Jeyamohan's Blog, page 846

January 11, 2022

வேதாளம்- கடிதங்கள்-1

வேதாளம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வேதாளம் கதையை வாசிக்கும்போது ஒன்று தோன்றியது. நாம் பல இளைஞர்களின் புதிய படைப்புகளை வாசிக்கிறோம். அவற்றில் நமக்கு பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் மாஸ்டர் டச் என ஒன்று உண்டு. அனாயாசமாக விழும் வடிவமும் ஃப்ளோவும்தான் அது. எழுதுவதுபோலவே தோன்றாமல் எழுதிவிடுவது. எங்கும் பிரயத்தனமே தெரியாமலிருப்பது. அப்படிப்பட்ட கதை வேதாளம். அதில் பெரும்பாலும் உரையாடல்கள்தான். கதை சரளமாகச் செல்கிறது. ஆனால் அந்த சூழல், அந்த கதாபாத்திரங்கள், அந்த நிலம். அங்குள்ள மக்களின் பண்பாடு எல்லாமே தெரிகிறது. டீக்கடை வைத்திருக்கும் பெண்ணின் தெனாவெட்டும் நையாண்டியும் அவளைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. பல வரிகளில் வெடிச்சிரிப்புடன் வாசித்து முடித்தேன். அதென்ன ரப்பர் மரமா என்ற வரியை நினைக்க நினைக்க புன்னகைதான்.

வேதாளம் என்பது என்ன? போலீஸுக்கு அது துப்பாக்கி. துப்பாக்கி என்பது அரசாங்கம். பிள்ளைவாளின் வார்த்தைகளில் சொல்லப்போனால் மேலே இருந்து தலைமேல் பேளுகிறவர்கள். அர்த்தமில்லாத அதிகாரம். ஆனால் அவருக்குத்தான் அதில் அர்த்தம் இல்லை. மேலிடத்தில் இருப்பவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியும். அவர் தோளில் தொங்கும் வேதாளம் அது. இன்னொரு வேதாளத்தை கூட்டிக்கொள்கிறது. மொத்த அதிகாரமும் அஸ்திவாரக்கல்லின்மேல் ஏறி அமர்ந்திருக்கிறது.

எம்.பாஸ்கர்

***

அன்புள்ள ஜெ,

வேதாளம் ஒரு சரளமான அழகான சிறுகதை. என்ன நடக்கப்போகிறது என்றே சொல்லப்படவில்லை. ஆசிரியர் எங்கே என்றே தெரியவில்லை. உரையாடல்கள்தான். செய்திகளே சொல்லப்படாத உரையாடல்கள். ஆனால் அதன் வழியாக மொத்தக்கதையுமே உருவாகி வருகிறது. உரையாடலிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் பார்த்துவிட முடிகிறது. குறிப்பாக தாணுவின் கதாபாத்திரம். அப்பாவியான குற்றவாளி. இதயநோய் அவனை குற்றவாளியாக ஆக்குகிறது. பிள்ளைவாள் போலீஸிலும் அவன் திருட்டிலும் சிக்கிக்கொள்கிறார்கள். வேதாளம் என்பது என்ன? அவரவர் தோள்மேல் தொங்கிக்கிடக்கும் வாழ்க்கை அல்லவா?

ராம்குமார். எஸ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 10:34

ஸ்ரீராகமோ- கடிதம்

ஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு

அன்புள்ள ஜெ,

இன்று நான் உங்கள் பதிவை வாசித்தேன். தங்களுடன் பேசியதும் நினைவில் வந்தது. இசையமைப்பாளர் சரத் அவர்களின் மலையாள பாடல்கள் ரசித்தும், ஆர்வத்துடனும்  கேட்டிருக்கிறேன்.  சங்கீதத்தில் உள்ள கடினமான பிரயோகங்களும் மற்றும் புதுமையும் தனது இசையமைப்பில் முயற்சிக்கும் இவரை என் தந்தை “ராட்சசன்” என்று குறிப்பிடுவார். இவர் மெட்டுக்களை சங்கீதப் பயிற்சி இல்லாமல் பாடுவது கடினம் என்பதால் எல்லோராலும் பிரபலமாக பேசப்படவில்லை. தேவதாசி படத்தில் உன்னிகிருஷ்ணன் பாடிய “சுதா மந்த்ரம்” மற்றும் மேகதீர்த்தம் படத்தில் சரத் பாடிய “பாவயாமி பாடும் எண்டெ”  பாடல்களில் சைத க்ரஹபேத பிரயோகம் உதாரணங்களாக சொல்லலாம்.

கிரகபேதம் என்பது சம இடைவெளிகள் உள்ள சுரங்களால் ஆன ராகத்தில் செய்யக்கூடிய சுரபேதம். பழைய தமிழ் இசை முறையில் இதை பண்ணு பெயர்த்தல் என்றும், ஐரோப்பிய இசை முறையில் மாடல் ஷிப்ட் (model shift or modes in scales) எனலாம்.  இசைஞானி இளையராஜா அவர்கள் பல பாடல்களின் இடையிசையில் கிரகபேதம் செய்திருப்பார். ஆனால் சரத் பாட்டின் மெட்டில் அதை செய்திருப்பார். இவை அல்லாது, சரத் இசை அமைப்பில் ஒரு பரிசோதனை முயற்சி இருக்கும். தேவதாசி  படத்தில் யேசுதாஸ் பாடிய “சலல் சன்சல சிலம்பொலியொ” அதற்கு ஒரு உதாரணம்.  பாவனி ராகத்தில் அமைத்திருப்பார். இசைஞானி இளையராஜா  குணா படத்தில் அமைத்த  பார்த்த விழி பார்த்த படி’ பாடலுக்கு  பிறகு வந்தது. சரத் அமைத்த இந்த பாடல் அமைப்பும் அதன் சுர பிரயோகமும் மிகக் கடினமானவை.

இப்படி பரவலாக அறியப்படும் இவர், எளிமையாக மனதில் இறங்க கூடிய இசையும் அமைத்துள்ளார். இந்த பாடல் அவற்றில் ஒன்று.

சென்ற வருடம் கோவிட் சூழலில் இவர் செய்த பேஸ்புக் காணொளியில் இந்த பாடல் உருவானதைப் பற்றி பேசி உள்ளார். இயக்குனர் டி கே ராஜீவ் குமார் இந்த பாடல் காட்சியை பற்றி  இவரிடம் இவ்வாறு கூறினார் – “நாயகனின் குடும்பத்தின் அன்னியோனியத்தை காட்டும் காட்சி, அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நெடுமுடி வேணுவும் வருவார். அவர் ஒரு சங்கீத பிரியர்”.  இதை மனதில் வைத்து சரத் அக்காலத்தில் கேரளத்தில் மிகவும் கேட்கப்பட்ட “பக்கல நிலபடி” எனும் தியாகராஜ கீர்த்தனையின் ராகமும் மற்றும் தாளத்தை வைத்து இந்த பாடலை அமைத்தார். இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்த்தால் பின்னணி இசையொழுக்கில் வரும் பக்க வாத்தியங்கள் கர்நாடக சங்கீதத்தில் வரும் ஜதிகளை தான் மேற்கோள் காட்டி உள்ளன.  திரு யேசுதாசும் மெட்டை பாராட்டி மிக உற்சாகமாய் பாடினார். பின்னர் சரத் இடம் காட்சிப்படுத்தப்பட்டது சுமார் என்று வருந்தினார்.

ஆனால் அதை பின்னணி இசை இல்லாமல்  ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடியதை கேட்டபோது தான் பாடல் வரிகள் என்னுள் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தி மனதை மலர செய்தது. மீண்டும் மீண்டும் இவ்வாறு கேட்கும்போது “ப்ரணயம்” எனும் மலையாள சொல் மனதை நிரப்பியது.

நம் மனதிற்கு இனியவர்களோடு கழித்த அந்த நாட்கள், பேசிய தருணங்கள், சொல் இன்றி நெடுநேரம் நடந்த பாதை, அந்த சூழல் இவை எல்லாம் மனதை நிரப்பி என்னை ஓர் இறகாய் காற்றில் மிதக்கச் செய்தது. இத்தகைய வாழ்வின் நுண்ணிய தருணங்களை மிக இயல்பாகவும், அழகாகவும் வர்ணிப்பது மலையாளப் பாடல்களின் தனிச் சிறப்பு. இவற்றை கடந்த கால ஏக்கத்தை விட என்றும் மலரும் நினைவுகள் என்று சொல்வதே சரி என்று தோன்றுகிறது.

அதை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடிக்காட்டி உள்ளார். ஹரீஷ் பாடியபோது கரகரபிரியா ராகத்தில் அமைந்த இன்னொரு கீர்த்தனையை அகம் மீட்டி எடுத்தது. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடிய “பேரிடி நின்னு பெந்சினவாரெவரெ (பெயர் இட்டு உன்னை வளர்த்தவர் யாரோ)” எனும் தியாகராஜ கீர்த்தனை. சிறு வயதிலிருந்து கேட்ட பாடல். எஙகள் வீட்டில் உள்ள எல் பி ரெக்கார்டில் கேட்டவை. அந்த பாடல் மெட்டு அமைப்பு இந்த ப்ரணயத்திற்கு மிக பொருத்தமானது என மனம் சுட்டிகாட்டியதும் கீர்த்தனத்தின் பொருளை புரிந்து கொள்ள முயன்றேன். பிறகு தோன்றியது, ராமன் மீது பக்தியில் தொய்ந்திருக்கும் ப்ரணயம் தான் அது!

ப்ரணயத்தில் தோய்ந்திருந்தது இன்றைய நாள் !

மிக்க அன்புடன்,

கணேஷ்

***

Youtube Reference Links

Sharreth FB Session

Peridi Ninnu – L P Record version

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 10:31

விஷ்ணுபுரம் விழா- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

2021 க்கான விஷ்ணுபுர விருது விழா கோவையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பது உறுதியானதும்  எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக நானும் மகன்களும் விழாவில் கலந்து கொள்வது குறித்து பேசிக்கொள்ள  துவங்கினோம்

இந்த முறை இளையவன் தருணும் டேராடுனிலிருந்து  விடுமுறையில் வந்திருந்தான். சரண் மேற்படிப்புக்கான திட்டங்களுடன்  இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு விழாவில்  கலந்து கொள்ள முடியாதென்பதால் மூவரும் வெள்ளி மாலையே கோவை செல்ல முடிவு செய்து, ராஜஸ்தானி அரங்கின் அருகிலேயே விடுதி அறை ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

விழா தேதி  நெருங்க  நெருங்க நோய் தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுவிடுமோ என்னும் அச்சம் இருந்தது. அடிக்கடி செய்திகளை பார்த்து அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். விழா நாயகரான விக்கிரமாதித்யன் அவர்களின் கவிதைகளையும் பிற விருந்தினர்களின் படைப்புகளையும் மூவருமாக கலந்து  வாசித்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.

கல்லூரி திறந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாக இருந்தாலும்,  விழா நடைபெறவிருந்த சனி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் விடுப்பு எடுப்பது குறித்து கவலை இல்லாமல் இருந்தேன். ஆனல் எதிர்பாரா விதமாக விழாவிற்கு இரு நாட்கள் முன்பு சரணுக்கு நல்ல காய்ச்சல் தொடங்கியது.மருத்துவமனை சென்று அது கவலை படும்படியான காய்ச்சல் இல்லை என்பதை உறுதிசெய்தேன்.  எனினும்  வெள்ளிக்கிழமை கல்லூரியில் மனம் ஏதோ இனம்புரியாத சங்கடத்தில் இருந்தது.

கல்லூரி முடிந்து வீடு வந்து  தான் நலமாக இருப்பதாகவும் ஆனால் காய்ச்சலுடன் விழாவிற்கு  வருவது நோய்தொற்று சமயத்தில் சரியாக இருக்காது என்பதால் வரவில்லை என்றும் சொன்ன  சரணை அரைமனதுடன் வீட்டில் விட்டுவிட்டு நானும் தருணுமாக கோவை  வந்தோம்.

வெள்ளி இரவு ராஜஸ்தானி அரங்கில்  நீங்கள் இருந்த அறைக்கதவை  தயக்கத்துடன் திறந்தேன். வழக்கம்போல கட்டிலில் நீங்களும் நாற்காலிகளிலும்,  தரையிலும் நண்பர்களுமாக அமர்ந்து தீவிர  உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

அப்போதே விழா மனநிலை தொடங்கிவிட்டிருந்தது. அனங்கன், ஜாஜா, சாகுல், சுபா, நிகிதா உள்ளிட்ட பலர் இருந்தார்கள்.  இரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் புறப்படும்வரை இருந்துவிட்டு பின்னர் விடுதிக்கு சென்றேன். மறுநாள் நிகழ்வு குறித்த எதிர்பார்ப்பும், தனியாக வீட்டில் இருக்கும் மகனின் நினைவிலும் தூக்கமின்றி கழிந்தது இரவு .

சனியன்று அதிகாலையிலேயே , உறங்கும்  தருணுக்கு காத்திராமல் விழாவிற்கு புறப்பட்டு  விடுதிக்கு வெளியே இருக்கும் ஒரு ஆட்டோவை அழைத்தேன் அந்நேரத்துக்கு அழைத்ததும் பரபரப்பாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜஸ்தானி அரங்கம் என்றதும் கேள்வியுடன் என்னை பார்த்தார். பின்னர் ’’என்னம்மா மார்கழி மாசம், தலைக்கு ஒரு குல்லா போட்டுக்க கூடாதா? இப்படி வரீங்களே ? என்றார்.  எனக்கு  குளிர் உறைக்கவே இல்லை என்பது அப்போதுதான் உறைத்தது.  ராஜஸ்தானி  அரங்கம்  வந்து அங்கே ஆள் நடமாட்டம் இல்லாதிருப்பதில் அவர் குழம்பி, ’’இங்கேதானாம்மா’’ ? என்றார் ஆம் என்றேன். குழப்பத்துடன் அவர் புறப்பட்டு சென்றார்

பனி போர்வை போல  மூடியிருந்தது.  யோகேஸ்வரனும், உமாவும் விருந்தினர்களுக்கான  அறை சாவிகளுடன் வாசலிலேயே காத்திருந்தார்கள்.. உமா அந்த அதிகாலையில் அங்கிருந்தது ஆச்சரியமளித்தது அவளுக்கு சிறு மகள் இருக்கிறாள். மகளை தன் கணவர் பார்த்துக்கொள்வார் என்றாள் அத்தனை தூரத்திலிருந்து அந்த அதிகாலையில் கடும் குளிரில் உமா வந்திருந்தது நெகிழ்ச்சி அளித்தது..

. சென்னையிலிருந்து  மதுவும் இன்னும் பலரும் வரத்துவங்கியதும் உமாவும் யோகேஷும் பரபரப்பாக அறைகளை ஒதுக்கி சாவியை கொடுக்க துவங்கினார்கள். யோகேஷ் விருந்தினர்களை வரவேற்க ரயில் நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தார்.

அந்நேரத்துக்கே அனைவருக்கும் தேநீர் வந்திருந்தது.  பெட்டிகள் பிரிக்கப்பட்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டு கொண்டிருந்தன. நூற்பு ஆடைகள் இருந்தன. தன்னறத்தினர்  சின்ன சின்ன மலர்க்கோலங்களை வாசல் தரையில் அமைத்தார்கள். அவற்றுடன்  ஓரிகாமி காகித பறவைகள்  மற்றும் வண்ணத்துப்பூச்சி வடிவங்களையும் ஆங்காங்கே அமைத்தார்கள்.அத்தனை புதிய  புத்தகங்களை பார்க்க பரவசமாக  இருந்தது.

திருச்செந்தாழை, நாஞ்சில் நாடன், சோ தர்மன், பாவண்ணன், வசந்த சாய்  என்று விருந்தினர்களும்  வரத்துவங்கினார்கள். .எதிர்பார்த்தது போலவே விஜயசூரியன் உணவளித்து கொண்டிருந்தார்.

நீங்கள் வழக்கம் போல் குன்றா உற்சாகத்துடன்  சுற்றி நிற்பவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்.. அந்த ஆற்றல் என்னை எப்போதும் வியப்படைய வைக்கும் நள்ளிரவு வரை உரையாடிக்கொண்டு, பயணித்துக்கொண்டு இருந்தாலும்  அதிகாலையில் புத்தம் புதிதாக மலர்ச்சியுடன் தீவிரமான உரையாடலில் நீங்கள் இருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். உங்களின் அந்த விசை உடனிருப்பவர்களையும் செலுத்திக் கொண்டிருக்கும்.

வரிசையாக 7 பைக்குகளில் இளைஞர்கள் வந்தபோது நான் அவர்கள் இடம் மாறி வந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் அவர்கள் விஷ்ணுபுரம் விழாவிற்கு தான் வந்திருந்தார்கள். இந்த முறை வழக்கத்தை காட்டிலும் அதிக இளைஞர்கள் விழாவில். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் இடத்தில் பணிபுரிபவள் என்பதால் , இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு அதிகாலையில் இலக்கிய பரிச்சயம் உள்ள அத்தனை இளைஞர்கள்  வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

அரங்கில் இரம்யா, சுஷீல்,  கல்பனா, ஜெயகாந்த், ஜெயந்தி , காளி பிரசாத், கதிர்முருகன், குவிஸ்செந்தில், பாலு  உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பல நண்பர்கள் விழா தொடர்பான  ஏதோ ஒரு முக்கிய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை யாரும் வழிநடத்தவில்லை.  ஆனால் எல்லா வேலைகளும் கச்சிதமாக  விஷ்ணுபுரம் விழவிற்கே உரிய மாறா ஒழுங்குடனும் மகிழ்வுடனும்  நடந்துகொண்டிருந்தன. மேடை இலக்கிய விவாதத்தின் பொருட்டு ஒருங்கிக்கொண்டிருந்தது.  விருந்தினர்கள் ஒவ்வொருவராக  வரவேற்கப்பட்டு  அரங்கில் அமர செய்யப்பட்டனர். உணவு  தயாராக  இருந்தது அறைகள்  காத்திருந்தன, புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன. அரங்கு நிரம்ப துவங்கியது..

கண்ணுக்கு தெரியாத  மாபெரும்  வலையொன்றினால்  இணைக்கப்பட்டிருப்பது போல அத்தனை திசைகளிலும் பணிபுரிந்தவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு விழா அரங்கும், விழாவும் தயாராகிக்கொண்டிருந்தது.  அவ்வலையின்  மத்தியில்  மானசீகமாக உங்களை  நிறுத்தியே அனைவரும் பணிபுரிந்தார்கள்.

அஜிதனை, பார்த்தேன் முன்பே  அலைபேசியில்  பேசி அறிமுகமாகி நட்புடனிருந்த  அத்தானி ஆனந்த் மனைவியுடன் வந்திருந்தார், ஆவடியில் இருந்து தேவி, திருச்சியிலிருந்து டெய்ஸி ஆகியோரையும்  முதல்முறையாக பார்த்து பேசினேன். விக்கிரமாதித்யன் அரங்குக்குள் நுழைந்தார்.அவரை பார்க்கையில் அவர் ஒரு காட்டுச்செடி என்று மனதில் நினைத்தேன்., மழையும், வெயிலும், புயலும் ,காற்றும்  எதுவும் பொருட்டேயில்லாத காட்டுச்செடி.அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு வணங்கினேன். என்னை  அவருக்கு தெரிந்திருந்தது.

விழா குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது.   இலக்கிய விவாத அமர்வுகள் துவங்கின, வழக்கமாக மேடையை அலங்கரிக்கும் ஜெர்பரா பெருமலர்க்கொத்துகள்  இந்த முறை முதல் நாள் அமர்வுகளின் போது வைக்கப்பட்டிருக்க வில்லை. மறுநாள் விழா மேடையில் வழக்கம் போல் அவை இடம்பெற்றிருந்ததை காணொளிகளில் பார்த்தேன்.

விழா  அரங்கு வண்ண மயமாக இருந்தது, நல்ல கூட்டம். ஆஸ்டின் செளந்தர் மகளும் புதுமணப்பெண்ணுமான பார்கவி கணவருடன் வந்திருந்தாள்.  காகித வண்ணத்துப்பூச்சியை தன் சிறு மகளுக்கு  எடுத்துக் கொடுத்து  ’’பட்டர்ஃப்ளை’’ என்று அவளுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார் ஒருவர்.   சொல் திருந்தியிருக்காத அவள் ’’டட்டட்டை’’ என்றாள் மலர்ந்து.  அந்த பச்சை வண்ண காகித வண்ணத்துப்பூச்சியை பரவசத்துடன் கைகளில் எடுத்துக்கொண்டு தளர்நடையிட்ட அவள் இரு எட்டுக்கள் வைப்பதும் பின்னர்  ’’ட ட்டட்டை’’ என்று சொல்லி விட்டு அண்ணாந்து  வானில் பறக்கும் மானசீக வண்ணத்துப்பூச்சியை கண்டதுபோல பரவசமடைவதும் பின்னர் மீண்டு சில எட்டுகள் வைத்துவிட்டு டட்டட்டை என்று சொல்லி அண்ணாந்து பார்த்து பூரிப்பதுமாக இருந்தாள்.

இலக்கிய அமர்வுகளின் போது இந்த முறை  வழக்கத்தை  காட்டிலும் கூடுதல் கேள்விகள் வந்ததை கவனிக்க முடிந்தது. பல புதியவர்கள் ஆழமான கேள்விகள் எழுப்பினார்கள். நீங்கள் பெரும்பாலும் ஏதும் கேட்கவில்லை.

மதிய உணவிற்கு பின்னர் செந்தில் ஜகன்னாதன் அமர்வு துவங்கிய போது  சரண் கடும் காய்ச்சலும்,  குறைந்து கொண்டே வரும் ரத்த திட்டுக்களின் எண்ணிக்கையுமாக  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வந்தது. பதற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பினேன். தருணுக்காக   அரங்கின் வாசலில்  காத்திருக்கையில்  திருச்செந்தாழை பார்த்து  விசாரித்துவிட்டு ’’கவலைப்படவேண்டாம் சரியாகிவிடும்’’ என்றார்

2 மணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்தேன், விழாவை தவறவிட்டு வர காரணமாயிருந்ததற்கு  சரண் பலமுறை அந்த கடும்காய்ச்சலிலும் மன்னிப்பு  கேட்ட படியே  இருந்தான்.  கண்ணீருடன் அணைத்துக்கொண்டேன்.   இரண்டாம் நாள் விழாவை மருத்துவமனையில் இருந்தபடி  நண்பர்கள் அனுப்பிய காணொளிகளிலும் புகைப்படங்களிலும்  பார்த்துக்கொண்டிருந்தேன். விழா நிறைவில் எடுத்துக்கொள்ளப்பட்ட குழு புகைப்படத்தில் நானும் மானசீகமாக ஒரு ஓரத்தில் நின்றேன். விழாவை தவறவிட்டதன்  இழப்புணர்விலிருந்து விழா குறித்த கடிதங்களை  வாசிப்பதன் மூலம்  மீண்டு வருகிறேன். இதோ ஜனவரி  வந்துவிட்டது இன்னும் 10 மாதங்களில்  அடுத்த விஷ்ணுபுர விழா வந்துவிடும் என்று இப்போதே மனதை தேற்றிக்கொண்டு, எதிர்பார்க்க  துவங்கிவிட்டேன்

அருணாவின்  ‘பனி உருகுவதில்லை’  ஆனந்தின் டிப் டிப் டிப், உள்ளிட்ட எந்த புத்தகங்களையும் வாங்க முடியாமல் போனதில் கூடுதல் வருத்தம்

மகன் உடல் தேறி வீடு வந்துவிட்டான்.  இன்னும் விழா உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கையிலிருந்த காகித வண்ணத்துப்பூச்சியை பார்த்துக்கொண்டு, மனதிலிருக்கும் வண்ணத்துப்பூச்சி பறப்பதை கற்பனையில் கண்டு களித்த  அந்த குழந்தையை போல,   கலந்துகொண்ட ஒருநாளின் நினைவில் தவறவிட்ட மற்றொரு நாளை கண்டுகொண்டிருக்கிறேன்.

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 10:30

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தளத்தால்  ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவன் நான். ஆகவே உங்களுக்கு இந்த கடிதம். கொரோனா ஊரடங்கு காலங்களில் பொழுதுகள் சீராக சென்றாலும் மனிதர்களையே  பார்த்துப்  பழகிய மனங்களுக்கு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது பார்க்கவே அபாயகரமானதாக இருந்தது. இந்த சூழலில் தான் பறவைகள் கண்ணுக்குப் பட்டன. பறவைகள் இதற்கு  முன்னர் வாசலையும் மொட்டை மாடியையும் கடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், ஒரு சில பறவைகளைத்  தவிர வேறு பறவைகளின் பெயர் தெரியாது.

ஆட்சிப் பணி முதன்மை தேர்வில் எழுதியபோது  ஒரு கேள்வி பறவைகளைப்  பற்றியது. எளிமையானது. ஆனால் பதில் அப்போது தெரியவில்லை. வீடு திரும்பி பதில் ஆராயத்  தொடங்கியதும் எங்கள் ஊர் இணையதளத்தில் திரு.நவநீதம் அவர்கள் ஐந்தாறாண்டு கண்காணித்த பறவைப் பற்றிய தரவுகளைச் சேகரித்தத்  தொகுப்பில் தேர்வில் கேட்கப்பட்டப்  பறவை இருந்தது. அது குக்குறுவான்-coppersmith barbet (சமீபத்தில் எழுத்தாளர் அம்பையின் விருது பெற்ற கவிதை தொகுப்பின் அட்டைப்படத்தில் இருப்பதும் இப்பறவையே). வாசலை கடந்த பறவை அப்போது தேர்வுத்தாளையும் கடந்ததை உணர்ந்தேன். என் சூழலுக்கும் பாடத்திற்கும் இடையிலிருக்கும் இடைவெளி குறைந்ததையும் உணர்ந்தேன். அதிலிருந்து பறவை கண்காணிப்பு (bird watching) ஒரு பொழுதுபோக்காக ஆனது.

அதற்குப்பின், 2021 ஆம் ஆண்டு ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை’ நவநீதம் அறிமுகம் செய்தார். அதிலிருந்து  பறவைகளின் தரவுகளைச்  சேகரித்து பதிவிடும் ஆர்வம் வந்தது. மொத்தம் அறுபத்தி ஏழு பறவைகள் கொண்ட இணைய தொகுப்பில் இரண்டு பறவைகள் நான் புதிதாக கண்காணித்து கணக்கெடுத்தது. அவை  இரண்டே பறவைகள் என்றாலும் ஒரு கலைப்படைப்பிற்குப்  பின் அடையும் மனநிம்மதிக்குச் சமம். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொகுப்பைப்  பறவைகள் தொடக்கக் கையேடாக நவநீதம் வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார். டெல்லி AIIMS கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற திரு நவநீதம் கையேடை அறிவியல் நோக்கிலும், சாமானியர் எளிதாக புரிந்துகொள்ளலும் நோக்கிலும் வடிவைமைப்பித்து இருப்பது சிறப்பு. முக்கியமாக பள்ளிக்குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் பறவைகள் கணக்கெடுப்புக்குள் கொண்டுவருவதே அவரது ஆசை.

தொடக்கக் கையேடை வடிவைமைக்க வல்லுநராக திரு பஞ்சபாகேசன் ஜெகந்நாதன் (https://www.ncf-india.org/author/646417/p-jeganathan)  அவர்களின் உதவி குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் பறவையியலாளர்களில்  முக்கியமானவர். அவரின் “பறவைகள்: அறிமுகக் கையேடு” (பறவைகள்: அறிமுகக் கையேடு. ப. ஜெகநாதன், ஆசை. Cre-A publishers, 2014). பறவைகளைத்  தமிழில் சரியான பெயர்க்ளோடு அறிமுகப்படுத்துகிறது. நவநீதம் அவர்கள்  தயாரித்த கையேட்டிலும் தமிழில் பெயரிட மற்றும் முழுமைபெற  ஜெகநாதன் உதவியுள்ளார்.

மொத்தம் 67 பறவைகளின் தரவுகள் கொண்ட கையேடு மின்னிதழாக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு பறவைகள் கண்காணிப்பில் உள்ளது.

மன்னங்காடு பறவைகள் தொடக்கக் கையேடு –  இணைப்பு

https://drive.google.com/file/d/1VOltWbSdJTGnrmx0SCs0WVSf0Uszmn2B/view?usp=sharing

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (Pongal bird count)

இந்த தொகுப்பைப் பற்றி குறிப்பிட காரணம் வரும் பொங்கல் அன்று தொடங்கும் மூன்று நாள் ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு’. வெளிநாடுகளில் சிறப்பாக செய்து வரும் சூழியல் செயல்பாடுகளில் ஒன்று பறவைகள் கணக்கெடுப்பு. எடுத்துக்காட்டுக்கு,  National Audubon Society, Cornell Lab of Ornithology and Birds Canada இணைந்து நடத்தும் ‘Great Backyard Bird Count’. இந்த கணக்கெடுப்புக்கு உலங்கெங்கிலும் இருந்து பறவை ஆர்வலர்களின் தரவுகள் வரவேற்கப்படுகிறது. கடந்தாண்டு ஒன்றரை லட்சத்திற்கும் மேல் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இது போன்ற சூழியல் சார்ந்த கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு மிகக்குறைவு. இருந்தும் 2014 க்கு பிறகு தொடங்கப்பட்ட மாநில வாரியான பறவைகள் கணக்கெடுப்புகள் குறிப்பிடும்படியான ஒன்று. கேரளத்தில் ஓணம் பறவைகள் கணக்கெடுப்பு , தமிழகத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு, ஆஸாமில் பிஹு  பறவைகள் கணக்கெடுப்பு என புதிதாக நிறைய விழாக்கள் வலசை பறவைகளைக்  கணக்கிடும் பொருட்டு அந்தந்த காலத்திற்கேற்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.

பொங்கல்  பறவைகள் கணக்கெடுப்பு வரும் ஜனவரி 14 -17 நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பில் கலந்துகொள்ள அடிப்படையான  பறவைகள் மற்றும்  சூழியல் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். வல்லுநர்கள் உதவி இல்லாமல் சரியாக கண்டுகொண்ட பறவைகளைத்  தொடக்கக் கையேட்டை கொண்டு  அல்லது இணையத்தின் உதவியோடு கண்டுகொள்ளலாம்.

சரி எப்படி கணக்கெடுப்பு நடத்துவது?, தேவையான உபகரணங்கள் பற்றிய

கேள்விகளுக்கு தெளிவான பதில் இந்த தளத்தில் உள்ளது.https://birdcount.in/event/pongal-bird-count-2022_tamil/.  மேலும் சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் மினனஞ்சல் மற்றும் தொலைபேசி எண் மேலுள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் கணக்கெடுப்பில்  ஈடுபடுபவர்களுக்கு  உதவும் செயலிகளின் இணைப்பு

Merlin Bird ID by Cornell Lab – https://play.google.com/store/apps/details?id=com.labs.merlinbirdid.app&hl=en_IN&gl=US

eBird by Cornell Lab – https://play.google.com/store/apps/details?id=edu.cornell.birds.ebird&hl=en_IN&gl=US

இவ்விழாக்களில் மட்டும் தான் கணக்கெடுப்பு நடக்கிறதா என்றால், இல்லை. இவ்விழா ஒரு அறிமுகம். ஒருங்கிணைப்பு மட்டுமே. நேரம் கிடைக்கும் பொழுது செய்வது அவசியம்.

கோ வெங்கடேஸ்வரன்

venkatgv1997@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 10:30

January 10, 2022

வேதாளம் [சிறுகதை]

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார்.

இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார்.

“அது இருக்கு…” என்றார் சடாட்சரம். “எங்கிட்டு இருக்குன்னுதான் தெரியல்ல. இருந்து தாலியறுக்குது.”

“இந்த நொரநாட்டியம்லாம் இங்க பேசப்பிடாது. மனுசன் இங்க தாடியிலே தீப்பிடிச்ச மாதிரி நின்னுட்டிருக்க நேரம்… போவும் வே…”

“போவாம பின்ன இங்க நின்னு அவுத்துப்போட்டு ஆடுதோமா? பில்லு பலதும் பெண்டிங் நிக்குது… சொந்தப்பைசாவிலே போயிட்டு வாறது. செலவளிச்ச பைசாவ கேட்டா ஆமணக்கெண்ணையிலே குண்டி களுவினமாதிரி பதிலு…”

இன்ஸ்பெக்டர் சீற்றத்துடன் ஃபைலை மூடி “அப்ப நான் என்ன உம்ம பைசாவ வைச்சு தின்னுட்டிருக்கேனா? என்னவே பேசுதீரு? வேணுமானா வந்து தேடிப்பாரும்வே… நானும் அவுத்துபோட்டு நிக்குதேன். தேடிப்பாரும்…” என்று கூச்சலிட்டார். “வாறானுக… பேச்சு பேசிக்கிட்டு. நான் எளுதி அனுப்பிச்சாச்சு… நீரு போயி மேலே உள்ளவன்கிட்ட கேளும்வே… கேக்குதீரா? போனு போட்டு தாறேன்… கேக்குதீரா வே?”

“நான் என்னத்துக்கு கேக்குதேன்… நம்ம பொளைப்பு நாறப்பொளைப்பு. இனிமே ஒரு ஆறுமாசமோ ஏளுமாசமோ. தொப்பிய களட்டி வைச்சுட்டு போனா பென்சன்ல மானமா வாழலாம்.”

இன்ஸ்பெக்டர் “என்ன எளவோ செய்யும்… எனக்க கிட்ட கேக்கவேண்டாம்… பிடிக்கல்லேன்னா அவன கூட்டிட்டு போகவேண்டாம். கோர்ட்டுலே பிபி நம்ம அம்மைக்க ஆம்புளையப் பத்தி பேசுவான். மேலே உள்ளவனுக அம்பிடு பேரும் என் மேலே பேளுவானுக.”

“நீரு என் மேலே பேளுவீரு” என்றார் சடாட்சரம். “அது எப்பமும் அப்டியாக்கும். பூமிதாங்குத ஆமையாக்கும் கான்ஸ்டபிளுன்னு சொல்லப்பட்டவன். அவனாக்கும் கடைசி. அவனுக்க மேலேதான் அம்பிடுபேரும் இருந்து பேளுவாங்க… மேலே இருக்கானுகள்லா, சூப்ரண்டண்டு, ஐஜி, கவர்னரு, சனாதிபதின்னு…”

இன்ஸ்பெக்டர் ஒன்றும் சொல்லவில்லை.

“இந்த ஒருவாட்டி இப்ப போறேன். இனிமே எனக்க சொந்தப் பைசாவ செலவளிக்க மாட்டேன். கண்டிசனா சொல்லியாச்சு. வாற சனிக் கெளமைக்குள்ள எனக்க பில்லுகள் செட்டிலாகணும்.”

இன்ஸ்பெக்டர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.

சடாட்சரம் தொப்பியை கழற்றி கையிலெடுத்து வழுக்கை மண்டையை தரவியபடி ரைட்டர் ஆறுச்சாமியிடம் போய் “மெம்மோவக் குடும்வே. நான் கெளம்புறேன்” என்றபடி ஸ்டூலில் அமர்ந்தார்.

“என்னவாக்கும் சண்டை?”

“பில்லு நிக்குதுன்னு சொன்னா தாடியிலே தீப்பிடிச்சிருக்குன்னு சொல்லுதாரு.”

“அண்டியிலே அட்டை கடிச்ச மாதிரின்னு எங்க குத்தாலம் பக்கம் சொல்லுவோம்.”

“நாசமா போவும்.”

அவர் கார்பன் தாள் வைத்து மெமோவை எழுதி ரப்பர் ஸ்டாம்பு ஒட்டி ஒரு பிரதியை சடாட்சரத்திடம் தந்தார். ஏற்கனவே அதில் எஸ்.ஐ. கையெழுத்திட்டிருந்தார்.

“பய என்னமோ அனத்திட்டே இருந்தானே ராத்திரி?” என்றார் ரைட்டர்.

“ஆரு?”

“இவந்தான்வே, தாணுலிங்கம்…”

“அவன் ஆளு தேறின திருடனாக்குமே…”

“இல்லவே, அவனுக்கு என்னமோ மேலு சொகமில்ல.”

“அதுக்கென்ன? கோர்ட்டிலே ஆஜராக்கினா அப்டியே ஆசுபத்திரிக்கு போயி காலுநீட்டி படுத்துக்கிடலாமே. நீலவிரிப்புள்ள மெத்த. பாலு, ரொட்டி, சோறு, கறி, அவியலு… வே, இப்பம் காலம்பற முட்டை உண்டு. அவிச்ச முட்டை…”

“அவனுக்கு காய்ச்சலுன்னு நினைக்கேன்… நனைஞ்ச நாயி மாதிரி அனத்துறது கேட்டுது.”

“அடி உண்டோ?”

“அடியா? அதெல்லாம் அப்ப. இப்பம் அடிச்சா நாம போயி செயிலிலே கிடக்கணும். எஸ்.ஐய பாத்தாக்கூட எந்திரிக்கல்ல. அவரு நாலஞ்சு கேள்வி கேட்டாரு. வக்கீலுகிட்ட கேக்காம வாயத்திறக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.”

“பாரும்வே, வீடுபூந்து திருடுறவன் சட்டம் பேசுதான்.”

“காலம் அப்டி… எஸ்.ஐ எங்கிட்ட, செரி வளமைபோல கேஸ போட்டிரும்னாரு. தொண்டிமுதலும் சாட்சியும் போட்டு ஒரு மாதிரி எளுதியாச்சு.”

சடாட்சரம் எழுந்துகொண்டு “பெரிய பஸ்ஸு இங்க நிப்பாட்ட மாட்டான். யூனிஃபாம கண்டா டபிள் விசில் அடிக்கான். வெயிலு வாறதுக்குள்ள போனா நல்லது. இல்லேன்னா வேர்த்து நாறணும். இதில சனியன வேற தூக்கணும்.”

“அது டூட்டில்லா? வே, அது என்னான்னு நினைச்சீரு? உலகமகா யுத்தம் கண்ட பாட்டாவாக்கும். அந்தக்காலத்திலே  பாயிண்ட் த்ரீ நாட் த்ரீ என்ஃபீல்டுன்னு சொன்னா மகாராஜா கணக்காக்கும். அதுக்க தேக்கு கடைஞ்ச கட்டையும் பாளீஷ் போட்ட பேரலும் பித்தளை டிரிக்கரும்…” நாற்காலியில் சாய்ந்து கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தார். “எங்க அப்பா கொண்டுவருவாரு. சுவரிலே சாய்ச்சு வைச்சுகிட்டு கஞ்சி குடிப்பாரு. பக்கத்திலே போகக்கூடாது. தள்ளி நின்னு பாப்போம் நானும் அண்ணனும். வீட்டிலே சுடலைமாடன் மாதிரி ஒரு சாமி வந்து நின்னுட்டிருக்கிறது மாதிரியாக்கும். அப்டி ஒரு கெத்து ஒரு லுக்கு. அப்ப முடிவெடுத்தாச்சு போலீசாகணும்னு. அண்ணன் பட்டாளத்துக்கு போனான். நான் இங்க வந்தேன்.”

“வராம முடியுமா? தலையெளுத்துல்லா?” என்றார் சடாட்சரம். “பீயிலே ஈ முட்டையிட்டா அதுக்க புளு அங்கதானே பொறந்தாகணும்?”

“நீரு அதை வேதாளம்னு சொன்னீருல்லா அதுக்காகச் சொன்னேன். அப்பல்லாம் இங்க மலைமேலே சந்துக்குச் சந்து சண்டியனுங்க. மலைக்கொள்ளைக்காரனுக. குடிகாரப்பயக்க வேற. அப்பா அந்த ரைஃபிளை தோளிலே சாய்ச்சுட்டு வருவாரு… அப்டியே பம்மிருவானுக. சுடலையக் கண்டா மலைவாதைகள் ஓடிருமில்லா, அது மாதிரி. ஒத்த ஒரு குண்டு வெடிச்சதில்ல. அத தூக்கிட்டு சும்மா அந்தால இந்தால லாந்தினதனாலேயே இங்கிட்டு சட்டம் ஒளுங்கு அமைஞ்சு போச்சு பாத்துக்கிடும்.”

“அப்ப அது துப்பாக்கி. இப்பம் வெத்து கட்டையில்லா?”

“அப்பமே அப்டித்தான் இருந்திருக்கும். ஆரு கண்டா?”

ரைட்டரிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு சடாட்சரம் ஆயுத அறைக்குப் போய் ரிஜிஸ்டரில் தன்பெயரையும் சர்வீஸ் மெமோ எண்ணையும் நுணுக்கி எழுதினார். ஒரு ரைஃபிளை எடுத்து அதன் எண்ணை கண்ணைச் சுருக்கி உற்று உற்றுப் பார்த்து எழுதினார்.

சாவியை திரும்பக் கொடுத்துவிட்டு அலமாரியில் இருந்து தந்திபேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சட்டை லுங்கியுடன் லாக்கப்புக்குச் சென்றார். உள்ளே தாணுலிங்கம் நீல அண்டர்வேருடன் சுவர் மூலையில் குந்தி சாய்ந்து அமர்ந்திருந்தான். சடாட்சரம் பூட்டை திறந்து கதவருகே நின்று “டேய்” என்றார்.

அவன் உடம்பு மெல்ல அதிர்ந்தது. சடாட்சரம் கம்பியில் தட்டி “ஏலே, எந்திரிலே” என்றார்.

அவன் முனகினான்.

“ஏலே இந்தா போட்டுக்கோ… கெளம்பு” என்று பொதியை அவனருகே வீசினார்.

அவன் கண் விழித்தபோது எதையும் அடையாளம் காணவில்லை. “ம்?” என்றான்.

“என்னலே செய்யுது?”

“ஒருமாதிரி இருக்கு.”

“லாக்கப்பிலே பின்ன ரெண்டுமாதிரியா இருக்கும்? கெளம்பு, கோர்ட்டுக்கு போகணும்…”

“என்னாலே முடியல்ல.”

“ஏலே எந்திரிலே…”

“முடியல்லண்ணு சொன்னேன்லா? ஏன் தொண்டைய கீறுதீரு?” என்றான்.

“லே மக்கா. உன்னைய கோர்ட்டிலே ஆஜராக்கினா நீ அங்க மயிஸ்ட்ரேட்டு எஜமான்கிட்ட சொல்லு மேலுக்கு முடியல்லன்னு. ஆசுபத்திரிக்கு அனுப்பிருவாங்க… இங்க இருந்து என்ன செய்யப்போற?”

அவன் “என்னைய நேத்து காலம்பற கூட்டிட்டு வந்தாக… இருபத்துநாலு மணிக்கூர் நேரம் லாக்கப்பிலே வைச்சிருக்கு. இது குற்றமாக்கும்” என்றான்.

“ஆமா, கோர்ட்டிலே சொல்லு. உடனே மயிஸ்ட்ரேட்டு அப்டியே கண்ணீரு விடுவாரு. எறும்பு மூத்தா ஈசலு. அவரு எஸ்ஸையா இருந்து மேலே போனவராக்கும்… எந்திரிலே.”

அவன் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்தான். கஷ்டப்பட்டு குனிந்து லுங்கியை எடுத்தான். உண்மையிலேயே உடம்பு முடியவில்லை போலிருக்கிறது என்று சடாட்சரம் நினைத்துக்கொண்டார்.

அவன் வெளியே வந்து “போறவளியிலே ஒரு சாய குடிக்கணும்” என்றான்.

“சாயையும் வடையும் பளம்பொரியும் எல்லாம் உண்டு. நீ வா… நீ இப்ப சர்க்காருக்க மருமகன்லா?” என்றார் சடாட்சரம்.

அவன் சட்டைக்கையை சுருட்டி விட்டுக்கொண்டான். “ஒரு பாக்கெட் சிசர்ஸ் வாங்கி குடுத்துப்போடும்… அங்க எம்பிடு நேரம் காத்திருக்கணும்னு ஆரு கண்டா?”

“உங்கையிலே காசிருந்தா எனக்கு சிகரெட்டு வாங்கி குடுலே… இங்கபாரு, பஸ்ஸுக்க பைசாவ சொந்தப் பாக்கெட்டிலே இருந்து போட்டாக்கும் நான் உன்னைய கூட்டிட்டுப் போறது. நீ சாயையும் வடையும் கேட்டது நியாயம். நாம நாளைக்கும் ஆளுக்காள் முகம் பாத்துக்கிட வேண்டிய ஆளுங்க…”

“அப்ப ஒரு கெட்டு பீடி வாங்கி தாரும்வே.”

“பீடின்னா செரி.”

சடாட்சரம் மேஜை மேலிருந்த கைவிலங்கை எடுத்து அவன் கையில் மாட்டினார்.

“இது எதுக்கு? நானே சாவுறனா இருக்கிறனான்னு நிக்கேன்.”

“அது வேற கத… வெளியப்போயி நல்ல காத்த பாத்தா உனக்கு குதிரக்காலாக்கும் வாறது… நாம இதெல்லாம் பாக்கத் தொடங்கி வருசம் முப்பத்திமூணாச்சுலே.”

அவர் மறுமுனையை தன் கையில் மாட்டிக்கொண்டார். ரைட்டர் “வே அவனுக்க ரெண்டு கையையும் சேத்து போட்டாப் போரும்வே” என்றார்.

“நமக்கு அது பளக்கமில்ல… நான் எப்பவும் இப்டியாக்கும், தெரியும்லா?” என்றார் சடாட்சரம். “போலீஸுகாரன் எப்பவும் திருடனுக்க மனசோட இருக்கணும்னு நம்ம பளைய  பென்னி சாரு சொல்லுகதுண்டு.”

“அவரு பக்கா திருடன்லா?”

விலங்குபோட்ட கையை மேலே தூக்கி தாழ்த்தி “இப்ப நாம ரெண்டுபேரும் சொந்தமாக்கும்” என்றான் தாணுலிங்கம்.

“வாய மூடுலே, வகுந்துருவேன்” என்றார் சடாட்சரம்.

“அவன் சொல்லுகது செரி… இது போல ஒரு பந்தம் வேற உண்டும்னா அது கல்யாணபந்தம் மட்டுமாக்கும்” என்று ரைட்டர் சிரித்தார்.

“சிரிப்பேரு… உமக்கு நிளலிலே ஃபேன் கீளே இருக்கப்பட்ட வேலையில்லா?” என்றார் சடாட்சரம். “வாடே.”

“ஏம்வே அங்க என்ன சிரிப்பு? போகலியா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“போறம்… போகாம இங்க என்ன ரெக்கார்டு டான்ஸா ஆடுதோம்? எனக்க பில்லு சனிக்கிளமை ரெடியா இருக்கணும்…” என்றார் சடாட்சரம்.

இன்ஸ்பெக்டர் அதை கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை.

“வாடே நின்னு இளிக்காம” என்று சடாட்சரம் சீறி விலங்கு போட்ட கையை இழுத்தார்.

“பளைய காலத்திலே ராஜாக்கள் செய்யுத ஒரு வேலை உண்டுடே. ஒருத்தனுக்கு தண்டனை குடுக்கணுமானா இன்னொருத்தனுக்க பொணத்தோட அவனை சேத்து கட்டி தூக்கி ஆத்திலே போட்டிருவாங்க. அவன் பொணத்தோட நீந்தி கரைசேந்தா தப்பிச்சிடலாம்…”

“இப்ப என்ன சொல்ல வாறீரு?”

“இல்ல, போற வளியிலே ஆறு உண்டு… பஸ்ஸும் பளசு, பாலமும் பளசு”

“நீரெல்லாம் வெளங்க மாட்டீரு” என்று சடாட்சரம் படிகளில் இறங்கினார்.

தாணுலிங்கம் மெல்லிய தள்ளாட்டத்துடன் வந்தான். ஆனால் உடலில் காய்ச்சல் இருப்பதுபோலவும் தெரியவில்லை. அவனை பத்தாண்டுகளாகவே சடாட்சரத்துக்கு தெரியும். பதினாறு வயதிலேயே வீடுபுகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். மென்மையான காய்ந்த புல்பாசி போல மீசையும் தாடியும். அடர்ந்த கொத்துத் தலைமுடி. கொஞ்சம் பூனைச்சாயல் கொண்ட கண்கள். மெல்லிய உதடுகள். பெண்மைச்சாயல் கொஞ்சம் உண்டு என்பதனால் சிறுவனாகவே தெரிவான்.

“பீடி தாரும் வே”

“இப்பதானே கெளம்பியிருக்கே… கடை அந்தாலேதான். வா”

போலீஸ் ஸ்டேஷன் ஊருக்கு மிகவும் தள்ளி அந்தக்காலத்தில் மகாராஜா கட்டிய பழைய ஓட்டுக் கட்டிடத்தில் இருந்தது. அங்கிருந்து மண்சாலைக்குச் செல்லவே ஒரு ஃபர்லாங் ஆகும். அதன் பின் மண்சாலையில் ஒரு கிலோமீட்டர் நடந்தால் தார்ச்சாலை. அதிலும் அரைக்கிலோமீட்டர் சென்றால்தான் ஆலமரத்தடி பஸ் ஸ்டாப். அங்கே சண்முகதாஸின் டீக்க்டையும் பெட்டிக்கடையும் தொழுவமும் இணைந்த வீடு.

சடாட்சரம் ரைஃபிளை தோளில் சாற்றிக்கொண்டு நடந்தார். அதன் எடை முதலில் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் கொஞ்சநேரம் வைத்திருந்தால் தோள் கடுக்க ஆரம்பிக்கும். மடித்து வைத்திருக்கும் கையிலும் வலி எடுக்கும். மறுகையை தாணுலிங்கம் கையுடன் சேர்த்து விலங்கிட்டிருந்தார். ஆகவே தோள் மாற்றிக்கொள்ளவும் முடியாது.

“கைவெலங்க அவுத்தாக்க தோள் மாத்தி வச்சுக்கிடலாம்ல?” என்றான் தாணுலிங்கம்.

“அந்த வேலைய உன் கையிலே வச்சுக்க, என்னலே… வெலங்கு நீ கோர்ட்டு வராந்தாவுக்கு போன பொறவுதான் அவுரும்.”

“சின்னப்புள்ளைக பாத்தா உம்மையும்தானேவே திருடன்னு சொல்லும்? அதுக்காச் சொன்னேன்.”

“டேய், சின்னப்புள்ளைக முதல்ல தெரிஞ்சுகிடுறது அப்பா அம்மா. அடுத்து காக்கா. அப்றம் யாரு? போலீஸு… என்னான்னுடே நினைச்சே. போலீசாக்கும் இந்த சமூகத்த சமூகமா வச்சிருக்கது.”

“இல்லேன்னா தேவலோகமா ஆயிருமோ?”

“நக்கலு? இடுப்போட ஒரு சாத்து சாத்தினா குண்டுமணி உடைஞ்சுபோயிரும் பாத்துக்க.”

“இல்ல கேக்கேன், அந்த துப்பாக்கி என்னத்துக்கு? வெலங்கு இருக்குல்ல?”

“அது வெள்ளக்காரன் காலத்து சட்டம்… இந்த துப்பாக்கி வெள்ளக்காரன் காலத்து ஐட்டம். முதல் உலகமகா யுத்தத்திலே இருந்து வந்ததாக்கும்…”

“அப்ப வெலங்க அவுத்தா என்ன? நான் ஓடினா நீரு சுடும் வே.”

“யாரு, நான்? இத வச்சு சுடணும்? டேய், இத என்னான்னு நினைச்சே? இது வெறும் மட்டை… உசிரில்லா பொணமாக்கும்.”

“உம்மாணை?”

“கண்ணாணை… வெறும் மட்டைடே. இங்கபாரு, ஒரு துப்பாக்கியிலே என்ன இருக்கு? வெளியே காணுகது இந்த மரமட்டை, நல்ல பர்மாத்தேக்குல கடைஞ்சு செஞ்சதாக்கும். பின்ன இந்த பேரல்… இது ரெண்டுக்கும் உள்ள இருக்கப்பட்டதுதான் துப்பாக்கிக்க உண்மையான எந்திரம். அதாக்கும் ரைஃபுளுக்க உசிரு… இந்தா இது டிரிக்கர். இதோட சேந்து உள்ள ஒரு ஸ்ட்ரைக்கர் உண்டு. அதுக்கு முன்னாடி ஒரு சிலிண்டர். அதிலேதான் கார்ட்ரிட்ஜ வைக்கணும்…”

“கார்ட்ரிட்ஜுன்னா?”

“குண்டுடே… குண்டும் அதுக்குண்டான வெடிமருந்தும் சேந்ததாக்கும் கார்ட்ரிஜ்”

“ஓகோ”

“துப்பாக்கி வெடிச்சபிறவு கீள விளுந்து கிடக்கும்லா, அது”

“நான் எங்க பாத்தேன்?”

“நானும் பாத்ததுதாண்டே… சுடுறதுக்குச் சொல்லிக்குடுத்தாங்க… அதெல்லாம் அப்ப. அத அப்பவே மறந்தாச்சு.”

“இப்ப இதவச்சு சுட முடியாதோ?”

“எப்டி சுடுகது? டேய், சொன்னேன்ல, இதுக்க உசிரு போயி நெறைய காலமாயாச்சு. அசல் முந்நூத்திமூணுக்க டிரிக்கர், ஸ்டிரைக்கர், சிலிண்டர் எல்லாம் நல்ல பித்தளையிலே வார்த்து செஞ்சிருப்பான். வெண்ண மாதிரி வளுக்கும். சத்தமே கேக்காது. எண்ணை போடவேண்டியதில்லை. எவ்ளவு காலம் வச்சு அடிச்சாலும் உள்ள தேய்மானமே இருக்காது… வெள்ளக்காரன் ஐட்டம்டே. என்ஃபீல்டுன்னு பிரிட்டன்லே ஒரு எடம். அங்க செஞ்சது… இப்ப இங்க உள்ளவனுக உருட்டுறது மாதிரி இல்ல.”

“ஓகோ”

“இதெல்லாம் இங்க வந்து நூறு வருசம் தாண்டியாச்சு. இங்க போலீஸுக்கு வந்தே அம்பது வருசம் போயாச்சு. வந்தப்பமே கண்ணு வச்சிட்டானுக. எப்ப எடுத்தானுகண்ணு தெரியாது. ஸ்டேசன்ல இருக்கிற பதிமூணு ரைஃபிளிலயும் மட்டையும் பேரலும் மட்டும்தான் இருக்கு. இரும்பிலே சும்மா டிரிக்கர் மாதிரி ஒண்ணை ஒட்டி வச்சிருக்கான். மத்தபடி உள்ள ஒண்ணுமில்ல.”

“உம்மாண?”

“கண்ணாணடே… நான் எதுக்கு பொய் சொல்லுதேன்? அதுவும் உன்னைய மாதிரி திருடன்கிட்ட?”

அவன் கூர்ந்து பார்த்தபின் “வெறும் மட்டை” என்றான்.

“ஆமா… இதுக்க நம்பர் இருக்கப்பட்டது பேரலிலேயாக்கும். அதனாலே ரிஜிஸ்டர்லே இருக்கிற நம்பர் உள்ள துப்பாக்கி ஸ்டேசன் ஸ்டாக்லே இருக்குன்னு கணக்கு…”

“பாக்க மாட்டாகளா?”

“எப்பவோ ஆரோ கையெளுத்து போட்டு ஸ்டாக் வாங்கியாச்சு… இப்ப பிடிக்கப்போனா ஆரையின்னு பிடிக்க? அதனாலே அப்டியே விட்டாச்சு.”

“இத நீரு சொமக்குதீரு?”

“சுமந்தாகணும்லா?”

“பல்லில்லா பாம்பு மாதிரி.”

“நாங்க வேதாளம்னு சொல்லுகது… தோளிலே தொங்குதுல்லா?”

“நீரு ஆரு, விக்ரமாதித்யனா?”

“அவனாவது காடாறுமாசம் நாடாறுமாசம்… ஏலே நமக்கு எப்பமும் காடுல்லா?”

சண்முகதாஸ் கடையில் இல்லை. எருமைக்கு புல்பறிக்கச் சென்றிருப்பான். அவன் வீட்டுக்கு நேர்பின்னால் பெரிய குன்று. அது ரிசர்வ் ஃபாரஸ்ட். கமலம்மைதான் இருந்தாள்.

“டீ சொல்லும்வே” என்றான் தாணுலிங்கம். “பீடியும் வேணும்.”

“இருடே, கோமணத்த அவுக்குறதுக்குள்ள கோணச்சி புள்ளைபெக்க நின்னாங்கிற சேலாட்டுல்ல இருக்கு. சொல்லுதேன்.”

சடாட்சரம் அவனுக்கு ஒரு டீ சொன்னார். தனக்கு ஒரு பாலில்லாத டீ. பால்டீ குமட்ட ஆரம்பித்து நீண்டநாட்களாகிறது. போலீஸ் வேலையிலும் டிரைவர் வேலையிலும் முதல் ஒரு ஆண்டுக்காலம்தான் பால்டீ குடிக்க முடியும். வேளைகெட்ட வேளையில் டீ குடித்து வயிற்றில் அமிலம் ஊறிவிட்டால் அதன்பிறகு பாலைக் கண்டாலே வாயில் புளிப்பு தோன்றும். போதையை வயிற்றுக்குள் ஊற்றாமல் தூக்கமும் வராது.

“ஒரு பீடிக்கெட்டு” என்றான் தாணுலிங்கம்.

“முதல்ல டீயக்குடிடே.”

“பீடியில்லாம டீ குடிக்கது ஒருமாதிரி தந்தையில்லாத்தனம்லா?”

“வெளங்கீரும்… நல்ல சொகுசுடே.”

“உள்ளதச் சொல்லட்டா? எனக்கு எல்லாத்திலயும் ஒரு சொகுசு வேணும். வேலைக்கு போகாம திருடப்போறது அதுக்காக்கும்.”

“திருடுறது சொகுசா?”

“வேய், நீரு போலீஸு… நான் கேக்கேன். உள்ளதச் சொல்லும். நீரு எந்த வேலையும் பாக்காம தொடர்ச்சியா எம்பிடு நாளு சந்தோசமா இருந்திருக்கேரு?”

“வேலை செய்யாமலா? லீவு குடுக்கமாட்டானுக அம்மைபெக்காத அடகோடனுங்க… கல்யாணம் கட்டின புதிசிலே நானும் கோமதியும் திருச்செந்தூரு போயி ஒருவாரம் இருந்தோம்.”

“நான் போன ஒண்ணர வருசம் முளுக்க ஒரு நாள் ஒரு மணிக்கூர் கூட ஒரு வேலையும் செய்யல்ல. சாப்பாடு, தூக்கம், சினிமா… நமக்கு பாட்டிலே நல்ல ஆர்வமுண்டு… பாடட்டா?”

“வேண்டாம்” என்றார் சடாட்சரம். “ஐஸ்வரியமான ஜீவிதம்டே… நெஞ்சறிஞ்சு சொல்லுதேன். நீ அனுக்ரகம் வாங்கிவந்த ஆளாக்கும். அடுத்த சென்மத்திலே உன்னைய மாதிரி திருடனா பொறக்கணும்.”

“ஏன் இப்ப திருடுறது?”

“அதுக்கெல்லாம் ஒரு தைரியமும் நேக்கும் வேணும்டே… நாம பொதி சுமக்குத களுதையாக்கும்… பாத்தேல்ல. இதாக்கும் பொதி. வேதாளம்லா?”

துப்பாக்கியை கடைமுன் சாய்த்து வைத்துவிட்டு கட்டன் சாயாவை வாங்கிக்கொண்டார்.

“அத எதுக்கு இங்க சாய்ச்சு வைக்கேரு? பிள்ளைகள் உள்ள வீடாக்கும்” என்றாள் கமலம்மை.

“கமலாக்கா, அது கிளவனாக்கும். தண்டு தளர்ந்துபோன கெளவன்… ஒண்ணுக்கும் எடுக்காது” என்றான் தாணுலிங்கம்.

“என்ன ஆனாலும் வெடிக்கப்பட்ட சாதனமாக்கும்.”

“வெடிச்ச காலம்லாம் போச்சுல்லா?” என்று சடாட்சரம் சொன்னார்.

“அந்தால மாற்றி வையும்…”

“இப்ப எடுத்துக்கிடுதேண்டி… சும்மா கெட” என்றார் சடாட்சரம் “உனக்க கெட்டினவன் எங்க?”

“புல்லு பறிக்க போனாரு.”

“புல்லுக்க கூட அவன் கஞ்சாவும் கொண்டு வாறான்னு ஒரு பேச்சு உண்டு.”

“பேசும்…இந்தா பெஞ்சு கிடக்குல்லா? இருந்து நல்லா பேசும்…”

“ஒருநாளைக்கு வந்து நல்லா இருந்து பேசுதேண்ட்டீ.”

“வாரும்… நறுக்கி விடுதேன்.”

“அப்டி பலரும் நறுக்கிட்டுண்டுடீ” என்று சடாட்சரம் சிரித்தார். டீ கொஞ்சம் புரைக்கேற இருமிக்கொண்டார்.

“அதென்னவே ரப்பர் மரமா? சீவிச் சீவி விடுகதுக்கு?” என்றான் தாணுலிங்கம்.

“நீ சும்மா இருடே” என்று சடாட்சரம் சிரித்தார்.

தாணுலிங்கம் பீடிக் கட்டை அவனே எடுத்து ஒரு பீடியை கயிறுச்சுருளில் எரிந்த கனலில் பற்றவைத்து ஆழ இழுத்தான். விலங்கிட்ட கையால் டீயை குடித்தபோது கூடவே அவர் கையும் எழுந்து அமைந்தது.

“நான் ரெண்டு கையாலே டீ குடிக்குதது இப்பமாக்கும்” என்றான் தாணுலிங்கம்.

“அடிகள வாங்கப்பிடாது…” என்றார் சடாட்சரம்.

“இப்பம் எங்க போறீரு?” என்று கமலம்மை கேட்டாள்.

“கண்டா தெரியல்லியா? கோர்ட்டுக்கு. இந்த ஐட்டத்த அங்க ஹேண்டோவர் செய்யணும்”

“இப்ப பஸ்ஸு இல்லல்லா?”

“என்னது பஸ்ஸு இல்லியா?” என்று சடாட்சரம் அதிர்ச்சி அடைந்தார்.

“காலம்பற மலைக்கு மேலே அணைக்கு போன பஸ்ஸு அங்க உடைஞ்சு நின்னுபோச்சு… பிரேக்டவுனு. இனி அடுத்த பஸ்ஸு மத்தியான்னம் ஒண்ணரைக்காக்கும்.”

“அய்யோ…” என்றார் சடாட்சரம்.

“ஆனா இப்டியே காட்டுவளியா இறங்கி கீளபோனா கோதையாறு பஸ்ஸு வரும்…”

“அந்தா தொலைவு போகணுமே?” என்றான் தாணுலிங்கம்.

“என்ன ஒரு ஆறு கிலோமீட்டர்… விறுவிறுன்னு போனா அரமணிக்கூர் நேரம்…” என்றாள் கமலம்மை.

“அரமணிக்கூர்லே உனக்க கள்ளப்புருசன் போவான்… நான் நடக்க மாட்டேன்” என்றான் தாணுலிங்கம்.

“லே, கள்ளபுருசன் உனக்க அம்மைக்கு…லே” என்றாள் கமலம்மை.

“நான் இல்லேன்னு சொன்னேனா?” என்றான் தாணுலிங்கம்.

“லே, சொன்னாக்கேளு. இப்ப போனாத்தான் கோர்ட்டுக்கு போகமுடியும்…” என்று சடாட்சரம் சொன்னார்.

“அதுக்காக நடக்கச்சொல்லுதீரா? காட்டுவளி… என்னால முடியாது.”

“லே மெல்ல நடந்தாப்போரும்லே… அஞ்சு கிலோமீட்டர்… இறக்கமாக்கும்.”

“என்னாலே முடியாது.”

“சொன்னாக்கேளுலே”

“எனக்கு நெஞ்சு நோவுது… என்னன்னோ இருக்கு… என்னாலே முடியாது.”

“இங்கபாரு… இப்ப நீ வந்தா உன்னைய கோர்ட்டிலே கொண்டுபோயி நிப்பாட்டி அந்தாலே அப்டியே ஆஸ்பத்திரிக்கு அனுப்புவேன். வரலேன்னா திரும்ப போலீஸ்ஸ்டேசன். மறுக்கா லாக்கப்பிலே இருக்கணும்… கொசு கடிக்கும். பாயோ தலகாணியோ போர்வையோ கெடையாது… உனக்கும் மேலுக்கு சுகமில்ல… ஏலே, அந்த லாக்கப்ல கிடக்கிறதுக்கு எண்ணி எண்ணி நடந்தாக்கூட அஞ்சுகிலோமீட்டர் நடக்குறது ஈஸிதாண்டே.”

“வாறன்… வளியில நான் அந்தாலே ஓடிருவேன்.”

“ஆமா ஓடுதே… நடக்க முடியாதவன் ஓடுவியோ?”

“அந்த துப்பாக்கியாலே உம்மைச் சுட்டுப்போட்டு ஓடிருவேன்.”

“இந்த துப்பாக்கியாலே சுட்டா உனக்கு கேஸ் இல்ல பாத்துக்க.”

“ஏன்?”

“மயிஸ்ரேட் நம்ப மாட்டாருல்லா?” சடாட்சரம் அவரே தன் நகைச்சுவைக்கு தொப்பை குலுங்கிச் சிரித்தார்.

“நான் விளுந்தா என்னைய தூக்குவேரா வே?”

“தூக்குதேன்.”

“உம்ம தோளிலே ஒரு வேதாளம் கிடக்குல்லா?”

“நீ இன்னொரு வேதாளம்… வாடே”

“அப்ப இன்னொரு கெட்டு பீடி வாங்கி குடும்.”

“பீடிப்புகை இருந்தாத்தான் வண்டி போவுமோ… எளவு அந்தச் சனியனை குடுடீ அவனுக்கு. பொகைஞ்சு நாசமா போவட்டும்.”

பீடியை இழுத்தபடி தாணுலிங்கம் நடந்தான். அவர்கள் காட்டுப்பாதைக்குள் இறங்கினார்கள்.

“என்ன எறக்கம்” என்றான் தாணுலிங்கம்.

“நீ என்னடே, திருடன்னு சொல்லுதே… எறக்கத்துக்கு பயருதே?”

“நான் எங்க எறங்கினேன்?”

“பின்ன நீ என்ன ஆப்பீஸு வேலையா செய்யுதே?”

“நான் ஓடுகதும் சாடுகதும் இல்ல… வீட்டுக்கு வெளியிலே ஒளிச்சிருப்பேன். பொம்புளையாளுக ஒண்ணுக்குப்போக வெளிய வாற நேரத்திலே திறந்த கதவு வளியா உள்ள போயிருவேன்… உள்ளத எடுத்துக்கிட்டு மெதுவா நடந்து வந்திருவேன்… பைசாவும் பொன்னும் மட்டும்தான் எடுக்குதது… நம்மாலே ஓட எல்லாம் முடியாது…”

துப்பாக்கி ஒரு செடியில் மாட்டியது.”எளவு” என்றார் சடாட்சரம்.

“அந்தச் சனியன நீரு தூக்கணும்னு விதியிருக்கு பாரும்.”

“இத எவனெவனோ தூக்கிட்டு சண்டைக்கு போயிருப்பான். கட்டிப்பிடிச்சுட்டு தூங்கியிருப்பான்… அந்தக்காலத்திலே நம்மாளுக அரேபியப் பாலைவனத்திலே எல்லாம் சண்டை போட்டிருக்கானுக.”

“பல பேர கொன்னிருக்கும்லா?”

“ஆமா… இதெல்லாம் ரெத்தபலி கேக்குத தெய்வங்களை போலயாக்கும்… கொடூர தெய்வமாக்கும், ஆனா நாம காவலுன்னு நினைப்போம்…”

“வேதாளம்!” என்றான் தாணுலிங்கம் “அதுகிட்ட நாலு கதையச் சொல்லச் சொல்லும்வே”

“நம்ம கதையே புராணமா கெடக்கு… அதுக்குமேலே இது சொல்லணுமாக்கும்?”

“என்ன கத?”

“போனமாசம் காட்டுக்குள்ள ஒரு பொணம். செத்து ஒரு நாள் ஆகியிருக்கும். நாயும் நரியும் கிளிச்சுபோட்டு. அதுக்கு ராத்திரி முளுக்க காவலிருந்தேன்.”

“தனியாவா?”

“இல்ல, எனக்க வீட்டுக்காரியும் கூட இருந்தா… கேக்கான் பாரு”

“பொறவு?”

“பொறவு என்ன? விடிய விடிய பொணத்தச் சுத்தி பந்தம் கொளுத்தி வச்சுகிட்டு காவலிருந்தேன். செந்நாயும் நரியும் ஊளைபோடுது. என்னென்னமோ சத்தம்… இந்தா இதை பிடிச்சுகிட்டு உக்காந்திட்டிருந்தேன்.”

“இது என்ன செய்யும்வே? வெடிக்காதுல்லா?”

“ஆமா, ஆனா அப்ப அந்நேரத்திலே இதானே துணை?”

“விக்ரமாதித்யனுக்கு வேதாளம் தொணை.”

“அப்டி பல எடங்களிலே இது தொணையா இருந்திருக்கு… இந்தா இந்த ரைபிளத்தான் நான் எப்பமும் எடுப்பேன்… இதுக்க வாரிலே ஒரு முடிச்சு உண்டு…”

“இது வெயிட்டு குறைவா?”

“எல்லாம் ஒரு வெயிட்டுதான்… பின்ன இதுக்குமேலே ஒரு அபிமானம். என்ன இருந்தாலும் நம்ம கூட இருந்தது… பல இடங்களிலே துணைக்கு வந்திருக்கு… கொஞ்சம் நிப்பம்டே”

“ஏன்?”

“தோளு கடுக்குது.”

அவர் துப்பாக்கியை வைத்துவிட்டு அமர்ந்தார். தாணுலிங்கம் சற்று அப்பால் அமர்ந்து ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டான்.

“ஏம்டே பீடிய இளுத்துக்கிட்டே இருக்கே” என்றார் சடாட்சரம்.

”நெஞ்சு ஒருமாதிரி இருக்கு.”

“அதுக்கு புகைய இளுக்குதியாக்கும்?”

“வேற என்னத்தச் செய்ய? நமக்கு சின்னவயசிலே இப்டி நெஞ்சிடிப்பு உண்டு… ஒரு வேலையும் செய்ய முடியாம இருக்கதனாலே திருடுறதுன்னு எறங்கிட்டேன்… சோறு திங்கணும்லா? சாவ முடியாதுல்லா?”

சடாட்சரம் துப்பாக்கியை எடுத்து தரையில் இருந்த புழுதியை அள்ளி போட்டு துடைத்தார்

“என்ன செய்யுதீரு?”

“கையிலே இருக்குத எண்ணை பட்டு வளுக்குது… பிடி நிக்கல்ல”

“வேதாளம்னா பொணமா?”

“அப்டியாக்கும் கதை”

“இங்கேருந்து பாத்தா மனுசத்தோலுக்க நிறமாக்கும் கட்டைக்கு”

சடாட்சரம் அதை மீண்டும் மடிமேல் வைத்துக்கொண்டார்.

“இத இப்டியே சுமந்துகிட்டு போகணும்… இன்னும் இருக்கும் ஒரு மூணுகிலோமீட்டர்”

“ஆமடே, கெளம்பிருவோம்… கோர்ட்டுல சோத்துநேரத்துக்குள்ள போகணும்.”

“இத சுமக்கணும்லா?”

“ஆமா, நான் இத முப்பத்தஞ்சு வருசமா சுமக்குதேன்… இப்டி நாடு முளுக்க ஆயிரக்கணக்கானவனுக சுமக்கானுக.”

“ஆனா ஒண்ணும் வெடிக்காது?”

“ஆயுதப்படைக்காரன் வச்சிருக்கிறது வெடிக்கும்…”

“பின்ன எதுக்கு இதெல்லாம்?”

“சனங்க பயப்படுவாங்கள்லா?”

“காட்டிலே ஒரு மட்டைய தோளிலே வச்சுகிட்டு போனாக்கூட குரங்குகள் பயப்படும்… வேட்டைத்துப்பாக்கிகளை அதுகளுக்கு தெரியும்…”

சடாட்சரம் எழுந்துகொண்டார். “வாடே போலாம்” என்றார்/

அவன் எழப்போனவன் இடக்கையால் நெஞ்சை அழுத்தி பிசைவதுபோல நெரித்தான்.

“என்னலே?”

அவன் நன்றாக வியர்த்திருப்பது தெரிந்தது. கண்கள் மேலே செருகியிருந்தன.

“லே, இஞ்சபாரு…லே”

அவர் அவனை உலுக்க அவன் வாயை திறந்து மூச்சுத்திணறுவதுபோல அசைத்தான். கழுத்தில் தசைகள் இழுபட்டு துடித்தன. கண்கள் மேலேறி வெண்விழி தெரிந்தது

“லே…தாணு, லே…” என்று அவனை சடாட்சரம் உலுக்கினார். ஒரு வாய் தண்ணீர் கொடுக்கலாமென்றால் அங்கே ஓடை என ஏதுமில்லை.

அவன் கை பாம்பு விழுவதுபோல ஓசையுடன் மறுபக்கம் மண்ணில் விழுந்தது. அவன் தலை பக்கவாட்டில் தொய்ந்தது.

அவர் அவன் முகத்தைப்பிடித்து உலுக்கிப் பார்த்தார். “லே…லே மக்கா..லே”

அவர் தூக்கியபோது அவன் தலை முன்னால் சரிந்தது. நாக்கு வெளியே தொங்கி எச்சில் வழிந்தது. அவருடைய அனுபவத்தில் தெளிவாகவே தெரிந்துவிட்டது, ஆள் போய்விட்டான்.

இருந்தாலும் அவர் அவனை உலுக்கி உலுக்கி அழைத்தார். அந்த உடலில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. நெற்றி வியர்வை மூக்குநுனியிலும் தலைவியர்வை செவிமுனையிலும் சொட்டியது. அவன் சட்டை நனைந்து முழுஈரமாக உடலோடு ஒட்டியிருந்தது.

அவன் இறந்து அந்த உடல் பிணமாக ஆகிவிட்டதை அவர் உடலே உணர்ந்து அவருக்கு சொல்லிக் கொண்டிருந்தது. அவர் மலைத்துப்போய் எந்த எண்ணமும் இல்லாமல் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். பின்னர் வந்த வழியை திரும்பிப் பார்த்தார். இறங்கிப் போகவேண்டிய வழியை பார்த்தார்.

பிணம் சட்டப்படி அவருடைய பொறுப்பில் இருக்கிறது.  அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகமுடியாது, கொலைக்கேஸ் கூட ஆகிவிடும். துப்பாக்கியை ஊன்றி உடலை உந்தி எழுந்தார். கீழே அவர் கையை இழுத்தபடி பிணம் கிடந்தது.  சின்னப்பிள்ளைகள் தூக்கச்சொல்லி செல்லமாகக் கூப்பிடுவதுபோல அதன் கை தூக்கப்பட்டிருந்தது.

மீண்டும் வந்த பாதையை பார்த்தார். அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு மேலேற முடியாது. தூரம் கூடுதலென்றாலும் இறங்குவது எளிது. தூக்கிக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கி தார்ச்சாலையை அடைந்தால் யாரையாவது பார்க்கமுடியும். சொல்லி அனுப்பினால் ஸ்டேஷனில் இருந்து ஆள் வருவார்கள்.

அவர் குனிந்து பிணத்தை தூக்கி தோளில் போட்டுக்கொண்டார். மறுகையால் துப்பாக்கியை ஊன்றியபடி எடையால் நடுங்கிய கால்களை தூக்கி வைத்து நடந்தார்.

வல்லினம் இதழில் வெளியானது- ஜனவரி1-2022

வல்லினம் இணைய இதழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 10:35

டிப்டிப்டிப்- கோவர்தனன் மணியன்

டிப் டிப் டிப் வாங்க

அன்றோரு நாள் அதுலம் வகுப்பில் கவிஞர் என்றால் யாரென்று கேட்டபொழுது கவிஞர் ஆனந்த குமாரின் இளையமகன் அர்ஜுன் கிருஷ்ணா சொன்னான் “கவிஞர்னா போட்டோகிராபர்”.. இந்த கவிதையை வாசித்து பொழுது அவனது சொற்களே அலையடித்தது…

படக்கருவி முன் நின்றவர்
மொத்தமாய் மூடிவிட்டார்
தன்னையல்ல
பதிவு செய்யப்படும்
தன்னைப் பற்றிய
பதற்றம் அவருக்கு
தன்னில் எந்தக் கோணம்
மற்றவருக்கு தெரியப்போகிறதென
அவர் குழம்புகிறார்
நான் ஒரு
சிரிப்பை அழைத்தேன்
அது அவருள் முட்டிமோதி
தத்தளிக்கிறது
வாழ்ந்த தருணமென
கண்களில் மின்னிமறைகிறது
இனிய நாட்களாக
உதட்டில் அலைமோதுகிறது
அவருக்கோ
எதுவும் உறுதியாய் தெரியவில்லை
முகத்தில் ததும்புகிறது
அவரின் மொத்த வாழ்வும்
இப்போதே வெடித்துச்சிதறி
பலவண்ணப் பறவைகளாய்
பறந்துவிடும் என்பதுபோல்

 ஆனந்தகுமார் டிப்டிப்டிப் கவிதை நூலிலிருந்து….

அவ்வளவு கவிதைகளும் அவ்வளவு அழகு.அம்மும்மாவோடு சேர்ந்து மாத்திரைகளை சுற்றி பொதிந்திருக்கும் குமிழ்களை உடைத்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தை, அம்மும்மா என இரண்டு குழந்தைகள் தரும் சித்திரம் என கவிதைகளனைத்தும் வெகு பிரியமாயிருக்கிறது.

தான் தரப்போகிற பரிசை ரகசியமாய் பொத்தி வருகின்ற குழந்தை அதை ரகசியமாய் திறந்து பார்க்கின்றதாக கவிதை ஒன்று வரும். கவிதைகளும் அப்படித்தானோ? நாம் ரகசியமாய் பொத்தி வைத்திருக்கின்ற ஒன்றை ரகசியமாய் திறந்து பார்ப்பதை போல… ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகாலம் கல்லூரியில் வளர்ந்த மாணவர்களோடே எனது நாட்கள் நகர்கின்றது. ஒன்றைத்திரளாக வகுப்பில் அவர்களை உரத்த குரலின்றி கட்டுப்படுத்த இயலாது.மென்மையான வார்த்தைகளுக்கு அங்கு வரவேற்பு குறைவுதான். தனித்த ஒரு மாணவன் வேறு. ஆனால் அதுலம் முற்றிலும் வேறுமாதிரியானது ஒரு சின்ன சீறலான மூச்சு கூட குழந்தைகளை சுருங்கச் செய்து விடும். அதுலமும், கவிதைகளும், வாசிப்பும், இலக்கியமும் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றோ காலச்சக்கரத்தில் அரைபட்டு புழுதியென்றாயிருப்பேன்.

“அலை தீண்டிப் போன பின்பு அங்கே வானம் வந்தமர்கிறது” என்கிற கவிதையை வாசித்த பொழுதும் வானம் அங்கே வந்தமர்ந்தது. யதார்தத்தின் பேரழகு மிளிர்கின்ற கவிதைகள். கவிதை நூலின் அட்டையையும் கூட ஒரு கவிதையை போல வடிவமைத்திருக்கிறார்கள். அக்கறை, வடிவநேர்த்தி என வேறு எதையும் நிகர் சொல்லமுடியாத அளவில் நூலின் தரம், இருக்கிறது.

தன்னறம் நூல்கள் பெற

https://thannaram.in/buy/

அழகியல் நாணயத்தின் அடுத்த பக்கம் – டிப் டிப் டிப் – ஆனந்த் குமார் -தன்னறம் நூல்வெளி வெளியீடு

ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 10:31

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள் 10

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழாவில் சோ.தர்மன் பேசும்போது தான் விக்ரமாதித்தனின் படைப்புகள் பற்றிப்பேசப்போவதில்லை மாறாக விக்ரமாதித்தனைப் பற்றியே பேசப்போகிறேன் என்று துவங்கியத்தைப் போல, நானும் விஷ்ணுபுரம் விழாவின் அமர்வுகளையோ, விருந்தினர்களையோ பற்றிப் பேசாமல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களையும், இரு தினங்களில் அவர்களுடனான என் அனுபவங்களையும் பற்றி மட்டுமே பேசலாமென்று இதை எழுதுகிறேன்.

தளத்தில் வெளியான விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய அறிவிக்குப் பின்னர் நிகழ்வின் தேதிகள் முடிவாகிவிட்டனவா என்று நண்பர்களுடன் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருதேன். தேதிகள் முடிவாகாத நிலையிலேயே குடும்பத்துடனான இந்தியப் பயணத்தை டிசம்பர் 28 வரை திட்டமிட்டு பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்திருந்தேன். விழா தேதிகள் அறிவிக்கப்பட்டபின்பு அவை கிட்டத்தட்ட திரும்புவதற்கு ஒரு நாள்  இடைவெளியில் இருந்தபோதும் பங்கேற்க வேண்டுமென்ற உற்சாகத்தில் இருந்தேன்.

ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சுக்கிரி குழுமத்தில் உங்கள் 125 வீடடங்குகாலக் கதைகளை வாரம் ஒன்றென்று ஸூமில் விவாதித்து வருவதால், நண்பர்களை நேரில் பார்க்கும் ஆவல் அதிகரித்திருந்தது. கூடவே சமீபத்தில் 1000 பாடல்களை நிறைவு செய்திருந்த கம்பராமாயணக் குழுமமும் விழாவுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். சில நண்பர்கள் போனில் அழைத்து வருகையை உறுதிசெய்தும் கொண்டது ஆர்வத்தை அதிகரித்தபடியே இருந்தது. விழாவின் முதல் நாள் அன்று கிறிஸ்துமஸ் திருப்பலி செல்லவேண்டியிருந்ததால் 24ம் தேதி மாலையே வரமுடியவில்லை. நள்ளிரவுத் திருப்பலி முடிந்து சின்னமனூரிலிருந்து கிளம்பி கோவை வந்துசேர காலை 11 மணியாகிவிட்டது.

வந்தவுடன் ஷாகுலுக்கு அழைத்துச் சொன்னதும் அவர் அப்படியே அழைத்து வந்து ஒரு சேர் போட்டு அமர்வில் விட்டுச் சென்றார். கோகுலின் அமர்வை தவற விட்டு பின்னர் நண்பர்களிடம் அது பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். எம்.கோபாலகிருஷ்ணனின் அமர்வில் விக்னேஷ் கேட்ட கேள்விக்கு அவர் விக்னேஷின் வயசென்ன என்று விசாரித்துவிட்டு இந்த வயசுக்கு அதிகமான கேள்விதான் என்றபோது கடந்த ஒரு வருடமாக சுக்கிரி விவாதங்களில் இந்த இளம் சட்டமாணவர் எழுப்பும் வினாக்களும், முன்வைக்கும் கோணங்களும் நினைவில் எழுந்தன. அமர்வின் முடிவில் அருகில் அமர்ந்திருந்த விஜயலக்ஷ்மி குழுமத்தில் இருந்து யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார். இடைவேளையில் நண்பர்கள் அனைவரையும் முதல் முறையாகப் பார்த்து ஸூமில் யாரெல்லாம் வித்தியாசமாக இருந்தார்கள் என்று பேசிக்கொண்டோம். நண்பர் கமலநாதன் மட்டும் என்னை இன்னும் கொஞ்சம் உயரமாக நன்றாக இருப்பேன் என்று நினைத்திருந்ததாக சற்றே வருத்தமாகக் கூறினார்.

2017 காவிய முகாமில் சுஷில்குமார் உள்ளிட்ட சில நண்பர்களைச் சந்தித்திருந்தாலும் இப்போது இன்னும் நெருக்கமாக உரையாட முடிந்தது. சுக்கிரியின் மட்டுறுத்துனர்களான விஜிரா சார், மது சம்பத் உள்ளிட்டோர் வழக்கமான உற்சாகத்தோடு ஸூம் அனுபவங்கள் பற்றியும், தொடரும் கூட்டு வாசிப்பின் பயன்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். உணவு இடைவேளையில் ஒருவாறாக அனைவரையும் சந்தித்திருந்த பொழுதில் ஜெ.யுடன் குழுப்படம் எடுக்கவேண்டுமென்று சுக்கிரி குழுமமும், நாஞ்சில் சாரோடு படம் எடுக்கவேண்டுமென்று கம்பராமாயணக் குழுவும் பரபப்பாக ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே ஷாகுல் அனைவரும் ஒன்றாகச் சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஜெர்மனியில் இருந்து வந்திருந்த ஜெயந்த், விஜயபாரதி, கோகுல், லாஓசி, இளம் வாசகர்கள் விக்னேஷ், கிஷோர், உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து உணவுக்கூடத்திலேயே உங்களோடு குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.

பார்கவி, சுந்தரவடிவேலன், வெங்கட்ரமணன், லட்சுமி நாராயணன், பத்மநாதன், எழுத்தாளர்கள் சுனில், காளி,  கா.சிவா, விஜயகுமார் உள்ளிட்ட பிறருடன் இணைந்து கம்பராமாயக் குழுவான “இம்பர்வாரி”யும் உங்களோடு குழுப்படம் எடுத்துக்கொண்டது. இரண்டு படங்களுக்கும் வந்து கலந்துகொண்ட ரம்யாவைப் பார்த்து “நீ எல்லாக் குரூப்புலயும் இருக்கியா” என்று சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினீர்கள். இரண்டு குழுக்களிலும் வெகு ஆர்வத்துடன் இயங்கும் ஆனந்த் சுவாமியை விழாவில் சந்திக்க முடியாததை நண்பர்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டித்தபோது, “யார் அவர்” என்ற அருகிலிருந்தவர் கேள்விக்கு “திருவண்ணாமலையில் உள்ள துறவி, அடிக்கடி தளத்தில் அவர் கடிதங்கள் வெளியாகும். ‘ஏழாம் கடல்’ கதைக்கு அதை விடச் சற்றே பெரிய கடிதமொன்றை எழுதியவர்” என்று சுவாமியைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தோம். குழுப்படத்துக்குப் பிறகு அனைவரும் கலைந்து சாப்பிடச் சென்றபிறகு என்னைச் சந்தித்த ஷாகுல் ஏன் எல்லோரையும் ஒன்றாக சாப்பிட அழைத்து வரவில்லை என்று கடிந்துகொண்டார்.

பிற இடைவேளைகளில் குவிஸ் செந்தில், விஜயசூரியன், செல்வராணி, குருஜி, தனா, கடலூர் சீனு, ஜாஜா, கிருஷ்ணன், கதிர்முருகன், சிறில், செல்வேந்திரன், ஆனந்த், கல்பனா என எதிர்ப்படும் நண்பர்களிடம் எல்லாம் அறிமுகம் செய்துகொண்டு பேசிச்சென்றேன். சுபாவின் ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ மொழியாக்கத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன்.  ‘மேரி கெரெல்லி’ அடக்கம் செய்யப்பட்டுள்ள “ஸ்ட்ராட்போர்ட் அபான் எ வான்” கல்லறைத்தோட்டம் என் வீட்டிலிருந்து 30 நிமிடத்தொலைவில் உள்ளதைச் சொல்லி அங்கு மொழியாக்கப் பிரதியினை வைத்து வணங்கத் திட்டமிட்டுள்ளதைச் சொன்னதும் சுபா சற்றே நெகிழ்ந்தார். “இப்படியெல்லாம் சொன்னால் நானே புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கு கிளம்பி வந்துவிடுவேன்” என்றார். அவருள் இருந்த பயணி இதைச் சொல்லாமல் போயிருந்தால் தான் வியப்பு.

சிரிப்பும், வாசிப்பு விசாரணைகளும் நிறைந்த இந்த நாட்களில் மகிழ்ச்சியளித்த இன்னொன்று புதியவர்களைச் சந்தித்தது. விஜய் கிருஷ்ணா, மருதுபாண்டியன், மனோஜ் என்று ஒரு புறமாகத் தயங்கி நின்ற புதிய இளம் வாசகர்களைச் சந்தித்து அவர்களையும் பிறரோடு இணைத்துக்கொண்டு உரையாடியது குழுமத்தில் சேர லிங்குகளை பகிர்ந்துகொண்டோம். தன் சீனியர் தூண்டுதலால் ஜெயமோகனைப் பற்றி அறிந்து கொண்ட தமிழில் முதுகலை படிக்கும் இளைஞர் மனோஜ், உங்கள் பெயர் தவறியும் கல்லூரியில் பேராசிரியர்களால் குறிப்பிடப்படுவதில்லை என்று வருந்தினார்.

எல்லாம் முடிந்த பின்பு உங்கள் அருகில் நின்று உங்களால் அணைத்தபடி படம் எடுத்துக்கொள்வது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. புதிய வாசகர் சந்திப்பு ஒன்றில் எடுத்துக்கொண்ட படத்தில் நீங்கள் சிரித்தபடி ஏதோ சொல்ல நான் பெரிதாய்ச் சிரிக்கும் புகைப்படம் என் சேமிப்பில் விருப்பத்திற்குரிய ஒன்று. இப்போதும் அப்படியான படங்கள் அமைந்தன.  நிகழ்வின் இறுதியில் அண்ணாச்சியோடும் படம் எடுத்துக் கொண்டேன். அருகில் காத்திருந்த நண்பர் விஜயபாரதியை அண்ணாச்சியிடம் காட்டி அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்றேன். பதறிய அண்ணாச்சி ‘தாராளமாக எடுத்துக்கங்க’ என்று அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல முயல, சட்டென்று அவர் முன்னால் சென்று மறித்து ‘உங்களோடு தான் அண்ணாச்சி நாங்க போட்டோ எடுக்கணும்’ என்று சொல்லவும், பெரிதாய்ச் சிரித்தபடி எங்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டதை என்னால் என்றும் மறக்கமுடியாது. இந்த இனிய விழாவைச் சாத்தியமாக்கிய அணைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்,
ராஜேஸ்,
காவெண்ட்ரி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 10:31

குமரித்துறைவி பற்றி…

நல் எழுத்துக்களால் நெகிழ்ந்து உளம் கரைந்து அழுவது ஒரு இனிய வரம்.அப்படியோரு தருணம் சமீபத்தில் குமரித்துறைவி என்ற குறுநாவல் வாசிக்கையில் ஏற்பட்டது. வெகு நாட்கள் கழித்து முழுக்க நேர்மறை நினைவுகளை நெஞ்சில் விதைத்த எழுத்து.

நாவல் மதுரை மீனாட்சி பற்றியது. ஒரு படையெடுப்பிலிருந்து காப்பதற்காக மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருச்சிலைகள் பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு வேணாட்டிலிருக்கும் ஆரல்வாய்மொழியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 69 வருடங்களுக்கு பிறகு மதுரையில் நாயக்கர் ஆட்சியில் அமைதி திரும்புகிறது. மக்கள் தங்கள் அன்னை மீண்டும் நகர் திரும்ப கோருகிறார்கள். மகாமங்கலையான மீனாட்சியினை வேணாட்டு மக்கள் தங்கள் மகளென பாவித்து மதுரை வாழ் சொக்கனுக்கு மணமுடித்து அனுப்புவதே கதை சாரம்.

இதற்குள் நிகழும் மனித மன உணர்ச்சிகளே கதையின் அடி நாதம்.மீனாட்சி என்றுமே என் மனதிற்கு இனியவள்.நான் விரும்பும் பரிபூரண பெண்மை அவள் இருப்பு.அவள் வெவ்வேறு வடிவங்களில் நம் இல்லங்களில் வாழ்கிறாள். நம் மகளென அன்னையென நம்மை காக்கிறாள்.

நாவலில் ஓர் உரையாடல் வரும். “இவள் தெய்வம் தான் ஆனால் எனக்கு செல்ல குட்டி மகளாட்டம் தெரியறா சாமி. இது தப்பா சாமி? ” என்று.அதற்கு பதிலாக அப்படி தோண்றாவிட்டால் தான் தப்பு என்று சொல்லப்படும். எனக்கும் அப்படி தான் தோன்றியது. அவள் சன்னதியில் ,அந்த அகல் விளக்கொளியில் அவளை மிக நெருக்கத்தில் பார்த்த போது எனக்கு அவள் ஒரு செல்ல மகளாக தான் தோன்றினாள். அதனால் தான் சட்டென்று அம்மையே என்னோட வீட்டுக்கு வா என்று தான் வேண்ட தோன்றியது. ஒவ்வொரு முறை என் மகளை பார்க்கும் போதும் மீனாட்சியாக தான் அவள் கண் நிறைக்கிறாள்.அதனால் தான் இந்த எழுத்து என்னை காலத்தில் முன்னோக்கி கொண்டு சென்றுவிட்டது.

என் ஒவ்வொரு உணர்விலும் நிறைந்திருந்தது என் மகள் மட்டுமே. நான் நெகிழ்ந்த அத்தனை தருணங்களும் அவளுக்காகவே.நிறைய காலம் இருக்கிறது. ஆனால் என்றாயினும் என் மீனாட்சியும் அவள் சொக்கன் இல்லம் செல்ல தானே வேண்டும்?இத்தனை உணர்வுகளுக்கும்,நல்ல எழுத்துக்கும் நன்றி ஜெயமோகன்

திவ்யா சுகுமார்

குமரித்துறைவி நாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். அதன் சரித்திரப்பின்னணி பற்றி எனக்கு தெரியாது. அந்தக் கலாச்சாரமே பழக்கமில்லை. ஆனால் கண்ணீர் வழிய அந்நாவலை வாசித்துக்கொண்டே இருந்தேன். ஏன் அப்படி கண்ணீர் வழிகிறது என்றே தெரியவில்லை. நாவலில் எதிர்மறையாக ஒரு வார்த்தைகூட இல்லை. சோகத்தருணமே இல்லை. கொண்டாட்டம் மட்டும்தான். சிறமடம் நம்பூதிரி பேச ஆரம்பித்த இடத்திலே உருவான கண்ணீர்.

பக்தி என்று இதைச் சொல்லமுடியாது. எனக்கு மதநம்பிக்கையெல்லாம் இல்லை. என்னுடைய கண்ணீர் நான் மனிதனின் மேன்மை மிகுந்த பக்கங்களில் சிலவற்றை இந்த நாவலில் கண்டடைந்தேன் என்பதனால்தான். நெருக்கமான உறவினர் ஒருவருக்கு உடல் நலமில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தார். பார்க்கப்போகும்போது என்ன கொண்டுபோகலாம் என்று சிந்தித்து இந்நாவலை வாங்கி கொண்டுசென்று அளித்தேன். “நம்பிக்கையையும் நிறைவையும் அளிக்கிற நூல். இப்போது இந்நாவல்தான் உங்களுக்குத்தேவை” என்று எழுதிக்கொடுத்தேன்.

அவர் மூன்றுநாட்களுக்குப்பின் ஃபோனில் சொன்னார். தினசரி காலை அதை படிப்பதாக. மூன்றுமுறை படித்துவிட்டேன் என்று சொன்னார். குமரித்துறைவி போல வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் காட்டும் இன்னொரு நாவலே இல்லை. நூறு அறம் சிறுகதைகளுக்குச் சமம் இது

ராஜ்கண்ணன்

ஜெயமோகன் நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 10:30

ஜப்பான்- ஒரு கீற்றோவியம்-தமிழ்செல்வன் இரத்தினம்

ஜப்பான் ஒரு கீற்றோவியம் வாங்க

சுற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவுகளின் நாடு தான் ஜப்பான். உதய சூரியன் உதயமாகும் நாடு. ஜப்பான் நாட்டுக் கொடி இதனை பிரதிபலிக்கும். ஜப்பான் என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது கார் நிறுவனங்களின் பெயர்கள். நம்மை அறியாமலே நமக்கு குறைந்தது ஒரு பத்து இருபது ஜப்பானிய மொழிப் பெயர்கள் தெரியும். இந்தியாவை விட பரப்பளவில் மிகச் சிறிய நாடு தான் ஜப்பான். ஆனால் அதன் கட்டமைப்பு என்பது இன்று அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. மொழி, பண்பாடு, கலை, அறிவியல், அரசியல், போர்த்திறம், திரைத்துறை, கட்டிடக் கலை, மென்பொருள் நிறுவனங்கள் என அமெரிக்காவிற்கு நிகராக தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது நவீன ஜப்பான். அறிவியல் தொழில்நுட்பம் தந்த வாய்ப்பை ஜப்பான் முழுமையா அந்நாட்டு மக்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது என்றே சொல்லவேண்டும்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானிய மொழியை பயின்று வருகிறேன். அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை பார்த்த உடனே வாங்கிவிட்டேன். ஜெயமோகன் அவர்கள் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம் கூட. பயணங்கள் என்பது சென்றோம் வந்தோம் என்றில்லாமல் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்க வேண்டும். சென்று பார்த்த இடங்கள் திருப்பி வந்த பின்பும் கனவிலும் நினைவிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கல்லூரி பருவம் தாண்டி ஒரு முறை அங்கு சென்ற போது இது போன்ற ஒரு அனுபவத்தை நான் எழுதியது உண்டு. இவ்வாறு சென்ற பயணத்தை மீள் பார்வையிடுவது போன்றது தான் பயணக் கட்டுரைகள். நாமும் ஆசிரியர் உடன் சேர்ந்தே பயணிப்பது போன்ற உணர்வினை இந்தக் கட்டுரைகள் நமக்குத் தரும்.

ஏழு நாள் ஜப்பானில் அவர் சென்ற இடங்கள் அதன் தனித்துவமான அடையாளங்கள், ஜப்பானிய பண்பாட்டின் தனித்துவமான தொல் எச்சங்கள், இந்தோ-ஜப்பானிய ஒற்றுமை வேற்றுமை என பல கோணங்களில் ஜப்பானின் சுற்றுலாத் தலங்கள் தொடர்பான தரவுகளை தருகிறார் ஜெயமோகன் அவர்கள்.

ஷின்கான்சென் புல்லட் ரயில் பார்த்து வியப்பது முதல் அங்குள்ள பாலங்கள் கட்டப்பட்ட விதம் பற்றியும் விரிவாக எழுதி உள்ளார். பெரும்பாலும் ஆலயங்கள் தான் ஜப்பானில் தற்போது சுற்றுலாத் தலங்கள். அதில் குறிப்பிடத்தக்க ஆலயம் இட்சுகுஷிமா (itsukushima). கடலை ஒட்டிய இந்த ஆலயத்தின் முகப்பே வியக்கத்தக்க அளவில் உள்ளது. மற்றுமொன்று ஹோகொகுஜி (Hokokuji) ஆலயம், அதன் மூங்கில் தோட்டம் குறிப்பாக இங்கு தரப்படும் பசுந்தேநீர் (Greentea) என வித்தியாசமான அனுபவங்களை பகிர்கிறார் ஆசிரியர்.

ஜப்பானின் தனித்துவமான ஒன்று பௌத்த ஜென் தத்துவங்கள். பௌத்த சமயம் ஜப்பானில் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. புத்தரின் சிலைகள் ஜப்பானில் எல்லா இடங்களிலும் காணலாம். ஷிண்டோ மதம் பல்வேறு காலகட்டங்களில் எப்படி ஜென் தத்துவங்களை உள்ளடக்கி தன்னை உருமற்றிக் கொண்டது என்பதை ஓவ்வொரு இடங்களிலும் குறிப்பிட்டு உள்ளார் ஜெயமோகன் அவர்கள். புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள் என்பதே உண்மை. புத்தர் இந்தியா சீனா ஜப்பான் மலேசியா சிங்கப்பூர் இலங்கை போன்ற கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் போற்றப்படுகிறார் அவர் பிறந்த இடம் நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இன்னொரு தனித்துவமான ஒன்று அதன் உணவு வகைகள். பெரும்பாலும் கடல் உணவகங்கள் தான் அங்கு அதிகம். ஷோபா (fried noodles) ராமென் (soup noodles), சுஷி (Raw fish dishes), உதோன் (noodles), தெம்புறா (Tempura) போன்ற உணவுகள் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை. மேலும் சீனா உணவுகள் சுவையிலிருந்து இவை எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சாமுராய் வீரர்கள் வாழ்க்கை, மூங்கில் ஓவியங்கள், ஜப்பானிய தோட்டக் கலை, அதன் மூன்று படிநிலைகள், மூங்கில்கள் கொண்டு வரையப்படும் கீற்றோவியங்கள், பற்றியும் அது போன்று இந்திய பண்பாட்டில் பேணப்படும் சில சடங்குகள் சம்பிரதாயங்கள் அவற்றுக்கு உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பிடுகிறார். உதாரணமாக நம்மூரில் குழந்தைகள் பெற வேண்டி மரத்தில் தொட்டில் கட்டுதல் போல அங்கு Nizo-do சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இறந்த குழந்தைகள் நினைவாகவும், வீட்டில் இருக்கும் குழந்தைகள் நலம் பெற வேண்டியும் இந்த சிலைகள் வைக்கப்படுகிறது. இந்திய கதக்களி போன்றே ஜப்பானில் நோ (Nou) நாடகம் இருக்கிறது என்கிறார்.

ஜப்பானில் இந்தியர்கள் இருவருக்கு நினைவிடம் இருக்கிறது என்ற தகவல் என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. ஒன்று ஆர். பி. பால் , நீதிபதியாக இருந்த இவர் இந்தியாவில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பு வகித்தவர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் படைவீரகள் மீது சுமத்திய குற்றச்சாட்டை ஏற்காது அது தவறு என கம்பீரமாக அதற்கான காரணத்தை விளக்கி அங்குள்ள மக்களின் மனதில் நின்றார். இன்னொருவர் கேரளத்தை சார்ந்த மாதவன் நாயர். நாயர் ஜப்பானில் பொறியியல் மற்றும் மருத்துவம் பயின்றவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் சென்ற போது அவருக்குத் துணையாக ஜப்பானில் இருந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு குரல் எழுப்பினார். அவருக்கு ஜப்பானின் உயரிய விருதான order of the sacred treasure வழங்கப்பட்டது. மேலும் அவரது சுயசரிதை An Indian Freedom Fighter From Japan Memorirs of A.M.Nair, 1982 இல் வெளியிடப்பட்டது. இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் என்பதால் இந்தியாவில் கேரளாவில் அதிக அளவில் இந்த புத்தகம் படிக்கப்பட்டது.

ஜப்பானின் அடையாளம் என்றால் அது மௌண்ட் ஃபூஜி (Mt. Fuji) , Fuji சான் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயரியதாக ஜப்பானில் கருதப்படுவது இந்த உயர்ந்த எரிமலை. (சான் என்றால் திரு/உயர்திரு போன்ற இணைச்சொல்). இதன் பல்வேறு அடுக்குகள் அங்கு சென்ற போது கண்ட காட்சிகள், சூரிய உதயம் மறைவு போன்ற தருணங்களிலும் காலநிலைக்கேற்ப அதன் காட்சிகள் வெவ்வெறு கோணங்களில் மாறும் என்று குறிப்பிடும் போது நமக்கே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும்.

இந்த புத்தகம் முழுமையாக ஜப்பானின் வரலாற்றை காலநிலையை அரசியல் அமைப்புகள் பற்றியும் வாழ்வியலையும் முழுமையாக விவரிக்கும் புத்தகம் அல்ல. இருப்பினும் இது அதற்கான ஓர் வழியை நமக்குக் காட்டுகிறது. ஜப்பான் செல்ல விரும்புபவர்கள் ஜப்பான் மீது நாட்டம் கொண்டவர்கள் இந்தனை தவறாமல் படிக்க வேண்டும் என்பது என் கருத்து.

-தமிழ்செல்வன் இரத்தினம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 10:30

January 9, 2022

தாக்குப்பிடிப்பியம் -வி.கெ.என்

பல்தேய்த்துவிட்டு சிற்றுண்டிக்கு அமர்ந்தான். ஆவியில் விரிந்த வெள்ளை ஆம்பல் இட்டிலிகள். இரண்டை சட்டினியில் முக்கி தின்றான். இரண்டு பொடிகுழைத்து உருட்டி. இரண்டுக்கு மிளகாய்த்துவையல். இரண்டுக்கு சீனி. மேல்விரிப்பாக இரண்டு கப் காபி.

ஒரு மணிக்கு சாப்பாட்டுக்கு முன்பு இரண்டு லார்ஜ் ஓட்காவை தக்காளிச்சாற்றில் கலக்கி விழுங்கினான். பழைய அரிசிச்சோறு. வெண்டைக்காய் சாம்பார். கும்பளங்காயும் பச்சைமிளகாயும் சேர்த்து ஓலன். வழுதுணங்காயும் வெங்காயமும் சேர்த்து தேங்காயெண்ணையில் வறுத்தெடுத்த பிரட்டல். எண்ணைமாங்காய் ஊறுகாய். அப்பளம். கூடுதலாக புளிமோர். அண்டம் நிறைய உண்டான்.

மூன்று மூன்றரைக்கு டீயும் பலகாரமும். அரிசியும் உழுந்தும் வறமிளகாயும் சின்னவெங்காயமும் நொறுநொறுவென அரைத்து முருங்கையிலை சேர்த்து எண்ணையில் பொரித்து எடுக்கப்பட்ட அப்பம். அதில் மூன்றைத் தின்று வியர்வை வந்து ஆறுவதுவரை டீயும் குடித்து சிறு ஓய்வு.

சாயங்காலம் பொடிநடைக்கு கிளம்பினான். பாரில் நுழைந்து நான்கை ஊற்றிக்கொண்டான். இரண்டு நீட். இரண்டு ஆன் த ராக். தொட்டுக்கொள்ள தேங்காய் சதைத்துச் சேர்த்து தேங்காயெண்ணையில் உலர வறுத்தெடுத்த ஆட்டுக்கறி. மேற்கொண்டு குடல்முட்டும்படி பரோட்டாக்கள்.

பத்துமணிக்கு படுத்தான். ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில்  ஒரு கச்சித்தத்தன்மையை உணரமுடிந்தது. செய்யவேண்டிய எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. உண்ணப்படவேண்டிய எல்லாம் உண்ணப்பட்டிருக்கிறது. இனி சாவது நல்லது. இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறில்லை.

சாகப்படுத்தான், செத்தொழிந்தானே. காலையில் மயான காண்டம். பாடையில் ஏறிக் கிளம்பி, வீட்டார் யாரும் கேட்காத அளவு விலகிச் சென்றபோது திருவாளர் பையன்ஸ் சிதை தூக்குபவர்களிடம் ரகசியமாக கேட்டான்.

“அங்கேயும் காலம்பற இட்லி தானே?”

[நிலநில்பீயம்]

[மலையாள பகடி எழுத்தாளர் விகேஎன் எழுதிய கதை. பையன்ஸ் என அவருடைய கதைகளில் தோன்றுவது அவர்தான். ]

இரு மொழிபெயர்ப்புக் கதைகள் – வி .கெ.என்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.