Jeyamohan's Blog, page 844
January 15, 2022
போழ்வும் இணைவும்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
சனிக்கிழமை இரவு முதலில் இணைவு கதையைத்தான் திறந்தேன். போழ்வு முன் தொடர்ச்சி கதையென இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போழ்வை இந்தபத்தி வரை https://www.jeyamohan.in/131030/ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி வாசித்து விட்டு தூங்கிவிட்டேன். ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி – இந்த வரியில் காந்தியை நினைத்துக்கொண்டேன். ஒரு கனவு வந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.நான் காந்தியை பார்க்க பைக்கில் சென்றேன். வாசல்படியில் பைக்கை ஏற்றி உள்ளே சென்றேன். காந்தி நின்று கொண்டிருந்தார். அவரிடம் நான் ஆங்கிலத்தில் உரையாடினேன்.உரையாடல் நினைவில்லை ஆனால் நன்றி சொன்னதாய் நினைவு. ஞாயிறு இரவு போழ்வின் மீதியையும், இணைவு கதையையும் படித்து முடித்தேன்.இரண்டையும் ஒன்றாக படிக்கும் போது அதன் நுண் விவரணைகளை முழுதும் தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்.
சிறுகதையின் சாரம் கர்னல் சேமர்ஸ் மற்றும் டாக்டர் அலெக் பெய்ன்ஸ் இடையே நடக்கும் உரையாடல் மூலம் நன்றாக விளங்கியது.அந்த உரையாடலை வாசிக்கும்போது ஒரு முகம் எழுந்து வரும்.நமக்கு நன்றாக தெரிந்த முகம் காந்தி.எறும்பாக இல்லாமல் பருந்தாக இருந்து பிரிட்டிஷ் பேரரசின் வல்லமையை, அதன் நீதிதர்மத்தை, அதன் அரசியலை, மக்கள் அதன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதேசமயம் அதன் தீமைகளை, அதனால் இந்தியாவில் நடந்த பஞ்சத்தை அவரால் பார்க்கமுடிகிறது.பிரிட்டிஷ் பேரரசை வெல்ல இங்குள்ள மக்களுக்கு அதன் தீமையை புரியவைத்து அவர்களை அரசியல்படுத்தி மொத்தமும் தன்மேல் மட்டும் குவியாமல் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காந்தியை உருவாக்கி, அதிகார வல்லமையின் எல்லையை உணர்ந்து ஆன்ம வல்லமையை கொண்டு இந்திய மக்களை ஒன்றிணைத்தார்.அவர் செயல்முறை பரிணாமம் போல் மெதுவானது வலுவானது.தளவாய் வேலுத்தம்பியும், பத்மநாபன் தம்பியும் உயர்ந்த தனிப்பண்பு கொண்டவர்கள். அதற்காகத்தான் க்ரிஷ்ணப்பிள்ளையை கொன்றதற்காக வேலுத்தம்பி தன் தம்பி கையிலும், அண்ணனை கொன்றதற்காக உயிர்வாழ வாய்ப்பிருந்தும் பத்மநாபன் தம்பியும் உயிர்விடுகிறார்கள்.மொத்தப் பார்வையற்றவர்கள்.
இக்கதையின் சிறப்பம்சம் தளவாய் வேலுத்தம்பியை, பிரிட்டிஷ் பேரரசை வில்லனாய் காட்டவில்லை.மாறாக நம் போதாமையை, நம்மை இறுக்கி வைத்த பண்டைய விழுமியங்களை, புதிய காலத்திற்கு பொருந்தாத வீரம் மேல் கொண்டிருந்த அதீத பற்றை, புதிய உலகம் உருவாகிவிட்டதை உணராத நம் எறும்புப் பார்வையை கண்முன் காட்டுகிறது.
ஒரு ஆங்கில படத்தில் அல்லது சீரியலில் பார்த்த வசனம். What is rome? Rome is mob. அவர்களை அங்குள்ள அரசன் தங்களுக்கு வேண்டியவாறு ஆட்டி வைப்பான்.விளையாட்டு காட்டி கட்டி வைப்பான். Mob வார்த்தைக்கு கூகிளில் பொருள் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். கொல்லம் கண்டோன்மெண்டை தாக்கிய கூட்டம் ஒரு Mob.பின் வந்த நம் சுதந்திர போராட்ட தலைவர்கள் ஒழுங்கற்ற மக்கள் திரளை நெறிப்படுத்தி ஒற்றை திரளாக மாற்றியே வென்றார்கள்.
அன்புடன்
மோகன் நடராஜ்
வேதாளம்- கடிதங்கள்-4
அன்புள்ள ஜெ
வேதாளம் கதையை வாசித்துவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். கதையின் சுவாரசியம், உரையாடல்களின் வழியாக உள்ளூர உருவாகிவரும் பலவகையான குணச்சித்திரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க கதையின் மையம்தான் என்ன என்ற கேள்வி வந்தது. நான் சொன்னேன். அவரவவர் தோள் வேதாளம்தான் என்று. சடாட்சரத்துக்கு அவர் தோளில் ஒரு வேதாளம் இருக்கிறது. நமக்கு நம்முடைய வேதாளம்.
வேதாளம் என்பது ஆவிதான். இங்கே சடாட்சரம் சுமக்கும் துப்பாக்கி ஒரு பிணம். ஆனால் அது பயனற்றதும் அல்ல. அவருக்கு அது துணை. இக்கட்டில் அவர் அதை நம்பித்தான் இருந்திருக்கிறார். அவருக்கு அது அடையாளம். எதிரிகள் அதைக்கண்டு பயப்படவும் செய்கிறார்கள். அதனால் சுடமுடியாது. ஆனால் பயனற்றதும் அல்ல. அல்லது பயன் என்பது சடாட்சரம் உருவாக்கிக்கொள்வது. இப்படிப்பட்ட பிணங்களை நாம் தூக்கிச் சுமக்கவில்லையா? சாதி மதம் கொள்கை கட்சி என எவ்வளவு பிணங்கள். வேலை, பொறுப்பு, குடும்பப்பெருமை. சமூகத்தில் ஸ்தானம் என எவ்வளவு வேதாளங்கள்.
வேதாளம் சுமப்பவனின் வலியை வலியே இல்லாமல் சொல்கிறது என்பதுதான் இந்தக்கதையின் அழகு என நினைக்கிறேன்.
அருண்குமார்
அன்புள்ள ஜெ,
வேதாளம் கதையை வாசித்தபோது அது அளித்தது ஒரு திடுக்கிடலை. தூக்கு என சிறு குழந்தைகள் நீட்டுவதுபோல தாணுலிங்கம் கை நீண்டு நின்றது என்னும் வரி. அவர் அதை தூக்கிக்கொள்கிறார். வேறுவழியில்லை. ஆனால் அப்போதுகூட கதையின் சாராம்சம் கொஞ்சம் விலகி நின்றது. ஆனால் இன்று அந்தக்கதையை யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு தோற்றம். துப்பாக்கி ஒரு வேதாளம். தாணுலிங்கம் இன்னொரு வேதாளமாக ஆகிவிட்டார். துப்பாக்கிய ஊன்றி புதிய வேதாளத்தை சடாட்சரம் தூக்கிச் செல்கிறார். இனி இவன் நினைவு வேதாளமாக அவர் நினைவில் இருக்கப்போகிறது. இந்த குற்றவுணர்ச்சி அவர் வாழ்க்கை முழுக்க தோளில் சுமையாக இருக்கும். ஒருவேளை வேலை போகலாம். நடவடிக்கைகள் வரலாம். ஆனால் இன்னொரு வேதாளத்தை ஏற்றிக்கொண்டாயிற்று. ஓய்வு பெறுவது வரை கூடவே இருப்பது துப்பாக்கி. ஓய்வுக்குப்பிறகு தாணுலிங்கம். விடவே விடாதவை இந்த வேதாளங்கள்.
சரவணக் கதிரேசன்
வெண்முரசு அறிமுகங்கள்- கடிதம்
அன்புள்ள அருண்மொழி மேடம், ராஜகோபாலன் சார்,
நலம், நாடுவதும் அதுவே!
நான் தமிழ் இலக்கியத்தில் தற்செயலாக நுழைந்து, ஜெ சார்’இன் எழுத்துக்கள் வழியில் வாசிப்பின் பித்தில் அகப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொடக்க நிலை வாசகன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. ராஜகோபாலன் சாருக்கு இதற்கு முன் சில கடிதங்கள் எழுதியுள்ளேன் (விவேக், பாண்டிச்சேரி). ஜெ சாருக்கு சில கடிதங்கள் எழுதியுள்ளேன், அவர் என் குழப்பங்களை களைந்து ஆழ்ந்த விளக்கங்கள் அளித்துள்ளார் :) உங்களுக்கு இது என் முதல் கடிதம்.
தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கி வெண்முரசை பற்றி கேள்வி பட்டவுடன் பெரும் பரவசம், ஆனால் நான் சென்றடைந்த தகவல்கள் அனைத்தும் புறவயமானவை.. 26000 பக்கங்கள், உலகின் நீண்ட நாவல் வரிசை, சாரின் 25 வருட தேடல், 7 ஆண்டு உழைப்பு. அனைத்தும் பிரமிக்க வைத்தது. இருந்தும் எனக்கென்னவோ இதன் மகத்துவத்தை இப்படியாக அணுக முடியவில்லை…ஏதோ ஒன்று நிறைவடையாமல் இருந்தது. அப்போதுதான் உங்களின் இருவரின் உரைகளைக் கேட்க நேர்ந்தது. என் அறிதல்களை கீழ்கண்டவாறு புரிந்து கொண்டு இவ்வாறு தொகுத்து கொள்கிறேன்.
அ) இன்றுள்ள உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு சார் சூழலில் (இலக்கியத்திலும், அதற்கப்பாலும்) – இந்திய பின்புலத்தில் தமிழ் சூழலில் வரும் எந்த ஒரு புதிய விஷயமும் இதற்கு முன் இப்படி ஒன்று வரலாற்றில் வந்தடைந்து இருக்கும் இடம் பொருட்டே அணுகவும், அர்த்தப்படுத்தவும், மதிக்கவும் படுகிறது. அதிலும் ஒரு ஒப்பீட்டுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுடன் தொடர்புபடுத்தி கூறும் போது அது இன்னும் வலுவிழந்தோ/வலுப்பெற்றோ போகிறது. குறிப்பாக “மறுஆக்கம் (remake, duplicate, replication, copy)” என்ற சொல்லாடல் பெரும் குழப்பங்களை எனக்கு விளைவித்தது. ஏனென்றால்,
பொதுவெளியில் மக்களை வந்தடையும் மறு ஆக்கங்கள்பெரும்பாலும் எந்த ஒரு மாற்றம் இன்றியோஅல்லது சூழலுக்கு ஏற்ப சிறு வடிவ மாற்றத்துடன் மட்டும் கொண்டு மக்களுக்கு ஏற்புடவையே திரும்ப கொண்டு வந்து சேர்க்கிறது. – உதாரணம்: சினிமா (பில்லா/Billa 2; 3 idiots/நண்பன், ஒக்கடு/கில்லி etc);இச்சொல்லை தவறான இடத்தில் பயன்படுத்துதல் மூலம் எழும் சிக்கல்கள் –உதாரணம்: இலக்கியம்(Sapiens A brief history of humankind/சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு);Replica or copy of technology/services from across globe – உதாரணம்: eCommerce(Amazon/Flipkart, Uber/Ola)ஆ) இந்தப் பின்புலத்தில் இருந்து வெண்முரசை அணுகியபோது வந்த குழப்பம் வெண்முரசை இலக்கியத்தில் நான் எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி அணுகுவது, என்ன என்று புரிந்துகொள்வது? மேலும் ஜெ சார்’இன் “இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…“கட்டுரை ஒன்றை “இலக்கியத்தின் நுழைவுவாயில்” kindle நூலில் வாசித்தேன். https://www.jeyamohan.in/41422/... இருப்பினும் தெளிவு பெறவில்லை. இதற்குப்பின் தான் சற்று முயன்று – translate (மொழிபெயர்ப்பு), transliterate (ஒலிபெயர்ப்பு), transcribe (பெயர்த்தெழுது) உள்ள வித்தியாசத்தை அகராதி மூலம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
Translate (தமிழ்ப்படுத்து/மொழிபெயர்): (பிற மொழியில் உள்ள நூலை) தமிழில் மொழி பெயர்த்தல்/(பிற மொழிச் சொல்லை) தமிழ் ஒலிப்பு முறையில் அமைத்தல்; translate (a work) into Tamil/render a word in accordance with the tradition of the Tamil language. ‘வாக்யம்’ என்ற வடமொழிச் சொல்லை ‘வாக்கியம்’ என்று தமிழ் படுத்துகிறார்கள். ஒரு மொழியில் எழுதப்பட்டதை அல்லது சொல்லப்பட்டதைப் பொருளும் தொனியும் மாறாமல் மற்றொரு மொழியில் வெளிப்படுத்துதல்.Transliterate (ஒலிபெயர்ப்பு)– ஒரு மொழியின் சொல் ஒவ்வொன்றிற்கும் மற்றொரு மொழியில் குறியீடு தந்து எழுதுதல்; transliterate. Apple (ஆப்பிள்).Transcribe (பெயர்த்தெழுது)– 1. (புத்தகம், ஓலைச்சுவடி, ஆவணம் போன்றவற்றில் உள்ளதை) பிரதியெடுத்தல்; copy. பழந்தமிழ் நூல்களைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதியே நம் முன்னோர் பாதுகாத்துவந்தனர்(அல்லது) 2. (ஒரு படைப்பை ஒரு வடிவத்தில் இருந்து மற்றொரு வடிவத்திற்கு) மாற்றி எழுதுதலும் பெயர்த்து எழுதுதல் எனப்படலாம். அதாவது பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத்தில் புரிந்து கொள்ள எளிதாக அவற்றை உரைநடையில் எழுதுதல். எனக்கு இந்த 2 விளக்கம் பொருத்தமாக பட்டது . இந்தப் போக்கில் வெண்முரசை மஹாபாரததுடன் ஒப்பிடுகையில் அது எங்கு நிற்கிறது ? Is it a translation (or) transliteration (or) transcription of mahabharata? None of the above or perhaps all of the above!இ) சரி as a literary work, now got some idea என்ற பொழுது, அடுத்த குழப்பம் – வாய்மொழி இதிஹாசமாகவும், தெருக்கூத்து போன்ற கலைகளின் மூலமாகவும், அல்லது ஒரு நூல் நவிர்ப்பு பயிலுமுறையில் சென்ற காலத்தில் பயில வாய்ப்பில்லாதமையாலும் எனக்கு மஹாபாரதம் ஒரு கடந்த கால/பழமை அடையாளமாகவே இருந்தது. எந்த ஒரு வாசிப்பு பின்புலமும் இல்லாமல் ஆங்கில வழி கல்வி பெற்ற என்னை போன்றோருக்கு மகாபாரதம் நாங்கள் வளர்ந்த சூழலில் இருந்த காட்சி ஊடகம் மூலம் (TV) ஒரு வார இறுதி நாடகத்தொடராக ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. தொலைக்காட்சி மூலமாக வந்த போதும், கதாபாத்திரங்கள், நிலக்காட்சிகள், குதிரை, யானை போன்ற ஒரு சில பொருட்களை வைத்து மறு ஒளிபரப்பு செய்தாலும் – இது இன்று உள்ள அறிவியல் யுகத்தில் அம்பு, தேர், கடவுள், சாபம் போன்ற புராண கட்டுகள் நிறைந்து இருப்பதால் “பழையது/காலஞ்சென்ற” அடையாளம் இருந்தமையால் பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை.
இப்பின்புலத்தில் வைத்து மகாபாரத கதையை தெரிந்து கொண்ட நாங்கள்…மஹாபாரத்தைகருப்பு வெள்ளையாக புரிந்து வைத்திருந்தோம் (பங்காளி சண்டை, பொம்பள சிரிச்சா போச்சு, ஆட்சிக்காக சண்டை, சூட்சி செய்து நினைத்த காரியத்தை முடிப்பது, தருமர் நல்லவர், துரியோதனன் கெட்டவன், திரௌபதி பாவம், கிருஷ்ணன் கடவுள்).மேலும்எப்படி சிரமப்பட்டு வெண்முரசு படித்தாலும் கதை நமக்கு பரிட்சியமான ஒன்று தானே? – இங்கயும் சூது தான் நிகழ போகிறது, தருமன் தோற்கத்தான் போகிறான், திரௌபதி அவமானப்படுத்தப்பட தான் போகிறாள்! இந்த மனநிலையில் இருந்து என்னை விடுவித்தது உங்களின் உரைகள் தான் . அருண்மொழி மேடம் நீங்கள் எடுத்தவுடனே கிளாசிக் என்றால் என்ன என விளக்கும் பகுதி, எனக்கு பல இலக்கிய அடிப்படைகள், மற்றும் classicஇன்தேவை விளங்க ஆரம்பித்தது.மேலும் நவீனஇலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் பொழுது வெறுமேசெய்யுள் வடிவில் உள்ளதை உரைநடை வடிவில் மாற்றாமல், அன்றிலிருந்து இன்றுவரை அறிவியல், சமூகவியல், உளவியல் போன்ற துறைகளின் தோற்றதால் கண்டடைடையப்பட்டிருக்கும் விஞ்ஞான பூர்வமான தகவல்களை கருத்தில் கொள்ள தேவை, இவை அனைத்தையும் வரலாற்றின் கால அடுக்குகளையும் பொருந்தி வரவேண்டியுள்ளது.தத்துவ சிந்தனைகளின்வளர்ச்சி, நட்பு, காதல், துரோகம் போன்ற மனித மனங்களும் உறவுகளும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் . அக்கால சமூகம், வணிகம், போன்ற விஷயங்கள். இதில் கவித்துவம்….வேதங்கள்(தனுர் வேதம், ஆயுர் வேதம் – அறிவியலுக்கு முற்பட்ட முறைமைகள்) மற்றும் சாத்திரங்கள் (அஸ்வ சாத்திரம், மதங்க சாஸ்திரம்)…கலைகள்(சிற்பக்கலை, கட்டிட கலை, ஓவியக்கலை, இசைக்கலை, சமையல்கலை, ஒப்பனை கலை)…மாறாத அடிப்படை மானுட அறங்கள் (eternal ethics), பயன் மதிப்பீடுகள் (value systems). மாற்றம் அடையாத வேதங்கள்(சுருதி) எப்படி அணுகப்பட்டது, ஸ்மிருதி (do’s & dont ‘s) எவ்வாறு அணுகப்பட்டது, விதிவிலக்குகள், ப்ராயச்சித்தங்கள் போன்றவற்றுக்கு உங்களின் விளக்கம் மிகப்பெரிய திறப்பு!அனைத்திற்கும் மேல் நீங்கள் கூறியது போல இது வெறும் பங்காளி சண்டை அல்ல.. .இரு தத்துவதரிசனங்கள் மோதல் எனும் பார்வை மிக புதிதாகஇருந்தது.
வெண்முரசை வாசித்தல் – முதற்கனல் முதல்…
அ) இதிகாசம் -> பண்பாடு -> காப்பியம் -> வெண்முரசின் இந்த அடுக்குகளை மிக நேர்த்தியாக, தெள்ளத்தெளிவாக பொருத்துக் காட்டியது உங்கள் உரைதான் ராஜகோபாலன் சார். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ முறை நான் பண்பாட்டுக்கும் கலாசாரத்திற்கு வேறுபாடு தெரியாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறேன். உங்கள் உரை மட்டுமே அதை தெளிவு படுத்தியது. மேலும் நீங்கள் கூறியுள்ள புராணத்தை பற்றிய விளக்கம் மிக அவசியமான ஒன்று, அவ்விளக்கம் இல்லையெனில் பௌராணிக மதங்களுக்கும் இதிஹாசங்களுக்கும் உள்ள சிறப்பு தெரியாமலே போயிருக்கும்.
இதிஹாச(மொழியியல் அடிப்படையில்)– இதிக ஹாஸ (thus happened) இது இவ்வாறு நடந்தது, இவ்வாறாகவே நடந்தது. என்று கூறுவது.இதிஹாசம்(பண்பாடு அடிப்படையில்)– ஒரு தொகுப்பு, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றிய ஒட்டுமொத்த தொகுப்பு. எல்லா வகைப்படுத்த முடிந்த பண்பாடுகளும் ஒரு இதிஹாசம் உண்டு.இதிகாசம் ஏன் முக்கியம்? – பண்பாடு பற்றிய ஒட்டுமொத்த தொகுப்பை அணுக வழி செய்வது.ஆ) பண்பாடு என்றால் என்ன? – குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருட்கள் போன்றவற்றின் மொத்தம்; ஒரு சமூகத்தின் வாழ்க்கையை, விழுமியங்களை சொல்லக்கூடியது.
நம் பண்பாடு எந்த விழுமியங்களை முன்வைக்கிறது? அதன் அடிப்படையில்தான் சரி, தவறு, சமுதாயம் ஒன்றை பார்க்கும் விதம்,அரசாட்சி, மக்களின் மனசாட்சி, குடும்ப அமைப்புகள், வள பகிர்வுகள், சொத்து பகிர்வுகள் போன்றவற்றை முன்வைப்பது. பண்பாட்டில் இருந்து எழுந்து வருவதே இந்த விழுமியங்கள்.இப்பண்பாட்டுவிழுமியங்கள் இதிஹாசங்களிலுருந்தே பெறப்படுகிறது.இ) காப்பியம் – இதிகாசத்தில் இருந்து ஒரு கறாரான விதிமுறைகளை கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு. இதிகாசத்திற்கு எந்த ஒரு விதிமுறையும் கிடையாது, அது ஒரு நிகழ் வாழ்வை அப்படியே சொல்லிவிட்டு செல்வது. அது தன்னியல்பில் தானே இயங்கி, உருவாக்கி செல்வது. ஆனால் காப்பியம் கறாரான விதிமுறைகளுக்கு உட்பட்டது, காவியகர்த்தா இருக்க வேண்டும். காவியகர்த்தா காவிய லட்சணங்களை கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேசு பொருட்களை சொல்ல வேண்டும். ஒரு தன்னிகரில்லா காவிய நாயகன் இருக்க வேண்டும். நாடு, காடு, மலை, நதி, கடல், சூரியன், சந்திரன் பற்றி வர்ணனை இருக்க வேண்டும். காவியத் தலைவன் பற்றி பேசும்போது – அவனின் அரசாட்சி, குடும்பம், இருவரின் காதல், பிரிவு, புலத்தில், கலத்தல் பற்றி பேசவேண்டும். உணர்வுகளின் உச்சம் தான் பேசப்பட வேண்டும். இதிகாசத்தில் இருந்து செம்மை படுத்தி எடுக்கும் போது அது காப்பியம் ஆகிறது. வாழ்வின் அனைத்து தருணங்களையும் அது பேச வேண்டும்.
ஈ) இதிகாசம் இலக்கியத்தில் (literature) காப்பியத்தின் மூலம் அறியப்படுகிறது. சிற்பக்கலையில் (sculpture) உச்சம் பெற்று விளங்கும் கோவில்களில் சிலைகளாக அறியப்படுகிறது. ஓவியத்தில் (painting) சிறப்பான தருணங்களாக அறியப்படுகிறது. இசையில் (music) மரபார்ந்த பாடல்கள் மூலம் அறியப்படுகிறது. வாழ்வின் அனைத்து பரிணாமங்களுக்கும் ஈடுகொடுக்கும், அதாவது வெறும் வாய் மொழியாகவும் (word of mouth, verbal instruction), நிகழ்த்துக்கலைகளின் (performance arts) வழியாகவும், நாட்டார் வழக்காறு களாகிய தெருக்கூத்து போன்றவற்றால் மட்டுமே அறியப்பட்ட இதிகாசம் அச்சுஊடகம் (print media) வந்த பிறகு புத்தகங்கள் வாயிலாக அறியப்பட்டது, காணொளி (visual media) வந்த பிறகும் திரை தொடர்களாக அது வந்து கொண்டிருக்கிறது….இப்படி அணைத்து வெளிப்பாட்டு முறைகளையும் இதிகாசம் தொடர்ந்து காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப ஒரு அறைகூவலை சந்தித்து கொண்டே வந்திருக்கிறது.
இதிலிருந்து நவீன இலக்கியத்தின் புனைவு சாத்தியக்கூறுகளையும், போக்குகளையும், விதிமுறைகளையும் உட்படுத்தி வந்திருக்கும் ஒரே முழுமையான படைப்பு வெண்முரசு. ஆகவே இது ஒரு நவீன காப்பியம்.தமிழின்தனிப்பெரும் காப்பியமானசிலப்பதிகாரத்தில் அறம் சார்ந்த விதிமுறைகள் முன்பே விற்கப்பட்டுவிட்டன. அதில் அறக்குழப்பமே கிடையாது. ராமாயணத்தில் அற சிக்கல்கள் இருக்கின்றன ஆனால் அறகுழப்பங்களோ, அறம் சார்ந்த மோதல்கள் இல்லை. இதுவே வெண்முரசின் பிரமாண்டத்தை உணர்ந்து கொள்ள உதவும் சித்திரம்.புராணம் – இதிகாசத்தில் இருந்துபெறப்படுவது, ஆனால் ஒன்றை மட்டும்சிறப்பித்துக் கூறப்படுவது. ஒரே நோக்கம் கொண்டது. ஒன்றின் பெருமை மட்டும் பறைசாற்றுவது.வெண்முரசு கொண்டாட்டம் இசை வெளியீட்டு விழாவை நேரலையில் youtube’இல் கண்டுகொண்டிருந்தேன். சொல்வதற்கு வார்த்தை இல்லை. எனக்கு இசை கேட்க கூட பயிற்சி கிடையாது, எனவே புரிந்து கொள்ளவும் தெரியாது. சில தமிழ் சினிமா பாடல்கள் தெரியும், சிலது பிடிக்கும். ஏன் என்று விளக்க தெறியாது. ஆனால் இந்த இசை வெளியீட்டு விழா என்னை உள்ளிழுத்து மகிழ்வுறச்செய்தது. என் இல்ல விழா போல மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்தது. ராஜகோபாலன் சார்இன் தொகுப்பு இவ்விழாவை நேரில் கலந்துகொண்ட ஒரு நிறைவை அளித்தது. இசைக்கோர்வையை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, பயிற்சியின்மை காரணமாக. ஆனால் ரவி சார், வேணு சார் இன் உரைகளை கேட்டபின்பு ஒரு இசையை, கலையை எப்படி அணுக வேண்டும் என அடிப்படைகளை தெரிந்து கொண்டேன். ஜெ சார் இன் நவீன தமிழ் இலக்கிய அறிமுக நூலில் அவர் இசையை மற்ற கலைகளில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்று கூறியிருப்பார், அக்குறிப்புகள் இங்கு உதவின. சௌந்தர் சார் சொன்ன மாதிரி விவரம் எல்லாம் தெரியாது, ஆனால் இசைக்கோவை கேட்க மிக இனிமையாக உள்ளது, தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ராஜன் சார் உரையில் அவர் கூறிய உச்சரிப்புகளை கேட்ட பின் தான் அவ்வார்த்தைகள் எவ்வுணர்ச்சிகளை என்னுள் எழுப்புகின்றன என அவதானிக்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.
twinkle twinkle little star …சஷ்டியை நோக்க…தென்பாண்டி சீமையிலே போன்ற எந்த ஒரு பாடலை கேட்கும் போது எழும் உணர்வு..நினைவு…போல, வெண்முரசு இசைக்கோர்வை கேட்கும் பொழுதும் எழுகிறது. ஒரு அருமையான காட்சி அனுபவத்தை கண்முன் நிறுத்துகிறது. மேலும் மேற்சொன்ன எல்லா பாடல்களும் இசையுடன் கலந்த சொற்கள் தான் எனக்கு முதலில் அறிமுகமானது, இசை பிடித்துவிடவே வரிகளும் அர்த்தங்களும் பிடித்துவிட்டது. ஆராயத் தேவை இருக்கவில்லை. அதைப்போலவே இவ் விழாவின் மூலம் “நீலத்தின்” கவித்துவத்தை எளிமையாக உணரமுடிந்தது. ஒரு வேலை நான் இதற்குமுன் நீலம் வாசித்திருந்தால் இவ்வரிகளை இவ்வளவு அழகுடன் ரசித்திருக்க மாட்டேன். வசந்தபாலன் சார் சொன்ன மாதிரி இனி இந்த இசை இந்த காப்பியத்தை நினைவில் நிறுத்தும் படியாக உள்ளது.
இறுதியாக ஜெ சார்இன் எனக்கு மிக அனுமான வரி ஒன்று உண்டு – பாறை வெடிப்புக்குள் ஒரு சொட்டு நீர் புகவேண்டும் என்றால் இரவெல்லாம் அடை மழை பெய்ய வேண்டும். அதைப்போலத்தான் தமிழ்ச்சூழல். (https://www.jeyamohan.in/139867/).
இவ்வாறிருக்கும் சூழலில் உங்களை போன்ற அனைவரின்…அனைத்து முயற்சிகளும் காலமாகவும்… காற்றாகவும்… சூழலாகவும்… இம்மழை தொடந்து பெய்ய வழிவகுக்கட்டும்! இப்படிப்பட்ட அடைமழை ஒன்றே இங்குள்ள அறிவுச்சூழலை மாற்றக்கூடியது. நன்றிகள்..அன்புகள்:)
இப்படிக்கு,
விவேக்,
பாண்டிச்சேரி.
January 14, 2022
ஊ அண்டவா மாமா!
குத்துப்பாட்டுக்கள் எந்த கலாச்சரச் சுனையில் இருந்து ஊறி வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் தெருக்கூத்து, கரகாட்டம், கேரளத்தில் காக்காத்திக்களி, ஆந்திராவில் ஜாத்ரா என பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், சீண்டும் வகையிலும் ஆடும் நடனங்கள் குறைந்தது சிலநூறு ஆண்டுகளாக நம் பண்பாட்டில் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஒரு மரபும் அவற்றுக்குரிய அழகியலும் உள்ளது. ஐரோப்பாவில் இந்த வகையான ஆட்டங்கள் ஜிப்ஸிகளுக்கு உரியவையாக இருந்தன.
[அவை பண்பாட்டின் பகுதிகளா, உயர்பண்பாடு மட்டும்தான் பண்பாடா, மக்கள் கலைகளில் இருக்கும் இந்தக் கூறுகளை நாட்டார்ப் பண்பாடாக எடுத்துக்கொள்வதா, நாட்டார்ப் பண்பாட்டுக்கும் பரப்பிய கேளிக்கைப் பண்பாட்டுக்குமான வேறுபாடு என்ன என்பதெல்லாம் வேறு விவாதங்கள்]
பதினாறாம் நூற்றாண்டில் மேடைநாடகக்கலை வணிகநோக்குடன் விரிவானபோது இந்த ஆட்டங்கள் நாடகங்களுக்குள் நுழைந்தன. சாதாரணமாக நாடகங்களினூடாக இவை புகுத்தப்பட்டன. செவ்வியல் நாடகங்களில் நாடகம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது பெண்கள் வந்துசேர்வதற்கு முன்பு, இவை நடத்தப்பட்டன. இந்த ஆட்டங்களை தாங்கள் அனுமதித்ததில்லை என ஔவை டி.கே.சண்முகம் அவரது தன்வரலாற்றில் [எனது நாடக வாழ்க்கை] சொல்கிறார்.
பின்னர் சினிமாவில் இவை இடம்பெற்றன. ஊமைப்படங்கள் முதல் இந்தவகையான ஆட்டம் இருந்திருக்கிறது. மிகப்பழைய தமிழ்ப் படங்களில் குறத்தியாட்டம் போன்ற வடிவங்களில் இவை உள்ளன. பின்னர் இவை ‘கிளப் டான்ஸ்’ என்னும் பெயரில் சேர்க்கப்பட்டன. எண்பதுகளின் இறுதிவரை கிளப் டான்ஸ் என்பது சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சம். விஜயலலிதா முதல் டிஸ்கோ சாந்தி வரை பல தலைமுறை கிளப் டான்ஸ் நடிகைகள் இருந்திருக்கிறார்கள். பின்னர் அவை வெவ்வேறு வகையில் உருமாறின. தெருவில் ஊர்க்காரர்கள் மற்றும் நண்பர்கள் சூழ கூட்டமாக ஆடுவது, திருவிழாவில் ஆடுவது என வடிவமைக்கப்பட்டன. இன்று கதைநாயகிகள் ஆடுகிறார்கள்.
இந்த மாற்றங்களையேகூட சமூகமாற்றங்களுடன் இணைத்துப் பார்க்கலாம்..முதல் உலகப்போரை ஒட்டி தமிழகம் முழுக்க வெள்ளைய ராணுவ முகாம்கள் உருவாயின. இவற்றில் ராணுவ வீரர்களை மகிழ்விக்கும் நடனங்கள் நடைபெற்றன. அவை ஜிப்ஸி நடனங்களின் மாதிரியில் அமைந்தவை. தொடக்க காலத்தில் ஆங்கில இந்தியப் பெண்கள் இவற்றை ஆடினர். பின்னர் தமிழ்க்குடிப் பெண்களும் ஆடினர். தாசியாட்டம் என்றும் கரகாட்டம் என்றும் சொல்லப்பட்ட நாட்டுப்புற நடனங்களும் ஜிப்ஸிகளின் மரபுவந்த மேலைநாட்டு பரப்பிய மெட்டுகொண்ட பாடல்களும் இணைந்தன.
அதன்பின்னர் நகரமயமாக்கத்துடன் இணைந்து பல்வேறு கேளிக்கை விடுதிகள் உருவாயின. இந்நடனங்கள் அங்கே இடம்பெயர்ந்தன. 1980களில் பெங்களூர் பிரிகேட் ரோட்டில் இருந்த கிளப்களுக்கு முன்னால் அன்றைய கிளப் டான்ஸ் நட்சத்திரங்களின் படங்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் . நான் பெங்களூரிலும் எர்ணாகுளத்திலும் கிளப் டான்ஸ்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்த கிளப் டான்ஸ்களை சினிமா நடனமாக ஆக்கிக்கொண்டனர். கிளப் டான்ஸ் என்பது ஒரு பாவலாதான். கதைநாயகன் கிளப்புக்குச் செல்கிறான்.அங்கே சிலர் ஆடுகிறார்கள் என்னும் கதைச்சூழல் அமைக்கப்பட்டிருக்கும். அல்லது வில்லனின் ரகசிய இடத்தில் கிளப் டான்ஸ் ஆடப்படும். உண்மையான கிளப் டான்ஸ் என்பது ஆட்டமே அல்ல. சும்மா அரைநிர்வாணமாக ஒரு கூடத்தில் சுற்றித் திரிவதுதான். ஒரு மணிநேரம் ஆடுவார்கள். ஆட்டம் என்பது பத்து நிமிடம்கூட இருக்காது. விரைவான ஒழுங்கான பயிற்சிபெற்ற ஆட்ட அசைவுகளும் இருக்காது.
இதன் நடுவே இன்னொரு வகை கிளப் டான்ஸ் இங்கே ஒரு பாவனையாகவே அறிமுகமாகியது. வட இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்காலம் முதல் உருவாகி வந்த நடனமுறைகள் பல இருந்தன. பிரபுக்கள் அமர தொழில்முறை நடனக்காரிகளான தாசிகள் நடுவே வந்து ஆடுவது. நாட்ச் [Nautch] போன்ற நடனமுறைகள், அவற்றில் திறமைபெற்ற தவைஃப் [Tawaif] போன்ற நடனக்காரிகள். முகலாயர்களின் அரசும் முகலாயப்பிரபுக்களின் ஆதிக்கமும் அழிந்தபோது அவை பொதுவான கேளிக்கை மையங்களாக ஆயின.
அந்தவகையான நடனமங்கையரும் நடனமும் இன்றும்கூட நீடிக்கின்றன. நான் காசியிலும் லக்னோவிலும் அவற்றைப் பார்த்திருக்கிறேன். பாவாடை வட்டவிசிறியாகப் பறக்க ஒரு கூடத்தில் நடுவே சுழன்று ஆடுவார்கள். சுற்றி தலையணைகளில் அமர்ந்து அதை பார்க்கவேண்டும். ஹூக்காவும் ஃபாங்கும் தருவார்கள். அந்த வகை நடனங்கள் இந்தி சினிமாவில் முக்கியமான பங்கு வகிப்பவை – கதையில்கூட. உதாரணம், தேவதாஸ். அமர்பிரேம் போன்ற படங்கள். அவற்றில் கதைநாயகன் சீரழிந்தோ சீரழியவோ சென்றடையும் இடம் அந்த நடனக்கூடம்தான். நடன மங்கை அவற்றில் முக்கியமான கதாபாத்திரம்.
நடனமங்கையின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் உம்ராவ் ஜான் ஒரு முக்கியமான படம். ரேகா நடித்தது. மிர்ஸா ஹாதி ருஸ்வா [ Mirza Hadi Ruswa] எழுதிய உம்ராவ் ஜான் அடா என்னும் [Umrao Jaan Ada] முக்கியமான நாவலை ஒட்டி முசாபர் அலி இயக்க 1981ல் வெளிவந்த வரலாற்றுப் படம் அது. மிக மெதுவாகச் செல்வதனால் தோல்வி அடைந்தது. ஆனால் மிகநுணுக்கமாக அந்தப் பண்பாட்டைக் காட்டிய ஒரு ’கிளாஸிக்’ அது. அரிய பாடல்களும் கொண்டது. தமிழில் எவரும் அதைப்பற்றி எழுதி நான் பார்த்ததில்லை.
வட இந்திய சினிமாக்களில் இருந்து அந்த வகையான நடனமுறை தமிழ் சினிமாவுக்கு வந்தது. பானுமதி ஆடிய ‘அழகான பொண்ணு நான்’ முதல் குமாரி கமலா நடித்த ‘ஓ ரசிக்கும் சீமானே’ வரை பலவகையான நடனங்கள் தமிழ் சினிமாக்களில் வந்தன. அவை காலப்போக்கில் குத்துப்பாட்டுகளின் ஒரு வகைமையாக ஆயின
எம்.எஸ்.விஸ்வநாதன் குத்துப்பாட்டு படத்தில் இருக்கவேண்டும் என ஆர்வமாக இருப்பார் என்று சினிமாவில் சொல்வார்கள். “ஐட்டம் டான்ஸ் இல்லியா? ஐட்டம் டான்ஸ் இல்லேன்னா இந்த சினிமாவ எவண்டா பாப்பான்?” என்று வற்புறுத்துவார். ”ஒரே ஒரு பாட்டு வைடா…கிளாஸிக்கலா இருக்கும்” என்று மன்றாடுவார். ஒரு முறை எவரோ அதைப்பற்றிக் கேட்டபோது “ஐட்டம் டான்ஸிலேதாண்டா நான் புதிசா வெஸ்டர்ன்ல ஏதாவது செஞ்சுபாக்க முடியும்…” என்றார். மேலையிசையை அறிந்தவர்கள் எம்.எஸ்.வியின் குத்துப்பாட்டுகளில் மிகமிக அரிதான இசை பரிசோதனைகளை கண்டடைய முடியும். உதாரணம், கலைக்கோயில் படத்தில் வந்த முள்ளில் ரோஜா என்னும் பாடல்.
தேஜஸ்வினி பெகராசமீபத்தில் நான் ரசித்த குத்துப்பாடல் ஊ சொல்றியா மாமா. அதன் ஐந்து வடிவங்களையும் பார்த்தேன். மலையாளத்தில் ரம்யா நம்பீசன் பாடியது ஒத்தே வரவில்லை. பிரியாணியை ’கஞ்ஞி’யாக குடிப்பது போல இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தமிழில் ஆன்ட்ரியா பாடியதுதான் சிறப்பு என்னும் எண்ணம் இருக்கிறது. எனக்கு தெலுங்கு வடிவமே பிடித்திருந்தது.
சிறப்பாகப் படமாக்கப்பட்ட பாடல் அது. பலர் அந்தப் படமாக்கலில் உள்ள நுட்பங்களை கவனித்திருக்க மாட்டார்கள். அதற்கு கொஞ்சம் ஆந்திரத்தின் அடித்தளக் கலாச்சாரம் பற்றிய அறிமுகம் தேவை.
ஆந்திரத்தில் சிறுநகரங்களில் இன்றும் இந்தவகையான குத்துப்பாட்டும் நடனமும் பரவலாக நிகழ்கிறது. ஜாத்ரா என்று அவர்கள் சொல்லும் பொதுமக்கள் திருவிழாவின் பகுதியாக இது நிகழ்கிறது. சில ஊர்களில் லாரிகளை கொண்டுவந்து முச்சந்திகளில் நிறுத்தி அவற்றின் பக்கப்பலகைகளை திறந்துவிட்டு மேடையாக ஆக்கி விளக்குகளைப் பொருத்தி ஆடச்செய்கிறார்கள். ரசிகர்கள் மனமுவந்து பணம் கொடுத்தால் போதும்.
பெரும்பாலும் நிர்வாண, அரைநிர்வாண நடனங்கள். நிர்வாணமாக ஒரு சில கணங்கள் தோன்றுவார்கள். இதற்கென்றே பிரம்மாவர் பகுதிகளில் பெண்கள் உண்டு. பெத்தாபுரம் போன்ற இடங்களில் வழிவழியாக இதைச்செய்யும் குடும்பங்கள் உண்டு. உண்மையில் இப்பெண்கள் பெரும்பாலும் அழகாக இருப்பார்கள். இவர்களில் இருந்து பலர் புகழ்பெற்ற நடிகைகளாக ஆனதும் உண்டு.
இணையத்திலேயே ஆந்திரா நடனம் என தேடினால் இந்த ஆடல்களின் செல்பேசியில் எடுக்கப்பட்ட தரமற்ற காணொளிப் பதிவுகளை காணலாம். இந்த ஆடல்களை கண்டவர்களுக்கு ஊ சொல்றியா மாமா பாடலும் ஆடலும் அந்த ஆடல்களின் உடல்மொழி, முகபாவனைகளின்படி அமைந்திருப்பது தெரியும்.
நாம் சினிமாக்களில் காணும் சாதாரண குத்துப்பாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? நம் குத்துப்பாடல்கள் நம்மூர் நாட்டுப்புற நடனங்களின் பாணியில் அமைந்தவை. நம்மூர் கரகாட்டம், தெருக்கூத்து ஆட்டங்களில் மிகச்சிக்கலான, விரைவான அசைவுகள் உண்டு. ஆகவே ஆடுபவர்களின் முகபாவனைகள் சிலம்பாட்டம் , சர்க்கஸ் போன்றவற்றிலுள்ள தோற்றம் கொண்டிருக்கும். சிரிப்பதுபோல அல்லது மூச்சுவாங்குவதுபோல திறந்த வாயுடன், அல்லது சுழித்த உதடுகளுடன், அல்லது நாக்கைக் கடித்தபடி ஆடுவார்கள்.
இந்திராவதி சௌகான்ஆனால் ஆந்திராவின் ஜாத்ரா ஆடல்களில் எளிமையான ஆட்டம்தான் இருக்கும். பெரும்பாலும் விதவிதமாக இடுப்பில் கை வைத்தபடியோ, கைகளை விரித்தபடியோ, உடலைத் திருப்பியபடியோ நிற்பதுதான் இருக்கும். ஒரு சிறு சதுரத்திற்குள் செல்வது வருவதுதான் முக்கியமாக அவர்களின் அசைவுகளை தீர்மானிக்கிறது. பெண்கள் களைத்துப்போய் வியர்த்து வழிவதோ மூச்சுவாங்குவதோ இல்லை. நளினமான அசைவுகளை மட்டுமே காட்டுவார்கள்.
ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நிற்பதும், பார்வையை கூட்டத்திற்குள் சுழலவிடுவதும், ஜாக்கெட்டையும் தலைமுடியையும் சரிசெய்து கொள்வதும், குனிந்து காலில் கொலுசை சரிசெய்வதும்தான் ஆடல் என நடக்கும். பெண்ணின் இயல்பான அழகசைவுகளை நடத்திக்காட்டுவதுதான் அது. அவ்வப்போது உடலைக் குலுக்கி ஆடுவார்கள். நின்றபடியே தோளைக்குலுக்குவது அதில் முக்கியமான ஓர் அசைவு. அதில் ஆட்டப்பயிற்சியும் அதன் விளைவான நளினமும் இருக்கும். அரிதாக விரைவான தாளம் கொண்ட சிக்கலான நடன அசைவு நிகழும். அதை எதிர்பாராத ரசிகர்கள் கூச்சலிடுவார்கள்.
இந்த ஆட்டமுறை முழுக்க ஊ சொல்றியா மாமா பாடலின் ஆட்டத்தில் உள்ளது. குறிப்பாக ரசிகர்களில் ஒருவரை கைநீட்டி வரச்சொல்லி அழைப்பது, அவன் தயங்கும்போது அவ்வளவுதானா என கையை காட்டுவது ஆகியவை மிக அழகாக நடிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஜாத்ராவுக்கே உரிய பாவனைகள்.
அத்துடன் முகபாவனைகள். ஜாத்ராவில் ஆடுபவர்கள் ஒருவகையான சலிப்பு பாவனையையே பெரும்பாலும் கொண்டிருப்பார்கள். புன்னகைப்பதோ கண்சிமிட்டுவதோ மிகையாகச் சிரிப்பதோ வழக்கமில்லை. வெளிப்படையான பாலியல் அழைப்புகள் கூட இருக்காது. பார்வையும் சிரிப்பும் சீண்டுவதுபோல சட் சட்டென்று மாறும். ஏதோ ஒரு சீற்றம்கொண்டவர்களாக சிலசமயம் தோன்றுவார்கள். மெல்ல மெல்ல ஒரு களிவெறி கூடியபின்னர் சிரிப்பதும் கூச்சலிடுவதும் நிகழும். ஆனால் அது மிக அரிது.
இந்த ஆடலில் சமந்தாவின் பாவனைகளும் ஜாத்ராவின் நடனக்காரியின் இயல்பை, அசைவுகளை, முகபாவனைகளை அப்படியே சித்தரிக்கின்றன. நடன அமைப்பாளர் தேஜஸ்வினி பெஹரா மிகச்சிறப்பாக ஒருங்கமைத்து பயிற்சியளித்திருக்கிறார். தமிழில் ஆண்ட்ரியா பாடியிருப்பது ஒரு ஆங்கில பாப் பாடலின் பாவனையில் இருக்கிறது. தெலுங்கில் இந்திராவதி சௌகான் இந்த பாடலுக்கு தேவையான நாட்டுப்புறத்தன்மையுடன் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.
கி.ரா. இணையதளம்

வணக்கம், இந்திய மற்றும் தமிழிலக்கியத்தின் மாபெரும் கதை சொல்லியான கி.ராஜநாராயணனின் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இத்தளம், கி.ராவுடைய சிறுகதைகள், கட்டுரைகள், மற்ற படைப்புகள், அவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் எழுதிய ஆய்வுகள், பதிவுகள், ஆவணப்படம், காணொளிகள், புகைப்படங்கள் என அனைத்தும் அடங்கிய ஒரு கருவூலமாக இலக்கிய வாசகர்களுக்குப் பயன்படும் என நம்புகிறோம். மண்ணிடமும் மனிதனிடமும் அளவற்ற கரிசனத்துடன் உரையாடும் கி.ராவின் படைப்புலகத்துக்கு இந்தத் தளம் ஒரு நுழைவாயிலாக இருக்கும்.
வேதாளம், கடிதங்கள்-3
வேதாளம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
உங்களுடைய ஒரு கதை வேறேதோ கதையிலுள்ள ஒரு வரியின் நீட்சியாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். துணைவன் கதையில் இந்த வரி இருக்கிறது
அவனுக்கு துப்பாக்கி ஒரு நாய் என்று தோன்றுவதுண்டு. நீளமான ஒளிரும் நாக்கு கொண்டது. கூடவே இருப்பது. அல்லது விக்ரமாதித்தன் கதையின் வேதாளம் அது.
கேள்விகள் எதையும் கேட்பதில்லை. மௌனமானது. குளிரானது நடக்கும்போது மெல்ல பிடரியிலும் தொடையிலும் மாறி மாறி தட்டிக் கொண்டிருப்பது.
ஆனால் உண்மையில் கேள்விகள் கேட்பதில்லையா? என்ன அல்லது கேள்விகளை அவன்தான் செவி கொள்வதில்லையா? அது ஏதோ புதிர்களை போட்டுக்கொண்டிருக்கிறது. அவன் ஒருபோதும் பதில் சொல்ல முடியாதவை
இந்த வரியே வேதாளம் கதையாக ஆகியது என நினைக்கிறேன். வேதாளம் என்பது விக்ரமாதித்யனிடம் விடைசொல்ல முடியாத புதிர்களை போடுவது. செத்துப்போனது. ஆவியாக இருந்துகொண்டிருப்பது. இதெல்லாமே அந்த துப்பாக்கியும் செய்கிறது.
அதிகாரம், அரசு, பொறுப்பு இதெல்லாம்தான் அந்த வேதாளம். அது கேள்வி மட்டும்தான் கேட்கும். சடாட்சரத்தால் பதில்சொல்ல முடியாது. அரசாங்கத்தின் காலடிகளில் கிடந்து உழலும் அரசாங்கத்தி நட்டு போல்டுகளாக வாழும் எவராலும் பதில் சொல்லிவிட முடியாது
ஆர்.சிவக்குமார்
***
அன்புள்ள ஜெ,
வேதாளம் கதையின் உரையாடல்களின் ஒழுக்கு அபாரம். சுந்தர ராமசாமியின் பிரசாதம் கதையின் சாயல் இருந்தது. அதில் போலீஸ்காரருக்கும் மாட்டிக்கொண்ட அய்யருக்குமான உறவு உரையாடல் வழியாக வேடிக்கையாக உருவாகி வரும். ஆனால் அதில்கூட ஆசிரியர் புகுந்து அய்யரின் தோற்றம், மனநிலை, போலீஸ்க்காரரின் தோற்றம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பார். இக்கதை நம்மருகே அதுபாட்டுக்கு நிகழ்வதுபோல் இருக்கிறது
நான் 17 ஆண்டுகள் அரசில் வேலைபார்த்திருக்கிறேன். அரசுவேலை என்பதே ஒரு வேதாளம். என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ன விளைவு எதுவுமே தெரியாது. நம்பிச் செய்துகொண்டே இருக்கவேண்டும். 2012ல் வேலையை விட்டு கடைவைத்தேன். டபிள் மடங்கு உழைப்பு. ஆனால் நிம்மதி. ஏனென்றால் வேதாளம் தோளைவிட்டு இறங்கிவிட்டது. யாருக்காகவோ யாருடைய பிணத்தையோ சுமக்கவேண்டியதில்லை என்னும் ஆறுதல்
என்,ராமச்சந்திரன்
வேதாளம்- கடிதங்கள்-1விஷ்ணுபுரம் விழா- பிகு
வணக்கம் ஜெ.
இத்தகைய அருமையான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இரண்டு நாட்கள். எத்தனை எத்தனை முகங்கள். உற்சாக உரையாடல்கள். புகைப்படங்கள். சுவாரஸ்யமான கேள்விகள். மூத்தோரின் ஆசிகள். வழிகாட்டல்கள். அற்புதமான உணவுடன் அபாரமான இலக்கிய அறிதல்களும் அறிமுகங்களும். சந்தேகத்திற்கு இடமின்றி இது திருவிழா தான். இந்த இரண்டு நாள் அனுபவத்தைக் கொஞ்சமாக எழுதி வைத்துக்கொண்டேன். முதல் விஷ்ணுபுர விழா என்ற தயக்கம் இருந்தது, வரும் ஆண்டுகளில் தீவிரமாக பங்கேற்பேன் என்று நம்புகிறேன். இன்னும் குறைந்தது ஓராண்டுக்கு இது நினைவில் தங்கும். அதற்குள் மீண்டும் டிசம்பர் வரும். திருவிழாவுக்கு ஆயத்தமாவோம்.
விஷ்ணுபுரம் இலக்கிய விழா – பகுதி 1 விஷ்ணுபுரம் இலக்கிய விழா – பகுதி 2நன்றி ஜெ.
பிகு
நெல்லை.
ஆட்டுப்பால் புட்டு- கடிதம்
ஆட்டுப்பால் புட்டு- அ.முத்துலிங்கம்
அன்புள்ள ஜெ
அ.முத்துலிங்கம் அவர்களின் ஆட்டுப்பால் புட்டு சிறுகதையை வாசித்தேன். நான் வாசித்த அவரது முதல் கதையும் கூட. சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சுட்டிக் கொடுத்த போது வாசித்தது. அன்று அவரது கதையுலகுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. இப்போது மீண்டும் எழுத்தாளர் சுசித்ரா அக்கா அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தை வாசிக்கையில் மீள் வாசிப்பு செய்தேன்.
அவரது கதையுலகில் நுழைவதற்காக தங்களின் கட்டுரைகளை தேடியதில் புன்னகைக்கும் கதைச்சொல்லி என்ற கட்டுரையை கண்டுகொண்டேன். தங்களுடைய அந்த ஒரு கட்டுரை அ.முத்துலிங்கம் அவர்களை வாசிக்க தொடங்கியுள்ள எனக்கிருந்த ஆரம்பக்கட்ட பிழைபுரிதல்கள், அறியாமைகள் என அனைத்தையும் நீக்கிவிட்டது.
இப்போது மீண்டும் வாசிக்கையில் ஆட்டுப்பால் புட்டு எத்தனை அருமையாக இருக்கிறது என ரசிக்கத் தொடங்கிவிட்டேன். கதை முழுக்க அந்த புன்னகை ஓடி வருகிறது. ஆனால் எங்கும் எதையும் கீழிறக்கவும் செய்யவில்லை. புறவுலகை மட்டுமே சொல்லும் கதைச்சொல்லி நுட்பமாக தகவல்களை அடுக்குவதன் மூலம் கதாபாத்திரங்களின் குணசித்திரம், கதையின் தரிசனம் ஆகியவற்றை வாசகனையே தேடி எடுத்துகொள்ள சொல்லி விடுகிறான்.
கதையின் மையமான சிவப்பிரகாசம் நடுத்தர வயதை தாண்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த தந்தை. நல்ல மனிதர், வசதியான குடும்பஸ்தர், நேர்மையான உத்தியோகஸ்தர். அவருக்கு ஆட்டுப்பால் புட்டு மிக பிடிக்கும். அவர் கொழும்பிலிருந்து யாழ்தேவி வருவதன் முக்கியமான நோக்கமே புட்டை ருசிக்க தான். ஆனால் அது ரகஸ்யமான காரணம் என்று கூறுகிறார் கதைச்சொல்லி. அவர் ஏன் அதை வெளிப்படையாக சொல்லி கொள்வதில்லை? அந்த மாறியான விஷயங்களை வெளியில் சொல்வது ஒரு கூச்சமும் வெட்கமும் நிறைந்த காரியம். நமக்கு மிக முக்கியமாக தோன்றும் இந்த விஷயங்களை பிறர் மலிவாக காண்பது ஒரு பொது விடயம்.
கதையை நகர்த்தும் இரண்டாவது பாத்திரங்களான நன்னனும் அவன் மனைவியையும் பற்றி கொடுக்கப்படும் சித்திரங்களை கூர்ந்து வாசித்து எடுக்க வேண்டியுள்ளது. நன்னனை பற்றி சொல்கையில் சாதுவானவன், சொன்ன வேலையை செய்துவிட்டு கொடுத்த காசை வாங்கி கொள்ளும் அப்பிராணி, படிப்பு ஏறாத மந்தப்புத்தி காரன் என வர்ணித்து சொல்லும் கதைச்சொல்லி அவன் கூற்றாக கூறும் இந்த சொற்றொடர், ”அரசன் என்றால் அவனுக்கு ஒரு கொடி இருக்க வேண்டும். இந்த ஊர் ஆலமரத்தை பார்த்தால் அது தெரியும். எனக்கு எத்தனை இளங்கொடிகள் தொங்குகின்றன என்று” சிவபிரகாசத்திற்கு ஆச்சர்யமளிப்பதுடன் எளிய மனிதர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறது.
மனிதர்கள் பேசுவதை கவனிக்கையில் ஒன்று தெரியும், அவர்கள் பேசும் அத்தனை விஷயங்களிலும் அவர்கள் தங்களை உள்ளுர என்னவாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்து கொண்டே இருக்கும். திருமணத்திற்கு பின்னான நன்னனின் மாற்றமும், அவன் ஆட்டை திருடிச்சென்றதும் இறுதியில் பத்துமா வசவு பொழிகையில் கண்டு கொள்ளாமல் அவன் செல்வதும் சிவப்பிரகாசத்திற்கு வியப்பை தந்து கொண்டே இருப்பதற்கான காரணம். கதைச்சொல்லியின் கூறலாக சிவப்பிரகாசத்தின் மன எண்ணமாக வெளிப்படும், ‘எட்டாம் வகுப்பு நன்னனும், பத்தாம் வகுப்பு பத்துமாவும் ஒரு குழந்தையை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு ஒன்றும் பட்டப்படிப்பு தேவையில்லை.’ என்ற வரிகளில் பொதிந்து உள்ளது. இதிலுள்ள அந்த எள்ளல் கலந்த நகைச்சுவை கொடுப்பவரான சிவப்பிரகாசத்தின் கண்களை வாங்கும் நன்னனின் மனநிலையை அறிவதை தடுத்து விடுகிறது. ஏனெனில் எப்போதும் பெற்று கொள்பவனின் அகத்தின் ஒரு பகுதி கொடுப்பவன் மேல் வஞ்சம் கொண்ட படியே தான் உள்ளது. மேலும் நன்னனை போன்றவர்களை பற்ற வைக்க எப்போதுமே ஒரு பத்துமா தேவைப்படுகிறாள்.
அதேபோல் கதையில் நீதிமுறையின் மிக நீண்ட விசாரணை முறையும் வழக்கு தொடுத்தவனையே வதைக்கும் நடைமுறையின் சித்திரமும் மென்மையாக சொல்லப்பட்டாலும் நம் நீதிமுறையின் மேலான வலுவான விமர்சனத்தை பதிவு செய்கிறது.
இறுதியாக பத்துமாவின் வசவுகளை சொன்னவுடன் தான் சிவப்பிரகாசத்தின் உண்மையான அதிகார நிலை தெரியப்படுத்தப்படுவது அவரைப் போன்ற ஒருவரின் நிலையில் உள்ளவருக்கு அது எத்தனை வலியை தரும் என காட்சியாக்கி காட்டுகிறது. அதற்கடுத்த வரியே வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன் ஆட்டுப்பால் புட்டின் நினைவு வந்தது என கூறி முடிகையில் கதை வேறு தளத்திற்கு சென்று மானுடமளாவிய தரிசனத்தை காட்டி விடுகிறது.
அது கொடுக்கும் புன்னகை வாழ்க்கையை கனிந்து நோக்கி இங்குள்ள எவையும் ஒரு புன்னகைக்கு அப்பால் ஒன்றுமில்லை என கூறும் கனிந்த கதைச்சொல்லியின் தரிசனம் அல்லவா! ஆம் அந்த ஆட்டுப்பால் புட்டு பிறர்க்கு என்னவோ அது போல் தான் சிவப்பிரகாசத்திற்கு இந்த எளியவர்களின் கீழ்மையும். அதற்கப்பாலும் மௌனமாக அந்த புன்னகை மலர்ந்து இதழ் விரித்தபடியே உள்ளது.
அன்புடன்
சக்திவேல்
தேவிபாரதி ஓர் உரையாடல்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்னறம் இலக்கிய விருது முன்னெடுப்பின் 2021ம் ஆண்டிற்கான விருதினை எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்குவதில் நிறைகூர்ந்த மகிழ்வுகொள்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை உலராத உயிரீரத்தோடு பதிவுசெய்துவரும் படைப்புத்தொடர்ச்சிக்காக இவ்விருதை நாங்கள் அவருக்குப் பணிந்து அளிக்கிறோம். நொய்யல் ஆற்றின் நீர்ப்பெருக்கு போல, எளிய மனிதர்களின் வாழ்வுக்கதையை இரத்தமும் சதையுமாகத் தன்னுடைய படைப்பின்வழியாக பாவனையின்றி வெளிப்படுத்தும் தேவிபாரதி அவர்களின் அகம் கொண்டிருக்கும் தாகம் எக்காலத்தும் வற்றாதது. காலங்கள் கடந்தும் இவருடைய படைப்புகள் நிச்சயம் அதிர்வுகளை உருவாக்கும்.
எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் தன்னுடைய வாழ்வுப்பாதை குறித்து நினைவு மீள்கிற அனுபவ உரையாடலே இக்காணொளிப் பதிவு. பாரதி கோபால், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், விமல் ஆகிய தோழமைகளின் கூட்டுழைப்பில் இது சாத்தியமடைகிறது.
உங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களுக்கும், இத்தளத்தின் எல்லா வாசக மனங்களுக்கும் இக்காணொளியைப் பகிர்ந்துகொள்வதில் நிறையுவகை அடைகிறோம்.
நன்றியுடன், தன்னறம் நூல்வெளி
9843870059 / www.thannaram.in
January 13, 2022
பொதுப்பணி-ஒரு சுருக்கமான உரை
ஈரோடு ஜெயபாரதி – மாற்றுக்கல்விக்கென ஒரு வாழ்க்கை
மருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு
அஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்
அன்புள்ள ஜெ
தனது வாழ்வு முழுவதும் சமூகம், சூழலியல்,பொதுவுடமைச் சிந்தனை, காந்தியம், எழுத்து, பொதுச்சேவை சார்ந்த அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை முனைப்புடன் ஈடுபடுத்தி, அந்தந்த துறைகளில் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கிக் காட்டியவர் ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள். நண்பர்கள் மற்றும் மக்களின் பொதுப்பங்களிப்பில் மருத்துவர் ஜீவா உருவாக்கிய ‘கூட்டுறவு மருத்துவமனைகள்’ என்னும் முன்னெடுப்பானது இந்திய அளவில் முன்னுதாரணமானவை. மக்கள் மருத்துவமனைகள் என்ற பெயரில் இன்றளவும் அது இயங்கிவருகிறது.
காலஞ்சென்ற மருத்துவர் ஜீவா அவர்களின் சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து நிகழ்த்துவதற்கும், அவர் விட்டுச்சென்ற நிறைய கனவுத் திட்டங்களை உரியவாறு செயல்படுத்துவதற்கும் ஏதுவாக, நண்பர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, ‘மருத்துவர் ஜீவா அறக்கட்டளை’ என்ற கூட்டமைப்பைத் துவக்கியுள்ளனர்.
மருத்துவர் ஜீவா அறக்கட்டளையின் துவக்கம் டிசம்பர் 12ம் தேதி ஈரோட்டில் மிகச்சிறப்புற நிகழ்ந்து முடிந்தது. சிறப்பு அழைப்பாளர்களுள் ஒருவரான எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் மருத்துவர் ஜீவா குறித்த உரையாற்றிய நினைவுரையின் காணொளிப் பதிவு இது. அய்யலு குமரன், சரண், மோகன் தனிஷ்க், விமல், அங்கமுத்து ஆகிய தோழமைகளின் கூட்டுழைப்பால் இந்த காணொளி சாத்தியப்பட்டது.
எல்லாவகையிலும் மருத்துவர் ஜீவாவின் செயல்மனதை இன்னும் அணுக்கமாக அறியச்செய்கிற நல்லுரை இது.
ஸ்டாலின் பி
அன்புள்ள ஸ்டாலின்
சுருக்கமான உரை. உண்மையில் இப்போது இந்த வகையான பதினைந்து நிமிட உரைகளில் ஆர்வம் செல்கிறது. மேற்கே ஏழு நிமிட உரை புகழ்பெற்று வருகிறது. அதைக்கூட இங்கே நாம் முயற்சி செய்துபார்க்கலாம்.
இத்தகைய உரைகளில் எதையும் விளக்க முடியாது. நிரூபிக்க முடியாது. பின்புலம், தனியனுபவம் ஆகியவற்றைச் சொல்லமுடியாது. ஆனால் ஒரு தரப்பை, ஒரு வரையறையை அழுத்தமாகச் சொல்லிவிட முடியும்.
நம் இலக்கியக் கூட்டங்களில் காலத்தை கருத்தில் கொள்ளாத உரைகள் நிகழ்கின்றன. அடுத்தவர் நேரத்தை எடுத்துக்கொண்டு பேசிக்கொல்வது பெருகி வருகிறது. குறிப்பாகச் சென்னையின் சில நவீன இலக்கியப் பேச்சாளர்கள், சில பேராசிரியர்கள். அவர்கள் பேசும் எந்த விழாவுக்கும் என்னை அழைக்கக்கூடாது என தெளிவாக அனைவரிடமும் சொல்லி வருகிறேன். அழைப்பிதழில் அவர்கள் பெயர் இருந்தாலே தவிர்த்துவிடலாம்.
நான் எப்போதுமே என்னை பேச்சைக் கேட்பவர்களின் தரப்பிலேயே வைத்துப் பார்க்கிறேன். இலக்கில்லாத பேச்சு, மையமில்லாத பேச்சு, தயாரிப்பில்லாத பேச்சு என்னை பெரும் சித்திரவதைக்குள்ளாக்குகிறது. முன்பென்றால் நான் அரங்கில் எழுந்து கண்டித்து விடுவேன். அப்படி பலரை பேச்சை நிறுத்தியுமிருக்கிறேன். இப்போது நானே மேடையில் அமர்ந்திருக்க அது நிகழ்கிறது. வேறு வழியில்லை.
ஆகவே இனிமேல் மேடைகளில் மிகக்கவனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன். என் பேச்சு சரியாக இருந்தால் மட்டும் போதாது , மேடையில் நேரம் மீறி எவர் பேசினாலும் அப்படியே எழுந்து வெளியேறிச் சென்றுவிடுவது என்னும் முடிவில் இருக்கிறேன். ஏனென்றால் என் பெயரை பார்த்து என் வாசகர்கள் பலர் விழாவுக்கு வருகிறார்கள். அவர்களை இந்த மேடைவதையாளர்கள் பிடித்துக்கொள்கிறார்கள். நடைமுறையில் நான் என் வாசகர்களை இவர்களுக்குப் பிடித்துக் கொடுப்பதாக ஆகிவிடுகிறது.
ஒரு நிகழ்வில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பேசினால் எந்த உரையும் 20 நிமிடங்களுக்குமேல் நீளக்கூடாது. எந்தக்கூட்டத்திலும் வரவேற்புரை, அறிமுக உரை 10 நிமிடங்களுக்குள் நிகழவேண்டும். மூன்றுபேருக்குள் நிகழும் கூட்டம் என்றால் உரை 40 நிமிடம் நீளலாம். மேடையில் ஒரு தலைப்பில் ஒரே ஒருவர் மட்டுமே பேசுகிறார் என்றால், அப்பேச்சின்பொருட்டே பார்வையாளர் வந்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அதற்குமேல் பேச்சு நீளலாம். சாதாரணமாக ஒன்றரை மணிநேரம். அதிகபட்சம் இரண்டு மணிநேரம்.
நாம் மேடைநிகழ்வுகளை கொஞ்சம் ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறையினர் எவரும் இலக்கிய நிகழ்வுகளுக்கே வராமலாகிவிடுவார்கள். விஷ்ணுபுரம் அரங்குகளுக்கு வேறெங்கும் தென்படாத இளைஞர்கள் வருவதற்கான காரணம் நிகழ்ச்சிகள் குறித்த காலத்தில் சுருக்கமாக நிகழும் என்னும் உறுதிப்பாடுதான்.
இந்த உரை எனக்கு நிறைவளித்தது. ஜீவா இப்படித்தான் பேசுவார். காந்தியும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

