Jeyamohan's Blog, page 824
February 21, 2022
கதைகள், மனிதர்கள்
வணக்கம். தங்களின் எண்ண எண்ண குறைவது கதை வாசித்தேன்.. எங்களின் வாசிப்பு அப்டேட் குழுவில் பகிர்ந்துக் கொண்டேன். ஒரு சிறுகதை வாசித்தேன்.. தலைப்பு எண்ண எண்ண குறைவது …தலைப்பே கவித்துவமும் தத்துவமும் நிறைந்துள்ளது.. தனது பணியை முழுமையாக முடித்து விட்டதாக எண்ணும் ஒரு ஆளுமை தற்கொலைச் செய்து கொண்டதைப் பேசும் படைப்பு.. தற்கொலையை இழிவாகப் பேசும் அதே நேரம் நம்மிடம் இருந்த வடக்கிருத்தல், ஜல சமாதி போன்றவைகளைப் பெருமை பேசும் நமது பழக்கத்தை கதை ஓரிடத்தில் சுட்டுகிறது.
மரண வீட்டில் அதிகபட்சமாக நாம் பேசும் இறப்பு பற்றிய பேச்சு இறந்த மனிதனின் பெருமைகளைச் சிறிது நேரம் பேசுவதுதான். இறக்கும் முன் ஒருவரின் மனம் எப்படி செயல்பட்டது, என்ன பேசினார், அவரை மரணம் எப்படி தன்னை நோக்கி வர தயாரித்தது என்பது பேசப்படல் முக்கியமல்லவா… ஏன்… மரணம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு எப்படி முக்கியமோ அவ்வளவு முக்கியமாச்சே.. இது போன்ற இறப்பு சிந்தனைகளை இந்த கதை நுட்பமாக விவரிக்கிறது.. ஜே கே குறிப்பிட்ட காலத்திற்குப் பின் எழுதுவதை நிறுத்தினார்.. தெளிவான முழுமையான வாழ்வு பார்த்தவர் எடுக்கும் முடிவுகள் மிக கறாரானவை… இதுவரை தான் வாழ்ந்தது போதும் என ஒருவர் முடிவு எடுக்கிறார் எனில் அவரிடம் எத்தனைத் தூரம் தெளிவும் முழுமையும் உறவாடி இருக்கும்..தானே தனக்கொன்றை நிகழ்த்திக் கொள்ளல்.. அல்லது நிகழத் தயாராதல்… குரூட்ஜிப் தனக்கொரு மோசமான வாகன விபத்தை நிகழ்த்திக் கொண்டது எண்ணத்தக்கது.
என்னதான் முயற்சித்தாலும் முதுமை நெருங்க நெருங்க நாம் காலத்தால் பின்தங்கி போவோம் என்பதை பேசுகிறது… காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்தாலும் அதில் அவரின் முதுமை நிழலாடும்… ஒரு மனிதனின் ஆயுளை விட அவரது சிந்தனையின் ஆயுள் குறைவு.. அதனால் அவர் இருக்கும் போதே தனது சிந்தனை அழிவதைக் காண்பார்.. இவைகளைக் கதை பேசிச் செல்கிறது…இந்த கதை ஜெயமோகன் அவர்களுடையது..
முத்தரசு
வேதாரண்யம்
அன்புள்ள ஜெ
நூறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நூலாக வரும் என நினைத்து காத்திருந்தேன். இப்போது ஒவ்வொன்றாக இணையத்திலேயே வாசிக்கிறேன்
இந்தக்கதைகளிலுள்ள நிஜ ஆளுமைகள் பற்றிய கதைகள்தான் என் ஆர்வத்தை தூண்டுகின்றன
ஜெயகாந்தன்
எம்.கோவிந்தன்
ஓ.வி.விஜயன்
புதுமைப்பித்தன்
சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளை
மதுரை சோமு
ஜான் ஆபிரகாம்
என பல முகங்கள். எந்தக்கதையில் எவர் என ஊகிப்பதே ஓர் அரிய அனுபவமாக இருந்தது
செந்தில்நாதன்
நதி – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
நலம் தானே..
சாம்பலைக் கரைத்த கையோடு நீரொழுக்கில் துக்கங்களையும் கழுவிடத்தானே இந்த நதியினூடான சம்பிரதாயங்கள்.
சாவு வீட்டின் சாங்கியங்கள் சத்தமில்லாமல் நடைபெறும்போது பறையின் மெல்லிய கார்வை நம் இதயத்தை பிரதிபலிப்பதுதானே. எங்கிருந்துதான் வருகிறதோ செவ்வந்திப் பூக்களுக்கு அத்தனை சாவு வாசனை.
கதைசொல்லிக்கு அந்த சுடப்படாத மண்பானை சென்று கரையும் காட்சி அவனின் ஆழ்மனதில் படிந்தே இருக்கிறது. அதன்பொருட்டே அவன் மனம் எந்தவித சலனமுமின்றி வெற்றுடம்பைப்போல் வெறித்தே இருக்கிறது. சாவு அத்தனை நிர்ச்சலமானதா?
“வைத்தியர் ஓர் ஓட்டுத்துண்டால் குழியின் உள்ளிருந்து எரிந்து வெண்மையான எலும்புகளை லாவகமாக இடுக்கி எடுத்து, தயாராக வைத்திருந்த புதிய மண்பானைக்குள் போடுகிறார்“
நன்கு எரிந்த எலும்புத் துண்டுகள் ஓட்டுச் சட்டியில் எடுக்கும்போது மாவுபோல குழைவு கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இறையை நோக்கிய மானுடத்தின் குழைவு அல்லவா மரணம்.
கதைசொல்லியின் மனம் பால்யத்தை அசைபோட்டவாறு பால்யத்தைக் கடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. தன்னோடு துள்ளிக் குதித்திட்ட ஆறு அந்நியமாகிப் போயிருந்தது. அம்மா இல்லாத வீடு வீடாகவே இருப்பதில்லை அகத்திலும், புறத்திலும்.
இனியொரு பால்யம் மீள தன் பிள்ளைகளின் வழியாகவே , அவ்வண்ணமே அந்த ஆற்று நீரை மீட்டெடுக்க முடியும் அவனால். எவராலும்.
அம்மாவைக் கிடத்தியிருந்த இரவு அப்படியொரு எடை கொண்டிருந்தது சமீபத்தில். சாக்கட்டிகளோடவே வாழ்ந்து தீர்ந்த ஆசிரியை. முற்றத்தை மூன்று முறை பெருக்கிடும் அவளுக்கு இன்று ஒழுங்கில்லா காலணிகளைக் கண்டால் கண்டிப்பாக கோபம் வந்திருக்கும். அப்பா தன்னையறியாமல் சொல்லிக்கொண்டே இருந்தார் ‘ இவ்ளோ நேரம் உறங்கிக்கிட மாட்டாளே’.
இரவின் எடை
நெடிய வாசலில்
ஓயாமாறி ஊதுவத்திகளோடு
வீடே மணத்துக்கிடந்தாள் அம்மா.
கிர்ரென்ற மௌனமான முனகலோடு
அந்த இளைப்பாறுதல் படுக்கை கண்ணாடிகளால்
அமைக்கப்பட்டதாய் சில்லிட்டுக்கிடந்தது.
தூதனின் வரவை முந்தாநாளே கட்டியங்கூறியிருந்தது
அழுதுகொண்டே இருந்த பிரவுனி.
வாசலில் ஒழுங்கில்லா கலைவுகளோடு
காலணிகள்.
சிறு தூசியையும் பொறுக்காத
அம்மாவைச் சுற்றி
சாவுப்பூக்களின் உதிர்ந்த இதழ்கள்.
நட்சத்திர மீன்களோடு
சண்டையிட்டுக்கொண்டிருப்பாள் இந்நேரம். இங்கே
சுவரோரம் உயிரற்று சிலைத்துப் போயிருந்தது
அம்மாவின் தையல் மிசின் சக்கரம்.
இந்த இரவு கடந்துவிட வேண்டும்;
எடை தாளமுடியாத இரவின் அகால
நிலவுகள் வாயுமிழத் தூண்டுகின்றன.
அன்புடன்,
இ. பிரதீப் ராஜ்குமார்
நதி- கடிதம்
நினைவுகளை அசைபோடுதல்
அன்பு ஜெயமோகன்,
முதலில் ஒரு அவசியக் குறிப்பு. சக்திவேல், சத்திவேல் போன்ற பெயர்களால் நேரும் குழப்பங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். அதனால் இனி முருகவேலன் எனும் பெயரிலேயே எழுத முடிவு செய்திருக்கிறேன்(வரலாற்றுத் திருப்பம்?).
அருண்மொழி அக்காவின் நூல் வெளியீட்டு விழாவில் அவரது உரையைத்தான் முதலில் கேட்டேன். சாரு, யுவன் சந்திரசேகர் மற்றும் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகளைக் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து விட்டுப் பேசத் தொடங்கினார். தான் ஏன் அபுனைவைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணத்தையும் கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து, தனது முன்னோடிகளை அழுத்தமாய்க் குறிப்பிட்டுப் பேசினார். நினைவுகளைத் தான் எழுத உந்திய ஆக்கங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
சொற்பொழிவாளர் என்றாலே முகம் சிடுசிடுத்தே இருக்கும். குரலில் வலிய வரவழைத்த செயற்கைத்தனம் இருக்கும். அதனால் சொற்பொழிவுகள் என்றாலே காத தூரம் நகர்ந்து விடுவேன். இலக்கியச் சொற்பொழிவாளர்கள் பலரிடமும் எனக்கு அதே அனுபவம்தான். அருண்மொழி அக்கா சொற்பொழிவாளர் இல்லை என்பதோடு தன்னைத் தனித்துவமாய்க் காட்ட எத்தனிக்கும் பேச்சாளரும் இல்லை. அதனால் பயமின்றிக் கேட்க முடிந்தது.
அக்காவின் முகமும் குரலும் இளங்கல்லூரி மாணவியின் தொடர் கூச்சத்துக்கு இணையானதாக இருந்தது. யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை என்பதைப்போல அவர் பேசிக்கொண்டே சென்றதுதான் எனக்குப் பிடித்திருந்தது. நாட்டியமாடுகிறாரோ எனும் அளவுக்கு சில கணங்களில் அவரின் முகச்சுழிப்புகளும், கர அசைவுகளும்.
உங்களுக்கு நேர்மாறான உற்சாக உடல்மொழி. அதுதான் அக்கா என நினைத்துக் கொண்டேன். அப்படி இருக்கவே விருப்பமும் கொள்கிறேன்.
குமரகுருபரரின் மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் பற்றிப் போகிற போக்கில்தான் அக்கா குறிப்பிட்டார். ஆனால், அது அவரை எவ்விதம் பாதித்திருக்கிறது எனும் உணர்வை நிச்சயம் தனி உரையாகச் சொல்லுமளவுக்குத் தகவல்களை வைத்திருப்பதாக நினைக்கிறேன். அதை அவரின் விழிப்பரவசத்தில் என்னால் உணர முடிந்தது.
அக்கா பேசிக்கொண்டிருந்த போது என் தங்கை(சித்தியின் பெண்) இயல்பாய் நினைவுக்கு வந்தாள். இருமுறை அவளை அடித்திருக்கிறேன். சிறுவயதில் அவள் முதுகில் ஓங்கிக் கடுமையாய்க் குத்தியும், பெரியவளான பின் முகத்தில் வேகமாய் அறைந்தும் இருக்கிறேன். அடிக்கும் முன் எனக்கு எவ்விதக் குழப்பமும் இருக்காது. ஆனால், அடித்த பின்பு ஒருவித குற்றவுணர்வு என்னில் கவியத் துவங்கும். சென்றவாரம் ஒரு மத்திம வயதுடையவர் தனது பெண்ணை ஓங்கி அறைந்த இடத்தில் நான் இருக்க வேண்டியதாயிற்று. திடும்மென குழப்பமும் குற்ற உணர்வும் என்னைச் சூழந்து கொண்டது. நினைவுகள் மனதைக் குறித்த ‘அறிவியல் கணக்குகளையும்’ மீறி நம்மில் கிளைத்து விடுபவை. அவற்றோடு வாழ்வதும் சிரமம்; அவை இல்லாமல் வாழ்வதும் கொடுமை.
நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதன் ஊடாக ஒருவன் அவனையே குறுக்கு வெட்டாகப் பார்க்கிறான். சிலநேரங்களில் அவனே எதிர்பாராத ’அவன்களை’ அவன் கண்டுகொள்ளவும் நேரிடுகிறது. சிரிக்கும் அவன், வெறுக்கும் அவன், கனிந்த அவன், சினந்த அவன், வன்மம் மிகுந்த அவன், அமைதி மிளிரும் அவன், அழும் அவன், ஆனந்தப்படும் அவன், வாழத்துடிக்கும் அவன், மரணத்தை நேசிக்கும் அவன், ஒன்றுமே புரியாத அவன், மாய அவன், நிஜ அவன், காதலிக்கும் அவன், கொல்லத்துடிக்கும் அவன், அவனைப் போன்ற அவன், அவனல்லாத அவன் என எத்தனையோ ’அவன்களை’க் கொஞ்சம் நிதானித்துக் கவனிக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் கண்டுகொள்ள இயலும்.
நினைவுகளை அசைபோடுதல், புனைவுக்கான களம். அபுனைவுத்தளத்தில் நினைவுகள் கண்ணாடியில் முகம் பார்ப்பது போன்றது. புனைவிலோ, உள்ளங்கையில் முகம் பார்ப்பது போன்றது. எனக்கு உள்ளங்கையில் முகம் பார்ப்பதே விருப்பமானது. கண்ணாடியில் முகம் பார்த்த அக்காவின் பேச்சில் எனக்கு உள்ளங்கை முகமே ஒளிர்ந்தபடி இருந்தது.
முருகவேலன்
கோபிசெட்டிபாளையம்.
சுவரில் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இங்கு பெங்களூரு பசவனகுடியில் வித்யார்த்தி பவன் என்று ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது. மசால் தோசை பிரசித்தம். பெரும்பாலும் கூட்டம் நிரம்பி வழியும். மற்றவர்களுக்கு எப்படியோ, மசால் தோசையை விட எனக்கு அந்த ஹோட்டலின் சுவர்கள் மிகவும் பிடிக்கும். கன்னடத்து இலக்கியவாதிகள் அனைவரும் ஓவியங்களாக சுவர்களை அலங்கரித்து இருப்பார்கள்.
‘இலக்கியம் சோறு போடுமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் சோற்றால் நிரப்ப முடியாத ஓரிடத்தை இலக்கியம் நிரப்பும்’ என்ற உங்களின் வார்த்தை நினைவுக்கு வரும்.
இலக்கிய ஆர்வலர்கள் யாவருக்குமான முன்னுதாரணம். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே சார்ந்திராமல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அன்பர்கள் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தங்கள் அபிமானத்தை இப்படியாகவும் வெளிப்படுத்தலாம்.
அன்புடன்
அ. ராஜ்குமார்
அன்புள்ள ஜெ,
சுவரில் என்ற கட்டுரையை படித்து ஒரு நிறைவு உருவானது. உங்களுக்கு அறுபது அகவை நிறையும்போது ஒரு கௌரவம் அது. கவிக்கோ மன்றம் வாழ்த்துக்குரியது. என்னுடைய அறையின் சுவரில் உங்கள் படம் இருக்கிறது. படத்தால் என்ன? அது ஒரு ப்ரசன்ஸ். அது நமக்கு நம்முடைய சாராம்சமான சில விஷயங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
அரவிந்த்
February 20, 2022
கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2
(பேட்டி தொடர்ச்சி…)
ஜெயமோகன்: நான் பாரதியில் காணும் குறை அவர் இலட்சியவாதத்தில் திளைத்து மனிதனின் இருண்ட தளங்களை காணத் தவறிவிட்டார் என்பதே. கம்பன் அந்த இருட்டின் விசுவரூபத்தையும் பார்த்தார். யுத்தகாண்டம் அதற்கு ஆதாரம். இருட்டுத்தான் conflict-ஐ உருவாக்குகிறது. அதன்மூலம் ஒரு செவ்வியல் தன்மையை உருவாக்குகிறது. பாரதியின் ஒரு பக்கச் சார்பான ஆவேசம் ஒரு கற்பனாவாத (Romantic) கவிஞனாகவே நிறுத்திவிடுகிறது
பேரா.ஜேசுதாசன்: நான் கூறியதையே நீங்களும் சொல்கிறீர்கள். நான் கறுப்பை வெளுப்பால் சமநிலை செய்து கொள்ளுதலை மட்டும் கூறவில்லை. எல்லா விஷயங்களும் ஒன்றையொன்று சமநிலை செய்துகொள்ளுதலைப் பற்றிச் சொன்னேன். ஒன்றுகூட விடப்படக் கூடாது. எல்லாம் இருக்க வேண்டும். பாரதியிலே வெறும் இனிப்புதான்.
வேதசகாயகுமார்: நீங்கள் இசைப்பிரியர் முறைப்படி இசை படித்தவர். அதற்கான தூண்டுதல் என்ன?
பேரா.ஜேசுதாசன்: சரியாகச் சொன்னால் ஒரு வருடமும் பத்துமாதமும் நான் சங்கீதம் படித்தேன். அண்ணாமலை கழகத்தில் இசைவகுப்புகள் உண்டு. தமிழிசை இயக்கம் காலகட்டம் அது. பணமில்லாததனால் படிக்கவில்லை. பிறகு வேலை கிடைத்தபோது படிக்க விரும்பி வித்வான் இலட்சுமணபிள்ளையிடம் போய் கேட்டேன். தன் மாணவனை அனுப்பினார். என்னைவிட இளையவர். லட்சுமணபிள்ளை அவரை தன் மகனைப் போல வளர்த்து வந்தார். மிகவும் ஏழை. ஒரு விதவையின் ஒரே மகன். நான் தரும் சம்பளமும் அவருக்கு உதவியாக இருந்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்து சொல்லித்தருவார். வர்ணமும் கீர்த்தனையும் பாடும் இடம்வரை வந்தேன். நான் பாடியதைவிட கையையும் காலையும் ஆட்டியதே அதிகம் என்று இப்போது படுகிறது. அடுத்த வருடம் எனக்கு கல்யாணமாயிற்று. அத்துடன் அது முறிந்தது. நேரம் இல்லை பிறகு நானே படிக்க முயன்றபோது குரல் கெட்டுப் போயிருந்தது. வீணை படிக்க முயன்றேன். ஒரு வருஷமாகியும் சரளவரிசையைத் தாண்ட முடியவில்லை. இப்போதும் பாடுவேன். என் மனைவிதான் மெச்சவேண்டும். ஒரு காசட் கூட போட்டிருக்கிறேன். நாங்கள் இரண்டு பேரும் கேட்டு ரசிப்பதற்காக.
ஆனால் இசை ஆர்வம் இசை வெறி மதுரையில் ஒருமுறை ஒரு பிராமண கல்யாண வீடு. ஜி.என். பாலசுப்ரமணியம் கச்சேரி. பாலக்காடு மணி மிருதங்கம் சௌடய்யா வயலின், அழையா விருந்தாளியாகவே போய் உட்கார்ந்து கேட்டேன். அண்ணாமலையில் பெரிய பெரிய வித்வான்களையெல்லாம் கேட்க முடிந்தது. நானே நிறைய கிறிஸ்தவ கீர்த்தனைகள் எழுதி வைத்திருக்கிறேன்.
வேதசகாயகுமார்: ராஜரத்தினம் பிள்ளையை கேட்டது உண்டா?
பேரா.ஜேசுதாசன்: நிறைய, ஆனால் குடிக்காமல் வரவேண்டும். குடித்தால் எல்லாமே தலைகீழ். ஆனால் மேதை. ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். அண்ணாமலையில் இசையியல் பாடத்திட்டக் குழு கூட்டம். அதில் டைகர் வரதாச்சாரி தலைவர். பாடமாக எல்லா பாட்டுமே தெலுங்கு சமஸ்கிருதம் என்று வைத்தார்கள்.
ராஜரத்தினம் பிள்ளை குடித்துவிட்டு வந்தார் ‘ஏண்டா பாப்பாரப் பசங்களா தமிழ்க் காலேஜிலே தமிழ்ப்பாட்டு தமிழ் பாட்டு கிடையாதா? நான் பாடுகிறேன் முத்துத்தாண்டவர் பாட்டு, நீயும் உன்பாட்டைப் பாடு, எதுமேல் என்று பார்ப்போம் என்று கலாட்டா செய்தார். டைகர் பதறிப்போய் ‘சரி சரி விடும் பிள்ளை’ என்று சமாதானம் செய்து முத்துத்தாண்டவர் பாட்டை பாடமாக வைத்தார். அது ராஜரத்தினத்தின் மேதையை மட்டுமல்ல சுபாவத்தையும் காட்டுகிற சம்பவம், டைகர் அன்று பெரிய அதிகார மையம். ராஜரத்தினம் பிள்ளை எவருக்கும் பயப்படமாட்டார்.
ஆனால் எனக்கு ராஜரத்தினம் பிள்ளையைவிட திருவெண்காடு சுப்ரமணியம் வாசிப்புதான் பிடிக்கும். தம்பூரா சுருதிக்கு வாசிப்பார். ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான வாசிப்பு. ராஜரத்தினத்திடம் சங்கதிகள் அதிகம். அப்படியே கொட்டிக் கொண்டே இருக்கும். கற்பனையே செய்யமுடியாது. திருவெண்காடு அப்படியல்ல. சுகபாவம் அதிகம். மகுடி மிக நன்றாக வாசிப்பார். எனக்குப் பொதுவாக நாதசுரம் பிடிக்காது. அது ரொம்ப ஓசைபோடும் வாத்தியம். அதையே வயலின் போல வாசிப்பார் திருவெண்காடு.
ஆனால் எனக்கு மிகப் பிடித்தமான, என்னுடைய இசை மாஸ்டர் கிட்டப்பாதான். மத்திமம், உச்சம், மந்தாரம் மூன்றிலும் சரளமாக சஞ்சாரம் செய்கிற குரல் அவருக்கு. முறையாக சங்கீதம் படித்தவரே அல்ல. எல்லாம் பயிற்சியும் கற்பனையும்தான்.
திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளைவேதசகாயகுமார்: இப்போது இசை கேட்பதுண்டா?
பேரா.ஜேசுதாசன்: வீணை விரும்பிக் கேட்பேன். காயத்ரி வாசிப்பு பிடிக்கும்.
வேதசகாயகுமார்: லட்சுமண பிள்ளையிடம் பழக்கம் உண்டா ?
பேரா.ஜேசுதாசன்: அறிமுகம் உண்டு. அருமையான கீர்த்தனைகள் எழுதியவர் (பாடுகிறார்)
‘நீயே துணை என்று
நாயேன் அடுத்து வந்தால்
தாயே ரட்சிக்க வேண்டுமே’
வேதசகாயகுமார்: ஆனால் அவர் சரியாக கவனிக்கப்படவில்லை இல்லையா?
பேரா.ஜேசுதாசன்: ஆமாம் அதற்குக் காரணம் முக்கியமாக பிராமண ஆதிக்கம். ஏழை சொல் அம்பலமேறுமா?
வேதசகாயகுமார்: தஞ்சை ஆபிரகாம் பிரகாம் பண்டிதரும் புறக்கணிக்கப்பட்டவர்தானே?
பேரா.ஜேசுதாசன்: பெரியமேதை. சுருதி 22 என்பது வழக்கம். பண்டிதர் 24 என்பார், வாசித்தும் காட்டுவார். கர்ணாமிர்த சாகரம். ஒரு பெரிய கலைக்களஞ்சியம் மாதிரி. நான் முழுக்கப் படித்ததில்லை. அவர் கிறிஸ்தவர். உதாசீனம் செய்யப்பட்டார். ஆனால் ஜேசுதாஸ் வந்திருக்கிறார். எல்லாருமே பாராட்டுகிறார்களே….
ஜெயமோகன்: அவர் பிரபலமான பிறகுதான் கர்நாடக இசைக்குள் வந்தார். நெய்யாற்றின் கரை வாசுதேவன் ஈழவர். பெரிய பாடகர். யார் அவரை கவனித்தார்கள்?
பேரா.ஜேசுதாசன்: ஆமாம் அது ஒரு பெரிய சிக்கல்தான். கலையின் அதிகாரம். இசை இலக்கியம் மாதிரி இல்லை . உடனடியாக ரசிக்கப்பட வேண்டும்.
வேதசகாயகுமார்: உங்களுக்குப் பிடித்தமான இசைப் பாடலாசிரியர் யார்?
பேரா.ஜேசுதாசன்: கோபால கிருஷ்ணபாரதியார்தான். மன உருகிப் பாடியவர். ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் போகுதையே’ என்று எஸ்.ஜி. கிட்டப்பா பாடக்கேட்டு நான் அழுதிருக்கிறேன். கடவுளைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் அதிலே எப்படி வந்திருக்கிறது! எத்தனை ஆழமான வரிகள். கிட்டப்பா நிறைய சுவரப்பிரஸ்தாரமெல்லாம் செய்பவர். சற்று அதிகமாகவும் சற்று அதிகமாகவும் போய்விடுபவர். இந்தப் பாடலை மட்டும் ரசித்து ஒன்றிப் பாடினார். இதை அன்று என் சித்தப்பா (வேத சகாயகுமாரின் தாத்தா) கிராம போனில் காலையில் போடுவார்.
அதைக் கேட்டுத்தான் தூங்கி விழிப்பது. அருமையான பாட்டு. இப்போதும் காதில் ஒலிக்கிறது அது (முனகலாக பாடுகிறார்).
வேதசகாயகுமார்: பிறகு?
பேரா.ஜேசுதாசன்: பிறகு அருணாசலக் கவிராயர் ராமநாடகத்தை மிகவும் ஈடுபாட்டுடன் எழுதியவர். ‘ராமனைக் கண்ணாரக் கண்டானே விபீஷணன் கை மாமுடிமேல் வைத்துக் கொண்டானே?’ அற்புதமான பாட்டு அது. பிறகு முத்துத் தாண்டவர் பாட்டு.
வேதசகாயகுமார்: இன்று பாடுகிறவர்களின் வித்வத் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பேரா.ஜேசுதாசன்: இந்த வித்வத் பற்றியே எனக்கு ஒரு விஷயம் சொல்வதற்கு இருக்கிறது. வித்தை தேவைதான். அது முக்கியம் அல்ல. ராஜரத்தினம் பிள்ளையின் வித்வத் கடல்போல. திருவெண்காடு சாதாரணம்தான். ஆனால் தன்னுடைய ஆளுமையை (personality) இசையில் கொண்டு வந்தார். தன்னுடைய தனிப்பட்ட இசையை உருவாக்கினார். இதுதான் முக்கியம். வீணை தனம்மாளின் வாசிப்பு கேட்டிருக்கிறேன். அப்படியே உள்ளூர குடைந்து போகும். அது ஞானம் அல்ல, அதற்கும் மேலானது.
அ.கா. பெருமாள்: சித்தர் பாடல்கள் பற்றி என்ன எண்ணுகிறீர்கள். அவை கவிதைகள் அல்ல, புரட்சியாளர்களின் குரல்கள் மட்டும்தான் என்று சொல்லப்படுவதுண்டே?
பேரா.ஜேசுதாசன்: சித்தர்களில் எனக்குப் பிடித்த கவிஞர் சிவவாக்கியர். பிறகு பாம்பாட்டி சித்தர், அழுகுணிச்சித்தர். அவை கண்டிப்பாக உயர்வான கவிதைகள்தான். வேறுவகையான கவிதைகள். அவற்றின் அடிப்படைகள் வேறு, அவ்வளவுதான். பட்டினத்தாரும் எல்லாவகையிலும் சித்தர்தானே? மற்ற சித்தர்கள் மரபை பின்பற்றாமல் மக்களிடமிருந்து வடிவங்களை எடுத்துக் கொண்டார்கள். பட்டினத்தார் மரபான வடிவங்களில் எழுதினார். ஆனாலும் அவர் பாட்டு சித்தர் பாடலாகத்தானே இருக்கிறது? சித்தர் பாடல்களுக்கு தனியான மனோபாவமும் அழகியலும் உண்டு. வடிவம் முக்கியமல்ல.
ஜெயமோகன்: அந்த மன நிலையும் அழகியலும் கம்பராமாயணத்துக்கு நேர் எதிரானவையல்லவா? அணிகளில்லை. அப்பட்டமாக உள்ளன. பல சமயம் அதிர்ச்சியும் அருவருப்பும்கூட தருபவை அவை.
பேரா.ஜேசுதாசன்: அந்த ஆதாரமான உந்துதல் என்ன? அது கம்பனில் உள்ள அதே அறவுணர்ச்சிதானே? அந்த மன எழுச்சி ஒன்றுதானே? இரண்டும் இரண்டு கோணங்களில் பார்க்கின்றன, அவ்வளவுதான், கம்பன் எப்போதுமே பண்பட்டவன். அப்படி எப்போதுமே கவிதை இருந்தாக வேண்டுமென்பதில்லை. அந்த அக்கறை (concern)-தான் முக்கியமானது.
ஜெயமோகன்: சித்தர் பாடல்களில் கூட செவ்வியல் அம்சங்கள் உண்டு. ‘செய்ய தெங்கின் காயிலே நீர் வந்து உறைந்தது போல தன்னுள் ஈசன் வந்து உறைந்தான் என்பது போன்ற வரிகள்.
பேரா.ஜேசுதாசன்: கவிதையை எப்போதுமே முழுமையாக வகுத்துவிட முடியாதுதான்.
வேதசகாயகுமார்: உங்கள் ரசனையின் அடிப்படையே அறம் தானா?
பேரா.ஜேசுதாசன்: ஆம். அதுதான். கம்பனில்தான் அறம் என்ற குரல் ஓயாது ஒலிக்கிறது. கம்பனின் அறம் என்று சொன்னாலே எனக்கு மயிர் சிலிர்க்கிறது. எப்படிச் சொல்கிறான். அதை நீதி ஒழுக்கம் எல்லாவற்றையும்விட மேலானதாக மேலே தூக்கிவிடுகிறான். இந்தக் குரல் வேறு எந்தத் தமிழ்க் கவிஞனிடமும் இல்லை.
வேதசகாயகுமார்: உங்கள் தமிழிலக்கிய வரலாறு மிக முக்கியமான நூல், சுயரசனையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாறு அது. ஏன் அதை ஆங்கிலத்தில் எழுதினீர்கள்?
பேரா.ஜேசுதாசன்: தமிழில் எழுதினால் யார் படிப்பார்கள்? யாரும் கவனிக்க மாட்டார்கள். அப்படியே எழுதலாம் என் எண்ணினால்கூட யார் பிரசுரிப்பார்கள்? நாங்கள் எங்கள் புத்தகத்தை சொந்தப்பணத்தில் அச்சிட்டோம். 10 பிரதிகள் அதுகூட விற்கவில்லை. பாரதியின் குயில்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் போட்டோம். அப்போதுதான் ஓய்.எம்.சி.ஏயில் இருந்து S.P.அப்பசாமி அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு இலக்கிய வரலாறு எழுதும்படி சொன்னார்கள். பிரசுர வசதி கிடைத்தால் வேறு என்ன யோசனை? தமிழிலக்கிய வரலாறு என் ஆய்வுத் தலைப்பும்கூட ஏற்கனவே குறிப்புகளும் இருந்தன. எழுதிவிட்டோம். இப்போது அதன் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறோம். இரண்டு பகுதி வந்துவிட்டது. அடுத்தபகுதி எழுதிக்கொண்டிருக்கிறோம். இது கம்பனைப்பற்றியது. கம்பனைப்பற்றி எழுதி எழுதித் தீரவில்லை. எழுதுவதெல்லாம் இவள்தான்.
ஜெயமோகன்: இங்கு ஏற்கனவே பல வரலாறுகள் உள்ளனவே?
பேரா.ஜேசுதாசன்: நான் எழுதுவது வெறும் வரலாறு அல்ல. மதிப்பீட்டு வரலாறு எழுதும் முறை இது value added history.
ஜெயமோகன்: நவீன இலக்கியத்தில் யாரை மிகவும் பிடிக்கும்?
பேரா.ஜேசுதாசன்: சுந்தர ராமசாமி ரொம்பப் பிடிக்கும். அதற்கு அவருடனான நெருக்கமும் காரணமாக இருக்கலாம். அவரது கைக்குழந்தை என்ற கதை ரொம்பப் பிடிக்கும். மனைவி கணவனை கைக்குழந்தைபோல வைத்திருக்கிறாள். அது என் சொந்த அனுபவமும்கூட! அதில் பார்பரின் கத்திரி ஒலி. கிச்கிச்கிச்! கிளைமாக்ஸ் (சிரிக்கிறார்.)
ஜெயமோகன்: பிறகு?
பேரா.ஜேசுதாசன்: பிறகு புதுமைப்பித்தன், ஜானகிராமன், குப. ராஜகோபாலன்.
ஜெயமோகன்: மௌனி?
பேரா.ஜேசுதாசன்: இல்லை. எனக்கு மௌனியும் லாசராவும் பெரிய எழுத்தாளர்களாகப் படவில்லை. க.நா.சு.வின் ‘ஒரு நாள்’ பிடித்தமான நாவல்.
வேதசகாயகுமார்: புதுக்கவிதையை ஒரு வடிவமாக ஏற்பதில் உங்களுக்கு ஏதேனும் தடை இருந்ததா?
பேரா.ஜேசுதாசன்: இல்லை. மாறாக எனக்கு மாற்றம் தேவையாக இருந்தது. மேலும் சங்கப்பாடல்களின் ஆசிரியப்பா புதுக்கவிதை வடிவுக்கு மிக நெருக்கமானதுதான்.
ஜெயமோகன்: கர்நாடக இசையில் உள்ள முக்கியமான பம்சம் பக்தி (devotion). அதன் மன அமைப்பே பக்தி சார்ந்தது. இன்றைய நவீன காலகட்டத்துக்கு களியாட்டம், உக்கிரம் என்று பல மனநிலைகளுக்கு இசை தேவைப்படுகிறது. இதை அளிக்கும் தன்மை கர்நாடக இசைக்கு உண்டா?
பேரா.ஜேசுதாசன்: நம் இசை அப்படி பக்தி சார்ந்தது அல்ல. ராகங்கள் ஒலியின் அமைப்புகள்தான். அன்று பக்திக்கு ஏற்ப இசையை எடுத்து ஆண்டார்கள். அன்றையத் தேவை அது. இன்றையத் தேவைக்கு ஏற்ப அதை எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் ஒன்று, அது கௌரவமானதாக (டீசன்ட்) இருக்க வேண்டும். பாவம் தவறாததாக இருக்க வேண்டும். இது என் ஆசை. உண்மையான தேவையான மாற்றம் என்றால் வரவேற்க வேண்டியதுதான்.
ஜெயமோகன்: பொதுவாக வயதானவர்களிடம் உரையாடும்போது ஒரு சிக்கல் உள்ளது. அவர்கள் அறம், ஒழுக்கம் சடங்குகள், பழைய வாழ்க்கை முறைகள் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஆகவே புதிய காலகட்டமே அதர்மம் மிக்கது என்று எண்ணுகிறார்கள்…
பேரா.ஜேசுதாசன்: அறம் மாறாதது. நித்யமான மதிப்பு அது. அதை இலட்சியமாகக் கொண்டு உருவாக்கப்படும் வாழ்க்கை முறைதான் ஒழுக்கம் என்பது. அது மாறக்கூடியது. மாற்றுவது அறத்துக்கும் வாழ்க்கைச் சந்தர்ப்பங்களுக்கும் இடையே உள்ள உறவு தான். அறத்துடன் முரண்படும் ஒழுக்கம் தேவையற்றதுதான். அறம் எப்போதுமே கருணையிலும் அன்பிலும் சமத்துவத்திலும் வேரூன்றியது. அதுபோல நாம் சடங்குகளையும் அறத்துடன் சம்பந்தப்படுத்துகிறோம். அர்த்தமற்று பேணப்படும் ஒழுக்கம்தான் சடங்கு. அவற்றுக்குத் தேவையே இல்லை.
ஜெயமோகன்: உதாரணமாக விதவை மறுமணம், தனிநபர் சுதந்திரம் போன்ற விஷயங்கள். நேற்று அவை பெரும் பாவமாகவோ அதிகப் பிரசங்கித்தனமாகவோ கருதப்பட்டிருக்கலாம். இன்று சகஜமாக ஏற்கப்படுகின்றன.
பேரா.ஜேசுதாசன்: ஒழுக்கங்களை அறம் மீறிச்செல்லும். மீறப்படவே கூடாதது என்று வெகு சிலதான் உள்ளன. அடிப்படையான அறம்தான் முக்கியம். என் மகனுக்கு எங்களைவிட மிகத் தாழ்வாகக் கருதப்பட்ட சாதியிலிருந்துதான் பெண் எடுத்தோம். அதன் விளைவுகளை அவனுக்கு எடுத்துக் கூறினேன். சாதி வித்தியாசம் வெறும் சடங்குதான்.
ஜெயமோகன்: நீங்கள் தீவிர கிறித்தவர். இரண்டு கிறிஸ்துக்கள் உள்ளனர். ஒருவர் பாதிரிமார்களால் முன்வைக்கப்பட்டு பிரசாரம் செய்யப்படும் ஒரு மத அடையாளம். இன்னொருவர் மனிதகுலத்துக்கு மொத்தமாக கருணைக்கும் தியாகத்துக்கும் குறியீடாக ஆகும் தல்ஸ்தோயின் கிறிஸ்து. இடைவெளி அதிகம் தெரியாது; ஆனால் மிக முக்கியமானது அது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பேரா.ஜேசுதாசன்: மதம் எப்போதுமே சடங்குகள் மரபுகள் எல்லாம் கலந்ததுதான். கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக சிலுவையில் ஏறவில்லை. அவர் மனித குலத்துக்காகவே மரித்தார். அவர் மதங்களையெல்லாம் மீறியவர். பரிபூரணமானவர். பாவத்திலிருந்து மனிதனை மீட்பதுதான் கிறிஸ்துவின் பிறப்புக்கும் மரணத்துக்கும் நோக்கம். ஒரே கடவுள்தான். அக்கடவுள்தான் தன் குமாரனை பூமிக்கு அனுப்பி மனிதர்களுக்கு பாவத்திலிருந்து மீளும் வழியை காட்டியது. கிறிஸ்து நமக்காக மரித்தார். அதுதான் என் நம்பிக்கை. பாவத்திலிருந்து கிறிஸ்துவின் வழியாக நாம் மீளமுடியும். நான் சொல்ல நினைக்கும் முக்கியமான செய்தி அதுதான்.
– சொல்புதிது, இதழ் 2002
வெள்ளையானை-கடிதம்
நாவலின் பெயரை நண்பர் ஒருவரின் பதிவில் முதலில் பார்த்ததும் “அடர்ந்தகாடு… அதில் நிறைய யானைகள்.. ஒன்று மட்டும் கொம்பன் போல வெள்ளை யானை…” இப்படியாக என் கற்பனை குதிரையை ஓட்டிக்கொண்டேன்.
சில நாட்களுக்குப் பிறகு நம் கதைசொல்லி பவா செல்லதுரை’யின் பெருங்கதையாடலில் எதேச்சையாக வெள்ளை யானை காதில் விழ கவனம் சிதறாமல் கேட்கத் தூண்டியது. அப்போது நம் கற்பனை குதிரை தவறான பாதையில் ஓடியிருப்பது தெரிந்துவிட்டது. ஏனெனில் நாவலின் கரு நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.
ஆர்வ மிகுதியால் முதலில் சொன்ன அதே நண்பரிடம் புத்தகத்தை இரவல் பெற்று படிக்கத்தொடங்கினேன்.
424 பக்கங்கள்.. அதிகபட்சம் 3 நாட்களில் படித்து முடித்திருக்கலாம். ஆனால், முதன்முறையாக என் மகன்களோடு இந்த புத்தகத்தை படித்ததால் இதை படித்து முடிக்க ஒரு மாதமாகிவிட்டது. என் மகன்களுக்கு கதை புரியவில்லை. ஆனாலும் வெள்ளை யானை என்ற நாவலின் பெயர் பரிச்சயமாகிவிட்டது.
இங்கே வெள்ளை யானை என்பது சிங்காரச் சென்னையின் முக்கிய பகுதியாம் ஐஸ் ஹவுஸின் இருண்டகதை.. வெள்ளை நிறப் பனிக்கட்டிகளின் கதை… அங்கே முக்கால் நிர்வாணத்துடனும், உடலில் புண்களுடனும் வேலை செய்த அடிமைக்கூட்டத்தின் கதை… அந்த வெள்ளைப்பனியில் உறைந்து அழிந்த பல கூலிகளின் கதை…
வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தியதால் அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். அவர்களில் மேம்பட்ட மனசாட்சியும், பண்பாடும் நிறைந்தவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதற்கு சாட்சி தான் “ஏய்டன்”.
ஏய்டன் என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இளைஞன் வசதி குறைவான குடும்பச் சூழலிலிருந்து வளர்ந்து படிப்படியாக உயர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பாளராகப் பதவி வகிக்கிறான். அப்படி அவன் பொறுப்பில் இருக்கும் மதராசின் ஒரு பகுதியில் தாழ்ந்த சாதியைச் சார்ந்த ஒரு தம்பதியினரை நீலமேகம் என்ற உயர் சாதியை சார்ந்தவன் சவுக்கால் அடித்து வெளுக்கிறான். பிரிட்டிஷ் வழக்கப்படி யாரையும் சவுக்கால் அடிப்பது தவறான செயல். ஆனால் அப்படிப்பட்ட செயலை குதிரையில் வலம் வரும்போது நேரடியாக பார்த்ததும் ஏய்டன் நீலமேகத்தை கண்டிக்கிறான். உன்னிடம் அடி வாங்கிய அந்த ஏழைகளை தொட்டு தூக்கு என்கிறான். ஆனால் நீலமேகம் ஏய்டனின் ஆணையை மீறி தன்னுடைய சாதி கௌரவமே முக்கியம் என்று தொட மறுக்கிறான். இங்கிருந்து தொடங்குகிறது நாவல்.
அந்த தம்பதியினர் சவரி ராயனும், அவன் மனைவியும் தான்… எதேச்சையாக நம் வீட்டின் ஃப்ரிட்ஜை திறக்கும் போது கூட சட்டென்று வீசும் குளிர் காற்றில் சவரியும், அவன் மனைவியும் ஐஸ்ஹவுஸ் கூலிகளும் கண்முன் வந்து செல்கின்றார்கள்.
அவர்களுக்கு நீதி கிடைத்ததா? அவர்கள் என்ன ஆனார்கள்? இதில் ஏய்டனின் பங்கு எத்தகையது? இதுவே நாவலின் மிச்சக்கதை.
ஏய்டன், துரை சாமி, நீலமேகம், காத்தவராயன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, சாமி, ஜோசப், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ், என்று பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த நாவலை நச்சென்று நகர்த்திச் செல்கின்றனர்.
என் போன்ற பலதரப்பட்ட மனிதர்களின் மனநிலையை ஆங்காங்கே தட்டி எழுப்பிவிடுவது நாவலின் தனி அம்சம்.
“நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.” – அயர்லாந்தில் அடிமைப்பட்டு வளர்ந்த ஏய்டனின் மனநிலை.“ஒரு தீண்டப்படாத தொழிலாளி கொல்லப்பட்டதற்கு விசாரணை வரும் என்றால் என்னுடைய நிர்வாக ஊழியர்கள் மனம் தளர்வார்கள்.” – ஐஸ்ஹவுஸில் பொறுப்பாளராக இருக்கும் பார்மரின் மனநிலை.“ஒரு மனிதன் இன்னொருவன் முன் அந்த அளவு சிறுமையும், தாழ்மையும் கொண்டு நிற்பதை அவன் கண்டதே இல்லை.” – காத்தவராயன் அய்யங்காரிடம் கெஞ்சுவதைப் பார்க்கும்போது ஏய்டனின் மனநிலை.“அச்சத்தால் மட்டும்தான் இந்தப் பெரும் கூட்டத்தை நாங்கள் ஆட்சி செய்கிறோம். அந்த அச்சம் அகன்றால் நாங்கள் இதன்மேல் அமர்ந்திருக்க முடியாது. இதோ இந்த எதிர்ப்பு சாதாரண விஷயம் அல்ல. மேல்சாதியையும் அரசாங்கத்தையும் எதிர்க்க முடியும் என்று இவர்கள் முதல்முறையாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது வனவிலங்குக்கு முதல் ரத்த ருசியைக் காட்டுவது போல. இதை இப்படியே விட்டால் பின் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இது உடனடியாக நசுக்கப்பட வேண்டும்.” – மனிதர்களை மனிதர்களாக எண்ணாமல் விலங்குகளாக எண்ணி வேலை வாங்கிவிட்டு கசக்கி எரியும் அய்யங்காரின் மனநிலை.பாலா படம் போல இந்த நாவலுக்கும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இல்லை.
ஆனாலும், ஆங்கிலேயனாக இருந்தாலும் சரி, நம்ம ஆளாக இருந்தாலும் சரி, பதவியில் இருக்கும் ஒருவன் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் நேர்மை தான் முக்கியம் என்று மனசாட்சியோடு பணியாற்றினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்/விமர்சிக்கப்படுவார்கள் என்பதை இந்த நாவலின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.
-ப. மோகனா அய்யாதுரை.
வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்
கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…
வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?
கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை
நதி –கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தளத்தில் வெளியிட்ட “நதி” என்ற கதை படிக்கும் போது என் நெஞ்சம் விம்மியது,அப்பா மரணம் நினைவில் நிரம்பியதால்.
இது கதை என்ற பெயரில் வெளியான சொந்த அனுபவம் என்பது படிக்கும்போது உணரலாம்.நமது கிராமங்களில் உள்ள ஹிந்து குடும்பங்களில் இப்போதும் இந்த சடங்குகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
குடும்பத்தில் மரணம் நடந்து சடங்குகள் குறையின்றி முடித்து கதையில் சொல்லப்பட்டதுபோன்று எரியூட்டியபின் சேமிக்கும் அஸ்தியும் சாம்பலும் நதியில் சமர்ப்பிக்கின்றோம்.
எத்தனையோபேர்களின் அஸ்தியும் சாம்பலும் தாங்கும் நதி அமைதியாக ஒழுகி கொண்டிருக்கிறது,எதுவும் நடக்காதது போல.
எல்லாவிதமான மனித திமிர்களையும் அடக்கிட ஆறு அறிவுள்ள மனிதனை இந்த கதை நினைவூட்டுகிறது.
இயற்கை அதுவே உண்மை,நிரந்தரம்.
அன்புடன்,
பொன்மனை வல்சகுமார்.
அன்புள்ள ஜெ
நதி கதையை வாசித்தேன். பல ஆண்டுகள் பழைய கதை. உங்கள் மொழிநடை மாறியிருக்கிறது. சாராம்சமான பார்வை அப்படியே இருக்கிறது. நீங்கள் இழப்பின் வலியை எழுதவில்லை. கடந்துசெல்வதிலுள்ள நிறைவை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கட்டுரைகளில் அடிக்கடிச் சொல்லும் ஒன்று உண்டு. நீங்கள் ஒரு பெரிய அலைச்சலுக்குப் பின் உங்களை மீட்டுக்கொண்டுதான் எழுத வந்தீர்கள். அந்த மீட்பு இந்தக்கதையில் தெரிகிறது
ஆர்.எஸ்.ராம்
இட்ட முத்தமும், நிறைந்த நடையும்
இனிய ஜெயம்
தமசோமா ஜோதிர்கமய என மெல்ல மெல்லப் பார்வை துலக்கம் பெறும் பரிணாம கதியை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். வலது கண்ணில் காட்சிகள் துலக்கிவிட்டன. இடது கண் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது எழுத்துக்களை ஸூம் போட்டு சிறு சிறு கவிதைகளை வாசிக்கிறேன்.
வாசித்தவதற்றில் இந்த இரண்டு கவிதைகள் நாளெல்லாம் தொடர்கிறது. முதல் கவிதை ‘திடீரென’ எனும் தலைப்பு கொண்ட இசையின் கவிதை.
அந்த ஸ்கூட்டிப் பெண்
திடீரெனக் குனிந்து
முன்னே நின்றிருக்கும்
தன் சின்ன மகனின் கன்னத்தில்
முத்தம் வைக்கிறாள்.
எதற்கு?
என்கிற வினாவை
அதற்குள் அவன் கற்றிருந்தான்.
எதுக்கும்மா?
எதுக்கும்மா?
என்று வழிநெடுக
நச்சரித்துக் கொண்டே வருகிறான் சிறுவன்.
சிரித்துச் சிரித்து
மழுப்புகிறாள்
அந்த அன்னை.
வாசித்த கணமே சட்டென மனதில் இக்கவிதை திறக்கும் கற்பனை வழிகளும், அகத்தை தொட்டெழுப்பும் உணர்வெழுச்சியும் அலாதியானது.
கவித்துவமாக முந்திக்கொண்டு எட்டிப்பார்க்கும் ஒரே ஒரு வார்த்தை கூட கிடையாது, மொழியால் வடிவத்தால் இன்று பல கவிதைகள் கொண்டிருக்கும் தாண்டுறா ராமா வித்தைகள் எதுவும் கிடையாது. ஸ்கூட்டிப் பெண் அன்னை என மாறும் கதி கண்டு, அத்தருணம் கவி உள்ளம் அடைந்த எழுச்சிக்கு சரி நிகர் நேர் நிற்கும் சொற்கள், வடிவம் வழியே வாசக உள்ளத்தைத் தீண்டி அவனைக் குழந்தையாக்கி ஏம்மா ஏம்மா என்று தவிக்கவைக்கும் கவிதை.
அடுத்த கவிதை ‘ மரணம், மரம் மற்றும் இயற்கை’ எனும் தலைப்பில் தேவதேவன் எழுதியது.
அவன் சிறிது சலிப்புடனேதான் தனது எளிய காலைநடையை
நழுவவிடலாமா என எண்ணினான்.
என்னையும் கொஞ்சம் நீ
கவனிக்க வேண்டாமா என இறைஞ்சியது உடல்.
இன்று கொஞ்ச நேரம் போய்வந்தால் போதுமல்லவா அன்பா !
போதும் போதும் தாராளமாக
என்றது உடல்.
எழுந்து நடந்தார்கள் வெளியே
இருவருக்கும் பிடித்தமாதிரி.
இன்று தாமதமாகிவிட்டது
காலைநடை.
அலுவல் நேரம் தொடங்கிவிட்டதால் வேகமாகிவிட்டது சாலை
பூங்காவில் நடை சென்று கொண்டிருந்த ஒரு சிலரினும் ஒரு சிலர் ?
வியத்தகு அந்த நடையினை அறிந்தவர்களாய்!
அப்புறம் ஓரமாய்
அவர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த
மரணத்தின் மரத்தடிப் பெஞ்ச் சென்று அமர்ந்தார்கள்
எவ்வளவு நேரம் அது ?
அங்கிருந்தும் எழுந்து நடந்தபோது
அவர்களோடே எழுந்து நடந்தது
அந்த மரணமும் மரமும் இருக்கையும்.
பௌத்தம் துவங்கி சித்தர் மரபு தொட்டு நவீனத்துவம் வரை யாக்கை நிலையாமை என்பது முக்கியக் கருப்பொருள். அவை கையாண்ட இக் கருவின் சாராம்சத்தைக் கலைத்து அடுக்குகிறது இக் கவிதை.
வடிவத்தால், கூறுமுறையால், உள்ளுறையால் யுவன் சந்திர சேகர், சுரேஷ்குமார் இந்திரஜித், போகன் போன்ற எழுத்தாளர்களின் குருங்கதைகள் போலும் தேவ தேவனின் நோக்காலும் மொழியாலும் அமைந்த கவிதை.
இக்கவிதை வாசித்த கணம் சட்டென நினைவில் எழுந்தது தால்ஸ்தோயின் இறுதிக் கணம்தான். அவரும் அவரது உடலும் இரண்டென்றாகி, போதும் அன்பா என்று இறைஞ்சிய உடலை பிளாட்பாம் பெஞ்சில் ஓய்வெடுக்க விட்டு விட்டு அவர் மட்டுமென ரயில் ஈறிவிட்ட தால்ஸ்தோயின் இறுதிக் கணம்.
அந்த சிலரிலும் சிலர் யார்? அவர்கள் மட்டுமே அறிந்த அந்த வியத்தகு நடை யாது?
உடல் கொண்ட போதும் உடன் நிற்கும் நடை, உடல் அற்ற போதும் தொடர்கின்ற நடை. நடப்பவர் ஓய்ந்த பின், ஓய்வு கொண்டவையுடன் அவர் கொள்ளும் நடை. இங்குள்ள அசைவன அசைவற்றன எல்லாமே கூடிச் சென்றுகொண்டே இருக்கும் ஓர் மாலை நடை.
முத்தமிட்ட அன்னையின் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி எட்டெடுத்து நடந்து நடந்து நாம் வந்து சேரும் மரணத்தின் மரத்தடி பெஞ்ச நோக்கிய பயணத்தைத்தான் நாம் வாழ்க்கை என்று பெயரிட்டு அழைக்கிறோமா?
புத்தக சந்தைக்கு இசை தேவ தேவன் கவிதைகளின் புதிய தொகுதிகள் வரவிருப்பதாக அறிகிறேன். கூடவே நமது நண்பர்கள் கவிஞர் ஆனந்த், கவி கல்பனா ஜெயகாந்த் போன்றவர்களின் முதல் கவிதை தொகுப்புகளும். நாளை வரும் யாரோ ஒரு வாசகர், யாரோ ஒரு எழுத்தாளருக்கு இந்தக் கவிகளின் கவிதைகள் குறித்து இப்படி எழுதிப் பரவசம் காணும் நிலை இப் புதிய கவிகளுக்கும் அமையட்டும்
கடலூர் சீனு
அருண்மொழி விழா -கடிதம்
அன்பு ஜெயமோகன்,
பனி உருகுவதில்லை நூல் வெளியீட்டு விழாவில் யுவன் மற்றும் சாருவின் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இருவரும் அருண்மொழி அக்காவின் எழுத்து தொடர்பான தங்கள் வாசிப்பனுபவத்தை நேரடியாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அவ்வாசிப்பனுபவங்களின் வழி படைப்புமொழி பற்றிய விளக்கமும் தன்னியல்பாய் மேலெழும்பி வந்திருந்தது. அதைப் பல வாசகர்கள் கவனித்திருக்கக் கூடும். கவனிக்கத் தவற விட்டவர்கள், மீண்டும் அவ்வுரைகளைக் கேட்டுப் பாருங்கள்.
மிகச்சமீபமாய் வாசிப்பு மொழி தொடர்பான ஒரு கடிதத்தை எழுதி இருந்தேன். வாசிப்பு குறுகலாக்கப்பட்டதாய் நான் உணர்ந்த காரணத்தினாலேயே, அதை எழுத வேண்டியதாயிற்று. ஒரு வாசகன் வாசிப்பு மொழியோடு, படைப்பு மொழியையும் புரிந்து கொண்டவனாகும் போது இலக்கியப் படைப்புத் தேர்வு எளிமையானதாகி விடும்.
அனுபவப்பகிர்வு எங்கே படைப்பாக மாறுகிறது என்பதைச் சாரு தனது உரையில் சில காட்டுகளோடு சொல்ல முயற்சித்தார். மேலும், படைப்பின் உள்ளடக்கத்தைப் போன்றே அதன் மொழியும்(உருவம்) முக்கியமானது என்பதை வலிமையாய் அவர் சொன்னதை வாசகர்கள் விளங்கிக்கொள்ள முற்பட வேண்டும். சமகாலப் புது எழுத்தாளர்களைத் தான் படிப்பதில்லை என வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொண்ட சாரு, அவர்கள் தன்னை வாசிக்கத் தூண்டும்படி எழுதவில்லை எனக்குற்றஞ் சாட்டினார். அக்கருத்தில் எனக்கு விமர்சனம் உண்டென்றாலும், அதில் உள்ளார்ந்து இருக்கும் படைப்பக்கறை கூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டியது.
பனி உருகுவதில்லை நூலை வாசிக்கப்போய் சாரு நிறைய உருகி இருக்கிறார். அந்த அளவில், நான் அதிகம் மகிழ்கிறேன்.
எழுதுவதற்குப் பிற ஆக்கங்களை வாசித்தாக வேண்டும் எனும் நிபந்தனை இல்லைதான். ஆயினும், முன்னோடிகளை வாசிப்பதன் வழியாகவே ஒரு வாசகன் இலக்கியப்படைப்பின் ஆகிருதியை ஓரளவேனும் நெருங்க இயலும். சாரு அதையே குறிப்பிட்டுச் சொல்கிறார்.
கடந்த இரு வருடங்களாக வலைக்காட்சிகளில் பலர் இலக்கியப்படைப்புகளைக் ’கதைகளாகச்’ சொல்லி வருகிறார்கள். சமகால அவசரச்சூழலில் இருக்கும் மனித வாழ்க்கைக்கு அது பயனுள்ளதுதான் என்றாலும், ‘கதை சொல்லல்’ ஒரு படைப்பைக் குறுகலாக்கி மலினப்படுத்தி விடுகிறது. கதைசொல்லிகள் இதைக் காலந்தாழ்ந்தாவது உணர வேண்டும்.
நவீன இலக்கியத்தைக் கதை சொல்லல் வடிவில் கொண்டு செல்வதை வீண் முயற்சி என நான் மட்டந் தட்டவில்லை. கதை வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே சரியானதாக இருக்கும் என ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கிறேன்.
வாழ்வின் நெருக்கடியான சூழலில் வெளிப்படும் மாந்த உணர்வுகளின் விசித்திரங்களை ஒரு சாதாரண மனிதன் அச்சத்தோடு நோக்குகிறான்; அரற்றுகிறான்; திமிறுகிறான்; வெளியே வரத் தவிக்கிறான். ஒரு இலக்கிய வாசகனோ அதிலிருந்து கொஞ்சம் விலகி நின்று கவனிக்க ஆரம்பிக்கிறான்; தன் அறிவுக்கு இதுவரை கிடைத்திராத வாழ்வுக்காட்சி என்பதாக அதைப் புரிந்து கொள்ள யோசிக்கிறான்; பிறருக்கு அது போல நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாமோ என்பது போன்ற திறப்புகளைச் சாத்தியப்படுத்துகிறான்.
தெளிவாகவே சொல்கிறேன். இலக்கியப் படைப்பு வாழ்வின் மர்மங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் நீதிச்சாசனம் அன்று. இதுகாறும் வெளிப்பட்டிராத அல்லது வெளிப்பட்டும் நாம் கண்டுகொள்ளாத மர்மங்களை அதன் அசல் தன்மையோடு நமக்குச் சொல்ல முயல்வதோடு இலக்கியப் படைப்பின் பணி நிறைவடைந்து விடுகிறது. அதை மேலதிகமான யோசிப்புக்குக் கொண்டு செல்வது வாசகனின் பொறுப்பு. அதனால்தான் இலக்கியப்படைப்பை வாசகனின் பிரதி என்று உறுதிபடச் சொல்கிறோம்.
முருகவேலன்
கோபிசெட்டிபாளையம்
February 19, 2022
கிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி
இந்தப்பேட்டி 11 ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிது சிற்றிதழை நானும் நண்பர்களும் நடத்திய காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. அசோகமித்திரன் “ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது.”. என்று அசோகமித்திரன் விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் இதைப்பற்றி சொல்கிறார்.
எண்பத்தி மூன்று வயதை நெருங்கும் பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் மரபின் சில உன்னதமான விஷயங்களின் குறியீடு. “பேராசிரியரின் வாழ்க்கை மானுட மேன்மைகள் மீது நம்பிக்கையை உருவாக்குவது” என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். அவரது எண்பதாம் பிறந்தநாள் விழா குறித்த செய்தி ஏற்கனவே சொல் புதிதில் வந்தது.
ஆசிரியராக மூன்று தலைமுறையினரின் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் பேராசிரியர். வையாபுரிப் பிள்ளை முதல் வேதசகாயகுமார் வரை நீளும் ஒரு தமிழறிஞர் மரபின் முக்கியமான கண்ணி. அதிகம் எழுதாவிட்டாலும் தன் இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் மூலம் எழுத்தாளர்களிடம் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியவர். உதாரணமாக நீல. பத்மநாபனின் ’தலைமுறைகள்’ எனும் நாவல் (அவரது முதல் நாவலும்கூட, அச்சில்) கைப் பிரதியாக பலரிடம் படிக்கத் தரப்பட்டது. சுந்தர ராமசாமி உட்பட பலர் அதைப் படித்தும் அதன் இலக்கிய முக்கியத்துவம் உணரப்படவே இல்லை. பேராசிரியரின் கவனத்துக்கு வந்தபிறகு அவரது முன்னுரையுடன் வெளிவந்தது. அதை க.நா.சு.வும் வெங்கட் சாமிநாதனும் தமிழ் இயல்புவாத எழுத்தின் முக்கியமான திருப்புமுனையாக அடையாளம் கண்டனர். சிறந்த தமிழ் நாவல்களின் மிகச்சிறிய பட்டியல்களில்கூட தொடர்ந்து இன்றும் இடம் பெற்றுவரும் அப்படைப்பு நாவல்களின் போக்கையே மாற்றியமைத்தது. ஆர்.ஷண்முகசுந்தரம் போன்ற பல படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்ட அந்நாட்களிலேயே அவர்களைக் கௌரவித்தது பேராசிரியரின் தலைமையிலான திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரித் தமிழ்துறைதான். பேராசிரியரின் மாணவர்கள் தமிழின் பலதுறைகளில் அழுத்தமான பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். அவரது மாணவரான ஏ.சுப்ரமணிய பிள்ளைதான் தமிழின் முதல் நவீன இலக்கிய முனைவர் ஆய்வைச் செய்தவர். புதுமைப்பித்தனைப் பற்றி நவீன இலக்கியங்களைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்த்து முன்னோடியானவரும் பேராசிரியரே. அ.கா. பெருமாள் (நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்), டாக்டர் பத்மநாபன் (இலக்கிய விமர்சகர்), ப. கிருஷ்ணசாமி (இலக்கிய விமர்சகர்), ராஜமார்த்தாண்டன் (இதழாளர், விமர்சகர்), எம். வேதசகாயகுமார் ஆகியோர் அவரது மாணவர்களில் முக்கியமானவர்கள்.
ஜேசுதாசன் அவர்களின் மனைவி ஹெப்சிபா ஜேசுதாசன் ‘புத்தம் வீடு’ ‘மாநீ’ ‘டாக்டர் செல்லப்பா’ முதலிய நாவல்களை எழுதியவர். தமிழ் இயல்புவாத நாவல்களில் முதல் வரிசையில் அவை வைக்கப்படுகின்றன. பேராசிரியர் தம்பதிகளின் மணவாழ்வு இரு ஆளுமைகள் கரைந்து ஒன்றாவது குறித்த நம் இலட்சியக்கனவு நனவானதன் அடையாளமாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பேராசிரியரின் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் பேராசிரியர் ஹெப்சிபா அவர்களின் பங்கு உண்டு. முதிர்ந்த வயதில், தன் கணவரின் கனவை நனவாக்கும் பொருட்டு, தமிழிலக்கிய வரலாற்றை எழுத அவர் மேற்கொண்டுள்ள உக்கிரமான உழைப்பு ஒரு வகையில் இதிகாசச் சாயல் கொண்டது. நம் சமீபகால வாழ்வில் எங்கும் ஒரு மனைவி தன் கணவனுக்காக இத்தனை பெரிய பரிசொன்றை உருவாக்கி அளித்ததில்லை.
இறந்தவற்றின் குவியலாக ஆன மரபு பயனற்ற சுமை. ஆனால் உயிர்த்துடிப்பான மரபு எல்லா புதுமைகளுக்கும் வலிமை சேர்க்கும் அடிப்படை உரம் ஆகும். அதை பேராசிரியருடனான உறவே என்னுள் ஆழப்பதிய வைத்தது. எந்த மாபெரும் நூலும் அதை கற்பித்திருக்க முடியாது என்று உணர்கிறேன். ஒரு மனிதர் தன் உச்ச நிலையில் மாபெரும் மதிப்பீடுகளின் வாழும் அடையாளமாக ஆக முடியும். அவர் வழியாக நம் இரண்டாயிரம் வருட அறிவியக்கமே நம்முள் மௌனப்பெரும் பாய்ச்சலாக ஊடுருவ முடியும் என்று அறிகிறேன்.
குமரிமாவட்டம் தெனவிளை கிராமத்தில் 1919-இல் பிறந்த பேராசிரியர் இப்போது தன் மனைவியின் கிராமமாகிய புலிப்புனத்தில் ஓர் ஆங்கில மழலையர் பள்ளி நடத்திவருகிறார்.
பேராசிரியர் ஜேசுதாசன், பேராசிரியர் ஹெப்சி ஜேசுதாசன், புலிப்புனம், தக்கலை (அஞ்சல்), குமரிமாவட்டம்.
(இப்பேட்டி 26, 27-10-2001இல் பேராசிரியரின் வீட்டில் எடுக்கப்பட்டது. முனைவர் அ.கா.பெருமாள், முனைவர் வேதசகாயகுமார், ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் சுப்ரமணியம், ஜெயமோகன், ப.சரவணன் ஆகியோர் பங்கு பெற்றனர்)
ஜெயமோகன்: வழக்கமாகத் தமிழ்ப் பேராசிரியர்கள் மரபிலக்கியத்தில் பயிற்சியும் ஆர்வமும் உடையவர்களாக இருப்பார்கள், நவீன இலக்கியம் மீது உதாசீனம் கொண்டிருப்பார்கள் நவீன இலக்கியவாதிகளுக்கு மரபிலக்கியம் ஏதோ தொல்பொருள் என்ற எண்ணம் இருக்கும். இதுதான் தமிழக நிலைமை. இருதளங்களிலும் ஆழ்ந்த வாசிப்பும் ரசனையும் உடையவர் நீங்கள்.
உங்கள் பார்வையில் இலக்கியத்தில் தொல்பழங்காலம் முதல் இந்தக் கணம் வரை தொடர்ந்து வரக்கூடிய பொது அம்சம் ஏதாவது உண்டா? இலக்கியம் என்ற சொல்லால் எப்போதுமே சுட்டப்படுவது என ஏதாவது உண்டா ?
பேரா.ஜேசுதாசன்: உண்டு. கண்டிப்பாக உண்டு. இன்றைய இலக்கியம் நேற்றைய இலக்கியம் என்பதெல்லாம் மிக மேலோட்டமான பிரிவினைகள்தான். எல்லா எழுத்துமே உடனடியாக நேற்றைய இலக்கியம் ஆனபடித்தானே இருக்கிறது? ஆழமாகப் பார்த்தால் இலக்கியம் ஒன்றுதான். ஏனென்றால் இலக்கிய அனுபவம் என்பது ஒன்றுதான். இலக்கிய அனுபவம்தான் இலக்கியம். பழைய இலக்கியமோ புதிய இலக்கியமோ அதில் சில நித்யமான விஷயங்கள் மையமாக உள்ளன. அதேபோல தமிழிலக்கியம் பிறமொழி இலக்கியம் என்ற பிரிவினையும் மேலோட்டமானதுதான். நமது பண்டிதர்கள் பழைய இலக்கியங்களைப் படிப்பவர்களல்ல; தமிழில் உள்ள குறிப்பிட்ட சில பழைய இலக்கியங்களை மட்டுமே படிப்பவர்கள். அவர்களுக்கு வெளியே ஆர்வமில்லை. ஏனெனில் வெளியே எதுவும் தெரியாது. ஏன் என்று கேட்டால் என்னால் தெளிவாகக் கூறமுடியாது. இலக்கியத்தின் நித்யமான அம்சம் அவர்களுக்கு பிடி பிடிகிடைக்காமல் இருக்கலாம் என்று மட்டும் சொல்வேன்.
என்னைப் பொருத்தவரை நான் தொடங்கியது மரபிலக்கியத்தில் தான். என் ஆசிரியர் கோட்டாறு குமாரசாமிப்பிள்ளை. குளச்சல் நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். அவர்தான் எனக்குக் கம்பராமாயணத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். என் மனதில் நுழைந்த முதல் இலக்கியம் கம்பராமாயணம்தான். அவர் கூறிய ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீபோய்
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழிவெங்கானம் நண்ணி புண்ணிய நதிகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டில் வா என்று ஓதினன் அரசன் என்றாள்
இந்தப் பாடலில் உள்ள அழகிய ஓசைதான் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகுதான் அதில் உள்ள உணர்ச்சியும் கருத்தும் மனதுக்குள் வந்தன. என் ஆசிரியருக்கும் நவீன இலக்கியம் மீது நம்பிக்கையெல்லாம் இடையாது. அப்போது ஆனந்த போதினி இதழ் வந்துகொண்டிருந்தது. அதைத்தான் எனக்குத்தந்து படிக்கச் சொல்வார். கடுமையான தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளும் கவிதைகளும் அதில் இருக்கும். எனக்கு அது புரியவில்லை. நான் ஆனந்த விகடன்தான் விரும்பிப் படித்தேன். கல்கி பிரபலமாக இருந்த காலம். கள்வனின் காதலி அப்போது தொடராக வந்தது. அதில் திருடனாக மாறிய முத்தையன் தன் காதலி வீட்டிலேயே திருடப்போக அவள் ‘முத்தையா நீயா’ என்று கேட்குமிடம் என்னை பெரிதும் கவர்ந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். மேலும் பல வருடங்கள் கழித்து திருவனந்தபுரம் நண்பர்களின் வழியாகவே தீவிர இலக்கியம் எனக்கு அறிமுகமாயிற்று. வெறும் உணர்ச்சி வெளிப்பாடு இலக்கியத்துக்குப் போதாது என்றும், உண்மையே மேலும் முக்கியமானது என்றும் புரிந்து கொண்டேன். இலக்கியத்தின் சாஸ்வதமான மதிப்பு என்ன என்று அப்போது தெளிவாகத் தெரிந்தது.
ஜெயமோகன்: கம்பராமாயணத்தை வைத்து இந்த சாஸ்வத அம்சம் என்ன என்று கூற முடியுமா?
பேரா.ஜேசுதாசன்: மானுட அனுபவம்தான். அது மாறவே இல்லை. அது நிகழும் சூழல் சந்தர்ப்பம் இதெல்லாம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் மிகவும் மேம்போக்கானவை மட்டுமே.
ஏற்கனவே சொன்ன கவிதை, கைகேயி ராமனிடம் கூறியது. எத்தனை குரூரம், எவ்வளவு சுயநலம்! ராமன் எப்படிப்பட்டவன். மிக மிக மென்மையானவன், அறம் தவறாதவன். கைகேயி மீது ஏராளமான பிரியம் வைத்திருப்பவன். கைகேயியும் நல்லவள்தான். ராமனிடம் உயிரையே வைத்திருப்பவள் தான். ஆனால் எப்படி வஞ்சகமாகச் சொல்கிறாள் ‘புண்ணியந்திகள் ஆடி’ வாழ்வதற்குப் போ என்கிறாள். அப்படி சொல்லும்படி ஆகிறது. அப்படித்தான் வாழ்க்கையில் எல்லாம் நடந்துவிடுகிறது. அதுதான் மனித அனுபவம். அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட முடியாது. இதைத்தானே இலக்கியம் அன்றும் இன்றும் பேசுகிறது?
அடுத்தபடியாக அடிப்படை மதிப்பீடுகளைச் சொல்லலாம். அவையும் ஒருபோதும் மாறிவிடுவதில்லை.
ஜெயமோகன்: கம்பராமாயணம்தான் இருக்கிறதே. அதில் இந்த மானுட அனுபவம் இருக்கிறது. பிறகு ஏன் நவீன இலக்கியம் தேவையாகிறது?
பேரா.ஜேசுதாசன்: மனிதனுக்கு போதும் என்பது உண்டா என்ன? இந்தக்கால வாழ்க்கையிலே இந்த சாஸ்வத அம்சம் வெளிப்படுகிறது என்று பார்க்க வேண்டுமில்லையா?
வேதசகாயகுமார்: நீங்கள் மிகச்சிறிய கிராமத்தில் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இலக்கியம் படித்தீர்கள். இசை கற்றீர்கள். என்ன தூண்டுதல் இதற்கெல்லாம்?
பேரா.ஜேசுதாசன்: சின்ன ஊராக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பெரியவர்கள். எது முக்கியம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. உதாரணமாக என் தந்தை ஒரு சாதாரண கொத்தனார். அவர் என்னை மிகவும் நேசித்தவர். நான் கேட்கும் புத்தகங்களை யெல்லாம் வாங்கித் தருவார். ஆனந்த விகடன் வாங்கிக் கொண்டுவந்து தருவார். ஒருமுறை வில்லிபாரதம் வசனம் நூல் கேட்டபோது கஷ்டப்பட்டு பணம் திரட்டி, தேடி வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அவர்தான் எனக்கு தமிழைக் கற்கத் தூண்டுதலாக அமைந்தவர். பிறகு என் ஆசிரியர்கள். குளச்சல் உயர்நிலைப் பள்ளியில் கோட்டாறு குமாரசாமி பிள்ளை, திருவனந்தபுரம் கல்லூரியில் பன்னிருகைப் பெருமாள் அவர்கள்.
நவீன இலக்கியத்தில் என் ஆர்வம் வளர சுந்தர ராமசாமியின் நட்பு மிகவும் உதவியது. அதேபோல நகுலனுடன் உள்ள நீண்டநாள் நட்பு. அன்றைக்கு நாங்கள் திருவனந்தபுரத்தில் ஒரு குழுவாக இருந்தோம். நகுலன், நீல.பத்மநாபன், ஷண்முக சுப்பையா, ஆ.மாதவன் டி.எஸ்.நாராயணன் எல்லோரும், டி.எஸ்.நாராயணன் வீட்டில் கூடி இரவுவரை பேசுவோம். திருவனந்தபுரம் தமிழ் மாணவர் சங்கம் என்று ஒன்று வைத்திருந்தோம். மலர்கள் கூட வெளியிட்டோம். நகுலன் அவரது பழைய சைக்கிளில் வருவார். பாதிநேரம் அதைத் தள்ளிய படியே வருவார். அதை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. ஊன்றுகோல் மாதிரி பேசியபடியே போய் டீகுடித்துவிட்டு நானும் அவருமாகத் திரும்பிச் செல்வோம். அந்த நாட்கள் என் நவீன இலக்கிய ஆர்வம் வளர மிகவும் உதவியாக இருந்தன.
ஆனால் எனக்கு நவீனக் கவிதைகளில் சில புரியவில்லை. மொழி புரிகிறது. கூறுமுறை பிடிகிடைக்கவில்லை. ஆனால் இந்த மர்மமெல்லாம் தேவைதான் என்றுதான் படுகிறது.
ஜெயமோகன்: அப்பட்டமாக இருப்பது?
பேரா.ஜேசுதாசன்: ஷண்முக சுப்பையாவின் கவிதை ஒன்று இப்படி வரும்.
சுடுகாடு ஒன்று
சுற்றித் திரிந்தது….
முதலில் அதிர்ச்சி தந்த வரிகள் இவை. பிறகு ரசித்தேன். விதனை சுடுகாடாகச் சொல்லியிருப்பதில் கவிதையின் அமைதி இருக்கிறது என்றே பட்டது.
ஜெயமோகன்: நீங்கள் முதல் பதிலிலேயே கம்பனுக்கு வந்து விட்டீர்கள். கம்பனில் மூழ்கி உங்கள் முதுமை கழிகிறது என்பதை நாங்கள் அறிவோம்.
தமிழில் மறுமலர்ச்சிக்காலம் தொடங்கிய போது சங்க இலக்கியம் மீது விழுந்த வெளிச்சம் கம்பன்மீது விழவில்லை. காரணம் மதச்சார்பற்ற (secular) இலக்கியமே தேவை என்ற தேடல்தான். மத இலக்கியம் என்று கம்பராமாயணம் எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பட்டது. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் கம்பராமாயணம் எப்படி இந்த முக்கியத்துவத்தை உங்கள் மனதில் பிடித்தது?
பேரா.ஜேசுதாசன்: நான் சொன்னேனே, என் முதல் கவிதையனுபவமே கம்பராமாயணம்தான். சிறுவயதிலேயே கம்பனின் ஓசையொழுக்கு என் மனதில் பதிந்துவிட்டது. மனம் அர்த்தத்தை வாங்கிக்கொள்வதற்கு முன்னரே, அந்த ஓசை நயம் அதை அளித்து விடுகிறது. ஓசையும் உணர்வுகளும் கம்பனில் கடல் மடை திறந்தது போலக் கொட்டியபடியே இருக்கிறது.
‘நாழிகை கங்குலின் நல்லடைந்த பின்றே
யாழிசை அன்றிய அன்சொல் ஏழைகோயில்
வாழியென்று அயில் மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடுங்கை மடங்கலாழியன்னான்’
இந்த வரிகள் எத்தனை சரளமாக ஒழுகிச் செல்கின்றன. ஒரு கடுமையான சொல்கூட இல்லை. மற்ற கலைஞர்களில் எல்லாம் தவிர்க்க முடியாமல் உரைநடைத் தன்மையும், பிற சிதைவுகளும் தலை காட்டிவிடும். கம்பனில் அது வரவே வராது. அவருக்குக் கவிதையின் பெருக்கில் ஒருபோதும் தடை கிடையாது. இசைத்தன்மை பற்றிச் சொன்னேன், எனக்கு இசை ரொம்ப முக்கியம். எனக்கு இசை தெரியும். மிக ஆர்வம் உண்டு. கம்பனை அந்த ஓசையழகுடன் படிக்க வேண்டும். சொல்ல வேண்டும். அது பாட்டு அல்ல. கவிதைக்குரிய இசை.
ஜெயமோகன்: Music அல்ல, Musicality என்று சொல்லலாமா?
பேரா.ஜேசுதாசன்: ஆம், அது சரியான வார்த்தைதான்.
ஜெயமோகன்: அது குமரகுருபரரிலும் இருக்கிறதே?
பேரா.ஜேசுதாசன்: ஆம். ஆனால் கம்பனில் உணர்ச்சி வேகங்கள்தான் அப்படிப்பட்ட ஓசையழகாக மாறியுள்ளன. உணர்வுகளுக்கு சாரமாக தர்மம் பற்றிய பிரக்ஞை உள்ளது. ’தர்மம்’ என்று மீண்டும் மீண்டும் கூறுகிறான் கம்பன். பிற அனைத்திலிருந்தும் பிரிந்து தர்மம் தன்னளவில் இயங்குவதுபோலச் சொல்கிறான். ‘தர்மம் பின் இரங்கி ஏக’ என்று கூறுகிறான். தர்மத்தை தனியாக ஒரு ஆளுமை போலவே காட்டுகிறான். ‘மானுடம் வென்றதம்மா’ என்று உலகு தழுவியதாக உருவகித்துக் கொள்கிறான். கம்பனில் கொஞ்சமும் குறைவுபடாத அந்த தர்மபோதம் தான் எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. அதன் பல்வேறு முகங்களை கம்பராமாயணம் முழுக்க மீண்டும் மீண்டும் பார்க்க முடிகிறது.
‘பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ ‘
என்கிறான் ராமன். அந்த மன உயர்வு என்னை நெகிழச் செய்கிறது. சகோதரபாசம் மட்டுமல்ல அது. அவன் நான்தான் என்று பேதமின்றி உணரக்கூடிய ஒரு நிலையல்லவா?
ஜெயமோகன்: பெரிய காவியங்கள் மானுடத் தீமையின் பேருருவங்களை தீட்டிக் காட்டுபவை என்று நவீன விமரிசனம் கூறுகிறது. கம்பராமாயணத்தில் கூட யுத்தகாண்டமே மிகவும் பெரியதும் உக்கிரமானதுமாகும் என்று கூறப்படுகிறது. கம்பனில் அந்த பிரம்மாண்டமான தீமைச் சித்தரிப்பு உள்ளதா?
பேரா.ஜேசுதாசன்: அறம் வெல்லும் என்பதே காவியத்தின் மையமான செய்தி. ஆனால் அறம் வென்றேயாகும் என்று சொல்ல மனிதனின் இருட்டையெல்லாம் சொல்லியாக வேண்டுமே. கம்பராமாயணம் ஒரு இலட்சியவாத காவியம், எல்லாம் இலட்சியப்படுத்தப்படுவது தன் தன்மை என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. அது உண்மை என்று நான் கருதவில்லை. ராமனை கம்பன் ‘அறத்தின் மூர்த்தியான்’ என்கிறான். ஆனால் அவனது பலவீனங்களையும் தவறுகளையும் சொல்லத்தயங்கவில்லை. தர்மமும் அதர்மமும் அவனுள் மோதுவதைச் சொல்லுகிறான். ஒன்று வாலிவதைப் படலம். இன்னொரு முக்கியமான இடம் சீதையைத் துறக்கும் தருணம். எத்தனை குரூரமாக நடந்துகொள்கிறான். ஏன்? அவன் கடைபிடித்த அறமே அதற்குக் காரணமாகிவிடுகிறது. அதே போலத்தான் சீதையும். அவளை ‘கற்பின்கனலி’ என்றுதான் கம்பன் சொல்கிறான். ஆனால் மாயமானின் குரல் கேட்டு சீதை லட்சுமணனை தேடிப்போகச் சொல்லி அனுப்பும்போது எத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறாள். அவளுடைய கற்பே அப்படி பேச வைக்கிறது. மனிதர்கள் குறையுள்ளவர்கள். இலட்சியக் கதாபாத்திரங்களுக்குள்ளேயே இத்தனை தீமை குடியிருப்பதை கம்பன் காட்டுகிறான். அறமும் கற்பும் எல்லாம் தீமைக்குக் காரணமாக ஆவதை சுட்டிக் காட்டுகிறான். அதேபோல தீமையேகூட உயர்வான உணர்வுகளில் இருந்து பிறக்கலாம் என்று கம்பராமாயணம் காட்டுகிறது. தீயவன் என்று கூறப்படும் கதாபாத்திரங்களின் உள்ளே கூட எந்த அளவுக்கு நல்லியல்புகள் உள்ளன என்று கூறுகிறது.
நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிதுநாள் வளர்த்து பின்னை
போர்க்கோலம் செய்து விட்டார்க்கு
உயிர் கொடாது அங்கு போகேன்
என்று கும்பகர்ணன் கூறுமிடம் உதாரணம். உயிர்கொடாது போகமாட்டேன் என்று சொல்கிறான். அங்கே அவன் இலட்சியக் கதாபாத்திரமாக ஆகிவிடுகிறான்.
வேதசகாயகுமார்: இலக்கியத்தில் நீங்கள் வலியுறுத்தும் இந்தத் தர உணர்வு உங்கள் ஆசிரியர்களிடம் இருந்ததா?
பேரா.ஜேசுதாசன்: இல்லை. அவர்களுக்கு எல்லாமே உயர்வுதான். தேவாரமும் உயர்வு. கம்பராமாயணமும் உயர்வு. என் ரசனை நான் என் அனுபவங்களிலிருந்து பெற்றது. ஒரு நல்ல வாசக அனுபவம் மற்ற தரமற்ற படைப்புகளை அடையாளம் காட்டுகிறது. உதாரணமாக, கம்பனைப் படித்தபிறகு வில்லிபாரதம் படித்தேன். கொஞ்சம்கூட நாடக உக்கிரம் இல்லை. எத்தனை எத்தனை உக்கிரமான சந்தர்ப்பங்கள், எவ்வளவு குணச்சித்திர மோதல்கள் உள்ள கதை. அதுவும் இதிஹாசம்தானே? கெடுத்துட்டானே? தமிழாசிரியர்களுக்கு கம்பனும் ஒன்றுதான் வில்லிபுத்தூராரும் ஒன்றுதான்.
ஜெயமோகன்: ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்குவார்…
(பேராசிரியர் வெகுநேரமாக சிரித்துக்கொண்டே இருக்கிறார்.)
ஜெயமோகன்: இது சமீபத்தில் நடந்தது. ஓர் இளம் தமிழ் ஆய்வாளரிடம் இளம் கவிஞர் ஒருவர், சங்கப் பாடல்களில் சில பாடல்களைத் தன்னால் சிறந்த கவிதை என்று ஏற்க முடியவில்லை என்று சொன்னார். ஆய்வாளரால் அதை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. தாங்க முடியாதபடி கோபம் வந்துவிட்டது. சங்க இலக்கியத்தில் தரம் பிரிக்க நீயார் என்று கேட்டாராம்….
பேரா.ஜேசுதாசன்: நமது வாழ்க்கையும், அதிலிருந்து வரும் ரசனையும்தான் நமது அடிப்படைகள். அதுதான் தகுதி. வேறு என்ன? சங்க இலக்கியத்தில் தரம் பார்ப்பது என்ன, காலத்தைச் சற்று பின்னால் கொண்டு வந்து விட்டார் என்பதற்காகவே வையாபுரிப்பிள்ளையை துரத்திவிட்டார்களே. தப்பி திருவனந்தபுரம் வந்துவிட்டார். ஆனால் எனக்கு வையாபுரிப்பிள்ளைதான் காலநிர்ணயத்துக்கு ஆதாரமானவர்.
கவிதையை வழிபாட்டுப் பொருளாக்கக் கூடாது. அதன்பிறகு ரசனையே இல்லை. சங்க இலக்கியத்தில் கணிசமான அளவு தரமற்ற பாடல்கள் உள்ளன. மொத்த சங்க இலக்கியம்கூட கம்பராமாயணத்தைவிட மேலானது அல்ல. இன்னும் யதார்த்தமான எழுத்து; இன்னும் இயற்கை அனுபவங்கள் உள்ளது; அவ்வா தமிழிலக்கியத்தின் உச்சம் கம்பன்தான்.
ஜெயமோகன்: கம்பனில் காவியகுணம் – ஒட்டுமொத்தமான தத்துவதரிசனம்- உள்ளது. சங்ககாலத்தில் அது இல்லை என்பதுதான் உங்கள் விமர்சனமா?
பேரா.ஜேசுதாசன்: ஆமாம். சங்கப்பாடல்களில் உள்ள நீதிகள் ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை கணக்கில் கொண்டவை என்று கூறலாம். ஆனால் அதில் வாழ்வின் முழுமையான சித்திரம் இல்லை. வாழ்க்கையின் எல்லாத் தளங்களையும் தொட்டுப் பேசும் விரிவு இல்லை . வெறும் நீதி போதாது.
ஜெயமோகன்: நீதி அனுபவமாக மாறவேண்டுமா?
பேரா.ஜேசுதாசன்: அனுபவம் நீதியாக வேண்டும். எல்லாமே அனுபவமாக மாறிவிட வேண்டும். அதுதான் முக்கியம்.
ஜெயமோகன்: நவீன இலக்கியத்தில் கம்பனுக்கு எவரையாவது கூறுவீர்களா?
பேரா.ஜேசுதாசன்: நவீன இலக்கியத்தில் என் படிப்பு குறைவுதான். படித்தவரையில் எவருமில்லை.
ஜெயமோகன்: தல்ஸ்தோய் படித்திருக்கிறீர்களா?
பேரா.ஜேசுதாசன்: போரும் அமைதியும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை.
ஜெயமோகன்: சிலப்பதிகாரத்தை ஒருபடி கீழேதான் வைப்பீர்கள். ஏன் அப்படி?
பேரா.ஜேசுதாசன்: முன்பே சொன்னது போல மனித அனுபவத்தை அணுகும் முறை, அதற்கேற்ப உருவாக்கிக் கொள்ளும் வடிவம் இதெல்லாம்தான் முக்கியமான காரணங்கள். சிலப்பதிகாரத் வஞ்சிக்காண்டம் நமது அனுபவமாக மாறவில்லை. பத்தினியைக் கடவுளாகக் காட்டும் பொருட்டு சேரன் செங்குட்டுவனைக் கொண்டு வந்து வடவரை கல்சுமக்க வைத்து, ஏராளமாக எழுதி வைக்கிறார். சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. ஆனால் காவிய ஒருமை சிதறி விடுகிறது.
ஜெயமோகன்: கம்பராமாயணத்தில் மதிப்பீடுகளின் மோதல் இருக்கிறது, சிலப்பதிகாரத்தில் அது இல்லை என்று கூறலாமா?
பேரா.ஜேசுதாசன்: வழக்குரை காதையில் அந்த மோதல் இருக்கிறது. அதன் நாடகீயத் தன்மை சிறப்பாக உள்ளது. ஆனால் மற்ற இடங்களில் மோதல்களோ, அதன்மூலம் உருவாகும் நாடகீயமோ இல்லை. இது முன்பே பலரால் கூறப்பட்ட விஷயம்தான்.
ஜெயமோகன்: சம்ஸ்கிருதத்தில் மகா காவியங்களுக்கு என்று சில இலக்கணங்களைக் கூறுகிறார்களே. அந்தக் காவிய இலக்கணங்களை கம்பனிலும் இளங்கோவிலும் பார்க்க முடியுமா?
பேரா.ஜேசுதாசன்: எனக்கு சம்ஸ்கிருத இலக்கணம் தெரியாது.
அ.கா. பெருமாள்: தண்டியலங்காரம் அதுதானே? அதில் காவிய இலக்கணம் கூறப்பட்டுள்ளதே.
பேரா.ஜேசுதாசன்: தண்டியலங்காரம் காவியத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள், அதன் மொழியம்சங்கள் முதலியவற்றைப் பட்டியல் போடுகிறது. பண்டிதர்கள் அதைக் காவியங்கள் மீது போட்டுப் பார்ப்பார்கள். ஆனால் தண்டியலங்காரம் காவிய இயல்பு என்றால் என்ன என்று சொல்கிறது.
‘பாவிகம் என்பது காவியப் பண்பு’ அதுதான் முக்கியம். ஒட்டு மொத்தமான பார்வை, வாழ்வின் சாராம்சம். அதுதான் காவியத்தின் அடிப்படைப் பண்பு. அது கம்பனில் கண்டிப்பாக உள்ளது. அப்பண்பு உருவாவதற்குத் தேவையான அளவுக்கு வாழ்க்கைச் சித்தரிப்புகள் உள்ளன. வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகவும், தனித்தனியாகவும் கூர்ந்து பார்த்து எழுதும் பண்பு அது. வ.வே.சு அய்யர் இதைத்தான் கம்பனின் கலைச்சிறப்பு என்கிறார். ‘Archetectronics’ என்று இதை வ.வேசு அய்யர் குறிப்பிடுகிறார். கட்டுமானமே கலை நுட்பமாக ஆதல் என்று விளக்கிச் சொல்கிறார்.
ஜெயமோகன்: இன்றும் பரவலாகக் கேட்கப்pஅடும் ஒரு கேள்வி உண்டு. கம்பன் வடமொழியில் இருந்துதானே எடுக்கிறான்? தமிழ்க் கலாசாரத்திற்கு அவன் பங்களிப்பு என்ன? தமிழிலிருந்து அவன் எடுத்துக்கொண்டது என்ன?
பேரா.ஜேசுதாசன்: கம்பன் வால்மீகியின் கதையை எடுத்துக் கொண்டான். அப்படிக் கதைகளை எடுப்பது காவியங்களின் மரபுதான். ஆனால் அக்காவியத்தின் சாராம்சமான காவியப் பண்புகள் தமிழ்க் கலாசாரத்திலிருந்து வந்தவை. வால்மீகியின் சீதை தீயில் குதிக்கச் சொன்னபோது அழுது புலம்புகிறாள். அவள் சாதாரணப்பெண். கம்பனின் சீதை அப்படியல்ல. புன்னகை மாறாமுகத்துடன் எரியில் இறங்குகிறாள். இவள் பத்தினித் தெய்வம். வால்மீகியில் நாடகத்தன்மையே இல்லை. நீண்ட நேரப் பேச்சுகள் தான் உள்ளன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதி எழுதி வைப்பாரே அதுபோல.
ஜெயமோகன்: வால்மீகியின் கதாபாத்திரங்கள் மனிதர்கள். கம்பன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு மதிப்பீடின் பிரதிநிதியாக ஆக்கிவிடுகிறான். ஆகவே, எந்தக் கதாபாத்திரங்கள் பேசினாலும் மதிப்பீட்டு மோதல், நாடகம் உருவாகிவிடுகிறது என்று கூறலாமா?
பேரா.ஜேசுதாசன்: ஆம். அதைவிட மனித சுபாவத்தை கம்பன் ரொம்ப உக்கிரமாக, முரண்பாடுகள் நிரம்பியதாகச் சித்தரிக்கிறான் என்பது முக்கியமானது.
ஜெயமோகன்: எந்த மொழியிலும் அந்த மொழியில் உள்ள மிகச்சிறந்த காவியம் மீது இத்தனை கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்காது என்று படுகிறது. கம்பனுக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கு என்ன காரணம்? ஏற்கனவே மதவாதிகளும் கம்பனைப் அளவில் ஏற்றது இல்லையே?
பேரா.ஜேசுதாசன்: கம்பன் மதத்தையோ பக்தியையோ பாடிய கவிஞன் அல்ல. அவன் பாடியது தர்மத்தைத்தான். இன்று உள்ள எதிர்ப்புக்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று கம்பனை எதிர்ப்பவர்கள் அவனை முழுக்க படித்ததில்லை. படிப்பது அத்தனை எளிய விஷயமும் இல்லை. தொடர்ந்து முயன்று கற்கவேண்டிய விஷயம் அது. இரண்டாவதாக கம்பனுக்கு ஏராளமான பாடபேதங்கள் உண்டு. மர்ரே ராஜம் பதிப்பில் சொல்லப்பட்ட தவறான பாடங்களை வையாபுரிப்பிள்ளை தன் பதிப்பில் ஒதுக்கித் தனியாக எடுத்துத் தந்திருப்பதைக் காணலாம். இடைக்கால கட்டத்தைச் சேர்ந்த மதிப்பீடுகள் பல கம்பன்மீது பிற்காலத்தவரால் ஏற்றி வைக்கப்பட்டன.
அதேபோல கம்பனில் இடைச்செருகல்களும் ஏராளம். பல இடைச்செருகல்கள் அழகான தமிழில் சிறப்பாக எழுதப்பட்டவை என்பது ஒரு பெரியதடை. ஆனால் காவிய அமைதியை வைத்து எது இடைச்செருகல் என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். உதாரணமாக சீதையின் அங்க வர்ணணையை ராமன் அனுமனிடம் கூறுவதாக ஒரு இடம் கம்பராமாயணத்தில் வருகிறது. இதைப் பிடித்துக் கொண்டு தான் கடுமையாக எதிர்த்தார்கள். கம்பன் மற்ற இடங்களில் சீதை ராமன் உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மிக மிக நாசூக்காகவே பேசுகிறான். மிகுந்த கையடக்கத்துடன் அவர்கள் உறவைப்பற்றிச் சொல்கிறான். உடல் ரீதியான காமமாக அவர்கள் உறவைச் சொல்லவே இல்லை. ஆகவே இந்தப் பகுதி இடைச் செருகல்தான் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
ஜெயமோகன்: பொதுவாக கம்பராமாயணம் திருநெல்வேலி சைவர்களிடம்தான் பிரபலமாக இருந்தது. ஆனால் அது வைணவ நூல்! என்ன காரணம்?
பேரா.ஜேசுதாசன்: எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை வைணவர். பிறகு கிறிஸ்தவராக ஆனார். ஆனால், அவருக்கு தேவாரம் மீதுதான் பெரிய ஈர்ப்பு இருந்தது. தேவாரம் மாதிரியே எழுதினார். ஏன்? இந்தப் பிரிவினைகளுக்கு இலக்கியத்தில் இடம் இல்லை.
ஜெயமோகன்: இரட்சண்ய யாத்ரீகம், தேம்பாவணி பற்றி யெல்லாம் உங்கள் கருத்து என்ன?
பேரா.ஜேசுதாசன்: தேம்பாவணியில் மொழியழகே இல்லை. மிகவும் வலிந்து உருவாக்கப்பட்ட கவிதை நடை. அது ஓர் அசலான படைப்புமல்ல.
ஜெயமோகன்: இரட்சண்ய யாத்ரீகம்?
பேரா.ஜேசுதாசன்: பில்கிரிம்ஸ் பிராக்ரஸ் ஒரு மேலான நூல். இரட்சண்ய யாத்ரீகத்தில் உள்ள அத்தனை கருத்துக்களுடனும் எனக்கு முழு உடன்பாடு. தேம்பாவணியைப் பற்றியும் அப்படித்தான் சொல்வேன். ஆனால் அதெல்லாம் இலக்கியமாக ஆகவில்லை.
ஜெயமோகன்: கம்பனுக்கு அடுத்தபடியாக தமிழ் மரபின் பெரிய கவிஞர் யார்?
பேரா.ஜேசுதாசன்: இளங்கோவை சொல்வதா வள்ளுவரைச் சொல்வதா? வள்ளுவர் பெரிய கவிஞர்தான் சந்தேகமில்லை. எப்போதைக்குமான நீதியை சுருக்கமாகச் சொன்னவர். ஆனால் நீதியைச் சொல்வது கவிதையாகுமா? நீதியை கறாராகச் சொல்ல வேண்டும். கவிதையில் அது சாத்தியமே இல்லை. கவிதை ஓர் அனுபவம். அனுபவம் விதவிதமாக அர்த்தமாகலாம். சிலப்பதிகாரத்தைத்தான் சொல்ல வேண்டும்.
ஜெயமோகன்: எனக்குப் பல குறட்பாக்கள் உன்னதமான கவிதைகள் என்று தோன்றியிருக்கிறது.
பேரா.ஜேசுதாசன்: அப்படி நிறைய கவிதைகள் உள்ளன. சில இடங்களில் குறளில் நல்ல சித்தரிப்புகள் வருகின்றன. அழகான நேரடிப்பேச்சுகளும் உள்ளன. அவையெல்லாம் கவிதைகள் தான். ’கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க’ என்ற கவிதை வள்ளுவரே நேரில் கூறுவது போல உள்ளது. அந்த உணர்ச்சிப்பாங்கு சிறந்த கவித்துவம்தான்.
ஜெயமோகன்: கவிதை என்பது கூறப்பட்ட வரிகளிலிருந்து கவிதையனுபவம் விரிவடைந்தபடியே செல்வதுதானே? அது பல குறட்பாக்களில் உள்ளதே?
பேரா.ஜேசுதாசன்: அது நல்ல பார்வைதான் விரிவடைவது அனுபவமாக இருக்கவேண்டும். சிந்தனையாக இருக்கக்கூடாது.
வேதசகாயகுமார்: இன்று தமிழ்க்கல்வி மிக மோசமாக உள்ளது. மாணவர்களுக்கு இலக்கிய அனுபவம் வகுப்பில் கற்பிக்கப்படுவதே இல்லை. மாணவராக இருந்தபோது உங்கள் அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது?
பேரா.ஜேசுதாசன்: நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேரும்போது தமிழ் ருசி இருந்தது. ஆனால் குளச்சலிலும் திருவனந்தபுரத்திலும் கிடைத்த கல்வி அடிப்படையானது மட்டும் தான். அண்ணாமலையில் ஏசி. செட்டியார் தமிழ் எடுத்தார். அவருக்கு ரசனை உண்டு. மற்றவர்கள் வாசித்து அர்த்தம் சொல்வார்கள். அறம்- அறத்தை, செய-செய்வதற்கு, விரும்பு- விரும்புவாயாக என்ற மாதிரி இலக்கியத்தை ரசிக்க அங்கு இடமே இல்லை . டி.கெசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வருவதாக இருந்தார். பண்டிதமணி அவரைக் கல்லூரி வளாகத்தில் நுழைய விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். நாங்கள் மாணவர்கள் டி.கெ.சி. பேச்சைக் கேட்க சிதம்பரம் போனோம். ஒரு வீட்டு ரேழியில் டி.கெ.சி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். கேட்பதற்குக் கொஞ்சம் பேர் வந்திருந்தார்கள். டி.கெ.சி ஒரு உலகத்தையே உருவாக்கிக் காட்டுவார். ஆனால் அவருடையது கவிதையின் ஆழத்துக்குப் போகும் ரசனை அல்ல. நயம் பாராட்டல் மட்டும்தான்.
பண்டிதமணியின் ரசனை வேறு மாதிரி. சாதாரணமாகப் பொருள் தான் கூறுவார். சில சொற்களுக்கு விசேஷ அர்த்தம் சொல்வார். அது முக்கியமான அனுபவமாக இருக்கும். ஆனால் பல்கலைக் கல்வியால் பெரிய பலனில்லை. ‘செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது நலம் எற்றுணையும் கண்டிலேன்…’
கா.சுப்ரமணிய பிள்ளைஅ.கா. பெருமாள்: கா.சு. பிள்ளை எப்படி?
பேரா.ஜேசுதாசன்: அங்கு வரும்போதே அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. சைவசித்தாந்தம் நன்றாக எடுப்பார். தமிழ் ரசனை எல்லாம் அப்படி அப்படித்தான்.
அ.கா. பெருமாள்: கோ.சுப்ரமணியம்?
பேரா.ஜேசுதாசன்: அவர் நன்றாகப் பாடுவார். ஆனந்த பைரவியிலோ சங்கராபரணத்திலோ கவிதையைப் பாடி, அவரே ரசிப்பார். எனக்கு அது மனதைக் கவரவில்லை.
வேதசகாயகுமார்: அண்ணாமலை பல்கலையில் உங்களைக் கவர்ந்த ஆசிரியர் யார்?
பேரா.ஜேசுதாசன்: ஏ.சி. செட்டியார் நன்றாக எடுப்பார். அனால் மிகவும் கவர்ந்தவர் எஸ்.கெ. கோவிந
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

