தேவிபாரதிக்கு தன்னறம் விருது விழா

தேவிபாரதிக்கு  தன்னறம் அமைப்பு வழங்கும் விருது சென்ற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நிகழ்வதாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. அருண்மொழி நங்கையின்  ‘பனி உருகுவதில்லை’ என்கிற தன் வரலாற்று நூலும் ஜனவரி 2-ம் தேதி சென்னையில் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நிகழ்ச்சிகளையும் இணைத்துக்கொண்டு  டிசம்பர் 30-ம் தேதியே சென்னை சென்றிருந்தேன்.  இரண்டு நிகழ்ச்சிகளுமோ கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்தாயின.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமாக கோவையை ஒட்டி எங்காவது நடப்பதுதான் வழக்கம். இம்முறை அதைச் சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கொரொனா கட்டுபாடு காரணமாக விழாவை மகாபலிபுரம் சாலையில்  ஒரு சிறிய விடுதியில் இருபது பேருக்குள் நடத்தினோம். நீச்சல் குளம் அமைந்த விடுதி, வசதியானது. நண்பர்கள் வந்து இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். பன்னிரண்டு மணிக்கு வழக்கம் போல் கேக் வெட்டி நான் ஒரு சிற்றுரை ஆற்றினேன்.

திரும்பி வந்து நாகர்கோவிலை அடைந்தபோது தாமரைக்கரை பழங்குடி நலப்பள்ளியில் விருதுவிழாவை வைத்துக்கொள்ளலாமா என்று தன்னறம் அமைப்பின் ஸ்டாலின் கேட்டார். என்னுடைய தேதிகள் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தன. 28ம் தேதி விழாவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம் அதற்குள் மேலும் கொரொனா கட்டுபாடுகள் வந்தன. மலைப்பகுதிகளில் விழாக்களை வைப்பதில் சிக்கல்கள் ஆகவே குறைந்த எண்ணிக்கையில் வருகையாளர்களைக் கொண்டு டாக்டர் ஜீவாவின் நலந்தா மருத்துவமனையில் இன்றிருக்கும் ஜீவா நினைவகக் கூடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வந்துவிடக்கூடாது என்று கவலைப்படும் சூழல் வந்துவிட்டது. ஆகவே அழைப்பிதழை அன்று காலைதான் வலையேற்றினேன். அண்மையில் இருப்பவர்கள் வந்தால்போதும் என்று. அதிலும் சிலர் பழைய அழைப்பிதழை நம்பி தாமரைக்கரை வரை சென்றதாகத் தெரிந்தது.

நான் இரண்டு நாட்களுக்கு முன்னரே ஈரோடு சென்றிருந்தேன். கேஜி விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர். முந்தைய நாள் இரவில் அறைக்கு சிவகுருநாதன், ஸ்டாலின், மஞ்சரி மற்றும் தன்னறம் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஊர்க்கிணறு புதுப்பித்தல் திட்டத்தைப்பற்றி பேசினேன். அவர்கள் தூர்வாரிய கிணற்றில் இப்போது நீர் இருக்கிறது. ஆனால் ஊரே குழாக்கிணறு போட்டு நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கும் காலத்தில் கிணற்றில் நீர் இருக்குமா என்பது என்னுடைய ஐயமாக இருந்தது. ஆனால் பெரும்பாலான கிணறுகள் மிகச்சரியான இடம் பார்த்து தோண்டப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால்  பல கிணறுகளை ஒட்டித்தான் அந்த ஊரே உருவாகி வந்திருக்கும். ஏதோ ஒரு கடுங்கோடையில் அவை கைவிடப்பட்டிருக்கும் பிறகு மலினப்படுத்தப்பட்டு மீளமுடியாமல் ஆகியிருக்கும் ஆகவே பெரும்பாலும் தூர் வாரப்படும் இடங்களில் நீர் இருக்கிறது என்று மஞ்சரி சொன்னார்.

தன்னறம் அமைப்பின் செயல்பாடுகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். லட்சியவாதம் சார்ந்த செயல்களில் மிகப் பெரிய தடை என்பது மக்களின் உளநிலைதான். இன்று மக்களை ‘புனிதப்படுத்துவது’ ஒரு பெரிய அலையாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவற்றைச் செய்பவர்கள் மக்களை தாஜா செய்து அதிகாரம் பெற முயலும் அரசியல்வாதிகள், அவர்களை ஒட்டியே சிந்திக்கும் ஒட்டுண்ணிகள். மக்களின் எந்தக் குறைபாட்டைப் பற்றிப் பேசுவதும் மேட்டிமைவாதம் என்னும் ஒரு கருத்தியல் கெடுபிடியை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் தமிழ்ச் சிந்தனைத் தளத்தின் மிகப்பெரிய இரும்புத்தளைகளில் ஒன்று இது. இதைச்செய்பவர்கள் பெரும்பாலும் எவரும் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நடுத்தரவர்க்கத்தவர், கணிசமானவர்கள் வசதியான மேல்நிலை வாழ்க்கை வாழ்பவர்கள். இணையச்சூழலில் பொய்யான புரட்சி,மானுடநேய ஆளுமையை கட்டமைத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால் எந்த களப்பணியாளனையும் இழிவுசெய்ய, அவன் கருத்துக்களை திரிக்க அவர்கள் தயங்குவதில்லை.

மக்கள் பெரும்பாலும் அவர்கள் திளைக்கும் ஒரு அன்றாடத்தில் மறுபார்வை இன்றி வாழ்பவர்கள், எதையும் நுகர்வது தான் அவர்கள் அறிந்தது. இன்றைய சூழலில் மிகக் கணிசமானவர்கள் ஆக்குவதில் உள்ள இன்பத்தை இழந்துவிட்டவர்கள். பழைய கைத்தொழில் காலகட்டத்தில் தொழில் செய்பவருக்கு ஒன்றை உருவாக்குகிறோம் என்ற நிறைவிருந்தது. அந்த நிறைவு இன்றில்லை. (இளம் காரல்மார்க்ஸ் இதைப்பற்றி மிக விரிவாக பேசியிருக்கிறார்). இந்த அந்நியமாதல் உழைப்பவர்களை போதை நோக்கி, சூதாட்டம் நோக்கி, பலவகையான பூசல்களை நோக்கி கொண்டு செல்கிறது.

இது ஒரு காரணமாக இருக்கலாம், பெரும்பாலான நமது கிராமங்களில் குடியும் வன்மையும் கொண்டு கட்டற்ற நடத்தை கொண்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஊரில் எத்தனை மக்கள் இருந்தாலும் ரௌடிகள் என்று சொல்லப்படும் ஒரு சிலரால் அந்த ஊர் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களின் உள்ளங்களை வெல்வது அத்தனை எளிதல்ல. ஏனெனில் மதுவின் ஆற்றல் அத்தகையது. அவர்கள் இத்தகைய செயல்பாடுகள் மேல் அவநம்பிக்கை கொண்டவர்கள். இத்தகைய செயல்பாடுகளை தடுக்கவும் முற்படுவார்கள். அல்லது தங்கள் வசதிக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

ஊர்க்கிணறு  திட்டம் புதுப்பித்த ஒரு கிணற்றை உடனடியாக மது அருந்தும் இடமாக மாற்றிக்கொண்ட சிலரைப்பற்றி சொன்னார்கள். சிவராஜ் அங்கு சென்று அவர்களிடமே உருக்கமான வேண்டுகோள் விட்டபோது அவர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைத்ததாக சொன்னார். அது ஒரு அரிய நிகழ்வுதான். லட்சியவாதம் வெல்லும் இடங்கள் மீண்டும் மீண்டும் மனிதனின் மேன்மையை உறுதி செய்கின்றன. ஆனால் ஒரு லட்சியவாதி, மனிதனின் இயல்பான தீமையை பற்றிய உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். இல்லையேல் மிக எளிதிலேயே சோர்வடையக்கூடும். நான் பார்த்தவரை காந்தியர்கள் அந்த லட்சியவாதமும் ஒட்டுமொத்தமான எதார்த்தபுரிதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மிதமான லட்சியசெயல்பாடுகளின் இயல்பு அது. தீவிர லட்சியவாதச் செயல்பாடுகளுக்கு செல்பவர்கள் மிகவிரைவில் அவநம்பிக்கை அடைகிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் தீவிரத்தால் பலவற்றை இழந்திருப்பார்கள். அந்த இழப்புக்கு நிகராக எந்த விளைவும் உருவாவதை அவர்களால் பார்க்க முடியாது. ஆகவே கசப்பும் சீற்றமும் கொண்டவர்களாவார்கள். பெரும்பாலான பொதுப்பணிகள் இந்த சீற்றம் கொண்டவர்களால் சிதைக்கப்படுகிறது என்பது ஒரு நடைமுறை உண்மை. மிகக்குறுகிய காலம் லட்சியவாதமும் எஞ்சிய வாழ்நாள் முழுக்க கசப்பும் எதிர்மறைப்பண்பும் கொண்டவர்களாக மாறியவர்கள் நமது சமூகத்தின்  மிகப்பெரிய சுமைகளாக இன்று உள்ளனர். அத்துடன் எந்த லட்சியவாதமும் இன்றி சமூக வலைத்தளங்களில் தங்களை லட்சியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு எதிர்மறை எண்ணங்களையும் கசப்புகளையும் கொட்டிக்கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு நடுவே தான் இங்கு சில பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

மறுநாள் காலை பத்து மணிக்கு ஜீவா நினைவகத்தில் விழாவுக்கு சென்றேன். குக்கூ நண்பர்கள் வந்திருந்தனர். ஜீவாவின் சகோதரி ஜெயபாரதி வந்திருந்தார். சற்றுப் பிந்தி ஸ்டாலின் குணசேகரன் வந்தார். சிவராஜ் மற்றும் குக்கூ நண்பர்கள் என்னுடைய நண்பர்கள் என ஐம்பது பேர் கூடிய சிறு அவையில் விழா நிகழ்ந்தது. தேவிபாரதியைப்பற்றி முப்பது நிமிட சிற்றுரை ஒன்றை ஆற்றினேன். அவருடைய மூன்று நாவல்களினூடாக அவர் அடைந்திருக்கும் அகநகர்வைப் பற்றியது அவ்வுரை.

தேவிபாரதி சற்று நோயுற்றிருந்ததனால் அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. அவர் தன்னுடைய வாழ்க்கை எப்படி ஈரோடு  ஜீவாவிடம் பின்னியிருந்தது. எந்தெந்த வகையான் விவாதங்கள் தங்களுக்குள் நிகழ்ந்தன என்று சொன்னார். தனக்கு ஈரோடு ஒரு இடத்தை அளிக்கவில்லை என்ற மனக்குறை இருந்ததாகவும் அது இந்த விருதினூடாக நீங்கியதாகவும் கூறினார். இன்னும் எழுதுவதற்கான கனவுகள் திட்டங்கள் இருப்பதை சொன்னார். ஒரு லட்சம் ரூபாய் விருதையும் வாழ்த்து பத்திரத்தையும் நான் அளித்தேன்.

ஒரு நிறைவான நாள். ஒரு கலைஞன் தன் வாழ்க்கையின் சற்று துயரமான நாட்களில் இத்தகைய மெய்யான அன்பையும் அங்கீகாரத்தையும் பெறுவதென்பது ஒரு நல்லூழ் தான். தேவி பாரதிக்கும் வணக்கம். தன்னறம் அமைப்புக்கு நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.