ஏழாம் உலகம், வாசிப்பு

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

அன்புள்ள ஜெ,

வேலையின் நிமித்தமாக, கடந்த மூன்று மாதங்கள் தங்களின் வலைத்தளத்தினை தினமும் வாசித்தத்தை தவிர எந்த ஒரு புத்தகத்தையும் வாசிக்கவில்லை. திரும்பவும் வாசிக்க தொடங்க வேண்டும் என்று தினம் தினம் எண்ணி, என்னுள்ளே ஒரு நடைமுறை கொள்கையினை வகுத்து, தங்களின் ‘ஏழாம் உலகம்‘ நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்புக்குள் நுழைந்ததும் முதலில் தோன்றுவது, இவ்வளவு  நாள் வாசிக்காமல் வீணடித்துவிட்டாயே என்று தான். 

நாம் வாழும் உலகங்களுக்கு அப்பால் வேறொரு உலகம் நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார்கள். நாவலின் தொடக்கத்திலேயே அந்த உலகத்தினை ஒரே ஒரு சொல்லினால் புரிந்து கொள்ள முடிந்தது. “ஈனும்” என்று முதல் பக்கங்களில் வருவதை, நான் ஒரு பசுவையோ அல்லது எருமையோ என்று நினைத்தேன். ஆனால் அதை ஒரு பெண்ணை குறிக்கிறது என்று வந்ததும், நாவல் என்னுள் அந்த உலகின் வாசலுக்குள் கொண்டு சென்று, கதவைத் திறந்து உள்ளே அனுப்பியது.

நாவலில் வரும் மனிதர்களை(உருப்படிகளை) வெறும் சதைக்குவியல்களாக நினைத்து வியாபாரம் செய்யும் பண்டாரத்தின் கதை. தான் செய்யும் தொழிலுக்கு அந்த முருகனின் துணையை நாடும் மனிதர். ஊனமுற்றவர்களை பிச்சையெடுக்க வைத்து தொழில் செய்பவர். 

பல்வேறு நடைமுறை எதார்த்தங்களை, நாம் காண மறுக்கும் காட்சிகளை, நாம் நினைக்க விரும்பாத எண்ணங்களை நிதர்சனமாக விவரிக்கிறது இந்நாவல். பிச்சை எடுப்போரின் வலி, சிரிப்பு, ஆசை, தீண்டல், காமம், ஆன்மிகம், எதிர்பார்ப்பு என்று அவர்களின் உலகத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் நய்யாண்டிகளும், கேலிகளும் மனிதன் எந்த நிலைமையிலும் மகிழ்ச்சியாக மட்டும் இருக்கவே படைக்கப்பட்டவன் என்று என்ன வைக்கிறது. 

கதையில் வரும் ஒவ்வொரு பிச்சைக்காரரும் ஒவ்வொரு விதமாக உள்ளனர். குய்யனும், ராமப்பனும் எப்போதும் கேலியும் கிண்டலுமாகவே இருக்கிறாரகள். மாங்காண்டிச் சாமியின் பாடல்கள், முத்தம்மையின் ரசனிகாந்து, குருவியின் கிரீச் குரல், எருக்குவின் காதல், அகமதுவின் மாத்ருபூமி பேப்பர் என்று ஒவ்வொருவரும் ஒரு உணர்வு நிலையில் இருந்தாலும், ஓர் உலகத்தில் இருக்கிறார்கள். “அவர்களுக்கு ஆத்மாவும், அறிவும் இல்லை” என்று பண்டாரம் பல இடங்களில் கூறினாலும், அவர்களுடைய ஆத்மாவும் அறிவும் நம்மால் உணர்ந்து, புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

சின்ன சின்ன சந்தோஷங்களை முழுவதும் அனுபவிக்கும் மனிதர்கள். குய்யனின் பாயாசமும், எருக்குவின் காதலும் ஏங்கிய மனங்களின் வெளிப்பாடுகள். தர்க்க உலகத்திற்கு அப்பால் உள்ளது அவ்வுலகம். முழுவதும் உணர்வுகளால் ஆனது அல்லது உணர்வுகளே அற்றது. 

பண்டாரத்தின் இரண்டாவது மகள் வீட்டை விட்டு ஓடிப்போன போது, அவர் தன் மகளை ஏமாற்றி கூட்டிப்போய்விட்டான் என்றே எண்ணி இருந்தார். ஆனால் அவரது மகள் அவரின் கூட்டுக்குள் இருந்து தப்பிக்கும் ஒரு வாய்ப்பாகவே அவனிடம் சென்றாள் என்று எதார்த்தத்தை சொல்கிறது. இங்கு மனங்களின் இச்சைகள், ஆசைகள் மேலோங்கி எழுந்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைக்க முயல்கிறது. இன்னொரு உலகத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல், நாளும் பொழுதுமாய் வாழ்க்கை செல்கிறது. இந்த இரண்டு உலகங்களுக்குள் தான் நாம் மாறி மாறி சுழன்று கொண்டு இருக்கிறோமா?

போத்தி, போலீஸ்காரன், உண்ணியம்மை, பண்டாரத்தின் சம்பந்தி, கொச்சன் நாயர், பெருமாள், வண்டிமலை என்று பல துருவங்களை காண முடிகிறது. மனிதனின் அழுக்கு, குற்றம் என்பது எல்லா  இடத்திலும் இருக்கிறது. தன் இச்சையினை வெல்லவே அவன் அனைத்தையும் பொத்திப்பொத்தி வைக்கிறான். 

பண்டாரத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில் அவரை ஏதோ ஒரு பாடல் துரத்துகிறது. ஏன் அவருக்கு அந்த பாடல் அந்த இடத்தில தோன்றுவது என்பதே தெரிவதில்லை. அவர் தன் பெண் ஒரு விபச்சாரியாக தன் ஆசைப்படி வாழ்க்கை நடத்துகிறாள் என்று பார்த்த பிறகு, தன் வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்கிறார். அங்கு அப்பொழுது வரும் ஒரு பிச்சைக்காரிக்கு அவர் பிச்சை போடுகிறார். அதுவே அவர் போட்ட முதல் பிச்சை. இங்கு யாருக்கு யார் பிச்சை போடுகிறார்கள் என்ற வட்டத்தில் சிக்கயே மனிதர்கள் வாழ்கிறார்கள்.  நூலில் வருவது போல “நக்கித் தின்னும் நாயின் வாயை நக்கும் நாய்“.

ஒரு எதார்த்தவாத நாவல் என்பதைத் தாண்டி, மனிதனின் கருணையும் அன்பும் எல்லா இடத்திலும், எந்த ஒரு துன்பத்திலும் இருக்கும் என்பதை இந்நாவல் வாசிப்பு எனக்களித்தது. பண்டாரத்தின் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கும் போது, அவர் அதில் ஏமாறக்கூடாது என்று அகமது எண்ணி அவரிடம் அவனை நன்றாக விசாரிக்க சொன்னான். என்னதான் தன் முதலாளி தன்னை வைத்து  வியாபாரம் செய்தாலும், தன்னை அடிமையின் அடியில் வைத்து துன்புறுத்தினாலும், அவருக்கு ஒரு பிரச்சினை வரும் போது, அதை தாங்களும் ஏற்று மிகவும் வருத்தப்பட்டனர். மனிதனில் இந்த கருணை எவ்விடத்தில், யாரிடம் உதிக்கும் என்று சொல்லிவிடவும் முடியாது போல.

அன்புடன்,

பிரவின் 

ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு

ஏழாம் உலகம் -கடிதங்கள்

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.