Jeyamohan's Blog, page 837
January 28, 2022
கனிந்த முதுமை
   
ஆசிரியருக்கு வணக்கம்
இம் மடலில் கனிவாய்ந்த முதுமை(Gracious in old age) குறித்து தங்களிடம் பகிர விரும்புகிறேன், தங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறேன். தாங்கள் இது பற்றி வேறு விதங்களில் எழுதி இருக்கிறீர்கள், இருந்தாலும் நீங்கள் சமீபத்தில் இன்றைய தற்கொலைகள் பற்றி எழுதிய ஆழமான கட்டுரை போல் கனிவாய்ந்த முதுமை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம்.
இன்றைய தற்கொலைகள் பற்றி உங்கள் கட்டுரையில் “இலட்சியம் வேறு, இலக்கு வேறு” மற்றும் “ஒரு மனிதன் அன்புக்காக, காதலுக்காக, பாசத்துக்காக மட்டுமே வாழ்ந்தான் என்றால் அவன் மிகமிகச் சிறிய மனிதன்” என்கிறீர்கள். மற்றும் ஒரு யுகசந்தியில் “தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன்”என்கிறீர்கள். அவற்றைப் படிக்கும் போது மனதில் பல சபாஷ்கள் போட்டுக்கொண்டேன்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் குடும்பத்துடன் விண்டர்மியர் சென்று இருந்தேன், ஆண்டின் முதல் மழை இல்லாத வெயில் கொண்ட வாரஇறுதி நாள் என்பதால், அன்று ஒரே மக்கள் கூட்டம், கார் நிறுத்தும் இடத்தில இடம் கிடைக்காது சுற்றி கடைசியில் இடம் கிடைத்து, கார் பார்கிங் மீட்டரில் கட்டணம் செலுத்த சென்றால், நோட்டுகள் அது எடுத்து கொள்ளாது என அறிவிப்பு இருந்தது. என் கையுலோ பவுண்ட் நோட்டுகள் மட்டுமே இருந்தது. வண்டியை எடுத்தால் திரும்பி இடம் கிடைப்பது எளிது இல்லை. எடுக்காவிட்டால் வண்டியின் சக்கரத்திற்கு பற்றுக்கட்டையை இட்டுவிடுவார்கள்.
அந்த இக்கட்டில் இரூக்கும் போது காரில் என்னை கடந்து சென்ற முதியவர் ஒருவர் என்னை பார்த்ததும் காரை நிறுத்தி சில்லறை வேண்டுமா என்று கேட்டார். என்னிடம் £6.00 கொடுத்து “we all have been there” என்று சொல்லி, நான் கொடுத்த £10.00 மறுத்து (அவரிடம் அப்பணத்திற்கு சில்லறை இல்லை) என்னிடம் அப்பணத்தை எதாவது ஒரு சேவை மையத்திற்கு பிறகு கொடுக்குமாறு சொல்லி ச்சென்றார்.
இது என்னை மிகவும் பாதித்த சம்பவம். ஐக்கிய ராஜ்யத்தில் பொதுவான அபிப்பிராயம் உண்டு. அது என்னவென்றால். வயதானவர்கள் வெளிநாட்டிலிருந்து ஐக்கிய ராஜ்யம். வந்தவர்களை பிடிக்காது என்பது, அது ஓரளவுக்கு உண்மையாக இருக்கும்போதும், அவர்கள் வெறுப்பை எப்போதும் காண்பிப்பதில்லை. உதவி செய்ய எப்போதும் தயங்க மாட்டார்கள். நான் தீவிர சிகிச்சை பிரிவில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது அங்கே இருந்த குணமடைந்த வயதான நோயாளி ஒருவர் என்னிடம். வெளிநாட்டில் இருந்து ஐக்கிய ராஜ்யத்தில் இடம்பெயருபவர்கள் பற்றி நல்லது கெட்டதுமாக நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் ” I would have been in a mess if it is not for your care” என்றார்
வயதானோர் இப்படி நினைப்பதற்கு சில சரியான காரணங்களும் உண்டு. ஆனால் அவர்களின் கனிவும் அன்பும் அவர்கள் வாழ்விட மாற்றங்களை நல்லபடியாக ஏற்றுக்கொள்ள செய்கிறது என்பது என் அனுபவத்தால் நான் இங்கு தெரிந்து கொண்டது. நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரில் எங்கள் குடும்பம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பம். எங்கள் வீட்டை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே 80 வயதைத் தாண்டியவர்கள். இடது புறத்தில் வாழும் Harold நாங்கள் வெளியூருக்கோ, இந்தியாவுக்கு வரும்போது எங்கள் வீட்டை பார்த்து கொள்வார். அவரிடம் தான் எங்கள் வீட்டு சாவியை கொடுத்துவிட்டு வருவோம் அவர் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை அன்றாடம் எங்களுக்கு குடுப்பார். .எங்கள் வலது புறத்தில் இருப்பவர் John, எங்கள் மிதிண்டியை அவர்தான் சரி செய்து கொடுப்பார். .இவர்களிடம் பொறாமையோ கோபமோ இதுவரை கண்டதில்லை. இவர்களுடைய வாழும் முறையை கண்டு என் உள்ளத்தில் நான் கனிவுடன், சந்தோசமாக எல்லோருக்கும் உதவும் உள்ளவனாக வயதாக விரும்புகிறேன்.
நான் பிறந்து, வளர்ந்து, படித்த ஊர், மதுரை. நான் என் நெருங்கிய மற்றும் துரத்து வயதாகிய சொந்தங்களின் செயல்களை நோக்கும்போது, அவர்களின் வயதாக வயதாக சுயநலமும், தற்பெருமையும், குடும்பப்பெருமையும், தங்களுக்கு எங்கே முதல் மரியாதை கொடுப்பார்கள் என அலையும் நெஞ்சம் கொண்டவர்களாகவே பார்க்கிறேன். வீட்டின் மூத்தவர் அல்லது குடும்பத்தில் பெரும் பணம் படைத்தவர் என்ற முறையில் எல்லா குடும்ப விழாக்களிலும் தான் முன்னின்று பிறர் தன் சொல்லை கேட்டு விழா நடக்கவேண்டும் என நினைப்பார்கள், இதில் ஏதாவது மாற்றம் இருந்தால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போவதும் விழாக் கொண்டாட்டத்தில் ஈடுபாட்டுடன் இல்லாமல் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இந்த வருடம் அல்லது இந்த விழாவை தங்கையும் தம்பியும் முன்னின்று நடத்தட்டும் என்று இதுவரையில் விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.
ஏன் வயதாகும்போது கனிவு பெருகாமல் மங்குகிறது. நான் இப்போது மதுரையில் வழாததாலால் சமூகத்தில் உள்ள வயதானோரை பற்றி அறுதி பட எழுதவில்லை. நான் அறிந்தவரையில் வயதானோர் கனிவு மிக்கவராக வயதாகவில்லை என்பதே உண்மை.
பி.கு: சமிபத்தில் உங்களுடைய திருவண்ணாமலை பயண கட்டுரையில் நீங்கள் ஒரு குழந்தையின் கையை பிடித்து கொண்டு இருந்த ஒரு புகைபடம் “The Green Mile” படத்தில் John, Paulin கையை பிடித்து கொண்டிருக்கும் காட்சியை நினைவுபடுத்தியது. குழந்தை என்பதால் இருவருக்கும் நடுவில் வேலி எதுவும் தேவையில்லையோ!
அன்புடன்
வெங்கடேஷ்
   
அன்புள்ள வெங்கடேஷ்
கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டு வரும் ஒரு உண்மை இது. இங்கே பெரும்பாலான முதியவர்கள் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் என்னிடம் தங்கள் இல்லத்தில் முதியவர்கள் செய்யும் கொடுமைகள் அவர்களின் அற்பத்தனங்கள் ஆகியவற்றைச் சொல்லி முறையிடுகிறார்கள். நான் அவற்றுக்கான விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன்
சென்ற நாளில் கூட ஓர் இலக்கிய நண்பர் என் விடுதி அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். அவருடைய தந்தை எண்பது அகவை கடந்தவர். தன் வாழ்நாளில் சரியாக சம்பாதித்தவரும் சேமித்தவரும் அல்ல. மைந்தனை முறையாக படிக்க வைத்தவரும் அல்ல. இப்போது நோயுற்றிருக்கிறார். தன்னை தன் மகன் லட்சக் கணக்கில் கடன் வாங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மகன் கீழ்நிலைப் பொருளியலில் வாழ்பவர். அது அவருக்கு தெரியும். ஆனாலும் தன்னை செலவுசெய்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று அவனிடம் மன்றாடுகிறார். உணர்வுபூர்வ மிரட்டல்கள் விடுக்கிறார்.குற்ற உணர்வை உருவாக்குகிறார். சாபமிடுவதாகச் சொல்கிறார்.
நண்பர் அந்த உணர்வுபூர்வ மிரட்டல்களாக் குழம்பிப்போயிருந்தார்.நான் அவரிடம் சொன்னேன், இந்து மரபின் உலகியல்நெறிப்படி ஒருவனுடைய கடமைகள் அவனுடைய தந்தையிடமும் மகனிடம் இணையாகவே உள்ளன. தந்தைக்கு உணவு மருத்துவம் நீத்தார் கடன் ஆகியவற்றை அவன் தன்னால் இயன்றவரைச் செய்யவேண்டும். அதேபோல தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்யவேண்டியதும் அவன் கடமையே.
அவர் தன் தந்தைக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டு அவர் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்கிறார் என்று கொள்வோம். கடன் காரணமாக மகனை முறையாக படிக்க வைக்கவில்லை ,வாழ்க்கையில் முன்னேற உதவ வில்லை என்று கொள்வோம். அவர் சரியானவற்றைச் செய்தவராக ஆகுமா? உறுதியாக இல்லை. அவர் மைந்தனின் பழி கொண்டவர் ஆவார். அது தந்தைப்பழியை விட கூரியது.
அவர் தந்தை அவருக்கு சாபம் போடுவதாக சொன்னது எதுவும் பலிக்காது. சாபம் என்பது ஒருமுனைப் பட்டது அல்ல. அதைப் பெறுபவரும் அதற்கு உரியவராக இருந்தால் ஒழிய அது சென்று சேர்வதில்லை. அளிப்பவரின் தகுதியும் பெறுபவரின் பழியுமே சாபத்துக்கு ஆற்றலை அளிப்பவை. வெறும் உணர்ச்சிகர மிரட்டல்களுக்காகச் சொல்லப்படும் சாபங்கள் சொன்னவரையே சென்று சேரும்.
“உங்கள் மனசாட்சிப் படி உங்கள் வருமானத்தில் இன்று தந்தைக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யுங்கள்.உங்கள் மகனுக்கும் அதைப்போலவே இயன்றவரைச் செய்யுங்கள். உங்கள் கடமை முடிந்துவிட்டது என்று கொள்ளுங்கள். அந்த தெளிவு உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த அலைக்கழிப்பை அடைய வேண்டியதில்லை” என்று நான் சொன்னேன்
சென்ற தலைமுறையில் முதியவர்கள் குடும்பச் சூழலை உணர்ந்தவர்கள். குடும்பத்துடன் ஒத்துப்போகிறவர்கள். குடும்பத்துக்குப் பயனுள்ளவர்கள். குழந்தைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். இன்று மிகப்பெரும்பாலான முதியவர்கள் முழுக்க முழுக்க பயனற்றவர்கள். தன்னலமன்றி வேறு எண்ணமே அற்றவர்கள். அற்பத்தனத்தை மட்டுமே வெளிப்படுத்துபவர்கள்.
என்னிடம் சென்ற மாதம் ஒரு திரைத்துறை ஓட்டுநர் சொன்னார். அவர் வீட்டில் வயதான தந்தை இருக்கிறார். டிவியை எந்நேரமும் சத்தமாக வைத்து கேட்பார். பிளஸ்டூ படிக்கும் பெண் இருக்கிறாள். அவளுக்கு படிக்க வழி இல்லை. வீடு என்பது ஒரே அறைதான். செவிகளில் செருகி ஓசை கேட்காமலாக்கும் எலக்ட்ரானிக் கருவி என ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறார். அப்படி ஒன்று உண்மையில் உள்ளதா என்றார். அவர் தந்தையிடம் புரிந்துகொள்ளச் செய்ய முடியவில்லை. அவருக்கு பிறர் பற்றி கவலை இல்லை. அவர் வீட்டை நரகமாக ஆக்கிவிடுவார்.
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? எளிதில் முடிவெடுக்கக்கூடிய ஒன்றல்ல இது. ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. நிலத்தில் உழைக்கும் விவசாயிகள் இப்படி அற்பர்களாக ஆவதில்லை என்பதைக் காணலாம். அது ஒரு புரிதலை அளிக்கிறது. இது நம் நடுத்தரவற்க மனநிலையின் முதிர்ந்த வடிவம்.
சென்ற ஒரு நூற்றாண்டில் நம்முடைய சமூகத்தில் உலகியல் பார்வை என்பது மிக ஆழமாக வேரூன்றியுள்ளது நாம் ஆன்மீகம் பேசுவோம் ஆனால் நமது ஆன்மிகமே கூட உலகியல் நன்மைகளுக்காக வேண்டுதலும் நோன்புகளும் பரிகாரங்களும் செய்யும் ஒரு களமாகவே உள்ளது உலகியலுக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் நாம் அறிந்திருப்பதில்லை. நாம் கொள்ளும் அன்பு பாசம் முதலிய உணர்வுகளே கூட முற்றிலும் உலகியல் சார்ந்தவையே.
உண்மை, எல்லா சமூகத்திலும் உலகியலே முதன்மையானது. வாழ்க்கையின் முகம் என்பது உலகியல் இன்பங்களும் உலகியல் அடையாளங்களும் அவற்றை அடைவதற்கான போராட்டமும்தான். ஆனால் மதம், தத்துவம், இலக்கியம் ஆகியவை மீளமீள உலகிலுக்கு அப்பாலுள்ள ஒன்றை வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இங்குள்ள வாழ்க்கைக்கு இங்கே நாம் பொருள் அளித்துவிட முடியாத வேறொன்று அடிப்படையாக உள்ளது என்கின்றன.
அந்த உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் மீதான ஆழமான நம்பிக்கை ஒன்றே மனிதனின் விலங்கியல்பை கட்டுப்படுத்துகிறது. அவனை தன்னலம் என்னும் இயல்பான நிலையில் இருந்து விடுவிக்கிறது. அன்பு பாசம் போன்றவை உலகியல் சார்ந்தவையாக இருக்கும் போதே கூட உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளம் அவற்றுக்கு உள்ளது என ஆன்மிகமும் தத்துவமும் இலக்கியமும் கூறுகின்றன. அந்த தளம் இல்லை என்றால் அன்பு பாசம் போன்றவை வெறும் வணிகப்பேரங்களே. கொடுத்தால் நிகரானதை பெற்றுக்கொண்டாகவேண்டும், கணக்கு வைத்துக்கொண்டாகவேண்டும்..
நீதியுணர்ச்சி, கொடை, தியாகம் போன்றவை அத்தகைய உலகியலுக்கு அப்பாற்பட்ட நிலையிலேயே பொருள்படுகின்றன. இங்கே உள்ள சுயநலச்சூழலில் அவற்றுக்கு பொருளே இல்லை. முகம் தெரியாத ஒருவருக்கு அன்பு காட்டுவது, எளியோருக்கு இரங்குவது,அறத்தின் பொருட்டு போராடுவது அனைத்துமே உலகியலுக்கு அப்பாற்பட்டவைதான். முழுக்க முழுக்க உலகியலை நோக்கிச் செல்லும் சமூகம் இழப்பது இந்த விழுமியங்களையே.
தனிமனிதர்கள் வாழ்வது நுண்ணலகுகளில். அவர்களுக்குரிய சிறு உலகு அது. அதில் திளைப்பதே உலகியல் எனப்படுகிறது. விழுமியங்கள் இருப்பது பேரலகுகளில். மொத்தப்பார்வையில். அந்த பேரலகுகளை உருவாக்கி தனிமனிதர்களுக்கு அளிப்பதையே மதம், தத்துவம், இலக்கியம் ஆகியவை செய்கின்றன. சமூகத்தைப் பார், மானுடத்தைப்பார், இயற்கையைப்பார்,பிரபஞ்சத்தைப்பார் என அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அந்த பேரலகுதான் உலகியலுக்கு அப்பாற்பட்ட களம்
அந்த பேரலகை தெய்வம் என்னும் மையத்தால் வரையறை செய்தது. அல்லது பிரம்மம், மகாதம்மம், பவசக்கரம் என்னும் மாபெரும் உருவகங்களால் விளக்கியது. தத்துவமும் இலக்கியமும் வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றன. ஆனால் அவையனைத்துமே அடிப்படையில் உலகியலுக்குப் பின்னணியாக ஒரு முழுமையை முன்வைக்கின்றன, அந்த முழுமையில் இருந்து கொள்ளப்பட்ட விழுமியங்களை உலகியலுக்கு நிபந்தனையாக்குகின்றன.
சென்ற நூறாண்டுகளில் நம் சமூகத்தில் மரபு மீதான பிடிப்பு நவீனக் கல்வியால் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. நவீனக்கல்வியை மரபற்றதாக ஆக்க நூறாண்டுகளாக முயன்று வென்றுவிட்டோம். நவீன ஜன்நாயகம் மதச்சார்பற்றது. ஆனால் நாம் நவீன குடிமகன் மதச்சார்பற்றவன் என எண்ணிக்கொண்டோம். மதச்சார்பின்மைக்காக மரபை கல்வியிலிருந்து விலக்கினோம். மரபு என்பது மதம் மட்டுமே என மயங்கியமையால் குளிப்பாட்டிய நீருடன் குழந்தையையும் வீசிவிட்டோம்.
[இந்த இழப்பு இந்துக்களுக்கு மட்டுமே. இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் தங்கள் மதக்கல்வி முறைமைகளை இறுக்கமாகப் பேணிக்கொண்டனர். நாத்திகத்தின் மொத்தத் தாக்குதலும் இந்துமரபு மீதுதான்.]
மரபார்ந்த ஞானம் கல்வியிலிருந்து அகன்றால் அதை ஓரளவேனும் அளிக்கவேண்டியவை குடும்பங்கள். நம் குடும்பங்கள் எவற்றிலும் மரபார்ந்த எந்தக் கல்வியும் அளிக்கப்படுவதில்லை. எளிய முறைமைகள், மனப்பழக்கங்கள் அளிக்கப்படும் குடும்பங்கள்கூட மிகமிகச் சிலவே. பெரும்பாலான குடும்பங்கள் சுயநலங்களின் மோதற்களங்கள். அதன் விளைவான வன்முறை திகழுமிடங்கள்.
மதம் அகன்ற இடத்தில் தத்துவம் வந்தமைந்திருக்கவேண்டும். இலக்கியம் திகழ்ந்திருக்கவேண்டும். மதம் இல்லாமலாகும்போது மேலைநாடுகளில் தத்துவமும் இலக்கியமுமே விழுமியங்களை நிலைநாட்டுகின்றன. நீங்கள் பார்த்ததைப்போன்ற கனிந்த முதியவர்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் ஒன்று மதத்தால் அவ்வாறு உருவாக்கப்பட்டிருப்பார்கள். அல்லது தத்துவத்தாலோ இலக்கியத்தாலோ.
தத்துவம் என்னும் போது அரசியல், சமூகவியல், அறவியல் என அனைத்துத் தளங்களிலும் திகழும் அடிப்படைத் தரிசனங்களின் தொகுதியை குறிப்பிடுகிறேன்.உச்சகட்ட அறச்சார்பு கொண்ட இடதுசாரிகள் பலரிடம் நான் பழகியிருக்கிறேன். அவர்களுக்கு மதமில்லை, அந்த இடத்தை தத்துவம் நிரப்புகிறது.
நம் சமூகத்தில் மதம் அகன்றுவிட்டிருக்கிறது. தத்துவமோ இலக்கியமோ அறிமுகமே இல்லை. எஞ்சியிருப்பது வெறும் உலகியல். அது பிழைப்புவாதமாக வாழ்நாள் முழுக்க கூடவே இருக்கிறது. சாதி,மதம், மொழி என அடையாள அரசியலாகிறது. தன்னலமாக மாறி தனிமனிதனில் சீழ்கட்டி நிற்கிறது. இன்றைய முதியவர்கள் பெரும்பாலானவர்கள் அந்த வழியில் வந்தவர்கள்.
தமிழகத்தில் தொழில் செய்பவர்களுக்குத் தெரியும், ஆயிரம் ரூபாய்க்கு நம்பத்தக்க எவரும் கண்ணுக்கே படமாட்டார்கள். மோசடி, ஏமாற்று, சொல்மாறுதல் எல்லாமே இங்கே வியாபார முறைமை. தமிழகத்தில் வணிகத்தில் பெரும் உழைப்பு செலவிடப்படுவது ‘வசூலுக்கு’த்தான். அதாவது நமக்கு தரப்படவேண்டிய காசை நாம் அலைந்து திரிந்து வசூலிப்பது. எந்த ஊழியரிடமும் தன்னியல்பான தொழில் நேர்மையை எதிர்பார்க்கமுடியாது. வேலைக்களங்களில் வேலைசெய்பவர்களுக்கு நிகராகவே இங்கே மேஸ்திரிகளும் கண்காணிகளும் தேவை. இல்லையென்றால் ஒன்றும் நிகழாது.அரசுத்துறைகளில் ஊழல் என்பது இயல்பான உபரி வருவாய். அதை ஈட்டுவது திறமை. அல்லது அச்சத்தால் வாளாவிருத்தல்.
இவ்வாறு ஈட்டும் பொருள் வழியாக நுகர்வின் இன்பம், ஆணவநிறைவு ஆகியவற்றை அடைவதே மகிழ்ச்சி என கொள்ளப்படுகிறது. அவற்றை நிறைவேற்றிவிட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைத்துவிட்டது. இப்படி வாழ்ந்து முதிரும் ஒருவர் முதுமையில் மட்டும் கனிந்து இருப்பார் என எப்படி எதிர்பார்க்கமுடியும்? எட்டிக்காய் கனிந்தால் இனிப்பாகிவிடுமா என்ன?
இந்த மனநிலைதான் ‘வாழ்வாசை’ ஆக மாறுகிறது. வாழ்க்கை என்பது அவர்களுக்கு அறிதல் அல்ல, நுகர்வு மட்டுமே. அறிதலில் கடந்துசெல்லுதலும் உள்ளது. அறிந்தவற்றை அக்கணமே தாண்டிவிடுகிறோம். நுகர்வு சலிப்பதில்லை, நுகர நுகர இன்னும் மிச்சமுள்ளது என்னும் பதற்றமே எஞ்சுகிறது. அதுவே கடைசித்துளி வரை வாழ்க்கையை அள்ளிக்கொள்ளும் வெறியை அளிக்கிறது. அது ஒன்றும் உயர்பண்பு அல்ல. அது ஓர் உயர்பண்பு என இந்த நுகர்வுமைய உலகம் நம்மிடம் சொல்கிறது. அது ஓர் இழிநிலை. ஆன்மிகமற்ற சதையிருப்பு நிலை.
எண்ணிப்பாருங்கள், நம் சமூகத்தில் முதுமை என்பது கௌரவத்துக்குரியதாக இருந்தது. ஆகவே வரவேற்கப்படுவதாக இருந்தது. எப்போது நாம் இளமையே வாழ்க்கை, முதுமை என்பது பொருளற்றது என்று எண்ண ஆரம்பித்தோம்? எப்போது தலைச்சாயம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தோம்? “நான் மனசாலே இன்னும் இளமையாத்தான் இருக்கேன்” என்னும் அசட்டுத்தனத்தைச் சொல்ல ஆரம்பித்தோம்? உடல் முதுமையடைந்தபின்னரும் ஏன் அபப்டி இருக்கவேண்டும் என்று ஏன் நமக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு பருவத்துக்கும் அதற்கான விவேகமும் வாழ்க்கைப்பார்வையும் உண்டு, அதை அடைவதே வாழ்க்கை என்று ஏன் தெரியவில்லை?
அப்படி வெறுத்து, கசந்து, அஞ்சி ,கூடுமானவரை ஒதுக்கி , வேறுவழியில்லாமல் வந்துசேரும் முதுமையில் ஒருவர் கனிவு கொண்டிருப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அந்த முதுமையை இன்றைய மனிதர் ஒரு தண்டனைக்காலமாகவே எண்ணுவார். குப்பைக்கூடையில் வீசப்பட்டதாக நினைப்பார்.அவர் அங்கே அதிருப்தியுடன் பொருமிக்கொண்டிருப்பார். தன் வாழ்க்கை முடிந்துவிட்டதா என பதறிக்கொண்டிருப்பார். தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா, உலகம் தன்னைப் பொருட்படுத்துகிறதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். தன்னை நிறுவிக்கொள்ள முயல்வார். அதன்பொருட்டு பிறரை தொந்தரவு செய்தாலும் சரி என நினைப்பார்.
குடும்பத்தவர் தன்னை பொருட்படுத்தவேண்டும் என்பதற்காகவே அவர்களைச் சித்திரவதை செய்யும் கிழடுகள் உண்டு. இல்லாத நோய்களை நடிப்பார்கள். புலம்பிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் குமுறுவார்கள். தனக்கு மருத்துவம் செய்ய செலவிட்ட தொகை எவ்வளவு என அறிய பில்களை தேடி கூட்டிப்பார்க்கும் முதியவர்களை கண்டிருக்கிறேன். போதிய பணம் செலவிடப்படவில்லை என்றால் சீற்றம் கொள்வார்கள். எதிரிகளை உருவாக்கி அவர்களை கசந்து வசைபாடிக்கொண்டே இருப்பதன் வழியாக தன் இருப்பை நிறுவிக்கொள்ளும் முதியவர்கள் ஏராளமாக நம்மைச்சுற்றி இருக்கிறார்கள். வெறுப்பு என்பது அழுத்தமான ஓர் உணர்வு. அது தானாக வளர்வது.இவர்கள் தன் முக்கியத்துவத்துக்காகவே வெறுப்பை வளர்த்துக்கொள்வார்கள்.அதனாலேயே துயரில் உழல்வார்கள்.
நான் மகிழ்ந்தும் வியந்தும் பார்த்த பல முதியவர்களை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சந்தித்திருக்கிறேன். எத்தனை முகங்கள். இயல்பாக உதவுபவர்கள். நிதானமாக ஆலோசனை சொல்பவர்கள். சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் மூவர்.எமர்சன் நினைவகத்தில் ஓய்வுநேர ஊதியமில்லா பணியாக வேலைபார்த்த மூதாட்டியின் புன்னகைக்கும் முகம் இந்நாளை பரவசம் கொள்ளச் செய்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன. அன்றே தொண்ணூறு அகவை நிறைந்தவர். மறைந்திருக்கக்கூடும். நிறைவாழ்க்கை.
இன்றும்கூட சிற்றூர்களில் அத்தகைய கனிந்த முதியவர்களைக் காண்கிறேன். பலரைப்பற்றி எழுதியுமிருக்கிறேன். உதாரணமாக, ஆகும்பேயில் உணவகம் நடத்தும் கொங்கணி பிராமணரான முதியவரும் மனைவியும். பயணங்களில் அத்தகையோர் தென்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே உழைப்பவர்கள், பெரும்பாலும் அடித்தளத்தினர். நடுத்தர வர்க்கத்தில் பணி ஓய்வுபெற்ற முதியவர்களில், இலக்கிய வாசகர் அல்லாதவர்களில், அடிப்படை மரியாதைக்குரிய எவரையேனும் சந்தித்திருக்கிறேனா என எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். நினைவுக்கு வரவில்லை. இளமையிலேயே திரும்பத் திரும்ப நான் எனக்குச் சொல்லிக்கொண்டது எந்நிலையிலும் இவர்களைப்போல நான் ஆகிவிடக்கூடாது என்னும் வஞ்சினத்தை மட்டுமே.
கனிதல் என்பது முதுமையில் திடீரென அமைவது அல்ல. வாழ்க்கை முழுக்க மெல்லமெல்ல நிகழ்ந்து நிறைவடையும் ஒரு நிலை அது. அதற்குத் தேவை சிற்றலகுகளில் வாழும் சிறுவாழ்க்கையில் இருந்து மேலெழும் உளவிரிவு. சென்றகால அன்னையர் குழந்தைகளை வளர்த்தே அந்தப்பெருநிலையை அடைந்ததுண்டு. விவசாயிகள் பயிர்களைக் கண்டே அதை எய்தியதுண்டு. மதம் என திரட்டப்பட்டிருப்பது அந்த முழுமையுணர்வே. மெய்ஞானம் என்பது அதுவே.
மதம் நிறுவனங்களும் அடையாளங்களும் ஆகிறது, தன்னை குறுக்குகிறது என்று ஒருவர் எண்ணினால் அதற்கு நிகர்நிற்கும் உயர்தத்துவமும் பேரிலக்கியங்களும் அவரை நிறைக்கவேண்டும். தன்னலத்தை பெருக்கவைக்கும், ஆணவத்தால் சிறுமைகொள்ளச்செய்யும் அரசியல்வாதம் அன்றாடவம்புகளில் இருந்து உள்ளம் மேலெழவேண்டும்.
ஜெ
ப.சிங்காரம் – பதிப்பாளர் கடிதம்
ப.சிங்காரம்-பதிப்பாளருக்கு வேண்டுகோள்
அன்புள்ள ஜெ,
வரலாற்று அபத்தத்தின் தரிசனம் – ப.சிங்காரம் படைப்புகளுக்கான முன்னுரையை பதிப்பிக்க ஒப்புதல் அளித்தமைக்கு மிகுந்த நன்றிகள். அது இன்றைய புதிய தலைமுறை வாசகர்களிடம் இன்னும் நிறைய கொண்டு சேர்ப்பதில் ஆவலாக உள்ளேன்.
கூடவே, தாங்கள் குறிப்பிட்டதுபோல் தங்களின் முன்னுரை முதலில் பிரசுரமான ஆண்டு, இடம் ஆகியவற்றை நிச்சயம் குறிப்பிடுவோம், தவறமாட்டோம் என உறுதியளிக்கிறேன்.
அதுபோல், பதிப்புத்துறையில் தாங்கள் சொல்வதுபோல் நிறையப் புத்தகங்களின் பதிப்புகளுக்கு இந்த Bibliography பிரச்சினை உண்டு. நானும் ஒரு புத்தகத்தின் பதிப்பில் முன்பொருமுறை இந்தத் தவறு செய்திருக்கிறேன். ஆனால், புதுச்சேரி ஃப்ரெஞ்சு இன்ஸ்ட்டியூட் திரு. கண்ணன், அதைக் குறிப்பிட்டு எனக்குப் போதுமான விளக்கமளித்துத் திருத்தினார். அதற்குப்பின் நீங்கள் குறிப்பிடுகிற பதிப்பு வரலாறு தவறுகள் நேராதவண்ணம் தமிழ்வெளி புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன. அது என்றென்றும் தொடரும்..
மற்றும், நூலக ஆணை பெறுதல் (ஐந்து ஆண்டுகளுக்குள் வரும் மறுபதிப்புகளுக்கு அவை மறுக்கப்படுகின்றன. மேலும் நமது புத்தகங்கள் அதன் பதிப்புகள் பற்றிய போதுமான அறிவும் நூலக அலுவலர்களுக்கும் இல்லை) போன்ற காரணங்களால், பதிப்பு வரலாறுகள் பதிப்பாளர்களால் மறுதளிக்கப்படுகின்றன.
அத்துடன் ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ அடையாளம் பதிப்பகத்திலிருந்து நியூ செஞ்சுரி பதிப்பகத்திற்குக் கைமாறியிருக்கிறது. நீங்கள் சொன்னதுபோல்தான் இம்பிரிண்ட் பக்கம் குறிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நூலாசிரியர்களே இல்லாத பழைய நூல்கள் பதிப்பிக்கப்படும் போது பதிப்பாளர்களே இதற்குப் பொறுப்பாவார்கள்.
குறைந்தது நூலுக்குள் ஒரு பதிப்புரையாகவாவது எல்லா செய்திகளையும் சேர்க்கலாம். அதை நூலகங்களில் வாசிக்கமாட்டார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை, வேதனையான பகடியும் கூட.
ப.சிங்காரத்தின் நாவலை மறுபதிப்பு செய்யும்போது அதன் பதிப்புவரலாறு சுருக்கமாக அளிக்கப்படவேண்டும். அதை முதலில் பதிப்பித்தவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. மிகநீண்ட இடைவெளிக்குப்பின் பதிப்பித்தவர் தமிழினி வசந்தகுமார். இச்செய்திகளும் ப.சிங்காரம் எழுதிய முன்னுரைகளும் முன்போ பின்போ அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நிச்சயம் கவனத்தில் கொண்டு, போதுமான தகவல்களைப் பதிப்பிக்கிறோம்.
மிக்க நன்றி,
கலாபன்
தமிழ்வெளி @ TAMIZHVELI
சில வாசகர்கள் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
வணக்கம்..
கோவை ஆலந்துறை பகுதியில் பாலாஜி பேக்கரி உள்ளது. நானும் நண்பர்களும் தினசரி செல்வதுண்டு.ஒருநாள் உங்கள் புத்தகம் ஒன்று
கையில் வைத்திருந்தேன்.உரிமையாளர் ரமேஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் முதன் முதலில் அறம் தொகுப்பு வாசித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.என்னிடமிருந்த பிற உங்கள் புதினங்களை கொண்டு போய் கொடுத்தேன்.அந்த முகில் நாவல் வாசித்து அவர் நேரில் பேசியது அவ்வளவு உயிர்ப்பான ஒன்று.
தன் நண்பர்களுக்கு அறம் தொகுப்பு தான் பரிசளித்து வருகிறார்.கொஞ்சம் பிஸ்கெட், கேக் சாருக்கு அனுப்ப வேண்டுமென்று தோன்றுகிறது.அனுப்பலாமா என்று கேட்டார்.இன்று அனுப்பி வைத்திருக்கிறார்.
நன்றிகள் சார்…
குமார் ஷண்முகம்
*
அன்புள்ள குமார்,
திரு ரமேஷ் அவர்களுக்கு என் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவிக்கவும். வாசிப்பவர் ஒவ்வொருவரும் நம் கூட்டத்தவரே. நாம் இங்கே எழுதியும் வாசித்தும் ஒன்றை திரட்டியமைத்துக் கொண்டிருக்கிறோம்
ஜெ
அன்புள்ள ஜெ
நேற்று ஓர் ஆட்டொவில் பயணம்செய்துகொண்டிருந்தேன். சென்னையில் ஆட்டோக்காரர்கள் இயந்திரத்தனமாக இருப்பார்கள். இந்த ஆட்டோ ஓட்டுநர் உற்சாகமாக ஏதோ பாடியபடி இருந்தார். நான் பேச்சுக்கொடுத்தேன். என்னிடமிருந்த வெண்முரசு நாவலைப் பார்த்தவர் உங்களை தெரியும் என்று சொன்னார். அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை உண்டுபண்ணிய நூல் என்று தன்மீட்சியைச் சொன்னார். எவரோ அவருக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.
அதற்கு முன் அவருக்கு வாழ்க்கையின் நோக்கம் என்ன என்னும் குழப்பங்கள் இருந்ததாகச் சொன்னார். மதங்கள் சொல்லும் பதில்களில் ஈடுபாடில்லை. அரசியலில் ஈடுபாடு இருந்தது, இப்போது கிடையாது. தனிமனிதனாக அவர் தேடிய கேள்விகளுக்கான விடை தன்மீட்சியில் இருந்தது என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் பெயர் ரங்கமன்னார்
சிவக்குமார் பொன்னம்பலம்
*
அன்புள்ள சிவக்குமார்
தன்மீட்சி நூலை தன்னறம் பதிப்பகம் பல்லாயிரம் பேருக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளது. என் உலகுக்குள் நுழைய வாசலாக அது உள்ளது. முன்பு அறம் எப்படி இருந்ததோ அப்படி.
ரங்கமன்னார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஜெ
ஒரு மலையாள வாசகர் மௌன வாசகர் பாமர வாசகர் என்பவர்… ஒரு கோவை வாசகர் வாசகன் என்னும் நிலைவிஷ்ணுபுரம் பல்கலைக் கழகம்
அரசின் ஆதரவோ, அங்கீகாரமோ இல்லாமல் நாட்டில் சில பல்கலைக் கழகங்கள் செயல் படுகின்றன. அவற்றில் நான் அறிந்த வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு அறிவுப் பேரியக்கமாக விளங்கி வருவது விஷ்ணுபுர இலக்கிய வட்டம். அதை ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்வது அந்த சொற்களுக்கே மதிப்புயர்த்தும்.
கதைகள் திரும்புதல் – கடிதம்
அன்புள்ள ஜெ.,
முன்பெல்லாம் எழுத்தாளர்களின் கதைகள் திருப்பி அனுப்பப் படுவது பற்றி பத்திரிகைகளில் ‘ஜோக்’குகள் வருவதுண்டு. இணைய வசதி வந்த பிறகு திருப்பி அனுப்புதல் ஒழிந்தது. அசோகமித்திரன் எழுதுவார் க நா சு வின் அறையில் கட்டுக் காட்டாக எழுதிக் குவிக்கப்பட்ட காகிதங்கள் (manuscript) இருக்கும். பாதியும் பத்திரிகை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தவை என்று. சி. சு. செல்லப்பாவைக் குறித்தும் அதேபோல் சொல்லப்படுவதுண்டு. சுஜாதாவின் ‘லாண்டரி லிஸ்ட்’டை அனுப்பினாலும் பத்திரிகைகள் பிரசுரிக்கத் தயாராக இருந்ததாகப் படித்திருக்கிறேன். புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனவா? உங்கள் அனுபவம் எப்படி?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
***
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்
ஓர் இதழ் பிரசுரத்தை மறுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அந்தப்படைப்பு ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு உகந்ததாக இல்லை, அவ்வளவுதான். சிலசமயம் கூடுதல் தரமானவை என்பதனால்கூட மறுப்பு நிகழும். ஆகவே அதைப் பொருட்படுத்தலாகாது. நம்மை நாம் மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கவேண்டும்.
நான் மிக இளமையிலேயே எழுத வந்தவன். ஆகவே எழுதிக்கொண்டே இருந்தேன். பிரசுரமாகிறதா இல்லையா என கவனிப்பதில்லை. நண்பர்களுக்கும் எழுதிக்கொடுப்பேன். அவர்களின் பெயர்களிலும் பிரசுரமாகும். நிராகரிக்கப்பட்ட கதைகளை திரும்ப அனுப்புவதில்லை. அவை கருப்பையை சென்றடையாத உயிரணுக்கள் போல.
ஆனால் எனக்கு எழுத்தாளன் என்னும் தன்னடையாளம் உருவானபின், என் இருபது வயதில் இருந்து நிராகரிப்பு என்னை சீற்றம் கொள்ளச் செய்தது. ஒருமுறை ஒரு கதை ஏற்கப்படவில்லை என்றால் மீண்டும் அவ்விதழில் எழுதுவதில்லை. என் ஒரு கட்டுரை நிராகரிக்கப்பட்டதனால் தினமணியில் எழுதுவதை விட்டுவிட்டேன்
என் படைப்புகள் திரும்ப வந்ததோ நிராகரிக்கப்பட்டதோ மிகமிகக்குறைவு. இல்லை என்றே சொல்லலாம். 1990ல் என் திருமணத்திற்கு காசு வேண்டும் என்பதற்காக ஒருநாள் வெளியே சென்று அன்று வந்துகொண்டிருந்த அத்தனை இதழ்களையும் வாங்கி தமிழிலும் மலையாளத்திலும் வெளியான எல்லா இலக்கியப்போட்டிகளுக்கும் கதை அனுப்பினேன். ஆறு போட்டிகள். ஆறிலும் பரிசு பெற்றேன்.
ஒரு கதை எஸ்.அருண்மொழிநங்கை என்ற பேரில் கல்கியில் பரிசு பெற்றது. அப்போது அவள் என் மனைவி அல்ல. இன்றைக்கு அவள் எழுதுகிறாள். நாளைக்கு அவளைப்பற்றி எவராவது ஆய்வுசெய்து அந்தக்கதையையும் அவள் கணக்கில் சேர்த்துவிடக்கூடாது…
ஜெ
January 27, 2022
தேவிபாரதி விருது விழா
இடம் டாக்டர் ஜீவா நினைவகம். நலந்தா மருத்துவமனை ஈரோடு
காலம் 28-1-2022 காலை 10 மணி
ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும் சமூகச்செயல்பாடு. இலக்கியம் ஒருவரைப் பண்படுத்தும் என்றுதான் நினைக்கிறேன். அதன் எல்லாக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளவும், சில தருணங்களில் வெறுக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொடுப்பவை இலக்கியம்தான்” என்கிறார் தேவிபாரதி.
வாழ்வூரிய மனிதர்களின் கதைகளை, அந்நிலத்திற்குரிய யதார்த்த குணங்களுடன் புனைவிலக்கியமாகத் தமிழில் பதிவுசெய்த எழுத்தாளுமை தேவிபாரதி அவர்களின் வார்த்தைகளை இக்கணம் நினைத்துக்கொள்கிறோம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என தான் கையாண்ட ஒவ்வொன்றிலும் தன்னுடைய படைப்பாழத்தை விதைத்துச் சென்றவர் தேவிபாரதி. இனிவரும் தமிழ்ச்சமூகம் தம் இலக்கிய முன்னோடி என எண்ணிக் கொண்டாடத்தக்க ஆளுமைகளுள் இவர் முதன்மையானவர்.
கடந்த ஆண்டு எழுத்தாளரும் ஓவியருமான யூமா வாசுகி அவர்களுக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாண்டிற்கான தன்னறம் இலக்கிய விருது, எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நோயச்சகால சூழ்நிலை என்பதால் தேவிபாரதி அவர்களின் நெருங்கிய நட்புவட்டங்கள் மட்டுமே பங்குபெறும் குறுங்கூடுகையாக இந்நிகழ்வு அமையவுள்ளது.
2021ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கரங்களால் தேவிபாரதி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருதுடன், நண்பர்களின் கூட்டிணைவில் விருதளிப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாயும் அவருக்கு வழங்கவுள்ளோம். தமிழின் புனைவிலக்கியத் தொடர்ச்சியை தனது யதார்த்தவாத படைப்புமொழியால் செழுமைப்படுத்திய இலக்கியச் செயல்பாட்டிற்காக இவ்விருது அவருக்குப் பணிந்தளிக்கப்படுகிறது.
இவ்விருதளிப்பின் நீட்சியாக, தேவிபாரதி அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய 392 பக்க புத்தகமானது, தன்னறம் நூல்வெளி வாயிலாக விலையில்லா பிரதிகளாக நண்பர்களுக்கு விரைவில் அனுப்பிவைக்கவுள்ளோம். தனது படைப்புகள் குறித்தும், வாழ்வனுபவம் குறித்தும் அவர் பேசிய நேர்காணல் காணொளித் தொகுப்பு ஒன்றும் அண்மையில் குக்கூ காணொளிப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
படைப்பியக்கத்தின் நீள்வரிசையைத் தங்கள் மொழியிருப்பால் தொடர்ந்து முன்னோக்கி திசைசெலுத்தும் எல்லா முன்னோடிப் படைப்பாளிகளையும் இக்கணம் நெஞ்சில் நிறைத்துக் கொள்கிறோம். நொய்யல் மனிதர்களின் வாழ்வுக்கதையினை எவ்வித பாவனைகளுமின்றி அதே உயிரீரத்துடன் படைப்பியற்றிய எழுத்தாளுமை தேவிபாரதி அவர்களை தன்னறம் இலக்கிய விருது வழியாக மீண்டும் சமகால இளையமனங்களுக்குத் துலங்கச்செய்வதில் தன்னிறைவு அடைகிறோம்.
தான் கொண்டிருக்கும் ஆழத்தால் தனித்துயர்வது தேவிபாரதியின் ஒவ்வொரு எழுத்துப்படைப்பும். ஆழங்களின் இருளும் செறிவும் ஒன்றிணைந்து முயங்கி அவர் படைப்புகளுக்கு அழியாவொளியை வழங்கிவிடுகிறது.
~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
ப.சிங்காரம்-பதிப்பாளருக்கு வேண்டுகோள்
   
அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,
தங்களுக்கு நீண்ட நாட்களாகக் கடிதம் எழுத நினைப்பதுண்டு. ஆனால் அவசியமின்றித் தொந்தரவு வேண்டாம் என்பதால் அந்த எண்ணத்தை அந்த நொடியே கைவிட்டுவிடுவேன்.
நானும் மறைந்த குமரகுருபரனும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்தவர்கள். குமாருடன் தங்கள் எழுத்துகளைப் பற்றி நிறையப் பேசித் தீர்த்திருக்கிறோம். கவிதா சொர்ணவல்லியும் உடன் இருந்ததுண்டு. அந்த வகையில் குமரகுருபரன் நினைவு விருது விழாக்களில் மட்டும் தங்களைத் தள்ளிநின்றே நேர் கண்டதுண்டு. அதற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
முன்பு காட்சி ஊடகத்துறையில் பண்புரிந்த நான் அதிலிருந்து விடுபட்டுத் தற்போது தமிழ்வெளி என்கிற பதிப்பகம் மற்றும் தமிழ்வெளி காலாண்டிதழ் ஆகியவை நடத்திவருகிறேன். தமிழ்வெளி வெளியீடாக இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கிறது. தமிழ்வெளி இதழும் தற்போது ஐந்தாம் இதழ் வெளிவந்து பயணத்தைத் தொடர்கிறது.
தற்போது நூல் பதிப்பில் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’, ‘புயலிலே ஒரு தோணி’ ஆகிய இரு நாவல்களையும் ஒரே புத்தகமாக விலையடக்கப் பதிப்பாகக் கெட்டி அட்டையில் சிறந்த தாள் மற்றும் அச்சில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அப்படி முன்பு இரண்டு நாவல்களையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. (தற்போது அந்த இரு நாவல்களும் சேர்ந்த புத்தகம் பதிப்பில் இல்லை)
தமிழினி வெளியீட்டில் தாங்கள் எழுதிய ‘வரலாற்று அபத்தத்தின் தரிசனம்’ ப.சிங்காரத்தின் நாவல் படைப்புகள் குறித்த கட்டுரை மிகவும் ஆய்வுபூர்வமானது. சுமார் இருபது பக்கங்களுக்கும் மேலாக நீளும் அந்தக் கட்டுரை இப்போது வேறு எங்கும் புதிய வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைப்பதாகத் தெரியவில்லை. அதனைத் தாங்கள் ஒப்புதல் தெரிவிக்கும்பேரில், தமிழ்வெளி புதிதாகக் கொண்டுவரவுள்ள பதிப்பில் சேர்க்க விருப்பமாகவுள்ளேன்.
இன்றைய புதிய வாசகர்கள் ப. சிங்காரத்தின் படைப்புகளை வாசித்து எதிர்கொள்ள மிகச்சரியான ஆற்றுப்படுத்தலாகத் தங்களின் அந்தக் கட்டுரை இருக்கிறது. அதனைத் தமிழ்வெளி பதிப்பில் சேர்த்துக்கொள்ளத் தங்களின் ஒப்புதல்வேண்டி காத்திருக்கிறேன்..
நன்றி,
கலாபன்
தமிழ்வெளி
தமிழ்வெளி @ TAMIZHVELI
   
அன்புள்ள கலாபன்,
ப.சிங்காரம் அவர்களின் நாவல்களை நீங்கள் தமிழில் கொண்டுவருவதறிந்து மகிழ்ச்சி. என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். என் முன்னுரையை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதில் அது முதலில் பிரசுரமான ஆண்டு, இடம் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
ஏனென்றால் தமிழில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய பிழை குறிப்புகள் இல்லாமல் கட்டுரைகளும் நூல்களும் மறுஅச்சாவது. அவற்றை தவிர்க்கும்படி கோருகிறேன். அடுத்தடுத்த பதிப்புகளில் முந்தைய பதிப்புகள் பற்றிய தரவுகள் தேவை. ஒரு நூலின் ஏதேனும் ஒரு பதிப்பின் பிரதி கிடைத்தால்கூட நம்மால் அந்த நூலின் பதிப்பு வரலாற்றை அறிந்துகொள்ளமுடியவேண்டும். தமிழில் பலநூல்களின் ஏதேனும் ஒரு பிரதியே கிடைக்கிறது.
பலபிரசுரங்கள் அவர்கள் வெளியிட்ட பதிப்பைப் பற்றிய செய்திகள் மட்டுமே அந்நூலில் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். பல பதிப்புகள் வெளிவந்த ஒருநூல் இன்னொரு பதிப்பகத்தால் வெளியிடப்ப்டும்போது தங்களுடைய முதல்பதிப்பு என்று போட்டிக்கொள்கிறார்கள்.
உதாரணமாக ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் 2018ல் அடையாளம் பதிப்பாக வெளிவந்துள்ளது. அட்டையில் நான் எழுதிய விமர்சனக்குறிப்பு உள்ளது. ஆனால் ‘அடையாளம் பதிப்பு 2018’ என்று மட்டுமே உள்ளது. நான் இன்று அந்நாவல் முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது என்று பார்ப்பதற்காக அதை எடுத்து பார்த்தேன். முதல்பதிப்பு பற்றிய தகவல் எங்கேயுமே இல்லை. முதல்பதிப்புக்கு ராஜ்கௌதமன் எழுதிய முன்னுரை இல்லை. வேறெந்த பதிப்பாளர்குறிப்பும் இல்லை. பின்னட்டைக்குறிப்புகூட இல்லை. அந்நாவல் மட்டுமே கைக்குக் கிடைக்கும் ஒருவர் இது ஒரு புதுநாவலின் முதல் பதிப்பு என எண்ண எல்லா வாய்ப்பும் உள்ளது.
பலசமயம் பதிப்பாளர்கள் இப்படிச் செய்வது நம் நூலகங்களில் பல ஆண்டுகள் பதிப்பில் இல்லாமல் இருந்து மறுபதிப்பாகும் நூல்களைக்கூட ‘மறுபதிப்பு வாங்கவேண்டாம்’ என்று சொல்லி மறுப்பதனாலாக இருக்கலாம். ஆனால் இது நூலை அறியமுயலும் வாசகனுக்கு மிகப்பெரிய இடர். குறைந்தது நூலுக்குள் ஒரு பதிப்புரையாகவாவது எல்லா செய்திகளையும் சேர்க்கலாம். அதை நூலகங்களில் வாசிக்கமாட்டார்கள்.
ப.சிங்காரத்தின் நாவலை மறுபதிப்பு செய்யும்போது அதன் பதிப்புவரலாறு சுருக்கமாக அளிக்கப்படவேண்டும்.அதை முதலில் பதிப்பித்தவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. மிகநீண்ட இடைவெளிக்குப்பின் பதிப்பித்தவர் தமிழ்னி வசந்தகுமார். இச்செய்திகளும் ப.சிங்காரம் எழுதிய முன்னுரைகளும் முன்போ பின்போ அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஜெ
இன்றைய காந்தி வாசிப்பனுபவம்
வணக்கம் ஜெ
உங்களின் 2014 ஆம் ஆண்டு மலேசிய வருகையின் போதுதான் உங்களின் தளத்தை வாசிக்கத் தொடங்கினேன். உங்கள் பெயரை இணையத்தில் தேடிய போது மொழி லிபி, பாரதியார் போன்ற ஒரிரு சர்ச்சைகல் தெரிந்தன. உங்கள் தளத்தில் ஒவ்வொன்றையும் இட்டுத் தேடத் தொடங்கினேன். ஒன்றன் பின் ஒன்றாக சரடைப் போல வெவ்வேறு கட்டுரைகளையும் விவாதங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தளம் ஒருவகையான அகராதியைப் போலாயிருந்த தருணமது. தேடலில் எதையாவது தட்டச்சிட்டுத் தேடினால் அதுகுறித்த சித்திரம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அப்படியாகத்தான் காந்தி குறித்த கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்.
எங்கள் வீட்டில் காந்தியின் படமொன்று இருந்தது. பச்சை வண்ணப் பின்னணியில் நேரு, இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரி, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்களுக்கு மேல் காந்தியின் படம் பெரியதாக இருக்கும். காந்தியைப் பற்றிய பிம்பம் ஞானி, மகான் என்றளவில் அறிமுகமாகியிருந்தது. உங்கள் கட்டுரைகளில் இருந்த அவரின் பாலியல் ஒடுக்கச் சோதனை வழிமுறைகள் அதிர்ச்சியை அளித்தன. எப்பொழுதும் அழகாகச் சிரிக்கும் காந்தியின் வரையப்பட்ட படத்திலிருந்து பொக்கைவாய் சிரிப்புடன் இருக்கும் காந்தியின் படமே வித்தியாசமாக இருந்தது. அந்தக் கட்டுரைகளின் வாயிலாகக் காந்தியைப் பற்றிய தரவுகளை நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தது. அவற்றை வீட்டுப் பெரியவர்களுடனான உரையாடலில் குறிப்பிட்ட போது அவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நெடுங்காலத்துக்கு முன்னால் வாழ்ந்த ஞானி என்ற பிம்பமே அவர்களிடம் இருந்தது. எனக்கு காந்தியின் மீதான வழிபாட்டுணர்வு கூட தோன்றியதெனலாம்.
அதன் பிறகு, சத்தியச்சோதனை புத்தகத்தை வாசித்தேன். பின்னர், காந்தியிலாளர்களைப் பற்றி உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளையும் வாசித்தேன். காந்தியைப் பற்றிய தொடர் வாசிப்பு காந்தியத்தை உணர்ந்து கொள்ளச் செய்தது. மீண்டும் இன்றைய காந்தி எனும் காந்தியைப் பற்றிய உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்கும் போது நவீன உலகச் சிக்கல்களுக்குக் காந்தியத்தின் தேவை என்னவாக இருக்கிறதென்பதை உணர முடிந்தது.
பெரும்பாலும், எனக்குள் காந்திய வழிமுறையிலான போராட்டத்தை ஒட்டி சில கேள்விகள் எழுவதுண்டு. உண்ணாவிரதம், சத்தியாகிரகம் போன்றவை எதிர்தரப்பினரின் மனச்சான்றுடன் உரையாடல் நிகழ்த்துமா, கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகப் பங்கேற்பை அளிக்கும் நாடுகளில் இவை சாத்தியமா ஆகியவற்றைச் சொல்லலாம். இந்த ஒட்டுமொத்தத் தொகுப்பில் மீளமீள இடம்பெறும் காந்தியத்தைப் பற்றிய சித்திரம் மக்களிடையே இருக்கும் கருத்தியல் மேலாதிக்கத்தைத் தொடர் உள்ளார்ந்த போராட்ட அணுகுமுறைகளால் மாற்றுவதன் மூலமே எண்ணிய இலக்கை அடைவதென்பது. அதை ஒட்டிச் சிந்திக்கும் போது, மானுடத்தின் மீதான நம்பிக்கையோடும் தியாக உணர்வோடும் காந்தியத்தை முன்னெடுக்கும் போதே அதன் சாத்தியம் எட்டமுடியும் என எண்ணத் தோன்றுகிறது.
அத்தகைய சாத்தியத்தை அடைய ஒருவரால் முடியுமா என அடுத்த கேள்வியும் பிறக்கிறது. ஆனால், மலேசியாவிலே கூட காந்திய வழியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல போராட்டங்கள் எண்ணிய இலக்குகளை அடைந்திருக்கின்றன என உடனடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. ஜனநாயகத்தைப் பற்றிய தொடர் கசப்பான செய்திகள் பரவும் வேளையில் இந்தப் புத்தகத்தின் வாசிப்பு ஒருவகையில் அதிலிருந்து மீள்வதற்கு உதவியாகவும் இருந்தது.
குறைவான நுகர்வும் தொழிற்நுட்பமும் சூழியல் பொருத்தப்பாடும் கூடிய காந்தியத்தின் வாழ்க்கை முறையும் தற்கால வாழ்வுக்கு ஏற்றதாகத் தெரிந்தது. ராட்டை, சத்தியச்சோதனை, படங்கள், மகாத்மா போன்றவற்றுக்குள் காந்தியைச் சிறை வைத்திருக்கும் மனநிலை இங்குமிருக்கிறது. அவற்றிலிருந்து விடுபட்டுக் காந்தியைப் பற்றிய தொடர் உரையாடலையும் சிந்தனையும் நிகழ்த்துவதற்கு இந்நூல் துணையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி
அரவின் குமார்
மலேசியா
உரைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எழுத்தாளனின் குரல் ஒரு வாசகனுக்கு எவ்வளவு முக்கியம்.அவன் ஆற்றும் கருத்துக்கள் வாசகனின் மனதில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எழுத்தாளர்கள் கொஞ்சம் ப்லசமயம் ரொம்ப எளிமையாக உரையாற்றுகிறார்கள்.
இந்த வலையுகத்தில் எல்லோரும் பேசுகிறார்கள். நெஞ்சு புடைக்க அது ஒரு நடிப்பு போல அழகாக நடிக்கிறார்கள். இவைகளை கண்டு சோர்ந்து போன வாசகன் எழுத்தாளனின் குரலை கேட்க ஆவல் கொள்கிறான்.எழுத்தாளனும்
அவ்வாறே பேசுவது பெரிய ஏமாற்றம்.
நீங்கள் ஒரு பேச்சில் சொல்கிறீர்கள்.காந்தி இங்கிலாந்து மன்னரை காண சென்றிருக்கிறார்.இவர் வெறும் உடம்போடு எந்த நெருடலும் இன்றி மிக இயல்பாக ஆனால் எதிரே மன்னர் மிகுந்த கூச்சத்தோடு நெளிந்து அமர்ந்திருப்பதாக.
இந்த மாதிரியான சொற்பொழிவுகளே வாசகனை பாதிப்பவை.நீங்கள் பேசும் முறைமுற்றிலும் தற்கால பேச்சாளர்களின் பேசுமுறைக்கு எதிராக உள்ளது.
அந்த பேச்சாளர்களில் சோர்வடைந்தவனின் மறுகரை நீங்கள்.உங்களின் எந்த சொற்பொழிவையும் நான் தவறவிட்டதில்லை.நீங்கள் புதிய சொற்பொழிவு எதுவும் ஆற்றாதபோது ஜெய காந்தனின் பல முறை கேட்ட சொற்பொழிவையே திரும்ப திரும்ப கேட்பேன்.வளர்ந்து வரும் செடிக்கு அவ்வப்போது நீர் ஊற்றுவது போல.
அன்புடன்
ரகுபதி
கத்தார்.
அன்புள்ள ஜெ
உங்கள் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதியவை குவிந்து கிடக்கின்றன. நான் அன்றாடம் உங்களை வாசித்துக்கொண்டிருப்பவன். ஆனாலும் இந்தச் சொற்பொழிவுகள் எனக்கு முக்கியமானவை. ஏனென்றால் இவற்றில் உங்கள் குரலும் முகமும் உள்ளன. இவற்றை நான் கேட்கும்போது உங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் உணர்வு உருவாகிறது. இந்தக்குரல் உங்கள் கட்டுரைகளிலும் ஒலிக்கிறது எனக்கு.
உங்கள் குரலில் ஒரு மலையாளநெடி இருக்கிறது. அந்த ஊருக்கான சில சொற்கள் உள்ளன. இருக்கக்கூடியது என்பதுபோலச் சொல்கிறீர்கள். உங்கள் உச்சரிப்பு கடைசி சிலபில்களை முழுங்கிவிடுகிறீர்கள். சிலசமயம் மூச்சுவாங்குகிறீர்கள். கத்திப்பேசும் அளவுக்கு குரல்வளம் இல்லை. கொஞ்சம் உடைந்தகுரல்தான். தயங்கியபடித்தான் பேச ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் சொல்லும் எல்லாவற்றையுமே ஆத்மார்த்தமாக எந்த பாவனையும் இல்லாமல் நடிக்காமல் சொல்கிறீர்கள். அதுவே ஒரு பெரிய தகுதி. உங்களை மிக நெருக்கமாக உணரச்செய்வது அதுதான்.
கீதைச் சொற்பொழிவு சங்கரர் சொற்பொழிவு ஓஷோ சொற்பொழிவு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவை. கோவையில்தான் இப்படி உங்களை அழைத்துப் பேசவைக்கும் எண்ணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். கோவையின் கலாச்சாரநிலை மற்ற தமிழ்ப்பகுதிகளுக்கு இல்லை
ஆர்.ராஜேந்திரன்
உரைகள்
https://www.youtube.com/channel/UClt2oB6p4YwSEZcfyyujJjg
காதுகள், கடிதங்கள்
காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
அன்புள்ள ஜெயமோகன்,
அந்தியூர் மணியின் “காதுகள்” குறித்த கட்டுரை அனுபவத்தின் விளைவாக எழுதப்பட்டதால் மேலும் உண்மைக்கு அருகமைந்தது.
கற்றலுக்கும் கேட்டலுக்கும் உள்ள வேறுபாடு மிகவும் விரிவானது.அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே ஆன பேதத்தினை நமது சாதாரண அறிவைக் கொண்டு முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது.
சமூகம் வரையறை செய்யும தனிமனித ஒழுக்கத்திற்கும் தன் இயல்பான மன உடல் இயக்கங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெற முழுவதுமாக தன்னை படைத்து இயக்கும் பரம்பொருளிடமே சரணடைவதே இந்த சுழலியில் இருந்து வெளிவர ஒரே வழி.
நெல்சன்
அன்புள்ள ஜெ
காதுகள் நாவலின் மீதான அந்தியூர் மணி அவர்களின் வாசிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. மகாலிங்கத்தின் சிக்கல் சிசோபிர்னியா அல்ல. மனம் ஒரு டிராக்கில் இருந்து இன்னொரு டிராக்குக்கு போய்விட்டதுதான். வார்த்தை என்பது அர்த்தம் -ஒலி என்ற இரண்டில் இருந்தும் பிரிந்து மந்த்ரரூபமாக ஆகிவிட்டதுதான். தற்செயலாக இதுநிகழ்கிறது
“ஒருபுறம் தவறுதலாகத் திறந்துவிட்ட மந்திர தளத்தின் துளிக்குப்பின் வெளிவரத்துடிக்கும் பெருங்கடல்,அதை வெளிவராமல் தடுக்க முயலும் சமகால ஒழுக்க அளவுகோல்கள்” என்று மிகச்சிறப்பாக தொகுத்துச் சொல்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்படி ஒரு அபாரமான வாசிப்பு அந்நாவலுக்கு வந்திருக்கிறது.
சாரநாதன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   தன் மீட்சி வாங்க
    தன் மீட்சி வாங்க
   
   
   
   
   
   
  
