தேவிபாரதி விருதுவிழா- கடிதம்

தேவிபாரதிக்கு தன்னறம் விருது விழா

அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,

குக்கூ உடனான என் வாழ்வின் பயணத்தில், நான் மென்மேலும் மேம்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உள்ளூர ஆழமாக உணர்ந்து வருகிறேன். த‌ன்னறம் இலக்கிய விருது 2021 எழுத்தாளர் தேவிபாரதி அய்யா அவர்களுக்கு வழங்கும் நாளுக்காக எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ஏராளமான நண்பர்களில் நானும் ஒருவன். நீங்கள் சிறப்பு விருந்தினராக வருகிறீர்கள் என்பது மேலும் பேருவகை தரும் தகவலாக இருந்தது எனக்கு.

விழாவிற்கு முதல் நாளே வந்து நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நிகழ்வின் நாளில் எவ்வித பதட்டமும் பரபரப்பும் இன்றி விழா குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரமும் இன்றி தேவிபாரதி ஐயாவுடன் நீங்களும் வந்து அமர சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

சிவராஜ் அண்ணன் நிகழ்ச்சியின் பொருளுரையை தனது ஆத்மார்த்தமான சொற்களின மூலம் விரிவுரைத்தார். சில நாட்களுக்கு முன்பு மல்லாசமுத்திரத்தில் கிணறு புனரமைக்கப்பட்ட போது மஞ்சரி சந்தித்து கடந்து வந்த இன்னல்கள் பற்றியும் அதில் இருந்து மேலும் மேலும் அவர் மீண்டு வந்து அடைந்த நிறைவயும் பற்றி உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.

மல்லாசமுத்திரத்தின் புனரமைக்கப்பட்ட கிணறு  பலரின் எதிர்ப்பு தாண்டி செயல்படுத்தப்பட, யாரும் எதிர்பாராத வகையில் நீர் ஊற்று பெருகிய நிகழ்வும், அக்கிராமத்தில் வசிக்கும் தொன்னூற்று ஏழு வயது பாட்டியின் ஆசிர்வதிக்கப்பட்ட தருணத்தில் நேர்ந்த பேரானந்தமும் மென்மேலும் நாம் செய்யும் பணிகளில் தீவிரம் தொடர்வதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை நெகிழ்ந்து பதிவு செய்தார்.

நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த விழாவின் நாயகன் அய்யா தேவிபாரதி அவர்களை முதன் முதலாக நொய்யல் ஆற்றங்கரையில் பத்தொண்பது வயதில் தான் சந்தித்த அனுபவத்தையும் த‌ன்னறம் இலக்கிய விருது என்ற கரு உருவான தருணத்தையும் நினைவுகளின் ஆழத்திலிருந்து எடுத்து எங்கள் நெஞ்சங்களில் அள்ளி நிறைத்தார்.

வெள்ளை நிற காகித அலுவல் உரையில் ஆழிகையின் கை அச்சு பதிக்கப்பட்டு அதனுள் சிறப்பு பரிசான ஒரு லட்ச ரூபாய் காசோலையையும் த‌ன்னறம் இலக்கிய விருது 2021 நினைவு புகைப்படமும் உங்கள் கரங்களில் இருந்து தேவிபாரதி அய்யாவிற்கு வழங்கப்பட, ஆழிகையின் கை அச்சு பதிந்த பரிசை ஆத்மார்த்தமாக பெருமகிழ்வோடு எல்லோருக்கும் காண்பித்து அரங்கை உற்சாகப்படுத்தினார்.

அடுத்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இருந்தது உங்களின் சிறப்புரை. உங்களுக்கும் தேவிபாரதி அய்யா அவர்களுக்கும் இடையே ஒரு சில முரண்பாடுகள் கொண்ட கருத்துக்கள் இருப்பினும் இருவருக்கும் பொதுவாக அமைந்துள்ள ஆசிரியராக இருப்பவர் சுந்தர ராமசாமி அவர்கள் என்பதையும் எப்போதும் தாங்கள் அவருடைய மாணவன் என்பதையும் பெருமிதமாக பதிவு செய்தீர்கள்.

மேலும் விழா ஒருங்கிணைக்கப்பட்டுருந்த டாக்டர். ஜீவா அவர்களின் நினைவு அரங்கம் அவரோடு நீங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொண்ட தொடர்பு தேவிபாரதி அய்யா அவர்களுடனான பல ஆண்டு இலக்கியப் பயணம் என நினைவு கூர்ந்தீர்கள்.

தேவிபாரதி அய்யா அவர்களின் எழுத்து பற்றிய உங்களின் எண்ணங்களை பலி எண்ணும் சிறுகதை மூலம் தொடங்கி அவரது ஆகச்சிறந்த படைப்பான நட்ராஜ் மகாராஜில் அவர் அடைந்த இலக்கிய வாழ்வில் உச்சம், ஒரு படைப்பாளியின் வெற்றி என்பது அவரின் கடைசியாக வெளியான படைப்பில் இருந்து துவங்கும் என்பதை தேவிபாரதி அய்யாவின் நட்ராஜ் மகாராஜ் நாவல் அடைந்த வெற்றி அவரிடம் நாம் மேலும் எதிர்பார்க்கப்படும் இலக்கிய படைப்புகள் என்பதனை பதிவு செய்து அவரை ஆரத்தழுவிக் கொண்டு உங்கள் உரையை நிறைவு செய்தீர்கள்.

தொடர்ந்து ஏற்புரை வழங்க வந்த தேவிபாரதி அய்யா அவர்கள், உணர்ச்சி மிகையாக, தன் வாழ்வில் ஏற்பட்ட பல இடர்கள், இப்போது சந்தித்து கொண்டுள்ள சிரமங்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தன்னை கட்டுப்படுத்த முயன்றாலும் தான் மிகவும் உறுதியாக இருப்பதை எழுத்து மற்றும் இலக்கியத்தின் மூலமும் மீள்வதை ஆழப் பதிவு செய்தார்.

கடந்த ஓராண்டாக குக்கூ த‌ன்னறம் மக்களின் அன்பையும் அவர்கள் ஆவணப்படம் எடுப்பதற்காக எடுத்து கொண்ட சிரத்தை பற்றியும் தான் அடைந்த மன உளைச்சல் பற்றியும், குக்கூவின் பாரதி வினோத் அண்ணன் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தான் வசிக்கும் மண்ணில் கிடைக்காத அங்கீகாரம் த‌ன்னறம் இலக்கிய விருது கிடைத்ததின் மூலம் நிறைவு கண்டதையும் பகிர்ந்தார். மேலும் மூன்று நாவல்கள் எழுத திட்டம் வைத்துள்ளதாகவும் தன் இறுதி மூச்சிர்குள் அந்த மூன்று படைப்புகள் வெளிவரும் என்பதை உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சமாக பதிவு செய்து அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தாமரையின் குரலில் அசைந்தாடும் மயில் அரங்கில் ஒலிக்க அனைவரையும் பேரன்பால் திகைக்க வைத்தது. சிவராஜ் அண்ணன் தாமரையின் பயணத்தை பகிர நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக ஆகச்சிறந்த நிகழ்வாக இருந்தது த‌ன்னறம் இலக்கிய விருது.

நெஞ்சம் நிறைந்தது…

நன்றி கலந்த பேரன்புடன்

இரா.மகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2022 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.