Jeyamohan's Blog, page 836
January 30, 2022
அறம், ஒரு பதிவு
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு பெரியப்பா வந்திருந்தார். எங்கள் அம்மாவின் அக்கா கணவர். வந்திருந்தார் என்பதை விட எங்கள் அப்பா அவரை வழியில் கண்டடைந்து கூட்டி வரப்பட்டிருந்தார்.இந்த 76 வயதிலும் எங்கள் அம்மாச்சி தன் 60 வயது மூத்த மகள் பற்றி தீரா கவலையும் நடுக்கமும் கொண்டிருக்க காரணம் எங்கள் பெரியப்பா.அத்தகைய குணம் உடையவர். அவர் குறித்து நானறிந்த ஒவ்வொரு தகவலும் எனக்கு பயத்தையும் வெறுப்பையும் மட்டுமே தந்திருக்கிறது. அத்தகையவர் எங்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
பாதயாத்திரை செல்கையில் பசியில் மயங்கி விழுந்திருந்தவரை எங்கள் அப்பா கண்டு அழைத்து வந்திருந்தார்.கிட்டத்தட்ட பரதேசி கோலம். எங்கள் அம்மா வெகு விரைவாக அவருக்கு சுட சுட சமைத்து உணவிட்டார். ரசமும் பருப்பு துவையலும். அவர் அப்படி ஒரு ஆவலுடன் அதை உண்டார். உணவுண்டு முடித்த பின் தன் முகத்தை மூடிக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதார்.சௌரியமா இரு என்று மட்டும் சொல்லிவிட்டு விடு விடுவென்று வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.எங்கள் பெரியப்பா நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது என் அன்னை வாழ்க்கை தான். அன்று என் அன்னையிடம் ஒரு அபூர்வமான சோபை இருந்தது.துளி வெறுப்பும் கோபமும் அற்ற கண்கள்.தாய் என்ற நிலையிலிருந்து ஒரு அணுவளவு அவர் கீழிறங்கவில்லை.ஒரு வேளை உணவிட்டதின் வழி அவர் தன்னை அது வரை தீண்டியிருந்த அத்தனை கொடிய நஞ்சினையும் மாணிக்கம்மாக்கி ஒளிர விட்டிருந்தார்.அன்றைய அந்த எளிய உணவின் ருசி அதன் பிறகு இன்று வரை அது போன்றதொரு உணவில் அமையவில்லை என்று என் அன்னையிடம் கூறிக் கொண்டே இருப்பேன். அது பசியாற்ற செஞ்சதுல்ல என்பார் என் அம்மா.
அறம் எனக்கு பிடித்தமான ஜெயமோகனின் சிறுகதைகள் தொகுப்பு நூல். அறம் எத்தகைய மகத்தான மானுட உணர்வு. அது நமக்குள் தொட்டெழுப்பும் உணர்வுகளுக்கு வார்த்தைகள் இல்லை. சிலவற்றை உணர்வென மட்டுமே அறிதல் முடியும். சொல் வடிவில் அடங்காது. அறம் குறித்தான என் அறிதல் அத்தகையது.நெகிழ்ந்து கண்ணீர் பெருக பெருக நான் வாசித்திருக்கிறேன். இன்னும் இன்னும் அத்தீரா மானுட பேரன்பின் மீது பெருங்காதலும் பெரும்பற்றும் கொண்டு என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.
அறம் தொகுப்பில் சோற்றுக்கணக்கு சிறுகதை எனக்கு மிக பிடித்தது.எழுத்தாளரின் பார்வையில் விரியும் இக்கதையில் அனைவரையும் ஆட்கொள்ளும் கதை தெய்வம் கெத்தேல் சாகிப்.திருவனந்தபுரத்தில் அசைவ உணவகம் நடத்தும் கெத்தேல் சாகிப் உணவிடுவதற்கு பணம் வாங்குவதில்லை. இயன்றவர்கள் கடை வாசலில் இருக்கும் உண்டியலில் தாங்கள் விரும்பிய தொகையினை போடலாம். கதைசொல்லி கிராமத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு படிக்க வருகிறான். மாமா வீட்டில் தங்கியிருக்கும் அவனுக்கு மனம் நிறைந்து உணவிடுவதில்லை அவன் மாமி. அவன் வீட்டிலும் கேட்கும் சூழல் இல்லாத வறுமை. பசி நிரந்தர உணர்வென அவனுடன் இருந்துக் கொண்டேயிருக்கிறது.தொடர்ந்த அவமதிப்புகளால் அவன் மாமா வீட்டிலிருந்து வெளியேறுகிறான்.படிப்பு பகுதி நேர வேளை என்று ஓயாது உழலும் அவன் கிட்டத்தட்ட ஒரு வேளை உணவு மட்டும் உண்கிறான்.அப்போது தான் கெத்தேல் சாகிப் கடை பற்றி அறிகிறான். ஆரம்பக்கட்ட தயக்கங்களையும் மன உளைச்சல்களையும் கடந்து அவன் அங்கு தொடர்ந்து உணவுன்கிறான்.
கெத்தேல் சாகிப் ஒரு அன்னையென அவன் மனமறிந்து உணவிடுகிறார்.அவன் படிப்பில் முதன்மை மாணவனாக திகழ்கிறான்.அவன் படித்த பல்கலைக்கழகத்திலே அவனுக்கு வேலைக் கிடைக்கிறது.இடையில் தான் வேலை பார்க்கும் கல்லூரியில் சீட்டு பிடித்து அவனிடம் பெரும் தொகை வருகிறது. அவன் அப்பணத்தை எடுத்துக் கொண்டு நேரே கெத்தேல் சாகிப் கடைக்கு செல்கிறான். அவன் மனம் தவிக்கிறது. தானும் ஓர் ஆளாகி விட்டதை கெத்தேல் சாகிப்பிடம் எப்படியாவது காட்ட விரும்புகிறார். உண்டியலை கொண்டு வர செய்து தன் கையில் இருக்கும் பணத்தை அதில் போடுகிறான். அது நிறைய இன்னொரு உண்டியல் வரவழைத்து அதிலும் போடுகிறான். ஆனால் ஒருமுறை கூட கெத்தேல் சாகிப் அவன் பக்கம் திரும்பவில்லை. புதிதாக கூச்சத்துடன் வந்த இரு பையன்களை மிரட்டி உணவுண்ண வைத்துக் கொண்டு இருக்கிறார். இவன் ஏமாற்றத்துடன் போய் அமர எப்போதும் போல் அன்றும் அவனுக்கு பிடித்த உணவை அவனை நேர்க் கொண்டு காணாது பரிமாறுகிறார். சட்டென்று அவனுக்கு புரிகிறது. அவர் கரங்கள் மட்டுமே அவனுக்கு சொந்தம். அதுவே அவன் அன்னையின் கரங்கள் என்று அவனை வளர்த்தெடுத்தவை என்றவன் கண்டடைகிறான்.
உணவிட்டு விருந்தோம்புவது என்பது பெண்ணின் படிமமாகவே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்படும்.முதன்முறையாக தேவதை கதைகளின் முதன்மை இடத்தில் ஒரு ஆண் சென்று அமருகிறார்.அம்மை தழும்புகள் நிறைந்த முகத்தில், குறைப்பாடுள்ள ஒற்றை கண் கொண்ட ஏழடி உயர ராட்சத உருவம் கொண்ட கெத்தேல் சாகிப்பில் எழும் மானுட அன்பும் கருணையும் காவியங்களில் காட்டப்படும் உணர்வுகளுக்கு இணையானது.அது தன்னியல்பில் வெளி வருகையில் நமக்கு காட்டும் உயரம் நம்மை வாழ்வில் பெரும் நம்பிக்கை கொள்ள செய்கிறது.ஆனால் அந்த தன்னலமற்ற அன்பின் நிலையினை அடைவதற்கு முன் நம் அத்தனை அக அழுக்குகளையும் எதிர்க் கொண்டு கடந்திடல் வேண்டுமல்லவா என்றும் தோன்றுகிறது.சில சமயம் இத்தகைய பேரன்பு நிலையை நம் அத்தனை சிறுமைகளையும் கடந்து நாம் சென்று தொட இயலுமா என்றும் ஐயம் எழுகிறது. ஆனால் அப்படியொரு நிலை அடைவதே அறம் சார்ந்த மானுட வாழ்வின் உச்சமல்லவா!!!
திவ்யா சுகுமார்
துளி, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
புனைவு களியாட்டத்தில் துளி சிறுகதையை வாசித்தேன். ஒரு வரியில் அக்கதையை சொன்னால் “நாமெல்லாம் ஒன்று ஆனா வேறு வேறு, வேறு வேறு ஆனா ஒன்று”
பணிக்காக 2016 இல் சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஒருமுறை அங்கிருந்த அறிவியல் மையத்தில் டார்வினின் Natural Selection பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன்.அதன் முடிவில் ஒரு காட்சி வரும். எல்லா உயிரினங்களும் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.அன்று உணர்ந்தது We are all connected. தேடியபின் அதன் டிரைலர் யூடூபில் கிடைத்தது. https://www.youtube.com/watch?v=KcwSiCVNIJQ
2019 ஈரோடு விவாத அரங்கில் மனதின் நான்கு அடுக்குகள் பற்றி சொன்னீர்கள்.ப்ரக்ஞை, ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியம். அன்று எனக்கு பெரிதாக புரியவில்லை.உங்கள் தளத்தில் பல பதிவுகளை படித்தபின் ப்ரக்ஞை மற்றும் துரியம் ஓரளவு புரிகிறது.இன்று உணரமுடிகிறது நாம் எப்படி இணைக்கப்பட்டுளோம்? நாம் துரியத்தில் இணைக்கப்பட்டுளோம். பிரம்மத்தின் ஒரு துளி. அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு துளி.ஒன்றான துளி, வெவ்வேறாக வளர்ந்த துளி. துரியத்தை உணரத்தானே ஞான மார்க்கம், பக்தி மார்க்கம்,கர்ம மார்க்கம் நமக்கு வழங்கப்பட்டது.இதில் பக்தி மார்க்கம் இறுதியில் அடையப்பட்டதாக இருக்கவேண்டும்.அப்படியென்றால் மனித வரலாற்றின் பெரும்பான்மையான மக்களுக்கு பயன்படும் பெரும் கண்டுபிடிப்புகளில் பக்தி மார்க்கமும் ஒன்று.ஞான மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் மின்சார விளக்கை வைத்து புரிந்துகொள்கிறேன்.இருவருக்கும் ஒளி தேவைப்படுகிறது. முதலமானவர்க்கு அதன் பின்னுள்ள தத்துவமும் வேண்டும், இரண்டாமானவருக்கு அதை பயன்படுத்தும் அனுபவ அறிவு மட்டும் தேவைப்படுகிறது.ஒளிதான் இலக்கு. விலங்குகளுக்கு அது வாசனை மார்க்கம்.கோபாலகிருஷ்ணனும், கொச்சுகேசவனும் தங்களை வேறுவேறாக உணர்கிறார்கள். கருப்பன் அதை முகர்ந்து விட்டான். இருவரையும் ஒன்றாக்க துரியத்தின் ஒருதுளியை இருவர் மீதும் தெளிக்கிறான். இருவர் மனதும் அதை உணர்ந்து கொள்கிறது.இதேதான் மனிதர்களுக்கும்.சாதியிலும்,மதத்தாலும் சண்டைபோட்ட அவர்கள் கண்ணாம்வீட்டு சரோஜாவின் பழைய நினைவால் ஒன்றென உணர்கிறார்கள்.
கதைசொல்லியின் அப்பாவும், தங்கையா நாடாரும் தங்கள் சாமிக்காக சண்டைபோட்டாலும் அந்தோணியாருக்கு வேண்டிக்கொள்கிறார்கள்.இந்த மனதை என்னால் அப்படியே உணரமுடியும். நான் ஏழாவது அல்லது எட்டாவது படிக்கும்போது என் தம்பி காணாமல் போய்விட்டான். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை.எங்கள் ஆத்தா(அம்மாவின் அம்மா) அவனை திட்டிவிட்டதால் அருகிலிருக்கும் அவன் நண்பன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். நாங்கள் பயந்து தேட ஆரம்பித்துவிட்டோம். அவனை தேடும் போது இந்து மதத்தில் பிறந்த நான் என் இஷ்டதெய்வங்களையும், ஏசுவையும், அல்லாவையும்,புத்தரையும், மஹாவீரரையும் வேண்டிக்கொண்டேன். அன்று என் மனதில் இருந்தது இவை மதங்கள்.அவர்கள் அந்த மதத்தின் தெய்வங்கள். அத்தருணத்தில் தம்பியின் அண்ணனாக எனக்கு தெரிந்த தெய்வங்களெல்லாம் அவனை காத்தருளட்டும் என்று மட்டுமே நினைத்தேன். அத்தனை தெய்வங்களும் எனக்கானது என்றுணர்ந்த தருணம்.
ஒருநாள் தம்பியிடம் கேட்டேன். மனிதனுக்கு கடவுள் முக்கியமா? மனிதன் முக்கியமா?. அவன் கடவுளென்று சொன்னான். நான் தர்க்கத்தோடு, உதாரணம் கொண்டு மனிதன்தான் முக்கியமென சொன்னேன். இன்றும் மனிதனுக்கு மனிதன் தான் முக்கியம்.மனிதன் முக்கியமென உணர கடவுள் முக்கியம் .
அன்புடன்
மோகன் நடராஜ்
   
காந்தி நாளை எப்படி இருப்பார்?
நாளைய காந்தி- தொகுப்பு- சுனீல்கிருஷ்ணன் வாங்க
இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று எண்ண முடிகிறது. அவருடன் சமகாலச் சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் இப்பதற்றமும், விலக்கமும் இருந்திருக்க வேண்டும்.
சுனில் கிருஷ்ணனின் நாளைய காந்தி- பொன்.முத்துக்குமார் விமர்சனம்January 29, 2022
உணர்வுகள், உன்னதங்கள்
 Sunset ca. 1850 Eugène Delacroix French
  மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…
Sunset ca. 1850 Eugène Delacroix French
  மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…
அன்புள்ள ஜெ
இன்று சோற்றுக்கணக்கு சிறுகதை இரண்டாவது முறையாக வாசித்தேன். கெத்தேல் சாகிப் கடைசி அந்த வெளிறிய நாயர் பசங்களுக்கு அதட்டி சாப்பாடு போடும் போது கண்ணீர் வந்துவிட்டது. ஒரு கணம் கெத்தேல் சாகிப் மாறி வாழனும்னு தோணுது. அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் வெங்கட்ராமன் ஐயா ஞாபகம் தான் வருது. அவர் இல்லனா இன்னிக்கி நிறைய பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் ஒன்னு, இலட்சியத்திலே உறுதியாக இருந்திருக்கிறாரு.ஒன்னும் சாப்பிட இல்லாம, ஒருவேளை மட்டும் கிடைக்கிறதை சாப்பிட்டுட்டு, கண்ணுல குழிவிழுந்து கஷ்டப்பட்டு படிக்கிற பசங்களுக்கு இவர் மாதிரி ஒருத்தர் இல்லனா நாய் கறி சாப்பிட்டு வாழவேண்டிய நிலைமை வந்திருக்கும், நினைச்சாலே நெஞ்சு பதறுது.
அவ்ளோ அருமையாக கறி பண்ற அவர் நினைச்சு இருந்தா பெரிய ஹோட்டல் போட்டு கோடிக்கணக்கில சம்பாதிச்சியிருக்கலாம். அதுல வர வருமானத்தில ஒரு சின்னபணம் மட்டும் எடுத்து அறக்கட்டளை மாதிரி வைச்சி இந்த மாதிரி பசங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கலாம்.(எவ்ளோ கீழா நினைச்சியிருக்கேன் னு தோணுது) ஆனால் அதில அவருக்கு நிறைவு கிடைச்சியிருக்காது.அவருக்கு பணம் மேலே லாம் ஆசை யில்லை. ஒருத்தன் பசியை போக்கிறதுல தான் அவருக்கு நிறைவு வருது. பசின்னா சொன்னேன், இல்ல. பசியோட சேர்த்து அவங்க மனசையும் நிறைக்கிறது தான் அவருக்கு நிறைவு. மொழி தெரியாம, ஆள் தெரியாம வெளியிருல இருந்து வந்து படிக்கிற பசங்களுக்கு நிராதரவா ஒருத்தர் கூட இல்லாதப்போ, ஒரு சின்ன மஞ்சள் கொழுப்பை எடுத்து வைக்கிறது மூலமா அவங்களுக்கு ரொம்ப நெருக்கமான ஆளா ஆகிவிடுகிறார். அந்த அன்பும், கனிவும், கணக்கு பார்க்காம சோறு போடுற கையும் அவரை ஒரு பெருந்தாயாக ஆக்கிவிடுகிறது.
ஆனால் கடைசி தோணுச்சு, ஏன் அவன் அத்தைபொண்ணு ராமலட்சுமியை கல்யாணம் பண்ணிக்கனும்னு. கைம்மாறு எதும் எதிர்பாக்காம கெத்தேல் சாகிப் சோறு போடுறப்போ, கைம்மாறு எதிர்பார்த்து சோறு போட்ட அத்தை சுப்பம்மாவுக்கு காசை கொடுத்து முடிச்சிருக்கலாமே..ஆனால் அது முறையாக இருந்திருக்காது.. பசியோட சேர்த்து மனசையும் நிறைச்சாதானே சோற்றுகணக்கை கடக்க முடியும்.அதைத்தானே சாகிப் செய்திருக்கிறாரு.அப்ப அவன் அத்தைட்ட உள்ள சோற்றுகணக்கை கடக்கனும்னு ராமலட்சுமியை கல்யாணம் பண்ணுனது சரின்னு தோணுது. ஆனால் கெத்தெலுக்கு அவன் பணம் போட்டது சோற்றுகணக்கை முடிக்க இல்லை. தெய்வத்துக்கு ஏது கணக்கு, எல்லாம் காணிக்கை தானே.
பணிவுடன்
சண்முகசுந்தரபாண்டியன் த
பின்குறிப்பு: இப்படி உணர்வுப்பூர்வமாக சிறுகதையை வாசிப்பது சரியா? கதை வாசித்த பின்பு வரிகள் நினைவு இருப்பது இல்லை.காட்சிகள் தான் ஞாபகம் இருக்கிறது. என் வாசிப்பை எப்படி மேம்படுத்துவது?
 John Martin
John Martinஅன்புள்ள சண்முகசுந்தர பாண்டியன்,
கடிதங்களை நேர்த்தமிழில் எழுத முயல்க. அது எதற்கென்றால் அது நம் சிந்தனைகளை மெல்லமெல்ல ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரும். நம்மை சீராக சிந்தனை செய்ய வைக்கும். நம் உரைநடையை நாமே படித்துச் செப்பனிட்டுக்கொண்டே இருந்தால்போது, நம் உள்ளம் அதற்கேற ஒழுங்கும் கூர்மையும் கொள்வதைக் காணலாம்.
சோற்றுக்கணக்கு கதை சொல்வது என்ன என்பதை நீங்களே எண்ணிப்பார்க்கலாம். எல்லாவகையான எண்ணங்களும் முக்கியமானவை. அவற்றினூடாக நீங்கள் உங்களை தெளிவுபடுத்திக்கொள்கிறீர்கள். ஆகவே இப்படிச் சிந்திக்கலாமா, இது சரிதானா என்றெல்லாம் கேட்பதில் பொருளில்லை. ஒரு கதையை வாசித்தபின் அதைப்பற்றி யோசிப்பதும், அதிலிருந்து வாழ்க்கைபற்றி எண்ணுவதும் மிகமிக உகந்த செயல்தான். அவ்வாறு சிந்திக்காமலிருப்பதே பிழையானது.
இக்கதையை இப்படி எண்ணிப்பாருங்கள். சோற்றுக்கணக்கு. சோற்றில் கணக்கு பார்க்கும் மனநிலைக்கு எதிராக சோற்றில் என்ன கணக்கு இருக்க முடியும் என்று கேட்கும் கதை இது, இல்லையா? நீங்கள் பேசுவதே சோற்றுக்கணக்குதான். சோற்றை நல்ல விலைக்கு விற்று அதில் ஒருபகுதியை தானம் செய்யலாமே என்பது வணிகக்கணக்கு. அந்தக் கணக்கு கொண்டவர்கள் வெற்றிகரமான வணிகர்கள் ஆவார்கள். அவர்களால் மனமுவந்து தானம் செய்யமுடியாது. அவர்களுக்கு வணிகம்தான் முக்கியம்.
வணிகத்தில் ‘மிச்சம்’ வந்தபின் தானம் செய்யலாம் என நினைப்பது பெரும்பாலும் நடக்காது. ஏனென்றால் எந்த வணிகத்திலும் அவ்வண்ணம் மிச்சம் என ஏதும் திரண்டு கண்முன் நிற்காது. ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் புதுமுதலீட்டுக்கான தேவை இருக்கும். அந்த முதலீட்டைச் செய்தே ஆகவேண்டும், இல்லையேல் வணிகப்போட்டியில் நிலைகொள்ள முடியாது. எப்போதும் வணிகத்தின் நிலை இதுதான். அது ஒரு சுழல்.
அத்துடன் வெற்றிகரமாக வணிகம் செய்ய ஒவ்வொரு ரூபாயாக கணக்குபோட்டு சேமிக்கும் மனநிலை வேண்டும். அது திரட்டும் மனநிலை. அந்த மனநிலை கொண்டவரால் கொடுக்க முடியாது. அவருடைய கனவெல்லாம் கைக்கு வரப்போகும் அடுத்த பணவரவு பற்றியேதான் இருக்கும். மேலும் மேலும் கனவுகளும் இலக்குகளும் வந்துகொண்டிருக்கும்.
ஆகவேதான் பெரும்பாலான வணிகர்கள் கொடை என ஏதும் செய்வதில்லை.. அவர்கள் செலவழிப்பதெல்லாம் அச்சத்தின் விளைவாகத்தான். ஆகவே சாமிகளுக்கு கொடுப்பார்கள். பரிகாரங்களுக்கு அள்ளிக்கொடுப்பார்கள். சோதிடர்களுக்கு அளிப்பார்கள். அறத்திற்காக, கருணைக்காக, கலையிலக்கியங்களுக்காக கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஆயிரம்கோடி ரூபாய்க்குமேல் ஆண்டுவணிகம் கொண்ட நிறுவனங்கள் பத்தாயிரத்துக்குமேல் உள்ளன. ஆனால் இங்கே எந்த கருணைச்செயலுக்கும் கலாச்சாரச் செயலுக்கும் நிதிக்கொடை வந்து சேர்வதில்லை
இந்தக்கதை பேசுவது கணக்குக்கு நேர் எதிரான மனநிலையை. கெத்தேல் சாகிப்பின் கொடை பற்றியதல்ல கதை. அவருடைய கணக்கற்ற உள்ளம் பற்றியது. கதைசொல்பவர் தனக்கு சாப்பாடு போடாதவர்களை மனதில் குறித்து வைத்திருந்தால், வஞ்சம் கொண்டிருந்தால் அதுவும் கணக்குதானே? அந்தக்கணக்கும் கீழானதே என அவன் உணர்வதே கதையின் மையம்.
கதையை வாசித்து உணர்வெழுச்சி கொள்ளலாமா? ஒரு கதை வாசகனை உணர்வெழுச்சி அசையச்செய்து அதன் வழியாக ஒரு வாழ்க்கைத் தரிசனத்தை அளிக்க முயல்கிறது என்று கொள்வோம். அதன் முன் ஒரு வாசகன் ’இல்லை, நான் உணர்வெழுச்சி கொள்ள மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பான் என்றால் கதையை அவன் தவிர்க்கிறான் என்றுதான் அர்த்தம். அதற்கு அவன் அக்கதையை படிக்காமலேயே இருந்திருக்கலாமே?
இசையை செவிகளை மூடியபடி கேட்பதுபோல, ஓவியத்தை கண்களைமூடி தடவிப்பார்ப்பதுபோல ஓர் அபத்தமான முயற்சி அது. சில அறிவிலிகள் அதை தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களில் இருந்தே இக்கருத்து நம் சூழலில் பரவுகிறது. இலக்கியத்துக்கே எதிரான கருத்து அது. உலகப்பேரிலக்கியங்களில் மிகப்பெரும்பகுதியை உணரமுடியாத மொண்ணைத்தனத்தையே இந்த மனநிலை நம்மிடம் உருவாக்கும்.
 John Martin
John Martinஇந்த மனநிலையை அடைந்திருப்பவர்கள் யார்? இயல்பாகவே மெல்லுணர்வுகளும் அழகுணர்வுகளும் இல்லாதவர்கள். இவர்கள் இரு வகையினர். அறிவுக்கூர்மை அற்ற வம்பர்களிடம் அந்த உயரிய உணர்வுகள் இருக்காது. எதையும் எதிர்மறையாக மட்டுமே அவர்களால் அணுக முடியும். வம்புகளிலேயே அவர்களின் உள்ளம் திளைக்கும். எங்கும் அவர்கள் இழியுணர்வுகளை, தீங்கை, அவநம்பிக்கையை, கசப்பை மட்டுமே காண்பார்கள்.
மிதமிஞ்சி தர்க்கபுததியை தீட்டிக்கொண்டு, வெற்றுத்தர்க்கவாதிகளாக ஆனவர்கள் இரண்டாம் தரப்பினர். அவர்களுக்கு அறிவுசார்ந்த ஓர் ஆணவம் உண்டு. எதை வாசித்தாலும் எதைக் கேட்டாலும் அந்த ஆணவத்தையே முன்னிறுத்துவார்கள். ஆணவத்தால் எல்லா உணர்வுகளையும் தடுத்துவிடுவார்கள். எந்த உன்னதத்தையும், வெற்றியையும் காணச்சகிக்காதவர்கள். உள்ளம் எப்போதுமே கீழிறங்கிக்கிடக்கும் தீயூழ் கொண்டவர்கள்
இவர்கள் எங்கும் தங்களையே முன்வைப்பார்கள். இலக்கியமே முக்கியமல்ல, தாங்கள் அதில் சொல்வதென்ன, தங்கள் இடமென்ன என்பதே முக்கியம். அதன்பொருட்டு எதையும் வளைக்கவும் திரிக்கவும் பிழையாக்கவும் இவர்கள் துணிவார்கள். இவர்களில் தங்களுக்குச் சாதகமாக அறிவுக்கருவிகளை உருவாக்கிக்கொள்பவர்கள் உண்டு. சென்றகாலங்களில் மதம், இலக்கணம் ஆகியவை இவர்களின் ஆயுதங்கள். இப்போது அரசியல் நிலைபாடுகள், அரசியல்சரிகள், கோட்பாடுகள் இவர்களுக்குப் பயன்படுகின்றன. அதற்கெல்லாம் தேவையான அடிப்படை வாசிப்பில்லாதவர்கள் சொற்பிழை, அச்சுப்பிழை தேடி அலைகிறார்கள்.
இவ்விரு சாராரும் இலக்கியம் வாசிக்க நேர்ந்தவர்கள், இலக்கிய வாசகர்கள் அல்ல. அவர்கள் இலக்கியம் வாசிப்பதென்பது இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் துரதிருஷ்டம்தான். அரசியல்சார்பு, ஒழுக்கச்சார்பு, அறச்சீற்றம் உட்பட பல பாவனைகளைக்கொண்டு இவர்கள் தங்களுக்கு இலக்கியம் பிடிகிடைக்காது, வெறும் பொதுக்கருத்துக்களைத்தான் எந்த இலக்கியத்திலிருந்தும் எடுத்துக்கொள்ள முடியும் என்பதை மறைத்துக்கொண்டே இருப்பார்கள்.
இலக்கிய வாசகன் என்பவன் இலக்கியத்தின் முன் நுண்ணிய உணர்வுநிலைகளுடன், கற்பனைத்திறனுடன், அறிவுபூர்வமான கவனத்துடன் நிலைகொள்பவன். தன் வாழ்க்கையனுபவங்களை இலக்கியம் வழியாக வளர்த்துக்கொள்பவன்.தன் உணர்வுநிலைகளை இலக்கியம் வழியாக தீட்டிக்கொள்பவன். தன் அறிவை இலக்கியம் வழியாக பெருக்கிக் கொள்பவன். அவ்வாறு இலக்கியம் வழியாக கிடைத்த பயிற்சியைக்கொண்டு மேலும் இலக்கியத்தை வாசிப்பவன்.
வாழ்க்கையே இலக்கியத்தை அறியவும் மதிப்பிடவும் அளவுகோல். ஒரு மெய்யான வாழ்க்கையனுபவத்தை அடைகிறீர்கள் அல்லது அறிகிறீர்கள். அப்போது உள்ளம் உருகுவீர்களா? ஆம் என்றால் அதேபோல அத்தகைய வாழ்வனுபவத்தை அளிக்கும் படைப்பை வாசிக்கையிலும் உளம் உருகலாம். அவ்வளவுதான் அதற்கான அளவுகோல். இலக்கியம் என்பது மொழியின் வழியாக நமக்கு அளிக்கப்பட்டு, நம் கற்பனை வழியாக நம்முள் விரியும் வாழ்க்கை அனுபவம். அதை நிகர்வாழ்க்கை என்கிறோம்.வாழ்க்கையிலுள்ள எல்லா உணர்ச்சிகளுக்கும் அங்கே இடமுண்டு.
உண்மையான உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் நம்மிடம் இயல்பிலேயே உண்டு. கூடுதலாக ஒரு நுண்ணுணர்வும் கூர்மையும் கொண்டவரே இலக்கிய வாசகர். ஒருவர் நம்மிடம் பொய்யாக உணர்ச்சிகளை உருவாக்க நினைத்தால், மிகையான உணர்ச்சிகளை காட்டினால் நம்மால் எளிதில் அடையாளம் காணமுடியும். உணர்ச்சிகளுக்கும் உணர்ச்சிநடிப்புக்கும் இடையேயான வேறுபாடு தெரியாதவர்கள் அல்ல நாம். அதுவே இலக்கியத்திற்கும் அளவுகோல். இலக்கியம் என்றபேரில் செயற்கையான, போலியான, மிகையான உணர்ச்சிகள் முன்வைக்கப்பட்டால் இயல்பாகவே அவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம், அவ்வளவுதான்.
 John Martin
John Martinஅவ்வாறு சில எழுத்துக்களில் போலியான, மிகையான உணர்ச்சிகள் வெளிப்படுகையில் அவற்றை இலக்கிய விமர்சகர்களும் படைப்பாளிகளும் நிராகரிப்பதுண்டு. போலியும் அசலும் கண்டுபிடிக்க முடியாத பாமரர்கள் அவற்றை கண்டு எல்லா உணர்ச்சிகளையும் நிராகரிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதுண்டு, பேசுவதும் உண்டு. உலகப்பேரிலக்கியங்கள் எல்லாம் உணர்ச்சிகரமானவை, வாசகனை மெய்யான உணர்வுவேகங்களை நோக்கிக் கொண்டுசெல்பவை என்பதை மறக்கவேண்டாம்.
கடைசியாக ஒன்று, உணர்ச்சிகள் பலவகை. வாழ்வின் துயரங்களையும், இடர்களையும், தனிமையையும், பொருளின்மையையும் கண்டு நமக்கு உருவாகும் உணர்ச்சிகளை pathos என்கிறார்கள். அவை இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகள். இலக்கியம் அவற்றைக்கொண்டே நெய்யப்படுகிறது. ஆனால் வாழ்க்கையின் உன்னதங்கள், மானுடத்தின் உச்சங்கள், இயற்கையும் பிரபஞ்சமும் உருவாக்கும் பேருணர்வுகள் ஆகியவை நம்மில் உருவாக்கும் உளஎழுச்சியும் நம்மை கண்கலங்க வைக்கும். அதை sublime என்பார்கள். இரண்டும் வேறு வேறு. இரண்டாவது ஒரு படி மேலானது.
சோற்றுக்கணக்கு வாசித்தால் நீங்கள் அடைவது துயரை கண்டு அடையும் துயர் அல்ல. அதன் விளைவான கண்ணீர் அல்ல. மானுட உச்சம் கண்டு அடையும் பெருநிலை, அதன் விளைவான நெகிழ்வு. அதை உன்னதம் sublime என்றே சொல்ல முடியும்.அதை அடைவதற்கு நமக்குள்ளும் ஒரு நல்லியல்பு இருக்கவேண்டும்.நாமும் மானுடப்பெருநிலை நோக்கி நம் கற்பனையால் எழமுடிந்திருக்கவேண்டும். அனைவராலும் இயல்வது அல்ல அது.
ஜெ
https://steemit.com/art/@steemswede/art-john-martin-s-sublime-landscapes
குமரித்துறைவி – கடிதங்கள்
நன்றி.
எடுத்த எடுப்பிலேயே நன்றி சொல்வதற்கு ஒரே காரணம் “குமரித்துறைவி”. நான் எனது 10 வயதில் எனது தந்தையை இழந்தவன், என் தாய் அப்போது 32 வயதில் இருந்தாள். அதன் பின் எனது தாயின் உடன்பிறந்த சகோதரிதான் எங்கள் குடும்பத்துக்கான தெய்வம். பெரியளவில் அல்ல, பெயருக்கு சொன்னால் கூட அவளே “தெய்வம்”. எனது கைபேசியில் அவளது எண் “சாமி” என்ற பெயரோடுதான் இருக்கும். அவளது மகனை விட நானே அவளை அதிகமாக “அம்மா” என்று அழைத்திருப்பேன். நிச்சயமாகவே. எனக்கும் எனது அம்மாவான அவளது தங்கைக்கும் அவளே “அன்னை”. எனது ஒவ்வொரு உயர்வுக்கும் எப்போதும் அருளிய தெய்வம் அவள். எனது வசைகளை முறுவலுடன் அனுமதிப்பவள். தனிமையில், எனது தவறுகளுக்காக கண்ணீர் கசிபவள். இவையனைத்தும் தந்தையில்லாத குழந்தையின் மீதான கரிசனம் என்று ஒரு போதும் என்னை உணரச்செய்யாதவள். என் முடிவுகளை சுபமாக்கும் “சுபத்திரை” அவள் (அவள் பெயர் சுபத்திரி).
ஆனால், எனது பக்தியோ “பீமபக்தி”. ஒரு போதும் எனது சாமியிடம் இறைஞ்சியது இல்லை. பேசுவததோடு மட்டும் சரி. என் சிறுவயதில்,எனக்கு “அம்மை”யிட்ட போது உடலெங்கும் கொப்புளங்கள். எடை பாதியானது. அப்போது சக்தி உபாசகரான எனது பாட்டி புஜையறையில் அவளது தெய்வமான இராஜராஜேஸ்வரியை வைதுகொண்டிருந்தாள். “ஒனக்கு இனிமே ஒன்னும் கெடயாதுடி முண்ட. நெதமும் நல்ல தின்னுட்டு எம்புள்ளய படுத்துறியே. அடி முண்ட. இனி நீ பட்டினிதான் போ” ஒரு சொல் மாறாமல் எழுதியிருக்கிறேன்.இதே போன்ற “பக்தி” தான் நானும் எனது “சாமி”க்கு காட்டியது. எனது வாழ்வை குமரித்துறைவியுடன் மிகச்சரியாக இணைக்கும் தருணம் ஒன்று உள்ளது. நான் நண்பர்களுக்கு புத்தக பரிந்துரை செய்யும் போது ஒரு சிறிய மேற்கோளுடன் செய்வதுண்டு. அவ்வாறு குமரித்துறைவி பரிந்துரை செய்த போது நான் சொன்ன மேற்கோள் (Tag Line) “மதுரையின் அன்னை, குமரியின் மகளாக வாழ்ந்ததை உணர்ச்சி கொப்பளிப்புடன் பாடும் பாணனின் பாடல்” என்பதாம்.
மகள் அன்னையாகும் தருணம் என்பது சம்சாரிக்கானது மட்டுமே. ஆனால் அன்னை மகளாகும் ஒரு தருணம் எனக்கு அதற்கு முன்னமே வாய்த்துள்ளது. ஆம். எனது அன்னை, எனது மகளாக மாற இருக்கிறாள். அவளது கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி) வரும் சித்திரையில் நடக்க உள்ளது. நான் குமரித்துறைவியை சென்ற ஆண்டு எனது தங்கையின் திருமணத்திற்குப்பின் வாசித்திருந்தேன். கண்கள் கலங்கியிருந்தன. கடைசி நிமிட முடிவுகள் எப்போதும் ஒரு பெரு நிகழ்வில் தவிர்க்க முடியாதது என உணர்ந்திருந்தேன். இப்போது ஒரு மகனாக நான் எனது அன்னையை மணக்கோலத்தில் நேரிடையாக காணும் பெருநிகழ்வை எதிர்நோக்கியுள்ளேன். அன்னை மீண்டும் மகளும் தருணம் அனைவருக்கும் வாய்க்காதுவே. இரு திருமண நிகழ்வுகளுக்கு இடையில் ஒரு புத்தக வாசிப்பு பெரும் வீச்சுடன் மாற்றத்தினை நிகழ்த்தியுள்ளது. குமரித்துறைவியின் முதல் வரி மேலும் அணுக்கமாகிறது.
“சித்திரை மாதம், வளர்பிறை நாலாம் நாளாகிய இன்று, வேணாட்டின் இரண்டாம் தலைநகராகிய இரணியசிங்கநல்லூரில் இருந்து அரசர் கொடிகொண்டிருந்த தலைநகரான திருவாழும்கோட்டுக்கு ஒற்றைக்குதிரையில் தனியாகச் சென்றுகொண்டிருக்கும் என் பெயர் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன்.” அதே சித்திரை மாதம் வளர்பிறையிலேயே என் அன்னை எனக்கு மகளாக காத்திருக்கிறாள். நான் மேலப்பாட்டம் கட்டளைக்காரன் லெட்சுமிநாராயணன். அதே மனநிலையில் இதை எழுதுகிறன். 59 ஆண்டுக்காலம் மதுரையின் அன்னை மீனாட்சி, குமரியின் மகளாக காத்திருந்தாளாம். எனது அன்னையும் அவளது 57ம் வயதில் எனக்கு மகளாக காத்திருக்கிறாள்.
குமரித்துறைவிக்காக நான் உங்களை என்றும் போற்றுவேன்.
ஆரத்தழுவ காத்திருக்கும்,
லெட்சுமிநாராயணன்
திருநெல்வேலி
   
எழுத வருபவர், கடிதம்
அன்பிற்கு உரிய ஆசிரியருக்கு,
வணக்கம்.நான் பூவன்னா சந்திரசேகர்.தும்பி சிறாரிதழ் மற்றும் தன்னறம் நூல்வெளியில் உடனிருக்கிறேன். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர் எஸ் மங்களம் அருகிலுள்ள இராக்கினார்கோட்டை எனும் குக்கிராமம் எனது ஊர். அத்தியாவசிய தேவைகளுக்கும் பத்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய நிலைகொண்ட ஊர். பேருந்து போக்குவரத்தோ பள்ளிக்கூட வசதியோ மட்டுமல்லாது அழும் பிள்ளையை அமைதிப் படுத்தும்வண்ணம் ஒரு மிட்டாய் வாங்கக் கூட இல்லாத ஊர். பள்ளிக்காலம் அற்புத கணங்களை எனக்குத் தந்தது.மிக நன்றாகப் படித்தேன்.தடகளப் போட்டிகளில் ஓடி ஜெயித்தேன்.காலப்பந்தாட்ட அணியில் இருந்தேன். கவிதைப் பேச்சு என வாய்ப்பிருந்த கதவுகளை எல்லாம் தட்டினேன். சீரான போக்கில் சென்ற நாட்களுக்கு முதல் முட்டுக் கட்டையாய் வீட்டின் பொருளில்லாச் சூழல் விழுந்தது. பள்ளிப் படிப்பு நிறைவானதும், நினைத்த கல்லூரியில் சேர இயலவில்லை.காரணம் பொருளாதார நெருக்கடி. நடை பழகும் குழந்தை முதன்முதலாய் தடுமாறி விழுவது போன்ற உணர்வு.அதுவரை அனுபவித்திராதது.இன்னும் நிறைய விழவேண்டி இருப்பதும் அப்போது தெரியவில்லை.
விரும்பாத ஒன்றை அனுசரணையின் அடிப்படையில் விரும்புதல் பாவனையையாவது செய்யக் கற்றுக் கொண்டேன். அவ்வாறு இல்லையென்றால் என்றால் என்னவாகுமோ என்ற உலநடுக்கம்.
பகுதிநேரமாய் பணிபுரிந்துகொண்டே படிப்பு. கல்லூரி நேரம் மற்றும் வேலைநேரம் போக மீந்திருந்த பொழுதெல்லாம் மனம் நொந்து புழுங்கிப் புலம்பவே செய்தேன். கால அட்டவணை அடிப்படையில் வாழும் சுழற்சி வாழ்க்கைமுறை, கொஞ்சம் கொஞ்சமாய் எத்தன மீதும் பிடிப்பற்ற மனநிலை வளர்த்துவிட்டது. “எதன் மீதும் எவர் மீதும் நன்னம்பிக்கை இல்லாத மனம் கொள்ளல்” எனும் இருண்மைக்குள் நான் மெல்ல அமிழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். படிப்பின் மீது நான் வைத்திருந்த பாவனை விருப்பம் வெட்டவெளி கற்பூரமாய் கரைந்தோடிப் போயிற்று.
கல்லூரி இடைநிற்றலுக்குப் பிறகு,எதனிடமிருந்தோ விடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த என்னைக் குடும்பச் சூழல் முழுநேர வேலைக்குள் தள்ளியது. வாழ்விலேயே முதல் முறையாக வீடு அப்போது என்னை நோக்கி எதிர்பார்ப்பொன்றை வளர்க்கத் துவங்கியது. அம்மாவுக்கு கற்பப்பை நீக்க அறுவைச் சிகிச்சை. அப்பா, வீடு கட்ட வாங்கிய கடனில் விழுந்துவிட்டார்.குறைந்தது என் பங்காக இருபதாயிரமாவது நான் அம்மாவின் மருத்துவத்துக்குக் கொடுத்தாக வேண்டும். அந்த நேரம் ஒரு சிறிய உணவகத்தில் வேலையிலிருந்தேன்.அந்த சமயத்தில் நான் சிறிதளவு வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வாசிப்பு தீவிரமான ஒரு சமயத்தில் எழுதவேண்டும் எனும் உந்துதல் தோன்றவே, எதையாவது எழுதினேன்.உணவாக வேலைநேர அளவும் அந்த வேளையில் இருக்கும் விற்பனை மனத்தால் செய்யப்படும் உணவு தரத்தின் மீதான அவர்களின் சமரசமும் என்னை நாட்பொழுதில்லாமல் அனத்திக் கொண்டிருந்தது. உள்ளார்ந்த புழுக்கம் என்னை அவ்விடம் விட்டு நீங்க வேண்டுமென்றது. எனக்கும் அது தான் நல்லதாகப் பட்டது. இவ்வாறாக நான் எப்போதெல்லாம் அந்த பணியை விட்டு வெளியேற எத்தனித்தேனோ அபொழுதெல்லாம் குடும்பம் என் மீது ஏதேனுமொரு எதிபார்ப்பை வீசியபடி இருந்தது.
பின் என்னைச் அந்தச் சூழலுக்குச் சமாதானப்படுத்திக் கொண்டு, கிடைத்த நேரம் படித்தேன்.கொஞ்சம் பயணம் செய்யத் துவங்கினேன். அவ்வாறான பயனமொன்றின் வழியே தான் குக்கூ காட்டுப்பள்ளிக்கும் முதன்முறை போய் வந்தேன். குக்கூ சொந்தங்களினூடான நட்பு, எனக்கு கலங்கலான வாழ்வின் மீது தெளிச்சியான பார்வையைத் தந்தது. அவர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளுக்கு எப்பாடு பட்டாவது போக முயற்சிப்பேன். அவ்வாறாகத் தான் யூமா வாசுகிக்கு வழங்கப்பட்ட தன்னறம் இலக்கிய விருது விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வு முடிந்த அன்று இரவு, ஒரு மொட்டைமாடியில் சிவராஜ் அண்ணாவுடனான ஒரு உரையாடல் என்னை எல்லா வகையிலும் மீட்டேடுப்பதாய் இருந்தது.குடும்ப அமைப்பு எந்நிலையிலும் தன் எதிர்பார்ப்புகளை நிறுத்திக் கொள்ளாது என உணர்ந்து, உணவகத்திலிருந்து வெளியேறினேன்.திசை கலங்கி நின்ற பொழுதில் தான் சிவராஜ் அண்ணா எனக்கான பற்று கையாகி, தன்னறம் நூல்வெளியின் பயணத்தில் உடனிருக்குமாறு செய்தார். என்னுள்ளிருந்த சிந்தையிடர்களிலிருந்து நான் மீள உங்களின் தன்மீட்சி நூலுக்கு பெரும் பங்குண்டு. இப்போது என் வாழ்வு முன்னாட்களைவிட்டு முற்றிலும் மாறுபட்டது. குடும்பம் நெருக்கடி செய்யத்தான் செய்கிறது.செய்தாக வேண்டியதைக் கட்டாயம் செய்து தான் வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இப்போது நான் நிறைய வாசிக்கிறேன். நிறைய எழுத வேண்டும் என நினைக்கிறேன். சில மாதங்களாக உங்களது வலைதளத்தில் உள்ள சிறுகதைகளை வாசித்து வருகிறேன். ஆறு மாதங்களுக்கு முன், அந்த வாசிப்பின் உந்துதலால் ஒரு சிறுகதையை நானும் எழுதவேண்டும் என தீர்மானமாய் எண்ணிக்கொண்டேன். அந்த சிறுகதைக்கான தலைப்பு “அச்சாரம்”. சமீபத்தில் “பதாகை” இதழில் வெளியானது.
ஐந்தாறு மாதங்களாகவே, எழுதத் தொடங்கியும் உருப்பெறாமலேயே கிடப்பில் இருந்தது அந்த கதை.
ஆனால்,அதை நான் தான் எழுதியாக வேண்டும், என்ற சிறு தவிப்பின் காரணமாக சமீபத்தில் நிறைவு செய்தும்விட்டேன்.
ஒரு கற்பனைக் கருவை எனக்குக் கையாளத் தெரியுமாவெனத் தெரியவில்லை. அதை இனிவரும் நாட்களில் கட்டாயம் முயன்று பார்ப்பேன்.
இந்த “அச்சாரம்” கதை முழுக்க என் தாத்தனின் கதை. ஆடு, மாடு,பட்டி என வாழ்ந்து செத்தவர். கோவில் கொடை விழாக்களில் கூட, பட்டி உயிர்களுக்கு தனி அர்ச்சனை செய்தவர். மாட்டை விற்று வாங்கிய காசைச் செலவழிக்க மனங்கசந்து உலையடுப்பில் வீசியவர். அவருடைய கதையை நான் எழுத வேண்டும் என நினைத்ததின் இம்மி அளவு இந்த கதை.
அச்சாரம்,நான் முதன்முதலாய் எழுதத் தொடங்கிய கதை மற்றும் எழுதி முடித்த கதை. உங்களது எழுத்து வழி நானடைந்த உந்துதலால் எழுதப்பட்ட கதை ஆதலால்,அதை உங்களின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என ஆசைப்பட்டேன். கதைக்கான பின்னூட்டத்தை கடித்தத்துடன் இணைத்துள்ளேன். அதை நீங்கள் வாசித்தளிக்கும் ஒற்றைச் சொல்லை,செயலூக்க விசையென கொண்டு மனநிறைவாய் மேலும் மேலும் செயல்படுவேன்.
நன்றியுடன்,
பூவன்னா சந்திரசேகர்
சிறுகதைக்கான இணைப்பு: https://padhaakai.com/2021/11/28/acharam/
அன்புள்ள பூவன்னா சந்திரசேகர்,
சிவராஜ் சொன்னது மிகச்சரியான சொல். ஒரு மனிதன் குடும்பத்துக்கான கடமைகளை ‘முடித்துவிட்டு’ செய்யவேண்டும் என்றால் எதையுமே செய்ய முடியாது. குடும்பம் என்றல்ல, வணிகம் உட்பட எல்லா உலகியல் அமைப்புக்களும் தீராப்பசி கொண்டவை. முழுமையாகவே நம்மை கேட்பவை.
நமக்கு பிறரிடம் கடமைகள் உள்ளன, அவற்றைச் செய்தாகவேண்டும். கூடவே நமக்கு நம்முடனும் சில கடமைகள் உள்ளன. அவற்றையும் விடக்கூடாது. நீங்கள் எழுதவேண்டும் என உள்ளூர விரும்பினால் அதில் சமரசமே செய்துகொள்ளவேண்டாம்
ஜெ
கீதை கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். சென்ற மாதத்தில் கோவிட் காரணமாக என் நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தார். மீண்டும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்ந்தேன். உங்கள் தளத்தில் கீதையின் உரைகள் மற்றும் கீதை பற்றிய கட்டுரைகளை படித்தேன். கர்மயோகம் வரை உங்கள் உரை புதிய திறப்பாக இருந்தது. நடைமுறைக்கு உகந்ததாகவும், கீதையின் உண்மையான விளக்கத்தை விவரிப்பதாகவும் இருந்தது. சாங்கிய மற்றும் கர்ம யோகத்தை நான் இவ்வாறு புரிந்து கொண்டேன்.
வாழ்வில் கீதா முகூர்த்த சமயங்களில் (பொருளின்மையை உணரும் தருணங்கள்), நமது செயல்களுக்கு உள்ள நடைமுறை பலன்களை (புகழ், பணம் ) உணர்ந்து பலன் கருத்தியாவது செயல்களில் ஈடுபடுவது.சிலருக்கு, அவர்கள் செய்யும் செயல்களால் பணமோ புகழோ கிடைக்காது என தெளிவாக தெரியும் போது , அந்த செயலை செய்யும் போது அவர்கள் அடையும் முழுமையின் காரணமாக செயலில் ஈடுபடுவது.
உங்கள் சிறுகதைகள் தற்பொழுது நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. உங்கள் கீதை உரையையும் ஒரு தனி நூலாக கொண்டு வந்தால் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் வாசகனாக ஒரு வேண்டுகோள் கீதையின் மற்ற யோகங்களும் நீங்கள் உரை எழுத வேண்டும்.
என் கனவுகளில் நீங்கள் என் தந்தை ஸ்தானத்தில் வருகிறீர்கள். நான் வாழ்வில் நெருக்கடியாக உணரும் தருணங்களில், பொருளின்மையை உணரும் தருணங்களில் உங்கள் கட்டுரைகள், youtube விடியோக்கள் மற்றும் நூல்களே பற்று கோடாக உள்ளது. மீண்டும் வெண்முரசு படித்துக்கொண்டுள்ளேன். மிகவும் நன்றி.
அன்புடன்
அருண்
அன்புள்ள ஜெ
உங்கள் கீதைஉரை சொற்பொழிவு மற்றும் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன். கீதை போன்ற நூல்களை நாம் மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமுள்ளது. ஏனென்றால் அவை மூலத்தரிசனங்கள். அவற்றை நாம் நம் வாழ்க்கையில் வைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு சொற்பொருளோ பொழிப்புரையோ போதாது. அனுபவ உரை தேவையாகிறது. அத்தகைய அனுபவ உரையாகவே உங்கள் பேச்சுக்களும் எழுத்துக்களும் உள்ளன. விரைவில் நீங்கள் நல்ல நூல்களாக அவற்றை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கீதைக்கு இருக்கும் பல உரைகள் சென்ற காலகட்டத்தின் மனநிலையை முன்வைப்பவை. நாம் காலத்தால் பின்னகர முடியாது. இன்றைக்கு நவீன வாழ்க்கையில் இருக்கும் ஒருவரின் உரைகள்தான் இன்று அவசியமாகத் தேவைப்படுகின்றன
ஆர்.எம்.குமார்
குழந்தைவதை
அன்புள்ள ஜெ.
இன்று ஊடகங்கள் அனைத்திலும், குழந்தைகளை முன்னிறுத்தி, பாடல், ஆடல்,நகைச்சுவை, போட்டிகளும், மிகப்பெரிய பரிசுத்தொகைகளும், அதற்கான மெனக்கெடல்களும், அபரிமிதமாக உள்ளது. குழந்தைகளும், பெற்றோரும் கிட்டத்தட்ட “உயிரை பணயம்” வைத்து இதில் கலந்து கொள்கின்றனர்.
“Child prodigy “எனும் “குழந்தை மேதைகள் ” பற்றி எப்படி புரிந்து கொள்வது? முன் எப்போதும் இந்த அளவு குழந்தைகள் திறமை சார்ந்து நம் மக்கள் கவனம் செலுத்தி உள்ளனரா? இந்த மேடைகளில் ஏறாத அல்லது சோபிக்காத குழந்தைகள் ” மக்கு ரகம்” என்கிற முடிவுக்கு தாய்மார்கள் வந்துவிட்டனர். 80-90 களில் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவன் மட்டும் தான் மீதி 39 மாணவர்களுக்கு முன் மாதிரி, இன்று இப்படி பல “முன் ,”மாதிரிகள்” வந்து விட்டது. ஒரு குழந்தை என்ன தான் செய்ய வேண்டும்?
“இந்த குழந்தை மேதைகள்” மேற்கொண்டு என்னவாகிறார்கள்?இன்னும் 20-30 வருடம் கழித்து என்ன தேவைப்படும் ,அதற்கு இப்போது எந்த துறையை தேர்ந்தெடுப்பது, என்ன படிப்பது என்கிற தெளிவு, யுவாலுக்கே இன்னும் சரியாக தெரியவில்லை, நம் பெற்றோர் பற்றி கேட்கவே வேண்டாம்.
உங்கள் சிந்தனையை அறிய விரும்புகிறேன்.
அன்புடன்
செளந்தர்.G
அன்புள்ள சௌந்தர்,
நான் குழந்தைப்பத்திரிகைகளை அடிக்கடி வாசிப்பதுண்டு. அவற்றில் எல்லா இதழ்களிலும் இருக்கும் செய்தி ‘ஆறுவயதிலேயே மிருதங்கம் வாசிக்கும் சிறுவன்’ ‘ஒன்பது வயதில் குத்துச்சண்டை போடும் சிறுமி’ வகை செய்திகள். ஒரு குழந்தை இயல்பான திறமையுடன் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை என்றும் அது இளமையிலே அசாதாரணமான திறனுடன் இருந்தால்தான் அதில் ஆச்சரியம். யானை நடனமடுவதைப்போல.குதிரை பேசுவதைப்போல.
இந்த பாமர மனநிலையின் வெளிப்பாடு குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கிறது. திறமைசாலிகள் குழந்தைப்பருவத்திலேயே மேதமையை வெளிப்படுத்துவார்கள் என நம் ஊர் மொண்ணைப்பெற்றோர் நினைக்கிறார்கள். ஆகவே தங்கள் குழந்தையை மேதையாக ஆக்கும்பொருட்டு கடுமையான பயிற்சிகளுக்கு ஆளாக்குகிறார்கள். அவர்களை காட்சிப்பொருளாக கொண்டுசென்று நிறுத்துகிறார்கள். அவர்கள் அவ்வண்ணம் ஆகவில்லை என்றால் ஏமாற்றமுற்று அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கி தாங்களும் துன்புறுகிறார்கள். அவ்வாறு ஆன குழந்தைகளை மேலும் மேலும் எதிர்பார்த்து வதைக்கிறார்கள்.
மெல்ல மெல்ல இது ஒரு வணிகமாக ஆகிவிட்டிருக்கிறது. தொலைக்காட்சிகள் குழந்தைகளைச் சித்திரவதை செய்கின்றன. இந்தப்போக்கு பேரழிவை உருவாக்குவது. இந்த அற்பர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இன்று சாதனையாளர்களாக அறியப்படும் மேதைகள் எவருமே குழந்தைப்பருவத்தில் மேதையாக ஆனவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கை வழியாக உருவாகி வந்தவர்கள்
ஜெ
குழந்தைமேதைகள்கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-13
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் பதிமூன்றாவது வெண்முரசு கூடுகை, இம்மாதம் 30ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” யின் 14 முதல் 17 வரையுள்ள இறுதிப் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
வேட்டைவழிகள்அன்னைவிழிமாயக்கிளிகள்குருதிகொள் கொற்றவைவெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 30-01-22, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
January 28, 2022
காதலின் இசை-அருண்மொழிநங்கை
 சென்ற சில வாரங்களாக அருண்மொழி இசை பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறாள். பல கட்டுரைகள் சுவாரசியமானவை. சில தமிழ் கீர்த்தனைகள்- சில குரல்கள்- சில பித்துக்கள். கருமையின் அழகு போன்றவை. இசை சார்ந்து வாசிக்க விரும்புபவர்கள் அவற்றில் பல ரசனை நுட்பங்களை காணலாம். அவள் இங்கே இரவுபகலாக இந்துஸ்தானியும் கர்நாடக சங்கீதமும் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் ஊ சொல்றியா மாமா கேட்டுக்கொண்டிருந்தேன். கூடவே அவள் சுட்டிக்காட்டிய இந்த இசையையும் அவ்வப்போது கொஞ்சம் கேட்டேன்.
சென்ற சில வாரங்களாக அருண்மொழி இசை பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறாள். பல கட்டுரைகள் சுவாரசியமானவை. சில தமிழ் கீர்த்தனைகள்- சில குரல்கள்- சில பித்துக்கள். கருமையின் அழகு போன்றவை. இசை சார்ந்து வாசிக்க விரும்புபவர்கள் அவற்றில் பல ரசனை நுட்பங்களை காணலாம். அவள் இங்கே இரவுபகலாக இந்துஸ்தானியும் கர்நாடக சங்கீதமும் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் ஊ சொல்றியா மாமா கேட்டுக்கொண்டிருந்தேன். கூடவே அவள் சுட்டிக்காட்டிய இந்த இசையையும் அவ்வப்போது கொஞ்சம் கேட்டேன்.
இரண்டுவகைகளில் அருண்மொழியின் கட்டுரைகள் முக்கியமானவை. அவள் முறையாக இசை கற்றுக்கொண்டவள் அல்ல. இசையின் இலக்கணமும் தெரியாது. ஆனால் இசையில் பெரும்பித்துடன் மூழ்கியிருக்கிறாள். அவள் எழுதியிருக்கும் இக்கட்டுரைகளும் பித்து பற்றியவை. ஓர் உள்ளம் எப்படி இசைக்குள் நுழைகிறது, அதன் உணர்வுகளென்ன என்பது பற்றிய நேர்மையான, தீவிரமான பதிவுகள் இவை. இன்னொரு பக்கம் அருண்மொழி இசைக்கலைஞர் அல்ல, மொழிக்கலையே அவளுடையது. ஆகவே இவை ஓர் எழுத்தாளர் இசையை அணுகுவதன் பதிவாகவும் உள்ளன.
குறிப்பாக இந்தக்கட்டுரை முக்கியமானது. மொகல் இ அஸம் பற்றிய வரலாற்றுத்தருணத்துடன் இணைந்து இசைபற்றி எழுதியிருக்கிறாள். நான் இசையை எப்போதும் அப்படித்தான் அணுகுகிறேன். எனக்கு அவை வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அவை நிகழ்ந்த வரலாற்றுத்தருணத்தின் சாட்சியங்களும்கூட. ஆனால் இந்த பித்து எனக்கு இசையில் அமைவதில்லை.
   
சில தமிழ் கீர்த்தனைகள் – சில குரல்கள் – சில பித்துகள் – 2
சில தமிழ் கீர்த்தனைகள்- சில குரல்கள்- சில பித்துக்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   
   
   
   
   
   
  
