மத்துறு தயிர்- ஒரு கடிதம்

ராஜமார்த்தாண்டன்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் ‘அறம்’ புத்தகத்திலுள்ள  இரண்டு கதைகள் என்னை மிகவும் ’இம்சை’ செய்தன. இந்த இம்சையை ‘ஆழ்ந்த மௌனத்தை ஏற்படுத்துகிற இம்சை’ என்று கொள்ளலாம். ‘பெருவலி’ என்ற கதையும்,’ மத்துறு தயிர்’ என்ற கதையும்.

யு.ஆர்.அனந்தமூர்த்தியைப் போலவே நானும் புகுமுக வகுப்பில் ஃபெயில் ஆனேன். அதனால் தான் ‘ஒன்றுக்கும் உதவாத’ தமிழ் இலக்கியத்தை, தமிழ்நாட்டில் அல்லாமல் கேரளத்தில், சித்தூர் கல்லூரியில்  படிக்க நேரிட்டது. ஆனால் என்னே என் நல்லூழ்? அந்த ஐந்து வருடங்களிலும் பேராசிரியர் ஜேசுதாசன் அங்கு தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார்.  சில வருடங்கள் எனக்கு வகுப்பெடுத்தார். அ.கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார் ஆகியோர் எனக்கு முன்னோர். முன்னோர்களில் ஜோசஃப் ஃபிலிப் என்று ஒருவரும் இருந்தார். குழித்துறைக்காரர். அப்போதே ஒரு நாவல் எழுதியிருந்தார். நல்ல ரசனை உள்ளவர்.

பேராசிரியர் மூலமாகத்தான் எனக்கு ஒரு வாழ்க்கைப் பார்வையும், கலை இலக்கிய நோக்கும் கிடைத்தது. ‘முன்னோர்கள்’ அதை வலிமைப்படுத்தினார்கள்.

அவரது தீவிர கிறித்தவப்பற்று சுந்தர ராமசாமியைப் போலவே உங்களையும்  விசித்திரமாகப் பார்க்க வைத்திருக்கிறது. ஏதாவது ஒரு வடிவத்தில் தீவிரப்பற்று நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது? அதை கிறித்தவப்பற்று என்பதை விட இறைப்பற்று என்று கொள்ளலாமில்லையா? அவர் இந்துவாகத் தொடர்ந்திருந்தால் அது ஏசப்பனாக இல்லாமல் முனீஸ்வரனாக இருந்திருக்கும்.

அறுபதுகளில் வெளியான அவர்களது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (ஆங்கிலம்) பிறகு விரிவாக எழுதப்பட்டு ஆசிய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட நூல்கள் இலக்கிய, பண்பாட்டு ஆய்வில் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலக ஆய்வாளர்களுக்கும் பயன்படக்கூடியவை.

அவரைப் பற்றிய இத்தனை செய்திகளையும் இத்தனை காலம் கழித்துத் தெரிந்து கொள்ள எனக்கு உதவிய உங்களுக்கு மிகவும் நன்றி. அவர் புன்னைவனம் போன பிறகு அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசை, பல ஆசைகளைப் போலவே நிறைவேறாமலே போய்விட்டது. ஜீவிதத்தில் ’அன்பு’ என்பது எத்துணை பிரதானமானது என்பதை ‘மத்துறு தயிர்’ மூலம் காண்பித்து விட்டீர்கள். அவர்களது மாணவர்களான நாங்கள் ஒருவரும்  அவருக்குச் செய்யாத அஞ்சலி இது… நீங்கள் வாழ்க!

ராஜத்தின் காதல் திருமணத்தில் முடிந்திருந்தாலும் அது வெற்றியடைந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஏனென்றால் அந்தப் பெண்ணை நான் அறிவேன். அவரது பின்புலமும் அறிவேன். அவரது உறவினர்களில் ஒருவன் எனது பேட்ச்மேட்டாக இருந்தான்.தவிரவும் ராஜத்தின் குடிப்பழக்கத்திற்கும், அவரது உறவுக்கும் தொடர்பிருப்பதாகத் தோன்றவில்லை. அவர் குடிப்பழக்கத்தோடு தான் சித்தூருக்கே வந்தார். ஏனென்றால் பெரும்பாலான நாட்களில் மாலை நேரத்தில் அவருடன் நான் மட்டுமே ‘கள்ளுக்கடைக்குச்’ சென்றிருக்கிறேன். என் மீது அவருக்குத் தனிப்பிரியம் இருந்தது. நாங்கள் இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருந்தோம். எந்த நாளிலும், அதிகமாகக் குடித்த நாட்களிலும் கூட அவர் அந்த உறவைப் பற்றிப் பேசியதில்லை. அதோடு மட்டுமல்லாமல் மிகுந்த மனுஷ ‘ஸ்நேகியான’ அவருக்கு வாழ்க்கை பற்றிய முழுமையான பார்வை இருந்தது. ஓர் உறவுக்காக அதை அவர் சமரசப்படுத்தியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. குடி ஒரு பழக்கம்.. ஒரு கெட்ட பழக்கம் மட்டுமே. அது அவரது உயிரைக் காவு வாங்கிவிட்டது.

வேதசகாயகுமாருக்கும் நீங்கள் செய்திருக்கக் கூடிய மரியாதை குறிப்பிடத்தக்கது தான். படிக்கும் காலத்தில் அவர் தனது வகுப்புத்தோழர்களோடும், வெளியிலும் அவ்வளவாக ஒட்டாதவராகவே இருந்தார். பேராசிரியர் ஜேசுதாசன் வழியாக வந்த, எழுபதுகளில் சிறுபத்திரிகைக் கலாச்சாரம் உருவாக்கி வைத்திருந்த அதிதீவிர அழகியல் கோட்பாடுகள்- அதன் அடிப்படையில் அவர் வெளிப்படுத்திய கூரான விமர்சனங்கள் அவரை பிறரிடமிருந்து அந்நியப்படுத்தியிருந்தன. தனிப்பட்ட முறையிலும் நட்புப் பேண முடியாத தூரத்தில் அவர் இருந்தார். அவரை ஒரு நட்பு வளையத்துக்குள் கொண்டு வந்தது உங்கள் சாதனை தான்.

பன்முகக் கலாச்சாரம் இந்தியாவில் பல விசித்திர சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.. இந்த அனுபவத்தில் நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். எனது ‘அடிவாழை’ (1998) தொகுப்பில் ‘ திரை விழுவதற்கு முன்னால்..’ என்னும்  அக்கதை இருக்கிறது.. வேடிக்கையாக இருக்கும். படித்துப்பாருங்கள். சந்தியா பதிப்பகம் தொகுப்பை மறுபதிப்புச் செய்கிறது.

அன்புடன்

ப.சகதேவன் (கிருஷ்ணசாமி)

அன்புள்ள ப.கிருஷ்ணசாமி அவர்களுக்கு,

நலம்தானே?

புனைவு என்பது வாழ்க்கையின் வேறு சாத்தியக்கூறுகளை பரிசோதனை செய்து பார்ப்பதுதானே? நான் அண்ணாச்சி இன்னொருவகையாக இருந்திருக்கலாமோ என எண்ணிப்பார்த்தேன், அவ்வளவுதான். வாழ்க்கை என்பது சாத்தியங்களின் ஆடல் என்பது ஐம்பது வயதுக்குமேல் தெரியவரும் உண்மை

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.