காதுகள், அந்தியூர்மணி – கடிதம்

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். குடும்பத்தின் நலன் வேண்டுகிறேன்.

விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும், கூட்டத்தில் ஒருவனாக கலந்துக் கொண்டேன். உங்களிடம் வந்து சில வார்த்தைகள் பேசி அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆவலாதி இருந்தது. ஆனால் உங்களை பிடிக்க முடியவில்லை. சுண்டிவிட்ட நாணயம் போல் சுழன்றுக் கொண்டே இருந்தீர்கள். மேலும் செல்பி எடுக்க, ஆட்டோகிராப் வாங்க  என உங்களைச் சுற்றி ஒரே தள்ளுமுள்ளு. அறிமுகம் பண்ணிக் கொள்ள முடியவில்லை.

விஷ்ணுபுரம்  விழா அமர்க்களமாய் நடந்து முடிந்தது. இரண்டு நாட்களில் எல்லா அரங்குகளும் ரசிக்கும்படி இருந்தன என்று பொய் சொல்ல மாட்டேன். சீனியர் எழுத்தாளர்கள் அரங்கை தம் வசம் படுத்தினார்கள். ஆனால் புதிய எழுத்தாளர்களின் அரங்குகள் கொஞ்சம் சோபைதான். அபிரிதமான தன்னம்பிக்கையில் அசட்டுத்தனமாய் பேசுகிறார்கள். அப்படி இல்லாமல் போனால், தெளிவேயில்லாமல் சுணக்கமாக பின்வாங்குகிறார்கள். இரண்டுமே சோர்வூட்டின. Read the room, folks!

புதிய எழுத்தாளர்களுக்கு ஏன் அரங்குகள் தரவேண்டும் என்பதை என்னால் கிரகித்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு மேடை. பயின்றால் பலன். பயிலாவிட்டால் பள்ளம்.

“பழைய ஐந்நூறு ரூபாய் செல்லாதா?” என்றுக் கேட்பது மாதிரி சம்பந்தமேயில்லாமல் ஒரு மாதம் கழித்து விஷ்ணுபுரம் விழா பற்றி பேசுகிறானே என்று கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் வேறொரு விஷயத்திற்காக இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தேன். அதற்குள் எங்கெங்கோ சுற்றிவிட்டேன். விஷயம் அந்தியூர் மணியின் காதுகள் விமர்சனக் கட்டுரை பற்றியது.

அந்தியூர் மணியின் கட்டுரை நல்ல கட்டுரை. தமிழ் வட்டத்தில் ஒருவர் சித்தர் மரபு பற்றியும் பாடபேதம் பற்றியும் விலாவரியாக பேசுவது வியப்பூட்டுகிற காரியம். அவர் எழுதும் கட்டுரைகளை ஆர்வமாக புக்மார்க் செய்து எப்படியும் வாசித்துவிடுகிறேன். மரபோடு அவருக்கு நல்ல பழக்கம் இருக்கும் போல. அது பெரிய பலம். அந்த வகையில் காதுகள் நாவலுக்கு அவர் கொடுக்கும் வாசிப்புக்கூட தனித்தன்மைக் கொண்டதாக இருக்கிறது. மகாலிங்கம் ஞானத்தை வேண்டுகிறான். ஞானத்துக்கான பாதை காதுகளில் ஓதப்படுகிறது. ஆனால் அந்த பாதை அவன் நினைத்ததுப் போல் பூ மண்டியதாக இல்லாததால்  குழம்பிப் போகிறான் என்று அந்தியூரார் எழுதியதை படித்ததும் அட என்று ஒரு ஆச்சர்யக் குறி மனதில் எழுந்தது. மிகவும் உண்மை என்று எண்ணிக் கொண்டேன். உலக வாழ்க்கையின் துயரை அப்படியே துயர் என்று புரிந்துகொள்வதுதான் மனித குணம். அதை ஏன் வேள்வியாக சாதகமாக  நினைக்கக்கூடாது என்று அந்தியூரார் கேள்வி எழுப்புகிறார். புதிய கேள்வி அல்ல. ஆனால் அதை ஒரு மார்டன் நாவல் மேல் அவர் போட்டது பிரமாதமாக இருந்தது.

முக்கியமான கட்டுரையாக வந்திருக்க வேண்டியது. ஆனால் ஒரு பெரியக் குறைபாடு அதில் இருக்கிறது. இன்றைய மார்டன் மொழியில் அக்கட்டுரை எழுதப்படவில்லை. மொழி என்று நான் எழுத்து நடையை சொல்லவில்லை. மொழியை உருவாக்கும் மனதை சொல்கிறேன். மொழி பழையது என்றால் நபரும் சிந்தனைக் கோணமுமே பழையது என்றே பொருள் கொள்ள வேண்டும். அந்தியூராரின் மனம் இன்னமும் மார்டனாகவில்லை. மனு பற்றிய எழுதிய கட்டுரையிலேயே அது எனக்கு தெரிந்தது. ஆனால் மரபுக்கு வாதாட, சும்மா சடங்கு சாஸ்திரம் என்று பேத்தாத, காத்திரமான ஒரு தரப்பு என்று அப்போது யோசித்துக் கொண்டேன்.  ஆனால் அவர் இலக்கிய விமர்சனங்களும் எழுதும்போது சும்மாவேனும் சுட்டிக் காட்டலாம் என்று படுகிறது. மரபோடு நல்ல பழக்கம் உள்ள ஒருவர் நவீன சிந்தனைப் போக்கையும் உள்வாங்கிக் கொண்டால் நிறைய நல்ல கட்டுரைகள் வருமே என்று ஒரு நப்பாசை. எனக்கெல்லாம் மரபு பற்றி போதிய அறிவே இல்லை. அந்தியூராருக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது.  அவர் எழுதியது மாதிரி  கொடுப்பினை தான் பாதகங்களையும் ஏற்படுத்துகிறது.

இன்றைய படைப்புகளை விமர்சனம் செய்யும்போது மரபை துணைக்கு அழைத்துக் கொள்வது தவறில்லை. எபிஸ்டாமாலஜி, ஜெர்ம்யூனாடிக்ஸ் என்று என்னென்னவோ பேர் சொல்லி எழுதுகிறார்கள். படைப்பின் வாலைத் தேடி பட்டாசுக் கட்டும் வேலைகள் நடக்கும்போது சித்தர் மரபோடு இணைத்து பேசுவது தவறே கிடையாது. எம்.வி.வி அவர்களுக்கு முருகன் தானே சாகித்திய அகாடெமி விருதே வாங்கிக் கொடுக்கிறான். எனவே அந்தியூராரின் அணுகுமுறையில் குற்றம் காண்பது முறை கிடையாது. ஆனால் எழுதும்போது அவர் சித்தர் மரபுக்கு வக்கீலாக மாற ஆரம்பித்துவிடுகிறார். பக்கத்தில் போனால் சட்டையை உருவி நெற்றியில் விபூதி அடித்துவிடுவாரோ என்று பயமாய் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நாம் எதை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் மார்டன் மொழியில் அந்த நம்பிக்கைக்கு வேலை கிடையாது. கதை, கவிதை, நாவல் இவற்றை நான் சொல்லவில்லை. இலக்கிய விமர்சனத்தில் மட்டும் சொல்கிறேன். பொதுவாக என்ன மொழி சூழலில் உருவாகி இருக்கிறதோ அந்த மொழியில்தான் விமர்சகன் பேச வேண்டும்.
பூடகமோ மாயமோ வாய்த்தால் நலம். ஆனால் பிரச்சாரம் மட்டும் அறவே தகாது.

(இன்னொரு மூலையில் அழகியலுக்கு பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.அவர்களுடைய மொழியில் இருக்கும் வன்முறை பற்றி தனியே விவரமாக எழுத வேண்டும். )

அந்தியூராரின் கட்டுரையில் இருக்கும் பெரிய இடர். மகாலிங்கத்தின் தேடலை  உள்ளடக்கமாக கருதி அந்த உள்ளடக்கத்தை மட்டும் விவாதப் பொருளாக்குவது. இந்த உள்ளடக்க பாணி விமர்சனம் காலாவதியாகிவிட்டது. அந்த உள்ளடக்கத்தை வைத்துதான் விமர்சகர் சித்தர், தொல்காப்பியர் என்று அலசுகிறார். இப்படி ஆராய்வது எங்கே போய் முடியும் என்றால் விமர்சகன் தனக்கு பிடித்த உள்ளடக்கத்தை எல்லா படைப்புகளிலும் தேடும் படுகுழியில் போய் முடியும். அப்புறம் தனக்கு பிடித்த உள்ளடகத்தில் கொக்கி போட்டு எல்லா படைப்புகளையும் அதில் மாட்டுவது நடக்கும். படைப்பின் ரசவாதத்தையோ இலக்கியத்தின் அதிர வைக்கும் புதிர்களையோ விமர்சகன் சுட்டிக் காட்டாமல் மாடு பிடிப்பதுப் போல் திமில் மேல் ஏறி ஏறி சுற்றி வருவதுதான் கடைசியில் எஞ்சுவது.

டி.எச்.லாரன்ஸ் சொன்னது என நினைக்கிறேன். “Never trust the teller. Trust the tale”. இது எழுத்தாளரை பற்றி மட்டும் சொல்லப்பட்டது அல்ல. கதைக்குள் இருக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஜோராக பொருந்தக்கூடியது. மகாலிங்கம் வழியே எம்.வி.வியை பார்க்கும் பயோகிராபி விமர்சனத்தை அந்தியூரார் நிரம்ப செய்ய வேண்டியதில்லை. அவருடைய கட்டுரையிலேயே கடைசியில் ஒரு அற்புதமான வெளிச்சம் இருக்கிறது. “ஏன் அது காதுகளில் நடக்கிறது?” என்று உசாவி, நம் மரபில் “கேட்டல்” எனும் செயலுக்கு உள்ள முதன்மை பங்கை அழகாக விளக்கியிருக்கிறார். சொல்பவர் சரியாகத்தான் சொல்கிறார். காதுகள் ஒழுங்காக வேலை செய்து கேட்பவரும் சரியாகத்தான் கேட்கிறார். ஆனால் சொல்லுக்கு சொல்லும் பொருள் இல்லை. கேட்டதற்கு கேட்ட பொருளும் இல்லை. ஒரு நல்ல விமர்சகருக்கு புலப்படும் நுண்மைகள் யாவும் அந்தியூராருக்கு ஈசியாக புலப்படுகின்றன. இனி அதை அவர் நம் மொழியில் எழுதிவிட்டால் போதும். அவருக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

பிரியத்தோடு,
அசோகன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.