Jeyamohan's Blog, page 838

January 27, 2022

நூறு நாற்காலிகள்- கடிதங்கள்

நூறு நாற்காலிகள் வாங்க

அன்புள்ள ஜெ,

நலம் என்று நினைக்கிறேன். நூறு நாற்காலிகள் குறித்து கேள்வியும் உங்கள்  பதிலும் வாசித்தேன்.அந்த கடிதத்தை  படித்தவுடன் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.உங்களுக்கு இது போன்ற கடிதங்கள் பல எழுதப்பட்டிருக்கலாம். அந்த கடிதத்தில் அவர் இது போன்ற ஜாதிய ஒடுக்குமுறை உயர் அதிகாரவர்கத்தில் இருப்பதாக அவருக்கு தெரியாமல் இருக்கும் என்று நினைகிறேன். என் மருத்துவ மாணவ பருவத்தில்  எங்கள் கல்லூரி உயர் பதவிகளை  வகிப்பது ஆதிக்க ஜாதியினர் தான் .மாணவர்களுக்கான முக்கிய பொறுப்புகள்  அந்த ஆதிக்க சமூகத்தை  சேர்ந்தவர்களுக்கு தான் அவர்களால் வழங்கப்படும் . பிற யாரையும் அவர்கள் அந்த அதிகார மட்டத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள். பிற யாராவது பதிவுகளை அடைந்தால் அவர்கள் பதவியில் இருந்தும் இல்லாதது போலத்தான்.

நான் நேரில் கண்ட நிகழ்வு  என்  நண்பன் ஒரு தலித்  அறுவை சிகிச்சை பாட பிரிவுக்காக சிறந்த மாணவனாக தேர்வு செய்யப்பட்டும் துறைத்தலைவரின் விருப்பமான அவர் சமூகத்தை அடிவருடிக்கு அவன் தகுதி பெறாமலும் அந்த விருது அவனுக்கு வழங்கபட்டது. இதற்கும் இந்திய அளவில்  முக்கியமான நிறுவனம் அந்த பரிசை வழங்குகிறது.தகுதி திறமை இருந்தும்  என் நண்பனுக்கு  அந்த பரிசு வழங்கப்படவில்லை. உண்மை ஜெ தலித்துக்கள் இன்னும் வெல்லவில்லை.

சம காலத்திலே இது போன்ற சிக்கல்கள் இருக்கும் போது அந்த கதை நடந்த கால கட்டத்தை கற்பனை செய்தால் எப்படிப்பட்ட உச்ச காழ்புகளை அவர் சந்திக்க நேர்ந்திருக்கும் .

நூறு நாற்காலிகளும் வணங்கானும் என்னை  மிகவும் பாதித்த கதைகள்.நூறு நாற்காலிகளின் பேசிய பல சிக்கல்கள் இன்னும் பல இடங்களில் முறைமுகமாகவும் நுட்பமாகவும் நடத்து கொண்டு தான் இருக்கிறது.வணங்கான் தொட்டு காட்டும் இடங்கள் முக்கியம் என்றால்  நூறுநாற்காலிகள் பேசாமல் சொல்லூம் இடங்கள் பல முக்கியமான ஒன்று.குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பதும் உங்கள் கடமையே.

நன்றி ,

சுகதேவ்.

அன்புள்ள ஜெ

நூறு நாற்காலிகள் கதையை இன்றுதான் வாசித்தேன். உங்கள் கதைகள் எவற்றையும் நான் இதுவரை வாசித்ததில்லை. உங்களைப்பற்றிச் சொல்லப்பட்ட வம்புகள் என்னை தடுத்து வைத்திருந்தன. இந்தக்கதையை வாசித்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி. நான் என்னிடம் உங்களைப்பற்றி பேசியவர்களிடம் போய் கேட்டேன், அவர்கள் இதை வாசித்திருக்கிறார்களா என்று. பெரும்பாலானவர்கள் நீங்கள் எழுதிய எதையும் வாசித்ததில்லை. சிலர் மேலோட்டமாக ஏதோ படித்திருக்கிறார்கள். நீங்கள் பெரியாரை எதிர்க்கிறீர்கள், கருணாநிதியை எதிர்க்கிறீர்கள், கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறீர்கள் இப்படி சில அசட்டு காரணங்களைச் சொன்னார்கள். ஆனால் அபப்டி ஒரு தன்னம்பிக்கையும் திமிருமாகப் பேசினார்கள். மடையர்களுக்கு மட்டும் உருவாகும் திமிர் அது

எனக்கு என்மேலேயே கேவலம் வந்துவிட்டது. இந்த மொக்கைப்பயல்கள் சொல்லியதை நம்பி சொந்தமாகப் படிக்காமலிருந்த நான் பெரிய குற்றவாலி என்று தோன்றிவிட்டது. இப்படித்தான் மொக்கைகள் என்று தெரிந்தாலும் சூழலில் ஒருசிலர் சிலவற்றை சொல்லிக்கொண்டே இருந்தால் நாமும் மொக்கையாக ஆகிவிடுகிறோம். மகத்தான அறவுணர்ச்சியுடன் எழுதப்பட்ட ஒரு மாபெரும் படைப்பு நூறுநாற்காலிகள். அதற்குமேல் அதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தக்கடிதம் மன்னிப்பு கோருவதற்காக மட்டும்தான்.

தமிழ் மணவாளன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2022 10:31

January 26, 2022

பூர்வபௌத்தம் என்பது கட்டுக்கதையா?

அயோத்திதாசர் இரு கேள்விகள்

அயோத்திதாசர் மேலும்…

அயோத்திதாசர் விவாதம் – கடிதம்

அன்புள்ள ஜெ,

அயோத்திதாசர் பற்றிய விவாதங்களை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். இந்த தலைப்புகள் சமூகவலைத்தளங்களின் பூசலுக்குள் நின்று பேசப்படவேண்டியவை அல்ல என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னைப்போன்ற பொது வாசகர்களுக்கு சமூகவலைத்தளங்களில் எழுதப்படும் குறிப்புகளே வந்துசேர்கின்றன. ஆகவே வேறு வழியில்லை. நான் கேட்கும் கேள்வி எனக்கு சமூகவலைத்தள விவாதங்கள் வழியாகக் கிடைத்ததுதான்.

அயோத்திதாசரை தொடர்ந்து பூர்வபௌத்தம் என்னும் கருத்தைச் சிலர் முன்வைக்கிறர்கள். இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பண்பாடும் மதமும் பௌத்தமே என்றும் இந்துமதம் பின்னாளில் பௌத்தத்தை பின்தொடர்ந்து உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். பௌத்தக்கருத்துக்களே இந்துமதத்தில் உள்ளன என்று வாதிடுகிறார்கள். இவ்வாறு வாதிடுபவர்கள் மூர்க்கமான வசைகளுடன் அதை ஒற்றைப்படையாகச் சொல்கிறார்கள்.நையாண்டியும் ஏளனமும் செய்கிறார்கள். அதற்குப் பதிலாகப் பேசுபவர்கள் அதைவிடக் கடுமையாக நையாண்டியுடன் அந்தத்தரப்பை அணுகுகிறார்கள். அல்லது ஒற்றைவரியில் மூடத்தனம் என்று கடந்துசெல்கிறார்கள்.

நான் கேட்பது இந்த விவாதத்தில் என்னைப்போன்ற ஒரு பொதுவாசகன் புரிந்துகொள்ளவேண்டிய ஏதேனும் உண்டா என்பது மட்டுமே. இதை ஒருவகை வெட்டியான சாதி -அரசியல் விவாதம் என்று கடந்துசெல்லவேண்டுமா?

அர்விந்த்குமார்

அன்புள்ள அர்விந்த் குமார்,

சமூகவலைத்தள விவாதங்களின் இயல்பே அது எப்படியானாலும் கடைசியில் ஒற்றைப்படையாக்கல், வசை,நையாண்டி என்று சென்றுசேரும் என்பதே. அதன்பின் என்ன நிகழுமென்றால் நாம் நம் மறுதரப்பை புரிந்துகொள்ளும் திறனை இழப்போம். அறிவியக்கத்தில் அது மாபெரும் இழப்பு.

பூர்வபௌத்தம் பேசுபவர்களின் தரப்பு என்பது அயோத்திதாசரால் சொல்லப்பட்டது மட்டும் அல்ல. கேரளத்தில் என் ஆசிரியரான பி.கே.பாலகிருஷ்ணன் உட்பட பலர் வெவ்வேறு வகையில் அந்த வரலாற்றுச் சித்திரத்தை முன்வைத்திருக்கிறார்கள். விவாதங்கள் நிகழ்ந்துள்ளன, தொடர்கின்றன. நீங்கள் ஆர்வம்கொண்டிருந்தால் படிக்க நிறையவே கிடைக்கும்.

கேரளத்தின் சிந்தனை மையங்களில் ஒன்றான காலடி சம்ஸ்கிருத பல்கலையில் இச்சிந்தனை கொண்டவர் பலர் உள்ளனர் (தலித் சிந்தனையாளர்கள் அல்ல) அங்கே தத்துவம் முதுகலை படித்தவனும், என்னைவிட பலமடங்கு தத்துவ வாசிப்பு கொண்டவனும், ஷோப்பனோவரின் சிந்தனைவழி வந்தவனுமாகிய என் மகன் அஜிதனுக்கு இந்தத் தரப்பு முக்கியமானது என்னும் எண்ணம் வலுவாக உள்ளது.

அந்த தரப்பை வரலாற்று விவாதத்திற்குரிய சமநிலை இல்லாமல் மூர்க்கமான மதநம்பிக்கையாக ஏற்றுக்கொண்டு பேசுபவர்களை கவனிக்காதீர்கள். அது அவர்களின் தரப்பின் தர்க்கம் மீது நமக்கு ஆழ்ந்த அவநம்பிக்கையை உருவாக்கிவிடும். எந்தத் தரப்பையும் அதன் அறிவார்ந்த தளத்தில் நிற்கும் முதல்நிலை அறிவியக்கவாதிகளிடம் இருந்து மட்டுமே கேட்டறியுங்கள். அறிவியக்கத்தில் நம் எதிர்த்தரப்பை எத்தனை நல்லெண்ணத்துடன், எத்தனை முழுமையாக நாம் அறிந்திருக்கிறோம் என்பதே நம் தகுதி

இனி, அந்த தரப்பின் நிலைபாடு என்ன என்பதை மிகச்சுருக்கமாகச் சொல்கிறேன். விரிவாக நீங்கள் ஆய்வுநூல்களைக்கொண்டு புரிந்துகொள்ளுங்கள். இச்சுருக்கம் அந்நிலைபாடு கவனிக்கத்தக்க தகுதி கொண்டதா என்பதை உங்களுக்குக் காட்டும்.

நீங்கள் மதவழிபாட்டுமுறைமேல் நம்பிக்கை கொண்டவர் என்றால் இந்த ஆய்வே உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் வரலாற்றை அறிய முனைபவர், அதற்கான அறிவுச்சமநிலையும் உணர்வுச்சமநிலையும் கொண்டவர் என்றால் மட்டும் வாசியுங்கள்.

காணி தெய்வங்கள்.இப்போது பெரிதும் மாறிவிட்டன

ஓர் உருவகச் சித்திரத்தை முன்வைக்கிறேன். அதற்கு உண்மையான பண்பாட்டுச்சூழலையே எடுத்துக்கொள்கிறேன்

குமரிமாவட்டத்தில் இப்போது மதங்களாக இருப்பவை இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்தவம். இதற்கு மிக அப்பால் காணிக்காரர்கள் பளியர் முதலிய மலைப்பழங்குடிகளிடம் குளிகன், மாதி, கடுத்தா, பிறுத்தா முதலிய தெய்வங்கள் உள்ளன. அவர்கள் அந்த தெய்வத்தை போற்றிப்பாடும் தொன்மையான பாடல்களும் உள்ளன. அவை இன்றைய தமிழுக்கு மிகமிக முந்தைய ஒரு வடிவைச் சேர்ந்தவை.பல ஆயிரமாண்டுகள் தொன்மை அவற்றுக்கு இருக்கலாம்.

காணிக்காரர்களின் மந்திரவாதச் சடங்குகளில் பொதுவாகவே கேரளம் (குமரிமாவட்டம்) முழுக்க ஆழமான நம்பிக்கை இன்றும் உண்டு. அரசகுடிகள் உட்பட அனைவருமே தீயசக்திகளை ஓட்டுதல், எதிரிகளை வெல்லுதல், நல்லூழ் கொண்டுவருதல் ஆகியவற்றுக்காக காணிக்காரப் பூசகர்களை அழைத்து மந்திரவாதம் மற்றும் பூசைகளைச் செய்வது வழக்கமாக இன்றும் உள்ளது.

இந்த தொல்குடிகளை பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.பல தலைமுறகளாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. திருவனந்தபுரம் மகராஜா கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைகழகக் கல்லூரி, காலடி சம்ஸ்கிருத பல்கலை என இந்த ஆய்வில் பல சிந்தனைமையங்கள் செயல்படுகின்றன. அவர்கள் அந்தப் பாடல்களை திரட்டி நூல்களாக்குகிறார்கள். கொட்டாரத்தில் சங்குண்ணி, கே.பானூர், முனைவர் எம்.வி.விஷ்ணு நம்பூதிரி, கிளிமானூர் விஸ்வம்பரன் என பல ஆய்வாளர்கள் இதில் செயல்படுகிறார்கள். தொகைநூல்கள் எழுதப்படுகின்றன. இதுவரை மெய்யாகவே நிகழ்ந்தது இது.

இனி உருவகக் கற்பனை. பொதுயுகம் 2022 வாக்கில் திடீரென்று ஆய்வாளர்களில் சிலர் ஒரு  சிந்தனை அமைப்பாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் காணிக்காரர்களின் தெய்வங்களையும், சடங்குகளையும், வழிபாட்டுமுறைகளையும் இன்றைய கேரளத்தின் ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும் ஏற்கும்படிச் செய்கிறார்கள். ஏற்கனவே காணிக்காரப் பூசகர்கள் மேல் அரசர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. சடங்குகளை செய்ய அவர்களை அழைப்பதும் நடக்கிறது. ஆகவே இந்த ஏற்பு எளிதாக நடைபெற்றது. பெரும் செல்வம் இந்த புதிய சிந்தனை- வழிபாட்டுமுறைக்கு அளிக்கப்படுகிறது. அரசு ஆதரவு கிடைக்கிறது.

இந்தப் புதிய சிந்தனைமுறை கேரளத்தின் பல்கலை கழகங்களைக் கைப்பற்றுகிறது. அங்கே இச்சிந்தனையாளர்கள் நிறைகிறார்கள். அவர்களுக்கு அரசு ஆதர்வு கிடைக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான தத்துவங்களையும் தர்க்கமுறைமையையும் வேதாந்தத்தில் இருந்தும், கிறிஸ்தவத்தில் இருந்தும் எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றை ஒருங்கிணைத்து புதியதாக விளக்க ஏராளமான நூல்களை எழுதுகிறார்கள். அந்நூலாசிரியர்களுக்குள் விவாதங்கள் நிகழ்கின்றன. அவை வெவ்வேறு சிந்தனை பள்ளிகளாக ஆகின்றன.  இந்த புதிய வழிபாட்டுமுறை ஒரு மதமாக ஆகிறது. இதை காணிமதம் என அழைக்கிறார்கள்

காணிமதத்தவர் தங்களுக்கு சுற்றும் இருந்த அனைத்தையும் அறிவுபூர்வமாகத் திரிக்கிறார்கள். வேதங்களும் பகவத் கீதையும் பைபிளும் எல்லாம் காணிக்காரர்களின் தொல்மொழிக்கு ஏற்ப திரும்ப எழுதப்படுகின்றன. எல்லா மதங்களில் இருந்தும் சாராம்சமானவை உறிஞ்சப்படுகின்றன இந்து சிந்தனையாளர்களான நாராயணகுரு, கிறிஸ்தவ சேவையாளரான சாமர்வெல் ஆகியோரை அவர்கள் தங்கள் காணிக்காரர் மதத்தின் சிந்தனையாளர்களும் ஞானிகளுமாக ஆக்குகிறார்கள். காணிமதம் அரசுக்கு மிக உடன்பாடானதாக இருக்கிறது, அரசுக்கு பயன்படுகிறது. ஆகவே அரசு மேலும் மேலும் அதை ஆதரிக்கிறது.

காணிமதத்தவர் சிவன், விஷ்ணு ,ஏசு உட்பட்ட தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். சிவன் குளிகனின் இன்னொரு வடிவம் ஆகிறார். (மெய்யாகவே இரு தெய்வங்கள் நடுவே ஒற்றுமைகள் உண்டு) விஷ்ணு கடுத்தா ஆக மாறுகிறார்.அனந்தபத்மநாபசாமி ஆலயமும் பீமாப்பள்ளி பெரிய மசூதியும் சவேரியார் கோயிலும் புதிய வழிபாட்டுமுறையின் ஆலயங்களாக உருமாற்றப்படுகின்றன. அனந்தபத்மநாப சாமியின் பூசைமுறைகள், இஸ்லாமியத் தொழுகைமுறை, கிறிஸ்தவர்களின் ஆராதனை முறை எல்லாமே காணிமதத்தில் இடம்பெறுகிறது.

காணிமதத்திற்குள் வந்து சேர்ந்த தெய்வங்களை அவர்கள் ஒற்றை அமைப்பாக ஆக்கவேண்டியிருக்கிறது. ஆகவே ஏராளமான கதைகள் உருவாகின்றன. அந்தத் தெய்வங்கள் எல்லாம் ஒரே கதைப்பரப்பில் இணைகின்றன. ஏராளமான கற்பனை வரலாறுகளும் உருவாகின்றன. அவை இதிகாசங்கள் எனப்படுகின்றன. அத்துடன் இந்த தெய்வங்களை வழிபடும் முறையை ஒழுங்குசெய்து ஆகமங்களையும் உருவாக்கவேண்டியிருக்கிறது.

இவ்வாறாக ஐநூறாண்டுக்காலம் செல்கிறது. குமரிமாவட்டத்திலுள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் வலுவிழந்து குறுகிய வட்டத்துக்குள் ஒடுங்குகின்றன. அவற்றுக்கு அரசு ஆதர்வு இல்லை, ஆகவே மக்களும் மெல்லமெல்ல அவற்றை கைவிடுகிறார்கள். மேலும் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் கூறுகள் புதிய காணிமதத்தில் இருப்பதனால் அந்தந்த மதத்தவர்களுக்கு காணி மதத்தை ஏற்க எந்த தடையும் இல்லை

காணிமதம் ஒரு தொகுப்புமதம் ஆகையால் அது பிரிந்துகொண்டே இருக்கிறது. காணிமதத்துக்குள் உள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சைவர்களும் வைணவர்களும் தனித்தனி துணைமதங்களாகவே நீடிக்கிறார்கள். ஆகவே நூற்றாண்டுகளுக்குப் பின் அப்பிரிவுகளை ஒருங்கிணைக்க தத்துவஞானிகள் முயல்கிறார்கள். அவை தனித்தனியான சிந்தனைப்பள்ளிகள் ஆகின்றன. தொல்நூல்களுக்கு ஒவ்வொரு சிந்தனைப்பள்ளியும் வெவ்வேறு கோணங்களில் உரைகள் எழுதுகிறது. உரை மரபு முக்கியமான அறிவுச்செயல்பாடாக ஆகிறது

மேலும் ஐநூறாண்டுகளுக்கு பின் காணிமதத்தின் வரலாறு எழுதப்படுகிறது. அதை ஒற்றைமதமாக, ஒரே கட்டமைப்பாக அப்போது சித்தரித்துக் கொள்கிறார்கள். அந்த வரலாற்றை எழுதும்போது காணிமதம் இந்து, கிறிஸ்தவ, பௌத்த மதங்களை விட மிகமிகத் தொன்மையானது என்று ஆய்வாளர் சொல்கிறார்கள். அவர்கள் குளிகனும் கடுத்தாவும் தோன்றிய காட்டுவாழ்க்கை காலத்தில் இருந்து காணிமதத்தின் வரலாற்றை ஆரம்பிக்கிறார்கள். காணிகளின் தொன்மையான பாடல்களின் காலத்தைக்கொண்டு வரலாற்றுக்கட்டங்களை கட்டமைக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் காணிமதத்துடன் மோதி, விவாதித்து வளர்ந்தவை என்கிறார்கள். காணி மதத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் சாயல்கள் இந்த மதங்களால் காணிமதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை என விளக்குகிறார்கள்.

தொன்மையானது என்னும் பொருளில் காணிமதத்தை ’என்றுமுள்ளது’ என பெயரிட்டு அழைக்கிறார்கள். அனாதியானது, முதல்முடிவற்றது என்று வர்ணிக்கிறார்கள். இயற்கையாகவே உருவானது என்கிறார்கள். இது குமரிமாவட்டத்தில் உருவானதனால் இதை வெளியாட்கள் குமரிமதம் என்கிறார்கள்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து என்றுமுள்ளது எனப்படும் காணிமதத்தின் ஒற்றைப்படைத் தன்மையை மறுக்கும் ஆய்வாளர்கள் வருகிறார்கள். அது தொன்மையான மரபுகளும் பிற்கால மதங்களின் சிந்தனைகளும் அம்மதங்களின் அமைப்புகளும் இணைந்து உருவானது என வாதிடுகிறார்கள். அந்த இணைப்பு நிகழ்ந்த காலகட்டமாகிய பொயு 2022 ஆம் ஆண்டையே அந்த மதத்தின் தோற்றம் என்று சொல்லவேண்டும் என்றும் காலத்தால் இஸ்லாமிய கிறிஸ்தவ இந்து மதங்கள் தொன்மையானவை என்றும் வாதிடுகிறார்கள்.

காணி மக்களின் சாட்டு பாட்டு. தெய்வங்களை இறங்கி பூஜைக்களத்தில் அமரச்செய்யும் பாடல். 90 சதவீதம் வேத மந்திரங்களை போன்ற பாடல். வேதவேள்வி போன்ற சடங்கு

காணிமதம் என்னுமிடத்தில் இதற்குள் இந்து மதத்தை போட்டிருப்பீர்கள். இந்துமதத்தின் மூலநூல்களான வேதங்களும் அவ்வேதங்களின் தெய்வங்களும் காணிக்காரர்களின் தெய்வங்கள் மற்றும் பாடல்கள் போலவே பழைமையானவை. வேதங்களும் துணைவேதங்களும் பொதுயுகத்திற்கு முன் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே அறிஞர்களால் பயிலப்பட்டும் தொகுக்கப்பட்டும் வந்தன. ஆட்சியாளர்கள் அந்த மந்திரங்களை சடங்குகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஏனென்றால் அவை தொல்மொழியில் அமைந்திருந்தன. அந்த தெய்வங்கள் ஆட்சியாளர்களால் வழிபடப்பட்டும் வந்தன. வெளியே மக்கள் அவர்களின் குடித்தெய்வங்கள், குலத்தெய்வங்கள், மூத்தார்தெய்வங்கள், நீத்தார்தெய்வங்களை வழிபட்டபடி ஒருங்கிணைக்கப்படாமல் விரிந்து கிடந்தனர்.

அப்போது சமண, பௌத்த மதங்கள் உருவாயின. அந்த மதங்கள் அழுத்தமான ‘மதப்பரப்புநர் அமைப்பு’ (மிஷனரி) கொண்டிருந்தன. அவர்கள் குடித்தெய்வ வழிபாடு, நீத்தார் வழிபாடு முதலியவற்றைச் செய்து வந்த மக்களை ஈர்த்து ஒருங்கிணைத்து வலுவான அமைப்புகளாக தங்கள் மதங்களை ஆக்கினர். சமண, பௌத்த மதங்கள் மக்களுக்கு மையத்தெய்வங்களையும், தத்துவங்களையும், தொகுக்கப்பட்ட அறங்களையும் அளித்தன. அதற்காக கல்விநிலையங்கள், அறநிலையங்களை சமண, பௌத்த மதங்கள் அமைத்தன. மக்கள் மொழியை இலக்கணம் அமைத்தும், நெறிகள் அமைத்தும், தொல்பாடல்களை தொகுத்தும் செறிவுறச்செய்தன.

தொடக்க காலகட்டத்தில் அரசர்களின் வழிபாட்டுமுறைகளுக்கும் பௌத்த சமண மதங்களுக்கும் பூசல்கள் நிகழ்ந்தன. பின்னர் அரசர்கள் சமண பௌத்த மதங்களை ஏற்று அவற்றை பரப்பலாயினர். ஏனென்றால் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவது அரசர்களுக்கு நல்லது. அதனால் வலுவான சமூகமும் விளைவாக சீரான வரிவசூலும் உருவாகும். ஆனால் காலப்போக்கில் சமண பௌத்த மதங்கள் அரசர்களை கட்டுப்படுத்தலாயின. ஏனென்றால்  அம்மதங்களின் நிர்வாக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டவை, வலுவானவை. அதை அரசர்கள் விரும்பவில்லை.

இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பழைய வேதவழிபாட்டு முறையைச் சேர்ந்தவர்கள் சமணம், பௌத்த மதங்களில் இருந்து தத்துவங்கள், வழிபாட்டு மரபுகள், தெய்வங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் வேதமரபை புதிய மதமாக கட்டமைக்கத் தொடங்கினர். அதற்காக ஏராளமான நூல்களை உருவாக்கினர். பொயு நான்காம் நூற்றாண்டில், குப்தர்களின் காலகட்டத்தில், அந்த புதிய மதம் அரசாங்கத்தின் ஏற்பைப் பெற்றது. அரசர்கள் மைய நிர்வாக அமைப்பு இல்லாத அந்த மதத்தை விரும்பினர்

அடுத்த ஐநூறாண்டுகளுக்குள் அந்த புதிய மதம் பெருவளர்ச்சிஅடைந்தது. அதை வைதிக மதம் அல்லது வேதம்சார் மதம் எனலாம். ஏனென்றால் அதன் மையம் வேதங்களே. முன்பு வேதமரபுக்கு பெரிய ஆலயக்கட்டிடங்களை அமைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வெறும் சடங்குகளே இருந்தன. உருவவழிபாடும் அவர்களிடம் வலுவாக இல்லை. தற்காலிக உருவங்களைச் செய்து வழிபடும் மரபே இருந்தது. புதிய வைதிகமதம் பௌத்த சமண ஆலயங்களுடன் அவர்களின் தெய்வங்களையும் உள்ளிழுத்துக்கொண்டது. உருமாற்றி தங்கள் தெய்வங்களாக ஆக்கியது. தங்கள் தெய்வங்களை பௌத்த சமண தெய்வங்களின் வடிவுக்கு ஆக்கிக் கொண்டது. பௌத்த சமண மதங்கள் நிறுவிய பண்டிகைகளையும் விழாக்களையும் எடுத்துக்கொண்டது.

வைதிகமதத்தின் தொல்சடங்குளையும் உள்ளிழுத்துக்கொண்ட மரபுகளையும் இணைக்கும்பொருட்டு பலநூறு நூல்கள் எழுதப்பட்டன. புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. மாபெரும் அறிவியக்கப்பணி ஒன்று நிகழ்ந்தது. விளைவாக வேதமதம் வலுவான தத்துவ மையம் கொண்டதாக ஆகியது. அந்த தத்துவமே பிரம்மம் என்னும் கொள்கை. அது தொல்நூல்களில் இருந்து பின்னாளில் உருவாக்கப்பட்டது. அதன்பின் அந்த தத்துவத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு வழிபாட்டுமுறைகளை ஒருங்கிணைக்கலாயினர். சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம் என்னும் ஆறு வழிபாட்டுமுறைகள் அதனுள் அடங்கின. இந்த ஒருங்கிணைப்பு எட்டாம் நூற்றண்டில் சங்கரரால் செய்யப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் பின்னர் அப்பிரிவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் உருவாயின. அதற்கான தத்துவ ஞானிகள் வந்தனர். உரைமரபுகள் உருவாயின. இது பிற்கால வேதாந்தங்களின் காலம். கூடவே ஒவ்வொரு வழிபாட்டுப்பிரிவிலும் கவிஞர்கள் மற்றும் பெரும்பக்தர்கள் உருவாகி அந்த வழிபாட்டுமரபுகளை உள்மதங்களாக பெருவளர்ச்சி அடையச்செய்தனர். இது பக்திகாலகட்டம் எனப்பட்டது

பதினெட்டாம் நூற்றாண்டில் இந்துமறுமலர்ச்சி உருவாகியது. சனாதனம் (முதலற்றது) என்று அழைக்கப்பட்ட இந்த மதத்தை சிந்துவுடன் தொடர்புபடுத்தி பாரசீகர் போட்ட இந்து என்ற பெயர் பொதுப்பெயராகியது. இந்துமதத்தின் தொன்மை வேதங்களில் இருந்து தொடங்கப்பட்டது. இந்துமதத்திலுள்ள பௌத்த சமண மடாலயங்களின் சாயல், இந்து தெய்வங்களிலுள்ள பௌத்த சமணச் சாயல்கள் இந்து மதத்தில் இருந்து சமண பௌத்த மதங்களுக்குச் சென்றவை என்று சொல்லப்பட்டன.

குறிப்பாக விஷ்ணுவின் நின்ற அமர்ந்த கிடந்த கோலங்கள் புத்தருக்குரியவை. புத்தருக்கு முன்பு அப்படிப்பட்ட விஷ்ணுசிலைகள் கிடைத்ததில்லை. இந்து தெய்வங்களின் யோக அமர்வு நிலைச் சிலைகள் சமண, பௌத்தமரபில் இருந்து பெறப்பட்டவை. இந்து ஆலயங்களின் கட்டிட முறை பௌத்த குடைவரைகளில் இருந்து உருவானது. அதற்கு முன்பு ஆலயங்கள் இருந்தமைக்கான சான்றுகளே இல்லை. இந்திரன் முதலிய தெய்வங்களேகூட பௌத்தர்களுக்கும் உரியவையே. வைதிகம் கொண்டிருக்கும் பெரும்பாலான புராணங்கள், வழிபாட்டுமுறைகள் பௌத்த மதம் முன்வைத்தவற்றின் திரிபுநிலைகளே.

ஆகவே இந்துமதத்தின் தோற்றத்தை குப்தர் காலத்தில் இருந்தே கணக்கிடவேண்டும். தொன்மையான வேதங்கள் என்று அவர்கள் சொல்வன அப்போதுதான் தொகுக்கப்பட்டன. மற்றநூல்கள் அதன்பின் எழுதப்பட்டன. அவற்றுக்கு தொன்மை அளிக்கப்படுகிறது.சமண பௌத்த மதங்களே இந்தியாவின் தொல்மதங்கள். அதற்கு முன்பு இருந்தவை வெறும் தொல்குடி மரபுகளும் அவர்களின் வழிபாட்டுமுறைகளும் மட்டுமே. இந்துமதத்தின் பண்பாட்டு அடித்தளம், தத்துவ அடித்தளம் சமண பௌத்த மதங்களால் கட்டமைக்கப்பட்டது.

இதுதான் பூர்வபௌத்தர் தரப்பு சொல்லும்  வரலாற்றுச் சித்திரம். இச்சித்திரத்தை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பது உங்கள் நிலைபாடு. அதற்கு நீங்கள் கற்றுத் தெளிவடைய வேண்டும். ஆனால் இது முற்றிலும் தர்க்கமற்ற உளறலோ அபத்தமோ அல்ல. முகநூலில் ‘சவுண்டு’ விட்டு ஒழித்துக்கட்டிவிடக்கூடியதும் அல்ல.

இந்தச் சித்திரத்துடன் அயோத்திதாசர் சொல்வது சரியாக இணைகிறது. ஆனால் இச்சித்திரம் நவீன வரலாற்றாய்வில் உருவாவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்னரே அயோத்திதாசர் இதைச் சொல்லியிருக்கிறார். அதுவும் தொன்மையான வாய்மொழி மரபு மற்றும் தன் குடிமரபில் இருந்து இதைச் சொல்லியிருக்கிறார். அவர் பறையர்களில் வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர். பல்லவர் காலகட்டம் வரை தமிழக ஆலயங்களில் பூசகர்களாக வள்ளுவர்கள் இருந்தனர். அதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது.

வள்ளுவராகிய அயோத்திதாசர் வள்ளுவர்கள் செய்துவந்த மந்திரவாதச் சடங்குகள் மற்றும் பல மருத்துவமுறைகளை செய்துவந்தவர். அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக்குச் சமானமாகவே தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரிடம் இன்னொரு வரலாறு வாய்மொழியாக இருந்து வந்துள்ளது. நவீன வரலாற்றெழுத்து அவற்றையும் கருத்தில்கொண்டே எழுதப்படுகிறது. ஆகவே அவருடைய நூல்களுக்கு வரலாற்றாய்வாளர்கள் கருத்தில்கொள்வதற்கான அடிப்படை உள்ளது.

இக்காரணத்தால்தான் அயோத்திதாசர் முதன்மையானவர் என நான் எண்ணுகிறேன். இன்று உருவாகி வரும் ஒரு மாற்றுவரலாற்றுச் சித்திரத்தை நூறாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தவர்.அதன் மூலநூல்களாக அமையும் சில படைப்புக்களை உருவாக்கியவர்.

ஒரு காலகட்டத்தின் பொதுச்சிந்தனை என்பது மிகப்பெரிய ஒரு கட்டுமானம். ஒரு கோட்டைபோல. பல்லாயிரம்பேர் சேர்ந்து உருவாக்கியது அது. அதில் முட்டினால் சாமானியனின் மண்டைதான் உடையும். அத்தனை தர்க்கபூர்வமானது அது. அதில் ஒரு பெரிய விரிசலை உருவாக்கி புதுவழிக்கான வாய்ப்பை உருவாக்குபவர்தான் முதன்மைச் சிந்தனையாளர். அயோத்திதாசர் அவ்வகைப்பட்டவர். நம் வரலாற்று உருவகம் ஏறத்தாழ முழுமையாகிவிட்ட ஒன்று. அதில் அயோத்திதாசர் உருவாக்கும் உடைவு என்பது மிகமுக்கியமான ஒரு சிந்தனை நிகழ்வு

ஆனால் முன்னோடி என்பதனாலேயே அவர் முழுமையான தர்க்கத்துடன் பேசமுடியாது. ஏனென்றால் அவர் தனக்கு முன்னரே பலர் உருவாக்கிய ஒரு தர்க்கத்தின் தொடர்ச்சியாகச் செயல்படவில்லை. அவர் புதிய ஒரு பார்வையை முன்வைக்கிறார். ஆகவே அவர் அதை ஒரு உள்ளுணர்வு சார்ந்த தரிசனமாக, ஒரு மாற்றுத்தர்க்கமாகவே முன்வைக்க முடியும். அவருடைய வழிவந்தவர்களே அவரை மேலெடுத்துச் சென்று அந்தக் கோணத்தை முழுமைசெய்வார்கள். விரிசலை பாதையாக்குவார்கள்.

முன்னோடிகள் கொஞ்சம் சமநிலையற்றவர்களாக, பொதுப்புத்திப் பார்வையில் கொஞ்சம் மரை கழன்றவர்களாகவே தெரிவார்கள். காந்தி அத்தகையவர். நான் சுட்டிக்காட்டும் முதற்சிந்தனையாளர் அனைவருமே அப்படிப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படையான பார்வையை விரிவாக்குபவர்களுக்கே அவர்கள் திறந்து அளித்த வழியின் முக்கியத்துவம் தெரியும்.

பொதுப்புத்தி அவர்களை நோக்கி ஏளனம் செய்வதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சிந்திப்பவர்கள், குறிப்பாக இலக்கியவாதிகள், எல்லா ஊடுபாதைகளையும் உடைவுகளையும் புரிந்துகொள்ள முயல்பவர்களாகவே இருக்கவேண்டும். சிலபெண்களுக்கு ஒரு உளச்சிக்கல் உண்டு. எங்காவது எவராவது குரவை இட்டால் தாங்களும் கட்டுப்படுத்த முடியாமல் குரவையிட்டுவிடுவார்கள். அந்த மனநிலை இலக்கியவாதிகளிடம் இருக்கலாகாது.

கடைசியாக, நான் அயோத்திதாசரை ஏற்கிறேனா? இல்லை. பூர்வபௌத்த கொள்கையை ஏற்கிறேனா? இல்லை. எனக்கு அதற்கான வாசிப்பும், அதை வழிநடத்தும் வரலாற்றாய்வாளர்களும் உண்டு. என் மெய்யியல்மரபு வேதாந்தம். என் குருமரபு நாராயணகுரு முதல் நித்யா வரை.

ஆனால் மாற்றுச்சிந்தனைகளை மட்டம்தட்டக்கூடாது, புரிந்துகொள்ள வேண்டும் என நான் அறிவேன். இன்றைய வரலாற்றாய்வு என்பது ஒற்றைப்படை வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதல்ல, வரலாற்று மொழிபுகள் நடுவே ஒரு முரணியக்கமாக வரலாற்றைப் புரிந்துகொள்வது என தெரிந்து வைத்திருக்கிறேன். எல்லா வரலாற்று மொழிபுகளுக்கும் இடமிருக்கும் பெரிய களம் அது என தெளிவுகொண்டிருக்கிறேன். ஆகவே அயோத்திதாசர் என் பெருமதிப்புக்குரிய முன்னோடி பேரறிஞர்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2022 10:35

மலேசியா நவீனின் சிகண்டி பற்றி…

சிகண்டி வாங்க

அன்புள்ள ஜெ,

பெருநகர வாழ்க்கை என்பது பலதரப்பட்ட சாத்தியங்களைக் கொண்டது. தமிழ்நாட்டில் சென்னையையும், மதுரையையும் பார்த்தாலே தெரியும் அங்கே எத்தனை விதமான வாழ்க்கை சாத்தியம் என்று. மதுரையில் கோரிப்பாளையத்திற்கும், பாண்டி கோவிலுக்கும் இடையே ஐந்து கி.மீ தூரம் தான் ஆனால் இரு இடத்திற்குமான வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறிவிடும். சென்னை என்னும் பெருநகரத்தில் எத்தனை விதமான வாழ்க்கையை நாம் பார்க்கலாம். ஆனால் தமிழ் நாவல்களில் இந்த வாழ்க்கையின் பத்து சதவிகிதம் கூட பதிவு செய்யப்படவில்லையோ எனத் தோன்றுகிறது.

அதற்கு அடுத்த கட்டம் என்பது நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகம் பற்றிச் சொல்வது. நான் முன்னர் சொன்னது போலவே இவ்வாழ்க்கை பெருநகர சூழலில் தான் மிகுதி. இந்த வகை பெரிதும் அறியப்படாத வாழ்வை ஒட்டி வந்த நாவல் என்ற முதல் தகுதியே ம.நவீனின் சிகண்டி நாவலை வாங்கியதும் வாசிக்கத் தூண்டியது.

”உலகைப்பற்றிய நம்பிக்கைகள் உடைவதன் வழியாகவே சிறுவர்கள் ஆண்மகனாகிறார்கள்” என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அந்த வரியில் இருந்து நவீனின் சிகண்டி நாவல் எனக்கு விரிகிறது. தீபன் என்னும் சிறுவன் தன்னை நாவல் முழுதும் ஆண்மகனாக நிறுவ முயல்கிறான். அவன் ஆண்மகனாக தன்னை நிறுவ முயலுவதே இந்நாவல். அவன் மேல் காதல் கொண்டிருக்கும் சராவினிடத்தில், காராட் வீதியில் தனக்கு அண்ணனாகும் காசியிடம், அவர்கள் கேங்கின் தலைவனான ஷாவிடம், சராவின் தாயான ஈபுவிடம் என இருபது வயதை கடந்த தீபன் தன்னை ஆண்மகனாக காட்ட முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான். மாறாக கோலாம்பூரில் அவன் வசிக்கும் அவனது மாமா வீட்டில் இருக்கும் அவன் மாமன் மகனான கண்ணனிடம் உள்ள சிறுவனை நேசிக்கிறான். கண்ணனிடம் விலகமுடியாத ஒரு ஈர்ப்பு அவனுக்கு உருவாகிறது அதே சமயத்தில் அதனை மீறி போக ஒவ்வொரு வாய்ப்பாக தேடிக் கொண்டிருக்கிறான்.

இந்நாவலில் இரண்டு இடம் வருகிறது ஒன்று கண்ணன் ஆசையாய் வளர்க்கும் பூனையை தீபன் வன்மமாக கொல்லும் இடம். அந்த பூனை இறந்ததற்கு பின்பான காசியை பார்க்கிறான், அதன்பின் அந்த வன்மத்தை அவனால் மீட்டெடுக்க முடியவில்லை. காசி அவனை மர்மமான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கே உள்ள குரங்கை கொல்வதன் மூலம் தீபனிடம் உள்ள சிறுவனை கொல்ல முயற்சிக்கிறான். தீபனால் அதனை தன்னியல்பாக செய்ய இயலவில்லை. தீபனின் பார்வையில் இந்த நாவலைப் பார்க்கும் போது அவனுள் இருக்கும் இந்த இரண்டிற்குமான ஊடாட்டம் தான் இந்த நாவல் என ஒரு வாசிப்பில் சொல்லத் தோன்றுகிறது.

இதனை சொன்னவுடன் மறுக்கவும் தோன்றுகிறது. நவீன் நாவலை இந்த ஒற்றை புள்ளியில் நிறுத்தவில்லை. இதில் வரும் தீபனின் கதாபாத்திரத்தை நவீன் “ராசன்” என்னும் சிறுகதையில் முன்னரே முயற்சித்துவிட்டார். இந்நாவலை அந்த தொடக்கப்புள்ளியில் இருந்து விரிக்கிறார். நான் முன்னர் சொன்னது போல் இந்நாவல் நாம் பெரிதும் அறியாத கோலாலம்பூரின் காராட் வீதி, சௌவாட் என்னும் குட்டி நகர உருவாக்கம், அங்கே இயங்கும் நிழலுலக வாழ்க்கை என விரிகிறது.

அதிலிருந்து நாவலின் புதிய மையம் உருவாகிவருகிறது. நாவலின் மையம் தீபனிடமிருந்து சராவிடம் நகர்கிறது. சரா என்னும் திருநங்கை. அவள் தன்னை எவ்விதம் ஒரு பெண்ணாக உணர்கிறாள். தன்னை எப்படி ஒரு தேவதையாக மாற்றுகிறாள் என்பதே இந்நாவலில் முன்னர் எதிலும் சொல்லப்படாத புதியது. சரா போன்ற தேவதை திருநங்கை கதாப்பாத்திரமே தமிழ் இலக்கியத்திற்கு புதிது.

சரா கதாப்பாத்திரத்தை நிறுவும் ஒரு இடம் நாவலில் வருகிறது. அவளை எல்லோர் முன்னும் நாட்டியம் ஆடும்படி வற்புறுத்துகின்றனர். அவள் ஆட மறுக்கிறாள். அவளிடம் ஏற்படும் மறுப்பிலிருந்து அவளுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. அவள் தன் பிறப்பின் தேவை என்ன என்று அறிகிறாள். தான் ஆடுவது இனி தெய்வத்திற்காக மட்டுமே என்னும் உறுதியை எடுக்கிறாள். எந்நிலையிலும் தெய்வத்தை தவிர யாருக்காகவும் ஆடமாட்டான் என முடிவு செய்கிறாள். அதற்காகவே தெய்வ நடனமான அப்சர நடனத்தை தேர்வு செய்கிறாள். அந்த நடனத்தின் மூலம் தன்னை ஒரு அப்சராவாக உணரத் தொடங்குகிறாள். ஒரு முறை தனி அறைக்குள் தீபனை அழைத்துச் சென்று அங்கே இருக்கும் கடவுளின் முன் ஆடத் தொடங்குகிறாள். அவள் ஆடத் தொடங்கியதும் தீபனுக்கு அவள் மேல் வெறுப்பும் பிரியமும் என மாறி மாறி வருகிறது. அந்த இரண்டுங்கட்டான் நிலையை தவிர்க்க வேண்டி அவன் அந்த அறையிலிருந்து வெளியேறுகிறான். அவள் உலகில் பெரிதும் நேசிக்கும் தீபன் அவள் நடனத்தை காணாது சென்றது கூட அவளுக்கு ஒரு பொருட்டாகவில்லை. அப்போது கூட அவள் நிறுத்தாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள்.

சராவால் எந்த ஒரு தேவையற்ற பொருளையும் உதாசீனம் செய்ய இயலவில்லை. அதனைக் கொண்டு ஏதாவது தேவையான பொருளை உருவாக்குகிறாள். ஏனென்றால் அவளே அவள் குடும்பத்தால் தேவையில்லை என உதாசீனம் செய்யப்பட்டவள். அவளது உடலியல் மாற்றத்திற்காக அவள் குடும்பம் அவளை வேண்டாமென தூக்கி எறிகின்றனர். அங்கிருந்து தன்னை ஒட்டவைத்துக் கொண்டு புது பொருளாக மாறுகிறாள் சரா. அவளுக்கான புது வாழ்க்கையை உருவாக்குகிறாள். அவளுக்கு பேரன்னையாக ஈபு வருகிறார். அவளை பாதுகாக்கும் அன்னையாக நிஷாம்மா வருகிறாள். ஒரு கணம் எனினும் தீபன் சரா பெண்ணாக எண்ணி அவள் மேல் காதல் கொள்கிறான். அந்த ஒரு கண காதலுக்காகவே சரா அவனுக்கு தன் முழு வாழ்க்கையே கொடுக்கிறாள்.

இந்த இரண்டு சம்பவங்களையும் கொண்டு நான் இந்த நாவலை தொகுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். இந்த நாவல் எனக்கு என்ன தந்தது என்பதையும் கூட.

பொதுவாக நம்மிடம் திருநங்கையரை குறித்த சித்திரம் என்பது அவர்களை ஒரு மூன்றாம் பாலினத்தவர் என ஒதுக்கி வைப்பது. அவர்கள் வாழ்வென்பது நம் கண்ணுக்கு தெரியாத நம் எல்லைக்குள் வராத ஒரு நிழலுலக வாழ்க்கையே. அந்த வாழ்க்கையை அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் எப்படி கழிக்கிறார்கள் என்பதை நாம் எண்ண முற்படுவதில்லை. முடிந்த அளவு அவர்களை நாம் தொலைவில் விலக்கியே வைத்துள்ளோம். நான் கோயம்புத்தூரில் காலேஜ் படிக்கும் போது ஒரு நிகழ்வு, நான் காந்திபுரத்திலிருந்து கணபதிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த சிக்னலில் வந்த திருநங்கையர் இருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டதும் என் கை தன்னியல்பாக கார் கண்ணாடியை மூடியது. அவர்கள் என்னை சட்டை செய்யாமல் கடந்தனர். அதன் பின் பல முறை நான் ஏன் அப்படி செய்தேன் என யோசித்துப் பார்த்திருக்கிறேன். அந்த செயல் இந்த சமூகம் எனக்கு சொல்லி அனுப்பிய செய்தி அந்த தருணத்தில் நான் அப்படி தான் செயல்பட வேண்டுமென என் மூளைக்கு இந்த சமூகம் இட்ட கட்டளை அது.

ஜாக் லாண்டனின் “தீ வளர்க” என்னும் சிறுகதையில் எஜமானும் அவனது நாயும் பனியில் சிக்கிக் கொள்வர். அதிலிருந்து அவனது நாய் மட்டும் தப்பி வரும். கதையின் முடிவில் அதற்கு முன் பனி பிரதேசத்தையே பார்த்திராத அந்த நாய் எப்படி தப்பி வந்தது என ஆசிரியர் சொல்லியிருப்பார். அந்த நாய்க்கு இப்படி தான் தப்ப வேண்டுமென மூளையில் அதன் முன்னோர்களால் இத்தனை ஆண்டு காலம் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. அதே போல் தான் அன்று என் செயலும் என இன்று நினைக்கிறேன். உலகை முழுதாக உணர்ந்திடாத அதனை உணரத் துடிக்கும் ஒரு பதினெட்டு பத்தொன்பது வயது சிறுவனை அப்படி செய்ய தூண்டியது எது?

இந்த பொது சித்திரத்திலிருந்து இலக்கியமும், தொன்மமும் மூன்றாம் பாலினத்தவரை நமக்கு எப்படி காட்டுகிறது என்பதை யோசிக்கிறேன். முதற் தெய்வங்களான மும்மூர்த்திகளும் அவர்களுள் ஒரு பெண் வடிவை தாங்கியே நிற்கின்றனர். சிவன் அர்த்தநாரியாக பார்வதியை தன்னுள் தாங்கி நிற்கிறார். விஷ்ணு தன்னுள் மோகினி அவதாரத்தை தாங்கி நிற்கிறார். பிரம்மா தன்னுள் கலைமகளைக் கொண்டிருக்கிறார். இதன் குறியீடு என்ன?

நம் நிகழ்த்துக் கலையில் தெருக்கூத்தாகட்டும், கணியான் கூத்தாகட்டும் பெண் வேடத்தை ஆணே போடுகின்றனர். கணியான் கூத்தில் நான் பார்த்த தங்கராசு குழுவில் ஆடிய இருவரிடம் அவர்கள் ஆடும்போது பல முறை அவர்களை பெண்ணெனவே கண்டேன். அந்த ஆணிலிருந்து ஒரு பெண் எப்படி வெளியில் வருகிறாள்? வெறும் அலங்காரம் மூலம் அல்லது நடப்பு மூலம் அதனை நிகழ்த்துவது எளிதல்ல. அது சாத்தியம் என்றால் அந்த குழுவிலேயே யார் வேண்டுமானாலும் அப்படி வேஷம் கட்டலாமே ஆனால் அவர்களுள் இன்னார் தான் இந்த வேஷம் கட்ட வேண்டுமென்ற நியதி உள்ளது. அது எப்படி நிகழ்கிறது, ஒரு ஆண் தன்னுள் உள்ள பெண்ணை உணர வேண்டும் அதன்பின்னே அவள் அவனிடம் வெளிப்படுகிறாள்.

வெண்முரசில் ஒரு இடம் வரும் துரியோதனை பீமன் தாய் கரடியிடமிருந்து காப்பாற்றுவான். பெருவீரனான தான் தன் தம்பிகள் முன் காப்பாற்றப்பட்டேன் என்ற அவமானத்தில் அங்கிருந்து மறைந்து ரௌப்பயை சுனையில் இருக்கிறான். அப்போது அந்த சுனையில் ஸ்தூணகர்ணன் துரியோதனனை நீரில் அவனை தோளைப் பார்க்க சொல்கிறான். துரியோதனன் அதனைப் பார்க்கும் போது உள்ளே சுயோதனை தெரிகிறாள். அக்கணம் சுயோதனையை அந்த சுனையில் விட்டு அங்கிருந்து துரியோதனனான வெளியேறுகிறான்.

யோசித்துப் பார்த்தால் இலக்கியமும், பண்பாடும், கலைகளும் நமக்கு சொல்வது ஒன்றை தான் ஒரு ஆண் தன்னுள் சுமந்தலைவது ஒரு பெண்ணை தான். அது ஒரு தெய்வீக நிலையாகவே நாம் எடுத்துக் கொள்கிறோம். அதுவே ஒரு படி மேலே சென்று ஒரு ஆணின் உடலியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு அவன் ஒரு அவளை தன்னுள் சூடிக் கொள்ளும்போது நம்முள் ஏன் ஒரு விலக்கம் ஏற்படுகிறது. அத்தகைய விலக்கம் ஏதும் இல்லாமல் நாம் அந்த அர்த்தநாரீஸ்வரனை இரு கரம் கொண்டு வணங்க முடிகிறதே. கணியான் கூத்தில் ஆணில் வெளிப்படும் பெண்ணை எந்த விலக்கமும் இல்லாமல் கண்டு ரசிக்க இயல்கிறதே.

ஆனால் நம்மைப் போல் ஓர் உடலில் இரத்தமும் சதையுமாக ஒருவர் வந்து நிற்கும் போது நமக்கு ஏன் ஒரு விலக்கம் வருகிறது?

இவை அனைத்தையும் நாம் உசாவிப் பார்க்க ஒரு பக்குவம் தேவையாகிறது. அந்த பக்குவத்தையே இலக்கியம் நமக்கு சமைத்து தருகிறது. நவீனின் சிகண்டி என்னை இந்த புள்ளியிலிருந்து தான் யோசிக்க தூண்டியது. இந்நாவலின் இறுதியில் ஒரு இடம் வருகிறது. சிகண்டிக்கு வைட் கோப்ராவிற்கும் இடையே சண்டை நிகழ்கிறது. அப்போது சிகண்டி வைட் கோப்ராவின் தலையில் அடித்து ஒன்று சொல்கிறாள், “இது ஒங்களுக்கு பொம்பள சாமி… எங்க ஊருல ஆம்பள் சாமி… ஏண்டா ஆம்பள சாமி பொம்பள சாமியா  மாறலாம்… ஆனா நானெல்லாம் ஒன்னோட ரோட்டுல இருக்குறது அசிங்கம்…”

மலேசியாவிலும் சீன கடவுளான ”குவான் – யின்” என்னும் பெண் தெய்வம் இருக்கிறது. பகுச்சரா மாதா என்னும் திருநங்கை கடவுள் சேவலின் மேல் அமர்ந்து சிகண்டியை காவல் காக்கிறாள்.

தீபனுக்கு பகுச்சரா மாதாவின் மேல் இருக்கும் பக்தியும், சராவின் மேல் இருக்கும் விலக்கமும் தான் நான் மேலே சொன்னது. அவனது நம்பிக்கைகள் உடையும் போது தான் அவன் ஆண்மகனாகிறான். அதிலிருந்தே அவனுக்கான ஒரு வாழ்க்கை தொடங்குகிறது.

இப்போது இந்த முப்பது வயதில் என்னால் அப்படி கார் கண்ணாடியை மேலே ஏற்ற முடியாது. அவர்களிடம் அன்பாக நாலு வார்த்தை என்னால் பேச இயலும். பொதுவில் ஏற்படும் கிண்டல்களையும் ஏலனத்தையும் கண்டால் கண்டிக்கக் கூட முடியும். எனக்கு இந்த பாதையை யோசிக்க இந்த பத்தாண்டில் இலக்கியமும், தொன்மமும் கற்று தந்தது. தீபனுக்கு அவனுள் இருக்கும் சிறுவனை உடைத்து வெளியெறியும் வன்மம் கற்று தந்தது.

இந்நாவல் தீபனின் நாவல் தான் அவன் பார்வையிலிருந்தே இந்நாவல் வளர்கிறது. அவன் லுனாஸிலிருந்து கோலாலம்பூரில் இருக்கும் மாமா வீட்டிற்கு வரும் சிறுவன். அந்த சிறுவன் தன்னுள் இருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகளாக உடைத்தெறிந்து எப்படி ஆண்மகனாகிறான் என்பதே சிகண்டி. அந்த தீபன் அவன் பயணத்தில் மற்றொரு பாதையாக சராவிடமிருந்து எப்படி பகுச்சரா மாதாவை நோக்கி செல்கிறான் என்பதையே நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நாவலை முடித்தபின் ஒவ்வொன்றாக மீட்டு பார்க்கும் போது தீபனின் பயணம் மேலும் மேலுமென விரிந்து அவன் சராவிலிருந்து பகுச்சரா மாதாவை எப்போது கண்டடைக்கிறான் என அவன் வளரும் சித்திரம் ஒவ்வொன்றாக மனதில் விரிகிறது.

சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் வெளிவந்த நாவல்களுள் இது சிறந்த நாவல் எனச் சொல்வேன். நவீன் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி,

நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2022 10:34

சடம் கடிதங்கள்-2

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

ஜடம் இக்கதையின் பல களங்கள் அதிர்ச்சி ஊட்டக் கூடியது. மிக தீவிரமான தத்துவார்த்த கனம் கொண்ட கதையை துப்பறியும் கதை பாணியில் மிக இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல் வழியாகவே கதையை கொண்டு செல்கிறது.முழுக்கமுழுக்க காட்டின் வர்ணையையே கதையை முன்னெடுத்துச் செல்கிறது. காட்சிகள் வழியாக வெளி வந்த போலீஸ்காரரரின் குணாதிசயம்தான் கதை.

சிஜ்ஜடம் என்பது சைவசித்தாந்தக்கருத்து. நாம் வெளியே பார்க்கும் ஒவ்வொரு பொருளும் இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒன்று ஜடம். இன்னொன்று நமது சித்தம். நாம் சித்தம் இல்லாமலிருந்தால் வெளியே உள்ள பொருள் ஜடமாக இருக்கும். நாம் சித்தம் கொள்கையில் அதுக்கு உயிரும் அர்த்தமும் வந்துவிடும். சிவம்தான் சித்தம். ஆகவே சிவம்தான் ஜடத்தை சிஜ்ஜடம் ஆக்குகிறது

இங்கே போலீஸ்காரர் தான் விரும்பும்படி பெண்களை ஆக்கி அதன்பின் உறவுகொள்பவர். அவர்களை உயிர்த்துடிப்பு கொள்ளவைக்க அவர்களை அவர் சித்திரவதையும் செய்ய்கிறார். அப்படிப்பட்டவர் முன் ஓர் அழகி. அவள் ஜடம். அவள்மேல் அவருடைய சித்தம் முட்டி மோதி அவளை உயிர்பெறச்செய்கிறது.

அந்தப் பிணம் பெண்ணாகும் தருணம்தான் கதையின் உச்சம். இதை முன்பு அருணகிரி ஸ்வாமிகள் சொல்வார்கள். வெள்ளெலும்பு ஜடம்தான். அதில் சிவஞானம் என்னும் திருட்டினை தொடும்போது அது பெண் ஆகிறது. திருட்டினை என்பது ஒரு மனிதனுக்குள் உள்ள உயிர்ச்சக்தி. அது அவனை விட்டு விலகினால் அவனும் பிணம்தான்.அந்த ஆசை அல்லது கிரியாசக்தி ஜடத்தை உயிர்கொள்ளவைக்கிறது.

சிறப்பான சிறுகதை.

ஆ. ஞானசம்பந்தன்

 

அன்புள்ள ஜெ

ஜடம் கதை படித்தேன். எந்த கிரியேட்டிவிட்டியும் இல்லாத போலீஸ்காரர் சுடலைப்பிள்ளை அந்தக்காட்டை பார்க்கிறர். அது வெறும் சடமாக இருக்கிறது. அவருக்கு அந்த காட்டின் அழகோ மகத்துவமோ தெரியவில்லை. அவருக்கு அது பொருட்கள் மட்டும்தான். ஆனால் அவருக்குள் காமம் இருக்கிறது. அந்தக்காமம் அழகுணர்வாக வெளிப்படுகிறது. அவர் அந்தப்பிணத்தை புணர்கிறார். அது உயிர் கொள்கிறது. அதேபோல அந்தக்காட்டையும் அவர் புணர்வார் என்றால் அது உயிர்கொள்ளும். அதன்பின் அவரால் அதிலிருந்து விடுபடவே முடியாது. அவர் அங்கேயேதான் இருப்பார்.

சைவமரபில் இந்தக்கதை வேறுசிலவகைகளில் சொல்லப்படுகிறது. இந்தப்பிரபஞ்சத்தை நாம் அறிவதென்பது புணர்தல்தான். சித்தம் ஜடத்தை புணர்வதுதான். சிஜ்ஜட சமன்வயம்தான் புணர்ச்சி. சித்தர்பாடல்களில் வரும் புணர்ச்சி என்பது இதுதான். புணர்ந்த நிலையில்தான் இங்கே எல்லாமே இருக்கும். ஞானானந்தசாமிகள் நாய்கள் போல புணர்ந்த நிலையில்தான் உலகத்திலுள்ள எல்லாமே உள்ளன என்று சொல்வார். சிவபோதம் என்பது அப்புணர்ச்சியை விலக்குவது. ஜடத்தில் இருந்து சித்தம் விலகும். ஜடம் மீண்டும் ஜடமாகும். சித்தம் சுத்தசிவமாக ஆகி சுடர்விடும்.

ஒரு சித்தர் உருவாவதன் கதை. அவருக்கு அந்த முதல் மண்டையடி கிடைத்த கணத்திலே கதை முடிந்துவிடுகிறது

செல்வக்குமரன் பழனிவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2022 10:33

மொழியாக்கம், கடிதம்

போரும் அமைதியும் மொழியாக்கங்கள்

அன்பின் ஜெ.

போரும் அமைதியும் மொழியாக்கங்கள் குறித்து திரு.சத்ய நாராயணன் அவர்களுடன் தாங்கள் நடத்திய உரையாடலை முன்னிட்டு என் அனுபவங்களை கூறலாம் என்றிருக்கிறேன். பொது முடக்கத்து முந்திய (2019-ஆம் ஆண்டின்) பெருநிகழ்வு அது. உலகம்  பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துக்கு வெகு விரைவில் போய்ச் சேர்ந்து, எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி வர வேண்டும். சுனில் கிருஷ்ணன்தான் இதற்கு தொடக்கப் புள்ளி போட்டது. சாந்தமூர்த்தி எல்லோரையும் முந்திக் கொண்டு அந்த ஆயிரம் மணிநேர வாசிப்பில் 89 நூல்களை படித்திருந்தார். பொறாமையாக இருந்தது. நேரிடையாக அந்த போட்டியில் நான் முறைப்படி பதிவு செய்துகொள்ளாவிட்டாலும் நானும் ரிங்குக்கு வெளியே அந்த ஓட்டத்தில் இருக்கத்தான் செய்தேன்.

இந்த நேரடி போட்டியில் நான் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு என் இயல்பும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இந்த மாத உயிர்மை இதழில் முருகவேள் எழுதிய சிறுகதை ‘மதமாற்றம்’ வந்துள்ளது. அதில் ஸ்டீபன் சண்முகம் என்றொரு பாத்திரம். அவரைப் போல தானுண்டு என்று தன் போக்கு உண்டு என்கிற மனோபாவம் எனக்கும்.

மௌலானா ரூமியின் மஸ்னவி 27972 ஈரடி செய்யுள், அதில்லாமல் 1146 ஈரடி செய்யுள்கள் பிற்சேர்க்கையாக கொண்டது, அனேகமாக அதொரு இடைச்செருகல் என்றே கருதப்படுகிறது. ஏழு பெருந்தொகுதிகளை  கொண்ட

29118 பாடல்கள். ஆயிரம் ஆண்டு பழமையான அந்த நூலின் மூல மொழியான பெர்சியன் (வாசிக்க மட்டுமே தெரியும், பிரெஞ்சு போல) ஓசைநயத்துக்காகவும், மூலமொழியில் படிக்க வேண்டும் என்கிற ஆவலில் அதையும், அதன் உருது தெளிவுரை, தமிழாக்கம், தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்தையும் கூட வைத்துக் கொண்டு மஸ்னவியின் இலக்கிய அழகில் கிட்டத்தட்ட மூழ்கிக் கிடந்தேன். இப்பொழுது Shoukath Sahajotsu அவர்கள் மஸ்னவி மலையாள மொழிபெயர்ப்பின் புதிய நூல் குறித்த அறிவிப்பை கொடுத்துள்ளார், அதையும் வாங்கிப் படிக்க வேண்டும்.

இன்றைய கட்டுரையின் பேசுபொருளான ‘போரும் அமைதியும்’ நாவலை இங்கு தமிழில் படித்திருக்கிறேன். அண்மையில் வடநாடு சென்று திரும்பிய நண்பர் வாங்கி கொடுத்த இதே ‘போரும் அமைதியும்’ நாவலை பைசல் ஏவானின் உருது மொழிபெயர்ப்பில் ஒரு நூறு பக்கங்கள் கடந்திருக்கிறேன். வேறு (சில) நூல்களையும் பிற மொழிகளில் படிப்பது அலாதியான சொல் மயக்கத்தை தருகிறது. வாசிப்புச் சுவையை கூட்டவும், வேறு சில சொற்சேர்க்கையில் இரண்டு மொழிகளில் படிக்கும்போது மொழிபெயர்ப்பாளரின் இயலாமையால் மொழிபெயர்ப்பு ஆகாத சொற்கள் தனித்து கண்ணுக்கு படவே செய்கின்றன. எப்படி இருந்தாலும் நமக்கு ரஷ்ய மொழியோ, பெர்ஷியனோ அறவே தெரிய வாய்ப்பில்லாத நேரங்களில் இதுபோன்ற இணைவாசிப்பு உதவவே செய்கின்றன. இதற்கு முன்பு தாகூரின் சில படைப்புகள், கீதையின் உருது மொழிபெயர்ப்பு என படிக்கும்போது செவ்வியல் பிரதிகளின் மூலம் வரலாற்றின் ஏதோவொரு காலத்தில் நமக்கு அகப்படாத மூலமொழி ஒன்றின் துணுக்குகளே நம்மை வந்தடைந்து இருப்பதாக படுகிறது. இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், அறிஞருமான டாக்டர் கரண்சிங் முன்முயற்சியில் வெளிவந்த பகவத் கீதை உருது மொழிபெயர்ப்பையும் படித்து ருசித்திருக்கிறேன்.

கடந்த விஷ்ணுபுரம் விழாவில் வத்ரேவு சி. வீரபத்ருடு அவர்களின் கவிதையை ராஜு செய்திருந்த மொழிபெயர்ப்பும், மேடையில் அவ்வளவு இயல்பாக, மூலத்துக்கு நெருக்கமாக கொண்டு போன அழகும் என்னை வியக்க வைத்தன. வரக்கூடிய ஆண்டுகளில் கன்னடத்திலிருந்து, மராட்டியிலிருந்து நேரடியாக அறிமுகப்படுத்தி இணைப்பு பாலத்தை ஏற்படுத்தலாம். இதற்கு முன்பு சிவசங்கரி அவர்கள் இதற்கான முன்கையெடுத்து செய்த மொழியாக்க கட்டுரைகளை (சில பத்தாண்டுகளுக்கு முன்பு) படித்த நினைவுள்ளது. அது நூலாகவும் தொகுக்கப்பட்டதாக அறிகிறேன். இது நம் புரிதலை விரிவுபடுத்துவதாக அனுபவம்.

நன்றி
கொள்ளு நதீம், ஆம்பூர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2022 10:31

விஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்

அரங்கில் பார்வையாளர்கள் 400 முதல் 500 பேர் இருப்பார்கள் என்று தோன்றியது.
கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது ஆச்சரியம்.இலக்கியக் கூட்டத்தில் அத்தனை இளைஞர்களைப் பார்த்து தெலுங்குக் கவிஞர் வீரபத்ருடு , முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இருவரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.

விஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2022 10:30

January 25, 2022

ஆசான் என்னும் சொல்

அன்புள்ள ஜெ,

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. சமஸை எவரோ ஆசான் என அழைத்துவிட்டனர். அதை கேலி செய்து மனுஷ்யபுத்திரன் எழுதினார். உடனே ஆசான் என அழைக்கப்படுவதை தான் வெறுப்பதாகவும், அப்படி அழைக்கவேண்டாம் என மறுப்பதாகவும் சமஸ் பதில் எழுதினார். ஆசான் என நீங்கள் அழைக்கப்படுவதை மனுஷ்யபுத்திரன் கேலி செய்தார்.

நான் நண்பர்களிடம் பேசும்போது ஆசான் என அழைப்பது பொருத்தமற்றது என்றும் நவீன எழுத்தாளர்கள் இந்த வகையான அடிமைத்தனத்தை ஏற்கக்கூடாது என்றும் சிலர் சொன்னார்கள். நான் உங்களுக்கு பல கடிதங்களை ஆசான் என்ற விளிப்புடனேயே தொடங்கியிருக்கிறேன். நீங்கள் அவ்வாறு அழைக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மகேந்திரன் எம்

அன்புள்ள மகேந்திரன்,

நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பிரசுரமாகும்போது அன்புள்ள ஜெ என அந்த விளிப்பு மாற்றப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். ஏனென்றால் பொதுவான ஓர் அழைப்பாக அச்சொல் திகழ்வதை நான் விரும்பவில்லை. அது என் அடையாளம் அல்ல. ஜெ என்றுதான் என் நண்பர்கள், வாசகர்கள் என்னை அழைக்கிறார்கள். ’ஜெ’ என்பது எல்லா வகையிலும் வசதியாக இருக்கிறது. அது வயது குறைவானவர்களுக்கு மரியாதையற்ற அழைப்பாக தோன்றுவதில்லை. அதேசமயம் அணுக்கமானதாகவும் இருக்கிறது. நான் பார்த்தவரை பெண்கள் அனைவருமே ஜெ என்றுதான் அழைக்கிறார்கள்.

அருண்மொழி என்னை ஜெயன் என அழைக்கிறாள். என் நண்பர் அன்பு போன்றவர்கள் ஜெயன் என்றே அழைக்கிறார்கள். ஜெயமோகன் என்று அழைக்கும் நண்பர்கள் பலர் உண்டு. சிங்கப்பூர் சரவணன் சிட்னி கார்த்திக்  போன்றவர்கள் ஜெமோ என்பார்கள். [ஆனால் பொதுவாக வசைபாடி, ஏளனம் செய்யும் கடிதங்கள் அனைத்திலுமே விதிவிலக்கே இல்லாமல் ஜெமோ என்றுதான் இருக்கிறது. இதன் உளவியல் என்ன என்று ஆராயவேண்டும்] வே.அலெக்ஸ், பாரிசெழியன், யுவன் சந்திரசேகர் போன்று என் வயதையொத்த நண்பர்கள் ‘டா’ போட்டு அழைப்பதுமுண்டு. சந்தோஷ் சரவணன் போன்ற இளைஞர்கள் அப்பா என அழைக்கிறார்கள். அவ்வழைப்புகளை ஏற்கையில் ஒவ்வொரு அழைப்புக்கும் ஏற்ப அக்கணங்களில் அவ்வாறு உருமாறிக்கொள்கிறேன்.

அழைப்பவர்கள் எப்படி அழைக்கவேண்டும் என நாம் ஆணையிட முடியாது. அது அவர்கள் நம்முடன் கொண்டுள்ள உறவின் வெளிப்பாடு. அது எதுவாக இருப்பினும் நமக்கு அவர்கள் அவ்வண்ணமே ஏற்புடையவர்கள். என்னைவிட ஒருவயது மூத்த யுவன் சந்திரசேகரிடம் நான் ‘ஏண்டா மயிரு மாதிரி பேசிட்டிருக்கே?’ என்று பேசமுடியும். என் மிக நெருக்கமான நண்பரும், என்னைவிட பதினைந்து வயது இளையவருமான ஈரோடு கிருஷ்ணனை ர், ங்க விகுதி இல்லாமல் பேசியதோ அழைத்ததோ இல்லை. இது உறவுகளில் இயல்பாக உருவாவது. இவற்றை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள முடியாது.

அழைப்புகளில் என்ன பிரச்சினை எழுகிறது? திருநங்கைகளிடம் நீங்கள் பேசியிருக்கலாம். நாம் அனைவருமே எண்ணும் ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கலாம். ‘ஏன் நீங்கள் பெண்ணுடைக்கு மாறவேண்டும்? ஏன் அகத்தே பெண் என்றாலும் ஆணிண் உடை அணிந்துகொள்ளக்கூடாது. சமூகத்தில் எதையும் இழக்காமல், கேலிப்பொருள் ஆகாமல் வாழ்வதற்கு அது நல்ல வழிதானே?’ அவர்கள் அதற்குச் சொல்லும் பதில் ஒன்றே. ‘நீ பொம்புள டிரெஸ் போட்டுனு சுத்தணும்னா சுத்துவியா? எவ்ளவுநாள் அப்டி இருக்க உன்னால முடியும்?” என்னிடம் ஒருவர் அப்படிக் கேட்க நான் மெய்யாகவே திகைத்துவிட்டேன்.

நாம் அகத்தே யாரோ அதற்குரிய புறத்தோற்றத்தைத்தான் இயல்பாக உணரமுடியும். அந்த ஆடைகளையே அணிய முடியும். அதேபோலத்தான் இதுவும். ஒருவர் தன்னை எப்படி அகத்தே வைத்திருக்கிறாரோ அப்படி அழைக்கப்படுகையில் இயல்பாக உணர்கிறார். உதாரணமாக ஒரு நாற்பது வயதுக்காரரை ஒரு பதினெட்டு வயதுப்பெண் ‘அங்கிள்’ என்று அழைத்தால் திடுக்கிடுவார். ஆனால் அவருக்கே ஒரு பதினெட்டு வயது மருமகள் இருந்து அவள் அப்படி அழைத்தால் இயல்பாக எடுத்துக்கொள்வார். பலர் ஐம்பது வயதுக்குமேல் தாத்தா என அழைக்கப்படுகையில் நிலைகுலைகிறார்கள். ஆனால் அவர்களுக்கே பேரர்கள் பிறந்தபின் இயல்பாக அதை எடுத்துக்கொள்கிறார்கள்.

நான் விஷ்ணுபுரம் நாவல் எழுதும் வரை எழுத்தாளர் என்று எந்த கடிதத்திலும் போட்டுக்கொண்டதில்லை. சொல்லிக்கொண்டதும் இல்லை. எனக்கே அது கொஞ்சம் பொருந்தாததாக தோன்றியது. ஆனால் அதன்பின் அச்சொல் அன்றி வேறேதும் என்னை வகுக்காது என்று உணர்ந்தேன். வாசகர் அல்லாத எவரிடமும் நான் பி.எஸ்.என்.எல் ஊழியன் என்றே சொல்வேன், எழுத்தாளன் என சொல்லிக்கொள்ளவே மாட்டேன். ஆனால் எப்போதும் உள்ளூர எழுத்தாளன் என்றே உணர்ந்தேன்.

ஒருவர் நம்மை ஒருவகையில் அழைக்கையில் அந்த உறவை அவர் அவ்வண்ணம் வகுத்துக்கொள்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறார். நாம் அந்த உறவை அவர் எண்ணியபடி எற்கிறோமா இல்லையா என்பதைக் கொண்டே அந்த அழைப்பை ஏற்கிறோம். நாம் நெருக்கமாக உணராத ஒருவர் நம்மை நெருக்கமான சொல்லால் அழைத்தால் ஒவ்வாமை கொள்கிறோம். மிக நெருக்கமாக உணரும் ஒருவர் சம்பிரதாயமாக அழைத்தாலும் வருத்தம் கொள்கிறோம்.

ஆகவே ஒருவர் பிறர் தன்னை ஒரு குறிப்பிட்ட சொல்லால் என அழைத்தால் ஒவ்வாமை கொள்கிறார் என்றால் இரண்டு பொருள்தான். ஒன்று அவர் அவ்வாறு தன்னை உணரவில்லை. அல்லது அழைப்பவர் அவ்வாறு தன்னை அணுகுவதை விரும்புவதில்லை. எதுவானாலும் அது அவருக்கும் அவரை அழைப்பவர்களுக்குமான பிரச்சினை. அதில் மூன்றாமவர் சொல்ல ஒன்றுமில்லை.

நாம் நம் சூழலில் அழைப்புகளை ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாற்றிக்கொண்டேதான் இருக்கிறோம். பலசமயம் ஒருவரையே வெவ்வேறு வகையில் அழைக்கிறோம்.நான் என்னைவிட இருபது வயது மூத்த பாலு மகேந்திராவை பாலு என்றுதான் அழைத்தேன். ஏழுவயது மூத்தவரான மணி ரத்னத்தை மணி என்றுதான் அழைக்கிறேன். ஆனால் மேடைகளில் அவ்வாறு சொல்ல மாட்டேன். அவர்களுடைய உதவியாளர்களிடம் அவ்வாறு சொல்ல மாட்டேன். சார் சேர்த்துக்கொள்வேன்

தேவதேவனை கவிஞரே என்றுதான் அழைக்கிறேன். விக்ரமாதித்யனை அண்ணாச்சி என்று. கவிஞர் என அழைத்ததே இல்லை. தேவதச்சனை சார் என்று. மனுஷ்யபுத்திரனை மேடையில் மனுஷ்யபுத்திரன் என்று சொல்வேன். ஆனால் ஹமீது என அழைக்கவே விரும்புவேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான அந்த அழகான குண்டுப்பையனாகிய ஹமீதின் நினைவை நான் இழக்க விரும்பவில்லை. ஆனால் ஞானியை ஞானி என்றுதான் அழைத்தேன். தனிப்பேச்சில் ‘முட்டாத்தனமா பேசக்கூடாது’ என்றெல்லாம் அவரிடம் பேசுவேன். ஆனால் மேடையில் அவ்வாறு பேசமாட்டேன்.

ஒருவர் தன்னை பிறர் இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று சொன்னால் அப்படி அவரை அழைக்கலாம், அல்லது நாம் விரும்பியபடி அவரை அழைக்கலாம்.  அந்த அழைப்பை அவர் ஏற்கிறாரா, நம்மை ஏற்கிறாரா என்பதெல்லாம் அவருடைய முடிவு.

ஒருவரை இப்படித்தான் அழைக்கவேண்டும் என பொதுவாக ஒரு கட்டாயம் உருவானால், அதை அவரோ அவரைச்சூழ்ந்தவர்களோ கட்டாயப்படுத்தினால் அது அதிகாரம். மொழியில் நிகழ்த்தப்படும் ஆதிக்க வன்முறை. அங்கே எதிர்த்து நிற்பது இன்றியமையாதது.

ஆகவேதான் நான் பெரியார் என்றோ அறிஞர் அண்ணா என்றோ மகாத்மா காந்தி என்றோ மாவீரன் பிரபாகரன் என்றோ சொல்வதில்லை. அப்படி சொல்லவேண்டும் என இன்னொருவர் என்னிடம் சொல்ல நான் ஏற்பதில்லை. ஆனால் நித்ய சைதன்ய யதியை குரு என்று சொல்கிறேன். அந்தரங்கமாக உணரும்போது நித்யா என்பேன். என் தனிக்குறிப்புகளில் அவரை ஒருமையில் ‘நித்யா உனக்கு…’ என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். அவரை குரு என்று அழைக்கவேண்டும் என்பது நெறி அல்ல. எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் அவரை குரு என அழைப்பதை அவர் விரும்புவதுமில்லை. ‘Call me Nitya’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

கவனியுங்கள், ஆசான் என்ற சொல்லை கேலி செய்பவர்கள் அத்தனை அரசியல் பட்டங்களையும் வாய்நிறையச் சொல்லத் தயங்காதவர்கள். பட்டங்கள் அடைமொழிகள் அன்றி பெயரைச் சொல்லவும் பயப்படுபவர்கள். ஏனென்றால் அது அரசியல். அங்கே படிநிலைகளும் பணிவும் முதல் நிபந்தனை. அத்தனை சொற்கள் வழியாகவும் திரும்பத் திரும்ப பணிதலை அறிவித்தாகவேண்டும்.

இக்காரணத்தால்தான் நவீன இலக்கியத்தில் பொதுவாக அடைமொழிகள், பட்டப்பெயர்கள், மரியாதை விளிப்புகளை தவிர்க்க நினைத்தனர். அவற்றை ஒருவகை பாவனையாக கருதினர். ஆனால் அதன்பொருள் இங்கே அனைவரும் அறிவிலும் தகுதியிலும் நிகரானவர்கள் என்றும், எவரும் எவருக்கும் எதையும் கற்பிப்பதில்லை கற்றுக்கொள்வதுமில்லை என்றும் அல்ல. எவருக்கும் எவரிடமும் அணுக்கமான உறவுகளேதுமில்லை, அத்தனை உறவுகளும் நவீனச் சிந்தனைக் களத்தில் ஒன்றாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அல்ல.

ஆசான் என இங்கே என்னை மட்டும் சொல்வதில்லை. முதன்மையாக மா.செந்தமிழன் என்பவரைச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். அரசியலில் உள்ள பலரை அப்படிச் சொல்கிறார்கள். சமீபகாலமாக சு.வெங்கடேசனை போஸ்டர்களில் அவ்வாறு சொல்லியிருப்பதை காண்கிறேன்.

நான் என் பெயருடன் எழுத்தாளர் என்னும் சொல் அன்றி எதையும் எப்போதும் போட்டதில்லை, போட ஒப்புக்கொண்டதுமில்லை. ஆசான் என முதலில் அழைத்தவர் கே.வி.அரங்கசாமி. அது 2010ல் விஷ்ணுபுரம் விருதுவிழா மேடை நன்றியுரையில். அது அவருடைய உணர்வுநிலை. அந்த மேடையில் அவ்வாறு தோன்றியிருக்கலாம்.

அதன்பின் அவ்வப்போது அவரோ சில இளம் நண்பர்களோ அவ்வாறு  கடிதங்களிலோ குறிப்புகளிலோ சொல்வதுண்டு. எவரும் நேரில் அவ்வாறு அழைப்பதில்லை. அவ்வாறு அழைப்பதை எவரும் வலியுறுத்துவதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. அதை மீறி ஒருவர் அவ்வாறு எழுதுகிறார், அழைக்கிறார் என்றால் அது அவருடைய உணர்வுநிலை அவ்வளவுதான்.

பெரும்பாலும் என்னை இன்று ஆசான் என்றெல்லாம் சொல்பவர்கள் கேலியாகவோ, இழிவுசெய்யவோதான் அவ்வாறு சொல்கிறார்கள். அச்சொல்லை அப்படி பரப்பி நிலைநிறுத்தியவர்கள் அவர்கள்தான். அனேகமாக ஒவ்வொரு நாளும் அவ்வாறு கேலியாக அழைத்து வசைபாடும், நகையாடும் நாலைந்து கடிதங்கள் வருகின்றன. அதுவும் இந்த ‘பேக்கேஜில்’ சேர்த்திதான். அதையும் அவ்வாறுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் அவரை எவராவது ஆசான் என்று சொன்னால் ஏற்கவில்லை என்றால் அவர் தன்னகத்தே அவ்வாறு உணரவில்லை என்றுதான் பொருள். சமஸ் அவ்வாறு உணரவில்லை என்பதனால் அவருக்கு ஒவ்வாமை தோன்றுகிறது. அதனால் அச்சொல்லே பிழையானது, எவரும் எவரையும் அவ்வாறு அழைக்கக்கூடாது, அழைப்பவர்களுக்கு அறிவில்லை, அழைக்கப்படுபவர்களுக்கு தகுதியில்லை, அவ்வாறு அழைப்பதெல்லாம் அடிமைத்தனம் ஆணவம் என்றெல்லாம் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.

பத்தாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஆசான் என்னும் சொல் அயலானதாகவே இருந்தது. அவ்வாறு அழைப்பதை ஏற்றதில்லை. வெண்முரசு எழுதியபின் அந்த அழைப்பு ஒவ்வாமையை அளிப்பதில்லை. ஆம், என்னை ஏற்பவர்களுக்கு, என்னிடமிருந்து கற்பவர்களுக்கு நான் ஆசான் என சொல்லிக்கொள்ள எந்த தயக்கமும் இல்லை. அதை உள்ளூர உணரும் ஒருவருக்கு அச்சொல் ஒவ்வாமையை அளிப்பதில்லை. என்னை ஒருவர் அப்படி நினைக்கிறார் என்றால் அவருக்கு நான் எதையோ கற்பித்திருக்கிறேன் என்று பொருள். அவ்வளவுதான். அது எனக்கு அளிக்கப்பட்டது, என் வழியாகச் செல்வது. இப்படித்தான் இது இன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு கண்ணி என்பது எளிமையையும் பெருமிதத்தையும் ஒரே சமயம் அளிப்பது.

இன்று என் புரிதல் கொஞ்சம் விரிவானது. போற்றுதலோ வசையோ எல்லா அழைப்பும் என்னைத்தான் சுட்டுகிறது. என்னை ஒருவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைச் காட்டுகிறது. ஆசான் என்பவருக்கு நான் ஆசிரியனாக இருக்கலாம். அவ்வாறு அழைத்த சிலர் பின்னாளில் புளிச்சமாவு என கெக்கலித்ததையும் கண்டேன். இந்த ஆட்டத்தில் அதெல்லாம் இயல்பே.

புளிச்சமாவு என எல்லா இடங்களிலும் சென்று எழுதிவைக்கும் ஒருவரை சென்றமாதம் நேரில் சந்தித்தேன். நேரில் மிகப்பவ்யமாக பேசினார். [ஏனென்றால் அவர் ஓர் உதவி இயக்குநர்] ’நீங்கள் புளிச்சமாவு என எழுதுவது தெரியும். நீங்கள் அவ்வாறு உணர்ந்தால் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம், என்னிடமிருந்து உங்கள் வரை வந்துசேர்ந்தது அவ்வளவுதான் என்றுதான் அதன் பொருள். நான் கோபப்படுவேன் என்று நேரில் பணிவை காட்டவேண்டாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.’ என்று சொன்னேன். அதன்பின் அரைமணிநேரம் தொழில்முறையாகச் சினிமா பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். வசை, போற்றுதல் இரண்டையும் நிகராகப் பார்ப்பது இயல்பாக அமைவதில்லை, ஆனால் அதற்கு முயல்வது ஒரு நல்ல பயிற்சி.

பொதுவாக நான் விரும்பும் அழைப்பு ஜெ என்பதுதான். அதில் எந்த வண்ணங்களும் இல்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 10:35

நிழற்காகம் – கடிதம்

shadow crow

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்,

புனைவு களியாட்டக் கதைகளில் நிழல்காகம் கதையைப் படித்தேன்.படிக்கப் படிக்கப் எழுந்த எண்ணம் வாவ்.வாவ். கதையின் கூறுமுறை வாசகனை எளிதில் கதைக்குள் இழுத்துவிடும். நித்யா சொல்லும் கதை, அதற்குள் நித்யா சொல்லும் அசிதர் சொல்லிய கதை, இரண்டையும் எங்களிடம் சொல்லும் உங்கள் கதை. நித்யாவும், நீங்களும் எங்களுக்கு அணுக்கமென்பதால் கதையை வாசிக்கும் போதும் எங்களிடம் பேசுவது போலுள்ளது. சிறுகதையை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நான் கற்பனைக்குள் சென்றுவிட்டேன்.கற்பனையின் களியை நிறுத்திவிட்டு மீதிக் கதையைப் படித்தேன்.

அசிதர் சொன்னார் “கலை என்பது ஒரு நடிப்புதானே? இதிலிருந்து என் சிந்தனை தொடங்கியது.வேறு நிறுவனத்திற்கு மாறி பெங்களூரு வந்த பின் அடிக்கடி கேட்ட வார்த்தை Empathy.பிறர் வலியை தன் வலிபோல் உணரும் திறன்.ஒருநாள் வலது கணுக்காலை மடக்கிக் கொண்டேன். மேலாளர் ஏனென்று கேட்டார்? கணுக்காலை மடக்கிக்கொண்டேனென சொன்னேன். நாளை வலி இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொன்னார்.அவர் எப்படிச் சொன்னார்? அவருக்கும் இதுபோல் நடந்திருக்கும் அதனால் உணரமுடிகிறது, தன் அறிதலை பகிர்கிறார்.இதுவரை கணுக்காலை மடக்கிக் கொள்ளாதவன் எப்படி உணர்வான்? அவனுக்கு விரலோ, மணிக்கட்டோ மடங்கியிருக்கலாம் அந்த வலியை வைத்தும், நான் சொல்லும் விவரணைகளை வைத்தும், வலியில் வெளிப்படும் என் உடல்மொழியை வைத்தும், இணையத்தில் இன்னும் தகவல்களை படித்தும், கணுக்காலை மடக்குவது போல் ஒத்திகை பார்த்தும், பின்னர் இவை அனைத்தையும் தன் மனதில் தொகுத்து, நடித்துப் பார்த்து உணர்ந்துகொள்வான். மனதில் கற்பனையில் நடித்துப் பார்த்தபின் அது நடக்காமலே கணுக்கால் வலியை அவன் அறிதலாக கொள்ளமுடிகிறது.இந்த நடிப்பின் துல்லியத்தை வைத்து நடிப்பு Empathy என்கிற திறனாகவோ இல்லை கலையாகவோ மாறுகிறது.கலை என்பது நடிப்பு ஆனால் போலியல்ல.

கதையில் மூத்த பிக்ஷு சொல்லும் வரி “உன் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இது ஒரு அறப்பிரச்சினை. உனக்கு ஒரு தத்துவப்பிரச்சினை. நீ அதை தீர்த்துக்கொண்டால் போதும்”.கேள்விகளை எழுப்பிய வரி.

ஏன் அசிதரின் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் மட்டும் அறப்பிரச்சினை?எப்படி அது அறப்பிரச்சினையாகிறது?ஏன் அசிதருக்கு தத்துவப் பிரச்சனை?

உண்பதற்கு தவிர விலங்குகளை கொல்வது பாவமா? மனிதர்கள் கூட்டாக காட்டில் வாழ்ந்திருந்த போது புலியோ, ஓநாயோ தங்கள் இருப்பிடத்திற்குள் புகுந்து மனிதரை வேட்டையாடினால் என்ன செய்வார்கள்? வஞ்சினம் கொண்டு அந்த விலங்கின் கூட்டத்தை கொல்வார்களல்லவா?அது அறப்பிரச்சனையா? இல்லை. தன்னை, தன் கூட்டத்தை, தன் சந்ததிகளை இந்த பூமியில் நிலைநிறுத்தும் உரிமை அவனுக்குண்டு. காட்டில் வாழ்ந்த சமயத்தில் வேறு வழிகள் இல்லையென்பதனால் கொல்கிறார்கள்.அது ஒரு அறைகூவல். அந்த வஞ்சினமே வேலி. அசிதரின் தாத்தாவுக்கு அந்த உரிமையில்லை. தன் தொழிலை கெடுக்கும் காக்கைகளை விரட்ட அவருக்கு எளிய வழிகள் இருந்தது. ஆனால் தன் ஆணவத்தால், தன்னை முரட்டுத்தனமான ஆளாக காட்டும் ஆசையில் அதன் உயிர்களை பறிக்கிறார்.அப்பொழுதும் கூட அற பிரச்சனை அவர் மனதில் தோன்றவில்லை. அசிதரின் பாட்டி கோழியையும்  கொக்கையும் நாம் சாப்பிடுகிறோம். காக்கையை சாப்பிடுவதில்லை.காகம் பித்ரு வடிவம்.இது தந்தையைக் கொலை செய்த பாவத்தை கொண்டுவருவது என்று சொல்கிற தருணத்தில் அவர் மனதுக்கு அறப்பிரச்சனையின் விதை விழுந்திருக்கும்.ஒரு வாரம் கழித்து பறவைகள் வராத வேறுபாட்டை உணர்ந்தபின் அறப்பிரச்சனை வளர ஆரம்பித்துவிட்டது.பாட்டி பாவமென சொல்லியிருக்காவிட்டால் அத்தருணத்தில் அவர் மனதுக்குள் அறப்பிரச்சனையின் விதை விழுந்திருக்காது. பாட்டி சொன்னபின் அவர் மனம் ஏன் அதை ஏற்றுக்கொள்கிறது? காக்கையைக் கொல்வது பாவமென இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது அனைவரின் மனதிலும் படிந்துள்ளது.நம் மனதிற்குள் எங்கோ இருக்கும் தெய்வம், கருணை கொண்ட தெய்வம், நம் நன்மையை மட்டும் விளையும் தெய்வம், அறத்தை மட்டும் உணரும் தெய்வம், பாட்டி பாவமென சொன்னபின் சினந்து விடுகிறது. அது குற்றயுணர்வாக அவரில் வெளிப்படுகிறது.அவரின் மகன் அவருடனே வளர்வதால், இச்சம்பவம் அவர் மகனின் மனதில் படிந்துவிட்டதால் அவரையும் தொடர்கிறது. அசிதருக்கு தன் அப்பாவையும், தாத்தாவையும் கொத்திய காக்கை என்னை ஏன் தொடரவேண்டுமென்று கேள்வி எழுந்துள்ளது? என் தாத்தா பாவம் செய்தார் அது அப்பாவையும் தொடர்ந்தது. நான் ஒன்றும் செய்யவில்லை என்னை ஏன் தொடரவேண்டுமென்ற நினைத்த நொடி அறப்பிரச்சனை தத்துவப்பிரச்சனையாகிறது.

பெற்றோரின் கர்மத்தால் உயிர் உருவாகிறது, அந்த உயிரின் தொடர்ந்த கர்மத்தால் சந்ததிகள் வளர்கிறது. கர்மாவை நான் இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் போல் பார்க்கிறேன்.தாத்தாவின் பாவத்தால் அதன் ஒரு பெட்டியில் தீ பிடித்துவிடுகிறது, அதை அணைக்கவும் அல்லது பெட்டியை கழட்டிவிடவும் அவருக்கு வழி தெரியவில்லை. ரயில் மொத்தமும் எரிந்துவிடுகிறது. அதில் இணைந்த அவரின் மகனின் பெட்டியிலும் தீ பரவிவிடுகிறது. அவர் செய்யும் பரிகாரங்கள் எல்லாம் அந்த வெம்மையை குறைக்கிறது முழுவதும் தீர்ப்பதில்லை. அடுத்த ரயிலான அசிதருக்கும் தீ பரவுகிறது. ஏன் தொடரவேண்டுமென்ற கேள்வியால் தீர்வை நோக்கி ஓடுகிறார். அசிதரின் தாத்தாவும், அப்பாவும் பாவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் அதன் விளைவை ஏற்றுக்கொள்ளவில்லை. அசிதர் அதன் விளைவை ஏற்றுக்கொள்கிறார். விளைவை ஏற்றுக்கொண்டு துணிந்தவனுக்கு தெய்வம் புன்னகையை பரிசளிக்கும்.

அன்புடன்

மோகன் நடராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 10:33

மரபுப் பிரச்சாரகர் அல்ல மணி

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி

காதுகள், அந்தியூர்மணி – கடிதம்

அன்பு ஜெயமோகன்,

அந்தியூரார் மற்றும் அசோகனார் இருவரின் காதுகள் தொடர்பான கடிதங்களையும் பலமுறை வாசித்தேன். இரு கடிதங்களுமே தற்காலத்துக்கு அவசியமானவை. அவை வழியாகவே வாசிப்பு கோரும் அசாத்திய அடிப்படைத் தெளிவை ஒரு வாசகன் கண்டுகொள்ள இயலும். அதற்காக, இருவருக்கும் முதலில் நன்றி.

அந்தியூரார் சொல்ல வருவதை அசோகனார் இன்னும் கொஞ்சம் நிதானமாய் அலசிப் புரிந்து கொள்ள முற்பட்டு இருக்கலாம். எங்கும் அந்தியூரார் மரபுக்கு வக்காலத்து வாங்கவில்லை. அப்படியான தொனி அவர் கடிதத்தில் எங்கும் இல்லை என்பது என் தெளிவு. மரபுத்தரப்பிலான சான்றுகளை எடுத்துச் சொல்வதன் வழியாக காதுகள் வாசிப்பனுபவத்தில் இதுவரைக்கும் இருந்த போதாமையைத் துலக்கம் பெறச் செய்திருக்கிறார். அதைப் பிரச்சாரமாகப் புரிந்து கொண்டதற்கு அவர் பொறுப்பாக முடியாது என்பது என் தரப்பு. அசோகனார் திரும்பவும் அந்தியூராரின் கடிதத்தை நிதானமாய் வாசிக்குமாறு அவர் தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

மகாலிங்கத்தின் உளம் தடுமாறுவதற்கான காரணத்தைத் தன் வாசிப்பில் இருந்து நோக்கும் அந்தியூரார் அதுவே அறுதியானது என்பது போன்று தரவுகளையும் வாதத்தையும் முன்வைத்திருந்தால்.. அசோகனாரின் வாதத்தை கண்ணை மூடிக் கொண்டு ஏற்கலாம். மகாலிங்கத்தின் மனதில் நடக்கும் அலைபாய்தலைப் புரிந்து கொள்வதில் நவீன அறிவுஜீவிகளுக்கு இருக்கும் ‘திரிபு அபத்தத்தை’ அபாரமாக வெளிப்படுத்திக் காட்டி இருப்பார் அந்தியூரார். அவர் படைப்பில் உள்ளடக்கத்தைத் தேடுபவரல்ல. படைப்பின் உள்ளடக்கதை அவ்வளவு எளிதில் வியாக்கியானம் செய்பவரும் அல்ல. ஒரு படைப்பு வாசிக்கப்படும்போது நிகழும் ‘நவீன அறிவுக் குறுக்கிடல் பிரச்சாரத்தை’ மறுபரிசீலனைக்கு உட்படுத்த முயற்சி செய்கிறார். அதை விளங்கிக் கொள்வதற்கான விசாலம் நம்மைப் போன்றோருக்கு வாய்க்க வேண்டும். அதற்கு நாம் தகுதியாகிக் கொண்டே இருக்க வேண்டும்.

காதுகளின் உள்ளடக்கம் இதுதான் என்பதை நிறுவுமளவுக்கு அந்தியூரார் ’மரபுசார் அரசியல்காரர்’ அல்ல. ஆக, அப்படி அசோகனார் நினைக்கவே தேவையில்லை என்பதைத் தெளிவாகவே சொல்வேன். மரபு வாழ்வின் அடிப்படைகளை நவீன அறிவுச்சிந்தனை முறைமைகள் எதிர்கொள்ளும்போது பெறும் திகைப்பையே காதுகள் வழி தான் பெற்றதாகச் சொல்லும் அந்தியூரார் கட்டுரையை அவ்விதமே நிறைவும் செய்திருக்கிறார். மேலும், காதுகள் நாவலில் இடம்பெறும் ‘கேட்டல்’ பதத்துக்கான புதிய சாத்தியப்பாடுகளையும் ‘மரபின் வழி’ நமது வாசிப்புக்கு அறிமுகப்படுத்துகிறார். ‘கேட்டலை’ அவர் சொல்லும் விதத்திலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அடம்பிடிக்கவில்லை.

தற்கால அறிவுஜீவி விமர்சகர்கள் அந்நாவலை நவீன நாவலாகக் கருதி நவீனகால அறிவோடு அதைப் பொருத்திப் பார்த்துச் செய்த விமர்சன அவலத்தைக் கட்டுடைத்த வகையில் அந்தியூரார் செய்தது ஆகச்சிறப்பான பணி. அவர் அதைச் செய்வதற்கு நவீனத்தை எதிர்த்தரப்பாக அவர் நிறுத்தவில்லை. அதேபோல, மரபுதான் சிறந்தது என்பது போன்ற பிரச்சாரத்தையும் செய்யவில்லை. மரபு வாழ்வின் கூறுகளை நவீன அறிவுக்கருவிகள் கொண்டு அளக்கும் நவீன மனதின் தெளிவின்மையை அல்லது திரிபை அழகாகவே விளக்கிச் செல்கிறார். மரபோ, நவீனமோ அதை ஒரே வகையான பின்புலத்தில்(உ-ம் பகுத்தறிவு அல்லது முன்னோர் அறிவு) நிறுத்தி எடைபோடும் அதிநவீன மனதின் அக்கிரமத்தைத் துணிந்து கேள்வி கேட்கிறார்.

சிறுவயதில் கோலிக்குண்டுகளை அதிகம் சேகரித்து வைத்திருப்பேன். இப்போது அப்படி எதுவும் செய்வதில்லை. அதற்காக, இவ்வயது அறிவைக்கொண்டு அன்று நான் செய்தது முட்டாள்தனம்(அல்லது ஏதாவது) என்று சொல்லி நிறுவுவதை எங்ஙனம் எடுத்துக் கொள்வது? கோலிக்குண்டு சேகரித்து வைத்திருந்த காலப்பின்புலத்தை நடுத்தர வயதுப்பின்புல அறிவு கொண்டு ’ஒற்றைத்தளத்தில் ஆராய்தல்’ என்பது எவ்வகையான தேடல் அல்லது அறிதல் முறை? கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பார்த்தாலே, விளங்கிக் கொள்ளக்கூடியது என்று உறுதியாக நம்புகிறேன். இங்குதான் ஒருவர் முதலில் தன் முன்முடிவு முகமூடிகளைக் கழட்டி வைக்க வேண்டியது அவசியமாகிறது.

அந்தியூரார் காதுகள் விமர்சனத்தில் பிரச்சாரம் செய்ய விரும்பி இருந்தால், அதை அவர் நேரடியாகச் செய்திருக்க இயலும். அதற்குக் கணக்கிலடங்காச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதை அவர் எவ்விடத்தும் செய்யவில்லை. மாறாக, அந்நாவலை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று ’மரபு எதிர்ப்புப்’ பிரச்சாரம் செய்யக் கிளம்பும் ‘நவீன அறிவாளிகளுக்கு’ அவர் அந்நாவலின் அடிப்படையைச் சுட்டிக் காட்ட முற்படுகிறார். அதன் தரிசனத்தை நெருங்குவதற்கான புலப்படலை ஈனும் எளிதாகச் சாத்தியப்படுத்த மெனக்கெடுகிறார். மகாலிங்கத்தின் உளத்தின் ஊடாட்டத்துக்கான காரணமாக எதையும் அவர் ’ஒற்றையாக’ நிறுவி விடவில்லை. அப்புறம் எப்படி அது பிரச்சாரமாக இருக்க முடியும்?

தனது விமர்சனத்தில் மரபு சார் தரவுகளை முன்வைத்ததாலேயே அவரைப் பிரச்சாரகர் என்பது போலக் கருதுவது நமது புரிதல் இன்மையே. நவீனத்தரவுகளுக்கு இணையான மரபுத்தரவுகளின் வழியாகவே இதுகாறும் காதுகள் குறித்திருந்த விமர்சனப்போக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்த இயலும். அதையே அவர் செய்கிறார். அவர் நவீனத்துக்கு மாற்றாக மரபையோ, மரபுக்கு மாற்றாக நவீனத்தையோ வலியுறுத்தும் அரசியல்காரர் அல்ல. அவர் நிகழ்த்துவது தாசரைப் போன்ற எதிர்க்கதையாடல் அல்லது மாற்றுக்கதையாடல்; எதிரிக்கதையாடல் அன்று.

பூர்வ பெளத்தர் எனும் சொல் வழியாக தாசர் மீண்டும் மரபை உருவாக்கி நிலைநிறுத்த விரும்பவில்லை. மரபை நவீன அறிவு கொண்டு கெக்களிக்கும் போக்கையும், நவீனத்தை மரபறிவு கொண்டு தூற்றும் அவலத்தையும் கட்டுடைக்கவே அப்படியான சொல்லை முன்நிறுத்துகிறார். அதன் வழியாக மரபு மற்றும் நவீனத்தின் பெயரில் முன்னெடுக்கப்படும் அபத்தங்களைத் தோலுரிக்க முயற்சிக்கிறார். அவற்றைக் கடந்திருக்கும் ‘உண்மையை’ அறிந்து கொள்ளத் தூண்டுகிறார்.

தாசரைச் சரியாகப் புரிந்து கொள்ள ‘நவீன அறிவு’ மற்றும் ‘மரபு அறிவு’ போன்றவை போதா. அவற்றைச் சரியான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்த்துச் சிந்திக்கும் தீர்க்கமான ’விசால அறிவு’ வேண்டும். அவ்வறிவையே ‘பூர்வ பெளத்தர்’ சொல் வழி அவர் கட்டமைக்கிறார். அதைப் புரிந்து கொள்ள கொஞ்சமும் முயற்சிக்காதது நம்மைப் போன்றோரின் குற்றமா அல்லது தாசரின் பிழையா?

தாசர் தொடர்பாய் சமீபத்தில் சமூகவலைதளங்களில் நடந்த ’அக்கப்போர்களைக்’ கவனத்து நொந்து போனேன். ஒரு நாளிதழ் இருதரப்பையும் வெளியிடுகிறேன் என்று சொல்லி அடித்த கூத்து வேறு(பாவம் டி.தருமராஜ். அவர் சொல்வதை எதிரித்தரப்பாக வைக்கும்படியான அவலம். அவரின் அயோத்திதாசர் நூலே எனக்கு என் வாசிப்பின் விசாலத்தை விளங்கிக் கொள்ள உதவியது. இருமைகளைக் கடந்து கவனிக்கும் நிதானத்தை வழங்கியது). சமூகவலைதளக் கூத்துகள் சகிக்க முடியாதவையாக இருந்தன. அவரை மரபின் ஆளாக ’ஒரு தரப்பு’ காட்டுவதாக நம்பிக்கொண்டு, ’மறுதரப்பு’ அவரை நவீனத்தின் எதிரியாகச் சித்தரித்து தங்கள் ‘நவீன அறிவின் போதாமையை’ உமிழ்ந்தபடியே இருந்தனர். ’இருதரப்புகளின்’ உரையாடல்களும் இணைகோடுகளாய் நகர்ந்தபடியே இருந்தன. ‘பூர்வ பெளத்தர்’ எனும் தாசரின் சொல்லாடலை ’நவீன அரசியல் சொற்கள்’ வழிக் கடித்துக் குதறிய பல மேதாவிகளைக் கண்டு குமுறுவதைத் தவிர நான் எதுவும் செய்யவில்லை. அவர்களோடு ’உரையாட’ இயலாது; மல்லுக்கட்டலாம். அம்மனநிலையை நான் கடந்து வெகுநாட்களாகின்றன. தொடர்வாசிப்பின் வழியாகவே நான் அப்படியான ‘தெளிவுக்கு’ வந்து சேர்ந்திருக்கிறேன். அதற்கு என்னைத் தூண்டிய முன்னோடிகள் பலரை இவ்விடத்து நினைவுகூர்கிறேன்.

தனது கடிதத்தின் வழி, காதுகள் நாவலை ஒரு நவீன வாசகன் அணுகுவதற்கான சாத்திப்பாடுகளை ’சமகால அறிவு முகமூடி’ போட்டு ‘காயடிக்காமல்’ விசாலப்படுத்தியதற்கு அந்தியூராருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். சித்தர் மரபு, தொல்காப்பியர் கூற்று போன்றவற்றை ‘நவீன அறிவியல் உண்மைகள்’ போல நிறுவ அவர் முயலவில்லை அல்லது ‘நவீன அறிவுத்தரப்பைக் காட்டிலும் அவை சிறந்தவை” என்பதாகவும் தன் தரப்பைச் சொல்லவில்லை. கொஞ்சம் பொறுமையாக அவரின் கடிதத்தைப் படிப்பவர்களுக்கு அது நிச்சயம் புரிய வரும்.

அந்தியூராரை ஆதரித்தோ, அசோகனாரை எதிர்த்தோ நான் இக்கடிதத்தை எழுதவில்லை. ஒரு படைப்பை அணுகுவதற்கான பன்முகச்சாத்தியங்களை விசாலப்படுத்தும் வாசிப்பனுபவங்களை நமது ‘தட்டையான அறிவு’ கொண்டு ’ஒற்றையாகப்’ புரிந்து கொண்டுவிடகூடாது எனும் தெளிவிற்காகவே இதை எழுதுகிறேன்.

சத்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 10:31

ஜடம்- கடிதங்கள்

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்புள்ள ஜெ

இந்தக்கதையின் முக்கியமான அம்சம் என்பது ஜடம் என்று நம்மைச் சூழ்ந்து கொண்டிப்பது உண்மையில் என்ன என்னும் கேள்விதான். ஜடம் என்று இந்த பிரபஞ்சம் சொல்லப்படுகிறது. அது எப்போது உயிர் கொள்ளும் ?அதில் சித்தம் இணையும்போது. நாம் காண்பது சித்தமும் ஜடமும் இணைந்த சிஜ்ஜடம். அதை அந்தச் சித்தர் சொல்லும் இடத்தில்தான் கதை தொடங்குகிறது அந்த இடத்தில் அதை அவருடைய பைத்தியக்காரத்தனத்தை அடையாளம் காட்டுவதற்காக சம்பந்தமில்லாததாகச் சொல்கிறது இந்த கதை. மெல்ல மெல்ல கதை விரிந்து சென்று முதலில் சொல்லப்பட்ட அந்த தத்துவம் முழுக்க நம் மனதிலிருந்து மறைந்த பின்னர் பிணத்தை அறிமுகம் செய்கிறது. முடிவில் ஓர் உலுக்கலாக இந்தக்கதை அந்த தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. சிறுகதை என்ற வடிவம் உண்மையில் எதற்காக என்று காட்டும் கதை இது.

இந்த பிரபஞ்சம் அதில் நமது சித்தம் இணையவில்லை என்றால் வெறும் ஜடம்தான். அதை உயிர் பெற வைப்பது பிரம்மம். பிரம்மம் நாம்தான்.நம் சித்தம் தான். அதுவே வெளியே உள்ள ஜடப் பிரபஞ்சத்தினை உயிர் கொள்ள வைக்கிறது .ஓர் அரிய தத்துவ சிந்தனை .ஆனால் கொடூரமான ஒரு கதை வழியாக அது சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் போலீஸ்காரரின் உள்ளிருக்கும் உக்கிரமான காமம் ஜடத்தை உயிர்கொள்ள வைக்கிக்கிறது. அந்த காமம்தான் உயிரின் ஆதி விசை. குண்டலினி சக்தி.  ஆங்கிலத்திலே அது இட் என்று சொல்லப்படுவது. அந்தத் தீவிரமான விருப்பம் அதை காமம் என்று சொல்லலாம்.  அதுதான் ஜடப்பொருள் மேல் உயிரை கொண்டு சென்று சேர்க்கும்சக்தி

நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அத்தனை பொருள்களும் அர்த்தம் கொள்வது நம்முடைய உள்ளிருக்கும் அந்த திருஷ்ண என்று சொல்லக்கூடிய விஷயத்தால்தான். விஷயம் விஷயி என அதை வேதாந்தம் சொல்லும். பௌத்த மரபிலேயே திருஷ்ணை  காமம் என்றும்  சொல்லக்கூடிய வழக்கம் உண்டு. இங்கே போலீஸ்காரர் கொள்ளும் காமம் ஜடத்தை உயிர் கொள் உயிர்கொள் என்று முட்டுகிறது. அது உயிர்கொள்கிறது.ஒவ்வொரு உயிரிலும் இருக்கக்கூடிய காமமே அந்த உயிருக்கான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது

எங்கெங்கோ தொட்டுச் என்று விரிந்து பல கோணங்களில் யோசிக்க வைத்த அரிய கதை.

எஸ்.திருவாசகம்

அன்புள்ள ஜெ

ஜடம் கதையில் அந்தப் போலீஸ்காரருக்கு என்ன ஆகும்? அவர் இப்போது ஜடம். இதன்பின் அவர் சைதன்யம் ஆவாரா? இந்தக்கதை நீங்கள் உண்மையில் எங்கேயோ கேட்டது. திருவனந்தபுரத்தில் ஒரு போலீஸ்காரர் பேச்சிப்பாறைக்கு போய் ஒரு பிணத்தை தேடிவிட்டு திரும்பும்போது அப்படியே அங்கேயே வேறிரு சாமியாரிடம் சீடனாக இருந்து சாமியாராகி சித்தராகி மறைந்தார். அதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மௌனகுரு சாமியார் என்னும் அவரைப்பற்றி திருவனந்தபுரம் வட்டாரத்தில் பல கதைகள் உண்டு. அந்தக் கதையைத்தான் திரும்பத்திரும்பச் சொல்லி பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். ஜடம் மிக வலுவாக வந்துவிட்டது

வி.ராமானுஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.