மரபுப் பிரச்சாரகர் அல்ல மணி

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி

காதுகள், அந்தியூர்மணி – கடிதம்

அன்பு ஜெயமோகன்,

அந்தியூரார் மற்றும் அசோகனார் இருவரின் காதுகள் தொடர்பான கடிதங்களையும் பலமுறை வாசித்தேன். இரு கடிதங்களுமே தற்காலத்துக்கு அவசியமானவை. அவை வழியாகவே வாசிப்பு கோரும் அசாத்திய அடிப்படைத் தெளிவை ஒரு வாசகன் கண்டுகொள்ள இயலும். அதற்காக, இருவருக்கும் முதலில் நன்றி.

அந்தியூரார் சொல்ல வருவதை அசோகனார் இன்னும் கொஞ்சம் நிதானமாய் அலசிப் புரிந்து கொள்ள முற்பட்டு இருக்கலாம். எங்கும் அந்தியூரார் மரபுக்கு வக்காலத்து வாங்கவில்லை. அப்படியான தொனி அவர் கடிதத்தில் எங்கும் இல்லை என்பது என் தெளிவு. மரபுத்தரப்பிலான சான்றுகளை எடுத்துச் சொல்வதன் வழியாக காதுகள் வாசிப்பனுபவத்தில் இதுவரைக்கும் இருந்த போதாமையைத் துலக்கம் பெறச் செய்திருக்கிறார். அதைப் பிரச்சாரமாகப் புரிந்து கொண்டதற்கு அவர் பொறுப்பாக முடியாது என்பது என் தரப்பு. அசோகனார் திரும்பவும் அந்தியூராரின் கடிதத்தை நிதானமாய் வாசிக்குமாறு அவர் தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

மகாலிங்கத்தின் உளம் தடுமாறுவதற்கான காரணத்தைத் தன் வாசிப்பில் இருந்து நோக்கும் அந்தியூரார் அதுவே அறுதியானது என்பது போன்று தரவுகளையும் வாதத்தையும் முன்வைத்திருந்தால்.. அசோகனாரின் வாதத்தை கண்ணை மூடிக் கொண்டு ஏற்கலாம். மகாலிங்கத்தின் மனதில் நடக்கும் அலைபாய்தலைப் புரிந்து கொள்வதில் நவீன அறிவுஜீவிகளுக்கு இருக்கும் ‘திரிபு அபத்தத்தை’ அபாரமாக வெளிப்படுத்திக் காட்டி இருப்பார் அந்தியூரார். அவர் படைப்பில் உள்ளடக்கத்தைத் தேடுபவரல்ல. படைப்பின் உள்ளடக்கதை அவ்வளவு எளிதில் வியாக்கியானம் செய்பவரும் அல்ல. ஒரு படைப்பு வாசிக்கப்படும்போது நிகழும் ‘நவீன அறிவுக் குறுக்கிடல் பிரச்சாரத்தை’ மறுபரிசீலனைக்கு உட்படுத்த முயற்சி செய்கிறார். அதை விளங்கிக் கொள்வதற்கான விசாலம் நம்மைப் போன்றோருக்கு வாய்க்க வேண்டும். அதற்கு நாம் தகுதியாகிக் கொண்டே இருக்க வேண்டும்.

காதுகளின் உள்ளடக்கம் இதுதான் என்பதை நிறுவுமளவுக்கு அந்தியூரார் ’மரபுசார் அரசியல்காரர்’ அல்ல. ஆக, அப்படி அசோகனார் நினைக்கவே தேவையில்லை என்பதைத் தெளிவாகவே சொல்வேன். மரபு வாழ்வின் அடிப்படைகளை நவீன அறிவுச்சிந்தனை முறைமைகள் எதிர்கொள்ளும்போது பெறும் திகைப்பையே காதுகள் வழி தான் பெற்றதாகச் சொல்லும் அந்தியூரார் கட்டுரையை அவ்விதமே நிறைவும் செய்திருக்கிறார். மேலும், காதுகள் நாவலில் இடம்பெறும் ‘கேட்டல்’ பதத்துக்கான புதிய சாத்தியப்பாடுகளையும் ‘மரபின் வழி’ நமது வாசிப்புக்கு அறிமுகப்படுத்துகிறார். ‘கேட்டலை’ அவர் சொல்லும் விதத்திலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அடம்பிடிக்கவில்லை.

தற்கால அறிவுஜீவி விமர்சகர்கள் அந்நாவலை நவீன நாவலாகக் கருதி நவீனகால அறிவோடு அதைப் பொருத்திப் பார்த்துச் செய்த விமர்சன அவலத்தைக் கட்டுடைத்த வகையில் அந்தியூரார் செய்தது ஆகச்சிறப்பான பணி. அவர் அதைச் செய்வதற்கு நவீனத்தை எதிர்த்தரப்பாக அவர் நிறுத்தவில்லை. அதேபோல, மரபுதான் சிறந்தது என்பது போன்ற பிரச்சாரத்தையும் செய்யவில்லை. மரபு வாழ்வின் கூறுகளை நவீன அறிவுக்கருவிகள் கொண்டு அளக்கும் நவீன மனதின் தெளிவின்மையை அல்லது திரிபை அழகாகவே விளக்கிச் செல்கிறார். மரபோ, நவீனமோ அதை ஒரே வகையான பின்புலத்தில்(உ-ம் பகுத்தறிவு அல்லது முன்னோர் அறிவு) நிறுத்தி எடைபோடும் அதிநவீன மனதின் அக்கிரமத்தைத் துணிந்து கேள்வி கேட்கிறார்.

சிறுவயதில் கோலிக்குண்டுகளை அதிகம் சேகரித்து வைத்திருப்பேன். இப்போது அப்படி எதுவும் செய்வதில்லை. அதற்காக, இவ்வயது அறிவைக்கொண்டு அன்று நான் செய்தது முட்டாள்தனம்(அல்லது ஏதாவது) என்று சொல்லி நிறுவுவதை எங்ஙனம் எடுத்துக் கொள்வது? கோலிக்குண்டு சேகரித்து வைத்திருந்த காலப்பின்புலத்தை நடுத்தர வயதுப்பின்புல அறிவு கொண்டு ’ஒற்றைத்தளத்தில் ஆராய்தல்’ என்பது எவ்வகையான தேடல் அல்லது அறிதல் முறை? கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பார்த்தாலே, விளங்கிக் கொள்ளக்கூடியது என்று உறுதியாக நம்புகிறேன். இங்குதான் ஒருவர் முதலில் தன் முன்முடிவு முகமூடிகளைக் கழட்டி வைக்க வேண்டியது அவசியமாகிறது.

அந்தியூரார் காதுகள் விமர்சனத்தில் பிரச்சாரம் செய்ய விரும்பி இருந்தால், அதை அவர் நேரடியாகச் செய்திருக்க இயலும். அதற்குக் கணக்கிலடங்காச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதை அவர் எவ்விடத்தும் செய்யவில்லை. மாறாக, அந்நாவலை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று ’மரபு எதிர்ப்புப்’ பிரச்சாரம் செய்யக் கிளம்பும் ‘நவீன அறிவாளிகளுக்கு’ அவர் அந்நாவலின் அடிப்படையைச் சுட்டிக் காட்ட முற்படுகிறார். அதன் தரிசனத்தை நெருங்குவதற்கான புலப்படலை ஈனும் எளிதாகச் சாத்தியப்படுத்த மெனக்கெடுகிறார். மகாலிங்கத்தின் உளத்தின் ஊடாட்டத்துக்கான காரணமாக எதையும் அவர் ’ஒற்றையாக’ நிறுவி விடவில்லை. அப்புறம் எப்படி அது பிரச்சாரமாக இருக்க முடியும்?

தனது விமர்சனத்தில் மரபு சார் தரவுகளை முன்வைத்ததாலேயே அவரைப் பிரச்சாரகர் என்பது போலக் கருதுவது நமது புரிதல் இன்மையே. நவீனத்தரவுகளுக்கு இணையான மரபுத்தரவுகளின் வழியாகவே இதுகாறும் காதுகள் குறித்திருந்த விமர்சனப்போக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்த இயலும். அதையே அவர் செய்கிறார். அவர் நவீனத்துக்கு மாற்றாக மரபையோ, மரபுக்கு மாற்றாக நவீனத்தையோ வலியுறுத்தும் அரசியல்காரர் அல்ல. அவர் நிகழ்த்துவது தாசரைப் போன்ற எதிர்க்கதையாடல் அல்லது மாற்றுக்கதையாடல்; எதிரிக்கதையாடல் அன்று.

பூர்வ பெளத்தர் எனும் சொல் வழியாக தாசர் மீண்டும் மரபை உருவாக்கி நிலைநிறுத்த விரும்பவில்லை. மரபை நவீன அறிவு கொண்டு கெக்களிக்கும் போக்கையும், நவீனத்தை மரபறிவு கொண்டு தூற்றும் அவலத்தையும் கட்டுடைக்கவே அப்படியான சொல்லை முன்நிறுத்துகிறார். அதன் வழியாக மரபு மற்றும் நவீனத்தின் பெயரில் முன்னெடுக்கப்படும் அபத்தங்களைத் தோலுரிக்க முயற்சிக்கிறார். அவற்றைக் கடந்திருக்கும் ‘உண்மையை’ அறிந்து கொள்ளத் தூண்டுகிறார்.

தாசரைச் சரியாகப் புரிந்து கொள்ள ‘நவீன அறிவு’ மற்றும் ‘மரபு அறிவு’ போன்றவை போதா. அவற்றைச் சரியான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்த்துச் சிந்திக்கும் தீர்க்கமான ’விசால அறிவு’ வேண்டும். அவ்வறிவையே ‘பூர்வ பெளத்தர்’ சொல் வழி அவர் கட்டமைக்கிறார். அதைப் புரிந்து கொள்ள கொஞ்சமும் முயற்சிக்காதது நம்மைப் போன்றோரின் குற்றமா அல்லது தாசரின் பிழையா?

தாசர் தொடர்பாய் சமீபத்தில் சமூகவலைதளங்களில் நடந்த ’அக்கப்போர்களைக்’ கவனத்து நொந்து போனேன். ஒரு நாளிதழ் இருதரப்பையும் வெளியிடுகிறேன் என்று சொல்லி அடித்த கூத்து வேறு(பாவம் டி.தருமராஜ். அவர் சொல்வதை எதிரித்தரப்பாக வைக்கும்படியான அவலம். அவரின் அயோத்திதாசர் நூலே எனக்கு என் வாசிப்பின் விசாலத்தை விளங்கிக் கொள்ள உதவியது. இருமைகளைக் கடந்து கவனிக்கும் நிதானத்தை வழங்கியது). சமூகவலைதளக் கூத்துகள் சகிக்க முடியாதவையாக இருந்தன. அவரை மரபின் ஆளாக ’ஒரு தரப்பு’ காட்டுவதாக நம்பிக்கொண்டு, ’மறுதரப்பு’ அவரை நவீனத்தின் எதிரியாகச் சித்தரித்து தங்கள் ‘நவீன அறிவின் போதாமையை’ உமிழ்ந்தபடியே இருந்தனர். ’இருதரப்புகளின்’ உரையாடல்களும் இணைகோடுகளாய் நகர்ந்தபடியே இருந்தன. ‘பூர்வ பெளத்தர்’ எனும் தாசரின் சொல்லாடலை ’நவீன அரசியல் சொற்கள்’ வழிக் கடித்துக் குதறிய பல மேதாவிகளைக் கண்டு குமுறுவதைத் தவிர நான் எதுவும் செய்யவில்லை. அவர்களோடு ’உரையாட’ இயலாது; மல்லுக்கட்டலாம். அம்மனநிலையை நான் கடந்து வெகுநாட்களாகின்றன. தொடர்வாசிப்பின் வழியாகவே நான் அப்படியான ‘தெளிவுக்கு’ வந்து சேர்ந்திருக்கிறேன். அதற்கு என்னைத் தூண்டிய முன்னோடிகள் பலரை இவ்விடத்து நினைவுகூர்கிறேன்.

தனது கடிதத்தின் வழி, காதுகள் நாவலை ஒரு நவீன வாசகன் அணுகுவதற்கான சாத்திப்பாடுகளை ’சமகால அறிவு முகமூடி’ போட்டு ‘காயடிக்காமல்’ விசாலப்படுத்தியதற்கு அந்தியூராருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். சித்தர் மரபு, தொல்காப்பியர் கூற்று போன்றவற்றை ‘நவீன அறிவியல் உண்மைகள்’ போல நிறுவ அவர் முயலவில்லை அல்லது ‘நவீன அறிவுத்தரப்பைக் காட்டிலும் அவை சிறந்தவை” என்பதாகவும் தன் தரப்பைச் சொல்லவில்லை. கொஞ்சம் பொறுமையாக அவரின் கடிதத்தைப் படிப்பவர்களுக்கு அது நிச்சயம் புரிய வரும்.

அந்தியூராரை ஆதரித்தோ, அசோகனாரை எதிர்த்தோ நான் இக்கடிதத்தை எழுதவில்லை. ஒரு படைப்பை அணுகுவதற்கான பன்முகச்சாத்தியங்களை விசாலப்படுத்தும் வாசிப்பனுபவங்களை நமது ‘தட்டையான அறிவு’ கொண்டு ’ஒற்றையாகப்’ புரிந்து கொண்டுவிடகூடாது எனும் தெளிவிற்காகவே இதை எழுதுகிறேன்.

சத்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.