Jeyamohan's Blog, page 840
January 23, 2022
புத்தாண்டு நாள்
அன்பு ஜெ,
“உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்பதை முழுக்க முழுக்க உணர வைத்தது உங்களின் செயல் நோக்கிய தீவிர உந்துதல் தான். ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக! என்பதை நோக்கியே தீவிரத்துடன் வாழ்க்கையை செலுத்துகிறேன். உண்மையில் “நான்” கரைந்து கொண்டே வருகிறது ஜெ.
வாழ்க்கையை நோக்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு. இதை சாதிக்க வேண்டும் இது கிடைக்க வேண்டும் என்ற எந்தப் பிரயத்தனமும் இல்லை.. ஒவ்வொரு நாளும் உச்சத்தை வாசிப்பின் வழி எழுத்தின் வழி அடையும் வரை செல்கிறேன். அன்பு நிறை மனிதர்கள் சூழ இருக்கிறேன். மகிழ்வாக இருக்கிறேன். எல்லாமே உங்களால் மட்டும் தான். “பூர்வ ஜென்மத்து பந்தம்” என்ற வரியை நீங்கள் சொன்ன போது உள்ளூர மகிழ்வாக அதே சமயம் நடுக்கமாகவும் இருந்தது.. இதையே தான் நானும் நினைத்தேன். நான் பிறந்து இந்த இருபத்தியெட்டு வருடங்களாக தேடலை நோக்கியே இருந்திருக்கிறேன். தேடலின் கண்டடைதல் நீங்கள் தான். உங்களுக்குப்பின் விஷ்ணுபுரத்திற்குப் பின் நான் மறுபடி புதிதாகப் பிறந்து கொண்டேன். இந்த உயிரின் உச்ச தருணம் உங்களைக் கண்டடைந்தது தான். உங்கள் எழுத்துக்களின் உரையின் சிந்தனை வழி அது மேற்கொள்ளும் பயணத்தை நான் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும் மேலுமென உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன்.
இந்த வி.பு விழாவில் அஜி, விஷால், கிஷ்ணன் சார், சீனுவுடன் பேசக் கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொண்டேன். நிறைய அறிதல்கள் ஜெ.. நீங்கள் உலக இலக்கியங்கள் பற்றி சொல்லக்கூடியதெல்லாம் விளங்கிக் கொள்ள முடிந்தது இந்தமுறை. எவ்வளவு வாசிக்க வேண்டும்! அறிந்து கொள்ள இன்னும் அதிகமிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த பயணத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறேன்… கோட்பாடுகள், தத்துவங்கள் தனியாகவும் கூடவே உலக இலக்கியங்களையும், இந்திய இலக்கியங்களையும் வாசிக்க வேண்டும். தமிழிலக்கிய மரபை குறிப்பாக நவீன தமிழ் இலக்கிய மரபை அதன் மாற்றங்களை மேலும் கூர்மையாக அணுக வேண்டும் என்று கண்டேன். இது தவிர தத்துவம் மற்றும் கலை சார்ந்த அறிவையும் பெருக்கிக் கொள்ள விழைகிறேன். தத்துவத்திற்கு ஸ்ரீனி மாமா மற்றும் நண்பர்களுடனும்.. கலை பற்றிய அறிதலுக்கு ஜெயராமுடன் சில முன்னெடுப்புகளும் செய்கிறேன். வெண்முரசு பயணமும் நிகழ்நது கொண்டிருக்கிறது. மிக முழுமையாக உணர்கிறேன் ஜெ. புனைவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். புனைப்பெயரில். அது சரியாக உங்களை தானாக வந்து சந்திக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். நான் சொல்லப்பட வேண்டியது என்று உண்டானால் அது நிகழட்டும் ஏன்றே தோன்றுகிறது ஜெ.
இலக்கியத்துக்குள்ளும் உலகாயத மனிதர்களை கண்ட போது முதலில் விளங்க முடியவில்லை. ஆனால் இப்போது உணர்ந்து கொள்கிறேன். எங்குமே இப்படியான மனிதர்கள் இருப்பார்கள். அதைக் கடக்க வேண்டும் அல்லது வேடிக்கை பார்க்க வேண்டுமென்று தெரிந்து கொண்டேன். ஆனாலும் இலக்கியம் எனும் மதுரத்திலேயே பித்தாகிவிடாமல் நீங்கள் சொல்வது போல உலகாயதத்திலும் ஒரு கால் வைத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்கிறேன். இரண்டையும் சமநிலையோடு எதிர் கொள்ள முற்படுகிறேன்.
உங்களின் புத்தாண்டு உரையை இப்போது தான் கேட்டேன். எனக்காக அஜி அனுப்பித் தந்தார். “தன்னைக் கண்டடைதல்” என்பதை நோக்கிய பயணத்தைப் பற்றி கூறியிருந்தீர்கள். அது நோக்கியே பயணப்படுகிறேன். மேலும் மேலுமென கண்டடையப்போகும் இந்த பயணத்தில் நீங்களும் உங்கள் எழுத்துக்களும் சிந்தனைகளும் என்னுடனிருக்கும் ஜெ.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ. நீங்கள் என் மேல் பொழியும் அன்பிற்கும் கனிவிற்கும் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். உங்களை என் வாழ்வில் அளித்த கடவுளுக்கு நன்றி.. உங்களால் தான் இந்த “நான்” உருவாகி வருகிறேன். அன்பு முத்தங்களும் அணைப்பும்.
பிரேமையுடன்
இரம்யா. 
அன்புள்ள இரம்யா,
நான் இவ்வாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை சென்னையில் வைக்க முடிவுசெய்ய காரணம் 2ஆம் தேதி அருண்மொழியின் நூல் வெளியீடு சென்னையில் இருந்ததனால். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தமையால் 20 பேருக்குள் மட்டுமே இருந்தோம். மகாபலிபுரம் அருகே ஒரு ஓய்வு விடுதியில் கூடினோம். நான் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி வழக்கம்போல ஒரு சிறிய உரையை ஆற்றினேன். எட்வர்ட் மஞ்ச் ஸ்பானிஷ் ஃப்ளூவில் சாவின் அருகே சென்றுவிட்டு மீண்டதை ஒட்டி வரைந்த தற்சித்திர ஓவியங்களைப் பற்றி தொடங்கி நெருக்கடிகள், அவற்றிலிருந்து கற்று மேலெழுதல் பற்றி.
ஒரு சிறிய கூடுகை. உரை பதிவுசெய்யப்படவில்லை. பத்து நிமிட உரைதான். இது அந்நாளைப் பற்றிய ஒரு பதிவாக இருக்கட்டும்
ஜெ
புவியரசு ஆவணப்படம் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். மூன்று மாதங்களுக்கு முன்னர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கோவையில் ஏற்பாடு செய்திருந்த புவியரசு 90 நிகழ்வு முடிந்ததும், Shruti TV வெளியிட்டிருந்த உரைகளை அன்றே கேட்டேன். உங்கள் உரையில் நீங்கள் அவரைப் பற்றி கூறியதையும், புவியரசு ஏற்புரையையும் கேட்டு வியந்துபோயிருந்தேன். இப்படிப்பட்ட ஆளுமையின் நூல் என் வீட்டில் ஒன்றுகூட இல்லையா என தேடினேன். என் திருப்திக்கு ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’, தமிழ் மொழிபெயர்ப்பு என்னிடம் இருந்தது. அதில் உள்ள கவிதைகள், புவியரசுவின் மொழிபெயர்ப்பு. அதே நாள், உங்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுதுகூட, ஒரு ஆளுமையை அறிந்துகொண்ட பிரமிப்பு மாறாமல் காணொளியில் கேட்டதைக் கூறி உங்களிடம் மேல் விபரங்கள் கேட்டேன்.
நான் இலக்கியம் என்று எதையெல்லாம் நம்புகிறேனோ அதை மறுக்கக்கூடியவருக்கு நாங்கள் எடுக்கும் விழா என்று ஒரு முறுவலுடன் ஆரம்பித்து, புவியரசின் விவாதப்போக்கையும், இலக்கியத்தில் வானம்பாடியின் பங்கையும் விவரிக்கிறீர்கள். சுந்தரராமசாமியிடமிருந்து தாங்கள் வேறுபடும் இடங்களை குறிப்பிட்டு, சுவற்றில் எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும் வாய்ப்பு உண்டு என்று சொன்னதை நினைவு கூறுகிறீர்கள். சில தருணங்களில் சீற்றம் கவிதை, சில தருணங்களில் அங்கதம் கவிதை என பல விளக்கங்கள் தந்துவிட்டு புவியரசின் கவிதைகளின் சிறப்பை எடுத்து வைக்கிறீர்கள். அவரது மொழியாக்கத்தில் வெளிவந்த கரம்சௌ சகோதரர்கள், நூறாண்டுகள் கழித்தும் வாசிக்கப்படும் படைப்பு என்று பாராட்டுகிறீர்கள்.
புவியரசோ ஏற்புரையில், நீலத்தின் வாசகனாக, ‘நீலம் முன்னூறுபக்க நூல் மட்டுமல்ல, முழுநீளக்கவிதை என்று விழாவில் சொல்கிறார். உங்களின் முன்னுரையில் அவரின் ஆள்மையில் ஆழ்ந்த எனக்கு, அவரது உரையில், நீலம் நூலின் வாசகனாக எனக்கு அணுக்கமாகிவிடுகிறார். ‘பாரதிக்கு கண்ணன் பாட்டு, ஜெயமோகனுக்கு நீலம்’ என்று நான் சொல்ல நினைத்த நாட்கள் உண்டு. புவியரசின் உரை கேட்டதும், அத்தாட்சி பெற்றவனாக இப்பொழுதெல்லாம், என் உரையாடல்களிலும், பதிவுகளிலும் அப்படிச் சொல்லத் தயங்குவதில்லை. நீலம் பற்றி அவர் பேசும்பொழுது நான் அவர் 90 வயதானவர் என்பதை மறந்துவிட்டிருந்தேன்.
தளத்தில் இன்று புவி 90 ஆவணப்படம் வெளியிடப்பட்டதும் ஒரே அமர்வில் பார்த்துவிட்டேன். அவர் வீட்டுக்கு சென்று உடன் அமர்ந்து பேசியதுபோல் எடுத்துள்ள படம். சக்திவேலுவை எடுத்துவிட்டு நம்மை வைத்துக்கொள்ளவேண்டியதுதான். இயல்பான பேச்சு. நேற்றுத்தான் நடந்ததுபோல் சொல்லும் நினைவாற்றல். அப்பா, நாடகம், வானம்பாடி, மார்க்சியம், ஓஷோ, மொழியாக்கம், கமலுடனான உறவு என்று வாசகனுக்கு அறிந்துகொள்ளவேண்டிய அளவுக்கு அவர் சொல்ல கேட்கும் பாக்கியம். பாம்பேயில் நாஞ்சில் நாடன் அழைத்துசென்று மொழி தெரியாமல் பார்த்த நாடகத்தை அவர் விவரிக்கும்பொழுது ஒரு நடிகன், வாழ்விற்கு அர்த்தம் ஒன்றும் இல்லை என்று சொல்லும்போது தத்துவ வாதி, மனைவியை அம்மா என சொல்லும்பொழுது ஒரு குழந்தை. அதிகப் பொருட்செலவில்லாமல், வருகின்ற காலத்தில் அனைவரும் பார்க்க ஒரு சரித்திரத்தை சேகரித்த ஆனந்த் குமார், மயன், சக்திவேல், திருமதி பாக்கியலக்ஷ்மி குடும்பத்தினர், ராமச்சந்திரன் அரவிந்தன், கதிர்முருகன் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
இந்தியஞானம், மதிப்புரை
   
இந்திய சிந்தனைகளின் தொகுப்பே இந்திய ஞான மரபாகும் மற்றும் அது பன்முகத்தமை கொண்ட polytheist மரபாகும். எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கும். அதில் இருந்துதான் இலக்கியம் மற்றும் கவிதைத்தன்மை கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உருவாகும். அடுத்த படிநிலையில் செவ்வியல் இலக்கியங்கள் மூலம் உருவான கருத்துக்கள் தர்க்கரீதியான விவாததிற்கு உட்பட்டு அவை தத்துவமாக தொகுக்கப்படும். இதன் அடுத்த படிநிலையில் அந்த தத்துவம் பிற அறிவு துறைகளில் விரிவடைந்து தரிசனமாகிறது. அந்த தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து ஒரு கட்டத்தில் பெரு மதங்களாகிறது. இதன் முறையே,
நாட்டார் பண்பாடு -> செவ்வியல் இலக்கியங்கள் -> தத்துவங்கள் -> தரிசனங்கள் -> மதங்கள்
இதே முறையிலே தான் பழமைவாய்ந்த இந்திய, கிரேக்க மற்றும் சீனா நாகரிகங்கள் வளர்ந்து வந்துள்ளது. இந்த முறையில் இந்து ஞான மரபை வகுத்துக்கொண்டால். அதிலிருந்து இந்திய ஞான மரபை புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் இந்து ஞான மரபை பின்வருமாறு வகுத்துக்கொள்ளலாம்,
இந்து ஞான மரபு
வேதங்கள் (நாட்டார் பண்பாடு + செவ்வியல் இலக்கியங்கம்)மூன்று தத்துவங்கள்(பிரஸ்தான திரயம்) – கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம்.
ஆறு தரிசனங்கள் – சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்.ஆறு மதங்கள் – சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம்இந்திய ஞான மரபில் வேதம் மற்றும் தரிசனங்களுடன் விவாதித்தே அவைதிக மதங்களான ஆசீவகம், சமணம் மற்றும் பௌத்த மதங்கள் உருவாகின. அதேபோன்று நாடோடி வாழ்க்கை கொண்ட சித்தர் மற்றும் சூஃபி மரபுகள் இந்து ஞான தத்துவதுடன் விவாதித்தே உருவானவை.
இந்து ஞான மரபின் தொடக்கம் என்றால் அது வேதங்களே (குறிப்பாக ரிக் வேதமே) மற்றும் அவை பல இனக்குழுக்களின் சடங்குளையும் நம்பிக்கைகளையயும் கொண்டவையாகும். அவை நாட்டார் பண்பாட்டை கொண்ட இயற்கையை நோக்கிய எளிய பிரார்த்தனை பாடல்களையும் கவிதை தன்மை உடைய செவ்வியல் இலக்கியங்களையும் உடையவையாகும். அச்சமூகம் இயற்கையை இறையாக உருவகம் செய்து இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். அதே சமயம் அவர்கள் இப்பிரஞ்சத்தில் நடப்பவற்றை எல்லாம் வியந்து கவிதைகளாக பாடினார். ஒரு கட்டத்தில் அந்த பிரபஞ்ச வியப்பு சக்தியை பிரம்மம் என்று ஒலித்தனர். அதிலிருந்து பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பிரம்மத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர். இதுவே வேதம் மற்றும் இந்து ஞான மரபின் உச்சம் எனப்படுகிறது. இதிலிருந்தே இந்து ஞான மரபின் அனைத்து தத்துவங்களும் பிரபஞ்சத்தை பற்றி அறியும் பிரம்மத்தை நோக்கி உருவாக ஆரம்பித்தது.
வேதங்களின் ஞான தரப்புகளை கர்ம காண்டம் ஞான காண்டம் என்று இருதரப்புகளாக பிரிக்கலாம். அதில் கர்ம காண்டம் என்பது சடங்குகள், வேள்விகள் மற்றும் ஆச்சாரங்களை முன்னிறுத்துபவை. ஞான காண்டம் என்பது தூய அறிவு தேடலை முன்வைப்பது. இந்த ஞான தேடலின் தொடர்ச்சியே உபநிஷங்கள், பிரம்ம சூத்திரம், வேதாந்தம் மற்றும் ஆறு தரிசனங்களாகும்.
“பிரபஞ்சத்தின் சாரம்”, “பிரம்மத்தில் இருந்தது உருவானது பிரபஞ்சம்”, “பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமே பிரம்மம்”, “பிரபஞ்சமே பிரம்மம்”, “நானே பிரம்மம்”, “நீயே பிரம்மம்” என்று பல தன்மைகளில் பிரம்மத்தை மையமாக வைத்து விவாதிக்க ஆரம்பித்தன ஞான தத்துவங்கள். இந்த பிரம்ம(பிரபஞ்ச) தேடலே இந்து ஞானத்தின் மைய தேடல் என்று வைத்து கொள்ளலாம். இதன் சாரம் என்னவென்றால் இப்பிரபஞ்ச தோற்றத்தை எப்படி வகுத்து கொள்ளவது என்பதேயாகும்.
உபநிஷங்கள் பிரம்மத்தை தத்துவார்த்தரீதியில் விரிவாக விவாதித்து அதை அடைவதற்கான வழிகளை முன்வைத்தன. உபநிஷங்கள் பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே முன்வைக்கின்றது அதேசமயம் அவை வேதங்களின் கர்ம காண்டத்தை பெருமளவு எதிர்க்கின்றன. இதற்கடுத்து பிரம்ம சூத்திரமும் அதன் தொடர்ச்சியான பிற்கால வேதாந்தகளும் பிரம்மத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. குரு பாதராயணர் பிரம்ம சூத்திரத்தில் பிரம்மத்தில் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது என்கிறார். ஆனால் பின்னால் வந்த ஆதி சங்கரர் ஒருபடி மேல் சென்று பிரபஞ்சமே பிரம்மம் என்கிறார் தனது அத்வைத கோட்ப்பாட்டில். சங்கரரின் அத்வைதத்திற்கு அடுத்து விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் போன்ற பிரம்ம தத்துவங்கள் உருவாகின. இதில் சங்கரரின் அத்வைதமே அறிவு தளத்தில் சிறந்து விளங்குகின்றது.
தத்துவங்களுக்கு அடுத்து தரிசனங்கள் பிரபஞ்ச தோற்றத்தை தர்க்கரீதியில் வேதங்களுடன் விவாதிக்கின்றன. குறிப்பாக சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக தரிசனங்கள் பிரபஞ்சம் பருப்பொருட்கள் மற்றும் அணுக்களால் ஆனது என முன்வைக்கின்றன. தரிசனங்களில் பூர்வமீமாம்சத்தை தவிர அனைத்து தரிசனங்களும் ஞான தேடலையே முன்வைக்கின்றன.
சமணம் மற்றும் பௌத்த தரிசனங்கள் வேதம் மற்றும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்து மதங்களாக உருவாகின.
தத்துவங்களும், தரிசனங்களும் உள்ளுணர்வால் விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களாக உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவையாகும்.
உதாரணத்துக்கு வைசேஷிக தரிசனம் அணுக்களின் சேர்க்கை அல்லது இணைவுகளின் மூலமே இப்பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. இப்போது அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது. அந்த பிரபஞ்ச உந்து சக்தியை பெண் தெய்வமாக பாவித்து வழிபடுவது சாக்தேயம் ஆகும். அதேபோல் அந்த சக்தியை பிள்ளையார் வடிவமாக பார்ப்பது காணபத்யம் ஆகும். இவ்வாறே தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து வழிபாட்டு மாதங்களாக உருவாகுகின்றன. ஞான மரபில் உள்ள ஒவ்வொரு சமயத்தை அதன் வழிபாட்டை நீக்கிவிட்டால் அதன் சித்தாந்தம் வெளிபடும் மற்றும் அது மையமாக குறிப்பது பிரம்மம் அல்லது பிரபஞ்ச சக்தியையே.
இந்து சிந்தனை மரபில் மூல நூல்களை சுருதி, ஸ்மிருதி என இரண்டு வகையாக பிரிப்பதுண்டு. பிரபஞ்ச தரிசனங்களை முன்வைக்கும் நூல்கள் சுருதிகளாகும். வாழ்க்கை நெறிகளையும் சமூக சட்டங்களையும் வகுப்பவை ஸ்மிருதிகள் என்று பிரிக்கப்படுகிறது.
சுருதி மூல நூல்கள்
வேதங்கள்
உபநிஷங்கள்
பிரம்ம சூத்திரம்
ஆறு தரிசனங்கள்
ஸ்மிருதி மூல நூல்கள்
ஸ்ம்ருதி (மனு, யம, யாக்ஞவல்கிய போன்ற ஸ்மிருதிகள்)
நீதி நூல்கள் (விதுர நீதி, சாணக்கிய நீதி)
புராண நீதி நூல்கள்
சாஸ்திரங்கள் (அர்த்தசாஸ்திரம்)
ஸ்மிருதி மூல நூல்கள் என்பவை சமூக சூழல் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறு படுபவை. இன்றைய காலகட்டத்தில் ஸ்மிருதி என்பது நமது அரசியல் அமைப்பு சட்டமே. மனு ஸ்மிருதிக்கு முன்பும் பின்பும் ஏகப்பட்ட ஸ்மிருதிகள் இருந்துள்ளன.
ஒரு சமூகம் தன்னைத் தொகுத்துக்கொள்ளவும் திறம்பட செயல்படவும் தனக்கு தானே உருவாக்கி கொண்ட நெறிமுறைகளும் நம்பிக்கைகளும்தான் நீதி எனப்படுகிறது. சிறிய இனக்குழுக்களை செயல் அல்லது தொழில் வழியாக பகுப்பது என்பது சாத்தியமானது (சதுர்வர்ணம்).
ஆனால் ஒரு சமூகத்தில் பல்வேறு இனக்குழுக்களும் மற்றும் அச்சமூகத்தில் உபரி உற்பத்தி அதிகமாகி அங்கு மாபெரும் சாம்ராஜ்யம் உருவாகும் போது அந்த அதிகார மையம் நிரந்தர பொருளாதார கட்டமைப்புக்கும், சமூகத்தை எளிய முறையில் தொகுத்து கொள்ளவும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை முன்னெடுத்திருக்கும். மிகப்பெரிய ஆயுதமேந்திய அதிகார சூழலில் தான் மனுஸ்மிருதி போன்ற நீதி நூல்கள் உருவாகியிருக்கும் மற்றும் அந்த சமூகம் சதுர்வர்ணத்தில் இருந்து வர்ணாசிரமம் நோக்கி நகர்ந்திருக்கும் தன்னை தொகுத்து கொள்ள. மன்னராட்சி அல்லது monopoly ஆட்சி முறைகளில் உருவாகும் நீதி நூல்கள்/சட்ட நூல்கள் என்பவை சுரண்டலை மையாக வைத்து இயங்கும் அதிகார அமைப்பாகத்தான் அமையும். இதேபோல் உலகம் முழுவதும் அடிமைவுடைமை மற்றும் நிலவுடமை சமூகங்களில் இருந்த அதிகார சுரண்டல்களை மார்க்சிசம் பகுப்பாய்வு செய்து விவரித்துள்ளது. ஆக இந்த அதிகார சுரண்டல் என்பது இங்கு மட்டும் நிகழ்ந்தது அல்ல. இங்கு வர்ணத்தின் அடிப்படையில் ஆயுதம் ஏந்துபவர்கள் சத்திரியர்களே. எனவே அதிகார மையத்தில் இருந்த சத்திரியன்தான் சுரண்டல் மிக்க மனு ஸ்மிருதியை முன்மொழிய அதை வெறுமென தொகுத்தவர் வேண்டும் என்றால் பிராமணராக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது முன்மொழிந்தவரை விட்டுவிட்டு எழுத்து வடிவம் கொடுத்தவரை பழி சொல்லுகிறார்கள்.
வேதங்கள், தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உயர் அறிவுத்தளங்களில் இயங்குபவை. இந்த தத்துவங்களை எல்லாம் மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதற்கு உருவாக்கப்பட்டவை புராணங்கள். அவை நீதி அல்லது தர்மம் சார்ந்தவற்றை பேசுபவையாகவும் அதன் பின்புலத்தில் தத்துவமும் இருக்கும். ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதன் தத்துவ சாராம்சம் இல்லாமல் புராணங்கள் மட்டும் கடத்தப்படுவதால் அது வெறும் கதைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
தமிழ் பேரிலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறளை இந்திய ஞான மரபில் எங்கே நிறுத்துவது?
சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய இலக்கிய பிரதிகள் என்று நம்பப்படுபவை நற்றிணை, புறநானூறு மற்றும் குறுந்தொகையாகும். இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். ஆனால் சங்க இலக்கிய காலகட்டத்தில் காப்பியங்கள், தத்துவங்கள் உருவாகவில்லை மற்றும் அவை எல்லாம் சங்கம் மருவிய காலத்திலே உருவாகின. சங்ககாலத்தில் தத்துவம் மற்றும் பெரும் காப்பியங்கள் உருவாகாமல் போனதற்கு தத்துவ விவாதங்களும் மற்றும் விவாத சபைகளும் சீரான முறையில் நடைபெறவில்லை என்று நம்பப்படுகிறது. அவை எல்லாம் களப்பிரர்கள் காலத்திலே தொடங்கி, காப்பியங்கள் உருவாக ஆரம்பித்தன.
திருக்குறளை இந்திய ஞான மரபு பின்னணியில் பார்க்க வேண்டும் என்றால், குறள் என்பது நீதி நெறிகளை வலியுறுத்தும் ஸ்மிருதியாகும். திருக்குறள் ஸ்மிருதி மனு போன்ற தீவிரம் இல்லாமல் இருப்பதற்கு காரணம். அது உருவான கால கட்டம் மற்றும் பெரிய சாம்பிராஜ்யத்தின் ஆளும் நீதி நூலக அல்லாமல் சிற்றரசுகள் ஆளும் பகுதிகளில் விவாத தளத்தில் உருவான நூலக இருக்கலாம். நீதி நூல்கள் எல்லாம் காலத்திற்கு ஏற்ப மறுபடுபவை மற்றும் அவற்றின் நீதி நெறிகள் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்தாது.
சங்க இலக்கியம் மற்றும் திருக்குறளை தொடர்ந்து இந்திய ஞான மரபில் வேதாந்தத்துக்கு பெருமளவு பங்களித்தவர்கள் ஆதி சங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாசாரியர் போன்ற தென்னகத்தவர்களே…
குருசாமி கிஷோர்
   
January 22, 2022
தமிழ், குறிகளும் ஒற்றும்
அன்புள்ள ஜெ..
எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய” ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார்
வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்படுத்துவதை சிலர் செய்கிறார்கள்.இந்த அலங்காரங்கள் தேவை இல்லை என்று சொல்வோரும் உண்டு
உங்கள் நிலைப்பாடு என்ன
அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள பிச்சைக்காரன்,
நலம்தானே?
மொழியின் எழுத்து வடிவத்திற்கும் அதன் உச்சரிப்பு வடிவத்திற்கும் உள்ள உறவென்பது நேரடியானது அல்ல. உச்சரிப்பு என்பது வேறு எழுத்து வேறு. ஓர் எழுத்துவடிவத்தை இன்ன உச்சரிப்பு என ஒரு சூழலில் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்வதனால் அப்படி பயன்பாடு கொள்கிறது. இந்த பொதுப்புரிதலால்தான் மொழி இயங்குகிறது.
முகம் என்னும் சொல்லில் உள்ள கவும் கலம் சொல்லில் உள்ள க வும் வேறு வேறு. சம்ஸ்கிருதம், அதைப் பின்பற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வேறு வேறு க உண்டு. நமக்கு இல்லை. சிலர் அதை தமிழின் பெரிய குறையாகக் கண்டு எழுத்துக்களின் மேலே அடையாளம் போடுவது, கீழே கோடு போடுவது போன்று பல முயற்சிகளை முன்வைத்ததுண்டு. ஆனால் நமக்கு வெவ்வேறு க ஆக அதை வாசிக்க எந்த தடையும் இல்லை.
உச்சரிப்பை அப்படியே எழுதிவிடவேண்டும் என்பவர்கள் மொழி செயல்படும் விதத்தை அறியாதவர்கள். மொழியின் எழுத்துவடிவம் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மாறிவிடுகிறது. மாறியாகவேண்டும். அதற்கான பல தேவைகள் காலப்போக்கில் உருவாகிக்கொண்டே இருக்கும்.
வியப்பு என்னவென்றால், அதேபோல மொழியின் உச்சரிப்பும் மாறிவிடுகிறது என்பதே. தமிழ் மொழியின் உச்சரிப்பு மாறியிருப்பதை சினிமாக்களை கண்டாலே உணரலாம். பழைய ஒலிப்பதிவுகளைக் கேட்டால் இன்னும் துல்லியமாக உணரலாம். பழைய சங்கீதக்காரர்கள், தலைவர்களின் சொற்பொழிவுகளை இன்று கேட்டால் அவை காலத்தின் வேறொரு கரையில் ஒலிப்பவையாகப் படுகின்றன.
நூறாண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் மென்மையாக, சம்ஸ்கிருத எழுத்துக்களான ஹ ஷ போன்றவை துல்லியமாக ஒலிப்பவையாக உள்ளது. அதன்பின் ஓங்கிய உச்சரிப்பும், வல்லினம் மிகுந்த ஓசையும் உருவாகி வந்தன. காரணம் வானொலி அறிவிப்புகள் மற்றும் மேடைப்பேச்சு ஆகியவை என நான் ஊகிக்கிறேன். அழுத்தமாகச் சொல்லவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தது. அவை பொதுப்பேச்சை பாதித்தன.
சென்ற முப்பதாண்டுகளில் தமிழ் உச்சரிப்பு மீண்டும் மென்மையாகியிருக்கிறது. ஆங்கிலத்திற்குரிய மென்மை இது. ஆங்கில உச்சரிப்பை இளமையிலேயே பள்ளிகளில் கற்பிக்கிறார்கள். தமிழ் அந்த உச்சரிப்பில் சென்றமைகிறது. சொன்னான் என்னும் சொல் தமிழில் இருபதுகளில் ஷொன்னான் என்றும், எண்பதுகளில் ச்சொன்னான் என்றும் இன்று ஸொன்னான் என்றும் ஒலிக்கிறது.
எல்லா காலத்திலும் ஓர் உச்சரிப்பு ‘எலைட்’ ஆனது என கருதப்படுகிறது. உயர்குடி, உயர்தளத்திற்குரியது என. [எல்லா மொழிகளிலும் அப்படித்தான்] மக்கள் அதை நோக்கிச் செல்கிறார்கள். அதுவே பொதுப்போகாக ஆகிறது. இன்று ஆங்கில உச்சரிப்புடன் பேசுவது படித்தவர், நாகரீகமானவர் என்னும் சித்திரத்தை அளிக்கிறதென கருதப்படுகிறது.
ஆகவே மொழியின் மாற்றங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதன் சாராம்சமான கலையிலக்கியம், சிந்தனைகள், சொல்வளம் ஆகியவை அழியாமலிருக்கின்றனவா , தொடர்ந்து கற்கப்படுகின்றனவா என்று தான் பார்ப்பேன். எனில் அம்மொழி வாழ்கிறது. இலக்கணப்பிடிவாதம் மொழிக்கு எதிரான ஒரு பழமைவாத மனநிலை. கலையிலக்கியங்கள், சிந்தனைகளில் ஆர்வமோ அறிதலோ இல்லாதவர்களின் செயல்பாடு அது.அவர்கள் மொழியை தேங்கவைப்பவர்கள், அழிப்பவர்கள்.
தமிழில் புள்ளி அடையாளங்கள் ஆங்கிலம் வழியாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்தமைந்தவை. பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் உருவாக்கிய பாடநூல்கள் வழியாகவும்; நாளிதழ்களின் செய்திமொழியாக்கங்கள் வழியாகவும் அவை அறிமுகமாகி பரவலாயின.
ஆனாலும் இலக்கணவாதிகள் பலர் அவற்றை நூறாண்டுகள் வரை ஏற்காமலிருந்தனர். தமிழுக்கு அவை ஒவ்வாதன என கருதினர். அத்தகையவர்கள் எண்பதுகளிலும் தங்கள் இதழ்களில் முற்றுப்புள்ளிகளைக்கூட பயன்படுத்தவில்லை. நான் அவர்களின் இதழ்களில் அன்று எழுதியிருக்கிறேன்.
இந்தப் புள்ளிஅடையாளங்களை போடுவதில் தமிழில் பெரிய சிக்கல் உள்ளது. ஆங்கில மொழி கூட்டுச் சொற்றொடர்கள் அமைக்க ஏற்றது. ஆகவே அரைப்புள்ளி, கால்புள்ளி போட்டு எழுதிக்கொண்டே செல்லலாம். சொற்றொடர்களில் குழப்பம் வராது. தமிழ்ச்சொற்றொடர்களில் எழுவாயில் தொடங்கி பயனிலையில் முடிவதுபோல ஒரு வட்ட அமைப்பு இன்றியமையாதது. இல்லையேல் பொருட்குழப்பம் அமையும். ஆகவே கால்புள்ளி அரைப்புள்ளிகளை போட்டு சொற்றொடர்களை நீட்டிச்செல்ல முடியாது.
அதேபோல பலவகையான மொழியியல்புகள் தமிழுக்கு உண்டு. அவை குறைபாடுகள் அல்ல, மொழியின் தனித்தன்மைகள். ஆகவே இன்னொரு மொழியின் சொற்றொடர் அமைப்பை அப்படியே தமிழுக்கு கொண்டுவரலாகாது. சோதனைகள் செய்யலாம், தமிழ்ச் சொற்றொடர்களை மாற்றலாம். ஆனால் தமிழின் ஒலியழகும், சொற்றொடரின் அடிப்படைகளும் சிதையாமல் அதைச் செய்யவேண்டும்.
தமிழ் புனைவெழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாகச் சொற்றொடர் அமைப்பில் பல பயிற்சிகளை, முன்தாவல்களைச் செய்து வருகிறது. சில முயற்சிகள் பிழையானவை என்பதை மறுப்பதற்கில்லை. மொழியாக்கங்கள் வழியாக விசித்திர விளைவுகளும் உருவாகியிருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகளின் வழியாகவே மொழி முன்னகர்கிறது. வாழும் மொழி தன் இயல்கைகளின் இறுதி எல்லைகளில் முட்டித் ததும்பிக் கொண்டிருக்கும்
இது ஒருபக்கம் என்றால் ஒற்றெழுத்துக்கள் மறுபக்கச் சிக்கல். ஒற்றெழுத்துக்கள் நமக்கு பழந்தமிழில் இருந்து வந்தவை. பழந்தமிழ் என்பது செய்யுளால் ஆனது. உரைநடை அன்று இல்லை. இருந்தாலும் அது ஒருவகை செய்யுள்நடையே. நவீன அச்சுத் தொழில்நுட்பமே தமிழில் உரைநடையை உருவாக்கியது. ஆகவே உரைநடைக்குரிய தனி இலக்கணம் தேவையாக ஆயிற்று. அவற்றை உருவாக்கிய முன்னோடிகள் ஒற்றுக்களை என்ன செய்வதென திணறினர். இன்றும் அந்த திணறல் நீடிக்கிறது.
வல்லினம் மிகும் இடங்களில் எல்லாம் ஒற்று போடுவதென்பது இயந்திரத்தனமான புரிதல். அப்படித்தான் இன்றும் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்றுப்போடுவது’ என எழுதுவார்கள். ஒற்று போடுவதற்கும் ஒற்றுப்போடுவதற்கும் இடையே மாபெரும் பொருள்வேறுபாடு உண்டு. அதை புறவயமாக வரையறை செய்வது கடினம். எழுதுபவனே முடிவு செய்யவேண்டும்.
சொல்லிப்பார்க்கவேண்டும், உச்சரிப்பில் அழுத்தம் இருந்தால் ஒற்று போடுவது அவசியம் என்பது ஓர் எளிய புரிதல். இரண்டு சொற்கள் ஒரே சொல்லாக இணைந்து பொருள் அளிக்குமென்றால் ஒற்று தேவை என்பது இன்னொரு புரிதல். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்று தேவை’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டியதில்லை. ஆனால் ’ஒற்றுத்தேவையை சமாளிக்கவேண்டும்’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டிய தேவை உண்டு.
மூன்றாவதாக ஒரு சிக்கல் உண்டு. சொற்களைப் பிரிக்கலாமா? இந்தியாவின் பழமையான மொழியிலக்கணங்கள் எல்லாமே சொற்புணர்ச்சிக்கான நெறிகளை முன்வைப்பவை. சொற்களை சேர்த்து ஒற்றைச் சொல்லாக எழுதுவதும் சொல்வதும் பழைய மொழியின் இயல்புகள்.
சம்ஸ்கிருதம் இன்றும் அவ்வாறே செயல்படுகிறது. ஆகவே அது புழக்கத்திற்கு அரிய மொழியாக போல உள்ளது. இன்று சம்ஸ்கிருதச் சொல்லாட்சி கண்டேன். பரோக்ஷாபரோக்ஷாலங்காரிதம். [மறைமுகமாகவும், மறைமுகமல்லாமலும் சொல்லப்பட்ட அழகு கொண்டது]. பழகிவிட்டால் வாசித்துக்கொண்டே செல்வோம். ஆனால் இவ்வகைச் சொல்லாட்சி நவீன மொழிக்குரியதல்ல. பண்டைய தமிழ் உரைகளைக் கண்டால் இப்படித்தான் தமிழிலும் எழுதியிருக்கிறார்கள் என்று அறியலாம். ‘தத்தமூர்திகளிலேறித்தனித்துப்புகுங்காலை’ என உ.வே.சா சீவகசிந்தாமணி உரையில் எழுதுகிறார்.
புழக்கத்திலுள்ள மொழிகளெல்லாம் இந்தக் கூட்டுத்தன்மையை தவிர்க்க போராடிக்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நவீன மொழி தனித்தனிச் சொற்களால் ஆனது. மலையாளம் கன்னடம் எல்லாம் அதன்பொருட்டு பலகாலமாக முயல்கின்றன. தமிழ்மொழிக்கு இயல்பாகவே பொருட்குழப்பம் இல்லாமல் தனிச்சொற்களாக பிரியும் தன்மை உண்டு. அது நமக்கு இருக்கும் நல்வாய்ப்பு.
’நமக்கிருக்கும்’ என எழுதலாம். ஆனால் அதற்கு ஒரு தனியான ஒலித்தேவை இருக்கவேண்டும். இல்லையேல் நமக்கு இருக்கும் என எழுதுவதே சரியானது. ஏனென்றால் வருங்காலத்தில் உருவாகும் தானியங்கி மொழியாளுகைக்கு அதுவே உகந்தது. ’நமக்கிருக்கும்’ என்பது ஒரு சொல், ’நமக்கில்லாத’ என்பது இன்னொரு சொல் என்றால் மொழியில் சொற்கள் பல மடங்கு பெருகுகின்றன. ’நமக்கு’ ’இருக்கும்’ ’நமக்கு’ ’இல்லாத’ என பிரித்துக்கொண்டால் அவை மூன்று சொற்கள்தான்.
ஆகவே சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். புள்ளிக்குறியீடுகளை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டும். வியப்புக்குறி மேற்கோள்குறி போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். காற்புள்ளி அரைப்புள்ளியை தேவையென்றால் மட்டுமே போடவேண்டும். ஒற்றெழுத்துக்களை தவிர்ப்பதே நம் நோக்கமாக இருக்கவேண்டும். சொற்கள் இணையவேண்டும் என்றால், செவியில் ஒலியழுத்தம் விழவேண்டும் என்றால் மட்டுமே ஒற்றுகளை போடவேண்டும். சொற்களை கூடுமானவரை பிரித்தே எழுதவேண்டும். சொற்களின் இணைவு ஒரு சிறப்பான பொருள்கோடலுக்கு தேவை என்றால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
’இப்படி எழுதினால் அப்படி படித்துவிடுவார்களே’ என்று பிலாக்காணம் ஆரம்பிப்பவர்கள் உண்டு. எழுதப்படுவனவற்றை மாற்றிப் பொருள்கொண்டு மேதாவி மாதிரி பேசுவது தமிழ்ச்சூழலுக்கு உரிய மடமைகளில் ஒன்று. அவ்வண்ணம் பேசுபவர்கள் தமிழறிந்தோர் அல்ல, பெரும்பாலும் அறைகுறைகள். எந்த சொற்றொடரையும் அப்படி மாற்றிப் பொருள்கொள்ள இயலும்.
மொழியின் எழுத்துவடிவில் இருந்து பொருள் எடுத்துக்கொள்வதற்கு ஒரு சமூகப்பழக்கம் உண்டு. ஒரு பொதுப்புரிதல் அது. அதற்குள் ஒவ்வொரு ஆசிரியனும் , ஒவ்வொரு நூலும் வாசகனுடன் கொள்ளும் உரையாடல் வழியாக ஒரு புரிதல்களம் உருவாகிறது. அந்த பொருட்களங்களில்தான் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருட்கோடல் நிகழ்கிறது.
அந்த புரிதல்களத்துக்கு வெளியே இருந்து ஒருவர் வந்து ‘நான் இப்படி பொருள் கொண்டால் என்ன செய்வாய் ?” என்று கேட்டால் ‘உனக்கு இங்கே என்ன வேலை, வெளியே போடா’ என்பதே பதிலாக இருக்க முடியும்.
ஜெ
பிகு: இவை என் மொழிக்கொள்கைகள். ஆனால் என் நூல்களும் என் தளமும் முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருப்பவை அல்ல. அவை வெவ்வேறு நண்பர்களால் மெய்ப்புநோக்கப் படுபவை. அவர்களின் பார்வைக்கேற்ப அவை மாற்றப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாக மீண்டும் திருத்தும் நேரம் எனக்கில்லை. எழுதியவற்றை மீண்டும் வாசிப்பது எனக்கு கடினமானது. என் உள்ளம் முன்னால் பாய்ந்துகொண்டே இருப்பது.
காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
   
அன்புள்ள ஆசிரியருக்கு
எம் வி வெங்கட்ராம் அவர்கள் எழுதிய காதுகள் நாவலைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.வழக்கமாக அந்நாவலை எம் வி வியின் வாழ்க்கை வரலாற்று நாவல் எனச் சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.முன்னுரை எழுதிய பிரபஞ்சன் கோட்பாட்டு அடிப்படையில் இது மேஜிகல் ரியலிச நாவல் என்றும் ,உள்ளிருக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்றும் கொள்ளலாம் என்று கூறுகிறார்.நீங்கள் இதைக் குறித்து எழுதியது.
\\அன்று எம்.வி.வெங்கட்ராம்டம் முருகன் காதில் பேசியதும் நாவலை நேரடியாக முருகனே சொன்னதுமெல்லாம் கேலிக்குரியதாகவே கருதப்பட்டது. அது ஸ்கிசோபிர்னியா என்றும் அதை அறியாமல் அப்பாவித்தனமாக எழுதிவிட்டார் என்றும் சொன்னார்கள். அந்த ’அப்பாவி’த்தனமே அதன் அழகு என எனக்குப் பட்டது. ஸ்கிஸோபிர்னியாவும் முருகனைப்போல ஓர் உருவகம்தான். நூறாண்டுகளில் அது ஒருவேளை ஒரு தொன்மமாக, குறியீடாக மாறிவிடக்கூடும். அறிவியல் ஒருபோதும் இலக்கியத்திற்கான அளவுகோல் அல்ல, அது இலக்கியத்திற்கு மதத்தைப்போல இன்னொரு குறியீட்டுவெளி மட்டுமே என்று நான் எம்.வி.வெங்கட்ராமுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
செதுக்குகலையும் வெறியாட்டும் | எழுத்தாளர் ஜெயமோகன் ஆனால் இந்நாவல் எனக்குள் விரிந்தது வேறு விதத்தில்.ஆகவே இக்கடிதம். [செதுக்கு கலையும் வெறியாட்டும்]
தன் குழந்தை நோயுடன் போராடிக்கொண்டிருக்கும்போது இறையருளுக்காக மகாலிங்கம் வேதநாராயணப்பெருமாள் கோவிலுக்குச் செல்வதற்கு முயல்வதே கதையின் ஆரம்பம்.புறத்தூய்மையுடன் இருந்தாலும் அகத்தூய்மை இல்லாமல் எவ்வாறு கோவிலுக்குள் நுழைவது எனும் மனப்போராட்டம் மகாலிங்கத்துக்கு.மகாலிங்கம் வெறுத்து ஒதுக்கும் ஆபாசமான சொற்கள் காதில் ஒலித்துச் கொண்டே இருக்கிறது.அது எப்போது எப்படி உருவானது?.அதனால் மகாலிங்கம் அடைந்த துயர்கள் என்ன என நாவல் விரிகிறது.
சூழலின் காரணமாக சிறுவயதில் பக்தனாக இருந்த மகாலிங்கத்துக்கு தனித் திறன் எதுவும் இல்லாமலேயே நன்றாக அமைந்த தொழில் அமைகிறது. அதனால் பக்தி அதிகமாகிறது.முருகனைத் தன் குருவாக எண்ணி வழிபட ஆரம்பிக்கிறான்.முதலில் கனவில் அவனுக்கு குரு காட்சி தருகிறார்.பின் அவன் கண்ட கனவுகள் பலிக்க ஆரம்பிக்கின்றன. அதனால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் நிலை தனக்கு ஏற்பட்டிருக்கிறதாக நினைக்கிறான்.அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக காதுகளில் கேட்கும்திறனில் குறைவு ஏற்படுகிறது. பின்னர் ஒருநாள் தனக்குள் குரலாக முருகன் பேசுவதைக் கேட்கிறான்.பின்னர் தொடர்ந்த பேச்சுககள் கேட்பதால் அது கடவுளா எனச் சந்தேகம் கொள்கிறான்.அதிலிருந்து அவனுடைய காதுகள் ஆபாசமான சொற்களைப் பேசுகின்றன.அதற்கான காரணம் காளி என எண்ணுகிறான்.தீர்வினைத் தேடி ஜோதிடர் சித்தர் மரபினர் ஆன்மீகப் பெரியவர்கள் எனப் பலரிடம் அலைகிறான். மகாலிங்கத்தின் இடருக்கான தீர்வினை அவர்கள் யாராலும் கொடுக்க முடிவதில்லை.இதற்கிடையே எவ்வாறு வெற்றி பெற்றதென மகாலிங்கத்துக்கே தெரியாத தொழில் எவ்வாறு இழப்பு ஏற்படுகிறது என்று தெரியாமலேயே நொடிந்து போகிறது.குடும்பம் வறுமையைச் சந்திக்கிறது.புறத்தில் வறுமையின் அழுத்தமிருக்க,அகத்தில் காதுகள் ஒலிக்கும் நாராசமான வார்த்தைகள் இருக்க,மனநிலை எப்போது வேண்டுமானாலும் தான் தவறி பைத்தியமாக அலைவோம் என்று தோன்றுகிறது மகாலிங்கத்துக்கு.ஆனால் அவ்வாறெல்லாம் நிகழாமல் அவனுக்குள் குருவாக இருக்கும் முருகன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையும் மகாலிங்கத்துக்கு இருக்கிறது. தான் செய்த தொழிலையே அடுத்தவரின் துணையுடன் செய்யும் வாய்ப்பு கூட வருகிறது.அதுவும் வீட்டின் சூழலாலும் மகாலிங்கத்தின் பிடிவாதத்தாலும் தட்டிப் போகிறது.
முதலில் ஆபாசமான சொற்களைப் பேச ஆரம்பித்த காதுகள் அடுத்து அவனுக்கு ஏற்படப்போகும் இழப்புகளையும் சேர்த்துப் பேச ஆரம்பிக்கின்றன. தொடர்ந்த அப்பேச்சுக்களால் ஏற்பட்ட அழுத்தங்களால் மகாலிங்கம் பெரும்துயர் அடைகிறான்.அந்நிலையிலும் காமம் அவனுள் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது.கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை நாடுகிறான்.பிரசவத்தின் போது குழந்தை இறந்தே பிறக்கிறது.அதனால் மகாலிங்கமே வெட்டியானாக மாறும் அளவிற்கு வீட்டின் பொருளாதாரச் சூழல் இருக்கிறது.வறுமையும் காதுகளின் ஓயாத பேச்சிற்கும் இடையில் மகாலிங்கம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும்போதில் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.அதற்காக வேண்டிக் கொள்ளக் கோவிலுக்குப் போவதுதான் ஆரம்பக்காட்சி. நீண்ட மனப் போராட்டத்திற்குப் பின் கோவிலுக்குச் சென்று பிற தெய்வங்களைத் தரிசித்துவிட்டு அவனின் குருவான முருகனின் முன் சென்று தன் துயரினை வைக்கிறான். மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அழைக்கிறான்.மருத்துவரோ மகாலிங்கத்தின் மகளைப் பரிசோதித்து பார்த்துவிட்டதாகவும் அவள் நலமாக இருப்பதாகவும் கூறுகிறார்.காதுகளோ வேறொன்றினை உரைக்கின்றன.வீடு சென்று பார்க்கும்போது மகள் நலமாக இருக்கிறாள்.அனைத்திலிருந்தும் தன்னை தன் குரு காப்பார் என்ற மகாலிங்கத்தின் நம்பிக்கையுடன் இந்நாவல் நிறைவுறுகிறது.
இந்நாவல் சொல்லப்படுவதே மகாலிங்கத்திற்குள் இருக்கும் முருகனின் குரலில் தான்.அதைத்தான் இங்கு பலரும் ஏற்கவில்லை.அதனை நேரடியாக அவ்வாறு பார்க்காது படிமமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறியது அருமையான கருத்து.ஆனால் என் பார்வையில் அந்த முருகனின் குரல் மகாலிங்கத்திற்குள் ஒலித்தது அப்பாவித்தனமாக அல்ல அவனுடைய சாதகத்தால். இந்தியாவில் இருக்கும் பல்வேறு மரபுகளில் ஒன்றான சித்த மரபில் அறிமுகம் இருக்கும் நபருக்கு எந்தச் சாதகனும் சரியான மந்திரத்தினை சாதகம் செய்து அதில் சித்தி அடைந்தால் அந்த மந்திரத்திற்கான தெய்வம் பேசும் என்பது சாதாரணமான தகவல்.
எடுத்துக்காட்டாக தன்னை நாடிவரும் நபர் எதற்காக வருகிறார் என்பதை அறிந்து சொல்லும் தேவதைக்கான மந்திரம் புலிப்பாணி சித்தர் ஜாலத்திரட்டு நூலில் உள்ளது.அது பலிதமாகச் செய்ய வேண்டிய காரியங்களும் அந்நூலிலேயே இருக்கிறது.அம்மந்திரம் பலிதமானால் வருபவர் எந்நோக்கத்தோடு வருகிறார் என்பதைச் சாதகனுக்கு அவன் வழிபட்ட தேவதை கூறும்.இது எவ்வாறு நடக்கிறது என்பதையெல்லாம் தர்க்கரீதியாக நிறுவவே முடியாது.எவ்வித நேர்ப்பொருளும் அற்ற சில ஓசைக்குறிப்புகள் இந்த விளைவினைத் தரும் என்பதே அபத்தமாகக்கூட சிலருக்குத் தோன்றக்கூடும்.ஆனால் அப்படியொன்று சித்த மரபில் இருக்கிறது என்பது உண்மை.
இந்த இடத்தில் பிரிவாளுமை மனநோயான ஸ்கீசோபெர்னியாவுக்கும் இந்தச் சாதகனுக்கும் இருக்கும் வித்தியாசத்தினைச் சொல்வது அவசியம்.இயல்பான மனிதனுக்கு இருக்கும் நனவு மன ஓட்டம் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தெளிவு கலைந்து மன ஓட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் காதில் குரலாக கண்ணில் தோற்றப்போலிகளாக உருவாவதே பிரிவாளுமை மனநோய்.அத்தகைய நோயாளிகள் தொடர்ந்து முழு விழிப்புடன் எச்செயலையும் செய்ய முடியாது.
அதேசமயம் மந்திரத்தினை உருவேற்றும் சாதகன் இயல்பான மனிதனைவிட எப்போதும் ஒருபடி மேல்தான்.ஏனென்றால் சாதாரண மனிதனுக்கு இல்லாத மன உறுதியும் விடாப்பிடியாகச் செய்யும் தொடர்ந்த வழிபாடும் இல்லாமல் எந்த மந்திரமும் சித்தியாகாது.அப்படி அதை அடைந்த சாதகனும் பிரிவாளுமை நோயாளியும் ஒன்றென்று எண்ணுவது தவறான புரிதல்.
இந்தியர்களுக்கு இருக்கும் மருத்துவ அறிவினைப் பற்றி ஈரோடு கிருஷ்ணன் கிண்டலாகச் சொல்வதுண்டு.நோய்க் கூறுகளைப் பற்றிப் பேச்சு வாக்கில் சொன்னால் போதும். நோயையும் அதற்கான மருந்தையும் பெரும்பாலான நபர்கள் பரிந்துரைப்பதைப் பார்த்து இந் நாடே மருத்துவர்களின் நாடு என்றே முடிவெடுத்துவிடலாம் என்று கிண்டலடிப்பார்.அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது.அன்றைய விமர்சகர்களின் மனநலத்துறை பற்றிய அறிவு இது பிரிவாளுமை மனநோய் என முடிவெடுக்க வைத்திருக்கிறது.
அப்படியென்றால் மந்திரத்தின் மூலம் என்ன மனதில் என்ன நிகழுகிறது என்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பார்க்கும்போது சித்தர்கள் கூறியுள்ள மந்திரங்களாகச் சொல்லப்படுபவைகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.அவர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் மந்திரம் உண்டு.தேவைப்படும் மூலிகையின் ஒற்றை இலையைப் பறிப்பதாயினும் அதற்கான நேரமும் மந்திரமும் பூசையும் உண்டு. அவற்றைக் கவனிக்கும்போது எத்தெய்வத்திற்கான அல்லது எந்நோக்கத்திற்கான மந்திரம் என்பதற்கான அறிவுறுத்தல் இருக்கும். அதன் கூடவே எத்தகைய பொருளையும் கொடுக்காத ஓசை மட்டுமேயான ஒலிக்குறிப்புகள் கட்டாயம் இடம் பெறும்.ஏன் அவை இடம் பெறுகின்றன.பீஜங்களான அவற்றிற்கான பொருள் என்ன அவற்றின் செயல்படும் முறை என்ன என்பதெல்லாம் அந்த மரபை ஆழ்ந்து கற்றவர்களே உரைக்க முடியும்.
தொல்காப்பியரின் கூற்றான” நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளரந்த மறை மொழிதானே மந்திரம் என்ப” என்பதன்படி நோக்கும்போது மொழி செயல்படும் விதத்தை எவ்வாறோ அறிந்த நபர்களே அதை உருவாக்கி இருக்க முடியும் என்று உணர முடியும்.வெறுமனே சில ஒலிக்குறிப்புகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த மனித இனம் இன்று மாபெரும் சொற்பெருக்கினை அச்சிலவற்றினைக் கொண்டே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.விலங்கிலிருந்து மனிதனாக இன்றிருக்கும் இந்த மொழிவெளியின் தொடர்காலத்தில் அச்சில ஒலிக்குறிப்புகள் எவ்வாறு அப்பண்பாட்டினைத் தொடரும் தனிமனிதனுக்கு பொருள்படும் என்பது முடிவிலாச் சாத்தியங்களைக் கொண்டதே.
அந்த முடிவிலாச் சாத்தியங்களில் ஒன்றாக மகாலிங்கம் உணர்ந்தது தமிழ்ப் பண்பாட்டின் குரு வடிவான முருகனை என்று எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் அந்த முருகன் மகாலிங்கத்தின முருகன். அம் முருகனின் அளவுகோல்களும் ஆற்றலும் மகாலிங்கத்தின் தமிழ்ப் பாண்பாட்டின் மீதான புரிதலினைப் பொறுத்தது.அவன் உணர்ந்தது சரியான குருவையா என்றால் என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான குருவையே. ஆனால் சீடனுக்குத்தான் போதிய விழிப்புணர்வு இல்லை .அதனால் அலைபடும் மகாலிங்கத்தின் துயரை இன்னொரு மகாலிங்கமான என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படியாயின் மகாலிங்கத்தின் காதுகளாக மாறிக் கேவலமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தது காளி எனும் தெய்வமா ஏன் அது முருகனை விட தன்னை வழிபடு என்று கூறிக் கொண்டிருந்தது என்பதற்கான விளக்கம் தேவைப்படுகிறது.சாதாரணமாக நல்லவை×தீயவை எனும் பொதுப்புத்தியோடு எப்போதும் இந்தியாவில் இருக்கும் எந்த மரபையும் அணுக முடியாது.இங்கும் அப்படியே. தமோகுணத்தின் வடிவம்தான் காளி என்றே தன் விருதேற்புரையிலும் எம் வி வி குறிப்பிடுகிறார்.முக்குணங்களும் மனிதனுள் மாறிமாறி நிகழ்வன.பெரும்பான்மையான நேரங்களில் எது செயல்படுகிறதோ அதையே அந்நபரின் பொதுக்குணமாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.மகாலிங்கம் தன் பொதுக்குணமாக சத்வம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான்.ஆகவே தமோகுணத்தினிலிருந்து விடுபட எண்ணுகிறான்.ஆனால் அவனுடைய ஆசைகள் வேண்டுதல்களில் பெரும்பாலானவை சத்வ குணத்துடன் சமபந்தமேயில்லாதவை.
சித்த மரபில் இருக்கும் மந்திரங்கள் பற்றிய அறிவில் ஒரு மந்திரத்தில் சித்தியடைந்தவனுக்கு தேவையானவற்றை வழங்கும் மீதமுள்ள மந்திரங்களை அதுவே கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின்படி நோக்கினால் மகாலிங்கத்திற்கு என்ன வேண்டும் என்று அவன் உள்மனதில் எண்ணுகிறானோ அதைத் தருவதற்கான தெய்வம் தமோகுணத்திலிருந்தே எழ வேண்டும்.
மகாலிங்கத்தினை ஆட்டிப்படைப்பது குடும்பத்தின் மீதான பற்று. பின்பு காமம்.அவை முற்றிலும் தமோகுணத்தினைச் சார்ந்தவை.அவன் வேண்டுதலில் சத்வ குணத்துக்குரியது முருகன் குருவாக வந்து தனக்கு ஞானமருள வேண்டும் என்பது மட்டுமே.
ஞானமருளப்பட வேண்டும் என்றால் அனைத்து வகையான பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும்.எளிய மந்திர சித்திக்கே மண் பொன் பெண் ஆகிய பரிசோதனைகளை சந்திக்க வேண்டும் என்று சித்த மரபு கூறும்.மகாலிங்கம் விரும்புவதோ இருப்பதிலேயே மிகப் பெரியது.அதற்கான பரிசோதனைகளை தான் தாங்க முடியுமா என்பதற்கான எந்த தொலைநோக்கும் இல்லாமல் வேண்டுதலை மட்டும் வைத்து விடுகிறான்.
இந்த விஷயத்தில் நானும் மகாலிங்கமாக இருந்திருக்கிறேன்.கடவுளிடம் எதையும் வேண்டுவதற்கு முன்பு அது கிடைப்பதால் நம் இயல்பு வாழ்க்கையென இருப்பது பாதிக்கப்படுமா என்றெல்லாம் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அப்போது பெரிதாக நம் ஆணவத்திற்குத் தோன்றுவதை வேண்டுதலாக வைப்பது.பின்னர் அந்த வேண்டுதலுக்குரிய பலன் நம்மை அடையும்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட அதற்காக இயல்பு வாழ்க்கையினைக் கொடு என்று மீண்டும் சென்று வேண்டுதல் வைப்பது.அதனால் முதலில் இருந்த நிலையினைக் காட்டிலும் மாறாகச் சென்றதற்கு தன் கோரிக்கையே காரணம் என்று அறியாமல் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே அலைபாய்வது.இத்தவறினை நான் செய்திருக்கிறேன்.ஆகவே மகாலிங்கத்தின் செயலினை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.
நன்றாகத் தொழில் நடந்து கொண்டிருக்கும்போது மகாலிங்கம் வேண்டுவது குருவாக வந்து முருகன் ஞானம் அருள வேண்டும் என்பது.முருகன் அவனுக்குள் வந்து விட்டார்.யாருக்கு ஞானமருளப்பட வேண்டும் என்றால் அவன் இங்கு பெரிதென எண்ணும் அனைத்தையும் அவனே முழுமனதுடன் துறக்கவேண்டும் அல்லது அவைகள் இயல்பாக அவனை விட்டு விலகிச் செல்லும் சூழல் அமைய வேண்டும். மகாலிங்கம் வணிகம் செய்வதால் பெருஞ்செல்வனாக மாறி அதைத் துறக்க வேண்டும் அல்லது இழப்பின் மூலம் இங்கு அவனைப் பற்றி நிறுத்தியிருப்பவைகள் அனைத்தும் களையப்படவேண்டும். அதுதான் மகாலிங்கத்தின் வேண்டுதலின்படி நடக்கப்படவேண்டியது.கூடவே அவனுடைய அனைத்துப் பற்றின் மீதான சோதனைகளும் ஆரம்பிக்கப்படவேண்டியது.
அதன் முதல்படி ஆரம்பிக்கும்போதே மகாலிங்கத்தினால் தாங்க இயலாமல் அக்கொடுமையிலிருந்து என்னை மீட்டெடு என்ற அடுத்த கோரிக்கையை ஆரம்பித்துவிடுகிறான்.தான் அடைந்த இடருக்கான மூலகாரணி தானே என்றறியாமல் காளி எனும் தெய்வம்தான் அதற்கு காரணம் என்று எண்ணுகிறான்.ஆகவே அதனிடமிருந்து விலகுவதே உடனடியாகச் செய்யவேண்டியது என்று எண்ணிப் போராடிக் கொண்டே இருக்கிறான்.மகாலிங்கத்தின் உண்மையான தேவைகளை உணர்ந்து அவனிடம் உரைக்கும் தெய்வம்தான் உண்மையில் அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறது என்றே அறியாமல் அதை எதிர்த்துக் கொண்டிருக்கின்றான்.
அதை உறுதிப்படுத்தும் கருத்துரு ஒன்று எனக்குத் தோன்றியது.அது ஒரு சொல்லின் பல அர்த்தங்கள் படைப்பாளியில் ஏற்படுத்தும் சொற்பொருட்பேதம்.சொற்பொருட் பேதம் என்பதை பாடபேதம் என்பதற்கான விளக்கம் போலச் சொல்லுக்கு எடுத்துக் கொள்ளவும்.மகாலிங்கம் சித்த மரபில் சொல்லும் சில சொற்களை அவர்கள் சொல்லும் மறை அர்த்தத்துடன் அணுகாமல் பொதுவெளியில் இருக்கும் பொது அர்த்ததுடன் புரிந்து கொண்டிருக்கிறான்.நாவலில் வரும் காளி எண்ணற்றறோரின் பத்தினி என்ற வரி கருவூர் சித்தரின் வாலை பூசை விதியில் இருக்கும் தன்னைக் கண்டோர்க்கு நானே பத்தினி என்பாள் என்று வாலையைக் குறித்துச் சொல்லும் வரியின் சொல்லுக்கான பொதுவெளி அர்த்தம்.ஆனால் மறை பொருள் அர்த்தம் வேறு .மணாளனுடன் ஆடிய சுகத்தினை மகளிடம் உரைப்பதற்கான வழியேது என்பதெல்லாம் சித்தர் மரபில் இருக்கும் மறைபொருள் சொற்றொடர்.இது போன்ற பல சொற்றொடரகள் நூலில் இருக்கின்றன.சொற்பொருட் பேதத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் விந்து என்பதற்கான சித்த மரபின் மறைபொருள் அர்த்தத்தினை பொதுவெளியின் விந்து என்பதற்கான அர்த்தமாக எடுத்தால் நடப்பது எதுவோ அது.மகாலிங்கத்தில் சொற்கள் உருவாக்கிய அனைத்துப் பெரும் துயரும் இந்தக் கருத்துருவின் விளையாட்டுக் களமாக அவன் உள்ளம் மாறியதால் உருவாகியவை.
முடிவிலா அவ் விளையாட்டுக் களமாக மகாலிங்கத்தின் மனம் அமைவதால் தன்னுள் பேசும் தெய்வம் சொல்ல வரும் மறைபொருளினைப் புரிந்து கொள்ள மகாலிங்கத்தால் இயலாத சூழலினை உருவாகிறது.மகாலிங்கம் உடலில் நடக்கும் நாடகம் கருப்பன் ராமனுடன் இணைந்து வாயிற்கும் மூக்கிற்கும் இடையில் காளியைத் தேடுவது சித்த மரபின் அண்ணாக்கு எனும் கருதுகோளின் தலைகீழாக்கம்.பிராணயாமத்தின் வழிமுறையில் நாக்கினை மடித்து மூச்சின் வழியாக மூலாதாரத்தின் கனலை எழுப்பி அண்ணாக்கின் வழியாக ஆயிரம் இதழ் கமலத்திற்கு செல்லும் உயிர் என்னும் கருதுகோள் மகாலிங்கத்தின் உடலில் இளிவரல் நாடகமாக வெளிப்படுத்தப்படுகிறது.அதைப் புரிந்து கொள்ள இயலாமல் சொற்பொருட்பேதம் தடுத்து விடுகிறது.சுருக்கமாக இதைக் கூறவேண்டும் என்றால் திருமந்திரத்தின் 599 ஆம் பாடலினைச் சுட்டலாம்.
//கண்ணாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொறு ளொன்றுண்டு
அண்ணாக்கி னுள்ளே அகண்ட வெளி காட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.
பஞ்ச ஞானேந்திரியங்கள் ( கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்பவை ) கூடும் இடத்தில் நாதத்தை எழுப்புகின்ற ஒரு பழமையான வஸ்து உள்ளது. அதுவே நம் அண்ணாக்குப் பகுதியில் எல்லை இல்லாத பேரொளியைக் காட்டும். நம் மனம் வெளியே செல்லாதவாறு தடுக்கும். நம்மை உலக வாழ்விலிருந்து பிழைக்கச் செய்யும்.
திருமந்திரம் மூன்றாம் தந்திரம்.அதிகாரம் 8.தியானம். இரண்டாம் பாடல் //
அதே சமயம் சித்த மரபில் இவ்வளவு அறிந்துள்ள மகாலிங்கத்தின் சிந்தனையின் அளவுகோல்கள் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன என்று பார்க்கும்போது அவை நவீனகாலத்தினைச் சேர்ந்தவை.குறிப்பாக விக்டோரியா காலவியல் ஒழுக்க முறைகள்.ஆனால் அவன் விருப்பம் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று எண்ணுவது இந்திய மரபின் வழிமுறையில்.முற்றிலும் மாறுபட்ட இரு வழிமுறைகளில் ஒன்றின் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மற்றொன்றில் தன் சாதனையை மேற்கொள்ள முயற்சிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?.பேரிடரில்தான் முடியும்.அதுவும் இங்கு நிகழ்ந்துள்ளது.
இக்காரணிகளைக் கொண்டு நோக்கும்போது காமமே மகாலிங்கத்தின் முதன்மைச் சிக்கல் .பொதுவெளியில் பேசத்தகுதியற்ற ஆபாசச் சொற்களை உரைத்து காதுகள் அவனை அலைக்கழிப்பதைக் கவனித்துப் பார்த்தால் அவை சித்த மரபில் இருக்கும் மறைபொருள்களுக்கான சொற்பொருட்பேதம் என்று அப்பட்டமாகத் தெரிகிறது .சொற்பொருட்பேதத்தால் தான் புரிந்து செல்ல வேண்டிய திசைக்குப் தான் செல்ல வேண்டிய பாதையாக காம ஒறுப்பு எனத் தவறாக எண்ணுகிறான்.அதனால் காமமே அடிப்படைச் சக்தி என்பதை உணராது தன் சமகால சமூகத்தில் கோலோச்சும் ஒழுக்கநெறியின் அடிப்படையில் அதனுடன் போர்தொடுக்க எண்ணுகிறான்.எதிர்க்கொள்ளும் ஆற்றலைக் கொண்டே பேருக்கொள்ளும் காமத்துடன் மீளவே இயலாத போரினைத் தொடர்கிறான்.போரில் தோற்கும்தோறும் குற்றவுணர்வு உருவாகிக்கொண்டே இருக்கிறது.அது பலவித குழப்பங்களை அவனில் தோற்றுவிக்கிறது.ஏற்கனவே படைப்பாளியாக இருப்பவனில் தனக்கு ஏதாவது நிகழுமோ என்று அவன் எண்ணும் அனைத்தும் அவனுள் படைப்பினைப் போலவே விரிந்திருக்கின்றன என்ற முடிவுக்கே முடிவில் வரமுடிகிறது.
இறுதியாக ஏன் காதுகளில் இது நடந்தது.இந்திய மரபினைப் பொறுத்தவரை கற்றலுக்கான இடத்தினை விடக் கேட்டலுக்கான இடம் முக்கியமானது.கற்றலைக் கொண்டு கேட்டலை நிலைநிறுத்தும் பணியையே மரபு முன்னர் பெரும்பாலும் செய்தது.கேட்டல் என்பது தன் தரப்பினைப் பற்றிய அனைத்தும் அறிந்த தகுதியுடைய சீடனிடம் கற்றறிந்த குரு உரைப்பது.கேட்பவனின் தகுதியும் சொல்பவரின் தகுதியும் சரியான பாதையினைத் திறந்து விடும். மாறாகக் கற்றல் என்பதோ அதைச் செய்ய முயலும் அனைவருக்குமான பொதுத்தளத்தினை உருவாக்கிக் கொடுப்பது.அதற்கான நெறிமுறைகளை மட்டுமே கொண்டது.கற்றலுக்குத் தேவையான தகுதிகள் கேட்டலுக்குத் தேவையான தகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. அறிவு என்பதே கேட்டலின் வழியாகவே நிலைநிறுத்தப்பட்ட காலம் சென்ற நூற்றாண்டில்தான் மாறியது.அதுவரை கேட்டலின் வழியாக வந்தடைந்த அறிவினைக் கற்றலின் வழியாக பயில முயன்று இரண்டுக்கும் உரிய வேறுபாடுகளைக் கைக்கொள்ளாமல் சொற்பொருட்பேதத்தால் அதன் மாளாச் சுழலுக்குள் சிக்கிய நபர்தான் மகாலிங்கம்.ஆகவே அவை காதுகளில் ஆரம்பமாகியது புரிந்து கொள்ளக்கூடியதே..கற்றல் முறையினைக் கைக்கொண்டு கேட்டல் நூலினைப் புரிந்து கொள்ள முயன்று சொற்பொருட்பேதத்தால் அதில் சிக்கிக் கொண்டவனின் வாழ்வே இந்நாவல்.
ஒருபுறம் தவறுதலாகத் திறந்துவிட்ட மந்திர தளத்தின் துளிக்குப்பின் வெளிவரத்துடிக்கும் பெருங்கடல்,அதை வெளிவராமல் தடுக்க முயலும் சமகால ஒழுக்க அளவுகோல்கள், ஓங்கிப் பேருருக் கொள்ளும் காமம், தனக்கான சரியான தேவையினை உரைக்கும் தெய்வத்தினை சொற்பொருட்பேதத்தால் உணராமல் போகும் மனம் எனும் நான்கின் போர்க்களமே மகாலிங்கத்தின் உளம்.
நிகர் வாழ்பனுவத்தினைத் தரும் நனவோடை வழிமுறையும்,பல தளங்களில் திறக்கும் வழிகளையுடைய நிகழ்வுகளும் இந்நூலினை சிறந்த இலக்கியப் படைப்பாக மாற்றுகின்றன.மரபும் நவீனமும் இணைந்து படைப்பாளிக்குள் நிகழ்த்திய போரே இந்நாவல் என்றே எனக்குத் தோன்றுகிறது.
இப்படிக்கு
அந்தியூர் மணி.
தேவி- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் புனைவு களியாட்ட சிறுகதை வரிசையில் தேவி பெண்ணின் இயல்பு பற்றி சொல்லும் கதைகளில் ஒன்று. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் பெண் தெய்வத்தை தேடிச் சொல்லும் கதை. ஆணுக்கு ஒரே பெண் மூன்று வெவ்வேறு பெண்ணாய் காதலி , அன்னை , வில்லி ரூபத்தில் வெளிப்படும் கதை. நாடகத்தின் ஹீரோ லாரன்ஸ் ஹீரோயின் கதைக்குத்தான் என்று உணராமல் ஹீரோ தனக்குத்தான் ஹீரோயின் என்று நினைத்து ஹீரோயின் மேல் கவர்ச்சி கொள்கிறான்.இது அவனுக்குள் இருக்கும் காமன் உருவாகும் மனநிலை.நாடகத்திற்கு ஹீரோயின் தேடி பல சாதகங்களை யோசித்தி ஸ்ரீதேவி வீட்டிற்கு செல்கிறார்கள்.அவளே காதலி பாத்திரத்தையும், அம்மை பாத்திரத்தையும் நடிக்க ஒப்புக்கொள்கிறாள்.
நாடகம் தொடங்குவதற்கு முன் பல சவால்கள் வருகிறது.வழக்கத்தைவிட பெரிய செயலை செய்யும்போது புறச்சூழலின் சவால்கள் தடையாய் வரும், அதை மீறி செயல்படும்போது மனதிலிருந்த சாத்தியங்கள் சாதனையாகிறது.வில்லியாய் நடிக்கவிருந்த குமரேசன் ஓடிவிட அதையும் ஸ்ரீதேவி நடிக்க தீர்மானிக்கிறாள்.அனந்தனுக்கு நாடகம் நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.ஸ்ரீதேவி தைரியம் சொல்கிறாள். ஈஸ்வர அனுக்ரகம் அல்லது நம்மைச் சுற்றியுள்ள, நம் மீது கருணை கொண்ட ஊழ் நமக்கு துணையிருக்குமென்று சொல்கிறாள். இங்கு நல்லூழ் ஸ்ரீதேவி ரூபத்தில் வருகிறது.
நாடகம் தொடங்குகிறது. வெளிய அனந்தனும் உள்ளே லாரன்சும் பதட்டமாய் இருக்கிறார்கள்.ஸ்ரீதேவி உள்ளே வருகிறாள். காதலியாய் அவனிடம் குழைகிறாள், அவன் பதட்டம் மறைந்து காதலனாய் மாறுகிறான். மாற்றியது ஸ்ரீதேவி, மாறியது லாரன்ஸ். பின் அன்னையாய் வருகிறாள், அவன் மகனாக மாறிவிடுகிறான்.செய்யவைத்தது ஸ்ரீதேவி, செய்தது லாரன்ஸ்.பின் வட்டி ராஜம்மாவாய் வருகிறாள், இவன் கடன்காரனாகிவிடுகிறான். வட்டி ராஜம்மாவாக வந்த ஸ்ரீதேவியிடம், அன்னையாய் வந்த ஸ்ரீதேவி உள்ளே இருப்பதாய் சொல்கிறான். இங்கு அறிவின் போதாமை தெரிகிறது. அவனின் விழிப்புமனத்துக்கு மூவரும் ஒரே பெண்ணென்று தெரியும். அந்த நாடக தருணத்தில் அறிவு மறந்து விடுகிறது.ஸ்ரீதேவி காதலியாய் உள்ளே வந்தவுடனே விழிப்புமனத்தின் கைப்பிடி நழுவி லாரன்ஸ் பிறிதொன்றாக மாறிவிடுகிறான்.மூவரும் வெவ்வேறு பெண்ணென்று நினைக்கிறான்.மேடையில் பேசும்போது அறிவை நம்பி பேசாமல் பயிற்சியை நம்பிப் பேசவேண்டும்.மனமே துரிதமாக வெளிப்படும். அறிவு கொஞ்சம் மெதுவாகத்தான் வரும். நாடகம் நன்றாய் முடிகிறது. எழுத்து, இயக்கம் அனந்தன், ஆனால் இயக்கியது அனந்தன் மற்றும் ஊழ்.
நாடகம் முடிந்தபின் லாரன்ஸ் சில தரிசனங்களை உணர்கிறான். அவன் ஏன் ஸ்ரீதேவி காலில் பணிகிறேன்? ஸ்ரீதேவியிடம் அவன் பணியவில்லை. ஸ்ரீதேவிக்குள்ளிருக்கும் அல்லது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளிருக்கும் தெய்வத்தை பணிகிறேன்.அந்த தேவியை பணிகிறேன். தன்னை இயக்கி வைத்ததை எண்ணி பணிகிறேன்.
அன்புடன்
மோகன் நடராஜ்
   
வெள்ளையானை- சரவணக்குமார் கணேசன்
   
அடிமைகள் – இந்த சொல்லை இப்போது பயன்படுத்தும் போது, நமக்கு தொடர்பில்லாத, ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றியதாகவோ… தற்கால சூழலில் நாகரீகம் குறைவான சொல்லாகவும் கருதப்படலாம்…
எந்த சூழ்நிலையிலும் வலியவர் ஆக இருப்பவர் எளியவரை அடக்கி ஆளவே துடிக்கிறார். ஆளவும் செய்கிறது.
கணவன்- மனைவி
காதலன் – காதலி
முதலாளி – தொழிலாளி-
ஆசிரியர் -மாணவர்
பெற்றோர் -பிள்ளைகள்
கருப்பு- வெள்ளை
மனிதன் -மற்ற உயிரினங்கள்
போன்ற அத்துணை உறவுகளிலும் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாட்டிலும் நீங்கள் இந்த ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை உணர முடியும். இது வெவ்வேறு தருணங்களில் வலியவரால் புகுத்தப்படுதலிலும்,
எளியவரால்
மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதலிலும் பல்லாயிரம் ஆண்டுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.மானுடத்தின் அடிமையாதல் மற்றும் அடிமையாக்கல் இயல்பின் பெருங்கூறாகவே
ஜாதி,மதம், இனம்,மொழி மற்றும் நாடு
போன்றவற்றை பார்க்க முடிகிறது.
இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் கிட்டத்தட்ட அடிமையாக இருக்கும் ஒருவன் படிப்படியாக அதிகாரத்தை அடையும் போது, அந்த பயணத்தில் அவன் மனம் அவனோடு எப்படி பயணித்தது என்பதை நமக்கு இந்த நாவல் காட்டுகிறது.ஆங்கிலேய அதிகாரி எய்டனுக்கும், அயர்லாந்து அடிமை எய்டனுக்கும் நடக்கும் மன போராட்டத்தின் விரிவே இந்நாவல். எப்போதும் அதிகாரமே வெற்றி பெறுகிறது.
வெள்ளை யானை- பனிக்கட்டி – எய்டன் வெள்ளைக்கார அதிகாரி எய்டனை, வெள்ளை யானை போன்ற பெரிய பனிக்கட்டியுடன் உருவகப்படுத்தி காட்டியிருக்கிறார். வெள்ளை யானையும் பனிக்கட்டியும் சமாதானத்தின் மற்றும் அமைதியின் உருவாக வெள்ளை நிறத்தில் தோன்றினாலும் அதன் குணாதிசயம் மாறப்போவதில்லை. யானைக்கு மதம் பிடிப்பதைப் போல, ஐஸ் பேக்டரியில் பனிமலை தனது கட்டை அவிழ்த்து வேலையாட்களை கொள்ளும்போதும், வெள்ளைக்கார அதிகாரி எய்டன் ஐஸ்ஹவுஸ் வேலையாட்களை தாக்க தன்னிலை அறியா உத்தரவிடும் போதும் நாம் அதை உணர முடிகிறது.
ஏய்டன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, துரை சாமி, சாமி, ஜோசப், காத்தவராயன், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவுரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ் என்று பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த கருத்தை மையப்படுத்தி நாவலை சுவாரசியமாக நகர்த்திச் செல்கின்றன.
ஆங்காங்கே பொறிக்கப்பட்ட பதிவுகள்
“ஆட்சி என்பது என்ன? அது மேலோட்டமாக எவ்வளவுதான் சமத்துவம், நீதி, கருணை என்றெல்லாம் பேசினாலும் உள்ளே இருப்பது சுரண்டல்தான். அப்பட்டமான நேரடியான சுரண்டல். அந்தச் சுரண்டலை குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்தால் மட்டும்தான் நான் நல்ல ஆட்சியாளனாக முடியும்.”
“இந்த தேசத்தின் எழுதப்படாத நியதிகளில் ஒன்று அது. செல்வமும் பதவியும் வரும்போது ஒவ்வொரு தாழ்ந்த சாதிக்காரனும் தன்னைத் தன் சாதியில் இருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டாக வேண்டும். உயர்சாதியினரைப்போல வேடம் போடவேண்டும். அவர்களின் வழக்கங்களையும் மனநிலைகளையும் அவர்களைவிட மேலாக நகல் செய்ய வேண்டும். சொந்த சகோதரர்களையும் தாய் தந்தையரையும் துறந்து விடவேண்டும்.”
“மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன. இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள். இவை பிறந்து பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டு செல்கின்றன.”
இங்கே பெண்களே ஏன் வெளியே தென்படுவதில்லை?” முன்னால் இருந்த ஜன்னலின் சிறு கதவைத் திறந்து ஏய்டன் கேட்டான். “அவர்களும் எங்களைப் போலவே தீண்டப்படாதவர்கள் சர்”. “ஆம், நாங்கள் வெளியே நிறுத்தப்படுகிறோம். அவர்கள் உள்ளே அடைக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.”
“இங்கே எல்லாருமே யாருக்காவது உயர்சாதிதான். எல்லாருமே யாருக்காவது தீண்டப்படாத சாதியும்கூட.”
தங்கள் வாழ்க்கையை நியாயப்படுத்தாத மனிதர்கள் எவரும் இந்த மண்ணில் வாழமுடியாது”
1800 களின் முற்பகுதியில், இருந்த ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வலிகளையும்… வலிகளை மட்டுமே நாவல் காட்டுகிறது. வலிகள் மட்டுமே இருந்திருக்கக்கூடும்.
சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு எழுத்தும் சிவப்பு மையினால் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. அது உங்கள் மூளைக்கு தரும் செய்தி உங்களால், உணர முடியாத, உகிக்க முடியாத செய்தியாகவும் இருக்கக்கூடும். மிகப் பெரிய தாக்கத்தையும் விளைவுகளையும் தரக்கூடும். இந்த வெள்ளை யானை படித்து முடிக்கும்போது இந்தத் தாக்கத்தை உட்கிரகித்த யானையாகவும் நாம் இருக்கக்கூடும்.
சரவணக்குமார் கணேசன்
வெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்
நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை
காலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை
வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி
வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்
வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்
வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்
வெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும்
வாசகர், எழுத்தாளர் – கடிதங்கள்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/அன்புள்ள ஜெ,
வணக்கம்!
இன்று காலையில் ஒரு கனவு. உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். நீங்கள் ஏதோ எழுத்திக்கொண்டிருந்தீர்கள். ஆகவே உங்களைப் பார்க்க முடியவில்லை. அருண்மொழி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசினேன் என நினைவில் இல்லை. பிறகு நீங்கள் தோசை சுட்டுக்கொடுத்தீர்கள். அப்பொழுதும் உங்களுடன் சரியாக பேசமுடியவில்லை. உண்டு முடித்தவுடன் வீட்டு அழைப்புமணி அடிக்க எழுந்துகொண்டேன். மணி ஆறு ஐந்து. காலையில் தளத்தைத் திறந்தால், நான் எழுதிய ஒரு கடிதம் பிரசுரமாயிருந்தது. இனிய தற்செயல். கனவுகளின் தற்செயல்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள். முன்பு இதுபோல எனக்கு நேரும்போது சிறு மகிழ்வூட்டும் அதிர்ச்சி மட்டும்தான் இருக்கும். இன்று நீங்கள் வந்ததால் இன்னும் அதிக மலர்ச்சி. இனிய நாள். உங்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.
அன்புடன்
யஸோ தேவராஜன்
***
அன்புள்ள யசோ,
சுவாரசியமான கனவு. ஆனால் என் நண்பர்கள் பலர் இத்தகைய கனவுகளைப்பற்றிச் சொல்வதுண்டு. பலரின் கனவுகளில் நான் தோன்றுகிறேன். குறிப்பாக கிருஷ்ணன், ராஜமாணிக்கம் போன்றவர்கள் பயணம் செய்யும் கனவுகளை அடிக்கடி அடைவதுண்டு. உடனே கிளம்பிவிடுவோம்.
நாம் உரையாடிக்கொண்டே இருக்கிறோம், அதுவே கனவாகவும் நீள்கிறது.
ஜெ
***
அன்பு ஜெ,
இதுவல்ல நான் உங்களுக்கு எழுத நினைத்த முதல் கடிதம். அந்தம் கொள்ளாத அந்த முதல் கடிதத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். இந்தியப் பயணம் ஒன்றிற்கான ஆதியாக “தாயார் பாதம்” தொட்டுத் தொடங்க நினைத்து குமரியில் திரிந்த தினத்தையும் அந்தத் தினத்தில் நான் அங்கு என்னைத் தொலைத்ததையும், தொலைத்த என்னை நானே வேறொரு நானாக மீட்ட நினைவுகளையும் சுமந்த கடிதம் அது. அது நீங்கள் கண்ணுற காலமும் நானும் கனிகிற இன்னொரு நாளுக்காகக் காத்திருக்கிறது போல.
உங்களை இப்போதே நெருங்குவதா கூடாதா என்ற தொடர்சிந்தனை அலைவுகளுக்கு இடையில் நேற்று கவிக்கோ மன்றத்தில் உங்களை உங்களின் ஒவ்வொரு அசைவை அருகில் இருந்து இரசித்தேன். ப்ரியத்திற்குரிய ஆளுமைகளை அண்டுகிறபோது அவர்கள் குறித்தான ஆச்சர்யங்கள் குமிழிபோல் உடைந்து போய்விடும் என்றே கேள்விப்பட்ட வந்த ஒன்று நேற்று பொய்யாகிப் போனது. ஆம் ஜெ!எனக்கு உங்களை வெகுவாகப் பிடித்துப்போனது உங்கள் படைப்புகளைப் போலவே. சிறிதும் ஆணவம் இல்லை. சிரித்துக்கொண்டே இருந்தீர்கள். சிறுவர்களைக் கண்டவுடன் சிறகு பூட்டிக் கொண்டீர்கள். மூத்தவர்களுக்கு எழுந்து மரியாதை செய்தீர்கள்.
யாரிடமும் கையெழுத்து வாங்கக் கூடாது என்பதை சில நியாயங்களுக்காகக் கடைப்பிடித்து வந்த நான் அதை மீறிவிட்டேன். சில மீறல்கள் தேன் ஊறல்கள். உங்களின் முதல் படைப்பான “ரப்பர்” நாள் குறிப்பிட்ட உங்கள் கையெழுத்துடன் இப்போது என்னிடம். கனவுபோல் நிகழ்ந்தேறிய அந்தக் கண நேரக் காலம் இனி எப்போதும் உறைந்துகிடக்கும் ரப்பராக. காமம் தலைக்கேறி மவுண்ட் ரோட்டில் வெயிலில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த அன்று – பத்து வருடங்களுக்கும் கூடுதலாக இருக்கும் – தேவநேயப் பாவணர் நூலகத்தில் ரப்பர் வாசித்தேன். அதற்குப் பின் உங்களை நெருக்கமாக உணர்ந்து உங்களோடு உளமாற உளறல் செய்துகொண்டிருக்கிறேன். நேற்று “ஏழாம் உலகம்” வாங்கினேன் நான் கடவுளைக் காண. உடன் “ஆள்தலும் அளத்தலும்”, “வியனுலகு வதியும் பெருமலர்”. மனதுக்கு என்னவோ போல் இருந்தது. இப்போது நிறைவாக உணர்கிறேன்,நேற்றைய நிகழ்வுக்குப் பின்னான மழை தந்ததைப் போல.
அன்புடன்
ச. சிவசங்கரன்
***
அன்புள்ள சிவசங்கரன்,
எந்த ஆளுமையானாலும் பழகாமல் முடிவுசெய்யக் கூடாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். எனக்கு நன்கு தெரிந்த ஓர் எழுத்தாளர் பொதுமேடைகளில் மிக ஆணவம் கொண்டவர் போல தெரிவார். உண்மையில் அவர் மிக மிக ‘நெர்வஸ்’ ஆகி மூளையே இல்லாமல்தான் மேடையில் இருப்பார். அது அக்கறையின்மை அல்லது மதிப்பின்மையாகத் தெரியும்.
எழுத்தாளர்களை அணுகும்போது அவர்களிடம் பொதுவான நாகரீகம். பண்பு ஆகியவறரி தேடலாகாது- என்னிடம் தேடலாம். நான் அதில் கவனமாக இருப்பேன். அனைவரும் அவ்வாறல்ல. அந்த ஆளுமையை அவருடைய எழுத்துடன் ஒப்பிட்டு அவர் குறைவாக இருக்கிறார் என எண்ணலாகாது. மாறாக அந்த ஆளுமையில் இருந்து அந்த படைப்பு எப்படி வந்தது என அறியமுயலவேண்டும். வேரில் துவர்ப்பது கனியில் இனிக்கிறது என்பதுபோல
நாம் மீண்டும் சந்திப்போம். சென்னை வரும்போது
ஜெ
அஞ்சலி குரு ராஜதுரை
குமரிமாவட்ட இலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமானவரான கவிஞர்,நாடகாசிரியர் குரு ராஜதுரை இன்று மாரடைப்பால் காலமானார். சப்பாணி என்னும் சிறுகதை தொகுதியும் நீர்நிலவு என்னும் கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன.53 வயதானவர். இலைகள் என்னும் இலக்கிய அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவந்தார்
January 21, 2022
பெண்விடுதலை, சமூகப்பரிணாமம்
   
வினயா ஒரு பெண்காவலரின் வாழ்க்கைக்கதை வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
கடந்த வாரம் குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் “வினயா. ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை” என்ற நூலை வாசித்தேன். இது கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் காவலரின் வாழ்க்கைப் பதிவுகள் என்று வரையறுக்கலாம். ஒரு சுயசரிதை வடிவம் என்று கொள்ளலாம். பொதுவாக சுயசரிதை என்பது வெற்றியாளர்கள் என்று கருதப்படுபவர்களின் வெற்றி சூத்திரங்களை ஆவணப்படுத்தும் பக்கங்கள் என்பது தான் எனது எண்ணம்.
அதீதமான அறிவுரை நோக்குடனோ இல்லை கழிவிரக்கம் கோருபவையாகவோ இல்லை, ஒரு கருத்தியலை மறைமுகமாக பறைசாற்றும் எண்ணத்துடனோ எழுதப்பட்டதல்ல இந்த நூல். காவல்துறையை சார்ந்தவர்கள் இதற்கு முன்னர் சுயசரிதை எழுதியிருந்தாலும் பொதுவாக அது ஐ.பி.எஸ் அல்லது துறையின் உயர்பதவிகளை அங்கீகரித்தவர்களால் எழுதப்பட்டது. பெரும்பாலும் அது ஒரு நேர்மையான தனிமனிதன் ஒரு அமைப்புக்குள் சந்திக்கும் சிக்கல்களை ஓரளவுக்கு எடுத்துக் கூறுவதுடன் தன் எல்லையை சுருக்கிக் கொள்ளும் வகையில் தான் எழுதப்பட்டுள்ளன. முதல் முறையாக (எனக்குத் தெரிந்தவரை) காவல் துறையில் மிகவும் தொடக்க நிலையில் இருக்கும் ஒருவரால் எழுதப்பட்டதும் அதுவும் அவர் ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த பெண் என்பதும் தான் இந்த புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது. இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்ய. நீங்கள் பரிந்துரை செய்ததாக யூசுப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலைப் பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளரும் ஒரு இளம்பெண் தன்னளவில் தான் வாழும் சூழலில் அவதானிக்கும் நிகழ்வுகளில் இருந்து பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் திட்டவட்டமாக வரையறுத்து வைத்திருக்கும் விதிகளின் அபத்தங்களை தன்னளவில் கண்டு உணர்கிறாள். இந்த நிலையில் அவள் காவலர் பணிக்கு சேர்கிறாள். பிறகு அந்த காவல்துறை என்ற அமைப்பிற்குள் ஒரு பெண் எவ்வாறு நடத்தப்படுகிறாள் என்பதை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். மேலும் தன்னுடன் பணிபுரியும் ஒரு சக காவலனை திருமணம் செய்து கொள்கிறாள். வழக்கமான காவல் துறையில் நிலவும் ஆதீத ஒழுக்கம் சார்ந்த தண்டனைகள், எவ்வித கருணையும், மனிதாபிமானம் இன்றி மேலதிகாரிகள் நடத்தும் விதம், சக காவலர்களில் இருந்து உச்சபட்ச மேலதிகாரி வரை பெண்காவலர்களை நடத்தும் விதம் என்று ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய உள்ளுணர்வால் உந்தப்பட்டு அந்த பாகுபாடுகளுக்கு முடிந்தவரை எதிர்வினையாற்றுகிறாள். சில மாற்றங்களையும் சாதிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் கேரள டி.ஜி.பிக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கும் நிலைக்கு சென்று விடுகிறது. அதன் காரணமாக ஏற்படும் நெருக்கடிகளால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவருடைய கணவருக்கு வாழ்க்கை திரும்பப் பெற அழுத்தம் கொடுக்கிறார்கள். அவளுடைய சுயத்தையும், அவளின் சமதத்துவ தேடலையும் உணர்ந்து அவளுக்கு முழு ஆதரவு கொடுக்கும் கணவன் ஒரு கட்டத்தில் அந்த வழக்கை திரும்ப பெறாவிட்டால் தனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறுவதை கேட்டு உடைந்து போவதுடன், வேறு வழியில்லாமல் வழக்கை திருப்ப பெற்றுக் கொள்கிறாள். எந்த சமூக விதிகள், ஆசாரங்கள் போன்றவற்றை எதிர்த்து போராடினாளோ இறுதியில் அந்த விதிகளுக்கு பணிந்து விடுகிறாள். இந்த நூலைப் பற்றி இன்னும் விரிவாக எழுதி விவாதிக்க வேண்டும். அதற்கு முன் எனக்கு சில வினாக்கள் உள்ளன. உங்கள் கருத்துக்களை அறிய விழைகிறேன்.
1. பாலின சமத்துவமின்மை இந்திய சமூகத்தில் திட்டவட்டமாக நிலைபெற மதம் தான் முதற்காரணமா?? என்னுடைய ஐயம் முழுக்க முழுக்க நிகழ்காலம் சார்ந்தது. இந்து மதத்தை வெறும் சடங்காக மட்டும் இருக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி இல்லை ஆச்சாரங்களை கடை பிடிக்கும் சமூகமாக இருந்தாலும் சரி, பாலின சமத்துவத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் இயங்குகின்றன. பாலின சமத்துவம் என்ற கருத்தியலை உள்வாங்க நாம் நம்முடைய மரபுக்கு வெளியே நம்மை நிறுத்தி கொள்ள வேண்டுமா?
2. என்னுடைய 30+ வருடத்தில் நான் கற்ற, நம்புகின்ற பல்வேறு விஷயங்கள் வெகு ஆழத்தில் சென்று பார்த்தால் பெரும்பாலும் அவை பாலின சமத்துவமின்மையின் மீது தான் கட்டி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணம் அம்மா மதுக்கடைக்கு சென்று மது அருந்தி விட்டு வருவதும் அப்பா சமையல் செய்து விட்டு காத்து கொண்டிருப்பதுமாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
3. குழந்தைகளுக்கு எவ்வாறு பாலின சமத்துவத்தை கற்றுக்கொடுப்பது?
ஆழமாக யோசிக்கும் போது சில நேரங்களில் ஒருவித சோர்வு வந்துவிடுகிறது. ஆதனால் தான் தங்களிடம் கேட்கிறேன். உடல். நலம் பேணிக்கொள்ளவும்
கோபி செல்வேந்திரன்
***
அன்புள்ள கோபி,
மேலே சொன்ன கேள்விகளுக்கெல்லாம் விடைகளை நீங்களே யோசிக்கலாம். பாலினச் சமத்துவமின்மையை மதம் கற்பித்து நிலைநிறுத்துகிறதா? பாலியல் சமத்துவத்தை நாம் நம் வாரிசுகளுக்குக் ‘கற்பிக்க’ வேண்டுமா? இவற்றை மானுடப்பரிணாமத்தின் பொதுச்சித்திரத்தில் வைத்தாலொழிய நாம் எதையும் சிந்திக்க முடியாது.
சமத்துவமின்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம்? அவை மனிதனை அடிமைப்படுத்துவதற்காக, சமூகத்தை கட்டிப்போடுவதற்காக உருவாக்கப்பட்டவை என நம்புவது ஒரு பார்வை. ஆனால் அது ஒருவகை சோர்வுப்பார்வை. மானுடசமூகம் எப்போதும் வளர்ச்சிமுகமாகவே உள்ளது. அது இதுகாறும் வளர்ந்து வந்துள்ளது என்பதும் கண்கூடு. ஆகவே வளர்ச்சிக்கு உதவுவன மட்டுமே இதில் நீடித்திருக்க முடியும். எனவே அதிலுள்ள எல்லா நம்பிக்கைகளும், ஒழுங்குகளும், எண்ணங்களும் அது தன் வளர்ச்சிக்காக உருவாக்கிக்கொண்டவை, சோதனைகளில் தேறி நிலைகொண்டவை என எண்ணுவதே சரியான பார்வை.
இதுவரையிலான மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாக ‘சமூக உருவாக்கத்தின் காலம்’ என வரையறை செய்யலாம். மானுட இனம் பிற உயிரினங்களைப் போலவே தனிமனிதர்களாக, குருதிசார் குழுக்களாக, இடம்சார் குழுக்களாக பிரிந்திருந்தது. ஒன்றோடொன்று கடுமையாகப் போரிட்டது. பிறிதை அழித்துத் தான் வாழ முயன்றது. தொல்மானுட வரலாற்றை எழுதும் ஆய்வாளர்கள் உக்கிரமான வன்முறையின் சித்திரத்தை அளிக்கிறார்கள். நியாண்டர்தால் போன்ற ஒப்பீட்டளவில் ஆற்றல்மிக்க தொல்மானுட இனங்கள் பிற இனங்களை முற்றாகவே அழித்ததை விவரிக்கிறார்கள்.
அந்த குருதிப்பெருங்களத்தில் இருந்து மெல்லமெல்ல பெரிய மானுடத்தொகுப்புகளை உருவாக்கிக் கொண்டனர். அதையே தொல்சமூகங்கள் என்கிறோம். அவை குருதி சார்ந்த குழுக்களாகவும், அக்குழுக்கள் இணைந்த சமூகங்களாகவும், பின்பு பல சமூகங்கள் இணைந்த பெருஞ்சமூகங்களாகவும், அதன்பின் தேசங்களாகவும், மதங்களாகவும், இனங்களாகவும் தங்களை தொகுத்துக்கொண்டன. மொழி, இன அடையாளம், நிலம் போன்றவை பொதுவான தொகுப்புக்கு உதவின.
இவ்வாறு சமூக உருவாக்கம் நிகழும்போது அதை தலைமுறை தலைமுறையாக மாறாதவையாகவே அமைத்தனர். அல்லது அப்படி தலைமுறை தலைமுறையாக மாறாமல் நீடித்தவையே பயன் அளித்தன. பழைய சமூகங்களில் நிலைத்த தன்மையே ஆற்றல் எனப்பட்டது. பழைய நூல்கள் மாறாமல் நிலைகொள்வதை மாபெரும் பண்புநலனாகக் குறிப்பிடுகின்றன. ‘பதி எழு அறியா பழங்குடி’ நிறைந்தது பூம்புகார் என்கிறது சிலப்பதிகாரம்
மாறாதது குருதி. ஆகவே எதுவுமே பிறப்படிப்படையில் எப்போதைக்கும் உரியதாக நிறுவப்பட்டது. சொத்துரிமை, நிலத்தின்மீதான ஆதிக்கம், அடையாளங்கள் எல்லாமே பிறப்பு சார்ந்தவையாக இருந்தன. அவ்வண்ணம் நீடிக்கும் பிறப்புசார்ந்த அடையாளங்கள் அவற்றுக்குரிய நம்பிக்கைகளை, மனநிலைகளை, தொன்மங்களை, குறியீடுகளை உருவாக்கிக்கொண்டன. அவை மதங்களாகவும் பிற பண்பாட்டுக்கூறுகளாகவும் ஆக்கப்பட்டு மேலும் உறுதிப்படுத்தப்பட்டன.
மதங்கள் உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மானுடர் பிறப்புசார் அடையாளங்களை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். குலக்குறிகள் (Totem) என்பவை பிறப்படிப்படையில் உருவான அடையாளங்கள் மனிதர்களை குழுக்களாக ஆக்கின. அவையே பின்னாளில் மதச்சின்னங்களும் தெய்வ வடிவங்களும் ஆயின.
உறுதிப்படுத்தல், நிலைநிறுத்தல் ஆகியவையே சமூக உருவாக்கக் காலகட்டத்தின் மையச்செயல்பாடாக அமைந்தன. அன்றைய எல்லா மனநிலைகளும் அதன் அடிப்படையில் அமைந்தவை. தங்கள் அமைப்பை திட்டவட்டமாக வகுத்து உறுதிப்படுத்திக்கொண்ட சமூகங்கள் ஆற்றல்மிக்கவையாக மாறி பிறவற்றை அடக்கி ஆண்டன. அல்லது அழித்தன. வெற்றிபெற்ற எல்லா சமூகங்களும் மாறாநெறிகளால் ஆனவை. இதுவே மானுட வரலாற்றின் சமூகவியல் சித்திரம்
ஒவ்வொருவரின் தனித்தன்மைகளைக்கொண்டு அவரவருக்கான பணியை, இடத்தை வரையறை செய்து நிலைநிறுத்திக்கொண்டே இருந்தது சமூக உருவாக்கக் காலகட்டம். அவ்வாறுதான் பிறப்பு அடிப்படையிலான தொழில்கள் பிரிக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் சமூகப்படிநிலைகளும் அதிகாரமும் வகுக்கப்பட்டன. இந்தியாவில் அவை சாதிகளாக ஆயின. உலகமெங்கும் எல்லாச் சமூகங்களிலும் பிறப்படைப்படையிலான பிரிவினைகள்தான் அடிப்படைச் சமூகக் கட்டுமானத்தை உருவாக்கும் நெறிகளாக இருந்தன.
(இன்று உயிரியியல் ஆய்வுகள் காட்டும் சித்திரம் என்னவென்றால் பெருந்திரளாகச் செயல்படும் எந்த உயிரினமும் (எறும்புகள் உட்பட) பிறப்பு அடிப்படையிலான கடமைப்பிரிவினையையும் அதற்கான நடத்தைகளையும் மாறாமல் நிறுவிக்கொண்டுதான் செயல்படுகின்றன என்பதே)
இவ்வாறுதான் நம் உறவுகள் எல்லாம் உருவாகி வந்திருக்கின்றன. தந்தை மைந்தர் உறவு, மூத்தோர் இளையோர் உறவு, அரசன் குடிமகன் உறவு, ஆண்டை அடிமை உறவு என பல உறவுகள் பலவகைகளில் இன்றும் நீடிக்கின்றன. அரசமுறை அடிமைமுறை போன்றவை மறைந்தாலும் உளநிலைகள் நீடிக்கின்றன. அவ்வாறு உறுதியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடம். அவ்வாறு உறுதியாக கடமைகளையும் உரிமைகளையும் உறவுகளையும் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை சமூகங்களுக்கு இருந்தது.
தொல்சமூகங்கள் பெரும்பாலும் வேட்டைச்சமூகங்கள். பின்னர் அவை போர்ச்சமூகங்களாக மாறின. அங்கே வேட்டைக்காரனுக்கும் படைவீரனுக்கும்தான் முதன்மை இடம். அதிகாரம், உரிமைகள் எல்லாம் அவனுக்கே. குடும்பத்தைப் பேணுவது, குடியடையாளத்தை நீட்டிப்பது, குழந்தைகளை பெற்றுத்தருவது ஆகியவையே பெண்களின் இடம் என வகுக்கப்பட்டது. ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்னும் ஔவையார் பாடல் இதையே குறிக்கிறது.
பெண்ணுக்கு இரண்டாம் இடம்தான். ஆனால் அது அடக்குமுறையால் உருவானது அல்ல, அது ஒரு நடைமுறைத் தேவையின் பொருட்டு உருவான அமைப்பு. அது வெற்றிபெற்றது. அந்தமுறை இருந்த சமூகங்களே வென்று நீடித்தன என்பதே அதன் நடைமுறைத் தேவைக்கான சான்று. பெண்ணுக்கு இரண்டாமிடம் வழங்கும் நெறிகள் மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே அவை உருவாகி நிலைபெற்றிருந்தன. மதங்களுக்குள் கொண்டுசெல்லப்பட்டு மதநெறிகளாக ஆக்கப்பட்டன
போர்க்குடிகள் அல்லாத தொல்குடிகளில் பெண்ணின் இடம் சிறப்பானதாக இருந்தது. இணையானதாகவோ ஆணைவிட மேலானதாகவோ. ஆனால் புறச்சவால்கள் இல்லாத காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளில் மட்டுமே அந்த முறை நீடித்தது. அந்த முறையின் ஒரு சில ஆதாரங்கள் கேரளம், வடகிழக்கு பகுதிகளில் உள்ளன. ஆனால் போர்ச்சாதிகளாக அவை மாறியபோது மிக விரைவிலேயே பெண்களின் முதன்மை என்பது ஒருவகை ஆசாரமாக மாற்றிக்கொள்ளப்பட்டு ஆண்களைச்சார்ந்து அச்சமூகங்கள் உருமாறியதையும் காண்கிறோம்.
உறுதியான தொல்சமூகங்களில் ஒவ்வொரு சமூக உறுப்பும் ஒட்டுமொத்தத்தால் கட்டுண்டதுதான். ஒரு கட்டிடத்தில் எல்லா செங்கல்லும் மொத்தக் கட்டிடத்தால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதைப் போல. குழந்தைகள் பெற்றோருக்கு கட்டுண்டவர்கள். ஒவ்வொரு ஆணும் அவனுக்குமேலே உள்ள அதிகார அமைப்புக்கு கட்டுண்டவன். மேலே இருப்பவர்கள் அனைவருமே அதற்குமேலே இருப்பவர்களுக்கு கட்டுண்டவர்கள். அறுதியாக இருப்பவர் ஆசாரங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் கட்டுண்டவர்.
பலவகையான ஆசாரங்கள் வழியாக ஒவ்வொருவரையும் ஒட்டுமொத்தச் சமூகமும் சேர்ந்து உறுதியாக கட்டுப்படுத்தியது. அவற்றை மீறும் எண்ணம் அன்று இருக்கவில்லை. ஏனென்றால் அந்த கட்டுப்பாடுகள் வழியாக உருவாகும் ஒற்றுமையும் உறுதியான சமூக அமைப்பும் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கின, வாழ்க்கையின் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளச் செய்தன. அத்துடன் அன்று அவர்கள் தங்களை தனிமனிதர்கள் என்றும் தங்களுக்கு தனியுரிமைகள் உண்டு என்றும் எண்ணவில்லை.
அவ்வாறே பெண்ணும் குடும்பம், தந்தை, கணவன் என பலருக்கும் கட்டுண்டவள். அதாவது அவள் மட்டும் அடிமை அல்ல, அத்தனைபேருமே ஏதோ ஒருவகையில் அடிமைகளே. கீழே வர வர அடிமைச்சுமை அதிகம். அவ்வளவுதான். பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசுகிறோம், இன்னமும்கூட நாம் நம் குழந்தைகள் சார்ந்த எல்லா முடிவையும் நாமே எடுக்கிறோம். அவர்களை அடிக்கவும் வசைபாடவும் செய்கிறோம். அந்த அடிமைத்தனம் நம் கண்ணுக்குப் படுவதுமில்லை.
நவீனச்சமூகத்திற்கும் தொல்சமூகங்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. நவீனச் சமூகம் என நாம் சொல்வது சென்ற இருநூறாண்டுகளில் இந்தியாவில் படிப்படியாக உருவாகிவந்த ஒன்று. அதற்கு நூறாண்டுகள் முன்பு ஐரோப்பாவில் உருவானது. நவீனச் சமூகத்தின் மனநிலைகள் தொல்சமூகத்தில் ஏன் இல்லை என்று கேட்பதும் சரி, நவீனச் சமூகம் தொல்சமூகத்திற்கு எதிரி என நினைப்பதும் சரி, தொல்சமூகம் ஒரு கீழ்நிலை என நினைப்பதும் சரி, மானுடப்பரிணாமத்தை அறியாத சிந்தனைகள். நவீனச்சமூகம் தொல்சமூகத்தின் வளர்ச்சிநிலை, அவ்வளவுதான்.
நவீனச் சமூகத்திற்கும் தொல்சமூகங்களுக்குமான வேறுபாடுகள் என்னென்ன?
அ. நவீனச் சமூகம் உருவாவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது போரில்லா நிலை. பெரிய நாடுகள் உருவாகி, அவற்றில் உறுதியான நிலையான அரசு உருவாகி, சமூகத்திற்குள் நிகழும் தொடர்போர்கள் இல்லாமலாகும்போது மட்டுமே நவீனச் சமூகங்கள் உருவாக முடியும். இனக்குழுச்சண்டைகள், நிலப்பகுதிச்சண்டைகள் முழுமையாக நின்றுவிடும்வரை நவீனச்சமூகம் உருவாகாது. அவ்வாறு போர் இல்லாமலாகும்போது போரை அடிப்படையாகக் கொண்டு உருவான அமைப்புகள் மற்றும் மனநிலைகள் மறையும். அதுவே நவீனச் சமூகம் உருவாகும் பாதை.
ஆ. போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகியவற்றில் உருவான பெரும்புரட்சி நவீனச் சமூகத்தை உருவாக்குகிறது. அவை பலகோடி மக்களை இணைந்து மாபெரும் சமூகங்களை உருவாக்குகின்றன. இந்தியாவில் இருநூறாண்டுகளுக்கு முன்புதான் மக்கள் அவரவர் சாதிக்குழுக்களை விட்டு வெளியே வந்து பொதுவான சமூகத்தை உணர ஆரம்பித்தனர். காரணம் ரயில், தபால், சாலைகள், செய்தித்தாள்,வானொலி, சினிமா. இவ்வாறாகத்தான் பொதுச்சமூகம் என்னும் அமைப்பு உருவாகிறது. அது மனிதர்கள் தங்கள் சாதி, இனக்குழு, தொழிற்குழு வட்டாரங்களுக்குள் வாழவேண்டிய தேவையை இல்லாமலாக்கியது.
இ. நவீனச் சமூகம் என்பது பொதுக்கல்வியால் உருவாக்கப்பட்டது. முன்னரும் கல்வி இருந்தது. ஆனால் அது தனிக்கல்வி. இனக்குழுக்களுக்குள் தொழிற்குழுக்களுக்குள் குடும்பத்திற்குள் அளிக்கப்பட்ட கல்வி. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொன்று. அனைவருக்குமான பொதுக்கல்வியே சராசரி குடிமகன் என்ற அலகை உருவாக்கியது. இந்தியாவில் பிரிட்டிஷார் உருவாக்கியதுதான் பொதுக்கல்விமுறை.
இவ்வாறு உருவான நவீனச் சமூகத்தில்தான் ‘தனிமனிதன்’ என்னும் கருத்துருவம் உருவாகிறது. தனிமனிதனாக மனிதர்கள் தங்களை உணரும்போதுதான் தங்கள் உரிமைகளை அறிகிறார்கள். சமத்துவம் என்பது ஓர் உரிமை என்னும் எண்ணம் உருவாகிறது. இதெல்லாம் இந்தியாவில் சென்ற இருநூறாண்டுகளாக உருவான சிந்தனைகள்.
வலுவான அரசு, சீரான நீதி மற்றும் நிர்வாகமுறை, பொதுக்கல்வி ஆகியவற்றின் விளைவாகவே தனிமனிதன் என்னும் கருத்து உருவாகி நிலைகொள்ள முடியும். அதன்பின்னரே சமத்துவம் என்னும் கருத்து உருவாக முடியும். இந்தியாவில் தனிமனிதன் என்னும் கருத்து இன்னும்கூட முழுமையாக உருவாகவில்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணந்தால் அவன் குடும்பமும் சாதியும் அவனைக் கொல்லச் செல்வது இன்னும்கூட தனிமனிதன் என்னும் எண்ணம் நிலைகொள்ளாததனால்தான்.
சென்ற காலங்களில் இங்கே தனிமனித உரிமை, சமத்துவம் ஆகியவற்றுக்காக ஒவ்வொருவரும் போராடினர். அடித்தளச் சாதிகள் போராடினர். மிக மேல்மட்டத்தில்கூட அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. ஈமச்சடங்குகளைச் செய்யும் பிராமணர் மற்ற பிராமணர்களிடம் சமத்துவத்திற்காகப் போராடினர் என்பதெல்லாம் வரலாறு. அந்தப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் தனியடையாளத்தை காக்க, நம் உரிமைகளுக்காக கொஞ்சமேனும் போராடிக்கொண்டிருக்க வேண்டியவர்களே.
பெண்கள் கல்வி கற்று தனிமனிதர்களாக உணரும்போது சமத்துவத்திற்கான குரல் எழுகிறது. இது பெண்களுக்கு மட்டுமான ஒரு தனிநிகழ்வு அல்ல. தொல்சமூகங்களில் இருந்து நவீனச் சமூகம் நோக்கி செல்லும் ஒவ்வொருவரும் நிகழ்த்தும் போராட்டம். பெண்களுக்கு ஆண்களை விட கட்டுப்பாட்டுச் சுமை அதிகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்னும் அதிகம். பழங்குடிகளுக்கு இன்னும் அதிகம். விளிம்புநிலையாளர்களான மூன்றாம்பாலினம் போன்றவர்களுக்கு இன்னும் அதிகம்.
இந்தப்போராட்டம் நிகழ்கிறது என்பதே இங்கே மாற்றங்கள், வளர்ச்சிகள் நிகழ்கின்றன என்பதற்கான சான்று. நாம் மேலும் மேலும் நவீனச் சமூகமாக ஆகிறோம். மேலும் தனிமனிதர்களாகவும் சமத்துவம் கொண்டவர்களாகவும் ஆகிறோம். நம் தாத்தாவை விட நம் அப்பா சுதந்திரமானவர். நாம் மேலும் சுதந்திரமானவர்கள். நம் பிள்ளைகள் நமக்கிருந்த கட்டுப்பாடுகளையும் தாண்டியிருக்கிறார்கள். நம் பாட்டியை விட நம் அம்மா, நம் அம்மாவை விட நம் மனைவி, நம் மனைவியை விட நம் மகள் சுதந்திரமானவர்கள்தான்.
இந்த பரிணாமம் எதுவரை? நாம் இன்று உருவகிக்கும் நவீனச் சமூகம் என்பது ஓர் இலட்சியவடிவமா? அல்ல. இந்தப் பரிணாமத்தின் உச்சியில் இன்னொரு அதிநவீனசமூகம் உருவாகலாம். இன்று நாம் அதை முழுமையாகக் கற்பனைசெய்ய முடியாது. பாலியல் அடையாளங்களற்ற சமூகமாக அது இருக்கலாம். வேலைசெய்யாமல் இருக்கும் இயந்திர மயமாக்கப்பட்ட சமூகமாக இருக்கலாம். மனிதர்கள் ஒரே வகையானவர்களாக தரப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது மனிதர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தன்மை கொண்ட தனி அமைப்புகளாக இருக்கலாம். நாம் இங்கிருந்து அங்குநோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
நாளை உருவாகும் சமூகம், அதாவது இருநூறாண்டுகள் கழித்து வரும் ‘அதிசமூகம்’, பாலியல் அடையாளங்களில் இருந்து விடுபட்டிருக்கும். ஆண் அல்லது பெண் என்பது ஒருவர் தற்காலிகமாக சூடிக்கொள்ளும் அடையாளமாக, தன்னிலையாக இருக்கும். ஒருவர் வாழ்க்கையில் பலமுறை ஆணாகவும் பெண்ணாகவும் மாறி வாழநேரிடலாம். பாலடையாளமே இல்லாதவர்களும் இருக்கலாம். வழக்கமான பாலுறவும் பாலின்பமும் காலாவதியாகி வேறுவகை நரம்புத்தூண்டல்கள் வழியாக அவ்வின்பங்கள் அடையப்படலாம். இது என் ஊகம்
ஏனென்றால் ஐரோப்பாவில் இன்றுள்ள பல குறுங்குழுச் சமூகங்கள் அத்தகையவையாக உள்ளன. நவீன உயிரியல் தொழில்நுட்பம் அந்த போக்கை வலுப்பபடுத்தும். நான் நித்யாவின் மாணவரான ஓர் அமெரிக்க வெள்ளைய எழுத்தாளர் வழியாக அறிமுகம் செய்துகொண்ட ஒரு குறுங்குழுச் சமூகம் அப்படிப்பட்டது. நாம் திகைக்குமளவுக்கு விசித்திரமான பாலடையாளங்கள் கொண்டது. நான் ஒரு நாவலை எழுத அக்காலத்தில் எண்ணியதுண்டு.
சமூகங்களின் உருவாக்கத்தில் அவை போராடி வாழும் சூழலே பெரும்செல்வாக்கைச் செலுத்துகிறது. அதேபோல இன்று தொழில்நுட்பம் பெரும்செல்வாக்கைச் செலுத்துகிறது. தொழில்நுட்பம் வளரும் வேகம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. ஆகவே சமூகங்கள் மாற்றமடையும் வேகமும் அதேபோல மாற்றமடைகிறது.
நீங்கள் சொன்ன நூலுக்கே வருகிறேன். அந்தப் பெண்மணி பழைய சமூகத்தின் மனநிலைகளும் மரபுகளும் நீடிக்கும் ஒரு சமூகத்தில் தன் உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடியவர். ஐம்பதாண்டுகளுக்கு முன் அவருடைய அன்னை பள்ளி சென்று படிக்கும் உரிமைக்காகப் போராடியிருப்பார். அவர் பாட்டி வெளியே நடமாடும் உரிமைக்காகப் போராடியிருப்பார். நூறாண்டுகளுக்குப்பின் அவருடைய பேத்தி தான் விரும்பும் பாலியல் அடையாளத்தைச் சூடிக்கொள்ள போராடலாம். இப்படித்தான் மானுடம் வளர்கிறது.
 Louis Gottschalk
Louis Gottschalkஇந்தவகையான நூல்களை வாசிக்கையில் ஒட்டுமொத்த மானுடப்பரிணாமத்தை வரலாறு, மானுடவியல் சார்ந்து புரிந்துகொண்டு அதை வைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு உதவும் நூல்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்ச்சூழலில் அத்தகைய நூல்களுக்கான இடமே இல்லை. அவை இங்கே மொழியாக்கம் செய்யப்படுவதுகூட இல்லை.
அந்த வெற்றிடத்தில் நூறாண்டுகள் பழைமையான மார்க்ஸிய சமூகவியல் வாய்ப்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அந்த மார்க்ஸிய பாலபாடத்தையே மேலும் எளிமைப்படுத்தி, பாமரர்களுக்காக எழுதப்பட்ட ஈவேராவின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ போன்ற துண்டுப்பிரசுரங்கள் மட்டுமே பரவலாக படிக்கப்படுகின்றன. படித்தவர்கள் என நம்பிக்கொள்பவர்கள்கூட இவற்றை மட்டும் படித்து அவற்றையொட்டி சிந்திப்பதும், பொய்ச்சீற்றம் கொள்வதும் நிகழ்கிறது.
நான் பரிந்துரைக்கும் முக்கியமான நூல்கள் இரண்டு.
Prehistory and the Beginnings of Civilization. – Jacquetta Hawkes மற்றும் Sir Leonard Woolley. [நான்கு வால்யூம்கள்]
History of Mankind, Cultural and Scientific Development. Louis Gottschalk, Loren Carey MacKinney, Earl H. Pritchard [நான்கு வால்யூம்கள்]
இவை நூல்கள் என்பதைவிட நூல்வரிசைகள் என்று சொல்லலாம். சில ஆயிரம் பக்கங்களில் மொத்த மானுடப்பண்பாட்டின் வளர்ச்சிப்பரிணாமச் சித்திரத்தை அளிப்பவை இவை. 1962ல் யுனெஸ்கோ இந்நூல்களை உலகம் முழுக்க சிந்திக்கும் மாணவர்களுக்காகப் பரிந்துரை செய்தது.
இந்நூல்கள் ‘புதிய’ கண்டுபிடிப்புகளை முன்வைப்பவையோ புதிய பார்வைகளை வைத்து வாதிடுபவையோ அல்ல. இவை அதுகாறும் மானுடவியலும், சமூகவியலும், தொல்லியலும் அவற்றை உள்ளடக்கிய வரலாற்றெழுத்தும் தொகுத்துக்கொண்ட மானுடப் பண்பாட்டு வளர்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. பொதுவாக ஏற்றுக்கொண்ட கருத்துக்களையும் தரவுகளையும் மட்டுமே முன்வைப்பவை.
இத்தகைய நூல்களை ஏன் வாசிக்கவேண்டும் என்றால் முதலில் தரவுகளாக, அடிப்படை கொள்கைகளாக நாம் மானுடம் பற்றிய ஒரு பொதுப்புரிதலை அடைந்திருக்கவேண்டும் என்பதனால்தான். அவ்வாறன்றி அவ்வப்போது கிடைக்கும் நூல்களை வாசிப்பது, விவாதங்கள் வழியாக உதிரிச்செய்திகளை அறிந்துகொள்வது, அரசியல்நோக்குடன் எழுதப்படும் நூல்களை மட்டுமே வாசிப்பது ஆகியவை நமக்கென சொந்தமான புரிதலோ சிந்தனையோ இல்லாமலாக்கிவிடும்.
அத்துடன் இவற்றை வாசிக்க உண்மையாகவே சில ஆண்டுகள் கடும் முயற்சி தேவை. அறிவியக்கச் செயல்பாடு கொண்டவர் அதைச் செய்தே ஆகவேண்டும்.வெறுமே நூல்களை அவ்வப்போது சுட்டிக்காட்டுவது உதவாது. சீராக ஒவ்வொரு நாளுமென ஒரு முறைசார் கல்விபோலவே பயிலவேண்டியவை இவை.
   
ஆங்கிலத்தில் இத்தகைய மாபெரும் நூல்களை நான் வாசித்திருப்பேனா என்று கேட்டால் வாய்ப்பில்லை என்றே சொல்வேன். ஆனால் சி.அச்சுதமேனன் கேரள முதலவராக இருந்த காலகட்டத்தில் அவருடைய முயற்சியால் கேரள பாஷா இன்ஸ்டிடியூட் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யத் தொடங்கி இந்நூல்களைத் தொடர் தொகுதிகளாக வெளியிட்டது. பேராசிரியர் எம்.தாமஸ் மாத்யூ பொது தொகுப்பாளராக இருந்து செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பணி இது. நான் எதையாவது மொழியாக்கம் செய்யவேண்டுமென நினைத்தால் இதைத்தான் எடுப்பேன்.
நான் இவற்றை நான்காண்டுக்காலம் ஒவ்வொரு நாளுமென வாசித்து முடித்தேன். ஒரு பெரிய தவம் என இதை நிகழ்த்தினேன். கையால் பல ஆயிரம் பக்கங்கள் குறிப்புகள் எடுத்தேன். இன்றும் என் நூலகத்தில் அரசனைப்போல அமர்ந்திருக்கின்றன இந்நூல்கள். (இன்று முப்பதாண்டுகளுக்குப் பின் தாள்கள் ஒடியும்படி பழுப்பேறிய இந்நூல்களை எடுத்துப் புரட்டியபோது ஒரு பெரும் நெகிழ்வு உருவாகியது. இனி இவற்றை வாசிப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது) இன்று சமூகவியல் சார்ந்து தமிழில் பேசும் எவரிடமும் இல்லாத தெளிவு என்னிடம் இருக்கிறதென்று நான் அறிகிறேன். அதை உருவாக்கியவை இந்நூல்களே. நான் மேலே சொல்லியிருப்பது மிக எளிமையான ஒரு சமூகப் பரிணாமச் சித்திரம், ஆனால் அப்புரிதலை அடையவும் அதை எளிமையாகச் சொல்லவும் அந்த வாசிப்பு அவசியமானது.
என் வரையில் எந்த மொழியில் நாம் அன்றடம் பேசிக்கொண்டிருக்கிறோமோ அந்த மொழியில் இவற்றை பயில்வதே இயல்வது. ஆங்கிலத்திலேயே முனைவர் பட்டம் வரை சென்ற ஒருவர் கூட இந்நூல்களை ஆங்கிலத்தில் படித்து முடிக்க முடியுமா என்னும் ஐயம் எனக்கு உண்டு. பலர் படித்ததில்லை என்பதை அவர்களின் கட்டுரைகளின் பொதுவான ‘தரையரசியல்’ தரத்தைக் கொண்டே உணர்ந்திருக்கிறேன். இருப்பதிலேயே புதிய சில நூல்களை மேற்கோள் காட்டுவார்கள், ஆனால் அவற்றை மெய்யாக வாசிக்க வேண்டுமென்றால் இந்தவகையான அடிப்படை நூல்களில் கல்வி இருந்தாகவேண்டும். (ஆனால் நான் விவாதங்களில் பிறரின் படிப்புக்குறைவை ஓர் எதிர்வாதமாக முன்வைப்பதில்லை. எனக்கு மதிப்பில்லை என்றால் அவர்களை பொருட்படுத்தமாட்டேன்)
   
இத்தகைய அடிப்படைக் கல்விக்கு பின்னரே நாம் ஒரு மார்க்ஸிய சமூக விமர்சனநூலையோ அல்லது யுவால்நோவா ஹராரி போன்றவர்கள் எழுதும் சமூகவியல் நூல்களையோ வாசிக்கவேண்டும். இன்று வந்துகொண்டிருக்கும் பலவகையான நவீன கருதுகோள்களை பற்றி விவாதிக்க இந்த அடித்தளம் தேவை. இந்த பொதுப்புரிதல் மேல் நின்றபடி சிந்திக்கும்போதுதான் நமக்கு மதிப்பிடவும் முடிவெடுக்கவும் தகுதி அமைகிறது. இல்லையேல் சட்டென்று ‘ஓண்ணுமே சரியில்லை’ என்றோ ‘எல்லாமே சதிவேலை’ என்றோ வழக்கமான வாய்ப்பாடுகளுக்குச் சென்று சேர்வோம்.
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   
   
   
   
   
   
   
   
   
  
