இட்ட முத்தமும், நிறைந்த நடையும்

உடைந்து எழும் நறுமணம்

இனிய ஜெயம்

தமசோமா ஜோதிர்கமய என மெல்ல மெல்லப் பார்வை துலக்கம் பெறும் பரிணாம கதியை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். வலது கண்ணில் காட்சிகள் துலக்கிவிட்டன. இடது கண் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது எழுத்துக்களை ஸூம் போட்டு சிறு சிறு கவிதைகளை வாசிக்கிறேன்.

வாசித்தவதற்றில் இந்த இரண்டு கவிதைகள் நாளெல்லாம் தொடர்கிறது. முதல் கவிதை ‘திடீரென’ எனும் தலைப்பு கொண்ட இசையின் கவிதை.

அந்த ஸ்கூட்டிப் பெண்

திடீரெனக் குனிந்து

முன்னே நின்றிருக்கும்

தன் சின்ன மகனின் கன்னத்தில்

முத்தம் வைக்கிறாள்.

எதற்கு?

என்கிற  வினாவை

அதற்குள் அவன் கற்றிருந்தான்.

 

எதுக்கும்மா?

எதுக்கும்மா?

என்று வழிநெடுக

நச்சரித்துக் கொண்டே வருகிறான் சிறுவன்.

 

சிரித்துச் சிரித்து

மழுப்புகிறாள்

அந்த அன்னை.

வாசித்த கணமே சட்டென மனதில் இக்கவிதை திறக்கும் கற்பனை வழிகளும், அகத்தை தொட்டெழுப்பும் உணர்வெழுச்சியும் அலாதியானது.

கவித்துவமாக முந்திக்கொண்டு எட்டிப்பார்க்கும் ஒரே ஒரு வார்த்தை கூட கிடையாது, மொழியால் வடிவத்தால் இன்று பல கவிதைகள் கொண்டிருக்கும் தாண்டுறா ராமா வித்தைகள் எதுவும் கிடையாது. ஸ்கூட்டிப் பெண் அன்னை என மாறும் கதி கண்டு, அத்தருணம்  கவி உள்ளம் அடைந்த எழுச்சிக்கு சரி நிகர் நேர் நிற்கும் சொற்கள், வடிவம் வழியே வாசக உள்ளத்தைத்  தீண்டி அவனைக் குழந்தையாக்கி ஏம்மா ஏம்மா என்று தவிக்கவைக்கும் கவிதை.

அடுத்த கவிதை ‘ மரணம், மரம் மற்றும் இயற்கை’ எனும் தலைப்பில் தேவதேவன் எழுதியது.

அவன் சிறிது சலிப்புடனேதான் தனது எளிய காலைநடையை

நழுவவிடலாமா என எண்ணினான்.

 

என்னையும் கொஞ்சம் நீ

கவனிக்க வேண்டாமா என இறைஞ்சியது உடல்.

 

இன்று கொஞ்ச நேரம் போய்வந்தால் போதுமல்லவா அன்பா !

 

போதும் போதும் தாராளமாக

என்றது உடல்.

 

எழுந்து நடந்தார்கள் வெளியே

இருவருக்கும் பிடித்தமாதிரி.

 

இன்று தாமதமாகிவிட்டது

காலைநடை.

அலுவல் நேரம் தொடங்கிவிட்டதால் வேகமாகிவிட்டது சாலை

 

பூங்காவில் நடை சென்று கொண்டிருந்த ஒரு சிலரினும் ஒரு சிலர் ?

வியத்தகு அந்த நடையினை அறிந்தவர்களாய்!

அப்புறம் ஓரமாய்

அவர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த

மரணத்தின் மரத்தடிப் பெஞ்ச் சென்று அமர்ந்தார்கள்

எவ்வளவு நேரம் அது ?

அங்கிருந்தும் எழுந்து நடந்தபோது

அவர்களோடே எழுந்து நடந்தது

அந்த மரணமும் மரமும் இருக்கையும்.

பௌத்தம் துவங்கி சித்தர் மரபு தொட்டு நவீனத்துவம் வரை யாக்கை நிலையாமை என்பது முக்கியக் கருப்பொருள். அவை கையாண்ட இக் கருவின் சாராம்சத்தைக் கலைத்து அடுக்குகிறது இக் கவிதை.

வடிவத்தால், கூறுமுறையால், உள்ளுறையால் யுவன் சந்திர சேகர், சுரேஷ்குமார் இந்திரஜித், போகன் போன்ற எழுத்தாளர்களின் குருங்கதைகள் போலும் தேவ தேவனின் நோக்காலும் மொழியாலும் அமைந்த கவிதை.

இக்கவிதை வாசித்த கணம் சட்டென நினைவில் எழுந்தது தால்ஸ்தோயின் இறுதிக் கணம்தான். அவரும் அவரது உடலும் இரண்டென்றாகி, போதும் அன்பா என்று இறைஞ்சிய உடலை பிளாட்பாம் பெஞ்சில் ஓய்வெடுக்க விட்டு விட்டு அவர் மட்டுமென ரயில் ஈறிவிட்ட தால்ஸ்தோயின் இறுதிக் கணம்.

அந்த சிலரிலும் சிலர் யார்? அவர்கள் மட்டுமே அறிந்த அந்த வியத்தகு நடை யாது?

உடல் கொண்ட போதும் உடன் நிற்கும்  நடை, உடல் அற்ற போதும் தொடர்கின்ற நடை. நடப்பவர் ஓய்ந்த பின், ஓய்வு கொண்டவையுடன் அவர் கொள்ளும் நடை. இங்குள்ள அசைவன அசைவற்றன எல்லாமே கூடிச் சென்றுகொண்டே இருக்கும் ஓர்  மாலை நடை.

முத்தமிட்ட அன்னையின் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி எட்டெடுத்து நடந்து நடந்து நாம் வந்து சேரும் மரணத்தின் மரத்தடி பெஞ்ச நோக்கிய பயணத்தைத்தான் நாம் வாழ்க்கை என்று பெயரிட்டு அழைக்கிறோமா?

புத்தக சந்தைக்கு இசை தேவ தேவன் கவிதைகளின் புதிய தொகுதிகள் வரவிருப்பதாக அறிகிறேன். கூடவே நமது நண்பர்கள் கவிஞர் ஆனந்த், கவி கல்பனா ஜெயகாந்த் போன்றவர்களின் முதல் கவிதை தொகுப்புகளும். நாளை வரும் யாரோ ஒரு வாசகர், யாரோ ஒரு எழுத்தாளருக்கு இந்தக் கவிகளின் கவிதைகள் குறித்து இப்படி எழுதிப் பரவசம் காணும் நிலை இப் புதிய கவிகளுக்கும் அமையட்டும்

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.