Jeyamohan's Blog, page 839
January 25, 2022
விஷ்ணுபுரம் விழா, கடிதம்
 0அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.
0அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.
நலமே வேண்டுகிறேன். கடந்த டிசம்பரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் முதன் முறையாக கலந்து கொண்டேன். சிவராஜ் அண்ணா ஸ்டாலின் அண்ணாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்களே எனக்கு தூண்டுதலாக இருந்தவர்கள். இரண்டு நாள் நிகழ்வையும் முழுதாக பங்கேற்க வேண்டும் என்று நானும் வேலாயுதம் பெரியசாமியும் சேர்ந்து கோவை வந்துசேர்ந்தோம். எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி வந்தோன்.எனக்கு உங்களை பார்க்கலாம், மேலும் குக்கூ நண்பர்கள் இருப்பார்கள் என்ற எண்ணம். ஆனால் விழா என் எதிர்பார்ப்பை தாண்டியதாகவே இருந்தது. என்ன எதிர்பார்த்திருந்தாலும் அது குறைவு என்ற எண்ணமே இருந்திருக்கும். எனக்கு மனதளவில் விஷ்ணுபுரம் விழா மிகவும் இதமான விழா. அவ்வாறு தான் அங்கே எல்லாமே இருந்தது.
எனக்கு விழா முடிந்த பிறகு உங்கள் அருகமைவில் ஏற்பட்ட அனுபவமே மறக்க முடியாததாக அமைந்தது. பலமுறை உங்கள் அருகமைவில் இருப்பதற்கான வாய்ப்பினை தவறவிட்டுவிட்டேன். இந்த முறை அவ்வாறு நடந்துவிட கூடாது என்ற எண்ணம் இருந்தது.விழா முடிந்து மறுநாள் காலை புறப்பட தயாரானேன். நீங்கள் காலை நடைக்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். நானும் எல்லோருடன் சேர்ந்து கொண்டேன். காலையில் அப்படி ஒரு மகிழ்வான கலந்துரையாடலுடன் நடை மற்றும் டீ. நடை முழுதும் சிரிப்பொலிகள். பிறகு மற்றோரு விடுதிக்கு நீங்கள் செல்வதாகவும் அங்கே மலை வரை இருப்பீர்கள் என்றார் நண்பர். மேலும் சிறிது நேரம் உங்களுடன் இருந்து விட்டு போகலாம் என்று அங்கே வந்தேன். அங்கு தொடங்கிய உரையாடல் ஒரு வாசிப்பு போல் இருந்தது.நான் நாளை 6 மணிக்கு புறப்பட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் மாலை 4 மணிக்கே என்னால் புறப்பட முடிந்தது. மனதளவில் இதமாகவும் மிகவும் மகிழ்வானதாகவும் அந்த சூழல் அமைந்தது. பல நேரங்களில் உங்கள் இணையத்தில் கதைகள் கட்டுரைகள் படிக்கும் போது எல்லாவற்றையும் மறந்து அதிலே இருந்ததுண்டு. அதேபோல் இதுவும் எனக்கு நீண்ட கட்டுரையை வாசித்தது போலவே உணர்ந்தேன்..அருகமைவில் உரையாடலில் இருந்த நேரம் எந்த வகையிலும் சோர்வை ஏற்படுத்தவில்லை. என்னை அந்த இடத்தில் புதியவனாக எண்ணவே முடியவில்லை. அளவு மிகுந்தால் திகட்டிவிடுமோ என்ற எண்ணம் மட்டும் ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. இனி அப்படி நிகழமுடியாது.மனதளவில் உங்கள் அருக்கமைவு எல்லா வகையிலும் குருவின் அருகமைவே. தோன்றியதை எழுதியிருக்கிறேன்.வணங்குகிறேன்.
இப்படிக்கு
மோகன் தனிஷ்க்
சின்னாளப்பட்டி
January 24, 2022
போரும் அமைதியும் மொழியாக்கங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
“போரும் அமைதியும்” நாவலை தமிழில் படிப்பதற்கும் ஆங்கிலத்தில் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளதா? நீங்கள் தமிழில் படித்தீர்களா? இல்லை, ஆங்கிலத்தில் படித்தீர்களா?
லியோ டால்ஸ்டாய் பற்றிய உங்களுடைய பேச்சை கேட்ட பிறகு இந்த நாவலை படிக்க இன்னும் ஆசை அதிகமாகிறது.
முக்கியமாக இந்த கேள்வி ஏன் வருகிறதென்றால், நான் தமிழ் வழி கல்வி பயின்றவன். ஆங்கிலமும் இங்கு வந்த பிறகு நன்றாக கற்று பேச தெரிந்தாலும் உங்களுடைய கருத்தை கேட்க ஆசை. நன்றி!
சத்ய நாராயணன்,
ஆஸ்டின், டெக்சாஸ்.
 டி.எஸ்.சொக்கலிங்கம்
டி.எஸ்.சொக்கலிங்கம்அன்புள்ள சத்யா,
ருஷ்ய இலக்கியங்களை எப்படி இருந்தாலும் நாம் மூலத்தில் படிக்கமுடியாது. தமிழில் வாசிப்பதா ஆங்கிலத்தில் வாசிப்பதா என்பதே கேள்வி. எனில் எந்த மொழியில் வேகமாக தடையில்லாமல் வாசிக்கமுடியுமோ அதில் வாசிக்கலாம். என்னால் தமிழிலேயே விரைவாக வாசிக்கமுடியும்.
தல்ஸ்தோயின் மொழி மிக நேரடியானது. அணிகளற்றது. சொற்றொடர்களும் எளிமையான கட்டமைப்பு கொண்டவை. ஆகவே அவருடைய நாவல்கள் ஆங்கிலத்திலும் எளிமையான வாசிப்புக்கு உகந்தவையாகவே உள்ளன. நான் வாசித்தவரை தல்ஸ்தோயின் படைப்புகளை தொடக்க காலத்தில் மொழியாக்கம் செய்த Constance Garnett மொழியாக்கம் நன்று. அவர் நிறைய பகுதிகளை விட்டுவிட்டு செய்தார் என குற்றச்சாட்டு உண்டு. ஆய்வுக்காக வாசிக்கவில்லை என்றால் அவருடைய சரளமான மொழியாக்கத்தை வாசிக்கலாம். Anthony Briggs மொழியாக்கம்தான் மிகச்சிறப்பானது என்னும் பேச்சு சூழலில் உண்டு.
தமிழில் சொக்கலிங்கம் அவர்களின் மொழியாக்கம் ஓர் இலக்கியச் சாதனை. டி.எஸ்.சொக்கலிங்கம் தினமணி ஆசிரியராக இருந்தவர். புதுமைப்பித்தனின் தாய்மாமா. தினசரி என்னும் நாளிதழை நடத்தியவர். இலக்கியத்தில் ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். சுதந்திரப்போராட்ட வீரர். தமிழ் இதழியலின் தலைமகன்களில் ஒருவர்.
 Contance Garnett
Contance Garnettடி.எஸ்.சொக்கலிங்கம் மொழியாக்கம் மிகச் சரளமானது.மூலம் போலவே வாசிக்கலாம். பெரும்பாலும் சொல்லுக்குச் சொல் மொழியாக்கம். தமிழில் உரைநடை சரிவர உருவாகி வராத காலகட்டத்தில் செய்யப்பட்டது அம்மொழியாக்கம். தமிழில் புனைவிலக்கிய நடையை உருவாக்கியதில் அதன் பங்கு முக்கியமானது. ஆயினும் இன்றும் அதை வாசிக்கலாம். எந்த பழமைமையும் உணரமுடியாது.
போரும் அமைதியும் நாவலை வாசிக்க சில சிக்கல்கள் உண்டு. அது பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்யாவின் மிகவிரிவான சித்திரத்தை அளிக்கிறது. நேரடியாக ஒரு பெரிய விருந்தில் தொடங்கி கதாபாத்திரங்களையும் உறவுமுறைகளையும் சொல்லிக்கொண்டே செல்கிறது. அந்நாவல் உருவாக்க விரும்பும் அந்த சமூகச்சித்திரம் நம் உள்ளத்தில் தெளிவடையும்வரை நாவலை விடாமல் வாசிக்கவேண்டும். குறைந்தது ஐம்பது பக்கம். நூறுபக்கம் கடந்தால் நாவலுக்குள் வாழத் தொடங்கிவிடுவோம்.
நாவலுக்குள் நுழைகையிலுள்ள முக்கியமான தடை கதைமாந்தர் பெயர்கள் பலவகையாக அளிக்கப்பட்டிருப்பது. ரஷ்யாவில் ஒருவருக்கு செல்லப்பெயர், கிறிஸ்தவப்பெயர், தந்தைபெயர் ,குடிப்பெயர் ஆகியவை இருக்கும். நான்குபெயர்களில் ஒன்றைச்சொல்லி அழைப்பார்கள். கீழே உள்ளவர்கள் குடிப்பெயர் சொல்வார்கள். மூத்தவர்கள் தந்தைபெயர் சொல்வார்கள். அணுக்கமானவர்கள் செல்லப்பெயர் சொல்வார்கள். அது குழப்பத்தை உருவாக்கும். அதற்கு ஒரு சின்ன காகிதத்தில் பெயர்களை குறித்து அருகே வைத்துக்கொண்டு அவர்கள் எவரெவர் என அவ்வப்போது பார்த்துக்கொண்டால் போதுமானது
ஜெ
மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்
போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்
போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு
ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…
விண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா
இந்த உலகத்தில் போட்டியுணர்வை உருவாக்கி நிறைத்துள்ள நம்மால், அச்சமூட்டும் அவசரங்களுக்கு நடுவில் மரத்தைச் சுற்றியுள்ள கொடியின் ஒவ்வொரு இலையையும் கொடியில் மலர்ந்துள்ள அழகிய மலர்களையும் கவனிக்க முடிவதில்லை. ஆனால், சலிப்பும் போட்டியுணர்வும் நிறைந்த ஒளிகுன்றிய அன்றாடத்தின் அழகின்மையானது, உலகத்தின் அழகாலும் மென்மையினாலும் நெகிழ்வாலும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையாலுமே நிகர் செய்யப்படுகிறது. மிகவயதான மரங்களின் கிளைநுனிகளில்கூட புதிய முளைகள் எழுவது, வசந்தத்தில் வளம் கொள்ளாது இருக்குமளவிற்கு மரத்திற்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நமக்கு உணர்த்தவே.
விண்மீன்கள் நிறைந்த இரவுஇரவு- மஞ்சுநாத்
ஆண்களுக்கு பெண்கள் மீதான புரிதலைப்போல் இரவுகளைப் பற்றிய புரிதலும் மனிதர்களுக்கு முழுமையாக கிடைத்ததாக கூற முடியாது. பெண்கள் மீதான திகைப்பு கலந்த ஈர்ப்பு போலவே ஆழ்ந்த இருளின் கவர்ச்சியை அபகரிக்கும் அகல் விளக்கொளியின் செம்மஞ்சள் விரல் போல் இரவு மீதும் ஆர்வம் பரவுகிறது.
இரவு இருளை தன் மீது தழுவிக் கொண்டு தனது வதனத்தின் விஸ்வரூபத்தை வளர்த்துக் கொள்கிறது. மிதமிஞ்சிய அதன் பேரழகு சிலருக்கு தெய்வீகமாகவும் சிலருக்கு நெருங்கவியலாத பயத்தையும் உருவாக்குகிறது. இரவு பல ஆயிரம் கண்கள கொண்டது. விழி அசையாமால் காத்திருக்கிறது.
உண்மையில் தேட வேண்டியது வெளிச்சத்தை அல்ல… இருளை. ஒருவகையில் தேட வேண்டியது இருளையும் அல்ல… அது இங்கே இப்போது நிலைத்திருக்கிறது. தற்காலிகமானது வெளிச்சம் மட்டுமே. வருவதும் செல்வதும் அதன் வேலை.
“எந்தப் பகலிலும்
இரவு இருந்து கொண்டிருக்கிறது
ஒவ்வொன்றுக்கும் கீழே அழுந்தி,
ஒவ்வொன்றுக்கும் பின்னால்
பதுங்கி
மெளனமாக காத்திருக்கிறது.”
திரிபடைந்த தனது கதிர்களின் பிரகாசத்தைக் கொண்டு நெடுங்காலமாக நம் பார்வை புலன் திறனை அது படிப்படியாக குறைத்து கொண்டிருக்கிறது. இதன் பொருட்டே ஆழ்ந்த அகத்தேடலில் மூழ்குபவர்கள் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள். ஒளிகளை தவிர்ப்போம் இருளை ஆராதிப்போம். அதாவது பகலை நிராகரித்து இரவைக் கொண்டாடுவோம்.
மாறுபட்ட வாழ்வியலை சோதிப்பதில் பிறப்பெடுத்த காலம் தொட்டே மனிதனுக்கு அலாதி இன்பம். அப்படியான மனிதனுக்கு இரவில் உறங்காமல் வாழும் மனித சமூகத்தை ஜெமோ அறிமுகப்படுத்துகிறார். நமக்கும்… இரவு என்பதால் இதனை வாசிக்க உகந்த பொழுதும் பகலில் விழித்திருந்தோர் விழி மூடும் இரவு நேரம்.
பிரபஞ்சன் தனது
‘கண்ணீரால் காப்போம்’ நாவலில் எழுதுகிறார்…
“இரவு எத்தனை அழகாக இருக்கிறது. இதைத் தூங்கிக் கழிக்கறார்களே ஜனங்கள். ரா என்றால் தூங்குகிறது என்று அர்த்தம் கொண்டிருக்கிறார்கள். ராவில் உறங்கத்தான் வேண்டும் என்று எந்தச் சும்பன் சொன்னான்?”
ஒரு சமூகத்தின் மறுபக்கத்தை இரவின் வெளிச்சத்தில் கண்டுகொள்ளலாம். மனிதனின் மறுபக்கத்தையும் தான். இருள் ஒருவனை புத்தனாக்கும். முறையான புரிதல், போதிய பயிற்சி, இரவின் மீதான தீவிரக் காதல், காலத்தை நினைவறுத்தல் இவைகள் இல்லாமல் போகும் போது பேரண்டத்தின் சித்தனாய் மலர்வதற்கு பதில் வெற்றுவெளியில் காற்றை துழாவித் திரியும் அகம் சிதைந்த பித்தனாக மாறும் அபாயமும் உண்டு.
“ஒலியாக இரவை மாற்றலாம்
சுவர்க்கோழி அதை அறியும்
நிறமாக இரவை மாற்றலாம்
வெளவால்கள் அதை அறியும்
ஒரு சொல்லாக அதை மாற்றலாம்.
மிக எளிமையான
மிக இருண்ட ஒரு சொல்லாக
‘நான்’
பல கோடி பால்வெளித்திரள்களுக்கு மடியாகும் இரவு கவிதைக்கு, இசைக்கு, இறைத்தேடலுக்கு, எழுத்தாளனுக்கு, உடல் தேடும் மனிதர்களுக்கு, உணவு தேடும் மிருகங்களுக்கு, உடலற்ற உயிர்களுக்கு, களவாடும் திருடர்களுக்கு, உறக்கத்தை தொலைத்து விட்ட கடனாளிகளுக்கு, வலியோடு யுத்தம் புரியும் நோயாளிகளுக்கு என பலருக்கும் சொந்தமாக அமைந்தாலும் விழித்திருக்கும் இரவுக்கும் விழிப்புணர்வோடு கூடிய இரவுக்கும் வித்தியாசங்கள் பல உண்டு.
அறிமுகம் இல்லாத இந்த இரவு கர்பத்திற்குள் மாய மோகினி மீதான காதல் மோகத்தில் ஈர்க்கப்படும் ஒருவன் அதன் சுவையறியும் நாவின் மொட்டுகளை ஆராய்ந்து கொண்டே மீட்சிமையும் வேண்டுகிறான் அதே சமயம் மீளாமல் ஒவ்வொரு இரவும் நீட்சியில் வளரவும் விரும்புகிறான்.
கேரளத்தின் மண், நீர், நெருப்பு,காற்று , ஆகாசம், நிறம் , சடங்கு, சமையல் என பல தளங்களில் ஜெமோ தனது இரவு பயணத்தின் வழியே அழகாக காட்சிப்படுத்தும் அதே வேளையில் தமிழ் மொழி மீதான தனது கருத்துகளையும் பதிவிடுகிறார்.
இப்பொழுது நாம் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பில் தெலுங்கு மொழியின் கலப்பு என்பது அதன் பூர்வத்தன்மை அல்ல என்கிறார். தெலுங்கு மன்னர்கள் ஆட்சிக்குப்பின் இந்த மாற்றம் நிகழ்ந்த்ததாகவும் உண்மையில் மாற்றமில்லாத தமிழ் மொழியின் ஓசை மலையாள சுருதி கொண்டதும் என்கிறார். இதற்கு கன்னியாகுமரி மக்களின் தமிழையும், மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பழங்குடிகள் பேசும் வழக்கு தமிழையும் , இலங்கை தமிழர்களின் பேச்சு முறைகளின் தொன்மையையும் காரணமாக காட்டுகிறார்.
ஒவ்வொரு அத்தியாயமும் இரவின் அடர்த்தியை, அழகை,மெளனத்தை, சுயத்திற்கு மட்டுமேயான ரகசியத்தை பிரதிபலிக்கும் கவிதையோடு துவங்குகிறது.
பிடிபட்ட கரடி
மெல்ல எழுந்து
சிலிர்த்துக்கொள்வதுபோல
தன்னைக் காட்டியது
இந்த இரவு
இறுதியில் நாவலை முடித்த விதம் துவக்கம் மற்றும் விவரிப்பின் நுணுக்கத்தை முழுமை செய்வதாக அமையவில்லை. கனவிலிருந்து எழும் தமிழ் திரையுலகத்தின் கதை நாயகனுக்கு அமையும் திரைக்காட்சி போல் பிசுபிசுத்து போகிறது.
ஜெமோவின் இந்திய பாரம்பரிய ஆன்மீக செயல் முறைகளின் மீதான அறிவுத்தேடலும் பார்வையும் அலாதியானது. தாந்ரீக மரபு முறைகள் இரவை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது…? புரிதலற்ற வெற்று சடங்காக அதை பயன்படுத்துபவர்கள் அவ்விதம் பயன்படுத்தும் ஒலியற்ற குழல்களை மட்டுமே செவிசாய்க்கும் நிழல் மேதமைகளுக்கு எதார்த்தமான பதிலாக ஜெமோவின் பூடகமான இந்த இரவு கவிதையை உருவகமாக தரலாம்.
குருதி
உறைந்து
கனத்து
பூச்சிகளால் ரீங்கரித்து
உலர்ந்து
கருப்பதுபோல்
வருகிறது
இரவு
அன்பும் நன்றியும்
மஞ்சுநாத்
புதுச்சேரி
காதுகள், அந்தியூர்மணி – கடிதம்
   
காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். குடும்பத்தின் நலன் வேண்டுகிறேன்.
விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும், கூட்டத்தில் ஒருவனாக கலந்துக் கொண்டேன். உங்களிடம் வந்து சில வார்த்தைகள் பேசி அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆவலாதி இருந்தது. ஆனால் உங்களை பிடிக்க முடியவில்லை. சுண்டிவிட்ட நாணயம் போல் சுழன்றுக் கொண்டே இருந்தீர்கள். மேலும் செல்பி எடுக்க, ஆட்டோகிராப் வாங்க என உங்களைச் சுற்றி ஒரே தள்ளுமுள்ளு. அறிமுகம் பண்ணிக் கொள்ள முடியவில்லை.
விஷ்ணுபுரம் விழா அமர்க்களமாய் நடந்து முடிந்தது. இரண்டு நாட்களில் எல்லா அரங்குகளும் ரசிக்கும்படி இருந்தன என்று பொய் சொல்ல மாட்டேன். சீனியர் எழுத்தாளர்கள் அரங்கை தம் வசம் படுத்தினார்கள். ஆனால் புதிய எழுத்தாளர்களின் அரங்குகள் கொஞ்சம் சோபைதான். அபிரிதமான தன்னம்பிக்கையில் அசட்டுத்தனமாய் பேசுகிறார்கள். அப்படி இல்லாமல் போனால், தெளிவேயில்லாமல் சுணக்கமாக பின்வாங்குகிறார்கள். இரண்டுமே சோர்வூட்டின. Read the room, folks!
புதிய எழுத்தாளர்களுக்கு ஏன் அரங்குகள் தரவேண்டும் என்பதை என்னால் கிரகித்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு மேடை. பயின்றால் பலன். பயிலாவிட்டால் பள்ளம்.
“பழைய ஐந்நூறு ரூபாய் செல்லாதா?” என்றுக் கேட்பது மாதிரி சம்பந்தமேயில்லாமல் ஒரு மாதம் கழித்து விஷ்ணுபுரம் விழா பற்றி பேசுகிறானே என்று கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் வேறொரு விஷயத்திற்காக இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தேன். அதற்குள் எங்கெங்கோ சுற்றிவிட்டேன். விஷயம் அந்தியூர் மணியின் காதுகள் விமர்சனக் கட்டுரை பற்றியது.
அந்தியூர் மணியின் கட்டுரை நல்ல கட்டுரை. தமிழ் வட்டத்தில் ஒருவர் சித்தர் மரபு பற்றியும் பாடபேதம் பற்றியும் விலாவரியாக பேசுவது வியப்பூட்டுகிற காரியம். அவர் எழுதும் கட்டுரைகளை ஆர்வமாக புக்மார்க் செய்து எப்படியும் வாசித்துவிடுகிறேன். மரபோடு அவருக்கு நல்ல பழக்கம் இருக்கும் போல. அது பெரிய பலம். அந்த வகையில் காதுகள் நாவலுக்கு அவர் கொடுக்கும் வாசிப்புக்கூட தனித்தன்மைக் கொண்டதாக இருக்கிறது. மகாலிங்கம் ஞானத்தை வேண்டுகிறான். ஞானத்துக்கான பாதை காதுகளில் ஓதப்படுகிறது. ஆனால் அந்த பாதை அவன் நினைத்ததுப் போல் பூ மண்டியதாக இல்லாததால் குழம்பிப் போகிறான் என்று அந்தியூரார் எழுதியதை படித்ததும் அட என்று ஒரு ஆச்சர்யக் குறி மனதில் எழுந்தது. மிகவும் உண்மை என்று எண்ணிக் கொண்டேன். உலக வாழ்க்கையின் துயரை அப்படியே துயர் என்று புரிந்துகொள்வதுதான் மனித குணம். அதை ஏன் வேள்வியாக சாதகமாக நினைக்கக்கூடாது என்று அந்தியூரார் கேள்வி எழுப்புகிறார். புதிய கேள்வி அல்ல. ஆனால் அதை ஒரு மார்டன் நாவல் மேல் அவர் போட்டது பிரமாதமாக இருந்தது.
முக்கியமான கட்டுரையாக வந்திருக்க வேண்டியது. ஆனால் ஒரு பெரியக் குறைபாடு அதில் இருக்கிறது. இன்றைய மார்டன் மொழியில் அக்கட்டுரை எழுதப்படவில்லை. மொழி என்று நான் எழுத்து நடையை சொல்லவில்லை. மொழியை உருவாக்கும் மனதை சொல்கிறேன். மொழி பழையது என்றால் நபரும் சிந்தனைக் கோணமுமே பழையது என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்தியூராரின் மனம் இன்னமும் மார்டனாகவில்லை. மனு பற்றிய எழுதிய கட்டுரையிலேயே அது எனக்கு தெரிந்தது. ஆனால் மரபுக்கு வாதாட, சும்மா சடங்கு சாஸ்திரம் என்று பேத்தாத, காத்திரமான ஒரு தரப்பு என்று அப்போது யோசித்துக் கொண்டேன். ஆனால் அவர் இலக்கிய விமர்சனங்களும் எழுதும்போது சும்மாவேனும் சுட்டிக் காட்டலாம் என்று படுகிறது. மரபோடு நல்ல பழக்கம் உள்ள ஒருவர் நவீன சிந்தனைப் போக்கையும் உள்வாங்கிக் கொண்டால் நிறைய நல்ல கட்டுரைகள் வருமே என்று ஒரு நப்பாசை. எனக்கெல்லாம் மரபு பற்றி போதிய அறிவே இல்லை. அந்தியூராருக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது. அவர் எழுதியது மாதிரி கொடுப்பினை தான் பாதகங்களையும் ஏற்படுத்துகிறது.
இன்றைய படைப்புகளை விமர்சனம் செய்யும்போது மரபை துணைக்கு அழைத்துக் கொள்வது தவறில்லை. எபிஸ்டாமாலஜி, ஜெர்ம்யூனாடிக்ஸ் என்று என்னென்னவோ பேர் சொல்லி எழுதுகிறார்கள். படைப்பின் வாலைத் தேடி பட்டாசுக் கட்டும் வேலைகள் நடக்கும்போது சித்தர் மரபோடு இணைத்து பேசுவது தவறே கிடையாது. எம்.வி.வி அவர்களுக்கு முருகன் தானே சாகித்திய அகாடெமி விருதே வாங்கிக் கொடுக்கிறான். எனவே அந்தியூராரின் அணுகுமுறையில் குற்றம் காண்பது முறை கிடையாது. ஆனால் எழுதும்போது அவர் சித்தர் மரபுக்கு வக்கீலாக மாற ஆரம்பித்துவிடுகிறார். பக்கத்தில் போனால் சட்டையை உருவி நெற்றியில் விபூதி அடித்துவிடுவாரோ என்று பயமாய் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நாம் எதை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் மார்டன் மொழியில் அந்த நம்பிக்கைக்கு வேலை கிடையாது. கதை, கவிதை, நாவல் இவற்றை நான் சொல்லவில்லை. இலக்கிய விமர்சனத்தில் மட்டும் சொல்கிறேன். பொதுவாக என்ன மொழி சூழலில் உருவாகி இருக்கிறதோ அந்த மொழியில்தான் விமர்சகன் பேச வேண்டும்.
பூடகமோ மாயமோ வாய்த்தால் நலம். ஆனால் பிரச்சாரம் மட்டும் அறவே தகாது.
(இன்னொரு மூலையில் அழகியலுக்கு பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.அவர்களுடைய மொழியில் இருக்கும் வன்முறை பற்றி தனியே விவரமாக எழுத வேண்டும். )
அந்தியூராரின் கட்டுரையில் இருக்கும் பெரிய இடர். மகாலிங்கத்தின் தேடலை உள்ளடக்கமாக கருதி அந்த உள்ளடக்கத்தை மட்டும் விவாதப் பொருளாக்குவது. இந்த உள்ளடக்க பாணி விமர்சனம் காலாவதியாகிவிட்டது. அந்த உள்ளடக்கத்தை வைத்துதான் விமர்சகர் சித்தர், தொல்காப்பியர் என்று அலசுகிறார். இப்படி ஆராய்வது எங்கே போய் முடியும் என்றால் விமர்சகன் தனக்கு பிடித்த உள்ளடக்கத்தை எல்லா படைப்புகளிலும் தேடும் படுகுழியில் போய் முடியும். அப்புறம் தனக்கு பிடித்த உள்ளடகத்தில் கொக்கி போட்டு எல்லா படைப்புகளையும் அதில் மாட்டுவது நடக்கும். படைப்பின் ரசவாதத்தையோ இலக்கியத்தின் அதிர வைக்கும் புதிர்களையோ விமர்சகன் சுட்டிக் காட்டாமல் மாடு பிடிப்பதுப் போல் திமில் மேல் ஏறி ஏறி சுற்றி வருவதுதான் கடைசியில் எஞ்சுவது.
டி.எச்.லாரன்ஸ் சொன்னது என நினைக்கிறேன். “Never trust the teller. Trust the tale”. இது எழுத்தாளரை பற்றி மட்டும் சொல்லப்பட்டது அல்ல. கதைக்குள் இருக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஜோராக பொருந்தக்கூடியது. மகாலிங்கம் வழியே எம்.வி.வியை பார்க்கும் பயோகிராபி விமர்சனத்தை அந்தியூரார் நிரம்ப செய்ய வேண்டியதில்லை. அவருடைய கட்டுரையிலேயே கடைசியில் ஒரு அற்புதமான வெளிச்சம் இருக்கிறது. “ஏன் அது காதுகளில் நடக்கிறது?” என்று உசாவி, நம் மரபில் “கேட்டல்” எனும் செயலுக்கு உள்ள முதன்மை பங்கை அழகாக விளக்கியிருக்கிறார். சொல்பவர் சரியாகத்தான் சொல்கிறார். காதுகள் ஒழுங்காக வேலை செய்து கேட்பவரும் சரியாகத்தான் கேட்கிறார். ஆனால் சொல்லுக்கு சொல்லும் பொருள் இல்லை. கேட்டதற்கு கேட்ட பொருளும் இல்லை. ஒரு நல்ல விமர்சகருக்கு புலப்படும் நுண்மைகள் யாவும் அந்தியூராருக்கு ஈசியாக புலப்படுகின்றன. இனி அதை அவர் நம் மொழியில் எழுதிவிட்டால் போதும். அவருக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
பிரியத்தோடு,
அசோகன்.
புதுவை வெண்முரசு கூடுகை – 46. அழைப்பிதழ்
நண்பர்களே ,
வணக்கம் ,
நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 46 வது கூடுகை 29.01.2022 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” ,
பகுதி 11 : காட்டின் மகள். 1 முதல் 7 வரை
பகுதி 12 : நிலத்தடி நெருப்பு 1 முதல் 4 வரை
பகுதி 13 : இனியன் 1 முதல் 6 வரை
பதிவுகள் குறித்து நண்பர் மணிமாறன் உரையாடுவார்.
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி
புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
விஷ்ணுபுரம் விழா- ஓசூர் செல்வேந்திரன்
11 வருடங்களாக தங்கள் தளத்தை பின்தொடர்ந்து வருகிறேன். ஒருமுறை ஈரோடு வெண்முரசு கூடுகையிலும், இருமுறை தங்கள் இல்லத்திலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
விருதுவிழாக்களை பற்றிய பதிவுகளை படித்து மட்டுமே தெரிந்துகொண்ட எனக்கு இந்தமுறை கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது.
என் நண்பர்கள் இருவரையும் கூட்டிவந்துவிட்டேன். சுரேஷ் கண்ணனூர் NIFTல் இணை பேராசிரியராக பணிபுரிகிறான். ஓஷோ, சுஜாதா என ஆரம்பித்து இப்போது வெண்முரசு வரை புத்தகங்களை தேடிச்சேர்த்து வருபவன். பள்ளிக்காலத்தோழன் செல்லமுத்து குழுமங்களில் கவிதைநடையில் தன்னுணர்வுகளை பகிர்பவன். இருவருக்கும் இது ஒரு இனிய அனுபவம்.
விழாஅரங்கிட்கு வந்ததும் அனைத்து முகங்களும் தெரிந்த முகங்களாக தோன்றியது. அவர்களுக்கு என்னைத்தெரியாது என உறைக்க சிறிதுநேரம் பிடித்தது. ஈரோடு கிருஷ்ணன், பாரி, மணவாளன், நூற்பு சிவா, குக்கூ முத்து ஆகியோரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். நாஞ்சில் ஐயாவோடு உரையாட நிறைய தருணங்கள் வாய்த்தது.
முதல் நாள் காலை 10 மணிமுதல் மறுநாள் இரவு 9மணிவரை நிகழ்ந்த அனைத்து விழா நிகழ்வுகளும் எனக்கு உச்சகணங்கள் தான்.
ஓவ்வொரு கேள்வியும் அதற்கான பதிலும் ஏதோ ஒரு திறப்பை அளித்தன. முதல்நாள் கோகுல்பிரசாத்தின் தன்னை கவரும் படைப்புக்களை மட்டுமே வெளியிடுவேன் என முன்வைத்த அவரது நிலைபாடு, காளிபிரசாத்தின் தன் வாழ்க்கை அனுபவங்கள் இன்னும் செறிவானவை என்ற பகிர்தல், சுஷில்குமாரின் தன் ஊருக்கும் ஜெமோவின் ஊருக்கும் உள்ள இடைவெளி என் படைப்புகளிலும் இருக்கும் என்ற தெளிவு, செந்தில் ஜெகன்நாதனின் இலக்கியத்துக்கு வேறுஎழுத்து சினிமாவிற்கு வேறுஎழுத்து என்ற புரிதல், ஜா.தீபாவின் பெண்களின் உலகை எழுதிவிட்டு பின் அனைத்து தரப்பையும் எழுதுவேன் என்ற நிமிர்வு, பா.திருச்செந்தாழையின் தொழிலுக்கும் இலக்கியத்துக்குமான ஊடாட்டம், சோ.தர்மன் அவர்களின் களஅனுபவங்களின் சரவெடி என அனைத்தும் அருமை.
இரண்டாம் நாளின் சிறப்பு விருந்தினர்கள் அமர்வுகள் சிறப்பாக இருந்தன. இயக்குனர் வசந்த் சாய் அவரின் சினிமா, இலக்கியத்தில் இருந்து சிந்தித்தல் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என நிறைய விஷயங்களை பகிர்ந்தார். கவிஞர் சின்ன வீரபத்ருடு அவர்களின் உரை மிகச்செறிவாக தெளிவான ஆங்கிலத்தில் அமைந்தது. தெலுங்கு கவிதை உலகை பற்றிய விரிவான உரை. ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் வெளிப்படையான பேச்சு மற்றும் வரலாற்று/சூழலியல் பார்வை, கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் குழந்தைமை, அவரது அனுபவம் சார்ந்த பகிர்தல்கள் என செறிவான நிகழ்வுகள்.
இடையில் குக்கூ சிவா அண்ணாவை சந்தித்ததும் அவரின் கைதொடுகையும் நெகிழ்ச்சியாக இருந்தது. நினைத்துவந்ததுபோல என்பெயரோடு தங்களோடு இருக்கும் இன்னொரு ஆளுமையை கடைசியாக சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டேன்.
தங்களை சந்தித்து கையொப்பம் பெற்று புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். ‘எழுதுக’ புத்தகத்தில் தங்கள் ஆசியாக கையொப்பம் பெற்றது நிறைவான அனுபவம்.
இருதினங்களும் தாங்கள் எங்கும் நிலைகொள்ளாமல், எல்லோரிடமும் அவர்களுக்கென்று கவனம் அளித்து, ஓரிரு வார்த்தைகள் பேசி, புதியவர்களிடம் உரையாடி, கையெழுத்திட்டு, சிரித்து மகிழ்ந்து உவகையுடன் ஓடிக்கொண்டே இருந்தீர்கள். செயல்படுதலை யோகமாக வலியுறுத்தும் நீங்கள் சிலகணங்கள் இளையயாதவர் போல தோன்றினீர்கள்.
காளிபிரசாத் நிகழ்வில் நான் மொழிபெயர்ப்பு சார்ந்த கேள்வியெழுப்பிய புகைப்படத்தை தங்கள் தளத்தில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி. காண்பவரிடமெல்லாம் பகிர்ந்து கொண்டேன்.
அரங்கில் உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. என் நண்பன் சுரேஷ் சொல்வது போல் இந்த ‘இலக்கியபணி’க்காகவே இனிவரும் விழாக்களில் பங்கெடுப்பது என உறுதிபூண்டோம்.
விஷ்ணுபுரம் அமைப்பின் அனைவருக்கும் நன்றிகள் பல.
2021ம் ஆண்டின் இறுதி நிகழ்வை குருவின் ஆசியோடு நிறைவான அனுபவங்களின் நிரையாக அளித்தமைக்கு இறைக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள், வணக்கங்கள்.
செல்வேந்திரன்
ஓசூர்
( செல்வேந்திரன் ஓசூரில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்கும் அங்காடியை நடத்துகிறார். selventhiran.elangovan@gmail.com)
January 23, 2022
அஞ்சலி:நாகசாமி
 தொல்லியலாளர் முனைவர் நாகசாமி (1930-2022) அவர்களின் மறைவு குறித்து நேற்று அவருடைய உறவினரான நண்பர் ஆர்வி கூறியிருந்தார். வெறுமே ஓர் அஞ்சலிக் குறிப்புக்குப் பதிலாக அவருடைய பங்களிப்பை தொகுத்து ஒரு குறிப்பாக எழுதலாமென எண்ணினேன். அது தாமதம் ஆகவே இக்குறிப்பை எழுதுகிறேன். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொல்லியலையும், நாகசாமியையும் பின்தொடர்பவன் நான். ஆனால் தொல்லியளானனோ வரலாற்றாய்வாளனோ அல்ல. பண்பாட்டு ஆர்வம் கொண்ட எழுத்தாளன். அந்த நிலையில் எனக்கு அவரைப்பற்றிச் சில கருத்துக்களும் மதிப்பீடுகளும் உள்ளன.
தொல்லியலாளர் முனைவர் நாகசாமி (1930-2022) அவர்களின் மறைவு குறித்து நேற்று அவருடைய உறவினரான நண்பர் ஆர்வி கூறியிருந்தார். வெறுமே ஓர் அஞ்சலிக் குறிப்புக்குப் பதிலாக அவருடைய பங்களிப்பை தொகுத்து ஒரு குறிப்பாக எழுதலாமென எண்ணினேன். அது தாமதம் ஆகவே இக்குறிப்பை எழுதுகிறேன். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொல்லியலையும், நாகசாமியையும் பின்தொடர்பவன் நான். ஆனால் தொல்லியளானனோ வரலாற்றாய்வாளனோ அல்ல. பண்பாட்டு ஆர்வம் கொண்ட எழுத்தாளன். அந்த நிலையில் எனக்கு அவரைப்பற்றிச் சில கருத்துக்களும் மதிப்பீடுகளும் உள்ளன.
நாகசாமியைப் பற்றி தொல்லியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் பெரும்பாலும் சொல்லும் மதிப்பீடு அவர் அத்துறையில் ஒரு முன்னோடி, திட்டவட்டமான முறைமைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர், ஆகவே அறிவியல்பூர்வமான தொல்லியல் தரவுகளை திரட்டி முறையான அட்டவணைப்படுத்துதலைச் செய்தவர், தன் முறைமைகளை கற்பித்து ஒரு மாணவர் வரிசையை உருவாக்கியவர் என்பது. கூடவே அவர் வரலாற்றாய்வில் கடுமையான முன்முடிவுகள் கொண்டவர், அவை அவருடைய சொந்தச் சாதி, மதம் சார்ந்தவை. ஆகவே நாகசாமி ஒரு தொல்லியலாளர் என கருத்தில்கொள்ளத் தக்கவர், ஒரு வரலாற்றாசிரியராக நடுநிலையானவரோ முறைமைசார்ந்த நோக்கு கொண்டவரோ அல்ல.
1996 ல் நான் நாகசாமியை முதலில் சந்தித்தேன். 1998ல் இன்னொரு முறை. இரு சந்திப்புகளிலும் எனக்கு ஆர்வமும் பயிற்சியும் உடைய குமரிமாவட்ட (தென்திருவிதாங்கூர்) தொல்லியல் குறித்தும் அவற்றின் வாசிப்பு குறித்தும் சில ஐயங்களைக் கேட்டேன். அவர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட கோணம் சார்ந்த, ஆதாரமில்லாத நிலைபாட்டையே தன் கருத்தாகச் சொன்னார். திருவிதாங்கூர் அரசரின் குருபீடம் காஞ்சி மடம்தான் என்று சொன்னதை நான் மறுத்தேன். அவர் என்னை ஏளனமாக ஒதுக்கி மேலே பேசினார். ஆனால் அது மிக அபத்தமான ஒரு திரிபுக்கருத்து. அத்தகைய பல கருத்துக்கள் அவரிடமிருந்தன. அவர் நேர்ப்பேச்சில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியின் கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர் முடிந்த முடிவாகக் கொள்ளத்தக்கவை என்று சாதாரணமாகவே சொல்வார்.
நாகசாமி 1966 முதல் 1988 வரை தமிழகத் தொல்லியல் துறையில் நிபுணராகப் பணியாற்றினார். அவருடைய முதன்மையான கொடை என்பது தொல்லியல் சான்றுகளை இந்தியவரலாறு – பண்பாடு சார்ந்து நுண்மையான பகுப்புகளுடன் அட்டவணையிடுவதற்கு ஒரு முறைமையை உருவாக்கியது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
நாகசாமியின் பங்களிப்பை புரிந்துகொள்ள இன்றைய பொதுவாசகர் ஓர் இடத்தை தனக்காக வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியவியலில் ஈடுபடும் இரு தரப்பினர் மிகப்பெரிய திரிபுகளை தொடர்ந்து, மிகப்பெரிய வலைப்பின்னல்போல உருவாக்கி வருகிறார்கள். இனமேட்டிமைநோக்கு கொண்ட ஐரோப்பியர் மற்றும் இடதுசாரிகள். இனமேட்டிமை கொண்டவர்கள் அவர்கள் உருவாக்கியிருக்கும் ஒரு ஆதிக்க- அடிமைப்படுத்தல் கோட்பாட்டுச் சட்டகத்திற்கு ஏற்ப அனைத்தையும் கொண்டுசென்று சேர்ப்பார்கள். இடதுசாரிகள் தங்கள் அரசியல்நிலைபாட்டுக்கு ஏற்ப வரலாற்றுக் கோணத்தை அமைப்பார்கள். இடதுசாரிக் கோணத்தில் வரலாற்றாய்வென்பதே ஆதிக்கம் செலுத்தியவர்கள் என சிலரை கண்டடைந்து அவர்களை எதிர்மறையாகச் சித்தரிப்பதுதான். அது அவர்களின் நிகழ்கால அரசியலியக்கத்துக்கு உதவுவதாகவும் இருக்கவேண்டும்.
இவ்விரு சாராரும் விரிவான தொல்லியல் ஆய்வுகள், தர்க்கமுறைகளுடன் பேசுபவர்கள். சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பின்னணி ஆதரவு கொண்டவர்கள். அவர்களுக்கு எதிராக தெளிவான தரவுகளுடன், முறைமையுடன் பேசும் ஆய்வாளர்கள் இந்தியச்சூழலில் அரிதினும் அரியவர்கள். அந்த நிரையைச் சேர்ந்தவர் நாகசாமி. ஆனால் அந்தத் தரப்பில் தங்கள் சாதி, மதநோக்குகளை வரலாற்றாய்வில் கலந்து முடிவுகளை நோக்கிச் செல்லக்கூடியவர்கள் மிகுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நாகசாமி.
இன்றைய சூழலில் ஒரு பொதுவாசகர் நம் வரலாறுமேல் ஏற்றப்படும் இனவாத, கொள்கைவாதத் திரிபுகளை அடையாளம் காணவும் எதிர்க்கவும் வேண்டும். மறுபக்கம் அந்த எதிர்நிலையை ஒற்றைப்படையான ஒரு அதிகாரநிலைபாடாக, அமைப்புச்செயல்பாடாக ஆக்கிக்கொள்ளலாகாது. அவ்வண்ணம் ஒற்றைநிலைபாடு கொள்வதென்பது வரலாற்றாய்வு என்னும் சுதந்திரமான அறிவுத்தேடலுக்கே எதிரானது. மேலும் இன்றைய வரலாறென்பது ஒத்திசைவுள்ள ஒற்றைச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதல்ல. நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய அரசியல், சமூகவியல் கொள்கைகளை கடந்தகாலத்தில் கண்டடைவதும் அல்ல. இன்றைய வரலாற்றாய்வு என்பது ’வரலாறுகளை’ எழுதுவதுதான். விரிந்த களத்தில் ஒன்றோடொன்று முரண்பட்டு செயல்படும் வெவ்வேறு விசைகளாக வரலாற்றை பார்ப்பது. வரலாற்றை நினைவுகூர்தல் எழுதுதல் ஆகிய செயல்களையே பன்மையாக, முரணியக்கம் வழியாக செயல்படும் பலவகையான மொழிபுகளாகப் (Narration) பார்ப்பது ஆகியவையே இன்றைய வரலாற்றாய்வின் வழிகள்.
அந்த இடத்தில் நின்றுகொண்டு மதிப்பிடுகையில் தேர்ந்த தொல்லியலாளர் என்ற அளவில் நாகசாமி மதிப்பிற்குரியவர். பயன்படுபவர். அவருக்கு அஞ்சலி
சடம் [சிறுகதை] ஜெயமோகன்
   
”சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள்.
சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?”
“அவரு மஹான்” என்றார் தரகு நாராயாணன். “சாமி தத்துவம் சொல்லுது”
“மயிரு தத்துவம்… அள்ளையிலே ஒரு சவுட்டு சவுட்டினா அண்டி உருண்டு அண்ணாக்கிலே கேறி இருக்கும்… அப்ப பேச்ச நிப்பாட்டுவான்… ஏல நாம கேக்குத கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியுமாண்ணு கேளு”
“சாமி, போலீஸ் ஏமான் என்ன கேக்குதாருண்ணா, இங்கால ஒரு குட்டி வந்துதுல்லா? வலிய வீட்டிலே குட்டியாக்கும். தலைக்கு சுகமில்லை… அத எங்கிணயாம் கண்டியளா?” என்றார் நாராயணன்.
“சிஜ்ஜடம்…” என்றார் சாமியார். சுட்டுவிரலை வான்நோக்கி நீட்டி, மிக ஆழமாக எதையோ சொல்வதுபோல ”சிஜ்ஜடம்!” என்றார்.
“லே இவனாக்கும் அசல் அக்கூஸ்டு. இந்த தாயளிய கஸ்டடியிலே எடுத்து கொஸ்டின் பண்ணினா மணிமணியாட்டு சொல்லுவான்….லே எந்திரிலே தாயளி…” என்று சுடலைப் பிள்ளை கையை ஓங்கினார்.
“அய்யோ அவரு மஹானாக்கும்!” என்றார் நாராயணன்.
“அப்ப அவன் சொல்லுகது என்னான்னு கேட்டுச் சொல்லுடே… எளவு என்னமோ மந்திரம்லா சொல்லுகான். அவனுக்க அம்மைக்க அரணாக்கயிறு கண்டவனாக்கும் நான்… தாயளி, வெளையாடுதானா?”
சாமியாரைப் போலவே அரைக்கிறுக்கனாக தோன்றிய இன்னொருவன் குடிசைக்கு வெளியே நின்றிருந்தான். அவன்தான் சாமியாருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்பவன். தன்னை பாந்தன் என்று சொல்லிக்கொண்டான். வேறு பெயர் சொல்ல மறுத்தான். பாந்தன் என்றால் நடந்து அலைபவன் என்று பொருள் சொன்னான்.
குடிசைமுன் அவனைப் பார்த்ததுமே சுடலைப் பிள்ளை சொல்லிவிட்டார் “ரெண்டு பயக்களும் நல்ல கஞ்சாப் பார்ட்டியாக்கும். கண்ணப்பாத்தா தெரியாதா? குரங்குக்கு வாலு குமாரனுக்கு கோலுன்னு சொல்லுண்டுடே… நம்ம கோலுக்கு தெரியாத ஒண்ணுமில்ல. நாம ஆளு ஆருண்ணு நினைச்சே?”
நாராயணன் கை காட்டியதும் அவன் உள்ளே வந்தான்.
“இந்த நாயிமகன் என்னலே சொல்லுதான்?”
“சாமி அதை மட்டும்தான் சொல்லும்… சிஜ்ஜடம்…” என்றான் அவன்.
“அது தெரியுது. அந்தக் கோப்புக்கு என்ன அர்த்தம்? அதச்சொல்லு” அவனைக் கூர்ந்து பார்த்து “புதையலு கிதையலு ஒளிச்சு வச்சிருக்கானாடே இவன்?”
“சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்… ரெண்டும் சேந்தா சிஜ்ஜடம்னு ஒரே சொல்லு. சித்னா நம்ம சித்தம். அதாவது நமக்கு உள்ள இருக்கப்பட்டது. ஜடம்னா வெளியே இருக்கப்பட்ட இந்த அன்னமய லோகம்… அதுக்க சமன்வயமாக்கும் இந்த உலகம்”
“மயிரு உலகம்… போரும்டே… டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லச் சொல்லு. இல்லேன்னா ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போயி அவனுக்க ரெண்டு அண்டியையும் சவிட்டிப் பிதுக்கி சட்டினியாட்டு எடுப்பேன்ன்னு சொல்லு”
“சாமி பேசமாட்டாரு”
“அலறுவாண்டே…. அலறி காலைப்பிடிப்பான்… பாக்குதியா?”
அவன் பேசாமல் நின்றான்.
நாராயணன் “நான் கேக்குதேன்” என்றார். “அதாவது, இங்க ராத்திரி ஒரு சின்னக்குட்டி வந்ததா? ஒரு பதினாறு பதினேளு வயசு இருக்கும்… பேச்சிப்பாறை சங்சனிலே ராத்திரி ஒம்பது மணிக்கு பஸ்ஸிறங்கியிருக்கா… எஞ்சீனியருக்க மகளாக்கும்னு நினைச்சுப்போட்டாக. அவ எங்க போனாண்ணு இப்ப தெரியல்ல. அவ டாக்டர் அனந்தன் மேனோனுக்க மகளாக்கும். கொஞ்சம் வட்டு எளகின கேஸு…இப்பம் அவள கொண்டுவான்னு எங்க தாலிய அறுக்கிறாங்க”
”அதுக்கு சாமிகிட்ட கேட்டு பிரயோஜனமில்ல”
“தாயளி, இவன் மட்டும்லாடே இந்தக் காட்டிலே இப்டி குடிலும் கெட்டி இருக்கான்…வேற இங்க காட்டுலே நாய்நரிகள் கிட்ட கேக்கணுமோ?” என்றார் சுடலைப் பிள்ளை.
”சாமி எதையும் பாக்குறதில்ல”
“பின்ன? பின்ன ஆருடே இங்க பாக்குதது?”
“தடம்பிடிச்சு பாருங்க… அங்க பஸ் ஸ்டாப்பிலே எறங்கினா போறதுக்கு மூணு வளிதான். ஒண்ணு அப்டியே மேலேறிப்போனா அணைக்கெட்டு வருது… இன்னொண்ணு வலத்தாலே திரும்பி நேரா கோர்ட்டர்ஸு. மூணாம் வளி இங்க வந்து சேருது…”
“அங்கல்லாம் கேட்டாச்சு” என்றார் சுடலைப்பிள்ளை.
“அப்ப இந்த வளியே காட்டுக்குள்ள போற மட்டும் போயி பாருங்க… இப்ப மழை இல்ல. அதனாலே கால்த்தடம் இருக்காது. ஆனா வழியிலே அங்கங்க பூழி மண்ணு உண்டு… அங்க கால்த்தடம் இருக்கான்னு பாருங்க… ஓடையிலே எறங்கி நின்னா கால்தடம் தெரியும். அதையும் பாருங்க. அப்டியே போங்க”
“நீயும் வாடே”
“இல்ல, நான் வாறதில்ல”
“வாறதில்லியா? டேய் ஆருகிட்ட பேசுதே நீ? இது போலீஸாக்கும்… மூஞ்சிப்புல்ல கையால பறிச்சு எடுத்திருவேன்” சுடலைப் பிள்ளை கூவியபடி எழுந்தார். ”அவனும் அவனுக்க குடிலும்…” என்று அங்கிருந்த சிறிய கல்விளக்கை உதைக்க காலை எடுத்தார்.
“டேய், வெளியே போடா” என்றபடி பாந்தன் கையை ஓங்கிக்கொண்டு அருகே வந்தான். முகம் சிவந்து கண்கள் இடுங்கியிருந்தன. உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. “போ வெளியே… அழிச்சிருவேன்”
“டேய்!” என்றபோது சுடலைப் பிள்ளையின் குரல் நடுங்கியது.
“ம்” என்றான் பாந்தன்.
நாராயணன் “வாங்க பிள்ளைவாள்…” என்று சுடலைப் பிள்ளை கையை பிடித்து வெளியே இழுத்துவந்தார்.
“என்னலே சொல்லுதான்?” என்று சுடலைப் பிள்ளை கலக்கமாக கேட்டார்.
“என்ன எளவோ, நாம என்ன கண்டோம்? பேசாம போயிருவோம்”
“நீ சொன்னதனாலே வாறேன்” என்று சட்டையை இழுத்து விட்டபடி, வியர்வை வழிய, மூச்சு வாங்க, சுடலைப் பிள்ளை நடந்தார். “இது நம்ம ஜூரிஸ்டிக்சன் இல்ல… இல்லேன்னா இவனுக்கு இவன் அம்மை குடுத்த அம்மிஞ்ஞப்பால பிளிஞ்சு வெளிய எடுத்திருப்பேன்… ஏங்கிட்ட வெளையாடுதான்… சூறத்தாயளி”
“நாம பொடிநடையா அப்டியே போயி பாப்பம் பிள்ளைவாள்”
“உனக்கு காடு தெரியுமாடே?”
“தெரிஞ்சவரை போவம்…”
“பிறவு?”
“பிள்ளைவாள், ஒரு கணக்குண்டு… அதுக்குமேலே காட்டுக்குள்ள ஒரு குட்டி போய்ட்டா பிறகு அது நம்ம கணக்குல்ல. கேஸை அப்டியே ஃபாரஸ்டுக்காரனுக கணக்கிலே தள்ளிவிட்டிருவோம்… நமக்கு அது காட்டுக்குள்ள போனதுக்கான தடம் வேணும்…இல்லியா?”
“அது நியாயம்” என்றார் சுடலைப் பிள்ளை. ஒரு பீடி எடுத்து பற்றவைத்தபடி “அப்டியே பாத்துட்டுப் போவம்… ஃபாரஸ்டு எல்கைக்குள்ள ஒரு கால்தடம் கிட்டினாப்போரும்டே, திரும்பிருவோம்”
”ஒரு பீடி குடுங்க”
நாராயணனும் பீடி பற்றவைத்துக்கொண்டார்.
“தண்ணி இருக்காடே?”
“இருக்கு. தேவைன்னா ஓடையிலே தண்ணி பிடிச்சுக்கலாம்… திங்கிறதுக்கு வேண்டியதும் காட்டுக்குள்ளே உண்டு… நல்ல ஏத்தன் வாழைப்பழமும் காயும் உண்டு… காய்னா சுட்டு திங்கணும். மரசீனியும் காய்ச்சிலும் உண்டு… பிள்ளைவாள், ஒரு மாசம் ஒருத்தனுக்க தயவும் இல்லாம இந்தக் காட்டிலே ஜீவிக்கலாம்”
” நீ இருந்திருக்கியோ?”
“நான் இருந்ததில்ல. நம்ம அம்மாவன் ஒருத்தரு மாசக்கணக்கிலே உள்ள இருப்பாரு”
“ஆனை உண்டுல்லா?”
“ஆனை அதுக்க சோலிய பாக்குது…”
“ஏம்லே பீடி வாசத்துக்கு ஆனை வருமா?”
“பிள்ளைவாள், பீடின்னா அக்கினியில்லா?”
“ஆமா… குளிருக்கு பீடியாக்கும்டே தொணை… பீடி இல்லேன்னா நான் எப்டி இந்த உத்தியோகம் பாத்திருப்பேன். எம்பிடு எடங்கள், எம்பிடு பிரச்சினைகள். நாம செத்தா நம்ம சமாதியிலே பீடிதாண்டே வைக்கணும்”
“சாவுறதப்பத்தி என்ன பேச்சு?”
காடு அடர்த்தியில்லாமல், உயரமற்ற செடிகளாலும் ஆங்காங்கே நின்ற உயரமான அயனி, இலுப்பை, காட்டுநாவல் மரங்களாலும் ஆனதாக இருந்தது. நடுவே அந்த பாதை ஒரு பெரிய சிவப்பு கொடிபோல கிடந்தது.
“பாதையிலே கிளை ஒண்ணும் பிரியல்ல. நல்ல வேளை” என்றார் நாராயணன்.
“காலடித்தடம் தெரியுதாடே?”
“காலடித்தடம் விளுந்திருந்தாலும் அதுக்க மேலே காத்து அடிச்சிருக்கும். பல மிருகங்கள் நடந்திருக்கும்…”
“அதென்னதுடே?”
“கொரங்கு…கருங்கொரங்கு”
“சவம், நான் கரடீன்னுல்லா நினைச்சுப்பிட்டேன்… கொரங்குக்கு என்னடே அம்பிடு அதுப்பு?”
“அதுக்க எடம்லா?”
“நம்மள கொரங்கா நினைக்குமோ?”
“நினைக்கும்போல. பொம்புளையக் கண்டா கத்தி உறையிலே இருந்து வெளியே வரும்லா?”
“ஏம்டே, இந்த குட்டிய கொரங்கு என்னமாம் செய்திருக்க வாய்ப்புண்டா?”
“செய்தாலும் செய்யும்…”
சட்டென்று சுடலைப் பிள்ளை சிரித்தார். “அந்த மேனோன் குட்டிக்கு கொரங்குக்குட்டி பிறந்தா நல்ல சேலாட்டு இருக்கும் இல்லவே?”
நாராயணன் “ஹிஹிஹி” என்று ஓசையிட்டு சிரித்தார்.
“இந்தக் காட்டிலே நல்ல குட்டிகள் கிட்டுமாடே?”
“காணிக்காரக் குட்டிகளா? அவனுக நம்ம அண்டிய வெட்டி கொண்டுபோயி சுட்டு திம்பானுக”
“பைசா குடுக்கலாம்டே”
“பைசா அவனுக்கு எதுக்கு?”
“நான் போற எடத்திலே ஒரு மாதிரி சுமாரான சரக்கு இருந்தாக்கூட கைய வைக்காம வந்ததில்ல பாத்துக்க. பாதிவேல மிரட்டல் உருட்டலிலேயே நடந்துபோடும்…”
“பைசா குடுக்கணும்லா?”
“பைசாவா? போலீசுகாரனா? நல்ல கத…ஹெஹெஹெ”
”எப்டி, ஒரு அம்பது தேறுமா சர்வீஸிலே?”
“அம்பதா? டேய், ரெண்டாயிரம் கொறையாது”
“அம்மாடி!”
“பின்ன? இது சர்க்கார் சர்வீஸிலே இருக்கப்பட்ட நயம் லாத்தியில்லா?”
“தங்கத்திலே பூண் போடணும்”
சுடலைப் பிள்ளை உரக்கச் சிரித்தார். “நான் சர்வீஸிலே சேந்த மூணாம் மாசமாக்கும் முதல் குட்டி…நல்ல பாவப்பட்ட குட்டி. பதினாறு வயசு இருக்கும். அப்பன் சாராயம் காய்ச்சுத் ஆளு. நாங்க போனப்ப காட்டுக்குள்ள ஓடிப்போட்டான். அம்மைக்காரிக்கு தீனம்… அது குடிலுக்குள்ள நடுங்கி அழுதுகிட்டு நிக்குது. ஏட்டு கிட்டப்பன் உள்ள போயிட்டு வந்து எங்கிட்ட நீயும் வேணுமானா போடேன்னான்”
“ஓகோ” என்று நாராயணன் சொன்னார்.
“உள்ள அது அரைச்சவமாட்டு கிடக்குது. பாயில நல்ல ரெத்தம் வேற… கிட்டப்பன் ஆளு நல்ல எருமை மாதிரியாக்கும். அவன் அடிச்ச அடியிலே அப்டியே குட்டிக்குப் போதம் போயிட்டுது. நான் போனப்ப முளிச்சுக்கிட்டு பயந்து அலறுது… எந்திரிச்சு ஓடப்பாத்துது. பிடிச்சு போட்டு ஏறிட்டேன்… அது ஒரு அனுபவம்டே… அவ அலறிகிட்டே இருந்தா. அறுக்கப்போற கோளி சிறகடிச்சு கத்துறது மாதிரி…”
“அய்யோ!” என்றபடி நாராயணன் நின்று விட்டார். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.
“அப்ப ஒரு நாலஞ்சு நாளு அதை நினைக்கிறப்ப ஒருமாதிரி இருந்தது. பிறவு பழகிப்போச்சு. பிறவு அது ஒரு சொகமா ஆச்சுடே… குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம். சும்மா செத்த சவம் மாதிரி கிடக்குத பொட்டைகளை வச்சு என்ன செய்ய?”
“அடிப்பியளோ?”
“கெட்டினவள்னா அடிச்சாத்தானே எளகும்? மத்ததுக அதுகளே பயந்துகிடும்… இப்ப பின்ன நாலஞ்சு வருசமா என் பெஞ்சாதிக்கு உடம்பு செரியில்ல. வாதம் உண்டு…அதனாலே சவத்த நான் சீண்டுறதில்ல… என்னைய கண்டா அவளும் பாதிசெத்துப்போனதுமாதிரி கிடப்பா…” சுடலைப் பிள்ளை இன்னொரு பீடியை பற்றவைத்துக் கொண்டார்.
“பீடி தீந்துபோயிடப்பிடாது” என்றார் நாராயணன்.
“இந்தக் குட்டி எப்டிடே, நல்ல சரக்கா? நீ கண்டிருக்கியா?”
“நான் கண்டிட்டுண்டு. மேனோனுக்க குலதெய்வம் இங்க எங்கியோ இருக்கு. வனதுர்க்கை. அங்க குடும்பத்தோட ஆண்டோடாண்டு வருவாக. வேண்டிய ஏற்பாடை நான் செய்யணும். முட்டன் கறுப்பு ஆடு பலி குடுக்கணும்… கறுப்பாடு தேடி பிடிக்கிறது எளுப்பம் இல்லை பாத்துக்கிடும். ஒரு சின்ன வெள்ளையாவது இல்லாத ஆடுக்கு நாயா அலையணும். ஆனா ஒண்ணு, மேனோன்மாரு சொன்ன விலை தருவாக”
”சவம், இங்க காட்டுக்குள்ள என்ன எளவுக்கு வருது அது?”
“இங்க வந்திருக்கான்னே தெரியல்ல…ஒரு காலடித்தடம்கூட காணுமே”
“பின்ன எப்டி, பறந்திருக்குமோ?”
“மரத்துமேலே போயிருக்குமோ? குரங்கு ஜென்மமாக்கும்”
பீடியை ஆழ இழுத்தபடி சுடலைப் பிள்ளை குனிந்து நடந்தார். காடு செறிவாகிக் கொண்டே வந்தது. மரங்கள் மேலே எழுந்து கிளைகள் பின்னி, தழைகள் அடர்ந்து நிழலை இருட்டளவுக்கு கொண்டுசென்றன.
“அது என்னவே சத்தம்?”
“கொரங்குக…காட்டுக்குள்ள ஆளு வந்திருக்கம்ல?”
“அதுக்கு அதுகளுக்கு என்ன?”
“மத்த சீவராசிகளுக்கு சங்கதிய தெரியப்படுத்தணும்ல?”
“செண்ட்டிரி டூட்டி பாக்குதோ?” என்றார் சுடலைப் பிள்ளை “எளவு, சிரட்டைய வச்சு தட்டின மாதிரில்ல சவுண்டு விடுது”
“ஆனா நமக்கு நல்லதாக்கும். புலியோ ஆனையோ வருதுண்ணா சொல்லிப்போடும்”
“இங்க புலி உண்டா?”
“எல்லா மயிரும் உண்டு…காடுல்லா?”
”நல்ல நெருக்கமான காடுடே…இவ்ளவு சத்தம் இருந்தாலும் அப்டி ஒரு அமைதி. பாத்தியா?”
“அதுபின்ன காடுல்லா? காடு தபஸ் செய்யுது. அதனாலேதான் தபஸ் செய்யுதவனும் காட்டுக்குள்ள வாறான்”
“அந்த ரெண்டு கஞ்சாக்குடிக்கிகளும் தபஸ் செய்யுதானுகளாடே?”
“ஆரு கண்டா?”
“அவன் கண்ணக்கண்டா பயந்து வருதுடே… அதில ஒரு கிறுக்கு தெரியுது பாத்துக்க. கிறுக்கனுக்கு இடமா வலமா… கொரவளய கடிச்சுப்புட்டான்னா? என் சங்கு நடுங்கிப்போட்டுது பாத்துக்க”
“நமக்கு என்னத்துக்கு வம்பு?” என்றார் நாராயணன்.
அதன்பின்னர் அவர்கள் பேசவில்லை. காடு மேலும் மேலும் அடர்ந்து சரிந்து இறங்கிக்கொண்டே போயிற்று. பாதையில் இருந்த பெரிய வேர்கள் படிகள் போலிருந்தன.
“ஒரு ரெண்டு மணிக்கூர் நடந்திருப்போமாடே?”
“இருக்கும்”
“ஒண்ணும் காணுமே…திரும்பிருவோமா?”
“அதாக்கும் நல்லது…”
”ஒரு ஃபர்லாங் நடந்து பாப்பம்…வந்தது வந்தாச்சு”
மேலும் நடந்தபோது சட்டென்று சுடலைப் பிள்ளை பார்த்துவிட்டார். “வேய் தரகு…அந்தாலே பாரும்வே”
“எனக்க சாஸ்தாவே!” என்றார் நாராயணன்.
அங்கே பெரிய பாறைக்கு கீழே இன்னொரு பாறைமேல் அந்தப்பெண் கிடந்தாள். சிவப்புச் சுடிதார் போட்டிருந்தாள்.
“உறங்குதாளோ?” என்றார் நாராயணன்.
“ஆளு செத்தாச்சு… எனக்கு பாத்தாலே தெரியும். நான் பாக்காத பொணமா?”
அவர்கள் பாறையின் அருகே வேர்கள் வழியாக தொற்றி, கொடிகளை பற்றிக்கொண்டு மெல்ல இறங்கினார்கள்.
“பாத்து, பாறையிலே வளுக்கினா கபால மோச்சமாக்கும்”
“ரெத்தம் காணுமே?”
“மண்டையிலே அடிபட்டிருக்கும்டே”
அவர்கள் அந்த தட்டையான பாறையில் இறங்கினார்கள். மேலே அவர்கள் நின்றிருந்த பாறை உச்சி உயரமாக தெரிந்தது.
“நல்ல உசரம்” என்றார் நாராயணன் மேலே பார்த்தபின்.
கீழே ஓடை சலசலத்துச் சென்றது. அதன் இரு விளிம்புகளிலும் தழைத்த நாணல் காற்றில் அலைபாய்ந்தது.
“தண்ணி குடிக்க வந்திருக்கா…விளுந்துபோட்டா”
“பாரும்வே” என்றார் நாராயணன் “நமக்கு அத தொட ஏலு இல்ல”
சுடலைப் பிள்ளை குந்தி அமர்ந்து அவள் முகத்தில் கைவைத்துப் பார்த்தார். கன்னத்தை மெல்ல தட்டி பார்த்தார். மூச்சும் உயிர்ச்சூடும் இல்லை. இதயத்துடிப்பு இல்லை.
தலையை தூக்கி பின்பக்கம் பார்த்தார். மண்டையோடு உடைந்து குழைந்து உள்ளே அதுங்கியிருந்தது. மூக்கில் சிறிது ரத்தம் வந்து உறைந்து கருஞ்சிவப்பாக துளித்திருந்தது.
“விளுந்ததுமே உயிரு போயிருக்கு. ஆனா மூணுமணிநேரம் ஆகல்ல. சூடு போயாச்சு, ஆனா சதை இறுக ஆரம்பிக்கல்ல” என்றார் சுடலைப் பிள்ளை.
“பாவம், நல்ல குட்டி. சிரிச்சுகிட்டே இருக்கும்”
சுடலைப் பிள்ளை எழுந்து சுற்றிலும் பார்த்தார். காட்டு ஓடையில் நாணல்களின் அசைவு வெள்ளம் அலைகொள்வதுபோலிருந்தது. இலைசெறிந்த மரத்தழைப்பினூடாக பெரிய அருவி விழுவது போல காற்று ஓடும் சத்தம்.
“எப்டியானாலும் கேஸு முடிஞ்சாச்சு. நமக்கென்னவே, காணமப்போனவ உசிரோட கிடைச்சாலும் பிணமாக் கிடைச்சாலும் நமக்கு ஒண்ணுதான்…” என்ற சுடலைப் பிள்ளை மீண்டும் அவளைப் பார்த்து “நல்ல அளகுபோல குட்டி. சினிமா ஸ்டார் கணக்கால்ல இருக்கா… என்ன நெறம், என்ன முடி… மூக்கும் உதடும் செதுக்கின மாதிரி இருக்குடே”
“இப்ப என்ன செய்ய?”
“பிறைவேட் பிராப்பர்ட்டின்னா ஓனர பிடிச்சு மெரட்டி நாலஞ்சு லெச்சம் தேத்திப்பிடலாம். இது ஃபாரஸ்டு”
“நாம இப்ப என்ன செய்ய?” என்றார் நாராயணன் எரிச்சலுடன்.
“ஆமா, நாம நம்ம சோலிகள பாப்பம்” என்றார் சுடலைப் பிள்ளை தன் நோட்டு புத்தகத்தை எடுத்தார். அதில் இருந்த சிறிய பேனாவை எடுத்ததும் அவருக்கு குழப்பம் வந்தது. திரும்பி நாராயணனை பார்த்தார்.
“நான் இங்கதான் இருக்கணும். இங்க நாயிநரி வாற எடம். பாடிய போட்டுட்டு போகமுடியாது. உம்மை உக்கார வைக்கவும் முடியாது”
“ஆமா”
“நீரு கெளம்பிப்போயி சங்சனிலே இருந்து ஸ்டேசனுக்கு போன் செய்யும்… போலீஸு வந்துதான் பாடிய கொண்டுபோகணும்… போஸ்ட்மார்ட்டம், ஸ்பாட் வெரிபிகேசன், சடங்கு சாங்கியம்னு ஆயிரம் இருக்கு. நான் இங்க இருந்துகிடுதேன்”
“சரி, நான் கெளம்புறேன்”
“இரும்வே..நான் ஒரு குறிப்பு தாறேன். அதை அப்டியே இன்ஸ்பெக்டர்கிட்ட படிச்சு காட்டும்… “
“செரி”
“இங்க ராத்திரி இருக்க முடியாது. போலீஸு அந்திக்குள்ள வந்தாகணும் கேட்டுக்கிடும்…”
“ஆமா, ராத்திரியானா நாயிநரி வந்திரும்”
“போய்ட்டு சீக்கிரம் வாரும்…”
“செரி”
குறிப்பை அவர் எழுதித்தர அதை வாங்கிக்கொண்டு நாராயணன் மேலேறிச் சென்றார். அவர் செல்வதைப் பார்த்தபின் ஒரு சிறுபாறையில் அமர்ந்தார். தொப்பியை கழற்றி முழங்கால் மடிப்பில் மாட்டி வைத்தபின் பிணத்தை கூர்ந்து பார்த்தார். “நல்ல பக்கா குட்டி” என்று முனகிக்கொண்டு காட்டை பார்த்தார்.
எத்தனை நேரமாகுமென தெரியவில்லை. எழுந்து நின்று சோம்பல் முறித்தபோது முழுமையாக முதல்குறிப்பை எழுதிவிடலாம் என்று தோன்றியது. வெயில் சீக்கிரமே மறையலாம்.
குறிப்பேட்டை எடுத்து அந்த இடத்தை வரைய ஆரம்பித்தார். அதன்பின் பிணத்தைச் சுற்றிவந்து ஒவ்வொரு தகவலாக குறித்தார். பிணம் தூங்குவதுபோலவே கிடந்தது.
“நல்ல குடும்பத்து ஐட்டமாக்கும்…உள்ளங்காலு பட்டுமாதிரி வெள்ளையா இருக்கு” என்றார்.
விரல்களில் சிவப்பு நகச்சாயம். ”கிளிமூக்கு மாதிரில்லா இருக்கு”. கைகளிலும் சிவப்பு நகச்சாயம். விரல்கள் தளிர்கள் போலிருந்தன. முகத்தில் ஒரே ஒரு சிவப்புப் பரு. சிவந்த சிறிய உதடுகள் உலர்ந்து, மெல்லிய சுருக்கங்களுடன், சிவப்பு பாலிதீன் போல தெரிந்தன. அவற்றின் இடைவெளியில் உப்புப்பரல்போல தெளிந்த வெண்ணிறத்தில் இரண்டு பற்களின் நுனிகள்.
மூக்குக்கு கீழே மெல்லிய மயிர்ப்பரப்பு இருந்தது. அவர் அவள் காதுகளின் அருகே மென்மயிர் கீழிறங்கியிருப்பதை கண்டார். ஒரு கணத்தில் அவர் உடலை கற்பனை செய்துவிட்டார்.
குந்தி அமர்ந்து அவள் சுடிதாரின் மேல்சட்டையை தூக்கி தொப்புளையும் அடிவயிற்றையும் பார்த்தார். அவர் நினைத்ததைப்போலவே மென்மயிர்ப்பரவல். மயிர்ச் சுழிகள்.
அவருடைய நெஞ்சு படபடத்தது. எழுந்து அப்பால் சென்று நின்று ஓடையைப் பார்த்தார். மீண்டும் திரும்பி பிணத்தைப் பார்த்தார். அவர் உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. புட்டியை எடுத்து தண்ணீர் குடித்தார். மீண்டும் பாறையில் சென்று அமர்ந்தார்.
மீண்டும் எழுந்து பிணத்தருகே வந்து குனிந்து நடுங்கும் கைகளால் அதன் கீழாடையை பற்றி நாடாவை இழுத்து அவிழ்த்தார். அவள் பார்ப்பதுபோல உணர்ந்து நிமிர்ந்து முகத்தைப் பார்த்தார். பிணத்தின் முகம் மெழுகாலானதுபோல் இருந்தது. மூக்கின் சிறிய துளைகள். கீழுதட்டுக்கு அடியில் இருந்த சிறிய குழி. கழுத்தின் சிவந்த ரேகைகள்.
ஒரே இழுப்பில் கீழாடையை தாழ்த்தினார். அவர் அடிவயிற்று மென்மயிர் பரவலை ஏற்கனவே நன்கு பார்த்திருந்தார் என்று தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தபின் கீழாடையை நன்றாக இழுத்து கால்வழியாகக் கழற்றி அப்பாலிட்டார். உள்ளாடையையும் உருவினார்.அவள் பெண்குறியை பார்த்து விட்டு எழுந்துகொண்டார்.
கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. மீண்டும் தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. சட்டென்று ஒரு சீற்றம் வந்து அந்த உடலை காலால் உதைத்தார். அது அசைந்தது. தலை ஆடியபோது அது ஏதோ பேசமுனைந்தது போல் இருந்தது.
மேலேறிச் சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் உடனே திரும்பிப் பார்க்கத்தான் தோன்றியது “நாறச்சிறுக்கி” என்றபடி பிணத்தை பார்த்தார். அதன் முகத்தில் புன்னகை தோன்றியிருக்கிறதா?
மீண்டும் அருகே சென்று அதன் மேல்பகுதி ஆடையை கழற்றினார். உள்ளே இளஞ்சிவப்பு நிற பிரா. அதன் கொக்கியை தேடி கழற்றினார். உடல் சற்று உப்ப ஆரம்பித்திருந்தமையால் ஆடை இறுகி விலாவில் சிவப்பாக தடம் தெரிந்தது.
சிறிய பீங்கான் கிண்ணம்போன்ற முலைகள். இரு மச்சம் போல முலைக்காம்புகள். காம்பின் மொட்டுகள் மிகச்சிறிதாக உள்ளடங்கியிருந்தன.
“நாற முண்ட… சாவடிக்குதா” என்றார். முனகியபடி அப்பால் சென்று இன்னொரு பீடியை பற்றவைத்துக்கொண்டார். கைகள் நடுங்கியதில் தீப்பெட்டியைப் பற்றவைக்க முடியவில்லை.
புகையை இழுக்க முடியாமல் மூச்சு வாங்கியது. பீடியை வீசி விட்டு கமறி துப்பியபடி ஓடை நோக்கி இறங்கினார். இரண்டு பாறைகளில் தாவி இறங்கியதும் அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது. என்ன ஏது என உணர்வதற்குள் அவர் தாவி மேலேறி, வெறியுடன் தன் பூட்ஸ்களையும் ஆடைகளையும் களைந்து வீசிவிட்டு அவள் மேல் கவிந்தார்.
அவருக்குள் அவரே திகைப்புடன் விலகி நின்று அவர் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தார். ”நாற முண்ட, நாற முண்ட” என்று சொல்லிக்கொண்டே பசிவெறிகொண்ட விலங்கு வேட்டையின் உடலை உண்பதுபோல செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
சுற்றிநின்ற மரங்கள் எல்லாம் விரைப்படைந்தன. பாறைப்பரப்புகள் சருமம்போல் உயிர்பெற்றன. இலைகள் கண்ணிமைகள் என ஆயின.
சட்டென்று ஒரு முனகலோசையுடன் அவள் உடல் அசைவுகொண்டது. கைகள் அவரை வளைத்து இறுக்கிக் கொண்டன.
ஓலைச்சுவடி இணைய இதழ் 2022 ஜனவரி
அயோத்திதாசர் விவாதம் – கடிதம்
அயோத்திதாசர் இரு கேள்விகள் அயோத்திதாசர் மேலும்…
அன்புள்ள ஜெ,
அயோத்திதாசர் விவாதத்தில் உங்களுக்கு வந்த கடிதத்தில் ஒரு வரி.ஒவ்வொரு பகுதிக்கும் இடைநிலைச் சாதிக்குரிய வீரர்வடிவங்கள் வெறும் வாய்மொழி வரலாற்றில் இருந்து மட்டுமே உருவாக்கப்பட்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் அப்படியே வரலாறாக ஆக்கப்பட்டு மறுக்கமுடியாதபடி நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. ஆதாரங்கள் எங்கே என அவற்றைப்பற்றி எவரும் கேட்பதில்லை. இதுவரை அந்தந்தச் சாதியைச் சேர்ந்த எவரும் ஒரு சின்ன கேள்விகூட கேட்டு நான் பார்த்ததில்லை. இனிமேலாவது எவராவது பேசிப்பார்க்கட்டுமே.
மிக நேரடியான அடி இது. வாய்மொழி வரலாற்றைக்கொண்டு வரலாற்றை திரிக்கிறார்கள் என்று எகிறிக்குதித்த எவருமே வெறும் வாய்மொழி வரலாற்றைக்கொண்டு, எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லாமல் இவ்வளவு பெரிய சமகாலச் சாதிவரலாறுகளை உருவாக்கி கேள்விகேட்கவே முடியாதபடி நிலைநிறுத்தியிருப்பதை கண்டுகொள்ளவில்லை. நீங்கள் எழுதியதும் அப்படியே அயோத்திதாசர் விவாதத்தையும் ஏறக்கட்டிவிட்டார்கள். ஒருவர்கூட ஆமாம், அதற்கும் ஆதாரம் இல்லை, அதையும் ஏற்கமுடியாது என்று சொல்லவில்லை. சரி, வாய்மொழி வரலாறு மட்டும்தான் என்றால் அதையும் ஏற்கமாட்டோம் என்றோ உண்மை இருக்கிறதா என்று ஆராய்வோம் என்றோகூட ஒருகுரல், ஒரே ஒரு குரல்கூட வரவில்லை. அம்பேத்கரோ அயோத்திதாசரோ புத்தர் வரலாற்றில் ஒரு தொன்மத்தை எடுத்து ஆராய்ந்தால் ராப்பகலாகக் குதிப்பவர்கள் இந்தச் சாதிவரலாறுகளைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்கள்.எல்லாம் எப்படி அப்பட்டமாக இருக்கிறது என்பது ஆச்சரியம்தான்
அறிவழகன் கா
அன்புள்ள அறிவழகன்,
அயோத்திதாசர் அவர் காலகட்டத்து வாய்மொழி மரபுகளை ஒட்டி ஒரு சமாந்தர வரலாற்றைச் சொன்னார். அந்த சமாந்தர வரலாறு வாய்மொழியில் இருந்துகொண்டே இருக்கிறதென்பது ஓர் உண்மை. ஏன் இருக்கிறது, ஏன் நீடிக்கிறது, அதன் பெறுமானம் என்ன என ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் அதை ‘பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது’ என்று சொல்பவர்கள் நேரடியாகவே வரலாறாகவே மாற்றப்பட்ட சாதித்தொன்மங்களை பரிசீலிப்பதே இல்லை.
அவ்வளவு ஏன், எவராவது தொ. பரமசிவனை கேள்விகேட்டு பார்த்திருக்கிறீர்களா?அவர் எழுதிவைத்தவை முழுக்க ஆய்வு என்றும் தரவு என்றும் சொல்லப்படுகிறது. அயோத்திதாசராவது தொன்மம் புராணம் என எழுதிவைத்தார். இவர் முறைமைசார்ந்த நவீன ஆய்வு என்றே சொல்கிறார். ஆனால் எந்த ஆதாரமும் அளிப்பதில்லை. எந்த முறைமையும் கடைப்பிடிப்பதில்லை. கேட்டால் கள ஆய்வில் வாய்மொழியாக திரட்டிய செய்தி என்பார். ஆனால் அவரை அப்படியே ஏற்று பேரறிஞர் என்று கொண்டாடுகிறார்கள்.
உதாரணம், சம்பா +அளம் என்பதுதான் சம்பளம் என்கிறார். அளம் என்றால் களம். அது எப்படி உப்புக்கு பதிலாகும். சம்பா என்றால் ஒரு நெல்வகை. அது எப்படி அரிசிக்கு பதிலாகும்? உப்பும் அரிசியும் கூலியாக கொடுக்கப்பட்டதற்கு சான்றுகள் உண்டா? அரிசி நூறாண்டுகளுக்கு முன்பும்கூட அரிய உணவுப்பொருள். உழைப்பாளிகளின் உணவு தவசவகைகள்தான். குறைந்தது அறுநூறாண்டுகளாக தமிழகத்தில் பணம்தான் அரச ஊதியம். எந்த அடிப்படையில் சம்பாவும் அளமும் சேர்ந்து சம்பளமாகியது? [ஏன் சம்பாவளம் ஆகவில்லை?]
பழந்தமிழ்நாட்டில் தென்னை இல்லை என எழுதினார். நாஞ்சில்நாடன் ஆதாரபூர்வமாக பதில் அளித்தார். சங்ககால தாவரங்கள் பற்றியெல்லாம் பேரறிஞர்கள் விரிவாக பதிவுசெய்து அட்டவணையே போட்டு ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இவருக்கு நூல்பழக்கமே மிகக்குறைவு. செவிவழிச் செய்திகளைக் கொண்டுதான் ஆய்வே. அப்படி எத்தனை அபத்தங்கள். அவை எல்லாமே ஆய்வு என தோன்றுபவர்களுக்கு அயோத்திதாசர் சொன்ன தொன்மங்களை நவீன ஆய்வுமுறைமைகளைக் கொண்டு வரலாற்றாய்வுக்கு உட்படுத்தினால் அறிவுத்தாகம் பொங்கிவிடுகிறது.
இங்கே நடப்பது வரலாற்று விவாதமோ, ஆய்வுமுறைமை பற்றிய விவாதமோ அல்ல.
ஜெ
தலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   
  
 
   
   
  
