மழையில் முளைப்பவை- கடிதம்

மழையால் மட்டுமே முளைப்பவை

அன்புள்ள ஜெ

மழையால் மட்டுமே முளைப்பவை பதிவு வெளிவந்து இன்றுடன் சரியாக ஓராண்டும் பதினொரு நாட்களும் ஆகிறது. இன்று யூடியூப்பில் சேர்த்து வைத்திருந்த பாடல் தொகுப்பை குலுக்கல் செய்து ஓடவிட்டேன். மழ கொண்டு மாத்ரம் பாடலில் சென்று நின்று விட்டது உள்ளம். மிக இனிமையான கவிதை பாடல். அந்த இசையே பிரதானமாக கவர்ந்திழுத்தது.

ஒருமுறை கேட்டவுடன் தளத்தை திறந்து பதிவை தேடி படித்தேன். உங்களுடைய கதை விளக்கத்தை பாடல் பொருத்தி ரசிக்கையில் தான் மோகன்லாலின் நடிப்பை உணர முடிந்தது. நீங்கள் சொல்வது உண்மை தான், பலரது முன்னிலையில் பல துண்டுதுண்டு காட்சிகளாக எடுக்கப்பட்டது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. தனிமை, பிரிவின் வெறுமை, காதல் ஊறிய மோகம், இறுதியில் பூக்கும் புன்னகை அற்புதமாக இருக்கிறது.

இந்த பாடல் காட்சி முழுக்கவே அவர்கள் இருவரது பாவமும் மிக இயல்பாக வந்துள்ளன. மீண்டும் இணைய முடியாத பிரிவின் ஏக்கம் காட்சிகளின் வழி மென்மையாக உணர்த்தப்படுகிறது. பின்னணியில் ஒலிக்கும் பாடற்கவிதை அதன் ஊக்கிரத்தை உணர்த்தி செல்கிறது.

அந்த பாடலை உங்கள் மொழியாக்கத்தில் வாசிக்கையிலேயே மலையாளம் தெரியாத என்னால் அதன் ஆழத்தை உணர முடிந்தது. இசையில் கேட்கையில் மலையாளமே இனிக்கிறது. குறிப்பாக இந்த, “வெறுதே பரஸ்பரம் நோக்கியிரிக்குந்நு நிற மௌன சஷகத்தினு இருபுறமும் நாம்” என்ற வரியெல்லாம் இசையோடு கேட்கையில் தான் மிக நெருக்கமாக உணர செய்கின்றன.

காலத்தின் நீரொலிகள் திமிறும் இந்தக் கரையில் நாம்

ஒரு மௌன சிற்பம் வனைந்து முடித்து

எதற்காகவோ பிரிகிறோம் இருளும் துயரத்துடன்

ஒரு கடலின் துடிப்புடன்

ஒரு சாகரத்தின் மிடிப்புமாயி ?

அவர்களது ஆழ்ந்த நேசத்தையும் சேரவியலா நிலையையும் காட்டும் கவித்துவமான பகுதியல்லவா இது. நேசித்து ஊடலால் பிரிந்து மீண்டும் சேரவியலா நிலையை அடையும் துயர்கொண்ட எவருக்கும் உரித்தான பாடல் இது.

அந்த பதிவின் கீழே உள்ள காணொளியில் காட்சிகள் இல்லாது தனித்து இசையோடு கேட்கையில் இடையே வரும் குழலோசையை பிரிவேக்கத்தை கூர்மையாக காட்டுகிறது. சொந்த கற்பனைகளை மீட்டிக்கொள்ள நல்ல துணை அது.

இந்த கடிதத்தை எழுத தொடங்குகையில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்தேன். அதில் ஒரு கேள்வியும் இருந்தது. என்னவென்றால் இப்போது நீர்ச்சுடர் வாசித்து கொண்டிருக்கிறேன். கிராதத்திற்கு பிறகு இந்நாவல் தான் இயல்பாக உள்நுழைய அதேயளவு தடை கொடுக்கிறது. அந்த வெறுமையும் சோர்வும் கொடுக்கும் அத்தியாயங்களை வாசித்த பின் இப்படியொரு பாடலை தேடி செல்கிறது மனம். கழுநீர்க்கரை பகுதி இன்று காலை நிறைவுற்றது. நகுலனின் பார்வையில் விரியும் காட்சிகள் மைந்தர் துயரை காட்டி செல்கிறது. அத்தனை துயரிலும் கிடைக்கும் சிறிய இனிமைகளை அவன் தவறவிடுவதில்லை.

மனித அகத்தின் ஒருபகுதி எந்த துயரிலிருந்தும் எவ்வண்ணமேனும் விடுபடவே விரும்புகிறது. துயரிலிருந்து விடுபட துயர் தருவனவற்றை தூர விலக்கி நிறுத்த வேண்டியிருக்கிறது. அதற்காகவே இந்த நீர்க்கடன் தரும் அத்தனை சடங்குகளையும் இயற்றி கொள்கிறோம் என தோன்றுகிறது. அவர்களை குறித்த பாடல்களையோ அல்லது அவர்களது நினைவை ஏற்படுத்தும் பாடல்களை கேட்பது எல்லாமே புறத்தில் உள்ள பிறவற்றோடு அந்நினைவுகளை கலந்து நம்மிலிருந்து அவர்களை விலக்கி பார்ப்பதற்காக தான். என் அகத்தே வளரும் புனைவுலகமான நீர்ச்சுடரின் ஒரு நுனியே ஏங்கும் இனிமையை சொல்லும் இந்த பாடலை தேர்ந்தெடுத்தது போலும்.

அன்புடன்

சக்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.