Jeyamohan's Blog, page 828
February 13, 2022
வெண்முரசின் வரைபடம்
ஓர் இலக்கியப்படைப்பை எழுதியவனுக்கு அவற்றின்மீது வாசகர்கள், விமர்சகர்கள் வைக்கும் எதிர்வினைகளின் மதிப்பென்ன? அவற்றால் அவன் பெறும் நலன் ஏதாவது உண்டா?
இவ்வினாவுக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்றிலும் எதிர்மறையாகவே பதில் அளித்திருக்கிறார்கள். வணிக எழுத்துக்கு அந்த எதிர்வினைகள் பெரிய மதிப்புள்ளவை. வணிக எழுத்துக்களைப் பற்றிய பேச்சுக்களில் அவற்றி எவை ‘வெற்றி’ பெற்றன என்ற பேச்சு இருப்பதைக் காணலாம். வாசகர்கள் எதை விரும்பினார்களோ அதைநோக்கி வணிக எழுத்தாளர்கள் திரும்பிவிடுவார்கள். பார்த்திபன் கனவு நாவலின் வெற்றி கல்கியை வரலாற்று புனைவுகளை நோக்கி கொண்டுசென்றது. நைலான் கயிறு அடைந்த வெற்றி சுஜாதாவை துப்பறியும்கதை எழுதச்செய்தது.
ஆனால் ஒரு புளிய மரத்தின் கதை அடைந்த வெற்றி சுந்தர ராமசாமியை இன்னொரு புளிய மரத்தின்கதையை எழுதச்செய்யவில்லை. விஷ்ணுபுரம் அடைந்த வெற்றி இன்னொரு விஷ்ணுபுரம் நோக்கி என்னைச் செலுத்தவில்லை. மாறாக அந்தவகையான படைப்பை மீண்டும் எழுதாமலாக்கியது. ஏனென்றால் இது வணிக வெற்றி அல்ல, வாசக ஏற்பு, விமர்சகர்களின் ஏற்பு மட்டுமே. வணிக எழுத்தாளர்களின் நடையே அவர்களின் வாசகர்களால் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு வாசகர்கள் தங்களை தீர்மானிக்கலாகாது என்னும் உறுதி இலக்கியவாதிகளுக்கு உண்டு.
ஆகவே வாசக எதிர்வினையை இலக்கியவாதிகள் ஒரு ஊக்கமூட்டலாக, மறுமுனையில் இருந்து வரும் ஏற்பொலியாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அவை இலக்கிய ஆக்கத்தை தீர்மானிக்க விடுவதில்லை. எழுதும்போது எதிர்வினைகளை பலர் படிப்பதே இல்லை. எழுதியபின்னர் மிகத்தேர்ந்த தொகுப்பாளர் என தாங்கள் நம்பும் சிலரின் கருத்துக்களை மட்டும் கணக்கில் கொள்கிறார்கள். விஷ்ணுபுரம் எழுதும்போது அருண்மொழியின் எதிர்வினை மிக உதவியாக இருந்தது. எழுதிய பின் எம்.எஸ் பிழைநோக்கி, மொழியை தீட்டி உதவினார்.
வெண்முரசு நான் தொடராக எழுதிய நாவல். சொல்லப்போனால் நான் தொடரென்று வெளியிட்டபடியே எழுதிய முதல் நாவல், (முந்தைய சில நாவல்களை தொடராக வெளியிட்டிருக்கிறேன். ஆனால் அவை முன்னரே நாவல் வடிவில் எழுதி முழுமையாக்கப்பட்டவை) ஆகவே எதிர்வினைகளை எவ்வண்ணம் கவனிப்பது என்னும் குழப்பம் எனக்கு இருந்தது.
அதற்கேற்ப எதிர்வினையாற்றியவர்களில் சிலரின் அணுகுமுறை எதிர்மறையாகவும் இருந்தது. ஒரு படைப்பை முற்றிலும் எதிர்மறையான மனநிலையுடன் அணுகுவதென்பது அதை வாசிக்க மறுப்பதுதான் – மிகக்கூர்ந்து வாசித்தாலும்கூட. ஏனென்றால் கலை என்பது அதற்குரிய ஏற்பு மனநிலையில் மட்டுமே தொடர்புறுத்தக்கூடியது. அதேபோல படைப்பை நோக்கி நகர மறுத்து எல்லா படைப்புக்களையும் தன்னை நோக்கி இழுக்கும் வாசகனும் படைப்பை நோக்கி வாசலை மூடிக்கொள்பவன்தான். தன் அறியாமையை அவன் படைப்பை வாசிப்பதற்கான கருவியாகக் கொள்கிறான்.
அத்ததைய எதிர்வினைகள் படைப்பின் நேரடியான தரவுகளைக்கூட அறியமுடியாதவையாக, படைப்பின் சிறிய நுட்பங்களைக்கூட தவறவிடுவனவாக இருந்தன. எழுதும்போது அவற்றை எதிர்கொள்வது ஒரு வகை எரிச்சலை உருவாக்கியது. ஆனால் வியப்பூட்டும் ஒன்றை கண்டுகொண்டேன். அவற்றுக்கும் நான் எழுதும் மனநிலைக்கும் தொடர்பே இல்லை. எழுதும்போது அவை நினைவில், ஆழுள்ளத்தில் எங்கும் ஊடுருவவில்லை. எழுதுவது ஒரு விழிப்புநிலை கனவு. அங்கே எவையெவையோ எவ்வெவ்வகையிலோ ஊடுருவுகின்றன அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் எனக்கில்லை. ஆனால் அங்கே வாசகர்களே இல்லை. அது எனக்கு மட்டுமான கனவு.
வெண்முரசு எழுதும்போது அக்கனவுக்குள் வந்து உடனிருந்தவர்கள் சேர்ந்து எழுதிய சிலர். முதன்மையாக ஸ்ரீனிவாசன் -சுதா இணையர். நாவல் முடிந்ததும் அவர்களும் கனவிலிருந்து விழிப்பது போல வெண்முரசிலிருந்து வெளியே சென்றுவிட்டனர். நாவலில் வாசிப்பு, விமர்சனம் எவ்வகையிலும் ஊடுருவவில்லை என்று கண்டபின் நான் கடிதங்களையும் விவாதங்களையும் வாசிப்பதை இயல்பாக்கி கொண்டேன்
வாசக எதிர்வினையின் பயன் என்ன என்று பின்னர் தெரிந்தது. வாசகர்களின் எதிர்வினை என் படைப்பை திருப்பி எனக்கு காட்டியது. அவற்றின் வழியாக என் படைப்பில் உள்ள பல நுட்பங்களை நானே அறிந்துகொண்டேன். குறிப்பாக பல உளவியல்தருணங்கள், வாழ்க்கைநிலைகள் வாசகர்கள் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு உணர்ந்து என்னிடம் உறுதிசெய்தனர்.
வெண்முரசு பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளே அந்நாவலின் கட்டமைப்பு பற்றிய புரிதலை எனக்கு அளித்தன. வெண்முரசு நாள்தோறும் எழுதப்பட்டு அவ்வப்போதே வெளியானது. மறுதொகுப்பே செய்யப்படவில்லை. ஆனாலும் பெரும்பாலும் அனைத்து நாவல்களுக்கும் கச்சிதமான ஒருமை கைகூடியிருக்கும். அது கனவுகளின் ஒருமை. கனவுகளிலுள்ள சிக்கலும் பின்னலும் அவற்றிலும் உண்டு. கனவில் இருப்பது போலவே அவற்றின் வடிவமென்ன, மையமென்ன என்னும் திகைப்பு அவை நிகழும்போதே இருக்கும். ஆனால் நிகழ்ந்தபின் அது ஒரு உயிருள்ள உடல்போல முழுமையானது என்னும் உணர்வை அடைவேன்.
வெண்முரசின் மீதான விமர்சக எதிர்வினைகளில் ப.சரவணனின் இந்த கட்டுரைகள் முக்கியமானவை. அவை வெண்முரசின் அனைத்து நாவல்களையும் வடிவம் சார்ந்தும் உள்ளடக்கம் சார்ந்தும் சுருக்கித் தொகுத்துக் கொள்கின்றன. அவற்றின் மையச்சரடு என்ன, பொதுவடிவம் என்ன, வெளிப்பாட்டு முறை என்ன என்று வகுத்துக் கொள்கின்றன.
25000 பக்கங்களில் 26 பகுதிகளாக பெருகிவிரிந்திருக்கும் வெண்முரசு போன்ற நாவல் அளிக்கும் பெரும் சவால் என்னவென்றால் அதை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது கடினம் என்பதுதான். ஒரு நகரில் வாழ்வதுபோலத்தான். நாம் அதில்தான் இருப்போம். அதன் பல பகுதிகள் நம் வாழ்க்கையின் புறவடிவங்களென ஆகியிருக்கும். அதன் சந்துபொந்துகள் என்னவென்று தெளிவாக அறிந்திருப்போம். ஆனால் முழுமையாக அந்நகரை நம் கற்பனையில் கொண்டுவர முடியாது.நகரத்தை நாம் வரைபடங்களிலேயே முழுமையாகக் காணமுடியும். இந்நூல் சரவணன் வெண்முரசு நாவல்களுக்கு உருவாக்கிய வரைபடம்.
ஒட்டுமொத்தமாக வெண்முரசு நாவல் தொடரை தொகுத்துக்கொள்ள, அதன் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன உள்ளது என்று விரித்துக்கொள்ள உதவும் நூல் இது. கூகிள் எர்த் வரைபடம்போல. அதை பார்க்கும்போது சலிக்காமல் நாம் செய்வது சுருக்கிச் சுருக்கி ஓர் உருளையாக ஆக்குவதும் பின் விரித்து விரித்து நம் வீட்டை அடையாளம் காணமுயல்வதும்தான்.
ஜெ
(ப.சரவணன் வெண்முரசு நூல்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘புனைவுலகில் ஜெயமோகன்’ நூலுக்கு எழுதிய முன்னுரை)
வாசிப்பு மொழியின் அவசரத் தேவை- சக்திவேல்
 ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா
  ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா
அன்பு ஜெயமோகன்,
அந்தியூர் மணி அவர்கள் ஒரு நல்ல உரையாடலைத் துவக்கி வைத்திருக்கிறார். நாவல் வாசிப்பனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வாசிப்பின் சாத்தியங்களை இன்னும் அகலப்படுத்துவது சமகாலத்தில் அவசியமானதாகும். இன்றைய சமூக அரசியல் சூழலில் இலக்கியமும் ஒரு அரசியல்கருவியைப் போலவே சொல்லப்படுகிறது. ஆக, இலக்கியத்தின் தனித்துவத்தைத் துலக்கப்படுத்தியாக மண்டை உடைத்தே தீர வேண்டி இருக்கிறது.
உரையாடலைத் தொடர்வதற்கு முன்பு, ஒரு சிறிய விளக்கத்தைத் தந்து விடுகிறேன்(குறிப்பாக, அசோகன் மற்றும் விஷால்ராஜா இருவருக்கும்). உங்கள் தளத்தோடு ஏழு ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் இருக்கிறேன். முதலில் சக்திவேல் ஆறுமுகம் எனும் பெயரில் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து முருகவேலன் எனும் பெயரைக் கொண்டிருந்தேன். சமீபகாலமாக சத்திவேல் எனும் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது ஊர் கோபிசெட்டிபாளையம். சமீபமாய் கவிஞர் புவியரசு ஆவணப்படத்தில் அவருடன் உரையாடியவனும் நான்தான். எங்கும் என்னை ஒளித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அடையாளம் இல்லாமல் சமூகவலைதளங்களில் ஜல்லி அடிப்பது போன்ற விஷமச்செயல்களில் ஈடுபட வேண்டிய தேவையும் எனக்கில்லை. இதைக் கோபமாகச் சொல்லவில்லை. ஆதங்கத்தோடுதான் குறிப்பிடுகிறேன். (இரண்டு சக்திவேல்கள் இருப்பதனால் தொடர் குழப்பம்- மன்னிக்கவும். ஜெ)
அசோகன் அவர்களுக்காக ஒன்றைச் சொல்லியாக வேண்டி இருக்கிறது. ஜெயமோகன் தளம் என்பது இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத / அறிய முற்படாத வாசிப்புக்குண்டர்கள் வந்து மல்லுக்கட்டும் இடமோ அல்லது வலைதள வம்பாளர்கள் வந்து வாய்க்கு வந்ததைப் பேச வாய்ப்பளிக்கும் இடமோ அல்ல என்பதை எல்லோரும் அறிவர். ஏன், அசோகனே கூட அறிவார்.
அப்படி இருக்க, காதுகள் வாசிப்பனுபவத்தைப் பற்றிய அசோகனது கடிதத்தில் மணி மரபை உள்மெய்யாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அதனால்தான் மரபுப் பிரசாரகர் அல்ல மணி என உடனே கடிதம் எழுதினேன். அதற்கு பதில் எழுதிய அசோகன், மணி மற்றும் எனது உள்மெய்யைச் சந்தேகிப்பதாகக் கடிதம் எழுதி இருந்தார். இருக்கட்டும். உரையாடலை இங்கிருந்து தொடர்ந்தால் அது அசட்டு கிளுகிளுப்பை வாசகர்களுக்குத் தரலாம். வேறு ஒன்றும் நேர்ந்து விடாது. அதனால் அதைச் செய்வதற்கு நான் விரும்பவில்லை. மேலும், அசோகனின் கடிதங்கள் வழி அவரின் உள்மெய்யைச் சந்தேகிப்பதையோ அல்லது வியப்பதையோ வாய்ப்பு அமையும்போது அவரிடம் தனிப்பட்டுச் செய்து கொள்கிறேன். இப்போது, சமகாலப் புது வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் இவ்வுரையாடலைக் கொண்டு செல்ல முயல்கிறேன்.
இலக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கான தீர்மானமான கோட்பாட்டையோ அல்லது தர்க்கரீதியான வரைபடத்தையோ இங்கு நான் தரவில்லை. ஆகவே, நான் சொல்ல வருபவனவற்றை நம் அறிதலுக்குத் துணை சேர்க்கும் தூண்டுகையாகக் கொள்ள வேண்டுகிறேன். வாசிப்பு என்பதை ஒரு அரசியல் நிகழ்வாகக் கொள்வதில் இருக்கும் ஆகப்பெருஞ்சிக்கலை விளங்கிக் கொள்வதற்கான சிறுமுயற்சியையே நான் மேற்கொள்கிறேன்.
சமூக வாழ்வில் ஒரு மனிதன் மூன்று வெளிகளுக்கு ஊடாக ஊசலாடிக் கொண்டே இருக்கிறான். அதை ஒருபோதும் தவிர்த்து விடவே முடியாது. ஆனால், தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறான். தொடர்ந்து அவை பற்றி அல்லாடுகிறான். விளைவாய், அவனின் ஊடாட்டம் மூன்று கருத்துருக்களாய்த் துலக்கம் பெறுகிறது. அவை மரபு, நவீனம் மற்றும் இலக்கியம்(கலை). மூன்றையும் கொஞ்சம் அணுக்கமாக அலசுவோம்.
மரபு என்பது…
ஒரு மனிதன் தனது ஊடாட்டம் அல்லது அலைக்கழிப்புக்கான தீர்வை ’சமூகம் கடந்த வெளியில்’ தேட எத்தனித்த போது உரு கொண்டதே மரபு. இங்கு தனது அலைக்கழிப்புக்கான காரணத்தைக் கடவுள் அல்லது தனக்கு மீறிய ஒன்றாக முடிவு செய்து அதற்குச் சில விளக்கங்களை அளித்தான். அவையே மரபுத்தத்துவங்களாக இன்று நம்மிடையே இருக்கின்றன.
தனது அலைக்கழிப்புக்கான காரணத்தை மரபில் தேடும் ஒருவர் கடவுளிடம் பக்தி கொண்டோ(அவரிடம் ஒப்படைத்து) அல்லது கடவுளை விசாரிப்பதன்(ஞானம்) வழியாகவோ அதைப் பெற்று விடுவதாக உறுதியுடன் நம்புகிறார். அவரைப் பொறுத்த அளவில் தனது வாழ்க்கை ’இன்றைய நாள்’ மற்றும் ’நாளைய நாளில்’ இல்லை. அது ’நேற்றே’ முடிவு செய்யப்பட்டு விட்டது. இனி அவர் செய்வதற்கு எதுவுமில்லை. எல்லாம் கடவுள் சித்தப்படி அல்லது ஊழின் நெறியின்படியே நடக்கும். அவ்வகையில், மரபின்படி செய்வதற்கு எதுவுமில்லை.
மரபைத் தனது தளமாகக் கொண்டவர்கள் வாழ்வின் எப்பிரச்சினையானாலும் அதை ஒற்றைப்படையாய்க் கொண்டு போய் கடவுளின் தலையிலோ அல்லது ஊழின் கரத்திலோ ஒப்படைத்து விடுவார்கள். என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றிய மேலதிக விசாரணைக்குத் தயாராக மாட்டார்கள். எல்லாம் அவன் செயல் என்றோ அல்லது எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றோ தங்களைச் சமாதானம் செய்து கொள்வார்கள். அதை ஒட்டியே தங்கள் வியாக்கியாங்களை அமைத்துக் கொள்வார்கள். இவர்களை நாம் மரபுவாதிகள் என்று கொள்ளலாம்(வாதத்திற்கு).
சமூகவெளி கடந்தவை குறித்த ஆக்கங்களைப் புராணங்களின் வழியாக மரபு வழங்கி இருக்கிறது. புராணங்களின் கருப்பொருளைக் கவனித்தீர்களானால் அது கடவுளை மையப்படுத்தியதாகவே இருக்கும். எச்சமயத்தைச் சேர்ந்த புராணமானாலும் அது கடவுளை அல்லது ஊழை வலியுறுத்தும் முன்முடிவோடே எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் புராணங்கள் சமூகவெளி மீறிய நிலையில் இருந்தே சமூகச்சிக்கல்களை எதிர்கொள்ளும்
மரபுவாதிகள் நிச்சயம் நம்பிக்கைவாதிகள். அவர்கள் சமூகவெளி கடந்திருக்கும் கடவுள் அல்லது ஊழினை மிகத்தீவிரமாக நம்புபவர்கள். அந்நம்பிக்கையின் வழியாகவே தங்கள் வாழ்நாளைக் கடத்துபவர்கள். எது நடந்தாலும் அதை கடவுளின் திருவிளையாடல் அல்லது ஊழின் களியாட்டம் என்றே நிறுவி ஓய்வார்கள்.
மரபுவாதிகளைப் பொறுத்தவரை, அவர்களின் பொற்காலம் ‘நேற்றில்’தான் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் ”அந்தக்காலம் போல வருமா?” என அடிக்கடி அங்கலாய்ப்பார்கள்.
மரபு மனிதன் தனக்கு நேரும் இன்னல்களுக்குச் சமூகவெளி கடந்த மீவியல்பையே மையமாகக் கொள்வான். அதனால்தான் சமூகத்தில் தன் பங்கு என எதுவும் இல்லை என்பதான கருத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பான்.
மரபுமனிதனை நாம் மீமனிதன்(சமூகவெளி கடந்திருப்பதை நம்புவதால்) எனப் புரிதலுக்காக அழைக்கலாம்.
நவீனம் என்பது…
ஒரு மனிதன் தனது மனக்குழப்பங்களுக்கான காரணத்தை சமூகவெளியில் தேட முயலும்போது அவன் கண்டுகொள்வதே நவீனம். இவ்விடத்தில் அவன் தன் அலைக்கழிப்புக்கான காரணத்தை இருமைகளின் முரண்பாடாக விளங்கிக் கொள்கிறான். அதாவது நேற்றைய மற்றும் இன்றைய சமூக அமைப்பின் முரண்பாடுகளாலேயே தங்களுக்கு நிறைவின்மை வருவதாக ஊகிக்கிறான். அவ்வூகத்தைத் தருக்கங்கள் வழி கோட்பாடாக வரிக்கிறான். அதன் அடிப்படையில் அன்று எதிர் இன்று என்பதன் முரண்பாடே நம் சிக்கல்களின் மூலம் எனும் இருமைக்கு வந்தும் சேர்கிறான்.
நினைவில் கொள்வோம். மரபில் ஒற்றைப்படையாய்(நேற்று) இருந்த காரணம் நவீனத்தில் இருமைகளின்(நேற்று எதிர் இன்று) மோதலாக அடையாளம் கொள்கிறது.
’நேற்றையை’ வரலாறும் ‘இன்றைய’ நிகழ்வுகளும் முரண்பட்டு நகர்ந்து செல்லும் ‘நாளையில்’ நமக்கான பொற்காலம் இருக்கிறது. ஆக, நேற்றைய வரலாற்றை ஆராய்ந்தறிந்து அதன் வழியில் இன்றைய சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, இன்றைய அவலத்தைப் போக்குவதற்கு நாம் பாடுபட வேண்டும். இவ்வாறு செய்யும்போது நமக்கான சிக்கலில்லா சமூகத்தை ’நாளை’ நாம் நிச்சயம் பெற்று விடலாம்.
நவீனவாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் நம்பிக்கை நாளைதான். இன்றைய நாள் என்பது அதற்காகக் களமாடுதற்கே. மற்றபடி, இன்றைய நாள் வாழ்வதற்கானதல்ல.
நவீனத்தைத் தளமாகக் கொண்டவர்கள் எப்பிரச்சினை என்றாலும் அதை இருமையாய்க் கொண்டு போய் நேற்று எதிர் இன்று என்பதாய்ச் சொல்வார்கள். வாழ்வின் எச்சிக்கலானாலும் அதை அக்கோணத்திலேயே வியாக்கியானம் செய்வார்கள். கூடுதலாக, இன்றின் பக்கம் நின்று நேற்றையை அடியோடு வீழ்த்த வேண்டும் என்பார்கள். நேற்று வீழாதவரை நமக்கு மீட்சியே இல்லை என்பது இவர்களின் தீர்மானம்.
வாழ்க்கைச்சிக்கல்களைக் களைவதற்கான முறைமைகளைச் சமூகவெளியில் நிறுவ முனையும் மனிதர்களை நவீனவாதிகள் எனத் தாராளமாகச் சொல்லலாம். அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தாமாகவே தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் அசைக்க இயலா நம்பிக்கை கொண்டவர்கள். என்றாலும், அவர்களின் கனவு ‘நாளை’க்கே பலிக்கும் என்பதிலும் உறுதி கொண்டவர்கள்.
சமூகவெளி தொடர்பான ஆக்கங்களைக் கோட்பாடுகளில் தெளிவாகக் காணலாம். கோட்பாடுகள் ‘நேற்றையை’ அலசி அதன் வழியாக ‘இன்றையை’ப் புரிந்து அதற்கான செயல்பாடுகளை வரையறுக்கும். அதன் விளைவாக ‘நாளை’ சிறப்பாக இருக்கும் எனத் திடநம்பிக்கையைத் தர்க்கங்களால் நம்மில் விதைக்கும். கோட்பாடுகள் சமூகவெளிப் பரப்புக்குள் இருந்தே மனிதனின் அலைக்கழிப்புகளை வியாக்கியானம் செய்யும்.
நவீனவாதிகளும் உறுதியாக நம்பிக்கைவாதிகள். அவர்கள் சமூகவெளியில் கோட்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை மிகத்தீவிரமாக நம்புபவர்கள். அந்நம்பிக்கையின் வழியாகவே தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள். எது நடந்தாலும் அதைச் சமூகவெளிக்குள் நிகழும் இருமைகளின் முரன்பாடுகளே என்றே நிறுவி ஓய்வார்கள்.
நவீனவாதிகளைப் பொறுத்தவரை, அவர்களின் பொற்காலம் ‘நாளையில்’ இருக்கிறது. அதனால்தான் அவர்கள் ”வருங்காலத்தில் எல்லாம் மாறிடும்” என அடிக்கடி முழங்குவார்கள். அதற்காகத் தங்களை ஒப்புக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
நவீன மனிதன் தனக்கு நேரும் துன்பங்களைச் சமூக அமைப்பை மையப்படுத்தியே புரிந்து கொள்வான். அதனால்தான் சமூக அமைப்பு மாறும்போது எல்லாம் மாறிவிடும் என்பதில் அதிதீவிர முனைப்பு காட்டுகிறான்.
நவீனமனிதனை நாம் சமூகமனிதன் எனப் புரிதலுக்காக விளிக்கலாம்.
இலக்கியம் என்பது…
ஆறறிவுள்ள மனிதன் தனக்கு நேரும் சிக்கல்களைத் தன்னின் கோணத்தில் இருந்து பார்க்க எத்தனிக்கும்போது இலக்கியம் பிறக்கிறது. மரபும் நவீனமும் அவனின் பார்வைக் கோணத்தை அவனுக்கு வெளியே(புறம்) இருத்தி வைக்கிறது. இலக்கியமோ அவனுக்குள் இருந்தே(அகம்) யோசிக்கத் தூண்டுகிறது.
இலக்கியம் வாழ்க்கைச் சிக்கல்களுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வுகள் தரும் போதனைப் பணியை மேற்கொள்வதில்லை. அப்படி அதற்கு நோக்கம் இருப்பின் அதைக் கோட்பாடுகள்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்றனவே.. பிறகெதற்கு, இலக்கியம்?
வாழ்க்கையை சமூகவெளி கடந்து ஒப்படைத்து விடுவதில் நிம்மதி இருப்பின், மரபை நேர்ந்து கொள்ளலாம். சமூகப்பரப்பில் செயல்படுவதைத் தேர்வதானால் நவீனத்தின் பக்கம் நிற்கலாம். என்ன செய்தாலும், வாழ்வின் புதிர்களை மனிதனால் எதிர்கொண்டு விட முடிவதேயில்லை. இங்குதான் இலக்கியம் அவனின் மீட்சிக்கான தூண்டுகையாய் அமைகிறது.
வாழ்வை ஒற்றைப்படையாகவோ அல்லது இருமைகளின் முரண்களாகவோ மட்டும் பார்க்கும் கோணத்தின் அவலத்தைச் சுட்டி வாழ்வின் விசாலத்தை அறிந்து கொள்ள ‘பன்முகச் சாத்தியப்பாடுகளை’த் திறந்து வைக்கிறது. அதுவும் ‘இன்றின்’ நிகழ்வுகளைக் கவனப்படுத்துவதன் வழியாக வாழ்வின் விசித்திரப்புதிர்களை நமக்கு அறியச் செய்தபடியே இருக்கின்றன இலக்கியங்கள்.
மரபு அல்லது நவீனத்தைத் தளமாகக் கொண்டவர்கள் துவக்கத்திலேயே தேங்கிப்போய் தன் தேடலை நிறுத்தி விடுவார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் அவர்களின் ‘இன்று’ அவர்களுக்கு எவ்விதத் தனிப்பட்ட அர்த்தமும் இல்லாதது. இலக்கியத்துக்கோ ‘இன்று’தான் முக்கியமானது; அர்த்தமுள்ளது.
உண்மையான இலக்கியம் ஒருபோதும் வாழ்வுச்சிக்கல்கள் குறித்த தீர்வுகளை ஆசிரியத்தொனியில் வாசகர்களுக்கு அளிக்காது. வாழ்க்கையை அதன் சகலவிதமான சாத்தியப்பாடுகளோடு தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருப்பதே அதன் இயல்பு. கணக்கில் அடங்கா வருடங்கள் வாழ்ந்தாலும் வாழ்வின் தீராப்புதிர்களை மனிதனால் விடுவித்து விடவே முடியாது. அப்படி இருக்க அவனின் ‘இன்றைய’ நாளின் மதிப்பு முன்முடிவுளில் சிக்குண்டு கலங்கலாமா? இலக்கியம் இக்கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.
மரபும் நவீனமும் கருத்து அடிமைகளை உற்பத்தி செய்வதற்குத் தயாராகும்போது, இலக்கியம் விழிப்புணர்வு மனிதனைக் கனவு காண்கிறது. ஒவ்வொரு கணத்தின் நிகழ்வையும் குறுகலாக்கிச் சலிப்பாக்காமல் அதன் அத்தனைச் சாத்தியப்பாடுகளையும் அறிந்து கொள்ளத் தூண்டுகிறது. வாழ்வை இன்னும் விசாலக்குவதற்கான கதவுகளைத் திறந்து பார்க்க ஆர்வமூட்டுகிறது.
மரபின் பிரதிகள் ‘மாறாததை’ அடிப்படையாகக் கொண்டும், நவீனத்தின் பிரதிகள் ‘மாறுவதை’ அடிநாதமாகக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. இலக்கியத்தின் பிரதிகளோ ’அறியாததை’ முதன்மையாகக் கொண்டு உரு கொள்கின்றன.
நினைவில் கொள்வோம். ‘மாறாத அறியாததை’ வலியுறுத்தும் மரபைப் போலவே ‘மாறும் அறிந்ததை’ நவீனம் வற்புறுத்தும். இலக்கியம் ‘அறிந்ததில் இருக்கும் அறியாததையும், அறியாததில் இருக்கும் அறியவேண்டியவற்றையும்’ குறித்த பயணத்தைத் தொடங்கி வைப்பதாக இருக்கும். இன்னும் தீர்மானமாகச் சொல்வதானால், இலக்கியம் வழிகாட்டிப் பலகை கூடக் கிடையாது. ஒருவனுக்கான வழியை, வழித்தடத்தை, பயணத்தை அவனாக மேற்கொள்வதற்கான சுதந்திரத்திறப்பைத் தூண்டுகிறது. எங்கும் அவனின் வாழ்வை ஆக்கிரமித்து அதிகாரம் செய்ய நினையாது.
இலக்கியமனிதனை நாம் தனிமனிதன் எனப் புரிதலுக்காகச் சொல்லலாம்.
மரபு மற்றும் நவீனத்தளங்கள் புறவயமானவை என்பதால் மிக எளிமையானவை. விளக்கங்களின் வழி நிறுவ முடிபவை. அதனால்தான் அவற்றைச் சுலபமாக அரசியலாக்கி விட்டனர். அரசியலாக்கப்படாதவரை மூர்க்கம் கொள்ளாதிருக்கும் மரபும் நவீனமும் அரசியல் என்று வந்தவுடன் புதிய அரிதாரங்களை வரித்துக் கொள்கின்றன. சமகால வாழ்வுச் சூழல் அப்படியான மூர்க்க அரசியல் மண்டிக்கிடக்கும் களமே. அதைக் கடந்து இலக்கியப் பக்கம் வருவதற்கு அகவயமான துணிச்சலும் தொடர்ச்சியான தயார்படுத்தலும் இன்றியமையாதவை.
இலக்கியப் பிரதிகளின் சமகால விமர்சனங்கள் அரசியல் மொழியிலேயே எழுதப்படுகின்றன அல்லது பெரும்பாலும் அப்படி விளங்கிக் கொள்ளப்படுகிறது. அதற்கு நாம் கடந்து வந்திருக்கும் முந்தைய ஐம்பது ஆண்டுகால ‘அரசியல் அக்கறையே’ அடித்தளம். எதைச் சொன்னாலும் அதை அரசியலில் முடிச்சு போட்டு முண்டா தட்டும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்திருக்கிறேன்; சந்தித்தும் வருகிறேன். அவர்களுக்கு இலக்கியம் என்பதே அரசியல் பிரதிதான்.
சமூகத்தில் மீமனிதர்களும், சமூக மனிதர்களும் எண்ணிக்கையில் மிகுதி. அதனால்தான் மிகச்சிறு எண்ணிக்கையிலான தனிமனிதர்களின் இலக்கியப் பிரதிகளை வாசிக்கவும் விமர்சிக்கவுமான வாசக மொழியை உருவாக்கி வளர்த்தெடுக்க நாம் உழைத்தாக வேண்டி இருக்கிறது. வாசக மொழி என நான் குறிப்பிடுவது ஒரு பிரதியைக் குறுக்காமல் விசாலப்படுத்துவது. விசாலப்படுத்தா விட்டாலும் பரவாயில்லை.. குறுக்காமல் இருந்தால் சரி.
மரபும், நவீனத்துக்கும் அரசியல் மொழிப் பிரதிகள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதைப்போன்றே, இலக்கியத்துக்கும் அரசியல் மொழிப்பிரதிகள் அதிகம் இருக்கின்றன. ஒரு வாசகன் முதலில் அதைக் கண்டுகொள்ளப் பழக வேண்டும்.
காட்டாக, வெண்முரசை வலதுசாரி ஆதரவு அரசியல் மொழிப்பிரதி என்றும் பின் தொடரும் நிழலின் குரலை இடதுசாரி எதிர்ப்பு அரசியல் மொழிப்பிரதி என்றும் எளிதில் நிறுவிவிடலாம். நம்பி விடுவதும் சுலபம். அங்குதான் வாசக மொழியின் தேவை அவசியமாகிறது. அரசியல் மொழி என்பதில் சொல்லுக்கு ஒரே அர்த்தம்தான். வாசக மொழி என்பதில் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆக, கவனம் முக்கியம்.
ஒரு இலக்கியப்பிரதியினை அரசியல் மொழியில் வாசிக்கும் வாசகன் அதைக் குறுக்கி விடுகிறான். வாசக மொழியில் வாசிப்பவனோ அப்பிரதியின் பரப்பை விசாலம் ஆக்குகிறான். அரசியல் மொழி ஒரு முன்முடிவை வாசகனுக்கு அளிக்கும். வாசகமொழியோ பிரதியில் அவனுக்கான நிகர்வாழ்வைக் கண்டுகொள்ளத் துணை செய்யும்.
நான் வாசிக்க வரும்போது ஒரு இலக்கியப் பிரதியை அதன் ஆசிரியரின் சாதி அடையாளத்தை வைத்தெல்லாம் மதிப்பிட்டிருக்கிறேன். குறிப்பாகச் சொல்வதானால், பிராமண சாதி எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்களை ஒருவித ஒவ்வாமையுடன்தான் அணுகினேன். இடைநிலைச் சாதி எழுத்தாளர்கள் என்றால், வாசிப்பே கொண்டாட்டம்தான். அதற்குக் காரணம் படைப்புகளை முன்முடிவுடனான அரசியல் மொழியில் வாசித்திருக்கிறேன் என இப்போது தெரிகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பே சூழல் அரசியலை மையப்படுத்தியது என்றால், இன்றைக்குச் சொல்லவா வேண்டும்? புதிய வாசகர்களில் பலர் எழுத்தாளர்களைத் தங்கள் அரசியல் பார்வை கொண்டே தேர்ந்தெடுக்கின்றனர், வாசிக்கின்றனர். தங்கள் அரசியல் பார்வைக்கு முரண்பாடு என அவர்கள் கருதும் ஆக்கங்களை அடியோடு ஒதுக்கி விடுகின்றனர்.
சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலை ஆர்வமாய் வாசித்த தோழர் ஒருவரிடம் விஷ்ணுபுரத்தை வாசிக்கச் சொல்லி நான் வாங்கிக் கட்டிக் கொண்ட வசவுகள் என்னோடு போகட்டும். என் வகையில், காவல்கோட்டம் மற்றும் விஷ்ணுபுரம் இரண்டுமே முக்கியமான இலக்கிய ஆக்கங்கள். ஆனால், வாசகர்கள் அப்படியான பக்குவத்திற்கு வருவதற்கு வாசிப்பு மொழியை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
சமகால வாசகர்களுக்கு வாசக மொழி எனும் பதத்தினை அறிமுகம் செய்து அதனை அரசியல் மொழியில் இருந்து பேதப்படுத்திப் பார்க்கும் மனச்சித்தத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில், இலக்கிய ஆக்கங்களும் தேங்கிய குட்டைகளாகி பயனற்று விடும்.
சத்திவேல்
கோபிசெட்டிபாளையம்.
அறிவியக்கவாதியின் உடல்சுவரில்…
அன்பின் ஜெ!
முன்பெல்லாம் தலைமுறை கடந்த வீடுகளில் காலம் உறைந்த புகைப்படங்களை பார்க்க முடிந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் I.T-யில் வேலைப் பார்க்கிற எளிய முறை தவணையில் பெருந்தொகை கடனாக கிடைத்து விடுவதால் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃப்ளாட்களை வாங்கும் இளம் ஜோடிகள் சுடச்சுட பால் காய்ச்சி குடியேறிவிடுகின்றனர். ஆனால் நிலத்தை விற்று படிக்க வைத்த, வாழ வைத்த தாத்தா ஒரு புகைப்படமாகக் கூட அங்கு கூடத்தில் வைக்கப்படுவதில்லை.
பாரதியாவது கோட்டு அணிந்து, தலைப்பாகை கட்டி ஒரு புகைப்படமாக நிற்கிறான். ஆனால் அவருக்குப் பிற்காலத்தில் வந்த தமிழிலக்கியவாதிகளில் நிறைய பேரின் ஒரேயொரு புகைப்படத்தைக்கூட காலம் விட்டு வைக்கவில்லை. வெண்முரசு வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அளவிலும், உள்ளடக்கத்திலும், நவீனத்திலும் அதன் பிரமாண்டம் தந்த வியப்பு – ஆசிரியனை, எழுதியவரை நோக்கி திரும்பியது. எங்கேனும், எல்லோர் கண்ணுக்கும் படுகிற விதத்தில் – ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலையாளர், இடது, வலது என கூடுமிடமாக முன்பு இருந்த தேவநேயப்பாவாணர் அரங்கில் ஒரு நீள் வரிசையில் ‘ப’ வடிவில் புகைப்படமாக பலரும் உள்ளனர். இன்றைய காலத்தில் சென்னை ரஹ்மத் பதிப்பகம் கவிக்கோ மன்றத்தில் தங்களின் புகைப்படம் சில நாட்களுக்கு வைக்கப்பட்டதை கண்டு அந்த ஏக்கம் சற்று தணிந்தது. நிறைவாக உணர்கிறேன்,
கொள்ளு நதீம், ஆம்பூர்.
நுகர்வு இன்று -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நுகர்வு பற்றிய ஒரு காந்திய உரையில் நீங்கள் என் மூளை கட்டுகளை அவிழ்த்து விட்டுருக்கிறீர்கள். நுகர்வுக்கான தீர்வு பின்னோக்கி திரும்புவதே என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த உரையை சில ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஞாபகம் ஆனால் பெரும்பாலும் அன்றாடம் நுகர்வைப்பற்றி சிறிதேனும் ஒரு அக உரையாடல் எழும்.
எங்கும் நுகர்வுக் குப்பைகள். ஆணையிடும் விளம்பர போர்டுகள். கட்டளையிடும் வணிக காணொளிகள். கிட்டத்தட்ட நுகர்வின் விளிம்பு நிலைக்கு சென்று விட்டோம் நாம். நுகர்ந்து நுகர்ந்து பூமிப்பந்து ஒடுக்குளுக்தே போய்விடும் போல. நுகர்வு பற்றிய என்னுடைய இரண்டு எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன். இது ஒரு முதிரா எண்ணமே இருப்பினும் உங்கள் முன் வைப்பதில் ஒரு நிறைவு.
இணையம், சமூக வலைத்தளம் அடுத்து மெய்நிகர் உண்மை உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிரோம். மெய்நிகர் உலகில் நாம் யாராக வேண்டுமானாலும் வாழக்கூடிய நிலை வெகு தொலைவில் இல்லை. இப்போது பல வணிக நிறுவனங்கள் விர்ச்சுவல் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறிருக்க நுகர்வுக் கலாச்சாரம் மெய்நிகர் உலகில் திளைக்கும் என்றால் பூமி நுகர்வில் இருந்து தப்பும் வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
மனிதர்கள் அப்படி விடமாட்டார்கள். கட்டற்ற நுகர்விற்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இல்லாமலில்லை. ஆனால் அந்த நம்பிக்கை எதுவரை? மனிதன் உயிர் வாழ ஒரு வேற்று கிரகம் கண்டுபிடிக்கும் வரை தான். நாம் வாழும் உலகை உலையில் போட்டுத்தானே வேற்று உலகை சமைக்க முடியும்.
இப்படிக்கு,
அருண்
அன்புள்ள அருண்
நுகர்வு என்பது நம் இன்றைய உலகின் சிக்கல். மிக எளிமையாக அதற்கு தீர்வு சொல்லிவிடமுடியாது. காந்தி காலத்தைவிட சிக்கலானது. நுகர்வுதான் உற்பத்தியின் அடிப்படை. உற்பத்திதான் செல்வ உருவாக்கம். செல்வம்தான் அடிப்படை வசதிகள். ஆகவே நுகர்வை தவிர்ப்பது ஏழ்மையை கொண்டுவரும் என்பது நவீனப்பொருளியல்.
நுகர்வின்மீதான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் என்ன என்பதே இன்றைய கேள்வி. நுகர்வை எவர் கட்டுப்படுத்துவது, என்னென்ன அடிப்படைகளில்? நுகர்வு ஆடம்பரமோ போட்டியோ ஆகாமல் தடுப்பதெப்படி? அதெல்லாம்தான் நாம் இன்று யோசிக்கவேண்டியவை.
ஜெ
ஏழாம் உலகம், வாசிப்பு
   
அன்புள்ள ஜெ,
வேலையின் நிமித்தமாக, கடந்த மூன்று மாதங்கள் தங்களின் வலைத்தளத்தினை தினமும் வாசித்தத்தை தவிர எந்த ஒரு புத்தகத்தையும் வாசிக்கவில்லை. திரும்பவும் வாசிக்க தொடங்க வேண்டும் என்று தினம் தினம் எண்ணி, என்னுள்ளே ஒரு நடைமுறை கொள்கையினை வகுத்து, தங்களின் ‘ஏழாம் உலகம்‘ நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்புக்குள் நுழைந்ததும் முதலில் தோன்றுவது, இவ்வளவு நாள் வாசிக்காமல் வீணடித்துவிட்டாயே என்று தான்.
நாம் வாழும் உலகங்களுக்கு அப்பால் வேறொரு உலகம் நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார்கள். நாவலின் தொடக்கத்திலேயே அந்த உலகத்தினை ஒரே ஒரு சொல்லினால் புரிந்து கொள்ள முடிந்தது. “ஈனும்” என்று முதல் பக்கங்களில் வருவதை, நான் ஒரு பசுவையோ அல்லது எருமையோ என்று நினைத்தேன். ஆனால் அதை ஒரு பெண்ணை குறிக்கிறது என்று வந்ததும், நாவல் என்னுள் அந்த உலகின் வாசலுக்குள் கொண்டு சென்று, கதவைத் திறந்து உள்ளே அனுப்பியது.
நாவலில் வரும் மனிதர்களை(உருப்படிகளை) வெறும் சதைக்குவியல்களாக நினைத்து வியாபாரம் செய்யும் பண்டாரத்தின் கதை. தான் செய்யும் தொழிலுக்கு அந்த முருகனின் துணையை நாடும் மனிதர். ஊனமுற்றவர்களை பிச்சையெடுக்க வைத்து தொழில் செய்பவர்.
பல்வேறு நடைமுறை எதார்த்தங்களை, நாம் காண மறுக்கும் காட்சிகளை, நாம் நினைக்க விரும்பாத எண்ணங்களை நிதர்சனமாக விவரிக்கிறது இந்நாவல். பிச்சை எடுப்போரின் வலி, சிரிப்பு, ஆசை, தீண்டல், காமம், ஆன்மிகம், எதிர்பார்ப்பு என்று அவர்களின் உலகத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் நய்யாண்டிகளும், கேலிகளும் மனிதன் எந்த நிலைமையிலும் மகிழ்ச்சியாக மட்டும் இருக்கவே படைக்கப்பட்டவன் என்று என்ன வைக்கிறது.
கதையில் வரும் ஒவ்வொரு பிச்சைக்காரரும் ஒவ்வொரு விதமாக உள்ளனர். குய்யனும், ராமப்பனும் எப்போதும் கேலியும் கிண்டலுமாகவே இருக்கிறாரகள். மாங்காண்டிச் சாமியின் பாடல்கள், முத்தம்மையின் ரசனிகாந்து, குருவியின் கிரீச் குரல், எருக்குவின் காதல், அகமதுவின் மாத்ருபூமி பேப்பர் என்று ஒவ்வொருவரும் ஒரு உணர்வு நிலையில் இருந்தாலும், ஓர் உலகத்தில் இருக்கிறார்கள். “அவர்களுக்கு ஆத்மாவும், அறிவும் இல்லை” என்று பண்டாரம் பல இடங்களில் கூறினாலும், அவர்களுடைய ஆத்மாவும் அறிவும் நம்மால் உணர்ந்து, புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
சின்ன சின்ன சந்தோஷங்களை முழுவதும் அனுபவிக்கும் மனிதர்கள். குய்யனின் பாயாசமும், எருக்குவின் காதலும் ஏங்கிய மனங்களின் வெளிப்பாடுகள். தர்க்க உலகத்திற்கு அப்பால் உள்ளது அவ்வுலகம். முழுவதும் உணர்வுகளால் ஆனது அல்லது உணர்வுகளே அற்றது.
பண்டாரத்தின் இரண்டாவது மகள் வீட்டை விட்டு ஓடிப்போன போது, அவர் தன் மகளை ஏமாற்றி கூட்டிப்போய்விட்டான் என்றே எண்ணி இருந்தார். ஆனால் அவரது மகள் அவரின் கூட்டுக்குள் இருந்து தப்பிக்கும் ஒரு வாய்ப்பாகவே அவனிடம் சென்றாள் என்று எதார்த்தத்தை சொல்கிறது. இங்கு மனங்களின் இச்சைகள், ஆசைகள் மேலோங்கி எழுந்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைக்க முயல்கிறது. இன்னொரு உலகத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல், நாளும் பொழுதுமாய் வாழ்க்கை செல்கிறது. இந்த இரண்டு உலகங்களுக்குள் தான் நாம் மாறி மாறி சுழன்று கொண்டு இருக்கிறோமா?
போத்தி, போலீஸ்காரன், உண்ணியம்மை, பண்டாரத்தின் சம்பந்தி, கொச்சன் நாயர், பெருமாள், வண்டிமலை என்று பல துருவங்களை காண முடிகிறது. மனிதனின் அழுக்கு, குற்றம் என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது. தன் இச்சையினை வெல்லவே அவன் அனைத்தையும் பொத்திப்பொத்தி வைக்கிறான்.
பண்டாரத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில் அவரை ஏதோ ஒரு பாடல் துரத்துகிறது. ஏன் அவருக்கு அந்த பாடல் அந்த இடத்தில தோன்றுவது என்பதே தெரிவதில்லை. அவர் தன் பெண் ஒரு விபச்சாரியாக தன் ஆசைப்படி வாழ்க்கை நடத்துகிறாள் என்று பார்த்த பிறகு, தன் வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்கிறார். அங்கு அப்பொழுது வரும் ஒரு பிச்சைக்காரிக்கு அவர் பிச்சை போடுகிறார். அதுவே அவர் போட்ட முதல் பிச்சை. இங்கு யாருக்கு யார் பிச்சை போடுகிறார்கள் என்ற வட்டத்தில் சிக்கயே மனிதர்கள் வாழ்கிறார்கள். நூலில் வருவது போல “நக்கித் தின்னும் நாயின் வாயை நக்கும் நாய்“.
ஒரு எதார்த்தவாத நாவல் என்பதைத் தாண்டி, மனிதனின் கருணையும் அன்பும் எல்லா இடத்திலும், எந்த ஒரு துன்பத்திலும் இருக்கும் என்பதை இந்நாவல் வாசிப்பு எனக்களித்தது. பண்டாரத்தின் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கும் போது, அவர் அதில் ஏமாறக்கூடாது என்று அகமது எண்ணி அவரிடம் அவனை நன்றாக விசாரிக்க சொன்னான். என்னதான் தன் முதலாளி தன்னை வைத்து வியாபாரம் செய்தாலும், தன்னை அடிமையின் அடியில் வைத்து துன்புறுத்தினாலும், அவருக்கு ஒரு பிரச்சினை வரும் போது, அதை தாங்களும் ஏற்று மிகவும் வருத்தப்பட்டனர். மனிதனில் இந்த கருணை எவ்விடத்தில், யாரிடம் உதிக்கும் என்று சொல்லிவிடவும் முடியாது போல.
அன்புடன்,
பிரவின்
February 12, 2022
குருகு
 செங்குருகு
செங்குருகுவிடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான். கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான். ரிச்சர்ட் டாக்கின்ஸின் பரிணாமத்தைப் பற்றிய நூலை [The Greatest Show on earth] எனக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எனக்கு புரிந்தது பரிணாமவாதிகளிலேயே டார்வின்வாதிகளுக்கும் மெண்டல்வாதிகளுக்கும் நடுவே நுட்பமான ஒரு பிரிவினையும், உள் விவாதமும் உண்டு என்பதே. டாக்கின்ஸ் மெண்டல்வாதி. நான் பாதிநேரம் மழலையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த உயிர்க் குலமே ஓர் அலகிலா விளையாட்டு என்ற எண்ணத்தையே சுற்றி விரிந்த வெளி மலையடுக்குகளும், வயல்வெளியும், மரங்களும், பறவைகளும் உருவாக்கின. அதில் ஒரு துளியே நான். ஆம், வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ பரிணாமம் என்பது இயந்திர வளர்ச்சி அல்ல. அது ஒரு லீலை. விளையாட்டு என்பது ஒவ்வொரு கணமும் புதியன நிகழ்வதன் மூலமே அர்த்தம் பெறக் கூடிய ஒன்று.
கணியாகுளம் பாறையடியின் விரிந்த வயல் வெளியை ஊடறுத்து ஓடும் ஓடையின் இருகரைகளிலும், அடர்ந்த நாணலும், தாழையும். கோடையானாலும் நீரோட்டம் கொஞ்சம் இருந்தது. செந்தவிட்டு நிறமான கூர் அலகுள்ள ஒரு சிறிய பறவை சட்டென்று டிராக் என்ற தொண்டை ஒலியுடன் தபதபவென பறந்து ஓடைக்கு மறுபக்கம் சென்று புதருக்குள் மறைந்தது. பறவையியல் அஜிதனின் பொழுதுபோக்கு. ‘அது என்னடா பறவை?’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு செங்குருகுன்னு பேரு’ என்றான்
நான் ‘குருகுன்னா கொக்குதானே?’ என்றேன். உடனே சந்தேகம் வந்தது ‘குருகுன்னா நாரைன்னும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்’ அஜிதனுக்கும் அவனது மானசீக ஆசானாகிய தியோடர் பாஸ்கரனுக்கும் குனிய வைத்து கும்முவதற்கு வாகான பிடியை நானே கொடுத்து விட்டேன். ஆரம்பித்து விட்டான்.
‘அப்பா, சங்கப் பாட்டுகளை வாசிக்கணும்னா இயற்கையை கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். அவங்கள்லாம் கற்பனையிலே எழுதி விடலை. எழுதினவங்க விவசாயி, கொல்லன் இந்தமாதிரி ஆளுங்க. அவங்க கண்ணு முன்னாடி பாத்ததைத் தான் எழுதினாங்க. பொதுவா பழங்குடிகள் எதையுமே நேரிலே பாத்து அதைத்தான் சொல்லுவாங்க. சங்க இலக்கியத்திலே உள்ள பாட்டெல்லாம் அப்டித்தான்னு தியோடர் பாஸ்கரன் சொல்றார். ஆனா பின்னாடி வந்த புலவர்களுக்கு ஒரு அனுபவமும் கெடையாது. அவங்க எழுதினதை வச்சு இவங்க இஷ்டத்துக்கு வெளையாடினாங்க. இப்ப பாதி பேருக்கு சங்கப் பாட்டையே புரிஞ்சுகிட முடியல்லை’’
‘குருகுன்னா இந்த பறவையத்தான் சொல்லியிருக்காங்களா?’ என்றேன். ‘கண்டிப்பா. நீ வேணுமானா பாரு. நான் எட்டு பாட்டு ரெஃப்ர் பண்ணியிருக்கேன். எந்தப் பாட்டிலேயும் குருகு சாதாரணமா பறந்திட்டிருந்ததா இருக்காது. குருகு ரொம்ப அபூர்வமான பறவை அப்பா. வயலிலேயே நாளெல்லாம் வேலை செய்றவங்க கூட வருஷத்துக்கு ஒருவாட்டிகூட பாக்க முடியாது. ரொம்ப ஷை டைப். ஓடைக் கரையில புதருக்குள்ள ஒளிஞ்சு உக்காந்திருக்கும். மீன், நண்டு எல்லாம் புடிச்சு திங்கும். சத்தம் போடுறதே கெடையாது. சங்க காலத்திலே உள்ள பாட்டுகளிலே அதோட இந்த நேச்சரைப் பத்தித்தான் எப்பவும் சொல்லியிருப்பாங்க’
அவன் சொன்னதை வைத்துப் பார்த்தால் குருகு இயல்பான ஒரு பறவையாக அல்லாமல் அபூர்வமான ஒரு பறவையாகவே சொல்லப் பட்டிருக்கும். சட்டென்று நினைவில் வந்தது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.
“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”
[குறு – 25]
[வேறு யாருடனும் அல்ல, தனக்குத் தானே தான் பொய் சொல்கிறான். அவன் அப்படி பொய் சொன்னால் நான் என்ன செய்வேன்? நான் அவனைச் சேர்ந்த அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்கள் கொண்டதும், ஒழுகும் நீரில் ஆரல்மீனை பார்த்து அமர்ந்திருந்ததுமான குருகும் அருகே இருந்தது].
ஆச்சரியம்தான். சாதாரணமான இருந்த கவிதை இந்த உட்குறிப்பு ஏறியவுடன் சட்டென்று மேலெழுந்து விட்டது. எல்லா உரைகளிலும் நான் அவனை புணர்ந்த போது அருகே இருந்த கொக்குதான் சாட்சி அதற்கு என்ற எளிய விளக்கமே இருக்கும். அதில் ஆழமான கவித்துவமும் இல்லை. கொக்கு எங்கும் இருப்பதுதான்
ஆனால் குருகு என்னும் போது கதையே வேறு. அது கண்ணில் படுவதற்கு மிகமிக அபூர்வமான பறவை. அது மட்டுமே சாட்சி என்பதில் உள்ள துயரம் பல மடங்கு கனமானது. அந்த அபூர்வமான சாட்சியை எங்கே போய் பிடிப்பது? குருகு புதருக்குள் வெகுநேரம் அமைதியாக பதுங்கியிருக்கும். அந்த உறவின் அதி ரகசியத் தன்மைக்கு அதை விட நல்ல குறிப்பு வேறு இல்லை.
ஓர் அபூர்வமான கவிதையை அதில் இருக்கும் நுண்ணிய இயற்கைக் குறிப்பு தெரியாமல் இதுவரை இழந்திருந்தோமா என்ன? குருகை தேடி கையில் கிடைத்த பிறபாடல்கள் வழியாகச் சென்றேன்.
’எறிசுறவம் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
திருத்தோணிபுரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி
வேதியர்க்கு விளம்பாய்’
[தாக்கும் சுறா மலிந்த கழிநீர் சோலையில் வாழும் இளம் குருகே என் பிரிவு நோயை திருத்தோணி புரத்தில் வாழும் செந்நிறமான மலர் மாலை அணிந்த வேத முதல்வனிடம் சென்று சொல்ல மாட்டாயா?]
என்று ஞானசம்பந்தரின் வரிகளில் குருகு நெய்தல்நிலத்தைச் சேர்ந்ததாக சொல்லப் படுகிறது. ஆனால் கடலில் அல்ல. கழிக்கானல் என தெளிவாகவே அது நதிமுகத்தை சேர்ந்தது என்று கூறுகிறது. குருகு சங்கப் பாடல்களில் பெரும்பாலும் தாழைப் புதர்களுடன் சம்பந்தப் படுத்தப் பட்டே சொல்லப் படுகிறது. அதன் விவரணைகளில் வெண்குருகு அதிகமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மஞ்சள் குருகு. தாழை பூப்பொதியை தன் இணையென நினைத்து குருகு மயங்குவதாக சங்கப் பாடல் சொல்கிறது. தாழைப்பூவின் பொன் மஞ்சள் நிறமே மஞ்சள் குருகின் நிறம்.
குருகு என்பதற்கு சங்கு என்றும் பொருள் உண்டு. குருகு என்ற சொல்லுக்கு சுருண்டது, குறுகியது, சுருக்கமானது என்ற பொருள். சிறிய பறவையானதனால் இப்பெயரா? நரைத்திருப்பதனால் நாரை என்பது போல. அல்லது கொக்கில் இருந்து வேறுபடுத்திக் கொள்வதற்காக நாரை என்றும் குருகு என்றும் குணப் பெயர்களை சூட்டினார்களா?
குருகு பற்றிய வர்ணனைகளில்
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
[கோழி சத்தமிட குருகும் எங்கும் சத்தமிடுகிறது. ஏழ்நரம்புள்ள யாழ் இசைபாட வெண்சங்கும் முழங்குகிறது]
என்று குருகின் ஒலியை சிலம்புதல் ஒலி என்று திருவெம்பாவை சொல்கிறது. அதன் குரல் இனியதல்ல. அது கோழியின் குரல் போல காதுகளை உரசிச் செல்லும் ஒலிதான். தினையின் தாள் போன்ற கால்கள் கொண்டது என்றும் அகவல் ஒலி எழுப்புவது என்றும் கபிலன் குருகை விவரிக்கிறான்.
குருகூர் என்பது ஆழ்வார் திருநகரியின் பெயர். நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வளநாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச் தலைநகராகக் கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும் குருகூர் ஆயிற்று என்பதுண்டு.
ஆனால் குருகு என்ற பறவையில் இருந்தே குருகூர் என்ற சொல் வந்திருக்கும் என்பதற்கான ஆதாரம் கம்பன் சடகோபர் அந்தாதியில் ‘கயல் குதிப்ப திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து பரக்கும் பழன வயற்குருகூர்’ என்று சொல்லியிருப்பதுதான். இன்றும் ஆழ்வார் திருந்கரி இருப்பது குருகு வாழும் ஓடைகளும், வயல்களும் மண்டிய தாமிரவருணிக்கரைச் சூழலில் தான்.
குருகு நாரை [Heron ] குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை. அதிகம் பறக்காமல் தாவிச் செல்லும் பறவை இது. குட்டையான கழுத்துள்ளது. கனத்த குரைப்புக் குரல் எழுப்பி, சிறகடித்து புதரிலிருந்து இன்னொரு புதர் நோக்கி பறந்து செல்லும். இந்தியாவில் செங்குருகு [ Cinnamon Bittern] மஞ்சள் குருகு [ Yellow Bittern] கருங்குருகு [Black Bittern]ஆகியவை பரவலாகக் காணப் படுகின்றன. ஒருமுறை பார்த்தபின் என் வீட்டு கொல்லைப் பக்கத்தின் புதருக்குள்ளேயே ஒன்றைப் பார்த்தேன்.
அப்படியானால் நான் இது வரை வாசித்த சங்கப் பாடல்களை சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறோமா, நாம் இயற்கையில் இருந்து விலகும் தோறும் நம்முடைய மரபுச் செல்வங்களான சங்கப் பாடல்களும் பொருளிழந்து போய் விடுமா என்ற பீதி எனக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப விக்கிப்பீடியாவின் பயனர் பேச்சு பகுதியில் குருகு என்பது கூழைக் கடா தான் என்ற அபத்தமான விவாதத்தைக் கண்டு திகில் கொண்டேன்.
’பழந்தமிழில் இதனைக் குருகு என்று அழைத்துள்ளார்கள். கூழைக்கடா என்பது தற்காலத்தில் வழங்கும் பெயர். கூழை என்பது வால் குட்டையாகவோ வாலே இலாமலோ இருக்கும் விலங்கைக் குறிக்கப் பயன்படும் சொல். இங்கு குட்டையாகவும், வால் குறுகியும் இருப்பதால் இதனை கூழைக்கடா என்கிறார்கள்’ என்று விக்கி விவாதத்தில் இருக்கிறது. [பயனர் செல்வா]. ஆச்சரியமாக இருந்தது. கூழைக்கடா என்பது Pelican பறவைக்கான பெயர். தென் மாவட்டங்களில் மிகப் பிரபலமான பெயர் இது. வெண்ணிற உடலும் விறகு போல பெரிய அலகும் கொண்ட இந்தப் பெரிய பறவை குமரி மாவட்டம் முழுக்க வந்து செல்லக் கூடிய ஒன்று.
[image error]கூழைக்கடா
முனைவர் பட்ட களப்பணிக்காக மேற்கு மலைகளில் இருக்கும் கார்த்தி என்ற ஆய்வாளரிடம் தொடர்பு கொள்ளும் விக்கி பயனர்குழு அவர் குருகு அல்லது குருட்டுக் கொக்கு எனப்படும் பறவை Indian Pond Heron என்பதாக இருக்கலாம் என்று சொன்னதாக குறிப்பிடுகிறது. குருட்டுக் கொக்கு என்று குருகு சொல்லப் படுவதுண்டு. காரணம் அது புதர்களுக்குள் கண்ணுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதனால் தான்.
மீண்டும் ஐயம் கொண்டு அஜிதனிடம் கேட்டேன் ’பிட்டர்ன் தான் குருகு என்று உன்னிடம் யார் சொன்னது?’ என்று. கோபத்துடன் ‘யார் சொல்லணுமோ அவங்க. இங்க வயலிலே வேலை செஞ்சிட்டிருந்த தலித் பெரியவர் சொன்னார்’. ஆம், அப்படியென்றால் சரியாகத் தான் இருக்க வேண்டும்.
ஆனால் அவருடைய தலைமுறையும் மறைந்த பின்னர் நாம் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மயிர்பிளந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம் போலும். வேதங்களைப்போல சங்கப்பாடல்களும் அப்போது மர்மமான அர்த்தங்கள் கொண்ட நூல்களாக ஆகிவிட்டிருக்கும். விதவிதமாக உரைகள் எழுதலாம். சடங்குகளுக்கு மந்திரங்களாக பயன்படுத்தலாம்.
மறுபிரசுரம் – முதற்பிரசுரம் May 9, 2011
பழைய பண்பாட்டுக் கட்டுரைகள்
மழையில் முளைப்பவை- கடிதம்
 மழையால் மட்டுமே முளைப்பவை
  மழையால் மட்டுமே முளைப்பவை
அன்புள்ள ஜெ
மழையால் மட்டுமே முளைப்பவை பதிவு வெளிவந்து இன்றுடன் சரியாக ஓராண்டும் பதினொரு நாட்களும் ஆகிறது. இன்று யூடியூப்பில் சேர்த்து வைத்திருந்த பாடல் தொகுப்பை குலுக்கல் செய்து ஓடவிட்டேன். மழ கொண்டு மாத்ரம் பாடலில் சென்று நின்று விட்டது உள்ளம். மிக இனிமையான கவிதை பாடல். அந்த இசையே பிரதானமாக கவர்ந்திழுத்தது.
ஒருமுறை கேட்டவுடன் தளத்தை திறந்து பதிவை தேடி படித்தேன். உங்களுடைய கதை விளக்கத்தை பாடல் பொருத்தி ரசிக்கையில் தான் மோகன்லாலின் நடிப்பை உணர முடிந்தது. நீங்கள் சொல்வது உண்மை தான், பலரது முன்னிலையில் பல துண்டுதுண்டு காட்சிகளாக எடுக்கப்பட்டது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. தனிமை, பிரிவின் வெறுமை, காதல் ஊறிய மோகம், இறுதியில் பூக்கும் புன்னகை அற்புதமாக இருக்கிறது.
இந்த பாடல் காட்சி முழுக்கவே அவர்கள் இருவரது பாவமும் மிக இயல்பாக வந்துள்ளன. மீண்டும் இணைய முடியாத பிரிவின் ஏக்கம் காட்சிகளின் வழி மென்மையாக உணர்த்தப்படுகிறது. பின்னணியில் ஒலிக்கும் பாடற்கவிதை அதன் ஊக்கிரத்தை உணர்த்தி செல்கிறது.
அந்த பாடலை உங்கள் மொழியாக்கத்தில் வாசிக்கையிலேயே மலையாளம் தெரியாத என்னால் அதன் ஆழத்தை உணர முடிந்தது. இசையில் கேட்கையில் மலையாளமே இனிக்கிறது. குறிப்பாக இந்த, “வெறுதே பரஸ்பரம் நோக்கியிரிக்குந்நு நிற மௌன சஷகத்தினு இருபுறமும் நாம்” என்ற வரியெல்லாம் இசையோடு கேட்கையில் தான் மிக நெருக்கமாக உணர செய்கின்றன.
காலத்தின் நீரொலிகள் திமிறும் இந்தக் கரையில் நாம்
ஒரு மௌன சிற்பம் வனைந்து முடித்து
எதற்காகவோ பிரிகிறோம் இருளும் துயரத்துடன்
ஒரு கடலின் துடிப்புடன்
ஒரு சாகரத்தின் மிடிப்புமாயி ?
அவர்களது ஆழ்ந்த நேசத்தையும் சேரவியலா நிலையையும் காட்டும் கவித்துவமான பகுதியல்லவா இது. நேசித்து ஊடலால் பிரிந்து மீண்டும் சேரவியலா நிலையை அடையும் துயர்கொண்ட எவருக்கும் உரித்தான பாடல் இது.
அந்த பதிவின் கீழே உள்ள காணொளியில் காட்சிகள் இல்லாது தனித்து இசையோடு கேட்கையில் இடையே வரும் குழலோசையை பிரிவேக்கத்தை கூர்மையாக காட்டுகிறது. சொந்த கற்பனைகளை மீட்டிக்கொள்ள நல்ல துணை அது.
இந்த கடிதத்தை எழுத தொடங்குகையில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்தேன். அதில் ஒரு கேள்வியும் இருந்தது. என்னவென்றால் இப்போது நீர்ச்சுடர் வாசித்து கொண்டிருக்கிறேன். கிராதத்திற்கு பிறகு இந்நாவல் தான் இயல்பாக உள்நுழைய அதேயளவு தடை கொடுக்கிறது. அந்த வெறுமையும் சோர்வும் கொடுக்கும் அத்தியாயங்களை வாசித்த பின் இப்படியொரு பாடலை தேடி செல்கிறது மனம். கழுநீர்க்கரை பகுதி இன்று காலை நிறைவுற்றது. நகுலனின் பார்வையில் விரியும் காட்சிகள் மைந்தர் துயரை காட்டி செல்கிறது. அத்தனை துயரிலும் கிடைக்கும் சிறிய இனிமைகளை அவன் தவறவிடுவதில்லை.
மனித அகத்தின் ஒருபகுதி எந்த துயரிலிருந்தும் எவ்வண்ணமேனும் விடுபடவே விரும்புகிறது. துயரிலிருந்து விடுபட துயர் தருவனவற்றை தூர விலக்கி நிறுத்த வேண்டியிருக்கிறது. அதற்காகவே இந்த நீர்க்கடன் தரும் அத்தனை சடங்குகளையும் இயற்றி கொள்கிறோம் என தோன்றுகிறது. அவர்களை குறித்த பாடல்களையோ அல்லது அவர்களது நினைவை ஏற்படுத்தும் பாடல்களை கேட்பது எல்லாமே புறத்தில் உள்ள பிறவற்றோடு அந்நினைவுகளை கலந்து நம்மிலிருந்து அவர்களை விலக்கி பார்ப்பதற்காக தான். என் அகத்தே வளரும் புனைவுலகமான நீர்ச்சுடரின் ஒரு நுனியே ஏங்கும் இனிமையை சொல்லும் இந்த பாடலை தேர்ந்தெடுத்தது போலும்.
அன்புடன்
சக்திவேல்
உப்புவேலி பற்றி….கடிதம்
அன்புள்ள ஜெ
ராய் மாக்ஸம் எழுதி சிறில் அலெக்ஸ் அவர்கள் மொழி பெயர்த்த உப்பு வேலி படித்தேன்.. ஒரிசா பகுதியில் இருந்து ஏறக்குறைய இமயமலை அடிவாரம் வரை வளர்க்கப்பட்டிருந்த உயிர் வேலி. இவ்வளவு பந்தோபஸ்து நாம் சாதரணமாய் நினைக்கும் உப்புக்காக. சுவர் எழுப்பிப் பார்த்தும், பெரிய மரங்கள் வளர்த்தும் சரியாய் வராமல் எந்த இயற்கை தாக்குதல் இருந்தாலும் அழியாமல், அழிந்தாலும் உடனே மறுபடியும் புதராய் வளரும் முட்செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு வேலி.
திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் சிறிய ரோடுதான் இருக்கும். பஸ்ஸில் போகும்போது ஜன்னலோரம் இருப்பவர்களை நல்லா உள்ள தள்ளி உட்காரச்சொல்வார்கள். ஏனென்றால் இரண்டு பக்கமும் அடர்த்தியான முட்செடிகள் வளர்ந்து ஓரத்தில் இருப்பவர்களின் கை, முகம், சிலபோது கண்ணைக் கூட குத்தி இழுத்துவிடும். அதைக் காட்டிலும் அடர்த்தியான வலுவான முட்கள் நிறைந்த புதர்கள்.
அரசாங்கம் பணம் உள்ளவர்களை பாதிக்கும் நிலத்திற்கு, வயல் போன்ற இடங்களுக்கு வரி உயர்த்தாமல் ஏழை, எளியவர்களை பாதிக்கும் உப்பிற்கு வரியை மேலும் மேலும் உயர்த்தி அதனால் நடக்கிற திருட்டுகளை தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட வேலி. இந்தப் புத்தகம் ஒரு துப்பறியும் கதை படிக்கும் உணர்வைத் தந்தது. ராய் மாக்ஸ்சம் அவர்கள் மூன்று தடவை இந்தியா வந்து மூன்றாம் முறை ஊர் திரும்பும் நேரத்தில் அந்த வேலியைப் பார்க்கிறார். அவருடைய “இதை இப்படியே விடக்கூடாது” என்ற பிடிவாதமும், “எப்படியாவது இதை நிரூபித்து விட வேண்டும்” என்ற வைராக்கியமும்தான் நமது கையில் புத்தகமாய் இருக்கிறது. சாதாரணமாய் பழைய புத்தகக் கடையில் வாங்கிய ஒரு சிறிய புத்தகத்தில் இருந்த ஒரு சிறிய குறிப்பு மட்டுமே விதை போல் முளைத்து அத்தனை கிலோமீட்டர் நீண்டிருந்த மாநிலங்களை இணைத்த உயிர் வேலியை உயிர்ப்பித்தது.
அந்த ஒரு குறிப்பு அவரை தூங்க விடாமல் யக்ஷியைப் போல் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இரண்டு முறை இந்தியா வந்து அவர் தோல்வியடைந்து சென்றது மட்டுமே நாம் வாசிக்கிறோம். அதன் பின்னால் அவருடைய செலவு நமக்குத் தெரியாது. ஒரு பெரிய நிறுவனமோ, அமைப்போ செய்ய வேண்டியதை ஒரு தனி மனிதராய் செய்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பியதும் மறுபடியும் வெறி கொண்டு உழைத்து இன்னும் நவீனக் கருவிகளைக் கண்டுபிடித்து திரும்பி வருகிறார். அட்ச ரேகை, தீர்க்க ரேகை கணக்குகள் என்னைக் குழப்பினாலும் அவருடைய விடா முயற்சியே நம்மை இழுக்கிறது.
சின்னச்சின்ன நகைச்சுவைகள், இந்திய உணவைப் பற்றிய கருத்துகள், மக்களைப் புரிந்துகொள்வது எல்லாம் நல்ல ஒரு எழுத்தாளார்களுக்கு உரியது. இந்த இடத்தைவிட்டு சீக்கிரம் போங்க, இங்கக் கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே ஒரு கொள்ளைக்காரனிடமே போய் அவர் வேலியைப் பற்றி விசாரிப்பது, வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு போகும்போது நிறைய பாரத்தோடு நடந்து போகிற ஒரு அம்மாவை இவர்களே கூப்பிட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் எல்லையில் விடுகிறார்கள். மற்றவர்களிடம் விசாரித்து ஊர் தலைவர் வீட்டிற்குப் போனவுடன் தெரிகிறது இவர்கள் வண்டியில் கூட்டி வந்தது அவருடைய மனைவிதான் என்று, “கடத்தல்காரருக்கு மூட்டையை விட்டுவிட்டு ஓடுவது முக்கியம், நமக்கு மூட்டையை விட்டுவிட்டு ஆளைப்பிடிப்பது முக்கியம்” இவைகளைப்போல புன்னகையை வரவைக்கும் இடங்களும் உண்டு.
பத்து முதல் பதினான்கடி உயரமும், பன்னிரண்டடி அகலமும் கொண்டு 2504 மைல் தொலைவிற்கு உருவாக்கப்பட்ட சுங்க வேலி. மற்ற இடத்தைவிட வங்கத்தை அதிகம் பாதித்திருக்கிறது. மற்ற நாட்டில் விதிக்கப்பட்ட உப்பின் வரியும், அவர்களின் வருட வருமானமும், நமது நாட்டில் விதிக்கப்பட்ட வரியும், வருட வருமானமும் ஒப்பிட்டு பார்க்கையில் பயமாய் இருக்கிறது. சில சைக்கோ கொலைகாரர்கள் ரசித்து கொலை செய்வதுபோல் அடித்தள மக்களின் மேல் விதிக்கப்பட்ட இந்த கொடூர உப்பு வரியைப் பற்றிய ஆங்கிலேயர்களின் குறிப்புகள் அவ்வளவு அழகிய மொழியில் அமைந்துள்ளது.
நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மூன்று லட்சம், பன்னிரண்டு லட்சம், இருபத்துமூன்று லட்சம், அறுபது லட்சம் என்றெல்லாம் இந்த வரியின் மூலமும் சட்ட விரோத உப்பு விற்பனையின் மூலமும் பணம் திரட்டி இருக்கிறார்கள். என்ன என்னவோ கணக்குகள், எவ்வளவோ லாபங்கள், ஆனால் உள்ளூர் உப்பு உற்பத்தி செய்யும் மலாங்கிகள் பெற்றது 0.5 – 0.9 மட்டுமே. ஐம்பது காசுகளா அல்லது ஐந்து காசுகளா தெரியவில்லை.
நான் பள்ளி இறுதி படித்துக் கொண்டிருந்தபோது என் சித்தி வேலை செய்யும் நிறுவனத்தில் கொஞ்சம் பேர் சேர்ந்து தீபாவளி சமயத்தில் பட்டாசுக் கடை போடுவார்கள். நாங்களும்போய் விற்பனையாளர்களாய் நிற்போம். வாய்க்கு வந்த விலைதான். முதல்நாள் விலை சொல்ல பயமாய் இருக்கும். பெரியவர்களிடம் கேட்டுக்கேட்டு விலை சொல்வோம். அடுத்தடுத்து தேறிடுவோம். எங்க வாய்க்கு வர விலைதான். இரண்டு வேளை பிரியாணியும் கடைசிநாள் நிறைய பட்டாசும் ஐநூறு ரூபாய் பணமும் கொடுப்பார்கள். அப்படித்தான் உப்பின் விலையும் வரியும் இருந்து இருக்கிறது.
இவ்வளவு பெரிய கொடூரம் ஏன் மற்றவர்களை, அவர்களின் அறவுணர்வை தொடவில்லை. ஆனால் எல்லா மனிதரும் உலகிற்கு உப்பாய் இருந்துவிட்டால் உலகம் ரொம்பக் கரிச்சிப் போய்டும். கொஞ்சூண்டு பேர்தான் உப்பாக முடியும் காந்தியைப் போல். வங்கப் பஞ்சத்தில் கொத்து கொத்தாய் மனிதர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். அதில் அதிகப் பட்சம் உப்பில்லாமையால் என்பது எவ்வளவு கொடூரமான உண்மை. சுலபமாய் காப்பற்றி இருக்கவேண்டிய உயிர்கள் அனாவசியமாய் கொன்று குவிக்கப் பட்டிருக்கின்றன. நம்மை அவர்கள் ஆட்சி செய்த காலத்தில்தான் நிலம் சரியாய் அளக்கப்பட்டது, கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது, பறவைகள், தாவரங்கள் போன்ற எது எதையோ பதிவு பண்ணி வைத்திருக்கும் ஆங்கிலேயர்கள் இவ்வளவு பெரிய உண்மையை ஏன் சிறு சிறு குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
இந்த வேலி உருவாவதை குறிப்புகளில் எழுதி இருக்கிறார்கள் இப்படி, “அங்கே ஒரு பூதாகரமான அமைப்பு உருவாகி வந்தது. பொருட்படுத்தத் தகுந்த அளவுக்கு நாகரீகமான எந்த ஒரு நாட்டிலும் அதற்கு இணையான ஒன்றைக் கண்டுபிடிப்பது கிட்டதட்ட இயலாத காரியம்”. நாகரீகத்தின் உச்சம் என்று நாம் வியக்கிற மனிதர்கள்தான் இந்த அநாகரீகத்தின் உச்சமான காரியத்தை மிகுந்த அர்ப்பணிப்போடு .செய்து இருக்கிறார்கள்.
உள்நாட்டுக்குள் ஒரு கட்டுக்காவல் இருந்தால் அதின் மக்கள் வேறு எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அனோஜென் எழுதிய கதைகளைப் படித்திருப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். நீர்நிலைகளை ஒட்டியே வேலி பெரும்பாலும் இருந்ததால் பெண்கள் கண்டிப்பாய் பெரும் பாதிப்பு அடைந்திருப்பார்கள். இதில் பொய் கேஸ் வேற. வீட்டின் முன்னால் உப்பைத் தூவி, வேண்டாதவங்க வீட்டில் சோதனை என்ற பெயரில் எல்லாவற்றையும் உடைத்து நொறுக்குவது, சும்மா விசாரணை என்ற பெயரில் புடிச்சுகிட்டுப்போய் சிறையில் அடைப்பது. இப்போதும் நாளிதழ்களில் தொலைக்காட்சியில் பார்த்தால் தெரியும், சில ஏழை வீடுகளில் சோதனை என்ற பெயரில் போலீசார் நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி திரும்ப அந்த வீட்டின் எந்தப் பொருளும் உபயோகிக்க முடியாமல் செய்து இருப்பார்கள்.
ராய் மாக்ஸம் அவர்கள் இந்த வேலியைக் கண்டு பிடிப்பதற்காக மனித உடலினைப் பற்றி, உலக வரலாறு, தாவரவியல் வரை அறிந்து கொள்கிறார். கடைசியாய் சினிமா கிளைமாக்ஸ் போல அந்த வேலியின் கொஞ்ச மிச்சத்தை பார்த்துவிடுகிறார். அதுவும் ஒரு முன்னால் கொள்ளைக்காரரின் உதவியோடு. பர்மத் லயின் என்ற பெயரோடு. இந்த பர்மத் லயின் என்ற பெயர் நாவலின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே வருகிறது. ஏன் அவரால் மிச்ச இடத்தில் பார்க்க முடியவில்லை என்றால் அந்த வேலி அப்படியே ரோடு ஆகிவிட்டது. வேலி நன்றாய் உயர்த்தப் பட்ட இடத்தில் நேராய் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் வளர்க்கப் பட்டிருந்ததால் அதை அழித்து அப்படியே ரோடு போடுவது மிகவும் சுலபமாக இருந்திருக்கிறது.
ஒருவேளை இப்பொழுது அந்த மிச்சம் சுத்தமாகவே இல்லாமல் போய் இருந்திருக்கலாம். அந்த மீதி இருந்த வேலி தான் அழிவதற்கு முன்னால் தன்னை வரலாற்றில் பதிக்க அதுவே தேர்ந்து எடுத்தது ராய் மாக்ஸம் அவர்களை என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அந்த வேலி இருந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டால் இன்னும் கொஞ்சம் தகவல்கள்கூட கிடைக்கலாம். மொழி பெயர்த்த சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி. கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் தங்கு தடையின்றி படிக்க முடிந்தது.
வாழ்த்துகளுடன்
டெய்ஸி.
உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள் உப்புவேலி -கேசவமணி உப்புவேலி பற்றி பாவண்ணன்நதி- கடிதம்
ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து நதி சிறுகதை வாசித்தேன். உங்களது முதல் சிறுகதை கணையாழி 1987 இல் வெளியானது. எங்கிருந்து நீங்கள் தொடங்கினீர்களோ அந்த புள்ளியை குறித்தது. அம்மாவை பற்றி பலநூறு பக்கங்களும் இன்னும் பல்வேறு கதைகளும் எழுதிவிட்டீர்கள். இன்றும் இக்கதை புதிதாகவே உள்ளது. நீங்கள் யாரென்றே தெரியாமல் வாசித்தாலும் வசீகரமானதே.
தன் அம்மாவின் இழப்பை, பாலெடுக்கும் சடங்கை குறித்ததே கதை. பொதுவாக முன்பு இந்த சடங்குகள் எல்லாம் ஏன் செய்யப்படுகிறது என்ற கேள்வி இங்குள்ள பல இளசுகளை போல எனக்கும் எழும். எல்லாவற்றையும் வெறுமை கொண்டு பார்க்கும் கதைச்சொல்லியின் முன் அவை நடக்கையில் ஒவ்வொன்றும் பொருள் கொண்டு வருகிறது. பெரும் பொருளின்மையை உணர்ந்து மனிதன் ஒன்றுமில்லாதவன் என உணர்கையில் இங்கு தங்கி வாழ அவன் உருவாக்கி கொள்ளும் பொருளே அச்சடங்குகள்.
பெரியப்பாவின் புதைக்குழி மேல் வளர்ந்து சிறகு விரித்தாடும் தென்னங்கன்றை பார்த்து இங்கு இப்படி எத்தனை மரங்கள் வளர்ந்து மறைந்திருக்கும் என உணர்கையில் வாழ்வியற்கையின் மாற பெருநியதியை கண்டு கொள்கிறான். அதுவே அவனை துயரத்துக்கும் இன்பத்துக்கும் அப்பால் எடுத்து செல்கிறது. அங்கிருந்து பார்க்கையில் ஒவ்வொரு செயலும் அந்த இன்மையை எப்படி கரைத்து இருப்பாக்கி கொள்வதை நோக்கியே செல்கிறது.
அப்படி பார்க்கையில் இறந்தவர் மேட்டில் தென்னையை நடுவது. நாம் விரும்பிய வகையில் நமக்குரிய அவர்களின் நினைவுகளை தொகுத்து வேரூன்றி கொள்வது என தோன்றுகிறது. அப்புறம் பானையின் அவள் எலும்புகளை அள்ளி வாய்மூடிக்கட்டி, மாலையிட்டு அலங்காரம் செய்து பூஜை செய்வது அவள் மேல் இருந்தவற்றை அவளாக பாவித்து இறுதியில் ஆற்றில் கரைக்கையில் அறிய முடியாமைக்கு ஒப்புகொடுத்தல் தானே.
இந்த சடங்குகளுக்கிடையில் அம்மாவை பற்றி வரும் அவன் நினைவுகள் அவளது இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமையின் உணர்வுகள் என்றே எண்ண வைக்கின்றன. ஆற்றுக்கும் தனக்கும் உள்ள அணுக்கத்தை கூறி இன்று எவளோ போல அன்னியமாகிவிட்டாள் என்பதும், அனந்தத்தில் பாய்பவள் எனும்போதும் தான் நன்கறிந்த அம்மா எப்படி தனக்கு தெரியாமல் சென்றுவிட்டாள் என்ற சித்தத்தின் வியப்புணர்வை அடைகிறான். நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கை அப்படியான தனித்தனியேயான ஆறுகள் தானே. எவராவது எவரையாவது முழுதறிந்து விட முடியுமா என்ன ? நம் கண்களுக்கு அந்நதி மறைகையில் இங்கு ஒழுகும் காலமெனும் பெருநதியில் கரைத்து விடுகிறோம் அல்லவா!
திரும்பிப் பார்த்தவர்கள் வாழ்வதில்லை. ஏன் ? அதை பார்த்தால் அறிந்து விடுகிறோம். அறிபவன் அறிந்தவற்றை கடந்து செல்கிறான். கடந்தவை ஒவியத்தின் காட்சிகளை போல. அதற்கு மேல் திளைத்தல் எனும் இயல்வாழ்வு இல்லை. நடித்தல் மட்டுமே உள்ளது போலும்.
அழுபவர்கள் தங்களை ஆற்றி கொள்கிறார்கள். எளிதில் மீண்டும் விடுவார்கள். இப்படி பார்ப்பவர்கள் என்ன ஆவார்கள் ? அதை பார்க்க தொடங்கிய அவன் ஆவது முடிவின்மையின் சாத்தியங்களில் ஒன்று.
அன்புடன்
சக்திவேல்
அறம் – மன அச்சாணி
வணக்கம் அண்ணா.
அறம் வாசிக்கத் துவங்கிய நிலையில் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு நீங்கள் தந்த பதில் இலக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பதை எனக்குச் சுட்டியது.நன்றி. நிற்க
அறம் தொகுப்பை முழுதாக வாசித்த பின் அந்த வாசிப்பனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதன் வெளிப்பாடாகவே அந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன்.
சிநேகமாய்
மு. கோபி சரபோஜி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers
 

 
   
   
  
 
  
