தேவி- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் புனைவு களியாட்ட சிறுகதை வரிசையில் தேவி பெண்ணின் இயல்பு பற்றி சொல்லும் கதைகளில் ஒன்று. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் பெண் தெய்வத்தை தேடிச் சொல்லும் கதை. ஆணுக்கு ஒரே பெண் மூன்று வெவ்வேறு பெண்ணாய் காதலி , அன்னை , வில்லி ரூபத்தில் வெளிப்படும் கதை. நாடகத்தின் ஹீரோ லாரன்ஸ் ஹீரோயின் கதைக்குத்தான் என்று உணராமல் ஹீரோ தனக்குத்தான் ஹீரோயின் என்று நினைத்து ஹீரோயின் மேல் கவர்ச்சி கொள்கிறான்.இது அவனுக்குள் இருக்கும் காமன் உருவாகும் மனநிலை.நாடகத்திற்கு ஹீரோயின் தேடி பல சாதகங்களை யோசித்தி ஸ்ரீதேவி வீட்டிற்கு செல்கிறார்கள்.அவளே காதலி பாத்திரத்தையும், அம்மை பாத்திரத்தையும் நடிக்க ஒப்புக்கொள்கிறாள்.

நாடகம் தொடங்குவதற்கு முன் பல சவால்கள் வருகிறது.வழக்கத்தைவிட பெரிய செயலை செய்யும்போது புறச்சூழலின் சவால்கள் தடையாய் வரும், அதை மீறி செயல்படும்போது மனதிலிருந்த சாத்தியங்கள் சாதனையாகிறது.வில்லியாய் நடிக்கவிருந்த குமரேசன் ஓடிவிட அதையும் ஸ்ரீதேவி நடிக்க தீர்மானிக்கிறாள்.அனந்தனுக்கு நாடகம் நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.ஸ்ரீதேவி தைரியம் சொல்கிறாள். ஈஸ்வர அனுக்ரகம் அல்லது நம்மைச் சுற்றியுள்ள, நம் மீது கருணை கொண்ட ஊழ் நமக்கு துணையிருக்குமென்று சொல்கிறாள். இங்கு நல்லூழ் ஸ்ரீதேவி ரூபத்தில் வருகிறது.

நாடகம் தொடங்குகிறது. வெளிய அனந்தனும் உள்ளே லாரன்சும் பதட்டமாய் இருக்கிறார்கள்.ஸ்ரீதேவி உள்ளே வருகிறாள். காதலியாய் அவனிடம் குழைகிறாள், அவன் பதட்டம் மறைந்து காதலனாய் மாறுகிறான். மாற்றியது ஸ்ரீதேவி, மாறியது லாரன்ஸ். பின் அன்னையாய் வருகிறாள், அவன் மகனாக மாறிவிடுகிறான்.செய்யவைத்தது ஸ்ரீதேவி, செய்தது லாரன்ஸ்.பின் வட்டி ராஜம்மாவாய் வருகிறாள், இவன் கடன்காரனாகிவிடுகிறான். வட்டி ராஜம்மாவாக வந்த ஸ்ரீதேவியிடம், அன்னையாய் வந்த ஸ்ரீதேவி உள்ளே இருப்பதாய் சொல்கிறான். இங்கு அறிவின் போதாமை தெரிகிறது. அவனின் விழிப்புமனத்துக்கு மூவரும் ஒரே பெண்ணென்று தெரியும். அந்த நாடக தருணத்தில் அறிவு மறந்து விடுகிறது.ஸ்ரீதேவி காதலியாய் உள்ளே வந்தவுடனே  விழிப்புமனத்தின் கைப்பிடி நழுவி லாரன்ஸ் பிறிதொன்றாக மாறிவிடுகிறான்.மூவரும் வெவ்வேறு பெண்ணென்று நினைக்கிறான்.மேடையில் பேசும்போது அறிவை நம்பி பேசாமல் பயிற்சியை நம்பிப் பேசவேண்டும்.மனமே துரிதமாக வெளிப்படும். அறிவு கொஞ்சம் மெதுவாகத்தான் வரும். நாடகம் நன்றாய் முடிகிறது. எழுத்து, இயக்கம் அனந்தன், ஆனால் இயக்கியது அனந்தன் மற்றும் ஊழ்.

நாடகம் முடிந்தபின் லாரன்ஸ் சில தரிசனங்களை உணர்கிறான். அவன் ஏன் ஸ்ரீதேவி காலில் பணிகிறேன்? ஸ்ரீதேவியிடம் அவன் பணியவில்லை. ஸ்ரீதேவிக்குள்ளிருக்கும் அல்லது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளிருக்கும் தெய்வத்தை பணிகிறேன்.அந்த தேவியை பணிகிறேன். தன்னை இயக்கி வைத்ததை எண்ணி பணிகிறேன்.

அன்புடன்

மோகன் நடராஜ்

விஷ்ணுபுரம் பதிப்பகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.