Jeyamohan's Blog, page 834
February 3, 2022
நாவல் உரை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கிளாஸிக் நாவல் பற்றிய உங்கள் உரை கேட்டேன். உரையைக் கேட்குமுன் நாவலின் வடிவம் பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் பேசியதெல்லாம் வாழ்க்கையைப் பற்றி.வாழ்க்கையின் பெருஞ்சித்திரத்தை நாவல் அளிக்கும்போது அது கிளாசிக் நாவல். அதை எப்படி அளிப்பது என்னும் கேள்விக்காகத்தான் அது பலவகையான வடிவங்களை நோக்கிச் செல்கிறது. வெறும் வடிவச்சோதனைகள் நாவல்கள் அல்ல. அவை வெறும் புதிர்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையை எந்த அளவுக்கு முழுமையாகக் காட்டுகிறதென்பதே ஒரே கேள்வி என புரிந்துகொண்டேன்
நன்றி
அர்விந்த்
அன்புள்ள ஜெ ,
உங்களது கிளாசிக் நாவல் பற்றி உரை கேட்டேன் , கிளாசிக் நாவலுக்கான இலக்கணங்கள் ரொம்ப பிடித்தது , சில நாட்களாக என் மனதில் இருந்த எண்ணம் வெறும் கிளாசிக் அதுவும் தேர்ந்தெடுத்த நூல்கள் மட்டும் வாசித்தால் போதும் என எண்ணியிருந்தேன் , முக்கியமா கம்பராமாயணம் ,அப்பறம் வெண்முரசு ,இது இரண்டை மட்டும் ஆழமா வாசித்தால் போதும் எனும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தேன் , இது தாண்டி வரலாறு வாசிக்க வேண்டும் என நினைத்தேன் , தமிழ் நில வரலாறுகள் , இந்திய மற்றும் உலக வரலாறுகள் , மிக சுருக்கமான ,தெளிவான சில நூல்கள் வழியாக என எண்ணி அது சார்ந்த நூல்களை தேட எண்ணியிருந்தேன் . மூன்றாவது ஜமண்ட் , யுவால் நூல்கள் வாசித்து பார்க்க ( இந்த ஜானர் ) ஆர்வம் இருந்தது , நவீன தமிழிலக்கியம் விட்டுடலாம் என எண்ணினேன் ,
இந்த உரை கேட்ட போது நவீன உரைநடை கிளாசிக் நாவல்களையும் வாசிக்கலாம் என தோன்றியது , முக்கியமான காரணம் நீங்கள் கிளாசிக் நாவலின் இயல்புகள் என உரையில் குறிப்பிட்ட அம்சங்கள் , மேலும் நீங்கள் 17-18 நூற்றாண்டில் தமிழ் இஸ்லாமிய பரப்பில் நிகழ்ந்த மாற்றங்கள் , அய்யா வைகுண்டர் பற்றி சொன்னபோது இதை போன்ற ஒரு பரப்பை வைத்து நானும் ஒரு நாவல் எழுத வேண்டும் என நினைத்தேன் :)
மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழ் உரைநடையில் நிகழ்ந்த மாற்றங்கள் என நீங்கள் முன்வைத்ததெல்லாம் கேட்க ஆர்ச்சிர்யமாக இருந்தது
ராதாகிருஷ்ணன்
February 2, 2022
மருத்துவரின் கண்கள்
[1 ]
நான் முதன்முதலாக இந்திய மண்ணைவிட்டு வெளியே சென்றது 2000 த்தில் யார்க் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் கனடாவுக்கு. அதன்பின் பல வெளிநாட்டுப் பயணங்கள் நிகழ்ந்திருந்தாலும் அந்த முதல் பயணம் அளித்த பரவசம் அப்படியே நினைவில் வாழ்கிறது. முதன்முதலில் இமைய மலையைப் பார்த்தது 1981ல். அதன் பின் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அந்த முதல் தரிசனமே திரும்ப நிகழ்கிறது.
ஆனால் அன்று அப்பயணங்களைப்பற்றி நான் எழுதவில்லை. அன்று எனக்கு ஒரு தவறான எண்ணம் இருந்தது. பயணக்கட்டுரைகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று. உலகம் சொற்களின் வழியாகவே அறியப்பட்ட காலத்திற்குரியவை பயணக்கட்டுரைகள். புகைப்படங்கள் வந்துவிட்டன, காணொளிகள் வந்துவிட்டன, தொலைக்காட்சியில் இருபத்துநான்கு மணிநேரமும் உலகின் சந்துபொந்துகளையெல்லாம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பனிமலை முகடுகள், பாலைநிலங்கள், ஆழ்கடல்கள். இனி எதற்காக பயணக்கட்டுரைகள் என எண்ணினேன்.
நான் சிறுவனாக இருந்தபோது மெக்கன்னாஸ் கோல்ட் என்ற சினிமா வெளியாகியது. நாகர்கோயிலில் அந்தப்படம் நூறுநாள் ஓடியது. அதில் அமெரிக்காவின் கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கைக் காட்டுவார்கள். அதைப்பார்க்க மக்கள் திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தனர். அதை அப்படி பெரியதிரையில் காட்சியாகப் பார்க்க வேறுவழியே இல்லை.ஐ.வி.சசி இயக்கத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் ‘ஒரே வானம் ஒரே பூமி’ என்ற படம் வெளிவந்தபோது நயாகாராவை பார்க்கவே மக்கள் பெருகி வந்தனர். படத்தில் அமெரிக்காவை மொத்தமாக இருபது நிமிடம் காட்டுவார்கள். நயாகரா ஒருநிமிடம் வரும்.
ஆனால் தொலைக்காட்சி வந்தபின் நயாகராவை திகட்டத்திகட்ட பார்த்துவிட்டோம். கிரான்ட் கான்யனில் பறவைபோல காமிரா பறந்து எடுத்த காட்சிகளை முப்பரிமாணத்திலேயே இன்று பார்க்கமுடியும். இன்று கூகிள் எர்த் வந்து விட்டது. இணையத்தில் உலகைப் பார்க்கலாம். எந்த ஒரு பகுதியைப்பற்றி தேடினாலும் ஆவணப்படங்கள் குவிந்து கிடக்கின்றன. எனில் எதற்காகப் பயணக்குறிப்புகள்?
நான் இளமையில் பெருவிருப்புடன் வாசித்தவை பயணக்கட்டுரைகள். தமிழில் ’உலகம்சுற்றும் தமிழன்’ என அழைக்கப்பட்ட் ஏ.கே.செட்டியார் அவர்களின் நூல்களை வாசித்திருந்தேன். மணியனின் பயணக்கட்டுரைகள் அனைத்தையும் வாசித்திருந்தேன். தமிழின் சிறந்த பயணக்கட்டுரைகள் தி.ஜானகிராமன் எழுதியவை. ஜப்பானைப் பற்றி அவர் எழுதிய ‘உதயசூரியனின் நாட்டில்’ மத்திய ஆசியா பற்றி எழுதிய ‘கருங்கடலும் கலைக்கடலும்’ காவேரியின் கரையோரமாகவே பயணம் செய்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ ஆகிய நூல்கள் முக்கியமானவை.
 ஏ.கே.செட்டியார்
ஏ.கே.செட்டியார்இந்திய அளவில் என் பிரியத்துக்குரிய பயணக்கட்டுரையாளர்கள் மூவர். முதன்மையானவர் தாகூர். அன்றும் இன்றும் இந்தியமொழிகளின் மகத்தான பயணக்கட்டுரையாளர் அவரே. அவருடைய செல்வ வளம் அவரை தொடர் பயணியாக வாழ வழிவகுத்தது. இமையமலைகளில் ஆப்ரிக்க பழங்குடி நிலங்களில் அரேபிய பாலையில் என அவர் பயணம் செய்துகொண்டே இருந்தார். குறிப்பாக அவருடைய ஆவிக்கப்பல் பயணங்கள் எனக்கு பெரும் கனவென நினைவில் நீடிக்கின்றன. இரண்டாமவர் காகா காலேல்கர். இந்தியாவின் அத்தனை ஆறுகளையும் ஏரிகளையும் நேரில் சென்று பார்த்து அவர் எழுதிய ‘ஜீவன்லீலா’ என்ற நூல் ஒரு பெரும்படைப்பு. மலையாளத்தில் ஞானபீடப் பரிசுபெற்ற எழுத்தாளரான எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய பயணக்கட்டுரைகள் எல்லாம் பெரும்புனைவுகளுக்கு நிகராக உளம் கவர்பவை.
பயணக்குறிப்புகளை நான் எழுத ஆரம்பித்தது 2008 ல் ஆஸ்திரேலியா சென்றபோதுதான். அப்போது நான் இணையதளம் ஆரம்பித்திருந்தேன். அதில் தொடர்ச்சியாக எழுதவேண்டியிருந்தது. நாங்கள் ஐந்துபேர் ஒரு காரில் தமிழகத்தில் இருந்து கிளம்பி இந்தியாவைச் சுற்றிவந்தோம். அந்தப் பயணத்தை அன்றன்றே இணையத்தில் பதிவுசெய்தேன். அதன்பின் சென்ற ஊர்களைப்பற்றியெல்லாம் எழுதலானேன். அவற்றுக்கு வாசகர்கள் அமைந்தனர். 2009ல் ஆஸ்திரேலியா சென்றபோது எழுதிய குறிப்புகளை ‘புல்வெளிதேசம்’ என்ற பெயரில் நூலாக்கினேன். அதற்கு வாசகர்களின் பெரிய வரவேற்பு இருந்தது. இன்று என் பயணநூல்கள் பல வெளியாகியிருக்கின்றன.
 காகா காலேல்கர்
காகா காலேல்கர்இப்போது தெளிவடைந்திருக்கிறேன், ஏன் பயணக்குறிப்புகள் முக்கியமானவை என. பயணம் செய்து அறியும் செய்திகள் இணையத்திலேயே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் பயணம் செய்பவர் தனித்துவமானவர். நான் பயணம் செய்து அடையும் அனுபவம் எனக்கு மட்டுமே உரியது. வாசகர் அறிவது என் வழியாக ஒரு பயண வாழ்க்கையை. ஆகவே எல்லா பயணக்கட்டுரைகளும் முக்கியமானவை. எத்தனையோ பேர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று எழுதியிருக்கலாம். ஓரு சித்தமருத்துவர் பார்வையில் இந்நிலங்கள் வெளிப்படுவது கு.சிவராமன் அவர்கள் செல்லும்போதுதான்.
[ 2 ]
ஒரு சித்தமருத்துவராகவும், ஒரு நெல்லைக்காரராகவும் கு.சிவராமன் இந்தப் பயணங்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இந்நூலை ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆக்குவது அவர் வழியாக இந்தப் பயணநிலங்கள் வெளிப்படுவதுதான். இதில் நாம் காணும் சிவராமன் உணவுப்பழக்கம் மேல் ஆர்வம் கொண்டவர், உணவில் ஆர்வம் கொண்டவர். கூடவே இளமையின் உற்சாகத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்பவர். ஊர்நினைவுகளை இழக்காதவர். எல்லா காட்சிகளுடனும் நெல்லை வந்து இணைந்துகொள்கிறது. அது மேலும் அணுக்கமானவராக அவரை ஆக்குகிறது
எந்நிலையிலும் மானுடம் மேல் சலிப்பு கொள்ளாதவரே நல்ல பயணி. எந்த அயல்பண்பாடு மேலும் விலக்கமோ கண்டனமோ கொள்ளாதவராக அவர் இருந்தாகவேண்டும். நாம் வெறுக்கும் ஒழுக்கவியல் இன்னொரு சமூகத்தில் இருக்கலாம். நமக்கு ஒவ்வாத உணவு அங்கே உண்ணப்படலாம். நாம் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கவழக்கங்கள் இருக்கலாம். ஆனால் மானுடமென்பது மிகப்பெரியது. அங்கே ஒவ்வொன்றும் தனக்கான இருப்பும் பங்களிப்பும் கொண்டது. நாம் மட்டுமே சரி என்றில்லை, நாம் மானுடத்தின் ஒரு துளியே.
அந்த தன்னுணர்வு கொண்டவர் பிற பண்பாடுகள் மேல் பெரும் விருப்பும் மதிப்பும் கொண்டவராகவே இருப்பார். அவ்வண்ணம் இல்லை என்றாலும் பயணம் வழியாக அம்மனநிலையை அடைந்திருப்பார். அவ்வகையில் நான் தமிழில் பெரிதும் மதிக்கும் மாபெரும் பயணி எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள்தான். உலகின் அத்தனை மக்களையும் தன்னுடையவர்களாகவே காணும் விரிவுகொண்டது அவருடைய உள்ளம். அந்த விரிவை இந்நூலிலும் காணமுடிகிறது. அதுவே இந்நூலின் முதன்மையான தகுதி என நினைக்கிறேன்.
 தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்இத்தகைய பயணநூல்கள் செய்திகளைச் சீராகச் சொல்லிச் செல்பவை அல்ல. பல முக்கியமான செய்திகள் விடப்பட்டிருக்கலாம். மிகச்சிறிய விஷயங்கள் சொல்லப்படலாம். இவற்றின் அமைப்பு என்பது ஒரு பொதுப்பார்வைதான். பயணியின் பார்வை மேலோட்டமானது. உள்ளிருப்பவர்களின் பார்வையில் உள்ள ஆழம் அதில் இருக்காது. ஆனால் அது ஏன் முக்கியம் என்றால் உள்ளிருப்பவர்கள் ஒருபோதும் பார்க்காத சிலவற்றை பயணி பார்த்துவிடுவார். நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் நாம் நெடுநேரம் தேடி கிடைக்காமல் இருக்கும் ஒரு பொருளை வந்து அமர்ந்ததுமே பார்த்துவிடுவார் என்பதை கண்டிருப்போம்.
ஒரு பயணி வந்திறங்கியதுமே அவர் கண்ணுக்கு என்னென்ன படுகிறது என்பது மிக முக்கியமான கேள்வி. அவ்வாறு அவர் கண்ணுக்குப் படும் விஷயங்களை தொகுத்து அவற்றின் வழியாக அந்நிலத்தையும் பண்பாட்டையும் உருவாக்கிக்கொண்டால் முற்றிலும் புதிய ஒரு சித்திரம் கிடைக்கும். அது அப்பண்பாட்டின் மீதான சரியான மதிப்பீடாகவும் அந்நிலத்தின் அழகான காட்சிச்சித்தரிப்பாகவும் இருப்பதைக் காணலாம். பாகியான், யுவான் சுவாங் தொடங்கி வில்லியம் டார்லிம்பிள் வரை இந்தியாவைப் பற்றி இங்கே வந்தவர்கள் எழுதிய குறிப்புகள் அதனால்தான் முக்கியமானவை.
 எஸ்.கே.பொற்றேக்காட்
எஸ்.கே.பொற்றேக்காட்கு.சிவராமன் சென்றிருக்கும் இந்நாடுகள், இந்நிலங்கள் எல்லாமே நானும் சென்றவை. ஏதாவது இடம் நான் செல்லாதது இருக்கிறதா என நூல் முழுக்க பார்த்தேன், இல்லை. ஆனால் நான் இந்நூலை ஒரே மூச்சில் பேரார்வத்துடன் வாசித்தேன். காரணம் அவருடைய அலையும் பார்வை எவற்றை தொட்டு எடுக்கிறது என்னும் ஆவல்தான். அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே குடியேற்ற அதிகாரிகளைச் சந்திக்கும் இடங்களிலேயே நாம் பண்பாட்டுச் சிக்கல்களை சந்திக்க ஆரம்பிக்கிறோம். என்ன தொழில் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சிவராமன் ஆயுர்வேதம் என்றால் என்ன என்று விளக்க வேண்டியிருக்கிறது. உங்கள் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு ஊரில் இருக்கும் மனைவிக்குத்தான் அது தெரியும் என்று பதில் சொல்கிறார். ‘இந்தியர்கள் எல்லாவற்றுக்கும் மனைவியைச் சார்ந்திருக்கிறீர்கள்’ என்று அவர்கள் வியக்கிறார்கள்
கனடாவில் ஒருவர் விவசாயம் செய்ய விரும்பினால் அவர் இல்லத்தருகே அரசே அதற்கான நிலத்தை அளிக்கிறது, அதில் வயதானவர்கள் தோட்டம் போடுகிறார்கள். கு.சிவராமனின் பார்வை வியப்புடன் அதைப் பதிவுசெய்கிறது. டெர்ரி பாக்ஸ் என்னும் ஓட்டப்பந்தய வீரனுக்கு காலில் புற்றுநோய் வந்தபோது அவன் செயற்கைக்காலுடன் அமெரிக்காவுக்கு குறுக்காக ஓட ஆரம்பித்தான். வழியிலேயே மாண்டான். அவனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. கனேடியப் பழங்குடிகளுக்கு அவர்களுக்குரிய ஆன்மா பற்றிய நம்பிக்கை உள்ளது, அவர்களின் மருத்துவர்களால் அது முன்வைக்கப்படுகிறது. கு.சிவராமன் என்னும் மருத்துவரின் பார்வை தொட்டுத்தொட்டுச் செல்லும் இப்புள்ளிகளால் ஆன கனடா நான் காணாத ஒன்று
கூடவே அங்குள்ள தமிழர்களைப் பற்றிய பிரியம் கலந்த கிண்டல்களும் விமர்சனங்களும். குடியேறிய தமிழர்கள் இளமையிலேயே தொழிற்கல்வி பெற்று வேலைபார்க்க வெளிநாடு சென்றவர்கள். அவர்களுக்கு தாய்நாடு பற்றிய ஏக்கம் மிகுதி. ஆனால் தாய்நாடு என அவர்கள் அறிந்ததெல்லாம் இங்குள்ள ‘பாப்புலர் கல்ச்சர்’ எனப்படும் சினிமா அரசியல் போன்றவைதான். அவற்றையே அவர்கள் முதன்மையாக கவனிக்கிறார்கள். கனடா சுதந்திரநாள் என்பதை விட அன்று கபாலி ரிலீஸ் ஆகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாகப் படுகிறது. ஃபெட்னா விழாவில் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிக்கு வரவேற்பில்லை, சினிமாப்பாடல்களுக்கு ஆட்டம்போடுகிறார்கள். டி.எம்.கிருஷ்ணாவின் வருத்தத்தை மெல்ல பதிவுசெய்து செல்கிறார்.
 நரசிம்மலு நாயிடு
நரசிம்மலு நாயிடுநயாகாராவின் காட்சியுடன் குற்றாலம் இணைந்துகொள்கிறது. அங்கே ஒரு கிழத்தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டாடுவதைக் காண்கையில் தன் மனைவியும் தானும் அப்படி கிழஜோடியாக அங்கே ஒருநாள் வரவேண்டும் என எண்ணம் ஓடுகிறது. இந்த எண்ண ஓட்டங்களில் இருக்கும் இயல்புத்தன்மையால் இந்த பதிவுகளை ஓரு நீண்ட உரையாடலாக வாசிக்க முடிகிறது.
ஆஸ்திரேலியா விதைகள் பரவும் விஷயத்தில் எடுத்துக்கொள்ளும் அதீத எச்சரிக்கை, அங்கே காட்டுத் தீ அபாயம் இருப்பதனால் அவர்கள் அளிக்கும் நெறிமுறைகள் என விரியும் பயணப்பதிவுகள் நடுவே ஈழத்தமிழர்களின் இந்திய அரசியலார்வமும் மெல்லிய புன்னகையுடன் சுட்டிக்காட்டப்படுகிறது. சிட்னியில் இருந்துகொண்டு கமலஹாசனும் ரஜினிகாந்தும் கட்சி ஆரம்பித்தால் தேறுவார்களா என பதற்றப்படுகிறார்கள். இதை நானும் எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்கு விரும்பவும் வெறுக்கவும் நாடு தேவைப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ஈழ அரசியலில் சோர்வுற்றவர்கள். குடியேறிய நாட்டின் அரசியலில் ஆர்வம் கொள்ளவுமில்லை. ஆகவே அவர்களின் முதல் தலைமுறைக்கு இந்திய அரசியல் மிக உவப்பான ஒரு பேசுபொருள்.
இந்தியாவின் மிக அழகிய நிலப்பரப்புகளில் ஒன்று தென்கர்நாடகத்தின் கனரா மாவட்டம். அந்த கடலோர நிலத்தின் அழகையும், அங்குள்ள மருத்துவக்கல்வியையும் பேசுகிறது ஒரு கட்டுரை. இன்னொரு காட்சி திரும்பி கத்தார், ஓமன் என பாலைநிலத்தைக் காட்டுகிறது. நிலம், மக்கள், உணவு என்றே சிவராமனின் பார்வை விரிந்து செல்கிறது.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, கத்தார் என விரியும் பயணப்பதிவுகளுக்குப்பின் நூலின் நேர்ப்பாதி இந்திய நிலத்தில் செய்த பயணங்களின் பதிவுகளாக உள்ளன. இமையமலைச் சித்திரங்கள் அழகானவை. எந்த தமிழனுக்கும் இமைய மலைமுடிகளைப் பார்க்கையில் திருவண்ணாமலை நினைவில் எழும். சிவராமனுக்கும்தான். ஜாகேஷ்வர் செல்லும் பயணத்தில் எந்த இந்தியருக்கும் எழும் ஐயமும் பதற்றமும் அவருக்கும் எழுகிறது. இமையமலையின் அந்த ஆழ்ந்த அமைதியும் தவமும் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?
அங்கே கட்டிடங்கள் கட்ட எந்த வரைமுறையும் பேணப்படுவதில்லை. மூர்க்கமான காடழிவும், சுற்றுலாவளர்ச்சியும் நகர்மயமாக்கமும் நடைபெறுகிறது. இன்றைய ஆட்சியாளர்களோ சூழியல்பற்றிய அடிப்படைப்புரிதல்கூட இல்லாத பாமரக் கூட்டம். உத்தரகண்ட் மாநிலத்தில் இயற்கையை பாதுகாக்கப் போராடிய சுந்தர்லால் பகுகுணா பற்றிய நினைவு ஆசிரியருக்குள் எழுந்து வருகிறது. ‘ஒவ்வொரு தேவதாருவும் ஒரு மலைச்சிகரம்’ என்று சொல்லும் உள்ளூர்க்காரரின் ஆன்மிகம் வருங்காலத்தில் புரிந்துகொள்ளப்படுமா என்னும் ஏக்கம் எழுகிறது.
எல்லாப் பயணக்கட்டுரைகளும் இன்றில் இருந்துகொண்டு நாளையுடன் பேசுபவை. இன்றிருப்பது நீடிக்குமா என்னும் பதற்றம் அனைத்திலும் எப்படியோ பதிவாகியிருக்கும். தமிழின் தொன்மையான பயணக்கட்டுரை என்பது பகடாலு நரசிம்மலு நாயிடு எழுதிய ‘தட்சண இந்திய சரித்திரம்’ அதில் தமிழகத்தில் கன்யாகுமரி பற்றி அவர் சொல்லியிருக்கும் காட்சி விவரணைகளை வாசிக்கையில் ஏக்கம் நிறைந்து கண்ணீர் மல்குகிறது. தூய வெண்மணலும், தாழைமரங்களும் கொண்ட அந்த கடற்கரையை இன்று எண்ணிப்பார்க்கவே முடியாது. இன்று அங்கிருப்பது தார்ப்பாய்களால் ஆன கடைகளின் நெரிசல். குப்பக்கூடை என்றே கன்யாகுமரியை இன்று சொல்லிவிடமுடியும்.
எல்லா பயணநூல்களும் நாம் இழந்துகொண்டே இருக்கும் இன்றைய பூமியைப் பற்றித்தான் பேசுகின்றன. இந்நூலும்கூடத்தான்
ஜெயமோகன்
மருத்துவர் கு.சிவராமன் எழுதிய பயணக்கட்டுரைத் தொகுதியான ‘ அங்கொரு நிலம் அதிலொரு வானம்‘க்கு எழுதிய முன்னுரை.
கோவை புதியவாசகர் சந்திப்பு
இந்த வருடம் ஏழாவது ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள நண்பர் பாலுவின் பண்ணை இல்லத்தில் நடத்தலாம் என உள்ளோம். நிகழ்வானது பிப்ரவரி மாதம் 19, 20ம் தேதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை நடைபெறும்.
இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஓரிரு முறை சந்தித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். விருந்தினர் இல்லத்தில் 20 பேர்வரை தங்கலாம், அதனால் சுமார் 20 நபர்களையே ஏற்றுக்கொள்ள முடியும்.
கடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வரத்தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,
Name :
Age :
Present town :
Occupation :
Email:
Mobile :
ஆகிய விபரங்களுடன் மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விவரங்களை ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் சில நாட்களில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும். azhaindian@gmail.com
சந்திப்பு நடைபெறும்
இடம் : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்
தேதி, நேரம் : 19.2.2022 சனி காலை 10 மணி முதல் 20.2.2022 ஞாயிறு மதியம் 1.30 வரை.
தொடர்புக்கு:
மணவாளன்
98947 05976
கோவை தொடர்புக்கு :
பாலு
98422 33881
தேவிபாரதி விருதுவிழா- கடிதம்
அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
குக்கூ உடனான என் வாழ்வின் பயணத்தில், நான் மென்மேலும் மேம்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உள்ளூர ஆழமாக உணர்ந்து வருகிறேன். தன்னறம் இலக்கிய விருது 2021 எழுத்தாளர் தேவிபாரதி அய்யா அவர்களுக்கு வழங்கும் நாளுக்காக எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ஏராளமான நண்பர்களில் நானும் ஒருவன். நீங்கள் சிறப்பு விருந்தினராக வருகிறீர்கள் என்பது மேலும் பேருவகை தரும் தகவலாக இருந்தது எனக்கு.
விழாவிற்கு முதல் நாளே வந்து நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நிகழ்வின் நாளில் எவ்வித பதட்டமும் பரபரப்பும் இன்றி விழா குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரமும் இன்றி தேவிபாரதி ஐயாவுடன் நீங்களும் வந்து அமர சிறப்பான தொடக்கமாக அமைந்தது.
சிவராஜ் அண்ணன் நிகழ்ச்சியின் பொருளுரையை தனது ஆத்மார்த்தமான சொற்களின மூலம் விரிவுரைத்தார். சில நாட்களுக்கு முன்பு மல்லாசமுத்திரத்தில் கிணறு புனரமைக்கப்பட்ட போது மஞ்சரி சந்தித்து கடந்து வந்த இன்னல்கள் பற்றியும் அதில் இருந்து மேலும் மேலும் அவர் மீண்டு வந்து அடைந்த நிறைவயும் பற்றி உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.
மல்லாசமுத்திரத்தின் புனரமைக்கப்பட்ட கிணறு பலரின் எதிர்ப்பு தாண்டி செயல்படுத்தப்பட, யாரும் எதிர்பாராத வகையில் நீர் ஊற்று பெருகிய நிகழ்வும், அக்கிராமத்தில் வசிக்கும் தொன்னூற்று ஏழு வயது பாட்டியின் ஆசிர்வதிக்கப்பட்ட தருணத்தில் நேர்ந்த பேரானந்தமும் மென்மேலும் நாம் செய்யும் பணிகளில் தீவிரம் தொடர்வதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை நெகிழ்ந்து பதிவு செய்தார்.
நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த விழாவின் நாயகன் அய்யா தேவிபாரதி அவர்களை முதன் முதலாக நொய்யல் ஆற்றங்கரையில் பத்தொண்பது வயதில் தான் சந்தித்த அனுபவத்தையும் தன்னறம் இலக்கிய விருது என்ற கரு உருவான தருணத்தையும் நினைவுகளின் ஆழத்திலிருந்து எடுத்து எங்கள் நெஞ்சங்களில் அள்ளி நிறைத்தார்.
வெள்ளை நிற காகித அலுவல் உரையில் ஆழிகையின் கை அச்சு பதிக்கப்பட்டு அதனுள் சிறப்பு பரிசான ஒரு லட்ச ரூபாய் காசோலையையும் தன்னறம் இலக்கிய விருது 2021 நினைவு புகைப்படமும் உங்கள் கரங்களில் இருந்து தேவிபாரதி அய்யாவிற்கு வழங்கப்பட, ஆழிகையின் கை அச்சு பதிந்த பரிசை ஆத்மார்த்தமாக பெருமகிழ்வோடு எல்லோருக்கும் காண்பித்து அரங்கை உற்சாகப்படுத்தினார்.
அடுத்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இருந்தது உங்களின் சிறப்புரை. உங்களுக்கும் தேவிபாரதி அய்யா அவர்களுக்கும் இடையே ஒரு சில முரண்பாடுகள் கொண்ட கருத்துக்கள் இருப்பினும் இருவருக்கும் பொதுவாக அமைந்துள்ள ஆசிரியராக இருப்பவர் சுந்தர ராமசாமி அவர்கள் என்பதையும் எப்போதும் தாங்கள் அவருடைய மாணவன் என்பதையும் பெருமிதமாக பதிவு செய்தீர்கள்.
மேலும் விழா ஒருங்கிணைக்கப்பட்டுருந்த டாக்டர். ஜீவா அவர்களின் நினைவு அரங்கம் அவரோடு நீங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொண்ட தொடர்பு தேவிபாரதி அய்யா அவர்களுடனான பல ஆண்டு இலக்கியப் பயணம் என நினைவு கூர்ந்தீர்கள்.
தேவிபாரதி அய்யா அவர்களின் எழுத்து பற்றிய உங்களின் எண்ணங்களை பலி எண்ணும் சிறுகதை மூலம் தொடங்கி அவரது ஆகச்சிறந்த படைப்பான நட்ராஜ் மகாராஜில் அவர் அடைந்த இலக்கிய வாழ்வில் உச்சம், ஒரு படைப்பாளியின் வெற்றி என்பது அவரின் கடைசியாக வெளியான படைப்பில் இருந்து துவங்கும் என்பதை தேவிபாரதி அய்யாவின் நட்ராஜ் மகாராஜ் நாவல் அடைந்த வெற்றி அவரிடம் நாம் மேலும் எதிர்பார்க்கப்படும் இலக்கிய படைப்புகள் என்பதனை பதிவு செய்து அவரை ஆரத்தழுவிக் கொண்டு உங்கள் உரையை நிறைவு செய்தீர்கள்.
தொடர்ந்து ஏற்புரை வழங்க வந்த தேவிபாரதி அய்யா அவர்கள், உணர்ச்சி மிகையாக, தன் வாழ்வில் ஏற்பட்ட பல இடர்கள், இப்போது சந்தித்து கொண்டுள்ள சிரமங்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தன்னை கட்டுப்படுத்த முயன்றாலும் தான் மிகவும் உறுதியாக இருப்பதை எழுத்து மற்றும் இலக்கியத்தின் மூலமும் மீள்வதை ஆழப் பதிவு செய்தார்.
கடந்த ஓராண்டாக குக்கூ தன்னறம் மக்களின் அன்பையும் அவர்கள் ஆவணப்படம் எடுப்பதற்காக எடுத்து கொண்ட சிரத்தை பற்றியும் தான் அடைந்த மன உளைச்சல் பற்றியும், குக்கூவின் பாரதி வினோத் அண்ணன் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தான் வசிக்கும் மண்ணில் கிடைக்காத அங்கீகாரம் தன்னறம் இலக்கிய விருது கிடைத்ததின் மூலம் நிறைவு கண்டதையும் பகிர்ந்தார். மேலும் மூன்று நாவல்கள் எழுத திட்டம் வைத்துள்ளதாகவும் தன் இறுதி மூச்சிர்குள் அந்த மூன்று படைப்புகள் வெளிவரும் என்பதை உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சமாக பதிவு செய்து அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக தாமரையின் குரலில் அசைந்தாடும் மயில் அரங்கில் ஒலிக்க அனைவரையும் பேரன்பால் திகைக்க வைத்தது. சிவராஜ் அண்ணன் தாமரையின் பயணத்தை பகிர நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக ஆகச்சிறந்த நிகழ்வாக இருந்தது தன்னறம் இலக்கிய விருது.
நெஞ்சம் நிறைந்தது…
நன்றி கலந்த பேரன்புடன்
இரா.மகேஷ்
கல்குருத்தின் இணையர்
அன்புள்ள ஜெயமோகன்,
கதையைப் படிக்கும்போது சினிமாவில் காட்டப்படும் பெரியவீடு ஆனால் மலையின் பக்கத்தில் அமைந்துள்ளது. வீட்டின் வாசல்கதவுக்கு நேரெதிரே பின்வாசல் கதவு.பின்வாசல் கதவின் வலது பக்கத்தில் பழைய அம்மிக்கல். அங்கிருந்து நடக்கும் தொலைவில் புது அமிக்கல்லாகும் பாறை.அதனருகில் கல்லாசாரி, காளியம்மை. அவர்களுக்கு பின்புறம் சற்று நடக்கும் தொலைவில் மலை. நான் கற்பனை செய்துகொண்ட அழகம்மையின் இல்லம். கதை மூன்று தம்பதிகள் வழியே எனக்குள் விரிந்துகொண்டது.
கல்லாசாரி – காளியம்மை
உனக்கு தோதான துணையாவெனறிய அவங்களோடு ஒரு மலையேற்றம் செல்ல வேண்டுமென்று படித்துள்ளேன்.பயணமும், அதன் சவாலும் அவர்களை நம் மனதுக்கு அடையாளம் காட்டிவிடும். அப்படித் தேடி அமைந்த இணக்கமான இணைகள் இவர்கள்.நல்லூழ் பெற்றவர்கள். காளியம்மைக்கு காபி ரொம்ப பிடிக்கும். கல்லாசாரிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருக்கு ஒரு காபி போதாது, போகிற இடத்தில் அவருக்கு மட்டும் இரண்டு டம்ளர் கேட்க முடியாது.காளியம்மை காபியை துறக்கிறாள்.துறவும் மேலான பிணைப்பல்லவா!
பாட்டன் – பாட்டி
நானே உணர்ந்தேனா இல்லை எங்கோ படித்தேனா தெரியவில்லை.சில தம்பதிகளின் முகம் காலப்போக்கில் ஒரு மாதிரி இருப்பதாய் தோன்றும்.மனம் ஒன்றானபின் முகத்தில் வெளிப்படுகிறது. இரண்டு தம்பதிகளிடம் அப்படி உணர்ந்துள்ளேன். பாட்டனும், பாட்டியும் அப்படித்தான் இருப்பார்கள். குருத்தாகும் மூத்தவர்கள்.
கண்ணப்பன் – அழகம்மை
மூத்ததாகும் குருத்து. படித்த சிலநொடிகளில் அழகம்மை மனதுக்கு நெருக்கமாகிட்டாள். பாட்டன், பாட்டி மேல் அவளுக்கிருந்த ஒவ்வாமை எனக்கு இவள் இப்படியில்லையே. இவள் இப்படி இருக்க முடியாதேவென தவித்தேன்.பாட்டன், பாட்டி மேல் வெறுப்பில்லையென வரிகள்வந்தபின் சமாதானமானேன். அழகம்மையாய் நான் நினைத்தது துரியோதன் மனைவி பானுமதி. சிறு சிறுமையும் பானுமதியிடம் வெளிப்பட மனம் ஒப்பவில்லை. தயக்கங்கள், ஒவ்வாமைகள் இருக்கலாம், அதை கடப்பதாலே அவர்கள் மேலானவர்கள். அம்மிக்கல்லில் நீலம் மேடு, பள்ளத்தை காட்டும் தருணம் அவளுக்கு ஒவ்வாமையை போக்கியது.கல்லாசரியின் மூத்ததும் குருத்தாகும் சொல் மந்திரமாய் அவள் மனதுக்குள் நின்றிருக்கும். இனி அவள் கண்ணப்பனையும் சீராக்குவாள்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/கல்குருத்து- கடிதம் -1 கல்குருத்து -கடிதம்-2 கல்குருத்து -கடிதம்- 3
சடம் கடிதங்கள்-5
   
மதிப்பிற்குரிய ஐயா,
சடம் சிறுகதை படித்தேன்.. பார்க்கும் பெண்களை எல்லாம் சடமாக்கி உறவு கொள்ளும் போலீஸ்காரன்..! சடத்தைப் புணர்வதையே காலப்போக்கில் சாகசமாக எண்ணுகிறான்..
மனைவி ஜடமாகியபின், யாரைப் புணர்ந்து என்ன உணர்வது?
இறுதியில் சடம் சடத்தை தழுவுகிறது.
அன்புடன்
தயானந்த்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சடம் உக்கிரமான கதை. மிகப்பெரிய விஷயத்தை குற்றப்புலனாய்வு கதைபோல சொல்லி இருக்கிறீர்கள்.வெகுநாட்களுக்கு உள்ளிருந்துகொண்டு தொந்தரவு செய்யப்போகும் கதையும் கூட.
“சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்… ரெண்டும் சேந்தா சிஜ்ஜடம்னு ஒரே சொல்லு. சித்னா நம்ம சித்தம். அதாவது நமக்கு உள்ள இருக்கப்பட்டது. ஜடம்னா வெளியே இருக்கப்பட்ட இந்த அன்னமய லோகம்… அதுக்க சமன்வயமாக்கும் இந்த உலகம்” இதிலிருக்கிறது மொத்தக்கதையும். உயிரற்ற அந்த பெண்ணின் சடலத்துக்கு அந்த காவலரின் காமம் உயிர்கொடுக்கிறது. சடலத்துக்கு உயிர் வரும் அந்த கடைசிப் பகுதி அபாரம்.
சவம் என்னும் சொல்லை அந்த காவலதிகாரி பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார். சவம் என்று வைவது, சவம் போலல்லாமல் சாடிக் கதறும் பெண்ணை பிடிக்குமென்கிறார், நோயாளி மனைவி செத்த சவமாட்டம் இருப்பதை சொல்லுகிறார் இறுதியில் ஒரு சவத்தை புணருகிறார். அவர் உள்ளிருக்கும் சித்தம் எத்தனை மறுத்தும் உடல் அதை கேட்காத ஒரு நொடியில் அதை செய்துவிடுகிறார்.
அவர்களிருவரும் மேனோனின் மகளை தேடிக்கொண்டு போகும் காட்டை விவரிக்கையில் மரங்கள், குரங்கு, யானை, புலி, பறவைகளின் எச்சரிக்குரல்கள் என விவரித்து மெல்ல அந்த குரங்கிலிருந்து குட்டிகள் பின்னர் அவர் முன்பு சிதைத்தவர்கள், பின்னர் இந்த குட்டி என்று மேனோனின் மகளுக்கு வந்து அவர்களின் உரையாடல் வழியே கதை நகர்கிறது. சிவந்த கொடி என்று அந்த தடத்தை சொல்லி இருந்தது மிகப்புதிதாக இருந்தது. அதை கற்பனையில் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டேன்.
காடுகளின் ஒற்றையடிப்பாதையை இப்படி நினைத்ததே இல்லை. பல நுண் தகவல்கள் காட்டை குறித்தும், அவ்விருவரின் அலுவலக வாழ்வு குறித்தும் வருவது,ம் அந்த நாரோயில் மொழியும் கதையை இன்னும் மனதுக்கு அணுக்கமாக்கி விட்ட்து.
இந்த கதையுடன் இதற்கு முந்தைய கதையான வேதாளமும் மனதிற்குள் இணைந்து கொண்டது. இதில் அந்த மேனோனின் தலைக்கு சுகமில்லாத மகள், அதில் உடல் நலமற்ற தாணுலிங்கம். இரண்டிலும் இரு காவலதிகாரிகள் காட்டில் செல்கிறார்கள். இனி இந்த சடலத்தை புணர்ந்த நினைவு வேதாளமாக இவருடன் கூடவே இருக்கும் என நினைத்து கொண்டேன்.
நன்றி
லோகமாதேவி
விண்மீன்கள் – கடிதங்கள்
 விண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா
  விண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா
அன்புநிறை ஜெ,
குரு நித்யாவின் “விண்மீன்கள் நிறைந்த இரவு” வாசித்தேன்.
இயற்கையின் முன் உள்ளம் அடையும் எழுச்சியை மகிழ்ச்சியை நெகிழ்வை நினைவுறுத்தும் குருவின் சொற்கள்.
சில நாட்கள் முன் பார்த்த நூற்றுக்கணக்கான அல்லிகளும் தாமரைகளும் மலர்ந்த குளத்தின் காட்சியும் , ஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்த மலைகளின் இரவு வானமும் கண்முன் எழுந்தது. நூற்றுக்கணக்கான சிந்தனைகளும் உணர்வுகளும் மின்னி மறையும் மனித அகமும் ஒரு அற்புதம்தான்.
நம் எண்ணத்திலிருக்கும் மந்திரமே தன்னளவில் ஒரு தியானம் எனும் போது, இங்கு இயற்கையில் ஒவ்வொன்றும் தியானத்தில் இருக்கின்றன. பிரபஞ்ச தியானம்.
அது –
நிலவிலும் விண்மீன்களிலும் வசிக்கிறது;
நிலவுக்குள்ளும் விண்மீன்களுக்குள்ளும் உறைகிறது;
நிலவாலும் விண்மீன்களாலும் அறியப்படாதது;
நிலவும் விண்மீன்களும் அதன் உடல்;
அதுவே நிலவையும் விண்மீன்களையும் உள்ளிருந்து ஆள்கிறது.
அதுவே உனது ஆத்மன்!
அழிவற்ற உன் ஆத்மனே
உன்னையும் உள்ளிருந்து இயக்குகிறான்.
அன்றாடத்தில் காலூன்றியபடியே விண்ணின் ஆயிரமாயிரம் ஒளித்துளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவ்விரவு வேளையில் அதுவும் அங்கிருந்து நம் உள்ளே இருக்கும் ஒன்றை நோக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. எல்லையற்ற இருள் வெளியில் தங்கத்துகள்கள் மினுங்கும் இரவு வானைப் போல, மலர்வதன் முன்னரே மொட்டுகளுக்குள் குடியேறிய நறுமணத்தைப் போல, மகத்தான சாத்தியங்களுடன் அனைத்திலும் உறையும் அதை ’ஹா’ என்ற வியப்பின் ஒலி கொண்டு அர்ச்சிக்கிறேன்.
”உபநிடதம் என்பதன் பொருளே அருகே அமர்தல். அன்புக்கும் அழகுக்கும் நட்புக்கும் இசைக்கும் அருகே சென்று நம்மை அமரச் சொல்வதே உபநிடதங்களின் செய்திகளுள் ஒன்றாகும்” – அது அமையட்டும் என்ற விண்ணப்பத்தோடு பிரபஞ்ச தியானத்தில் ஒரு துளியாகிக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்,
சுபா.
அன்புள்ள ஜெ
விண்மீன்கள் நிறைந்த இரவு ஓர் அழகான கட்டுரை. அதிலுள்ளது புதிய கருத்துக்கள் அல்ல. தொன்மையான என்றுமுள்ள கருத்துக்கள்தான். விண்மீன்களைப்போல. அவை என்றும் அப்படியே அங்கேயே இருக்கும். நாம் நம்முடைய சின்ன வாழ்க்கையில் உழல்கையில் எப்போதாவது அண்ணாந்து பார்க்கிறோம். நம் மனம் திகைப்பும் பிரமிப்பும் அடைகிறது. நம் வாழ்க்கையின் அர்த்தமென்ன என்று சிந்திக்கிறோம். நம் அன்றாடத்தின் சிறுமைகளில் இருந்து சிறிது மேலெழுகிறோம். மீண்டும் நாம் சிறுமைக்கே திரும்பி வரலாம். ஆனாலும் அந்த மேல்ழும்தருணங்களே வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன.குருநாதர்கள் சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் புதியவற்றைச் சொல்வதில்லை. மேலே விண்மீன்களைப்போல எப்போதும் நம்மிடம் ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
ஸ்ரீனிவாஸ்
February 1, 2022
உதிர்பவை மலர்பவை
 அகமும் புறமும் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. முன்பு அகம் என்பது ஆண்பெண் உறவின் உலகு என வகுக்கப்பட்டது. இன்று அதை அகத்தே நிகழ்வன எனலாம். உறவும்பிரிவும் என, பொருளும் பொருளின்மையும் என அலைக்கழிப்பவை. புறம் அனைவருக்கும் உரிய உலகு. நிகழ்வனவற்றுக்கு உலகே சான்று அங்கே. அகத்திற்கு நம் அகம் மட்டுமே ஆதாரவெளி.
அகமும் புறமும் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. முன்பு அகம் என்பது ஆண்பெண் உறவின் உலகு என வகுக்கப்பட்டது. இன்று அதை அகத்தே நிகழ்வன எனலாம். உறவும்பிரிவும் என, பொருளும் பொருளின்மையும் என அலைக்கழிப்பவை. புறம் அனைவருக்கும் உரிய உலகு. நிகழ்வனவற்றுக்கு உலகே சான்று அங்கே. அகத்திற்கு நம் அகம் மட்டுமே ஆதாரவெளி.
சங்கக் கவிதை அகத்துக்கும் புறத்துக்கும் வேறுவேறு வகையான படிமங்களைப் பயன்படுத்தியது. அகத்துக்கான படிமங்களின் வெளியை ஐந்து நிலம் என புறவயப்படுத்தி வரையறை செய்ய முயன்றது. வரையறுக்க ஒண்ணாததற்கு ஒரு சிறு புறவரையறையை அளித்துவிடும் முயற்சி அது என்று படுகிறது. அகத்தை ஒரு கூட்டத்தின் நடுவே, அரங்கில் நடித்துக் காட்டிவிடவேண்டுமென்ற நிகழ்கலைகளின் கட்டாயத்தால் அவ்வண்ணம் ஆகியிருக்கலாம். சங்கப்பாடல்கள் நடனத்துக்கானவை.
நவீனக் கவிதை அகத்துக்கும் புறத்துக்கும் ஒரேவகையான படிமங்களைப் பயன்படுத்துகிறது. இலைநடுங்கும் பனி என்பது மெல்லிய அகவுணர்வு ஒன்றுக்கான படிமம். சிந்தனைகளின் சிடுக்கின்முன் திகைத்து நிற்கும் சமகாலத்தின் சாமானியனைப் பற்றிய கவிதையில் அது வருவது இயல்பானதாக ஆகிவிட்டிருக்கிறது.
ஆனால் அகவயப் படிமம் மேலுமொடு முன்னகர்வை அடைந்திருக்கிறது. மீண்டும் எதிர்பார்ப்புடன் மலர்ந்து விலக்கிக்கொள்ளப்பட்ட விரல்கள் போலத் தவிக்கும் மாலையின் மலர்கள். உளம் சோர்ந்து மெல்ல கூம்புபவை. மஞ்சள் ஒளியில் இருந்து இருளுக்குள் செல்பவை.
சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகள்
இலை நடுங்கும் பனி
மோசமான ஞாபகம் மாதிரி
பனி இறங்குகிறது
இலைகளும் வீடற்ற உடல்களும்
குளிரால் துடித்தன
சகலத்திற்கும் தீர்வுண்டு என
அறிவித்தார்கள்
ஞானிகள்
அறிவுஜீவிகள்
கூடவே
எல்லாம் திரும்ப நிகழ்பவை
என்பதும் வாதத்தில் சேர்க்கப்பட்டது
முன்னர் நிகழ்ந்தவற்றிற்கே
ஒரு நியாயமும் இதுவரை இல்லை
என்றது இன்னொரு தரப்பு
புலப்படா சுழலில்
யாருக்கும் புரியாத மொழியில்
நாங்கள் விடுதலையின்
முடிச்சுகளை அவிழ்த்து அவிழ்த்து தோற்றோம்
இலைகளும் உடல்களும்
பனியில் நடுங்கியடி இருந்தன
இப்படித்தான் இந்த மாலையைக் கடந்தேன்
காற்றில் வரையும் விரல்கள்
மொழிகளற்று தவித்தன
மஞ்சள் வெளிச்ச பின்புலத்தில்
இன்னொரு செடியில்
இன்றுதான் பூக்கத் தொடங்கினேன்
மல்லிகையாக
ரோஜாவாக
பிச்சியாக
ஆனால்
காகிதப் பூ மலர்ந்திருக்கிறது
என்றார்கள்
நான் மீண்டும் மண்ணுக்குள் திரும்பினேன்
மஞ்சள் வெளிச்ச பின்புலத்தில்
தவித்தன மொழியற்ற விரல்கள்
விலக்கிக்கொள்ளப்பட்ட
கைகளின் விரல்கள்
இப்படித்தான்
இந்த மாலையைக் கடந்தேன்
சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்
இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்
இந்தியப் பயணம், கடிதங்கள்
பெருந்தொற்று வழங்கியுள்ள பொது முடக்க காலத்தில், ஊர்சுற்றல் மிகவும் குறைந்துள்ள நிலையில், பயண நூல்களை வாசித்தல் பெரும் ஆறுதலை வாசகர்களுக்கு அளிக்கக்கூடும்.
தேர்ந்த ரசனையுடன், தேர்வு செய்யப்பட்ட கோயில் நகரங்களுக்கு நண்பர்கள் சூழ ஜெயமோகன் சென்று வந்திருக்கிறார்.
ஈரோட்டில் இருந்து ஆந்திரம் வழியாக மத்திய பிரதேசத்தை கடந்து காசி வரை பயணித்து இருக்கிறார்கள். அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் வந்து சென்னை திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நகரங்களின் பெயர்கள் பற்றிய குறிப்புகளில் இருந்து துவங்கி அவர் அளித்திடும் தகவல்கள் மனதில் காட்சிகளாய் விரிய வல்லவை.
கருவூல பணத்தைக்கொண்டு விதிகளை மீறி வீரபத்திரசாமி கோயிலை நிர்மாணித்தார் விரூபண்ணா.
விஜயநகர மன்னருக்கு இத்தகவல் தெரிய வருகையில் விரூபண்ணாவிற்கு கொடியதொரு தண்டனை வழங்கப்படுகிறது.
அவரது கண்களை அவரே குத்தி குருடாக்கிக் கொள்ள கட்டளையிடப்பட்டது அவ்வாறே செய்து கொள்கிறார் விரூபண்ணா.
கோயிலின் அமைவிடம் லெபாக்ஷி என்று அறியப்படுகிறது. லோப+ அஷி குருட்டு விழி என்று பொருள் என்றவாறு விளக்குகிறார்ஜெ.
‘வரலாறு விசித்திரமான மீறல்களும் குரூரங்களும் தியாகங்களும் நிறைந்தது’ என்றவாறு நிறைவடைகிறது அக்கட்டுரை.
பயணத்தின் பெரும் அவசியத்தை விளக்கும் ஜெ.வின் வரிகள் கீழ்க்கண்டவை.
‘பயணத்தில் அனுபவங்களால் நினைவுப் பெட்டகம் நிறைந்து வழிகிறது. காட்சிகள் மனதில் நிறைந்து கண் மூடும் போதெல்லாம் இமைகளுக்குள் விரிகின்றன’
உடன் பயணித்த நபர் இரவில் உறங்குகையில் குறட்டை விட்டதையும் அழகாக எழுதியுள்ளார் ஜெ.
வெடியோசை போன்ற குறட்டை ஒலியை பொறுக்க முடியாமல் அவரை தொட்டிருக்கிறார், குறட்டை நின்றிருக்கிறது. மீண்டும் சிறிது நேரம் கழித்து முன்பு போலவே சத்தம், மூன்று முறை தொட்டிருக்கிறார், அதற்குள் ஜெ.வும் தூங்கி விட்டிருக்கிறார்.
மாமல்லபுரத்திற்கு சென்று யானை புடைப்புச் சிற்பங்களைக் கண்டு இதில் எத்தனை குழவிகள் செய்திருக்கலாம் என்றவாறு யோசிக்கும் கலைமனம்தான் இங்கு பெரும்பான்மையோருக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது என்ற சு.ராவின் கூற்றை ஒரு தருணத்தில் நினைவு கூர்கிறார்.
பயணங்களில், தங்குமிடங்களில் நேரிட்ட அனுபவங்களையும் தனக்கே உரிய மொழியில் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார்.
இந்தியா முழுவதும் அமைந்துள்ள (இந்து) கோயில்களைக் காண விரும்பும் வாசிப்பு பழக்கம் உள்ள அனைவரும் தவறவிடக்கூடாத நூல் இது.
சரவணன் சுப்ரமணியன்
சடம் கடிதங்கள்-4
   
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய ‘சடம்’ கதையை வாசித்தேன். தொடர்ந்து வந்த வாசகர் கடிதங்களையும் வாசித்தேன். பூடகமான முடிவைக் கொண்ட கதையை விட வாசகர் கடிதங்கள் மனதில் அதிக அதிர்ச்சிகளைத் தந்ததால் இக்கடிதம். எனது கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லாதிருப்பின் அதையும் புரிந்து கொள்வேன்.
“ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான்”என்ற சாமுவேல் சான்சன் அவர்களின் கூற்றுக்கு அமைய எனது கருத்தினையும் முன்வைக்க விரும்புகின்றேன்.
‘காட்டின் நடுவே அந்த பாதை ஒரு பெரிய சிவப்பு கொடிபோல கிடந்தது’ என்பதை ஒத்து இயல்பான உரையாடல்களோடும் காட்டின் அழகுகளுடனும், மானுட நடத்தை விந்தைகளுடனும் நீளும் கதையில் பல இடங்களில் மனம் இடறி வீழ்ந்தது. கீறல்களால் காயமடைந்தது. அவை யாவும் பெண்மையை அதன் வலியை கீழ்த்தரமாக ரசிக்கும் ஆணிய மனப்பான்மை கொண்ட கதாபாத்திரங்களின் உரையாடல்களால் ஏற்பட்டது. கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை மதித்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரில் சிலர் இவ்வாறு கொடூரசிந்தை கொள்வதுண்டு.உண்மை.
உதாரணத்துக்கு சில…
” அந்த மேனோன் குட்டிக்கு கொரங்குக்குட்டி பிறந்தா நல்ல சேலாட்டு இருக்கும் இல்லவே?”
நாராயணன் “ஹிஹிஹி” என்று ஓசையிட்டு சிரித்தார்……”
“ரெண்டாயிரம் கொறையாது”…
“உள்ள அது அரைச்சவமாட்டு கிடக்குது. பாயில நல்ல ரெத்தம் வேற… கிட்டப்பன் ஆளு நல்ல எருமை மாதிரியாக்கும். அவன் அடிச்ச அடியிலே அப்டியே குட்டிக்குப் போதம் போயிட்டுது. நான் போனப்ப முளிச்சுக்கிட்டு பயந்து அலறுது… எந்திரிச்சு ஓடப்பாத்துது. பிடிச்சு போட்டு ஏறிட்டேன்… அது ஒரு அனுபவம்டே… அவ அலறிகிட்டே இருந்தா. அறுக்கப்போற கோளி சிறகடிச்சு கத்துறது மாதிரி…”
“அய்யோ!” என்றபடி நாராயணன் நின்று விட்டார். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது….
“குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம்”
தங்கள் தளத்திலிருந்து சில வாசகர் கருத்துகள்…
‘சித்தமும் ஜடமும் இணைந்த சிஜ்ஜடம்’
‘சிவம்தான் சித்தம். ஆகவே சிவம்தான் ஜடத்தை சிஜ்ஜடம் ஆக்குகிறது’
‘அந்தப் பிணம் பெண்ணாகும் தருணம்தான் கதையின் உச்சம்’
‘அந்தக்காமம் அழகுணர்வாக வெளிப்படுகிறது. அவர் அந்தப்பிணத்தை புணர்கிறார். அது உயிர் கொள்கிறது.’
‘அந்தப் போலீஸ்காரரின் உள்ளிருக்கும் உக்கிரமான காமம் ஜடத்தை உயிர்கொள்ள வைக்கிக்கிறது. அந்த காமம்தான் உயிரின் ஆதி விசை. குண்டலினி சக்தி’.
கதையை ஜீரணித்த என்னால் வாசகர் கடிதத்தின் ல கருத்துகளை ஏற்க முடியவில்லை. கதையின் ஆசிரியர் எதை நினைத்து எழுதினார் என்று கேட்பது நியாயமல்ல.
ஆனால் கொடூர வக்ர புத்தி கொண்ட காமுகனின் காமம் உயிரின் ஆதிசக்தியாகவும், சடத்தினை உயிர்கொள்ள வைக்கும் சித்தமாக ஆன சிவமாகவும் உருவகமாவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
‘சிஜ்ஜடம்’ என்ற சொல்லால் தாங்களும் இக்கருத்தினையே வலியுறுத்த நினைத்திருந்தால் அதற்காகவும் வருந்துகிறேன்.
கொலையை விடக் கொடியது பாலியல் வன்புணர்வு. குற்றம் புரிந்தவனை விட உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பெண்மனதை சடமாக்கும் வல்லமை பாலியல் வன்புணர்வுகளுக்கு உண்டு. அந்த வலியை தன் நிலை யாகக் கொண்டு உணர்ந்தால் மட்டுமே புரியும்.
வாசகர் கடிதங்களின் படி,ஒரு சடலத்தை வன்புணர்ந்து ‘உயிர்ப்பித்தல்’ பெண்மைக்கு செய்யப்படும் மாபெரும் அவமானம்.அங்கு காமம் மட்டுமே இருந்தது. அழகுணர்வும் ரசனையும் கொண்டு பெண்மனதை உயிர்ப்பிக்கும் காதல் அங்கு இல்லவே இல்லை.
என்னைப் பொறுத்தவரை இக்கதையில் வரும்’மேனோனுக்க குலதெய்வம் இங்க எங்கியோ இருக்கு. வனதுர்க்கை….’என்ற வசனமே கதையின் மர்மமுடிச்சு எனக் கருதுகிறேன். அந்த காமுகனால் சித்தம் சரியில்லாத அந்தப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்துக்கு பழிவாங்கும் முகமாக குலதெய்வமாகிய வனதுர்க்கையே இந்த உயிர்ப்பினை அல்லது ஊடுருவலை அவள்பால் நிகழ்த்தியதாக நம்புகின்றேன்.
‘சட்டென்று ஒரு முனகலோசையுடன் அவள் உடல் அசைவுகொண்டது. கைகள் அவரை வளைத்து இறுக்கிக் கொண்டன’அவள் காமத்தால் உயிர்ப்புக் கொள்ளவில்லை. வனதேவதையின் ஆட்கொள்ளலால் அந்தக் காமுகனை சடமாக்குவதையே தன் சித்தமாகக் கொண்டாள் என்பதே உண்மையாக வேண்டும்.
இதே சம்பவம் நம் சமூகத்தில் நடந்திருந்தால் இதை அழகுணர்வின் கீழ் வகைப்படுத்தி இருப்போமா? நிச்சயமாக இல்லை. இது முன்னுதாரணமாகி விடக் கூடாது.
தலைப்பு ஞாபகத்தில் இல்லாவிடினும் தங்களது பல சிறுகதைகள் கருவாலும் உருவாலும் ஞாபகத்தில் நிலைத்து நிற்கின்றன. ஆனால், சடம் சிறுகதையின் சித்தரிப்புகள் மனித இயல்புகளில் ஒரு பகுதி என்பது புரிந்தாலும், ஒரு புனைகதையாளராக கதையின் மூலம் சொல்ல வரும் ‘சடலத்தின் உயிர்ப்பு’ என்ற சேதியின் தாத்பரியம் என்னவாக இருக்கும் என்பது மட்டுமே மனதுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.
அன்பான வாழ்த்துகளுடன்
ரஞ்ஜனி சுப்ரமணியம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
  
 
   
   
   
  
