி என்றால் ஏழு மாதம். பொதுவாக ஏழாம் மாதம் வளைகாப்பு வைப்பார்கள். கிழவர் “சவத்துக்கு கருப்பட்டி” என்றவுடன் சிரித்து விட்டேன்.
தீபாவளி மலரில் வெளியான சிறுகதை என்பதால் என்னவோ கதை முழுக்க ஒரு festival mood திகழ்கிறது. சில சவங்களுக்கு கருப்பட்டி. சில சவங்களுக்கு உங்கள் சிறுகதைதான் ஸ்வீட். இவ்வருட தீபாவளி பலகாரங்களில் மிகச்சுவையான பலகாரம் கல்குருத்து தான். வருகின்ற தைப்பொங்கலுக்கு இதே போன்று மண்வாசனையுடன் ஒரு சிறுகதை படைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்,
ராஜா.
கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3ஆலயம், கடிதங்கள்
   
அன்பு ஜெ
மீண்டும் மீண்டும் சிற்பங்களின் சேதங்கள், கோவில்களின் பண்பாட்டு சிதைவுகள் , சிற்பங்களின் அழிவுகள், பக்தர்கள் கூட்டம் தரும் அழிவுகள் பற்றி உங்கள் தளத்தில் வருகின்றன. வாசகர்கள் கொதிப்புகளுடனும்.
ஈழ தமிழர்களுக்கான உதவி மற்றும் சிறுவர்களுக்கான கல்வி பற்றிய அரசின் செயல்பாடுகள் பற்றி படித்தேன். சில ஆசைகளாக, விருப்பங்கள் இவை
தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கீழ், புதிதாக தமிழ் பண்பாட்டு துறை(சிற்ப கோவில்கள்) என ஒன்றை தகுதி வாய்ந்தவர்களால் உருவாக்குதல்
விரைவாக தெளிவாக முக்கிய கோவில்களை அடையாளப்படுத்தி, இத்துறையின் கீழ் கொணர்தல்( unesco pola)
இவைகளில் சில கடுமையான சட்டங்களை உருவாக்குதல் ( சாரம், துளையிடுதல், உடைதல், சாரம் போன்ற கட்டுமான வேலைகளை செய்ய தடை சிமெண்ட் வேலைகள் பற்றி ஆய்வுகள் வெளிகளுக்குள் இருக்கும் சிலைகளை முறையாக பராமரிப்புகளை மண் பூச்சு இல்லாத வேறு பூச்சு முறைகள் ஆய்வுகள் என )
அரசாணை மூலம் இவைகளை செயல்படுத்துதல் அவசியம். பக்தர்கள் நம்பிக்கையை விட அவர்களின் காலம் தாண்டி வாழும் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாப்பதில் உள்ள அவசியம் பற்றி இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் முறைமைகள் தேவை…
கோவிலுக்கு ஏற்றார் போல,மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, கூட்டம் கூடும் வாப்புகளை குறைத்து இக்கோவில்கள் எல்லாம் நம் காலத்தில் பாதுகாக்க பட வேண்டியவை என தோலில் உள் செல்லுமாறு செய்தி, விளம்பரம் செய்தல் வேண்டும்
இப்படி சில முறைகளை, யோசனைகளை கட்டுரை வடிவில் விண்ணப்பம் போல அரசுக்கு கொண்டு செல்வதில் மனத் தடை எதும் இருக்காது என நினைக்கிறேன். பண்பாட்டு ஆர்வலர்கள் ஒரு கூட்டுமனுபோல அரசுக்கு அளிக்கலாம்
வெறுமனே சீரழிவின் மேலும், மக்கள் கூட்டம் மேல் குமட்டலும், சாபம் விடுதலும் விடுத்து செயல் திட்டம் ஒன்றை முறையாக இந்த அரசிற்கு எடுத்து சொல்லி பார்ப்போமே …
அன்புடன்,
லிங்கராஜ்
அன்புள்ள ஜெ
ஆலயங்களைப் பராமரிப்பது பற்றிய ஒரு செயல்திட்டம் அல்லது முன்வரைவு ஒன்றை இந்த அரசு உருவாக்கும் என்றால் அது மிகச்சிறப்பான ஒரு நடைமுறையாக இருக்கும். பக்தியின் பெயராலோ திருப்பணியின் பெயராலோ அல்லது வேறு எதன் பெயராலோ ஆலயங்களில் என்னென்ன செய்யலாம் செய்யக்கூடாது என்று நிபுணர்களைக்கொண்டு ஒரு கமிட்டி அமைத்து வரைவு தயாரித்து அரசாணையாக வெளிவரவேண்டும். சட்டமன்றத்திலும் முன்வைக்கலாம். இந்த அரசு பலதுறைகளில் முன்னோடியான சிறப்புத்திட்டங்களை முன்வைத்து வருகிறது. இதிலும் அதை கடைப்பிடிக்குமென்றால் இந்துக்களின் வாழ்த்து இந்த அரசுக்கு இருக்கும்
எக்காரணம் கொண்டும் சிற்பங்கள்மேல் மணல்வீச்சு முறைபோன்றவற்றை கையாளக்கூடாது. தனியார் திருப்பணி செய்வதானாலும்கூட சிற்பிகள் பொறியாளர் ஆகமவல்லுநர் போன்றவர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக்குழுவின் கட்டுப்பாடு இருந்தாகவேண்டும். திருவிழாக்கள் போன்றவற்றுக்காக கோயிலில் பந்தல்கட்டுதல் போன்றவற்றால் கோயிலின் கட்டமைப்பும் சிற்பமும் அழியக்கூடாது. கோயிலுக்குள் கழிப்பறைகள் போன்றவற்றை கட்டக்கூடாது. கோயிலை ஒட்டி எந்த கட்டுமானமும் அமையக்கூடாது. இவையெல்லாம் உடனடியாகச் செய்யபப்டவேண்டியவை.
மகேந்திரன் எம்
மத்துறு தயிர்- ஒரு கடிதம்
 ராஜமார்த்தாண்டன்
ராஜமார்த்தாண்டன்அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் ‘அறம்’ புத்தகத்திலுள்ள இரண்டு கதைகள் என்னை மிகவும் ’இம்சை’ செய்தன. இந்த இம்சையை ‘ஆழ்ந்த மௌனத்தை ஏற்படுத்துகிற இம்சை’ என்று கொள்ளலாம். ‘பெருவலி’ என்ற கதையும்,’ மத்துறு தயிர்’ என்ற கதையும்.
யு.ஆர்.அனந்தமூர்த்தியைப் போலவே நானும் புகுமுக வகுப்பில் ஃபெயில் ஆனேன். அதனால் தான் ‘ஒன்றுக்கும் உதவாத’ தமிழ் இலக்கியத்தை, தமிழ்நாட்டில் அல்லாமல் கேரளத்தில், சித்தூர் கல்லூரியில் படிக்க நேரிட்டது. ஆனால் என்னே என் நல்லூழ்? அந்த ஐந்து வருடங்களிலும் பேராசிரியர் ஜேசுதாசன் அங்கு தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். சில வருடங்கள் எனக்கு வகுப்பெடுத்தார். அ.கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் ஆகியோர் எனக்கு முன்னோர். முன்னோர்களில் ஜோசஃப் ஃபிலிப் என்று ஒருவரும் இருந்தார். குழித்துறைக்காரர். அப்போதே ஒரு நாவல் எழுதியிருந்தார். நல்ல ரசனை உள்ளவர்.
பேராசிரியர் மூலமாகத்தான் எனக்கு ஒரு வாழ்க்கைப் பார்வையும், கலை இலக்கிய நோக்கும் கிடைத்தது. ‘முன்னோர்கள்’ அதை வலிமைப்படுத்தினார்கள்.
அவரது தீவிர கிறித்தவப்பற்று சுந்தர ராமசாமியைப் போலவே உங்களையும் விசித்திரமாகப் பார்க்க வைத்திருக்கிறது. ஏதாவது ஒரு வடிவத்தில் தீவிரப்பற்று நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது? அதை கிறித்தவப்பற்று என்பதை விட இறைப்பற்று என்று கொள்ளலாமில்லையா? அவர் இந்துவாகத் தொடர்ந்திருந்தால் அது ஏசப்பனாக இல்லாமல் முனீஸ்வரனாக இருந்திருக்கும்.
அறுபதுகளில் வெளியான அவர்களது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (ஆங்கிலம்) பிறகு விரிவாக எழுதப்பட்டு ஆசிய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட நூல்கள் இலக்கிய, பண்பாட்டு ஆய்வில் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலக ஆய்வாளர்களுக்கும் பயன்படக்கூடியவை.
அவரைப் பற்றிய இத்தனை செய்திகளையும் இத்தனை காலம் கழித்துத் தெரிந்து கொள்ள எனக்கு உதவிய உங்களுக்கு மிகவும் நன்றி. அவர் புன்னைவனம் போன பிறகு அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல ஆசைகளைப் போலவே நிறைவேறாமலே போய்விட்டது. ஜீவிதத்தில் ’அன்பு’ என்பது எத்துணை பிரதானமானது என்பதை ‘மத்துறு தயிர்’ மூலம் காண்பித்து விட்டீர்கள். அவர்களது மாணவர்களான நாங்கள் ஒருவரும் அவருக்குச் செய்யாத அஞ்சலி இது… நீங்கள் வாழ்க!
ராஜத்தின் காதல் திருமணத்தில் முடிந்திருந்தாலும் அது வெற்றியடைந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஏனென்றால் அந்தப் பெண்ணை நான் அறிவேன். அவரது பின்புலமும் அறிவேன். அவரது உறவினர்களில் ஒருவன் எனது பேட்ச்மேட்டாக இருந்தான்.தவிரவும் ராஜத்தின் குடிப்பழக்கத்திற்கும், அவரது உறவுக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றவில்லை. அவர் குடிப்பழக்கத்தோடு தான் சித்தூருக்கே வந்தார். ஏனென்றால் பெரும்பாலான நாட்களில் மாலை நேரத்தில் அவருடன் நான் மட்டுமே ‘கள்ளுக்கடைக்குச்’ சென்றிருக்கிறேன். என் மீது அவருக்குத் தனிப்பிரியம் இருந்தது. நாங்கள் இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருந்தோம். எந்த நாளிலும், அதிகமாகக் குடித்த நாட்களிலும் கூட அவர் அந்த உறவைப் பற்றிப் பேசியதில்லை. அதோடு மட்டுமல்லாமல் மிகுந்த மனுஷ ‘ஸ்நேகியான’ அவருக்கு வாழ்க்கை பற்றிய முழுமையான பார்வை இருந்தது. ஓர் உறவுக்காக அதை அவர் சமரசப்படுத்தியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. குடி ஒரு பழக்கம்.. ஒரு கெட்ட பழக்கம் மட்டுமே. அது அவரது உயிரைக் காவு வாங்கிவிட்டது.
வேதசகாயகுமாருக்கும் நீங்கள் செய்திருக்கக் கூடிய மரியாதை குறிப்பிடத்தக்கது தான். படிக்கும் காலத்தில் அவர் தனது வகுப்புத்தோழர்களோடும், வெளியிலும் அவ்வளவாக ஒட்டாதவராகவே இருந்தார். பேராசிரியர் ஜேசுதாசன் வழியாக வந்த, எழுபதுகளில் சிறுபத்திரிகைக் கலாச்சாரம் உருவாக்கி வைத்திருந்த அதிதீவிர அழகியல் கோட்பாடுகள்- அதன் அடிப்படையில் அவர் வெளிப்படுத்திய கூரான விமர்சனங்கள் அவரை பிறரிடமிருந்து அந்நியப்படுத்தியிருந்தன. தனிப்பட்ட முறையிலும் நட்புப் பேண முடியாத தூரத்தில் அவர் இருந்தார். அவரை ஒரு நட்பு வளையத்துக்குள் கொண்டு வந்தது உங்கள் சாதனை தான்.
பன்முகக் கலாச்சாரம் இந்தியாவில் பல விசித்திர சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.. இந்த அனுபவத்தில் நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். எனது ‘அடிவாழை’ (1998) தொகுப்பில் ‘ திரை விழுவதற்கு முன்னால்..’ என்னும் அக்கதை இருக்கிறது.. வேடிக்கையாக இருக்கும். படித்துப்பாருங்கள். சந்தியா பதிப்பகம் தொகுப்பை மறுபதிப்புச் செய்கிறது.
அன்புடன்
ப.சகதேவன் (கிருஷ்ணசாமி)
அன்புள்ள ப.கிருஷ்ணசாமி அவர்களுக்கு,
நலம்தானே?
புனைவு என்பது வாழ்க்கையின் வேறு சாத்தியக்கூறுகளை பரிசோதனை செய்து பார்ப்பதுதானே? நான் அண்ணாச்சி இன்னொருவகையாக இருந்திருக்கலாமோ என எண்ணிப்பார்த்தேன், அவ்வளவுதான். வாழ்க்கை என்பது சாத்தியங்களின் ஆடல் என்பது ஐம்பது வயதுக்குமேல் தெரியவரும் உண்மை
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
  
 
   
   
   
   
  
