Jeyamohan's Blog, page 821
February 25, 2022
ஓர் அன்னையின் பயணம்
என் 80 வயது அம்மா தற்செயலாகத்தான் வெண்முரசு படிக்கத் தொடங்கினார். தம்பி வீட்டில் எனக்காகக் காத்திருந்த மாமலர் செம்பதிப்பை சும்மா புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு நாள் முதல் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். முன்பு அறம் படித்துவிட்டு மணிக்கணக்காக என்னிடம் ஒவ்வொரு கதையையும் சிலாகித்திருக்கிறார்.‘‘இப்படிக்கூட ஒருத்தரால எழுத முடியுமா? ஆயுசோட இருக்கணும்’.
புராண இதிகாசங்களில் நல்ல விரிவான பரிச்சயம் உண்டு. மாமலரை ஆழ்ந்து வாசித்தார். முதலிலிருந்து படிக்கட்டும் என்று முதற்கனலில் இருந்து படிக்கப் படிக்க order செய்தேன். முதுமையாலும் நோயாலும் மனம் சலித்திருந்தவருக்கு வெண்முரசு வாசிப்பு ஆசுவாசமும் உற்சாகமும் தந்தது. வரி விடாமல் நிதானமாகப் படிப்பார். தொலைபேசியில் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். தம்பிகள் முதலில் ‘என்ன இவ்வளவு நேரம் பாசமா பேசுதே ரெண்டும்’ என்று சந்தேகப்பட்டு என்னிடம் ,‘உடம்புக்கு ஒண்ணும் இல்லையே’ என்று கவலையுடன் விசாரித்தார்கள். அதற்கு முன்னால் பத்தாவது நிமிஷம் இருவருக்கும் சண்டை நிச்சயம்.
வரிசையாய், நிதானமாய் மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து , நீலம் படிக்கக் கொடுத்தபின் அதிகம் பேச்சில்லை.ஒரு நாள் திடீரென்று ‘அஷ்டபதி கேக்கணும் போலிருக்குடீ’. தம்பி தேடித்தேடி போட்டுக் கொடுத்தான். கையில் நீலத்துடன் மணிக்கணக்காக அஷ்டபதி. நீலம் முடிந்தபின்னும் மௌனம்.எப்படி இருந்தது என்ற கேள்விக்கு ‘என்னோடவே இருக்கட்டும்’.
ஆவணப்படம் பார்த்துவிட்டு விவரமாக சொன்னேன். ‘பரவாயில்லையே, எழுத்தாளனை சிறப்பிக்கணும்னெல்லாம் தோணுதே தமிழ் உலகத்துல. பாரதியாரையே அனாதைப் பிணமா போக விட்டவங்கதானே நாம’. கண்ணானாய் பாட்டு release ஆனதும் போட்டுக் காட்டுவதாக சொல்லியிருந்தேன். பாடல் வெளியிடும் தினம் youtube live ல் பார்க்க மிக ஆவலுடன் இருந்தேன்.
அம்மாவின் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டே இருந்த சிறுநீரகங்கள் சென்ற செப்டெம்பரில் முழுதாய் செயலிழக்கும் நிலை. வாரக்கணக்கில் மருத்துவமனை வாசம்.Dialysis ஐ உடல் தாங்காது என்பதால் உடலுக்குள் அறுவை சிகிச்சை மூலம் குழாய்களைப் பொருத்தி வீட்டிலேயே தினம் மும்முறை செய்யும் peritonal dialysis மட்டுமே ஒரே வழி.If not, it is a matter of a few very painful days என்று சொல்லப்பட்டது. அம்மா சிகிச்சையை வெகு மூர்க்கமாக மறுத்து ‘என்னை அமைதியா சாக விடுங்க’ என்று வீடு வந்துவிட்டார்.
அக்டோபர் 9 இசை வெளியீடு அன்று முழுதும் விமானப்பயணம். ஒரு கைப்பிடிக்குள் அடக்கி விடக்கூடிய உருவம் கருக்குழந்தை போல கட்டிலில் சுருண்டிருந்தது. மனதில் எழுந்த அலறலையும் அழுகையையும் அடக்கிக்கொண்டேன். மெல்லப் பேசி திரும்ப சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க முயற்சிகள். திரும்பத் திரும்ப ‘போதும் என்னை விட்டுடுங்க’ .மாலையில் பேச்சை மாற்ற வேண்டி அம்மாவை சாய்ந்தார் போல் அமர்த்தி youtube ல் வெளிவந்திருந்த ‘கண்ணானாய்’ போட்டுக் காண்பித்தேன். கமல் குரலைக் கேட்டு மஹிமாவும் நிவிக்குட்டியும் ஓடி வந்தன. பின்னாலேயே எல்லாரும். பனிப்பாறையாக இறுகியிருந்த சூழல் சற்று இளகியது. பாட்டை அமைதியாகக் கேட்டு, ‘சிறுகுமிழ் விரல்களே அமைக என் தலைமேல்’ வரியில் கைகூப்பி கிருஷ்ணா என்று கண்ணீர் விட்டார். பாடல் வரிகளைத் மெல்லத் திருப்பிச் சொன்னேன். ‘ஒரு பேப்பர்ல எழுதி குடுடீ,பிழைச்சுக் கிடந்தா திரும்பப் படிக்கணும்’. ஸ்லோகம், பாசுரம் ஒண்ணும் வேண்டாம், அந்த ஒரு வரி போதும்டி’. அப்படியே நைஸாகப் பேசி அடுத்த நாள் யோசிக்க விடாமல் ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு விட்டோம். அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த இரு நாட்களில் மீண்டும் மீண்டும் மடிக்கணினியில் ‘கண்ணானாய் காண்பதுமானாய்’ .அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் வலி நிவாரணி அதிகம் தர முடியாத நிலையில் ‘ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது ‘அறம் ல கோமல் சுவாமிநாதன் சொல்வாரே அது மாதிரி பெருவலி’ ‘
கொஞ்சம் உடல் தெளிய இரண்டு மாதமானது. இன்னும் சில மாதங்களோ ஓரிரு வருடங்களோ கொஞ்சம் வலியில்லாமல் இருக்க முடியும். மருத்துவர் சொன்னது ‘She is on bonus time. Enjoy while it lasts’.
கதை இதோடு முடியவில்லை.டிசம்பர் கடைசியில் தம்பியிடம் ‘ ரொம்ப போரடிக்குது. ஏதாவது புஸ்தகம் எடுத்து குடுடா’. HCL நூலகத்தில் நல்ல புத்தகங்கள் உண்டு. ‘என்னம்மா வேணும்?’ ‘விஷ்ணுபுரம் இருந்தா கொண்டுவாடா’ . சின்ன தம்பி மிரண்டு போய் ‘ அம்மா வேணாம்மா, இப்பொதான் செத்து பொழச்சு வந்திருக்கே’. பெரியவன் ‘குடுடா, கிழவி படிச்சாலும் படிக்கும்’ .
பொங்கல் சமயத்தில் கௌஸ்துபம். ‘அப்படியே கோவிலை கண் முன்னாலே கொண்டு வந்துட்டார்.என் மனசில முழுக் கோயிலையும் பார்க்க முடியறதுடி. எவ்வளவு தத்ரூபம்!’
‘அந்த ஆழ்வார் கதை கொஞ்சம் நம்மாழ்வார் கதை மாதிரி இருக்கு. அதுக்காக அவர் நம்மாழ்வாரை சொல்றார்னு எடுத்துக்கக் கூடாது. இந்த கதைகள் ஐதீகங்கள் எப்படி உருவாகுதுன்னு தான் சொல்ல வரார்- ஜெ இந்த தெளிவு எனக்கு 2000 ல் முதல் முறை விஷ்ணுபுரம் படித்தபோது இல்லை. அந்த இடத்தில் புத்தகத்தை தூக்கிப் போட்டுவிட்டு பத்து நாள் பொருமிக் கொண்டிருந்தேன்.
நேற்று பேசும்போது ‘மணிமுடி முக்கால்வாசி ஆச்சு. ஞான சபை விவாதம் முழுக்கப் புரிய இன்னும் பத்து தடவை படிக்கணும். ஆனா எனக்கு அஜிதரோட வாதம் தான் சரியா பொருத்தமா இருக்கிற மாதிரி இருக்கு’.
இவ்வளவும் ஒரு ஒத்த மனுஷனோட மனசில, கையில் இருந்து வந்ததா? ‘ஞானபீடம் கிடைக்கணும்டி, எப்பவோ கிடைச்சிருக்கணும். இல்லேன்னா ஞானபீடத்துக்கு என்ன மரியாதை?’
அஞ்சு வருஷம் முந்தி நானும் இதத்தான் சொல்லியிருப்பேம்மா. ஆனா வெண்முரசு எழுதினப்புறம், எழுதினவருக்கு அது ஒரு பொருட்டா? வேற எதுதான் பொருட்டு?
ஜெயஸ்ரீ சூரியநாராயணன்
அன்புள்ள ஜெயஸ்ரீ
அம்மாவுக்கு என் வணக்கததைச் சொல்லவும்.
அவரிடம் ஒன்று சொல்லவும், படைப்பியக்கம் என்பது ஒரு தனிநபர் சார்ந்தது அல்ல. தனிநபர் எவராயினும் சிறியவர். ஏரியின் நீரை மடை உரிமைகொள்ள முடியாது.
அனைத்தையும் நித்ய சைதன்ய யதி எழுதியதாகவும் கொள்ளலாம். அவருக்கு என்ன விருது கொடுக்க முடியும்?
ஜெ
February 24, 2022
நிமிர்பவர்களின் உலகம்
எட்கார் ஆல்லன் போ- மாபெரும் சிலைஅன்புள்ள ஜெ
எனக்கு வாட்ஸப்பில் வந்த ஒரு செய்தி இது. ஓர் எழுத்தாளர் புத்தகக் கண்காட்சி பற்றி இப்படி எழுதியிருந்தார்
சில எழுத்தாளர்கள் திருவிழாவில் பந்தாவாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாசிப்புக்காக புத்தகம் எழுதவே அவதாரம் எடுத்தவர் போலவும், ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டவர் போலவும், நீங்கள் அவருடைய நூல்களை வாங்குவது உங்களுடைய கடமை என்பது போலவும் அவருடைய பாவனைகள் இருக்கக்கூடும். அவருடன் பேசியபிறகு அவர்மீதான உங்கள் மதிப்பு சரியக்கூடும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், எழுத்தாளனின் எழுத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாய் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.
இந்த வரிகள் அளித்த எரிச்சலுடன் இதை எழுதுகிறேன். முதல் விஷயம் இதை எழுதியவர் தன்னை சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் சான்றோன் என நினைத்துக் கொள்கிறார். இன்னொன்று இலக்கியவாதி அயோக்கியன், பந்தா செய்பவன் என்றால் இவர் சான்றோன் எனச் சொல்பவர் யாராக இருக்கும்? கண்டிப்பாக ஏதாவது அரசியல்வாதி அல்லது மதத்தலைவராக இருக்கும். இந்த வகையான கிரிஞ்ச் செய்திகள்தான் வாட்ஸப்பில் அதிகமாக வரும் என்றாலும் இது பயங்கர எரிச்சலை அளித்தது
ஆர்.சரவணக்குமார்
ஃப்ளபர்ட் சிலை,ரூவன்ஸ்அன்புள்ள சரவணக்குமார்,
வாட்ஸப் சுற்று என்பது சராசரிகளின் உலகம். தமிழகம் சராசரியாக நம்பும், சொல்லும் விஷயங்களே அதில் வெளிவரும். இந்த வாட்ஸப் சுற்றி வருவதில் இருந்தே இந்த வரிகளுக்கு இருக்கும் ஏற்பு புரிகிறது. இவை ஒரு சாமானிய- சராசரிக்கு உடனடியாக பிடிக்கும் வரிகள். அவன் தன் அனைத்து அயோக்கிய அற்பத்தனங்களுடனும் தன்னை நல்லவன், தூயவன் என நம்ப விரும்புகிறான். வெட்கமே இல்லாமல் சாமானியர்கள் அதை எல்லா பேச்சுக்களிலும் சொல்வதை நீங்களே கேட்டிருக்கலாம்.
அவன் தான் சாமானியனாக இருப்பதன் காரணம் தன்னுடைய எளிமை, நேர்மை, சொல்லும் செயலும் ஒன்றேயான பெருநிலை ஆகியவைதான் என்று நினைக்கிறான். ஆகவே எவ்வகையிலேனும் அறியப்பட்ட, வெற்றிபெற்ற, சாதித்த அனைவர்மேலும் அகத்தே சீற்றம் கொண்டிருக்கிறான். அவர்களை அயோக்கியர்கள் என்று சொல்லும் எல்லா பேச்சையும் அவன் உடனடியாக ஏற்றுக்கொள்வான். அவன் அகத்தில் புண்பட்ட ஆணவம் சற்றே குளிர்கிறது. அவர்களின் பொருட்டு எழுதப்பட்ட வரிகள் இவை.
தமிழ்ச் சூழலில் பத்துநாட்களுக்கு ஒருமுறை எழுத்தாளர்களை வசைபாடி, இழிவு செய்து எழுதப்படும் ஒரு கட்டுரையோ குறிப்போ வெளிவந்துவிடும். ‘ஆமாங்க மெய்தானுங்க’ என அதை ஒரு ஆயிரம்பேர் ஆதரித்து பகிர்வார்கள். எல்லா இடங்களிலும் அறிவுச்செயல்பாடுகள் மேல், இலக்கியம் மேல் அதை அறியாதவர்களுக்கு ஒரு மிரட்சியும் விலக்கமும் உண்டு. ஆனால் வெறுப்பும் காழ்ப்பும் தமிழ்ச்சூழலுக்கே உரிய மனநிலை. தவறாமல் புத்தகக் கண்காட்சி வரும்போது எழுத்தாளனை வசைபாடி ஒரு கட்டுரை எழுதப்பட்டு சுற்றில் இருக்கும்.
அதை எழுதியவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு இலக்கியத்துடன் தொடர்பில்லை. அந்த அற்பன் வாசிப்பற்ற பாமரன் அல்ல. பாமரனுக்கு இந்த அறிவுலகம் இருப்பதே தெரியாது. இவன் பெரும்பாலும் இலக்கியச் சூழலில் புழங்குபவன், ஆனால் இலக்கியம் என்னும் மானுடமளாவிய பேரியக்கத்தை உணரமுடியாதவன். அது உருவாக்கும் அகஎழுச்சியை ஒரு கணமேனும் உணர்ந்திராதவன். ஆனால் அதைக் கண்டு பொருமிக்கொண்டிருப்பவன். பெரும்பாலும் தன்னை எழுத்தாளன் என நம்பும் ஒரு குற்றெழுத்தாளன். அவன் அடைந்துள்ள இந்த அகச்சிறுமையால் என்றும் அவ்வண்ணமே இருக்கவேண்டிய தீயூழ் கொண்டவன். அந்த அகச்சிறுமையாலேயே தன்னை உள்ளும்புறமும் நிறைந்த மாமனிதன், பிறர்மேல் தீர்ப்பு சொல்லும் தகைமைகொண்டவன் என பாவனை செய்து கொள்கிறான்.
தன் பலவீனங்களை, முரண்பாடுகளை, இழிவுகளை, சரிவுகளை தானே உணர்வதென்பது ஓர் அரிய இயல்பு. அவ்வியல்பில் இருந்தே எழுத்தாளன் உருவாகிறான். அதுவே அவன் முதல் பண்பு என்றே சொல்லவேண்டும். அதை முன்வைப்பதனால் அவனை ஓர் அற்பன், அயோக்கியன் என முத்திரை குத்துவதென்பது அறியாமையில் உழல்வோர் செய்வது. ஆனால் அவர்கள்தான் நம்மைச்சுற்றிச் சூழ்ந்திருக்கிறார்கள். தன்னை பிம்பமாக ஆக்கி முன்வைக்கும் அரசியல், மதம் சார்ந்த ஆளுமைகளை அப்படியே நம்பி ஏற்க அந்த அறியாமை கொண்ட சாமானியர்களுக்கு எந்த தடையும் இல்லை. தன்னை அப்படியே முன்வைக்கும் எழுத்தாளனே அவர்களால் பெரும்பாலும் வெறுக்கப்படுகிறான். இது இங்கல்ல, உலகம் முழுக்க உள்ளதுதான். இங்கே இலக்கியவாசிப்பாளர் மிகக்குறைவு, பாமரர் மிக மிக அதிகம். அதுவே வேறுபாடு.
செக்கோவ்மேலும் எழுத்தாளன் இருநிலை கொண்டவன். எழுதும்போது, அந்த உளக்கூர்மையின் நிலையில், அவனுடைய அறவுணர்வும் நுண்ணுணர்வும் உச்சமடைகின்றன. அல்லாதபோது அவனும் சாமானியனே. தன்னை சாமானியன் என்று சொல்லாத எழுத்தாளனே இல்லை. சாமானியர்களில் ஒருவனாக இருக்கையிலேயே அவனால் சாமானியர்களின் உள்ளத்தையும் வாழ்வையும் எழுத முடியும். அவன் எழுதிய உச்சங்களைக் கொண்டு அச்சாமானியனை மதிப்பிடக்கூடாது. அந்த முரண்பாடு நடிப்பு அல்ல. அவன் தவிர்க்கவே முடியாத இருநிலை.
எழுத்தாளர்களின் குணக்கேடுகள் என பரவலாக அறியப்படும் பல இயல்புகள் இந்த முரண்பாட்டில் இருந்து உருவாகின்றவை. எழுதும்போது இருக்கும் உச்சநிலை, ஒருமைநிலை, மெய்நிலை எப்போதும் அப்படியே தொடரவேண்டும் என எண்ணி மயக்கங்களில் ஆழ்பவர்கள் உண்டு. சாதாரண நிலையில் இருக்க முடியாமல் அதை செயற்கையாக உக்கிரப்படுத்தவேண்டும் என முயன்று எதிலெதிலோ முட்டிமோதி அழிபவர்கள் உண்டு. எழுதும்போது அமையும் தீவிரநிலையை அப்படியே அன்றாடத்தில் தொடரும்போது பலவகையான மிகைவெளிப்பாடுகளில் சென்று சேர்கிறார்கள் படைப்பாளிகள்.
அதைவிட ஒன்றுண்டு, எழுதும்போதிருக்கும் பெருநிலையே தான் என எண்ணி செருக்கு கொள்கிறார்கள். ஓர் எல்லைவரை அந்தச் செருக்கு இன்றியமையாதது. அது இல்லையேல் அவனால் அவனைச் சூழ்ந்திருக்கும் பாமரர் நடுவே வாழ முடியாது. அவர்களின் ஏளனங்கள், அறிவுரைகளை தாளமுடியாது. இங்கே எழுதுபவன், கலைஞன் என்றுமே இளக்காரமாகத்தான் சூழலால் பார்க்கப்படுகிறான். அவனை வாசிப்பவர், அவனை அறிபவர் மிகக்குறைவு.இங்கே செல்வமும் அதிகாரமும் மரபும்தான் வழிபடப்படுகின்றன. அவற்றுக்கு எதிராக நிலைகொள்ள எழுத்தாளனுக்கு செருக்கு இன்றியமையாதது. புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் பிரமிளையும் நிமிர்வுகொள்ளச் செய்தது அச்செருக்குதான்.
டால்ஸ்டாய்ஆனால் அந்தச் செருக்கு அன்றாடத்தில் எல்லை கடக்கக்கூடும். எங்கே அதை நிறுத்திக் கொள்வதென்று தெரியாமலாகும். தான் எழுதியது படிக்கப்படாதபோது, தான் புறக்கணிக்கப்படும்போது சீற்றம் கொள்ளச் செய்யும். சங்ககாலம் முதல் அந்த உளநிலை இங்குள்ளது. வரிசையறியாமல் பரிசில் கொடுத்தமைக்குச் சீறும் சங்ககாலக் கவிஞனில் வெளிப்படுவது அதுவே. புலமைக்காய்ச்சலாக வெளிப்படுவதும் அதுவே, அதை கட்டுப்படுத்துவது கடினம். எழுதுவது தன்னுள் அமைந்த வேறொரு ஆளுமை என தனக்குத்தானே சொல்லிச் சொல்லி நிறுவிக்கொள்ளவேண்டியதுதான். அது ஒன்றே வழி.
இசை கேட்பவருக்கு தெரியும். தொடர்ந்து நாட்கணக்கில் இசை கேட்கையில் மெல்லமெல்ல நம் உள்ளம் ஓர் ஒருமையை அடைகிறது. அதுவரை இயல்பாக ஒலித்த அன்றாட ஓசைகள்கூட துணுக்குறலையும் எரிச்சலையும் அளிக்கின்றன. அதுவே இலக்கியவாதிக்கும் நிகழும். அவன் தன்னகத்தே ஒருமையும் ஒழுங்கும் கொண்ட ஓர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கையில் வெளியுலகின் இயல்பான கட்டற்றதன்மை, பிசிறுகள் எரிச்சலடையச் செய்கின்றன. சட்டென்று மிகையாக எதிர்வினையாற்றச் செய்கின்றன.
கம்பனோ காளிதாசனோ ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ தல்ஸ்தோயோ தஸ்தயேவ்ஸ்கியோ அத்தனை இலக்கியமேதைகளும் அப்படித்தான் இருந்தனர். அவர்களின் வாழ்க்கைக்கதைகள் காட்டும் சித்திரம் அதுவே. அவர்கள் எவரைப் பற்றியும் ‘சான்றோர்’ என்ற சித்திரத்தை வரலாறு காட்டவில்லை. அப்பழுக்கற்ற ஆளுமைகள் அல்ல அவர்கள். அப்பழுக்கற்ற ஆளுமையில் இருந்து இலக்கியம் உருவாகாது. நிலைகுலைந்த, தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முயன்று அலைபாய்ந்தபடியே இருக்கும், கட்டற்று பாயும் அகம் கொண்ட ஆளுமையில் இருந்தே இலக்கியம் உருவாகும். இன்றுவரை மானுடம் உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர்கூட இதற்கு விதிவிலக்கில்லை.
சிவராம காரந்த்இதெல்லாம் இலக்கியம் பற்றிய ஆரம்பப் பாடம். ஒருவன் ஓராண்டு இலக்கியம் வாசித்தாலே தெரியவரும் உண்மை. ஆனால் இங்கே நாம் அதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இன்றைய சமூகவலைச் சூழலில் அரைவேக்காட்டுக் கருத்துக்களின் பரவல்வேகம் மிகமிக அதிகம்.
இலக்கியவாதி தன்னுடைய இடம் என உணரும் ஒரே களம் புத்தகக் கண்காட்சிதான். அங்கே அவன் அடையும் நிமிர்வுதான் அவன் இச்சூழலில் ஈட்டிக்கொள்ளும் ஒரே விருது. அரசியல்வாதிகள் துணையாட்கள் சூழ உலவுவதை இயல்பாகப் பார்க்கும் பாமரனுக்கு இலக்கியவாதியின் அந்த நிமிர்வு எரிச்சலை ஊட்டுகிறது.
ஆனால் எனக்கு அங்கே ஒவ்வொரு புதிய எழுத்தாளனும் பரவசத்துடன், பரபரப்புடன், உலகமே தன்னை நோக்குகிறது என்ற பிரமையுடன் உலவுவதைக் காணக்காண உளம் நெகிழ்கிறது. ’அப்படியே இரு, உனக்கு கிடைக்கும் வெகுமதி இதுவே, இந்த நிமிர்வில் இருந்தே இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் நீ அடையவேண்டும்’ என்றுதான் நான் உளத்தே சொல்லிக்கொள்வேன். எந்த இளம் எழுத்தாளனிடமும் வாசகனாகச் சென்று கையெழுத்து வாங்கிக்கொள்ள, படம் எடுத்துக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்கள் என்னவர்கள். அவர்களை விட நான் உயர்ந்த ஒழுக்க பீடத்திலோ அறிவுமேடையிலோ இல்லை.
ஓர் எழுத்தாளனைப் பார்த்து மகிழ்வுடன் அருகே செல்லும் வாசகன், அவனிடம் ஓரிரு சொற்கள் பேசி படம் எடுத்துக்கொள்பவன், நூலில் கையெழுத்து வாங்கிக் கொள்பவன் இருக்கும் நிலை இலக்கியம் அளிக்கும் பரவசத்தில் ஒன்று. அந்த எழுத்தாளன் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும், தன்னை ‘மதிக்கவேண்டும்’ என்றெல்லாம் அந்த வாசகன் எதிர்பார்ப்பதில்லை. அது அவனுக்கு அவனே அளித்துக்கொள்ளும் வெகுமதி. இலக்கியத்தைக் கொண்டாடுவது அது.
தகழி சிவசங்கரப் பிள்ளைநான் இன்றும் என்னை ஆட்கொண்ட எழுத்தாளர்களை கண்டால் ஓடிச்செல்பவன்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் எம்.டி.வாசுதேவன் நாயர் காரில் வந்து இறங்கும்போது உள்ளே பேசிக்கொண்டிருந்த நான் என்னை மறந்து அவரை நோக்கி ஓடினேன். அவர் அருகே சென்று பரவசத்துடன் நின்றேன். முதுமையால் சற்று நடுக்கம் கொண்டிருந்த அவர் என்னை மட்டுமல்ல எவரையும் கவனிக்கவில்லை. அதனாலென்ன?
அன்று இன்னொரு மலையாள எழுத்தாளர் நெகிழ்ந்த நிலையில் சொன்னார். ‘ஜெயமோகன், உங்களுடைய குன்றாத ஊக்கம் எங்கிருந்து வருகிறது என்று தெரிகிறது. இலக்கியம் என்னும் செயல்பாட்டில் இருக்கும் பற்று அது. இங்கிருந்து அந்த எல்லை வரை பரவசத்துடன் ஓடிய ஜெயமோகன் மாபெரும் படைப்பாளி. இங்கே தயங்கி நின்ற நான் ஒரு சின்ன கவிஞன். என்னை மறந்த அந்த பெரும்பரவசம் எனக்கு வரவில்லை. வராதவரை இந்த தேவதை எனக்கு அருளப்போவதுமில்லை’
நான் வைக்கம் முகமது பஷீரை கண்டவன். க.நா.சுப்ரமணியத்தை கண்டிருக்கிறேன். சி.சு.செல்லப்பாவை, எம்.கோவிந்தனை, சிவராம காரந்தை, தகழி சிவசங்கரப் பிள்ளையை, வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனனை, அதீன் பந்த்யோபாத்யாவை, ஓ.வி.விஜயனை லா.ச.ராமாமிர்தத்தைக் கண்டிருக்கிறேன். நான் வழிபட்ட அத்தனைபேரையும் தேடிச்சென்று சந்தித்திருக்கிறேன். ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறேன். பெரும்பாலும் அர்த்தமற்ற அறிமுகச் சொற்கள். நெஞ்சு படபடக்க அவர்களை வெறுமே பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்.
அவர்கள் என்னை அறிந்திருக்கவோ நினைவில் வைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது நான் மிக ஆரம்பநிலை வாசகன். க.நா.சுப்ரமணியத்திடம் நான் ஓரிரு சொற்களே பேசினேன். சி.சு.செல்லப்பா என்னை பொருட்படுத்தவே இல்லை. வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் என்னை திட்டி அனுப்பினார்.ஆனால் என் நினைவுகள் இன்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. பெரும் பரவசத்துடன் அவர்களைப் பற்றி எண்ணிக் கொள்கிறேன். அச்சந்திப்புகள் என் அருங்கணங்கள், அந்நினைவுகள் என் செல்வங்கள்.
குவெம்புஏனென்றால் மெய்யான இலக்கிய வாசகனுக்கு எழுத்தாளனின் தோற்றமே முக்கியமானதுதான். இக்கணம் சட்டென்று அசோகமித்திரனை நினைவுகூர்ந்து நெஞ்சு நெகிழ்கிறேன். அந்த மெலிய முகம். இதோ என் நூலக அடுக்கின் முன் அவர் படம் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருநாளில் ஒருமுறையாவது சுந்தர ராமசாமி பெயரைச் சொல்கிறேன். ஆற்றூர் ரவிவர்மாவை பற்றி பேசுகிறேன். நான் யார் என்றால் இதோ இவர்கள் அனைவரையும் என் முன்னோராக வரித்துக்கொண்ட ஒருவன் என்றே சொல்வேன்.
நானறிந்த பேராளுமைகள் பெரும்பாலும் அனைவருமே எழுத்தாளர்கள்தான். நான் காந்திய இயக்கத்தவரை, ஆன்மிக ஞானியரை, பொதுச்சேவையாளர்களை சென்று கண்டிருக்கிறேன். கேளுச்சரண் மகாபாத்ரா, கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர், பூபேன் கக்கர் போன்ற பெருங்கலைஞர்களை சந்தித்திருக்கிறேன். ஆதிமூலம் போன்ற கலைஞர்களை நன்கறிவேன். ஆயினும் எழுத்தாளர்களே எனக்கு பேராளுமைகளாக தெரிகிறார்கள்.
எழுத்தாளர்களின் சிதறல்களும், சிக்கல்களும் எனக்கு தெரியும். அவர்கள் எழுந்த கணங்களை அவர்களின் எழுத்துக்களில் கண்டபின் அவர்களின் இயல்பான கணங்களை அன்றாடத்தில் காணும் வேறுபாட்டையும் அறிந்திருக்கிறேன். அவர்களை ஒழுக்கம், அறம், கருணை ஆகியவற்றின் உச்சத்தில் நின்ற சான்றோர்களாக எண்ணுவதில்லை. சொல்லும் செயலும் ஒன்றானவர்களாக காண்பதுமில்லை. அப்படிப்பட்ட அறத்தோர்கள் பெரும்பாலும் உறைந்துநின்றுவிட்டவர்களாக, சலிப்பூட்டும் ஒற்றைப்படைத்தன்மை கொண்டவர்களாகவே தோன்றுகிறார்கள்.
எழுத்தாளர்கள் என நான் கண்டவர்கள் மிகச்சிக்கலான மின்பொறி போன்றவர்கள். நாமறியாத மர்மம் கொண்டவர்கள். மிகமிக நுண்மையானவர்கள். ஆகவே அவர்கள் எப்படி எதற்கு எதிர்வினையாற்றுவார்கள் என்றே சொல்லமுடியாது. அவர்களைக் கையாள்வதே கடினம். கண்ணிவெடிகள் போன்றவர்கள் அவர்களில் பலர். ஆனால் அவர்களின் சொற்களே என் சிந்தனையைச் சொடுக்குகின்றன.என் நுண்ணுணர்வை தொட்டு எழுப்புகின்றன. அவர்களுடன் இருக்கையிலேயே நான் முழுவிழிப்புடன் இருக்கிறேன்.
என் பார்வையில் அவர்களின் தோற்றமேகூட முக்கியமானது. தேவதேவனின் தோற்றம்போல இனிய பிறிதொன்று உண்டா? இந்த தலைமுறையில் நம்முடன் வாழ்பவர்களில் பேரழகன் என நான் சொல்வது அவரையே. அவருடைய எந்தப் படத்தையும் பெரும் மோகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். பாருங்கள், பெரும்பாலான எழுத்தாளர்கள் அழகான உடல்கொண்டவர்கள் அல்ல. இளமையில் அவர்கள் அழகாக இருந்ததுமில்லை. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் சோர்ந்து சலித்துவிடும் வயதில், முடிக்கு ஆபாசமாக கருவண்ணமெல்லாம் அடித்து செயற்கையாக இளமையை நடித்து அருவருப்பூட்டும் வயதில், எழுத்தாளர்கள் எத்தனை அழகாக ஆகிறார்கள். அது சொல்லின் அழகு. அவர்கள் உபாசித்த இலக்கியத்தின் கொடை.
அந்த இலக்கியமே வாசகனையும் எழுத்தாளனையும் இணைக்கிறது. அது ‘தேவையான நூல்களை வாசித்து அறிவை விருத்தி செய்துகொள்வது’ அல்ல. அது ஒரு பெரும் களியாட்டு. அத்தனை பரவசங்களும் மயக்கங்களும் கொண்டது. அப்படி அதை அணுகுபவர் மட்டுமே இலக்கியத்தை மெய்யாக அறியமுடியும். உலகம் எங்கும் அப்படித்தான். உலகில் பலநாடுகளில் புத்தகக் கடைகளில் பெரும்பரவசத்துடன் பதறும் உடலுடன் உலவுபவர்களை கண்டு நான் நெகிழ்ந்து புன்னகைத்ததுண்டு. ஒரு சொல்கூட வாசிக்கமுடியாத இந்தோனேசிய மொழி நூல்கள் கொண்ட நூலகத்தின் நடுவே அதே பரவசத்தை அடைந்து நான் சுற்றி வந்திருக்கிறேன்.
புத்தகக் கண்காட்சியில் திமிர்த்து அலையும் ஒவ்வொரு எழுத்தாளனும் என்னவன். நூல்களையும் ஆசிரியனையும் கண்டு பரவசமடையும் ஒவ்வொரு வாசகனும் என்னவன். என் இனம் அவர்கள். என் குருதி அவர்கள். நாங்கள் இவ்வுலகில் எழுதியும் வாசித்தும் ஓர் உலகை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இவ்வுலகை அர்த்தப்படுத்தும் ஒன்றை, இவ்வுலகை விட மேலான ஒன்றை. அதை பிறிதொருவர் அறியவே முடியாது.
ஆகவே எழுத்தாளர்களை வழிபடுவோம். அதில் நாம் தயங்க வேண்டியதில்லை. அதைச் செய்யாதே என ஆலோசனை சொல்லவரும் அற்பனிடம் ‘ஆமடா, அப்படித்தான் செய்வோம். இது எங்கள் உலகம். வாசிப்பவனும் எழுதுபவனும் சேர்ந்து உருவாக்கும் உலகம். நீ உள்ளே நுழையாதே. அப்பால் போடா. போய் உன் சாமிகளைக் கும்பிடு. உனக்கு விதிக்கப்பட்டது அதுவே’ என்று சொல்வோம்.
ஜெ
பேராசிரியர் ஜேசுதாசனும் சடங்குகளும்
கிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி
கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2
வணக்கம்,
நீங்கள் பேராசிரியர் யேசுதாசனை பேட்டி கண்ட பதிவுகளை வாசிக்கும்போது எழுந்த சந்தேகம் இது. அவரின் நோக்கில் அறம் ஒழுக்கம், சடங்குகள் போன்ற படிநிலையில் சடங்கு குறித்த மதிப்பீடு தவறு அல்லது தவறான கோணம் என்றே எண்ணுகிறேன். அவர் சடங்குகளை கீழ்நிலையில் வைக்கிறார், நான் சடங்குகளை அறத்தை அடையும் வழியில், ஒருவன் எடுத்து வைக்கும் முதல் அடியாகவும், அந்த ஏணியின் முதல் படியாகவும் காண்கிறேன்.
உதாரணமாக, இன்று வெற்றுச்சடங்காக மாறியிருக்கின்ற, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயம் செல்லும் பழக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். திட்டவட்டமாக அது ஒரு சடங்கே. ஆனால், அதனை பின்பற்றும் ஒருவர் தேவாலய கூடுகைக்கு பரிசுத்த அலங்காரத்துடன் செல்ல வேண்டுமானால், அவர் செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் அவருக்கு ஒழுக்கத்தினை அளிக்கும். அதேபோல் தேவாலயத்தில், விவிலியம் வாசிக்கப்படும் போது அங்கிருக்கும் மெய்த்தேடல் கொண்ட ஒருவருக்காவது விவிலியத்தில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளி அல்லது கண்ணி ஒருவித அறவுணர்வை சீண்டும் அல்லவா? அவ்வாறு அறம் சீண்டப்பட்ட பின்பு அவர் அந்தச் சடங்கை தவிர்க்கலாம். ஆனால், அதற்கு காரணமான சடங்கினை தவறு என்றோ, மிகக்குறைவாக மதிப்பிடுவதோ சரியான பார்வைக்கோணமா?
பழங்குடிமரபுகளுக்குள் ஒன்றான சடங்குகளுக்கு எதிரான பார்வையை பேராசிரியர் அவரது மதத்தில் இருந்து பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். சடங்கில் தொடங்கி, ஒழுக்கத்தில் ஒழுகி, சென்றடையும் இலக்கே “அறம்” என தொகுக்கலாமென்று நினைக்கிறன். எனது இந்த நோக்கு சரியா? அல்லது குறைந்தபட்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தக்க ஒன்றா? சடங்குகளை முற்றாக மறுப்பதோ அழிப்பதோ பேரழகு கொண்ட இலக்கை நோக்கிய ஒரு பயணத்தின் தொடக்கத்தையை நிறுத்தி முடங்க வைப்பது போலாகாதா?
சடங்குகளை மட்டும் பற்றிக் கொண்டிருக்கும் சமூகத்திலிருந்து மேலெழுந்த ஞானிகள் பலர்.உங்கள் தளத்திலேயே உதாரணங்கள் உண்டு. அவர்கள் வந்த வழி அதுவே அதை ஒருபோதும் எவரும் அடைக்கலாகாது. அப்படி சடங்குகளை நிராகரிப்பதன் மூலம், அதை மூர்க்கமாக பற்றிக்கொண்டு அதிலிருந்து முன் செல்லும் கதவுகளை அடைக்கும் ஒரு சமூகம் உருவாகிவிடாதா?
இலட்சுமி நாராயணன்
கீழநத்தம், திருநெல்வேலி
அன்புள்ள இலட்சுமிநாராயணன்
அது அவருடைய பார்வை. நான் சடங்குகளுக்கு எதிரானவன் அல்ல. சடங்குகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. பெரும்பாலான சடங்குகள் மிகமிகத் தொன்மையானவை. நம் பழங்குடி வாழ்வுடன் தொடர்புள்ளவை. அவை குறியீட்டுச் செயல்பாடுகள். குறியீட்டுச் செயல்பாடுகள் நம் அறிவை தொடுபவை அல்ல. அவை நம் அக ஆழத்தை, நனவிலியை நேரடியாகச் சென்றடைகின்றன. உலகியலில் நாம் சில விழுமியங்களை சடங்குகள் வழியாகவே நம் அக ஆழத்திற்குச் சொல்லிக்கொள்கிறோம். திருமணம், நீத்தார்கடன்கள் போன்றவை சடங்குகளாக செய்யப்படுபவை. அவை இல்லையேல் நாம் இவ்வாழ்க்கை சார்ந்த உறுதிப்பாடுகளை அடைய முடியாது. கட்டிடங்களை திறந்துவைப்பது, நூல்வெளியிடுவது போல ஏராளமான புதுச்சடங்குகளும் உள்ளன. ஆன்மிகத்தில் சடங்குச்செயல்பாடுகள் வழியாகவே அடிப்படையான எண்ணங்களை நம் நனவிலிக்குச் செலுத்த முடியும்.
ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு இந்து மதம் வெறுமே சடங்குகள் மட்டுமாக இருந்தபோது கிறிஸ்தவப் போதகர்கள் அது தத்துவம் இல்லாத வெற்றுச்சடங்குமதம் என்றனர். அதனால் சீண்டப்பட்ட இந்துச் சீர்திருத்தவாதிகள் சடங்குகளைக் கண்டித்து தத்துவத்தை முன்வைத்தனர். இன்று சடங்குகளும் தத்துவமும் இணைந்த பார்வைகள் உருவாகியிருக்கின்றன. பேராசிரியர் ஜேசுதாசன் தத்துவங்களை மட்டுமே முன்வைக்கும், சடங்குகளுக்கு எதிரான பார்வை கொண்டவர். அவர் வாழ்ந்த காலகட்ட நம்பிக்கை அது. தன் மதம் சார்ந்தும் அவருடைய பார்வை அதுவே
ஜெ
புனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
புனைவுக் களியாட்டு வரிசையில் வந்துள்ள நூல்களை அச்சு வடிவில் இன்று வாங்கினேன். நான் இவை பெருந்தொகுதிகளாக வரும் என நினைத்தேன். பெருந்தொகுதிகளாக வருவது ஒருவகையில் நல்லது. அவை நம்முடைய கவனத்திலேயே இருந்துகொண்டிருக்கும். நூல்களுக்கு ஒரு கெத்து இருக்கும். ஆனால் பெருந்தொகுதிகளை நாம் அடிக்கடி எடுத்து படிப்பதில்லை என்பதும் உண்மை.
சிறிய தொகுதிகளாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியை அளித்தது. கதைகளின் அமைப்புக்குள் ஓர் ஒருமை இருந்தது. அதிலும் திபெத்தியக் கதைகள் கொண்ட தங்கப்புத்தகம் ஒரு மிஸ்டிக் நூல் போலவே அற்புதமான வாசிப்பனுபவம். தொடராக வெளிவந்தபோது எல்லா கதைகளையும் அப்படி வாசித்திருக்க மாட்டோம். இப்போது வரிசையாக வாசிக்கையில் ஒரே நாவல்போல தோன்றுகின்றன. ஒரு பெரிய இலக்கிய அனுபவம் அந்த நூல்.
முதுநாவல் புத்தகமும் அதேபோல ஒரு நல்ல ஒற்றை அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.
ஆர்.குமார்
அன்புள்ள ஜெ,
சென்னை புத்தகக் கண்காட்சியில் புனைவுக் களியாட்டு நூல்களை வாங்கினேன். புனைவுக்களியாட்டு கதைகளை ஏற்கனவே படித்திருந்தாலும் இப்படி பொதுவான தீம் கொண்ட நூல்களாக வாசிப்பது அபாரமான அனுபவமாக இருந்தது. பத்துலட்சம் காலடிகள் நூலில் எல்லா கதைகளிலும் ஔசேப்பச்சன் வருகிறார். ஔசேப்பச்சனை நீங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கவேண்டும் ஜெ. அற்புதமான கதாபாத்திரம் அது. துப்பறியும் கதாபாத்திரங்களுக்கே ஒரு செயற்கைத்தன்மை வந்துவிடும். இவர் இயல்பாக நானறிந்த 99 சதவீதம் சிரியன் கிறிஸ்தவர்களைப்போல பீஃபும் குடியும் நையாண்டியுமாக இருக்கிறார்.
மகாதேவன்
அன்புள்ள ஜெ
புனைவுக் களியாட்டு அச்சுநூல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அமைப்பும் அட்டை வண்ணங்களும் மென்மையானவையாக அழகானவையாக இருந்தன. வடிவமைப்பாளருக்கு என் பாராட்டுக்கள்.முதுநாவல்தான் மிக அழகான அட்டை.
எஸ்.ஆர்.விஸ்வநாத்
தன்னறம் வெளியீடுகள்
எழுதுக
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது. எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன.”
~ ஜெயமோகன்
இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கடிதவழி உரையாடல்களின் சிறுதொகுதியே ‘எழுதுக’ என்னும் இப்புத்தகம். இத்தனை ஆண்டுக்காலம் எழுத்துலகிலும் விமர்சனவுலகிலும் தன் பார்வையைத் தொடர்ந்து பதிவுசெய்தும், இலக்கியவோட்டத்தை பொறுமையுற அவதானித்தும் வருகிற ஓர் மூத்த எழுத்தாளர், தன் சமகால இளைய மனங்கள் எழுத்தின் மீது கொண்டுள்ள படைப்புத்தயக்கங்களை நீங்கியெழ இந்நூலின் கட்டுரைகள் நிச்சயம் உதவக்கூடும். எழுதத் துவங்கிற, எழுத்தின்வழி துலங்க விரும்புகிற எல்லோருக்குமான திசைச்சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல்.
தன்னைக் கடத்தல்
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள். தங்கள் தனிவாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக்கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதிலுள்ளன. அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும் சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே இதில் பதிவாகியிருக்கின்றன. இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை, ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது, தன் எல்லைகளைக் கடந்தவர்கள் மற்றும் கடக்க முற்படுபவர்களின் கதை.”
~ ஜெயமோகன்
‘விழிப்புணர்தலே குணமாகுதலின் முதற்படி’ என்ற கூற்று வாழ்வின் அனைத்து அகக்கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுப்பதில். மீளவே முடியாது என நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தடைகளையும், எங்கோ யாரோ ஒருவர் மீண்டெழுந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அதேபோல, நமக்கு மட்டுமே உண்டான தனிச்சிக்கல் என யூகித்திருந்த ஒரு விசயத்திற்கு, இன்னொரு மனிதன் தன் வாழ்விலிருந்து தீர்வுரைக்கும் போது நம் மனம் மறுபரிசீலனைக்கு உள்ளாகிறது.
அவ்வகையில் இன்றைய நவீன சமூகத்தின் உளநிலையில் மெல்லமெல்ல ஆதிக்கம் செலுத்திவரும் டின்னிடஸ் எனும் காதிரைச்சல், உறக்கமின்மை, உளச்சோர்வு ஆகிய பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து தங்களை எவ்வாறு மீட்டுக் கொண்டார்கள் என்பதை அவர்களின் கடித மொழியிலேயே பதிவுசெய்த நூலாக ‘தன்னைக் கடத்தல்’ புத்தகமடைந்துள்ளது. நிச்சயம் இந்தச் சிக்கல்கள் பொதுச்சமூத்தில் உரையாடப்படுவதைக் காட்டிலும், சிக்கலுக்குள்ளானோரின் அகத்தில் ஓர் தீர்வுரையாடலாகத் துவங்கப்பட வேண்டுமென ஜெயமோகன் விழைகிறார். தன்னறம் வாயிலாக இதற்கு முன்பு வெளியாகிப் பரவலடைந்து ‘தன்மீட்சி’ நூலின் இன்னொரு நீட்சிப்பரிமாணம் என்றும் இந்நூலைக் கருதலாம்.
இயற்கையை அறிதல்
எமர்சன் (தமிழில்: ஜெயமோகன்)
“எல்லா இயற்கை உண்மையும் ஓர் ஆன்மீக உண்மையின் குறியீடேயாகும்.” எழுத்து, சொற்பொழிவு என்ற இரு படைப்பாக்க நிலைகளிலும் உலகில் சிறந்த படைப்புவாதிகளுள் ஒருவராக அறியப்படுபவர் எமர்சன். தனிமனித அகத்தின் ஆழ்நிலைகளை முன்னிலைப்படுத்திய முன்னறிவு கொண்டவராக எமர்சன் இன்று உலகறியப்படுகிறார். ‘பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு’ என தன்னுடைய தத்துவத்தளத்தை விஸ்தரித்துக் கொண்ட எமர்சன் இறுகிய மெய்யியல் கோட்பாடுகள் எதையுமே ஏற்காதவர். எமர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், “தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக்கொள்கை” என்றுரைத்தார்.
1836ம் ஆண்டில் ‘இயற்கை’ என்னும் தலைப்பில் புகழ்மிக்க ஒரு கட்டுரையை அவர் வெளியிட்டார். இக்கட்டுரை சுமந்திருக்கும் உள்ளடக்கச் செறிவும், அகவிடுதலை முழக்கமும் இன்றுவரை வியக்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. வரிக்கு வரி மேலும் மேலும் கூர்மை கொண்டு வாசிப்பவரின் அகத்தில் இயற்கையைப் பற்றிய தன்னுணர்தலையும் தெளிவினையும் தத்துவநோக்கில் உண்டாக்கும் படைப்பு என்றும் இதைச் சொல்லலாம். உண்மையில் எமர்சனின் எழுத்துவளமும், கருத்துவளமும் ஒருசேர இதில் வெளிப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம் மற்றும் தத்துவப்பரப்பில் பெரும் அலையை உருவாக்கியது இக்கட்டுரை.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் பல ஆண்டுகள் முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்ட்டு, தமிழினி பதிப்பகம் மூலம் வெளியாகிய இந்நூல் ‘இயற்கையை அறிதல்’ என்னும் அதே தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தற்போது மறுவெளியீடு அடைகிறது. இந்நூலை வடிவமைத்து அச்சாக்கும் வாய்ப்பு அமைந்ததில் எல்லையற்ற மகிழ்வு கொள்கிறோம். ஒவ்வொரு தனிமனித அகக்குரலும் சம அளவு பிரபஞ்சத்தகுதி உடையவை; ஆன்ம நிலையில் எல்லாவுமே ஏற்றத்தாழ்வுகளற்றது என்பதனையும், தனிமனித மனம் இயற்கையை அணுகும் தரிசனத்தை தனிமை, நுகர்வு, அழகு, மொழி, கட்டுப்பாடு, கருத்துமுதல் வாதம், ஆத்மா, சாத்தியக்கூறுகள் என்னும் எட்டு உபதலைப்புகளின் வழியாக விவரித்துரைக்கிறது இந்நூல்.
தன் உள்ளடக்கத்தின் கட்டுமானத்தாலும், அதன் அர்த்த ஆழச்செறிவினாலும் நம்மை நோக்கி ஓர் அறைகூவலை எழுப்பும் ஒவ்வொரு படைப்பும், நம்முடைய அகவிடுதலையை வார்த்து சீர்திருத்துகிறது. அவ்வகையில், தமிழில் நிகழ்ந்த முக்கியமான மொழிபெயர்ப்பில் இக்கட்டுரையும் தனிச்சிறப்பு கொள்கிறது. ஒவ்வொரு வாசக மனதும் அவசியம் வாசித்து விவாதிக்க வேண்டிய நற்படைப்பு இது.
~
சென்னைப் புத்தகக் கண்காட்சியின் தும்பி-தன்னறம் நூலரங்கில் இம்மூன்று நூல்களும் வாசக மனங்களுக்காகக் காத்திருக்கின்றன. தோழமைகள் வாய்ப்பமைத்து வர வேண்டிக்கொள்கிறோம். அன்பின் நன்றிகள்!
தும்பி – தன்னறம் நூல்வெளி
புத்தகக் கண்காட்சி அரங்கு எண்: 392
www.thannaram.in / 9843870059
களிற்றியானை நிரை
சென்னை செனட்டோரியம் சித்த மருத்துவ மனையின் உள்நோயாளிகள் பிரிவில் பகவத்கீதையின் எளிய உரை ஒன்றை வாசித்து கொண்டிருந்த பதினான்கு வயது பையனிடம், “ இதை ஏன் படிக்கிறாய் ? நீ படிக்க வேண்டியது கந்த சஷ்டி கவசத்தை தான்.” என முதியவரின் குரலை நினைத்து கொள்கிறேன். இன்று மேலும் அர்த்தம் தருவதாகவே உள்ளது அந்த வரி. அன்று வாழ்க்கையை துறக்க சொல்லும் எளிய நூலாக தென்பட்டது கீதை. அங்கிருந்து வாழ்க்கையில் எனக்கான தன்னறத்தை மூழு வீச்சில் ஆற்றி கடந்து செல்ல சொல்லும் நூலாக மாறியுள்ளது இன்று.
வெண்முரசை வாசிக்க தொடங்கிய பின் எனக்கு ஏன் அறிவின், ஆன்மீகத்தின் மேல் ஆர்வம் எழுந்தது என்ற வினாவையே கேட்டு கொண்டேன். இன்றுள்ள பொதுவான இந்திய மனத்திற்கு அறிவு என்பது அதிகாரத்தின் அடையாளம், ஆன்மீகம் என்பது மாயாச்சக்திகளை கைக்கொள்ளுதல். உடலால் என்னால் இவற்றை அடைய முடியாதெனில் உளத்தால் அடைய முயல்கிறேன் என்ற விழைவே. அது அந்த குழந்தைத்தனமான புரிதலில் தொடங்கியிருந்தாலும் வளர வளர எத்தனை விரிவும் ஆழமும் மிக்கவை என்பதை உணர்கிறேன்.
இப்போது களிற்றியானை வாசித்து வருகிறேன். இன்று சுரதனை கண்டேன். ஒருகணம் நெஞ்சம் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். எரியும் பிணம் எழுந்து அருகணைந்தால் வரும் அச்சம் அது. இந்த நாவல் ஒரு புது நகரம் உருவாகி கொண்டிருப்பதை காட்டுகிறது. ஆனால் எழுச்சியை அல்ல, முழுமையாக நிகழ்ந்து முடிந்த ஒன்று உருவாக்கும் வெறுமையை தருகிறது. ஏன் என்று நினைத்தால் தோன்றுவது, ஏற்கெனவே வீழ்ந்த நகரோன்றின் பிரதிநிதிகளே இந்நகரின் உருவாக்குநர்கள். அவர்களது கனவுகள் வீழ்ந்து முற்றிலும் அறியாத புதிதான ஒன்று முளைத்தெழுகிறது. அந்த புதுத்தளிரே இனி தாங்கள் என்றாலும் அவர்களின் பழைய அகம் ஏதோ நிறைவின்மையை அடைகிறது. பழையவற்றில் புதியவற்றுடன் இணைபவற்றை பொருத்தி நிறைவு கொள்கிறது.
இந்த நாவலை வாசித்து கொண்டிருக்கையிலேயே மழைப்பாடலின் நினைவு அவ்வப்போது தலை தூக்குகிறது. அங்கே தான் சத்தியவதி அஸ்தினபுரியை வல்லமைமிக்க அரசாக நிறுவிவிட்டு செல்கிறாள். இங்கேயும் வல்லமைமிக்க புதிய அரசொன்றே எழுகிறது. மழைப்பாடல் இனிமையையும் களிற்றியானை நிரை நிறைவின் வெறுமையையும் தருவது எதனால் ? கனவுகளால் தான்.
மழைப்பாடல் வருங்காலமெனும் கனவில் ஆழவேரூன்றி உள்ளது. நிகழில் எந்த கனவுகளும் இல்லை. மானுடருக்கு ஏதோ ஒரு கனவு தேவை. அது கடந்தகாலம் எனில் இனிய சோர்வெனும் மயக்கம். வருங்காலமென்றால் செயலூக்கம். களிற்றியானை நிரை பழைய கனவுகள் தாளமுடியா துயரத்தை அளிப்பவையாக மாறிய பின் வருங்காலத்தை நோக்கும் அளவுக்கு ஓய்வு இல்லாத நிகழ்காலத்தையே நின்று நிலைபெற செய்யும் முயற்சிகளின் காலக்கட்டம். அங்கே ஒவ்வொன்றும் முழுமையடைந்ததாக வேண்டும். ஒவ்வொரு முழுமையும் விட்டு செல்லும் வினா, எஞ்சுவது என்ன ? அதையே வெறுமை என உணர்கிறோம்.
அந்த வினா சுரதனை போல ஒரு விடையை காட்டுகையில் நெஞ்சம் நிலைகுலைகிறது. எத்தனை தீமை! அதேபோல் நமது தன் நடிப்புகள் தோலுரிக்கப்படும் போது வரும் வேதனையும் திகைப்பும் சொல்லில் எழுமுடியுமா! இதனோடு நினைத்து கொள்கிறேன், இத்தனையையும் கடந்து சென்றவனே அந்த மெய்மையை அறிகிறான். அப்படியெனில் எத்தனை அரியது அது. கோடிகோடிகளில் ஒருவனே சென்றடைய கூடிய இடம். அப்படி கிளம்பியவர்களில் நானும் ஒருவன். இவற்றையெல்லாம் அறிந்த பின் மீளும் வழியே அல்ல, தலையை முட்ட வேண்டும். வீழ்ந்தாலும் நன்றே. என்னில் எழுந்தது அரியதொன்றிற்கான ஆர்வம் ஒருசேர ஆணவத்தையும் வியப்பையும் ஊக்கத்தையும் தருகிறது.
இவற்றை பார்த்துகொண்டு வருகையில் இத்தனை இருள்வழி பாதைகளில் சென்று மீண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் சந்திக்கையிலும் நான் காணும் உங்களது கனிவு முகம் வியப்புறவே செய்கிறது. எத்தனை அரிய மனிதரொருவரின் அன்பை பெற்றிருக்கிறேன். இங்கிருந்து சொற்கள் உள்ளத்தை ஊடுருவ விட்டு சென்றால் என் இருள் தெரிந்தபடியே போகும். அதனை எனக்குரிய வேறு களங்களில் செயலாற்றியே அறிய வேண்டும். கடக்க வேண்டும்.
அன்புடன்
சக்திவேல்
சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-14
நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-14, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் “வெண்முகில் நகரம்” நாவலின் 1 முதல் 6 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
1. பொன்னொளிர் நாக்கு
2. ஆழ்கடல் பாவை
3. பிடியின் காலடிகள்
4. தழல்நடனம்
5. ஆடிச்சூரியன்
6. ஆடியின் அனல்
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 27-02-22, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
சிகண்டி -அறிமுக விழா
‘சிகண்டி’ நாவல் அறிமுகக் கூட்டம்வெள்ளிக்கிழமை (25.2.2022)மலேசியா/ சிங்கப்பூர் :7:00 – 9:30pmஇந்தியா/ இலங்கை: 4.30 – 6.30 pmஇணைப்பு:https://meet.google.com/rns-dcib-stfநேரலை இணைப்புhttps://youtu.be/wpKSY4ICcok
February 23, 2022
ஒளிரும் ஒரு சிறுவட்டம்
அடாது மழை பெய்யினும் விடாது நிகழ்ச்சி நடக்கும் என்று பழைய காலத்தில் நாடக நிறுவனங்கள் விளம்பரம் செய்வதுண்டு. அக்காலத்தில் ஒரு மேடையை மட்டும் மூங்கிலாலும் பலகையாலும் அமைப்பார்கள். அதற்கு மேலே மட்டும் நனையாமல் ஓலைக்கூரை அமையும். எஞ்சிய முன்பகுதி திறந்த வானம் கொண்டது. மூங்கில் நட்டு ஓலைப்படல்களால் ஒரு வேலி மறைப்பு அமைத்து வளைத்திருப்பார்கள் அதுதான் அரங்கு. இரவு ஒன்பது அல்லது பத்து மணிவாக்கில் தொடங்கும் நாடகம் விடியற்காலை இரண்டு மூன்றுமணி வரைக்கும் தொடரும். அத்தனை நேரமும் பார்வையாளர்கள் பனியில் தான் அமர்ந்திருக்கவேண்டும்.
அதற்கான முன்னேற்பாடுகளுடன் தான் அவர்கள் வருவார்கள். பெரும்பாலும் சேர்த்து தைத்த கோணிப்பைகள். அரிதாக கம்பளிகள் .பழைய நினைவொன்றில் பனையோலை சேர்த்து இறுக்கமாகப் பின்னி உருவாக்கிய ஒன்றைக்கொண்டு வந்து அதைக் குடையும் போர்வையும் போலப் போர்த்திக்கொண்டு நாடகம் பார்ப்போம் என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு குட்டிக்குடிசை, அதற்குள் வெதுவெதுப்பாக அமர்ந்துகொண்டு நாடகத்தைப்பார்க்கலாம். பெரும்பாலானவர்கள் காலணா போன்ற கட்டணங்களைக்கொடுத்துவிட்டு தரையில் குந்தி அமர்ந்துதான் நாடகம் பார்க்க வேண்டும். முக்கிய நபர்களுக்கு மட்டும் முன்வரிசையில் ஒரு சின்ன வளைப்பிற்குள் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் பின்னால் நிற்பவர்களுக்கு மறைக்காதபடி பக்கவாட்டில் அமரவைக்கப்படுவார்கள்.
இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய எதிரி என்பது மழைதான். மழையால் நிகழ்ச்சி நின்றுவிடுவதென்பது தமிழகத்தின் பல இடங்களில் நிகழ்வது. குறிப்பாக கோடைமழை நாடகத்திற்கு மிக எதிரி. மழைக்காலத்தில் பெரும்பாலும் நாடகக்குழுக்கள் பெருநகரங்களுக்கு வந்துவிடுவார்கள். ஒற்றைவாடை தியேட்டர் போன்ற கூரையுள்ள உள்ளரங்குகளில் நாடகங்கள் நடக்கும் .பெருந்திரளாக மக்கள் பார்க்கும் வெளிஅரங்கு நிகழ்ச்சிகள் எல்லாமே கோடைகாலங்களில் தான், சித்திரை பங்குனி. அக்காலத்தில் திடீரென்று மழை பெய்வதென்பது அவர்களுடைய நிகழ்வை அழித்துவிடுவது. அப்படியென்றால் விடாது நாடகம் நட்க்கும் என்று எப்படி அறிவிக்கிறார்கள்? மொத்த நாடகத்தையும் நீங்கள் மழையில் நனைந்துகொண்டு பார்க்கவேண்டும் என்று பார்வையாளர்களிடம் சொல்வதுதான் அது.
அன்றைய பார்வையாளர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள் என்றுதான் தெரிகிறது. ஏனெனில் விடாது மழை பெய்தது, நாங்களும் நாடகத்தை நடித்து முடித்தோம் என்றெல்லாம் பழைய நாடக நினைவுகளில் எழுதியிருக்கிறார்கள். இந்த பனையோலைக்குடைகள் கமுகுப்பாளைக்குடைகள் இன்னும் வெவ்வேறு கவசங்களுடன் மழையில் நாடகத்தைப் பார்த்திருப்பார்கள். அல்லது அது கூட இல்லாமல் ஆர்வமே குடையாக அமர்ந்து பார்த்திருப்பார்கள்.
சென்ற தொற்று நோய்க் காலத்தை எண்ணிப்பார்க்கையில் நான் அடிக்கடி பயன்படுத்தும் சொலவடை அடாது மழை பெய்யினும் விடாது நாடகம் நடக்கும் என்பதுதான். ஏனென்றால் இந்த தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் விஷ்ணுபுரம் நண்பர் குழுவின் தொடர்ச்செயல்கள் எந்த வகையிலும் நின்றுவிடவில்லை. சட்டம் அனுமதிக்கும் காலம் முழுக்க நாங்கள் தொடர்ந்து பயணங்கள் செய்து கொண்டுதான் இருந்தோம். தொடர்ந்து இலக்கிய சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தோம். பங்கேற்பாளர் எண்ணிக்கையை சட்ட வரையறைகளுக்கேற்ப குறைத்துக் கொண்டோமேயொழிய எந்த நிகழ்வையும் நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கேற்ப எங்கள் நண்பர்களும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் திரண்டு வந்துகொண்டுதான் இருந்தார்கள்.
வியப்பூட்டும் விஷயம் இது. தொற்று நோய்க்காலம் முடிந்தவுடன் முதல் இளம் வாசகர் சந்திப்பை அறிவித்தபோது ஒரு பத்து பேர் விண்ணப்பித்தால்கூட நடத்திவிடலாம் என்று கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் முப்பது பேர் விண்ணப்பிக்கவே இரண்டு நிகழ்ச்சிகளாக அவற்றை நிகழ்த்தவேண்டியிருந்தது. இது தவிர ஸூம் செயலி வழியாக நாடகங்கள், தனி நடிப்புகள், கதைசொல்லல்கள், உரையாடல்கள் என்று வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தித்துக்கொண்டிருந்தோம். அச்சந்திப்புகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரையும் ஒருதிரளாக ஒருவருக்கொருவர் மிக அணுக்கமானவர்களாக மாற்றின. அந்நட்புகள் நோய்க்காலம் முடிந்தபிறகும் அதே தீவிரத்துடன் இன்று தொடர்கின்றன. பல குழுக்கள் அதே வேகத்துடன் இப்போதும் செயல்படுகின்றன.
இப்போது எல்லாம் ஒரு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகத் தோன்றுகிறது. அந்த எண்ணம் வந்ததுமே புதிய வாசகர் சந்திப்பை அறிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணன் துடிக்கத் தொடங்கினார். அறிவிப்பு வெளியிட்ட ஒன்றரை மணிநேரத்தில் பங்கேற்பாளர் எண்ணிக்கை எங்கள் கணிப்பை தாண்டிவிட்டதால் அதை எடுத்துவிட்டோம். ஆயினும் முப்பத்தி ஐந்து பேருக்குமேல் விண்ணப்பம் வந்தது. இருபத்தைந்து பேரை மட்டுமே கோவையில் சந்திக்க ஏற்பாடு செய்தோம். எஞ்சியவர்களுக்காக ஈரோட்டில் இன்னொரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். அவ்வறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே தேவையானவர்கள் வந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது.
இம்முறையும் பாலு தோட்டத்தில் சந்திப்பு. கோவையில் வெயில் காலம் தொடங்கிவிட்டது. பகலில் வெக்கை எழுகிறது. மண் காய்ந்துபுழுதி பறக்கிறது. ஆயினும் விடியற்காலையில் கொஞ்சம் குளிர் உள்ளது. நண்பர் சந்திப்புகளுக்கு உகந்தது இதுதான். இச்சந்திப்புகள் பற்றிய பகிர்வுகளில் இருக்கும் உற்சாகத்தை நம்பி இதெல்லாம் வசதியான இடங்கள் வசதியாக நடத்தப்படுவன என எண்ணவேண்டியதில்லை. இருபது பேர் ஒரே கட்டிடத்தில் என்பது நெருக்கி அடித்துக்கொண்டு படுக்க வேண்டிய தேவை கொண்டது. ஆயினும் நெருக்கி அடித்தல்கள் இந்தியர்களாகிய நமக்கு ஒரு அண்மையைக்கொடுக்கின்றன. நம்முடைய நல்ல நினைவுகள் எல்லாமே கல்யாணத்திற்கோ பிற விழாக்களுக்காகவோ எங்கோ ஒரு வீட்டில் அனைவரும் உறவினர்களுடன் ஒரு கூடத்தில் நெருக்கி அடித்துக்கொண்டு படுத்த அனுபவங்களாகத்தான் இருக்கும். மனிதர்களின் மிகச்சிறந்த இன்பம் என்பது கூடி இருத்தல் தான்.
2015ல் முதலில் இந்த இளம் வாசகர் சந்திப்புநிகழ்வுகளைத் தொடங்கும்போது விஷ்ணுபுரம் அமைப்பு வழக்கமான நண்பர்களின் வழக்கமான கூடுகைகளாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற சிறு ஐயம் எனக்கு ஏற்பட்டிருந்தது. திரும்ப திரும்ப ஒரே முகங்கள். ஓரிருவர் தற்செயலாக உள்ளே வருவதோடு சரி. பெருந்திரளாக இளைஞர்கள் உள்ளே வரவேண்டும் என்பதற்காக இதைத் தொடங்கினோம். ஏழாண்டுகளில் இருபது சந்திப்புகள் வரை ஆகிவிட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் இச்சந்திப்புகளுக்கு வந்தவர்கள் பலர் இன்று மிக அறியப்பட்ட எழுத்தாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். இது ஒரு கல்வி நிலையம் போல மாறிவிட்டிருக்கிறது இன்று. ஆண்டுக்கு மூன்று நான்கு சந்திப்புகள்.
எனக்குத்தெரிந்து தமிழில் இவ்வாறு இளம் வாசகர்களுக்காக ஒரு தொடர் சந்திப்பு நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நிகழ்ந்ததில்லை. சுந்தர ராமசாமிக்கு அவ்வாறு ஒன்று நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பாம்பன் விளை என்னுமிடத்தில் அவர் பெருஞ்செலவிலேயே சில நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் அதற்கு முன்பு காகங்கள் அவர் தன் வீட்டிலேயே ஒருங்கிணைத்த சந்திப்பு நிகழ்ச்சியாக இருந்தது. பாம்பன் விளை நிகழ்ச்சியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்க முடியும். மிகச்சிறப்பான தொடக்கமும் அதற்கு இருந்தது. ஆனால் பங்கேற்பாளர்கள் அதை வெறும் குடிநிகழ்வாக மாற்ற முயன்றனர். ஆகவே அது நிறுத்தப்பட்டுவிட்டது.
தமிழ்ச் சூழலில் இது ஒரு சிக்கலான விஷயம் .’சிற்றிதழ் நுரைகள்’ என நான் அழைக்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது. சிற்றிதழ்ச்சூழல் என்பது ஒருவகையான உள்வட்டம் .அங்கு தீவிர இலக்கியம் மீது அர்ப்பணிப்பும் படைப்புத்திறனும் செயலூக்கமும் கொண்டவர்கள் உண்டு . அவர்களால் தான் அது வாழ்கிறது. ஆனால் ஒரு ரகசியக் கேளிக்கைச் சந்திப்புக் குழுவாக மட்டுமே அதை பார்க்கக்கூடிய சிறு துணைவட்டத்தையும் அது உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அவர்களே சிற்றிதழ் உருவாக்கும் நுரை
அவர்கள் எவரும் பெரிதாக படிப்பவர்கள் அல்ல. புரட்டிப் பார்த்திருப்பார்கள். சிற்றிதழ்கள், எழுத்தாளர்கள் படைப்புகள் பெயர்கள் தெரிந்திருக்கும். அங்கங்கே ஒன்றிரண்டு பார்த்து வைத்திருப்பார்கள். ஆனால் எல்லாச் சிற்றிதழ்கள் சார்ந்த நிகழ்வுகளுக்கும் சென்றுவிடுவார்கள். அங்கே குடிப்பதும், அரட்டை அடிப்பதும், அவ்வம்புகளை எஞ்சிய நாட்கள் பேசிக்கொண்டே இருப்பது மட்டுமே அவர்களது இலக்காக இருக்கும். இப்படியே இருபது ஆண்டுகள் முப்பது ஆண்டுகள் கடந்து வந்திருப்பார்கள். இருபதாண்டுகளில் அவர்கள் நெடுங்காலம் சிற்றிதழ் சூழலில் புழங்கிய ஒரு இலக்கியச் செயல்பாட்டாளர் அல்லது மூத்த படைப்பாளி போன்ற சில பாவனைகளை அடைந்திருப்பார்கள். சிலர் அவ்வப்போது ‘விமர்சகர்’ ‘சிற்றிதழாளர்’ போன்ற பட்டங்களுடன் இதழ்களில் பேட்டியெல்லாம் கொடுப்பதைக்கூட பார்க்கிறேன்.
இந்தியா முழுக்கவே மூப்பு என்பது ஒரு தகுதி. எத்துறையிலும் இங்கே நான் எத்தனை காலமாக இருக்கிறேன் தெரியுமா என்பதே ஓர் அடையாளமாகவும் தகுதியாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இந்த ஒரே தகுதியால் எந்த நிகழ்வுக்கும் வந்து அங்கே தீவிரமாக எதுவும் நிகழாமல் செய்துவிடுகிறார்கள். பாம்பன்விளை கூட்டத்திற்கு நடந்தது அதுதான். இவர்கள் தவிர்க்கப்படும்போது மட்டுமே சிற்றிதழ் சூழல் ஆரோக்கியமாக இருக்க முடியும் மாமரத்திற்கு முற்றிய கிளைகளை ஒடித்து வீசுவது போல சிற்றிதழ் சூழலில் ஒரு புரூனிங் நடந்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.
இவர்களுக்கு மெய்யாகவே இலக்கியம் மேல் ஆர்வம் கிடையாது. ஆகவே இலக்கியச் செயல்பாடுகள் அனைத்தையுமே ஒருவகையில் பின்னிழுப்பவர்களாக, உருப்படியாக எந்த விவாதமும் நடக்க விடாதவர்களாக, இவர்கள் மாறிவிடுவார்கள். நெடுங்காலமாக இருப்பதனால் இவர்களே உருவாக்கிக்கொண்ட சில பாவனைகள் அடுத்த தலைமுறைக்கு இவர்கள் முக்கியமானவர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்கி, இவர்களின் இயல்புகள் சிற்றிதழ்ச்சூழலின் இயல்புகள் என எண்ணச்செய்து ஒவ்வாமையை உருவாக்கிவிடுகிறது. நெடுங்காலமாக வம்புகளைப் பேசி பேசி, எப்போதுமே கசப்புகளை கக்கி, ஒட்டுமொத்தமாக ஒரு சூழலில் எப்போதும் இருக்கவேண்டிய நம்பிக்கை துடிப்பு ஆகியவற்றை இல்லாமல் ஆக்கிவிடுகிவார்கள். சலிப்பு எதிர்மறை மனநிலை ஆகியவற்றை நிலைநிறுத்திக் கொண்டிருப்பார்கள்.
தமிழில் நிகழ்ந்த சிற்றிதழ் சார்ந்த இலக்கிய கூட்டங்கள் அனைத்தும் ஏன் தோல்வியுற்றன என்று நானே திரும்பி கூர்ந்து பார்த்து அறிந்தது இது. மிக கறாராக அவர்களை விலக்குவதன் வழியாகவே இத்தனை ஆண்டுகளாக இந்தச் சந்திப்புகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இப்படி தமிழில் முன்பு நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு சந்திப்பிலும் முந்தைய நிகழ்வுகளைவிட ஒருபடி மேலானது என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிகழ்த்துகிறோம். ஒவ்வொரு சந்திப்பிலும் முந்தைய நிகழ்வுகளைவிட மேலும் இளைஞர்கள் மேலும் படைப்பூக்கம் கொண்டவர்கள் வந்தார்கள் என்று சொல்லும்படியாக நினைவுகள் நிறைவூட்டுகின்றன.
இம்முறை நிகழ்ந்த இளம் வாசகர் சந்திப்பு நண்பர் கிருஷ்ணனின் கணிப்பில் இதுவரை நிகழ்ந்த சந்திப்புகளிலேயே மிகத்தீவிரமானது. சராசரி வயதென்பதே இருபத்தைந்தாக இருந்ததென்பது ஒரு காரணம் உரையாடல்கள் எல்லாமே கூர்ந்த கவனமும் தீவிரமும் கொண்டிருந்தன. எழுந்து பேசுவதற்கான ஊக்கமும் பெரும்பாலானவர்களிடம் இருந்தது. இந்த சந்திப்புகளில் பேசுபொருள் என்பது ஒருமாதிரி பேசிப்பேசி வரையறுக்கப்பட்டு விட்டிருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படுவதற்கான அடிப்படை மனநிலைகள், அடிப்படை வினாக்கள், அடிப்படை அறிதல்கள் ஆகியவை சார்ந்து உரையாடல் நடக்கும் பங்கேற்பாளர்கள் எழுதிக்கொண்டு வந்த புதிய படைப்புகள் மீதான விவாதங்கள் நிகழும். இவ்விவாதங்கள் அவர்களுக்கு எழுதுவதற்கான பயிற்சியாக அமையும்போது அவற்றின்மீதான விமர்சனங்கள் வழியாக பிறருக்கு வாசிப்பதற்கான ஒரு பயிற்சியாகவும் அமையும்.
அனைத்திற்கும் மேலாக பலர் முதல் முறையாக தங்களைப்போன்ற இன்னொரு இலக்கிய வேட்கை கொண்டவரை நேரில் சந்தித்து அளவளாவுவது இங்குதான். தமிழகத்தின் பல சிற்றூர்களில் இலக்கியம் அறிந்த இன்னொரு நபரை கண்ணில் பார்ப்பதற்கே வாய்ப்பில்லாதவர்கள் உண்டு. பலருடைய வேலைச்சூழலிலும் அவ்வாறுதான். அவர்கள் இங்கு வந்து ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி இரண்டு நாட்கள் தங்கி செல்வது என்பது தங்கள் இருப்பை மறு உறுதி செய்வது போல. தங்கள் கனவுகள் தங்களுக்குத் தாங்களே இன்னொரு மூறை சொல்லிக்கொள்வது போல.
மனிதர்கள் ஒரு களத்தில் மட்டும் வாழமுடியாது எந்த மனிதனுமே ஒரே களத்தில் வாழ்வதுமில்லை. ஏனெனில் மனிதன் கற்பனை கொண்ட விலங்கு. அக உலகம் என்று ஒன்றை தனியாக உருவாக்கிக்கொள்ள இயன்றவன். ஒரு தொழிற்களத்தில் குடும்பக்களத்தில் வாழ்பவன் பிறிதொரு அகக்களத்தை உருவாக்கிக்கொண்டிருப்பான். பெரும்பாலானவர்களுக்கு குடி தேவைப்படுவதே அப்படி இன்னொரு களம் தேவை என்பதற்காகத்தான். அங்கு அவர்கள் பிறிதொருவராக ஆக முடிகிறது. இங்கிலாத சில இயல்புகளை அங்கு சூடிக்கொள்ள முடிகிறது. தங்களது ஆழத்திலிருந்து ஒளித்து வைத்த சிலவற்றை, மறைந்திருக்கும் சிலவற்றை வெளியே எடுத்து அணிந்துகொள்ள முடிகிறது.
பக்தி, ஆன்மீக இயக்கங்கள்,சேவை என மனிதர்கள் பிறிதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான களங்கள் இங்கு நிறைய உள்ளன. இலக்கியத்தை அதிலொன்றாக கருதுவது பிழையல்ல. இலக்கியம் மேலும் தீவிரமானது. அது ஒரு தவிர்த்தலோ தப்பித்தலோ அல்ல. அங்கு இயற்றலுக்கும் வெல்வதற்கும் வேறு அறைகூவல்கள் உள்ளன. திகழ்வதற்கு இன்னும் அழகிய ,ஆழமான இடங்கள் உள்ளன. எய்துவதற்கு வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து வரும் அடையாளங்கள் உள்ளன. இச்சந்திப்புகள் அதை உறுதி செய்கின்றன. நட்புகள், பிறிதெங்குமிலாத தீவிரங்கள், வேறெங்கும் பேசாத சொற்கள், ஒருபோதும் எய்தியிராத தீவிரங்களும் பரவசங்களும். இத்தகைய சந்திப்புகளை அவ்வண்ணம் பயன்படுத்திக்கொள்பவர்களே இவற்றுக்கு உரியவர்கள்
வாழ்க்கையில் மகிழ்வதற்கான ஒருதருணங்களையும் விடாதவர்களே வாழ்கிறார்கள். வாழ்க்கையில் அதன் ஆயிரம் சதுரங்க களங்களுக்குள், வணிகங்களுக்குள், கொடுக்கல் வாங்கல்களுக்குள், வெற்றி தோல்விகளுக்குள் ஒரு தனி உலகை உருவாக்கிக்கொள்பவர்களே உண்மையில் நிறைவடைகிறார்கள். இத் தனிஉலகு வாழ்க்கை அல்ல, செறிவூட்டப்பட்ட இன்னொரு வாழ்க்கை. நம்முடைய திறன்களுக்கு விழைவுகளுக்கு அகத்தேடலுக்கு ஏற்ப நாம் உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. இங்கு நாம் நமது முழுமையை நோக்கி சென்றுகொண்டே இருக்கமுடியும். திரும்பதிரும்ப இலக்கியத்தை இவ்வாறே அடுத்த தலைமுறைமுன் வைக்க விரும்புகிறேன். இந்த இளையோர் சந்திப்பும் அந்நோக்கத்துடன்தான்.
இந்நிகழ்வை கதிர் முருகன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஒருங்கிணைத்தார். இணையத்தொடர்புகளை அழகிய மணவாளன் செய்தார். பாலு மற்றும் அவருடைய ஊழியர்கள் உதவினர். வழக்கத்திற்கு மாறாக இம்முறை சு.வேணுகோபால் வந்து கலந்துகொண்டு உடன் தங்கி நண்பர்களுடன் உரையாடினார்.மீண்டும் ஒரு நினைவு நிறையும் நிகழ்வு.
மேடைவதை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மேடைவதைகள் கட்டுரையை ஏற்கனவே பல சொற்களில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அதையெல்லாம் இங்கே எவரும் கவனிப்பதில்லை. அரங்கிலேயே எழுந்து சொன்னாலும் பொருட்படுத்த மாட்டார்கள். நான்கு அடி போட்டாலும், மூஞ்சியில் காறித்துப்பினாலும் கவலைப்பட மாட்டார்கள். இதே வதையைச் செய்துகொண்டே இருப்பார்கள். இது தமிழகத்தின் தேசிய மனநோய். வேண்டா விருந்தாளியாய் போவதை விட கேவலமானது வேண்டாதபோது பேசிக்கொண்டிருப்பது. அதை இவர்களால் உணரவே முடியாது. நான் எனக்கென ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். அந்தப்பட்டியலில் உள்ள ஒருவர் ஒரு கூட்டத்தில் பேச்சாளர் வரிசையில் இருந்தால்கூட அந்த கூட்டத்தில் எத்தனை பெரிய ஆளுமை பேசவிருந்தாலும் தவிர்த்துவிடுவேன்.
செந்தில்குமார்
அன்புள்ள ஜெ
மேடைவதைகள் கட்டுரை அற்புதமானது. இனி அரங்கில் உள்ளவர்கள் எழுந்து எதிர்வினை ஆற்றத்தொடங்கினால்தான் இவர்களை கட்டுப்படுத்த முடியும். அமைப்பாளர்கள் நட்பு கருதி அமைதியாக இருக்கிறார்கள். அரங்கினர் நாகரீகம் கருதி பேசாமலிருக்கிறார்கள். இந்தக் கும்பல் அதை பயன்படுத்திக்கொள்கிறது.
ரவிக்குமார் எம்
அன்புள்ள ஜெ
மேடையுரைகளில் வேறு எந்த சாதனையும் எந்த அடையாளமும் இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் படுத்துகிறார்கள். மற்றவர்கள் பேச்சு அவர்களை அறியாமலேயே நீண்டுபோக காரணம் என்ன பேசுவது என ஏற்கனவே திட்டமிடாமல் அங்கே நினைவுக்கு வருவதைச் சொல்ல ஆரம்பிப்பதனால்தான். அப்போது நேரம் மறந்துவிடுகிறது
ஜே.எஸ்.குமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers



