Jeyamohan's Blog, page 835
February 1, 2022
நாளை மற்றுமொரு நாளே- கிறிஸ்டி
   
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஷாகுல் அண்ணன் மூலமாக என் வாழ்வில் நிகழ்ந்ததை அறிந்துகொண்டீர்கள் எனத் தெரிந்துகொண்டேன். நிற்க.
இந்த 2022 புதிய வருடத்தின் துவக்கத்தில் ஜி.நாகராஜன் அவர்கள் எழுதிய “நாளை மற்றுமொரு நாளே” என்ற நாவலை எதிர்பாராது வாசிக்க நேர்ந்தது. க.நா.சுப்ரமண்யம் அவர்களின் “ஒரு நாள்” நாவலைப்போல் இதுவும் ஒருவனின் ஒருநாள் வாழ்க்கையைச் சொல்லிச் செல்வது. அந்த நாவலாகட்டும் இந்த நாவலாகட்டும், அந்த ஒருநாளில் அந்நாவலில் வரும் அனைத்து கதாமாந்தர்களின் அன்றாட வாழ்க்கையை தரிசிக்க முடிவதுதான் ஆச்சர்யம்! இந்நாவலின் முடிவில் நிகழ்வதென்னவோ அவனின் அன்றைய நாளைக்கு முந்தைய நாட்களில் அவன் செய்த வினைகளின் பயனைத்தான் அனுபவிக்கிறான் என்றாலும் ஒருநாளில் அவனின் வாழ்க்கை ஆரம்பித்து அன்றைய இரவுக்குள் அவனின் வாழ்க்கை முடிவதுபோல அற்புதமாக கதையை நகர்த்திச் சென்றிருப்பதுதான் நாகராஜன் அவர்களின் எழுத்துவன்மையாக எனக்குப்பட்டது. அதை நான் நாவலை முடிக்கையில் கண்டு ரசித்தேன்.
நாவலின் முன்னுரைகள், அந்நாவலுக்கு எழுதப்பட்டிருந்த பெரிய எழுத்தாளர்களின் மதிப்புரைகள் இவற்றை வாசிக்கையிலேயே எனக்கு உள்ளூற ஒரு நெருடல் அரும்பியது. ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே எதிர்மறையாக வாழ்க்கையை அணுகுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலையா வாசிப்பது என்று. ஆனாலும் என்னதான் எழுதப்பட்டிருந்தாலும் நம் மனதை சிதறவிடக்கூடாது என ஒருவாறு என் மனதை தயார்படுத்திக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து முழுமூச்சாக விடாமல் வாசித்தால் ஒன்றிரண்டு மணிநேரங்களில் வாசித்து முடித்துவிடலாம்தான். ஆனால் எனக்கு அப்படி நேரம் தொடர்ந்து கிடைக்காததால் நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டேன். அப்படி கிடைத்த நேரங்களிலும் தொடர்ந்து என்னால் வாசிக்க இயலா அளவுக்கு அழுத்தமும் ஆழமும் மிக்க வரிகள் என்னை வாசிப்பதை நிறுத்தவைத்து அந்த கணத்தைக் கடக்க இயலாமல் அந்த மனபாரத்திலிருந்து என்னைத் தப்பிவித்துக்கொள்ள அமைதியான உறக்கத்தைத் தேடவைத்தன.
பின் ஒரு க்ஷணத்தில் திடுமென மீண்டும் எழுந்துகொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பேன். ஒரு சராசரி மனிதன் தன் அன்றாட வாழ்வில் இவ்வுலகில் இச்சமுதாயத்தில் சந்திப்பதென்ன என்பதை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதன்மூலம் மிகவும் இயல்பாகக் கூறிச் சென்றிருக்கிறார். அவன் சந்திக்கும் அத்தனை பேரிடமிருந்தும் நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். எத்தனை ஏமாற்றங்களும் தோல்விகளும் வந்தாலும் அவற்றை எப்படி சமாளிப்பது என்றும் தெரிந்துகொள்ளலாம். அதேசமயம் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அதை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்றும் கற்றுக்கொள்ளலாம். ஒருவன் தன் ஒவ்வொரு அடியையும் எத்தனை கவனமுடன் எடுத்துவைக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அடிசறுக்கியிருந்தாலும் தன்னை எப்படி மீட்டெடுத்துக்கொள்வது என்றும் கற்றுத் தருகிறது இந்நாவல்.
எனக்கு இந்நாவலை எனக்குகந்த நேர்மறை நாவலாகவே எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. இது அவருடைய உண்மை வாழ்க்கையோ அல்லது அவர் பிறரிலிருந்து கண்டெடுத்த புனைவோ எனக்கு அவையெல்லாம் அவசியமில்லாத ஒன்று. இந்நாவல் என் எதிர்கால வாழ்க்கைக்கு எத்தனை உறுதுணையாக இருந்து வழிகாட்டப்போகிறது என்பதுதான் முக்கியம். அந்தவிதத்தில் எனக்கு படிப்பினையாகவும் நான் என் வாழ்வில் சந்தித்த நபர்கள் என்ன தவறுகள் செய்தார்கள் , அவர்கள் இந்நாவலை வாசித்திருந்தால் ஒருவேளை இப்படி அவஸ்தைப்பட்டிருக்கவேண்டாமே, சுகமாக இவ்வுலக வாழ்வை அனுபவித்திருக்கலாமே என்ற ஆதங்கமும் வேதனையும்தான் தோன்றியது. என்னைப்போல சிலர் இப்படிப்பட்ட வாழ்க்கையை கனவில்கூட எண்ணிப்பார்த்திருக்கமாட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்நாவல் ஒரு புதிய வாழ்க்கை அனுபவம்.
இந்த நேரத்தில் இன்னுமொரு முக்கியமான விஷயத்தை நான் இங்கு பதிவுசெய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஜி.நாகராஜன் அவர்களைப் பற்றி எதிர்மறையாகக் கேள்விப்பட்டிருந்ததாலோ என்னவோ மிகவும் பயந்து ஒரு மனவிலக்கத்தோடேதான் ஒவ்வொரு பக்கங்களையும் ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன். ஏனெனில் சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வாசிக்க ஆரம்பிப்பேன். ஆனால் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களையும் வார்த்தைகளையும் கண்டு மேற்கொண்டு அப்புத்தகத்தையே வாசிக்க மனம் ஒவ்வாமல் அவர்களின் எந்த படைப்பையும் இனி வாசிக்கவேகூடாது என்றெல்லாம் வன்முடிவு எடுத்திருக்கிறேன். கெட்டவார்த்தைகளைக்கூட கேட்டுவிடலாம். வாசித்துவிடலாம். ஆனால் அசிங்கமா பேசினாலும் எழுதியிருந்தாலும் அது எனக்குப் பிடிக்காது.
உண்மையில் எங்கே இவரும் அப்படி ஏதாவது எழுதிவைத்து என் உள்ளத்தை சுக்குநூறாக்கி ஏமாற்றமடைய வைத்துவிடுவாரோ என்று பார்த்து பார்த்து வாசித்தேன். நல்லவேளை நான் பயந்தபடி அவரின் ஒரு சொல், ஒரு வார்த்தை கூட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் இந்நாவல் முழுவதும் ஒரு கட்டுப்பாடற்ற கட்டற்ற வாழ்க்கைகளைத்தான் விவரிக்கிறது. அவமானங்களும் வலிகளும் ஏமாற்றங்களும் வேதனைகளும் நிறைந்த நாவல். வேசிகளும் காமுகன்களும் அனைத்து வகை சுரண்டல்காரன்களும் நடமாடும் நாவல்தான். ஆனால் அவர் உபயோகப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் பண்பாடான வார்த்தைகள். எந்தவொரு வார்த்தையும் சொல்லும் மனதை சுழிக்கச்செய்யவோ அசூயை உணர்வை ஏற்படுத்தவோ இல்லை. ஆனால் அங்கு நிலவிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு எண்ணத்தையும் என் உள்ளத்திற்கு கடத்தியது. என்னால் அங்கு நடப்பதை அங்குள்ளோர் மனதில் நினைப்பதை எழுத்தாளர் கூற வருவதை விவரிக்க முயல்வதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ரசனையிழை அறுபடாமல் தொடர்ந்து விரும்பி வாசிக்க இயன்றது. உண்மையில் அவரின் தமிழெழுத்துக்கு அத்தகைய வல்லமை இருக்கிறது போலும். இன்னும் இன்னும் அவரின் படைப்புகளை தேடி வாங்கி வாசிக்கவேண்டும் என்ற உந்துதல் கூட ஏற்பட்டிருக்கிறது.
இத்தகைய எழுத்தாளர் தன் இன்னுயிரை இழக்குமுன் அவர் விரும்பிய உலகைக் கண்டாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக தன் உள்ளத்தை எழுத்தாக்கியதன் மூலம் இந்த மனிதனின் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை, அவன்மீது அனுசரணையாகத்தான் இருந்திருக்கிறார் எனத் தெள்ளத் தெளிவாகிறது. அவரின் எழுத்துக்கள் இந்த மானுடம் உள்ளவரை அவனை வழிநடத்தும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
அன்புள்ள
கிறிஸ்டி.
கல்குருத்தை வாசித்தல்
அன்புள்ள ஆசிரியருக்கு,
‘கல்குருத்து’ கதையை வாசித்து முடித்ததிலிருந்து அதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டு இருந்தது. அதற்காக வரும் வாசகர் கடிதங்களையெல்லாம் வாசித்துக் கொண்டேயிருந்தேன். கதையின் பல நுட்பங்களை முன்வைத்தபடி ஏதோ ஒரு தனிப்பார்வை வரப்போகிறது என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தக் கதை ஏன் இத்தனை முறை நினைவுகளில் வந்து கொண்டேயிருக்கிறது என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அழியா மனச் சித்திரமாக, மலைமாடனும் மாடத்தியுமாக இக்கதையில் வந்து அமர்ந்திருக்கும் அந்தக் கிழவனும் கிழவியும் தான் இதனை இத்தனை விசேஷமானதாக ஆக்கியிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
என் தாத்தாவும் பாட்டியும் இப்படித் தான் இருந்தார்கள். அவர்களிருவரும் மதியம் இரண்டு முதல் மூன்று நான்கு மணி வரை ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்து கொண்டு இப்படித் தான் சம்பந்தமில்லாமல் பேசிக் கொள்வார்கள். பேச்சு என்றால் ஒரிரு வார்த்தைகள் தான் அவர்களின் பேச்சு. ஒருவரை பார்த்து ஒருவர் கூட அமர்ந்து கொள்ள மாட்டர்கள். தாத்தா சேரில் அமர்ந்து கொண்டால், பாட்டி எதிர்திசையில் கால் நீட்டிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தபடி அமர்ந்திருப்பாள், முட்டியை நீவியபடி, கடந்த காலத்தை அசை போட்டபடி. நாங்கள் குழந்தைகள் யாராவது அருகில் இருந்தால், தாத்தா ஏதாவது பழங்கதைகள் சொல்ல ஆரம்பிப்பார். பாட்டி கேட்காதது போலத் தான் இருக்கும், ஆனால் அவ்வப்போது புன்னகைத்துக் கொள்வாள், அல்லது உன் தாத்தாவுக்கு என்ன தெரியும் என்று செல்லமாக உடல்மொழியில் அலுத்துக் கொள்வாள். நீட்டப் பல்லும் சுருங்கிய தோலும் கொண்ட முகமாயினும், அத்தருணங்களில் ஒரு அழகிய சோபை அவள் முகத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். எனக்கு அவள் நொடிப்புகளையும், பின் அவளில் குடியேறும் மெல்லிய வெட்கத்தையும், அவ்வப்போது சட்டென்று ஒளிரும் அவள் கண்களையும் பார்க்க மிகவும் பிடிக்கும். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் தாத்தாவுக்கும் அவை தான் பிடித்திருந்தன என்று தோன்றுகிறது.
இக்கதையில் வரும் மாடனுக்கும் மாடத்திக்கும் (அவர்களை அவ்வாறு தான் அழைக்கப் போகிறேன்.) இவ்வளவு communication கூட இல்லை, வெளிப்படையாக. ஆனால் Subconscious level-ல் அவர்கள் நிரந்தரமாக connect ஆகியிருக்கிறார்கள். அவளை மொத்தமாக அவருக்குத் தெரியும், அவளின் பொருளில்லாச் சொற்கள், உடல் மொழி , சொல்லாச் சொற்கள் என அனைத்தும். அவளுக்கும் தான். அவர்கள் உலகைப் பற்றி நமக்குத் தான் ஒன்றும் தெரியாது. அவர்களின் மொழி பறவைகளின், மிருகங்களின், எவற்றின் காதல் மொழியை விடவும் நுட்பமானது. இந்தக் கயிறு தான் அவர்களை இத்தனை வயது வரை இவ்வுலகில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஒருவரை விட்டு பிரிந்து செல்ல மற்றவருக்கு மனமேயில்லை. அதிமதுரத்தின் ருசி அறிந்தவர்கள் அவர்கள் இருவரும்.
ஒரு வகையில் இதற்கு முந்தைய கதையான ‘கேளாச் சங்கீதமும்’ இது போன்ற ஒரு connect-ஐயே பேசுகிறது. ஒரு சொல் இல்லை, ஒரு உடல் மொழியில்லை, வெறும் எண்ணங்களால் மட்டுமே உருவாகும், அகம் மட்டுமே அறியும் ஒரு தொடர்பு. அவனை பித்து கொள்ள வைக்கும் அவர்கள் மட்டுமே அறிந்த அவர்களின் ஒரு இணைப்பு. நீலத்தின் பிச்சி, ராதைக்கு கண்ணனிடம் இருந்ததைப் போல. வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று அவர்கள் நம்பும் அவ்விணைப்பை, உலகமே முதல் நொடியிலிருந்தே அறிந்து வைத்திருப்பது தான்.
இக்கதையில் கிழவி பேசும் சொற்களை மட்டும் தொகுத்துப் பார்த்தால், அழகம்மைக்கு குழந்தை உண்டாகியிருப்பது, அழகம்மைக்கு முன்னால் கிழவிக்குத் தெரிந்து விட்டது என்று எனக்குத் தோன்றியது. அதனால் தான் அவள் கருப்பட்டி கேட்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டேன்.
இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அம்மி கொத்தும் அப்பெண்மணிக்கும் அது தெரிந்து தான் விட்டது எனத் தோன்றுகிறது. அழகம்மையை நேரில் பார்த்திருந்தால் நானும் சொல்லியிருப்பேனாயிருக்கும்:)
சொற்களை மீறிய சொற்களே தேவையற்ற ஒரு மொழியைப் பற்றிய கதைகள் இவ்விரண்டும். அந்தர்தியானமாக ஓடிக்கொண்டிருக்கும் அப்பெரு நதி தான் எத்தனை பிரம்மாண்டமானது. எத்தனை சத்தியமானது. எத்தனை இனியது. எத்தனைச் சுழல்கள் நிறைந்தது.
அன்புடன்,
கல்பனா.
கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு யுவபுரஸ்கார்
கேந்த்ரிய சாகித்ய அக்காதமி வழங்கும் இளம்படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருது 2021 ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய நட்சத்திரவாசிகள் என்னும் நாவலுக்காக இவ்விருதைப் பெறுகிறார். கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு வாழ்த்துக்கள்.
   
கார்த்திக் பாலசுப்ரமணியம் இணையதளம்
கார்த்திக் பாலசுப்ரமணியம் படைப்புகள் சில
நட்சத்திரவாசிகள் வாசிப்பனுபவம்
நட்சத்திரவாசிகள் – கார்த்திக் பாலசுப்பிரமணியன்
நட்சத்திரவாசிகள் – வாசிப்பனுபவம்
நட்சத்திரவாசிகள் வாங்கJanuary 31, 2022
மொழியாக்கங்களை வாசிப்பது
ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்
போரும் அமைதியும் மொழியாக்கங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள் மட்டுமே வாசித்து வந்த நான் இப்பொழுது ஒரு மாறுதலுக்காக பிறமொழி இலக்கியங்ககள் வாசிக்க முயல்கிறேன்.ரஷ்ய இலக்கியங்கள் பற்றியும் லியோ டால்ஸ்டாய் பற்றியும் உங்களது உரை கேட்டேன்.
பெரும்பாலானவர்களின் பரிந்துரையின் பேரில் லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலை வாங்கியுள்ளேன் .ஆனால் என்னுள் ஒரு சந்தேகம், ஒரு தயக்கம் ஏற்படுகிறது.
இது எதனால் இன்று விளக்க முடியுமா?
துரை தமிழ்குமரன்
அன்புள்ள துரை,
உங்கள் தயக்கத்திற்கான காரணங்கள் இவை. இவற்றை பலரும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
அ. நீங்கள் முன்னரே அறிந்த வாழ்க்கைச்சூழலை இங்குள்ள இலக்கியங்களில் வாசிக்கிறீர்கள். அறியாத சூழலுக்குள் செல்ல உளத்தடை இருக்கிறது
ஆ. அயல் இலக்கியங்களின் மொழிநடை, குறிப்பாக உரையாடல் அன்னியமாக இருக்கிறது
இ. அயல்மொழி இலக்கியங்களின் மையக்கதாபாத்திரங்களுடன் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
இம்மூன்று தடைகளையும் நாம் எளிதில் களையலாம். இன்னொரு வாழ்க்கைச்சூழலை அறிந்தபின் நாவலை வாசிக்கவேண்டியதில்லை. வாசித்துச்செல்லும்போது போகிறபோக்கில் மெல்ல அவை நமக்கு அறிமுகமாகட்டும் என்று விட்டுவிடலாம். ருஷ்ய இலக்கியம் ஒன்றை முடித்துவிட்டால் அதன்பின் ருஷ்ய இலக்கியங்களில் இச்சிக்கல் இருக்காது
அன்னியத்தன்மைகொண்ட மொழி ஒரு சிக்கல்தான்.ஆனால் அதை நாம் நம்முடைய உரையாடல்மொழியாக நமக்குள் ஆக்கிக்கொள்ள முடியும்.
அயல்நாட்டுக் கதாபாத்திரங்களின் புற அடையாளங்களை தவிர்த்து அவர்களின் அகத்தன்மை சார்ந்து ஓர் அடையாளத்தை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, ஓர் இராணுவ வீரன் நமக்கு அன்னியன். ஆனால் அவன் ஒரு சந்தேகவாதி என்றால் நம்மால் அவனுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
எந்தக்கலையும் அதில் ஈடுபடுவதன் வழியாகவே பயிலப்பட இயலும். ஒரு கலையை பயில சிறந்தவழி கண்ணைமூடிக்கொண்டு கொஞ்சநாள் அதில் இருப்பதுதான். அயல் இலக்கியங்களை வாசித்தே தீர்வேன் என ஒரு நாலைந்து நாவல்களை வாசித்தல்போதும், உள்ளே நுழைந்துவிடலாம்.
ஏன் அயல் இலக்கியங்களை வாசிக்கவேண்டும்? முதல் காரணம், நமக்கு பேரிலக்கியங்களை வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவு. எந்த மொழியிலும் பேரிலக்கியங்கள் பல உருவாக முடியாது. ஆகவே மொழியாக்கம் வழியாகவே அவற்றை அடையமுடியும். இரண்டாம் காரணம், வெவ்வேறு வாழ்க்கைமுறைகள் வாழ்க்கைநோக்குகளை நாம் அயல் இலக்கியம் வழியாகவே அறியமுடியும்
அயல் இலக்கியங்களில் நாம் வாசிக்க அணுக்கமானது ருஷ்ய இலக்கியமே. அது சீரான நல்ல மொழியாக்கங்களில் கிடைக்கிறது. ஐரோப்பிய பண்பாட்டை அது பேசினாலும் அதன் அடிப்படை உளவியல் கீழைநாட்டுத்தன்மை கொண்டது. ஆகவே நமக்கு அண்மையானது
ஆனால் மொழியாக்கங்களை வாசிப்பதற்கு முன் அவை சரளமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா என இன்னொரு வாசகரிடம் உறுதிசெய்துகொள்ளவும். தமிழில் ஏராளமான மொழியாக்கங்கள் மிகமிக மோசமான நடை கொண்டவை. வாசிக்கவே முடியாதவை.
ஜெ
சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு
மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்
போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்
போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு
ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…
தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா
ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்
திருவள்ளுவர் திருநாள் எது?- பா இந்துவன்.
1935 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் வழிபாடு செய்த மறைமலை அடிகளார் அடங்கிய அறிஞர் குழு திருவள்ளுவர் தினமாக வைகாசி – அனுசம் – மே 18 ஆம் தேதியை அறிவித்தனர். இதை 1963 -ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவும் வைகாசி அனுசத்தையே திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார். அதுபோல் 1966 ஆம் ஆண்டும் ஐயா பக்தவத்சலம் அவர்கள் ஜூன் 2 வைகாசி அனுசத்தையே கடைபிடிக்கிறார். ஆனால் 1971 – ஆம் வருடம் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஜுன் 2 லிருந்து ஜனவரி 15, தமகழ் மாதம் தை 2 க்கு திருவள்ளுவர் தினத்தை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மாற்றினார். இதை சற்று விரிவாக இந்த பதிவில் வைகாசி அனுசத்தை திருவள்ளுவர் தினமாக முன்மொழிந்த அறிஞர்களின் கருத்துரைகளை கேட்போம்…!
இதுபற்றிய நீண்ட விவாதங்கள் நடந்து அவை ஓய்ந்தன என்றே சொல்லலாம். ஏனெனில் இது அத்தனை அரசியல் பின்னணியைக் கொண்டது. சரி மறைமலை அடிகள் அடங்கிய 500 பேர் கொண்ட குழு தையை புத்தாண்டாக அறிவிக்கவில்லை என்பதை எது நமது புத்தாண்டு என்ற பதிவில் பார்த்தோம். அவ்வகையில் 1935ல் வெளிவந்த “திருவள்ளுவர் நினைவு மலர்” என்ற நூலில் மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாட்கழகத்தை சேர்ந்தவர்கள் எடுத்த முடிவுகளாக வெளிவந்த தகவல்களை வைத்து திருவள்ளுவர் பிறந்தநாள் எதுவென காண்போம்…!
1935 ல் திருவள்ளுவர் திருநாட்கழகத்தை சேர்ந்த பெரும்பான்மையான தமிழறிஞர்கள் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்ற வாதத்தை முன்னெடுத்துள்ளனர். அவ்வகையில் அக்கால பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை முதலில் பார்ப்போம். அதற்கு முன்பு அக்கழகத்தை சேர்ந்தவரகள் வைத்த வேண்டுகோள்களைப் பாரக்கலாம்,
பத்திரிகைகள், சங்கங்கள், கல்வி நிலையங்கள் முதலான பொது நிலையங்கள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுஷத்தன்று கொண்டாட வேண்டும். இதனுடன் சில நாட்கள் சேர்த்து அந்த வாரம் முழுவதும் திருவள்ளுவர் வாரமாக கொண்டாட வேண்டும்.பத்திரிகைகள் யாவும் திருவள்ளுவர் திருநாள்மலர் வெளியடுதல் வேண்டும்.3.சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள் முதலியன திருவள்ளுவர் திருநாளான வைகாசி அனுஷத்தன்று பெரும் விழாக்கள் நடத்த வேண்டும்.
திருவள்ளுவர் திருநாளாகிய வைகாசி அனுஷத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.5.நாட்குறிப்பு,நாட்காட்டி முதலியன வெளியிடுவோர் வைகாசி அனுஷத்தை ஆண்டுதோறும் குறித்தல் வேண்டும்.
யாவும் திருவள்ளுவர் தொடர் ஆண்டை வழங்குதல் வேண்டும்.இவைதான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தில் வேண்டுகோளாக வைக்கப்பட்டவை. அடுத்ததாக மேலே கூறியதைப்போல் அக்காலத்தில் பத்திரிகையில் வந்த தகவல்களை பார்க்கலாம்,
செந்தமிழ்ச்_செல்வி:(1958 வைகாசி மாதம்)
திருவள்ளுவர் திருநாளானது பல பேரறிஞர்களின் முயற்சியால் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் 23.05.1953 முதல் 6 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நாட்கள் பொன்நாட்கள் என்று போற்றப்படவேண்டியதாகும். இதில் பல பேரறிஞர்கள் கலந்து திருக்குறளை மேற்கோளிட்டு விரிவுரை ஆற்றினார்கள். ஆக ஆண்டுதோறும் தவறாது வைகாசி அனுஷத்த்தன்று திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுமாறு மாந்தர்களையும், கழகங்களையும், நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் கேட்டுக்கொள்கிறோம்…!
ஆத்ம_ஜோதி : (1958 வைகாசி மாதம்)
திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதன் நோக்கம் அவரின் வாழ்க்கையிலும், வாக்கிலும் நாம் பிறவி எடுப்பதே ஆகும். தமிழர்கள் தங்கள் வாழ்வில் தினம் ஒரு குறளை சிந்திக்கவில்லை எனில் அந்நாள் அவர்களுக்கு பிறவா நாளே ஆகும். அவ்வகையில் திருவள்ளுவர் திருநாட்கழகத்தோரில் பெரும்பான்மையான பேரறிஞர்கள் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுஷத்தை நாம் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட வேண்டும்.
இலங்கை தமிழர்கள் அதிஷ்ட்டசாலிகள். ஏனெனில் புத்தர் பெருமானின் பேரால் வைகாசி அனுஷத்தன்று அரசு விடுமுறை ஏற்கனவே உள்ளது. வைகாசி விசாகத்திற்கு விடுமுறை விடும் இந்திய அரசும் அதற்கு அடுத்த நாளும் விடுமுறை விட வேண்டும்….!
இது தவிர்து குமுதம், திருவள்ளுவர், ஆனந்தன்,கதிரொளி, தமிழோசை முதலான பல பத்திரிகைகள் இதன் ஒத்த கருத்துகளையே 53, 54களில் செய்தியாக வெளியிட்டுள்ளன. அடுத்தாக திருவள்ளுவர் திருநாட்கழகத்தில் பங்கேற்ற பேரறிஞர்களின் உரையையும் காணலாம்,
இதற்கான பேரறிஞர்களின் ஆதரவுரைகள் :
பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை :
24.02.1954 ல் எழுதியதாவது, திருவள்ளுவர் திருநாளை பெரும்பாலும் வைகாசி அனுஷத்தன்று தான் கொண்டாடுகிறோம். இவ்வாண்டும் 18.5.1954 துவங்கி அத்திருநாள் பல கழகங்களில் கொண்டாடப்படுவுள்ளது. சென்னை அரசாங்கம் திருவள்ளுவர் திருநாளை அரசு விடுமுறையாக மாற்றுவதற்கு இன்னும் சில காலம் செல்லும். தென்காசியில் 18.05.1954 ல் நடைபெறும் திருவள்ளுவர் திருநாளன்று நானும் கலந்துகொண்டு பேசுவேன்….!
மா.பொ. சிவஞான கிராமணி :
15.03.1954 ல் தமிழக மாநில கழகத்தலைவராக இருந்தபோது எழுதியதாவது, திருவள்ளுவர் திருநாள் பற்றி திருநாட்கழகம் எடுத்த முடிவை வரவேற்கிறேன். வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதில் நானும் தமிழக கழகத்தாரும் பரிபூரணமாக ஒத்துழைப்போம்….!
இப்படி இராமநாத செட்டியார், இராச மாணிக்கனார், கந்தசாமி முதலியார், கவியோகி சுத்தானந்த பாரதியார், வரத தஞ்சையன், வைநாகரம் இராமநாத செட்டியார் போன்ற பல பேரறிஞர்கள் வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட அனுமதித்ததை திருவள்ளுவர் மலர் பதிவு செய்கிறது…!
அடுத்ததாக வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்பதற்கான அடிப்படை காரணங்கள் என்ன???
முக்கியமாக திருமயிலையில் திருவள்ளுவர் கோயில் ஒன்று உள்ளதை நாம் அறிவோம். அறிவிலும், வீரத்திலும், கற்பிலும் சிறந்தோரை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் மரபு. தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கா அமைக்கப்பட்ட திருமயிலைக்கோவிலைப்பற்றி பின்வருமாறு மறைமலை அடிகளார் கூறுகிறார்,
இன்றும் அவ்விருப்பை மரமும் அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவத்தை நிறுத்திய கோயில் திருமலையில் உள்ளது. 1837 ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணபெருமாள் ஐயர் பதிப்பித்த திருக்குறள் பதிப்பிலும் இக்கோயில் பற்றிய தகவல் உள்ளது. இக்கோயிலும் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது என்றார்…!
அடுத்ததாக கழகத்தோர் வைத்த காரணங்கள்:
தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக வைகாசி அனுஷத்தையே வள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.1935 லும் திருநாட்கழகத்தோர் வைகாசி அனுஷத்தையே வள்ளுவர் திருநாளாக கொண்டாடினர். அதற்கு அவர்கள் வைத்த காரணமும் பல நூற்றாண்டுகளாக வள்ளுவர் திருநாள் வைகாசி அனுஷமே என்பதாகும்.மறைமலை அடிகள், கல்யாண சுந்தரனார், வேங்கடசாமி நாட்டார் முதலிய பேரறிஞர்களும் திருவள்ளுவர் திருநாளாக வைகாசி அனுஷத்தையே முன்மொழிந்துள்ளனர்.கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் திருநாட்கழகத்தோர் இதே நாளில் தான் திருவள்ளுவர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.திருமயிலை திருவள்ளுவர் கோயிலும் பல்லாண்டுகளாக வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருகிறது.திருவள்ளுவர் தொடர் ஆண்டை நிலை நிறுத்தவும், திருக்குறளின் கருத்துகளை பரப்பவும், திருக்குறள் நாட்குறிப்பை 1922லேயே வெளியிட முயன்ற சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தினரால் போற்றப்படுகிறது.மேற்கூறியபடியே கழக நாட்குறிப்புகளிலும், பஞ்சாங்கங்களிலும் குறிப்பிடப்பட்டு வருகிறது.சென்ற ஆண்டு தமிழ் மக்கள் வாழும் இடங்களில் உள்ள பல கழகங்களில் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.சென்னை, திருச்சி, கொழும்பு போன்ற பல வானொலி நிலையங்களாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கை அரசு விடுமுறை வழங்கி உள்ளதோடு தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளிலும் இவ்வழக்கமே பின்பற்றப்படுகிறது.இறுதியாக பேரறிஞர்கள் அமர்ந்திருந்த அந்த அவையில் அண்ணாவும், ராமசாமி நாயக்கரும் கூட அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட கூடாது என்றோ தை 2 ல்தான் கொண்டாட வேண்டும் என்றோ கூறியதாக எந்தவொரு குறிப்பும் இல்லை. அதோடு அண்ணா முதல்வராக இருந்த காலத்திலும் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தை 2 ல் தான் திருவள்ளுவர் திருநாள் வரும் என்பதற்கு ஆதாரமாக 1921ல் நடந்த பேரறிஞர்கள் குழுவை முன்மொழிவோருக்கு இந்த பதிவை காட்டுங்கள்….!
(Source : திருவள்ளுவர் திருநாள் மலர்)
– பா இந்துவன்.
அஜ்மீர் கடிதங்கள்-5
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
அஜ்மீர் தர்கா முன்பாக தலைக்குல்லா அணிந்து நீங்கள் நிற்கிற ஒளிப்படத்தைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் ஒருவித உளயெழுச்சி தோன்றுகிறது. என்னுடைய தாத்தா தீவிரமான சிவபக்தராக இருப்பதை சிறுவயதிலிருந்தே வீட்டில் கண்டு வளர்ந்திருக்கிறேன். அதிகாலைப் பொழுதில் தேவாரம், திருவாசகம் பாடி தெய்வங்களைத் துதித்தபிறகே தன்னுடைய அன்றாடத்தை அவர் துவக்குவார். அப்பொழுது என் அம்மா, நாகூர் ஹனிஃபா பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடலை இறுதியாக ஒலிக்கச்செய்வார். தேவார, திருவாசக துதிகளின் நீட்சி எல்லாம்வல்ல ஏகயிறையைத் தொழுதுவணங்கும் அந்த இசைப்பாடலோடு நிறைவுகொள்ளும். ஏதோவொருவகையில் இசுலாத்தின் பச்சைநிறம் இறைக்கருணையின் குறியீடாகவே என் மனதில் பதிந்திருக்கிறது.
தர்கா வாசலில் நீங்கள் நிற்கிற ஒளிப்படம் ஏதோவொரு உதிர்ப்பின் நற்கணத்தை மனதுக்கு நிறைவுறுத்துகிறது. வெண்முரசு என்னும் பேரெழுகையின் நிழல்கூட படியாத இடத்திற்கு நீங்கள் விலகநிற்க விரும்புவதன் ஆன்மீகமான உள்ளர்த்தத்தை மீளமீள யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பாலையில் உதித்தப் பெருநிலவைக் கண்டு, ஆசான் வைக்கம் முகமது பஷீர் அழுதுகூசிய அதியுன்னத மனோபாவத்தை இக்கணம் நினைத்துக்கொள்கிறேன்.
ஈரோடு டாக்டர் ஜீவா அவர்களின் நினைவாகத் துவங்கப்பட்ட அறக்கட்டளை வாயிலாக, ஒரு முக்கியமான செயற்பணியைத் தொடங்குவதற்கான நல்லதிர்வையும் நம்பிக்கையையும் இந்த ஒளிப்படத்திலிருந்து நான் கண்டடைந்துகொள்கிறேன். எத்தனையோ வசைகள், ஐயப்பாடுகள், திரிபுகள் என அனைத்துக்குமான பதிலாக இந்த ஒளிப்படம் ஓர் மெளனத்தை அளிக்கிறது. வெண்குவைமாடத்துப் பெருவாசலின் கீழ் வெண்முரசின் நினைவுகரைவது, ஊழ்கத்தின் இறையாசி என்றே திரும்பத் திரும்ப மனதிற்குள் தோன்றுகிறது.
நன்றியுடன்,
சிவராஜ்
அன்புள்ள ஜெ
அஜ்மீர் பயணக்கட்டுரைகளை மிகுந்த மனஎழுச்சியுடன் வாசித்தேன். அதை வாசிக்கும்போதுதான் எனக்கே எந்த அளவுக்கு உள்ளூர இறுக்கங்கள் இருந்திருக்கின்றன என்று தெரிந்தது.நான் இதுவரை தர்காக்களுக்குச் சென்றதில்லை. சூபி இசை கேட்டதுமில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு பண்பாடே அறிமுகமானதுபோல் இருக்கிறது. ஆன்மிகம் என்றால் நம்மை நாமே முடிச்சுகளை அவிழ்த்து விடுதலை செய்துகொள்வதுதான் என்று சத்குரு சொல்வதுண்டு. அந்த அனுபவம் இக்கட்டுரைகளில் இருந்து கிடைத்தது. நன்றி
ஜெயப்பிரகாஷ்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
சடம் கடிதங்கள்-3
அன்புள்ள ஜெ,
‘சடம்’ சிறுகதை வெறுமே உரையாடல் வழியாகச் சென்று சட்டென்று மிக உச்சத்தை அடைகிறது. கதையிலிருக்கும் தத்துவம் வாழ்க்கை பற்றிச் சிந்திப்பதற்கு இன்னும் இன்னும் திறப்புகள் தந்தவாறு இருப்பது இனிய அனுபவம். சுடலைப் பிள்ளை ஏறக்குறைய சடம்; அவரிடம் சித்தம் பெரிதாக இல்லை. தன்னிடம் இருக்கும் அதிகாரம் ஊடாக அவர் சீரழிக்கும் பெண்கள் சார்ந்து அவருக்குக் குற்றவுணர்வோ, மானுடம் சார்ந்த அறவுணர்வுகள் தீண்டப்படும் இடங்களோ இல்லை. வாதம் வந்து படுக்கையிலிருக்கும் மனைவி அவருக்குச் சவமாகத் தெரிகிறாள்; அவளுடன் கூட இயலவில்லை. ஆனால், இப்போது அவர் புணர்வது நிஜமான பிணத்தை. அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சித்தமும் விலகிச்செல்ல – அவரே திகைப்புடன் விலகி நின்று தான் செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரை மீறி அந்தச் செயல் நிகழ்கிறது. சித்தம் இல்லாத இறந்த அந்தப் பெண்ணுடலுடன், சித்தம் இல்லாத சுடலைப் பிள்ளையின் உடல் கலவி கொள்கிறது. அங்கே இறுதியில் நிகழ்வது என்ன? சித்தத்தை வெல்ல சடம் அடையும் முயற்சியா? பாறைப்பரப்புகள் சருமம்போல் உயிர் கொள்கின்றன. அவளது உடல் சித்தம் கொண்டு அவரை அணைத்துக் கொள்கிறது. சித்தமற்ற சடங்களின் இணைவில் பிறப்பது சித்தம் என்றாகிறது. எனக்குப் பிக் பாங் தியரியையும், உலக உருவாக்கத்தையும் நினைவுபடுத்தி யோசிக்க வைக்கிறது.
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெமோ,சடம் சிறுகதை பற்றிய என்னுடைய புரிதல். அடுத்தவர் மீது ஒவ்வொரு கணமும் அதிகாரத்தை செலுத்த நினைக்கும் கோழை மனம் தான் சுடலைப்பிள்ளையுடயது. அவர் செய்யும் பாலியல் வல்லுறவுகள் அவர் செலுத்த நினைக்கும் அதிகாரத்தையும் காட்டுகின்றன. சவம் போல் இருக்கும் பெண்ணை கூட புணர விரும்பாதவர் கடைசியில் நிஜ சவத்தையே புணர்கிறார். அவரின் கீழ்மையை விலகி நின்று அவரது சித்தம் உணரும் கணத்தில் அவரது உலகில் உள்ள அனைத்தும் அந்த கீழ்மையை அறிகின்றன.வேல்முருகன்.மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
ஓலைச்சுவடி ஜனவரி இதழில் வந்த தங்களின் கதை ”சடம்” வாசிக்கும்போது வெண்முரசு முதற்கனல்- 1 ல் கத்ருதேவி காஸ்யபனிடம் அழியாமல் இருக்கும் ”இச்சை”தான் வேண்டும் என்று கூறும் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
சுடலை பிள்ளையில் இச்சையின் குணங்களான அகங்காரமும், காமமும் வெளிப்படுவதும் அவர் சிஜ்ஜடமாவதும் அற்புதமான வரிகள்.
அன்புடன்
ராஜசேகரன்
முதற்கனல் வாசிப்பு- லெட்சுமிநாராயணன்
சில மாதங்களாகவே, வெண்முரசிக்குள் நுழையலாம் என்ற எண்ணம் தயக்கத்தை மீறி மேலோங்கி வந்திருந்தது. தயக்கத்திற்குக் காரணம், வெண்முரசு கண்டிப்பாக உழைப்பைக்கோரும். வேறு எதையும் செய்யவிடாது. செயலற்றதன்மையை உண்டாக்கும். மனம் தயாராகவே இருந்தது. அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு வெண்முரசினுள் நுழைந்தாயிற்று:
மாபெரும் காவியம், அதற்கான தகுந்த நுழைவாயில். “முதற்கனல்”.
அன்று நிலவிய அரசியல் சூழல், அறநிலைகள், தர்க்கங்கள் ஆகியவற்றின் மீது தோய்ந்தெறியும் நெருப்பின் “முதற்கனல்”.வெண்முரசின் உச்சதருணங்கள் என நான் உணர்ந்தவற்றை உங்களுடன் பகிரவிரும்பியே இந்த கடிதம்.
யாகநெருப்பின் முன் , ஜனமேஜயன் – ஆஸ்திகன் உரையாடல்
“மொத்த காவியத்தின் சாரமே, முழு உலகின் இயக்கமே சத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் ஆகியவை முயங்கி, பின் நிகழும் தரிசனமே. அவை மோதி, முரண்பட்டு இறுதியில் சமன்பட்டு அடையும் ஒன்றே பொன்னுலகு. இவற்றுள் இச்சையை அழித்தால், அழிவது அந்த பொன்னுலகை அடைவதற்கான வழியே. இதுவா அறம்?” என கற்றறிந்த அவையை அதிரச் செய்கிறான். ஆஸ்திகன். இச்சையை அழிக்கும் பொருட்டு செய்யப்படும் வேள்வி முன் வைக்கப்படும் இந்த ஒற்றைக்கேள்வி, யுகயுகமாக, பொன்னுலகை அடைய விரும்பும் சீற்றம் கொண்ட எவனொருவனும் தனக்குள்ளும், மற்றவரிடமும் கேட்கும் கேள்வி. இவற்றுள் எதுவொன்றும் அழியாலாகாது என்பதே விடை. சத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் இம்மூன்றும் அவற்றுள் ஒன்றை ஒன்று பொருதி, பொருதுவதன் பொருட்டே தன்னை நிலைநிறுத்துபவை.
சத்தியவதி – பீஷ்மர் உரையாடல்
பீஷ்மர் செய்யும் யாவும் அறத்திற்கு எதிராகவே. ஆனால், அறத்தைக் காக்கும் பொருட்டு. அது அவர் அன்னையின் வரம்.ஒவ்வொரு மீறலின் முன்னும் பின்னும் நாம் அவரிடம் காட்டுவது பரிவே. இறக்கி வைக்க முடியாத அளவு, அவ்வாறே இறக்கி வைத்தால் மீண்டும் தோளில் ஏற்றி வைக்க முடியாத அளவு பாரம் அவர் மீது ஏற்றப்படுகிறது. அதுவும் தொடர்ந்து. சிறு வயது முதல். ஏன்? மிகவும் எளிமையான பதில். அவரன்றி வேறெவராலும் முடியாது என்பதாலேயே.
காசி ராஜன் பீமதேவன் மகள்களை சிறையெடுக்கும் பொருட்டு நிகழும் சத்யவதி-பீஷ்மர் உரையாடல், சிறையெடுத்தபின், மண நிகழ்வின் போது மறுமொழி கூறாமல் நடையைக் கட்டும் அன்னை மீதான பெருமதிப்பு, ஒவ்வொரு கணமும் அறத்தை காக்கும் பொருட்டு அறத்தை மீறுதல் என ஒரே கணத்தில் பிதாமகராவும், எளியவனாகவும் தோன்றுகிறார். இளவரசிகளை சிறையெடுக்கச் செய்தல், இளவரசிகள் கருவுறும் பொருட்டு, வியாசரை இம்முடிவை ஏற்கச் செய்வதாக, பீஷ்மரை அவர் வாயாலேயே கூறச் செய்யும் தருணம் என அனைத்திலும் “அரசகுலத்தி” ஆகிறாள் “மச்சகந்தி” சத்யவதி.
அம்பையின் மன ( மண ) வெளி – பயணம்
அம்பை ஒவ்வொருவராலும் கைவிடப்படும் போதும் அவர்களனைவரும் கூறும் ஒற்றைச்சொல் “அறத்திற்காக”. அறத்தின் வெம்மையால் முழுவதும் சுடப்பட்டவள். ஆனால் அவள் அறத்தின் வெம்மையால் கருகாமல், சிவக்கிறாள். சொல்லில், செயலில், உடையில் என அனைத்திலும் கனலால் சுடப்பட்ட இரும்புத்தண்டின் முனை போல. அவள் இந்த யுகத்திற்கானவளும் கூட. எல்லா யுகத்திற்குமானவள்.
முதற்கனலில் அம்பையின் பயணம் எனக்கு அபலையின் பயணமாகவே தோன்றுகிறது. காதலன் கிடைக்கவில்லை, தந்தையகத்தில் இடமில்லை, தாயால் அரவணைப்பும் கிட்டவில்லை, சரி சிறையெடுத்தவனுடன் இருக்கலாமென்றால் அவன் அறத்தை கொன்று, பின்னர் “அறம்” பேசியும் கொல்லுகிறான். அனைத்து அறங்களும், அம்பையின் முன் தங்கள் பெருங்கதவை சாத்திக்கொள்கின்றன. ஆனால், அம்பை சோரவில்லை. மாறாக, சம்மட்டியால் அடிக்கும் போது அதிரும் இரும்பைப்போல அதிர்வுற்று பின் ஆயுதமாகிறாள். பின் பித்தியாகிறாள். சிகண்டினியின் ஆன்மாவில் தன்னை உட்செலுத்தி “சிகண்டி”யாகிறாள். அதன்பின், சிகண்டியிடம் இருந்து அவளை பிரிப்பதற்கில்லை, குளிருலையில் இடைப்பட்ட செவ்விரும்பைப்போல சிகண்டிக்குள் அவள் தன்னை இறுக்கிக்கொள்கிறாள்.
அம்பை – பீஷ்மர் உரையாடல்
மிக அழகாக வரையப்பட்ட ஷண்முகவேலின் ஓவியம் இந்த உரையாடலின் சுருக்கத்தை, வீரியத்தை கடத்தியுள்ளது என சொல்லலாம். பின்னங்கால்கள் கட்டப்பட்ட யானை முன் அம்பை வேண்டும் காட்சி. பீஷ்மர், அம்பை இருவருக்கும் நாம் இந்த விவாதத்தில் தோற்றுவிடுவோம் என முன்னமே தெரிகிறது. இந்தக் கணத்தை/கனத்தை வெற்றிகரமாக கடக்க வேண்டும் என, அதற்கான சகல முயற்சிகளையும் செய்து பார்க்கின்றனர். இறுதியில், கால்கள் கட்டப்பட்டிருந்தாலும் யானை வெல்கிறது. ஆனால் அது அந்த கணத்தை மட்டுமேவெல்கிறது. அது யானைக்கும் தெரிந்துதான் நிகழ்கிறது.
அம்பிகை – விசித்திரவீரியன் உரையாடல்
முதற்கனலில் எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. முதற்கனலின் அறங்களையெல்லாம் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்ந்த ஓர் இலக்கியத்தருணம். ஒரு இலக்கிய தருணத்தின் உச்சம். முற்றிலும் வெறுக்கும் ஒருவரின் அகத்தை தனது அகத்திற்குள் எப்படி உள்வாங்குவது? அவ்வாறே உள்வாங்கும் பெண்கள் எல்லாக்காலத்திலும் இருந்தாலும், அதனை எழுத்தில் எப்படி நிகழ்த்துவது? அம்பிகை வேறு வழியின்றி விசித்திரவீரியனை தனக்குள் செலுத்திக்கொள்ள வில்லை அல்லது ஏற்கவில்லை. அவள் அவனை முதுமாக அறிந்து பின்னர் அவனாகிறாள். விசித்திரவீரியனின் இறப்பிற்குப்பின், அனைவரும் சத்தியவதி உட்பட தீர்க்கவியாதியசனான அவனிடம் இவள் எதைக்கண்டாள்? அவர்கள் அனைவரும் கண்டடையும் விடை “அகம்” .
மிகச் சாதாரணமான ஒரு முதலிரவுதருணம், இருவேறியற்கையான பகலும் இரவும் கூடும் அந்தித்தருணமாக, இரவும் பகலும் கூடும் புலரியாக, சுவை கூடுவது நிச்சயமாகவே ஓர் இலக்கியத்தருணம். இவை இரண்டும் சிறுபொழுதேயானாலும், நினைவில் நிற்கும் பெருங்கணங்கள். இருப்பில் எவ்வாறு நிகழ்ந்திருந்தாலும், இவ்வாறாகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. புனைவின் களி. இனி, பெருங்காதல் கதைவரிசைகளில் அம்பிகை – விசித்திரவீரியன் என இவர்களும் சேர்த்தே சொல்லப்படலாம்.
ஆடியின் ஆழம் பகுதி முழுவதும் அழகிய பின்னல்கள் நிறைந்த பகுதி. அம்பையின் ஆடியாகிய சிகண்டி, பீஷ்மர். அழிக்கும் பொருட்டு பீஷ்மரின் ஆடியாகிய பால்ஹிகரை சந்திக்கச்செல்லும் பயணம், மிக அழகான விவரணை. சிகண்டி, பீஷ்மர் மற்றும் பால்ஹிகரை இவர்கள் அனைவருமே ஆடிகள்தாம் . பீஷ்மர், சகோதரர்களை தாங்குவதால் பால்ஹிகரின் ஆடி. அம்பையின் பீஷ்மர் மீது வஞ்சினத்தின் ஆடி சிகண்டி. ஆனால் ஆடிகள் தங்குளுக்குள் மோதுவதால் நிகழப்போவது ஒன்றும் இல்லை, அவ்வாறு நிகழ்ந்தால் எஞ்சுவது என ஒன்றும் இல்லை என அறிந்தவர் பால்ஹிகர். பீஷ்மரை கொல்வதற்கு நீ முதலில் அவரை அறிய வேண்டும் ஆனால், அவ்வாறு அறிந்த பின் உன் எண்ணம் மாறலாம் என்கிறார் பால்ஹிகர். ஆடிகள் தங்களை உடைத்துக்கொள்ளும் பொருட்டே மோதுகின்றன, பீஷ்மரும் பால்ஹிகரும் போல. மாபெரும் பின்னல் இது.தன்னைக்கொல்லப்போவதாக தன்னிடம் சொல்லும் சிகண்டியிடம், பீஷ்மர் காட்டும் அமைதியின் கனிவில், அதற்காக அவன் வேண்டும் வித்தையும் கற்றுக்கொடுக்கிறார், நொடியில் பிதாமகராகிறார்.
இளகிய இலக்கிய தருணங்களில் இருந்து சற்றே விடுபட “ஜனநாயக சோதனைச்சாலையில்” நுழையலாம் என இருக்கிறேன். உங்களை கடப்பது சற்று கடினமாகத்தான் உள்ளது. நீலம் வாசிக்கப்போவது இல்லை. கேட்கலாம் என இருக்கிறேன். முதற்காரணம் சுபஸ்ரீ அவர்கள். நீலத்தில் இருந்து அவர்கள்செய்திருந்த மிகச்சிறந்த தனிநாடகம் ஒன்றை கண்டேன், நீலம் முழுவதும் அவர் குரலில் கேட்கலாம் என இருக்கிறேன். அவரது குரலில், கவித்தன்மை மேலோங்கி இருப்பதாகத் தோன்றுவதால்.
லெட்சுமிநாராயணன்
கீழநத்தம், திருநெல்வேலி
January 30, 2022
தேவிபாரதிக்கு தன்னறம் விருது விழா
தேவிபாரதிக்கு தன்னறம் அமைப்பு வழங்கும் விருது சென்ற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நிகழ்வதாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ என்கிற தன் வரலாற்று நூலும் ஜனவரி 2-ம் தேதி சென்னையில் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நிகழ்ச்சிகளையும் இணைத்துக்கொண்டு டிசம்பர் 30-ம் தேதியே சென்னை சென்றிருந்தேன். இரண்டு நிகழ்ச்சிகளுமோ கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்தாயின.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமாக கோவையை ஒட்டி எங்காவது நடப்பதுதான் வழக்கம். இம்முறை அதைச் சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கொரொனா கட்டுபாடு காரணமாக விழாவை மகாபலிபுரம் சாலையில் ஒரு சிறிய விடுதியில் இருபது பேருக்குள் நடத்தினோம். நீச்சல் குளம் அமைந்த விடுதி, வசதியானது. நண்பர்கள் வந்து இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். பன்னிரண்டு மணிக்கு வழக்கம் போல் கேக் வெட்டி நான் ஒரு சிற்றுரை ஆற்றினேன்.
திரும்பி வந்து நாகர்கோவிலை அடைந்தபோது தாமரைக்கரை பழங்குடி நலப்பள்ளியில் விருதுவிழாவை வைத்துக்கொள்ளலாமா என்று தன்னறம் அமைப்பின் ஸ்டாலின் கேட்டார். என்னுடைய தேதிகள் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தன. 28ம் தேதி விழாவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம் அதற்குள் மேலும் கொரொனா கட்டுபாடுகள் வந்தன. மலைப்பகுதிகளில் விழாக்களை வைப்பதில் சிக்கல்கள் ஆகவே குறைந்த எண்ணிக்கையில் வருகையாளர்களைக் கொண்டு டாக்டர் ஜீவாவின் நலந்தா மருத்துவமனையில் இன்றிருக்கும் ஜீவா நினைவகக் கூடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வந்துவிடக்கூடாது என்று கவலைப்படும் சூழல் வந்துவிட்டது. ஆகவே அழைப்பிதழை அன்று காலைதான் வலையேற்றினேன். அண்மையில் இருப்பவர்கள் வந்தால்போதும் என்று. அதிலும் சிலர் பழைய அழைப்பிதழை நம்பி தாமரைக்கரை வரை சென்றதாகத் தெரிந்தது.
நான் இரண்டு நாட்களுக்கு முன்னரே ஈரோடு சென்றிருந்தேன். கேஜி விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர். முந்தைய நாள் இரவில் அறைக்கு சிவகுருநாதன், ஸ்டாலின், மஞ்சரி மற்றும் தன்னறம் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஊர்க்கிணறு புதுப்பித்தல் திட்டத்தைப்பற்றி பேசினேன். அவர்கள் தூர்வாரிய கிணற்றில் இப்போது நீர் இருக்கிறது. ஆனால் ஊரே குழாக்கிணறு போட்டு நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கும் காலத்தில் கிணற்றில் நீர் இருக்குமா என்பது என்னுடைய ஐயமாக இருந்தது. ஆனால் பெரும்பாலான கிணறுகள் மிகச்சரியான இடம் பார்த்து தோண்டப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால் பல கிணறுகளை ஒட்டித்தான் அந்த ஊரே உருவாகி வந்திருக்கும். ஏதோ ஒரு கடுங்கோடையில் அவை கைவிடப்பட்டிருக்கும் பிறகு மலினப்படுத்தப்பட்டு மீளமுடியாமல் ஆகியிருக்கும் ஆகவே பெரும்பாலும் தூர் வாரப்படும் இடங்களில் நீர் இருக்கிறது என்று மஞ்சரி சொன்னார்.
தன்னறம் அமைப்பின் செயல்பாடுகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். லட்சியவாதம் சார்ந்த செயல்களில் மிகப் பெரிய தடை என்பது மக்களின் உளநிலைதான். இன்று மக்களை ‘புனிதப்படுத்துவது’ ஒரு பெரிய அலையாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவற்றைச் செய்பவர்கள் மக்களை தாஜா செய்து அதிகாரம் பெற முயலும் அரசியல்வாதிகள், அவர்களை ஒட்டியே சிந்திக்கும் ஒட்டுண்ணிகள். மக்களின் எந்தக் குறைபாட்டைப் பற்றிப் பேசுவதும் மேட்டிமைவாதம் என்னும் ஒரு கருத்தியல் கெடுபிடியை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் தமிழ்ச் சிந்தனைத் தளத்தின் மிகப்பெரிய இரும்புத்தளைகளில் ஒன்று இது. இதைச்செய்பவர்கள் பெரும்பாலும் எவரும் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நடுத்தரவர்க்கத்தவர், கணிசமானவர்கள் வசதியான மேல்நிலை வாழ்க்கை வாழ்பவர்கள். இணையச்சூழலில் பொய்யான புரட்சி,மானுடநேய ஆளுமையை கட்டமைத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால் எந்த களப்பணியாளனையும் இழிவுசெய்ய, அவன் கருத்துக்களை திரிக்க அவர்கள் தயங்குவதில்லை.
மக்கள் பெரும்பாலும் அவர்கள் திளைக்கும் ஒரு அன்றாடத்தில் மறுபார்வை இன்றி வாழ்பவர்கள், எதையும் நுகர்வது தான் அவர்கள் அறிந்தது. இன்றைய சூழலில் மிகக் கணிசமானவர்கள் ஆக்குவதில் உள்ள இன்பத்தை இழந்துவிட்டவர்கள். பழைய கைத்தொழில் காலகட்டத்தில் தொழில் செய்பவருக்கு ஒன்றை உருவாக்குகிறோம் என்ற நிறைவிருந்தது. அந்த நிறைவு இன்றில்லை. (இளம் காரல்மார்க்ஸ் இதைப்பற்றி மிக விரிவாக பேசியிருக்கிறார்). இந்த அந்நியமாதல் உழைப்பவர்களை போதை நோக்கி, சூதாட்டம் நோக்கி, பலவகையான பூசல்களை நோக்கி கொண்டு செல்கிறது.
இது ஒரு காரணமாக இருக்கலாம், பெரும்பாலான நமது கிராமங்களில் குடியும் வன்மையும் கொண்டு கட்டற்ற நடத்தை கொண்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஊரில் எத்தனை மக்கள் இருந்தாலும் ரௌடிகள் என்று சொல்லப்படும் ஒரு சிலரால் அந்த ஊர் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களின் உள்ளங்களை வெல்வது அத்தனை எளிதல்ல. ஏனெனில் மதுவின் ஆற்றல் அத்தகையது. அவர்கள் இத்தகைய செயல்பாடுகள் மேல் அவநம்பிக்கை கொண்டவர்கள். இத்தகைய செயல்பாடுகளை தடுக்கவும் முற்படுவார்கள். அல்லது தங்கள் வசதிக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.
ஊர்க்கிணறு திட்டம் புதுப்பித்த ஒரு கிணற்றை உடனடியாக மது அருந்தும் இடமாக மாற்றிக்கொண்ட சிலரைப்பற்றி சொன்னார்கள். சிவராஜ் அங்கு சென்று அவர்களிடமே உருக்கமான வேண்டுகோள் விட்டபோது அவர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைத்ததாக சொன்னார். அது ஒரு அரிய நிகழ்வுதான். லட்சியவாதம் வெல்லும் இடங்கள் மீண்டும் மீண்டும் மனிதனின் மேன்மையை உறுதி செய்கின்றன. ஆனால் ஒரு லட்சியவாதி, மனிதனின் இயல்பான தீமையை பற்றிய உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். இல்லையேல் மிக எளிதிலேயே சோர்வடையக்கூடும். நான் பார்த்தவரை காந்தியர்கள் அந்த லட்சியவாதமும் ஒட்டுமொத்தமான எதார்த்தபுரிதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மிதமான லட்சியசெயல்பாடுகளின் இயல்பு அது. தீவிர லட்சியவாதச் செயல்பாடுகளுக்கு செல்பவர்கள் மிகவிரைவில் அவநம்பிக்கை அடைகிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் தீவிரத்தால் பலவற்றை இழந்திருப்பார்கள். அந்த இழப்புக்கு நிகராக எந்த விளைவும் உருவாவதை அவர்களால் பார்க்க முடியாது. ஆகவே கசப்பும் சீற்றமும் கொண்டவர்களாவார்கள். பெரும்பாலான பொதுப்பணிகள் இந்த சீற்றம் கொண்டவர்களால் சிதைக்கப்படுகிறது என்பது ஒரு நடைமுறை உண்மை. மிகக்குறுகிய காலம் லட்சியவாதமும் எஞ்சிய வாழ்நாள் முழுக்க கசப்பும் எதிர்மறைப்பண்பும் கொண்டவர்களாக மாறியவர்கள் நமது சமூகத்தின் மிகப்பெரிய சுமைகளாக இன்று உள்ளனர். அத்துடன் எந்த லட்சியவாதமும் இன்றி சமூக வலைத்தளங்களில் தங்களை லட்சியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு எதிர்மறை எண்ணங்களையும் கசப்புகளையும் கொட்டிக்கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு நடுவே தான் இங்கு சில பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மறுநாள் காலை பத்து மணிக்கு ஜீவா நினைவகத்தில் விழாவுக்கு சென்றேன். குக்கூ நண்பர்கள் வந்திருந்தனர். ஜீவாவின் சகோதரி ஜெயபாரதி வந்திருந்தார். சற்றுப் பிந்தி ஸ்டாலின் குணசேகரன் வந்தார். சிவராஜ் மற்றும் குக்கூ நண்பர்கள் என்னுடைய நண்பர்கள் என ஐம்பது பேர் கூடிய சிறு அவையில் விழா நிகழ்ந்தது. தேவிபாரதியைப்பற்றி முப்பது நிமிட சிற்றுரை ஒன்றை ஆற்றினேன். அவருடைய மூன்று நாவல்களினூடாக அவர் அடைந்திருக்கும் அகநகர்வைப் பற்றியது அவ்வுரை.
தேவிபாரதி சற்று நோயுற்றிருந்ததனால் அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. அவர் தன்னுடைய வாழ்க்கை எப்படி ஈரோடு ஜீவாவிடம் பின்னியிருந்தது. எந்தெந்த வகையான் விவாதங்கள் தங்களுக்குள் நிகழ்ந்தன என்று சொன்னார். தனக்கு ஈரோடு ஒரு இடத்தை அளிக்கவில்லை என்ற மனக்குறை இருந்ததாகவும் அது இந்த விருதினூடாக நீங்கியதாகவும் கூறினார். இன்னும் எழுதுவதற்கான கனவுகள் திட்டங்கள் இருப்பதை சொன்னார். ஒரு லட்சம் ரூபாய் விருதையும் வாழ்த்து பத்திரத்தையும் நான் அளித்தேன்.
ஒரு நிறைவான நாள். ஒரு கலைஞன் தன் வாழ்க்கையின் சற்று துயரமான நாட்களில் இத்தகைய மெய்யான அன்பையும் அங்கீகாரத்தையும் பெறுவதென்பது ஒரு நல்லூழ் தான். தேவி பாரதிக்கும் வணக்கம். தன்னறம் அமைப்புக்கு நன்றி.
குழந்தை வதை -கடிதம்
 குழந்தைவதை
  குழந்தைவதை
அன்புள்ள ஆசிரியருக்கு,
என்னை சிறுவயதில் பல பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் . அதுவும் கோடைகால விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம். ஆங்கிலம், ஹிந்தி வகுப்புகள், கணினி, தட்டச்சு, ஓவியம், கராத்தே என்று முழு நாட்களும் சுழன்று கொண்டிருப்போம். எனக்கு ஓவியம், கராத்தே தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. ஆனால் வீட்டில் இருந்தால் பையன்களுடன் சேர்ந்து ஊர்சுற்றப்போய் கெட்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் இது போன்ற வகுப்புகளில் அனுப்பி விடுவார்கள். ஒருவேளை படிப்பு கைகொடுக்காவிட்டால் இயல்பிலேயே ஓவியத்தில் ஆர்வமும் இருப்பதால் ஓவியம் எல்லாம் கற்று வரைந்தாவது பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் காரணம். ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் வகுப்புகளில் அனுப்பிவிடுவதோடு சரி. அதற்கு மேல் அதில் தலையிட மாட்டார்கள். எனக்கு கராத்தேவும் ஓவியமும் மட்டும் போதும் என்ற போதும் என்னை வேறெதற்கும் வற்புறுத்தவுமில்லை. இவ்விரு கலைகளில் தொடர்ந்த ஆர்வமும் பிறகு ஓவியம்/காட்சிக்கலை என் முழுநேரத் துறையாகவும் மாறிப் போனது.
நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும் காலங்களில் பகுதி நேரத்திற்கு ஓவியப் பயிற்சிப் பள்ளிகளில் ஓவிய வகுப்புகள் எடுத்திருக்கிறேன். குறிப்பாக குழந்தைகளுக்கு. சில பெரியவர்களும் வருவார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஓவியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதில் அவர்களை பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் சிக்கல்கள் தெரியும். லாப நோக்கில் மட்டுமே நடத்தப்படும் பயிற்சிக் கூடங்களுக்கு கலையோ குழந்தைகளின் மனநிலையோ தேவையில்லை. பெற்றோர்களுக்கும் ஒரு கலையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது என்ற நோக்கத்தை விட தங்கள் குழந்தைகள் பரிசு பெற வேண்டும் என்பது தான் குறிக்கோள். ‘உங்க பையன் நல்லா வரைரான்‘ என்று யாராவது சொல்லக்கேட்டு பரவசமடையும் எளிய உள்ளங்கள். ஒரு மரத்தை வரையும் போது அதற்கு பச்சை நிறத்தில் மட்டும் தான் இலைகள் இருக்கும் என்று ஒரு பயிற்சியாளர் ஒரு குழந்தையின் மனதில் ஆழமாக பதித்து விட்டார் என்றால் அது தன் வாழ்க்கையின் கடைசி தருணம் வரை கூட இலைகளுக்கு பச்சை நிறம் மட்டும் தான் என்று நம்பிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இலைகள் வாட ஆரம்பிக்கும் போது பழுப்பு நிறத்தையும் காலநிலைக்கு ஏற்ப வேறு வேறு நிறங்களையும் முற்றிலும் பச்சை நிற இலைகள் இல்லாத மரங்களும் உலகத்தில் உள்ளன என்பதையும் அந்த குழந்தை கணக்கில் கொள்ள பயிற்சியாளர் விடவே மாட்டார். முதலில் பயிற்சியாளருக்கு அது தெரிந்திருக்க வேண்டும். ஓவியத்தில் இலைகள் பச்சை நிறத்தில் மட்டுமில்லாமல் குகை ஓவியத்தில் இருந்து இன்றைய சமகாலப் படைப்புகள் வரை வேறு வேறு கலைஞர்கள் வேறு வேறு விதத்தில் இலைகளை பதிவு செய்துள்ளார்கள் என்று பயிற்சியாளருக்கு தெரிந்திருந்தால் குழந்தைகள் தங்கள் இயல்பிலேயே வேறு வேறு வண்ணங்களில் மரங்களை புரட்டியெடுக்கும் போது அவர் கொஞ்சம் நிதானத்தை கடை பிடிப்பார்.
ஓவியத்திற்கு என்று சிறப்பு படிப்பு படித்தவர்களுக்கு இது போன்ற பயிற்சி கூடங்களில் பணியாற்ற ஒரு மணி நேரத்திற்கு 500-1000 ரூபாய் கட்டணம்(நம் தகுதியையும் நாம் பணியாற்றும் இடத்தையும் பொறுத்து இக்கட்டணம் மேலும் ஏறலாம்) என்றால் வேறு வேலை வாய்ப்புகள் இல்லாமல் ஓவியத்தில் அடிப்படை ஆர்வம் மட்டுமே இருப்பவர்கள் பயிற்சியாளராக வந்தால் ஒரு நாளுக்கே கூட 500 ரூபாய் கொடுக்க வேண்டியதில்லை. அதனால் எப்படியாவது ஒப்பேற்றி லாபம் மட்டும் பார்த்தால் போதும் என்று நினைக்கும் பயிற்சிக் கூடங்கள் குறைந்த செலவில் திறமையற்றவர்களை அமர்த்திக் கொள்வார்கள். அடுத்ததாக எல்லா கலைஞர்களும் கற்பிக்கும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. அதுவும் குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது இயல்பாகவே அவர்களின் உலகத்தை விரும்பி அவர்களுடன் அணுக்கமாகத் தெரிந்தவர்களால் தான் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்க முடியும்.
படைப்பாற்றலின் வேரே ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை மாற்றி வேறு விதத்தில் செய்து பார்த்தால் என்ன என்று நம்மை யோசிக்க வைக்கும் உந்துதல் தான். பெரும்பாலும் குழந்தைகள் அதை இயல்பாகவே செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த இயல்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதையே பல பயிற்சியாளர்கள் செய்கிறார்கள். ஒரு பக்கம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. மறுபக்கம் பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை பெறும் பயிற்சியாளர்களின்/பயிற்சிக்கூடங்களின் அழுத்தம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பரிசு பெற வேண்டும் என்ற ஆணவத்தை பூர்த்தி செய்வதற்காக பணம் கொடுத்து பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்பி தங்கள் குழந்தைகளின் படைப்பாற்றலை அழிக்கிறார்கள் என்பதே பல இடங்களில் நடப்பது.
இன்று குழந்தைகளை இதுபோன்ற பயிற்சி கூடங்களுக்கு அனுப்பும் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர குடும்பத்தில் இது போன்ற பயிற்சிகளை சிறுவயதில் பெற வாய்ப்பற்றவர்களாக இருக்கும் சூழலில் இருந்து மேலே வந்தவர்கள். அதனால் தங்கள் குழந்தைகள் எல்லா பயிற்சிகளும் பெற்று அனைத்தையும் கரைகண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு விதத்தில் அது நேர்மையான உணர்வு போலத் தோன்றும். அதுவே குழந்தைகளுக்கு அழுத்தத்தையும் கொடுக்கிறது. பல கலைகளை பயிற்சிகளை குழந்தைகளுக்கு கண்ணில் காண்பித்து அறிமுகப்படுத்தி அதில் அவர்களுக்கு எது வருமோ எதில் ஆர்வம் உள்ளதோ அதை மட்டும் பெற்றோர்கள் தாங்களே நேரடியாக தலையிட்டுக் குழப்பாமல் அதற்கான நல்ல வகுப்புகளுக்கு அனுப்பினால் மட்டும் போதுமானது. யார் நல்ல பயிற்சியாளர் என்று கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கும் பொறுப்பு மட்டுமே பெற்றோர்களுக்கு உரியது. அத்துறையில் நீடித்த ஆர்வமும் பயிற்சியும் மற்றும் குழந்தைகளிடம் எளிதாக பழகத்தெரிந்தவர்களை பயிற்சியாளராக கொள்ளலாம். ஆனாலும் அக்கலையில் தான் குழந்தைகள் சாதிப்பார்கள் என்றோ பிறகு வேறு கலைகளில்/துறைகளில் அவர்களின் ஆர்வம் செல்லாது என்றோ உறுதியாக சொல்லவே முடியாது.
ஜெயராம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers
 

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
