Jeyamohan's Blog, page 843
January 19, 2022
ராதையின் மாதவம்-சுபஸ்ரீ
அன்புநிறை ஜெ,
இன்று கிடைத்த சிறு வெளிச்சத்தில் ராதா மாதவத்தை கேட்டுக் கொண்டும், அந்த சிறு குறிப்புகளை வாசித்தும், அதில் இன்று முழுதும் இருந்தேன். மீண்டும் ஒரு மதுரமான அனுபவம். தொகுத்துக் கொள்வதற்காக வரைந்து கொண்ட சிறு குறிப்பு:
“ராதாமாதவம்” பிருந்தாவனத்தின் அழகையும் அங்கு கோபியர்களுடனான லீலையையும் சொல்லித் தொடங்குகிறது. அத்தனை கோபியரும் அவனை நேசிக்கும் அளவிலா பக்தி கொண்டவர்களாக இருப்பினும் ராதை மட்டுமே பரமாத்மாவாகிய அவனைப் பற்றிப் படர்ந்து உறுதியாக தழுவிக் கொள்கிறாள். ராதையின் கிருஷ்ணப் பிரேமையைக் கொண்டும் அவனோடு அவள் ஒன்று சேரும் அனுபவத்தை விவரித்தும் ஆன்மாவின் பயணத்தைச் சொல்கிறது ராதாமாதவம்.
ராதையின் கிருஷ்ணானுபவம் – சில பகுதிகள்:
“ராதையின் நெஞ்சம் குறும்பு நிறைந்த பாலகோபாலனின் அழகிய தாமரை விழிகள் மலர்ந்த முகத்தைக் கண்டு தானும் மலர்வு கொள்கிறது. அவளுடைய அழகான வடிவம், ஒரு மென்மையான தாமரைத் தண்டென வெட்கத்துடன் அவன் அருகில் வருகிறது. இனிமையான தெய்வீகமான உணர்வுகளுடன் உருகுகிறது. அவள் இதயம் பற்றி எரிகிறது, அதே நேரத்தில் அன்பின் அமுதமாகிய குளிர்ச்சியை அனுபவிக்கிறது.
மெல்லிய தென்றல் கங்கேலி மலரின் நறுமணத்தை சுமந்து செல்கிறது. அது வெட்கத்துடன் நடுங்கும் அழகிய மலர் மொட்டைத் தொட்டு எழுப்புகிறது. சின்மயனாகிய நீலன் அந்த மொட்டைத் தழுவி, இயற்கையின் இனிமையை விவரித்து, நிலவொளி நிறைந்த தோட்டத்தில் ராதையைத் தன்னிடம் அருகிழுத்து, எல்லா துக்கங்களையும் நீக்குகிறான்.
மென்மையான ராதையின் இதயம், காளிந்தி நதியின் மணல் கரையில் அவனது விளையாடல்களில் சுத்திகரிக்கப்படுகிறது; எல்லையற்ற பக்தியின் பரிபூரணமான அந்த விருந்தாவன-கிரீடையில் நிகழ்வதைப் போல ஆத்மாவில் வேறு எங்கும் அமைதியையும் பரிபூரண இணைவையும் காண முடியாது.”
ராதா-மாதவ லீலை மாயையில் இருப்போருக்கு காமத்தின் வெளிப்பாடாக மட்டுமே தெரிகிறது. இருமை நிலைக்கு அப்பாற்பட்ட ஞானியரே அதை ஆன்மாவில் மனம் ஒன்றுபடும் லீலை என்று உணர்கிறார்கள்.
ராதையிடமும் ஒரு அகங்காரம் முளைவிடுகிறது. அதற்கு மருந்தென அவனுடனான பிரிவை அவளுக்கு அளிக்கிறான். “அகந்தை என்னும் நோய் நீக்கி அன்பின் இனிமையும், பிரேமையின் ஆவேசமும் மேலும் வளர்வதற்கான மருந்தாகும் பிரிவு” என்கிறார். அதன் பிறகு ராதை துக்கத்தால் எரிந்து புலம்புகிறாள்.
ராதையின் கண்ணீர் துளிகள் சில:
“நீயே துணை என்று நம்பி, உருகும் இதயத்துடன், கண்ணீருடன் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களின் தேவைகளை அறிய இரவும் பகலும் தேடி, இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் தருகிறாய். அப்படியிருக்க, ஐயோ, என்னை மட்டும் ஏன் பிரிவென்னும் தீயில் எரிக்கிறாய். உன் தாசி, இந்த பிரிவெனும் நெருப்பில் சாம்பலாக வேண்டுமா?”
“ஓ கிருஷ்ணா, காயாம்பூ போன்ற நீலவண்ணனே! நீயே எனக்கு ஒரே துணை, என்னுள் இணைந்திருக்கிறாய், மாயையால் மட்டுமே நீ மனிதனாகத் தோன்றுகிறாய்; நீ பற்றற்றவனாக இருந்தாலும், பெண்ணென நான் நிலையாக இருப்பது கடினம் என்று தெரிந்தும் என்னை நீ ஏன் இப்படி விட்டுவிட்டாய்?”
“ஒளி இல்லாத விளக்கு போல, உடல் உடைந்த சங்கு போல, தயையின் மென்மை இல்லாத இதயம் போல, மலர்கள் இல்லாத தோட்டம் போல, சபிக்கப்பட்டவள் போல, கண்கள் இல்லாத முகம் போல! ஐயோ! ஓ கோபியர்களின் விருப்பத்துக்குரியவனே! ராதையாகிய நான் இந்த உலகில் எந்த ஆதாரத்தையும் காணவில்லை.”
பிருந்தாவனத்தின் கிளிகள், பசுக்கள், மான்கள், குயில், மந்தார மரம், மாமரம், தென்றல், வண்டுகள் என்று ஒவ்வொன்றிடமும் கண்ணனைக் கண்டாயா என்று அரற்றுகிறாள். அவனோடு அவை கொண்டிருந்த இனிய காலத்தை நினைவுறுத்தி இன்றைய பிரிவைத் தாளாது ஏங்குகிறாள்.
பின் அவையாவும் கண்ணென அறியும் மாற்றம் வருகிறது. தன்னிலும் அவனை உணர்கிறாள். அகத்தே அவன் இருக்க புறத்தே அவனைத் தேடியலைந்த பொருளின்மையை உணர்கிறாள். அவனை உள்ளுணர்ந்த பிறகு அவனோடு ஐக்கியமாகிறாள். உடலின் புலன்கள் ஒவ்வொன்றாக அவனை உணர்ந்து அவனாகி அடங்குகிறது. உடல் தளர்ந்து ஆன்மா பரமாத்மனுடன் இணைகிறது.
ராதாமாதவம் ஒரு வனத்தை உள்ளடக்கிய மிகச் செறிவான விதை. இனி இந்த இசை கேட்கும் போதெல்லாம் இது துளித்துளியாக மனதுள் வளரும். கேளாத போதும் கனவென்று நிறையும். மகத்தான கரங்கள் தொட மாபெரும் கலைவடிவாக இலக்கியமாக மலரும். ஆன்மத்தேடலில் தங்களையே முற்றளித்து அடையும், அரிய ஆன்மீக அனுபவங்களை இவ்விதம் கலைகளின் வழி, தங்கள் சொற்களின் வழி, காலம் பல கடந்து அவர்களைத் தேடி வருவோருக்கு கையளித்துச் செல்லும் ஞானியரின், ஆசிரியர்களின் கருணையை நம்பியே அறியா வழிகளில் காலடிகள் பதிகின்றன.
ஆத்மானந்தர் பாதம் பணிந்து இந்த இசைப்பாடலில் எனை கரைத்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ
வாசகன் அடிமையா?- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எழுத்தாளர்களை சந்திப்பதில் எனக்கு எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கிறது. எனக்கு இருப்பது நீங்கள் கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல முட்டாக்கு போட்டுக் கொண்ட ஆணவமல்ல. தாழ்வு மனப்பான்மையும் அல்ல. படைப்பாளிகள் ஒரு வித படைப்பு மனநிலையில் இருப்பார்கள். நமது இருப்பு அந்த மனநிலையை சீர்குலைத்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு என தோன்றுகிறது. எரிச்சலூட்டி விடுவோமோ என்ற பதற்றம் எப்போதும் எனக்கு உண்டு. திருவண்ணாமலையில் தங்களை சந்தித்தபோது எல்லோருடனும் சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது. உங்களிடம் சார் நான் உங்கள் தீவிர வாசகன் என்று மட்டுமே சொல்ல முடிந்தது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பிரபஞ்சனை அருகிலேயே பார்த்தேன். இருப்பினும் சென்று பேச முடியவில்லை. இத்தனைக்கும் அவரது வானம் வசப்படும் நூலை அப்போது வாசித்துக் கொண்டிருந்தேன். திருவண்ணாமலையில் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகிறேன். பவாவை அதற்கு முன்பே தெரியும். பல முறை அருகிலேயே பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சந்தித்து பேசினேன். அவரிடம் இந்த தயக்கத்தைப் பற்றி சொன்னேன். சிரித்துக் கொண்டே தோளில் தட்டி அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்.
அன்புடன்
தண்டபாணி.
அன்புள்ள ஜெ
சந்தித்த்தவர்கள் சந்திக்காதவர்கள் கட்டுரை கண்டேன். ஆளுமைகளைச் சந்திப்பதிலுள்ள முக்கியமான சிக்கலென்பது பெரும்பாலான எழுத்தாளர்கள் அவர்களுக்கு வெளியே ஒரு பிம்பம் இருப்பதாம நம்புவதும் அதை தக்கவைக்க நடிப்பதும்தான். புகழ்பெற்ற ஒரு சினிமாக்கவிஞர் பற்றி ஒரு பேச்சு உண்டு. அவருடைய கட்டவுட்டை மட்டும்தான் அவர் வெளியே கொண்டுவருகிறார். இன்னொரு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குநரின் நெற்றியையும் மூக்கையும் மணிக்கட்டுக்கு பிறகுள்ள கைகளையும் மட்டும்தான் தமிழகம் பார்த்திருக்கிறது. அவர்கள் வெளியே வந்ததுமே நடிக்க ஆரம்பிக்கிறார்கள். நேரில் பார்ப்பதென்பது மிகவும் சோர்வளிப்பது.
நாம் ஒருவரைச் சட்ந்ஹிக்கும்போது அவர் நம்மை உபசரிக்கவோ நமக்கு அறிவுபுகட்டவோ வேண்டியதில்லை. அவர் இயல்பாக இருந்தாலே போதுமானது. நமக்கு நிறைய அறிதல்கள் கிடைக்கும். நாம் அவரை அறிந்தபிறகுதான் அவரைக் காணச்செல்கிறோம். தமிழின் புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள் வாசகனிடம் நடிப்பவர்கள் என்பதும் கோபதாபங்கள் நிறைந்தவர்கள் என்பதும் நேரில் அறிமுகமானவர்களுக்கு தெரியும். ஆதவன் இப்படி ஓர் விமர்சகரைச் சந்திக்கப்போய் ஏமாந்ததைப் பற்றி எழுதியிருப்பார்.
ரவீந்திரன் மாரிமுத்து
யானைடாக்டர் – கடிதம்
அன்பின் ஜே,
இனிய வணக்கங்கள், நேற்று அனைத்து காணொளிகளிலும் உடுமலைபேட்டையில் யானையை சுற்றி நின்று கற்களைக் கொண்டு தாக்குகிறார்கள். நாய்கள் சுற்றிலும் குரைத்துக் கொண்டே துரத்த முற்படுவதைக் கண்டபோது இதயம் பதைக்க அமர்ந்திருந்தேன். எங்கள் ஊரில் காடர்கள் இவ்வாரே யானைகளை எதிர்கொள்வதாக அறிந்திருந்தேன்.
நான் வால்பாறையில் பிறந்து வளர்ந்தவன் சிறு வயது முதல் யானைகளை பற்றிய கதைகளையும் புனைவுகளையும் கேட்டே வளர்ந்தவன், எனது பதின் பருவம் முழுவதும் அங்கேதான். யானை டாக்டர் படிக்கும் வரை கேட்டவையெல்லாம் கதைகள் என்றே ௨ணர்ந்திருந்தேன், ஆனால் இப்போது உண்மை என்றே படுகிறது. முதலாளிக்காக உயிர் கொடுத்த ௯ப்பு யானை முதல், காலில் தாகை குத்தி சீழ் பிடித்து காலுன்ற முடியாமல் நின்ற கொம்பன் வரை.
துதிக்கை தூக்கி அழைத்து எவரும் அருகில் செல்லவில்லை, இதனை கூர்ந்து கவனித்த ஒருவர் திடமாக அருகில் சென்றுள்ளார், அவன் தன் காலை உயர்த்தி காண்பித்திருக்கிறான், மிகக் கூர்மையான தாகை உள்ளிரங்கி ஒடிந்திருக்கிறது சீழ் கட்டி பெருவேதனை அவனுக்கு, வேகமாக செயல்பட்ட அவர் கைகளில் பற்றி இழுக்க முயன்றிருக்கிறார் முடியவில்லை வேறு வழியின்றி பற்களால் கடித்து இழுத்திருக்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர, இறுதியாக முழு வேகத்துடன் இழுக்க மொத்தமாக வெளியேறி ரத்தமும் சீழுமாக அவர் முகத்தை நனைத்திருக்கிறது ஓடோடி வீட்டிற்கு சென்று மஞ்சளை அரைத்து முழுவதுமாக பூசி துணி சுற்றி விட்டிருக்கிறார். டாக்டர் கே சொன்னதுபோல ”யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…’’. அதுமுதல் அவன் அவர் அவ்வழி நடக்கும் போதெல்லாம் துதிக்கை தூக்கி பிளிரலோசை எழுப்புவானாம்.
யானைகள் காடுகளை விட்டு கீழிறங்க மனிதர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். அங்குள்ள அடர்காடுகள் எல்லாம் சூரிய ஒளி நிலத்தில் படாதவை, விறகு சேகரிக்கச் சென்ற எனது சித்தப்பா வழிமாறி சென்றுவிட செடிகளையெல்லாம் வெட்டி புதிய வழியை உருவாக்கி தப்பித்து வீடு சேர்ந்தார். இப்போது அந்த வனமெல்லாம் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. கூப்புக்கு மரம் வெட்டுதல் என்ற பெயரில் அழித்தொழித்தார்கள். நான் பள்ளிக்குச் செல்லும்போது ‘பிரபு‘ என பெயரிடப்பட்ட லாரியை கண்டாலே உள்ளூர ஒருவித அச்சம் எழும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓங்கி வளர்ந்த மரங்கள் இரண்டு அல்லது மூன்றுபேர் கட்டிப்பிடிக்குமளவு பெரிய மரங்கள் எவ்வித தயக்கமுமின்றி வெட்டி அழிக்கப்பட்டது. அவற்றை இழுக்க கேரளாவிலிருந்து யானைகள் நடந்தியே கொண்டுவரப்படும். எங்கள் கண்களில் பட்டதெல்லாம் இந்த கூப்பு யானைகள்தான் அல்லது பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொண்டுவரப்படும் யானைகள்.
நாங்கள் பார்த்ததெல்லாம் செந்நாய்களும் காட்டுப்பன்றிகளும் தான், மனிதர்களை அவை ஒன்றுமே செய்ததில்லை. விடிய விடிய விறகிற்காக மரம் வெட்டிச் சுமப்பார்கள் எங்கள் ஊர்காரர்கள், மாலை ஏழு மணிக்கு கிளம்புவார்கள் ஒரு மரத்தை சாய்த்து பங்கிடுவார்கள், நடந்து வால்பாறை வருவார்கள் இரவு ஆட்டம் சினிமா, திரும்பி வருகையில் மரத்தை தூக்கி வந்துவிடுவார்கள், அப்போதே உடைக்கப்பட்டு பரண்களில் ஏற்றப்படும். மிருகம் தாக்கி ஒரு மனிதன் கூட செத்ததில்லை, யானையோ சிறுத்தையோ, புலியோ அனைத்தையும் அரிதாகவே பார்த்தோம்.
கூப்பிற்காக காடுகள் அழிக்கப்பட்டதால் உணவும் நீருமின்றி அவை அத்துமீறி மனித குடியிருப்பிற்குள் வர ஆரம்பித்தன, யானைகள் பெரும்பாலும் வீட்டருகிலுள்ள வாழை மற்றும் பலா இவற்றையெல்லாம் உண்டன. இதில் இடர் என்னவெனில் யானை தாக்கிவிடுமோ என்ற அச்சமே எதிர்வினையாற்ற வைத்தது மேலும் குட்டியானைகள் செய்யும் குறும்பு, அவை வீட்டின் எதாவது ஒரு பகுதியில் நுழைந்தால் அதன் அன்னை வீட்டையே இடித்துவிடும். ஒருமுறை வந்துவிட்டால் அவை திரும்பத் திரும்ப அவ்விடத்திற்கு வரும்.
எனது இருபது வயது வரை ஒரிருவர் மட்டுமே யானை தாக்கி கொல்லப்பட்டனர். எனது தூரத்து உறவினர் ஒருவர் புல்லறுக்கச் சென்றவர் குட்டி யானை விளையாடும் நோக்குடன் ஓடிவர அன்னை யானை அவரை மிதித்துப் போட்டது. மற்றவர் தவசித்தேவர், யானைகளை துரத்துவதில் வல்லவர். அவர் வசித்த சின்கோனா 7வது பிரிவு, வாழை பயிரிட்டு வளர்ப்பவர்கள் அப்பகுதியினர். யானை கூட்டத்தை பந்தம் கட்டி விரட்டுவார்கள். நீண்ட கிளைகளில் பந்தம் கட்டுவார்கள் கும்பலாக சேர்ந்து துரத்துவார்கள், முன்னின்று செல்பவர் இவரே. அவர் வீட்டிலேயே கூட்டம் கூடும், அன்றும் அவ்வாறே கூடினர் தருணம் நோக்கி. சிறுநீர் கழிக்க கோடிப்பக்கம் வந்தவர் அசையாது நின்ற கொம்பனை எதிர்நோக்கவில்லை, வாரி சுருட்டினான் கொம்பன், ” ஏலேய் யான என்ன புடுச்சிட்டுடா கொன்னுபுடும், பிரத்தால கதவ தெரந்திட்டு ஓடுங்கலே” இறுதியாய் பேசிவிட்டு மிதிபட்டு இறந்தார்.
ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் மனித கொலைகள் அதிகம், ஏழு பேரை கொன்றான் ஒற்றை கொம்பன், அவன் மூன்று கால்களிலே நடந்தவன், பேருருவத்தான். கொதிக்கும் சாம்பலை அவன் வரும் பாதையில் கொட்டினார்கள் ஒரு காலின் அடிப்பகுதி முற்றிலும் வெந்துபோனது. அவனைப் பிடிக்க உத்தரவு வந்தது. மயக்க ஊசிகளுடன் காட்டிலாகாவினரும், சில பழங்குடியினரும் சேர்ந்து முற்றுகையிட்டனர், அளவை மீறி அனைவருமே சுட்டனர், மயக்கம் அடையவேயில்லை இறுதியில் அவன் ஒரு பெரிய ஓடைக்கு அருகில் விழுந்த செத்தான் (திட்டமிட்ட கொலை). அவனுடைய பேருடல் எவராலும் தூக்க இயலாததானது, ஒடையின் பள்ளத்தில் இருந்து மேலே கொண்டுவர முடியாது வாகனங்களும் ஓடைக்கருகில் செல்ல இயலவில்லை. அதன் பாதங்களை அளவிட்ட வனத்துறை அதிகாரி இந்திய யானைகளில் இவன் மிகப்பெரியவர்களில் ஒருவன் இதுபோன்ற ஒன்றை கண்டதில்லை என்றார்.
கடின முடிவு எடுக்கப்பட்டது, துண்டுதுண்டாக வெட்டப்பட்டான், எத்தனை பெரிய செல்வம் எத்தனை கொடுமையான இழிசாவு. அங்கே திரு. கே சொன்னதுபோல் சங்க இலக்கியம் எரிக்கப்பட்டது. எத்தனை பெரிய கொடை அவன், ஆப்பிரிக்க காடுகளின் யானை டாக்டர் காணொளியை கண்டேன் அதில் வரும் பழங்குடியினர் சொன்ன வார்த்தை நெஞ்சை உலுக்கி எடுத்தது. அவர் சொன்னார் ”இந்த காடுகளெள்ளாம் இதுக உருவாக்கினது, எங்கயாவது யானை வேரோட மரத்த அழிச்சு பாத்திருக்கீங்களா ஒடிச்சுதான் சாப்பிடும், வேற இடத்தில கழிவுகளை வெளியேற்றும் அங்கே புதுசா மரம் வளரும் இப்பிடித்தான் இந்த வனம் பெருகியது”. மனுசனுக்கு எல்லாத்தையும் அவன் உண்டாக்கினாங்கிற மமதை, ஆனா எல்லாத்தையும் வேரறுத்துட்டான்.
என்னைப்போன்று ஒவ்வொரு மலைப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களைக்கொண்டு பல நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும். இப்போது செய்யவேண்டுவதெல்லாம் அவற்றிற்கான உணவையும் தண்ணீரையும் வனத்திற்குள்ளே உருவாக்குவது ஒன்றே அது ஒன்றே ஊருக்குள் நுழைவதைத் தடுக்கும். எந்தஆட்சியாளரும் இதனைப் பொருட்டென கொள்ளப்போவதில்லை, தனியார் அமைப்போ, தன்னார்வலர்களோ இதில் ஒன்றும் செய்ய இயலாது. பேரச்சம் மட்டுமே எஞ்சுகிறது, ஆப்பிரிக்கக் காடுகளிளெல்லாம் கடுமையாகவே வேட்டையாடப்படுகின்றன யானைகள். மனிதன் சுற்றத்தை அழித்து தான் மட்டும் எஞ்சவே விழைகிறான் போலும்.. !
இன்று மீண்டும் யானை டாக்டர் வாசித்தேன் (குறைந்தது 200 முறை), கண்ணீர் ஒழுக பதிவுசெய்தேன், நான் எப்போதும் குறுஞ்செய்திகளை அனுப்ப வெறுப்பவன் அவசியமெனில் உடனே அழைத்து பேசிவிடுவேன். பதிவு செய்ய இன்று நீண்ட நேரம் பிடித்தது சளி மற்றும் காய்ச்சல் வேறு (கொரோனா இல்லை). இன்னும் விரிவாக எழுத வேண்டும், தங்கள் ஆசிகள் என்றும் உடனிருக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
ராஜன்
திருப்பூர்
***
January 18, 2022
தொற்றிலக்கியவாதிகள் என்னும் இனம்
விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழாவுக்கு வருவதற்கு முடிவெடுத்தபோது உருவான கெடுபிடிகள், மிரட்டல்கள், கெஞ்சல்கள் பற்றி இளங்கோவன் முத்தையா என்னும் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். அதில் அதேபோன்ற அனுபவங்களை அடைந்ததாக ஜா.தீபாவும் எழுதியிருக்கிறார்.
நடந்தது ஒர் இலக்கிய விழா. பொதுவான விழா. அனைவருக்கும் மதிப்புக்குரிய ஒரு கவிஞரை கௌரவிக்கும் விழா. அதற்கு ஏன் இந்த கெடுபிடிகள், இத்தனை பதற்றங்கள் எதற்காக? இவர்கள் என்னதான் பதற்றப்பட்டாலும் கெடுபிடிகள் செய்தாலும் விழா பெரிதாகிக்கொண்டேதான் செல்கிறது என்பது இவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லையா என்ன?
நான் விழாவுக்கு வந்திருந்தேன். கோவையில் என் நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவருக்கு இலக்கியமே தெரியாது. ஆனால் விழாவுக்கு வந்தவர் இரண்டுநாளும் முழுநேரமும் விழாவில் இருந்தார். “நல்ல ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி இருக்குப்பா. யாரையும் திட்டாம, கண்டிக்காம ஒரு கூட்டம் தமிழ்நாட்டிலே நடக்குதுன்னாலே நம்ப மாட்டாங்க” என்றார்.
ஒரே நாளில் அவருக்கு தமிழ் அறிவுலகில் என்ன நடக்கிறது என்று புரிந்தது. பாவண்ணனிடம் அவர் உரையாடினார். “பெரிய எழுத்தாளர் அப்டி தன்மையா இருப்பார்னு நினைக்கவே இல்லை” என்றார்.
ஆனால் ஊருக்கு வந்தபின் ஓர் இலக்கிய நண்பரைச் சந்தித்தேன். “விஷ்ணுபுரம் விழாவில் விக்ரமாதித்யனை அவமானப்படுத்திவிட்டார்கள்” என்று கொதித்தார்.
“என்ன நடந்தது?” என்று நான் கேட்டேன்.
“அங்கே எல்லாரும் ஜெயமோகனை கொண்டாடினார்கள். அவரைப்பற்றியே புகழ்ந்தார்கள். அவ்வளவு பெரிய கவிஞரை யாருமே பொருட்படுத்தவில்லை” என்றார்.
”நீங்கள் விழாவுக்குப் போய்ருந்தீர்களா?” என்று நான் கேட்டேன்.
“இல்லை, போய்விட்டு வந்தவர் சொல்லி வருத்தப்பட்டார்” என்றார்.
நான் சொன்னேன் “நான் விழாவுக்கு போயிருந்தேன். அங்கே ஜெயமோகன் பெரும்பாலும் கண்ணுக்கே தென்படவில்லை. அவரைப்பற்றி எவருமே பேசவில்லை. விழாவே விக்ரமாதித்யனை மட்டும் மையமாக்கித்தான் நடந்தது”
உடனே அவர் பேச்சை மாற்றினார். “அது கார்ப்பரேட் விழா. கார்ப்பரேட் பாணியில் நடத்துகிறார்கள்” என்றார்.
“கார்ப்பரேட் பாணியில் சகல ஏற்பாடுகளையும் நுணுக்கமாகச் செய்து பிழையே இல்லாமல் நடத்தும்போதுகூட நீங்கள் இப்படி குறை சொல்கிறீர்கள். உண்மையில் ஏதாவது குளறுபடி நடந்திருந்தால் விட்டுவைத்திருப்பீர்களா? பேசுவதற்கு குற்றம்குறை கிடைக்கவில்லை என்பதுதானே உங்களுடைய பிரச்சினை?” என்றேன்.
“அது ஜெயமோகனின் அடிப்பொடிகளின் கூட்டம்” என்றார்.
“அங்கே தமிழில் இன்று காத்திரமாக எழுதும் பெரும்பாலும் அத்தனை படைப்பாளிகளும் வந்திருந்தனர். அனைவருமே ஜெயமோகனின் அடிப்பொடிகள் என்றால் நீங்கள் தமிழிலக்கியம் பற்றி சொல்லவருவது என்ன?” என்றேன்.
அதன்பின் அவருக்கு கட்டுப்பாடு போய்விட்டது. கண்டபடி வசை. ஒரு மணிநேரம். நான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய பிரச்சினைதான் என்ன? இவ்வளவு சிறப்பாக நிகழும் ஓர் இலக்கிய கொண்டாட்டத்தை இத்தனை வெறுக்கச் செய்வது எது? என்னால் இவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஜி.கார்த்திக் ராம்
அன்புள்ள கார்த்திக்,
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தவர்களில் ஏறத்தாழ 120 பேர் இதுவரை எங்கள் பதிவுகளில் இல்லாதவர்கள். பெரும்பாலும் அனைவருமே முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.
ஆரம்பத்தில் எங்களுக்கு கொஞ்சம் குழப்பமெல்லாம் இருந்தது. இந்தப் புதியவர்கள் உண்மையான இலக்கிய வாசகர்களா, அல்லது ஜெய்ராம் ரமேஷ் வருவதனால் ஆதரித்தும் எதிர்த்தும் வரும் அரசியல்கும்பலா? அவர்கள்மேல் எங்களுக்குக் கட்டுப்பாடு இருக்குமா? ஆகவே சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தோம். ஆனால் வந்தவர்கள் அனைவருமே இலக்கிய வாசகர்கள். அவர்களின் பங்களிப்பு பிரமிப்பூட்டும்படி இருந்தது.
அத்துடன் அவர்களில் அனேகமாக எவருமே சமூகவலைத்தளங்களில் இல்லை. சமூகவலைத்தளங்களில் புழங்கி அதையே கருத்துலகமென்று நம்பியிருக்கும் சற்று மூத்த படைப்பாளிகள் பலர் அதிர்ச்சி அடைந்தது தெரிந்தது. ஒருவர் என்னிடம் சொன்னார். “இவனுங்க எங்க இருந்தாங்க? கண்ணிலேயே படலியே”
ஓர் இளைஞரிடம் நான் கேட்டேன். “நீங்க ஃபேஸ்புக்ல இல்லியா?”
அவர் “ஃபேஸ்புக்கா? அதெல்லாம் அங்கிள்ஸோட ஏரியா சார்” என்றார்.
வேடிக்கையாக இருந்தது. நீங்கள் சொல்லும் இந்த விவாதங்கள், அரசியல்கள் எல்லாம் சம்பந்தமே இல்லாத ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழ்கிறது. இன்று இலக்கியத்தை வாசிப்பவர்கள் வேறு திசையில் இருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தால் எவரும் அதை கண்கூடாகவே பார்க்கமுடியும்.
நீங்கள் சொல்லும் அந்த சின்னக்குழு ஒரே இடத்தில் சுற்றிச்சுற்றி வருவது. முகநூலின் செயல்முறை என்பது நம்மைச்சார்ந்தவர்களை மட்டுமே நமக்கு காட்டுவது. அதுவே உலகம் என நாம் எண்ண ஆரம்பிக்கிறோம். முகநூலில் புழங்கும் கசப்புகள், காழ்ப்புகள், வம்புகள், சில்லறை அரசியல் ஆகியவை அதை கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களுக்கான மடமாக ஆக்குகின்றன என நினைக்கிறேன். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.
இந்த இலக்கிய நிகழ்வின்மேல் காழ்ப்பு பெருக்குபவர்கள் எவர் என கேட்கிறீர்கள். அவர்கள் வேறெந்த இலக்கிய நிகழ்வின் மேல் பற்று காட்டியிருக்கிறார்கள்? எந்த இலக்கியவாதியை பாராட்டியிருக்கிறார்கள்? அவர்கள் கொண்டிருப்பது ஒட்டுமொத்தமாக இலக்கியம் மீதான ஒவ்வாமை. அறிவுச்செயல்பாடுகள் மீதான கசப்பு. இன்று அதை ஒளிப்பதே இல்லை அவர்கள். வெளிப்படையாகவே எல்லாவகை அறிவுச்செயல்பாடுகளையும் பழித்து எழுதுகிறார்கள்.
கவனியுங்கள், ஒரு சின்ன விஷயம் போதும், ஒட்டுமொத்த அறிவுசார் செயல்பாடுகளையும் கீழ்மை செய்து கெக்கலித்து எழுதுவார்கள். அதற்கு அவர்கள் ஒரு பாவனையை மேற்கொள்வார்கள். அதாவது ’அறிவியக்கச் செயல்பாடுகொண்டவர்கள் சூழ்ச்சியும் தன்னலமும் கொண்ட கயவர்கள், நாங்கள் எளிய, கள்ளமற்ற மக்களுடன் நின்றிருக்கும் நேர்மையாளர்கள்’
இவர்கள் மூன்று வகையினர். ஆழமான அரசியல், சாதி, மதப்பற்றுகொண்டவர்கள் முதல்வகை. உண்மையில் மூன்றும் ஒன்றுதான். இங்கே ஒருவருடைய அரசியலை அவருடைய சாதியும் மதமும் மட்டும்தான் தீர்மானிக்கிறது. இவர்களுடையது நேர்நிலையான பற்று அல்ல. சவலைப்பிள்ளை அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டிருப்பதுபோல எதையாவது பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்மனநிலையே இவர்களின் இயல்பு. காழ்ப்பின் வழியாகவே அவர்கள் தங்கள் பற்றை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
இரண்டாம் வகையினர் வெற்றுப்பாமரர். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர்களின் எளிய உலகியல் அன்றாடத்திற்கு அப்பாலுள்ள அனைத்தின்மேலும் அச்சமும் அதன் விளைவான காழ்ப்பும் இருக்கும். அதை கிடைத்த இடத்தில் கக்கி வைப்பார்கள். மீம்களுக்கு இளிப்பார்கள்.
ஆனால் இவ்விரு கோஷ்டியும் இலக்கியத்திற்கு வெளியே இருப்பது. இலக்கியச்சூழலுக்குள் ஒரு சாரார் உண்டு. எல்லா சூழலிலும் இலக்கியச் செயல்பாடுகளுக்கு முதன்மை எதிரிகள் ’தொற்றிலக்கியவாதிகள்’ என்னும் ஒரு வகையினர்தான். இலக்கியத்தின்மேல் வளரும் பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் இவர்கள்.
இவர்கள் இளமையில் கொஞ்சம் படிப்பார்கள். இலக்கியச்சூழல், அறிவியக்கம் பற்றி தோராயமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். பெயர்களையும் நூல்களையும் சொல்ல முடியும். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பிப்பார்கள். சிற்றிதழ நடத்துவார்கள். இலக்கியக்கூட்டம் நடத்துவார்கள். புத்தகம் போடுவார்கள்.
ஆனால் இலக்கியப்பங்களிப்பு என்பது அத்தனை எளிதல்ல. ஈடுபடும் அனைவருக்கும் அதில் வெற்றி அமைவதில்லை. இலக்கியச்சூழலில் இடமும் கிடைப்பதில்லை. அதற்கு உண்மையான ஒப்பளிப்பும் நீடித்த உழைப்பும் தேவை. வெறுமே தொட்டுச்செல்பவர்களுக்குரியது அல்ல இலக்கியம்.
மிகத்தீவிரமாகச் செயல்பட்டாலும்கூட இயற்கையிலேயே நுண்ணுணர்வும் கற்பனையும் இல்லாதவர்கள் புனைவிலக்கியத்தில் பெரிதாக ஒன்றும் எழுதமுடியாது. இயல்பிலேயே கற்பனை அற்றவர்களுக்கு பயிற்சியால் பெரிய அளவில் திறன் உருவாவதும் இல்லை. இது கொஞ்சம் வருத்தம் தரும் உண்மைதான். அறிவுத்திறன் குறைந்தவர்கள் இலக்கியத்தில் எளிய கருத்தாளர்களாகக்கூட நீடிக்க முடியாது.
தேவையான அறிவு மற்றும் சிறப்புத் தகுதிகள் இல்லாதவர்கள் தோல்வியடைவது எல்லா துறைகளுக்கும் உள்ளதுதான். ஆனால் இலக்கியத்தில் மட்டும் தோல்வியடைபவர்கள் அத்துறையை குற்றம்சாட்டுவார்கள். அதிலேயே பூஞ்சைக்காளான்களாக ஒட்டிக்கொண்டு நீடிப்பார்கள்.
ஏனென்றால் மற்ற துறைகளில் சாதனைகள் என்பவை புறவயமானவை, திட்டவட்டமானவை. இலக்கியத்தில் சாதனை என்பது அகவயமாக முடிவுசெய்யப்படுகிறது. டெண்டுல்கரை விட தான் பெரிய கிரிக்கெட் வீரர் என ஓர் உள்ளூர்க்காரர் சொல்லிக்கொள்ள முடியாது. தல்ஸ்தோயைவிட தன் எழுத்து மேல் என எவரும் சொல்லிக்கொள்ளலாம். இலக்கியத்தில் புறவயமான அளவுகோல் இல்லை. எதையும் ஐயமின்றி நிரூபிக்கவும் முடியாது. புறவயமாக இருப்பது சூழலில் உள்ள பொதுவான ஏற்பு மட்டுமே. அந்த ஏற்பு சூழலில் உள்ள சதிகளால் தனக்குக் கிடைக்கவில்லை, காலம் மாறும்போது கிடைக்கும் என சொல்லிக்கொண்டால் அப்பிரச்சினையையும் கடந்துவிடலாம்.
[அனைத்தையும் விட இன்னொன்று உண்டு, மிக இளமையிலேயே ஏதேனும் ஒரு கொள்கைக்கோ கோட்பாட்டுக்கோ அடிமையாகி பார்வை முழுக்க அதனூடாக நிகழும்படி ஆகிவிட்டவர்கள் அரிதாகவே அதில் இருந்து மீளமுடியும். அந்த கொள்கை,கோட்பாடு வழியாக அவர்கள் பார்த்து எழுதுவதற்கு எந்த மதிப்பும் இருக்காது. அந்தக் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் பெருமதிப்பு இருந்தாலும்கூட. ஏனென்றால் இவர்கள் ஒரு பெரிய ராணுவத்தின் ஒரு சிறு படைவீரர்கள் போலத்தான்]
தொற்றிலக்கியவாதிகள் எழுத ஆரம்பித்து தோல்வி அடைந்தவர்கள். தங்களுக்கென இடம் இல்லாதவர்கள் ஆனவர்கள். அதை உருவாக்கிக்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையையும் இழக்கிறார்கள். அதுதான் இவர்களை காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களாக ஆக்குகிறது.
இவர்கள் உள்ளூர தங்கள் தரம் என்ன என்றும், தாங்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் என்ன என்றும் தெரிந்திருக்கும். அது உருவாக்கும் சிறுமையுணர்வுதான் இவர்களின் நரகம். அது இவர்களின் உள்ளத்தை இருளச் செய்கிறது அங்கீகரிக்கப்படும் எதன்மேலும் கடும் எரிச்சல் கொள்கிறார்கள். வெற்றிபெறுபவர்களின் நிரந்தர விரோதிகள் ஆகிறார்கள். அவர்களையே எண்ணி எண்ணி எரிந்து எரிந்து வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி எங்கே எவர் பேசினாலும் இவர்கள் அங்கிருப்பார்கள். அங்கே கசப்பை துப்பி வைப்பார்கள். அவதூறுகள் வசைகள் பொழிவார்கள்.
இவர்கள் கொள்ளும் பல பாவனைகள் உண்டு. அதிலொன்று ‘தோற்றுப்போன கலைஞன்’ என்பது. மேதைகள் அங்கீகரிக்கப்படாத சூழல் சில இடங்களில் உண்டு. ஆகவே அங்கீகரிக்கப்படாத அனைவரும் மேதைகள் அல்ல. தோற்றுப்போன பலரும் புறக்கணிக்கப்பட்ட மேதை என்னும் பாவனையையே இயல்பாகச் சென்றடைகிறார்கள். அந்தப்பாவனைக்குரிய மேற்கோள்கள் முதல் புலம்பல்கள் வரை இங்கே அடிக்கடி காணக்கிடைக்கிறது. அந்தப்பாவனைகொண்ட புகைப்படங்கள்கூட.
‘அப்படி என்ன நீ எழுதிவிட்டாய், காட்டு’ என இவர்களிடம் எவரும் கேட்பதில்லை. ஏனென்றால் இவர்கள் எழுதியவற்றை வாசித்து மதிப்பிடும் பொறுமையோ வாசிப்புத்தகுதியோ ரசனையோ பெரும்பாலானவர்களிடம் இல்லை. அவர்கள் அனுதாபத்துடன் ‘ஆமாம், திறமைக்கு மதிப்பில்லை’ என தட்டிக்கொடுத்துவிட்டுச் செல்வார்கள். இவர்கள் அந்த தன்னிரக்கத்தைப் பேணி வளர்த்து அதில் திளைப்பார்கள். அதிலிருந்து மேலும் காழ்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.
இன்னொரு பாவனை, ’அனைத்துத் தகுதிகள் இருந்தும் குடத்திலிட்ட விளக்காக இருந்துவிட்டுச் செல்பன் நான். நானாகவே விரும்பி இப்படி இருந்து கொண்டிருக்கிறேன்’ என்பது. அந்த தகுதிகள் என்ன என கேட்கும் சூழலில் இவர்கள் தலைகாட்டவே மாட்டார்கள்.
மூன்றாவது பாவனை, ‘சமரசமில்லாமல் விமர்சனம் செய்வதனால் எனக்கு எவரும் துணையில்லை’ என்பது. சமரசமில்லாமல் விமர்சனம் செய்தவர்கள் எவரும் முழுமையாக தனிமைப்பட்டதில்லை. அந்த விமர்சனத்திற்குப் பின்னால் உள்ளது ஒரு விழுமியம் என்றால் அவ்விழுமியமே அதற்குரிய ஒரு வட்டத்தை உருவாக்கி அளிக்கும். க.நா.சுவுக்கு இருந்த வட்டம் அவரால் விமர்சிக்கப்பட்டவர்களுக்கு அமையவில்லை.
இந்த ‘தொற்றிலக்கியவாதிகள்’தான் பெரும்பாலும் சூழலில் எதிர்மறைத் தன்மையை நிறைப்பவர்கள். எங்கும் தங்கள் சிறுமையைக் கொட்டி வைப்பவர்கள். இவர்களின் நிரந்தரமான கூற்று ‘இங்கே எல்லாமே சதிதான். குழுக்களாலும் காக்காய்பிடிப்பதாலும்தான் எல்லாம் தீர்மானமாகிறது….’
இந்தப்பாவனையை பொதுவாக பாமர உள்ளங்கள் உடனே ஏற்றுக்கொள்ளும். ‘நான் யோக்கியன், சூழல் கெட்டது’ என்பதே பாமரன் எப்போதும் கைக்கொள்ளும் நடிப்பு. ஒரு சாமானியனிடம் பேசுங்கள், ஐந்து நிமிடங்களில் இந்த பாவனை வெளிப்படும். அதற்கு மிக அணுக்கமானது மேலே சொன்ன தொற்றிலக்கியவாதிகளின் கூற்று. ஆகவே அந்தப் பாமரர்களும் ‘ஆமாங்க, ஒண்ணும் சரியில்ல. நல்லதுக்கு ஏதுங்க காலம்’ என்று உச் உச் கொட்டுவார்கள்.
அவ்வப்போது பொருட்படுத்தத்தக்க சிலரும் இப்படி உளறி வைப்பதுண்டு. அவ்வாறு சொன்ன ஒருவரிடம் நான் கேட்டேன். ‘தேவதேவன் குழு விளையாட்டு விளையாடுவார், அல்லது காக்காய் பிடிப்பார் என நினைக்கிறீர்களா?’ அவர் இல்லை என்றார். “சரி, தேவதச்சன்? விக்ரமாதித்யன்? அபி? பாவண்ணன்? இசை? இளங்கோ கிருஷ்ணன்?” அவர் விழித்தார். “சொல்லுங்கள், அதையெல்லாம் செய்து நவீத்தமிழ் இலக்கியத்தில் மேலே போனவர் யார்?” அவரால் பதில் சொல்லமுடியவில்லை. அது தொற்றிலக்கியவாதி என்னும் அற்பனின் வரி. அதை இலக்கியமறிந்தோர் சொல்லக்கூடாது.
இங்கே இலக்கிய வாசகர்களின் உலகம் ஒன்று உண்டு. கண்ணுக்குத் துலக்கமாகத் தெரியாவிட்டாலும் அதற்கு ஒரு தனித்த இயக்கம் உண்டு. அது எவரை ஏற்கிறது, எவரை மறுக்கிறது என்பதற்கு அதற்கே உரிய நெறிகளும் போக்குகளும் உண்டு. எவரும் சதி செய்தோ, கூச்சலிட்டோ, கூட்டம் கூட்டியோ அதை வென்றுவிடமுடியாது. அது அரிதாகச் சிலரை கண்டுகொள்ளாமல் கடந்துசெல்லும். இதுவரையிலான தமிழிலக்கியத்தில் அவ்வண்ணம் கடந்துசெல்லப்பட்ட ஒரே இலக்கிய ஆசிரியர் ப.சிங்காரம் மட்டுமே. ஆனால் கால்நூற்றாண்டுக்குள் அவர் தன் இடத்தை அடைந்தார்.
மற்றபடி இங்கே இலக்கியம் என எழுதிக்கொண்டிருப்பவர்கள் பல்லாயிரம்பேர். அனைவருக்கும் வாசகர்கள் இலக்கிய அங்கீகாரத்தை அளிக்கப்போவதில்லை. எப்படி விரிவாக இடமளித்தாலும் ஒரு தலைமுறைக்கு நூறுபேருக்குமேல் இலக்கியவாதி என அறியப்படுவது இயல்வதல்ல. எஞ்சியவர்களில் சிலர்தான் இப்படி தொற்றிலக்கியவாதியாக ஆகி வெறிகொண்டு பல்லும் நகமும் நீட்டி அலைகிறார்கள்.
இவர்கள் எந்த இலக்கியவிழாக்களையும் தவறவிடுவதில்லை என்பதைக் காணலாம். ஏனென்றால் அங்கேதான் அவர்கள் வெளிப்பட முடியும். முன்பு இவர்களின் கூச்சல்களுக்கு இலக்கியவிழாக்களின் டீக்கடைகளில்தான் இடம். இவர்கள் இன்று முகநூலில் கூச்சலிடுகிறார்கள். வம்பு வளர்க்கிறார்கள். காழ்ப்பைப் பரப்புகிறார்கள்.
இவர்களை பொருட்படுத்துபவர்கள் இலக்கிய வாசிப்பே இல்லாமல் வெறும் வம்புகளாகவே இலக்கியத்தை அறிந்து வைத்திருப்பவர்கள் மட்டுமே. இலக்கிய வாசகர்களுக்கு இவர்களால் பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் இளம்வாசகர்களுக்கு தொடக்கத்தில் சில திசைதிருப்புதல்களை உருவாக்குகிறார்கள். அந்த வாசகர்கள் இலக்கியநூல்களை வாசிக்க வாசிக்க இவர்களின் தரம் தெரியவந்து தாங்களே முடிவெடுக்கக்கும் தகுதி கைகூடியவர்களாக ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறை இரைகள் வந்துசேரும்.
தொற்றிலக்கியவாதிகளில் பலர் முன்பு நம்முடன் அணுக்கமானவர்களாக இருந்திருப்பார்கள். அப்போது மெய்யான இலக்கிய ஆர்வமும் முயற்சியும் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் காழ்ப்பு கொண்டவர்களாக ஆகும்போது அவர்களின் அந்த பழையகாலத் தொடர்புகளும் பதிவுகளும் அவர்களுக்கு ஓர் அடையாளத்தை அளித்துவிடுகின்றன. அவர்கள் சொல்லும் திரிபுகளுக்கு சான்றுகளாகவும் ஆகிவிடுகின்றன. அந்தச் சிறிய அடையாளத்துடன் அவர்கள் சமூகவலைத்தளச் சூழலில் உலவி கசப்புகளையும் காழ்ப்புகளையும் அவதூறுகளையும் பெருக்குகிறார்கள்.
இந்த அளவுக்கு உளத்திரிபு எப்படி அமைகிறது? இலக்கியம் மனிதனை பண்படுத்தும் என்கிறார்கள். அதற்குக் கண்கூடான உதாரணங்கள் உண்டு. எனில் இவர்கள் ஏன் இப்படி ஆகிறார்கள்?
இது இலக்கியம் தோன்றிய நாள் முதல் இருந்து வருவதுதான். இலக்கியம் விளக்கென்றால் அதற்கு அடியில் தோன்றும் நிழல் இது என பழைய இலக்கிய மேற்கோள் சொல்கிறது. விளக்கால் உலகுக்கெல்லாம் வெளிச்சம் அளிக்க முடியும். இந்த நிழலை நீக்கிக்கொள்ள முடியாது.
இதைப்பற்றி வாசகர் ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவேண்டும். வாசகர் அனைவரும் எழுத்தாளரோ விமர்சகரோ சிந்தனையாளரோ ஆகவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாசிப்பினூடாக அறிந்து தெளிந்தவற்றை தங்கள் துறைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கள் ஆளுமையை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்துக்கும் மேலாக அன்றாட உலகியல் வாழ்க்கையின் சலிப்பூட்டும் அர்த்தமின்மையை கடந்துசெல்வதற்கான ஓர் அந்தரங்கமான பாதையாக வாசிப்பை மேற்கொள்ளலாம். வாசிப்பது என்பது எழுதுவதற்கான பயிற்சி மட்டும் அல்ல. அது ஆளுமைக்கான பயிற்சி.
அதற்கும் மேல் ஒருவருக்கு எழுதவேண்டும் என்று தோன்றினால் எழுதலாம். எழுதுவது நம்மை நாமே தொகுத்துக்கொள்ள உதவுகிறது. எழுதும் கணங்களின் ஆழ்ந்த நிலை நம்மில் இருந்து நாமறியா ஆழம் வெளிப்பட வகை செய்கிறது. ஆகவே அது மாபெரும் தன்னறிதல். ஒருவகை ஊழ்கம். இப்புவியின் எல்லா அல்லல்களில் இருந்தும் நாம் அதன் வழியாக மீண்டு மேலெழமுடியும். ஆகவே எவரும் எழுதலாம்.
எழுதும் எவரும் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் அறிவியக்கம் என்னும் மாபெரும் கூட்டுச்செயல்பாட்டில் தங்கள் கொடை என ஒரு துளியை அளிக்கிறார்கள். ஆகவே எதுவும் பயனற்றது அல்ல. ஒரு சிற்றூரில் எவரென்றே அறியாத ஒரு கவிஞர் ஒரு தொகுப்பை வெளியிடுகிறார் என்றால்கூட அவர் இந்த மாபெரும் பெருக்கில் இணைந்துகொள்கிறார் என்றே பொருள்.
அடிப்படையில் அந்த எளிய கவிஞருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் பெரிய வேறுபாடொன்றும் இல்லை. ஷேக்ஸ்பியர் கொஞ்சம் பெரிய துளி, அவ்வளவுதான். ஒருவர் உண்மையிலேயே பொருட்படுத்தத்தக்க ஏதாவது படைப்பை எழுதிவிட்டாரென்றால் ஆழமாக தோன்றுவது இந்த எண்ணம்தான். ‘நான் ஒரு சிறுதுளி, துளி மட்டுமே, ஆனால் இப்பெருக்கில் நானும் உண்டு’ .
இந்த தன்னுணர்வை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதப்படும் எந்த இலக்கியமும் வீண் அல்ல. எதுவும் ஏளனத்துக்கோ முழுநிராகரிப்புக்கோ உரியது அல்ல. அதை எழுதும் ஒவ்வொருவரும் உணர்ந்தாகவேண்டும்.
எழுதுபவர் கொள்ளவேண்டிய தன்னுணர்வு ஒன்று உண்டு. அதை ஓரு வஞ்சினமாகவே கொள்ளவேண்டும். எழுதுவதன் முதன்மையான இன்பமும் நிறைவும் எழுதும்போதே அடையப்படுகிறது. அங்கேயே எழுத்தாளனின் முழுமை நிகழ்ந்தாகவேண்டும். வாசிக்கப்படுவது, அங்கீகரிக்கப்படுவது நிகழ்ந்தால் நன்று. நிகழவில்லை என்றால்கூட எழுதும் இன்பமும் நிறைவும் குறைவுபடுவதில்லை.
வாசகனிடம் எழுத்தைக் கொண்டு சேர்க்க எழுத்தாளன் முயல்வதில் பிழையில்லை. ஒருவகையில் அவனுடைய கடமையும்கூட. ஆனால் எழுத்தாளன் தன் இடத்தை தானே வகுத்துக்கொள்ளவேண்டும். தன் தகுதியைக்கொண்டு, தன் பங்களிப்பைக் கொண்டு. அதற்கப்பால் வெளியே தேடலாகாது. தனக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்களை கணக்கிட ஆரம்பித்தால் வந்தமையும் மாபெரும் மனச்சோர்வொன்று உண்டு. அது எழுதுபவனின் நரகம்.
அந்த கசப்பு பொருட்படுத்தும்படி எழுதினோம் என உணர்பவனை தன்னிரக்கத்துக்கு கொண்டு செல்கிறது. பொருட்படுத்தும்படி எழுதவில்லை, எழுதவும் முடியாது என உணர்பவனை தொற்றிலக்கியவாதி ஆக்குகிறது. இலக்கியத்தில் ஒரு பூஞ்சைக்காளானாக படிந்திருப்பதே இலக்கியம் வாசிக்க ஆரம்பிக்கும் ஒருவன் சென்றடையும் ஆகக்கீழ்நிலை. ஒருபோதும் அங்கே நாம் சென்றுவிடலாகாது என வாசிப்பவர் ஒவ்வொருவரும் உறுதிகொள்ளவேண்டும். இன்றைய முகநூலின் வம்புச்சூழல் நம்மை நாமறியாமலேயே அப்படி ஆக்கிவிடும். அப்படி நாம் இருப்பதை நாமே உணரமுடியாமல் எல்லாவகையான ‘அறச்சீற்ற’ ‘அழகியல்நுட்ப’ பாவனைகளையும் நமக்கு அளித்துவிடும். அதை எண்ணி மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
எழுத்து- வாசிப்பு என்பது இப்புவியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகமிக வியப்புக்குரிய ஒரு பெருநிகழ்வு. அதன் பகுதியாக இருப்பதன் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் நாம் அடைந்தால் நம் அகம் நிறைவுகொள்ளும். நம்மை உந்தி உந்தி முன்னால்வைப்பது, பிறரை நோக்கி எரிவது, காழ்ப்புகளையும் கசப்புகளையும் உருவாக்கிக் கொள்வது எல்லாம் மாபெரும் கீழ்மைகள். இத்தனை பெரிய நிகழ்வில் இருந்து இத்தனை சிறுமையை நாம் அள்ளிக்கொள்கிறோம் என்றால் எவ்வளவு பெரிய வீழ்ச்சி!
ஜெ
ராதாமாதவம்- சுபஸ்ரீ
அன்புநிறை ஜெ,
ஆத்மானந்தர் குறித்து தங்கள் பதிவு வழியாகத்தான் முதன்முறை அறிந்தேன்.
சிலநாட்கள் முன்னர் நீலம் ஒலிப்பதிவுக்காக மீள்வாசிப்பு செய்தபோது, முன்னுரையில் தாங்கள் ஆத்மானந்தர் குறித்து “பழுத்த வேதாந்தியான அவர் திடீரென்று ராதாமாதவ உபாசனைக்குள் சென்று ராதையாகவே சில வருடங்கள் வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய ராதாமாதவம் என்னும் இசைப்பாடல்கள் மிகவும் பிரபலமானவை.” என்று எழுதிய வரிகள், அந்த “ராதாமாதவம்” பாடல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதன் வழி அவரை மேலும் சற்று அணுகி அறிய முடியாதா, அவர் வாழ்ந்த அந்த மனநிலையில் மேலும் திளைத்திருக்க முடியாதா என்றிருந்தது.
ராதாமாதவம் மலையாள வரிகள் கிடைத்தால் கூட மொழிபெயர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி அவ்வப்போது இணையத்தில் தேடிக் கொண்டே இருந்தேன். எம் எஸ் சுப்புலக்ஷ்மி பாடியது கிடைக்கிறது. அதைக் கேட்டுப் பொருள் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். இது அதிகமும் வடமொழி கலந்த மலையாளம்தான் என்றாலும் அவரது உச்சரிப்பில் மலையாள சொற்களும் கூட மிகவும் சமஸ்கிருதமாக காதுகளில் ஒலிக்கிறது. மலையாளத்தில் பிற பாடகர்கள் பாடியது எனக்கு கிட்டவில்லை. [“രാധാമാധവം+ആത്മാനന്ദ+കൃഷ്ണ+മേനോൻ” என்று விதவிதமாக உள்ளிட்டு தேடியதில் “ശ്രീ വിജയാനന്ദാശ്രമം, ആറന്മുള” என்ற ஒரு சேனல் மட்டும் கிடைத்தது.]
தங்கள் “அழகிலமைதல்” பதிவை வாசித்ததும் மீண்டும் ராதாமாதவம் வந்து எண்ணத்தை நிறைத்துக் கொண்டது. ஆத்மானந்தர் சிறிதுகாலம் ராதையாகவே புடவை கட்டி கிருஷ்ணபக்தியில் திளைத்தார் என்ற வரி. என்ன ஒரு தீவிரமான ஆட்கொள்ளப்பட்ட மனநிலை அது! தங்களுடைய புறப்பாடு கட்டுரைத் தொகுப்பில் “மதுரம்” கட்டுரையில் அந்த ராதே ஷியாம் மனநிலையின் ஒரு கீற்று வரும். விரஜர்கள் என்னும் ராதிகாவைஷ்ணவிகள். ஆறுமாதம் வேலை செய்து குடும்பத்திடம் அளித்து விட்டு ஆறு மாதம் ராதை என இருப்பவர்கள். நீலனைத் தேடிச் சென்று கொண்டே இருப்பவர்கள். பெண்ணாகி அவனை அறிவதன் பேரின்பத்தில் திளைப்பவர்கள்.
இவ்வுடல் தரும் எல்லை கடந்து அவனை அறியும் பெரும்பித்தில் இருப்பவர்களைக் காணும்போது , பெண் என்று பிறவியமைந்து, கனிவதன் மூலமே கடப்பதன் கலையையை பிறப்பிலேயே பெற்று விடுவது எவ்வளவு பெரிய பேறு என்று புரிகிறது. “பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது” – நீலத்தின் வரி. இங்கு தளையிட முற்படும் புவியின் விசைகளில் இருந்து விடுவித்து, இவை அனைத்திலும் நிறைந்திருக்கும் அந்த வேய்குழல் ஓசை என்றேனும் எனை விண்ணோக்கி விடுவிக்கட்டும்.
ராதாமாதவம் குறித்த தேடலை மீண்டும் துவக்கினேன். அது குறித்து ஓரிரு வரிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் இணையத்தில் காணப்படுகிறது. openlibrary, worldcat போன்ற புத்தகங்களை வகைபிரித்துத் தொகுக்கும் தளங்களில் தேடியதில் “ராதாமாதவம்” வாஷிங்டன் நூலகத்தில் ஒரு பிரதி இருப்பதாக காட்டுகிறது. இன்று பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் தளத்தில் 378 US$ விலையில் “ராதாமாதவம்” புத்தகத்தைப் பார்த்தேன்!!! அதுவும் அர்ஜென்டினா-வில் இருந்து விற்பனைக்கு உள்ளது, spiral bound புத்தகம். அவர் சில காலம் தன் மாணவர்களுடன் அர்ஜென்டினாவுக்கும் சென்றிருக்கிறார் எனத் தாங்கள் எழுதியது நினைவில் வந்தது. வேறு பதிப்புகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இன்று எம் எஸ் பாடிய LP இசைத்தட்டுடன் அச்சிடப்பட்ட சிறிய ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தது,(இணைத்திருக்கிறேன்). அதுவும் முழுமையாக இல்லை என்றாலும் இந்தத் தேடலில் ஒரு சிறு வெளிச்சம். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ
பின்குறிப்பு:
ஆத்மானந்தருடைய “Notes on Spiritual Discourses of Shri Atmananda Vol 1-3” புத்தகம் கிடைக்கிறது. அது குறித்து சில உரைகள் இணையத்தில் இலவசமாகவே இருக்கின்றன.
https://www.advaita.org.uk/discourses/atmananda/atmananda.htm
archive.org-ல் அவருடைய ஆத்ம நிவ்ரிதி-ஆத்மதர்ஷன் புத்தகம் முன்னர் இருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் ராதாமாதவம் இல்லை.
”ஆயன சிறுநவ்வு” – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
”ஆயன சிறுநவ்வு” (அவரது குறுநகை). திரு. வீரபத்ருடு அவர்கள் குறிப்பிட்டது போல நம் விக்கிரமாதித்தியன் அண்ணாச்சியின் புன்முறுவல் மிக அழகாக இருந்தது. தாடி வைத்திருக்கும் வயதானவர்கள் பலர் எனினும் எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. இதற்குமுன் இவ்வொரு அழகை யாரிடமோ கண்டதுண்டு என யோசித்தபோது நினைவுக்கு வந்தது வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டு நீரள்ளி வாயைத் துடைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க வந்தவரிடம் நாணம் கொண்ட புன்முறுவலுடன் “வேண்டாம்” என மறுத்த யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முகம் நினைவுக்கு வந்தது. வயதாக ஆக அழகு மிகுபவர்கள். அண்ணாச்சியிடம் கேட்க தவறவிடப்பட்ட கேள்வி ”தங்கள் அழகின் ரகசியம் என்ன?”
அண்ணாச்சி மீதான தங்கள் உரை. சங்க காலம் முதல் இருந்துவரும் அண்ணாச்சி வரையிலான தொடர்ச்சி. அவரது கவிதைகளில் சாபமில்லை வாழ்த்தே உள்ளது என்பது எளிய விஷயமல்ல. எவ்வளவு பெரியமனிதர் திருவள்ளுவர் சட்டென்று இரந்தும் வாழ்தல் வேண்டின் உலகியற்றியவனை ”பரந்து கெடுக” என்று தீச்சொல் இடவில்லையா? ”கெடுக” என்பதே போதுமானது ”பரந்து” என்பதில் திருவள்ளுவருக்கு முன்பிருந்து திருவள்ளுவர் வரையிலான அத்தனை இயற்கலைஞர்களின் அலைச்சலும் துயரும் உள்ளது. ஆரல்வாய்மொழி என்று ஊரை அல்லது பாரதியைப் போல் ஜகத்தினை அல்லது வள்ளுவர் போல் இறைவனை கடும் தீச்சொல் இடாத விக்கிரமாத்தியன் ஒரு நீண்ட தொடர்ச்சியின் திருப்புமுனையும் கூட. இனி வேறு என்று ஊரும் உலகும் இறையும் அந்த தெய்வங்களிடம் வணங்கி நிற்கும் இடம். அண்ணாச்சியின் இக்கவிதை –
வேளை
சூரியனார் கோயிலுக்கு
போய் வந்தாயிற்று
கடலாடி
மலைபார்த்தாயிற்று
அந்த வனதேவதைகளை
தரிசித்தாயிற்று
மகாமேருவை
வணங்கியாயிற்று
காயத்ரிமந்திரமும்
சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்
இன்னுமென்ன
இருக்கிறது
வாசலில் வந்துநிற்காதா
வரிசை
வீட்டினுள் வந்து
அமரமாட்டாளா ஸ்ரீநிதி
கலகலகல
பலபலபல
மளமளமள
தளதளதள
– இதன் கேலி. வள்ளுவரின் கோபம் இங்கில்லை. எனினும் உலகின் அன்பின்மைக்கும் இறைவரின் அருளாமைக்கும் உலகும் இறையும் மன்னிப்புக் கோரி திருவள்ளுவரை வணங்கி நிற்கும் வேளை.
இரண்டு நாட்கள் போனது தெரியவில்லை. கோகுல் பிரசாத், எம். கோபாலகிருஷ்ணன், காளிபிரசாத், சுஷீல்குமார், செந்தில் ஜெகன்னாதன், இயக்குனர் வசந்த் சாய், கவிஞர் சின்னவீரபத்ருடு, ஜெயராம் ரமேஷ், நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சி என அமர்வுகள் அனைத்தும் நன்றாக இருந்தன. அன்புமிகுந்த சோ. தருமன் அவர்கள் தன் நகைச்சுவையான பேச்சால் அதிர வைத்தார். ”குளிர்காலத்திற்காக சைபீரியாவிலிருந்து நம் ஊருக்கு வரும் பறவையை கண்மாயில் ஒரு மீனை எடுத்து சாப்பிட விடாமல் விரட்டினால் அது நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?”
எம். கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் தன் மகனின் கதையை எழுதிவிட்டதாக சொன்ன பெண் வியப்பளிக்கவில்லை. அறிந்திராதவர்களிள் உள்ளங்களையும் தாமறியாமலே கூட ஊடுருவி அறிபவர்கள் அல்லவா நல்ல கலைஞர்கள்.
கவிஞர் வீரபத்ருடு தெலுங்கு கவிதைகளின் வரலாற்று சித்திரத்தை அளித்தார். செவ்வியல் நாட்டார் மரபுகளின் விகிதம் அதன் மாற்றம், கவிதைக்கும் இசைக்குமான உறவு என. கவிஞர் இஸ்மாயில் அவர்கள் பற்றியும் அவரது கவிதைக் கொள்கை பற்றி அவர் கூறியது முக்கியமானது என்று எண்ணுகிறேன். இசை அதன் உச்சத்தில் சொற்களை பொருட்டாக எண்ணாத ஒன்று. சொற்களை உதரிவிட்டு அதனால் இயங்கமுடியும். ஆமாம்தானே ஏசுதாஸ் நினைவுக்கு வந்தார். சொற்களே இல்லாமல் சுழன்றாடும் காற்றின் நடனம். அவ்வாறேதானே கவிதைக்கும் இசையில்லாமல், இசையை உதறி கவிதை தன் உச்சம் சேர்வது சரிதானே. அர்தாலங்காரம் – பொருளின் வழியான அழகு, சப்தலங்காரம் – ஒலி அழகு. நல்லகவிதை மொழிபெயர்ப்பில் இழப்பது தன் ஒலி அழகை மட்டுமே அதன் பொருள் அழகு இழக்கப்படுவதில்லை இழந்தால் அது கவிதை இல்லை. சுவாரஸ்யமாக இருக்கிறது உலக முழுவதிலும் இருக்கும் நல்ல இசைக் கலைஞர்கள் சொற்களை மீறிதான் நம்மிடம் வரமுடியும். உலக முழுவதிலும் இருக்கும் நல்ல கவிஞர்கள் இசையைக் கடந்துதான் நம்மிடம் வரமுடியும். இது இங்கே முன்பே பேசித்தீர்க்கப்பட்டு விட்டது சற்றுபிந்தி தெலுங்கில் பேசப்பட்டது என்று எண்ணுகிறேன்.
திரு. வதரேவு வீரபத்ருடு அவர்களிடமும் அண்ணாச்சியிடமும் வைக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ஒத்திருந்தது. உலகியலும் ஆன்மிகமுமாக இரு வேறு தோற்றங்கள் பற்றி வீரபத்ருடு அவர்களிடமும் ஆவேசமும் கனிதலுமான இருநிலைகள் பற்றி அண்ணாச்சியிடமும். தைத்ரிய உபநிடதத்தை மேற்கோள் காட்டி அய்ந்துகோசங்கள் போல அவை. ஒரே நீள்கவிதையின் பகுதிகள் அவை என்றார் வீரபத்ருடு. அண்ணாச்சி தாமிரபரணி ஆற்றை ஒப்பிட்டு விளக்கினார்.
சண்முகவேல் அவர்களின் அண்ணாச்சியின் ஓவியம் மிகநன்றாக இருந்தது. அண்ணாச்சியின் ஆளுமையை அறிந்துகொண்டவர்கள் அந்த ஓவியத்தில் அவரது ஆளுமை துலங்கியதை அறிந்திருப்பார்கள். வெண்முரசின் தாக்கம் பெற்ற அவ்வகையில் திரு. விஜயசூரியன் அவர்களைக் கூற வேண்டும். உணவு சுவையாக இருந்தது. பீமன், நளன் மற்றும் சமையல் கலைஞர்கள் அனைவரும் வாழ்க.
ஆனந்தகுமார் இயக்கிய அண்ணாச்சி பற்றிய வீடும் வீதிகளும் ஆவணப்படம் மிக நன்றாக இருந்தது. பகவதி அம்மாவும் விக்கிரமாதித்தியன் அண்ணாச்சியும் செல்லம்மாவும் பாரதியும்.
டவுனுக்கு ஒரு ஜெயமோகன் வேண்டும் என்ற திரு. வீரபத்ருடு அவர்களின் ஆவல் தொலைவிலேனும் நிறைவேற இறைவர் அருள வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை
காடு ஒரு வாசிப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எளிமையாக இருக்கும் என்று எண்ணி விஷ்ணுபுரத்துக்கு முன்னால் பின் தொடரும் நிழலின் குரல்படித்தேன்.அதுவும் கடினமாகத்தான் இருந்தது.காடுசாதாரணமாகவே சிக்கலானது.ஜெயமோகனின் காடுஅடர்த்தி மிகுந்தது.
புல்வெளி தேசத்துக்கு வந்து காடு நாவல் வாசித்தேன்.பல கால நிலைகளில் வெவ்வேறுமனிதர்களின் பார்வையில் பல கோணங்களில் காடு காட்சிப் படுத்தப் பட்ட விதம் காடு சில நாட்கள் மனதை விட்டகலாது சூழ்ந்துள்ளன.அயனி மரத்தடியில் என்னை விட்டால் அய்யர் பங்களா சென்று, சந்தனக் காட்டுக் குடிலுக்கோ,வேங்கை மரத்தடிக்கோ சென்று விட முடியும் என்றே தோன்றுகிறது.கிரி நீலி மீது கொண்டது, துளியும் காமம் கலக்காத காதல்.அது காதல்கூட இல்லை.இரு குழந்தைகளின் விளையாட்டு.காட்டின் அழகோ,நீலியின் அழகோ உண்மையில் கிரியின் உள்ளத்தின் பிரதிபலிப்பே.அதனால்தான் பேச்சிப்பாறையைக் கடந்து குறிஞ்சிப் பூக்களைப் பார்த்தபின் நீலி ஒரு சாதாரணமான மலைப் பெண்ணாகத் தோன்றுகிறாள்.நீலியின் மறைவுக்குப் பின் அவனறிந்த அழகிய காடு மறைந்து போகிறது.அது வேறு காடு.அதுவல்ல அவனைக் கபிலனாக்கிய காடு.
அன்றாடப் படுத்தப்பட்ட கிரியாக முதிர்ச்சியான,ஆனால் இயலாத,சிறிது நேரத்திலேயே தலை கீழாய் மாறக்கூடிய கவிமனதோடு அய்யர் கவர்கிறார்.குறுந்தொகை,சிவஞான போதம்,சினேகம்மையின் பின் கழுத்து உரோமம் எல்லாவற்றையும் கிரி,அய்யர் இருவராலும் ரசிக்க முடிகிறது.எந்த மயக்கமுமின்றி,வாழ்க்கையை அதன் எல்லா பரிசுகளோடும் அதன் போக்கில் சிக்கலின்றி ஏற்றுக் கொள்வது குட்டப்பன்தான்.
கற்பைத் தவிர எல்லாவற்றிலும் காசு பார்க்க விரும்பும்,தன்னை அழகற்றவளாக காட்டிக் கொள்ளும் எடத்துவா மேரி. அழகின்றி, ஆனால் அது தந்த தாழ்வுணர்ச்யால் மருகி சாமியாடும் வேணி. பெண்களை பொருட்களாக எண்ணி பரிசளிக்கும்,அவ்வப்போது பிறரிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் கீழ்மையான மாமா.கம்பனில் உருகிக் கரைந்து விடும் தேவசகாயம் நாடார். பொறுப்பில்லாத கணவன் அமைந்ததால் குமைந்து உருகும் வேணி,கிரியின்அம்மா, அம்பிகா அக்கா..அனந்தலட்சுமி பாட்டியின் சரளமான பிரசங்கம்.அதைக் கேட்டு மகிழ தினம் திரளும் நேயர் கூட்டம்.
கடைசி வரை அப்பாவி போல தேவாங்கை கொஞ்சும் சாலம் “உள்ள நல்ல ஒரு புண்ணு உண்டும்” பின்னர் வெகுண்டெழுந்து தன் எஜமானனை கொலை செய்கிறார்.ரெசாலத்துக்கு தேவாங்கு. குரிசுக்கு பைபிள்.இது உறவுகளின் காடு.காட்டின் நியாயங்கள் வேறு.கற்பின் நடைமுறை அர்த்தம் வினோதமானது.’இது தப்பில்லையா?’என்று கேட்கப் படும்போது சினேகம்மை “ஆரெயெங்கிலும் சொல்லி ஏமாத்தினா தப்பு.” என்கிறாள்.சொல் திறம்பாமை.” ஏன் கெட்டினா ஒத்திக்கோ பாட்டத்துக்கோ எடுத்திருக்கா?” என்ன ஒரு தெளிவான சிந்தனை!
கலப்பில்லா காமமே காட்டின் நெறிவேறுபட்ட மனிதர்கள் மட்டுமின்றி அவ்வப்போது தலை காட்டும்,கிரியோடு சேர்ந்து கையெழுத்திடும் மிளா.வேட்டியை உருவும் மோழைக் கொம்பி,மனிதரைக் கொல்லும் புள்ளிக் கண்ணன்,அச்சமூட்டும்,ஆனால் தீங்கற்ற கீறக்காதன்–எல்லாம் யானைகள்.காட்டின் உண்மையான நாயகர்கள்.சிறிய பாத்திரங்கள்கூடகாட்டின் மரங்களைப் போலவே ஒவ்வொன்றும்தனித்துவமும் முக்கியத்துவமும் கொண்டவை.
” நாடு கண்டவன் நாட்டை விட்டாலும் காடு கண்டவன்காட விடமுடியாது.”கிரியால் விட முடியவில்லை.ஒருநாள் கூட அவனால் காட்டைப் பிரிந்து வீட்டில் இருக்க முடியவில்லை.அவன் தன்னை மலையன் என்றே நம்பத் தொடங்கி விடுகிறான்.நீலி என்ற பெயர் பிரபஞ்சமாய் விரிந்த நாட்களில் கிரியால் மலையடிவாரத்துக்கு –48 மைல் –ஓரிரவில் இறங்க முடிந்தது.
கவித்துவம் கொப்பளிக்கும் வரிகள்.”நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.பிரம்மாண்டமான ஓர் அலங்காரக் கூரை.அற்பனும்,அபத்தமானவனுமான மனிதன் என்ற பிராணிக்கு சற்றும் தேவையில்லாத ஆடம்பரம்.”
விசும்பு தோய் பசுந்தழை.
வறனுறல் அறியாச் சோலை.
“சாந்தில் தொடுத்த தீந்தேன்.”
மகத்துவங்களை என்னால் என் சிறிய மனதைக் கொண்டு அள்ளமுடியவில்லையா?”
நள்ளிரவில் விழித்து,காட்டுக்குள் நுழைந்த கிரிமலையுச்சிகளை நோக்கி செல்லும்போது மொழி கவித்துவ உச்சிகளை நோக்கி செல்கிறது.
“படுக்க வைக்கிறவனுக்கு பத்து பொண்ணு.பாத்து
ரசிக்கிறவனுக்கு பத்தாயிரம் பொண்ணு.”
“கற்றதனாலாய பயனென்கொல் அவ்வப்போது கக்கி வைக்காவிடில்.”
“காடு ஏன் புனிதம்னா அது யாருக்கும் சொந்தமில்லைங்
கறதுனாலேதான்.சாலை என்பது மனிதன் காட்டை
உரிமை கொள்ளச் செய்யும் முதல் முயற்சி.”
எஞ்சினியர் நாகராஜ அய்யர் அவ்வப்போது உதிர்க்கும் பஞ்ச் வசனங்கள்.
நீலி விஷக் காய்ச்சலில் இறந்தது போகிற போக்கில் சொல்லப் படுகிறது.குட்டப்பனுக்கும் பிறருக்கும் அவள் ஒரு அழகிய மலைப் பெண் மட்டும்தான்.கிரிக்கும்,வாசகனுக்கும் அப்படியா?
“உள்ள நல்ல ஒரு புண்ணு உண்டும்” எல்லோருக்கும்தான்.
நன்றி,ஜெயமோகன் சார்.
அன்புள்ள,
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
காடு- கதிரேசன் கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம் காடு இரு கடிதங்கள் காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி காடு- வாசிப்பனுபவம் கன்யாகுமரியும் காடும் காடு-முடிவிலாக் கற்பனை காடு -கடிதம் காடும் மழையும் காடு- கடிதங்கள் காடும் யானையும் கன்யாகுமரியும் காடும் காடும் குறிஞ்சியும் காடு- ஒரு கடிதம் காடு– ஒரு கடிதம் காடு – பிரசன்னா காடு -ஒரு பார்வை
இலக்கியமும் தேர்வுகளும்
அன்புள்ள ஜெவுக்கு,
நீங்கள் எனது கடிதத்தை தங்கள் தளத்தில் பகிர்ந்த்தை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் ஜெ.தொடங்குதல்…நன்றி.
நான் வெகுநாட்களாகவே ஒரு ஐயத்துடன் போராடிக்கொண்டே இருக்கிறேன். நான் தமிழக அரசின் கீழ் இயங்கும் வேளாண் துறையில் வேளாண் அதிகாரி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்விற்கு தயாராகி கொண்டு இருகிறேன். இந்நிலையில் என்னால் இலக்கிய புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க முடியாமல் மிகவும் மன சோர்வுக்கு ஆளாகிறேன். நான்கு கதைகளுடன் நின்று போனதும், பிறர் கேட்கும் முன்பே எனக்குள்ளாகவே இவ்வளவு தானா இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றெல்லாம் எனக்கே தோன்றச் செய்கிறது. நீங்கள் என் கடிதம் தளத்தில் பகிர்ந்ததை கண்டும் பதில் எதும் அளிக்காமல் குறுக செய்ததும் இந்த குற்ற உணர்வே இருக்கலாம். நான் தொடர்ந்து இலக்கியம் நாடவும் வாசிக்கவும் எழுதவும் ஏங்கி கொண்டு இருக்கிறேன். நான் வாசிக்க தொடங்கியதே மிகவும் தாமதம் என்று வருந்தும் பொழுதுகள் பல உண்டு. இப்படிப்பட்ட நிலையில் இந்த இடைவெளி என்னை இன்னும் இலக்கியதில் இருந்து பின் தள்ளிவிடுமோ என்ற அச்சம் என்னை முழு மனதுடன் நேர்முக தேர்விற்கு தயாராகும் மனநிலையையும் தருவதில்லை.
என் நண்பர்கள் சிலர் புத்தகம் வாசிப்பதும் எழுதுவதும் முழு நேர பணியாக செய்தால் ஒழிய அதில் சாதிப்பது சுலபம் அல்ல என்று கூறுவது என் மன உளைச்சலை எண்ணெய் ஊற்றி ஊற்றி எரிப்பது போல் இருக்கிறது. இதை பகிர்ந்து கொள்ள உங்களை விட எனக்கு வேறு ஒருவர் இருக்க முடியாது. ஜெ நான் ஈரோடு மாவட்டம் கர்நாடக எல்லை பகுதியை ஒட்டிய தாளவாடி என்ற மலைகிராமம். இயற்கை ஒன்றை தவிர பிற கல்வி பட்டபடிப்பு வேலை என எல்லாவற்றிர்க்கும் பிறரையும் பிற ஊர்களையுமே சார்ந்து இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். கன்னட மொழியை தாய் மொழியாய் கொண்டும் தழிழ் பால் கொண்ட காதல் என்னை இவ்வளவு தூரம் இலக்கியத்தில் பிணைத்துக் கொள்ளும் என்று நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஒரு நல்ல பணியின் தேவை வாழ்கைக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு குடும்ப பின்ணணியில் இருந்து வந்த எனக்கு இன்று இயற்கையும் இலக்கியமும் தந்த அக மகிழ்ச்சி எதிலும் கிடக்கவில்லை. அதை நான் இழக்காமல் இருக்க நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் இந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
என் அடிப்படையையும் அகத் தேவையையும் தனித்தனியாக கொண்டு நான் இந்த தளத்தில் வளர முடியாத ஜெ. முழு நேர இலக்கிய வாசிப்பு இல்லாவிடில் இலக்கியத்தில் நான் தேருவது கடினமாகி விடுமா. இப்படி எல்லாம் பல குழப்பங்களும் கேள்விகளும் என்னை உறங்க விடுவதில்லை. தேர்விற்கு தயாராகும் இந்த நிலையிலேயே இலக்கியம் சார்ந்து வசிக்கும் நேரம் குறைந்து விட்டதே, பணிக்கு சென்றுவிட்டால் இலக்கியம் என்றால் என்ன என்று கேட்பேனோ, பேசாமல் இப்படியே இருந்து விடலாம், வேலையே வேண்டாம் என்றெல்லாம் கூட தோன்றுகிறது. எனது ஐயம் ஒன்றே, வேறு துறையில் இருந்துக் கொண்டும் நான் இந்த தளத்தில் என்னை வளர்த்துக் கொள்ள முடியுமா இல்லை நான் இதே தளத்தில் இருந்தால் தான் என் தேடலும் நிறைவும் சாத்தியம் ஆகுமா. இந்த குழப்பம் மற்றும் பதற்றத்தில் இருந்து என்னை மீட்டெடுங்கள் ஜெ.
இத்தனை குழப்பதிலும் கையில் உங்கள் ரப்பர் நாவலுடன் உங்கள் அன்பை எதிர்நோக்கி காத்திருக்கும்,
உங்கள் நலம் விழையும்
நீனா.
அன்புள்ள நீனா
உண்மை, இலக்கியத்தில் முதன்மையிடம் பெறவேண்டுமென்றால் அதன்பொருட்டு வாழ்க்கையை அளித்தாகவேண்டும். தொட்டுச்செல்பவர்களுக்கு உரியது அல்ல அது.
சரி, வாழ்க்கையை எப்படி அளிப்பது? இன்றைய இந்திய சூழலில் கூடுமானவரை நேரம் கவனம் ஆகியவற்றை அதற்காகச் செலவிடவேண்டும். பயன் கருதாது, எதிர்காலத்தை எண்ணாது, முழுமூச்சாக அதில் பல ஆண்டுக் காலம் ஈடுபடவேண்டும்.
அவ்வண்ணம் ஈடுபட முதன்மைத்தேவை என்பது உலகியல் ரீதியான உறுதிப்பாடு. உடல்நலனை பேணிக்கொள்ளுதல். உறவுகளில் நிதானத்தை கடைப்பிடித்தல்.
உலகியல் ரீதியான உறுதிப்பாடு என்பது ஒரு நல்ல வேலையால் அமைவது. குறைந்த உழைப்பை அளித்து சிக்கலற்ற வாழ்க்கையை அமைக்கும் வசதிகொண்ட ஒரு வேலையே எழுத்துச் செயல்பாட்டுக்கு மிக உகந்தது.
அவ்வண்ணம் அன்றி உலகியல் வாழ்க்கையைச் சிக்கலாக ஆக்கிக்கொண்டால், அதில் கடும் உழைப்பையும் காலத்தையும் செலவிடவேண்டும் என்றால் அது இலக்கியச்செயல்பாட்டுக்கு எதிரானதாகவே அமையும். ஆகவே ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ளும்பொருட்டு படிப்பதும், அதற்காக நேரம் ஒதுக்குவதும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியாகவே அமையும். அதன்பொருட்டு சிலகாலம் முழுமையாகவே இலக்கியத்தில் இருந்து கவனத்தை விலக்கிக்கொள்வதுகூட பிழையல்ல.
அதேசமயம் அது உலகியல் ரீதியான வெற்றிக்காக மேலும் மேலும் முயல்வதாக அமையக்கூடாது. வேலையில் உயர்ந்த இலக்குகளை வைத்துக்கொண்டு அதற்காக உழைப்பதாகவும் அமையக்கூடாது. அது இலக்கியத்தில் இருந்து கவனத்தை விலக்கும்.
ஆகவே இப்போது இந்த தேர்வுக்காக முழுமூச்சாக முயல்வது அவசியம். இலக்கியம் கொஞ்சம் காத்திருக்கலாம்
ஜெ
January 17, 2022
புளியமரம் இருந்த ஊர்
நேற்று ஏதோ ஒரு சிறு குறிப்புக்காக ஒரு நூஉலை தேடியபோது ஒரு புளியமரத்தின் கதை அகப்பட்டது..1996 பதிப்பு. வெளிவந்து முப்பதாண்டுகளுக்குப்பின் காலச்சுவடு வெளியிட்ட முதல்பதிப்பு. எழுத்து அச்சு செங்குத்தாக, இணையத்திலிருந்து நகலெடுத்ததுபோல இருக்கிறது. அன்று கணினி அச்சு அவ்வளவு வேரூன்றவில்லை. சுந்தர ராமசாமியின் கையெழுத்து எனக்கும் அருண்மொழிக்குமாக.
சும்மா புரட்டி ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.”மூத்த பிள்ளை மிகவும் எளிமையானவர். எளிமையாக இருப்பதிலுள்ள பெருமையை நன்றாக அனுபவித்தவர்” என்ற வரி புன்னகைக்க வைத்தது. 67 ஆம் பக்கம்.
அப்படியே வாசிக்க ஆரம்பித்தேன். புளியமரம் ஏலம் விடப்படும் காட்சி. பழைய நினைவுகள், நிகழ்காலத்தில் புளியங்காய்கள் களவுபோய்விட்டன. களவுபோகவில்லை, ஜனநாயகத்தால் ஊக்கம் அடைந்த மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன.
என்ன ஒரு காட்சி. காட்சிக்கு அடியில் சென்று மேலதிகமாக பொருள் ஏதும் தேடாத எளிய வாசகர்கள் வெடிச்சிரிப்புடன் இப்பகுதியை வாசிக்க முடியும். மூத்தபிள்ளையின் நிதானம், அப்துல் அலி சாயபின் பதற்றம், சின்னப்பசங்களின் ஊடாட்டம், முனிசிப்பல் சிப்பந்தி வள்ளிநாயகம் பிள்ளையின் கெத்து. ஏலத்தின் நடைமுறைகளில் ஒவ்வொருவரின் குணமும் வெளிப்படும் விதம். அதிலேயே ஆயிரம் இருக்கின்றன ரசிக்க.
ஆனால் புனைவு என்பது வரலாற்றின், வாழ்க்கையின் ஒரு துளிப்பதம் என உணர்ந்த இலக்கியவாசகன் இந்த ஒரு காட்சி வழியாக அன்றைய வரலாற்றுத் திருப்புமுனையை, அதன் சிக்கலான உள்ளோட்டங்களை விரித்து விரித்து எடுக்க முடியும். புளியமரம் மகாராஜாவின் வருகையால் முச்சந்திக்கு வந்து அவையமர்ந்தது. அது ஒரு பட்டம்கட்டல், ஒரு பதவியளித்தல்தான். அதன்பின் அது நிழல்மரம். அதன்கீழே வணிகமும், நாகரீகமும், அதிகாரப் பூசல்களும், வணிகப்போட்டியும் தழைக்கின்றன.
அதை ஏலம்விடுவது ஓர் அரசுசார் நிகழ்வு. வழிவழியாக அரசுச்செல்வத்தில் கைவைப்பவர்களுக்கே அதில் உரிமை. தாழக்குடி மூத்தபிள்ளை வில்வண்டியில் வருகிறார். நிதானமான, கெத்தான, நையாண்டியான அதிகாரம். ஆனால் கால் அழுகிக்கொண்டிருப்பது. நிலப்பிரபுத்துவத்திற்கு உரிய ஒரு வகை ரத்தசொந்த சோஷலிசம். வண்டிக்காரன் நாகருபிள்ளை மூத்தபிள்ளைக்கு சொந்த மகன்போல. வள்ளிநாயகம் பிள்ளை உறவில்லாவிட்டாலும் மாப்பிள்ளை முறை. எக்சிமா பாதித்த கால்களுடன் வேட்டியை தூக்கிப்பிடித்தபடி மெல்ல வரும்போது அந்த பகுதியே தன்னுடையது என்னும் மிதப்பு. ‘மகாராஜாவ பாக்குறது உண்டுமா?’ என்னும் கேள்விக்கு ‘போனமாசம் இதே தேதியிலே பாத்து பேசிக்கிட்டிருந்தேன்’ என்னும் பதில்.
அவருக்குப் போட்டி சாயபு. அவருடையது அரண்மனைத் தொடர்பின் அதிகாரமல்ல, வணிகவலையின் அதிகாரம்.என்ன அதிகாரமிருந்தாலும் கடைசியில் அரண்மனைத் தொடர்பு வெல்வதன் பதற்றம். இன்னொருவர் வடசேரி பிரம்மானந்த மூப்பனார். நாடார் சாதி. அரண்மனைத் தொடர்பும் இல்லை, வணிக வலையுமில்லை. ஆனால் சாதி எண்ணிக்கை அளிக்கும் பின்புலம். பெருவட்டர், அதன் விளைவான தோரணையும் மிதப்பும். அந்தச் சக்திகள்தான் வழக்கமாக மோதிக்கொள்ளும், அவர்களில் ஒருவரே வெல்லமுடியும். மற்றவர்களுக்கு அந்த நாடகத்தைப் பார்க்கும் இன்பம் மட்டுமே.
சுதந்திரம் வந்துவிட்டிருக்கிறது. ஜனநாயகம் அறிமுகமாகிவிட்டது. தோட்டிகளுக்கு தங்கள் காலம் வந்துவிட்டது என்னும் எண்ணம். வள்ளிநாயகம் பிள்ளை ஒரு வார்த்தை கேட்கமுடியாது. அவர்களுக்கெல்லாம் ஓட்டு இருக்கிறது. அவர்களின் தலைவன் மாடசாமி தோழர் மாடசாமி ஆகிவிட்டான். அவர்கள் முன்பென்றால் புளியமரத்தடியில் நிற்கக்கூட மாட்டார்கள். அவ்வாண்டு மொத்தக் காயையும் பறித்துக் கொண்டுபோய்விட்டார்கள்.
என்னென்ன பகடிகள். “என்ன எளவோ தெரியல்ல இந்த வருசம் குருவி வெட்டுக்கிளி எலி பெருச்சாளி பல்லி கொசு எல்லாம் கூடுதலு பாத்துக்க’ என்னும் மூத்த பிள்ளையின் நக்கல். ‘ஒரு ராஜ்யம்னா ஒருத்தன் சொல்லணும் அடுத்தவன் கேக்கணும். இது பயித்தாரக்கூத்தாட்டுல்ல இருக்கு. என் ஊட்லே நானும் சொல்வேன், அவளும் சொல்லுவா, புள்ளைகளும் சொல்லும், வண்டிக்காரனும் சொல்வான், பறைச்சியும் சொல்லுவா, சாம்பானும் சொல்லுவான்னு உண்டும்னா கேக்குததுக்கு யாரு’ என ஜனநாயகத்தை எண்ணி உளம் வெதும்பல்.
அப்படியே வாசித்துக்கொண்டே இருந்தேன். என் புத்தக அலமாரி அருகே நின்றபடியே157 பக்கத்தையும் படித்து முடித்தேன். தொடக்கத்தில் இருந்து மீண்டும்67 ஆம் பக்கம் வரை படித்தேன். இது இந்நாவலுக்கான என் எட்டாவது வாசிப்பாக இருக்கலாம். பெரும்பாலும் மனப்பாடமாகவே இருக்கிறது.
இந்தியாவின் தொன்மையான புராணப்பாரம்பரியத்தில் தொடங்கி சுதந்திரப்போர் வழியாக ஜனநாயகக் கூத்து வரை வந்து அதன் வெறுமையைச் சுட்டிக்காட்டும் இந்நாவல் சுந்தர ராமசாமி என்னும் அக்கால மார்க்சியர் எழுதியது. ஜனநாயகம் என்பது கும்பலின் அதிகாரம், இன்னொரு மெய்யான அதிகாரம் வந்து மக்களை விடுவிக்கவேண்டும் என்பதுதானே அன்றைய இடதுசாரிகளின் எண்ணம்.
பத்தாண்டுகளுக்குப் பின்பு இந்நாவலை சுந்தர ராமசாமி எழுதியிருந்தால் இதன் முடிவில் உள்ள நம்பிக்கையை, வருந்தலைமுறைக் குழந்தைகளைக் கண்டு கண்கலங்கும் கடலைத்தாத்தாவின் நெகிழ்வை எழுதியிருப்பாரா? மாட்டார். அவரை நவீனத்துவம் நம்பிக்கையிழப்பு நோக்கி, தன்னை நோக்கிய இறுக்கம் நோக்கி கொண்டு சென்றது.
ஐயமே இல்லாமல் பெரும் செவ்வியல் படைப்பு என தமிழில் என் தலைமுறைக்கு முன் ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் ’ஒரு புளியமரத்தின் கதை’யைத்தான் சொல்லவேண்டும். 1991ல் அதைச் சொல்லப்போய் ஏகப்பட்ட வசைகள் வாங்கினேன். கூடுதலாகச் சொல்லிவிட்டேனோ என்ற ஐயம் எழுந்து நானே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வாசித்துப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் தன்னை உறுதிப்படுத்திக்கொள்கிறது இப்படைப்பு.
இதன் முதன்மை வெற்றி என்ன? சுந்தர ராமசாமியே அருகே இருப்பதுபோல உணரச்செய்யும் படைப்பு இது. அவரை அறிந்து, இழந்த அவருடைய நண்பர்கள் மாணவர்கள் அனைவருக்கும் அவர் அழிவின்மையுடன் இருப்பதாக உணரச்செய்வது. ‘துப்பாக்கியில் இருந்து வெடியோசையுடன் வெளிவருவது இலவம்பஞ்சாக இருக்கமுடியாதே’ என்ற வரியை வாசிக்கையில் சிரித்து ’சார்!’ என ஒருகணம் கண்கலங்கிவிட்டேன். அவரை எண்ணி இத்தனை ஆண்டுகளுக்குப் பின் துயருறுவேன் என நினைக்கவே இல்லை.
”ஓய் நான் ஜெயிலுக்கு போணம்னு வக்கீல் படிப்பை முடிச்சுண்டு அவசரமா வரேன். அதுக்குள்ள சுதந்திரத்த வாங்கிட்டாரு வேய் இந்த காந்தி.நம்மள ஏமாத்திப்புட்டாருவே’ என்னும் வக்கீல் ஜனார்த்தனத்தின் குரல்மேல்தான் சுந்தர ராமசாமிக்கு முதன்மை விமர்சனம். மூத்தபிள்ளைவாள்களின் கையில் இருந்து ஜனார்த்தனங்களின் கைக்கு புளியமரத்தடி வந்து சேர்ந்ததன் கதை இது. புளியமரம் இல்லை, அந்த பெயர் மட்டும்தான்
இந்நாவலில்தான் சுந்தர ராமசாமியின் தன்னியல்பான மலர்தல் முழுமையாக நிகழ்ந்திருக்கிறது. அவருடைய பகடி, புறவுலகைக் கூர்ந்து பார்க்கும் அவருள் இருக்கும் அழியாச்சிறுவன், மனிதர்கள் மேல் பெரும்பிரியம் கொண்ட சுரா என்ற மாறாத இடதுசாரி. எங்கோ ஒருபுள்ளியில் சிந்தனை கடந்த ஒன்றை அகம் சென்று தொடும்போது எண்ணையில் தீ பற்றிக்கொள்வது போல அதை சென்றடையும் கவிஞர்.
இங்கே யார் நாம்?
ஆராவிடே நாம்? மலையாளத்தில் எடுக்கப்பட்ட அழகான பாடல்காட்சிகளில் ஒன்று. இந்த பாடலில் மனித முகமே இல்லை. ஒரு குறும்படத்தின் ஒரு பாடல். அதுவே ஒரு சிறு குறும்படம்
இரண்டு உயிர்கள். ஒன்றையொன்று அறிந்து உலகை அறிந்து அவை ஓர் இடத்தை உரிமைகொண்டாடுகின்றன
Pawssible என்ற குறும்படத்தில் இருந்து ஒரு பாடல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

