Jeyamohan's Blog, page 848

January 7, 2022

மண்ணில் உப்பானவர்கள் – வெங்கடேஷ் சீனிவாசகம்

மண்ணில் உப்பானவர்கள் நூல்

அபாரமான, உணர்வு மேலிடும், உத்வேகம் கொள்ள வைக்கும், பரவசமான காட்சி அது. தண்டியின் ஆட் கடற்கரை. 61 வயதாகும் அம்மெலிந்த உடல்கொண்ட மனிதர் நிலம் குனிந்து ஒரு கைப்பிடி உப்பெடுத்து வான் நோக்கி கை உயர்த்தி “ஒரு சத்தியாக்கிரகியின் கையில் இருக்கிற உப்பு இந்த தேசத்தின் கௌரவம். நம் உயிரே போனாலும் நம் கை தாழ்ந்துவிடக் கூடாது” என்று அறைகூவல் விடுத்த அந்த கணம் மெய்சிலிர்த்து மனம் நிறைந்து “வந்தே மாதரம்” என்று இதயத்தின் அடி ஆழத்திலிருந்து குரல்கள் உயரவைத்த ஒரு பொற்கணம். அதன்பின் இந்திய மண்ணில் விடுதலைப் போராட்டக் களத்தில் அஹிம்சையின் வெண்மைத் துணைகொண்டு அரங்கேறியவையெல்லாம் சரித்திரத்தில் ஆழமாய்ப் பதிந்துபோன அதிசயத் தடங்கள்.

இந்தியாவில், ஆங்கிலேய காலனி அரசால் 1885-ல், உள்நாட்டில் உப்பிற்கு வரி விதிக்கப்படுகிறது. உற்பத்தி செலவைவிட அதற்கான வரி அதிகம். 1885-ல் துவங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1888-ம் ஆண்டு கூட்டிய முதல் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானங்களில் பிரதானமாய் இடம்பெற்றது உப்பு வரியை நீக்கக் கோரும் கோரிக்கைதான். கோகலே அதற்கான போராட்டங்களை தலைமையேற்று நடத்துகிறார். வைஸ்ராய் கர்சனால் இரண்டு வருடங்கள் உப்பு வரி நீக்கப்படுகிறது. உப்பு வரி ஆங்கிலேய அரசாங்க்கத்திற்கு மொத்த வரி வசூலில் பத்து சதவிகிதம். அரசு கஜானாவில் வரி வசூல் குறைய மறுபடியும் உப்பு வரி அமலாக்கப்படுகிறது. அந்த வருமானத்தை இழக்க அரசு விரும்பவில்லை.

1930. காந்தியின் மனம், எப்படி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சட்டமறுப்பு இயக்கத்திற்குள் ஈர்த்துக் கொண்டுவருவது, என்னென்ன வழிமுறைகளை, எத்தகைய அஹிம்சைப் போராட்டங்ககளை வடிவமைப்பது என்பதைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறது. 1920-ல் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் அஹிம்சையில் தொடங்கி வன்முறையில் முடிந்தது போல் மறுபடியும் ஆகிவிடக்கூடாது என்பதில் அவர் மனம் உறுதியாய் இருக்கிறது. எதேச்சையாய் டேபிளின் மேல் அரசுக்கு அனுப்பியிருந்த பதினோரு அம்சக் கோரிக்கையில் நான்காம் கோரிக்கையின் (உப்பு சம்பந்தமானது) மேல் அவர் பார்வை செல்ல, அவர் மனதில் மின்னலென ஒரு திட்டம் உதிக்கிறது.

மார்ச் 2 1930 அன்று இர்வின் வைஸ்ராய்க்கு “அன்புள்ள நண்பருக்கு…” என்று ஆரம்பித்து கடிதம் எழுதுகிறார். உப்புச் சத்தியாகிரகம் பற்றிய தன் திட்ட முடிவைக் கூறி, அரசு உப்பு வரியை நீக்காவிட்டால், தண்டி வரை நடைபயண யாத்திரை மேற்கொண்டு, அங்கு சட்டத்தை மீறி உப்பு காய்ச்சப் போவதாகத் தெரிவிக்கிறார். எல்லாவற்றையும் முன் கூட்டியே எதிரணிக்குச் சொல்லிவிட்டு சொல்லிவிட்டு சரியாய் நடைமுறைப்படுத்துவதுதான் அக்கதாநாயகனின் பாணி. “As the Independence Movement is essentially for the poorest in the land the beginning will be made with this evil” என்ற அக்கடிதத்தின் வரி எந்த சிறந்த அபுனைவு எழுத்தாளரின் வரியை விடவும் அபாரமானது. “இது என்ன கோமாளித்தனம்” என்று நினைத்த அரசு உப்பு வரியை நீக்கவில்லை. வேடிக்கையாக எளிமையாக எடுத்துக்கொள்ளப்பட்ட அந்தப் போராட்டம் ஏற்படுத்தப்போகும் பிரம்மாண்ட அதிர்வலைகளை ஆங்கிலேய அரசு அப்போது கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சபர்மதி யாத்திரைக்குத் தயாராகிறது. தண்டி யாத்திரைக்கு முந்தைய நாள் காந்தியின் அந்த மந்திரச் சொற்கள்…

“நான் ஆரம்பித்த வேலையை முடிக்க இந்தியாவில் மனங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன். நமது காரணத்தின் நீதியிலும், நமது ஆயுதங்களின் தூய்மையிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. வழிமுறைகள் மாசற்றதாக இருக்கும் இடத்தில், கடவுள் சந்தேகத்திற்கு இடமின்றி அவருடைய ஆசீர்வாதங்களுடன் நிறைந்திருக்கிறார். இந்த மூன்றும் இணைந்த இடத்தில் தோல்வி என்பது சாத்தியமற்றது. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். நாளை தொடங்கும் போராட்டத்தின் பாதையில் எழுகிற அனைத்துத் தடைகளையும் அவரவர் ஆத்மபலத்தால் மீறி முன்செல்லுங்கள்”

வார்த்தைகளைக் கவனித்தீர்களா? “ஆயுதங்களின் தூய்மை”. ஆயுதங்கள் நாசப்படுத்துபவையாகவும், ஊறு விளைவிப்பதாயும், துயரங்கள் உண்டாக்குபவையாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன?. அஹிம்சையின் ஆயுதங்கள் எப்போதும் தூய்மையானவைதானே?.

12.03.1930 சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்தி மற்றும் ஆசிரமத்தைச் சேர்ந்த 79 பேருடன் தண்டியை நோக்கி நடைபயண யாத்திரை துவங்குகிறது. பயணம் முழுவதும் கிராமங்கள் வழியேதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குஜராத் வித்யாபீட மணவரான அருண் டுக்டி தலைமையில் “Army of Dawn” என்று அழைக்கப்பட்ட மாணவர் அணி எட்டு எட்டு பேராக இரண்டு குழுக்களாகப் பிரிந்து யாத்திரைக்கு முன்னதாகவே யாத்திரை வழி நெடுகிலும் பயணித்து நடைபயணத்திற்கான அத்தனை முன்னேற்பாடுகளையும் கவனிக்கிறது.

240 கிலோமீட்டர்கள்…25 நாட்கள்…இதயத்தில் பதிந்த பொற்காலடிகள்…

இன்னும் இன்னும் எழுதிச் செல்லவேண்டும் என்ற வேட்கைதான் எழுகிறது. சித்ராம்மாவின் “மண்ணில் உப்பானவர்கள்” நூல் முற்றிலும் விஷூவல்களால் ஆனது. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் படித்த “ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகத்”தின் ஹென்றி அமர்ந்து வரும் துரைக்கண்ணுவின் லாரி அந்த மலைப்பாதையில் வளைந்து செல்லும் முதல் காட்சி சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுத் துல்லியத்தோடு மனதில் பதிந்தது போல், ஜெ-யின் “லங்கா தகனத்”தின் இறுதிக் காட்சியில், அனந்தன் ஆசான் காற்று வீசும் அந்த இரவில், கண்களில் சிவப்போடு, வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயோடு உக்கிரமாக மரத்துக்கு மரம் தாவுவது வேணுவின் கேமரா கண்கள் வழியாக சிவப்புச் சலனங்களோடு உள்ளிறங்கியது போல், மண்ணில் உப்பானவர்களின் பல காட்சிகளும் ஈர நிலத்தின் மணத்தோடு மனதில் பதிந்தது.

ஒரு காட்சி…

யாத்திரையில் தங்கும் கிராமங்களிலெல்லாம் மக்கள் கூட்டத்தில் காந்தி பேசுகிறார். ஒரு கிராமத்திற்கு வெளியே வயல்பரப்பில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் மக்கள் கூடியிருக்கிறார்கள். இரவு கவியும் பின் மாலை நேரம். மின் விளக்குகளில்லை. ஏற்றப்பட்ட லாந்தர் விளக்குகளின் மென்மையான மஞ்சள் ஒளி. மெலிதாய் வீசும் கோடைக்காற்று. காந்தி தன் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்.

உள்ளுக்குள் ஆழத்தில் எங்கோ ஆன்மீகமான ஒரு தளத்தில் இக்காட்சியைக் காண்பதாகவே என் மனம் எண்ணிக்கொண்டது.

“மண்ணில் உப்பானவர்கள்” தகவல்களால் செறிந்தது. வரலாற்றை நவீன புனைவு மொழியில் நம்மிடம் அணுக்கமாக கொண்டுவருவது. நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பல நாவல்களும் முகிழ்க்கும் சாத்தியம் கொண்ட நிலமான அகநியின் “ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு” எனும் பொக்கிஷத்தை இக்கணத்தில் நினைவில் கொள்கிறேன். “மண்ணில் உப்பானவர்க”ளில், தண்டி யாத்திரை குறித்தும் (அதில் பங்குகொண்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஆளுமைகளின் விபரங்கள், யாத்திரைக் குழு பயணித்த கிராமங்கள், நாள் வாரியாக பயணத்தில் நடந்த சம்பவங்கள்), தமிழகத்தில் ராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக யாத்திரை குறித்தும் (திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை 98 பேருடன் 1930 ஏப்ரம் 14-லிருந்து 30 வரை நடைபெற்ற நடைபயண யாத்திரை), மற்றும் இந்தியா முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த உப்புச் சத்தியாகிரகம் குறித்தும், போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்தும், தேசிய வாரம் குறித்தும், தாராசனா போராட்டம் குறித்தும் விரிவான குறிப்புகள் இருக்கின்றன.

காரக் பகதூர் சிங் நேபாளி. ஒரு கொலைக்குற்றத்திற்காக தண்டனை பெற்றவர். தண்டனை முடிந்ததும் அவர் காந்தியின் சபர்மதியில் வந்து இணைந்திருக்கிறார். ஒரு ஏழை நேபாளிப் பெண்ணை ஹீராலால் என்பவன் வன்புணர்வு செய்துவிட, காரக் ஹீராலாலைக் கொன்று விடுகிறார்.

1983 ல், தண்டி யாத்திரை நடந்த வழி முழுதும் மறுபடி பயணம் செய்து, யாத்திரையில் கலந்துகொண்டவர்களில் பலரைச் சந்தித்து யாத்திரைக் குறிப்புகளை பதிவு செய்து வைத்திருக்கிறார் தாமஸ் வெபர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில். ராஜாஜியின் தளபதியாக இருந்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை. இன்றும் பிள்ளையின் பேரர்கள் கேடிலியப்பன் அவர்களும், அவரின் அண்ணாரும் வேதாரண்யத்தில்தான் வசிக்கின்றனர். வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகம் பற்றி கேடிலியப்பன் அவர்களின் அண்ணார் பேசுவதை, நேரம் கடப்பது தெரியாமல் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

4.05.1930 திங்கள் நள்ளிரவுக்கு மேல் காந்தி கைது செய்யப்படுகிறார். அவர்களிடம் சிறிதுநேரம் அவகாசம் கேட்டு கரே அவர்களை “வைஷ்ணவ ஜனதோ” பாடலைப் பாடச்சொல்லி பிரார்த்தனை முடித்துவிட்டுத்தான் கிளம்பிச் செல்கிறார் காந்தி.

”உப்பு என்னும் ஆயுதம்” எனும் தலைப்பில் பாவண்ணன் நூலிற்கு மிகச்சிறந்த முன்னுரை அளித்திருக்கிறார். பதினைந்து வருடங்களுக்கு முன் தானும் நண்பர்களும் கலந்துகொண்ட, மகாராஷ்ட்ராவின் விதர்பா பகுதி கிராமங்களின் வழியே நடைபெற்ற நடைபயண யாத்திரை குறித்த (பத்மஸ்ரீ விருதுபெற்ற கல்வியாளர் அனில் குப்தா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த யாத்திரைப்பயணம்; பாரம்பரிய விதைச் சேகரிப்பாளர், காந்தியவாதி “தாதா நோப்ரேக்டே”யும் பாதயாத்திரையில் கலந்துகொள்கிறார்) அனுபவங்களை சிவராஜ் அண்ணா நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.

***

2006. மும்பையின் பன்வெல் தாண்டி அலிபாக் செல்லும் வழியில் பென் எனும் சிறு நகரத்தில் வசிக்க ஆரம்பித்த ஆண்டு. வேலைக்குச் சேர்ந்த கொய்மலர்ப் பண்ணை பென்னிற்கும் கோபோலிக்கும் நடுவில் இருந்தது. ஐந்தாறு மாதங்களிலேயே நானும், அம்முவும், இயலும் (இயல் அப்போது சிறுமி) ஹிந்தி சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டோம். மராத்தி முற்றிலுமாகப் புரிந்தது. பண்ணையின் சுற்றுப்புற கிராமங்கள் வாசிவளி, அஸ்டே, கரும்பிலி, ஆராவ், வக்ரூல் நன்கு பரிச்சயமாயின. ஒருநாள் பண்ணை அலுவலகத்தின் மாடியிலிருந்து எதிரில் கொஞ்சம் தூரத்தில் சிறிய குன்றுப் பகுதியிலிருந்த குடியிருப்பு பகுதியைக் காட்டி “அதுதான் “காகோதே”, வினோபா பாவே பிறந்த கிராமம்” என்று உடன் வேலை செய்யும் மானே சொன்னார். (கிருஷ்ணம்மாள் ஆச்சியின் பேத்தி கலாவதி என்னுடன் கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியல் தோட்டக்கலை படித்தவர்) “அங்கருந்தும் நம்ம பண்ணைக்கு கொஞ்ச பேர் வேலைக்கு வராங்க. கிரீன்ஹவுஸ் மூணுல வேலை செய்யுதே, பூர்ணிமா கெய்க்வாட், அந்தப் பொண்ணு அந்த ஊருதான்” என்றார். பூர்ணிமா கௌசியின் தோழி. இருவரும் பசுங்குடிலில்தான் வேலை செய்தார்கள். கௌசி நான் ஹிந்தி விரைவில் கற்றுக்கொள்ள உதவிய பெண்.

அடுத்த சில நாட்களிலேயே காகோதே-க்குப் போகவேண்டியிருந்தது, பண்ணைக்கு ஒரு மேசனை வேலைக்கு கூப்பிட. பூர்ணிமாவிடம், வேலை முடிந்து மாலை பென்னிற்குப் போகும்போது, வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தேன். கௌசியும் உடன் வந்தார். இருட்ட ஆரம்பித்திருந்தது. பூர்ணிமாவின் வீடு சிறிய ஓட்டு வீடு. நான் எதிர்வீட்டு திண்ணயில் உட்கார்ந்துகொண்டேன். “இதுதான் விநோபா வீடு சார்” என்றார் கௌசி. நான் வியப்படைந்து கூர்ந்து வீட்டைக் கவனித்தேன். வீடு புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. “பூமிதான் மூவ்மெண்ட் பத்தி தெரியுமா கௌசி?” என்று கேட்டேன். “படிச்சுருக்கேன் சார்” என்றார். “ஓருநாள் பகல்ல வந்து பார்க்கணும் கௌசி” என்றேன். அங்கு அமர்ந்திருக்கும் பாக்கியம் முன்செய்த புண்ணியங்களால் வாய்த்திருக்கக்கூடும் என்று நெகிழ்வுடன் நினைத்துக் கொண்டேன். நூறு வருட வரலாற்றின் கண்ணி ஒன்று விரிந்து நீண்டு பயணித்து ஆசியால் கட்டுவதை மெலிதாய் உணர்ந்தேன். பூர்ணிமா இஞ்சி போட்ட டீ கொண்டுவந்து தந்தார். “நான் முன்னாடி ஓசூர்-ன்ற ஊர்ல வேலை செஞ்ச கம்பெனிக்குப் பக்கத்திலதான் ராஜாஜியோட பிறந்த வீடு இருந்தது கௌசி. நான் அடிக்கடி அங்க போவேன்” என்றேன்.

இனிமையான, மறக்க முடியாத மாலை அது.

***

“மண்ணில் உப்பானவர்கள்” தமிழுக்கு அவசியமான, இன்றைய தலைமுறைக்கு மிகத் தேவையான ஒரு முக்கியமான நூல். சித்ராம்மாவிற்கு நன்றி. தன்னறத்திற்கும்.

“காந்தி என்றென்றைக்குமானவர். காந்தியம் என்றென்றைக்குமானது”.

வெங்கி

“மண்ணில் உப்பானவர்கள்”
சித்ரா பாலசுப்ரமணியன்
தன்னறம் நூல்வெளி வெளியீடு

மண்ணில் உப்பானவர்கள் – உரையாடல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 10:34

சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்

சிகண்டி வாங்க

என் இளம்பருவம் 1980களில் திருநெல்வேலியின் உள்ளடங்கிய கிராமமாக அப்போதிருந்த வாசுதேவநல்லூரில் கழிந்தது. மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவும், சிந்தாமணிநாத சுவாமியின் ஆனிப் பெருந்திருவிழாவும் ஊரின் பெரும் விழாக்கள். சிறிய சர்க்கஸ் தொடங்கி வாட்ச் மிட்டாய்வரை அந்தத் தினங்களில் அந்த ஊரில் கிடைக்கும். அந்த வயதில் மண்மீது சொர்க்கம் இறங்கிய நாட்கள் அவை. அப்படியான நாட்களில் மட்டுமே வெளியூரிலிருந்து வந்திறங்கி ஊருக்குள் வலம் வந்து காசு கேட்கும் ஆட்களாகத்தான் திருநங்கையர் எனக்கு முதல் அறிமுகம்.

கீழப்பஜாரின் ஆண்கள் அனைவரும் கடும் அறச் சீற்றக் கோலமும், முகம் கொள்ளா நாணச் சிரிப்பின் குறுகுறுப்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மானுட சாத்தியத்தை மீறிய வித்தையை தத்தம் முகத்தில் காட்டுவார்கள். தனக்குமுன் அவர்கள் வரும் நொடியில் முப்புரம் எரி செய்த சிவக்கோலமாக, அடுத்தவரிடம் நகர்ந்ததும் நீலப்படம் காணும் விடலைப்பருவ முகத்தை மீட்டுக்கொண்டவராக ஒவ்வொருவரும் மாறுவார்கள். சிலர் தாம் அதுவரை கற்றுக்கொண்ட ஆபாச வசவுகளில் எது ஆழமானது என்பதை அவர்கள் மீது பரிசோதித்து அறிய முயல்வார்கள். இன்னும் சில கட்டிளங்காளைகளின் பரிசோதனையோ அவர்களது அரையாடைக்குள் இருப்பதை அங்கேயே அறியத்துடிக்கும் லட்சிய நோக்கோடு அமைந்திருக்கும். பஜாரில் இருக்கும் பெண்கள் பாண்டியன் அவையேறி அரிமாவென ஆர்த்து நின்று மாமயிடன் செற்றிகந்த திறத்தவளான கண்ணகியின் கொற்றவை வடிவை அரைநொடிக்குள் அடைந்து தன் திரும்பாக் கற்பின் பெற்றியைபஜார் அறிய விரித்துரைத்து திருநங்கையரை மாதவிடாய் உதிரம் பருகச்சொல்லி மண் குளிர உமிழ்ந்து மலையேறுவார்கள்.

இத்தனைக்கும் ஆளாகும் அவர்களோ ஒட்டி வைத்துக்கொண்ட புன்னகையோடு, குறைந்தது ஆறு பேராவது ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டபடி ஓர் உடலெனத்தான் நகர்வார்கள்.  மழையெனப் பொழியும் வசவுகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகும் வண்ணம் அவர்கள் செய்யும் செயல் என்ன?  ஒருவரை அணுகி “மாமா, காசு தா/ யக்கா காசு தா”எனக் கேட்பது மட்டுமே. இத்தனை கிளர்ச்சிகளையும், இவ்வளவு கீழ்மையான அகச் சீண்டல்களையும் பிறரில் உருவாக்குவது எது? திருநங்கையரின் தோற்றமா? அவர்களது ஆணுடலிலிருந்து ஆணை அகற்ற அவர்கள் செய்யும் அதீத பெண்மைப் பாவனைகளா? எப்போதும் எதனுடனாவது தளைக்கப்பட்டிருக்கும் விலங்குகள் அற்ற கட்டின்மைதான் பெண்களுக்கு இவர்களில் எரிச்சலூட்டுவதா?

ஜெமினி டீக்கடையில் தட்டில் உதிர்ந்துகிடந்த பஜ்ஜித் தூள்களை திருநங்கையரில் ஒருத்தி அள்ள வேலைக்கு நின்ற ‘தள்ளாடி’ மணி தேநீர் கோப்பைகள் கழுவி தேநீர் நிறம் அடைந்த தண்ணீரைத் தூக்கி அவர்கள் மேல் ஊற்றினான். பஜாரிலேயே காந்தியை நேரில் கண்ட பெருமையுடைய புனமாலைக் கொத்தனார் அவன் மண்டையில் நொங்கென ஒரு குட்டு வைத்தார். அதன்பின் நடந்த நீண்ட பேச்சில் ஒரு இடத்தில் புனமாலைக் கொத்தனார் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.“பூத்து, காயாகி, கனிஞ்சு தாண்டே வெதை வரும். ஆனா பூத்தாலும், காய்ச்சாலும், கனிஞ்சாலும், இனிச்சாலும் வெதையே இல்லாத பழம் என்னதுல? அதத்தானல சாமிக்கு அர்ச்சனைக்கு கொண்டு வைக்கே. அந்த மரத்தத்தானால கல்யாணத்துக்கு கட்டுத. வெதையத்த சென்மன்னாலும் வேரிருக்கும்லாடே.”

நவீன்

சில பத்தாண்டுகள் வாசிப்பும், வாழ்க்கை அனுபவங்களும் தந்த அறிவில்தான் அன்று புனமாலைக் கொத்தனார் சொன்ன வார்த்தைகள் புரிந்தன. திருநங்கையர் வாழ்க்கையும் புரிந்தது. நமக்கு ஒரு இயல்பிருக்கிறது. ஒன்று அதீதமாக ஆராதிப்பது. இல்லையேல் அதீதமாக அவமதிப்பது. இரண்டிலுமே நமக்கு எல்லைகளை மீறித்தான் வழக்கம். 1990கள் வரையிலுமே நமக்கு திருநங்கைகள் நகைப்புக்குரிய, மானுடப் பிரிவில் சேர்க்கப்படாத உயிரினங்கள். 1990களுக்குப் பிறகு ‘பம்பாய்’போன்ற திரைப்படங்கள், சு.சமுத்திரம் ஆனந்த விகடனில் எழுதிய ‘வாடாமல்லி’போன்ற கதைகளும் வந்ததும் ஒரேயடியாய் அனைவரும் சேர்ந்து அவர்களுக்காக புரட்சி பூபாளம் பாடி “அன்றே சொன்னார் எம் தலைவர்,”என ஆராதனை. இரண்டு அணுகுமுறைகளாலும் அவர்களுக்கு விடிவில்லை.

தமிழ் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்ட நாவல்களில் திருநங்கையரின் வாழ்க்கை எவ்வித ஆராதனையும், விதந்தோதாலும் இன்றி நுணுக்கங்களோடு எழுதப்பட்டதில்லை. அவ்வகையில் நவீன் எழுதியிருக்கும் இந்த “சிகண்டி”தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்.

தமிழ் நாவல்களில் படைக்கப்பட்ட கதை மாந்தர்களில் இதுவரை படைக்கப்படாத அல்லது மிகக் குறைவாகப் பேசப்பட்ட கதை மாந்தர்கள் சிகண்டியில் வரும் ஈபு, சரா, தீபன் மூவரும்.

சமூகத்தின் பொதுவான கட்டுப்பாடுகளை அதிகாரத்தாலோ, பணத்தாலோ அன்றி வேறெதாலும் மீற முயல்வோரை சமூகம் அனுமதிப்பதில்லை. அவர்களை ஒடுக்கவும், அவமதிக்கவும், வாய்ப்பிருப்பின் துடைத்தெறியவுமே முயல்கிறது. இதில் திருநங்கையர் வாழ்வது என்பதல்ல, பிழைத்திருப்பதே சவால்தான்.  படிப்பு, திறமை ஆகியவற்றில் வேறெந்த மனிதகுலப் பால் பிரிவுகளுக்கும் குறைந்தவர்களில்லை என்றாலும் பொதுச் சமூகத்தில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடையாது. எந்த வாய்ப்பும் தரப்படாத இவர்கள் இருள் மூலைக்குத்தான் ஓடியாக வேண்டும். அதில் சிலர் மட்டுமே இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்பதாய் ஒளி நோக்கி எழுகிறார்கள். இந்த நாவலில் ஈபு எனும் கதாபாத்திரம் அப்படித்தான் உருவாகி வருகிறது.

அச்சத்துடனும், பயத்துடனும், அதே நேரம் மரியாதையுடனும் பார்க்கப்படும் திருநங்கையாகத்தான் ஈபு வருகிறார். கதையின் நிகழ்வுகளில் வெகு சில ஆனால், வெகு முக்கியமான இடங்களில் வருகிறார். மார்க்கெட்டின் அனைத்து மூலைகளிலும் ஆட்களை வைத்து கண்காணித்து கூலிக்கு கொலையை கச்சிதமாகத் திட்டமிட்டுத் தரும் ஷாவ் கிழவன்கூட ஈபுவிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்வதில்லை. இவ்வளவுக்கும் அவனுக்கும் ஈபுவுக்கும் இடையே நேர்செய்யப்பட வேண்டிய கணக்கொன்றும் உண்டு என்றாலும்கூட. மாறாக, கதை முழுவதும் சொல்லப்படுவது தீபன் எனும் இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் இளைஞனின் பார்வையில்.

ஈபு கதாபாத்திரம் அனைவராலும் மதிக்கப்படும் அதேநேரத்தில், சட்டத்துக்கு புறம்பான காரியங்களையே பண மீட்டுவதற்காக அவர் செய்வது கேள்விகளை எழுப்பும். போதை மருந்து விநியோகிக்கும் ஈபுதான் அப்பகுதி திருநங்கைகளின் பால்மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவும் தாய் திருநங்கையாக உள்ளார். அதேநேரம் கொல்வேல் கொற்றவை என உதிரத்தில் குளித்து எழுகிறார். திரைப்படங்கள் வழியே கற்பிக்கப்பட்டிருக்கும் வெற்றுக் கொஞ்சல், அதீத இரக்கம் கொண்டவர்கள் அல்லர் திருநங்கையர். அவர்கள் வாழ்நாள் முழுதும் போராடும்படி விதிக்கப்பட்டவர்கள். அவர்களின் மொத்தப் போராட்டமுமே தன்னைப் பிறர் பெண் என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்தான் குவிந்து நிற்கிறது. அப்படித் தன்னை பெண்ணெனச் சொல்லி நெருங்கும் ஆணிடம் தன் மொத்த சம்பாத்தியத்தையும் இழந்து நிற்கும் கதைகள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை திருநங்கையர் தம்மைப் பெண்ணென நிரூபிக்க ஓர் ஆணை உடன் வைத்திருக்க முயல்வதும். அதில் ஆணை உதறி எழும் திருநங்கை மட்டுமே  தன்னைப் பெண்ணென ஆக்கும் அடுத்த கட்டத்திற்குப் போகிறாள்; தாயாகிறாள். ஈபு ஆணை உதறி எழுந்த அன்னைத் திருநங்கை.

திருநங்கையர் தாம் பெண்ணெனப் பிறருக்கு நிரூபிக்கும் முயற்சியில் தம் குடும்பத்தை, உறவுகளை இழந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இன்னும் சொல்வதானால் உறவுக்கு ஏங்கும் இவர்கள், உறவினர்களால் குடும்பங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட வலி மிக்க முன்வாழ்க்கை உடையவர்கள். விதிவிலக்குகள் சொற்பத்திலும் சொற்பமே. அதனாலேயே அவர்களுக்குள் உறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கையை தன் தங்கை என ஏற்றுக்கொண்டால் அவர்கள் இருவரும் சகோதரிகளேதான். பிறப்பிலிருந்து வரும் உறவுக்கு தேர்வு செய்துகொள்ளும்  வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால் இங்கு இருபுறமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு உருவாகும். முக்கியமான விஷயம் இந்த உறவுமுறைகளை மொத்தத் திருநங்கை சமூகமும் இயல்பாக, மாற்ற முடியாததாக, உறுதிப்படுத்தப்பட்டதாக ஏற்றுக்கொள்வதுதான். அக்கா, தங்கை, அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, மகள் என அனைத்து உறவுகளும் பிறப்புச் சொந்தங்களுக்கு நிகராக அல்லது அதைவிட வலுவாக அமைந்திருக்கும் தனிச் சமூகம் அவர்களுடையது. இதைப் புரிந்துகொண்டால்தான் சரா எப்படி ஈபுவின் மகளாக ஆகிறாள் என்பதும், மெய்யான தாய் -மகள் உறவின் முரண்களும் இந்த உறவில் நிலைத்திருப்பதை நாம் உணரமுடியும். நாம் இப்போதுவரை பிறப்பாலன்றி வேறெந்த வகையிலும் உறவுகளைச் சம்பாதிக்க முடியாதவர்கள் என்பதும் புரியும்.

சரா – இதுவரை இப்படி ஒரு தேவதைத் திருநங்கை தமிழ் இலக்கிய உலகில் பேசப்பட்டதில்லை. ஒரு கன்னியின் தேவதைக் குணத்துடன்தான் இவள் கதையில் நுழைகிறாள். மிகவும் தீவிரமாக பரதம் பயிலும் சரா நாட்டியத்தில் தனி முத்திரை பதிப்பாள் என்றே அனைவரும் நம்புகிறார்கள். அங்கோர்வாட் கோவிலில் அப்சரஸ் சிலைகளையும், அந்த நடனங்களையும் கண்டபின் தன்னையும் ஒரு அப்சரஸ் என்றே உணர்ந்து அதுவாகவே எப்போதும் இருக்கிறாள். தன்னை அப்சரஸ் நர்த்தகி என்பதை உணர்த்த பரதத்தையும், காற்றிலாடும் கொடிகளின் அசைவை ஒத்த கையசைவுகள் கொண்ட அப்சரஸ் நடனத்தையும் இணைத்து அவளாகவே ஒரு நாட்டிய வகையைப் படைத்துக்கொள்கிறாள்.  மிக நுட்பமான இந்த தேவதைத்தனத்தை நவீன் தேவதைக்குணமாக ஆக்கிக்காட்டுவது சராவின் பிற செயல்கள் வழியே. அவளால் எந்த உடைந்த பொருளையும் தூக்கி எறியமுடிவதில்லை. அவளே அப்படி எறியப்பட்டவள் என்பதால் இருக்கலாமோ என்னவோ? ஆனால் அவற்றை வைத்து ஏதேனும் செய்கிறாள். அவள் வளர்க்கும் பூச்செடிகள் அனைத்துமே உடைந்த பொருட்களில் மண்ணிட்டு வளர்க்கப்பட்டு பூப்பவை. ஒரு நொடி கோபம் மறுநொடி பொங்கும் அன்பு என கன்னிமையின் பிரதிபலிப்பாகவே படைப்பு முழுவதும் வலம்வருகிறாள்.

திருநங்கையர் திருமணம் என்பதை பொதுச் சமூகம் கேலியான வியப்புடன் பார்க்கலாம். ஆனால் தன்னைப் பெண்ணென உணரும் திருநங்கைக்கே அதன் முழு வீச்சும் புரியும். ஆனால் சரா திருமணத்தை கடைசி நொடியில் மறுப்பாள் என்பதை அனுமானிக்கும் இடங்கள் நாவலில் மிகநுட்பமாக பேசப்படுகின்றன. அதுவரை வேறெவருக்கும் ஆடிக்காட்டாத தன் அப்சரஸ் நடனத்தை தீபனுக்கு மட்டுமே ஆடிக்காட்டுகிறாள் சரா. அதுவும் பகுச்சரா மாதாவின் சன்னிதியில். ஒரு கட்டத்தில் தீபன் எழுந்து சென்றுவிட்டாலும் சரா தன் நடனத்தில் மூழ்கி நிறுத்தாமல் ஆடிக்கொண்டேதான் இருக்கிறாள். தீபனுக்காக ஆட வந்தாலும் அவன் எழுந்து சென்றதற்காக அவள் நடனத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. அப்சரஸ்களுக்கு ஆண்களை விடவும் நடனமே பெருங்காதலன். ஆனாலும் சரா தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள தாயாகிக் கனிந்தே செல்கிறாள். சரா, இனி தமிழ் இலக்கியச் சூழலின் முக்கியமான ஒருத்தி.

கதை மொத்தமும் நிகழ்வது தீபன் எனும் முதிரா இளைஞனின் அனுபவத்தில்தான். ஈபுவின் ரிஷிமூல வாழ்க்கையில் தொடர்புடைய ஒரு கண்ணி அவன் என்பது மிகச் சரியான இணைப்பாக கதையில் அமைந்திருக்கிறது.  உடலின் வயதால் இருபதைத் தொடும் தீபனின் மனமோ துவக்ககால விடலைப் பருவத்தில்தான் இருக்கிறது. மனதளவில் அவன் 14, 15 வயதுடையவனாகவே இருக்கிறான். துவக்ககால விடலைப் பருவத்தைக் கடந்து வந்த அனைவருக்கும் யோசித்தால் தெரியும் விஷயம் ஒன்று உண்டு. அப்பருவத்தில் பெண்ணுடலை விட தன்னுடலே ஆராயத்தக்க ஒன்றாக, தன் உடலைத் தான் தொடுவதே கிளர்ச்சி அடையச் செய்வதாக இருக்கும். பெண்ணுடல் கற்பனையில் ஒரு நிமித்தம் மட்டுமே அந்த வயதில். தீபனின் எண்ணங்களும், செயல்களும் நாவல் முழுவதும் இந்தப் புள்ளியையே சுற்றி வருவதைக் காணமுடியும். தன் ஆண்மையை மீண்டும் பெற அவன் செய்யும் முயற்சிகளே கதையை நகர்த்துகின்றன.

தீபனின் அம்மா மட்டுமே அவன் நம்பும் ஒரே மனித உயிர். வேறு எவரையும் அவன் முழுமையாக நம்பத் தயாராக இல்லை. அவன் அம்மாவைத் தவிர அவன் இயல்பாக உணரும் ஒரே அண்மை மாமாவின் பையன் சிறுவன் கண்ணனிடம்தான். தீபனுக்குள் இருக்கும் சிறுவனுக்கும், சிறுவன் கண்ணனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் என்பதால் இருக்கலாம். அவ்வாறே அவனையும் எவரும் முழுமையாக நம்பவில்லை. காசி தொடங்கி ஷாவ் கிழவன்வரை அவனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அமிர்கான் தொடங்கி அவன் அத்தைவரை அவனிடம் பணம் பெறவே முயல்கிறார்கள். ஈபுவுக்கோ இவன் மேல் நம்பிக்கையே இல்லை. முரடன். முன்யோசனை அற்றவன். திட்டமிடத் தெரியாதவன். ஆனால் இத்தனையையும் மீறி அவனுக்குள் இருக்கும் சிறுவனைப் பார்த்தவள் சரா மட்டுமே. சராவின் அன்பு வழியாகத்தான் அவனால் ஈபுவின் உலகில் முக்கிய இடத்தில் நிற்கமுடிந்தது. சராவுக்கு தீபன் மேல் இருக்கும் காதல் வெறும் உடலால் அல்ல என்பதை மிக நுட்பமான ஒரு இடமாக நாவலில் நவீன் பதிவு செய்கிறார். சராவுடன் பழகும் தீபனுக்கு அவள் ஒரு திருநங்கை என்பதே தெரியவில்லை. அவளை ஒரு பெண்ணென நினைத்தே அவளை முத்தமிடவும் அணைக்கவும் செய்கிறான். தன்னை முழுமையான பெண்ணாக நடத்தும் முதல் ஆணாக சரா தீபனையே பார்க்கிறாள். இந்த அங்கீகாரத்திற்குத்தானே ஏங்கிச் சாகிறார்கள் திருநங்கையர். அந்த நொடியை தீபனில் பெற்ற சரா அதன் பொருட்டு அவனை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்பவளாகவே ஆகிறாள். ஈபு சொல்வதும்கூட அவளுக்குப் பொருட்டல்ல. உடைந்த எதையும் ஒட்டவைத்து அதில் பூ பூக்க வைப்பவள் அவள்.

தீபன் தன் ஆண்மையை மீட்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் ஏமாற்றம் அளிக்கும் விதத்திலேயே முடிகின்றன. ஆண்மையை அனைத்துமாக எண்ணும் தீபன்,காசி சொல்வதைப்போல பயத்தால் அனைவரையும் அடிக்கிறான். அதைத்தாண்டிய ஈபுவோ மிச்சமின்றி அழிப்பவராக இருக்கிறார். தீபனின் பார்வையில் வரும் பாலியல்விடுதி, மார்க்கெட், கட்டடங்கள், போதை மருந்து  பயன்படுத்துவதன் அனுபவங்கள் ஆகியவற்றின் விவரணைகள் அனைத்துமே பதின்வயதை சற்றே கடந்த விடலைப் பருவ வர்ணனைகள்தான். ஒருமுறை அம்மாவைப் பார்ப்பதும், ஆற்றில் முழுகி எழுவதும் தன் அனைத்து பாவங்களையும் கழுவி, தன் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்துவிடுமென நம்பும் இவன்தான் மார்க்கெட்டில் அடிப்பது, கைகால்களை முறிப்பது என ஆரம்பித்து, வட்டிக்கு ஆள் கடத்தல் செய்பவர்களிடம் பேசும் விதத்தில் பேசுவது என வளர்ந்து கொலைத் திட்டத்தில் பங்கு பெறுவதுவரை செய்கிறான். ஒரே நேரத்தில் இரு எல்லைகளிலும் மாறிமாறிப் பயணிக்கும் இக்கதாபாத்திரத்தின் வார்ப்பு அருமையாக வந்துள்ளது.

ராஜகோபாலன்

பெண்மையின் மென்மையும், நளினமும், கன்னிமையின் கருணையும், அழகில் இருக்கும் தெய்வீகத் தன்மையுமாய் இருக்கும் சிகண்டியையும், குருதிப் பலிகொள்ளும் அங்காளியாய், வேட்டையாடி தன் குருளைகளுக்கு உணவளிக்கும் வயமாவென நிற்கும் ஈபுவையும் இணைக்கும் ஒற்றைச் சரடாய் கதையில் நிற்பது பகுச்சரா மாதா எனும் தெய்வமே. இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் புகழ்பெற்ற அவள் இந்திய மரபில் பால்மாற்றம் கொண்டோரின் தெய்வமெனத் தொழப்படுபவள். இம்மண்ணில் தெய்வங்கள் அற்ற எவருமே இல்லை. அந்த மாதாவின் உருவத்தை வரையச் செய்யும் சிகண்டி, அம்மாதாவின் முன்புதான் தாய்த் திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொள்கிறாள். அந்தத் தெய்வத்தின் முன்புதான் தாய்த் திருநங்கைகள் உருவாகி வருவது நாவலில் மிக நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது, இறுதி அத்தியாயம் வரையிலும். உடலின் உறுப்பை அறுத்து எறிந்தால் மட்டும் தாய்த் திருநங்கையாகி விட முடியாது. மனம் முழுவதும் தான் சுமக்கும் இன்னொன்றையும் அறுத்து வீசி தன்னையே உடலாலும், மனதாலும் பலியிடுபவருக்கே பகுச்சரா அன்னை கனிகிறாள்.

குஜராத்தில் அமைந்திருக்கும் அன்னையின் மையக் கோவில் புராதானமானது. 1508ல் ஸ்ரீதரரால் எழுதப்பட்ட ராவண – மண்டோதரி சம்வாதம் எனும் நூலிலும், அதை ஒட்டி 1565ல் எழுதப்பட்ட விக்ரம சாவந்த் நூலிலும் சில வரிகளில் எழுதப்பட்டிருக்கும் சம்பவக் குறிப்புகளை வரலாற்றாசிரியர் மஜூம்தார் குறிப்பிடுகிறார். அந்த வரிகள் அங்கு பேசப்படும் நாட்டார் கதையை ஒட்டியதாகவே இருக்கின்றன.

இரண்டாம் அலாவுதீனின் படைகள் குஜராத்தில் நுழைந்து கோவில்களை இடித்தபடியே முன்னேறி வருகிறது. தற்போது மெஹ்சானா மாவட்டத்தில் பெசராஜி எனும் இடத்தில் உள்ள பகுச்சரா அன்னையின் கோவிலுக்கு வருகையில் அலாவுதீனின் படைவீரர்கள் அன்னையின் ஆலயத்தைச் சுற்றி மேய்ந்துகொண்டிருக்கும் சேவல்களை அறுத்து உண்கிறார்கள். அங்குள்ளோர் அவை அன்னையின் வாகனங்கள், கொல்வதுகூடாது  என எத்தனையோ தடுத்தும் படையினர் கேட்கவில்லை. ஒரு சேவல் மட்டும் தப்பிப்பிழைத்து மறுநாள் அதிகாலை கூவ படைவீரர்களின் வயிற்றுக்குள் இருந்த சேவல்களும் உயிர்பெற்று பதிலுக்கு கூவல் எழுப்பி அவர்களின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு உயிருடன் வெளியே வருகின்றன. படை வீரர்கள் இறந்து விழக்கண்ட அலாவுதீன் அன்னையிடம் மன்னிப்புக்கேட்க அன்னை மன்னித்து அவர்களை உயிர்ப்பிக்கிறாள். இந்த நிகழ்வு குஜராத்தின் புகழ்மிக்க கவிஞரான வல்லப பட்டரின் கவிதைகளிலும், அவருக்கு இளையவராகக் கருதப்பட்ட பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷாமல் பட்டரின் கவிதையிலும், 1630இல் குணவிஜயரால் எழுதப்பட்ட வியவஹாரி ரஸ எனும் நூலிலும், நாட்டார் கவி மரபான சரணர்கள் பாடலிலும் குறிப்பிடப்படுகிறது.

அன்னை உயிர்ப்பித்து மன்னித்தாலும் செய்த தவற்றுக்கு பரிகாரமாக அந்தப் படையின் ஒரு பிரிவினர் தம்மை அன்னை பகுச்சராவின் சேவைகளுக்கு ஒப்புக்கொடுத்து அங்கேயே இருக்க வேண்டுமென அன்னையின் ஆணை பிறந்தது. அதுவும் தம்மை ஆணெனக் கருதி அவர்கள் செய்த அகந்தைக்குப் பரிகாரமாக பெண்களின் சேலை போன்று மேலாடை அணிந்தும் கைகளில் வளையல் அணிந்துமே அன்னைக்குச் சேவை செய்யவேண்டும். அந்த மரபில் வந்தவர்களே இன்றும் “கமாலியாக்கள்”என அழைக்கப்படும் பிரிவினர். இப்போதும் இம்முறையில்தான் அன்னையை அவர்கள் வழிபடுகின்றனர். அவர்கள் இறந்தால் குர் ஆனின் சுரா ஓதியே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

இந்த வரலாறு ஏன் இங்கு சொல்லப்படுகிறது? இந்த வரலாற்றை இந்த நாவலை எழுதி முடிக்கும்வரை நவீன் வாசித்திருக்கவில்லை  என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆண்மையின் வெறியில் இயற்றப்படும் தவற்றை அன்னை மன்னித்து, தவறிழைத்தவரை தன் பணியில் இணைத்துக்கொள்வதை இத்தனை நூறு ஆண்டுகள் கழிந்தபின் எழுதப்படும் நவீன நாவலில் காண்பது விவரிக்கமுடியாத அனுபவம்தான். நாவலின் இறுதி அத்தியாயத்தில் இந்த வரலாற்றுத் தொன்மத்தின் முக்கியத்துவம் என்ன என்பது வாசிப்பவருக்கு விளங்கும்.

பகுச்சரா மாதா போலவே சீன பெளத்தத்தின் தேவியான குவான்-யின்னும் தன் வான் தொடும் உயரத்திலிருந்து தலைகுனிந்து, கண் சரித்து, கருணைகொள்ளும் முகத்துடன் இணையாக வரும் காட்சிகளும் நாவலில் நுட்பமாகவே சொல்லப்படுகின்றன. மரண அடி வாங்கி இறுதி நொடிகளில் இருக்கும் “வைட் டைகர்”குவான்-யின் காலடியில் கிடக்கையில் குவான்-யின் முகத்தை மறைத்து எழும் பகுச்சரா தேவியின் மானுட முகத்தைக் காண்கிறார். அன்னைக்கு பலியெனத் தன்னை அவர் ஒப்புக்கொடுக்கும் இடமும் நாவலில் மிக நுணுக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒற்றை வரியில் நவீன் சொல்வது, தன் துப்பாக்கியின் குறி தவறவே தவறாத இலக்கில் தன்னை கொல்பவள் நின்றாலும் விரலை விசையிலிருந்து இழுத்துக்கொள்கிறார். நவீன் நாவலை பல இடங்களிலும் ஒரு காட்சியென நமக்குள் காட்டும் இடங்களில் இதுவும் ஒன்று.

திருநங்கை வாழ்வில் உள்ளவற்றை தகவலாக ஒரு நாவலில் பயன்படுத்துவது சாதாரண நாவல்களில் நிகழும். ஆனால் சிகண்டியில் அவர்களது வாழ்க்கையின் உணர்வுகள், அவற்றின் முரண்கள், அவர்கள் பிறருடன் கலந்து பழகும்விதம், வாழ்க்கைமுறை என  அனைத்துமே அவர்களது இயல்பில் சொல்லப்படுகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் படைப்பான பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனதமிழிலக்கியத்தின் உச்சக்காட்சிகளில் ஒன்று என்றுதான் சொல்வேன். அதன் முழு பரிமாணங்களையும் சிகண்டியில் உணரமுடிவதுதான் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பேன்.

ஓர் இலக்கிய வாசகன் இலக்கியத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் கொடைகளில் முக்கியமானது அவனறியா வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தையே. சிகண்டி இதுவரை தமிழ் இலக்கிய வாசகர்கள் அறியாத, அல்லது மிகக்குறைவாகவே அறிந்த மலேசியத் திருநங்கையரின் வாழ்க்கையை அணுகி நின்று உடன் வாழும் அனுபவத்தை அதன் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

நான் தொடக்கத்தில் சொன்ன சுய அனுபவத்தில் ஒன்று மட்டும் விட்டுப்போயிற்று. எங்கள் ஊர் பெரிய கோவில் சிவன் கோவில் என்றாலும், இறைவன் பெயர் சிந்தாமணிநாதர் என்றாலும் அக்கோயிலில் அம்மைக்கு தனி சந்நிதி இல்லை. சிவனுக்கும் லிங்க ரூபமாக தனிச் சந்நிதி  இல்லை. கோயிலின் ஒரே கருவறையில் கிட்டத்தட்ட ஐந்தடி உயரத்தில் ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்தநாரி கோலத்தில்தான் எங்கள் ஊர் இறை இன்றுவரை அருள்புரிந்து கொண்டிருக்கிறது.

“புனைவின் வழி மட்டுமே நான் நிறைவை அடைகிறேன்” – ம.நவீன்

பேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி

மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 10:33

விஷ்ணுபுரம் விழா- ஷிமோகா பாலு

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

அன்புள்ள ஜெ ,

விஷ்ணுபுரம் விழா முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டது ஆனால் விழா தந்த உற்சாகமும் , விழவு மனநிலையும் அப்படியே எஞ்சியிருக்கிறது , கடந்த வருடங்களில் நடைபெற்ற விழாக்களில் கலந்துக்கொள்ள நினைத்து கடைசி தருணத்தில் எப்படியோ தவறிபோய்க்கொண்டே இருந்தது , பிறகு உங்கள் தளத்தில் விழா குறித்த புகைப்படங்களையும் , கடிதங்களையும் வாசித்து எத்தனை முக்கியமான மற்றும் சிறப்பான விழாவை தவறவிட்டுவிட்டோம் என வருந்துவேன் , இந்த முறை மகிழ்ச்சியான தருணங்களும் நினைவுகளும் மட்டுமே ! தளத்தில் விழா சார்ந்த கடிதங்களையும் புகைப்படங்களையும் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் விழாவில் இருப்பதை போல உணர்கிறேன் .

ஈரோடு புதிய வாசகர் சந்திப்பின் மூலம் கிடைத்த நண்பர்களுடன்(ஓவியர் ஜெயராம் , வேலாயுதம் , கார்த்தி , நரேந்திரன் ) தொலைபேசி வழியே தொடர்ச்சியாக சில உரையாடல்கள் நடைபெற்றுகொண்டே இருந்தது … அவர்கள் எல்லோருடனும் மீண்டும் 3 நாட்கள் கல்லூரி நாட்கள் மகிழ்ச்சியுடன் கழிந்தது … இத்தனை பேரை விழாவில் மொத்தமாக பார்த்ததே ஒரு பரவச மனநிலைக்கு இட்டுச்சென்றது .

நண்பர்களுடன் பேசிக்கொண்டே மிகச்சிறப்பான காலை உணவை முடித்துக்கொண்டு வந்ததும் நிகழ்ச்சி நிரல்களின்படி சரியாக 9:30 தமிழினி மின்னிதழின் ஆசிரியர் கோகுல்பிரசாத் அவர்களோடு விழாவின் சிறப்பம்சமான இலக்கிய அமர்வுகள் தொடங்கியது … கேள்விகள் அம்புகளை போல தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன , ஒரு மணிநேர அமர்வு சட்டென முடிந்தைபோல இருந்தது … ஆனால் கேள்வி பதில்கள் அமர்வுகளுக்கு பிறகும் தொடர்ந்து … கோகுல்பிரசாத் அவர்கள் ஓவியங்களை பற்றி சொன்ன கருத்து ஓவியர் ஜெயராமை வெகுவாக சீண்டியது என நினைக்கிறேன் கோகுல்பிரசாத்தை தேநீர் கூட அருந்தவிடாமல் பெரிய விவாதம் நடந்தது அடுத்த அமர்வுக்கான அறிவிப்புதான் அந்த விவாதத்திற்கு திரையிட்டது .

விருந்தினர்களின் தேர்வு மிக கச்சிதம் ,தமிழின் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் , இதழாசிரியர் , மூத்த எழுத்தாளர்கள் ,இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் திரைப்பட இயக்குனர் , முன்னால் மத்திய அமைச்சர், தெலுங்கு கவிஞர் ,  இலக்கியத்திற்கு தொடர்பில்லாத எவரும் அவ்வரங்கில் இருக்கவில்லை .ஒவ்வொரு அமர்வும் ஒவ்வொரு விதத்தில் திறப்பாக அமைந்தது  திருச்செந்தாழை , ஜா.தீபா அவர்களுடனான அமர்வுகள் சிறப்பான விவாதத்திற்கு இட்டுச்சென்றது … விழா முடிந்ததும் முகநூலில் நுழைந்தால் ‘கவிஞர் தேவதச்சனை தாண்டி தமிழ் கவிதை வளரவில்லை’ என திருச்செந்தாழை சொல்லியதைப் பற்றி ஒரே களேபரமாக இருந்தது … செந்தில் ஜெகன்நாதன் , சுஷீல்குமார் , காளிபிரசாத் , முதற்கொண்டு எம்.கோபாலகிருஷ்ணன் , சோ.தர்மன் ,விழா நாயகனான விக்கி அண்ணாச்சி என எல்லோரிடமும் பெரும்பாலான கேள்விகள் அவர்களின் படைப்புகளை சார்ந்தே இருந்தன … பெரும்பாலும் சுருக்கமான ஆனால் கச்சிதமான கேள்விகள் … சோ.தர்மன் உடனான அமர்வு கடைசியானது என்றாலும் தன்னுடைய இயல்பான பேச்சால் முதல் அரங்கின் உற்சாகத்தை அப்படியே நீடிக்கச் செய்தார் .

தெலுங்கு கவிஞர் சின்னவீரபத்ருடு அவர்களின் அமர்வு மிகச்சிறப்பானது தெலுங்கில் நல்ல நவீன கவிதைகளே இல்லை என்றே நான் கேள்விப்பட்டிருந்தேன் அந்த பார்வையை முற்றிலுமாக மாற்றினார் , பேராசிரியருக்குரிய குரல் , சங்கபாடல்கள் திருக்குறள் , கன்னடத்தில் சர்வக்ஞரின் வசனங்கள், சீன கவிதைகள் என அவர் பேசியது எல்லாமே பெரிய ஆச்சர்யங்களாக விரிந்தன , அமர்விலும் , விருதுவிழாவின் போதும் இத்தகைய இலக்கிய விழாவை கண்டதில்லை என்றும் , இத்தனை இளைஞர்கள் ஒரு இலக்கிய விழாவில் கலந்துகொள்வது தெலுங்கு சூழலில் அறிதென்றும் , இலக்கியம் அங்கே ஓய்வுபெற்றவர்களுக்கானது இருப்பதாகவும் சொன்னார் … அவருக்கு மரியாதை செய்து  அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட  புத்தகங்களை குழந்தைக்குரிய ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

விழா முழுவதும் விக்கி அண்ணாச்சி மிக உற்சாகமாக காணப்பட்டார் ,  இணையத்திலும் , புகைப்படங்களிலும் இருக்கும் அண்ணாச்சிக்கும் விழாவில் இருந்த அண்ணாச்சிக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது கிட்டத்தட்ட முற்றிலும் வேறொரு மனிதரோ என தோன்றும் அளவிற்கான வித்தியாசம் … விழா முழுக்க வெடித்து சிரிக்கும் அண்ணாச்சியை பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது  .

விருது விழாமேடையில் ஓவியர் ஷண்முகவேல் வரைந்த அண்ணாச்சியின் ஓவியத்தைப் பற்றி எல்லா நண்பர்களோடும் பேசிக்கொண்டிருந்தேன் ! பிரமிப்பு சற்றும் அகலவில்லை குறிப்பாக ஓவியத்தில் அண்ணாச்சியின்  கண்களில் ஒரு மாயஜாலத்தை நிகழ்த்தியிருந்தார் … அடுத்த பிரமிப்பு கவிஞர் ஆனந்த் குமார் இயக்கிய ஆவணப்படம் ! மிக நெகிழ்வான தருணம் … ஆவணப்படத்தில் அண்ணாச்சியின் தலைவி பகவதியம்மாள் அவர்களின் வார்த்தைகள் முதல் முகபாவனை வரை அனைத்தும் சரவெடி .

தமிழின் முக்கியமான படைப்பாளிகள் நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால் , லஷ்மி மணிவண்ணன் , இசை , போகன் சங்கர், க.மோகனரங்கன் என எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்க அருமையாக இருந்தது … அமிர்தம் சூர்யா , சாம்ராஜ் , கடலூர் சீனு , என இணையத்தில் பெயராக மட்டுமே அறிந்த ஆளுமைகளுடன் உரையாட வாய்ப்புகிடைத்தது … நீண்ட நாட்களாக முகநூலில் வாசிப்பு மூலம் கிடைத்த நண்பர்களையும் பார்க்க வாய்ப்புகிடைத்தது … எத்தனை முகங்கள் , எத்தனை உணர்வுகள் !

உணவை பற்றி எழுதாமல் இருக்கவே முடியாது … கல்யான சாப்பாட்டை விட ருசியான உணவு , கிட்டத்தட்ட 7 வேளை சாப்பாடு ,ஒருக்கணம் குமரித்துறைவியின் ஊட்டுப்புரை ஞாபகம் வந்தது , எத்தகைய உழைப்பு இதன் பின்னால் இருக்கிறது என நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது.

விழா அரங்கின் முன் இருந்த புத்தக கடைகள் சிறிய புத்தக திருவிழா போன்று இருந்தது … புத்தகங்களில் தேதியுடன் கையெழுத்து வாங்கியதும் இனி இந்த புத்தகங்களை திறக்கும்போதெல்லாம் இந்த இனியநினைவுகள் கிளர்ந்தெழும் என தோன்றியது .

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களோடு உரையாட வாய்ப்பு கிடைத்த 3 நாட்கள் ஆனால் எதுவும் பேசமுடியவில்லை ஏதோவொரு தயக்கம் … நீங்கள் என் தோள்மீது கை வைத்தபடி இருந்த 2 நிமிடங்கள் அந்த குறையை நீக்கவிட்டது , விழா முடிந்த சிரிப்புகளும் கும்மாளங்களுமாக தொடங்கிய உரையடால , அடுத்தகட்டமாக இனிவரும் விழாவில் செய்யவேண்டியது என்ன , இவ்விழாவில் இன்னும் சிறப்பாக நடைபெற்றிருக்கவேண்டியவை எவை என்ற நீண்ட விவாதம் மற்றும் உரையாடல் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது … விழா எப்படி வருடாவருடம் வளர்ந்து இவ்வளவு பெரிய விழாவாக ஆகியிருக்கிறது என உணர்ந்துகொண்ட தருணம் அது … செயலூக்கம் தேவைப்படும்போதெல்லாம் உங்களை நினைத்துக்கொள்கிறேன் … அடுத்த நாள் ராஜன் நிவாஸில் நடந்த உரையாடல்கள் சிரிப்பு சத்தம் நிறந்தவையாக இருந்தது … பிற்பகல் வரை பேசிவிட்டு மதிய உணவாக ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு ஒவ்வொருவராக விடை பெற்றோம் … பிரியாணியை தவிர அனைத்துமே மிக மிக இனிய நினைவுகளாக எஞ்சியிருக்கிறது.

     -ஷிமோகா பாலு

( பாலசுப்ரமணி மூர்த்தி )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 10:31

எழுத்துரு -அனுபவத்தில் இருந்து…

எழுத்துரு பற்றி, மீண்டும்…

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமென எண்ணி வேண்டுமென்றே  சில வாரங்கள் தாமதித்தேன். “எழுத்துரு பற்றி, மீண்டும்…” சரியான நேரத்தில் வந்துள்ளது.

2013இல்  நீங்கள் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதும் ஒரு எண்ணத்தை எழுதியதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இப்போது எண்ணிப்பார்க்கையில் அது ஒரு உணர்வு ரீதியான மேட்டிமை தான் காரணம் – என் மொழி, என்னால் படிக்க எழுத முடியும், என் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும் என்றே எண்ணினேன். பெங்களூருவில் பணியாற்றியபோது என் மனைவி கற்பிக்கவும் செய்தாள்.

சிலஆண்டுகளில் அமெரிக்கா  வந்த பிறகும்  கற்பித்தல் தொடர்ந்தது. ஆனால் கற்றலின் ஆர்வம் குறைவதை கண்கூடாகக் கண்டேன். மெல்ல மெல்ல மகள்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியாக ஆங்கிலம் ஆகியது. இழுத்து வைத்து கற்பித்தலும் பெரியளவில் உதவவில்லை.

இவ்வாறாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் சிவாஜி கணேசன் வடிவில் ஒரு திறப்பு. திருவிளையாடலில்  “கொங்குதேர் வாழ்க்கை” பாடலை முடிக்கும் போது “இதுதான் எமது செய்யுள்ள்ள்ள்” என்று முடித்தவுடன் சின்னவள் தன்னிச்சையாக “Wow, this  is nice, what is that seyyulll paa? ” என்றாள்.

செய்யுள் என்றால் என்ன, எதுகை மோனை எல்லாம் விளக்க ஒரு சிறு பாடலை எழுதிக் காட்டி நீயே படிச்சு சொல்லு என்று ஆங்கிலத்திலும்  எழுதிக் கொடுத்தேன். வியப்பூட்டும் வகையில் வேலை செய்தது. மட்டுமல்லாமல் அவர்களே மேலும் சில என்று கேட்க, இப்போது தினமும் ஒரு மணிநேரம் இனிமையாகக் கழிகிறது.

வார இறுதியில் இன்று தமிழ்ப்பாடம் இல்லை என்றதும் சுணங்கும் அளவிற்கு, அவர்களே இன்று என்னை இழுக்கிறார்கள். “மதுகரம் வாய்மடுக்கும் குழற்காடு” என்னும் படிமம் அவர்களுக்கு பிடிபடுகிறது. “வேற யாராலயும் முடியுமா, என் பொண்ணுடி” என்று பெருமை பேசிக்கொண்டிருந்த வேளையில், “அப்பா, Remember யான் எனது என்பவரை கூத்தாட்டுவான்ப்பா” என்று எடுத்துக்காட்டிய போது உங்கள் எழுத்துரு கட்டுரையும் கருத்துக்களுமே நினைவில் எழுந்தது.

அன்றே வந்து “ஆசானே, பொறுத்தருள்க”  என்று எழுதி  இதோ இன்று அனுப்பிவிட்டேன்.

என்றென்றும்  அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்

***

அன்புள்ள மூர்த்தி,

நான் சொல்வது ஒரு குறிப்பிட்ட காரணத்தால். இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் மிகுதி, அறைகூவல்களும் மிகுதி.  மொழிகளின் எழுத்து வடிவுகளை கற்பதென்பது ஒரு சலிப்பூட்டும் பணி. நீண்டகால தொடர் உழைப்பு அவர்களால் அளிக்கப்பட இயலாது.

இப்படிச் சொல்கிறேன். இன்றைய குழந்தைக்கு நீங்கள் தத்துவத்தை அறிமுகம் செய்கிறீர்கள் என்று கொள்வோம். சாக்ரடீஸில் இருந்து ஆரம்பித்து பாடத்திட்டத்தை வரிசையாக எடுத்துச்சொல்லி அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னால் அவர்கள் உடனே எதிர்ப்பு கொள்வார்கள். அவர்களால் அந்த உழைப்பைச் செலுத்த இயலாது. அது சலிப்பூட்டும் ஒரு மனப்பாடப்பயிற்சி. ஆனால் ‘இங்கே உள்ள பொருட்களின் வடிவம் முன்னரே இருந்து பொருள் பின்னர் வந்ததா, அல்லது பொருட்களில் இருந்து அதன் வடிவங்களை உருவாக்கிக்கொண்டார்களா?’ என்ற கேள்வியை எழுப்பி சாக்ரடீஸ், அரிஸ்டாடில் என்ன சொன்னார்கள் என விவாதித்தால் தீவிரமாக உள்ளே நுழைவார்கள். சோஃபீஸ் வேர்ல்ட் [சோஃபியின் உலகம், தமிழில் ஆர்.சிவக்குமார்] நூல் இந்த அடிப்படையில் எழுதப்பட்டது.

நம் குழந்தைகள் ஏன் தமிழில் அதிகம் வாசிப்பதில்லை? ஏனென்றால் அவர்களுக்கு 15 வயதாகும்போது தமிழ் வாசிக்கும் திறன் ஐந்து வயதுக்குழந்தைக்கு சமானமானது. ஐந்து வயதுக் குழந்தை வாசிக்கும் நூல் அவர்களுக்கு சலிப்பூட்டும். ஆங்கிலத்தில் அவர்கள் 15 வயதுக்குரியதை வாசிக்க முடியும். ஆகவே ஆங்கிலத்தில் வாசிப்பார்கள். காலப்போக்கில் தமிழையே மறாந்துவிடுவார்கள். நான் சொல்வதெல்லாம் இந்த யதார்த்தத்தில் இருந்தே. இங்கே ’பெரியார் பகுத்தறிவுடன்  பார்க்கச்சொன்னார்’ என்றெல்லாம் கூச்சலிடுவார்கள். ஆனால் எல்லா பார்வையும் வெறும் உணர்ச்சிகர வெறியில் இருந்து எழுவதே. அந்த வெறிதான் கண்முன் உள்ள அப்பட்டமான உண்மையைப் பார்க்க தடையாக உள்ளது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 10:30

January 6, 2022

உறவுகளின் பொருள்

Relation- Amit Ghosh

அன்புள்ள ஜெயமோகன் சார்,

என் சிறு வயது முதலே, என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் உறவினர்களைப் பற்றி. என்னுடைய பெரியப்பா 1950 களில் கல்லூரிப் படிப்பை முடித்து, சிறந்த மாணவருக்கான விருதும், நல்ல பழக்க வழக்கங்களுக்காக சொந்தங்களின் மத்தியில் மரியாதையுடனும் வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் மூத்த மகன், அவருக்கு பின் நான்கு தம்பிகள் ஒரு தங்கை. நல்ல செல்வாக்கான குடும்பம் தான். இவர்கள் அனைவரையுமே ஒரு தந்தையின் நிலையில் தான் வளர்த்து வந்திருந்திருக்கிறார். அவரின் அம்மாவைப் பற்றி ஒரு சொந்தக்காரர் தவறாக சொல்லிவிட்டார் என்ற காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இத்தனைக்கும் அந்த சொந்தக்காரர் எங்களின் பாட்டியின் உதவியால் தான் வாழ்க்கையே நடத்தி வந்தார். அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து, வீடு, நிலம் வாங்கி கொடுத்து வாழ வைத்தார் என் பாட்டி. இதைப் போன்ற நிறைய உதவிகளை நிறைய உறவினர்களுக்கு செய்துள்ளார். அப்படி உதவி பெற்று வாழ்ந்தவர்கள், ஏன் பாட்டியைப் பற்றியே இப்படி ஒரு அவதூறையும் சொல்ல வேண்டும்?

அந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பெரியப்பாவின் மேல் முதலில் எனக்கு மிகுந்த அனுதாபம் இருந்தது. ஆனால் நான் வளர வளர அவரின் மேல் கோபம் தான் வருகிறது. யாரோ ஒருவர் வார்த்தைக்காக உயிரை விடும் அளவுக்கா அவரின் மனம் பண்பட்டு இருந்தது? அப்படி பேசியவர்கள் திரும்ப உதவி கேட்கும்போது அதை செய்யாமல் அவர்களை ஒதுக்கி இருக்கலாமே? ஆனால் உறவினர்கள் என்பவர்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள். நாம் ஏதாவது கஷ்டத்தில் இருக்கும் போது உதவுவதில்லை நம்மை மேலும் பேசி பேசி கஷ்டத்துக்கு ஆளாக்குபவர்களாகவே இருக்கிறார்கள். அதே ஆட்கள் நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது நம்மிடம் பேசிக்கொண்டு இருப்பதையே பெருமையாக நினைப்பதாகவும், நம்மிடம் இருந்து எந்தெந்த வகையில் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்கள்.

சுருக்கமாக என் கேள்வி இது தான், நம்முடைய கஷ்டத்தில் பங்கெடுத்து நமக்கு கை கொடுத்து உதவுபவர்கள் தானே உறவினர்களாக இருக்க முடியும்? நம்முடைய நிலைமையை இன்னமும் மோசமாக்கும் உறவினர்கள் இரத்த சொந்தமாகவே இருந்தாலும் ஒதுக்கி வைப்பதில் என்ன தவறு? ஆனாலும் எதுக்கென்னாலும் கூடப் பொறந்த வங்க வேணும் என்று பேசித் திரிவதில் என்ன பயன் இருக்கிறது?

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

***

அன்புள்ள மனோபாரதி,

இந்தக் கேள்வியை உரையாடல்களில் பலர் கேட்பதுண்டு. குறிப்பாக இளைஞர்கள். ஒரு நண்பர் தன் வாழ்க்கையின் கதையைச் சொன்னார். ”கஷ்டங்களின்போது உறவினர்களால் பேணப்பட்டதாகச் சொல்லும் எவருமே இல்லை. உறவினர்கள் கைவிட்டனர், ஏளனமும் செய்தனர், சில நல்லமனிதர்களின் உதவியால்தான் நான் மேலே வந்தேன் என்று சொல்லும் வாழ்க்கைக் குறிப்புகளையே கண்டிருக்கிறோம். அப்படியென்றால் உறவுகள் எதற்காக?”

“பந்துக்கள் சத்ருக்கள்” என ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு. உறவுகளே முதல் எதிரிகள். அப்படியென்றால் உறவுகளை ஏன் பேணவேண்டும்? உதறிவிடுவதல்லவா உளநலனுக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் நல்லது?

ஆனால் மறுபக்கம் குறள் போன்ற தொல்நூல்கள் உறவுகளை பேணவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றன. சுற்றந்தழால், உறவை பேணுதல் என ஓர் அதிகாரமே உள்ளது.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்துடன் கூடிப்பழகாதவன் வாழ்க்கையானது கரையில்லாத குளம்போன்றது. நீர் நிறைய நிறைய உடைத்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்கிறார் வள்ளுவர். ’வனம்சேர்ந்தாலும் இனம் சேர்’ என பழமொழியும் சொல்கிறது.

இதைப்போன்ற எந்த கேள்வியையும் வரலாற்றில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். நான் பழங்குடிச் சமூகங்களைக் கண்டிருக்கிறேன். அங்கே குருதியுறவு என்பது மிக ஆழமானது. அவர்கள் எவரும் தனியர்கள் அல்ல, ஒரே திரள். முன்பு ஒரு காணிக்காரரிடம் நீ யார் என்றால் காணி என்று பதில்சொல்வாரே ஒழிய அவருக்கான பெயரைச் சொல்லமாட்டார்.

இந்தியத் தேர்தல்முறையை பற்றி காந்திக்குப்பின் இந்தியா நூலில் எழுதும் ராமச்சந்திர குகா ஒன்று சொல்கிறார். 1952ல் முதல் பொதுத் தேர்தலின்போதுதான் இந்தியாவின் பழங்குடிகளுக்கு வாக்குரிமை வந்தது. அப்போதுதான் அவர்களை தனிமனிதர்களாக பார்க்கும் பார்வை அவர்களிடம் அறிமுகமாகியது. அவர்களில் பலருக்குப் பெயர்களே இல்லை. தங்களை குடிப்பெயராலேயே அறிமுகம் செய்துகொண்டனர். தேர்தலதிகாரிகளே அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்.

அது மானுடன் என்னும் உயிரின் இயற்கை. இது மந்தை விலங்கு. திரளாக வாழ்வது. தனிமையில் வாழ முடியாதது. குடி என அவர்கள் சொல்லும் அந்த திரளடையாளமே அவர்களின் அடையாளம். குடிகள் திரண்டு சாதிகளும் ஊர்களும் சமூகங்களும் சிற்றரசுகளும் நாடுகளும் ஆயின. ஆனால் அடிப்படையில் குடியே இருந்தது. குமரிமாவட்டக் கல்வெட்டுகளைப் பற்றி எழுதும் அ.கா.பெருமாள் இங்கே முதன்மையாகக் குடியடையாளத்தாலேயெ பெரும்பாலானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பலசமயம் பெயர்கள் இல்லை, குடிப்பெயர் மட்டுமே உள்ளது.

இன்று உறவுகள் என நாம் சொல்வதன் அடித்தளம் அந்த குடிமரபில் இருக்கிறது. உறவுகளை ஒட்டி நாம் அடையும் எல்லா உணர்ச்சிகளும் அந்த பழங்குடி வாழ்க்கையில் உருவானவை. மூத்தார் வணக்கம், தந்தையர் வணக்கம், அன்னைவர் வணக்கம், உடன்பிறந்தார் பற்று என அனைத்தும் அப்போதே உருவாகிவிட்டன. அவை அத்தனை தொன்மையானவை, ஆகவே அவை எளிதில் கடக்கக்கூடியன அல்ல.

பழங்குடி உறவுமுறைகள், அவற்றின் குடியடையாளங்கள் பின்னர் நிலவுடைமைச் சமூக வாழ்க்கையிலும் நீடித்தன. அவை அன்றைய மக்களை திரளாக நின்று போராடி வாழ உதவின. குடிகளாகவே நம் சமூகம் செயல்பட்டிருக்கிறது. போர்களில், பஞ்சங்களில், இடப்பெயர்வுகளில் அன்றைய மக்கள் திரளாகவே இயங்கியிருக்கிறார்கள். தனித்தனியாக அவர்கள் ஏதும் செய்திருக்க முடியாது. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலை படியுங்கள், குடிகளாகவே மக்கள் புதியநிலம் கண்டு புது வாழ்கையை உருவாக்கிக் கொள்வதைக் காணலாம்

நிலவுடைமைச் சமூகத்தில் கூட தனிமனிதர்கள் என்னும் எண்ணமே பெரும்பாலும் இல்லை. நம் அன்னையரை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ‘தங்களுக்குரிய’ ஒரு வாழ்க்கையை எண்ணியே பார்த்திருக்க மாட்டார்கள். அக்காலத்தில் ‘நான்’ என நினைத்தவர்கள் ஆன்மிகமாக வெளியேறிச் சென்றார்கள். அன்றைய மக்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் தந்தையர் சொல்கேட்டு வாழ்ந்தனர். தங்கள் மைந்தர்களுக்காக முதுமையில் வாழ்ந்தனர்.

தனிமனிதன் என நாம் நினைக்கும் இந்த எண்ணங்களெல்லாம் இருநூறாண்டுகளுக்குள் உருவாகி வந்தவை. நவீன முதலாளித்துவச் சமூகத்தின் உருவாக்கங்கள். நூறாண்டுகளுக்கு முன்புகூட என் குடியில் தனிச்சொத்து என்னும் எண்ணமே இல்லை. சொத்து முழுக்க முழுக்க குடும்பத்துக்குரியது. ‘குடும்பசொத்து’ என்னும் சொல்லாட்சி இன்றும் ஆவணங்களிலுள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு வீடு, ஒரு நிலம் என்பதெல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. என் இளமையில் ‘தன் சொத்து என ஒருவன் நினைத்தானென்றால் அவன் பகவதி கோபத்துக்கு ஆளாவான்’ என்று சொல்லி சீறிய பல முதியவர்களைக் கண்டிருக்கிறேன்.

நவீன முதலாளித்துவம் தனிமனிதனை கட்டமைத்தது. அவன் ஓர் உழைக்கும் அலகு. ஆகவே அவன் ஓர் நுகர்வு அலகும்கூட. அவன் ஈட்டும் செல்வம் அவனுக்குரியது. தனிச்சொத்துரிமையே முதலாளித்துவச் சமூகத்தின் அடிப்படை. மேலும் மேலும் சொத்துசேர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் கடுமையாக உழைத்தால்தான் முதலாளித்துவம் இயங்க முடியும்.

என் நினைவிலிருந்தே சொல்கிறேன். என் இளமையில் பெரும்பாலானவர்களுக்கு சொத்துசேர்க்கும் எண்ணமே இல்லை. வாழ்வதுதான் முக்கியம். அவர்கள் சேர்த்த சொத்தை அவர்களே வைத்துக் கொண்டதுமில்லை. குடும்பத்தின் உரிமையாகவே அவை இருந்தன. காலம் மாறிவிட்டதை உணரா மனநிலை அது. அவர்கள் பின்னாளில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். வறிய குடும்பத்தில் பிறந்து, இருபதாண்டுக்காலம் துபாயில் வேலைசெய்து சேர்த்த செல்வத்தை குடும்பத்துக்கு அனுப்பிய என் நண்பரை சந்தித்தேன். அவர் அப்பா குடும்பப்பேரில் சொத்துக்களை வாங்கினார். ஆனால் பின்னர் அவர் தம்பிதங்கைகள் அதில் சமபங்கு கேட்டு அவரை நீதிமன்றத்துக்கு இழுத்தனர்.

நூறாண்டுகளுக்கு முன்பு மெல்ல மெல்ல துளிக்குடும்பங்கள் உருவாகி வந்தன. அவை தனிமனிதன் என்னும் கருத்தின் அடுத்தபடி. எங்கள் குடும்பத்தில் முதல் துளிக்குடும்பம் என் அப்பா உருவாக்கிக் கொண்டது. அன்று அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் கூட்டுக்குடும்பம் வேண்டாம், தனிக்குடும்பமே அடுத்தகட்டம் என்னும் தெளிவு அவருக்கு இருந்தது.

இவ்வாறு அடுத்த காலகட்டம் வந்தபோது உறவுகள் பற்றிய எண்ணங்கள் மாறின. ஒவ்வொருவரும் தனியாக உழைக்க, தனியாக சேர்க்க, தனியாக வாழ முயல்கிறார்கள். ஆகவே ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு போட்டியாக ஆகிவிடுகிறார்கள். பழங்குடிச் சமூகங்களில் ஒருவர் இன்னொருவருக்கு போட்டி அல்ல. பழைய சமூகங்களில்கூட அதன் உறுப்பினர் நடுவே இத்தகைய போட்டி இல்லை. போட்டியாளர்கள் நடுவே நல்லுறவு இருக்க முடியாது. சுரண்டல், தோற்கடிக்கும் முனைப்பு ஆகியவையே இருக்கும். வென்றால் மிதப்பும் தோற்றவனை இளக்காரம் செய்யும் மனநிலையும் உருவாகும். தான் ஈட்டியது தனக்கே என்னும் மனநிலை உருவாகும்.

ஒருமுறை தமிழறிஞர் ம.ரா.பொ.குருசாமியிடம் பேசும்போது சொன்னார். ‘தனக்கு மிஞ்சியே தானம்’ என்னும் பழமொழியைப் போன்ற சிந்தனை எந்த பழையநூலிலும் இல்லை. அது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகி வந்த பழமொழி என்று. மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர் ஆகியோருக்கு செலவழித்த பின்னரே தனக்காகச் செலவழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ”அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் மனநிலை உருவாகி வந்ததை நாமே நம் வாழ்க்கையின் ஐம்பதாண்டுகளை நினைவுகூர்ந்தால் காணமுடியும்.

ஆகவே உறவுகள் இன்று இப்படி இருப்பது அவற்றின் பழைய இயல்பு திரிந்தமையால்தான். உறவுகளைப் பற்றிய நம் உணர்ச்சிநிலைகளும் சரி, சடங்குநெறிகளும் சரி, மிகத்தொன்மையானவை. பழங்குடி வாழ்க்கையில் உருவாகி நிலவுடைமை வாழ்க்கையில் நிலைகொண்டவை. ஆனால் இன்று உறவுகள் தனிமனிதர்களாகி, போட்டியாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். ஆகவே நாம் உறவுகளை கையாளும்போது நம் உணர்வுகள் தொடர்ந்து யதார்த்தத்தை சந்தித்து புண்படுகின்றன, ஏமாற்றம் அடைகின்றன. விளைவாகப் பூசல்கள் உருவாகின்றன. காழ்ப்புகளும் கசப்புகளும் எஞ்சுகின்றன. உங்கள் பெரியப்பா பழங்கால மனநிலையில் புதிய காலகட்டத்தில் வாழ்ந்தவர். அவர்மேல் கசப்பு கொள்ளவேண்டியதில்லை. அவருக்கு இன்றைய சூழல் புரியவில்லை, அவ்வளவுதான். அவர் அனுதாபத்துக்குரியவர். அத்தகைய பலர் இன்றும் உள்ளனர்.

ஒரு நவீனச் சமூகத்தில் குருதியுறவுகளுக்குப் பெரிய இடமில்லை. நாம் பழங்காலம் போல குருதியுறவுகளுடன் சேர்ந்து வாழ்வதில்லை. பலரைச் சந்திப்பதே இல்லை. நம் ரசனையும் மனநிலையும் வளர வளர பெரிதும் மாறிவிடுகின்றன. ஆகவே உறவினர் நமக்கு அன்னியர்களாக, ஒவ்வாதவர்களாகத் தெரிகின்றனர். இன்று நவீன வாழ்க்கைச்சூழலில் நவீன உறவுகள் உருவாகின்றன. சமானமான உள்ளம் கொண்டவர்களுடன் நாம் கொள்ளும் உறவுகள் அவை. அவையே நமக்கு உகந்தவையாக உள்ளன.

வருங்காலத்தில் அவையே மெய்யான உறவுகளாக இருக்கும். ஐரோப்பிய சமூகங்களில் அத்தகைய உறவுகளே முதன்மையானவையாக உள்ளன. ஒரே வகையான வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் கொண்டவர்கள் சிறிய உறவுக்குழுமங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். சேர்ந்து வாழ்வதும் காணக்கிடைக்கிறது. அங்கே குருதியுறவுகள் மெல்லமெல்ல மறைந்தே வருகின்றன.

இங்கும் அவ்வாறு நவீன உறவுகளை உருவாக்கிக் கொள்ளவேண்டியது இன்றியமையாதது. அவையே நமக்கு இனியவை என்பதுடன் நம்முடைய தேவைகளுக்கு உடனிருப்பவையும் ஆகும். அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்

ஆனால் நாம் இன்னமும்கூட பாதி நிலவுடைமைச் சமூகத்தில்தான் வாழ்கிறோம். ஆகவே இன்றும்கூட நாம் குருதியுறவுகளில் இருந்து எளிதில் விலகிவிடமுடியாது. இந்தியாவின் ‘பெருங்குடும்ப’ அமைப்பு நமக்கு மிகப்பெரிய பொருளியல் பாதுகாப்பை அமைக்கும் ஒரு சமூகக்கட்டுமானம். நம்மில் பலரை மூத்த அண்ணன்கள் படிக்க வைத்திருப்பார்கள். நம் குடும்பத்துப் பெண்கள் மூத்தவர்களால்தான் மணவாழ்க்கையை அமைக்க முடிகிறது. குடும்பத்தினரின் உதவி இல்லையேல் இங்கே பலர் பொருளியல் அனாதைகளாக ஆகிவிடுவார்கள்.

இங்கே தனிமனிதர்களுக்கு அரசு எந்த பாதுகாப்பையும் அளிப்பதில்லை. எந்த பொருளியலுதவியும் கிடைப்பதில்லை. அவர்கள் குடும்பத்தை நம்பியே உள்ளனர். ஆகவே இந்தப்பெருங்குடும்ப அமைப்பும் அதன் மனநிலைகளும் இன்னும் சில காலம் நீடித்தாகவேண்டும். தம்பிதங்கைகளை படிக்கவைப்பது, மணம்புரிந்து வைப்பது ஆகியவை மூத்தவர்களின் கடமைகளாகவே நீடிக்கவேண்டும். சித்தப்பா பெரியப்பா தாய்மாமன் உறவுகள் நீடித்தாகவேண்டும். அந்த உறவுகள் இல்லாமலானால் பலகோடிப்பேர் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால் அவை சென்றகாலத்தில் இருந்த அதே உணர்வுகளுடன் இனிமேலும் நீடிக்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஓர் அண்ணா இன்று தம்பிகளை படிக்க வைக்கவேண்டும். அது அவர் கடமை. அதை தவிர்க்கக்கூடாது. ஆனால் அந்த தம்பிகள் பழங்காலத் தம்பிகளைப் போல அண்ணனுக்கு அடிபணிந்தவர்களாக, தங்கள் சம்பாத்தியத்தையும் அண்ணனையும் பிரித்துப் பார்க்காதவர்களாக இருக்க மாட்டார்கள், இருக்க முடியாது என்பதையும் உணர்ந்தாகவேண்டும். அந்த தம்பிகள் இன்றைய முதலாளித்துவச் சூழல் உருவாக்கிய தனிமனிதர்கள், தனிப் பொருளியல் அலகுகள். அவர்கள் தங்கள் சொத்துக்கள் மேல் குறியாக இருப்பதும், அண்ணனுக்கு பொருளியல் போட்டியாளர்களாக இருப்பதும்தான் இயல்பானது.

அந்தப்புரிதல் இருந்தால் கசப்புகளை தவிர்க்கலாம். அது பழையகால மரபின்படி செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும். அதே சமயம் பழையகால வழக்கப்படி திரும்ப எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது. பிறரை ஆதிக்கம் செலுத்தவும் வழிநடத்தவும் முயலக்கூடாது. பழையகால ‘மரியாதைகளை’ எதிர்பார்க்கக் கூடாது. இப்படி கடமைகளில் நிலவுடைமை ஒழுக்கமும் அன்றாட வாழ்க்கையில் முதலாளித்துவ ஒழுக்கமும் கடைப்பிடிக்கப்படுமென்றால் சிக்கலே இல்லை. ஏனென்றால் உண்மையில் நம் வாழ்க்கையின் ஒரு முனை நிலவுடைமை சமூக மனநிலையிலும் இன்னொரு முனை சமகால முதலாளித்துவ மனநிலையிலும் உள்ளது. அந்த முரண்பாடே கசப்புக்கு ஆதாரம்.

கடைசியாக இன்னொன்று. குருதியுறவுகளில் ஓர் உறுதிப்பாடு உண்டு. என் அண்ணனை நான் எந்நிலையிலும் அண்ணன் இல்லை என சொல்லிவிடமுடியாது. பிரியலாம், பிரிந்தாலும் அண்ணனே. பல்வேறு சடங்குகள் நம் குருதியுறவுகளை இணைக்கின்றன. ஒரு திருமணத்தில் சடங்குகளை தாய்மாமனே செய்யவேண்டும். ஆனால் நவீன உறவுகளில் இந்த உறுதிப்பாடு, மாறாத அம்சம் இல்லை. அதாவது நம்மை மீறிய அம்சம் இல்லை. ஆகவே எல்லாம் சிறப்பாக இருந்தால் உறவைத் தொடர்வோம், இல்லையென்றால் பிரியவேண்டியதுதான் என்னும் மனநிலையிலேயே நாம் நம் நவீன உறவுகளை அமைத்துக் கொள்கிறோம். அப்படி அமைக்கப்படும் எந்த உறவும் நீடிக்காது. அது மானுட உள்ளத்தின் இயல்பு

ஏன்? ஓர் உறவில் எங்கோ வெளியேறும் வழியையும் கணக்கிட்டு வைத்துக்கொண்டு நுழைவோம் என்றால் எல்லா எதிர்மறைத் தருணத்திலும் அதிலிருந்து வெளியேறிவிடலாமா என்னும் எண்ணம்தான் முதலில் உருவாகும். ஆயிரம் முறை அவ்வெண்ணம் நம்மால் தவிர்க்கப்படலாம். ஒருமுறை அது நிகழ்ந்தே தீரும். இது மணவுறவுகளுக்கும் பொருந்தும். ஆகவேதான் மணவுறவுகளையும் மானுடனை மீறிய தெய்வங்களின் ஆணை என்றும், பிறவிபிறவியாக வரும் தொடர்பு என்றும் பழங்காலத்தில் சொல்லி நிறுவினார்கள். இன்று திருமணம் ஓரு சட்டபூர்வ ஏற்பாடு மட்டுமே என்னும் மனநிலை உருவாகியிருப்பதனால் எப்போது வேண்டுமென்றாலும் பிரியலாமென்னும் எண்ணம் முதலிலேயே உருவாகிவிடுகிறது. இயல்பாக அது பிரிவு நோக்கி இட்டுச்செல்கிறது.

எல்லா நவீன உறவுகளிலும் நாம் அவ்வுறவை ஒருபோதும் இழப்பதில்லை, என்ன நிகழ்ந்தாலும் சரி என்னும் ஓர் உறுதிப்பாட்டை கொள்ளவேண்டும். நம் குருதியுறவு என்றால் அப்படி ஒரு சிறு பூசலுக்கே தொடர்பை நிறுத்திக்கொள்வோமா என்னும் எண்ணம் இருந்தால் பல உறவுகளை தொடரமுடியும். நீடிக்கும் உறவுகளே உண்மையான உறவுகள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:35

புவிமாற்றம் நிகழ்ந்த ஆண்டு- கடலூர் சீனு

இனிய ஜெயம்,

ஆசிரியர் அட்டன்பரோ மொழிபில், டாம் பெயர்ட் இயக்கிய The year earth changed எனும் முக்கிய ஆவணப் படம் கண்டேன்.  கடந்த ஆண்டு உலக முடக்கம் உச்சத்தில் இருந்த பொழுதில் கானுயிர் வாழ்முறையில் அது நிகழ்த்திய மாற்றத்தை வெவ்வேறு நாடுகள் சென்று அதை ஆவணம் செய்து அட்டன்பரோ குரலில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் டாம்.

இந்தியாவில், மாசு குறைந்து 200 கிலோ மீட்டர் கடந்து வெறும்  பார்வைக்கு முதன் முதலாக தென்பட்ட இமயமலைத்தொடரின் அந்தத் தருணக் காட்சியில்   துவங்கி  நிறையும் வரை அந்த முக்கால் மணி நேரமும், நகர  சாலையை குட்டிகளுடன் கடக்கும் பென்குயின் குடும்பம், நகர பங்களா காம்பௌண்ட் சுவரில் சாடி ஏறி நிற்கும் பியுமா, அகஸ்மாத்தாக வீட்டு தோட்டத்தில் நீர்விலங்கு ஒன்றினை பார்த்துவிட்டு கூப்பாடு போடும் வீட்டு நாய், என திடுக்கிட வைத்துப் பரவசம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே கொண்டு நகர்கிறது ஆவணம்.

தென் ஆப்பிரிக்கா சொகுசு விடுதி ஒன்றின் தோட்டத்தில் வைத்து சிறுத்தை தனது  மான் வேட்டையை நிகழ்த்தும் (வெறும் ஐந்தடி தொலைவில் நின்று சிறுத்தையை கண்ணுடன் கண் நோக்கி படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்) காட்சி, தினத்துக்குப் பல்லாயிரம் பேர் வந்து போகும் இப்போது ஆளரவம் அற்ற மியாமி கடற்கரையில் தனது வாழ்நாளில் முதன் முறையாக முட்டையிட வரும் ஆமைகள் குறித்த காட்சி என, (எஸ்ரா வின் சொல்லை கடன் வாங்கினால்) வியப்பூட்டும் தருணங்கள் கொண்ட ஆவணம்.

ஆவணம் காட்சிப்படுத்தும் பலவற்றில் என்னைக் கட்டி வைத்த முக்கிய தருணங்கள் இரண்டு. ஒன்று ஆப்ரிக்கா வில் சிறுத்தைகளின் பெருக்கம். இரண்டு அலாஸ்கா பகுதியில் திமிங்கலங்கள் பெறும் விடுதலை.  ஆப்ரிக்காவில் சிறுத்தையை அதன் வாழ்விடத்தில் வைத்தே மக்கள் வேடிக்கை பார்க்க வழி செய்வது அங்குள்ள முக்கிய வருமான வழிகளில் ஒன்று. அது எந்த அளவு தீங்கு பயப்பது என்பதை இவ்வாவணம்  அட்டன்பரோ குரலில் விளக்கி, விடுதலையை காட்சிப் படுத்துகிறது.

குட்டி போட்ட அம்மா சிறுத்தை, குட்டிகளை புதர் மறைவில் நிறுத்தி விட்டு வேட்டையாடும். வேட்டையாடிய இரையை இழுத்துக்கொண்டு  குட்டிகளை நோக்கி வருவதற்குள், கழுதைப் புலி போன்ற பிற விலங்குகள் வன நீதியின் படி வேட்டை உணவை பறித்து சென்று விடும். சில சமயம் அம்மா விலகிய சூழலில் குட்டிகள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். குட்டி போட்ட சிறுத்தை சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வேட்டையாடும்.  ஆனால் இப்போது நிலவரம் தலை கீழ். தொலைதூரம் ஓடி வேட்டையாடிய இரையை பிற விலங்குகள் அணுகா வண்ணம் காலில் காவியபடி, அம்மா சிறுத்தை கிளி போல மெல்ல ஒரு ஒலி எழுப்புகிறது. இரண்டாவது ஒலியில், தூரத்தில் மறைந்து நிற்கும் குட்டிகள் அம்மா வசம் ஓடி வந்து இணைந்து கொள்கின்றன. இணைந்து உண்கின்றன. இந்த ஒலியை எழுப்ப, அப்படி எழுப்பி அது குட்டிகளை அடைய, இடையூறாக இந்த நாள் வரை இருந்தது, பார்வயாளர்கள் இடையூறு. அருகி வரும் சிறுத்தை இனத்துக்கு இந்த இடையூறு என்பது அந்த இடரை அதிகரிக்கும் ஒன்றே.

கடலிலும் இதே நிலை. தொடர்ந்து கடல்பரப்பு நெடுக விரையும் கப்பல்களின் படகுகளின் ப்ரோப்பல்லர் சுழற்சி திமிங்கலங்களை பாதிக்கிறது. விளைவு குட்டிகள் அம்மாவை விட்டு எங்கும் பிரிவதில்லை. இப்போது மொத்த கடலிலும் முதன் முறையாக தங்கள் விடுதலையை கொண்டாடுகின்றன அப் பெருயிர்கள். குட்டிகள் அம்மாவை விட்டு வெகு தூரம் விலகி சென்று, தனது பசிக்கான வேட்டை போன்ற சுய நடவடிக்கைகளில் தாமே ஈடுபடுகின்றன. அவர்களுக்குள் இத்தகு சூழலில் முதன் முறையாக நிகழும் மொழிப் பரிமாற்றத்தை ஒலிப்பதிவு செய்யும் நிபுணரின் பரவசம் அலாதியானது. இவை போன்ற தருணங்கள், ஒலி வடிவமைப்பு, மற்றும் உணர்ச்சிகரமான பின்னணி இசையும் இந்த ஆவணத்தின் பெரும் பலம்.

ஆவணத்தின் இறுதி பகுதி மிக முக்கியமானது.  இந்தியாவில் கங்கையில் பிராண சக்தி ஐம்பது சதமானம் கூடி இருக்கிறது என்கிறது. அசாமில் ஒரு கிராமத்தில் தொடர்ந்து யானைக் கூட்டம் வயலில் இறங்கி நாசம் செய்யும் சூழலை, (ஒரு காட்டு யானை சராசியாக நாளொன்றுக்கு 25 கிமி நடந்து 150 கிலோ உணவை உண்ணுமாம்.)  அந்த கிராமம் இந்த முடக்க சூழலில் அந்த நிலையை தலைகீழாக மாற்றி இருக்கிறது. முடக்க சூழலில் இந்தியாவின் எல்லா பகுதியில் இருந்தும் வேலை இழந்து திரும்பி வந்தவர்கள் அந்த குறிப்பிட்ட கிராமத்தில், கிராமத்து வயலுக்கும் காட்டுக்கும் இடையே யானைக் கூட்டம் உண்பதற்காக வேண்டியே தனியே ஒரு விவசாயம் செய்கிறார்கள். அற்புதமாக யானைகள் அவற்றைப் புரிந்து கொண்டு, அவற்றை மட்டும் உண்டு விட்டு காட்டுக்குள் திரும்பி செல்கின்றன. கிராமத்துக்குள் வந்த யானைக் கூட்டத்தை விரட்டிய காலம் போய், கிராமத்தினர் யானைகளுக்கு விளைவித்த உணவை, அவற்றை அவை உண்ண வர வேண்டி பாடல்கள் பாடி வரவேற்கிறார்கள். இவற்றை முன்னெடுத்து செய்த பெண் ஒன்று சொல்கிறார்.

யானைகளை நீங்கள் விரும்பினால்,

யானைகளும் பதிலுக்கு உங்களை விரும்பும்.

மிக எளிய சொற்கள்தான், ஆனால் காட்சியாக இதை கண்ட பிறகு அந்த சொல்லைக் கேட்டால் வரும் பரவசம் இருக்கிறதே அதை விவரிக்கவே இயலாது. எந்த போதமும் இன்றி, அற உணர்வும் இன்றி மானுடம் பறித்த கானுயிர்களின் வாழ்விட எல்லையை கானுயிர்கள் மீண்டும் கண்டடைந்து திளைக்கும் பரவசத்தை காட்சியாக்கிய இவ்வாவணம் நிறைந்த அமைதியில், வந்து இடி என விழுந்தது கோவையில் இரண்டு ஆண் யானைகள் உட்பட மூன்று யானைகள் ரயிலால் அடிபட்டு உயிர் போன சம்பவம்.

இந்த 2021 வரை கடந்த 20 வருடங்களில் மட்டும் இந்த தமிழ்நாடு பாலக்காடு இடையிலான தண்டவாளத்தில் (அரசின் பாதுகாக்கப்படும் வனஉயிர்கள் அட்டவனையில் முதலில் இருப்பது யானையாம்)  பலியான யானைகளின் எண்ணிக்கை 34 என்கிறது bbc. யானைகள் தண்டவாளத்தில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது வனத்துறை என்று சொல்கிறது ரயில்வே. வனத்துக்குள் தண்டவாளத்தில் யானைகள் வரும் எனும் போதத்துடன் செயல்பட வேண்டியது ரயில்வே என்கிறது வனத்துறை. இரண்டு துறைகள் அரசு அல்லது மக்கள் எவருக்கேனும் இனியும் அறிவு வேலை செய்யா விட்டால்   இன்னும் வரும் ஆண்டுகளில் இறுதி யானையும் ரயில் மோதி உடல் கிழிந்து இறக்கும். பின்னர் நமது அழிவு தொடங்கும். எல்லா உயிர்களும் மானுட அறிவு சென்று தொட இயலாப் புள்ளியில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவையே. கானுயிர்கள் இல்லையேல் மானுடமும் இல்லை.கடலூர் சீனு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:34

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-8

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

அன்புள்ள ஜெ

முதன் முதலா விஷ்ணுபுரம் நிகழ்வு. இரண்டு நாட்கள் வேற எந்த சிந்தனையுமே இல்லை. போட்டோ எடுத்தது தவிர போன் உபயோகமே இல்லை. ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா, மனைவி எந்த ஞாபகமும் இல்லை. வாய் பிளந்து எல்லாரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். இரம்யா, சுபஸ்ரீ, லோகமாதேவி, அன்பரசி, ஷாகுல், விக்னேஷ் இவர்களை மறக்க முடியாது.

இத்தனை வருடங்கள் வேஸ்ட் பண்ணிவிட்டேன் என்று ரொம்ப துயரப் பட்டேன். 24 தேதி இரவு ரயில் ஏறி விடிகாலை முதல் ஆளாய் விழா நடக்கும் இடத்திற்கு வந்து இருட்டிலேயே ரூம் சாவி வாங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து உடனே கிளம்பி கீழே வந்துவிட்டேன். உங்கள் அறையின் வெளியில் நின்று அனைவருடனும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் நானும் நின்றுக் கொண்டேன். அதன்பின் ஒவ்வொரு அமர்வுகள், அதனுடைய கட்டுப்பாடு, நேர ஒழுங்கு எல்லாம் கச்சிதமாக இருந்தது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாய் விட்டு சிரித்தபோதுதான் தெரிந்தது இப்படி நான் சிரித்ததே இல்லை என்று.

ஒரு வாரம் முன்பதாக பங்கேற்கும் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய படைப்புகள் பற்றிக் குறிப்பு எழுதி வைத்திருந்தேன். கிளம்பும் அன்று பரீட்ச்சைக்கு முன்னால் படித்தது எல்லாம் மறந்து போவது மாதிரி எல்லாம் மறந்துபோனது. சரி பரவாயில்லை, அடிச்சுக்கூட சொன்னாலும் யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என்று முடிவு பண்ணிக்கொண்டேன். அதை அப்படியே கடைபிடித்தேன். என்னைப் போல் நிறைய பேர் இருந்ததிலும் ஒரு மகிழ்ச்சி. சென்னையில் இருந்து வந்திருந்த செந்தில், அமுதா, ரம்யா, அன்பு, k j அசோக் குமார் போன்றவர்களுடன் நட்பு அமைந்தது. செல்வராணி கூட நானே போய் பேசினேன். எங்களை ஒரு சிறிய பயணம் அழைத்துப்போகிறதாய் சொல்லி இருக்காங்க.

உங்களிடமும், சுனில், நாஞ்சில்நாடன் சார் ஆகியோரிடம் புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டேன். நீங்கள் கையெழுத்துப் போடும்போது பேரைக் கேட்டு என்னை ஞாபகமாய் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. உங்களோடு என்னை ஒரு போட்டோ அன்பரசி எடுத்தது. எனக்கு மிகவும் பிடித்த போட்டோவாய் அமைந்தது. கொண்டு வந்திருந்த எல்லா பணத்துக்கும் புத்தகம் வாங்கிவிட்டேன்.

எல்லாருமே எழுத்தாளர்கள்தான். எல்லா அமர்வும் ஒரே போல்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் வித விதமாய் அமைந்து இருந்தது. எம் கோபால கிருஷ்ணன் சார் பேசியது, கேள்வி கேட்டவர்கள்க்கு ஒரு கவுன்ட்டர் கொடுத்து பதில் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த திருசெந்தாழையின் அமர்வு கிருஷ்ணன் சார் கலக்கி எடுத்தார். முந்தைய வருடங்களில் கேள்விகள் வேறு திசையில் போகும்போது அதை நேர் பாதைக்கு கொண்டுவர தேவைப்பட்ட கவனம் கூட இந்த வருடம் இல்லை.

சோ. தர்மன் அமர்வில் நீண்ட பதிலை சொல்லிவிட்டு நெறியாளரை அவர் திரும்பிப் பார்த்தது அவையை சிரித்து வெடிக்க வைத்தது.எல்லாருமே பதில் சொல்லும்போது வாசகர்கள் மேல் ஒரு பிரமிப்புடன்தான் பதில் சொன்னார்கள். கேள்வி கேட்கவில்லைஎன்றாலும் அந்த வாசகர் கூட்டத்தில் நானும் ஒருத்தி என்பது மிகவும் பெருமையாய் இருந்தது. சுபஸ்ரீயின் ஆங்கிலம் மிகவும் நன்றாய் இருந்தது.

முதல் நாள் சிரித்தது ஒன்றுமே இல்லை என்று விழா நேரம் நிரூபித்தது. சோ. தர்மன் அவர்கள் அண்ணாச்சியை பற்றி சொல்லும்போது என்னமோ அவருடைய போர் பரணியைக் கேட்பதுபோன்று அண்ணாச்சி உருண்டு சிரித்தது அவ்வளவு அழகாய் இருந்தது. மனசில் ஒன்றும் வெளியில் ஒன்றும் வைத்திருப்பவர்கள் அப்படி சிரிக்க முடியாது. சின்னப் பிள்ளையைப்போல் ஒவ்வொரு தடவையும் புரை ஏறுமளவு சிரிக்கிறார்.

விழா முடிந்ததும் பகவதி அம்மாவின் கையைப்பிடித்துக்கொண்டு பேசினேன், அவங்களோடு படம் எடுத்துக் கொண்டேன். அவங்களும் அவங்க சினிமா அனுபவங்களைப் பேசினார்கள். சிரித்துக்கொண்டே இருந்தேன். அண்ணாச்சியிடம் பேசும்போது பிள்ளைகளைப்பற்றி கேட்டார். நானே கேட்டு என் தலையில் கைவைத்து ஆசியளிக்க சொன்னேன். வேளாங்கன்னி அம்மையைக் கும்பிடு. அவதான் உனக்கு அம்மை என்று சொன்னார். நாங்கள் பெந்தகோஸ்தே பின்னணியில் இருந்ததால் யேசுவைத் தவிர வேறே தெய்வங்கள் இல்லை. ஆனால் அது ஒரு சித்தரின் ஆசியாய் எடுத்துக்கொண்டு அம்மையைப் பிடித்துக்கொண்டேன்.

கடைசியாய் ஒரு முக்கியமான நபர் ஷாகுல். நானே என்னை அறிமுகம் செய்துகொண்டு பேசும்போது நீங்கள் அவரைப்பற்றி எழுதியிருந்த “சரியான நேரத்தில் தப்பான கேள்வியைக் கேட்பவர்” நீங்கதானே என்று சொன்னபோது அப்படியே பூரித்து அவர் அப்படிக் கேள்விகேட்ட அனேக சம்பவங்களைப் பற்றி பெருமையாய் சொன்னார். எங்களுக்கும் ஒரு திருஷ்டாந்தம் காண்பித்தார். முதல் நாள் இரவு எங்களுகுக் கொடுத்த அறையில் நானும் ரம்யாவும் தூங்கிக் கொண்டிருந்தபோது முதலில் இரண்டு ஆண்கள் கதவைத்தட்டி இங்க ஆண்கள்தான் இருக்காங்க, அறையைப் பயன்படுத்திக்கோங்கனு சொல்லி அனுப்பினார்கள் என்று சொன்னார்கள். இல்லை நாங்க பெண்கள்தான் இருக்கிறோம் என்று சொல்லி அனுப்பி விட்டோம்.

கொஞ்ச நேரம் கழித்து ஷாகுல் படபடவென்று கதவைத்தட்டி எப்படி இந்த அறையில் பெண்கள் இருக்க முடியும், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நான்தான் இரண்டு பேரை சாவி கொடுத்து அனுப்பினேன் எப்படி நீங்கள் வந்தீங்க. உங்க ரெண்டு பேர் பேரும் என்ன? யார் உங்களுக்கு அறை கொடுத்தது?  எப்ப வந்தீங்க? என்று போலீஸ் விசாரணை மாதிரி கேட்டு ஒரு சந்தேகத்துடனே போனார். அப்புறம் காலையில்தான் தெரியவந்தது அவர் சாவி கொடுத்து அனுப்பி வைத்தது அறை எண் 402 சண்டை போட்டது 204.  சிரித்து உருண்டோம்.

முதன் முதலில் நிர்மால்யா அவர்களைப் பார்த்தபோது அவருடன் பேசுவதற்கு முன்னாலேயே அவரைப் பிடித்துவிட்டது. அதேபோல்தான் ஷாகுலும். அதிகம் பேசாமலேயே ஒரு இனிய நண்பராய் மாறிவிட்டார். திரும்பி இரவு ரயிலில் வரும்போது உளம் பொங்கிக் கொண்டே இருந்தது. கண்ணை மூடவே முடியல. நாலு நாள் ஆச்சு. ஆனாலும் மனம் அங்கேயேதான் இருக்கிறது.

நன்றி சார்.

டெய்ஸி.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் நிகழ்வுக்கு வந்தது என் வாழ்க்கையின் மிகமிக முக்கியமான ஒரு திருப்புமுனை என்று நினைக்கிறேன். நான் வாழும் சூழல் அப்படி. வேலை தொழில் குடும்பம் டிவி சாப்பாடு தவிர எந்த அக்கறையுமே இல்லாத மக்கள். ஆகவே மிகப்பெரிய சலிப்பு. அந்தச் சலிப்பு குடிக்கோ வம்புக்கோ கொண்டுசெல்கிறது. அரசியல்வம்பு இல்லாவிட்டால் சினிமா வம்பு இல்லாவிட்டால் தனிநபர் வம்பு. நானும் அதிலேதான் இருந்தேன். ஆனால் தன்னறம் வெளியீடாக வந்த யானைடாக்டர் வாசித்தேன். அதிலிருந்து இலக்கியத்துக்குள் வந்துவிட்டேன். அப்படியே இரண்டு ஆண்டுகளாக வாசிக்கிறேன்.

விஷ்ணுபுரம் விழாவில் இத்தனை இளைஞர்கள் என்பது ஆச்சரியம் அளித்தது. எவ்வளவு பெரிய முயற்சி. ஒரு பெரிய உத்வேகம் வந்தது. தீவிரமான விஷயங்களில் மூழ்கியிருக்கவேண்டும். அதுதான் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் என்று நீங்கள் உங்கள் தன்மீட்சி நூலில் சொல்கிறீர்கள். அதுவே உண்மை. அதை அங்கே உணர்ந்தேன்.

மிகச்சிறப்பான உணவு, மிகச்சிறப்பான ஏற்பாடுகள். இந்தக் கொண்டாட்டம் என்றும் நீடிக்கவேண்டும். நான் விஷ்ணுபுரம் விழாவுக்குப் போவதைப்பற்றிச் சொன்னபோது வாசகசாலை நண்பர் ஒருவர் சொன்னார். “அது அரசியல்கூட்டம், போகாதே” என்று. நான் அவரிடம் “அங்கே அரசியலே ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை” என்று சொன்னேன். ”பேசமாட்டார்கள், குறிப்பால் உணர்த்துவார்கள்” என்று சொன்னார். “வாசகசாலை கூட்டங்களில் பெரியார், அண்ணா, கலைஞர் என்றுதான் புத்தகவிமர்சனம் வைக்கிறீர்கள். அது அரசியல் இல்லையா?”என்று கேட்டேன். “இல்லை அவர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள்” என்றார். நான் மேற்கொண்டு பேசவில்லை.

பல நண்பர்களுக்கு இங்கே நடப்பது என்னவென்றே தெரியவில்லை. எவராவது அரசியல்காழ்ப்புடன் சொல்வதைக் கேட்டு அவர்களும் நின்றுவிடுகிறார்கள். அவ்வாறு தவிர்ப்பது அவர்களுக்குத்தான் இழப்பு.

சந்திரகுமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:34

செப்டெம்பர்- கடிதங்கள்

செப்டெம்பரின் இசை

ஜெ

நினைவுகளில் மட்டும் ஞாபகமா இருந்த இந்த இசை பல நேரங்களில் எங்கள் தியேட்டர் அனுபவத்தைப் பற்றி பேச்சுக்களில் இந்த கம் செப்டம்பர் இசை இடம்பெறாமல் இருப்பதில்லை அந்த அளவுக்கு உயிரோடு உயிராக கலந்த இசையாக இருந்தது எங்கள் ஊர் திட்டக்குடியில் கிருஷ்ணா பேலஸ் எங்களது அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலேயே இருந்ததால் பதினோரு மணி ஆட்டமாக இருந்தாலும் மேட்னி ஷோ என்றாலும் ஒவ்வொரு நாளும் இந்த கடைசி ரெக்கார்ட் ஒலிக்காத நாள் பாக்கி இருக்காது பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேலையிலே மூன்று மணிக்கு இந்த இசை இசைக்கும் மனசை என்னவோ செய்யும் அதில் எல்லோரும் லயித்து இருப்போம்

இப்பொழுதும் இந்த நாள் வரை உங்கள் கட்டுரையை படிக்கும் இந்த நிமிடம் வரை இந்த இசை இவ்வளவு புகழ்பெற்றது என்றோ அல்லது இதற்குப் பின் இத்தனை செய்திகள் உண்டு என்று எனக்கு தெரியாது இன்னும் சொல்லப்போனால் இந்த இசையை இன்னொரு முறை கேட்பேன் என்றுகூட நினைத்து பார்க்கவில்லை ஏனென்றால் அந்த இசைமனதில் இருக்கிறதே தவிர அதை எங்கே தேட வேண்டும் இப்படி அடையாளம் கொள்வது என்ற எதுவும் தெரியாது எதேச்சையான நிமிடங்கள்தான் வாழ்க்கையை அடையாளங்காண உதவுகின்றன அந்த வகையில் இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமான என் குழந்தைகளுக்கு சொல்ல மட்டுமே தெரிந்த இசையை இப்பொழுது இந்த பாடல் தானம்மா எங்களுடைய பழைய தியேட்டர் கால வாழ்க்கையில் கடைசி ரெக்கார்டு என்று சொல்லி பூரித்துப் போனேன் ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் தகும் நன்றி நன்றி நன்றி

அன்பு உத்ராபதி

***

அன்புள்ள ஜெ

ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடித்து ராமண்ணா இயக்கிய ’நான்’ சினிமா வந்தபோது எனக்கு 15 வயது. அன்றைக்கு அந்தப்படம் பெரிய கிரேஸ். அன்றைய தரத்துக்கு அற்புதமான லொக்கேஷன். உற்சாகமான பாட்டுக்கள். [அதிலுள்ள ராஜா கண்ணு போகாதடி பாட்டு அன்றைக்கு மிகப்பெரிய குத்துப்பாட்டு] அதே முகம்தான் அதிலுள்ள மிகச்சிறந்த பாட்டு

அத்துடன் மிக அழகான கதாநாயகி. அன்றைக்குள்ள கதாநாயகிகள் எல்லாமே நடுவயது, குண்டு. ஜெயலலிதா சின்னப்பெண்ணாக இருந்தார். ஆகவே அந்தப்படம் என் வயதொத்தவர்களின் பித்தாக இருந்தது. அதில் இடம்பெற்ற இந்தப்பாட்டு அந்த ஆண்டு முழுக்க ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. ரேடியோ விளம்பரத்தில் அந்த ஆரம்ப ஹம்மிங் போட்டுத்தான் ஸ்ரீவினாயகாபிக்சர்ஸின் நான் என்று விளம்பரம் செய்வார்கள்.

ஆனால் அந்தமெட்டு இப்படி ஒரு வரலாறு உடையது என்று இப்போதுதான் தெரிந்தது. அந்த தொடக்கமெட்டு அபாரமானது. அது மூலத்தில் இல்லை. அந்தவகையில் கொஞ்சம் ஆறுதல்.

கே.ராமமூர்த்தி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:31

ஜின்களின் ஆசான் – சௌந்தர்

ஜின்களின் ஆசான் வாங்க

புத்தாண்டின் முதல் நாளில் ஒரு சூஃபி மரபு சார்ந்த புத்தகத்தில் தொடங்கலாம் என்று நினைக்கையில் முதலில் அலமாரியில் தென்பட்டது. நமது கோவை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய “ஜின்களின் ஆசான் – சூபி நாவல்” என்கிற நூல் தான்.

ஒரு இலக்கிய பிரதியை படித்து முடித்தபின் ”ஆம். நான் இதை படித்ததன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று தோன்றினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இதன் அனுபவம்.

கதை என்னவோ. ஒரு பாலைவனத்தில் முற்காலத்தில் தொலைந்து போன முத்திரை மோதிரத்தை கண்டெடுக்க செல்லும் ஒரு பணயக்குழுவின், துப்பறியும் கதைதான். ஆனால், அது சொல்லப்பட்ட விதத்திலும், சூஃபி மரபையும், ஜின்களின் உலகையும் மிகக்கச்சிதமாக அறிமுகம் செய்து, கையாண்ட விதத்திலும் தான் இந்நூலை தனித்துவமான நாவலாக்குகிறது.

மிர்தாதின் புத்தகம், நான்காவது தடம் {குர்ட்ஜிப் -வாழ்க்கை வரலாறு} போன்ற சூஃபி அல்லது மெய்ஞானியரின் கதைகளை சொல்லும் நூல்களில் இருந்து இந்நாவல் தனித்துவம் அடைவதும். இது சொல்லப்பட்ட விதத்தில் தான்.

குரு -சிஷ்ய உரையாடலில் தான் நாவல் துவங்குகிறது. மூத்த சூஃபி ஞானி நடுவில் அமர்ந்திருக்க, அரைவடட வடிவில் தர்வேஷ் எனப்படும் தீக்ஷை பெற்ற /பெறப்போகும் சிஷ்யர்கள் அமர்ந்து, மெல்லிய பாடலும், பேச்சும், களிப்புமாக ஒரு இரவு தொடங்குகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அறுபடாமல் தொடரும் இந்த ஞான உரையாடல், இந்த இரவில், யூத, இஸ்லாமிய, கிருஸ்துவ மத நம்பிக்கைகளின் படி, மனித படைப்புக்கு முன்னரே இறைவனால் படைக்கப்பட்ட “ஜின்கள்” எனப்படும், உயிரினம், குறித்தும் அதன் பல்வேறு உருவங்கள், குணங்கள் குறித்தும் உரையாடப்படுகிறது.

ஜின்கள் கதைக்குள் வந்தவுடேனேயே அதற்கு சமமாக, தொல்பொருள் ஒன்றை தேடி பாலைவனம் செல்லும் ஆராய்ச்சி குழு ஒன்றின் சாகச கதையும், வந்து இணைந்து கொள்கிறது. எனினும் மைய பேசுபொருள் மேற்சொன்ன இரண்டுமல்ல.

முழுமுதற் பொருளான இறையே- நாவலின் மையம். அந்த முழுமுதல் இறையை -இறையெனும் உணர்வை, அடைய சூஃபி மரபின் மெய்ஞ்ஞானியர் நிரை வந்து, உயிரினங்கள் அனைத்தயும் ”அவன்பால்” திருப்பும் ஒற்றை நோக்குடன் செய்த சாகசங்களும், கருணையும், தான் கதையின் மையம்.

சூஃபி மரபுக்கே உரித்தான மத, இன, பாகுபாடற்ற ‘இறையுணர்வு’ என்கிற கோட்ப்பாட்டை முதல் அத்தியாயமே, ஒரு கவிதை மூலம் விவரித்து விடுகிறது.

ஒவ்வொரு வடிவத்திற்கும்,

தோதாகிவிட்டது என் இதயம்.

மாறிமான்கள் மான்கள் மேயும் புல்வெளி அது.

கிறிஸ்த்தவ துறவிகளுக்கு ஒரு மடம்.

சிலைகளுக்கு ஒரு கோயில்.

புனித பயணிக்கொரு கஅபா.

வேதத்தின் பலகை.

குரான் மறைநூல்.

நான் காதல் சமயத்தை தொடர்கிறேன்.

எத்திசை ஏகினும்

அத்திசையே எனது மார்க்கம்.

அதுவே எனது நம்பிக்கை.

{முஹையதீன் இப்னுல் அரபி}

ரமீஸ் பிலாலி

ஒரு சாகச,  மாய-எதார்த்த நாவலுக்குள், இறையுணர்வு சிந்தனையை அல்லது ஒரு ஞான மரபின் சிந்தனையை சொல்லுவதில், சற்று பிசகினாலும், அந்த நாவல் வடிவம், பக்தி புத்தகமாகவோ,  சாகச-திகில் கதையாகவோ மாறிவிடும், எனினும். அந்த கத்திமேல் பயணத்தை, மிகச்சரியாக நூலாசிரியர். செய்து வெற்றியும், பெற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

உதாரணமாக, பாலைவனத்து நிலக்காட்சியில் நாம் கற்பனை செய்வதற்கான, வண்ணங்களும் வடிவங்களும் மிகமிக குறைவாகவே இருக்கும், அதை ஜின்களின் உலகுடன் இணைத்து உருவாக்கும் கற்பனை அபரிமிதமானது.

பாலையின் மணல் சூறாவளிக்குள் சிக்கிக்கொண்ட பயணக்குழுவிற்கு, எட்டு திக்கிலும் இருளைத்தவிர, வேறு எந்த உருவமும் இல்லை. அந்த இடத்தில ஒரு ஜின் உலகம் உயிர்பெற்று வருகிறது. பூமியில் இதுவரை கண்டிராத அத்தனை காட்சிகளையும்,  கனவுவெளியையும்,  வண்ணங்களையும், அள்ளித்தெளிக்கிறது.

அதில், குழுவினர் கட்டுண்டு, மனம் பேதலித்து கிடக்கையில், தீமை செய்யும் ஜின்களும், நன்மை செய்யும் ஜின்களும், பாதாளத்தில் இருந்து எழுந்துவந்து ஊழி தாண்டவம் நிகழ்த்துகின்றன. அவற்றின் தாண்டவத்தை, சூஃபி பக்கீர் தன் இறை வல்லமையால், அடக்கி ஒடுக்குகிறார்.

இந்த மாயாவாத காட்சிகள் நிகழ்ந்துகொண்டு இருக்கும் பொழுதே,  கதை யதார்த்த உலகிற்குள் நுழைந்து விடுகிறது. ஊழி தாண்டவத்திலிருந்து தப்பி தன் ஆசானை நோக்கி,பாலை மணலிலும்,  வாகனத்திலும்,  ஓடுகிறான் கதைசொல்லி.

சரி, இந்த மனிதர்களின் சாகச உலகிற்கும், ஜின்களின் மாய உலகிற்கும், இடையே சூஃபி ஞானியருக்கான தேவையும் இடமும் என்ன?

குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே, ஒவ்வொரு வகையில் தயக்கமும்,  அவநம்பிக்கையும், இயலாமையும்,வெறுப்பும் இயல்பிலேயே இருக்கிறது, அப்படியான இதயங்களை எல்லாம்வல்ல இறையின் மீது திருப்புவதற்கும்,  அதற்கான மரபார்ந்த சூஃபி பயிற்சிகளை வழங்குவதற்கும், கதை முழுவதும், வரும் சூஃபி ஞானியர் மனிதர்களுக்கான மீட்பாகவும், அருட்கொடையாகவும் அமைக்கின்றனர்.

இன்னொரு முனையில், ஜின்களின் உலகில் நுழைந்து, அவற்றுடன் உரையாடியும், போரிட்டும்,  வாழ்த்தியும், இதுவரை ஜின் உலகில் நிகழ்வே நிகழாத ”இறையருள்” எனும் அற்புதத்தை நிகழ்த்தி காட்டியும், தங்கள் இருப்பை, ஆசியை,  போதனையை வெளிப்படுத்துகின்றனர்.

அரேபிய இரவு கதைகள் போல நாவல் முழுவதும் கதைக்குள் கதைகள் வந்துகொண்டே இருக்கிறது. தொன்மையான பேரரசர் சுலைமான் நபியின் கதை, ஒவ்வொரு ஜின்னுக்கும் ஒரு கதை. நாவலில் வரும் மனிதர்களின் கதை. சூஃபி ஞானியரின் கதை. என ஒரு கதைத்திரட்டு போல அமைந்திருப்பது, மொத்த நாவலையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

இந்நாவலை ஒரு குழந்தைக்கு கதையாக விரித்து சொல்லத் தொடங்கினால் முதல் கதையிலே அக்குழந்தை கதைக்குள் வந்துவிடும். உலகியலுக்கு அப்பால் நோக்காமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் மத்யம வயதினருக்கு, ‘இறைசெய்தி’ என அவர் ஆன்மாவை தீண்ட சூஃபி ஞானியர் கதைமுழுவதும் போதித்துகொன்டே இருக்கின்றனர்.

மனிதர்களை படைப்பதற்கு முன்னரே, ஜின்களை படைத்த இறைவன், அவற்றை ஏன்  தண்டிக்கிறான்? என்கிற கேள்விக்கு ‘நன்றியின்மை ‘ எனும் அத்தியாயம் மிகவிரிவாக சூஃபியின் மூலமாக சொல்லப்படுகிறது.

‘தன்னகங்காரம்’ – ‘சுயபெருமை’- என்கிற பாவங்களின் பலனாக ஜின்’னுகள் கீழுலகை அடைகிறது. என்று முடிகிற இடத்தில், மனிதர்கள் மீது பெரும் கேள்வியை விடுத்து. நம்பிக்கையும், அடிபணித்தலுமே அருளை கொண்டுவருகிறது என முடிகிறது.

இப்படியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும், நிகழ்காலம் அதன் அவலங்களுக்கான தீர்வு, ஜின்களின் மாய உலகம் அவற்றின் பலம், பலவீனம், சூஃபிக்களின் வாழ்வும் நோக்கமும் என. ஒரு பரந்த பார்வையுடன் முன்செல்கிறது.

இறுதியாக, ‘இறைவனை காதலித்தல்’ எனும் சூஃபி மரபின் அடிப்படையும், உலக கவி மரபின் அடிப்படையும், நாவலுக்கு ஒரு மெய்ஞ்ஞான அந்தஸ்தை வழங்குகிறது.

உதாரணமாக  நாவலில் வரும் ஒரு ‘ஹதீஸ் குத்சீ’ எனும் நபிமொழி கவிதையில்.

என்னைப்பற்றிய என் அடியானின்

எண்ணத்தருகில் இருக்கிறேன்.

அவன் என்னை நினைக்கும்தோறும்

அவனுடன் நான் இருக்கிறேன்

தன்னுள் என்னை நினைப்பானாகில்

என்னுள் அவனை நினைக்கிறேன்

குழுவில் என்னை நினைப்பானாகில்

அதனின்,அதனின்,  சிறந்த

குழுவில் அவனை நினைக்கிறேன்

முழம் நெருங்கி வருவானாகில்

அடியளவு நெருங்குகிறேன்

அடியளவு அருகில் வந்தால்

சாணளவு நெருங்குகிறேன்

என்னிடம் அவன் நடந்து வந்தால்

அவனிடம் நான் ஓடுகிறேன்

சௌந்தர்

இந்த அத்தியாயத்தை படித்து முடித்ததும் நமக்கு தோன்றுவது, உலக கவிமனம் முழுவதும், ஞானசிந்தனை முழுவதும் ‘எதில்’ கட்டுண்டு கிடக்கிறது என்பது தான்.

இதே, வகைமையில் நாம் எத்தனை உயர்கவிதைகளை படித்திருப்போம். என்று மனம் ஒவ்வொன்றாக தொட்டு தொட்டு மீள்கிறது.

இறுதியாக ,மொழிபெயர்ப்பு செய்திருக்கும் தமிழ் அறிஞர் ரமீஸ்  பிலாலி, ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து, அமைத்து, அரேபிய சொற்களுக்காக சரியான பதத்தையும் தூய தமிழில் வழங்கியதுடன்,  சூஃபி கவிதைகளின் சாரமும்,  கவித்துவமும் குறைந்து விடாத அளவில் செம்மை படுத்தி இருக்கிறார்.

மூல நூலை படித்து மொழிபெயர்ப்பது என்பது எந்த தொழில்முறை வல்லுனரும் செய்துவிடலாம் . இதுபோன்ற மறைஞான பிரதிகளை மொழிபெயர்க்க, அனுபவமாக  உணர்வுபூர்வமாக, அதை மாற்றிக்கொள்ளாமல், இவ்வளவு தெளிவான நடை சாத்தியமே இல்லை. எனலாம் .

ரமீஸ் பிலாலி அவர்களுக்கு வாழ்த்துக்களும். நல்ல நாவலை தமிழுக்கு தந்தமைக்கு நன்றியும்.

அன்புடன்

சௌந்தர்.G

ரமீஸ் பிலாலி நூல்கள்

ரூமியின் வைரங்கள்

ரமீஸ் பிலாலி இணையப்பக்கம்

காடு, நிலம், தத்துவம்

இசையும் மொழி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:31

வெண்முரசு ஒலிவடிவில்

வெண்முரசின் பல்வேறு ஒலிவடிவங்கள் இணையத்தில் உள்ளன. வாசிப்பதை விட கதையாக கேட்டு உணர விரும்பும் வாசக ர்களுக்கானவை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.