நிழற்காகம் – கடிதம்

shadow crow

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்,

புனைவு களியாட்டக் கதைகளில் நிழல்காகம் கதையைப் படித்தேன்.படிக்கப் படிக்கப் எழுந்த எண்ணம் வாவ்.வாவ். கதையின் கூறுமுறை வாசகனை எளிதில் கதைக்குள் இழுத்துவிடும். நித்யா சொல்லும் கதை, அதற்குள் நித்யா சொல்லும் அசிதர் சொல்லிய கதை, இரண்டையும் எங்களிடம் சொல்லும் உங்கள் கதை. நித்யாவும், நீங்களும் எங்களுக்கு அணுக்கமென்பதால் கதையை வாசிக்கும் போதும் எங்களிடம் பேசுவது போலுள்ளது. சிறுகதையை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நான் கற்பனைக்குள் சென்றுவிட்டேன்.கற்பனையின் களியை நிறுத்திவிட்டு மீதிக் கதையைப் படித்தேன்.

அசிதர் சொன்னார் “கலை என்பது ஒரு நடிப்புதானே? இதிலிருந்து என் சிந்தனை தொடங்கியது.வேறு நிறுவனத்திற்கு மாறி பெங்களூரு வந்த பின் அடிக்கடி கேட்ட வார்த்தை Empathy.பிறர் வலியை தன் வலிபோல் உணரும் திறன்.ஒருநாள் வலது கணுக்காலை மடக்கிக் கொண்டேன். மேலாளர் ஏனென்று கேட்டார்? கணுக்காலை மடக்கிக்கொண்டேனென சொன்னேன். நாளை வலி இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொன்னார்.அவர் எப்படிச் சொன்னார்? அவருக்கும் இதுபோல் நடந்திருக்கும் அதனால் உணரமுடிகிறது, தன் அறிதலை பகிர்கிறார்.இதுவரை கணுக்காலை மடக்கிக் கொள்ளாதவன் எப்படி உணர்வான்? அவனுக்கு விரலோ, மணிக்கட்டோ மடங்கியிருக்கலாம் அந்த வலியை வைத்தும், நான் சொல்லும் விவரணைகளை வைத்தும், வலியில் வெளிப்படும் என் உடல்மொழியை வைத்தும், இணையத்தில் இன்னும் தகவல்களை படித்தும், கணுக்காலை மடக்குவது போல் ஒத்திகை பார்த்தும், பின்னர் இவை அனைத்தையும் தன் மனதில் தொகுத்து, நடித்துப் பார்த்து உணர்ந்துகொள்வான். மனதில் கற்பனையில் நடித்துப் பார்த்தபின் அது நடக்காமலே கணுக்கால் வலியை அவன் அறிதலாக கொள்ளமுடிகிறது.இந்த நடிப்பின் துல்லியத்தை வைத்து நடிப்பு Empathy என்கிற திறனாகவோ இல்லை கலையாகவோ மாறுகிறது.கலை என்பது நடிப்பு ஆனால் போலியல்ல.

கதையில் மூத்த பிக்ஷு சொல்லும் வரி “உன் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இது ஒரு அறப்பிரச்சினை. உனக்கு ஒரு தத்துவப்பிரச்சினை. நீ அதை தீர்த்துக்கொண்டால் போதும்”.கேள்விகளை எழுப்பிய வரி.

ஏன் அசிதரின் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் மட்டும் அறப்பிரச்சினை?எப்படி அது அறப்பிரச்சினையாகிறது?ஏன் அசிதருக்கு தத்துவப் பிரச்சனை?

உண்பதற்கு தவிர விலங்குகளை கொல்வது பாவமா? மனிதர்கள் கூட்டாக காட்டில் வாழ்ந்திருந்த போது புலியோ, ஓநாயோ தங்கள் இருப்பிடத்திற்குள் புகுந்து மனிதரை வேட்டையாடினால் என்ன செய்வார்கள்? வஞ்சினம் கொண்டு அந்த விலங்கின் கூட்டத்தை கொல்வார்களல்லவா?அது அறப்பிரச்சனையா? இல்லை. தன்னை, தன் கூட்டத்தை, தன் சந்ததிகளை இந்த பூமியில் நிலைநிறுத்தும் உரிமை அவனுக்குண்டு. காட்டில் வாழ்ந்த சமயத்தில் வேறு வழிகள் இல்லையென்பதனால் கொல்கிறார்கள்.அது ஒரு அறைகூவல். அந்த வஞ்சினமே வேலி. அசிதரின் தாத்தாவுக்கு அந்த உரிமையில்லை. தன் தொழிலை கெடுக்கும் காக்கைகளை விரட்ட அவருக்கு எளிய வழிகள் இருந்தது. ஆனால் தன் ஆணவத்தால், தன்னை முரட்டுத்தனமான ஆளாக காட்டும் ஆசையில் அதன் உயிர்களை பறிக்கிறார்.அப்பொழுதும் கூட அற பிரச்சனை அவர் மனதில் தோன்றவில்லை. அசிதரின் பாட்டி கோழியையும்  கொக்கையும் நாம் சாப்பிடுகிறோம். காக்கையை சாப்பிடுவதில்லை.காகம் பித்ரு வடிவம்.இது தந்தையைக் கொலை செய்த பாவத்தை கொண்டுவருவது என்று சொல்கிற தருணத்தில் அவர் மனதுக்கு அறப்பிரச்சனையின் விதை விழுந்திருக்கும்.ஒரு வாரம் கழித்து பறவைகள் வராத வேறுபாட்டை உணர்ந்தபின் அறப்பிரச்சனை வளர ஆரம்பித்துவிட்டது.பாட்டி பாவமென சொல்லியிருக்காவிட்டால் அத்தருணத்தில் அவர் மனதுக்குள் அறப்பிரச்சனையின் விதை விழுந்திருக்காது. பாட்டி சொன்னபின் அவர் மனம் ஏன் அதை ஏற்றுக்கொள்கிறது? காக்கையைக் கொல்வது பாவமென இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது அனைவரின் மனதிலும் படிந்துள்ளது.நம் மனதிற்குள் எங்கோ இருக்கும் தெய்வம், கருணை கொண்ட தெய்வம், நம் நன்மையை மட்டும் விளையும் தெய்வம், அறத்தை மட்டும் உணரும் தெய்வம், பாட்டி பாவமென சொன்னபின் சினந்து விடுகிறது. அது குற்றயுணர்வாக அவரில் வெளிப்படுகிறது.அவரின் மகன் அவருடனே வளர்வதால், இச்சம்பவம் அவர் மகனின் மனதில் படிந்துவிட்டதால் அவரையும் தொடர்கிறது. அசிதருக்கு தன் அப்பாவையும், தாத்தாவையும் கொத்திய காக்கை என்னை ஏன் தொடரவேண்டுமென்று கேள்வி எழுந்துள்ளது? என் தாத்தா பாவம் செய்தார் அது அப்பாவையும் தொடர்ந்தது. நான் ஒன்றும் செய்யவில்லை என்னை ஏன் தொடரவேண்டுமென்ற நினைத்த நொடி அறப்பிரச்சனை தத்துவப்பிரச்சனையாகிறது.

பெற்றோரின் கர்மத்தால் உயிர் உருவாகிறது, அந்த உயிரின் தொடர்ந்த கர்மத்தால் சந்ததிகள் வளர்கிறது. கர்மாவை நான் இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் போல் பார்க்கிறேன்.தாத்தாவின் பாவத்தால் அதன் ஒரு பெட்டியில் தீ பிடித்துவிடுகிறது, அதை அணைக்கவும் அல்லது பெட்டியை கழட்டிவிடவும் அவருக்கு வழி தெரியவில்லை. ரயில் மொத்தமும் எரிந்துவிடுகிறது. அதில் இணைந்த அவரின் மகனின் பெட்டியிலும் தீ பரவிவிடுகிறது. அவர் செய்யும் பரிகாரங்கள் எல்லாம் அந்த வெம்மையை குறைக்கிறது முழுவதும் தீர்ப்பதில்லை. அடுத்த ரயிலான அசிதருக்கும் தீ பரவுகிறது. ஏன் தொடரவேண்டுமென்ற கேள்வியால் தீர்வை நோக்கி ஓடுகிறார். அசிதரின் தாத்தாவும், அப்பாவும் பாவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் அதன் விளைவை ஏற்றுக்கொள்ளவில்லை. அசிதர் அதன் விளைவை ஏற்றுக்கொள்கிறார். விளைவை ஏற்றுக்கொண்டு துணிந்தவனுக்கு தெய்வம் புன்னகையை பரிசளிக்கும்.

அன்புடன்

மோகன் நடராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.